Search This Blog

Sunday, October 09, 2011

பெவிலியனில் ஹர்பஜன்!


ஒருவழியாக, ஹர்பஜன் சிங்கை இந்திய அணியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்தச் செய்தி அரை டஜன் ஸ்பின்னர்களுக்கு இனிப்பாக இருந்திருக்கும். அஸ்வின், ஓஜா, மிஸ்ரா, சாவ்லா, ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா போன்ற அடுத்தத் தலைமுறை ஸ்பின்னர்கள் ஹர்பஜனுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து, தேர்வுக்குழுவுக்கும் நம்பிக்கையூட்டி, ஹர்பஜனின் வெளியேற்றம் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக, ஹர்பஜனின் பந்துவீச்சு தன் அந்திமக் காலத்தில் இருந்ததை சாதாரண கிரிக்கெட் ரசிகன்கூட உணர்ந்திருந்தான். ஹர்பஜனின் நீக்கத்தில் ஓர் அரசியலும் இல்லை. அவரே முழுமுதல் காரணம். 

இந்திய அணியின் எல்லா வெற்றிகளிலும் மிகத் திறமையான ஸ்பின்னர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 70களில் மறக்கமுடியாத ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இருந்தார்கள். பிஷன்சிங் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், பி.எஸ். சந்திரசேகர். இந்த ஸ்பின் படையின் உதவியால் 1971ல், வலுவான இங்கிலாந்து மேற்கு இந்திய அணிகளைத் தோற்கடித்தது இந்தியா. சச்சின் தெண்டுல்கரின் கிரிக்கெட் பிரவேசத்துக்குப் பிறகு அணியில் நுழைந்தவர் அனில் கும்பிளே. அடுத்த இருபது வருடங்களுக்கு அவர் தன்னிகரற்ற நட்சத்திரமாக விளங்கினார். 90களின் இறுதியில் இந்திய அணிக்குள் நுழைந்த ஹர்பஜன், கும்பிளேவுக்கு அருமையான துணையாகச் செயல்பட்டார். கும்பிளே இடம்பெறாத ஒரு டெஸ்ட் தொடரில் (ஆஸியுடன்), தாம் யார் என்று உலகுக்கு நிரூபித்தார். கும்பிளேவின் ஆளுமையைக் கண்டு ஹர்பஜன் மனம் தளரவில்லை. கும்பிளேவைவிடச் சிறப்பாகப் பந்துவீசி அவரை மிஞ்சவேண்டும் என்று எண்ணினார். இந்த மனோபாவம் ஹர்பஜனுக்குப் பலன்களைக் கொடுத்தது. பல முக்கியமான சந்தர்ப்பங்களில் கும்பிளே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஹர்பஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் ஆடினார்; கும்பிளேவுக்கு பெவிலியனில் தான் இடம் கிடைத்தது.  


இன்று ஒரு ஸ்பின்னருக்கு இருக்க வேண்டிய விதவிதமான பந்துவீச்சு முறைகள் ஹர்பஜனிடம் இல்லை. இங்கிலாந்து அணியின் ஆஃப் ஸ்பின்னரான ஸ்வான் - ஹர்பஜன் பந்துவீச்சை ஒப்பிட்டால் இது புரியும். விக்கெட் எடுக்கும் வித்தைகளை ஹர்பஜன் மறந்துவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு ஒவ்வொரு மேட்சிலும் ஏமாற்றம் அளித்தார். அதேசமயம், தம் பந்துவீச்சில் உள்ள குறைகளை பேட்டிங்கில் ஈடுகட்டினார். சென்ற வருடம், இரண்டு டெஸ்ட் செஞ்சுரிகள் அடித்து தம் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டார். இந்த அணுகு முறை நீண்ட நாள் பலன் அளிக்கவில்லை. அஸ்வின் அளித்த பெரிய நம்பிக்கையால் இன்று ஹர்பஜன் அவசியம் இல்லாமல் போயிருக்கிறார். 2010 ஐ.பி.எல். மற்றும் சாம்பியன் லீக்கில் அஸ்வின் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடர் முழுக்கப் பங்கேற்றார் அஸ்வின். அத்தொடருக்கு கேப்டனாக இருந்த கம்பீர், ‘அஸ்வின்தான் தொடரின் பெரிய பலன்’ என்று சான்றிதழ் அளித்தார். அப்படியே உலகக்கோப்பையில் இடம் பெற்றார் அஸ்வின். இரண்டு மேட்சுகள் மட்டும்தான் ஆடினார். ஆடாத மேட்சுகளில் அவரைப் பற்றித்தான் எல்லோரும் வாய் ஓயாது பேசினார்கள். இன்று, அஸ்வினைப் பெரிதும் நம்பியிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

ஹர்பஜனுக்கு இதுவே இறுதியல்ல. மீண்டும் அணிக்குள் நுழையமுடியும்.  மூன்று உள்ளூர் அணிகள் ஆடுகிற சேலஞ்சர் போட்டியில், ஹர்பஜன் ஓர் அணியின் கேப்டன். இந்தப் போட்டியில் ஹர்பஜனின் பந்துவீச்சு கவனிக்கப்படும். மேலும், ஹர்பஜனுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ள அஸ்வினும் ராகுல் சர்மாவும் சொதப்புகிற பட்சத்தில் மீண்டும் ஹர்பஜன் அழைக்கப்படலாம். இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிக்காக ராகுல் திராவிட் அழைக்கப்பட்டதுபோல. ஹர்பஜனின் நீக்கம் டெஸ்ட் வரை நீடிக்குமா என்று தெரியவில்லை. அடுத்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடப்பதால் ஹர்பஜனின் அவசியம் தேவையிருக்கலாம். அல்லது தேர்வுக் குழு அஸ்வின், ஓஜாவை நம்பி ஹர்பஜனை டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கினால், அது பெரிய சர்ச்சைக்கு இடமளிக்கும். பந்துவீச்சிலும் அடுத்தத் தலைமுறையைத் தேடவேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. 2013ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும், 2015ல் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியும் நடக்க உள்ளன. அதற்கான அணியை இப்போதே தேர்ந்தெடுத்து, தயார்படுத்த வேண்டும். அதற்கான அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஹர்பஜனின் நீக்கம். 

ஸ்வான், இன்றைய ஸ்பின்னர்களுக்கு பெரிய முன்னுதாரணம். வார்னேவுக்கு அடுத்ததாகப் போர்க்குணம் கொண்ட வீரராக மதிக்கப்படுகிறவர். 2001 டெஸ்ட் தொடரில், ஹர்பஜன் சிங்கிடம் அந்தக் குணம் இருந்தது. இப்போது, அப்படியொரு போர்க்குணம் கொண்ட ஸ்பின்னர் இந்திய அணிக்கு அவசியமாகிறார். யார் அவர்? அஸ்வின்? ராகுல் சர்மா? ஓஜா? அல்லது மீண்டும் ஹர்பஜனா? அடுத்தச் சில மாதங்களில் போர் வீரனைக் கண்டுகொள்ளலாம்.


Saturday, October 08, 2011

எம்.எல்.ஏ,எம்.பி. தொகுதிகளை ஒழியுங்கள்! - ஊழலே உன் வேர் எங்கே? பகுதி-5, ஓ பக்கங்கள் - ஞாநி


அரசியலில் பெரும் பணத்தின் தேவையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் தேவை. தேர்தல், இரு பகுதிகள் கொண்டது. முதல் கட்டம் பிரசாரம். அடுத்து வாக்குப்பதிவு. பிரசாரத்தில் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்துவது. இரண்டாவது போட்டியிடும் கட்சியின் கொள்கை, செயல்திட்டம் (அப்படி ஏதாவது இருந்தால்) அதை வாக்காளருக்குச் சொல்வது.இந்த இரண்டையும் அரசு செலவிலேயே செய்யலாம். இதை அரசு செய்யமுடியுமா என்ற கேள்வியே தேவையற்றது. போலியோ தடுப்புச் சொட்டு மருந்து பற்றியோ எய்ட்ஸ் பற்றியோ அரசு அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது போன்றதுதான் இதுவும். வேட்பு மனுக்கள் இறுதி செயப்பட்டவுடன் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் மாதிரி வாக்குச் சீட்டைத் தயாரித்து ஒவ்வொரு வீட்டுக்கும் தபால்காரர் மூலம் கொடுத்துவிடலாம். ஒரே வாரத்தில் எல்லா வீடுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் கிடைத்துவிடும்.


கட்சிகளின் கொள்கை, செயல்திட்டம் என்ன என்பதை விளக்க தற்போது தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ இரண்டிலும் நேரம் ஒதுக்குவது போல எல்லா தனியார் தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் அரசே ஸ்லாட் எடுத்து நேரத்தைக் கட்சிகளுக்குப் பங்கிட்டுத் தர முடியும். பத்திரிகை விளம்பரங்களையும் எல்லா கட்சிகளுக்கும் சமமான அளவில் அரசே வெளியிடலாம். வேட்பாளர் தொகுதி முழுக்கச் சென்று வாக்காளர்களைச் சந்திக்க ஆளுக்கு ஒரு வாகனத்தையும் தினசரி இத்தனை கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் பெட்ரோல் செலவையும் அரசே அளிக்க வேண்டும்.  எல்லா ஊர்களிலும் எல்லா கட்சிகளுக்குமாக ஒரே இடத்தில் பொது மேடை ஒன்றை அரசே அமைத்து ஒவ்வொரு கட்சியும் ஒரு நாள் பொதுக்கூட்டம் நடத்த இடம் தரலாம்... இதனால் கட்சிகள் பணத்தை வீணடிப்பதும், இறைப்பதும் தடுக்கப்படும். எல்லா கட்சிகளுக்கும் சமவாய்ப்பு (லெவல் ப்ளேயிங் ஃபீல்ட்) அமையும். இதற்காக அரசுக்கு ஆகக்கூடிய செலவுக்கு அரசே எல்லா பொதுமக்களிடமிருந்தும், கம்பெனிகள், தொழிலதிபர்களிடமிருந்தும் இப்போது முதல்வர் நிவாரண நிதி திரட்டுவது போல, தேர்தல் செலவு நிதி ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாம். தனி நபர் சுயேச்சைகளின் நிலை இப்போது என்ன? நம்முடைய தேர்தல் முறை கட்சி சார்ந்த ஜனநாயக முறைதான். இதில் நியாயப்படி சுயேச்சைகளுக்கு இடமே இல்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் சுயேச்சைகள் எல்லாரும் டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுகூட வோட்டு வாங்கியதில்லை. ஜெயித்த சுயேச்சைகள் எல்லாம் கட்சிப் பிரமுகர்கள்தான். உட் கட்சிப் பூசலால் டிக்கட் கிடைக்காதவர் சுயேச்சையாக நின்று கட்சியை தன் பக்கம் இழுத்து ஜெயித்திருப்பார். அப்போதும் கட்சிதான் அடிப்படை. சுயேச்சைகளுக்கு நம் தேர்தல் முறையில் இடம் உள்ளாட்சியில் மட்டுமே. இதைப் பின்னர் பார்ப்போம்.

