Search This Blog

Wednesday, April 04, 2012

அருள் மழை ----------- 53

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.
அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, 'கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்னு சொல்லியிருக்கார்.
அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டுஎன்று சொல்லி யிருக்கிறார். இவளும், 'பரவாயில்லை... எடுத்துக்கோங்கஎன்றாளாம். உடனே அந்தக் குருக்கள், 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோஎன்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.
இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.
உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!
ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை...
இது நான்கு மறைத் தீர்ப்புஎன்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.
அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!’ என்றார்

Tuesday, April 03, 2012

அடுப்புகள் - இயங்குவது எப்படி?


உங்கள் வீட்டில் இந்தச் சமையல் எப்படி நடக்குது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?சமையலுக்கு முதலில் அடுப்பு வேண்டும். ஆனால், ஆதி காலத்து மனிதனுக்கு அடுப்போ, நெருப்போ தெரியாது. அவன் காட்டில் கிடைக்கிற செடி, கொடி, இலை, தழை, பழம், காய், மிருகங்களோட மாமிசம் எல்லாவற்றையும் பச்சையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.பிறகு யாரோ எதேச்சையாக இரண்டு கல்லை உரசிப் பார்த்தார்கள். நெருப்பு கிடைத்தது. அதில் வெந்த மாமிசம் ருசியாக இருந்தது. அதற்குப் பிறகுதான் நிஜமான ‘சமையல்’ ஆரம்பமானது.

உங்கள் சமையல் அறைக்குள் இருக்கிற அடுப்பைக் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம்.இன்றைய நவீன சமையல் அறையில் ‘கேஸ் அடுப்பு’, ‘மைக்ரோவேவ் அடுப்பு’, ‘இன்டக்ஷன் ஸ்டவ்’ என்ற மின்சார அடுப்பு என்று நிறைய இருக்கின்றன. சில வீடுகளில் எண்ணெய் ஊற்றி எரியவைக்கற அடுப்புகளும் இருக்கும், சிலர் சூரிய வெளிச்சத்தில் இயங்குகிற ‘சோலார் அடுப்பு’ கூட வைத்திருக்கிறார்கள்.நீங்கள் கிராமத்துக்குப் போய்ப் பார்த்தால், ‘விறகு அடுப்பு’, ‘கரி அடுப்பு’ எல்லாம் வைத்திருப்பார்கள்.இப்படி அடுப்பில் பல வகை இருந்தாலும், அடிப்படையில் எல்லாம் ஒரே விதமாகத்தான் இயங்குகிறது. ஏதோ ஓர் எரிபொருள் + அதைச் சரியாகக் குவித்து தருகிற ஓர் அமைப்பு.உதாரணமா, கேஸ் அடுப்பில் இருக்கிற எரிபொருள் பெயர் LPG ( Liquid Petroleum Gas). இதுக்குப் பதிலாக மின்சாரம், எண்ணெய், சூரிய வெளிச்சம், விறகு என்று வெவ்வேறு எரி பொருள்களைப் பயன்படுத்தினால் வெவ்வேறு அடுப்புகள் நமக்குக் கிடைக்கும்.இப்படி நாம் பயன்படுத்துகிற எரி பொருள் எதுவானாலும் சரி, அதை வைத்து நெருப்பையோ அல்லது வெப்பத்தையோ உருவாக்க வேண்டும், அப்போதுதான் சமையல் செய்ய முடியும்.உதாரணமாக, கேஸ் அடுப்பில் எரிவாயு ஒரு பெரிய சிலிண்டருக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சின்னக் குழாய் வழியாக வெளியே வந்து அடுப்பில் சேர்கிறது. அங்கே சின்னச் சின்னத் துளைகளைக்கொண்ட ‘பர்னர்’ என்ற ஓர் அமைப்பின் வழியாக LPG மெதுவாகக் கசிகிறது.இப்போது அந்த எரிவாயுவுக்குப் பக்கத்தில் எரிகிற தீக்குச்சியையோ, லைட்டரையோ காட்டினால் போதும், சட்டென்று நெருப்புப் பிடிக்கும். தொடர்ந்து எரிய ஆரம்பிக்கும். அங்கே ஒரு பாத்திரத்தை வைத்து சமையல் செய்யலாம்.

