Search This Blog

Thursday, August 18, 2011

நான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது! - கம்பிகளுக்குள் கர்ஜிக்கும் கனிமொழி

100-வது நாள் நெருங்குகிறது. 'குற்றச் சதிக்கு உடந்தை’ எனச் சொல்லி, கடந்த மே மாதம் 21-ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வளைக்கப்பட்ட கனிமொழிக்கு இன்று வரை பெயில் கிடைக்கவில்லை. தந்தையின் தவிப்பு, தாயின் போராட்டம், கணவரின் கையறு நிலை எனக் கம்பிகளுக்குப் பின்னால்  கனிமொழியின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பாசப் போராட்டம் ஒருபுறம் என்றால், கட்சியில் அவருக்கான இடம் என்ன என்கிற போராட்டத்துக்கும் குறைவு இல்லை.

பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளைக்கூட தன்னைச் சுற்றி அனுமதிக்காத கனிமொழி, 15-க்கு 10 என்கிற சிறு அறைக்குள் இத்தனை நாட்களைக் கடந்ததே பெரிய ஆச்சர்யம். கனிமொழி அடைக்கப்பட்டு உள்ள 8-ம் எண் அறையில், ஏ.சி. வசதி இல்லை. மூன்று பக்கமும் சுவர், முகப்பில் கம்பி வலை என்பதால் எப்போதும் அந்த அறை புழுக்கமாக இருக்கும். ஒற்றைக் காற்றாடி... அதில் இருந்து காற்று வருகிறதோ இல்லையோ... கடுமையான சத்தம் வருகிறதாம். புத்தகம் படிப்பதற்கு அந்தச் சத்தம் மிகுந்த இடைஞ்சலாக இருப்பதால், காற்றாடியைப் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி பயன்படுத்துவது இல்லை.


இரவு 11 மணிக்குத் தூங்கி, காலை 5.30 மணிக்கு எழுவது வழக்கம். சில நாட்களில் மட்டும் இரவு 1 மணி வரை வாசிப்பு, எழுத்து எனக் கழிகிறதாம். மிக முக்கிய ஆட்களுக்கு இதர கைதிகளால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க போலீஸார் நியமிக்கப்படுவது திகாரின் வழக்கம். கனிமொழிக்கு 24 மணி நேரமும் இந்த கண்காணிப்புத் தொடர்கிறது.பக்கத்து அறைகளில் இருக்கும் பெண் கைதிகளிடம் பேச, கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் சிக்கிய உளவு அதிகாரி மாதுரி குப்தா, கனிமொழிக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குப் பக்கத்து அறையில் டெல்லி கவுன்சிலரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற பெண். திகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கனிமொழியுடன் பேச அவ்வளவு ஆர்வம். கனிமொழியிடம் கோரிக்கை மனு கொடுத்து கண்ணைக் கசக்கி இருக்கிறார் ஒரு பெண். இதனாலேயே, அடிக்கடி இந்தப் பெண் கைதிக ளோடு உரையாடுவதும், அவர்கள் மேற்கொள்ளும் சுய தொழில் பயிற்சிகளைச் செய்து  பார்ப்பதும் கனிமொழியின் பொழுதுபோக்கு!

ஜெயிலுக்கு வந்த புதிதில், மூன்று வேளையுமே வெளியே இருந்து வந்த உணவுகளையே சாப்பிட்ட கனிமொழி, இப்போது வெளி உணவுகளைப் பெரும்பா லும் தவிர்த்துவிடுகிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடும் வழக்கம்கொண்டவர் கனிமொழி. ஆனால், மாலை 6 மணிக்கே இரவு உணவை ஜெயிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே பல நாட்கள் இரவு உணவை கட் செய்துவிடுகிறார் கனிமொழி. ஆ.ராசாவின் மனைவி மூலமாக ஸ்பெஷல் சாப்பாடு எப்போதாவது வருகிறது. துணி மணிகள் சரத்தின் சகோதரி மூலமாக கனிக்குக் கிடைக்கிறது.


டெல்லியில் இப்போதுதான் மழை சீஸன் தொடங்குகிறது. அதனால், அந்த அறைக்குள் அநியாயப் புழுக்கம் நிலவுகிறதாம். ஆனால், அதிகாலையில் கடுமையாகக் குளிர் அடிக்கிறதாம். இந்த சூழல் மாற்றமும் கொசுக் கடியும் கனிமொழியைப் படுத்தி எடுப்பதாகச் சொல்கிறார்கள்.கோர்ட் விசாரணை நடக்கும் நாட்களில்தான் கனிமொழியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறதாம். திகாரில் இருந்து பாட்டியாலா வரும் வழியில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் இருப்பதால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார்தான் கனிமொழியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களோடு மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி கோர்ட்டுக்கு வரும் கனிமொழி, அங்கே காத்திருக்கும் உறவினர்களைப் பார்த்ததும் உற்சாகமா கிறார். பல நாட்கள் டெல்லியிலேயேதங்கி இருந்த கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், உடல் நலக் கோளாறால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். தி.மு.க- வின் மகளிர் அணி நிர்வாகிகளும் எம்.பி-க் களும்தான் அடிக்கடி கனிமொழியைச் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்கள். பாட்டியாலா கோர்ட் அறைகளில் முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருப்பதால், விசாரணை இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என ஏக்கமோடு பார்ப்பார்களாம் கனி உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் புள்ளிகள்.


ஆரம்பத்தில் கருணாநிதி தொடங்கி சகோதரி செல்வி வரையிலான அத்தனை சொந்தங்களும் டெல்லிக்கு வந்து கனிமொழியைச் சந்தித்தார்கள்; கட்டித் தழுவிக் கதறினார்கள். ஆனால், இப்போது மனைவி காந்தியுடன் டெல்லியிலேயே இருக்கும் அழகிரிகூட, கனிமொழியைக் காணச் செல்லவில்லை.'கட்சி நினைத்திருந்தால், நிச்சயம் என்னைக் காப்பாற்றி இருக்கலாம்’ என ஆரம்பத்தில் ஆதங்கப்பட்ட கனிமொழி, இப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது குறித்துப் பேசுவதே இல்லை. மாறாக, தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறார். தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி இழுபறி, அதிரடிக் கைதுகள்பற்றி எல்லாம் பேசி, 'அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்’ எனச் சிரிக்கிறார்.''பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தபோதுதான் கனிமொழியைப் பார்த்தேன். ஆதங்கம், வேதனை, குற்றச்சாட்டு என அவரிடம் இருந்து சிறு வார்த்தைகூடப் புலம்பலாக வெளிப்படவில்லை. சில விஷயங்கள் குறித்துப் பேசியபோது, சத்தம்போட்டுச் சிரித்தார். 2ஜி விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'கலைஞர் டி.வி-க்காக 200 கோடி வாங்கப்பட்டதுபற்றி எனக்கு அறவே தெரியாது. அதுபற்றி எல்லாம் நான் சொன்னால், இப்போ யார் நம்புவாங்க? ஸ்பெக்ட்ரம்பற்றி நான் வாய் திறந்தால் நிச்சயம் யாராலும் தாங்க முடியாது. ஆனால், அது மீடியாக்களுக்குத்தான் தீனியாக இருக்குமே தவிர, கட்சிக்கு நல்லதா இருக்காது’னு சொன்னார். இந்த அளவுக்குப் படுபக்குவமான பேச்சை கனியிடம் இருந்து நான் இது வரைக்கும் கேட்டது இல்லை!'' என்கிறார் சமீபத்தில் கனியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக அரசியல் புள்ளி.

''ஸ்பெக்ட்ரம் வழக்கில் பலரை நோக்கியும் கை காட்டச் சொல்லி தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே கனிமொழியைத் தூண்டினார்கள். இது தெரிந்துதான் திடீரென இரண்டாவது முறையாக டெல்லி வந்து கனிமொழியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். 'கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்’ என ஸ்டாலினிடம் உறுதி சொன்னார் கனிமொழி. அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் சாதாரணமானவை அல்ல. ராஜ்யசபா எம்.பி. என்கிற பதவியைத் தவிர, கட்சியில் கனிமொழிக்கு வேறு பதவி இல்லை. கனியின் இடம் இது தான் எனக் கட்சியில் சிறப்பு அங்கீகாரத்தை அவருக்கு ஸ்டாலினே வாங்கிக் கொடுப்பார் பாருங்கள். கனியோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்த செல்வி, இப்போது அடிக்கடி தங்கையின் நிலையை நினைத்து அடிக்கடி தழுதழுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றங் களைவைத்தே மகளுக்கான மகுடத்தை கருணாநிதி கச்சிதமாகச் சூட்டுவார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகள்.சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார் கனிமொழி. அன்றைய தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய, நீதிபதியோடு அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக மனம் திறந்து பேசுகிற சந்தர்ப்பம் கனிமொழிக்குக் கிடைத்தது. ''கலைஞர் டி.வி-க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அங்கே என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது!'' எனச் சொன்னார் கனிமொழி. நீதிபதியின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் எத்தகைய விளைவை உண்டாக்கினவோ?!