தேர்தலின் அடுத்த கட்டம் வாக்குப் பதிவு. வாக்குச் சாவடிகளில் ரவுடித்தனம் முதல், வாக்காளரை ‘குளிப்பாட்டி’ அழைத்து வருவது வரை தடுக்க வேண்டுமானால், இப்போதைய வாக்குச்சாவடி முறையை ஒழிக்க வேண்டும். ஒரு முறை ராஜாஜி சொன்னது போல வாக்காளர்கள் சாவடிக்கு வருவதற்குப் பதில், வாக்குச் சாவடி வாக்காளரைத் தேடிப் போவதுதான் தீர்வு. இதன் மூலம் ஆள் மாறாட்டம், கள்ள வோட்டு ஒழிக்கப்படும். மிக அதிகமான வாக்குப்பதிவு நடக்கும்.  இதற்கு வாக்குப்பதிவு தினத்தன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும். வாக்குப் பதிவு நேரத்தின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. போலீஸ் பாதுகாப்புடன் மொபைல் வாக்குச்சாவடி ஊர்தி தெருத் தெருவாக தண்ணீர் லாரி வருவது போல வரும். தண்ணீருக்குக் குடத்துடன் வரிசையாக நிற்பது போல அந்தந்தத் தெரு வாக்காளர்கள் அங்கே வரிசையாக ஊர்திக்குள் சென்று வோட்டுப் போட்டு விட்டு வீடு திரும்பலாம். வாகனத்துக்குள் தேர்தல் அதிகாரியும் வேட்பாளர் பிரதிநிதிகளும் இருப்பார்கள். இந்த ஏற்பாட்டில் கட்சிகளுக்குச் செலவு மிச்சம். அரசுக்கு ஒவ்வோர் இடத்திலும் இப்போது வாக்குச் சாவடி அமைப்பதற்கு ஆகும் செலவைவிட அதிகச் செலவு ஆகிவிடப் போவதில்லை. வாக்கு எண்ணிக்கை மின்னணு இயந்திரம் வந்தபிறகு விரைவானதாகவும் எளிதாகவும் ஆகிவிட்டது.மேலே சொன்னதெல்லாம் நடை முறை சாத்தியமா என்று மலைக்க வேண்டாம். ரயில்வே ரிசர்வேஷனில் கம்ப்யூட்டர், தெருவுக்குத் தெரு ஜெராக்ஸ், எல்லார் கைகளிலும் செல் ஃபோன் என்பதெல்லாம் ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். இன்று அவை சாத்தியமாகி விடவில்லையா? சோதனை முயற்சியாக ஒரு தேர்தலில் புதுச்சேரி போன்ற ஒரு மாநிலத்தில் செய்து பார்க்க ஆரம்பித்தால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் நாடு முழுக்கவும் இது சாத்தியம். 


மேலே சோன்னவை பண ஆதிக்கத்தைக் குறைக்க சிறிய முயற்சிகள். தேர்தல் முறையையே அடியோடு மாற்ற மேலும் புரட்சிகரமான சில மாற்றங்கள் தேவை. அவற்றைப் பார்ப்போம்.முதலில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக் கும், எம்.பி.க்கும் தரப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை நிறுத்த வேண்டும். எம்.பி.களைக் குஷிப் படுத்துவதற்காக மைனாரிட்டி ஆட்சி நடத்திவந்த நரசிம்ம ராவ் அறிமுகப்படுத் திய ஊழல் திட்டம் இது. பத்தாண்டுகள் 12 ஆயிரம் கோடி செலவிட்டும் எந்த உருப்படியான விஷயமும் நடக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவித்த பிறகும் அரசுகள் இதைக் கைவிடவில்லை.தொகுதி நிதியை ஒழிப்பதோடு, தொகுதி அடிப்படையில் எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல் என்பதே ஒழிக்கப்பட வேண்டும். தொகுதியின் நலனைக் கவனிப்பது என்பது என்ன? குடிநீர், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு இவைதான் அன்றாடப் பிரச்னைகள். ஒரு தொகுதியில் ஏன் இவற்றைக் கவனிக்க வார்டு உறுப்பினர்/கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. என்று மூவர் தேவை? எம்.எல்.ஏ. என்ற சொல்லின் விரிவு என்ன? மெம்பர் அஃப் லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளி. அதாவது சட்டமியற்றும் சபை. எனவே எம்.எல்.ஏ.வின் வேலை சட்டங்களை உருவாக்குவது, நிறை வேற்றுவது, திருத்துவது, கண்காணிப்பது முதலியவைதான்.இதையேதான் இந்திய அளவில் எம்.பி.யும் செய்ய வேண்டும். எனவே நடைமுறையில் இவர்கள் தொகுதியில் தேவையே இல்லை. தொகுதியைக் கவனிப்பதோ, பணியாற்றுவதோ இவர்கள் வேலை இல்லை. அது உள்ளாட்சிகளான பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் வேலை. மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வேலைகளும் ஒருவரிடமே இருந்தால் போதுமென்ற நிலை இருந்தது. இன்று அது பொருந்தாது. ஒரு எம்.எல்.ஏ., தொகுதியைச் சுற்றிவர முழுதாகப் பத்து நாள் தேவை. எம்.பி.க்கு 60 நாள் தேவை. எனவே தொகுதியைக் கவனிக்கும் வேலையை கவுன்சிலர்களும் கொள்கையை வகுப்பதை எம்.எல்.ஏ., எம்.பி.களும் செய்வதுதான் சரி. 

இதை ஏற்றுக் கொண்டால் அடுத்தபடியாகக் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் எண்ணிக்கையையே குறைத்துவிடலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொத்தமாக 100 எம்.எல்.ஏ.க் கள் போதும். மக்களவைக்கு இருநூறு எம்.பி. கள் போதும். எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் மாநிலங்களவைக்கு எம்.பி.களை அனுப்பினால், மாநில சமத்துவம் வளரும்.  தொகுதி அடிப்படையை ஒழித்துவிட்டு எம்.எல்.ஏ., எம்.பி.க்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? கட்சி அடிப்படையில்தான். அதாவது வாக்குச் சீட்டில் கட்சியின் பெயரும் சின்னமும் மட்டுமே இருக்கும். உங்களுக்குப் பிடித்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கலாம். மொத்தம் பதிவான வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குக் கிடைத்ததோ அந்த விகிதத்துக்கு ஏற்ப எம்.எல்.ஏ. சீட் தரப்படும். பத்து சதவிகித வாக்கு என்றால் மொத்த எம்.எல்.ஏ. சீட்டுகளான 100ல் பத்து சீட். எத்தனை சீட் என்று அறிவித்த பிறகு ஒவ்வொரு கட்சியும், தான் யார்யாரை எம்.எல்.ஏ. வாக அனுப்புகிறது என்பதை அறிவிக்கும். இப்போது தனி தலித் தொகுதி, மகளிர் தொகுதி இட ஒதுக்கீடு தேவை இல்லை. அதற்குப் பதில் ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைக்கும் சீட்டுகளில் இத்தனை சதவிகிதம், தலித்துகள், பெண்கள்... என்று ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று விதித்தால் போதும். இந்தத் தேர்தல் முறையில் ஒரு தலித் கட்சியோ, முற்றிலும் மகளிருக்கான கட்சியோ எளிதாக தலித், மகளிர் வாக்குகளைக் கணிசமாகப் பெற்று கணிசமான சீட்டைப் பெறும் வாய்ப்பு அதிகம். 

இந்த முறையில் பல வசதிகள் உள்ளன:

1. வோட்டுக்கும் சீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்ற இப்போதைய அபத்தம் ஒழியும். படுதோல்வி பெற்ற 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த வோட்டு 21.9 சதவிகிதம். ஆனால் சீட்டுகள் வெறும் நான்கு தான். இதே கட்சி 2001ல் பெற்ற வோட்டு 29.9 சதவிகிதம். ஆனால், சீட்டுகள் 132. 

1967 இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த தேர்தலில் அதன் வோட்டு சதவிகிதம் 41.38. ஆனால் சீட்டு வெறும் 50. தி.மு.கவோ 40.77 சதவிகித வோட்டு வாங்கி 138 சீட்டுகளை அடைந்தது.

2. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஒவ்வொரு வோட்டுக்கும் மதிப்பு வருகிறது. உலகில் பிரிட்டன், அதன் பழைய அடிமை நாடுகள், அமெரிக்கா தவிர மீதி பெரும்பாலான நாடுகளில் விகிதாசாரத் தேர்தல் முறைதான் இருக்கிறது. 

3. விகிதாசார அடிப்படையில் சீட்டுகளுக்குக் கட்சி அனுப்பும் எம்.எல்.ஏ. மோசமானவராக இருந்தால் அவரைத் திரும்பப் பெறச் செய்து இன்னொருவரை நியமிக்க வைக்கும் முறையை எளிதாகக் கொண்டு வரலாம். கட்சிக்கு இந்த அதிகாரம் தரப்படுவதால், ஒவ்வொரு கட்சியின் உட்கட்சித் தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம்.