எண்ணெய், விறகு அடுப்பிலும் இதே ஃபார்முலாதான். எரிவாயுவுக்குப் பதிலா அங்கே எண்ணெய், மரம், அதில் நெருப்பைப் பற்ற வைத்து சூடு உண்டாக்கி, சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.‘இன்டக்ஷன் ஸ்டவ்’ கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நெருப்பு இல்லை. ஒரு தடிமனான இரும்புக் கம்பியில நிறைய மின்சாரத்தைப் பாய்ச்சுகிறார்கள், அது நன்றாகச் சூடாகிறது. அந்த வெப்பத்தைப் பயன்படுத்தி, சமையல் செய்கிறார்கள்.மைக்ரோவேவ் அடுப்பு இன்னும் ஆச்சர்யமானது. ஒரு மூடிய பெட்டிக்குள்ளே ‘மைக்ரோவேவ்’ என்ற நுண்ணிய அலைகளைப் பரவ விடுகிறார்கள். இந்த அலைகள் சாப்பாட்டுப் பொருள்களின் மேலே, கீழே, உள்ளே பரவிச் சூடாக்குகிறது.மற்ற அடுப்புகள் கிடக்கட்டும். உங்கள் வீடுகளில் நிச்சயமாக ஒரு கேஸ் அடுப்பு இருக்கும். அதை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம்.முதலில் எரிவாயுவை நிரப்பி வைத்திருக்கிற உருளை, அதாவது சிலிண்டர். இது ரொம்பக் கனமான இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். அதுக்குள்ளே எரி வாயுவை அதிக அழுத்தத்துக்கு உட்படுத்தி, திரவமாக அடைத்து வைத்திருப்பார்கள். அதனாலதான் அதுக்குப் பெயர் ‘லிக்விட்’ பெட்ரோலியம் கேஸ்!உங்கள் வீட்டில் ஒரு டப்பாவில் அரிசி போட்டு வைத்திருப்பார்கள். தேவையானபோது அந்த டப்பாவிலிருந்து அரிசியை எடுக்கிறீர்கள், பிறகு மூடி வைத்து விடுகிறீர்கள், இல்லையா?எல்பிஜியும் அதே மாதிரிதான், நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது இந்த சிலிண்டரைத் திறந்து எரிவாயுவை எடுத்துக்கொள்ளலாம், தேவையில்லாதபோது மூடி வைத்து விடலாம். அதுக்கு உதவுவதற்காக ‘ரெகுலேட்டர்’ என்ற ஒரு கருவி அந்த சிலிண்டரின் உச்சியில இருக்கிறது.இந்த ரெகுலேட்டரிலிருந்து ஒரு ரப்பர் குழாய் உங்கள் அடுப்புக்குப் போகும். அதன் வழியாகத்தான் எரிவாயு பர்னருக்கு வந்து சேருகிறது. பாத்திரங்களைச் சூடாக்கிச் சமையலுக்கு உதவுகிறது.பெரும்பாலான கேஸ் அடுப்புகளில் இரண்டு பர்னர்கள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பொருள்களைச் சமைப்பதற்காக இந்த ஏற்பாடு. சில சின்ன கேஸ் அடுப்புகளில் ஒரே ஒரு பர்னர் உண்டு, மூன்று, நான்கு பர்னர் கொண்ட ‘மெகா’ அடுப்புகளும் இருக்கின்றன.இந்த பர்னர்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு எரிவாயு வெளியே வர வேண்டும் என்று கட்டுப்படுத்துவதற்காக அடுப்பில் சின்னச் சின்னக் குமிழ்கள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி வெப்பத்தின் அளவை கூட்டலாம், குறைக்கலாம்.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதற்குத் தனி பாத்திரங்கள் ஏன்? 

அநேகமாக எல்லா அடுப்புகளுக்குமே எந்தெந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. மைக்ரோவேவ் விஷயத்தில் அது ரொம்ப சீரியஸ். மைக்ரோவேவ் அடுப்பில் மிகக் குறைந்த நேரத்தில் மிக அதிக வெப்பம் அந்தப் பாத்திரத்தின் மேலே பாய்கிறது. அத்தனை சூட்டைத் தாங்கிக் கக்கூடிய திறமை அந்தப் பாத்திரத்துக்கு வேண்டும். இல்லாவிட்டால் உருகிவிடும்.எதுக்கு வம்பு? பிளாஸ்டிக்கே வேண்டாம், நான் உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்திக்கிறேன் என்று சொல்கிறீர்களா? அதுவும் முடியாது. காரணம், மைக்ரோவேவ் அலைகள் உலோகங்களில் பட்டுச் சிதறிவிடும், உணவைத் தொடாது, சமையலும் நடக்காது.தவிர, நாம சமையலுக்காக ஏற்படுத்தின இந்த மின்சார அலைகள் உலோகத்தின்மேலே படும்போது நெருப்புப் பொறி உண்டாக வாய்ப்பு இருக்கிறது, அது உங்கள் அடுப்பைப் பாழாக்கிவிடும்.அதனாலதான், மைக்ரோவேவ் அடுப்புக்கு என்று சிறப்பான சில பாத்திரங்களைச் சிபாரிசு செய்கிறார்கள். அவற்றைப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் வராது.

அடுப்பு நெருப்பால் சூடு வருகிறது, இந்தச் சூட்டில் சமையல் எப்படி நடக்கிறது?
 
சமையல் என்பதும் வேதியியல்தான். வெவ்வேறு பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு, கலந்து சுடவைக்கும்போது அவை பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்படுகின்றன. அதனால் அந்தப் பொருள்களுடைய உருவம், நிறம், மணம், சுவை என்று எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகின்றன. இதைத் தான் சமையல் என்று சொல்கிறோம்.


கிருஷ்ணா என்கிற தன்னம்பிக்கை!

