Search This Blog

Tuesday, May 08, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு?


ஒருவழியாக வேட்பாளர் யார் என்பது நிச்சயமாகி விட்டது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ரோம்னி என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. அமெரிக்க அரசியலில் உட்கட்சி ஜனநாயகம் மிக வலுவானது. வேட்பாளரை உயர்மட்டக் குழு தேர்ந்தெடுப்பது, கட்சி தலைமைக்கு வழங்கப்படும் அதிகாரத்தால் நியமிக்கப்படுவது போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது. வேட்பாளராகத் தகுதி பெற்ற, போட்டியிட விரும்புபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் கட்சி மாநாடுகளில் மற்றவர்களை விட அதிக வோட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்க வேண்டும். அவர்தான் கட்சியின் வேட்பாளராக முடியும். 65 வயது ரோம்னி நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர். மாஸாசுஸட்ஸ் மாநில கவர்னராக இருந்தவர். அவரது தந்தையும் மாநில கவர்னராக இருந்தவர். 2008 அதிபர் தேர்தல் வேட்பாளராவதற்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒதுங்கியவர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ. படிப்புக்குப் பின் நிதி நிறுவன பிஸினஸ் தொடங்கி மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தவர். 5 குழந்தைகளும், 15 பேரக் குழந்தைகளும் உள்ள இவர், இன்று அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். சொத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள். ஆண்டு வருமானம் 45 மில்லியன் டாலர்கள்.உட்கட்சித் தேர்தலில் இவரின் செல்வாக்கு ஓங்குவதைக் கவனித்து வந்த ஒபாமா மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் இவரது வாதங்களுக்கு மட்டுமே பதிலளித்துக் கொண்டிருந்தார். கட்சித் தேர்தல்கள் முடிந்து வேட்பாளர் நிலையை அடைந்ததும் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் ரோம்னி. ஒபாமா எல்லாவகையிலும் தோல்வி அடைந்துவிட்டார், அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது" என ஆரம்பித்து, வரிவிதிக்கும் முறைகளில் மாற்றம் என்ற பெயரில் சாதாரண அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிகளைக் கூட்ட முயற்சிக்கிறார்; பொருளாதாரச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் தனியார் துறைகளில் அரசின் தலையீடு; கட்டுப்பாடு இல்லாத பெட்ரோல் விலையேற்றம்" என ஒபாமா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார். முக்கியமான விஷயம் ஒபாமா அறிவித்துச் செயல்படுத்த முடியாமல் தவிக்கும் புதிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டம். இது கிட்டத்தட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாதிரி. அமெரிக்காவில் அரசாங்க மருத்துவமனை என எதுவும் தனியாகக் கிடையாது. தனிநபர் மருத்துவச் சேவைக்கு மிகஅதிக கட்டணம். இதை நோயாளிகளின் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மருத்துவமனை பெற்றுக் கொள்ளும். இதை மாற்றி வயதானவர்களுக்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் ஆகும் மருத்துவச் செலவை, அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மருத்துவமனைகள் பெறுவதற்கு ஒபாமா ஒரு திட்டத்தை அறிவித்தார். இது இப்போது அரசியலாகி இருக்கிறது. இருக்கும் நல்ல சிஸ்டத்தை விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் இது என்பது ரோம்னியின் வாதம். 


அடுத்தது கடந்த தேர்தலின் போது ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் எனச் சொல்லி, அதை இன்னும் முடிக்காமல் இப்போது ஈரானுக்கு அதிக அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுகின்றன. அவர் சொன்னது எல்லாம் ‘தேர்தல் நேர சத்தியங்கள்’ மட்டுமே என பாய்கிறார்.  அதிகாரபூர்வமாக தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்படாவிட்டாலும், அதிபர் ஒபாமாவின் சமீப பேச்சுகளில் அரசியல் தொனிக்க ஆரம்பித்துவிட்டன. நிறைய சம்பாதிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்- ரோம்னி போன்றவர்கள், குறைவாக 15 சதவிகிதம் வரி மட்டுமே செலுத்துகிறார்கள். இது நியாயமில்லை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் 30% வரி செலுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பல நலத் திட்டங்களுக்கு உதவும் என அறிவித்திருக்கிறார். ரோம்னி அளவு பணக்காரர் இல்லையென்றாலும் ஒபாமாவும் ஒன்றும் சாமானியன் இல்லை. சாதாரண அமெரிக்கர்களை விட பணக்காரர். அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். உலகின் முதல் பணக்காரர்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தவறாமல் இடம் பெறும் வாரன் பஃபெட், ஒபாமாவின் வரி உயர்வு திட்டத்தை வரவேற்று இது சமூகக் கடமை என அறிவித்திருக்கிறார். வரியை உயர்த்தப் போகிறோம் என்று சொல்லி வோட்டு கேட்கப் போகும் முதல் அரசியல்வாதி ஒபாமாவாகத்தானிருப்பார். மாறுதல்கள் வரும் எனச் சொல்லி, கடந்த தேர்தலில் வென்ற ஒபாமா அவருக்கு முன்பிருந்த குடியரசுக் கட்சி அதிபர் புஷ் செய்த அத்தனை மோசமான காரியங்களையும், எந்த மாறுதலுமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். எகிப்து, லிபியாவில் புரட்சிகளை உருவாக்கியது, ஈரானுக்குப் படைகளை அனுப்பியது, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தளம், ராணுவ ஜெயில்களில் மனித உரிமை மீறல், அக்கிரமங்கள், வீக்கி லீக் போன்ற பிரச்னைகளின் மூலம் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளப்பார்க்கிறார். அமெரிக்கா வலிமையாக இருந்தால்தான் உலகம் பத்திரமாகயிருக்கும் என நம்புபவர்தான் அமெரிக்க அதிபர். இதை விரும்பும் அமெரிக்க மக்கள் தேர்தல் நேரத்தில் இதை யார் செய்வார்கள் என நம்புகிறார்களோ அவர்தான் ஜெயிப்பார்," என்கிறார் இந்திர ஜித் பார்மர். இவர் மான்செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியர். அமெரிக்க அரசியல், அதிபர்கள் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கடந்த மாதமே கருத்துக் கணிப்புகள் தொடங்கி விட்டன. முதல் கருத்துக் கணிப்பில் சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது ‘கால்ப் டெலி’ என்ற மீடியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் ஒபாமாவுக்கு 50 சதவிகித ஆதரவும்; ரோம் னிக்கு 44 சதவிகிதமும் பதிவாகி இருக்கிறது. இடைவெளி 6 சதவிகிதம் என்பது அதிகம் மட்டுமின்றி, ஆட்சியில் உள்ள அதிபர் 50 சதவிகித மக்கள் ஆதரவு பெற்றிருப்பது, ஆச்சர்யமான ஒரு திருப்பம். 

நீண்ட நாள் தேடலுக்குப் பின் அதிரடி ஆபரேஷனில் பின்லேடனைக் கொன்றது, பல நூற்றுக்கணக்கான வங்கிகள் திவாலானதால் ஏற்பட்ட சிக்கலைச் சரி செய்தது, சிட்டி பாங்க் போர்ட் போன்ற நிறுவனங்களை அரசு பணத்தில் காப்பாற்றி வேலை வாய்ப்பைப் பெருக்கியதால் அமெரிக்க மக்கள் கிளிண்டன், புஷ்ஷுக்குத் தந்தது போல ஒபாமாவுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தருவார்களா? அல்லது ‘அவர் தந்த ஒரே மாற்றம் ஏமாற்றம்தான்’ என்று ரோம்னி சொல்வதை ஏற்று அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப் போகிறார்களா? தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. இன்னும் பல கருத்துக் கணிப்புகள் நடக்க இருக்கும் நிலையில், உலகின் எல்லா ஜனநாயக நாட்டின் தேர்தல்களைப் போல இதிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

Monday, May 07, 2012

நீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்?


நீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்? மனித நாகரிகம் நதிக்கரையில்தான் உருவாகி, பிறந்து, வளர்ந்து வந்திருக்கிறது. ஆற்றில் விலங்குகள் நீந்துவதைப் பார்த்து, மனிதஇனம் நீந்த கற்றுக்கொண்டிருக்க வேண்டும். சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குகை ஓவியங்களில் நீச்சல் பற்றிய பதிவு காணப்படுகிறது. ஆனால் எழுத்து மூலமான பதிவு சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்புதான் கிடைத்திருக்கிறது. பாபிலோனியர், ஆசியர்களின் சுவரோவியங்களில் மனிதனின் தொடக்ககால நீச்சல் திறமையைத் தெரிவிக்கும் படங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பழைமையானது ஒருகாலத்தில் நீர்வளம் நிறைந்த கெபீர் பாலைவன நீச்சல் படம். உலகின் பழங்கால நாகரிக நாடுகளான எகிப்து, போனிசியா, பெர்சியா, ரோம், கிரேக்க நாட்டு மக்கள் நீச்சலில் சிறந்து இருந்தனர். நீச்சல் சரியாகத் தெரியாதவருக்கு, கல்வி கிடையாது என்று தத்துவமேதை பிளாட்டோ அறிவித்திருக்கிறார். 1603 ல் ஜப்பானில் முதல் தேசிய நீச்சல் அமைப்பு உருவானது. அப்போதைய பேரரசர் கோயோசெல், பள்ளிக் குழந்தைகள் கட்டாயம் நீச்சல் பழக வேண்டும் என்றார். பிரெஞ்சு எழுத்தாளர் மேல்சிசெடேக் தேவ்நாட் 1696-ல், நீச்சல் கலை பற்றி எழுதினார். பின்னர் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதுவே நீண்ட காலம் வரைநீச்சல் சொல்லித் தரும் புத்தகமாக இருந்தது. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பத்து வயதிலேயே நீந்துவதற்கு உதவியாக, காலில் மாட்டிக்கொள்ளும் துடுப்பை உருவாக்கி, பெரும் புகழ்பெற்றார். பின்னர் நீச்சலில் மூழ்குபவர்களைக் காக்கும் ஓர் அமைப்பு சீனாவில் உருவானது. 1847, ஸ்டாக்ஹோமில் நான்சி எட்பெர்க் என்ற பெண் போதனையாளர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீச்சல் கற்றுத்தந்தார். பின்னர் டென்மார்க், நார்வேயில் பெண்களுக்குத் தனியாக நீச்சல் கற்றுத்தரும் வழக்கம் ஏற்பட்டது. 1862-ல் உள்அரங்க நீச்சல் குளம் இங்கிலாந்தில் கட்டப்பட்டது. பக்கவாட்டில் நீந்தும் முறை 1880க்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஏதென்ஸில் 1896-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் ஆண்களுக்கான போட்டியாகச் சேர்க்கப்பட்டது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஆல்பிரெட் ஹாஜோஸ் 100 மீ. ஃப்ரீ ஸ்டைலில் தங்கப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக்கில் 1912க்குப் பின்னரே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஒலிம்பிக் விளையாட்டில், நீச்சல் போட்டி மிகவும் பிரபலமானது. நீச்சல் இன்றைய அத்தியா வசிய உடற்பயிற்சிகளில் ஒன்றாகிவிட்டது. 

