Search This Blog

Thursday, August 11, 2011

சந்தி சிரிக்கும் இந்திய மானம் - உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!

சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!அமைதி காக்கும் பணிக்காக காங்கோ வுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது!

ஆப்பிரிக்க உலகப் போர்

ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!


 பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்

காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.
காங்கோவில் இந்திய ராணுவம்

ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்    

பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!

காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.

ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங். 

பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக்குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே! 

என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது! 

விகடன்   
 

"ஆன்- லைன்' வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை

தங்களிடம் ஒரு குண்டுமணி அளவிலாவது தங்கம் வீட்டில் இருக்க வேண்டும். தங்கத்தால் மட்டுமே வீட்டில் செல்வம் தங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நம்நாட்டுப் பெண்கள். இன்றைய நிலையில், தங்கத்தின் விலை விண்ணைத்தாண்டிச் செல்லும் அளவில் உயர்ந்து வருவது அவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 திருமணச் சீர்வரிசைகளில் தங்கம் முக்கிய பங்கு வகித்தாலும், பிறந்தநாள், காதணி, பூப்புனித நீராட்டு, திருமணம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை, விழாக்கள் என பல்வேறு விழாக்களிலும் பரிசளிக்கப்படும் முக்கிய ஆபரணமாக தங்கம் விளங்குகிறது.விழாக்காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வீதிகளில் நடமாடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அளவை வைத்தே அவர்களது குடும்பத்தின் கௌரவம் நிர்ணயிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால்தான், கிராம மக்கள் ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வீட்டில் வாங்கி வைப்பது வழக்கம். அதுவும் பெண் குழந்தை பிறந்து விட்டால், பிறந்தநாள் முதலே அந்தக் குழந்தைக்காகப் படிப்படியாகத் தங்கம் வாங்குவதை நடைமுறைப்படுத்திக் கொள்வர்.
 
 
முந்தைய காலங்களில் அவரவர் தகுதிக்கேற்ப ஆபரணங்கள் செய்வதற்கு தங்கம் வாங்குவர். இதனால் தங்கத்தின் விலை கட்டுக்குள் இருந்தது. எனவே, அன்றாடம் கூலி வேலை செய்யும் பாமரர்கள் கூட குண்டுமணி அளவிலாவது தங்கம் வாங்க முடிந்தது.ஆனால், இன்று தங்கத்தின் விலை "ஆன் -லைன்' ஆசியால் கடுமையாக ஆட்டம் போட்டு வருகிறது. ஆன்- லைன் வர்த்தகம் மூலம் தங்கம் அதிக அளவில் வாங்கப்படுவதுதான் இன்று தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம்.குறைந்த அளவில் "மார்ஜின்' பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன்- லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன்- லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு "மார்ஜின்' பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன்- லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம். 
 
 ஆன்- லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன்- லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது. ஆனால், உண்மையிலேயே தங்கத்தை ஆபரணமாகச் செய்து பயன்படுத்த நினைக்கும் பொதுமக்களோ, தங்கத்தின் விலை ஏற்றத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது.தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் உலகப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனமும் ஆன்- லைன் தங்கத்தின் மீது திரும்பியதால், தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 2,500ஐ நெருங்குகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொலை செய்யும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.இது மட்டுமல்லாமல், ஆன்- லைனில் தங்கம் வாங்குபவர்கள் நீண்டநாள்கள் வைத்திருப்பதில்லை. உடனடியாக அதை விற்றுக் காசாக்கி விடுவர். இது தேசத்துக்கு ஆபத்து. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வாங்கும் தங்கத்தை நீண்டநாள்களுக்கு சேமித்து வைத்திருப்பர். இது தேசத்துக்குப் பாதுகாப்பு.  
 
 தங்கத்தின் விலை ஏற்றம் இதேபோல் நீடித்தால், யாராலும் தங்கத்தை எளிதில் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்போது ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கும் கட்டாயம் ஏற்படும். அப்படி ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கப்பட்டால், தங்கத்தின் விலை தலைகீழாகச் சரிந்துவிடும். அப்போது ஏற்படும் நஷ்டம் அனைத்தும் சிறுகச்சிறுகச் சேர்ந்து, தற்போது தங்கம் வாங்கி சேமித்து வைக்கும் சாதாரணப் பொதுமக்களின் தலையில்தான் விழும். இது நம் தேசத்தின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். 
 
எனவே, நமது தேச மக்களின் வாழ்வோடும், கலாசாரத்தோடும் ஒன்றிவிட்ட தங்கம், பாமரனுக்கு காட்சிப்பொருளாக மட்டும் மாறிவிடாமல் தடுக்க, அதன் விலையைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆன்- லைனில் இருந்து உடனடியாக தங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
 
தினமணி  
 
 

Wednesday, August 10, 2011

சந்தோஷ் சிவனின் உருமி திரை விமர்சனம்


இந்தியாவில் மிக சிறந்த ஒளிபதிவு இயக்குனர்களில் சந்தோஷ் சிவன் குறிப்பிடதக்கவர். ஏற்கனவே அவர் அசோகா என்னும் ஒரு சரித்திர படம் இயக்கி உள்ளார். அந்த படம்  ஓட வில்லை. ஆனால், சமீபத்தில் மல்லி திரை படம் பார்த்தேன் . ஒரு சின்ன கிளை கதையை எடுத்து அருமையாக திரை  க கதை பண்ணி இருப்பார். அந்த படம் தான் இந்த உருமி படத்தை பார்க்க காரணமாய் இருந்தது.

இதில் ப்ரித்வி ராஜ்,ஜெனிலியா,வித்யா பாலன்,பிரபு தேவா,ஆர்யா,தபு நடித்து மலையாளத்தில் வெளிவந்துள்ள படம் உருமி.

 கதை


வாஸ்கோடகாமா கோழிக்கோடு கரையில் இறங்கி வடக்கு கேரளத்தை தன்கைக்குள் கொண்டு வருவதாகத் தொடங்குகிறது படம். நிகழ்காலத்தில் ப்ரிதிவிராஜின் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தை வாங்க முனையும் அயல் நாட்டு கூட்டம் ப்ரிதிவிராஜையும்,நண்பன் பிரபு தேவாவையும் பேரம் பேச கூட்டிச் செல்கிறது. அவர்களும் அந்த இடத்தை தேவை இல்லை என முடிவு செய்து விற்க ஓகே சொல்கிறார்கள் .

அந்த இடத்தை வேண்டாம் என்று வித்யா பாலனும்,ப்ரிதிவிராஜின் பூர்விகம் பற்றி ஆர்யாவும் (கூறுகின்றனர்). பூர்விகம் பற்றி தெரியும்போது காட்சிகள் பிரிதிவிராஜ் எப்படி வாஸ்கோடகாமாவை விரட்டி அடிக்கிறார் என்று விரிகிறது. பின் நிகழ்காலத்தில் பிரிதிவிராஜ் அந்த சொத்தை யாருக்கும் விற்காமல் அநாதை,ஆதிவாசிகளுக்கு விடுவதும் போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ள படம்,சிறந்த ஒளிப்பதிவாளர்,திறமையான நடிகர்கள்,நிறைய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் கதை என்னவென்று இரண்டு மணி நேரம் பார்த்தும் புரியவே இல்லை. ஜெனிலியா மட்டும் நடித்து இருக்கிறார்.  லவ் ஹேர் ஆக்டிங். செம நடிப்பு.  

ஒரு பெண் இறக்கும் தருவாயில்  விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான்.  அதுதான் உருமி.