பள்ளிப் படிப்பு முடித்ததும், ஹைதராபாத் நல்சார் பல்கலைக்கழகத்துக்கும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பித்தார். ஹைதராபாத்திலிருந்து சட்டம், மருத்துவம் இரண்டிலுமிருந்தே இடம் தருவதாகக் கடிதம் வந்துவிட்டது. அடுத்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சட்டம் பயில இடம் அளிப்பதாக ஒப்புதல் கடிதம் அனுப்பியது.இளைஞர் கிருஷ்ணாவுக்கு மறு பெயர் உற்சாக ஊற்று. 8ஆவது முதல் 12ஆவது வரை சென்னை வித்யா மந்திர் பள்ளியில் படித்து, 2003ல் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்தார். அவர் அப்போது எடுத்துக் கொண்டது பயாலஜி குரூப்.கிருஷ்ணா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏன்? அதற்கு ஒரு தனிக் காரணம் இருக்கிறது. சிங்கப்பூர் கென்ட் ரிட்ஜ் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் கிருஷ்ணா. தேர்ந்தெடுத்த படிப்பு, பி.எஸ்.சி. ஹானர்ஸ் இன் லைஃப் சயன்ஸ். நான்கு வருடப் பயிற்சிக் காலத்தில், இறுதி ஆண்டு ரிசர்ச் பிராஜக்ட் (ஆராய்ச்சிப் பணி) ஒன்று செய்தாக வேண்டும்.நான் இம்யுனாலஜி எனப்படும் துறையைத் தேர்ந்தெடுத்தேன். இம்யுனாலஜி என்றால், உடலில் அன்னியப் பொருள்களுக்கு உண்டாகிற எதிர்ப்பு குறித்த சிகிச்சைப் பிரிவு" என்கிற கிருஷ்ணா, இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் கிருஷ்ணாவைத் தேடி வந்தன.

அதற்கு முன் கிருஷ்ணாவின் பள்ளிக் கால ஃப்ளாஷ்பேக்...

ஒரு நாள் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஷூக்களைப் போட முயன்றபோது, பாதங்கள் வீங்கியிருந்ததைப் பார்த்தார் கிருஷ்ணா.அம்மா, ஷூவைப் போட முடியவில்லை. கால் புஸ்ஸென்னு வீங்கியிருக்கு" என்றார். குடும்ப டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனார்கள். அவர் பி.பி. அளவைப் பார்த்தார். அதிகமாக இருந்தது. காலில் நீர் வீக்கம் குறைய லாசிக்ஸ் மாத்திரை கொடுத்தார். கிருஷ்ணாவின் தந்தை டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால், சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷனில் சிறுநீரகப் பிரிவில் இருந்த டாக்டர் திலீப்பிடம் மகனை அழைத்துச் சென்றார்.இது ஆட்டோ இம்யூன் கண்டிஷன் என்றும், நோய்க்குப் பெயர் க்ளோமான்லோ நெஃப்ரைடிஸ் என்றும் தெரிவித்தார் டாக்டர் திலீப். சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரகம் வேலை செய்யாது! அப்போது கிருஷ்ணாவுக்கு வயது பதிமூன்றுதான்!சிறுநீரகத்தின் வடிகட்டிகள் பணிபுரியாது. உடலில் இருக்கிற அத்தனை சத்துக்களும், அல்புமின் உட்பட, எல்லாமே வெளியே போகத் தொடங்கிவிடும் என்பதோடு, வடிகட்டியே பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். மாணவர் கிருஷ்ணா மனம் தளர்ந்து போய்விடவில்லை!நான் 2003ல் வித்யா மந்திரில் படிப்பு முடித்து வெளியே வந்தேன். மேல் படிப்புக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுக்க என் சிறுநீரகப் பாதிப்புதான் காரணம். ஏனென்றால் அங்கே கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனை இருந்தது. அங்கே டயாலிசிஸ் செய்துகொள்ளும் வசதியும் இருந்தது. விடுமுறையில் சென்னை வந்தபோது, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் முறைகளையும் முயன்று பார்த்தேன். எதுவும் பலன் தரவில்லை. இந்தச் சிறு வயதிலேயே எதற்கு டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செது கொண்டால் டயாலிசிஸை நிறுத்தி விடலாமே என்று முடிவெடுத்தோம். என் அம்மா தமது சிறுநீரகம் ஒன்றை தானம் செய்ய முன் வந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக, மூன்றே மாதங்களில் அந்தச் சிறுநீரகத்தை என் உடல் ஏற்காமல் நிராகரித்து விட்டது! பெற்றோரின் ஆதரவுடன் சிங்கப்பூரில் டயாலிசிஸ் செய்துகொண்டே கல்வியைத் தொடர்ந்தேன். கடைசி வருடம், அம்மா என் கூடவே இருந்தாள். ஐந்து செமஸ்டர்களிலும் நான்தான் கல்லூரியில் டாப்பர். இங்கே வந்த பிறகு மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் வாரம் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்கிறேன்!" என்றார் இளைஞர் கிருஷ்ணா, அவருடைய உற்சாகம், உறுதி எல்லாமே அவர் முகத்தில் பளீரெனத் தெரிகிறது.

