Search This Blog

Wednesday, May 16, 2012

எனது இந்தியா! (பிரிட்டிஷ்!) - எஸ். ராமகிருஷ்ணன்....


இந்த வழிமுறைகளால், பிண்டாரிகளை ஒடுக்க முடியாது என்று உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர்கள் எந்த மராட்டிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசிகளாக இருக்கிறார்களோ... அவர்களை வைத்தே பிண்டாரிகளை ஒடுக்குவது என்று முடிவு செய்தனர். மராட்டிய ஆட்சியாளர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அதோடு, தனிப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டு அந்தப் பிரிவு, பிண்டாரிகளை ஒடுக்குவதற்கு முழு வீச்சில் களம் இறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, எல்லைப் பகுதிகள் யாவும் பிரிட்டிஷ் படைப் பிரிவால் பாதுகாக்கப்பட்டது. மராட்டிய ஆட்சி, சிவாஜிக்குப் பிறகு பேஷ்வாக்களின் கைக்குப் போனதால், அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்​னைகள் இருந்தன. அவர்கள், அதைத் தீர்த்துக்கொள்ள பிண்டாரிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு மராட்டிய ஆட்சியாளரும் தனக்கெனத் தனிப் பிண்டாரிக் குழுவை வளர்த்துவைத்திருந்த காரணத்தால், அதைத் துண்டித்து, பிண்டாரிகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.

இதன் காரணமாக, பிண்டாரிகளுக்கு அதிகம் உதவி செய்து வந்த சிந்தியாவை வரவழைத்து, பிண்டாரிகளை ஒடுக்குவதில் தங்களுக்கு உதவி செய்யாவிட்டால், அவரை பிரிட்டிஷ் எதிரி என்று முடிவு செய்து, அவரது ஆளுகையில் உள்ள பகுதிகளைப் பறித்துக்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். சிந்தியா மீது பிண்டாரிகள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும், பிரிட்டிஷ் அச்சுறுத்தலுக்குப் பணிந்து, பிண்டாரிகளை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்புத் தருவதாக அவர் சம்மதித்தார்.பிண்டாரிகளுக்கு ஆதரவு தரக்கூடியவர்களை, பிண்​டாரிகளிடம் இருந்து பிரித்து அவர்களை இருப்பிடத்தில் இருந்து வெளியே வரச்செய்து சுற்றி வளைத்துத் தாக்குவதுதான் ஹேஸ்டிங்கின் திட்டம். ஆகவே, அவர் லாகவமாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அதன்படி, பிண்டாரிகள் பக்கம் இருந்த சிலர் பிரிட்டிஷ் வசமானார்கள். ஆனாலும், பேஷ்வா பாஜிராவ், முதோஷி போன்ஸ்லே ஆகியோர் பிண்டாரிகளுக்கு ஆதரவு அளித்தனர். பிண்டாரிகளைத் தாக்குவதற்காக பிரிட்டிஷ் காத்திருந்தது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் அவர்களைத் தாக்கினால், எளிதாக மடக்கிவிடலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. காரணம், அது அவர்கள் கொள்ளையடிக்கச் செல்லாத காலம்.ஒரு லட்சத்து 20 ஆயிரம் பிரிட்டிஷ் படை வீரர்களுடன், பிண்டாரிகளை ஒடுக்குவதற்கான யுத்தம் 1817-ல் தொடங்கியது. இரண்டு அணிகளாகப் பிரிந்துகொண்ட ராணுவம், பிண்டாரிகளை அசுர வேகத்துடன் தாக்கியது. ஒவ்வோர் அணியும் மூன்று பிரிவுகளாகப் பிண்டாரிகளைச் சுற்றி வளைக்கத் தொடங்கியது. அவர்கள் நேரடியான சண்டையைத் தவிர்த்து தப்பி ஓடவே முயற்சித்தனர். நான்கு பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழி இல்லாமல் சண்டையிட்டனர்.  இந்தச் சண்டையில், பிண்டாரிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டன. பிண்டாரிகள் தோற்றுப்போனார்கள். தப்பி ஓடும் குழுவைத் துரத்திப்போய் அழித்தது பிரிட்டிஷ் ராணுவம். பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்று நினைத்த சில பிண்டாரிகள் உயிரை மாய்த்துக்கொண்டனர். ஜான் மால்கம் என்ற ராணுவ அதிகாரியால் துரத்தப்பட்ட சேத் என்ற பிண்டாரி தலைவன், காட்டுக்குள் ஒளிந்துகொண்டான். அவனைப் பிடிக்கவே முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவன் புலி அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்ததைக் காட்டுவாசிகள் கண்டு பிடித்தனர்.

பிண்டாரிகளை ஒடுக்கியதோடு பிரிந்துகிடந்த மராட்டியப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத் தனதாக்கிக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. பேஷ்வாக்களின் அதிகாரம் முற்றிலும் ஒடுக்கப்பட்டது. பிண்டாரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் தேடித்தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, தூக்கில் இடப்பட்டனர். தப்பி ஓட முயன்றவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.1825-ல் பிண்டாரிகள் எனத் தனியே எவரையும் அடையாளம் காண முடியாதபடி அந்த இனமே அழிந்துபோய் இருந்தது. உயிர் பிழைத்தவர்கள், மக்களோடு ஐக்கியமாகி தங்களது அடையாளங்களை மாற்றிக்​கொண்டு கொள்ளை அடிப்பதையும் கைவிட்டார்கள் என்று மால்கம் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.பிண்டாரிகளைப் பற்றிக் கூறும் எப்டி ட்ருவிட், 'பிண்டாரிகள் ஓர் இடத்தில் நிலை கொள்ளாதவர்கள். ஆகவே, கூடாரங்களையே தங்களது வீடுகளாகப் பயன்படுத்திக்கொண்டனர். இவர்களைப் போல மூர்க்கமாக சண்டையிடும் இனமாக ருஷ்யாவில் உள்ள கசாக்குகளைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றிய பிரிட்டிஷ் குறிப்புகள் ஒருதலைப்பட்சமானவை. உண்மையில் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்துகொண்டார்கள் என்பதே அவர்களை குற்றவாளி ஆக்கியதற்கான முக்கியக் காரணம்’ என்கிறார்.சண்டையிடுவதில் பிண்டாரிகள் கைதேர்ந்தவர்கள். அவர்களில் ஒரு பிரிவினர் கொள்ளையும் அடித்​தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு ஒட்டுமொத்த இனமும் கொள்ளையர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டது. இந்தப் பிண்டாரிகளைப் போலவே, வங்காளத்தில் ஆற்றில் பயணிக்கும் வணிகர்களைக் கொள்ளை அடிக்கும் 'தக்கீ’ எனப்படும் இனக் குழுவினர் இருந்தனர். 3,000-க்கும்குறைவாக இருந்த இந்த இனம், தனித்தனிக் குழுவாகப் பிரிந்து ஆற்றில் வரும் வணிகர்களின் படகுகளை மடக்கிக் கொள்ளை அடித்தும், சாலைகளில் செல்பவர்களை மறைந்து இருந்து தாக்கிக் கொள்ளை அடித்தும் வந்தனர். இதனால், பிரிட்டிஷ் கம்பெனிக்குச் சேர வேண்டிய தானியங்கள், பருத்தி மற்றும் விளைபொருட்கள் கொள்ளை போகத் தொடங்கியது.தக்கீக்கள் கொள்ளை அடிக்கும்​போது, வணிகர்​களையும், மக்களையும் கடுமையான முறையில் துன்புறுத்திக் கொலை செய்தனர். 'பெக்ரம்’ என்ற தக்கீ இனத் தலைவன், தனது குழுவோடு 931 பேரை கொலை செய்து இருக்கிறான். இதில், தான் மட்டுமே 125 பேரைக் கொன்று இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறான். தக்கீக்களில் ஒரு குழுவினர் சாலைகளில் செல்பவர்களை, மறைந்து இருந்து தாக்கிக் கொலை செய்து கொள்ளை அடிப்பது உண்டு. திடீரெனப் பின்னால் வந்து, துணியால் முகத்தை மூடிக் கழுத்தை நெரித்துக் கொல்வது இவர்களின் பாணி. இந்தத் தக்கீகளால் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர் என்று, பிரிட்டிஷ் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