4. எந்தக் கட்சியையும் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கான 49 ஓ முறையை இயந்திரத்திலேயே இணைத்தால் மக்களின் கருத்துக்கு ஏற்ற பிரதிபலிப்பை, தேர்தலில் பெற முடியும். விகிதாசார முறையில் தேர்தல் நடந்தால், ஒவ்வொரு கட்சியின் அசல் பலமும் தெரிவதால், கூட்டணிகளும் பேரங்களும் நியாயமான முறையில் மட்டுமே நடக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

அடுத்தபடியாக, எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி முறையை முற்றிலுமாக நீக்கிவிடலாம். இங்கே கட்சியைச் சேர்ந்தவரானாலும், தனி நபரானாலும் சுயேச்சையாகவே போட்டியிட வேண்டும். இந்த முறையில் உள்ளூரில் மக்களிடம் நிஜமாகவே தங்கள் சேவையின் மூலம் மதிப்பைப் பெற்றவர்கள் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.அடுத்த கட்டமாக எம்.பி. தேர்தலைக் கூட ஒழித்துவிடலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் களிலேயிருந்து எம்.பி.களைத் தேர்வு செய்து அனுப்பினால் போதுமானது. அவர்களே மக்களவை ஆகிவிடுவார்கள். ராஜ்யசபைக்கு அறிஞர்களை மட்டும் நியமிக்கும் முறையில் ஒவ்வொரு மாநிலமும் நியமிக்கும் அறிஞர்களைக் கொண்ட சபையாக ஆக்கலாம். மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால், பொது வழ்க்கையில் அரசியலில் நிறைய பணம் தேவைப்படும் நிலை மாற்றப்படும். ஊழல் செய்வது பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மக்களின் அன்றாடப் பிரச்னைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கொள்கைப் பிரச்னைகளை எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் கவனிப்பதால், ஜனநாயகம் இன்னும் ஆழமாகும் விரிவாகும்.அடுத்தபடியாக அரசு நிர்வாக இயந்திரத்தைப் பகிரங்கமாகச் செயல்படும் முறைக்கு மாற்றுவதுதான் அன்றாட ஊழல்களை ஒழிக்கும் வழி. திட்டமிட்டால், எல்லா அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளையும் முற்றிலும் கணினிமயமாக்கிவிட முடியும். எந்தத் தகவலையும் யாரும் எங்கேயிருந்தும் கணினி வழியே காண முடியும் என்ற நிலை வந்தாலே பெருமளவு ஊழல்களைக் குறைக்க முடியும். அரசு விதிகளை எளிமைப்படுத்துவது, உள்ளூரில் ஒரே அரசு அலுவலகத்திலேயே குடிமக்களுக்குத் தேவையான அன்றாட விஷயங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பது போன்ற சீர்திருத்தங்களும் கூடவே தேவைப்படுகின்றன.

இத்தனைக்குப் பிறகும் ஊழலை ஒழிக்க முடியவில்லையென்றால், அதற்குப் பொறுப்பு நம்முடைய பேராசை மட்டும்தான். இந்தப் பேராசை மனப்பான்மைக்குப் பொறுப்பு நம் குடும்பமும் கல்விமுறையும்தான். அவற்றில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை என்பதை இன்னொரு சமயம் பார்ப்போம்.



தங்க நாற்கரச் சாலை - பயணம் பத்திரம்!


தங்க நாற்கரச் சாலைகள், நான்கு வழிப் போக்குவரத்து... என்று சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேசமயம், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏன்? வாகனங்களின் வேகம், பராமரிப்பு இல்லாமை என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், முக்கியமான காரணம் அதுவல்ல. போக்குவரத்து விதிகளை நாம் சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதுதான் முதல் காரணம்!

எப்படி? இந்த விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலோர் வாகனங்களில் பயணிப்பவர்கள் அல்ல; பாதசாரிகள் - நடந்து செல்பவர்கள்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இவர்கள் எப்படி விபத்துக்கு ஆளாகிறார்கள்? கவனித்துப் பார்த்தால் நம்மிடையே உள்ள அலட்சியம் தெரியும்.  நடந்து செல்லும்போது, முன்னும் பின்னும் கவனித்துத்தான் நடக்க வேண்டும். மூவராக, நால்வராக சேர்ந்து பேசிக்கொண்டு நடப்பது, காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு பேசியபடியே செல்வது, அந்தப் பேச்சு சுவாரஸ்யத்தில் சிக்னலைக் கவனிக்காமல் சாலையைக் கடப்பது... இதுபோன்ற தவறுகள்தான் பாதசாரிகள் விபத்துக்கு உள்ளாகக் காரணமாகின்றன. 


அதேசமயம், வாகன ஓட்டிகளின் கவனமும் மிக அவசியம். விரைவாகச் செல்வது என்பது, விபத்துக்கு உள்ளாகாத அளவுக்கு வேகம் என்றுதான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், அதீத வேகத்துடன் வண்டியைச் செலுத்தினால், சட்டென்று நிறுத்த முடியாது. நிறுத்த வேண்டி வந்தாலோ, வண்டி கவிழவும், விபத்தில் சிக்கவும் நேரிடும். தவிர, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, முன்னால் செல்லும் வாகனத்தை முந்த, ஓவர்டேக் செய்ய முற்படும்போது, வலப்புறமாகச் செல்ல வேண்டும். மாறாக, இடதுபுறமாக ஓவர்டேக் செய்ய முனைவது பெரும் தவறு. அதேபோல, மிதவேகமாகச் செல்பவர்கள் சாலையின் இடதுபுறமாகச் செல்வது விபத்தைத் தவிர்க்க உதவும்.

இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. பயணத்தை திட்டமிட்டவுடன், கிளம்பும் நேரத்தை முடிவு செய்யவேண்டும். செல்லும் இடமும், பயணிக்கும் தூரமும், அடைய வேண்டிய நேரமும் நமக்குத் தெரியும். அதனால், முன்னதாகவே கிளம்பி, நிதானமாகப் பயணித்து, பத்திரமாகச் சென்று சேரலாம். ‘சீக்கிரம் கிளம்புதல், நிதானமாகப் பயணித்தல், பத்திரமாய் சென்று சேர்தல்’ என்பதை, பயணத்தின் தாரக மந்திரமாக அமைத்துக் கொண்டால், நம் பயணங்கள் பத்திரமாக நிகழும்.

அதற்கான முயற்சி நம் செயல்பாட்டில்தான் இருக்கிறது. நாம்தான் திட்டமிடவும் வேண்டும்; அதைச் செயல்படுத்தவும் வேண்டும். இந்தத் திட்டமிடலும், செயல்படுத்தலும் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்ல; மற்றவர்களின் பாதுகாப்புக்காகவும்தான்! செய்யலாம்தானே!

Friday, October 07, 2011

கரிசல்குளம் கண்மாய்க்கு வேட்டு ? - 'அஞ்சாநெஞ்சன்' அழகிரி


'சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில், தி.மு.க-வைச் சேர்ந்தவரான மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி பெயரில் இருக்கும் அறக்கட்டளை சார்பில் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். இதனால் எங்களின் நீராதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்று கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பி வந்தனர் மதுரை மாவட்டம், சிவரக்கோட்டை மக்கள். ஆனால், அதற்கு யாருமே செவி சாய்க்கவில்லை.தற்போது அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில், விஷயத்தைக் கையில் எடுத்திருக்கும்  மாவட்ட ஆட்சியர் சகாயம், அதிரடி நடவடிக்கைகளில் இறங்க, ஆனந்தக் கூத்தாடத் தொடங்கியுள்ளனர் சிவரக்கோட்டை மக்கள்!

''மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கொஞ்சம் பச்சை இருக்குதுனா... அது சிவரக்கோட்டை  ஒரு காரணம். மழைக் காலத்துல தண்ணீர் வர்ற கமண்டல நதியும், எவ்வளவு மழை பெய்ஞ்சாலும் தேக்கி வெச்சிக்கிடுற கரிசல்குளம் கம்மாயும்தான் காரணம். இதை நம்பி, சிவரக்கோட்டையில மட்டுமே 356 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்குது.மூணு வருஷத்துக்கு முன்ன திடீர்னு கம்மாக் கரையை ஒட்டி இருந்த வயல்களை சிலர் விலைக்கு வாங்க ஆரம்பிச்சாங்க. தர மறுத்தவங்கள மிரட்டி நிலத்தைப் பறிச்சாங்க. காந்தி அழகிரி பேர்ல அதையெல்லாம பதிவு பண்ணின பிறகுதான், 'பெரிய மனுஷங்க’ சமாச்சாரம்ங்கிற விஷயமே புரிஞ்சுது. விவசாய நிலத்தை வாங்கினதால, 'கண்மாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்'ங்கற பதவிக்கு வந்துட்டாங்க காந்தி அழகிரி. ஒருவேளை விவசாயம் பண்ணுற ஐடியா வெச்சுருப்பாங்க போலனு நினைச்சோம். கொஞ்ச நாள்லயே, அவங்க பேர்ல இருந்த நிலங்களை மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை பெயருக்கு மாத்திட்டு, இன்ஜினீயரிங் காலேஜ் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