அதன் பிறகு, சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள ஸ்கூல் அஃப் எக்சலன்ட்ஸ் இன் லா-வில் சட்டம் படித்துத் தேறினார் கிருஷ்ணா. பி.எல். ஆனர்ஸ் பட்டம் கிடைக்க இருக்கிறது.இப்போது அமெரிக்க வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் ‘மூட் கோர்ட்’ என்னும் மாதிரி கோர்ட் தேர்வில் பங்கு கொள்ள, தம் கல்லூரி சார்பாகக் கலந்துகொள்ளப் போகிறார் கிருஷ்ணா! அவர் தான் குழுவின் தலைவர். கூடவே பிரகாஷ் என்ற சக மாணவர், மற்றும் ஆவுக் குழு மாணவியர். இந்தியாவிலிருந்தே மூன்று டாப் கல்லூரிகளிலிருந்து மட்டுமே இந்தப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூர், ராபூர் மற்றும் தில்லி சட்டக் கல்லூரி.வாஷிங்டன் நகரிலுள்ள கேப்பிடல் ஹில் ஹோட்டலில் இந்த கோர்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. போட்டியில் தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தன்னம்பிக்கை கிருஷ்ணாவுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.அங்கே தங்கியிருக்க வேண்டிய பத்து நாட்களில், நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். அங்கே டயாலிசிஸ் செய்துகொள்வது என்றால், பல மடங்கு டாலர் செலவாகும். என்ன செய்வது?அப்போலோவில் தமக்கு டயாலிசிஸ் மருத்துவம் செய்துவரும் டாக்டர் ராஜா மகேஷ், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து விட்டாராம். அந்த நான்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஆகும் செலவை யாராவது ஏற்க வேண்டுமே என்ற கவலை கிருஷ்ணாவுக்கு இருந்தது. அதற்கும் ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்துவிட்டார் கிருஷ்ணா.
சவாலாகத் தோன்றவில்லையா, கிருஷ்ணா?
சவால்தான். ஆனால் அதை வெற்றிகொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே இருக்கிறது. நான் சென்ற முறை ஹாங்காங் நகருக்கு இதேபோல் ஆர்பிட்ரேஷன் மூட் கோர்ட் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போயிருந்தேன். அங்கேயும் டயாலிசிஸ் செய்து கொண்டே தான் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். கடைசியாக, லண்டனில் மூன்று வார இன்டர்ன்ஷிப் எனப் படும் பயிற்சிக்காக ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கேயும் மருத்துவமனையை ஏற்பாடு செதபின், டயாலிசிஸ் செய்து கொண்டே தான் பயிற்சிக் காலத்தை முடித்தேன்." 

உங்கள் எதிர்காலம்?
இப்போதே ஜாப் ஆஃபர்ஸ் - வேலைக்கான வாப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. முறையாகத் தகுதி பெற்றதும் ஒரு நல்ல பதவியை ஏற்றுக்கொள்வேன். மீண்டும் ஒரு முறை மாற்று சிறுநீரகச் சிகிச்சை செய்துகொண்டு இயல்பு வாழ்க்கை வாழலாம். அது வெற்றியடைந்தால், மேற்கொண்டு டயாலிசிஸ் தேவைப்படாது அல்லவா?" என்கிற கிருஷ்ணா,சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பதிவு செய்து வைத்திருக்கிறார். முறைப்படி பொருத்தமான சிறுநீரகம் அவருக்குக் கிடைக்கும்போது இரண்டாம் அறுவைச் சிகிச்சை. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது, கிருஷ்ணா வாஷிங்டன் மூட் கோர்ட்டில் வெற்றிகரமாக விசாரணையை முடித்து பரிசைத் தட்டிக் கொண்டு வந்திருப்பார்!


கல்கி
 

Monday, April 02, 2012

அருள் மழை ----------- 52


*காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார். *

*ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார். * 

*பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணிஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது. இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்.*

*மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர் முகாமிட்டிருந்தார். சுவாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். பெரியவர் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தரையில் சில வெற்றிலைகள் கிடந்தன. அதைப் பார்த்த சுவாமிகள் சிஷ்யனை அழைத்து, அதனை எடுத்து வைக்கும் படி சொன்னார். தரையில் கிடக்கும் வெற்றிலையை ஏன் எடுக்கச் சொல்கிறார் என்ற குழம்பிய சிஷ்யர் வெற்றிலையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அந்த சமயத்தில், எப்படியாவது பெரியவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முண்டியடித்து கூட்டத்தின் நடுவே கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். கூட்டநெரிசலில் சிக்கி முன்னேறிய அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட பெரியவர் சிஷ்யரை அழைத்து, அந்த வெற்றிலைகளை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கச் சொன்னார். *  (மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பெரியவா முகாமிட்டிருந்த போது, அடியேனது அம்மா, பெரியம்மா, சித்தி, மாமா எல்லாரும் நித்யமா பெரியவாளை சேவிச்சுட்டு வருவாங்களாம்....அப்போ அவங்க லாம் அடியேனை மாதிரி குட்டிப் பிள்ளையாய் இருந்தாங்களாம்.) 

*அந்தப் பெண் வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டதும் அவளின் தலைசுற்றல் தீர்ந்து போனது. அப்பெண் வேறு யாருமல்ல. அமரர் ரசிகமணி டி.கே.சி. பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஞானஒளி. *

*“”உடலை உறுத்தும் நோயை
உள்ளன்போடு போக்கும் தெய்வம்!
சாந்த சொரூபமான
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக
அருள் தரும் தெய்வம்!
தாயாகி தந்தையுமாகி
எனை தாங்குகின்ற தெய்வம்!
துன்பம் துயர் போக்கும் நண்பனாகி
துணை நின்ற தெய்வம்!”*

*என்று பெரியவர் மீது ஒரு அருமையான கவிதையும் பாடிச் சென்றார். எந்தபபொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த
சம்பவம் எடுத்துக் காட்டியது.* 

ஐ.பி.எல். - வஞ்சிக்கப்படும் சென்னை ரசிகர்கள்!