பயணிகள் இரவில் பயணம் செய்யும்போது, வழியில் யாராவது புகையிலை கிடைக்குமா என்று கேட்டால் தர மாட்டார்கள். காரணம், புகையிலை தருவது என்பது பொருட்களைக் கொள்ளை அடிப்பது என்பதன் குறியீட்டு வார்த்தை. தக்கீக்கள் புகையிலை கேட்கிற ஆட்களைப் போல வந்து, பொருட்களை மதிப்பீடு செய்வார்கள். அது முடிந்தவுடன், அவர்களின் கூட்டம் சுற்றி வளைத்துக் கொள்ளை அடிக்கும்.தக்கீகள் தங்களைக் காளியின் வாரிசுகள் என்று கூறி வந்தனர். தாங்கள் கொல்வது காளியின் பொருட்டே என்றும் சொல்லினர். 1799 வரை ஒரு தக்கீ கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை. 1810-ல் தபால் கொண்டுசென்ற வண்டியைத் தாக்கிக் கொள்ளையிட்ட பிறகே, தக்கீக்கள் பிரச்னை குறித்து பிரிட்டிஷ் கவனம் செலுத்தத் தொடங்கியது.ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, தனது பரிவாரத்துடன் இரவுப் பயணம் செய்தபோது, தக்கீக்கள் அவர்களை வழிமறித்து உடன் வந்த காவலர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்துவிட்டு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் உடைகள் மற்றும் ஆயுதங்களைப் பறித்துக்கொண்டனர். அதோடு, பிரிட்டிஷ் அதிகாரிகளை சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுச் சென்று விட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியே தனியாகப் பயணம் செய்ய முடியாத சூழல் இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்த கம்பெனி, தக்கீக்களை ஒடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தியது. சர் வில்லியம் ஹென்றி ஸ்லீமென், தக்கீக்களை ஒடுக்குவதில் முக்கியப் பணியாற்றியவர். அரபி, ஹிந்துஸ்தானி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஸ்லீமென், மூர்க்கத்தனமாக தக்கீக்களை நேரடியாக எதிர்கொண்டு தாக்க முடியாது என்பதை அறிந்துகொண்டார். அவர்களைப் போலவே ஒளிந்து வேறு ஓர் உருவில் சென்று தாக்குவதே சரியான வழி என்று நினைத்தார். தக்கீக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்காக, ரகசிய பாஷை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். அதை ஓர் உளவாளி வழியாக அறிந்துகொண்ட ஸ்லீமென், தக்கீக்களின் திட்டங்களை முன்னதாக அறிந்துகொண்டு, அவர்களின் கொள்ளைகளைத் தடுத்தி நிறுத்தியதோடு பிடிபட்டவர்களை தனிமைச் சிறையில் அடைத்து மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்தார்.தக்கீக்களை அடையாளம் கண்டு சொல்வதற்கு, உள்ளுர் ஆட்களையே உளவு சொல்பவர்களாக நியமித்தார். கூடவே ஒளிந்திருந்து தாக்கும் படைப் பிரிவின் உதவியால், தக்கீக்களை கடுமையாகத் தண்டிக்கத் தொடங்கினர். இதன் ஓர் அம்சமாக, அந்த ஒட்டுமொத்த இனமே திருடர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகள், மனைவிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு பக்கம் சட்டம், மறு பக்கம் தாக்குதல், இரண்டையும் சமாளிக்க முடியாத தக்கீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப்போனார்கள்.  தக்கீக்களோ, பிண்டாரிகளோ எவராயினும் அவர்களைத் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்​கொண்டது அன்றைய ஆளும் அரசுகள்தான். அவர்களின் ஆதரவு இல்லாமல் குற்றவாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஆகவே, அரசியல் காரணங்களே இதுபோன்ற குற்றவாளிகள் வளர்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார் வரலாற்று ஆய்வாளர் பி.கோஷ்.


பிண்டாரிகளின் வரலாற்றை மையமாகக்கொண்டு, 2009-ல் 'வீர்’ என்ற படம் வெளியானது. சல்மான்கான் நடித்த இந்தத்  திரைப்படம், பிண்டாரிகளை அரச வம்சமாகச் சித்தரிக்கிறது. இந்தப் படத்தில், பிரிட்டிஷ் படையை எதிர்த்து பிண்டாரிகள் பெரும் ஆவேசத்துடன் சண்டை​யிடுகின்றனர். வீர் படத்தின் கதை, ருஷ்ய எழுத்தாளர் கோகலின் தாரஸ்புல்பா நாவலை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், பிண்டாரிகள் வெறும் பெயர்களாகவே பயன்படுத்தப்​பட்டு இருக்கிறார்கள்.ஒரு காலத்தில், பல்லாயிரம் பேராக இருந்த பிண்டாரி இனத்தில் வெறும் 150 பேரே மிச்சம் இருந்ததாக ரஸ்ஸலின் 1911-ம் வருசத்து சாதிவாரிக் கணக்கெடுப்பு கூறுகிறது.வன்முறைக்கு யார் காரணமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டது எளிய சாமான்ய மக்களே. வன்முறையைக் கையில் எடுக்கும் இனம், தானே அதற்குப் பலியாகிவிடும் என்பதே எளிய மக்கள் வரலாற்றில் இருந்து நாம் உணர வேண்டிய பாடம்.