கலைஞர் டி.வி. முடக்கம், இன்னும் சில கைதுகள் என்றெல்லாம் அரங்கேறிய பிறகே, கனிமொழி வெளியே வருவது சாத்தியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.கனிமொழி கைது செய்யப்படப்போவதாக மீடியாக்களில் பரபரப்பு கிளம்பிய வேளையில், அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன விளக்கம்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...

 ''நடக்காது என நினைத்த எல்லாமும் நடக்கிறது. நான் கைதாகப்போவதாகக் கிளம்பும் பரபரப்பும் அப்படியே அமையட்டும். ஆரம்பத்தில் அரசியல் ஆர்வமே இல்லாமல் இருந்த என்னைச் சுற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. இந்த விசித்திரத்தை நினைத்துச் சிரிப்பதா... அழுவதா?''


விகடன் 

உண்மையான சாம்பியன்தானா இந்தியா?

உலக சாம்பியன் இந்தியா இவ்வளவு சீக்கிரம் இப்படிக் கேவலமாக உதை வாங்கும் என இங்கிலாந்து அணியின் கேப்டன்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையைக் கையில் ஏந்தி ஐந்து மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் பறி கொடுத்து, தரவரிசை யில் நம்பர் 1 இடத்தையும் இழந்து நிற்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட்களில் ஒன்றில்கூட இந்திய பேட்ஸ்மேன்கள் முழுவதுமாக 100 ஓவர்கள் விளையாடவில்லை.ஒரு இன்னிங்ஸில்கூட 300 ரன்களைத் தாண்டவில்லை. 1999-ல் ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் 3-0 என இந்திய அணி படு தோல்வி அடைந்திருப்பது இப்போதுதான். உலக சாம்பியனுக்கு ஏன் இந்த அவமானம்?

விளையாடத் தயாராக இல்லை!


இந்தத் தோல்விக்கு முழுமுதல் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர்களின் மன நிலை. 'நிறைய விளையாடிவிட்டோம். ஓய்வு வேண்டும்.’ என்கிற காரணத்தையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் டோனி. உலகக் கோப்பை முடிந்தவுடன், ஐ.பி.எல், அதன் பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் தொடர். அப்படியே இங்கிலாந்து பறந்து டெஸ்ட் தொடர். இதில் மேற்கு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கேப்டன் டோனி விளையாடாமல் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஓய்வுக்குப் பிறகு திரும்பிய டோனி, இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 297 ரன்களே எடுத்திருக்கிறார். வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர் காயம் காரணமாகத் தொடரில் விளையாடவில்லை. சச்சின் டெண்டுல்கர் மேற்கு இந்தியத் தொடரில் முழுவதுமாகப் பங்கேற்கவில்லை. இந்திய அணியின் நம்பர் 1 வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர் கானும் மேற்கு இந்தியத் தொடரில் விளையாடவில்லை. இங்கிலாந்து தொடரில் விளையாட முழுத் தகுதியுடன் இருப்பதாக அணியில் இடம்பிடித்த ஜாகீர்கான், முதல் டெஸ்ட்டில் 13 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிவிட்டு, 'காயம்’ என ஒதுங்கிவிட்டார்!  

மேற்கு இந்தியத் தீவு தொடரில் ஓய்வு எடுத்தவர்கள், எப்படி ஓய்வு இல்லாமல் விளையாடுகிறோம் என்கிறார்கள். இங்கி லாந்து அணிக்கு எதிராக விளையாட இந்திய அணி தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. வெற்றி வந்தால், ஓ.கே. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்கிற ரீதியில்தான் இந்திய வீரர்கள் மெத்தனமாக ஆடினார்கள்! 

நூறாவது சதமா... இந்திய அணியின் வெற்றியா?

சச்சின் டெண்டுல்கரின் வெற்றிகளைவிட அவரது தோல்விகள்தான் அதிகம் கவனிக்கப்படும், விமர்சிக்கப்படும். இப்போதும் அதே கதைதான். இந்திய அணியின் படுதோல்வி ஒருபுறம் இருக்க, சச்சின் 100-வது சதம் அடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் துவங்கிய தொடரில், அவருடைய டாப் ஸ்கோர் 56. மூன்று டெஸ்ட்களில் மொத்தம் 159 ரன்கள். மாஸ்டர் பிளாஸ்டரை 'மாஸ்டர் ஆஃப் லிட்டில்’ என ஒரு பிரபல பத்திரிகை கமென்ட் அடிக்கும் அளவுக்கு சச்சினின் ஆட்டம் இந்த முறை மோசம். அணி யின் பேட்டிங்கை வலுப்படுத்தி, ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்தியிருக்க வேண்டிய சச்சின், முதல் முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த வீரர்போல ஆடியது இந்தியாவின் படுதோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று!

தேர்வாளர்களின் குழப்பம்!

திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புத் தராமல் எதற்கு ரிஸ்க் என்று ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீனியர் வீரர்களையே தொடர்ந்து விளையாடத் தேர்ந்தெடுக்கிறது ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் ராகுல் டிராவிட்டை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு அழைக்க, 'அவர் இனி மேல் விளையாட மாட்டேன். இதுதான் கடைசி!’ என்று அறிக்கைவிடும் அளவுக்கு, திறமையான வீரர்கள் இல்லாமல் திண்டாடுவதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்திய தேர்வுக் குழு. விராத் கோலி, ரோகித் ஷர்மா, ராபின் உத்தப்பா, புஜாரி, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இளம் வீரர்களுக்குச் சரியான வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒரு போட்டியில் விளையாடவிட்டு நன்றாக ஆடவில்லை என்றதும் அணியில் இருந்தே தூக்குவதும் எந்த வகையில் நியாயம் என்பது இந்தியத் தேர்வாளர்களுக்கே வெளிச்சம்!   

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலியாவில் சந்திக்க இருக்கிறது இந்திய அணி. உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியைப் பழிக்குப் பழி தீர்க்கக் காத்திருக்கிறது ஆஸ்திரேலியா. டோனியின் திறமையான கேப்டன்ஷிப், சச்சின் டெண்டுல்கரின் மாஸ்டர் பேட்டிங், வீரேந்திர ஷேவாக்கின் அதிரடி ஆட்டம், ஜாகீர்கானின் யார்க்கர்கள் என ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள, இந்தியா மீண்டும் அசுர பலத்தோடு களம் இறங்க வேண்டும். இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிடமும் அவமானப்பட்டுத்தான் திரும்ப வேண்டும். 

சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைத் தக்கவைப்பதில் இருக்கிறது சாம்பியனின் சாமர்த்தியம்!   

விகடன்  

Wednesday, August 17, 2011

ஜெ.வுடன் சமாதானமா? - ஜூ.வி-க்கு காந்தி அழகிரி சீறல் பேட்டி

மதுரை மீட்பு’ நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் கிடுக்கிப் பிடி நாளுக்கு நாள் வலுக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி நின்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட... அடுத்த கைது, காந்தி அழகிரிதான் என காச்மூச் கிளம்பி விட்டது. இதற்கிடையில் கைது நடவடிக்கைக்குப் பயந்து அழகிரியின் குடும்பத்தார் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டதாகவும் பரபரப்பு. 'பரபர செய்திச் சுரங்கமாக’ அழகிரியின் குடும்பம் மாறிவிட்ட நிலையில், ஜூ.வி-க்கு காந்தி அழகிரி அளித்த பிரத்யேகப் பேட்டி... 

'கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும் என எதிர்பார்த்​​தீர்களா?''

''இல்லை!

ஆனாலும், மக்களின் தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்கும் பக்குவமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தோற்று விட்டதை நினைத்து வருத்தப்படும் நிலையில் நாங்கள் இல்லை!''

''ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது வழக்கமானதுதான். ஆனால், 'மதுரை மீட்பு’ என அறிவித்து அதிரடி கிளப்புகிற அளவுக்கு மதுரையை நோக்கி ஜெ. ஆவேசம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''தேர்தலுக்கு முன்னரே மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எனது கணவர் பெயரையும், அவருடைய நண்பர்கள் பெயர்களையும் பட்டியல் போட்டு பழிக்குப் பழி வாங்குவேன் என ஆவேசமாக முழங்கினார் அந்த அம்மையார். அதைத்தான் இப்போது செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார். கட்சிக்கும் என் கணவருக்கும் நெருக்கமான ஆட்களைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, தான்  நினைத்ததைச் சாதித்துவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. கைதுகளை அரங்கேற்றுவதும், குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும் மதுரையின் வழக்கமான காட்சிகளாகத் தொடர்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளையும் ஆக்கப்பூர்வத் திட்டங்களையும் எதிர்பார்த்துதான் மக்கள் ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பரிபூரணமாகச் செய்யவேண்டியவர்கள், இப்படிப் பழிவாங்கும் போக்கையே முதன்மையான வேலையாகச் செய்கிறார்கள். செய்யட்டும்... இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்!''


''பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி என அரசியலுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லாது, உங்களை நோக்கியும் போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாகிறதே..?''

''விசுவாசிகளைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, என் கணவரைத் தனிமைப்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்தலாம் என்பது அவர்களின் கனவு. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குடும்பத் தலைவியான என்னை நோக்கியும் போலீஸை ஏவி விடுகிறார்கள். இதன் மூலமாக என் கணவரை நிலைகுலைய வைக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அதற்காகப் பொய்யான ஜோடிப்புகளைச் செய்து, அடாவடி, மோசடி என என்னென்னவோ கிளப்பி விடுகிறார்கள். பொய் வழக்குகளைப் போடச் சொல்லி, போலீஸைத் தூண்டிவிடுகிறார்கள்''.

''இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் கணவரை எத்தகைய மன நிலையில் வைத்திருக்கின்றன?''

''எப்போதுமே அவர் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில்தான் இருப்பார். ஆட்சி மாறினால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். எதிர்பார்த்ததையும் தாண்டி அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது தீவிரமாக நடக்கின்றன. கைதுக் களேபரங்களை அரங்கேற்றினால், கட்சியையும் என் கணவரையும் அழித்துவிடலாம் என அந்த அம்மையார் நினைப்பது தவறு. எத்தனையோ சூறாவளிகளையும் போராட்டங்களையும் கடந்து வந்தவர்தான் என் கணவர். அம்மையாரின் அடக்குமுறைகள் எங்கள் கட்சியை இன்னும் வளர்க்கவே செய்யும். கடைக்கோடித் தொண்டன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் படிக்கல்லாக மாறும். இந்த அம்மையார் நடத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கட்சிக்குள் இருந்த சிறுசிறு பூசல்களைக்கூட மறந்துவிட்டு, அனைவரும் ஒருமித்துக் கைகோத்து நிற்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா... வெற்றி, மகிழ்ச்சி என சாதகங்கள் மட்டுமே நிலவும் நேரத்தைக் காட்டிலும், இந்த மாதிரியான இக்கட்டான சூழலில்தான் என் கணவர் படு ஆக்டிவாகவும், 'வரட்டும் பார்க்கலாம்’ என்கிற வைராக்கியத்துடனும் இருப்பார். அவருடைய ஆதரவாளர்கள் கைதான உடனேயே முதல் ஆளாகப் போய்ப் பார்த்தார். 'நான் இருக்கேன். தைரியமா இருங்க’ எனச் சொன்னார். பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தைரிய மன நிலையில்தான் அவர் இருக்கிறார்!''  

''நிலம் வாங்கிய விவகாரத்தில் உங்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே... உண்மையில் அந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?''

''ஒரு பாமரனுக்கும் தெரிந்த விஷயத்தைக் கேட்கிறேன்... ஒரு சொத்தை வாங்கும்போது, அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதைத்தானே பார்த்து வாங்குவோம். நாங்கள் வாங்கிய சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை. விற்பவர்களின் முழு ஒப்புதல், முறையான விலை, உரிய ஆவணங்கள் எனப் பத்திரப் பதிவுக்குப் பின்பற்றக்கூடிய அனைத்தையும் முறையாகக் கடைப்​பிடித்தே அந்த நிலத்தை வாங்கினோம். அதில், திடீரென இப்போது எங்கே இருந்து வில்லங்கம் வந்தது?எங்கள் மீது புகார் கொடுத்த விவசாயி ஒருவரே போலீஸ் ஸ்டேஷனைத் தேடி வந்து, 'சிலருடைய தூண்டுதலால் புகார் கொடுத்துவிட்டேன். இப்போது புகாரை வாபஸ் பெற விரும்புகிறேன்!’ எனச் சொல்கிறார். புகார் கொடுத்தவரே பின்வாங்கிய நிலையிலும், போலீஸ் நடவடிக்கைகள் தீவிரம் ஆகிறது என்றால், இது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கைதானே!நாங்கள் சொத்துக்களை வளைத்து​விட்டதாகப் பரப்பியவர்கள், புகார் கொடுத்​தவரே எங்களுக்கு ஆதரவாகப் பேசுவதை கண்டுகொள்வது இல்லை!''  

''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்குப் பறந்து ​விட்டதாகப் பரபரப்பான பேச்சு அடிபட்டதே?''

''வெளிநாடுகளுக்குப் போவது தவறு என்கிற சட்டம், எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. இப்போது புதிதாக யாரும் அப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்களோ என்னவோ? இப்போதும் எப்போதும் நாங்கள் இங்கேதான் இருப்போம். எங்கேயும் பறக்க மாட்டோம். எங்களுக்கு எதிராக ஏதாவது நடக்காதா எனப் பறப்பவர்கள்தான், இப்படிப் பரப்புகிறார்கள். இதை எல்லாம் எங்கள் மீதான அக்கறையாக எடுத்துக்கொண்டு, சிரிக்கவே செய்கிறோம்!''

 ''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து, ஜெயலலிதாவுடன் உங்கள் கணவர் சமாதானம் பேசியதாகக்கூட செய்தி பரவியதே?''

'சரியான கட்டுக்கதை அது! எதிர்க் கட்சியினரோடு சரண்டர், சமாதானம் என்பது எல்லாம் என் கணவரின் சரித்திரத்திலேயே இல்லாதது. ஜெயலலிதாவுடன் சமாதானம் என்பது எப்போதுமே கிடையாது... நெவர்!''
''இதை எல்லாம் மீறி, உங்களின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?''

''சட்டப்படி, நீதிமன்றத்தில் தைரியமாக எதிர்கொள்வேன். கைதுக்கோ, சிறைக்கோ அஞ்சாத தைரியத்தை, அவரைக் கரம் பிடித்த நாளில் இருந்தே கற்றுவைத்து இருக்கும் ஆள் நான். அவருடைய நான்கு எழுத்துக்களே என் நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் போதுமானது... ஆமாம்!''

''உங்கள் கணவருக்கும் ஸ்டாலினுக்கும் மறுபடியும் மனக் கசப்புத் தொடங்கி விட்டதா என்ன?''

''என்றுமே இணைந்திருக்கும் சகோதரர்கள் அவர்கள். அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படாதா என ஏங்குபவர்கள் கிளப்பி விடும் வழக்கமான வதந்தி அது. புரியாமல்தான் கேட்கிறேன்... இதே வதந்தியை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிளப்புவாங்களோ... ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா!''.

- இரா.சரவணன்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 
  

Tuesday, August 16, 2011

'ஸ்மெல் சீனிமா' திரைக்கு வரும் 4D மிரட்டல் !

பொழுதுபோக்கு விஷயத்தில் சினிமாவுக்கு எப்போதுமே முதல் இடம் உண்டு. காரணம், காலத்துக்கு ஏற்ப சினிமாவின் டெக்னிக்கும் மாறுவதுதான். அந்த வகையில் இப்போது திரையில் மிரட்ட வருகிறது... 4ஞி டெக்னாலஜியில் உருவான 'ஸ்பை கிட்ஸ்’.


மௌனத்தில் ஆரம்பித்த சினிமா, பேசியதே ஒரு காலத்தில் ஆச்சர்யமாக இருந்தது. பிறகு, கறுப்பு-வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறியது. சினிமாஸ் கோப் என்ற அகன்ற திரையாய் பிரமிக்க வைத்தது. அதுவும் ரசிகர் களுக்கு அலுத்தபோது 2ஞி என்று வளர்ந்தது. அதாவது, வெளியே இருந்து ஒருவர் அழைக்கும் காட்சி திரையில் வந்தால், நமக்கும் தியேட்டருக்கு வெளியே இருந்து அழைப்பது போன்ற சத்தம் கேட்கும். இது அங்கே இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. சத்தத்தின் மூலம் கொடுத்த உணர்வை, காட்சிகள் மூலம் கொடுக்க உருவானதுதான் 3D சினிமாக்கள்.  இப்படி நமது ஐம்புலன்களில் காது, கண்களுக்கு அடுத்து மூக்கைக் குறிவைத்து வந்துள்ள டெக்னிக்தான் இந்த 4D.