1908-ல் உலக நீச்சல் அமைப்பு, சர்வதேச நீச்சல் கழகத்தை உருவாக்கியது. 1922-ல் ஜானி வீஸ்முல்லர் முதன் முதலில் 100 மீ. தூரத்தை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் நீந்தி சாதனை படைத்தார். 1924-ல் கோடை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டு, அதில் நீச்சலும் சேர்க்கப்பட்டது. குப்புறப்படுத்து, மார்பை நகர்த்தி அடிக்கும் நீச்சல் முறைதான் மிகவும் பழைமையானது  நீச்சல் இன்று குளியல், மீன்பிடித் தல், பொழுதுபோக்கு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுகிறது. முத்துக் குளித்தல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களுக்கு நீச்சல் கட்டாயம் தேவை. கடற்படையில் மனிதர்களைக் காப்பாற்ற உயிர்காக்கும் நீச்சல் படை இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்கள் பற்றிப் படிக்க, அவற்றின் இயற்கை நிலையிலேயே அறிய, நீச்சல் தெரிய வேண்டும். ராணுவத்துக்கும் கட்டாயம் நீச்சல் தெரியவேண்டும். சிலசமயம் சில இடங்களைக் கண்டறியவும், ஒற்றராக இருக்கவும் நீச்சல் கட்டாயம் தேவை. நீச்சலில் சில அறிவியல் அடிப்படைகளும் உள்ளன. முக்கியமாக மிதத்தல் விதி போன்ற இயற்பியல் விதிகள் நீச்சலில் உள்ளன. மனித உடலில் 70%க்கு மேல் நீர் உள்ளது. நமது உடலின் அடர்த்தி கிட்டதட்ட நீரின் அடர்த்தியுடன் ஒட்டியது. நம் நுரையீரலில் உள்ள காற்றாலும், அதன் அமைப்பாலும், நீரைவிட அடர்த்தி குறைவாகத் தோன்றுகிறது. எனவேதான் நாம் நீரில் மிதக்க முடிகிறது. வேகமாக நீந்த, இரண்டு வழி முறைகளைப் கைகொள்ளவேண்டும்.1. தன் ஆற்றலை அதிகரித்தல் 2. நீரின் தடையைத் தாக்குப்பிடித்து மிதத்தல். கடல், ஏரி, குளம் போன்ற பொதுவான திறந்த இடத்தில் நீந்துவதும், அதற்கான போட்டிகளும் இப்போது வந்து விட்டன. கடலில் 25 கி.மீ. தூரம் வரை கூட பெண்களும் ஆண்களும் நீந்துகின்றனர். ஆனால் ஒலிம்பிக்கில் 10 கி.மீ தொலைவு மட்டுமே அனுமதி. நீச்சல் போட்டிகளில் நான்கு வகை நீச்சல் முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, நீருக்கடியில் நீந்தும் டால்பின் உதைத்தல் முறை வந்துள்ளது. இது தொடக்கத்தில் நீந்தும் வேகம் அதிகரிக்க உதவுகிறது. நீச்சலுக்கு அடிப்படை வேகமும் உடற்திறனும்தான். நீச்சல் உடலுக்கு ஓர் அற்புதமான பயிற்சி. இதற்கு இணையான பயிற்சி வேறு எதுவுமே இல்லை. நீச்சலின்போது உடலின் அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைந்து பணிபுரிகின்றன. வளர்சிதை மாற்றத்தை நன்கு இயக்குகிறது. முக்கியமாக இதயத்துக்கும், நுரையீரலுக்கும், ரத்த ஓட்டத்துக்கும் அதிகம் உதவுகிறது. ஒருமணி நேர நீச்சல், நம் உடலில் 650 கலோரியை எரிக்கிறது. நடத்தல், சைக்கிள் ஓட்டுதலை விட கலோரி அதிகம் செலவாகிறது. நீச்சல் ஒருவரின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

பென்னாயிட் லேகொம்ட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் 5,600 கி.மீ தூரம், ஒருநாளைக்கு 7 - 8 மணி நேரம் என , 72 நாள்கள் தொடர்ந்து நீந்தினார்.  

முதல் கப்பல் நீச்சல் குளம் டைட்டானிக் கப்பலில்தான் கட்டப்பட்டது. 

குழந்தைகள் 4 வயதுக்கு முன் தனியாக நீந்த முடியாது.  

கனடாவிலும் மெக்சிகோவிலும் பொதுப்பள்ளிகளில் நீச்சல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளில் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பிலிருந்து கட்டாயம் நீச்சல் கற்கவேண்டும்.

இங்கிலாந்துக்கும் பிரான்ஸ்க்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை 18 வயது இளம்பெண் நீந்தி, கடந்து சாதனை படைத்துள்ளார்.

Sunday, May 06, 2012

உங்க பாஸ்வேர்டு ஸ்ட்ராங்கா? - ஆன்லைன் செக்யூரிட்டி


இன்றைய தேதியில் ஆன்லைன் மூலம் பல வேலைகளைச் சுலபமாகச் செய்வது அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி இ.பி. பில் கட்டுவது முதல் ரயில் டிக்கெட், செல்போன் வாங்குவது வரை எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடிகிறது. ஆனாலும், ஆன்லைன் வசதியை பயன்படுத்த பலரும் தயங்கவே செய்கிறார்கள். காரணம், நம் அக்கவுன்ட் களவு போய்விடுமோ என்கிற அச்சம்தான்.

நம்மில் பெரும்பாலோர் ஆன்லைன் பாஸ்வேர்டு அமைத்துக் கொள்ளும்போது 123456 அல்லது abcde அல்லது நம் பெயர் என்கிற ரீதியிலேயே அமைத்துக் கொள்கிறோம். இதனால் நம் பாஸ்வேர்டுகளை எளிதில் உடைத்து, நம் ஆன்லைன் அக்கவுன்டுக்குள் புகுந்து, பணத்தைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் 'நெட்’ கொள்ளையர்கள். பலவீனமான பாஸ்வேர்டுகள் மோசடிக்கான கதவை எளிதில் திறந்துவிடுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி சேனல் வெரிசன் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், 'சுலபமாக ஊகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை வைத்திருப்பதே ஆன்லைன் மோசடி பிரச்னைக்கு மூல காரணம் என்கிறது.''பாஸ்வேர்டு என்பது நினைவில் நிற்பதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.நம்மவர்கள் நினைவில் நிற்பது போல் சுலபமான பாஸ்வேர்டை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அது பாதுகாப்பானதாக இல்லை என்பதே பெரிய குறைபாடு.ஆன்லைன் செக்யூரிட்டியை பலப்படுத்த என்ன செய்யலாம் என செக்யூரிட்டி ஆராய்ச்சி யாளர்கள் மூளையைப் போட்டு குழப்பியதன் விளைவு, நம் பாஸ்வேர்டு வலிமையாக இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.வலிமையான பாஸ்வேர்டு என்றால்..? ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எழுத்துக் கள் மற்றும் எண் களாக இருப்பதுதான் வலிமை யான பாஸ்வேர்டு. இந்த பாஸ்வேர்ட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால், எந்த கொம்பனாலும் உங்கள் பாஸ்வேர்ட்டை உடைக்க முடியாது'' என்கிறார்கள் அவர்கள்.

எக்ஸ்கியூஸ்மீ, உங்களின் பாஸ்வேர்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல்போன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.தமிழகத்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ஐடியா, ரிலையன்ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன.செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக்கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோமிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப பிளானை தேர்வு செய்வதுதான் லாபகரமாக இருக்கும்.


மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதி 52.63% பேருக்கு தெரிந்திருந்தாலும், கடந்த ஓராண்டில் வெறும் 3.97% பேர் மட்டுமே நிறுவனத்தை மாற்றி இருக்கிறார்கள். இப்படி மாறியவர்கள் விண்ணப்பித்த அன்றே 14.33% பேருக்கும், அடுத்த நாளில் 33.43% பேருக்கும், 3 முதல் 5 நாட்களில் 31.61% பேருக்கும், 6 முதல் 9 நாட்களில் 12.62% பேருக்கும், 9 நாட்களுக்கு மேல் 8.02% பேருக்கும் இந்த சேவை தரப்பட்டு இருக்கிறது. செல்போன் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிப்பதில் ஐடியா நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த ஆய்வு போஸ்ட் பெய்ட் சந்தாதாரர்கள் இடையே நடத்தப்பட்டது. இதில், குறிப்பிட்ட கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படுவதாக 27.41% பேர் கருத்து சொன்னார்கள். தகவல் எதுவும் கொடுக்காமல் கட்டணத்தை மாற்றி விடுவதாக 21.87% பேர் கருத்து சொன்னார்கள். மதிப்பு கூட்டு சேவையை கேட்காமலே சேர்த்து கட்டணமும் கழிக்கப் படுவது நடப்பதாக 25.46% பேர் சொன்னார்கள். பயன்படுத்தாத போன் அழைப்பு மற்றும் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக 25.26% பேர் சொல்லியிருக்கிறார்கள்.  செல்போனை குறைவாகப் பயன்படுத்தும் ஒருவர் தினசரி பத்து முறை போன் செய்கிறார். அதேபோல், அவருக்கு 10 அழைப்பாவது வருகிறது. இது நடுத்தரமாக பேசுபவர்களிடம் 20-20 ஆகவும், அதிகமாக பயன்படுத்துபவர்களிடம் 30-30 ஆகவும் இருக்கிறது. பி.எஸ்.என்எல். தவிர அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களிலும் மாநிலத் துக்கு மாநிலம் கட்டணம் வேறுபாட்டுடன் காணப்படுகிறது.செல்போன் பேச 95 சதவிகிதமும், எஸ்.எம்.எஸ். அனுப்ப 5% மட்டுமே பயன் படுத்தப்படுவதாகச் சொன்னது ஆச்சரியமான தகவல்தான்!

விகடன்  

Saturday, May 05, 2012

என்ன செய்யப் போகிறார் சச்சின்?


சச்சின் தெண்டுல்கர் தலைமுறையில் வாழ்கிறோம் என்கிற பூரிப்பு இல்லாத கிரிக்கெட் ரசிகனே இருக்கமுடியாது. ஆனால், அந்த கிரிக்கெட் ரசிகன்தான் இப்போது குழம்பிப் போயிருக்கிறான். சச்சின், ராஜ்யசபா எம்.பி.யாகியிருப்பது தகுதிக் குறைவாய, கௌரவமாய என்று கேட்கிறான் ரசிகன். சச்சின் அரசியல்வாதியாகி விட்டாரா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா என்கிற குழப்பத்துக்கும் விடையில்லை. அலங்காரப் பதவிக்கு மற்றவர்கள் ஆசைப்படலாம். சச்சினுமா? சச்சினின் இந்த முடிவில் எனக்குச் சம்மதமில்லை என்று இணையதள சர்வே-களில் தம் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள் ரசிகர்கள். நிச்சயம், சச்சின் தம் ரசிகர்களிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்.அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின் படி, 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும். கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ராஜ்யசபாவுக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள் (இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்). சச்சின் 100வது செஞ்சுரியை அடித்து முடித்த இந்நேரத்தில், அவருக்கு ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. தெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்காத மத்திய அரசு, ராஜ்யசபா எம்.பி. பதவியை அளித்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இதற்கு சச்சின் ஒப்புக்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சமீபத்தில் இந்திய விமானப்படை கௌரவ குரூப் கேப்டன் பதவி, சச்சினுக்கு வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது" என்று மகிழ்ந்தார் சச்சின். எனில், எம்.பி. பதவியைப் பெற்றுக் கொண்டது என்ன காரணத்துக்காக? தமது 100வது செஞ்சுரியை அடித்து முடித்தபிறகு, என் வாழ்க்கையில் இனி சாதிக்க ஒன்று மில்லை," என்று பேட்டியளித்தார் சச்சின். எனில், இந்தப் பதவியை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்? 