விகடன் 

அருள் மழை ----------- 58

வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.
“நீங்க தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”
” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”
“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! “
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

Tuesday, May 15, 2012

இடம் காலி இல்லை!


உலகத்தில் தட்டுப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை. மின் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு, வேலை தட்டுப்பாடு இவற்றுக்கிடையில் இப்பொழுது உலகத்தைத் திகைக்க வைத்திருப்பது ‘வலை தட்டுப்பாடு’. ஆமாம்! இணையம் கூடிய சீக்கிரம் முகவரிகள் இல்லாமல் திண்டாட இருக்கிறது. வலை உலக ஜாம்பவான்கள் கூகிளும், ஃபேஸ்புக்கும் இதற்கு மாற்றான ஒன்றுக்கு இப்பொழுதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.விஷயம் என்னவென்றால், நாம் எல்லோரும் இன்டர்நெட் ஐ.பி.அட்ரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். உதாரணத்துக்கு www.google.com என்று இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நாம் அடித்தவுடன், அது google இணையதள வழங்கியைப் (server) பின்புலமாகத் தேடி உங்களுக்கு அந்த வழங்கியிலுள்ள அதாவது இணையதள உள்ளடக்கங்களைக் காண்பிக்கும். பின்புலத்தில் கல்கி ஆன்லைன் என்ற பெயருடன் வழங்கியின் ஐ.பி.அட்ரஸ் இணைக்கப் பட்டிருக்கும். அந்த முகவரிதான் இப்பொழுது தீர இருக்கிறது.

புகழ்பெற்ற ஃபேஸ்புக் இணையதளத்தின் இந்தப் பின்புல முகவரி 66.220.149.32. இந்த முகவரி இணையதளங்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. செல்பேசிகள், இ-புத்தகங்கள், தொலைக்காட்சிகள், இப்படிப் பலவித சாதனங்களிலும் இந்த முகவரிகள் ஒவ்வொரு காரணத்துக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.மொத்தம் 430 கோடி முகவரிகள்தான் தற்போதைய முறையில் சாத்தியம். 10 கோடிக்கும் குறைவாகவே இன்னும் முகவரிகள் பாக்கி இருக்கின்றன. தெருவுக்குத் தெரு ஏ.டி.எம். என்பது போல, இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு இணையதளம், செல்பேசிகள் என்று ஆகிவிட் டது. இந்தச் சூழ்நிலையில் 10 கோடி முகவரிகள் என்பது ஜுஜுபி. இதற்கு மாற்றாக ipv6 (பதிப்பு 6) தேவைப்படுகிறது. இந்த முறையில் எவ்வளவு முகவரிகள் உருவாக்க முடியும் தெரியுமா? இதை எப்படிக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அந்த எண்ணிக்கை: 340,282,366,920,938,463,463, 374,607, 431,768,211,456 - அம்மாடியோவ் இத்தனை முகவரிகள் உருவாக்கலாம். இன்னும் ஓர் ஆயிரம் வருடங்களுக்குக் கவலைப்படத் தேவையில்லை!தற்பொழுது உபயோகத்திலிருக்கும் ipv4 (பதிப்பு 4) 1970களில் உருவாக்கப்பட்டது. 430 கோடி முகவரிகளும் இப்படி 30 வருடங்களில் சுவாஹா ஆகும் என்று அப்பொழுது கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். நாம் இருக்கும் இந்த ‘டிஜிட்டல் காலத்தில்’ அசுர வேகத்தில் ஏற்படும் வளர்ச்சியை எண்ணிப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஐ.பி.அட்ரஸின் ஆறாவது பதிப்பு 10 வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் வந்தபொழுதும் யாரும் அதை கால்தூசி அளவுக்குக் கூட மதிக்கவில்லை. (அப்போதெல்லாம் கண்டுக்காம விட்டுப்புட்டு இப்போ லபோ திபோன்னு அடிச்சுக்கறாங்க!!)இப்பொழுது நமக்கு இருக்கும் சவால் என்னவென்றால் உலகத்தில் வழக்கத்தில் இருக்கும் வழங்கிகள், திசைவிகள் (routers) எல்லாவற்றுக்கும் பதிப்பு 4ஐத்தான் புரிந்துகொள்ள முடியும். பதிப்பு 6 நடைமுறைக்கு வந்தால் என்ன ஆகும்? எல்லாம் அம்பேல்தான். அதனால் இணைய உலக ஜாம்பவான்கள் எல்லாம் முடியைப் பித்துக் கொள்கின்றனர். ஏகப்பட்ட கோடி அமெரிக்க டாலர்கள் தண்டச்செலவு வேறு இதற்கு தேவைப்பட இருக்கிறது.

வெரிஸான் மாதிரி தொலைபேசி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக அமைதியாக பதிப்பு6ற்கு மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக 4G செல்பேசிகளில் இந்தப் புதிய முகவரி மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. ஃபேஸ்புக் கடந்த மூன்று வருடங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் பதிப்பு 6 முகவரி www.v6.facebook.com இருங்க இருங்க உடனே உங்க கணினில இதைத் தட்டிப் பார்க்காதீங்க. உங்கள் கணினியில் பதிப்பு 6 ஆதரவு இருந்தால்தான் இது வேலை செய்யும். இல்லையென்றால் புஸ்ஸூதான்! இந்த மாதிரி பிரச்னைகளால் கொஞ்ச நாளில் டிஜிட்டல் போர் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆண்டவா, இந்த உலகத்தையும் அதோட தம்பி ‘இணைய உலகத்தையும்’ காப்பாற்றுப்பா!