படத்தைப் பார்க்கையில், திரையில் கமகம பிரியாணியையோ சூடான பஜ்ஜியையோ சாப்பிடும் காட்சி வந்தால், அந்த வாசனையை நம்மை உணரவைத்து, நாவில் நீர் சுரக்க வைத்துவிடுவார்கள். பூங்காவில் இருந்தால் மலர்களின் வாசனையை நுகரலாம். 'ஸ்பை கிட்ஸ்’ அந்த கலக்கல் அனுபவத்தைத் தரும். ஸ்பை கிட்ஸ் படத்தின் முதல் பாகம் 2001-ல் வெளியானது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாகம். இவை இரண்டும் சாதாரண தொழிநுட்பத்தில் உருவானவை. மூன்றாம் பாகத்தை 3D தொழில்நுட்பத்தில் 2003-ல் வெளியிட்டார்கள். அதனால், நான்காம் பாகத்தை 4D-யாக வெளியிட  திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறைய எதிர்பார்ப்புகளுடன் வருகிறது ஸ்பை கிட்ஸ்-4.

ரெபிக்கா, சிசில் என்ற இரட்டையர் சுட்டிகளின் சாகஸமே படத்தின் கதை. Organization of Super Spies என்பது சக்தி படைத்த உளவாளிகளை உருவாக்கும் நிறுவனம்.(சுருக்கமாக ஓ.எஸ்.எஸ்.) தீயவர்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும்போது இந்த உளவாளிகள் வருவார்கள்.  இங்கே பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மரிசா என்ற பெண் உளவாளி. இவர் சிசில், ரெபிக்காவின் சித்தி. ஓ.எஸ்.எஸ். நிறுவனத்தில் இருந்த டைம் கீப்பர் கருவி எதிரியால் திருடப்படுகிறது. அதை மீட்க மரிசாவை அழைக்கிறது ஓ.எஸ்.எஸ். மரிசாவுடன் சுட்டிகளும் செல்கிறார்கள். சுட்டிகளின் செல்ல நாயும் இந்த சாகஸத்தில் பங்கேற்கிறது. வித்யாசமான நறுமண சக்தியை வைத்தே டைம் கீப்பரை  அவர்கள் எப்படி மீட்கிறார்கள் என்பதை 4D டெக்னிக்கலுடன் கண்டு மகிழலாம்.

இந்த டெக்னிக்கை பெரிய நகரங்களில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே அனுபவிக்க முடியும். மற்றவர்களுக்காக, 3D மற்றும் சாதாரணமாகவும் உலகம் முழுவதும் வருகிறது ஸ்பை கிட்ஸ்.

 அறிவியலின் அட்டகாச வளர்ச்சியில் 5D, 6D தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன. அதாவது... பறக்கும் தட்டிலோ, பைக்கிலோ வேகமாகச் செல்வது போன்ற காட்சிகள் வந்தால், நம் இருக்கை இடதும் வலதுமாக அசையும். மழை, பெரும் காற்று போன்ற காட்சிகளில் நம் மீது நீர் தெளிக்கப்படும். காற்று வீசும்.  பொழுதுபோக்குப் பூங்காக்களில் ஏற்கனவே இவை உள்ளன. இந்த டெக்னிக் விரைவில் தியேட்டர்களுக்கும் வந்துவிடும்.  பிறகு, சினிமா பார்ப்பதே அட்வென்சர் பயணம் செய்துவிட்டு வந்ததுபோல் இருக்கும்.

Monday, August 15, 2011

ஜல்லியடிக்கும் பிசிசிஐ!


திருவனந்தபுரம் பத்மநாபசாமி, திருப்பதி கோயில்களுக்கு நிகராகக் கட்டுக் கடங்காத செல்வம் கொண்ட ஓர் அமைப்பு, பி.சி.சி.ஐ. எனப்படுகிற இந்திய கிரிக்கெட் வாரியம். பிதுங்குகிற அளவுக்குப் பணம் படைத்திருப்பதால் இயல்பாக உலக அரங்கில் அளவற்ற அதிகாரம். (எவ்வளவு தூரம் என்றால் நடுவரைக்கூட ஓடஓட விரட்டும் அளவுக்கு.) சர்வதேச கிரிக்கெட் வாரியக் கூட்டங்களில் பி.சி.சி.ஐ. சொல்லுக்கு மறு அப்பீல் கிடையாது. இந்த அமைப்புக்காக ஆடுகிற 20வயதுகூட நிரம்பாத, மீசை முளைக்காத வீரர்களெல்லாம் கோடிகளில் கொழிக்கிறார்கள். சர்வம் செல்வம் மயம். இருந்தும் என்ன பிரயோசனம்? சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட்டுக்குத் தொடர்ந்து அவமானங்கள் நேர்ந்து கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்துத் துறைகளிலும் தென்படும் நிர்வாக ஒழுங்கீனம்.


ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு கிரிக்கெட் வீரர் காயத்திலிருந்து மீளும்போது அவர் முறையாக லோக்கல் மேட்சுகளில் ஆடி தம்மை நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் ஆட வாய்ப்பளிக்கப்படும். ஆஸ்திரேலியாவின் இளம்புயல் பொலிஞ்சர் இலங்கைச் சுற்றுப் பயணத்துக் குத் தேர்வு (டெஸ்ட் போட்டி) செய்யப்பட வில்லை. இத்தனைக்கும் ஜாகீர்கான் போல அவர் தம் உடல்தகுதியை நிரூபித்த பிறகும் இந்த நிலைமை. நீ போய் லோக்கல் மேட்சுகளில் ஆடி முழுத்தகுதியோடு வா என்று உறுதியாகச் சொல்லிவிட்டது ஆஸி நிர்வாகம். ஆனால், ஜாகீர்கான் விஷயத்தில் என்ன நடந்தது? ஐ.பி.எல்.லில் கர்மசிரத்தையாகக் கலந்து கொண்டவர், பிறகு, காயம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுத் தொடரில் பங்கேற்கவில்லை. கடந்த மூன்று வருடங்களில், காயம் காரணமாக 8 தொடர்களில் அவர் இடம்பெறவில்லை என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. இங்கிலாந்து தொடர் அதிமுக்கியமானது. இருந்த போதும், தான் தகுதியடைந்துவிட்டதாக ஜாகீர்கான் சொன்னவுடன் அதை வேத வாக்காக ஏற்றுக்கொண்டது பி.சி.சி.ஐ. சரியான உடல் தகுதியை அடைந்தாரா என்று முழுதாகப் பரிசோதிக்காததால் இங்கிலாந்தில் பி.சி.சி.ஐ.யின் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. உடல் தகுதியில்லாத வீரரை இந்தத் தொடரில் தேர்வு செய்தது எப்படி என்று கிரிக்கெட் நிபுணர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்கிறார்கள். எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு இந்தியா திரும்பி விட்டார் ஜாகீர்கான்.  


இதைவிடக் கொடுமை, ஜாகீர்கானை ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொண்டது. ஜாகீர்கானின் உடல் தகுதியைக் கணக்கில் கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு அணியில் சேர்த்த விதம் அபாயகரமானது. அடிப்படை விதிமுறைகள் எதுவும் அணித்தேர்வில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது இந்தப் பிரச்னைகளிலிருந்து புலப்படுகிறது. இதே அணியில் ராகுல் திராவிடைச் சேர்த்ததைவிட பெரிய அநியாயம் எதுவுமில்லை. பவுன்ஸ் உள்ள பிட்சுகளில் மட்டும் திராவிடை ஆட அழைப்பதால் யாருக்கும் எந்தப் பாதகமுமில்லை. காரணம், ராகுல் திராவிட் சமர்த்தர். அதிர்ந்து பேசமாட்டார், பிரச்னை செய்யமாட்டார். பிறகென்ன என்றெண்ணிப் பந்தாடிவிட்டது தேர்வுக்குழு.


 ஐ.பி.எல்.-க்கு முன்பே, இந்திய வீரர்கள் நிறைய நாட்கள் கிரிக்கெட் ஆடுவதாக முன்னணி வீரர்களிடமிருந்து கருத்து எழுந்தது. ஐ.பி.எல். வந்தபிறகு இயந்திரங்கள் ஆகிவிட்டார்கள் வீரர்கள். ஐ.பி.எல்.லால் இந்தியக் கிரிக்கெட்டுக்கு நேர்ந்த பலன்களை விடவும் உபாதைகள்தான் அதிகம். ஒவ்வொரு ஐ.பி.எல்.லின் போதும் முன்னணி வீரர்கள் காயமடைந்து முக்கியமான டூரில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. அல்லது காயமடையாத வீரர்களைச் சக்கையாகப் பிழிந்துவிடுகிறது ஐ.பி.எல். கடந்த ஒரு வருடத்தில் 13 டெஸ்டுகள், 20 ஒருநாள் ஆட்டங்கள், 16 ஐ.பி.எல். மற்றும் 6 சாம்பியன் லீக் ஆட்டங்கள் என்று பொதி மாடு போல உழைத்திருக்கிறார் தோனி. ஓய்வே இல்லை என்று அவர் வெளிப்படையாகவே பேசிவிட்டார். 