கலையுலகப் பிரமுகர்கள் சிலர் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்துள்ளார்கள். ராஜ்ய சபாவில், பிரபலங்களுக்குப் பதவி தருவதற்குக் காரணம், அவர்களுடைய துறை சார்ந்த அறிவு, மக்களவை விவாதங்களுக்குப் பயன்படும் என்பதால்தான். ஆனால், இது காலப்போக்கில் ஒரு சடங்காகவும், அர்த்தமற்றதாகவும் ஆகிப்போனதுதான் வருத்தத்துக்குரியது. 1999ல் நியமன எம்.பி.யான பாடகி லதா மங்கேஷ்கர், மாநிலங்களவையில் ஒரு விவாதத்தில்கூட உருப்படியாகக் கலந்துகொள்ளவில்லை. அவைக்கு தொடர்ந்து விடுப்பு எடுத்த காரணத்தால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். எனக்குத் தினமும் ரெக்கார்டிங் இருந்தது.அதனால்தான் விவாதங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னால் வெளிப்படையாக என் கருத்துகளைச் சொல்ல முடியாது. எனக்குப் பாட மட்டும்தான் தெரியும். ராஜ்யசபாவில் நான் என்ன செய்ய முடியும்?" என்று தம் மீதான விமர்சனங்களுக்கு இப்படியெல்லாம் பதிலளித்தார் கானக்குயில். லதா மங்கேஷ்கரால் திரைத்துறைக்கு அவமானம்" என்றார் ஷபானா ஆஸ்மி. ராஜ்யசபாவுக்கு நியமன உறுப்பினர்கள் அவசியமாய் என்கிற விவாதம் லதா மங்கேஷ்கரால் ஏற்பட்டது. இந்த நிலையில் சச்சினின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது?  கிரிக்கெட்டுக்கு வெளியே பல சர்ச்சைகளை உருவாக்கியவர், சச்சின். 2002ல், டான் பிராட்மேனின் 29 சதத்தின் சாதனையை சச்சின் சமன் செய்தபோது, அவருடைய சாதனையைப் பாராட்டி ஃபெராரி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஃபியட் கார் நிறுவனம், சச்சினுக்கு ஃபெராரி காரைப் பரிசளித்தது. அந்தக் காரின் விலை Rs.75 லட்சம். காரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு சச்சின் வரிவிலக்கு (Rs.1.13 கோடி) கோரினார். இதையடுத்து சச்சினுக்காக சட்டத்திருத்தம் கொண்டுவந்து, வரிவிலக்கு அளித்தது மத்திய அரசு. இதனால் சர்ச்சை உருவாகி, நீதிமன்றம்வரை சென்றபிறகுதான், நிலைமையை சுமுகமாக்க, வரித் தொகையைச் செலுத்தியது ஃபியட் நிறுவனம். இன்னொரு முறை, விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு கோருவதற்காக (Rs.2 கோடி), தான் ஒரு நடிகர் என்று அறிவித்தார் சச்சின். இதனால் அவருக்கு அன்னியச் செலாவணியில் விலக்கு அளிக்கப்பட்டது. சமீபத்தில், குடியேற்றச் சான்றிதழ் பெறாமல் மும்பையிலுள்ள தம் சொகுசு வீட்டுக்குக் குடியேறியதற்காக சச்சினுக்கு Rs.4.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கிரிக்கெட் மூலம் இந்தியாவுக்கும், மும்பைக்கும் பெருமை சேர்த்ததால் சச்சினுக்கு இந்த விவகாரத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு மகாராஷ்டிர மாநில அரசு கோரிக்கை விடுத்தது. சச்சினுக்கு எம்.பி. பதவியளித்த காங்கிரஸ் கட்சிக்கு, இச்செயலுக்குப் பின்னால் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவே எண்ண முடிகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலர், சச்சினை எம்.பி.யாக்கியிருப்பது காங்கிரஸின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தல் என்கிறார்கள். தெண்டுல்கர், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்வோம்," என்கிறார் வடக்கு மும்பையின் காங்கிரஸ் எம்.பி. சஞ்ச நிருபம். தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாலும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளாலும் கட்சிக்குள்ள செல்வாக்கு குறைவதை ஈடுகட்டவே சச்சினை எம்.பி.யாக்கியிருக்கிறது காங்கிரஸ். பிரச்னைகளைத் திசை திருப்பும் விதமாகவே சச்சினுக்கு எம்.பி. பதவி என்கிற குற்றச்சாட்டை எளிதில் ஒதுக்கமுடியாது. குஜராத் படுகொலைகளால் நாடு முழுக்க பி.ஜே.பி.க்கு எதிரான அலை வீசியபோது அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்ததன் மூலமாக அரசு மதபாகுபாடு எதுவும் காண்பிக்கவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு, தம்மீதான கறைகளைப் போக்க முயற்சி செய்தது பி.ஜே.பி. பி.ஜே.பி.க்கு கலாம்; காங்கிரஸுக்கு சச்சின். ஆனால், நான் ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு அரசியல் தெரியும். அரசியல் வாதிகளை எப்படிக் கையாள்வது என்பதும் தெரியும்," என்று அப்போது பதிலளித்தார் கலாம். சச்சினுக்கு எந்தவோர் அரசியல் அனுபவமும் கிடையாது. சச்சின் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகப் புகழப்பட்டாலும் ஐ.பி.எல். வரை அவருடைய தலைமைப் பண்பு சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. தெண்டுல்கர் இயற்கையிலேயே அமைதியானவர். கிரிக்கெட் தொடர்பான பிரச்னைகளில்கூட வெளிப்படையாக தம் கருத்துகளை வெளிப்படுத்தியது கிடையாது. 

சச்சினுக்கு முன்பு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலிப் திர்கே, ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவர், நாட்டில், பல பள்ளிகள் அடிப்படைக் கட்டமைப்புகள்கூட இல்லாமல் இருக்கின்றன. அவற்றுக்கு எதிராகவும் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன்," என்று ஒரு எம்.பி. யாக தம் திட்டங்களை அறிவித்துள்ளார். விளையாட்டு மசோதா விஷயத்தில் பி.சி. சி.ஐ.க்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமுகமான உறவு கிடையாது. இதுபோன்ற விளையாட்டுத்துறை பிரச்னைகளைக் களைய சச்சின் முயற்சி எடுப்பார் என்று நம்பலாமா? மெக்ராத், வாசிம் அக்ரம், வார்னே போன்ற பௌலர்களின் சவாலான பந்துவீச்சுகளை எளிதாக எதிர்கொண்ட சச்சினுக்கு அரசியல் என்ன மாதிரியான பௌன்சர்களை வீசப்போகிறது?

ச.ந.கண்ணன்

எனது இந்தியா! (இரண்டு அடிமைகள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
இந்திய வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர். இருவரின் வாழ்வும் எழுச்சியும் வரலாற்றின் பக்கங்களில் தனித்துப் பேசப்படுகின்றன. ஒருவர்... அடிமை வம்சத்தை இந்தியாவில் ஆட்சி புரியச் செய்த சுல்தான் குத்புதீன் ஐபக். இன்னொருவர்... தமிழகம் வரை பெரும் படை நடத்தி வந்து இந்தியாவைச் சூறையாடிக் கதிகலங்க வைத்த மாலிக் கபூர். இருவருமே விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்தான். தங்களது எஜமானனின் விருப்பத்துக்கு உரியவராகி மெள்ள மெள்ள அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தவர்கள். வாழ்வின் விசித்திரம் ஒரு மனிதனை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு அடையாளம் போலவே இருவரின் வரலாறும் விளங்குகிறது.டெல்லியில் உள்ள குதுப்மினார், சுல்தான் குத்புதின் ஐபக்கை நினைவுபடுத்தும் அழியாத நினைவுச்சின்னம். இந்தியாவின் மிக உயரமான இந்த மினார், 237 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்டது. இதனுள் 379 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாம் மினாரைப் போல ஒன்றை டெல்லியில் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குத்புதீன் ஐபக், இதை 1193-ம் ஆண்டில் கட்டத் தொடங்கினார். அவர் காலத்தில் இந்த மினாரின் முதல் தளம் மட்டுமே கட்டப்பட்டது. இதை முழுமையாகக் கட்டி முடித்தவர் ஐபக்கின் மருமகன் இல்ட்டுமிஷ்.
 
மினார் என்பது தொழுகைக்கு அழைக்கும் கோபுரம். 'ஹசரத் குவாஜா குத்புதீன் பக்கியார் காகி’ என்ற சூபி ஞானியின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த மினார், சிவப்புக் கற்களால் ஆனது. இதன் சுற்றுச்சுவரில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இஸ்லாமியக் கட்டடக் கலையின் உன்னதமாகக் கொண்டாடப்படும் குதுப்மினாரைக் கட்டுவதற்காக, 27 இந்து மற்றும் ஜைனக் கோயில்களை இடித்து அந்தக் கற்களைக்கொண்டே குதுப்மினார் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவது போலவே குதுப்மினார் வளாகத்தினுள் விஷ்ணு ஸ்தம்பம் எனப்படும் இந்தியாவின் மிகப் பெரிய இரும்புத் தூண் இருக்கிறது.துருப்பிடிக்காத இந்த இரும்புத் தூண், குப்த சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில் அமைக்கப்பட்டது. இதை அமைத்தவர் முதலாவது அனங்கபால்என்றும், இது ராய் பிதோரா என்ற கோயிலில் இருந்தது என்றும் தெரிய வருகிறது. இது, கிரீட உச்சியில் இருந்து கீழ்மட்டம் வரை 23 அடி எட்டு அங்குலம் கொண்டது. இதில், 22 அடி தரைமட்டத்துக்கு மேற்பகுதியிலும், எஞ்சிய ஒரு அடி 8 அங்குலம் தரைமட்டத்துக்கு அடியிலும் இருக்கிறது. இந்தத் தூண் ஆறு டன் எடை கொண்டது. தூணின் கீழ்க்குறுக்களவு 16.4 அங்குலம். மேல்குறுக்களவு 12.5 அங்குலமாக இருந்து ஓர் அடி உயரத்துக்கு 0.29 அங்குலம் குறைந்துபோய்க் காணப்படுகிறது. மணி போன்ற வடிவம்கொண்ட இதன் சிகரம் 3.5 அடி உயரம்கொண்டது. இரும்புத் தூணின் மீது ஒரு விஷ்ணு சிலை இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தத் தூணில் காணப்படும் எழுத்துக்கள், அலகாபாத்தில் உள்ள சமுத்திர குப்தனின் கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளைப் போன்றே  இருக்கின்றன. இந்தத் தூணில், சமஸ்கிருதம் மற்றும் பிராமியில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த நெடுதுயர்ந்த தூண், திருமாலின் கொடிக் கம்பம். விஷ்ணு மீது பக்திகொண்ட அரசன் சந்திராவால், விஷ்ணு பாதம் எனும் மலை உச்சியில் நிறுவப்பட்டது என்ற வரிகள் இந்தத் தூணில் எழுதப்பட்டு உள்ளது. பொதுவாக, கோயில் கொடிக் கம்பங்களுக்கு கருங்கல் அல்லது மரமே பயன்படுத்தப்படும். மாறாக, ஓர் உலோகத்தை அதுவும் இரும்பைப் பயன்படுத்தி இருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. அத்துடன், இறைவனுக்கு உருவாக்கப்பட்ட கம்பத்தில் மன்னரைப் பற்றி புகழுரைகள் பொறிப்பதும் மிகவும் அரிது. ஆகவே, இந்தத் தூணில் உள்ள வெட்டெழுத்துகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறு எவராலோ எழுதப்பட்டு இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 
 
இந்திய எஃகு செய்யும் முறையின் தொன்மை வியக்கத்தக்கது. ''எந்தக் கருவிகளைக்கொண்டு எகிப்தியர்கள் தங்களது நினைவுக் கம்பங்களையும், கற்கோயில்களில் வெட்டுச் சித்திர எழுத்துகளால் நிரப்பினார்களோ, அவை இந்திய எஃக்கால் ஆனவை. இந்தியர்களைத் தவிர வேறு எந்தத் தேசமும் எஃகு செய்யும் கலையில் இவ்வளவு தேர்ச்சி பெறவில்லை. இரும்பை, இந்தியாவில் இருந்தே எகிப்தியர்கள் இறக்குமதி செய்திருக்க வேண்டும். அல்லது இந்திய உலோகத் தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்துச் சென்று அவர்கள் உதவியால்தான் பெரிய நினைவுச்சின்னங்களை எழுப்பத் தேவையான கருவிகளை உருவாக்கி இருக்க வேண்டும்'' என்று கூறுகிறார் வரலாற்று அறிஞர் ராபர்ட் ஹாட்பீல்டு.விஷ்ணுவைப் போற்றும் இரும்புத் தூணை, ஏன் ஐபக் அதே இடத்தில் அப்படியே விட்டுவைத்தார் என்பதைப்பற்றி நிறையக் கதைகள் உலவுகின்றன. இரும்புத் தூணை பூமியில் இருந்து அகற்றுபவரின் ஆட்சி முடிந்துபோய்விடும். தூணை ஒருபோதும் பூமியில் இருந்து பெயர்த்து எடுக்க முடியாது. அதை, யாராவது அகற்ற முயன்றால், அவர் எதிர்பாராத மரணத்தைச் சந்திப்பார் என்ற நம்பிக்கைகள் இருந்து இருக்கின்றன. குத்புதீன் ஐபக் அதை நம்பி இருக்கக்கூடும்.டெல்லியில் அடிமை வம்சத்தை நிலைபெறச் செய்த குத்புதீன் ஐபக், துருக்கிய வம்சா வழியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர், சிறு வயதிலேயே அடிமையாக விற்கப்பட்டவர். இவரை விலைக்கு வாங்கிய நிஷா பூரின் குவாஷி, குத்புதீன் ஐபக்கை தனது சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்தார். குதிரை ஏற்றம், வாள் பயிற்சி மற்றும் வில் பயிற்சிகள் அளித்தார். அதோடு, அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளிலும் தேர்ச்சி பெறச் செய்தார்.அப்போது, கஜினியின் ஆட்சியாளராக இருந்த கோரி முகமது, விலை கொடுத்து குத்புதீன் ஐபக்கை வாங்கி, தனது அடிமைகளில் ஒருவராக்கிக்கொண்டார். கோரி முகமதுவின் பாதுகாவல் பணிக்கும், அரண்மனைக் காவலுக்கும் நிறைய அடிமைகள் இருந்தனர். அவர்களில் ஒருவராக தனது வாழ்வைத் தொடங்கிய ஐபக், தனது தீர்க்கமான வீரத்தால் கோரிக்கு நெருக்கம் ஆனார். படைப் பிரிவு அதிகாரியாகப் பதவிபெற்று அதில் இருந்து கோரியின் வலது கை போன்ற முக்கியத் தளபதியாக உயர்ந்தார்.
 