நஞ்சை நிலத்துல கட்டடங்களைக் கட்டக்கூடாதுனு சட்டமே இருக்கு. அதை மீறினதோட, கண்மாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் வெளியேறுற 4-வது மடை, சின்ன, சின்ன வாய்க்கால் எல்லாத்தையும் மூடிட்டாங்க' என்று நிறுத்தியவர், வறண்ட தொண்டையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு தொடர்ந்தார்.'நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் கரிசல்குளம் கண்மாயை தூர்வாரணும்னு சிவரக்கோட்டை விவசாயிங்க பல வருஷமா கரடியா கத்திக்கிட்டு இருக்கோம். பொதுப்பணித்துறை அதிகாரிங்க கண்டுக்கவே இல்ல. ஆனா, திடீர்னு கண்மாய்க்குள்ள ஒரு கால்வாய் தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க. பெய்ற மழைத் தண்ணி மொத்தத்தையும் வெளியேத்தி, கண்மாயைக் கட்டாந்தரையா ஆக்கிட்டு, பிற்காலத்துல ஆக்கிரமிக்கிறதுதான் அவங்களோட நோக்கம். இதுக்காக அரசாங்கப் பணம் 40 லட்சம் ரூபாயை செலவு செஞ்சுருக்காங்க. விவசாயிகள் பலரும் ஒண்ணு சேர்ந்து, அப்ப இருந்த கலெக்டருக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.வேற வழியில்லாமதான் இந்த ஆகஸ்ட்ல மதுரை உயர் நீதிமன்ற கிளையில வழக்கு போட்டோம். மாணவர் சேர்க்கைக்கு தடை போட்ட நீதிமன்றம், பொதுப்பணித்துறை செயலாளர், கலெக்டர், தாசில்தார் எல்லாருக்கும் உத்தரவு போட்டுச்சு.ரெண்டாவது நாளே கலெக்டர் சகாயம் எங்க ஊருக்கு வந்துட்டாரு. கம்மாய் கரை, வயல், வரப்புனு ஆய்வு பண்ணினாரு. 'இது நஞ்சை இடம்,   2 போகம் விவசாயம் செய்றோம்'ங்கறதை நிரூபிக்கற வகையில அடங்கல்களைக் காட்டினோம். தவறு நடந்திருக்கறத ஊர்ஜிதம் செய்து கொண்டவர், 'உங்க கண்மாய் பழையபடியே உங்களுக்குக் கிடைக்கும்'னு உறுதி கொடுத்துட்டு போனார். இப்ப அவரு எடுத்துக்கிட்டிருக்கற நடவடிக்கைகள பார்த்தா... அது நிஜமாயிடும்னுதான் தோணுது' என்றார் ஏக எதிர்பார்ப்புடன்.

மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் கேட்டபோது, ''ஆதிகாலத்துல, நிலம், பாசன ஆதாரங்கள், இதில் வருகிற வருமானம் போன்றவைப் பாதுகாப்பதும் கவனிப்பதும்தான் கலெக்டரோட அடிப்படையான வேலையா இருந்திருக்கு. மற்ற வேலைகள் எல்லாம் பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுதான். ஆக, விவசாயிகளைக் காப்பதும், விவசாய நிலங்களைப் பாதுகாப்பதும்தான் என்னுடைய பிரதானக் கடமை. நான் அந்தக் கடமையைத் தான் செஞ்சுருக்கேன்.

பலவித மிரட்டல்கள், பிரச்னைகளைத் தாண்டி, இந்த விஷயத்தை அரசோட கவனத்துக்குக் கொண்டு வந்த விவசாயி ராமலிங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அதனாலதான், 'அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டா தாராளமா கொடுங்க’னு எஸ்.பி-கிட்ட சொல்லியிருக்கேன்' என்றார்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழகிரி, அவருடைய மனைவி காந்தி மற்றும் மகன் துரைதயாநிதி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார் மாவட்ட ஆட்சியர் சகாயம்!

'அதில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் கலெக்டர் சகாயம். இதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே சம்மனை ரத்து செய்ய வேண்டும்' என அழகிரி தரப்பு நீதிமன்ற படியேற, பழைய சம்மனை திரும்பப் பெற்று, சட்டத்துக்கு உட்பட்டு புதிய சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


-  ராமலிங்கம் 

மதுரை மாவட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளர் மற்றும் சிவரக்கோட்டை உழவர் மன்றத் தலைவர்


Thursday, October 06, 2011

இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம் - புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி


புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.

இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.


இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்.


டாக்டர்  ஆர்.ராமநாராயண்

 ஃபங்ஷனல் நியூரோசர்ஜன், 

அப்போலோ மருத்துவமனை


Wednesday, October 05, 2011

விஜயதசமி


கிலம் அனைத்தையும் படைத்தவளும், அதை ரட்சிப்பவளும் சாட்சாத் அந்த ஆதிபராசக்தியே! பொற்கரங்கள் பதினெட்டும்,  ஒளி வீசும் திருமுகமும் துலங்க, எல்லோருடைய அதிதேவதையாகவும் திகழும் அந்த துர்காதேவியே மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல திருநாமங்களில்- திருவடிவங்களில்... நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள் என்கின்றன புராணங்கள். ஸ்ரீபரசுராமர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய அவதாரங்களே ஸ்ரீதுர்காதேவியை வழிபட்டு, தேவி வழிபாட்டின் சிறப்பை நமக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.

வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களை பலவாறு துன்புறுத்திய மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவ லோகத்தைக் கைப்பற்றினான்.பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும் ஒன்றுகூடி உருவானவளே ஸ்ரீதுர்கை. தனது திருக்கரங்களில்... ஈசனின் சூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம், அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி, எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை ஏந்தி நின்றாள் தேவி. அத்துடன், சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன் பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான்- சக்தி மிக்க சிம்மத்தை வாகனமாகவும், சூரிய தேவன் - தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள் பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார பூஷணியாக திகழ்ந்தாள் ஸ்ரீதுர்கா.மகிஷாசுரன் பெற்றிருந்த வரத்தின்படி, அந்த அசுரன் எந்தப் பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும். ஸ்ரீதுர்காதேவி அசுரனைத் தேடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றாள். அவளது அழகைக் கண்டு மோகித்தான்  மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். 'யுத்தத்தில் என்னை ஜெயித்தால், உன்னை மணக்கிறேன்’ என நிபந்தனை விதித்தாள் தேவி. யுத்தம் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர். மகிஷனின் தலையின் மீது ஏறி நின்று, மகிஷனாக வந்த வர முனிக்கும், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தாள் தேவி. தேவி துர்கையின் வெற்றியைக் கொண்டாடிய திருநாளே விஜயதசமி.


அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீதுர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதியையும் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை துவங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. கடைசி (10-வது) நாள் விஜயதசமி!இந்த நிகழ்வுகளையெல்லாம் பொம்மைகளாக வைத்து சித்திரிப்பதே கொலு வைபவமாகப் பரிணமித்தது. வடநாட்டில், ஸ்ரீராமனின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ஸ்ரீராமர், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததைப் போற்றும் விழாவாக, ஸ்ரீராமனின் வெற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது விஜயதசமி.

தென்னாட்டில் ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி வழிபாடாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த 10 நாட்களும் கோலாகலம்தான். ஒற்றைப்படை எண்ணிக்கையில்... 5, 7 அல்லது 9 படிகளுடன் கொலு அமைப்பார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே பொம்மைகள் செய்யச் சொல்லி வாங்கி வந்து, கொலுவில் வைத்து வழிபடுவார்கள். வருடா வருடம் புது பொம்மைகள் இடம்பெறும். அந்தக் காலத்தில், மரப்பாச்சி பொம்மைகளுடன் கொலு அமைப்பார்கள். செங்கல் வைத்து பலகைகள் போட்டு அதன்மேல் சலவை வேஷ்டியைப் போர்த்தி, படிக்கட்டாக செட் செய்து கொலு வைக்கப்படும்.


சில இடங்களில் விழா நாளுக்கு முன்னதாகவே கொலு அமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தி, சுற்றிலும் மண்ணைக் கொட்டி, பாத்தி அமைத்து முளைப்பாரி விதைப்பார்கள். அதற்கு, தினமும் தண்ணீர் ஊற்றி வர... விழா ஆரம்பிக்கும் தருணத்தில் கொலுப் படிக்கட்டைச் சுற்றி நன்றாக வளர்ந்து நிற்கும் முளைப்பாரி பயிர்கள்!கீழிருந்து மேலாக ஒவ்வொரு படியிலும் முறையே... புல்-பூண்டு, செடி-கொடிகளில் ஆரம்பித்து, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள், எல்லோருக்கும் மேலாக தேவி சக்தியின் விக்கிரகம் திகழ... அனைத்தும் தேவி பராசக்தியின் சாந்நித்தியமே என்பதைச் சொல்லாமல் சொல்லும், கொலு காட்சி. தற்காலத்தில் பொம்மைகளும், கொலுப் படிக்கட்டுகளும் ரெடிமேடாகவே வந்துவிட்டன. கம்ப்யூட்டர் கணபதியையும் கொலுவில் தரிசிக்க முடிகிறது!மொத்தத்தில் இந்தப் பண்டிகை... முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலைவேளை யானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல் வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள் கொலுவீட்டுக்காரர்கள்!


குழந்தைகள் மற்றும் கன்னிப் பெண்களின் திறமைக்குச் சவாலாகவும் அமையும் நவராத்திரி விழா. ஒவ்வொரு நாளும்... என்ன வேஷம் போடுவது, இன்றைக்கு என்ன பாடலாம் எனப் போட்டி போட்டுக்கொண்டு அசத்துவார்கள். கோலப்போட்டி, பாட்டுப் போட்டி, சிறந்த கொலுப்போட்டி என்று தூள் கிளப்புவார்கள். மொத்தத்தில் இந்த 10 நாட்களும் நண்பர்களின் சங்கமம், உறவுகளின் பாராட்டு... என கல்யாண விழாவாகக் களைகட்டும்.இப்படி மகிழ்வான தருணங்களைத் தருவதுடன், நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளையும் சொல்லித் தருகிறது நவராத்திரி.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானிக்கவேண்டும்; அவளை பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ


முதல் நாள்- குமாரி; இரண்டாம் நாள்- திரிமூர்த்தி; மூன்றாம் நாள் - கல்யாணீ; நான்காம் நாள் - ரோகிணி; ஐந்தாம் நாள்- காளிகா; ஆறாம் நாள் - சண்டிகா; ஏழாம் நாள் - ஸாம்பவி; எட்டாம் நாள்- துர்கா; ஒன்பதாம் நாள் - ஸுபத்ராவாக அம்பிகையை வழிபட வேண்டும்.