நீங்கள், சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகரா? சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களா? எடுத்து வையுங்கள் ரூ.700ஐ. என்னால் வரிசையில் நின்று அடிதடிபட்டு டிக்கெட் வாங்க முடியாது என்கிறீர்களா? ஆன்லைனில் 700 ரூபாய் டிக்கெட் விற்பனை கிடையாது. 1200 ரூபாய் இருந்தால் மட்டும்தான் டிக்கெட் வாங்க முடியும். சென்னையைப் போல மற்ற ஊர் ரசிகர்களுக்கும் இதே மாதிரியான நிலைமைதானே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.9 அணிகள் உள்ள ஐ.பி.எல்.-லில், சென்னை, பெங்களூரூ தவிர மற்ற அணிகளின் டிக்கெட்டுகள் ரசிகர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்றபடிதான் நிர்ணயம் செயப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் குறைந்த விலை டிக்கெட், ரூ.300 மட்டுமே. ‘மேட்ச் பார்க்க எல்லோரும் வரவேண்டும் என்று விரும்புகிறோம். நிறைய மாணவர்களை மைதானத்தில் பார்க்க விரும்புகிறோம்’ என்று பேசுகிறார் கொல்கத்தா அணியின் டைரக்டர் வெங்கி மைசூர். இந்தக் கரிசனம் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினரிடம் இல்லை? கொல்கத்தா போல மற்ற அணிகளின் டிக்கெட் விலைகளும் மிகக் குறைந்த விலையிலேயே உள்ளன. மும்பை- ரூ.625, பஞ்சாப் மொஹலி - ரூ.375. ஜெப்பூரில் ரூ.200, புனேவில் ரூ.250, விசாகப்பட்டினத்தில் ரூ.300 என எல்லா அணிகளும் ரசிகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். 
சென்னை ரசிகர் 700 ரூபாய் கொடுத்தாலும் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்துதான் மேட்ச் பார்க்க முடியும். சினிமா தியேட்டர் போல கிரிக்கெட் மைதான டிக்கெட்டுகளுக்கு வரிசை எண் கிடையாது. ஒருவேளை நீங்கள் லேட்டாகப் போக நேர்ந்தால் உட்கார இடமில்லாமல் போகலாம். சரி, 700 ரூபாயைக் கொடுத்துவிடலாம் என்றாலும் சென்னை ரசிகர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை வாங்கிவிட முடியாது. ரூ.1200க்கு அதிகமான விலையுள்ள டிக்கெட்டுகளே ஆன்லைனில் வாங்க முடியும் என்பது சென்னை ரசிகர்களை மிகவும் ஏமாற்றுகிறது. ஆனால், மற்ற அணிகளின் குறைந்த விலையுள்ள டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற முடியும். ‘தமிழக அரசு 25 சதவிகித வரி விதித்திருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை’ என்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதே வரி மற்ற மாநிலங்களிலும் உண்டு. ஆனாலும், ரசிகர்களின் நலனில் மற்ற அணிகள் செலுத்திய அக்கறையை சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யத் தவறிவிட்டது.
இந்த வருடம், புனே அணியைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. ஏற்கெனவே யுவ்ராஜ் இல்லாமல் அவர்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஹோப்ஸும் காயம் காரணமாக விலகிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் லெவியை மும்பை வாங்கிவிட்டது. யுவ்ராஜ் இல்லாததால் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திரங்கள் மிளிரும் ஐ.பி.எல். அணிகளுக்கு மத்தியில் புனே வாரியர்ஸ் அணி களையிழந்து இருக்கிறது. முதல் ஐ.பி.எல்.-லில், ராஜஸ்தானும் பார்க்க ஏதோ ரஞ்சி அணிபோல இருந்தது. பிறகு, கோப்பையைத் தட்டிச் சென்றது அந்த அணிதான். புனேவும் அப்படியொரு திருப்பத்தைத் தரட்டும்.சென்ற வருட ஐ.பி.எல்.-ஐ தோனி வென்றபோது, கிரிக்கெட் உலகம் கொஞ்சம் அரண்டுதான் போனது. தோனி தொட்டதெல்லாம் பொன்னான நேரமது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில் தோனி அப்படியே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டார். எதிர்வரும் ஐ.பி.எல்.-லும் தோற்றுவிட்டால் அவருக்குப் பெரிய நெருக்கடியை உண்டாக்கும். இரண்டு முறை கோப்பை வாங்கியது முக்கியமல்ல. மூன்றாவது தடவையாகப் பெறுவது தான் தோனிக்கு - பெரியநம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.சென்ற ஐ.பி.எல்., டெலிவிஷன் ரேட்டிங்கின்படி ஃபிளாப். உலகக் கோப்பைக்குப் பிறகு உடனே ஆரம்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோர்ந்து போனார்கள் என்று சொல்லப்பட்டது. அதனால், இந்த வருடம் பி.சி.சி.ஐ.க்கு - பெரிய அமிலச் சோதனைதான்.

Sunday, April 01, 2012

இனி உங்கள் பொறுப்பு! - ஓ பக்கங்கள் , ஞாநி

அன்புள்ள அணு உலை ஆதரிப்பாளர்களான பொதுமக்களுக்கு,


வணக்கம். உங்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துகள். முட்டாள்கள் தின வாழ்த்து என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அன்றைய தினம் நம்மை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்று காலையிலிருந்தே நாம் விழிப்பாக இருப்பதால் ஏப்ரல் 1 ஐ நான் சுமார் 20 வருடங்களாக விழிப்புணர்வு தினமாகவே கொண்டாடி வருகிறேன்.அன்றைய ஒரு நாள் காலை மட்டுமல்ல, 365 நாட்களும் 24 X 7, நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர்தான் கூடங்குளம் அணு உலையைக் கடுமையாக எதிர்த்து வந்தோம்.இப்போது அணு உலையை இயக்குவதற்கான பணிகள் படுவேகமாக நடக்கின்றன. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது. மின்சாரம்தான் முக்கியம், அதற்காக கூடங்கூளம் அணு உலை தேவை என்று நம்பிய உங்களில் பலரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடும். மகிழ்ச்சியடைய உங்களுக்கு எதுவும் இல்லை. வருத்தப்படவும் எங்களுக்கு எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