இந்துஸ்தானைப் பிடிக்க வேண்டும் என்பதில் கோரி முகமதுவுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. 1192-ம் ஆண்டு, அதற்காகப் படை நடத்தி வந்தபோது, பிரித்விராஜ் சௌகானால் தோற்கடிக்கப்பட்டார். அந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத கோரி முகமது, தனது படைத் தளபதிகள் அத்தனை பேரையும் ஒரே இடத்துக்கு வரச்செய்து அவர்களின் கைகளைப் பின்னால் கட்டி, குதிரைகளைப் போல வாயால் உணவைக் கவ்விச் சாப்பிடட்டும் என்ற குரூரமான தண்டனை விதித்தார். அது, அவரது போர் வீரர்களை உக்கிரமான போராளிகளாக மாற்றியது.1193-ம் ஆண்டு டெல்லியைப் பிடிப்பதற்காக கோரி முகமது அனுப்பிய படைக்குத் தலைமை ஏற்ற குத்புதீன் ஐபக், தனது ஆவேசமான தாக்குதலால் டெல்லியைக் கைப்பற்றினார். அந்த வெற்றிக்குப் பரிசாக, ஐபக் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.  உடனே, தனது எல்லையற்ற அதிகாரத்தின் புற வடிவம் போல, குதுப்மினார் கட்டும் வேலையைத் தொடங்கினார். இதற்காக, பெர்ஷியா மற்றும் ஆப்கன் ஆகிய இடங்களில் இருந்து திறமை வாய்ந்த கட்டடக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் அழைத்து வரப்பட்டனர்.  மினார் என்ற வடிவம் இந்தியக் கட்டக் கலைக்குப் புதியது. ஆகவே, பிரம்மாண்டமான மினார் அமைப்பதன் மூலம், தனது வெற்றியை உலகம் என்றென்றும் நினைவுவைத்து இருக்கும் என்று குத்புதீன் ஐபக் நம்பினார். கோரி முகமதுவுக்கு வாரிசுகள் கிடையாது. எனவே, அவரது மரணத்துக்குப் பிறகு, அவரது ஆளுகையில் இருந்த நிலப் பரப்பை அவரது தளபதிகள் நான்காகப் பிரித்துக்கொண்டனர். கஜினி பகுதியை தாஜ்வுதீன் யேல்டோல்ஸ், பெங்கால் பகுதியை முகம்மது கில்ஜி, முல்தானை நசுருதீன் குபாஷா, டெல்லியை குத்புதீன் ஐபக் ஆகியோர் ஆள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.1206-ம் ஆண்டில், குத்புதீன் ஐபக் டெல்லியின் முதல் சுல்தானாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதில் இருந்துதான் அடிமை வம்சம் டெல்லியை ஆளத் தொடங்கியது. டெல்லி நகரை உருமாற்றியதில் குத்புதீன் ஐபக் முக்கியமானவர். கோட்டைகள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்து நகரை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதோடு, நிர்வாக முறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.குத்புதீன் ஐபக், கோரி முகமதுவைப் போல குரூரமானவர் இல்லை என்று சொல்லும் வரலாற்று ஆய்வாளர்கள், ''அவர் அடிமையாக இருந்த காரணத்தால் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார். தனது மகள் திருமணம் நடைபெற்ற அதே நாளில் தானும் ஓர் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசைநாயகிகள் இருந்தனர்'' என்று கூறுகின்றனர். கஜினியின் ஆளுநராக இருந்த தாஜ்வுதீன் யேல்டோல்ஸ், டெல்லியில் தனக்கும் உரிமை உள்ளது என்று கூறி, அதைக் கைப்பற்ற முயற்சித்தார். அதை அறிந்த ஐபக், இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போரை விட எளிய தீர்வு இருக்கிறது என்று, தாஜ்வுதீனின் மகளைத் தானே திருமணம் செய்துகொண்டுவிட்டார். ஐபக் காலத்தில், டெல்லியின் முக்கியப் பிரச்னையாக இருந்தது வழிப்பறிக் கொள்ளை. அதை முற்றிலும் ஒடுக்கியதோடு, சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வணிகச் சந்தைகளையும் முறைப்படுத்தி இருக்கிறார்.
 
டெல்லியின் சுல்தானாக நான்கே ஆண்டுகள் ஆட்சி செய்த குத்புதீன் ஐபக், லாகூரில் குதிரையில் சென்றபடியே ஆடும் போலா விளையாட்டின்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து இறந்துபோனார். அவருக்குப் பின், அவரது மகன் ஆராம்ஷா, டெல்லியின் சுல்தானாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் ஆட்சி செய்யத் தகுதியற்றவர் என்று கருதிய குத்புதீன் ஐபக்கின் மருமகன் இல்ட்டுமிஷ், அவரைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியில் அமர்ந்தார். இவரும், குத்புதீன் ஐபக்கால் அடிமையாக விலைக்கு வாங்கப்பட்டவரே.குத்புதின் ஐபக்கைப் போலவே, இல்ட்டுமிஷ§ம் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டவர். அவரை முதலில் விலைக்கு வாங்கியவர் புகாராவில் வசித்த ஜாமாலுதீன் என்ற குதிரை வணிகர். இல்ட்டுமிஷ் சிறந்த போர் வீரனாகவும் மதிநுட்பம் கொண்டவராகவும் இருப்பதை அறிந்து, அவரை அதிக விலை கொடுத்து வாங்கினார் ஐபக். தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மகளை அவருக்குத் திருமணம் செய்துவைத்து உறவை ஏற்படுத்திக்கொண்டார்.இல்ட்டுமிஷ் காலத்தில்தான் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். அதை, சாதுர்யமாக சமாளித்த இல்ட்டுமிஷ், உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்கியதோடு, பிரிந்துகிடந்த நிலப்​பகுதிகளைத் தன்வசமாக்கி ஒருமித்த ஆட்சியாக வலுப்​படுத்தினார். துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தானும் இவரே.
 

விகடன் 

இன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..

 
'இன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது’ என்று, அறிவிக்கப்​பட்டால், உடனே வண்டியின் பெட்​ரோல் டேங்கை நிரப்ப வரிசையில் காத்தி​ருந்த அனுபவம் இருக்கிறதா? இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம், இனி, அடிக்கடி நிற்கத்​தான் போகிறீர்கள். இன்றைய நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 7.67 இழப்பைச் சந்திக்கின்றன. ஒரு நாளைக்கு ஆகும் இழப்பு மட்டும் சுமார் 48 கோடி. இதன் காரணமாக, பெட்ரோல் விலையை உயர்த்தி தரச்சொல்லி மத்திய அரசை வற்புறுத்தி வருகிறது.முக்கியமான எந்தத் தேர்தலும் இல்லாத சூழ்நிலையிலும்கூட, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வுக்கு இன்னும் அனுமதி கொடுக்காதது, ஆச்சர்யம்தான். ஆனால், நீண்ட நாட்களுக்கு நிலை இப்படியே நீடிக்காது. காரணம், குரூட் ஆயிலைச் சுற்றி நடக்கும் லாபி. ஏனென்றால், உலக அரசியலின் போக்கையே மாற்றும் தன்மை குரூட் ஆயிலுக்கு உண்டு.கடந்த பிப்ரவரி மாத ஆரம்பத்​தில் ஒரு பேரல் குரூட் ஆயிலின் விலை 96 டாலர். இப்போது 105 டாலருக்கும் மேலாக உயர்ந்து விட்டது. அடுத்த உயர்வு எப்போது என்பது தெரியவில்லை.அமெரிக்காவுக்கு ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகம். அந்த நாட்டின் வருமானத்தைக் குறைக்க நினைக்கும் அமெரிக்கா, 'ஈரானில் இருந்து எந்த நாடும் குரூட் ஆயிலை வாங்கக் கூடாது’ என்று தடை விதிக்கிறது. இந்தத் தடை, வரும் ஜூன் மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இதன் காரணமாகவே, குரூட் ஆயில் விலை உயர்ந்து உள்ளது. ஈரானில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. ஈரானுடைய ஏற்றுமதியில் 16 சதவிகிதம் இந்தியாவுக்கு வருகிறது. இந்தியத் தேவையில் 12 சதவிகிதத்தை ஈரான் பூர்த்தி செய்கிறது. (இதைவிட அதிகமாக சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம்).
 
மார்ச் இறுதியில் நடந்த பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) நாடுகளின் சந்திப்பில், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'ஈரான் மீதான நடவடிக்கையால், குரூட் ஆயில் விலை உயரும். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிப்பு அடையும்’ என்று பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள்.ஆனால் ஒபாமா, 'உலகச் சந்தையில் போதுமான அளவுக்கு குரூட் ஆயில் இருக்கிறது. ஈரானைத் தவிர வேறு நாடுகளில் இருக்கும் குரூட் ஆயிலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என்கிறார்.'ஈரான் மீதான தடை நியாயம் இல்லாதது’ என்று இந்தியா சொல்லிக்கொண்டு இருந்தாலும், மறைமுகமாக இறக்குமதியை குறைக்கச் சொல்லி இருக்கிறது. எம்.ஆர்.பி.எல். மற்றும் எஸ்ஸார் ஆயில் நிறுவனங்கள்தான் ஈரானில் இருந்து அதிகமான குரூட் ஆயிலை இறக்குமதி செய்கின்றன. இதை உறுதிசெய்யும் விதமாக, ஈரானில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு வெனிசுலா, ஃபிரேசில், மெக்ஸியோ மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்போவதாக எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்து இருக்கிறார்.அணு ஆயுதம் மட்டும்தான் அமெரிக்காவுக்கு பிரச்னையா?''இதுவரை குரூட் ஆயிலை இறக்குமதி செய்துவந்த அமெரிக்கா, இப்போது ஏற்றுமதி​யாளராக மாறி இருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவை குறைந்து இருப்பதுடன், உள்நாட்டு உற்பத்தியும் கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. 1949-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஏற்றுமதியாளராக அமெரிக்கா மாறி இருக்கிறது.அமெரிக்கா இப்போது ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதால், குரூட் ஆயில் விலையைக் குறைய விட மாட்டார்கள். உண்மையில் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும்போதுதான், தேவை அதிகமாகி குரூட் ஆயில் விலை அதிகரிக்கும். இப்போது இந்தியா, சீனா தவிர பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. சில நாடுகளில் மைனஸாகவும் வளர்ச்சி இருக்கும் சூழ்நிலையிலும் குரூட் ஆயில் விலை உயருகிறது என்றால், அதற்கு அமெரிக்காவின் லாபிதான் காரணம்'' என்று சொல்கிறார்கள் பொருளாதாரப் புள்ளிகள்.
 
ஒரு மனிதனை நிலைகுலைய வைக்க வேண்டும் என்றால் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் போதும், அதை நிரூபிக்கத் தேவை இல்லை’ என்பார்கள். அதேபோல, ஈரான் மீது அணுஆயுதம் என்ற ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை அமெரிக்கா வீசி இருக்கிறது. இதன் விளைவுகள் நம் நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கும்போது, நீங்களும் எந்த இரவிலும் பெட்ரோல் பங்க் வாசலில் காத்திருக்க நேரிடலாம்!

விகடன் 

துப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி

தீபாவளிக்கு வெடிக்க இருக்கிறது இளைய தளபதியின் துப்பாக்கி. 
* ‘துப்பாக்கி’ படத்தை முதலில் தயாரிக்க இருந்த நிறுவனம் ஜெமினிதானாம். ஆனால், கலைப்புலி தாணு,விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் ‘சக்கரக்கட்டி’, ‘கந்தசாமி’... என்று தாம் தயாரித்த படங்களால் அதிகமான நஷ்டம். விஜய் கால்ஷீட் கிடைத்தால் மீண்டு வந்துவிடுவேன் என்று கேட்டுக் கொண்டதால் படம் கைமாறி உள்ளதாம். தவிர, கைமாற்றிவிட்டதற்காக எஸ்.ஏ.சி.க்கு லாபம் தானாம்!
* இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சம்பளமாக, தயாரிப்பாளர் தாணு பத்து விரலைக் காட்ட, இயக்குனர் தரப்பு இரண்டு விரலைக் கூடுதலாகக் காட்ட ஊடலில் ஊசலாட்டம் நடந்திருக்கிறது. பிறகு இருவரின் கையையும் இணைத்து பன்னிரண்டுக்கு ஓகே சொல்ல வைத்தது இளைய தளபதி தரப்புதானாம்.  