மலர் மாலைகள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், புளியோதரை முதலான சித்ரான்னங்கள் நைவேத்தியம் செய்து, வணங்கி வழிபட வேண்டும்.

மாதர்மே மதுகைடபக்னி மஹிஷா ப்ராணப  ஹாரோத்யயே
ஹேவா நிர்மித தூம்ரலோசன வநேஹே சண்ட முண்டார்த்திணீ
நீ: சேஷி - க்ருத - ரக்தபீஜ - தனுஜே நித்யே -  நிகம்பாபஹே சும்பத்வம்ஸினி
ஸம்ஹராஸுதுரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே
- இந்த தியான ஸ்லோகத்தை நவராத்திரி ஒன்பது நாட்களும் சொல்லி வந்தால், நம் பாவங்கள் அகன்று துர்கையின் பேரருள் கிடைக்கும். 'மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம்’ எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. அதேபோல் துர்கா காயத்ரீ, துர்கா சரணம் சொல்லியும் அம்பாளை வழிபடலாம்.


புயல் மனிதன்!



பில் வார்னர் ன யூ-ட்யூபில் டைப் செய்து பாருங்கள். உங்கள் நெட் கனெக்ஷன் நார்மல் ஸ்பீடை விட கொஞ்சம் அதிகமாக லோடு ஆகும். காரணம், இப்போதைக்கு வார்னர்தான் வேர்ல்டு ஃபாஸ்டஸ்ட் பைக்கர்! கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லாரிங் விமான தளத்தில் வார்னர், தானே டியூன் செய்த ஹயயூஸா மாடல் பைக்கில், விரட்டித் தொட்ட வேகம் மணிக்கு 505 கி.மீ (311 மைல்)!

இவரின் பைக் மெத்தனால் எரிபொருளில் இயங்குகிறது. 1299 சிசி இன்ஜின் கொண்ட இது 1000 தீலீஜீ சக்தியை வாரி வழங்குகிறது.

''எல்லாரும் பைக்கை அணுகும் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது பில் வார்னரின் அணுகுமுறை. ஒரு விஞ்ஞானியின் மனநிலையில்தான் அவர் பைக்கைத் தொடுவார். இந்த பைக்கை தயார் செய்ய அவரிடம் இருந்த பணம் மிகக் குறைவு. ஆனால், தன்னம்பிக்கையும் அறிவும் மிக மிக அதிகம். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அவரது சாதனையை யாராலும் நெருங்கக்கூட முடியாது'' என பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர் அவரது ரசிகர்கள். மணிக்கு 278 மைல் வேகத்தில் பைக் ஓட்டியதுதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்த முந்தைய சாதனைக்குச் சொந்தக்காரரும் பில் வார்னரே!



கூகுள்

Tuesday, October 04, 2011

சிக்கலில் சிதம்பரம்!

புது ‘2G'பாம்


ஒரு மர்ம நாவலுக்கே உரிய பல திடுக் திருப்பங்களுடன் விரைகிறது அலைக்கற்றை ஊழல் விசாரணை. கனிமொழியின் ஜாமீனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, என் கட்சிக்காரருக்கு எதுவுமே தெரியாது. எல்லாம் ராசாதான்," என்றார்.ராசாவின் வழக்கறிஞரோ, என் கட்சிக்காரர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாமே பிரதமருக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் தெரியும்," என்று காங்கிரஸ்காரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தயாநிதி மாறன் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது," என்று சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் போட்ட அதிரடியால் ஆடிப் போனார்கள் மாறன் ப்ரதர்ஸ்.
மற்றொரு திருப்பமாக, சிதம்பரத்தையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும்" என்று ராசா சொல்ல, சூடானது காங்கிரஸ். 

ராசா மீதும் கனிமொழி மீதும் நம்பிக்கை துரோகம் என்ற புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. எடுத்து வைத்தது கருணாநிதிக்கு மேலும் அதிர்ச்சி.போதாததற்கு சுப்பிரமணிய சுவாமி, சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பல முக்கிய ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார். பற்றிக்கொண்டது காங்கிரஸில் கலவரத் தீ.சுவாமியின் ஆவணங்களில் முக்கியம், நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய அலுவலகக் குறிப்புதான். நிதி அமைச்சகத் துணை இயக்குனர் ராவ், பிரதமர் அலுவலக விநித் மகாஜன் என்ற இணைச் செயலாளருக்கு எழுதிய குறிப்பு தான் அது. ‘இரண்டாம் அலைக் கற்றையை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்று முன்பு சொல்லியிருந்தது நிதி அமைச்சகம். ஆனால், தொலைத் தொடர்பு இலாகா, ‘இந்த விவகாரத்தை வியாபாரமாகப் பார்க்காமல், வளர்ச்சி நோக்கில் பார்த்துச் செயல் பட வேண்டும் என்றும், முதலில் வந்தவருக்கு முதலில் வழங்குவோம்’ என்று செயல்பட்டது மட்டுமல்லாமல், 2001இல் என்ன நுழைவு மற்றும் உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டனவோ அதே தொகையை வசூலித்தால் போதும் என்று சொல்லி விட்டது. ‘நிதி அமைச்சர் ஏல முறையை வற்புறுத்தியிருந்தால் ஊழலைத் தவிர்த்திருக்கலாம்’ என்றும் அந்தக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. 
எனவேதான் சுவாமி, இந்த விவகாரத்தில் ராசாவும் சிதம்பரமும் இணைந்தே செயல்பட்டிருக்கிறார்கள்," என்று உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டார். கடுகடுத்துப் போயிருக்கிறது காங்கிரஸ் என்பது மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தில் தெரிகிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இனி உச்ச நீதிமன்றம் வழக்கைக் கண்காணிக்கத் தேவையில்லை," என்று தமது வாதத்தில் சொன்னார் மத்திய அரசு வழக்கறிஞர் ராவ். பா.ஜ.க., ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘சிதம்பரமே ராஜினாமா செய்’ என்று கொடி தூக்கி விட்டன.2009 செப்டெம்பரில் இந்த வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்யும்போது, அடையாளம் தெரியாத தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்தான் முறைகேடுகளுக்குக் காரணம் என்று சொன்னது சி.பி.ஐ. சுவாமி மற்றும் பிரசாந்த் பூஷனின் இடை விடாத, சட்டப் போராட்டத்தின் மூலமாகத்தான் விஷயங்களே வெளி வந்தனவே தவிர, சி.பி.ஐ. காரணமல்ல," என்கிறார் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா.இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் சொல்லி எடுக்கப்பட்டவையே தவிர மத்திய அரசு தானாக எடுத்தவை அல்ல. ‘எனவே ஊழலைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று சொல்ல காங்கிரசுக்குத் தார்மிக உரிமை இல்லை. ரேஷன் அரிசியை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்றால் தவறு. அது போலவே, அலைக்கற்றை உரிமத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றவர்கள் மீதும் நடவடிக்கை என்பதுதானே சரி. 
2001ல் அலைக்கற்றை உரிமம் கொடுத்த விஷயத்தில் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை விசாரித்தது சரி என்றால், 2008ல் நடந்த விற்பனைக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தை விசாரிப்பதுதானே முறை. ஏல முறையைக் கடை பிடிக்க வேண்டும் என்று பிரதமரும், சிதம்பரமும் சொன்ன பிறகு, ராசா ஏன் வேறு முறையைக் கடைபிடித்தார்? அவரை அப்படித் தூண்டியது எந்த சக்தி?" என்று காட்டமாகக் கேட்கிறார் அவர்.சிதம்பரத்தைச் சாட்சியாக விசாரிக்க ராசா சொல்வதற்குக் காரணம், உரிமம் வாங்கிய இந்திய நிறுவனங்களின் பங்குகளை, அன்னிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கியதைப் பங்கு விற்பனை என்று கருதாமல், அரசே அனுமதித்துள்ள ‘அன்னிய நேரடி மூதலீடாக’க் கருத வேண்டும் என்று அவர், பிரதமர் முன்னிலையில் கருத்து சொன்னாராம்," என்கிறார் பிரபல ஆடிட்டரும் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதுபவருமான எம்.ஆர்.வெங்கடேஷ். ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் அனுபவம் இல்லாதவை. ஒரு நிறுவனத்தின் மூலதனமே ஒரு லட்ச ரூபாய்தான். அதற்கு 1651 கோடி உரிமம் விற்கப்பட்டது. அது 6000 கோடிக்கு விற்றுவிட்டது. இது அன்னிய நேரடி முதலீடு அல்ல. திட்டமிட்ட கொள்ளை. இரண்டு விஷயங்களை இன்னமும் யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. ஒன்று உரிமம் பெற்ற டுபாக்கூர் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் தொகை ஏற்பாடு செய்தது யார்? மற்றொன்று அன்னிய நிறுவனங்கள் வெளிப்படையாகக் கொண்டு வந்த தொகையைவிட வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் நமது அரசியல் வாதிகள் கணக்கில் போட்ட தொகை எவ்வளவு? சிதம்பரத்துக்கு இதில் தொடர்பு இல்லையென்றால் ராசாவை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராசா முறைகேட்டில் ஈடுபட்டார் என்றால் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்," என்கிறார் வெங்கடேஷ்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த கதையாக, இந்த விஷ வட்டம் இறுதியில் பிரதமரைச் சென்றடைந்துவிடுமோ என்ற கலக்கத்தால் மொத்த காங்கிரஸ் படையும் சிதம்பரத்துக்கு ஆதரவாகத் திரண்டு எழுந்திருக்கிறது.  சீதை போன்ற தூய்மையானவர் சிதம்பரம்," என்கிறார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி. சுவாமி, ஜெயலலிதா போன்றவர்கள் பேனை பெருமளாக்குகிறார்கள். சோனியாவுக்கும் பிரதமருக்கும் உற்ற இணையாக இருக்கும் சிதம்பரத்தை வீழ்த்தி விட்டால், அவர்களையும் வீழ்த்தி விடலாம் என்று முனைகிறது ஒரு கூட்டம். நிதி அமைச்சகக் குறிப்புகள் எழுதியவர் ஒரு ஜூனியர் அதிகாரி. அவர் கூறியதால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. இதுவரை இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது எந்த அமைப்பும் குற்றம் சாட்டவில்லை. 2007ல் பிரணாப்முகர்ஜி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட அமைச்சரவைக் குழுவுக்குத் தலைவராக இருந்தார். ஏல முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்றார். அதை சிதம்பரம் ஏற்றுக்கொண்டார். ஆனால், தொலைத் தொடர்பு அமைச்சகம் பழைய நடைமுறை மற்றும் முந்தைய கட்டணத்தையே பின்பற்ற வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தது. இந்த நிலையில் எந்த அதிகாரியாவது, ‘பிரணாப் முகர்ஜி அழுத்தமாகக் கருத்தைச் சொல்லியிருந்தால் ஊழலே நடந்திருக்காது என்று எழுதி வைத்தால் பிரணாப் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைப்பார்களா? நிதி அமைச்சகக் குறிப்பில் சிதம்பரம் கிரிமினல் நோக்கில் செயல்பட்டார் என்று சொல்லப்படவில்லை. ஏல நடைமுறையைப் பின்பற்றாதது குறித்து சி.பி.ஐ. வழக்கு தொடரவில்லை. அனுமதி வழங்கப்பட்ட வகையில் லஞ்சப் பணம் கைமாறியதா என்றுதான் விசாரணை. சொத்துக் குவிப்பு வழக்கைச் சந்திக்கும் ஜெ.வுக்கு சிதம்பரத்தை பதவி விலகச் சொல்ல தார்மிக உரிமை கிடையாது," என்கிறார் கே.எஸ். அழகிரி.
சி.பி.ஐ. சரியாக விசாரணை செய்யவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன். காங்கிரஸ் அரசேகூட கவிழ்ந்தாலும் சரி..." என்று அடித்துச் சொல்கிறார் சுப்பிரமணிய சுவாமி. ஆனால், சுவாமி கொடுத்த ஆவணங்கள் எதுவுமே புதிதல்ல; ஏற்கெனவே பரிசீலித்தவைதான் என்கிறது சி.பி.ஐ.