தி.சு.பா

Monday, May 14, 2012

எனது இந்தியா! (பிண்டாரிகளின் கொள்ளை!) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
கூலிப் படைகளை​வைத்துக் கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் வரலாறு நெடுக உண்டு. 18-ம் நூற்றாண்டில் வலிமைமிக்க கூலிப் படையாக ஒரு இனமே செயல்பட்டுவந்தது. அவர்களை பிண்டாரிகள் என்று அழைத்தனர். 20 ஆயிரம் பேருக்கும் அதிகமான பிண்டாரியர், அப்போது மத்திய இந்தியாவைத் தங்கள்வசமாக்கி வைத்து இருந்தனர். இவர்களை, கட்டுப்​பாட்டுக்குள் அடங்காத கொள்​ளைக் கூட்டம் என்று பிரிட்டிஷ் ஆட்சி​யாளர்​கள் குறிப்பிடுகின்றனர்.  முகலாயப் பேரரசின் ஆட்சி நிலை குலைய ஆரம்பித்தவுடன், வட இந்தி​யாவில் நிறையக் குட்டி ராஜ்ஜியங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. மராட்டிய ஆட்சியாளர்களான சிந்தியா மற்றும் ஹோல்கர் ஆகியோரின் பாதுகாப்பு, பிண்டாரியருக்குக் கிடைத்த காரணத்தால் அவர்கள் வெல்ல முடியாத பெரும் சக்தியாக வளர்ந்து நின்றனர். நர்மதைப் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு, கிழக்கே ஒரிசாவின் கட்டாக், மேற்கே சூரத், தெற்கே ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் கஞ்சம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளை அடித்து வந்தனர்.பிண்டாரிகள் தமக்கென தனியே அரசு எதுவும் அமைக்கவில்லை. ஆனால், கூட்டமாகச் சேர்ந்து தாக்கிக் கொள்ளையிட்டு, அதைவைத்து வாழ்வதுதான் அவர்களின்  தொழில். பிண்டாரியர் என்ற பெயர் வந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சோளத்தில் இருந்து வடித்து எடுக்கப்படும் மதுவின் பெயர் பிந்தா. ஆகவே, அதைக் குடித்தவர்கள் பிந்தாரியர் என்று இர்வின் கூறுகிறார். பந்தார் என்ற இடம், பர்ஹான்பூருக்கு அருகில் உள்ளது. அங்கே இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் பிண்டாரிகள் என்று அழைக்கப்​படுவதாகவும் கூறப்படுகிறது. சரித்திர ஆசிரியர் சிவனடி, பிண்டாரியர்கள் பற்றிய தனது கட்டுரை ஒன்றில், 'பல முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது கட்டுரையில், ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகே, பிண்டாரிகள் ஒன்று திரண்டு பெரும் கொள்ளைக் கூட்டமாக மாறினர். இவர்களின் மூதாதையர்கள் தக்காணத்தில் உள்ள பிஜப்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள், பட்டாணிய வம்சா வழியில் வந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் முகமது கான், அகமது கான் என்ற இரண்டு ஆப்கானியர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுவோரும் உண்டு. மராட்டிய ஆட்சியின் எழுச்சிக்கும், பிண்டாரிகளின் செயல்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருந்து இருக்கிறது. அதாவது, போர்க் காலங்களில் சம்பளம் தரப்படாத துணைப் படை ஒன்று எப்போதுமே இருக்கும். இந்தப் படையின் வேலை, தோல்வி அடைந்த நாட்டுக்குள் புகுந்து அங்குள்ள மக்களைக் கொன்று, அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்து, கையில் கிடைத்த பொருட்களைக் கவர்ந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து எதிரி மீண்டும் தலை எடுத்துவிடாமல் அழித்து ஒழிப்பதாகும். அப்படி, அரசின் அனுமதியோடு கொள்ளையடிக்க அனுப்பப்படும் ஒரு பிரிவாகவே பிண்டாரிகள் இருந்தனர். அவர்களுக்கு அரசு மானியமாக நிலமும் தானியங்களும் தரப்பட்டதற்கும் சான்றுகள் இருக்கின்றன’ என்கிறார்.
 