இருநூறு நாட்களுக்கும் மேலாக துளி வன்முறை இல்லாமல் அமைதியாகப் போராடிய கூடங்குளம் இடிந்தகரை மக்களை போலீஸ், ராணுவம், கடற்படைகளைக் கொண்டு முற்றுகை நடத்தி, சோறு, தண்ணீர், பால்,மருந்து எதுவும் போக விடாமல் தடுத்து அரசுகள் செய்த நடவடிக்கை உங்களுக்கு மெய்யாகவே மகிழ்ச்சிதானா? நாளை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்த மக்களும் எந்தக் கோரிக்கைக்காகவும், அமைதியாக வன்முறை இல்லாமல் அகிம்சை வழியில் போராடினால், இதே நடவடிக்கையை அரசுகள் எடுத்தால் சம்மதிப்பீர்களா? அந்த நம்பிக்கை இனியும் உங்களுக்கு இருக்க முடியுமா?போராட்டக் குழுவில் சிலரை முதலில் போலீஸ் கைது செய்த தகவல் கேட்டதும் கூட்டப்புளி என்ற கிராம மக்கள் தங்கள் கிராம சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்கள். அதில் 178 பேரைக் கைது செய்த போலீஸ் என்னென்ன குற்றச்சாட்டு களைப் பதிவு செய்தார்கள் தெரியுமா? இ.பி.கோ 143, 188, 353, 294-ஆ, 506(2), 7 1(அ) ஆகியவை. கோர்ட்டில் போலீஸ் சொன்னது இதுதான். 178 பேரும், அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அதற்காக சதி செய்வது (பிரிவு 121-அ), ரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)" ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதால், ஜாமீனே தரக்கூடாது என்றார்கள். இ.பி.கோ 121 க்கான அதிகபட்ச தண்டனை தூக்கு. இ.பி.கோ 121அ, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை தரலாம். இதெல்லாம் யார் மீது? 30 சிறுவர்கள், 42 பெண்கள்,106 பேர் ஆண்கள் மீது!இதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? இந்தப் போராட்டத்தில் அம்பலமானது அரசு மட்டுமல்ல; நமது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒவ்வொரு தூணும்தான். அரசு இடிந்தகரைப் பந்தலுக்கு எல்லா கிராமங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து அறப்போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கவும் உணவுப் பொருள் வழங்கலை வெட்டவும் 144 தடை உத்தரவு போட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது நீதிபதிகள் விசித்திரமான காரணம் சொல்லி தடை உத்தரவுக்குத் தடை கொடுக்க மறுத்தார்கள். அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட விரும்பவில்லையாம். அப்படியானால், அரசின் நிர்வாக முடிவான அண்ணா நூலக இட மாற்றத்துக்கு மட்டும் தடை விதித்தது எப்படி?அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் என்று மூன்று முக்கிய பிரிவினரும் மேலும் மேலும் பொய்களை உங்களிடம் அள்ளி அள்ளி வீசினார்கள். ஒரு பொய் அம்பலமானதும் அடுத்த பொய்யை வீசுவார்கள். உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவுக்குத் தொண்டு நிறுவனம் வழியே வெளிநாட்டு உதவி என்ற பொய்யை ஓயாமல் டி.வி.யில் சொன்ன நாராயணசாமி, நாடாளுமன்றத்தில் அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று ஒப்புக் கொண்டார். சாதாரண ஜெர்மன் சுற்றுச்சூழல் ஆர்வலரை ஒரு குற்றமும் சாட்டாமல் வழக்கும் போடாமல் நாடு கடத்தினார்கள். இவையெல்லாம் அம்பலமானதும் நக்சல் தொடர்பு என்று ஆரம்பித்தார்கள். இடிந்தகரை பந்தலிலே நக்சல்கள் உட்கார்ந்திருப்பதாக சொன்னார்கள். நந்திகிராம் விவசாயிகள் போராட்டம் போல இதிலும் நக்சல்கள் என்றார்கள். நந்திகிராமில் ஆரம்பம் முதல் போராட்டம் முத்தரப்பினரின் வன்முறை மோதலாக இருந்தது. கூடங்குளத்தில் துளி வன்முறையும் இல்லை. ஆயுதம் வைத் திருந்தது போலீஸ் மட்டும்தான்.