இந்த நிலையில், உட்கட்சியில் நடக்கும் பனிப்போர்தான் இது போன்ற விவகாரங்கள் வெடிக்கக் காரணம்" என்கிறார்கள் சில காங்கிரஸ் தலைவர்கள். சிதம்பரத்தைத் தூக்கி விட்டால் நாளை ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பிரதமர் பதவி விலகும் நிலையில் அந்த இடத்தைப் பிடிக்க பிரணாப் முயன்று வருகிறார்; அவருக்குச் சில பெரு முதலாளிகள் உதவியாக இருக்கின்றனர்," என்கிறார்கள் அவர்கள்.

‘தான் பதவி விலகி, எந்தத் தவறும் செய்யவில்லை’ என்பதை நிரூபிக்கத் தயார் என்று சோனியாவிடம் சொல்லிவிட்டார் சிதம்பரம். உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் காங்கிரஸ் பெரும் சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.

சிக்கல் நம்பர் 2


2 ஜி சிக்கல் ஒரு பக்கம் இருக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரத்திடம் பாராளுமன்றத் தேர்தலில் தோற்ற ராஜ கண்ணப்பன் போட்ட தேர்தல் வழக்கு, மற்றொரு சிக்கல். தேர்தலின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு, பதிவான வாக்குகளைத் தவறாகப் பதிவு செய்தது, முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்தது என்று பல காரணங்களைச் சொல்லி, சிதம்பரம் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் ராஜ கண்ணப்பன்.

தொடக்கத்திலேயே ஆட்சேபம் தெரிவித்து சிதம்பரம் போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது; அதேபோன்ற மனுவை மீண்டும் போட்டிருக்கிறார் சிதம்பரம். விசாரணை வரும் 14ஆம் தேதி," என்கிறார் ராஜ கண்ணப்பனின் வழக்கறிஞரான ஜி. சரவணக்குமார்.
 

Monday, October 03, 2011

சப்பாத்தி 1 ரூபாய்! சாதம் 2 ரூபாய்!


ஒரு டீயின் விலை ஒரு ரூபாய் என்றால் எந்தக் கிராமத்து டீக்கடையில்? என்று கேட்பீர்கள்.சப்பாத்தி, தால், சப்ஜி, புலாவ், சாலட், தயிர் எல்லாம் கொண்ட ஒரு சைவ சாப்பாடு பன்னிரண்டரை ரூபாய். அசைவ சாப்பாடு இருபத்தி ரண்டு ரூபாய் என்றால், எந்த ஊர் கையேந்திபவனில் என்று கேட்பீர்கள். இன்னமும் கேளுங்கள்: ஒரு சப்பாத்தி ஒரு ரூபாய். ஒரு பிளேட் சாதம் இரண்டு ரூபாய். சமோசா ஒண்ணரை ரூபாய், சூப் ஐந்தரை ரூபாய், வெஜ் புலாவ் 8 ரூபாய். தக்காளி சாதம் 7 ரூபாய். தயிர்சாதம் 11 ரூபாய். தோசை வேணுமா? ஜஸ்ட் இரண்டே ரூபாய். இதோ இன்னும் ஐட்டங்களுக்கான விலைப்பட்டியலைப் பார்க்கலாமா? மீன் கறி: ரூ 13; சிக்கன் மசாலா: ரூ 25; பட்டர் சிக்கன்: ரூ 27; சிக்கன் பிரியாணி: ரூ 34 ஃப்ரூட் சாலட்: ரூ 7.


இந்த விலையில் இதெல்லாம் எங்கே கிடைக்கிறது என்று கேட்கிறீர்களா? தில்லி பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் உணவகத்தில்தான்! எப்படிக் கட்டுப்படியாகிறது என்ற சந்தேகம் வருகிறதா? நஷ்டத்தைச் சரிகட்டுவதற்காகத்தான், ஆண்டுதோறும் ஐந்து கோடிக்குமேல், மத்திய அரசு மானியம் வழங்குகிறது. பாராளுமன்ற வளாகத்தில் பல்வேறு ஹால்களில் இருக்கும் இந்த கேண்டீன் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்களுக்கு மட்டுமானது அல்ல. அங்கே பாராளுமன்றச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குமானது. பாராளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கேண்டீனில் தனிப்பிரிவுகள் உண்டு.  

பாராளுமன்றத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷனோடு வருகிற பார்வையாளர்கள், தோட்டக்காரர்கள், இதர தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகை விலைதான். பாராளுமன்ற நடவடிக்கைகளை கவர் செய்ய வரும் மீடியாவினர்களுக்கும் ஒரு தனி கேண்டீன் இருக்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் அத்தனை கேண்டீன்களையும் நடத்தும் பொறுப்பு ‘இந்தியன் ரயில்வே கேட்ரிங்க் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்திய காஃபி போர்டு, டீ போர்டு இவற்றின் பங்களிப்பும் உண்டு.பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்குமான பிரத்யேக கேண்டீன் இருந்தாலும், பாராளுமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலும், நூல் நிலைய வளாகத்திலும், இணைப்புக் கட்டடத்திலும் மற்ற பிரிவினருக்கான கேண்டீன்கள் இருக்கின்றன. பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடை பெறும் நாட்களில் சராசரியாக மூவாயிரம் பேர் போல பல்வேறு கேண்டீன்களிலுமாக மதிய உணவு சாப்பிடுவார்களாம். உணவு ஐட்டங்களின் விலை மிகவும் மலிவு; 


Sunday, October 02, 2011

சச்சின், திராவிட் முனை மழுங்கிய அம்புகள்! - சோயிப் அக்தர் கிரிக்கெட்


இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் சுயமுன்னேற்றத்தில்தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். பிறகுதான் அணிக்காக ஆடுவதெல்லாம். சச்சின், திராவிட் போன்ற வீரர்கள் மேட்ச் வின்னர்கள் கிடையாது. அவர்களுக்கு வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கத் தெரியாது. யுவ்ராஜ், சேவாக் போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகுதான் நிலைமை மாறியது. அவர்கள், அணியின் வெற்றிக்காக ஆடுபவர்கள். சச்சின் நிறைய ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாது.

ஐ.பி.எல்.லில் நான் சேர வேண்டும் என்று மோடியும் ஷாரூக்கானும் நெருக்கடி கொடுத்தார்கள். எனக்கு நிறையப் பணம் கிடைக்கும் என்று மோடி ஆசை காட்டினார். இதனால் நான் ஐ.சி.எல்.லில் வழங்கப்பட்ட பெரிய தொகையை மறுத்து, ஐ.பி.எல்.லில் சேர்ந்தேன். ஆனால், பிறகு, என்னை ஐ.பி.எல்.லில் விளையாட முடியாமல் செய்து விட்டார்கள். நான் ஷாரூக்- மோடியின் பேச்சைக் கேட்டிருக்கக் கூடாது.


பைஸலாபாத்தில் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில், என் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் மிகவும் பயந்தார். ‘காண்ட் ரோவர்சியலி யுவர்ஸ்’ என்கிற தம்முடைய சுயசரிதை புத்தகத்தில் இது போன்ற கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.  பி.சி.சி.ஐ. சார்பாகப் பேசியுள்ள ராஜீவ் சுக்லா, ‘அக்தர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். 2003 உலகக்கோப்பைப் போட்டியில் சச்சின் அவர் பந்தைக் கிழித்ததை மறந்துவிட்டாரா? சச்சினுக்கு, அக்தர் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பிராட்மேனால் பாராட்டப்பட்டவர் சச்சின்,’ என்று குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். பாகிஸ்தான் அணியில் நிலவிய விரிசல்கள் பற்றியும் வெளிப்படையாக எழுதியதற்கு வாசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘புத்தகத்தை விற்பதற்கான வேலை இது.’ 