 பாடல்கள் ஓகே. ஒட்டாத காட்சி அமைப்பு,விறுவிறுப்பே இல்லாமல் போவது என்று படம் முழுவதும் இருந்தாலும்  படத்தின் மேகிங்  அருமை. 

உருமி -  Must watchable Movie (  ஜெனிலியா :) )


உணர்வுகளே பார்வையாக....ஒரு முதல்வர்!

விட்டமின் கதை


திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வராக டாக்டர் கே.எம். பிரபு பொறுப்பேற்றுள்ளார். ஒரு வித்தியாசமான மனிதர். இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. ஆனால் கல்லூரி முதல்வருக்கான அத்தனை பணிகளையும் யாருடைய துணையுமின்றிச் செய்கிறார். இந்தியாவிலேயே முதன் முதலாக இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த ஒருவரை தமிழக அரசு, கல்லூரி முதல்வராக்கியுள்ளது.  அலுவலகத்தில் உள்ளே நுழைபவரை பெயர் கேட்கிறார் அல்லது அதை மட்டும் உதவியாளர் சொல்கிறார். உடனே அவர் சம்பந்தப்பட்ட பணிகள் பற்றிப் பேசுகிறார். அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றிச் சொல்கிறார். கோப்புகளில் குறிப்பிட வேண்டியவை பற்றி விளக்குகிறார். அடுத்து அவர் கையெழுத்துப் போடவேண்டிய கோப்புகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. அவற்றைத் தம் முன் இழுத்து வைத்துக் கொண்டு கையெழுத்துப் போடும் இடத்தைக் கண்டுபிடித்து, ஒரு விசிட்டிங் கார்டை கையெழுத்துப் போடும் பகுதியில் வைத்து, அதன் ஓர விளிம்பை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு பச்சை நிற மையால் பளிச்சென கையெழுத்திடுகிறார்.

“ஈரோடு அருகே உள்ள கேசரிமங்களம் என்ற ஊர்தான் எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே ஆங்கிலப் புலமையை நன்கு வளர்த்துக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். 16 வயதில் மாலைக்கண் நோய் ஏற்பட்டு பார்வை மங்கியது. 18 வயதில் பார்வை முற்றிலும் போய் விட்டது. எந்த வைத்தியமும் சரியாகவில்லை. வாழ்க்கை இருளடைந்து விடுமோ என்று எண்ணினேன். ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. சென்னை, குருநானக் கல்லூரியில் பி.யூ.சி., கிறிஸ்துவ கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். அதில் எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. பின்னர் திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில ட்யூட்டராக சில நாள் வேலை பார்த்தேன். பின்பு எம்.ஃபில் படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர், அடுத்து ஹைதராபாத்தில் உயர் கல்வி படித்து சிறந்த மாணவர் என்ற பெயரோடு, நந்தனம் அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் போது இடையில் பெற்றோர் சொன்னபடி திருமணம். அதன் பின்னர் டாக்டர் பட்டம், பிறகு மாநிலக் கல்லூரியில் வேலை. இதற்கிடையில், ஹரியானா பஹத்பூர் சிங் பெண்கள் பல்கலைக்கழகத்தில், ‘லாங்வேஜ் லேப்’ என்ற புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கி, எல்லோரும் ஆங்கிலத்தில் சுலபமாகப் பேச வழி வகை ஏற்படுத்தினேன். பலரும் இது ஒரு சாதனை, மைல்கல்... என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை.கண் பார்வையற்ற என்னை, கல்லூரி முதல்வராக்கி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு என் குடும்பத்தோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர் எதிர்பார்த்த திறமையான நிர்வாகத்தை என்னால் தர முடியும். என்னைப்போல் இன்னும் பலர் திறமை இருந்தும் மேலே வர முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழக முதல்வர் உதவ வேண்டும். எதிர் காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயலாற்றுவேன். பொறுப்புகள் வரும். பெயரெடுப்பேன்,” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார் பிரபு.


50க்கும் மேற்பட்ட ஆங்கிலப் புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார் பிரபு. இவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி, நிர்வாகம், புத்தகம் எழுதுதல் என்றில்லாமல், இந்த மனிதர் சமையலிலும் வெளுத்து வாங்குவாராம். சிறிய அளவில் கூட உப்பு, புளி கூடிவிடாமல் குழம்பில் இருந்து எழுகின்ற வாசனையை நுகர்ந்தே அளவின் தன்மைகளைக் கூறி, கூடுதல் குறைவுகளைச் சரிசெய்து கொள்வாராம். சமையலுக்கென்றே தனியாகப் படித்தாராம் (அதையும் விடவில்லை). உணர்வுகளாலேயே பார்வையைப் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.டாக்டர் பிரபு, பார்வையற்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, பார்வையுள்ள மாணவர்களுக்கும் ஓர் முன்னுதாரணம்.

விகடன் 

ஒரு நோயாளியின் டைரிக் குறிப்பு! - ஓ பக்கங்கள், ஞாநி


வாழ்க்கை முழுவதும் ஒருவர் மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் வாழ்ந்தால் அவர் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று சொல்லலாம் என்று எனக்குத் தோன்றும். ஒன்று மருத்துவமனை; அடுத்தது காவல் நிலையம்; மூன்றாவது நீதிமன்றம். கடைசி இரண்டிலிருந்து தப்பிப்பவர்கள்கூட முதலாவதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.டாக்டரைப் பார்க்கச் செல்வதே எனக்குப் பிடிக்காது. பெரியவனானதும் டாக்டர் ஆவேன் என்று ஒருபோதும் நான் அறியாப் பருவத்தில் அறியாமல்கூட சொன்னதில்லை.

சிறு வயதில் குடும்ப டாக்டர் வரதராஜனிடம் காய்ச்சல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார்கள். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எதற்கெடுத்தாலும் ஊசி போட மாட்டார். முற்றிலும் மரத்தாலான பொருட்களே நிரம்பிய பெரிய கூடம்தான் அவரது க்ளினிக். நான் போகிறபோதெல்லாம் அவர் பெரிய வேலைப்பாடுகள் நிரம்பிய மர மேசையின் பின்னால் இருக்கும் அழகான நாற்காலியில் உட்கார்ந்திருக்க மாட்டார். பக்கத்து வராந்தாவில் இருக்கும் பழங்கால ஈசிசேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.  வட்டக் கண்ணாடியும் வழுக்கைத் தலையும் பொன்னிற மேனியுமாக அவர் மேசைக்குப் பின்னால் வந்து உட்கார்ந்து கூரையிலிருந்து மேசைக்கு நேர் மேலாகத் தொங்கும் விளக்கை சங்கிலியால் தமக்கு நெருக்கமாகக் கீழே இழுத்துக் கொண்டு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதுவதைப் பார்த்தால், ஏதோ ஐரோப்பிய ஓவியத்தில் விஞ்ஞானியைப் பார்ப்பதுபோல இருக்கும். என்ன சிக்கலுடன் சென்றிருந்தாலும் அவரது கம்பவுண்டர் ஒரு பிங்க் நிற மிக்சர்தான் கொடுப்பார். ஒரு பொன்விழா காலத்துக்குப் பிறகும் இன்னமும் என் நாக்கில் அந்தச் சுவை எஞ்சியிருக்கிறது. அந்த மிக்சரில் நோய் குணமாகாமல் இருந்ததே இல்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