* ‘கஜினி’யில் முதலில் நடிக்க இருந்தது இளையதளபதி. மொட்டை போட மறுத்ததால் சூர்யாவுக்குப் போனது வாய்ப்பு. ஆனால், துப்பாக்கியில் விஜய், ஹேர் ஸ்டைலை மாற்றி மாற்றி நடிக்க சம்மதித்துள்ளார்.
* தென் தமிழகத்தின் அருவி சம்பந்தப்பட்ட ஓர் ஊரில் ஃப்ளாஷ்பேக் கதையும் மும்பையில் முழுகதையும் முடிகிறதாம். ‘பாட்ஷா’ பட ஸ்டைலில் ஃப்ளாஷ்பேக் விறுவிறு சுறுசுறுன்னு இருக்குமாம்.
* ‘நண்பன்’ படத்தின் மூலம் விஜயின் பிரிக்க முடியாத நண்பனாகிவிட்ட சத்யனுக்கு, துப்பாக்கியில் நல்ல வாய்ப்பாம். துப்பாக்கிக்குத் தோட்டா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாம் சத்யனின் காமெடி. கதையோடு இணைந்த காமெடியாம்.
* அசின்தான் ஏ.ஆர்.முருகதாஸின் ஹீரோயின் சாஸாம். ஆனால், விஜதான் மஹதிரா புகழ் காஜல்அகர்வாலை டிக் செய்தாராம். தெலுங்கில் படம் மாட்லாடும் போது காஜல் இருந்தால் படத்துக்கு ரீச் கிடைக்கும் என்பது இளைய தளபதியின் கணிப்பு.
* ‘துப்பாக்கி’, தீபாவளிக்கு வெளியாகும் போது களத்தில் இருப்பது சூர்யாவின் ‘மாற்றான்’. ‘ஏழாம் அறிவு’ ‘வேலாயுதம்’ போட்டியில் வேலாயுதம் கொஞ்சம் முந்தியதால் இப்போதைய போட்டியைக் கண்டுகொள்ள வேண்டாம் என்பது எஸ்.ஏ.சி. அட்வைஸாம்.
* மும்பை தொடங்கி சென்னை, ஹாங்காங், தென் மாவட்டம், பாண்டிச்சேரி என பல இடங்களிலும் ஷூட்டிங் நடக்க உள்ளது. பாடல் காட்சிக்காக விஜய்யும் காஜலும் பிரேசில் செல்ல இருக்கிறார்கள். அங்கு இரண்டு பாடல்கள் படமாக்கப்பட உள்ளன. ஹாரிஸ் இசையில் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘பேசினா துப்பாக்கி, வெடிச்சா பீரங்கி’ என்ற ஓப்பனிங் சாங்கில் ஒரு பீரங்கி வெடிக்கும் வேகமும் சக்தியும் இருக்குமாம்.
* ‘போக்கிரி’ அசின் போல், ‘வேலாயுதம்’ ஹன்சிகா போல், ‘துப்பாக்கி’யில் காஜல் மாடலிங் மற்றும் கல்லூரிப் பெண்ணாக வருகிறார். காஜல் அகர்வால் காமெடியிலும் கூட்டுக் குடும்பத்திலும் பிறந்த பெண்ணாகவும் மிரள வைக்கப் போகிறார்.
* கலைப்புலி தாணு தான், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டியவர். அதுபோல துப்பாக்கி விளம்பரம் மூலம் விஜய்க்கு புதிய பட்டம் தர யோசித்து வருகிறாராம்.  

* இதுவரை 90 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ளது. இரண்டு ஷெட்யூல் முடிந்ததை விஜய்க்கு, இயக்குனர் ஏ.ஆர். போட்டுக் காண்பிக்க, படம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வந்துள்ளதால் விஜய் ஏ.ஆர்.முருகதாஸைக் கட்டிப் பிடித்துக் கொண்டாராம். 
* என்ன நாடு; ஏன் இப்படி எல்லாம் என்று மனம் வெதும்பிப் போகும் இளைஞர்கள் இருப்பார்கள். என்ன நடந்தால் நமக்கென்ன என பலரும் பேசாமல் போய் விடுவார்கள். ஆனால், நமது நாட்டில் தப்பு நடந்தால் நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும் என அநியாயம் பண்ணுகிறவனை துவம்சம் பண்ணுகிற ராணுவத் தளபதி வேடத்தில் இளையதளபதி வருகிறாராம்.
* ‘நண்பன்’ படத்தை 10 கோடி கொடுத்து வாங்கிய விஜய் டி.வி. இப்படத்தையும் வாங்க போட்டி போட, சன் டி.வி.யும் களத்தில் குதிக்க, வேந்தரும் களத்திலும் குதிக்க, ஜி. தமிழும் 10 கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர்.  

* பாதி எம்.ஜி.ஆர்; பாதி ரஜினி... என இப்போதே விஜயே வெட்கப்படும் அளவுக்குப் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறார் கலைப்புலி தாணு.

Friday, May 04, 2012

தண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி


‘மூன்றாவது உலக யுத்தம் வெடித் தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான்’ என்று பல வருடங்களாக உலகெங்கும் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். மனித வரலாற்றில் பல நாகரிகச் சமூகங்கள் அடியோடு அழிந்ததற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.ஏற்கெனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள், மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை விட பிரம்மாண்டமானவை. எனவே ஆறு, குளம், ஏரிகளை மாசுபடுத்தாமல் காப்பது, மணற் கொள்ளையை நிறுத்துவது, மழைநீர் சேகரிப்பு, கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது, இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தைக் கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.இந்த வாரம் வந்துள்ள செய்திகளின்படி சென்னை நகரின் பல பகுதிகளில் - மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொளத்தூர், மகாகவி பாரதி நகர், புளியந்தோப்பு, அண்ணாநகர், தியாகராயநகர், விருகம்பாக்கம், கருணாநிதிநகர், சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, தரமணி - சென்ற ஏப்ரலில் இருந்த அளவை விட இந்த வருட ஏப்ரலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பாசனத்துக்கான நீர் அளவு சிக்கலாகிக் கொண்டே வருகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை, கூடங்குளம் அணுஉலைக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குமரி மாவட்டத்தில் விவசாயமும் குடிநீரும் கடுமையாகப் பாதிக்கப்படும்.நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 386 வட்டங்களில் (பிளாக்குகளில்), 139 வட்டங்களில் ஏற்கெனவே அளவுக்கு மேல் உறிஞ்சியாகிவிட்டது. அடுத்து 33 வட்டங்கள் வற்றிப் போகும் ஆபத்தான நிலையில் உள்ளன. இன்னொரு 67 வட்டங்கள் முக்கால் ஆபத்தில் இருக்கின்றன. இன்னொரு 11 வட்டங்களில் தண்ணீர் எதற்கும் தரமற்றது. மொத்தத்தில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் நிலத்தடிநீர் சிக்கல்தான். இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசின் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தண்ணீர் மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் எனினும் மத்திய அரசு அறிவிக்கும் கொள்கை அடிப்படையில் தான் மாநிலங்கள் தங்கள் கொள்கை பிரகடனங்களையும் சட்டங்களையும் உருவாக்குகின்றன.கடைசியாக மத்திய அரசு தண்ணீர் கொள்கையை வெளியிட்டு 25 வருடமாகிறது (1987)! அதன் அடிப்படையில் தன் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு ஏழு வருடம் தேவைப்பட்டது (1994). 

மத்திய அரசு இப்போது அறிவித்திருக்கும் தண்ணீர் கொள்கையின் பல அம்சங்களுக்கு பல விவசாயிகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. முக்கியமான காரணம் தண்ணீரை, தனியார் எடுத்து விற்கக்கூடிய ஒரு பொருளாக மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதுதான்.இதுவரையிலும் இந்தியாவில் தண்ணீர் என்பது அது இருக்கும் நிலத்தின் 13052012ந் தக்காரரின் உரிமைப் பொருளாகும். இந்த உரிமையைக் கடைசியாக கேரளத்தில் பிளச்சிமாடா மக்களுக்கும் கோகோ கோலா கம்பெனிக்கும் இடையே நடந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையின்படி இனி எல்லா தண்ணீரும் பொதுச் 13052012 சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதமுள்ள தண்ணீரை விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருத மத்திய அரசின் கொள்கை அறிவிப்பு வகை செய்கிறது. மக்களுக்கு குடிநீர், பாசனநீர் விநியோகிக்கும் வேலைகளை அரசுப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது இன்னொரு கொள்கை அறிவிப்பாகும். மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து அவர்கள் அதற்கான சந்தை விலையை நிர்ணயிக்க விடுவதைப் போல, தண்ணீரிலும் செய்வதே மத்திய அரசின் நோக்கம். இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக உலக வங்கி இந்திய அரசுக்குச் 13052012ல்லி வருகிறது. அதைத்தான் இப்போது அரசு தன் கொள்கை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.எல்லா தண்ணீரையும் பொதுச்13052012 சொத்து என்று அறிவித்து அதில் ஒரு பகுதியை மட்டும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கு ஒதுக்கிவிட்டு, அதையும் மீதியையும் விற்கவும் விநியோகிக்கவும் தனியார் அமைப்பிடம் அளிப்பதற்கு என்ன அர்த்தம்? நந்திகிராம், சிங்கூர் போன்ற இடங்களில் மக்களின் நிலங்களை அரசு குறைந்த விலையில் கையகப்படுத்தி அவற்றை பெருமுதலாளிகள் தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் தருவது போலவே, தண்ணீரிலும் அரசு செய்ய விரும்புகிறது. மின்சாரம், தண்ணீர் எல்லாம் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும், பொதுமக்களுக்கு அதிக விலையிலும், அப்படி அதிக விலையில் மக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் வாப்பையும் அந்த கம்பெனிகளுக்கே ஏற்படுத்தித் தருவதுதான் உலக வங்கியின் நோக்கம். அதற்கு இசைவாகவே மன்மோகன் அரசு கொள்கை பிரகடனங்களைச் செய்கிறது.தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருடையது - அரசுடையதா, விநியோகிக்கும் தனியாருடையதா என்பது நிச்சயம் சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும் தொழிற்சாலைகள் கிராமப்பகுதிகளில் பெரும் அளவில் நீரைப் பயன்படுத்தினால் அதனால் பாதிக்கப்படும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுமா? நிர்ணயிக்கும் பொறுப்பே தனியார் நிறுவனத்தின் கையில் சென்றால் அது குடிநீர் விலையை சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு ஏற்றிவிடாதா?விவசாயத்தையே எடுத்துக் கொண்டால் மிக அதிகமாக தண்ணீர் செலவாகக்கூடிய பயிர்கள் நெல், கோதுமை. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் மொத்த உணவு விளைச்சல் நடக்கும் நிலத்தில் 57 சதவிகித நிலத்தில் அரிசியும் கோதுமையும்தான் பயிர்கள். இவற்றுக்கான நீர் கட்டணம் ஒன்றாகவும் கம்பு, ராகி போன்ற நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கான நீர் கட்டணம் வேறாகவும் நிர்ணயிக்கப்படுமா? விவசாயமே பெருமளவில் நசிந்துவரும் நிலையில் இந்தக் கட்டணங்கள் சாத்தியம்தானா?