‘அக்தரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பது என் கண்ணியத்தைக் குறைப்பதாகும்,’ என்று மட்டும் பதிலளித்து அமைதியாகி விட்டார் சச்சின். இந்தியாவின் சில பகுதிகளில் அக்தரின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்த்துப் பதறிப் போயிருக்கும் அக்தர், ‘சச்சின், கிரிக்கெட்டின் பிதாமகன், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று இப்போது யு டர்ன் அடிக்கிறார்.  அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் பல தலைவலிகளைக் கொடுத்தவர். வாரியத்துடன் மல்லுக்கட்டுவது, கிரிக்கெட் பொருள்களைக் கொண்டு சக வீரர்களைத் தாக்குவது என்று ஆரம்பித்து போதை மருந்தை உட்கொண்டது வரை... இவரது அடாவடி லிஸ்ட் அதிகம்! பௌலிங்கால் பேசப்பட்டதைவிடவும் சர்ச்சைகளால் அதிக கவனத்துக்கு உள்ளானவர். இவருக்கு முன்னால் கிரிக்கெட் ஆட வந்து, இவருக்குப் பிறகும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சச்சினும் திராவிடும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புத்தகத்தை நாலு பேர் படிக்க வேண்டும் என்பதற்காக உளறிக் கொட்டியிருக்கிறார் அக்தர். 


அவர் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது என்றாலும் சாதனையாளர்கள் மீது குற்றம் சொல்லும்போது தகவல்களைச் சரிபார்த்துக்கொண்டு பேச வேண்டும். சச்சின், திராவிடை வம்புக்கிழுத்து அதன் வழியாக இந்தியாவில் பரபரப்பை உண்டு பண்ணி புத்தகத்துக்கு விளம்பரம் தேடியிருக்கிறார் அக்தர்.  

சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அவமானமாக இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் மோசமான சூழலிலும் ஒரு மனிதர் மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானின் கொடியை உயர பிடித்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் கிரிக்கெட் திறமை மழுங்கிப் போய்விட்டதோ என்று நினைக்கும்போது, இல்லையில்லை... நான் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டுகிறார். அவர் பாகிஸ்தான் நடுவரான அலீம் டர். தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சிறந்த நடுவருக்கான விருதை ஐ.சி.சி.யிடமிருந்து பெற்றிருக்கிறார். டி.ஆர்.எஸ். எல்லாம் அவசியமே இல்லாமல், அலீம் டர் அளிக்கும் தீர்ப்புகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். மரியாதையையும் புகழையும் இப்படித்தான் பெற வேண்டும்.


Saturday, October 01, 2011

நான் ஏன் மேயர் தேர்தலில் நிற்கவில்லை? - ஓ பக்கங்கள், ஞாநி


சுயநலமில்லாமல், கட்சி நலம், பொது நலத்துக்கு மட்டுமே பாடுபடும் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருக்க நீங்கள் விரும்பினால், முதலில் குடும்பம் உங்கள் வருவாயை நம்பியிராத அளவுக்காவது உங்களுக்குப் பணவசதி இருக்க வேண்டும். 

எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர்... பதவிகளே வேண்டாம். வட்டச் செயலாளர், நகரச் செயலாளர் அளவில் மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? அது சாத்தியம்தானா? பார்ப்போம். ஒரு வட்டச் செயலாளராக நீங்கள் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் வாசற் கதவைத் திறந்தால், உங்கள் உதவிக்காக நிச்சயம் ஏழெட்டுப் பேராவது காத்திருப்பார்கள். மகனை அநியாயமாக போலீஸில் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று கதறுகிற குடிசைவாசி அம்மா முதல், தன் தெரு முழுவதும் பாதாளச் சாக்கடை நிரம்பி வழிந்து தன் வீட்டுக் கழிப்பறைக்குள் நுழையவே முடியவில்லை என்பதை ஆங்கிலத்தில் வாசகர் கடிதம் எழுதித் தயாராக வைத்திருக்கும் ரிட்டையர்ட் பெரியவர் வரை பலதரப்பட்ட பிரச்னைகளுடன் அவர்கள் காத்திருப்பார்கள்.  

ஒரு சராசரி நாளில் ஒரு முறையாவது போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், ரேஷன் கடை, மாநகராட்சி மண்டல அலுவலகம் முதலியவற்றுக்கு நீங்கள் இந்தப் பிரச்னைகளுக்காகச் சென்றுவர வேண்டியிருக்கும். தவிர ஃபோனில் ஏழெட்டு அதிகாரிகளுடன் மன்றாட வேண்டியிருக்கும். எந்தப் பிரச்னையும் ஒரே நாளில் தீர்ந்துவிடும் வாய்ப்பு இல்லையென்பதால், முன்தினப் பிரச்னைகளுடன் வந்தவர்களின் ஃபாலோ அப் வேலைகளும் அடுத்த நாள் புது வேலைகளுடன் சேர்ந்துகொள்ளும். 

தினசரி ஒவ்வொரு இடத்துக்கும் பஸ்சில் போய் வந்தால், கால்வாசி வேலை கூட முடியாது. வாழ்க்கையில் பாதி நேரத்தை பஸ்சில்தான் கழித்திருப்பீர்கள். நிச்சயம் ஆட்டோவாவது தேவை. உங்களுடன் வருகிற கட்சிக்காரர், பிரச்னையில் அவதிப்படுபவர் என்று மூன்று பேராவது இருப்பீர்கள். ஒரு நாளில் மூன்று முறையாவது காபி/ டீ/சோடா ஏதாவது குடிக்காமல் இருக்கவும் முடியாது. இந்த ஆட்டோ, டீ செலவுகளுக்கும் உங்கள் சாப்பாட்டுக்கும் உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தின் தேவைக்கும் எங்கிருந்து சம்பாதிப்பீர்கள்? இந்த வேலைகளை முழு நேர அரசியல்வாதியாக / சமூக சேவகராக இல்லாமல் செய்ய முடியாது. வேறு தொழிலிலிருந்து கணிசமான வருமானம் வந்தாக வேண்டும். அல்லது உங்கள் குடும்பம் நேர்த்திக் கடனாக உங்களை அரசியலுக்கு எழுதிவிட்டிருக்க வேண்டும். இன்றைய நிலையில் கணக்கிட்டால் இந்தச் செலவுகளுக்கெல்லாம் தினசரி 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை தேவை. எங்கிருந்து வரும் இந்தப் பணம்? பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி உங்களிடம் வருவோரில் வசதியானவர்களை நீயே ஆட்டோவுக்குக் கொடு என்றெல்லாம் கூடச் சொல்லிவிடலாம். ஆனால் அந்த வசதி இல்லாத அடிமட்ட மக்களிடம் அப்படிக் கேட்க முடியாது. அவர்கள்தான் நாளைக்கு விசுவாசமாக நீங்கள் கை காட்டும் கட்சிக்கு வோட்டுப் போடப் போகிறவர்கள். 
 
எனவே படு நேர்மையான ஆளாக நீங்கள் இருந்தாலும், குடும்பத் தேவைகளுக்குப் போக இந்த அரசியல் சமூகப் பணிகளுக்காக மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை செலவிட முடிந்தால்தான் நீங்கள் சமூக அரசியல் களப்பணியாளராக இருக்க முடியும். இப்படி நீங்கள் செலவிட்டுச் செயல்பட்டாலும், உங்கள் கட்சியிலேயே இன்னொருவர் சில மாதங்களுக்குள் உங்களைப் புறந்தள்ளிவிட்டு அவர் வட்டமாகிவிடுவார். காரணம் நீங்கள் நேர்மையாக இருந்தால், கட்சித்தலைமை விரும்பும் பல விஷயங்களைச் செய்ய முடியாது.  மூன்று மாதங்களுக்கொருமுறை உங்கள் பகுதியில் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும். பேச்சாளரின் சம்பளம் முதல், மேடை, மாலை, சால்வை, மைக், போஸ்டர் எல்லா செலவுக்கும் ஏது பணம்? மின்வாரியக் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடியது போக மீதி செலவுக்கு உள்ளூர் கடைக்காரர்களிடமிருந்து சாம/தான/பேத/தண்ட முறைகளைப் பயன்படுத்தித் தான் வசூலிப்பீர்கள். பணம் கொடுத்த கடைக்காரர் நடை பாதையை ஆக்கிரமித்திருந்தால், அதைப் பற்றி உங்களிடம் பொது மக்கள் புகார் செய்தால், புகார் செய்தவரை மிரட்டுவதில் தான் உங்கள் ஊழல் அரசியல் வாழ்க்கையின் அஸ்திவாரமே போடப்படுகிறது. செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைத்திருந்தவர்கள், கேட்டவர்கள் காந்தியும் பெரியாரும். ஆனால் அவர்கள் காலத்தில் கூட அன்றாட அரசியல் நடத்துவதென்பது பணக்காரர்களின் தயவை நம்பித்தானிருந்தது. இன்று சொல்லவே வேண்டாம்.
 