அதன்பிறகு வாழ்க்கையில் பல மருத்துவ மனைகளுக்கு நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செல்ல வேண்டியவனாகி விட்டேன். மற்றவர்களுக்காக. மாமா, அம்மா, பெரியம்மா, அப்பா, தங்கை, நண்பர்கள் என்று ஒவ்வொருத்தர் நிமித்தமும் சென்ற ஒவ்வொரு அனுபவமும், பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் போல மருத்துவமனை வைராக்கியத்தை என்னிடம் ஏற்படுத்தின. ஆனாலும் தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறேன், மற்றவர்களுக்காகச் சென்ற ஒவ்வொரு முறையும், எனக்காக இங்கே வரும் நிலை வந்துவிடக் கூடாது என்று உள்ளூரப் பதற்றம் ஏற்படும். ஆனால், கடந்த சில வருடங்களில் எனக்காகவும் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவனாகி விட்டேன். அப்படிச் சென்றதில் எனக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரே அனுபவம் கேட்டராக்ட் அறுவை சிகிச்சைக்காகச் சென்றதாகும். காரணம், கேட்டராக்ட் சிகிச்சை முடித்து கண்ணில் ஐ.ஓ.எல். எனப்படும் செயற்கை லென்ஸ்கள் பொருத்தியதில் சிறுவயது முதல் என்னைப் பெரிதும் பாதித்து வந்த பார்வைக் குறைபாடு அதிசயம் போல நீங்கியதுதான்.

எந்தச் சந்தோஷமும் முழுமையாகக் கிடைப்பதில்லை. கூடவே சின்ன வருத்தங்களும் கலந்து வந்து விடுகின்றன. இரு கண்களிலும் கேட்டராக்ட் சிகிச்சைக்குப் பின் சிறப்பான பார்வை கிட்டிய போதும் ஒரு கண்ணில் சிறிய சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஒரு சின்ன தகவல் எனக்குச் சொல்லப்படாததே காரணம்.இது தகவல் யுகம். எதைப் பற்றியும் எல்லா தகவல்களும் கிடைக்கும் காலம். ஆனால், நம்மைச் சுற்றி தகவல்கள் குவிந்து கிடந்தால் போதாது. நமக்குத் தேவையானவை நமக்குக் கிட்டியாக வேண்டும். என் முதல் கண் அறுவை சிகிச்சை முடிந்ததும், அந்தச் சின்ன தகவல் எனக்குத் தெரியாததால், கண்ணில் சிக்கல் ஏற்பட்டது. புரை நீக்குவதற்காக கண்ணில் இட்ட ஓட்டை அடைபடாமல் உள்விழி அதனூடே பிதுங்கத் தொடங்கியது.


அறுவை சிகிச்சை முடிந்து ஓட்டை மூடப்பட்ட பிறகு திறந்துகொள்ள என்ன காரணம்? மலச்சிக்கல்தான். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒவ்வொரு முறை கழிப்பறைக்குச் செல்லும் போதும், மலச் சிக்கல் இருந்தால், மலத்தை வெளியேற்ற சிரமப்படக் கூடாது. அப்படிச் சிரமப்படுத்தினால், அது கண் அழுத்தத்தைப் பாதிக்கும் என்பதுதான் எனக்குச் சொல்லப்படாமல் விட்டுப்போன தகவல்.  மருத்துவர்களிடம் செல்லும்போது பொதுவாக நிறைய கேள்விகள் கேட்டு முடிந்தவரை பெருமளவு தகவல்களைத் திரட்டிக் கொள்வது என் வழக்கம். பதில் சொல்லத் தயங்கும் மருத்துவருடன் கடுமையாகச் சண்டையிட்டதும் உண்டு. நோயாளிக்கு முழுமையாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற பார்வை அண்மைக் காலமாக மருத்துவர்களிடம் அதிகரித்திருக்கிறது.சில சமயங்களில் சில எளிய அடிப்படைத் தகவல்கள் நோயாளிக்கே தெரிந்திருக்கும் என்று கருதி அவற்றை மருத்துவர்கள் சொல்லாமல் விட்டுவிடுவதும் உண்டு. எனக்கு அப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்.எளிய தகவல் ஆனாலும் அதை நோயாளிக்குச் சொல்லாமல் விட்டால் பெரும் சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்பதற்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதுவும் கண் தொடர்பானதுதான். 


புகழ்பெற்ற கண் மருத்துவர் ஒருவர், புகழ்பெற்ற ஓர் சமயப் பெரியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்தார். மருத்துவர் பெரியவரின் தீவிர பக்தர். பக்தி மேலோங்க, சிகிச்சை முடிந்ததும், ஒரு தகவலைச் சொல்லாமல் விட்டு விட்டார். பெரியவர் தம் ஆசாரங்களின் படி, தலைக்குக் குளித்தார். அறுவை சிகிச்சை செய்த கண் பாதிப்புக்கு உள்ளாயிற்று. இந்தச் சம்பவம் பற்றிப் பல வருடங்கள் முன்பு கேள்விப் பட்டேன். அது உண்மைதானா என்று அந்த மருத்துவரிடமே கேட்கும் வாய்ப்பு சென்ற வருடம், அவரை ஒரு இணைய தளத்துக்காகப் பேட்டி எடுக்கும்போது கிடைத்தது. உண்மைதான் என்றார் நேர்மையான அவர்! அடுத்த ஆபரேஷன்போது பக்தராக நடந்துகொள்ளாமல் மருத்துவராக நடந்துகொண்டதையும் குறிப்பிட்டார்.எனவே, தகவல் இன்மையால் சிக்கல் ஏற்பட்டது எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் இது சாத்தியமே.சுமார் ஐந்தாண்டுகளாகப் பெரும் பிரச்னையாகாமல் இருந்து வந்த என் வலது கண் அண்மையில் ஒழுகத் தொடங்கி யது. அப்படியே விட்டால், அது முழுமையாகப் பார்வை இழப்புக்குக் கொண்டு சென்றுவிடும் என்று எச்சரித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார்கள். சென்ற வாரம் என் கண்ணுக்கு பஞ்சர் பார்க்கப்பட்டது. எளிமையாகச் சொல்வதானால் அது அப்படிதான். கண்ணில் ஏற்பட்ட ஓட்டையை மூட அதன் மீது ஒரு சிறு துண்டாக இரவல் கார்னியாவை ஒட்டித் தைத்து பஞ்சர் ஒட்டும் அறுவை சிகிச்சையை பேட்ச் கிராஃப்ட் என்கிறார்கள்.


ஜகத்குரு காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி நேத்ர நிலையம் என்று இப்போது அழைக்கப்படும் முன்னாள் விலிங்டன் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்தபோது பிரமித்துப் போனேன். அந்த நிலையம் ஒரு பாரத விலாஸ் மாதிரி இருக்கிறது. இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து குவிகிறார்கள். மருத்துவமனை ஊழியர்கள் பெரும்பாலோர் மூன்று மொழிகளேனும் பேசுகிறார்கள். அறுவை சிகிச்சை நடைபெறும் தளத்தில் காத்திருப்புக் கூடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தபோது ஒரு பக்கம் ஆப்பரேஷன் முடிந்தவர்களும் மறுபக்கம் காத்திருப்பவர்களுமாக சுமார் இருபது பேரை உற்று கவனிக்க முடிந்தது. எந்த ஒரு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் இருந்து நோயாளிகளை உற்று கவனிக்க முடிந்தாலும் ஏன் சித்தார்த்தன் புத்தனானான் என்று புரிந்து கொண்டுவிட முடியும். என் வழக்கம் போல ஆபரேஷன் போது டாக்டருடன் பேசிக்கொண்டே இருந்தேன். முகத்தை மூடி ஆக்சிஜன் டியூப்களை மூக்கில் மாட்டினாலும், நாம் பேசுவதை நிறுத்தமுடியாதல்லவா... டாக்டரும் பேசிக் கொண்டேதான் ஆபரேஷன் செய்தார். என்னோடு மட்டுமல்ல. கூட பணி புரிபவருடன். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் என்ன செய்கிறார், உதவியாளர் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டே செய்தார். நடுவே செல்ஃபோன் வந்தது. அதிலும் பேசினார். கையென்னவோ என் கண் மீதுதான். மருத்துவமனை நிர்வாகி ஒருவர் நடுவே வந்து டாக்டரிடம் ‘இப்போது பேசலாமா? என்று கேட்டுவிட்டு அலுவலகப் பிரச்னையை விவாதித்துவிட்டுப் போனார்.


ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப் பின்னர் மறுநாள் காலையிலிருந்து வழக்கம் போல கம்ப்யூட்டர், செய்தித் தாள்கள், டி.வி., நண்பர்கள் என்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். சுஸ்ருதர் கண் புரையை நீக்க பழுக்கக் காய்ச்சிய இரும்பை கண்ணில் ஒற்றி எடுத்த நாட்க ளில் நல்லவேளை நான் இருந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு ஆறு முறை மூன்று விதமான சொட்டு மருந்துகளை ஊற்றிக் கொள்வதே அலுப்பாக இருக்கிறது.நவீன மருத்துவம் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி சென்னைக்கு உடனுக்குடன் வந்துகொண்டிருக்கிறது என்பதன் அடையாளத்தை மருத்துவமனையில் பார்த்தேன். வட இந்தியாவின் பல மூலைகளிலிருந்து நோயாளிகள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அங்கெல்லாம் இது போன்ற மருத்துவமனைகள் இல்லையா என்று கேட்டால், இல்லை என்றே பதில் வருகிறது. மருத்துவத்தில் நிச்சயம் தெற்கு தழைக்கிறது. வடக்கு வாடுகிறது.சாதாரண கேட்டராக்ட் மட்டும் இல்லை. ஒருவர் பல்லை எடுத்து அதிலிருந்து ஒரு திசுவை அவர் கன்னத்தில் பதித்து வளர்த்து, பின்னர் அதைக் கண்ணில் பொருத்தி, கண்பார்வையற்றவரைப் பார்க்கவைக்க உதவும் modified osteo-odonto-keratoprosthesis எனப்படும் சிகிச்சைகள் எல்லாம் இன்று சென்னையில் நடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை; இல்லவே இல்லை. என் ஆப்பரேஷனுக்கு ஒரு பெருந்தொகை (எனக்கு அது பெருந்தொகைதான்) சொன்னார்கள். நான் வாரக் கூலி எழுத்தாளன். மெடிகல் இன்சூரன்ஸ் இல்லாதவன் என்று விண்ணப்பித்ததும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். எனக்கு உதவ மகனும், நண்பர்களும் இருப்பதால் தப்பித்துக் கொண்டேன்.ஆனால், இன்றைய வாழ்க்கை டாக்டர் வரதராஜன் க்ளினிக்கின் மிக்சர் காலத்து எளிமையான வாழ்க்கையாக இல்லை. ஆயுள் இன்சூரன்ஸ் வேண்டாம்; மெடிகல் இன்சூரன்ஸ் வேண்டாம்; முடிந்தால் வங்கிக் கணக்கு கூட வேண்டாம் என்று எழுபதுகளில் நானும் என்னைப் போன்றவர்களும் ‘வந்ததை வரவில் வைப்போம். சென்றதைச் செலவில் வைப்போம்’ எனப் பாடி வாழ்ந்த வாழ்க்கை சாத்தியம் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்சூரன்ஸ், மெடிகல் இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது. சாதாரண, எளிய மனிதர்களுக்கு, நோயாளிகளாக இருக்கக்கூட தகுதி இல்லை. அதற்குக் கூட பணம் தேவைப்படுகிறது.

எல்லா குடிமக்களுக்கும் தரமான கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுக்கக்கூடிய அரசுக்காக ஏங்குகிறேன். நமக்கு வாய்த்ததெல்லாம் மிக்ஸியும், டி.வி.யும் கொடுக்கிற அரசுகள் தான்.

இந்த வார சந்தேகம்!

சன் பிக்சர்ஸ் சக்சேனா மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத் துக்கு வெளியே சமரசமாகி, புகார்களையும் வழக்கையும் திரும்பப்பெறுவது நடந்து வருகிறது. எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார் என்ற புகாரைச் சொல்பவர், புகாரைக் கொடுத்ததும் தனக்கு வரவேண்டிய பணம் வந்துவிட்டது என்று சொல்லி வாபஸ் பெறுவது மட்டுமா நடக்கிறது? என்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். கொலை மிரட்டல் செய்தார்கள். குடும்பத்தையே அழிப்பதாக எச்சரித்தார்கள் என்றெல்லாம் புகார்களில் சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? நீதிபதி அவற்றை விசாரிக்க வேண்டாமா? பணம் திரும்பி வந்துவிட்டால், மிரட்டல் குற்றமும் இல்லாமல் போய்விடுமா? மிரட்டல் குற்றமே பொய்க் குற்றச்சாட்டு என்றால், பொய்ப் புகார் கொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தவருக்குத் தண்டனை கிடையாதா? 

 

Monday, August 08, 2011

சென்னை - போக்கு காட்டும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் தொடங்கி தாம்பரம் வரை காலை எட்டு மணிக்கே ஆரம்பித்து விடுகிறது போக்குவரத்து நெரிசல். குறிப்பாக, ஸ்பென்ஸர் சிக்னல், தேனாம்பேட்டை, நந்தனம், கிண்டி, வடபழனி நூறடி சாலை, பல்லாவரம் என்று எல்லா இடங்களிலும் இதே கதைதான்!

போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இரண்டு வகையில் தீர்வு காணலாம். ஒன்று, மேக்ரோ மேனேஜ்மென்ட். (Macro Management)மற்றொன்று, மைக்ரோ மேனேஜ்மென்ட் (Micro Management). முதல் வகை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது. அந்த வகையில் தற்போது சென்னையில் 10 மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. தவிர, ஸ்டான்லி மருத்துவமனை அருகிலும் வில்லிவாக்கத்திலும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
அடுத்து மைக்ரோ மேனேஜ்மென்ட். போக்குவரத்து போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்மனது வைத்தாலே இந்த முறையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணலாம்.


தற்போது நகரில் 'இ-சலான்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி கன்ட்ரோல் அறையில் இருக்கும் சர்வரில் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.சாலை விதிமுறையை மீறிச் செல்வோரை நிறுத்தி, ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்து இந்தக் கருவி மூலம் சலான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கருவியில் சம்பந்தப்பட்ட வாகன எண்ணை டைப் செய்தவுடன் கன்ட்ரோல் அறையில் அதன் உரிமையாளர் மற்றும் பதிவு விபரங்கள் தெரிந்து விடும். இதன் மூலம் திருட்டு வாகனங்கள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் அடையாளம் காண முடியும். ஏற்கெனவே ஒருவர் அபராதம் செலுத்தி, மீண்டும் இரண்டாவது முறையாக விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அதுவும் தெரிந்துவிடும். இம்முறை கூடுதல் அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.