குறையில்லா செல்வம், கை சொடுக்கும் அதிகாரம், உலகத்தரத்தில் வீரர்கள் என எல்லாம் இருந்தும் இந்தியக் கிரிக்கெட்டுக்கு நேர்கிற அவமானங்களுக்குக் காரணம், மோசமான நிர்வாகம். அடிப்படை விதிமுறைகளில்கூட ஒழுங்கு காட்டாத எந்த ஓர் அமைப்பும் இறுதியில் படுகுழியில் தான் விழும். நிச்சயம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்குச் சிறப்பு ஆலோசகர்களின் வழிகாட்டல் அவசியமாகப்படுகிறது. வீரர்களின் தேர்வு, வீரர்களின் உடல் தகுதி, ஆட்டங்களுக்கான முறையான அட்டவணைகள் என்று எல்லா விஷயங்களிலும் தள்ளாடுகிறது பி.சி.சி.ஐ. தம் தவற்றை உணர்ந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே இந்தியக் கிரிக்கெட் மீதான கறைகளைத் துடைக்கமுடியும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நேர்ந்த கதிதான்.

இன்று 65-வது சுதந்திர தினம்:இந்தியாவின் வல்லரசு கனவா...நனவா...


உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி,பொருளாதாரம்,ராணுவம்,அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஎட்டியுள்ளது. ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில்வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போதுஅமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கைநிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். நமது ராணுவம் உலகில்இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.  


இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் இந்தியாவல்லரசாக முடியவில்லை. இதற்கு பலகாரணங்கள் உள்ளன. இருந்தாலும் வல்லரசுஆவதற்கு இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்பது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் அவர்களின் கருத்து.இவரது கூற்று நிறைவேறுமா என்று பார்த்தால் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் கண்டிப்பாக முடியும் எனவும், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகும் எனவும் கருதுகின்றனர். நாடு வல்லரசாக வேண்டுமெனில், இதற்கான பொறுப்பு மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைவரிடமும் உள்ளது. என்ன செய்யலாம்? 


இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டுமெனில் சில துறைகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். சீனாவுடன் ஒப்பிடுகையில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகத் தான் உள் ளது. நிலவுக்கு நாம்இன்னும் மனிதனுடன் செயற்கைகோளை அனுப்பவில்லை. 5,500 கி.மீ., தூரத்தை தாண்டி பாயும் ஏவுகணைகள் நம்மிடம் இல்லை. நாட்டில் உள்ளநதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளும் வளம் பெறும். நமது அரசியல்வாதிகளிடம் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. இத்திட்டத்தை இப்போது துவக்கினால் தான் அடுத்த10 ஆண்டுகளிலாவது செயல்படுத்த முடியும்.  

* ஆண்டுதோறும் நாட்டின் பட்ஜெட்டில் ராணுவத்துறைக்கு தான் அதிகளவில் செலவிடப்படுகின்றன. இருப்பினும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது ராணுவ தளவாடங்கள் நவீனமிக்கதாக இல்லை. இக்குறையை போக்க வேண்டும்.

* இன்ஜினியரிங், டாக்டர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்காலத்தில், சிறிது காலம் கட்டாயம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் கிராமப்புற வளர்ச்சி மேம் படும். கல்வித்துறையில் சீரான இடைவெளியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.

* பொதுமக்களும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட முடியும். 

* பல அரசு துறைகள் செயல்படாதவையாக உள்ளன. ஊழியர்கள், கடமையை
செய்வதற்கு லஞ்சத்தை எதிர்பார்ப்பது கேவலமானது.  

* மக்கள்தொகை என்பது நமது நாட்டின் வளர்ச்சியில் தடைக்கல்லாக இருக்கிறது என்று பெரும்பாலோனோர் கருதுகின்றனர். ஆனால் மக்கள்தொகை உயரும் போது, அனைவரும் படித்தவர்களாக இருக்கும் போது, இதை ஆக்கபூர்வ சக்தியாக மாற்றலாம்.  

* "கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்று மறைந்த மகாத்மா காந்தியடிகள் கூறினார். இவரது கூற்று நூறு சதவீதம் உண்மை. ஏனெனில் நமது மக்கள்தொகையில் 51.5 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதாக சமீபத்திய சென்செஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதிகள் எந்தளவுக்கு முன்னேற்றப்பட வேண்டியுள்ளதை அறியலாம். மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்த 21ம் நூற்றாண்டிலும் அதிகளவிலான கிராமங்களில் சாலை வசதி, போக்குவரத்து மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்ட தலைநகருடன், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் சாலைகளும் இணைக்கப்படவேண்டும். 


தேசியக் கொடி பிறந்த கதை:தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைசேர்ந்த பிங்கிலி வெங்கையா. இவர் பிரிட்டிஷ் இந்தியராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் பணியாற்றினார்.1921ல் இந்திய தேசிய காங்கிரஸ் பொது மாநாடு,காக்கிநாடாவில் நடைபெற்ற போது, காந்தியின் வேண்டுகோளை ஏற்று மூன்று வண்ணங்கள் மற்றும் நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடியை வடிவமைத்தார். இது விஜயவாடாவில் நடந்த பொது மாநாட்டில் வெளியிடப்பட்டு, தேசிய கொடியாக முன்மொழியப்பட்டது.


இளமை இந்தியா:""நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார். இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர். இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது. இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.இந்தியாவின் மக்கள்தொகை,தற்போது 121 கோடி. உலக மக்கள் தொகையில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். சில ஆண்டு களுக்கு முன், மக்கள்தொகை பெருக்கம் நமக்கு சவாலாக இருந்தது. தற்போது அந்த சவால், நமக்கு சாதகமாகி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை. சுதந்திரத்தின் போது, கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளில் இந்தியா, பின்தங்கியே இருந்தது.84 சதவீதம் பேர் அப்போது கல்லாதவர்கள். 


மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 சதவீதத்துடனும், ஆண்டுக்கு 2 சதவீத மக்கள் தொகை வளர்ச்சியுடனும் பெரிய சுமையுடனே இந்தியாமுன்னேற்றப் பாதையில் மெல்ல அடி எடுத்து வைத்தது.கல்வி வாய்ப்பின்மை, ஏழ்மை, மோசமான சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை என்று ஏராளமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை. உலக நிலப்பரப்பில் 2 சதவீதமே இந்தியாவினுடையது. ஆனால், உலகின் ஆறில் ஒருவர் இந்தியர். இன்று அனைத்து துறைகளும் வளர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுக்கிணங்க, இளமை சக்தியுடன்இந்தியா விரைவில் வல்லரசாக மாறும்.


சுதந்திரம் பெற்ற இரவு நடந்தது என்ன?""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் இரவு என்ன நடந்தது...டில்லியில் பார்லிமென்ட் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார். ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.அதில், "" இன்று நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை முழுமையாக அடையவில்லை என்றாலும் கணிசமான அளவு அடைந்து விட்டோம். உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்று துவங்குகிறது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம் இது. நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி இன்று புத்துயிர் பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம்.

சக்கரம் என்ன சொல்கிறது?நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. ஜூலை 22 ஆம் நாள், 1947 ம் ஆண்டுஇந்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சக்கரம், 24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது. தாயுடன் சேர்ந்த சேய்கள்:வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் 565 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. வெள்ளையர்களுக்கு வரி கட்டிக்கொண்டு இருந்த சமஸ்தான மன்னர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற பின், சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். அதன்படி பிகானிகர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள்இந்தியாவுடன் உடனடியாக இணைய முன்வந்தன.பின், அப்போதைய உள்துறை அமைச்சர்சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 552சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர்,ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள், தனி நாடாக இருப்போம் என்று அடம் பிடித்தன.ஐதராபாத்தை நிஜாம் ஆண்டு வந்தார். 1948 செப்டம்பர் 13 ம் நாள் இந்திய ராணுவம் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. பின்ஜூனாகத், காஷ்மீர், திருவாங்கூர் சமஸ்தானங்கள்இந்தியாவுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. இதை ஆண்டராஜகோபால் தொண்டமான், 1948 மார்ச் 3ம் நாள்இந்தியாவுடன் இணைந்தார்.

மக்கள் தொகை: அப்போதும் இப்போதும்:சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே82 லட்சம். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. அதாவது சுதந்திர இந்தியாவில்90 கோடி பேர் பிறந்துள்ளனர்.  