நீர் விநியோகத்தையும் நிர்வாகத்தையும் அரசுகளிடமிருந்து எடுத்து, தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் நீர் பயன்படுத்துவோர் அமைப்புகளை ஏற்படுத்தி அவையும் தனியார் கம்பெனிகளும் சேர்ந்து விநியோக நிர்வாகத்தைக் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று கொள்கை பிரகடனம் 13052012 சொல்கிறது. இதில் பல சாதக பாதகங்கள் இருக்கின்றன. விவசாயத்தில் பாசன நீர் பயன்படுத்துவோர் யார் என்பது ஆயக்கட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் குடிநீர் என்று வரும்போது உபயோகிப்போர் அமைப்பு என்பதை எப்படி உருவாக்குவது? குடிநீர் பெறும் மக்கள் வசிக்கும் கிராமத்தின் பஞ்சாயத்திடமா? அல்லது பால் 13052012சைட்டிகள் மாதிரி ஊழலுக்கு வாகான இன்னொரு போட்டி அமைப்பாகவா?  தமிழ்நாட்டில் மாநில அரசு ஏற்கெனவே பாசனத்துறையில் நீர் உபயோகிப்போர் அமைப்புகளை ஏற்படுத்திவிட்டது. இருபது மாவட்டங்களில் 1566 பயன்படுத்துவோர் சங்கங்களும், 161 விநியோக கமிட்டிகளும், 9 திட்டக் குழுக்களும் 2004ல் உருவாக்கப்பட்டுவிட்டன. ஐந்து வருடம் கழித்து 2009ல் இவற்றுக்கு அடுத்த தேர்தலும் நடத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு எதுவும் இன்னும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.நிலத்தடி நீர் நிர்வாகம், கட்டுப்பாட்டுக்காக தமிழகத்தில் 2003லேயே ஒரு தனிச்சட்டம் போடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப்போது மத்திய அரசு தண்ணீர் கொள்கையை அறிவித்ததையடுத்து தானும் தன் கொள்கையைத் தயாரித்துவருவதாக தமிழக அரசு 13052012ல்லியிருக்கிறது. ஆனால் 2012-13க்காக வெளியிடப்பட்ட பாலிசி நோட் என்பது 1994ன் கொள்கை அடிப்படையிலேயே உள்ளது. மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கை நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட வேண்டியதாகும். அப்படி விவாதித்து கருத்துகளைத் தெரிவிக்க நிச்சயம் ஒரு மாதம் போதாது.ஆனால், மத்திய அரசு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொள்கையை அறிவித்துவிட்டு அது தொடர்பான கருத்துகளை மக்களும் மாநில அரசுகளும் தெரிவிக்க, கடைசி நாள் பிப்ரவரி 29 என்று 13052012ல்லிவிட்டது. எதற்கெடுத்தாலும் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா இன்னும் இதற்கு எந்தக் கடிதமும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய இந்த விஷயத்தை விவாதிக்க ஏற்பாடு செய்யவேண்டிய அரசியல் கட்சிகள் எல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. நுகர்வோர் அமைப்புகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று பலரும் கூடிப் பேச வேண்டிய விஷயம் யாரும் கவனிப்பாரில்லாமல் அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டுவிடும் ஆபத்துதான் நடக்கிறது.சட்டமன்றம் முதல் டி.வி சேனல்வரை உருப்படாத விஷயங்களே நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரச்னையையும் அது யாரோ இன்னொருவருடையது என்று பார்க்கும் பார்வை நம் சமூகத்தில் அதிகமாகிவிட்டது. அணுஉலை பிரச்னையை தமிழகத்தின் பிரச்னையாகப் பார்க்காமல் அது இடிந்தகரை மீனவர்கள் மட்டுமே கவலைப்படுகிற விஷயமாகத் தவறாகப் பார்க்கப்பட்டது. தண்ணீரையும் அப்படி கருதினால் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செத்துப் போவோம். 

இந்த வாரக் கேள்விகள்:

1.கலைஞர் கருணாநிதிக்கு:

நீங்களே கொன்ற டெசோவுக்கு, நீங்களே இப்போது உயிர் கொடுத்து எழுப்பி, தனி ஈழத்துக்கான மக்கள் வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்திருக்கிறீர்களே? ஏன் இந்தக் கோரிக்கையைக் கடந்த 29 வருடங்களில் சுமார் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் ஒரு முறை கூட முன்வைக்கவில்லை? பிரபாகரனையும் இலங்கை அரசையும் போரை நிறுத்திவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தும்படி அப்போதே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை ? 

2.அப்துல் கலாமுக்கும் நாராயணசாமிக்கும்:

சுனாமி வந்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சொன்னீர்களே, அப்படியானால் ஏன், இப்போது இந்தோனேஷிய பூமி அதிர்ச்சியால் சுனாமி எச்சரிக்கை வந்த உடனே கூடங்குளம் அணு உலையில் வேலை செய்து கொண்டிருந்த அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களை மட்டும் அவசர அவசரமாக பஸ்களில் ஏற்றி ‘பாதுகாப்பான’ இடத்துக்கு அனுப்பினார்கள்? ஏன் அங்கே சுற்றி வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தவில்லை? 

3.ஜெயலலிதாவுக்கு:

சித்திரைத் திருநாள் உழவர் விழாக்களுக்கு வந்தவர்களுக்கு போட்ட விருந்தின் மெனுவில் காட்டிய அக்கறையை என்றாவது பள்ளிக்கூட சத்துணவு மெனுவில் காட்டியிருக்கிறீர்களா? ஏராளமான ஊர்களில் சரி பாதி முட்டைகளை பொது மார்க்கெட்டுக்கு விற்றுவிட்டுக் குழந்தைகளை ஏமாற்றும் வேலையில் சில முட்டை காண்ட்ராக்டர்களும் உங்கள் கட்சிக்காரர்களும் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா?

நானும் நீயும் ஒண்ணு!

ஸ்ரீ இராமபிரானுடன், சீதையும் லட்சுமணனும், பிரவாக மெடுத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல, குகனின் ஓடத்தில் ஏற முற்பட்டனர்.அப்போது, குகனானவன் இராம பிரானிடம், பிரபோ, நீங்கள் உங்கள் கால்களைப் புழுதி இல்லாமல் சுத்தமாகக் கழுவிக் கொண்டு ஏறுங்கள்" என்றான்.எதற்காக இப்படிக் கூறுகிறாய்?" என்று லட்சுமணன் கேட்க, எம்பெருமானின் பாதத்துளிகள் பட்டவுடன், கல் ஒன்று அகலிகையாக மாறியதே. அதைப் போல இந்த ஓடமும் ஒரு பெண்ணாகி விட்டால், நான் இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு எப்படி ஜீவனம் நடத்துவேன்?" என்றானாம் விசனத்துடன்.படகோட்டியின் பதிலைக் கேட்டு வியந்த இராமபிரான், அக்கரை போய்ச் சேர்ந்தவுடன் சீதாதேவியின் மோதிரம் ஒன்றைப் பரிசாகத் தர, குகன் அதை மறுத்து, ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியிடம் கூலி வாங்கக் கூடாது" என்றானாம்.குகனின் பதில் யாருக்கும் புரியவில்லை.

நான் எப்படி கங்கைக் கரையில் காத்து நிற்கும் மக்களை ஓடத்தில் ஏற்றி அக்கரையில் சேர்க்கிறேனோ, அதுபோல, இராமபிரானும் சம்சாரபந்தம் என்ற சமுத்திரத்தில் அவரது பாத கமலங்களைக் கொண்டு, மக்களை மோட்சம் என்ற கரையில் சேர்த்திடும் ஓடக்காரன் தானே?" என்றான் குகன், சிரித்துக்கொண்டே.

Thursday, May 03, 2012

அழியாத ரங்கோலி!

தேவையான பொருள்கள்:


ப்ளைவுட்- விருப்பமான திலகம், மாங்காய் போன்ற வடிவம் ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக இருப்பது நல்லது

(மரம் வெட்டித் தரும் கடையில் தேவைப்பட்ட டிஸைனில் வெட்டி வாங்கிக் கொள்ளவும்).

பிரஷ், ஃபேப்ரிக் கலர், மஞ்சள், சிவப்பு, 3 டி கோன் லைனர் - வெள்ளை, பச்சை நிறம் வட்ட வடிவமான, சிறிய பெரிய கண்ணாடித் துண்டுகள், பசை.

டூ வே ஸ்டிக்கர் - வேண்டுமெனில்
அகல் விளக்கு (அ) வீட்டில் இருக்கும் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

செய்முறை விளக்கம்:


* விருப்பமான வடிவத்தில் ப்ளைவுட், அல்லது கார்ட்போர்டு வெட்டிக் கொள்ளவும்.

* அதன் ஓரங்களில் மஞ்சள் கலர் கொடுத்து பார்டர் கட்டவும் (படம்-1)

* நடுவில் சிவப்புநிற ஃபேப்ரிக் கலர் கொடுக்கவும். (படம் 2)

* அரைமணி நேரம் பெயிண்ட் காய்ந்தவுடன் வெள்ளை 3டி கோன் லைனரால் அதன் மேல் நெளி கோலம் போடுவது மாதிரி வரையவும். (படம் 3)

* பிறகு பச்சை 3டி கோன் லைனரால் படத்தில் காட்டியபடி மேலும் அழகுபடுத்தி ஆங்காங்கே சிறிய, பெரிய கண்ணாடிக் கற்களை வெள்ளைப் பசை கொண்டு ஒட்டவும்.

* இதே மாதிரி ஆறு, எட்டு என்ற எண்ணிக்கையில் ஒரே டிஸைனில் நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் தயார் செய்து ஒரு மணி நேரம் காயவைத்து எடுத்தால் என்றும் அழியாத ரங்கோலி தயார் (படம் 5)

நடுவே விளக்கு வைத்து வழிபடலாம்.

அதன் பின்புறம் (வேண்டுமெனில்) டபுள்வே ஸ்டிக்கரை ஒட்டி, தரையில் நிரந்தரமாக ஒட்டி வழிபடலாம்.

அல்லது விசேஷ நாட்களில் தரையில் ரங்கோலி மாதிரி அடுக்கி, விளக்கேற்றி வழிபட்டு உள்ளே எடுத்து வைத்து விடலாம்.

‘வுட்’டில் வர்ணம் அடிப்பதற்கு முன் ‘வுட் ப்ரைமர்’ அடித்துக் காயவிட்டுப் பிறகு கலர் அடிக்கலாம்.

சுதா 
 

 

வண்ணத்துப் பூச்சிகள்


ஓர் அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரை வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.

மணிக்கு 12 மைல்வேகத்தில் பறக்கக்கூடியவை.

24,000 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருக்கின்றன.

கம்பளிப்புழு பருவத்தில் எலும்புகள் கிடையாது. ஆயிரம் தசைகள் மூலம் வேகமாக நகர்ந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்று விடுகிறது.

தேனீக்களுக்கு அடுத்தபடியாக வண்ணத்துப் பூச்சிகள் தான் மகரந்த சேர்க்கைக்குப் பெரிதும் உதவுகின்றன.

மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளால் தொடர்ந்து 1000 கி.மீ. தூரம் பறக்க முடியும்.
சுவை உணர்வுகள் பாதங்களில் இருக்கின்றன.

Wednesday, May 02, 2012

குக்கர் - இயங்குவது எப்படி?


இப்ப நாம் பார்க்கப்போறது, உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற்றி. ரொம்ப எளிமையான, அதேசமயம் ரொம்ப ரொம்ப உபயோகமான பாத்திரம் இது.பிரஷர் குக்கரின் வேலை அரிசி, பருப்பு, காய்கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும். அதுக்காக நீராவியை, அதாவது வாயு வடிவத்தில் இருக்கிற தண்ணீரைப் பயன்படுத்துகிறது குக்கர்.உணவுப் பொருள்களை வேகவைக்கிறதுக்கு நமக்கு குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத்தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும். ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் குக்கர் இருக்கிறது. ஏன்?இதுக்கு இரண்டு காரணம். முதலில் மற்ற பாத்திரங்களைவிட குக்கர் ரொம்ப வேகமாகச் செயல்படுகிறது, இதனால்சமைக்கிறவர்களுக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது.அடுத்த காரணம், குக்கரில் சமையல் செய்யும்போது நாம் அதுக்குப் பயன்படுத்துகிற எரிபொருளும் குறைவு. சமையல் சிக்கனமாக முடிந்துவிடுகிறது.குக்கர் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். குக்கரின் பாகங்களைக் கவனிக்கலாம். ஒரு பெரிய பாத்திரம், அதுக்குள்ளே சில சின்னப் பாத்திரங்கள், மேலே ஒரு மூடி, அதுக்கு ஒரு கைப்பிடி, அதன் தலையில் ஒரு ‘வெயிட்’, அப்புறம் ‘காஸ் கட்’ என்று சொல்லப்படுகிற ரப்பர் வளையம்.