ஆனால், சமூக ஆர்வலர்களோ போலீஸார் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ''கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸார் எஸ்.எம்.எஸ். முறையை அறிமுகப்படுத்தினார்கள். 'வாகன ஓட்டிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொண்டால், அவ்வப்போது இந்தந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது; மாற்றுப் பாதையில் செல்லலாம்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்’ என்றார்கள். இந்தத் திட்டமும் சரியாக செயல்படுத்தப்படவில்லை'' என்கிறார்கள்!


மொத்தத்தில் போலீஸார் மட்டுமல்ல... பொதுமக்களும் மனது வைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க முடியும்!


மீறல்! 

உலகின் 80 சதவிகித வாகனங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஆனால், 80 சதவிகித விபத்துகளும் வளரும் நாடுகளில்தான் ஏற்படுகின்றன. காரணம், வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் சீரான விதிமுறைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்! இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. ஒரு லட்சம் பேர் வரை உயிர் இழக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விபரம். இதற்குக் காரணம், அலட்சியம் மற்றும் விதிமுறை மீறலே!

Sunday, August 07, 2011

என்ன ஆச்சு அமெரிக்க பொருளாதாரத்துக்கு..?


கடந்த வெள்ளிக்கிழமை காலை... இன்றாவது சந்தை ஏறுமா என்று  நகம்கடித்தபடி டி.வி. முன் உட்கார்ந்திருந்தவர்கள், அடுத்த சில மணி நேரத்திற்குள் வியர்த்து விதிர்விதிர்த்துப் போனார்கள். சமீபகாலத்தில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை சரிந்ததே வியர்த்துக் கொட்டியதற்கு காரணம். ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாக கீழே இறங்க, மீண்டும் 2008 வந்துவிட்டதோ என்று பதறிப் போனார்கள்.

என்ன காரணம்?

வழக்கம்போல தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டிய கதைதான். அமெரிக்க பொருளாதாரம் படுமோசமாக இருப்பதைத் தொடர்ந்து, அங்கு 'டபுள் டிப்ரஷன்’ வரும் என்கிற பீதி கடந்த வியாழக்கிழமை இரவு கிளம்ப, அமெரிக்க சந்தை கடுமையாகச் சரிந்தது. அதன் விளைவு, வெள்ளிக்கிழமை அன்று நம் சந்தை ரத்தக் களறியானது.நாமெல்லாம் நினைத்த வுடன் கடன் வாங்க முடியும். ஆனால், அமெரிக்க அரசாங்கம் ஓரளவுக்குமேல் கடன் வாங்க வேண்டும் என்றால், செனட்டிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏற்கெனவே 14.2 டிரில்லியன் டாலர்களுக்கு கடன் வாங்கிவிட்டது அமெரிக்கா. இதற்குமேல் கடன் வாங்க, அனுமதி வேண்டும். இல்லை என்றால், அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது. முன்னால் போனால் கடிக்கும், பின்னால் வந்தால் உதைக்கும் என்கிற நிலை அமெரிக்காவுக்கு. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செனட்டிடம், மேலும் கடன் வாங்க (கூடுதலாக 2 டிரில்லியன் டாலர்) அனுமதி பெற்றுவிட்டது. இன்றைய தேதியில் அமெரிக்க அரசிடம் இருக்கும் பணத்தைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கும் பணம் அதிகம்! 

சிக்கலை ஏற்படுத்திய சீன ரேட்டிங்...

செனட்டிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது. அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு ரேட்டிங் நிறுவனங்கள் இதுவரை உச்சபட்ச குறியீடு கொடுத்து வந்தன. ஒரு கட்டத்துக்குமேல் கடன் வாங்கும்போது அந்த பத்திரங்களுக்கு தரக் குறியீடு குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்க தரக் குறியீட்டு நிறுவனங்களோ தன் நாட்டு கடன் பத்திரங் களுக்கான ரேட்டிங்கைக் குறைக்கவில்லை. ஆனால், சீனாவைச் சேர்ந்த தரக் குறியீட்டு நிறுவனமான டகாங் (Dagong Global Credit Rating) நிறுவனம் அமெரிக்க பத்திரங்களுக்கான தரக் குறியீட்டை ஏ+ குறியீட்டிலிருந்து வெறும் 'ஏ’-வாக குறைத்தது. தனது பொருளாதாரத்தை சீர்படுத்த இன்னும் பல ஆயிரம் கோடி டாலரை அச்சடிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இருப்பதால் டாலரின் மதிப்பு மேலும் குறையும். இதனால், அமெரிக்கா தன் பலத்தை இழந்து நெருக்கடியில் சிக்கும் என்று ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவ ஆரம்பித்தவுடன், சந்தை சரிவுப் பாதைக்குத் திரும்பியது.

இனி என்ன?

அமெரிக்க பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்சந்தையின் போக்கு எப்படி இருக்கும், புதிய முதலீட்டை மேற்கொள்ள இது சரியான நேரமா?
''அமெரிக்க பொருளாதார பிரச்னை காரணமாக இந்திய சந்தையில் ஒரு நீஜெர்க் ரியாக்ஷன் நடந்திருக்கிறது. இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவுமில்லை''''கடந்த 10 வருடங்களில் சில போர்களில் ஏகப்பட்ட பணத்தைச் செலவழித்தது, இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முக்கிய காரணம். ராணுவத்துக்கு நிறைய செலவழிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு செலவு செய்யவே செய்கிறது. ஆனால், இப்படிச் செய்யும் போது பொருளாதார ரீதியான நெருக்கடி வந்துவிடுகிறது. இப்படி ஒரு பிரச்னை தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். என்றாலும், அதைத் தடுக்க பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் அமெரிக்கா வால் எடுக்க முடியவில்லை.
அமெரிக்காவுக்கு இந்த பிரச்னை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு பெருங் கடன் பிரச்னை. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஜப்பான், இயற்கை சீரழிவிலும் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கு பெரிய பிரச்னை என்று எதுவுமில்லாமல் ஓரளவுக்கு வளரக்கூடிய பொருளாதாரம் என்றால், அது இந்தியாவும் சீனாவும்தான். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தையை விட்டால் வேறு வழியில்லை. அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்தே ஆகவேண்டும்.ஆனால், நம் நாட்டிலும் பிரச்னையே இல்லை என்று சொல்ல முடியாது. பணவீக்கம், ஊழல் போன்ற பிரச்னைகள் இருக்கவே செய்கிறது. ஆனால், இவை எல்லாம் சரி செய்து விடக்கூடிய பிரச்னைகளே. எனவே, சந்தை இப்போது இறங்கி இருப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி தரமான பங்குகளை வாங்கலாம்''
''கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த பொருளாதார நெருக்கடி உலக சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சிறிது தாமதமாக சரிந்திருக்கிறது.  அமெரிக்க முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் வருமானத்தைதான் பார்த்தார்களே தவிர, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை பார்க்கத் தவறிவிட்டார்கள். 2008-ம் ஆண்டு நடந்த வீழ்ச்சிக்கே இன்னும் விடை தெரியாமல் இருக்கும்போது, அடுத்து இப்போது ஒரு சிறிய வீழ்ச்சி. 20 வருடங்களுக்கு முன்பு நடந்த வீழ்ச்சியிலிருந்தும் அவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த வீழ்ச்சியிலிருந்தும் அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. தவறான பொருளாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டு, அதிலேயே பணத்தைக் கொட்டி சொத்துக்களின் விலையை உயர்த்தப் பார்க்கிறார்கள். இதன் விளைவு, பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டன.
இதனால்,  தற்போதைய நெருக்கடி சுபமாக முடியாது. இதைத் தடுக்க வேண்டுமென்றால், ஆட்சியாளர்கள் சில கசப்பு மருந்துகளை மக்களுக்கு கொடுத்துதான் ஆகவேண்டும். மக்களும் இதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதைச் செய்யும் நாடுகளில்தான் முதலீடு பெருகும்.ஏற்கெனவே இந்திய சந்தை இறங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் இதை முதலீட்டுக்கான நேரமாகப் பார்க்கிறார்கள். உலகளவிலும், உள்நாட்டிலும் சாதகமான வினையூக்கிகள் தென்படாததால் பொறுமையை கடைப்பிடித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தைப் பார்க்க முடியும்.
 