இந்தப் பிண்டாரிகள், தனித்தனிக் குழுவாக இயங்கினர். இந்தக் குழுவில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்பியவர்கள், குற்றங்களைச் செய்துவிட்டு அரசிடம் இருந்து தப்பி வந்தவர்கள், சமூகத்தில் விலக்கிவைக்கப்பட்டவர்கள் எனப் பலரும் தாமாக வந்து சேர்ந்தனர். அதனால், பிண்டாரிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. பிண்டாரி இனப் பெண்களும் கொள்ளைக்கு உடன் செல்வது உண்டு. அப்படிச் செல்லும்போது, அவர்கள் ஒட்டகத்தையும் மட்டக்குதிரையும் பயன்படுத்துவார்கள். இவர்களும், இரக்கமற்று வன்கொலை செய்யக் கூடியவர்கள் என்று, வரலாற்று ஆசிரியர் ஜென்கின்ஸ் கூறுகிறார்.பிண்டாரிகள் ஓர் இடத்தில் கொள்ளையடிக்கப் போகும் முன், சாமியார்கள், ஜோதிடர்கள் மற்றும் வேலையாட்களை ஒற்றர்களாக அனுப்பித் தகவல்களைச் சேகரிப்பது வழக்கம். இவர்கள் ஆண்டு முழுவதும் கொள்ளை அடிக்கச் செல்வது இல்லை. வறட்சியான காலங்களில் மட்டுமே கொள்ளைக்குக் கிளம்புவார்கள். மழைக் காலம் வரும் வரை இந்தக் கொள்ளை நீடிக்கும். மழை தொடங்கிவிட்டால், கிடைத்த பொருட்களோடு இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அறுவடை முடிந்த பிறகு, எதிர்பாராமல் கிராமங்களைத் தாக்கி கொள்ளை அடிப்பதும் உண்டு. கொள்ளை அடித்த பொருட்களை, தங்களுக்குள் முறையாகப் பிரித்துக்கொள்வார்கள். சில வேளைகளில், கொள்ளை அடித்த பொருட்களை சிறு நகரச் சந்தைகளுக்குக் கழுதைகளில் ஏற்றிச் சென்று வணிகம் செய்வதும் உண்டு.பிண்டாரிகளைக் கூலிப் படையாக வைத்திருந்த​வர்கள் மராட்டிய ஆட்சியாளர்களே. மராட்டியப் படை ஒரு பகுதிக்குள் நுழையும் முன், பிண்டாரிகளை அவிழ்த்துவிடுவார்கள். இவர்களின் மூர்க்கமான தாக்குதலால் பயந்து மக்கள் ஒடுங்கிவிடுவார்கள். அதன் பிறகு, தங்களுக்கு வேண்டிய பொருட்களைக் கொள்ளையடித்துக்கொள்ள அனுமதி தரப்படும். சில நேரங்களில், பிண்டாரிகள் கொள்ளை அடித்த பொருட்களில் முக்கியமான நகைகள், வைரங்களை படைத் தலைவர்கள் பறித்துக்கொள்வதும் உண்டு. யுத்தம் இல்லாத காலத்தில், பிண்டாரிகளுக்குத் தானியமும் அடிப்படை வசதிகளும் செய்துதர வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.முரட்டுத் துணியால் ஆன உடை அணிந்து, தலையில் கைக்குட்டைகளைக் கட்டி இருப்பது பிண்டாரிகளின் தனித்துவம். அவர்களின் விருப்பமான ஆயுதம், ஈட்டி. அதைப் பயன்படுத்துவதில், பிண்டாரிகளை யாராலும் மிஞ்ச முடியாது. 12 முதல் 18 அடி நீளம்கொண்ட ஈட்டிகள் வைத்து இருந்தனர். பிண்டாரிகளின் தலைவன் சர்தார் என்று அழைக்கப்படுவார். அவரிடம் மட்டுமே துப்பாக்கி இருக்கும். 1,000 பேர் கொண்ட ஒரு பிண்டாரியர் குழுவில், 400 பேர் குதிரைகளிலும் மற்ற 400 பேர் ஒட்டகம், எருமை, கழுதை உள்ளிட்ட வாகனங்களையும், மற்றவர்கள் கொள்ளையிட்ட பொருட்களைத் தூக்கி வருவதற்கும், ஏவல் பணி செய்வதற்கும் இருப்பார்கள். இவர்களைப் படைப் பொறுக்கிகள் என்று பிண்டாரிகள் குறிப்பிடுகின்றனர். கொள்ளை அடிக்கச் சென்ற இடத்தில் இருந்து, அழகான பெண்களைத் தூக்கி வந்து திருமணம் செய்துகொள்வதும், வலிமையான ஆண்களை அடிமைகளாக வைத்துக்கொள்வதும் பிண்டாரிகளின் வழக்கம். அவர்கள் கொள்ளைக்குக் கிளம்பும்போது, சிவப்பு வண்ணத்தில் பாம்பு உருவம் பதித்த கொடியுடன் கிளம்புவார்கள். சில குழுக்கள் பச்சை அல்லது மஞ்சள் கொடியைப் பயன்படுத்துவதும் உண்டு.பிண்டாரி ஆண்கள் சவரம் செய்ய மாட்டார்கள். ஆகவே, அடர்ந்த தாடியோடு உள்ள அவர்களது தோற்றம் அச்சம் தருவதாக இருக்கும். நாய்கள்தான் அவர்களுக்குத் துணை. எங்கே சென்றாலும் பிண்டாரி, ஒரு நாயை துணைக்கு அழைத்துச் செல்வான். பிண்டாரிகளில் யாராவது இறந்துவிட்டால், அவரை உட்கார்ந்த நிலையில் வைத்துத்தான் புதைப்பார்கள்.பிண்டாரிகள், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள். பொதுவாக, குதிரையில் ஒருநாளில்30 கிலோ மீட்டர் தூரமே பயணம் செய்வார்கள். ஆனால், பிண்டாரிகள் அவசரக் காலங்களில் ஒரு நாளில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்குக்கூட குதிரையில் செல்வது உண்டு. அப்படி வேகமாகச் செல்வதற்காக குதிரைகளுக்குப் போதை தரும் செடிகளைத் தின்னக் கொடுப்பார்கள். அதுபோல, பிண்டாரிகள், படைப் பிரிவுகளை எதிர்கொண்டால் அவர்களோடு சண்டை இடுவதற்குப் பதிலாக, தப்பிச் செல்லத்தான் முயற்சிப்பார்கள். காரணம், அவர்கள் சண்டை போடுவதைவிட கொள்ளை அடிப்பதே தங்கள் வேலை என்று நினைக்கக்கூடியவர்கள். மீறி, படை வீரர்கள் அவர்களைத் தாக்கினால் சிறு குழுக்களாகப் பிரிந்து சட்டென ஒளிந்துவிடுவார்கள்.பிண்டாரிகள், எந்த ஒரு தலைவனுக்கும் விசுவாச​மாக நடந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடியவர்கள். ஆகவே, அவர்கள் தங்களையும் கொன்றுவிடக்கூடும் என்று பயந்த மராட்டிய ஆளுனர்கள், பிண்டாரிகளை சந்தேகத்துடனேயே எப்போதும் நடத்தினர். தசரா விழாதான் பிண்டாரிகளின் முக்கிய விழா. அந்த நாட்களில் அவர்கள் கொடி ஏற்றி தங்களின் வீரப்பிரதாபங்களைக் காட்டுவார்கள். விழா நேரங்​களில், அவர்களுக்குள் குழுச் சண்டை ஏற்படுவதும் உண்டு. தசரா முடிந்தவுடன் கொள்ளைக்குத் திட்டமிடுவார்கள். காரணம், கடவுளின் ஆசி தங்களுக்குப் பூரணமாக கிடைத்து இருக்கிறது என்ற நம்பிக்கையே!பிண்டாரிகளில் பலர் முஸ்லிம்களாக இருந்தபோதும், அவர்கள் உள்ளூர்க் குலதெய்வங்களை வழிபடுவதில் ஈடுபாடு காட்டினர். அதிலும், கொள்ளை அடிக்கப் போகும்போது, குலதெய்வங்களுக்குப் படையல் போட்டு வணங்கிச் செல்வது வழக்கம். 'ராம்ஷா’ என்ற ஞானியின் உருவம் பதித்த சிறிய டாலரை அவர்கள் கழுத்தில் அணிந்துகொண்டு கொள்ளை அடிக்கச் செல்வது வழக்கம். கொள்ளை அடிக்கப் போன இடங்களில், மக்களை சித்ரவதை செய்வதில் பிண்டாரிகள் மிகக் குரூரமானவர்கள். பழுக்கக் காய்ச்சிய இரும்பைக்கொண்டு குதிகாலில் சூடு போடுவது, குதிரைக்கு வைக்கும் கொள்ளுப் பைக்குள் சுடுசாம்பலைக்  கொட்டி அதைத் தலையில் கட்டிவிடுவது, துணிகளின் மீது எண்ணெய் ஊற்றி உயிரோடு நெருப்பு வைப்பது, கை கால்களைத் துண்டிப்பது, இடுப்பில் மரப் பலகையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று இடுப்பை முறிப்பது என்று, அவர்களின் கொடூரமான சித்ரவதைகளுக்குப் பயந்து, அவர்கள் கேட்ட பொருட்களை மக்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். பிண்டாரிகளின் பெயரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கினர். சில ஊர்களில், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, பிண்டாரிகள் வருவதைப் பற்றி எச்சரிக்கை செய்வதும் நடந்து இருக்கிறது.
 