இந்தப் பெரிய பாத்திரத்தில்தான் நாம் தண்ணீர் ஊற்றப் போகிறோம். அந்தத் தண்ணீர்தான் சூடாகி, நீராவியாக மாறுகிறது. உள்ளே சின்னப் பாத்திரங்களில் வைத்திருக்கிற அரிசி, பருப்பு, காய்கறி, இட்லியைச் சூடாக்கிச் சமைக்கிறது.சில குக்கர்களில் இந்தப் பாத்திரத்தின் கீழ்ப் பகுதியில் மட்டும் வேறு உலோகம் ஒன்றைப் பூசியிருப்பார்கள். ‘காப்பர் பாட்டம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, பாத்திரத்துக்குள்ளே நெருப்பு சீராகப் பரவுவதற்கு இது உதவி செய்கிறது.அடுத்து, அந்த மூடியைக் கவனித்துப் பாருங்கள், அதோட விளிம்புகள் அந்தப் பெரிய பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிற மாதிரி வடிவமைத்திருப்பார்கள். அதில் ரப்பர் வளையத்தைப் போட்டு மூடுவார்கள்.மூடிதான் ஏற்கெனவே கச்சிதமாகப் பொருந்துகிறதே, அப்புறம் எதுக்கு ரப்பர் வளையம்?என்னதான் மூடியைக் கச்சிதமாகத் தயாரித்தாலும், அழுத்தி மூடினாலும், அதில் ஆங்காங்கே சின்ன இடைவெளிகள் இருக்கும். குக்கருக்கு உள்ளே இருக்கிற தண்ணீர் சூடாகி, நீராவியாக மாறும்போது வெளியே வந்துவிடும். அதைத் தடுக்கிறதுக்குத்தான் ரப்பர் வளையம். அது இந்த இடைவெளியைக் கச்சிதமாக அடைத்துவிடும். வழக்கமான பாத்திரங்களுக்கும் குக்கருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது. மற்ற பாத்திரங்களில் தண்ணீர் சூடாகும்போது அது மெல்ல ஆவியாகி வெளியேறிவிடும், உணவுப் பொருள்கள் வேக அதிக நேரமாகும். ஆனால் குக்கரில், நீராவி உள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது. அதனால் அங்கே இருக்கிற உணவுப் பொருள்கள் வேகமாகச் சூடேறுகின்றன, சுலபமாக வேகின்றன.அடுத்து, இப்படி ஒரு பாத்திரத்துக்குள்ளே நீராவி உருவாகி அங்கேயே அடைபட்டுக் கிடக்கிறதால், அதோட அழுத்தம் அதிகரிக்கும், அதனால் தண்ணீரின் கொதிநிலையும் அதிகரிக்கும். இதுவும் உணவுப் பொருள்கள் வேகமாக வேக ஒரு முக்கியமான காரணம். ‘பிரஷர்’ குக்கர் என்ற பெயருக்குக் காரணம் புரிகிறதா?

ஒரு ‘வெயிட்’ இருக்கே, அது எதுக்கு?

பிரஷர் குக்கரில் மற்ற எல்லாப் பாகங்களையும்விட மிக முக்கியமானது, இந்த ‘வெயிட்’தான். அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பேசுவோம்.குக்கருக்குள்ளே தண்ணீர் ஆவியாகிறது, ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்கிறதால் அதோட அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது என்று பார்த்தோம். ஒரு கட்டத்தில் குக்கர் பாத்திரத்தால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது. அது அப்படியே வெடித்துச் சிதறிவிடும்.இதைத் தவிர்க்கிறதுக்குதான், ‘வெயிட்’ என்ற கனமான இரும்புக் குண்டைக் குக்கரின் மூடியில் பொருத்துகிறார்கள். குக்கருக்குள்ளே அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிப் போய்விடாமல் இது பார்த்துக்கொள்கிறது.குக்கர் மூடியில் ஒரு சின்ன ஓட்டை போட்டு, அதில் குழாய் ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கேதான் ‘வெயிட்’டைப் போடுகிறோம், அதாவது, அந்தச் சின்ன ஓட்டையை மூடிவிடுகிறோம். இதனால், குக்கர் முழுமையாக மூடப்படுகிறது.அதுக்கப்புறம் அடுப்பைப் பற்ற வைக்கிறோம், அதன் மேல் குக்கரை வைக்கிறோம், இந்தச் சூட்டினால் அந்த குக்கருக்குள்ளே இருக்கிற தண்ணீர் ஆவியாகும். நீராவி உருவாகும். அதோட அழுத்தம் அதிகரிக்கும். அந்த நீராவி இந்தச் சின்ன ஓட்டை வழியாக வெளியே வரப்பார்க்கும், ஆனால் ‘வெயிட்’ அதை வெளியே வரவிடாது.கொஞ்ச நேரத்தில் குக்கருக்குள்ளே அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்க,நீராவிக்கு கூடுதல் பலம் வந்துவிடும். இந்த வெயிட்டை மேலே தள்ளிட்டு வெளியேறும். இதைத்தான் ‘விசில்’ என்கிறோம்.இப்படிக் கொஞ்சம் நீராவி வெளியே போனதும், குக்கருக்குள்ளே அழுத்தம் குறையும், உடனே சட்டென்று வெயிட் கீழே விழுந்து, ஓட்டையை மூடிவிடும். மறுபடி குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும், மறுபடி வெயிட் மேலே போய் விசில் அடிக்கும், மறுபடி கீழே விழும், இப்படி மாறி மாறி நான்கைந்து விசில்சத்தம் கேட்டதும் சமையல் முடிந்தது என்று கணக்கு.இப்போது புரிகிறதா, ‘வெயிட்’ மட்டும் இல்லை என்றால், பிரஷர் குக்கர் வெறும் காலிடப்பா. அதைப் பயனுள்ள சமையல் பாத்திரமாக மாற்றுவது இந்தச் சின்ன இரும்புக் குண்டுதான்!

சமையல் முடிந்தது. குக்கரைத் திறக்கலாமா?

கொஞ்சம் பொறுங்கள். குக்கருக்குள்ளே ஏகப்பட்ட நீராவி அடைந்து கிடக்கிறது. அதெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும், வெயிட்டைத் திறந்து அழுத்தத்தைக் குறைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் திறக்க வேண்டும். இல்லை என்றால் அத்தனை நீராவியும் ‘என்னை ஏன் அடைச்சுவெச்சீங்க?’ என்று நம் மேல் பாய்ந்துவிடும்.

கல்யாணமாம் கல்யாணம்!


மாங்கல்யம் தந்துநானே..." என்று மந்திரம் சொல்லி தாலிகட்டி, ஸப்தபதிகள் எடுத்து வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்னியில் பொரியிட்டு முடியும் பாரம்பரியத் திருமணங்கள் நமக்கு நன்கு அறிமுகமானவைதான். ஆனால் அதைத் தவிர வேறு வகையான திருமண முறைகளும் இருக்கின்றன.

தமிழ்வழி திருமணம்:

ஈ.வெ.ரா. பெரியார், வைதீகர்கள் மற்றும் சடங்குகள் இல்லாமல் சுயமரியாதை திருமணங்களை அறிமுகப்படுத்திய போது மறைமலை அடிகள் ‘பன்னிரு திருமுறை மற்றும் திவ்யப் பிரபந்தம் சொல்லி திருமணம் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்" என்கிறார் திராவிட இயக்க ஆராய்ச்சியாளர் க.திருநாவுக்கரசு. தமிழ்வழித் திருமணங்களைப் பிரபலப்படுத்தியதில் ஆட்சிமொழிக் காவலர் கி.ராமலிங்கனாருக்குப் பெரிய பங்கு உண்டு. தர்மபுரம், திருவாவடுதுறை ஆதினங்களில் தமிழ்வழித் திருமணத்தை நடத்தி வைக்க தீட்சை கொடுக்கிறார்கள். நமது பாரம்பரிய திருமண முறைகளில் உள்ள எல்லா சடங்குகளுக்கும் தேவாரம் மற்றும் பிரபந்தத்தில் பொருந்தி வரும் பாடல்கள் உண்டு. தாலி கட்டியவுடனேயே மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் பாடப்படும். சங்க இலக்கியமான அகநானூரில் புரோகிதர் வைத்தும், வைக்காமலும், இரண்டுவித திருமணங்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது" என்கிறார் திருநாவுக்கரசு. இதுதவிர முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் நடத்தி வைத்த தமிழ்வழித் திருமணங்கள் மிகவும் பிரபலமானவை.

காவல் நிலைய டும்...டும்...

‘இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்’ என்று அடிக்கடி செய்தி தாள்களில் நாம் படிப்பதுண்டு. காவல் நிலையங்களில் கல்யாணம் செய்து வைக்கிறார்களா? என்ன நடக்கிறது என்றால், காதலித்து விட்டு டிமிக்கி கொடுக்கும் காதலனோ அல்லது காதலியோ, இருவரில் ஒருவர் காவல் நிலையத்துக்குப் புகாருடன் வந்தால் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விவகாரத்தை சுமுகமாக முடிப்போம். அதேபோல் காதல் ஜோடிகளுக்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டவுடன், ஓடிப்போகும் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு எங்களிடம் வருவார்கள். நாங்கள் எல்லோரையும் அழைத்துப் பேசித் தீர்ப்போம். பிரச்னை தீர்ந்த சந்தோஷத்தில் ஜோடிகள் மாலை மாற்றி தாலி கட்டிக் கொள்வார்கள். திருமணம் சட்டபூர்வமாக இது மட்டும் போதாது. எனவே உடனே திருமணத்தை பதிவு செய்ய வலியுறுத்துவோம். பதிவுச் சான்றிதழை காவல் நிலையத்தில் கொடுத்தால் மட்டுமே, இது தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்"  .

ஆரிய சமாஜ் திருமணம்:

ஆர்ய சமாஜ் நடத்தி வைக்கும் திருமணங்கள் வித்தியாசமானவை. மதம் மாறி இந்து சமயத்தில் இணைபவர்களுக்கும் ஆர்ய சமாஜ் திருமணங்கள் நடத்தி வைக்கிறது. அக்னி வளர்த்து வேதங்கள் சொல்லி நடத்தப்படுகிற இந்தத் திருமணங்கள் அதிகபட்சம் அரை மணியில் முடிந்து விடும். 

தாலி கட்டிக் கொள்ளாமல் ராகு காலத்தில் நடத்தப்படும் பெரியார் பாணி சுயமரியாதைத் திருமணங்களும் நடக்கின்றன. ஆனால் எந்த முறையில் திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்தை முறைப்படி திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 

சீக்கிரமேவ விவாஹ ப்ராப்தி ரஸ்து."

ஈஷா திருமணம்:

ஈஷா நிறுவனர் ஸத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் கோவை வெள்ளியங்கிரிதியான லிங்க வளாகத்தில் தேவி லிங்க பைரவி திருக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சாதி, மதம், பாகுபாடுகள் இல்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. 

இன்று காலப்போக்கில் நமது திருமணச் சடங்குகள் அர்த்தமற்றவையோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் உண்மையில் அர்த்தமுள்ள சடங்குகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஸத்குருவால் லிங்க பைரவி திருக்கோயிலில் அறிமுகப்படுத்தப்பட்டிருகிறது. 

ப்ரியன் 


  

ஜகம் நீ... அகம் நீ..! - 6


'அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்...'' - மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்.

''குண்டு-ன்னு ஒரு பையன்... 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே... அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, 'இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு... அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ... சட்டுனு போங்கோ!' என்றார் பெரியவா. அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!'' என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்...''பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...'' என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.''மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா... ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.சரி... பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்... 'தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா... கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!

எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, 'சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க.  பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!'' என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.''அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். 'என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். 'யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்... சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!''- பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம். நம்முடைய இந்த சிலிர்ப்பை அதிகப்படுத்தியது, சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன் விவரித்த விஷயங்கள்...

'தேனம்பாக்கத்தின் விசேஷம் பெரியவாளை ரொம்பவே கவர்ந்ததுன்னு சொல்லணும். இங்கிருந்தபடியே பல கோயில்களுக்கும் சென்று தரிசனம் பண்ணியிருக்கார். அந்தத் தலங்களிலும் சில நாட்கள் தங்கியது உண்டு'' என ஆரம்பித்த வைத்தியநாதன், பேசியபடியே நம்மை வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே....

விகடன் 

Tuesday, May 01, 2012

எனது இந்தியா! (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு !) - எஸ். ராமகிருஷ்ணன்....