Friday, August 05, 2011

எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவியை எப்படிச் செய்வது?

முதலுதவி


விளையாடும்போதும், ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழும்போதும், உயரத்திலிருந்து தவறி விழும்போதும் இடுப்பு, கை, கால், தொடை மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்படுவது வழக்கம். எந்த எலும்பில் முறிவு ஏற்பட்டாலும், அதற்குரிய முதலுதவியை எப்படிச் செய்வது?

அறிகுறிகள் என்ன?

அடிபட்ட நபருக்கு எலும்பு முறிந்துள்ளதா என்று தெரிந்துகொண்ட பின்னரே, முதலுதவியைத் தொடங்க வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் உதவும்:

1. விபத்து ஏற்பட்ட உடல் பகுதியில் வலியும், வீக்கமும் இருக்கும்.
2. அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது. அசைத்தால் வலி அதிகரிக்கும்.
3. முறிவுள்ள பகுதியைத் தொட்டாலே வலி அதிகரிக்கும்.
4. முறிவு உறுதியானால், அப்பகுதி எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட நபர் உணர்வார்.
5. முறிவு ஏற்பட்ட பகுதியில் வளைவு அல்லது குழி தோன்றலாம்.
6. முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமல் இருக்கும்.

பொதுவான முதலுதவிகள் இவை:

அடிபட்டவரை அந்த இடத்திலிருந்து நகரவிடாதீர்கள்.
அடிபட்ட பாகத்தை அசைக்க விடாதீர்கள்.
அடிபட்டவரைப் படுக்க வையுங்கள்.
காயம் இருந்தால், ஈரத்துணியால் துடைக்கவும்.
ரத்தக்கசிவு இருந்தால், துணியைப் பல மடிப்புகளாக மடித்து, காயத்தின் மீது வைத்து, அழுத்தமாகக் கட்டுப் போடவும்.


கை எலும்பு முறிவுக்கு முதலுதவி:


கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் தப்பைகளை வைத்துத் துணியால் கட்டுப்போடவும். மூங்கில் தப்பைகள் கிடைக்காவிட்டால், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்தும் கட்டுப்போடலாம்.
முறிந்த உறுப்புகள் மேன்மேலும் அசைவதைத் தடுக்க, ஓர் ஆதாரம் தருவதுதான் இந்த முதலுதவியின் நோக்கம். 

அடுத்து,முறிந்த பாகத்தைத் தொங்கப்போடக் கூடாது. ஏனென்றால், தொங்கப்போடும் போது, முறிவுக்குக் கீழே ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இவற்றின் விளைவால், முறிந்த எலும்புகளை நேராக எடுத்துவைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்படும். 

இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப்போட வேண்டும். இதற்குத் துணி கிடைக்காவிட்டால் சட்டையைப் பயன்படுத்தலாம்.

தொட்டில் போலக் கட்டுவது எப்படி?

ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக்கொள்ளுங்கள். அதை ஒரு முக்கோண வடிவில் மடக்கிக் கொள்ளுங்கள். முறிவு ஏற்பட்டுள்ள பகுதியை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, முக்கோண பாண்டேஜின் ஒரு முனையை அடிபட்டவரின் மார்புக்கும் முழங்கைக்கும் இடையே கொண்டு செல்லுங்கள். முக்கோண பாண்டேஜின் மற்றொரு முனையை முன்னங்கை முன்புறமாகச் சுற்றிக் கொண்டு சென்று, அடிபட்டவரின் கழுத்தைச் சுற்றிப் பின்பக்கமாகக் கொண்டு சென்று, முன்புறமாகக் கொண்டு வாருங்கள். இப்போது மார்போடு சேர்ந்திருக்கும் முதல் முனையுடன் இந்த இரண்டாவது முனையை முடிச்சுப் போட்டுவிடுங்கள். தொங்கிக் கொண்டிருக்கும் பேண்டேஜின் மீதமுள்ள பகுதியை மடித்து ஒரு ஊக்கு அல்லது குண்டூசி கொண்டு பாதுகாப்பாகக் குத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்வரை இந்தத் தொங்குக் கட்டை கழற்றாதீர்கள்.
இடுப்பு எலும்பு முறிவுக்கு முதலுதவி:


விபத்தில் மட்டுமல்லாமல், சாதாரணமாக கால் வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.இடுப்பு எலும்பு முறிந்திருந்தால், முதலில் அடிபட்டவரைப் படுக்க வையுங்கள். கால்கள் நேராக நீட்டி யிருக்க வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச்சுற்றிக் கட்டுப் போட வேண்டும். பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். இந்த இரண்டு கட்டுகளிலும் முடிச்சு, பக்கவாட்டில் இருந்தால் நல்லது.

தொடை எலும்பு முறிவுக்கு முதலுதவி:

தொடை எலும்பு முறிந்திருக்குமானால், மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும். 

கீழ்க்கால் முறிவுக்கு முதலுதவி:

இதற்கான முதலுதவி, தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவேதான் செய்ய வேண்டும். அதாவது, மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு கால்களுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கால்களையும் சேர்த்து மூன்று அல்லது நான்கு இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும். கட்டுகளின் முடிச்சுகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ‘ஸ்ட்ரெச்சரி’ல் தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஸ்ட்ரெச்சர் கிடைக்காதபோது, ஒரு கனமான போர்வையில் அவரைப் படுக்க வைத்து, போர்வையின் இரு முனைகளை ஆளுக்கு ஒருவராகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
 
பாதங்களில் எலும்பு முறிவு:
 
பாதத்தின்மீது கனமான பொருள்கள் விழுதல், வழுக்கிவிழுதல், வாகனங்கள் பாதத்தில் ஏறுதல், உயரமான இடத்திலிருந்து விழுதல், தாண்டிக் குதித்தல் போன்றவற்றால் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம்.

மெத்தென்று துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுங்கள்.

அந்தத் துணி அணைப்பைச் சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போடுங்கள்.

பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போல கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டுவந்து முடிச்சுப் போட வேண்டும்.

முடிச்சு பாதத்தின் மேற்புறம் மத்தியில் வர வேண்டும்.

எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக்கூடாது.

அவரை ‘ஸ்ட்ரெச்சரி’ல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

கீழ்த்தாடை முறிவுக்கு முதலுதவி: 


முறிவு ஏற்பட்ட தாடையை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள்.

துணியை மடித்துத் தாடைக்குக்கீழ் அணைப்புக் கொடுங்கள்.

ஒரு பாண்டேஜ் துணியால் தாடையோடு அழுந்தும்படி கட்டுப்போட்டு,முனைகளைத் தலைக்கு மேலே கொண்டுவந்து உச்சித்தலையில் முடிச்சுப் போடுங்கள். இனி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 


  டாக்டர் கு.கணேசன்
 

Thursday, August 04, 2011

ரஜினி என் கடவுள் - அஜீத், 2,000 வருட ரகசியம் 'ஏழாம் அறிவு’ - சூர்யா

'என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத்.

''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?''

'' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு  சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக் கெட்டவன்’னு 'மங்காத்தா’ கதையைச் சொன்னார். ரொம்பப் பிடிச்சது. 'நானே நடிக்கிறேன் வெங்கட்’னு சொல்லிட்டேன்!''



 ''படத்தில் உங்கள் கேரக்டர்பற்றி சொல்லுங்க?''

''என் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். படத்தில் நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்!''

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''

''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''


''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''

'' 'ஆடுகளம்’ ஆறு தேசிய விருதுகளை வாங்கி இருக்கு. தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவதை உணர்கிறீர்களா?''

'ஒட்டுமொத்த சினிமாவையும்பற்றி பேசும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை. நம் தமிழ் சினிமா நண்பர்கள் வெற்றி பெறுவது சந்தோஷமான விஷயம். 'காதல் கோட்டை’ படத்துக்காக அகத்தியன் தேசிய விருது வாங்கியபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போதும் அதே சந்தோஷம்தான்!''

'' 'பில்லா-2’ எப்படிப் போயிட்டு இருக்கு?''

''50 நாள் ஒரே ஷெட்யூல்ல ஹைதரா பாத்ல ஷூட்டிங் போயிட்டு இருக்கு. அடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஷூட் பண்ண இருக்கோம். நவம்பர் மாதம் ஷூட்டிங் முடிஞ்சவுடன், 'பில்லா-2’ பத்தி உங்ககிட்ட நிறையப் பேசுறேன்!''

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''

''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''


''ஷாலினியும் அனோஷ்காவும் எப்படி இருக்காங்க?''

''அனோஷ்கா, இப்போ எல்.கே.ஜி படிக்கிறாங்க. அவங் களுக்கு இப்போ ஏகப்பட்ட சொந்தங்களோட அன்பும் அரவணைப்பும் வேணும். அதனால், அப்பா, அம்மானு எல்லோரையும் வீட்டுக்குள் கூட்டி வந்து கூட்டுக் குடும்பமா மாத்திட்டேன். வாரத்துக்கு ஒருமுறை ஷாலினியோட அப்பா, அம்மாவும் வந்து பாப்பாங்க. என்னை மட்டுமே நம்பி வந்தவங்க ஷாலினி. 11 வருஷமா எங்க குடும்ப வாழ்க்கை சந்தோஷமாப் போயிட்டு இருக்குன்னா, அதுக்கு முழுக் காரணமும் ஷாலினிதான். எத்தனை பிறவி எடுத்தாலும் அவங்களுக்கு நான் நன்றி சொல்லிட்டே இருக்கணும்!''

இது 2,000 வருட ரகசியம்! 

மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்க, ''எப்பவும் விகடனுக்குத்தான் முதல்ல பேசுவேன். வாங்க பேசலாம்!'' என்று நட்பாகச் சிரிக்கிறார்.''140 நாட்கள் ஷூட்டிங்...  நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!'' 


 '' 'ஏழாம் அறிவு’ன்னா என்ன?''

' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''

''நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''  

 
''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோ யின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''
''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''

''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான     கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''
''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''

''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!'' 


நன்றி - விகடன் மற்றும் நண்பன் கண்ணன்..  இன்று மின் அஞ்சலில் இந்த தொகுப்பை வழங்கினான்  

Wednesday, August 03, 2011

ஸ்டாலின் கைது... காரணம் திவாகரனா?

சிக்கலில் டெல்டா போலீஸ்

'விபத்தில் இறந்த ஒரு மாணவ​னின் மரணத்துக்கு, தி.மு.க-வின் சமச்சீர்கல்விப் போராட்டம்தான் காரணம்!’ என்று குற்றம் சாட்டி, கைது களேபரம் நடத்தி இருக்கிறது தமிழக போலீஸ். இதில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கை​தாக... தமிழகம் முழுவதும் மறியல் நடத்தித் திமிலோகப்படுத்திவிட்டது தி.மு.க.!  கடந்த 29-ம் தேதி 'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்... திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, தி.மு.க-வினரோடு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீடுகளுக்குப் புறப்பட்டனர். தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் சில மாணவர்கள் ஏறினர். சற்று நேரத்தில், மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் லாரி ஒன்று மோதி, அந்தப் பேருந்து கவிழ்ந்ததில், 12 பேருக்கு காயம். விஜய் என்கிற மாணவன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

 இதற்கிடையில், மன்னார்​குடியில் வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் ஸ்டாலின். வழியில் கொரடாச்சேரி அருகே, பேருந்து விபத்தில் பலியான மாணவன் விஜய்யின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு, திருத்துறைப்பூண்டிக்குக் கிளம்பினார். ஆனால், ஆலத்தம்பாடி என்ற இடத்தில் ஸ்டாலின் காரை போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன. தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமார், திரூவாரூர் எஸ்.பி. தினகரன் ஆகியோர் ஸ்டாலினுடன்இருந்த திருவாரூர் தி.மு.க, மாவட்டச் செயலாளர் கலைவாணனைக் கைது செய்ய முயன்றனர். காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதாக, ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் சாலை மறியல் செய்தனர். உடனே ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், தமிழகம் முழுக்க தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்க... சற்று நேரத்தில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி, ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்!


அன்று இரவு மன்னார்குடிப் பொதுக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, ''விபத்து நடந்த அன்று கலைவாணன் ஊரில்தான் இருந்தார். அப்போது ஏன் அவரைக் கைது செய்யவில்லை? ஸ்டாலின் வந்த பிறகு கைது செய்து, பிரச்னையை வேண்டும் என்றே தூண்டி இருக்கிறது காவல் துறை. 'ஸ்டாலினைக் கைது செய்தால் நடப்பதே வேறு’ எனத் தொண்டர்கள் முழங்கியதால், பயந்துபோய் விடுதலை செய்துவிட்டனர்!'' என்றார்.அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''எங்கள் காரை வழிமறித்த போலீஸார் கலைவாணனை 'விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். 'வாரன்ட் இருக்கிறதா? யார் புகார் கொடுத்தது?’ என்று கேட்டபோது, பதில் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி​யைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட திட்டம்தான் அது. முடிந்ததா? நாம் 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம். போகிற போக்கைப் பார்த்தால், அதற்கு முன்பே தேர்தல் வரும்போலத் தெரிகிறது!'' என்று பேசினார்.

''தமிழகத்தில் அமோக வெற்றியை அ.தி.மு.க. அடைந்தாலும், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில் தோல்வி அடைந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இதில் ரொம்பவே அப்செட். அவரை இன்னும் வெறுப்பாக்கும் விதமாகத்தான் திருவாரூரில் நடத்த வேண்டிய நன்றி அறிவிப்புக் கூட்டத்தை, மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டது தி.மு.க. இதில் கடுப்பான திவாகரன், கார்டன் வரை ஆதங்கத்தைக் கொண்டு போனதால்தான் ஸ்டாலின் கைது வரை போனது!'' 

விகடன்


Tuesday, August 02, 2011

ஹாப்பி பர்த்டே நெப்டியூன் கிரகம்


பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள்.

அதைக் கண்டுபிடிப்பது எப்படி என சிந்தனை செய்யத் தொடங்கினர்... பிரெஞ்சு நாட்டவரான லெவெரியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஆடம்ஸ். இந்த இரண்டு இளைஞர்களும் வானவியலில் புதுமைப் புரட்சி செய்தனர். இரவு வானை சல்லடை போட்டு தொலைநோக்கி கொண்டு தேடியபோது, தற்செயலாக நெப்டியூன் கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.அன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த கால்குலஸ் எனும் கணித முறையின் மூலம், இருவரும் தனித்தனியே யுரேனஸ் மீது தாக்கம் செலுத்தும் 8-வது கோளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். யுரேனஸ் பாதையில் எத்தகைய தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதை வானவியல் ஆய்வுகள் காட்டின. மர்மக் கோள் எங்கு இருந்தால் இதே தடுமாற்றம் ஏற்படும் என்பதை கால்குலஸ் கொண்டு கணக்கிட முனைந்தனர்.