நன்றி : தினமலர் 




Sunday, August 14, 2011

ஃபிக்ஸட் டெபாசிட்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தியதால், ஒரு நல்ல விஷயமும் நடந்திருக் கிறது; ஒரு கெட்ட விஷயமும் நடந்திருக்கிறது. கெட்ட விஷயம், கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்திவிட்டது. இதனால் வீட்டுக் கடன், கார் கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பக் கட்ட தவிக்கும் நிலை. நல்ல விஷயம், ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்திருப்பது. முதலீட்டு விஷயங்களில் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்கள் இந்த நல்ல செய்தியைக் கேட்டு சந்தோஷத்தின் எல்லைக்கே போயிருக்கிறார்கள்.  

'இந்த நேரத்தில் முதலீட்டாளர் கள் புதிதாக ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடலாமா? வட்டி தொடர்ந்து ஏறுமா அல்லது குறைந்துவிடுமா?’  


''மூத்த குடிமக்கள், பணி ஓய்வு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு தற்போதைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமாக மாறி இருக்கிறது. பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், ஆர்.பி.ஐ. இன்னும் ஒரு சுற்று வட்டியை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி இன்னும்கூட கொஞ்சம் அதிகரிக்கலாம்.இப்படி ஒரு எதிர்பார்ப்பு பரவலாக இருப்பதால், மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட வேண்டாம். பாதியை இப்போதும், இன்னொரு பாதியை ரிசர்வ் வங்கியின் அடுத்த நடவடிக்கை பற்றி தெரிந்துகொண்ட பிறகும் போடலாம்'' .


 ''வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கம்பெனிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக வட்டி கிடைக்கும். அதேநேரத்தில், ரிஸ்க்கும் இருக்கிறது. வங்கி டெபாசிட்டை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து விட்டு பணத்தை திரும்பப் பெற முடியும். ஆனால், கம்பெனி டெபாசிட்டுகளில் பணத்தைப் பெற 10-15 நாட்களாகும். தவிர, கம்பெனி டெபாசிட்டுகளில் பணத்தைப் போடுவதற்கு முன் அந்த நிறுவனம் எப்படிப் பட்டது, என்ன மாதிரி தொழில் செய்கிறது, அந்த தொழிலுக்கு இப்போதுள்ள வாய்ப்பு என்ன, அந்த நிறுவனத்தின் தரக் குறியீடு எப்படி என்பதை எல்லாம் கவனிப்பது அவசியம். அந்த நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, ஆண்டு வருமானம் ஆகியவற்றைக் கவனித்த பின்னர் முதலீடு செய்வது நல்லது''.



கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வங்கிகளைப் பொறுத்தவரை, குறுகிய காலம் அல்லது நீண்ட காலம், இதில் எதற்கு பணம் தேவை என்பதைப் பொறுத்து வட்டியை நிர்ணயிக்கும். குறுகிய கால முதலீட்டுக்கு அதிக வட்டி கிடைக்கும்பட்சத்தில் அதில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அல்லது கையிலிருக்கும் பணத்தை ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட முதிர்வு காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில் பிரித்து முதலீடு செய்வது சிறந்தது.ஃபிக்ஸட் டெபாசிட் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத்தை இடையில் எடுக்கும் போது ஏதாவது அபராதம் உண்டா என்பதையும் கவனியுங்கள். அபராதம் உண்டெனில் எவ்வளவு என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள். அபராதம் விதிக்காத வங்கியை தேர்வு செய்வது நல்லது''.
''வங்கியில் டெபாசிட் கணக்கு தொடங்கும்போது வரி பிடித்தம் தொடர்பான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி பெறும் வாடிக்கையாளர் களுக்கு வங்கியே 10% டி.டி.எஸ். பிடித்தம் செய்துவிடும். வரி பிடிக்க வேண்டாம் என்றால் 15 ஜி (பொதுவானவர்களுக்கு), 15 ஹெச் (மூத்த குடிமக்களுக்கு) என்ற படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். கூடவே, பான் எண்ணையும் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் 20% வரி பிடித்துவிடுவார்கள்.'' 

நன்றி : 

பத்மநாபன் 
திருவண்ணாமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்  

ராமகிருஷ்ணன் வி.நாயக்
பஜாஜ் கேபிட்டல் நிறுவனத்தின் தலைமை துணை தலைவர்  

விகடன் 



Saturday, August 13, 2011

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

 
இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது 27,000-க்கு மேல் அதிகரிக்கும்என்பது நிபுணர்களின் கணிப்பு.
 
கையிருப்பு குறைவு!  
 
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில்  1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
 
உலகம் முழுக்கத் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், நமக்குக் கிடைப்பது 2,450 டன்தான். அதாவது, பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் மொத்தமே இருப்பதாகக் கணக் கிடப்பட்டு உள்ளது. தங்கத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், தங்கத்தை எடுப்பதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. 
 
மற்ற முதலீடுகளில் லாபம் இல்லை! 
 
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் மஞ்சள் கடுதாசி (திவால்) கொடுத்து வருகின் றன. இதனால், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தவர்கள் கதி அதோ கதிதான். விளைவு, அசலுக்கு மோசமில்லாமல் பாதுகாப்புக் கருதி ஃபிக்ஸட் டெபாசிட்களில் செய்வதை தவிர்த்துவிட்டு, தங் கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தங்கமாக மாற்றுகின்றன.
 
டாலர் மதிப்பு வீழ்ச்சி 
 
அமெரிக்கா டாலரின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது, அமெரிக்க டாலராக வைத்திருப்பதற்கு பதில் தங்கமாக வாங்கி வைத்துவிட்டால், அதன் விலை எப்படியும் உயரும். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துகொள்ளலாம் என்கிற மனநிலை அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பரவிவிட்டது. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. 
 
முதலீட்டுக் கோணம்..! 
 
ஒரு காலத்தில் அணிந்து அழகு பார்க்க மட்டுமே தங்கத்தை மக்கள் பயன் படுத்தினார்கள். இப்போது அதை லாபகரமான முதலீ டாகப் பார்க்கிறார்கள். சாதாரண மக்கள் பவுன் கணக்கில் வாங்கினால், கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கிக் குவிக்கின்றன. அண்மையில்கூட, தென் கொரியாவின் மத்திய வங்கி (நம் ஊர் ரிசர்வ் பேங்க் போல்) 25,000 கிலோ தங்கத்தை வாங்கி இருக் கிறது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளது. 
 
 
நன்றி 
டாக்டர் பாபி எஸ்.ஸ்ரீனிவாசன் 
நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் 
சென்னை 

&

விகடன்






 

இந்தக் குழப்பம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? - ஓ பக்கங்கள், ஞாநி


சமச்சீர் குழப்பத்தில் ஒரு கட்டக் குளறுபடி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இனி அடுத்த கட்டக் குழப்பங்கள் ஆரம்பிக்கும்.நடந்த குளறுபடிகளுக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதாதான் பொறுப்பு என்று சித்திரிக்க தி.மு.க. கடுமையாக முயற்சித்து வருகிறது. தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பும் மீடியாக்களும் பத்திரிகைகளும் கல்வி சமத்துவத்துக்குத் தாங்கள் பெரும் ஆதரவாளர்கள் போல வேஷங்கட்டிக் கொண்டு இந்த ஆட்டத்தில் உப பாத்திரங்களாகிவிட்டன. உண்மையான சமச்சீர் கல்விக்கான முக்கிய அம்சங்களில் தாய் மொழிவழிக் கல்வியும் ஒன்று என்பதை இவை ஒருபோதும் ஆதரிக்காதவை.

சமச்சீர் கல்விக் குளறுபடிகளுக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளிகள். கருணாநிதி செய்யவேண்டியவற்றை அரைகுறையாகச் செய்து ஏமாற்றியவர். அந்த அரைகுறை வேலையையும் தொடரவும் விடாமல், முழுமையுமாக்காமல் குழப்பியவர் ஜெயலலிதா.  இதில் ஏற்பட்ட கால விரயத்துக்கு நீதிமன்றங்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்போது உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை முதல் கட்ட அப்பீலிலேயே கொடுத்திருக்கலாம். திரும்பவும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, நிபுணர் குழு அமைக்கச் சொல்லியெல்லாம் கால விரயம் செய்திருக்கத் தேவையே இல்லை. ஒரு மாதம் மிச்சமாகி இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஒரு பாடம் என்று பூரிப்புடன் சொல்லி, கழகக் கண்மணிகளை பட்டாசு வெடித்துக் கொண்டாட வைத்திருக்கும் கருணாநிதி, அதே தீர்ப்பில் அவருக்கும் ஒரு பாடம் சொல்லப்பட்டிருப்பதை வசதியாக மறைத்துவிட்டார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் நேரில் கேட்கும் துணிச்சல் நமது நிருபர்களுக்கும் கிடையாது. 