சில தினசரிகளும் டி.வி. சேனல்களும் சொன்ன பொய்கள் படுமோசமானவை. அயோக்கியத்தனமானவை. அரசின் அராஜகம், அறிஞர்களின் மழுப்பல், ஊடகங்களின் பொய்கள் பற்றியெல்லாம் இப்போது ஏன் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் தெரியுமா? அணு உலையைத் திறக்கக்கூடாது என்று போராடிய எங்களுக்கு எதிராக மட்டும் நடந்தவை அல்ல இவை. மின்சாரத்துக்காக அணு உலை வேண்டும் என்று விரும்புகிற உங்களுக்கு எதிராகவும் இவை இனி தொடரப் போகின்றன என்பதனால்தான்.எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டம் தோல்வியே அல்ல. அறவழியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அரசின் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ரத்தம் சிந்த விடாமல் காப்பாற்றியது உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் மிகப் பெரிய வெற்றி. போராட்டக் குழுவினருக்கு மனிதக் கேடயமாக இருந்த மக்கள், முள்ளிவாக் கால் நிலையை அடையவிடாமல் காப்பாற்றியது சாதாரண சாதனை அல்ல.எல்லாவற்றையும்விட மிகப் பெரிய வெற்றி, கடந்த 50 வருடமாக அணுசக்தித் துறையிடம் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டோம் என்ற மமதையுடன் அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்டின் கீழ் அராஜகம் செய்து வந்த அணுசக்தித் தலைமை முதல் முறையாக தன்னிலை விளக்க அறிக்கைகளையும் விளம்பரங்களையும் தரும் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்திவிட்டு இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்கள் கூடங்குளம் மக்கள்.உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் தினமும் சுடு சோறு சாப்பிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாவது போல தினமும் ஒரு இடத்தில் படுக்க பயந்து வீடு வீடாக ஓடுகிறார். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு குறைந்து விட்டது. பல கிராம மக்கள் வருவதில்லை. இப்படி வரிசையாகப் பொய்கள். உலை வரக்கூடாது என்று நாங்கள் சொன்னோம். போலீஸ், ராணுவ உதவியுடன் எங்கள் மீது உலையைத் திணித்திருக்கிறது அரசாங்கம். உலை வேண்டும் என்று சொன்னவர்கள் நீங்கள். எனவே இனி அதன் பாதுகாப்புப் பற்றி எங்களைவிட அதிக அக்கறையும் எச்சரிக்கையும் உங்களுக்குத்தான் தேவை. ஏனென்றால் நாங்கள் அதைப் பற்றி முன்பே எச்சரித்து விட்டோம். எல்லாம் முறையாக நடக்கும் என்று நம்பியவர்கள் நீங்கள். முறையாக நடக்கிறதா என்று இனி கவனிக்க வேண்டியதும் நீங்கள்தான். இப்போது அணு உலையில் ஆபத்தான யுரேனியம் எரிபொருள் கோல்களை பொருத்தத் தயார் நிலை வந்துவிட்டது என்று சொல்கிறது அரசு. அப்படிப் பொருத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விதிகளை (அரசு சார்பான) அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரி யமும், சர்வதேச அணுசக்தி முகமையும் நிர்ணயித்திருக்கின்றன. அந்த விதியில் மிக முக்கியமான விதியைப் பின்பற்றாமலே யுரேனியம் கோல்களைப் பொருத்தினால், விளைவுகளுக்கு அரசு மட்டுமல்ல; நண்பர்களே, அணு உலை ஆதரவாளர்களான நீங்களும்தான் பொறுப்பு.

அணு உலையைச் சுற்றிலும் 30 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்களுடன் பாதுகாப்பு ஒத்திகைகள், பேரிடர் ஏற்பட்டால் அவர்களை அகற்றுவதற்கான பயிற்சிகள் இவற்றை மேற்கொள்ளாமல், யுரேனியம் எரிபொருளை உலையில் ஏற்றக்கூடாது எனபது முக்கியமான விதி. அந்த விதியைப் பின்பற்றச் செய்வது உங்கள் பொறுப்பு. முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் 15 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இதுவே விதிக்கு முரணானது. இவ்வளவு மக்கள் நெருக்கம் இருக்கும் இடத்தில் உலை இருக்கக்கூடாது என்பது விதி. நீங்கள் மின்சாரம் வேண்டும் என்று கூச்சலிட்டதால் இந்த விதியை மீறி உலையை எங்கள் மீது திணித்திருக்கிறது அரசு. பேரிடர் ஒத்திகை எப்போது நடக்கும்? 15 லட்சம் மக்களை ஆபத்தென்றால் இன்னோர் இடத்துக்கு விரைந்து அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை எப்போது? எப்படி?அடுத்து மூன்றாவது உலை கட்டுவதற்கான விண்ணப்பத்துக்கு அமைச்சர் ஜெயராம் ரமேஷின் தலைமையில் இயங்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது. காரணம் கடலோரக் கட்டுப்பாட்டு விதியை அது மீறுவதுதான். முதல் இரு உலைகளுமே அந்த விதியை மீறியவை தான்.பேரிடர் தயார் நிலை ஒத்திகை இருக்கட்டும். விபத்து நடந்தால் இழப்பீடு பற்றிய விதி என்ன என்று அரசிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசின் இழப்பீடு சட்டம் செல்லாது என்கிறது ரஷ்யா. தானும் இந்திய அரசும் 2008ல் போட்ட ஒப்பந்தப்படிதான் இழப்பீட்டுப் பொறுப்பு என்கிறது. அந்த ஒப்பந்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முழுப் பொறுப்பும் இந்திய அரசுடையதுதான் என்கிறார்கள். ஒப்பந்தத்தை வெளியிட்டால்தான் உண்மை தெரியும். முழு பாதுகாப்பு உள்ள உலை என்று மார்க்ஸ், லெனின், கோர்பசேவ் மீதெல்லாம் சத்தியம் செய்யும் ரஷ்யா ஏன் இழப்பீட்டுக்கு பயப்படுகிறது என்று நீங்கள்தான் இனி விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் இனி இந்த முகவரிகளுக்குக் கடிதம் எழுதி நீங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டு எங்களுக்கும் சொன்னால் மகிழ்ச்சியடைவேன். 1. The Chairman Atomic Energy Regulatory Board, Niyamak Bhavan, Anushaktinagar, Mumbai 400 094, 2. International Atomic Energy Agency,Vienna International Centre, P.O. Box 100 A& 1400 Vienna Austria Email : Official.Mail@iaea.org 3.The Head, Safety Research Institute, IGCAR Campus, Kalpakkam 603 102, Tamil Nadu Email: ycm@igcar.gov.in, ksm@igcar.gov.in. இது தவிர அப்துல் கலாம், மன்மோகன் சிங், ஜெயலலிதா மின்னஞ்சல் முகவரிகளெல்லாம் ஏற்கெனவே உங்களிடம் இருக்கும்தானே.