1846-ல், ஆடம்ஸ் தனது கணக்கீட்டைச் செய்து முடித்தார். அவரது நாட்டின் தலை சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய  ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன்.

இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன், இந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும். அதாவது, இப்போது ஒரு நெப்டியூன் ஆண்டு முடிந்துள்ளது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வருவதே ஓர் ஆண்டு. அதுபோல நெப்டியூனுக்கு இது முதல் புத்தாண்டு. 'ஹாப்பி பர்த்டே நெப்டியூன்.’ என சொல்லி வாழ்த்துவோம்!

த.வி.வெங்கடேஸ்வரன்


Monday, August 01, 2011

அரசியல் - டிஷ்யூம்... டிஷ்யூம்

டிஷ்யூம்... டிஷ்யூம்-1


ஒரு மாவட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் வெவ்வேறு நபர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உள்குத்து நடந்துகொண்டே இருக்கும். இது இரண்டு கழகங்களுக்கும் பொருந்தும் பொதுவான தியரி. அ.தி.மு.க.வின் காஞ்சி மாவட்டச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ராசேந்திரனுக்கும், அமைச்சரும் தாம்பரம் நகரச் செயலாளருமான சின்னையாவுக்கும் ஏழாம் பொருத்தம். சின்னையா போன்றவர்களுக்கு எங்கே அமைச்சர் வாய்ப்பு வரப் போகிறது என்று மாவட்டச் செயலாளர் இதுவரை உதாசீனப்படுத்தி வந்தார். இப்போது அமைச்சரது சீஸன். கட்சி நிகழ்ச்சியோ, அரசு நிகழ்ச்சியோ மாவட்டச் செயலாளர் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், அமைச்சர் தரப்பு மாவட்டச் செயலாளரிடம் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை மாற்றிச் சொல்லி விடுகிறதாம். விளைவு: நிகழ்ச்சி முடிந்த பிறகு மா.செ. போகிறார். மா.செ. தரப்பு கடுகடுக்க, அமைச்சர் தரப்பு உள்ளுக்குள் மகிழ்கிறது. இந்த உள்குத்து எதில் போய் முடியுமோ, அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்! 

டிஷ்யூம்... டிஷ்யூம் - 2


தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இரண்டு மாதங்களாகியும், தில்லி தலைமை அன்றாடம் சந்திக்கும் தலைவலி காரணமாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கு வேறு ஒருவரை நியமிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. தங்கபாலு ராஜினாமாவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ‘இதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு துள்ளி ஆடுகிறார் தங்கபாலு’ என்று மற்ற கோஷ்டிகள் பொறாமைப்படுகின்றன. சமீபத்தில் கடலூர், தென் சென்னை மாவட்டங்களுக்கு அதிரடியாகத் தமது ஆட்களைத் தலைவராக நியமித்து விட்டார் தங்கபாலு. கோஷ்டிகள் அதிர்ந்து போய் தலைமையிடம் முறையிட்டன. வழக்கம் போல் தலைமையிடம் மௌனம். இதற்கிடையில் கட்சியிலிருந்து தங்கபாலு வால் நீக்கப்பட்ட ஜி.ஏ.வடிவேலு, ஜோதி ராமலிங்கம், இதயதுல்லா போன்ற புள்ளிகள் கட்சியின் பொதுக் குழுவை(?) ஆகஸ்ட் முதல் வாரம் கூட்டியுள்ளனர். உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைவராகும் தகுதியுள்ள ஐந்து பேர் பெயர்ப் பட்டியலை, தலைமைக்கு அனுப்பப் போகிறார்களாம். தங்கபாலு தரப்பும் மோதலுக்குத் தயாராகிறது.  

வெளுக்கும் கறுப்பு



நிலப்பறிப்பு விவகாரங்களில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கைதாகி விடுகின்றனர். ஆனால் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரும்பாலான நீதிமன்றங்களில் அனுமதி கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அனுபவமில்லாத அரசு வழக்கறிஞர்கள்தான்," என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். மதுரையில் கைது செய்யப்பட்ட தளபதி, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்றவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்யாதவர்கள் கூட, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்துத் தள்ள வேண்டியதைத் தள்ளி அரசு வழக்கறிஞராக ஆகிவிடுகிறார்கள். தி.மு.க. அனுதாபிகளான வழக்கறிஞர்களும் அரசு வழக்கறிஞர்கள் ஆகிவிட்டார்கள். மதுரையில் நீதிமன்றமே போகாமல் பள்ளி நடத்தும் ஒருவர், படிப்பு மட்டும் இருப்பதால், அரசு வக்கீலாக வந்து விட்டார். இவரைப் போன்ற அனுபவமில்லாதவர்கள் அரசு வழக்கறிஞராக இருந்தால், நாளை பிடிபட்டவர்கள் எல்லோரும் விடுதலை கூட ஆகிவிடலாம். மாவட்ட நீதிமன்றங்கள் என்றில்லை. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரே சரியாக வாதாடவில்லை. அதனால்தான் சமச்சீர் கல்வி வழக்கில் இத்தனை குழப்பங்கள்," என்கிறார் ஆளும் கட்சியின் வழக்கறிஞர் அணி பிரமுகர் ஒருவர்.

கூடா நட்பு!

பிரணாப் முகர்ஜி கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுச் சென்றபிறகு அலைக் கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அன்னிய நாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தை முடக்குவது, கலைஞர் தொலைக்காட்சியை முடக்குவது, சாதிக்பாட்சா மர்ம மரண வழக்கு ஆகியவற்றில் பத்திரிகைகளில் காட்டப்படும் பரபரப்பு உண்மையில் அதிகார மட்டத்தில் இல்லை என்கிறார்கள். மூன்றாம் குற்றப் பத்திரிகையில் தயாநிதியின் பெயர் இடம் பெறாமல் போனாலும் ஆச்சர்யம் வேண்டாம்," என்கிறார் ஒரு தில்லி காங்கிரஸ் பிரமுகர். இந்த நிலையில் கனிமொழி ஜாமீனில் வெளிவந்தபிறகு, நடக்க இருக்கும் மத்திய அமைச்சரவையின் மாற்றத்தில் கனிக்கும் அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதாம். கூடா நட்பு ‘கை’ கொடுக்கிறது!  

வருவான் வடிவேலன்


காமெடி கிங் வடிவேலுவுக்கு, புதிய படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. முடக்கப் பட்டிருக்கிறார் வடிவேலு. எனக்கு முதல்வர் மீது எந்தக் கோபமோ வருத்தமோ கிடையாது. தே.மு.தி.க. தனியாக நின்றிருந்தால், நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருக்க மாட்டேன். காரணம் அந்தச் சூழலில் தே.மு.தி.க. தோற்கும் என்று தெரியும். அம்மாவை நான் எங்கும் விமர்சனம் செய்யவில்லை" என்று நண்பர்களிடம் புலம்பும் வடிவேலு, விரைவில் ஜெ.வைச் சந்திக்கக்கூடும். சொந்தமாகப் படமெடுக்கும் ஐடியாவும் இருக்கிறதாம் வடிவேலுவுக்கு.