 
1815-ம் ஆண்டு சென்னை ராஜதானியில் இருந்த மசூலிப்பட்டினம் பகுதிக்குள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிண்டாரிகள் தாக்குதல் நடத்தி, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொள்ளை அடித்தனர். இந்தப் பகுதியில், கர்னல் டவ்டன் தலைமையில் ஒரு படை பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு இருந்தது. அந்தப் படையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பிண்டாரிகள் கொள்ளை அடித்தனர். இந்தக் கொள்ளையின்போது, பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த அலுவலகங்கள், வீடுகள், அத்தனைக்கும் தீ வைத்துவிட்டனர். பயந்து போன மக்கள் ஊரைக் காலி செய்து வெளியேறினர். பிரிட்டிஷ் படையால் மக்களைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டதைக் கண்டு, ஆத்திரம் அடைந்த ஹேஸ்டிங் பிரபு, பிண்டாரிகளை ஒடுக்க தனிப் படைப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். அந்தப் படையினர், பிண்டாரிகளின் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினர். பிடார் மற்றும் கஞ்சம் பகுதிகளில் கொள்ளை அடிக்க வந்த கும்பலை, மேஜர் மெக்டோவல் சுற்றி வளைத்துத் தாக்கினார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில், பிண்டாரிகளில் பலர் படுகாயம் அடைந்தனர். பேஷ்வா ஆட்சிப் பகுதியில் கொள்ளையிட வந்தவர்களை, மேஜர் லூசிங்டன் மறைந்திருந்து தாக்கினார். இதில், 300-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். 500 பேர் தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, பிண்டாரிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். பூரி ஜெகனாதர் ஆலயத்தைத் தாக்கிக் கொள்ளை அடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், பிரிட்டிஷ் படை அதன் பாதுகாப்புக்குப் போனது. ஆனால், அவர்கள் அங்கே கொள்ளை அடிக்காமல், கஞ்சம் பகுதியைத் தாக்கிப் பெரும் கொள்ளை அடித்தனர்.

விகடன்


டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, ''டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!'' என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.இதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.  

தினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.
 
பற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.  
 

இனி பற்பசைக்கு வருவோம்.இதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவனத்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.பற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள்  அதிக எண்ணிக்கையில் விற்பனையா கின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.
 
டூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.அதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது.  பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.டூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.எது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது.
 
விகடன்  

Sunday, May 13, 2012

சோப்பை விழுங்கிவிட்டால் என்ன செய்வது?


வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருள்களில் சோப்பு, டிடர்ஜெண்ட், கற்பூரம், பாச்சா உருண்டை முக்கியமானவை. சிலநேரங்களில் குழந்தைகள் தெரியாமல் இவற்றைத் தின்றுவிடுவார்கள். இதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும். அப்போது என்ன செய்வது என்பதைப் பார்ப்போம்.

கெடுதல் என்ன?

சோப்பும் டிடர்ஜெண்டும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகளைக் கொடுக்கும்.இவை தோலில் பட்டால் அரிப்பை உண்டாக்கும். கற்பூரம், பாச்சா உருண்டை சாப்பிட்ட குழந்தைகள் சுயநினைவை இழக்கும், வலிப்பு வரலாம்.

என்ன முதலுதவி?

அதிகமாகத் தண்ணீரையோ, பாலையோ குடிக்கவைத்து, சோப்பு, டிடர்ஜெண்ட், கற்பூரம், பாச்சா உருண்டை ஆகியவற்றின் வீரியத்தைக் குறைக்க வேண்டும்.

குழந்தை சுயநினைவை இழந்து விட்டால், இந்த முதலுதவியைச் செய்யக்கூடாது.

குழந்தையை மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அமிலத்தைக் குடித்தல்:

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். 

அமிலம் என்ன செய்யும்?

இந்த அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும். கொப்புளங்கள் ஏற்படலாம். அமிலம் கண்ணில் பட்டு விட்டால், கண் சிவந்து விடும். கண்களில் எரிச்சல் ஏற்படும். கண்ணீர் கொட்டும்.அமிலத்தைக் குடித்தவருக்கு கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. விழுங்கும் போது தொண்டை வலிக்கும். தொண்டையை அடைப்பது போலிருக்கும். நெஞ்சு எரியும். சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரலாம். வலிப்பு ஏற்படலாம்.

என்ன முதலுதவி?

உடனடியாக, உடுத்தியுள்ள ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும்.

தோலில் அமிலம் பட்டிருந்தால், அதிகமாகத் தண்ணீர் விட்டுத் தோலை நன்றாகக் கழுவ வேண்டும்.

இது முக்கியம். சோப்பு போட்டு தோலைக் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் எரிச்சல் அதிகமாகிவிடும்.

தோலில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு, அதைத் தோலில் சுற்றலாம். 

அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் கழுவவேண்டும்.

அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள். 

பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம்.

அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம்.

வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் ’ஆண்டாசிட்’ மருந்து கைவசம் இருந்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.

வாயைத் தண்ணீரால் கொப்பளித்துக் கழுவலாம்.

மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த நபர் குடித்த பொருளையும் எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தால், சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

என்ன செய்யக்கூடாது?

அமிலம் பட்ட கண்களில் சொட்டு மருந்தை ஊற்றக்கூடாது.

வாந்தி எடுக்க வைக்கக்கூடாது.

வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

மண்ணெண்ணெய்,பெட்ரோல்குடித்தல்:

பெரும்பாலான வீடுகளில், சமையல் அறையில் தண்ணீர் இருக்கும் இடத்தின் அருகில் மண்ணெண்ணெய் புட்டியும் இருக்கும். அப்போது குழந்தைகள் அதைத் தண்ணீர் என்று தவறாக நினைத்துக் குடித்துவிடுவார்கள்.

கெடுதல் என்ன?

மண்ணெண்ணெய் குடித்தவருக்கு, மண்ணெண்ணெய் வயிற்றுக்குள் மட்டும் சென்றுவிட்டிருந்தால், அமிலத்தைப் போன்று கடுமையான பாதிப்புகள் எதுவும் இருக்காது. வயிற்றுவலி, எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி முதலிய அறிகுறிகள் ஏற்படும். இதற்குப் பயப்படத் தேவையில்லை. 

ஆனால், மண்ணெண்ணெயைக் குடிக்கும்போது, புரையேறிவிட்டால், அது நுரையீரலுக்குள் சென்றுவிடும். அப்போது தொடர்ச்சியாக இருமல் வரும். நெஞ்சு வலிக்கும். நிமோனியா காய்ச்சல் வரும். இது ஆபத்தைத் தரும்.

என்ன முதலுதவி?

இளநீர் குடிக்கத் தரலாம்.