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் இந்தச் சுற்று முடிவில் கூடங்குளம் உலையை மூடச் செய்ய எங்களால் முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் மக்கள் வாயை இனி மூட முடியாது என்ற நிலையை கூடங்குளம் போராளிகள் அரசுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். நமக்கு மின்சாரம் தேவை. அதற்கு அணு உலை தேவையில்லை என்றோம் நாங்கள். நீங்களோ அணு உலை வந்தால்தான் மின்சாரம் கிடைக்கும் என்று அரசு செய்த பிரசாரத்தை நம்பினீர்கள். உங்கள் கருத்தை உருவாக்கிய அரசுகள் போலீஸ் துணையுடன் உங்கள் விருப்பப்படி உலையை இயக்கப் போகிறார்கள். இனி அந்த உலை பாதுகாப்பாக நடக்கிறது, விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதையெல்லாம் உறுதி செய்யும் பொறுப்பு எங்களுடையதல்ல. உங்களுடையதுதான். இதுவரை நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். இனி நாங்கள் வேடிக்கை பார்க்கட்டுமா?


விஷன் 2023!

நிஜமாகும் கனவு!


அரசியல் காரணங்களையும் தாண்டி கடந்த வாரங்களில் தமிழகம் மிகவும் பரபரப்பாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம். இரண்டாவது, தமிழக பட்ஜெட். பட்ஜெட் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சடங்கு என்றாலும், 'விஷன் 2023’ தமிழக மக்களுக்குக் கொஞ்சம் புதிதாகவே இருந்தது.

'விஷன்’ என்ன?

முதலாவது, தமிழக அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ இத்திட்டத்தைக் கொண்டு வராமல், 'ஏசியன் டெவலப்மென்ட் வங்கி’ மற்றும் 'இக்ரா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்’- வுடன் சேர்ந்து கொண்டு வந்திருப்பதால் மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.இந்த தொலைநோக்குத் திட்டத்தின் மூலம், 2023-ம் ஆண்டு நடுத்தர மக்களின் வருட வருமானம் 4.5 லட்சமாக ஆக்குவது; அடுத்த 11 வருடங் களுக்கு ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சி பெறுவது; அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவது உள்ளிட்ட பல லட்சியங்களையும், குறிப்பிட்ட பல இலக்குகளையும் நிர்ணயித்து இருக்கிறது தமிழக அரசு.அடுத்த 11 ஆண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்ற  15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதில் மின் துறைக்கு மட்டும் 4.5 லட்சம் கோடி ரூபாய். இப்படி ஒவ்வொரு துறைக்கும் என்ன செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு தேவை என இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.


68 பக்கமுள்ள இந்த அறிக்கை மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எத்துறையையும் விட்டுவிடாமல் அனைத்து துறை சார்ந்தும் இந்த தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த 11 ஆண்டுகளில் செலவழிக்கப் போகும் மொத்த தொகையில் 30 சதவிகிதம் அளவுக்கு மின் துறைக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில்  தனியார் முதலீட்டை            42 சதவிகிதமாக அதிகரிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி தனியார் முதலீட்டை அதிகப்படுத் தினால் அந்த பிஸினஸ் நஷ்டத்தில் இயங்காது. தவிர, அந்நிறுவனத்தின்  சேவையில் பிரச்னையும் இருக்காது.
இன்னொரு வரவேற்கத்தக்க அறிவிப்பும் இதில் இருக்கிறது. தமிழக ஜி.டி.பி.-யில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்திருக் கிறார்கள். அதாவது, தற்போதைய நிலையில் தமிழக ஜி.டி.பி.யில் உற்பத்தித் துறையின் பங்கு 16 சதவிகிதம் மட்டுமே. இதை 22 சதவிகிதமாக ஆக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த விஷனை நிச்சயம் வரவேற்கலாம். தவிர, இது முதல் நிலை அறிக்கைதான். இதற்கடுத்து ஒவ்வொரு துறை வாரியாக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமும், இதை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதற்கான அறிக்கையும் விரைவில் வெளியாக இருக்கிறது'இத்திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்ட போகிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்கப் போகிறார்கள். இப்போதைக்கு பப்ளிக் பிரைவேட் பாட்னர்ஷிப்பில் தனியார் 15 சதவிகிதமும், மத்திய அரசு 25 சதவிகிதமும், மாநில அரசு 60 சதவிகிதமும் முதலீடு செய்கிறார்கள்.
 
நந்த குமார் 
அகில இந்திய தொழிற்துறை சம்மேளனத்தின் (பிக்கி) எரிசக்தி குழு மெம்பெர்
 
விகடன்