அரசியல் கட்சிகளை நடத்த பெரும் பணம் தேவைப்படுகிறது. இதற்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்திச் சம்பாதிக்கிறார்கள். உடந்தையாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள், அதிகாரிகள். அவர்கள்தான் சயண்ட்டிஃபிக் முறையில் மாட்டாமல் எப்படி ஊழல் செய்வது என்பதை அரசியல்வாதிகளுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள். அவர்களும் கூடவே சேர்ந்து சம்பாதிக்கிறார்கள். இதை ‘சம்பாதிப்பது’ என்று சொன்னால் என் நண்பர் அதியமான் பொங்கி எழுவார். முறையாக உழைத்துக் கிடைப்பதுதான் சம்பாதிப்பு. இது கொள்ளை என்று சொல்லுங்கள் என்பார். சரிதான்.  எனவே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், அரசியலுக்குப் பெரும் பணம் தேவைப்படுவதை முதலில் ஒழித்தாக வேண்டும். அதற்கு நாம் முதலில் கை வைக்க வேண்டியது தேர்தலில்தான். ஓரளவு நல்ல பெயர் உள்ளவர்களாகவும் அதிக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர்களாகவும் இருக்கும் சைதை துரை சாமியையும் மா.சுப்பிரமணியனையும் இரு பெரும் கட்சிகளும் மேயர் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தாமல் இருந்திருந்தால், நான் மேயர் தேர்தலில் சுயேச்சையாக நின்றிருக்கக் கூடும். அப்படிப் போட்டியிட்டால், மிகக் குறைந்தபட்ச செலவு எவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டேன். சென்னை மாநகராட்சிக்குள் சுமார் 14 எம்.எல்.ஏ. தொகுதிகள் இருக்கின்றன. மிக மிகச் சிக்கனமாகச் செலவு செய்து பிரசாரம் செய்தால் கூட, ஐந்து லட்சம் ரூபாயாவது தேவைப்படுகிறது. நானே அதைச் சம்பாதிக்க வேண்டுமானால், குறைந்தது 13 வருடங்கள் ‘ஓ’ பக்கம் எழுத வேண்டும்.பல தனி நபர் அரசியல்வாதிகளைக் கூட தேர்தல்தான் பெரும் செலவாளிகளாகவும் கடனாளிகளாகவும் ஊழல் பேர்வழிகளாகவும் மாற்றுகிறது. ஒரு சில அரசியல் பிரமுகர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், மாறினாலும், சுயேச்சையாகத் திரும்பத் திரும்ப ஜெயிப்பது உண்டு. தொகுதி மக்களிடையே அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு என்று மீடியா வர்ணிக்கும் இந்த செல்வாக்கு அவருக்கு எப்படி வந்தது ? தொகுதியில் யார் வீட்டுக் கல்யாணமானாலும், காது குத்தானாலும் பிரமுகர் தவறாமல் ஆஜராகி கணிசமான பணத்தை மொய் எழுதுவார். நேரில் சந்தித்து உதவி கேட்பவருக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவார் என்றெல்லாம் பத்திரிகைகளே சொல்கின்றன. இந்தப் பணம் அவருக்கு எங்கிருந்து எப்படி வந்தது என்பதை யாரும் எழுதுவதில்லை. பல பேரங்களை முடித்துக் கொடுத்துப் பெறுகிற லஞ்சப் பணம்தான் அது. 
 
கட்சிகளுக்கு தொழிலதிபர்களும் சில பணக்கார கம்பெனிகளும் பணம் தருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியாது. இதைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. கம்பெனி சட்டத்தின் 293ம் பிரிவின் கீழ் எந்த கம்பெனியும் பகிரங்கமாகவே அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம். லாபத்தில் ஐந்து சதவிகிதம் வரை தருவதாயிருந்தால் கம்பெனியின் இயக்குனர் குழு முடிவு செய்யலாம். எல்லா பங்குதாரர்களும் சேர்ந்து அங்கீகாரம் அளித்தால், எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். இந்தப் பிரிவு 1969ல் ரத்து செய்யப்பட்டு மறுபடியும் 1985ல் கொண்டு வரப்பட்டது.  டாட்டா நிறுவனம் பகிரங்கமாக நன்கொடை தருவதற்கு ஒரு முறையை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு கட்சிக்கும் அது முந்தைய தேர்தலில் பெற்ற வாக்கு விகிதாசார அடிப்படையில் வெவ்வேறு தொகைகளை நன்கொடையாக அறிவித்தது. அசல் பிரச்னை கட்சிகளின் வருமானத் துக்கு வருமான வரிச் சட்டத்தின் 13 ஏ பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதுதான். அதே வருமான வரிச் சட்டத்தின் 2288 (2) பிரிவின்படி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை தருவோர் பெயர்களை வெளியிட வேண்டும். ஆடிட் செய்யப்பட்ட கணக்கு வைத்திருக்க வேண்டும். 139 (4பி) பிரிவின்கீழ் ஒவ்வோராண்டும் வரி இல்லாவிட்டாலும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் கட்சியும் இதை ஒழுங்காகச் செய்வதில்லை. செய்ய உத்தரவிடும்படி தில்லி காமன் காஸ் என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்றமும் வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது. துறையும் நோட்டீஸ்கள் அனுப்பியது. அதன் பிறகும் மாற்றம் எதுவும் வரவில்லை.கம்பெனிகளிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை நன்கொடையாக வாங்கிக் கொண்டு அதை மக்களிடமிருந்து உண்டியலில் திரட்டிய நன்கொடை என்று சொல்லி, வெள்ளையாக்குவதைத்தான் கட்சிகள் விரும்புகின்றன. வேண்டுமானால் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு என்று சலுகை அளித்தால், பகிரங்கமாக நன்கொடை தர தொழிலதிபர்கள் முன்வரக்கூடும். 
 
அடிப்படையாக, கணக்குக் காட்டாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதியை ஏற்படுத்த வேண்டும். இப்போது ஒவ்வொரு வேட்பாளரும், தன் சொத்து விவரங்கள், கிரிமினல் வழக்குகள் உண்டா என்ற தகவல்கள் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தை, தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உதவியுடன் செய்துவிட்டது. இதே போல கட்சிக் கணக்கு, உட்கட்சித் தேர்தல் முதலியவற்றையும் கட்டாயமாக்கலாம். நன்கொடைகள் பகிரங்கமாக இருந்தால், ஆட்சிக்கு வந்ததும் எடுக்கும் நடவடிக்கை களில் நன்கொடை கொடுத்த கம்பெனி களுக்குச் சாதகமாக, சட்டத்தை வளைத்து ஏதாவது செய்யப்படுகிறதா என்பதை மக்கள் கண்காணிக்க முடியும்.  எப்படியும் அரசியலும் குறிப்பாக தேர்தலும் பெரும் பணம் தேவைப்படும் விஷயங்களாக இருப்பதை மாற்றினால்தான் ஊழலைக் குறைக்கவாவது முடியும். இப்போது தேர்தலில் பெரும் பணம் இறைக்கப்படுவதற்கான காரணங் களைக் கண்டறிந்து அவற்றை மாற்றவேண்டும். முதல் காரணம் ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியை விடப் பெரிய கட்சி என்று காட்டுவதற்காக பிரம்மாண்டமான கூட்டங்கள், பேரணிகள், கட் அவுட் கலாசாரங்களைச் செய்வதற்குப் பெரும் பணம் வீணாகிறது. ஒரு லட்சம் பேர் கொண்ட பேரணியை நடத்த வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் வரை செலவிடுகிறார்கள். ஒரு சாதாரணப் பொதுக் கூட்டத்துக்கே பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அண்ணா ஹசாரேவுக்கே பத்து நாள் ராம் லீலாவுக்கு 75 லட்ச ரூபாய் செலவு.
 
செலவுக்கு இரண்டாவது காரணம் நமது தேர்தல் முறை. அதிக வாக்குகள் பெற்றவரே வென்றவர் என்று சொல்வதை நாமும் நம்புகிறோம். ஒரு முறை வட சென்னை தொகுதியில் ஜெயித்தவர் பெற்ற வாக்குகள் 2 லட்சம். அந்தத் தேர்தலில் வோட்டே போடாதவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சம். பதிவான ஆறு லட்சம் வோட்டுகளில் ஜெயித்தவருக்கு எதிராக விழுந்தவை 4 லட்சம் வோட்டுகள். அவை பிரிந்திருந்ததால், 2 லட்சம் பெற்றவர் ஜெயித்தவராகிவிட்டார். உண்மையில் அவர், பதிவான வாக்குகளில் கூடப் பெரும்பான்மையைப் பெறவில்லை.இப்போது உள்ளாட்சித் தேர்தலில் பல வார்டுகளில் இதேபோல நிகழப் போவதைப் பார்க்கலாம். மொத்தம் 40 ஆயிரம் வோட்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பெற்றவர் கூட ஜெயிக்க முடியும். இப்படி ஜெயிப்பதற்குத் தேவைப்படும் வோட்டுகளை மட்டும் கணக்கிட்டு அதற்குப் பெரும் செலவு செய்து மக்களுக்கே லஞ்சம் கொடுத்து ஜெயிக்கும் உத்திதான் திருமங்கலம் ஃபார்முலா. தேர்தல் முறையையும் அரசியல் கட்சி நடத்தும் முறையையும் அரசு நிர்வாக இயந்திரம் செயல்படும்விதத்தையும் மாற்றாமல், ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமே இல்லை. இதெல்லாம் அண்ணா ஹசாரேவுடன் இருக்கும் அறிஞர்களுக்கும் தெரியும். அதனால்தான் அடுத்து தேர்தல் சீர்திருத்தம் என்று பேசத்தொடங்கி இருக்கிறார்கள். எப்படித் தேர்தல் முறையை மாற்றலாம், அரசு இயந்திரச் செயல்பாட்டில் என்ன மாற்றம் தேவை என்பதை அடுத்த வாரத்தில் சொல்லி அத்துடன் இந்த சப்ஜெக்டை முடிக்கலாம் என்றிருக்கிறேன். இவையெல்லாம் காலம் காலமாகப் பலராலும் என்னாலும் சொல்லப்பட்டு வருபவைதான். ஆனால் உடனடிச் செய்தி பரபரப்புகளே நம் கவனத்தை ஈர்ப்பதால் இந்த அடிப்படை விஷயங்களை அவ்வப்போது திரும்பத் திரும்ப நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
 
இந்த வாரப் பூச்செண்டு!
 
 பத்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு மதிப்பெண் முறையை ஒழித்து, கிரேடு முறையைக் கொண்டு வந்து குழந்தைகள் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுத்தும் ஆணை பிறப்பித்ததற்காக தமிழக அரசின் கல்வித் துறைக்கு இ.வா.பூ



சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள்


சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 

2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.


இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.

அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.

''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!
 
இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.
 
''தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகிய தனி மனிதர்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து சக்திகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்!'' என்று சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் சொல்வதைப் பார்த்தால்... ப.சி-க்கும் தயாநிதி மாறனுக்கும் வந்திருப்பது சாதாரண சிக்கல் அல்ல!
 
விகடன்