குர்தாஸ்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசித்தபோதும், நகரின் முக்கிய வணிகர்​களாகவும் பொருளாதார வளமையோடு இருந்ததும் சீக்கியர்களே. ஆகவே அவர்கள், குர்தாஸ்பூரை பாகிஸ்தானோடு இணைக்கக் கூடாது என்றார்கள். லாகூரில் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் வங்கி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை நடத்தியவர்கள் இந்துக்களே. ஆகவே, அதை எப்படி பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுப்பது என்ற பிரச்னை ஏற்பட்டது. இன்னொரு பக்கம், காஷ்மீரைப் பிரிக்கும்போது தரை வழியாக காஷ்மீருக்குள் நுழையும் வழி இந்தியாவுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இன்னொரு பக்கம், நீர்ப் பாசனத்துக்காக அமைக்கப்​பட்ட கால்வாய்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது? தபால், தந்தி மற்றும் ரயில்வே அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தை எப்படிப் பிரிப்பது என்ற சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. லாகூர், கல்கத்தா என்று இரண்டு கமிஷன்களிலும் மாறி மாறிப் பயணம் செய்துகொண்டே இருந்தார் ரெட் கிளிஃப். இதுவரை, நிர்வாக வசதி கருதி அமைக்கப்பட்ட எல்லைகளை அப்படியே வைத்துக்கொண்டு, இந்தியாவைப் பிரிப்பது எளிதாக இருக்கும் என்று கருதினார் ரெட் கிளிஃப். பாகிஸ்தானுக்கு லாகூரும், இந்தியாவுக்கு கல்கத்தாவும் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெரிய நகரம் இருக்கட்டும் என்று ரெட் கிளிஃப் முடிவு செய்தார். பஞ்சாபுக்குத் தேவையான நீரைத் தரும் காஷ்மீர் நதிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் கவனமாக இருந்தார். இந்தியாவில் சேருவதா இல்லை... பாகிஸ்தானில் சேருவதா என்ற முடிவை இந்திய மன்னர்கள் எவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மௌன்ட் பேட்டனை, நேரு தூண்டிவிட்டு தங்களுக்குச் சாதகமானப் பகுதிகளை இந்தியாவோடு இணைக்கத் திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இப்படி, பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு பக்கம், நேருவும் படேலும் பிரிவினை குறித்த ஆலோசனையை ரெட் கிளிஃபோடு நடத்தினர். மறு பக்கம், பாகிஸ்தானுக்கு உரியதைத் தாருங்கள் என்ற கோரிக்கையோடு ரெட்கிளிஃபை மிரட்டிக்கொண்டு இருந்தார் ஜின்னா. தனக்குக் கிடைத்த வரைபடங்களையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் வைத்துக்கொண்டு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை வரைந்து முடித்தார் ரெட்கிளிஃப். இந்த எல்லைக்கோடு சரியாக இல்லையோ என்ற எண்ணம் ரெட் கிளிஃபுக்கு ஏற்பட்டது. அதுகுறித்து ஆலோசனை செய்ய மௌன்ட் பேட்டனைச் சந்தித்தார். 'எது சரி? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம். சுதந்திர தினம் வரை இந்தியப் பிரிவினையின் வரைபடங்கள், அறிவிப்பு எதுவும் வெளியே வர வேண்டாம்’ என்று மௌன்ட் பேட்டன் கேட்டுக்கொண்டார்.ஆகவே, ஆகஸ்ட் 13-ம் தேதி தனது பணியைப் பூர்த்தி செய்துவிட்டபோதும், ரெட்கிளிஃப் அதை வெளியிடவில்லை. யார் எந்தப் பக்கம் பிரிந்து போகப்போகிறார்கள் என்று தெரியாத சூழலில்தான், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இந்தியக் கொடியோடு சுதந்திர தினம் கொண்டாடிய ஊர், மறுநாளே பாகிஸ்தானுக்குப் பிரிந்துபோனது. பாகிஸ்தான் என நினைத்து களியாட்டம் ஆடிய மக்கள், மறு நாள் இந்தியாவின் பகுதியாகிப்போனார்கள். தாங்கள் எந்த நாட்டில் வசிக்கிறோம் என்று தெரியாமல் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடிய அவலம் இந்தியாவில் நடந்தேறியது.ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரிவினையின் வரைபடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. மறுநாள், மக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அதோடு, மக்கள் உடனே ஊரைக் காலி செய்து இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்ற கூக்குரல் இரண்டு பக்கமும் எழுந்தது. மௌன்ட் பேட்டன் அந்த குரல்களுக்குச் செவிசாய்க்கவே இல்லை. மாறாகக், கலவரம் ஏற்படக்கூடும் என்று நினைத்து லாகூரிலும் கல்கத்தாவிலும் 50 ஆயிரம் பேர் கொண்ட பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டது. ஆனால், அந்தப் படையால் சிறிய கிராமம் வரை பரவிய கிளர்ச்சியையும் வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. உலக வரலாற்றில் 12.5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் இடப்பெயர்ச்சி செய்ததே இல்லை எனும்படியாக, சாரை சாரையாக ஊரைக் காலிசெய்து மக்கள் கிளம்பினர். 10 லட்சம் பேருக்கும் மேலான மக்கள் அகதிகள் போல நடந்தும், பேருந்துகள் மற்றும் ரயில் ஆகியவற்றில் ஏறி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும், இங்கே இருந்து பாகிஸ்தானுக்கும் சென்றுகொண்டு இருந்தனர்.


அகதி முகாம் போல வழி முழுவதும் மக்கள் தங்கி இருந்தனர். குடிநீரும் உணவும் கிடைக்காமல் தவித்தனர். காலரா நோய் பரவியது. வழிப்பறி, வன்முறை என்று அடக்க முடியாத பெருங்கலவரம் வெடித்தது. 72 மணி நேரத்தில், 4,000 பேர் கொல்லப்பட்டனர். 10,000 பேர் பலத்த காயம் அடைந்தனர்.பிரிவினை ஏற்படப்போகிறது என்று தெரிந்த உடனேயே பல தொழில்அதிபர்கள் பாகிஸ்தானில் இருந்த தங்களது முதலீடுகளை இந்தியாவுக்கு மாற்றிவிட்டனர். அந்த நேரத்தில், பஞ்சாப் மற்றும் சிந்துப் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லியில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப்பட்ட பணம் 250 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இந்தப் பிரிவினையை தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டனர்.பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள்தான். அதிலும், சீக்கியர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்கள், தங்களது பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக வெளியேறினர். வீடு, சொத்து, கடைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அவர்கள் துரத்தப்பட்டனர். பல இடங்களில் மக்கள் திரண்டு, வணிக வளாகங்களைக் கொள்ளை அடித்தனர். பல வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கிருந்த சீக்கியர்களை துரத்தினர். இந்தியப் பிரிவினையின்போது, கற்பழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு புள்ளி விவரம். கற்பழிக்கப்பட்ட பெண்களில் பலர், அடுத்த இரண்டு மாதங்களில் கர்ப்பிணிகளாக ஆனார்கள். அவர்களுக்கு ஒரே நாளில் ஒட்டுமொத்தமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இந்திய அரசு, தங்கள் பகுதியில் இருந்து 33 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டும் கற்பழிக்கப்பட்டும் கொடுமைக்கு ஆளானர்கள் என்றது. பாகிஸ்தானோ, தங்கள் பகுதியில் இருந்து 51 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றது. இரண்டு புள்ளிவிவரங்களும் காட்டும் பொது உண்மை கலவரத்தைக் காரணமாகக்கொண்டு, பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதே. கூடுதலாக, பெண்களில் மார்பில் சூட்டுக்கோலால் இந்து அல்லது முஸ்லீம் அடையாளக் குறி போடப்பட்டதும் நடந்தது.  இந்திய வரலாற்றில் இருண்ட நாட்கள் என்று அழைக்கப்படும் பிரிவினை காரணமாக இறந்து​ போனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்கின்றனர். இறந்த உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆட்கள் இல்லை. சாலை ஓரங்களில் சடலங்கள் எறியப்பட்டன. அவற்றை நாய்கள் கடித்து இழுத்துச் செல்லும் காட்சி சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. 7 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும்... 7 கோடியே 25 லட்சம் சீக்கியர் மற்றும் இந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இடம் மாறினர் என்று, 1951-ம் ஆண்டின் கணக்கெடுப்பு கூறுகிறது. இதில், தலைநகரான டெல்லிக்குத்தான் அதிகப்பட்சமாக 10  லட்சம் அகதிகள் வந்து சேர்ந்தார்கள்.

இவை எல்லாம் நடக்கத் தொடங்கும்போது, ரெட் கிளிஃப் எங்கே இருந்தார்?ரெட் கிளிஃபுக்கு இந்திய சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, ஆகஸ்ட் 17-ம் தேதியே அவரை பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பியது மௌன்ட் பேட்டன் அரசு. காரணம், பிரிவினையால் கோபமடைந்த யாராவது ரெட் கிளிஃபைக் கொலை செய்துவிடக்கூடும் என்று மௌன்ட் பேட்டன் பயந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ரெட் கிளிஃப் ஒருமுறைகூட இந்தியாவுக்கு வரவே இல்லை. மேலும், தனது குறிப்புகள் மற்றும் ஆதார வரைபடங்களை அவரே தீ வைத்து எரித்துவிட்டார்.மௌன்ட் பேட்டன் பயந்தது போலவே, ரெட் கிளிஃபின் கமிஷன் உறுப்பினராகப் பணியாற்றிய சீக்கியர் ஒருவரின் மனைவியும் பிள்ளைகளும் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மௌன்ட் பேட்டனின் இந்தியப் பிரிவினை இந்தியர்​​களுக்கும் சாதகமானதாக இல்லை. பாகிஸ்​தானிகளுக்கும் சாதகமாக இல்லை. மாறாக, பிரிட்டிஷ் அரசுக்குச் சாதகமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகளாகவே இருக்க வேண்டும் என்ற பிரிட்டிஷின் சதி, மிகத் திறமையாக நிறைவேற்றப்பட்டது. மௌன்ட் பேட்டன் அழகாகக் காய் நகர்த்தி வெற்றி கண்டார்.இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து அதன் நீர்ப் பங்கீட்டைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று, ரெட் கிளிஃப் தன் பங்குக்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டுவிட்டுச் சென்றார். அதன்படி, இந்தியாவில் ஓடும் நதியில் இருந்து பாகிஸ்தானின் நீர்ப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீரை, கால்வாயில் திறந்துவிட வேண்டும். அதை இரண்டு நாடுகளும் சேர்ந்து பராமரிக்க வேண்டும் என்று, ரெட் கிளிஃப் குறிப்பிட்டு இருந்தார். இந்த முடிவை இரண்டு நாடுகளும் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நீதி கேட்டு உலக நீதிமன்றத்துக்கு போக முடிவு செய்தது. நேரு அதை எதிர்த்து, விட்டுக்கொடுப்பதன் வழியே இருவருமாக இதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவை அறிவித்தார். அதோடு, காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீர்ப் பங்கீட்டை இந்தியா முறையாகத் தந்து உதவும் என்றும் நேரு அறிவித்து, அதன்படியே பாகிஸ்தானுக்குத் தண்ணீர் வழங்கினார்.


ஆட்சி, அதிகாரம் என்றிருந்த இரண்டு தேசத் தலைவர்களும். இடம்பெயர்ந்துபோன லட்சக்​கணக்கான மக்களைப்பற்றியோ, அவர்கள் வாழ்​விடத்தைப் பறிகொடுத்த துக்கத்தைப்பற்றியோ கவலையின்றி புதிய மந்திரி சபையை நியமித்து அரசாளத் தொடங்கினர். இந்தியா ஒரு படி மேலே போய் அதே மௌன்ட் பேட்டனை மீண்டும் வைஸ்ராயாகவே நியமித்து தங்களின் பெருந்தன்​மையைக் காட்டிக்கொண்டது.உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோல அந்நியர் ஒருவர் ஒரு கமிஷன் தலைவராக இருந்து, ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாட்டைத் துண்டு போட்டது நடந்ததே இல்லை. பிரிவினையின் வடு இன்றும் இந்தியாவில் ஆழமாக உள்ளது. காணாமல்போன குடும்பங்களைத் தேடும் பணி இத்தனை ஆண்டு​களுக்குப் பிறகும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரிவினையின் கசப்புதான் இந்திய-​பாகிஸ்தான் யுத்தத்துக்கு அடிநாதமான காரணமாக அமைந்தது.இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிய பிரிட்டிஷ், பிரிவினை என்ற பெயரில் என்றும் தீராத வடுவை இந்தியாவுக்கு ஏற்படுத்திவிட்டுச் சென்று இருக்கிறது. காஷ்மீர் பிரச்னை தொடங்கி, இந்திய எல்லைப் பாதுகாப்பு வரை இன்று உள்ள அத்தனை முக்கிய பிரச்னைகளுக்கும் தொடக்கப் புள்ளி இதுவே!


விகடன் 

அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை!


உலகத்துக்கு நல்லது செய்வதும் மூட்டை தூக்குகிற மாதிரிதான். அதைச் செய்ய சக்தி வேண்டும். சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ளாமல் இந்த மூட்டையைத் தூக்குகிறேன் என்று ஆரம்பித்தால் இடுப்பைப் பிடித்துக் கொள்ளும். உடம்புக்குப் பிடிப்பு வியாதி உண்டாகிற மாதிரி உள்ளத்துக்கும் வியாதி ஏற்படும். சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்புத் தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.ஏற்கனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக்கள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில், பழைய தப்புக்களின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத் தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம்.அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப்போகும். தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும். நாம் புத்திசாலி’ என்ற அகம் பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்கு பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெற முடியாது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்