“பாடப்புத்தகங்களில் சில இடங்களில் குறிப்பாக, தொடக்கக்கல்வி வகுப்புகளுக்கான பாடப்புத்தகத்தில் முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சித் தலைவரை தனிப்பட்ட முறையில் பெரு மைப்படுத்தும் விதத்திலும், அவருக்குச் சுய விளம்பரம் தேடும் வகையிலும், மேலும் இளம் மாணவர்களிடையே அவருடைய கொள்கைகளின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகை யிலும் எழுதப்பட்டு இருப்பது சந்தேகமற்ற வகையில் தெரி கிறது,” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். இவற்றை ஓர் உத் தரவின் மூலம் பாடப் புத்தகங் களில் இருந்து (ஜெயலலிதா) அரசு அகற்றியிருக்க முடியும் என்றும், மொத்தமாக சமச்சீர் கல்விச் சட்டத்தையே மாற்ற முற்பட்டது தவறு என்றும் நீதிபதிகள் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். 

பாடத்திட்டத்திலும் பாடப் புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களைச் செய்து கொள்ளும் அதிகாரம் ஏற்கெனவே சமசீர் கல்விச் சட்டத்தின் கீழ் அரசுக்கு இருக்கிறது என்றும் அதற்குத் தனி சட்டமோ சட்டத்திருத்தமோ தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.இன்னும் சில விஷயங்களை உச்ச நீதிமன்றம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். முத்துக் குமரன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ஏன் எல்லாப் பரிந்துரைகளையும் நிறைவேற்ற வகை செய்யவில்லை என்பதைக் கேட்டிருக்க வேண்டும். சமமான பள்ளித் தரம், சமமான ஆசிரியர் தரம் இரண்டும் இல்லாமல் பொதுப் பாடத்திட்டம் மட்டும் மாற்றத்தைத் தந்துவிடாது.


கருணாநிதி முதன்முதலில் 2009ல் சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்தபோது பொதுப் பாடத்திட்டத்தை 2010லிருந்து முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டுமே கொண்டு வந்தார். இது சரியான அணுகுமுறை. இதன்படி அடுத்த ஆண்டு இந்த மாணவர்கள் முறையே 2ம் வகுப்புக்கும் 7ம் வகுப்புக்கும் செல்லும்போது அந்த வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தின் படி படிப்பார்கள். இப்படியே படிப்படியாக ஒவ்வோராண்டும் இரு வகுப்புகளுக்குப் புது ( பொது) பாடத் திட்டம் நடைமுறையில் வர முடியும். மொத்தமாக ஐந்தே ஆண்டுகளில் எல்லா வகுப்புகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் வந்துவிடும். ஆனால் இதைத் தொடர்ந்து செய்யாமல் கருணாநிதி அரசு அடுத்த வருடத்தில் ஒரேயடியாக மொத்தமாக எல்லா வகுப்புகளுக்கும் புதுப் பாடத்திட்டம் என்று உத்தரவிட்டுவிட்டு (தேர்தலில் தோற்றதால்) போயும் விட்டது. அதை ஜெயலலிதா நிறுத்த முற்பட்டபோது, 2வதிலும் 7வதிலும் மட்டும் தான் பொதுப் பாடத்திட்டத்தைத் தொடர்வதாகவும் மற்ற வகுப்புகளுக்குப் படிப்படியாகக் கொண்டு வருவதாகவும் முடிவெடுத்திருந்தால், எந்தச் சிக்கலும் ஏற்பட்டிராது.

இப்போதுகூட உச்ச நீதிமன்றம் அந்த வழிமுறையைப் பரிந்துரைத்திருக்கலாம். ஏனென்றால் இப்போது பத்தாவதில் இருக்கும் மாணவர்கள் ஒன்பதாண்டு காலம் வேறு பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். திடீரென புதுப் பாடத் திட்டத்தை பத்தாவதில் சந்திப்பது தேவையற்ற அழுத்தத்தைத் தரும் வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் பல மெட்ரிக் பள்ளிகள் இந்தச் சமச்சீர்கல்வியை விரும்பாததால், சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்துக்கு மாற ரகசியமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதில் அவர்களுக்கு ஒரு சின்னச் சிக்கல் இருக்கிறது. அப்படி மாற, தங்களுக்கு ஆட்சேபணையில்லை என்ற நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட்டை மாநில அரசு தரவேண்டும். ஜெயலலிதா அரசு இதைத் தருமா? தந்தால் சமச்சீர் கல்வி தடுமாறிப் போகும். எனவே தரக் கூடாது என்று தடுக்க சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் அடுத்த இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. தராவிட்டால், மெட்ரிக் பள்ளிகள் அது தங்கள் உரிமை என்று நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் அதுவும் புது விளைவுகளை ஏற்படுத்தும்.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்திய அளவில் புதிய கேள்விகளை எழுப்பக் கூடியது. ஏனென்றால் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஐ.எஸ்.சி என்று பல்வேறு பாடத் திட்டங்கள் பல மாநிலங்களிலும் உள்ளன. கல்வி என்பது தற்போது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மத்திய அரசின் சி.பி.எஸ்.ஈ தவிர மாநிலத்தின் பாடத்திட்டமாக இனி ஒரே ஒரு பாடத்திட்டம் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதர மாநிலங்களில் இப்படியில்லை. இனி ஒவ்வொரு மாநிலத்திலும் சி.பி.எஸ்.ஈ. தவிர ஒற்றைப் பாடத்திட்டம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லுமா? சொல்லாவிட்டால், அங்கெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டாமா?  சி.பி.எஸ்.ஈ, மாநிலத்தின் சமசீர் கல்வி என்று இரண்டு திட்டங்கள் ஒவ்வொரு மாநி லத்திலும் இருக்க வேண்டுமா? ஏன் அதையும் குறைத்து ஒரே திட்டமாக இருக்கக் கூடாது? அப்படியானால் சி.பி.எஸ்.ஈயையே எல்லாரும் பின்பற்றும்படி மத்திய அரசு நிர்ப்பந்திக்க முடியுமா ? சமச்சீர் கல்வி பற்றி மத்திய அரசின் கொள்கை என்ன ? 

வேறு மாநிலங்களிலிருந்தோ, சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் படிப்பவர்களோ இந்தக் கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்தை அணு கினால், பிரச்னை மேலும் சிக்கலாகக்கூடும். கல்வி என்பதே முதலில் மத்திய, மாநில அரசு களின் பொதுப்பட்டியலில் இருக்க வேண் டுமா, மாநில அரசின் வசம் மட்டும் இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூர்மையடையும்.இந்தக் கேள்விகள் எழுவதும் விவாதம் நடப்பதும் நல்லது. உலகின் முன்னேறிய நாடுகளில் பொதுப்பாடத் திட்டம் என்பது இல்லை. அமெரிக்காவில் மாநில அரசுகளின் கையிலும் இல்லை. கல்வி மாவட்டம் எனப் படும் நமது மாவட்ட அளவிலேயே கல்வித் திட்டமும் பாடப் புத்தகங்களும் முடிவு செய் யப்படுகின்றன. தேச அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் என்னென்ன திறன்கள் மாண வர்கள் அடைந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே வரையறுக்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் பாடப் புத்தகங் களிலிருந்து தமக்கு உகந்தவற்றை வெவ்வேறு பள்ளிகள் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.

இங்கேயும் மெட்ரிக் பள்ளிகளும் சி.பி. எஸ்.ஈ பள்ளிகளும் பாடப் புத்தகத் தேர்வில் மட்டும் இந்த முறையைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. ஆனால் இது பாடப் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் பள்ளி நிர்வாகங் களுக்கும் வணிக ரீதியில் லாபகரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது எல்லா பாடப் புத்தகங்களையும் அரசே மலிவு விலையில் வெளியிடுவதால் இந்த வணிகம் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் பாடப் புத்தகத்தில் என்ன இருக்கும் என்பதை முடிவு செய்ய அரசுக்கு முழு அதிகாரம் கொடுத் தால், கருணாநிதி செய்தது போல சுயவிளம் பரப் பாடங்களும் உள்ளே வரும் என்ற சிக் கலுக்குத் தீர்வு தேவைப்படுகிறது. பாடப் புத்தகங்களை உருவாக்க சுயாட்சி அதிகார முள்ள அறிஞர் குழு உருவாக்கப்பட வேண்டி யிருக்கிறது. 


என்ன பாடத்திட்டம், என்ன பாடங்கள், என்ன பாடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பிரித்து நகராட்சி, உள்ளாட்சி அளவில் விநியோகிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. செங்கற்பட்டில் படிக்கும் மாணவனுக்கு செங்கற்பட்டின் வரலாறு தெரியாது; ஆனால் உலக வரலாறு பாடம் இருக்கும். இதையெல்லாம் உள்ளூர் அமைப்புகளிடம் அதிகாரம் கொடுத்தால் மாற்ற முடியும். பள்ளிகளின் நிர்வாகத்தைக் கூட காமராஜர் காலத்தில் இருந்ததைப் போல மாவட்ட நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தால் ஆசிரியர் களின் பணி ஒழுக்கத்தை மேம்படுத்த முடியும். சாதியும் பணமும் பெரும் செல் வாக்கு செலுத்தும் நம் கிராம அமைப்பில் இதிலெல்லாம் கூடவே சிக்கல்களும் இருக் கின்றன. 

எல்லாவற்றை விடப் பெரிய சிக்கல், இந்தப் பிரச்னைகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர் கள் பங்கு பெற்று, பல கருத்துகளை முன் வைத்து முடிவுகளை யோசிப்பதற்கான, எடுப்பதற்கான எந்த அமைப்புரீதியான வழிமுறையும் நம்மிடம் இல்லை என்பதுதான். தினமும் இரண்டு வேளை என் வீட்டு வாசலை மறித்து கார்களை நிறுத்த வைத்து சாலையை நெரிசலாக்கித் தொல்லை செய்து கொண்டிருக்கும் பள்ளியின் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூட இங்கே வழியில்லை. 

இந்த வார வருத்தம்


பல ஏழை இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருந்துவந்த சூளைமேடு நகராட்சிப் பள்ளியின் ப்ளஸ் டூவின் புகைப்படத் தொழில் பாடப் பிரிவை நிறுத்தவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால் இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்து, புதிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று முதல்வருக்கு அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்திருக்கிறது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.02.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் காரணமாம். 

இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம். இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? முதலமைச்சரின் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை முதல்வர் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கிறது? என் கடிதத்தை முதலமைச்சர் அலுவலகம், மாநகராட்சிக்கு அனுப்புகிறது. அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சர் பார்க்கவே இல்லை என்பது நிச்சயம். 

இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியிலும் இப்போது அது மூடப்பட்டு விட்டது என்ற வருத்தத்தைப் பதிவு செய்கிறேன். அங்கே படித்து இன்று இந்தியா முழுவதும் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றும் பல இளம் நண்பர்களும் என்னோடு சேர்ந்து வருத்தப்படுவார்கள்.  


சென்னையில் வந்துவிட்டது "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்


பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இந்த வசதியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இருந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அலர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தகவல் வந்து சேரும். தொடர்ந்து, டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,கள் வரத் துவங்கும்.

இந்த திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என நினைத்தால்," LEAVE CTP" என அதே எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.  இந்த சேவையை "www.smsgupshub.com/groups/ctp'' என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இதில், முதல் தடவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம், மொபைல் பிளானில் உள்ளபடி செலுத்த வேண்டும். தொடர்ந்து பெறப்படும் தகவல்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதில், போக்குவரத்து நெரிசல், விபத்து, ஆர்ப்பாட்டம், மறியல் நடக்கும் இடங்கள், வாகன போக்குவரத்து மெதுவாக செல்லும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.தினசரி காலை, மாலை வேளைகள் தவிர, சென்னையில் போக்குவரத்து பிரச்னை தொடர்பான எட்டு முதல் 20 எஸ்.எம்.எஸ்., வரை அனுப்பப்படும்.

நன்றி - தினமலர் 

Friday, August 12, 2011

தோனி 'ஊஊஊ'


இந்திய அணி வீரர்கள் டிரெண்ட் பிரிட்ஜ் ஆடுகளத்துக்குள் நுழைந்தபோது பால்கனியில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் கைதட்டினார்கள். இக்காட்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்குப் புரியவில்லை. என்றாலும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஆனால், மைதானத்தில் கடும்கோபத்தில் இருந்த ரசிகர்கள், உதடுகளைக் குவித்து ‘ஊஊஊ’ என்று ஊளையிட்டு தோனிக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், அடுத்த சில நொடிகளில் நடந்ததுதான் திருப்பம். தேநீர் இடைவேளையின்போது, அதிர்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய பெல் மீண்டும் சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கினார். தோனி அவரைத் திரும்ப அழைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், தோனிக்கும் இந்திய அணியினருக்கும் ‘ஸ்டாண்டிங் ஓவேஷன்’ அளித்தார்கள். அடுத்த நொடி முதல், தோனி செய்தது சரியா என்கிற பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.

நேர்மை என்றால் இனி ஹமாம் கிடையாது, தோனிதான் என்கிற அளவுக்கு தோனிக்குப் பலத்த பாராட்டுகள். கூடவே கடும் கண்டனங்களும். விதிமுறைப்படி பெல் அவுட். இதை ஏன் தோனி சிக்கலாக்க வேண்டும், பெல் நான்காவது ரன் எடுக்க முயற்சி செய்தது உண்மையே என்று தோனியின் முடிவை பலரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தான் ரன் அவுட் என்று தெரிந்ததும் பெல் அருமையாக நடித்து நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டார். ‘தோனி இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் முடிவை மாற்றியிருக்க மாட்டேன்’ என்று அடித்துக் கூறுகிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். இன்னொன்றை இங்கே நினைவுகூர வேண்டும்.

2008-கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், ரன் அவுட் என்று நினைத்து பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே மெல்ல க்ரீஸுக்கு வெளியே காலை வைத்த சுக்லாவை ரன் அவுட் செய்தார் தோனி. பெவிலியனுக்குச் செல்வது போல க்ரீஸுக்குள் நுழைந்த இஷாந்த் சர்மா அவுட் கிடையாது, சுக்லாதான் என்று நடுவரிடம் வாதிட்டு சுக்லாவை அவுட் செய்தார் தோனி. ஆனால், இந்தத் தடவை, உலகமே பார்த்துக் கொண்டிருந்ததால் தோனி கவனத்துடன் நடந்துகொண்டார். “இதுபோல நம் அணி வீரர்களுக்கு நடந்தால் எப்படி யோசிப்போம் என்று நினைத்தோம், உடனே பெல்லை மீண்டும் வர வழைக்க முடிவு செய்தோம்,” என்கிறார் திராவிட். “கிரிக்கெட் உலகில் இந்திய அணியினர் மட்டும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மற்ற அணியினர் எதிர்பார்க்கிறார்கள்,” என்று கமெண்ட்ரியில் காட்டமாகப் பேசினார் கவாஸ்கர்.


பெல் சம்பவத்துக்கு ஒருநாள் முன்பு, ஹர்பஜன் தவறான முறையில் எல்.பி. டபிள்யூ ஆனார். நடுவரின் தவறான முடிவை ஏற்றுக்கொண்ட ஸ்டிராஸ், ஹர்பஜனின் அவுட்டைக் கொண்டாடினார். ஆனால், பெல்லின் தவறை தோனி மன்னிக்க வேண்டும் என்று அவர் எப்படி எதிர்பார்த்தார் என்று புரியவில்லை. வான் போல பல முன்னாள் கேப்டன்களும் தாங்கள் ஒருபோதும் பெல்லைத் திரும்ப அழைத்திருக்க மாட்டோம் என்றுதான் கருத்து தெரிவிக்கிறார்கள். இதே நிலை மையில் இங்கிலாந்து இருந்திருந்தாலும் இந்தியாவுக்குச் சாதகமாக நடந்து கொண்டிருக்காது. 

தோனிக்கு இது மோசமான காலக் கட்டம். பேட்டிங், கீப்பிங் மட்டுமில்லாமல் அவருடைய தலைமைப் பண்பும் இங்கிலாந்தில் மோசமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தன் அணிக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ஆடுகளத்தில் பண்புடன் செயல்பட வேண்டும் என்கிற தோனியின் முடிவுக்கு கிரிக்கெட் உலகம் தலைவணங்குகிறது. எந்த கிரிக்கெட் கேப்டனும் இப்படியெல்லாம் தராசு முள்ளை நடுவில் நிற்க வைத்துச் செயல்படுவதில்லை. சோயாப் அக்தரால் தடுக்கப்பட்டுக் கீழே விழுந்து ரன் அவுட் ஆன சச்சினுக்குப் பரிதாபம் காட்ட அன்று யாருமே இல்லை. சமீபத்தில் கூட மேற்கு இந்தியத் தீவுவுடனான டெஸ்ட் போட்டியில் அநியாயமான முறையில் லஷ்மண் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தோனி, நடந்துகொண்டதுபோல எல்லா கேப்டன்களும் நடந்துகொண்டால் கிரிக்கெட்டுக்கு டி.ஆர்.எஸ். தேவையே இருக்காது.