30 மி.லி. ‘லிக்விட் பாரஃபின்’ எண்ணெயைக் குடிக்க வைக்கலாம்.

மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

வாந்தி எடுக்க வைக்கக்கூடாது.

வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

விஷப் பொருள்களைக் குடித்தல்:

சாதாரணமாகவே வீடுகளில் மூட்டைப்பூச்சி மருந்து, எறும்புப்பொடி, எலி மருந்து போன்றவையும், விவசாயி வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இருப்பது வழக்கம். இவற்றைத் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் குடித்து விடுவதுண்டு. இவை உயிருக்கு ஆபத்து தருபவை. ஆகவே, இந்த நபர்களுக்கு முதலுதவி செய்வதற்குத் தாமதிக்கக் கூடாது.

என்ன முதலுதவி செய்வது?

எவ்வளவு விரைவாக விஷத்தை இரைப்பையிலிருந்து வெளியேற்றுகிறோமோ, அவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவர் குணமடைவார் என்பதால், விரைவாக முதலுதவி தர வேண்டும்.

ஒரு தம்ளர் தண்ணீரில் இரண்டு கரண்டி சமையல் உப்பு வீதம் கலந்து, சுமார் ஐந்து தம்ளர் உப்புத்தண்ணீரைக் குடிக்க வைக்க வேண்டும்.

அல்லது ஒரு தம்ளர் தண்ணீரில் சுமார் 15 கிராம் கடுகுத்தூளைக் கலந்து, ஐந்து தம்ளர் குடிக்க வைக்கலாம். 

அல்லது இரண்டு விரல்களை அவரது வாக்குள் நுழைத்து, நாக்கின் உள்பாகத்தை அழுத்தமாகத் தேத்து, வாந்தி எடுக்க வைக்கலாம்.

ஒவ்வொரு விஷத்துக்கும் குறிப்பிட்ட ‘விஷமுறிப்பான்’ உண்டு. அதையும் கொடுத்தால்தான் உயிருக்கு ஆபத்து வராது. அந்த விஷமுறிப்பானை மருத்துவரால்தான் தர முடியும். 

ஆகவே, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், பாதிக்கப்பட்ட நபரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பாதுகாப்புக்கு ஆறு வழிகள்:

1. மண்ணெண்ணெய், அமிலம், காரம், கற்பூரம், பாச்சா உருண்டை, கிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மாத்திரைகள், வண்ணப்பூச்சு திரவங்கள், பெட்ரோல் போன்றவற்றைக் குழந்தைகள் கைக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும்.

2. மேற்சோன்ன பொருள்களை ஓர் அட்டைப்பெட்டியில் வைத்துப் பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.

3. மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை வீட்டில் குடிக்கப் பயன்படுத்தும் பாட்டில்களில், தண்ணீர் கேன்களில் வாங்கிப் பத்திரப்படுத்தக்கூடாது.

4. நாள்பட்ட மருந்துகள், மாத்திரைகள், கெட்டுப்போன பொருள்கள் முதலியவற்றை உடனுக்குடன் வெளியேற்றிவிட வேண்டும்.

5. விஷப்பொருள்கள் தரும் ஆபத்துகளை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். 

6. மாத்திரை, மருந்து போன்றவற்றைக் குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடுவதற்கு முன்னால், பெற்றோரிடம் காண்பித்துவிட்டுச் சாப்பிடப் பழக்குங்கள்.







   
  

இந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் செய்யாதீர்!


மத்திய அரசு தமது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ.) ஜனவரி - 2012லிருந்து 7 சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 8000 கோடிக்கும் அதிகமாகக் கூடுதல் செலவாகும். இதே அளவு அகவிலைப்படி உயர்வை எல்லா மாநில அரசுகளும் வழங்க வேண்டியிருக்கும். சமீபத்தில், தமிழக அரசு 7 சதவிகித அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் எல்லா மாநில அரசுகளுக்கும் சுமார் ரூபாய் 1000 கோடி வரை ஆண்டொன்றுக்கு அதிக செலவாகும். தனியார் துறை ஊழியர்களுக்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு இருக்கும் என்று கணக்கிடலாம். ஆக மொத்தத்தில் சுமார் ரூபாய் 38,000 கோடிக்கும் அதிகமான அதிக பணப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுகிறது. இதனால் உற்பத்தியின் அளவு எந்த விதத்திலும் அதிகரிக்காது.அதிக பணப்புழக்கத்தினால் விலைவாசிகள் மீண்டும் உயர வழி ஏற்படும். இந்த நிலை, முடிவில்லாத ஒரு தொடர். அக விலைப்படி உயர்வு பெறும் ஊழியர்கள் விலைவாசி உயர்வை ஓரளவுக்குச் சமாளிக்க முடியுமென்றாலும் இதைப் பெறாத இதர ஊழியர்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்ன நிவாரணம்? அவர்களும் தங்கள் தினக்கூலியை அதிகரித்தோ, பொருள்களின் விலைகளை உயர்த்தியோ, கட்டணத்தை உயர்த்தியோ விலைவாசி உயர்வைச் சமாளிப்பார்கள். இதனாலும் மீண்டும் விலைவாசிகள் உயருகின்றன. அதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு! மீண்டும் விலைவாசி உயர்வு! முடிவில்லாத தொடர். இதற்கு என்னதான் நிவாரணம்? 

நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவினங்களுக்காக, கடனாக வாங்கும் தொகை பட்ஜெட்டில் மதிப்பிட்டிருப்பது ரூபாய் 5,70,000 கோடி. இதில் இந்த வருஷம் திருப்பிக் கொடுக்க வேண்டிய பழைய கடன் 91000 கோடி ரூபாய். ஆக அரசின் நிகர கடன் தொகை இந்த ஆண்டுக்கு ரூபாய் 479000 கோடி. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்திலேயே மேற்சொன்ன கடன் தொகையில் ரூபாய் 3,70,000 கோடி திரட்ட, அரசு முடிவு செய்துள்ளது.  கீழே அரசின் கடன் சுமையைப் பற்றி ஒரு புள்ளி விபரம் கொடுத்திருக்கிறேன். 


நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் தொகையையும் சேர்த்து 5 ஆண்டுகளில் அரசின் கடன் சுமை 22.40 லட்சம் கோடி ரூபாய். இதில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பழைய கடன் 18.72 லட்சம் கோடி ரூபாய். இந்த நிகர கடன் வருவாயின் பெரும் பகுதியை அரசு அன்றாடச் செலவினங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறது. மூலதனச் செலவு மிகவும் கம்மி.இந்தக் கடன் சுமை ஒவ்வொரு வருஷமும் ஏறிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் பழைய கடனைத் திருப்பித் தருவதற்கே புதிய கடன் தொகை முழுவதும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர வட்டிச் சுமை வேறு! இதற்கும் என்னதான் நிவாரணம்? நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னால் மத்திய அரசு சில கடுமையான, கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.அடுத்து 2 அல்லது 3 வருஷங்களுக்குள் அரசுக்கு எந்தவித மான்யச் செலவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வரியை அதிகரிக்க முடியுமோ, அதிகரித்து எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ குறைத்து அரசின் நிதி நிலைமையைச் சீர்படுத்த வேண்டும்.சென்ற 5 ஆண்டுகளில் அரசின் வருமான வரி, சுங்க வரி மற்றும் கலால் வரி மூலம் வசூலிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 25 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வசூலிக்க முடியாத தொகை அனைத்தும் பெரிய கம்பெனிகள் /பெரிய பணக்காரர்களிடம் இருந்துதான் என்று சொல்லப்படுகிறது. ஏன்? இந்தியாவின் பல நகரங்களில் வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும், சாலைகளில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான வாகனங்களும் எதைத் தெரிவிக்கின்றன? நாட்டின் பொருளாதார வளர்ச்சியினால் ஒரு பிரிவினர்தான் பயன் அடைந்திருக்கிறார்கள். அரசைப் போலவே ஏராளமான இந்தியர்களும் கடன் சுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். நன்கு புலப்படும் உண்மை இது. உலக நாடுகளின் நாணயத் தரத்தை அவ்வப்போது நிர்ணயிக்கும் ஸ்டாண்டர்ட் அண்டு புவர், சமீபத்தில் இந்தியாவின் நாணயத்தரத்தை ஒரு குறியீட்டு எண் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதன்படி இந்தியாவின் புதிய நாணயத் தரம் ஆஆஆ அதாவது 3 பி மைனஸ். இந்தியாவின் பொருளாதார நிலை அபாய கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள். அந்த நிறுவனம் அதற்குச் சொன்ன காரணம் இது: ‘இந்திய அரசின் கடன் சுமையும் நிதிப்பற்றாக்குறையும் உயர்ந்துகொண்டே போகிறது. இந்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டுகிறது.’

இந்த அபாயச் சங்கை நாம் அலட்சியம் செய்ய முடியாது!

 

Saturday, May 12, 2012

நிலவில் பள்ளங்கள் ஏன்?


நிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்?

அஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்திரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீட்டர் குறுக்களவு கொண்ட பள்ளங்கள் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. அதைவிடச் சிறிய பள்ளங்கள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந்தப் பள்ளங்கள் பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் மாற்றம் ஏதுமின்றி, அப்படியே இருக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது  ?

ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரிதான் இந்தப் பூமியிலேயே மிகப்பெரிய ஏரி விஷ்ணு. இதுதான் உலகின் மிகப்பழைமையான ஏரியும் கூட! பூமியில் மேலிருக்கும் தண்ணீரில் 20 சதவிகிதம் பைக்கால் ஏரியின் தண்ணீர் என்றால் எவ்வளவு பெரியது என்று பாருங்கள்! ரஷ்யாவில் தென் சைபீரியா பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரி, அந்த நாட்டுக்குத் தேவையான 90 சதவிகித நீரை வழங்குகிறது. 636 கி.மீ. நீளமும் 80 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் சிறியதும் பெரியதுமாக 300 ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

செஸ் விளையாட்டு எங்கே தோன்றியது ?

செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான். சுமார் 6-ம் நூற்றாண்டில் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடப்பட்ட விளையாட்டுத்தான் செஸ் விளையாட்டாகப் பின்னர் பரிணமித்தது. பல நாடுகளுக்கும் பரவியது. 15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் செஸ் விளையாட்டுக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இன்று நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. 

 

Friday, May 11, 2012

பூமியை நோக்கி சூரியப் புயல்கள்


இப்போதெல்லாம் சூரியனில் அடிக்கடி கடும் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சூரியனின் மேற்புறத்திலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் பயங்கர வேகத்தில் தூக்கி எறியப்படுகின்றன. அந்தத் துகள்கள் பிரம்மாண்டமான முகில் வடிவில் பல சமயங்களிலும் பூமியை நோக்கி வருகின்றன. அந்த முகிலில் அடங்கிய துகள்களின் மொத்த எடை 100 கோடி டன்னாகவும் இருக்கலாம். சூரியனிலிருந்து இப்படி ஆற்றல் மிக்க துகள்கள் வருவதை சூரியப் புயல் என்றும் வருணிப்பது உண்டு. இந்த ஆண்டில் ஏற்கெனவே பல சூரியப் புயல்கள் தோன்றியுள்ளன. சூரியப் புயலின் விளைவாக பூமியில் கடும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டுஆகவேதான் பல செயற்கைக்கோள்கள் தொடர்ந்து சூரியனைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. சூரியப் புயல் தோன்றினால் இந்தச் செயற்கைக்கோள்கள் உடனே எச்சரிக்கை விடுக்கின்றன, இந்தத் தகவலைப் பெறும் அமெரிக்க அமைப்புகள் உடனே உலகெங்கிலும் இது பற்றி அபாய அறிவிப்பை வெளியிடுகின்றன.சூரியனில் ஏற்படும் சீற்றமும் (solar flares) துகள் முகில்களும் (Coronal Mass Ejection) மனித குலத்துக்கு ஆபத்து எதையும் ஏற்படுத்துவதில்லை. அப்படி மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக இருந்தால் பூமியில் என்றைக்கோ உயிரினம் அனைத்தும் அழிந்து போயிருக்கும். ஆனால் சூரியப் புயலினால் ஏற்படும் துணை விளைவுகள் தகவல் தொடர்புகளில் பாதிப்பை உண்டாக்கலாம். மின்சப்ளை பாதிக்கப்படலாம். அந்த வகையில் பெரும் பொருட்செலவு ஏற்படலாம்.சூரியனைப் பார்த்தால் சீறிப் பொங்கி ருத்ர தாண்டவம் ஆடுகின்ற ஒன்றாகத் தோன்றவில்லை. ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் ஆட்டம் போடுகிறது. சூரியனில் தோன்றும் கரும் புள்ளிகளே இதற்குக் காரணம். சூரியனின் ஒளித்தட்டில் அவ்வப்போது கரும்புள்ளிகள் (Sun Spots) தோன்றுகின்றன. இந்தக் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. சூரியனில் கரும்புள்ளிகளே இல்லாத கட்டமும் உண்டு. எனினும் கரும்புள்ளிகள் தென்பட ஆரம்பித்ததும் அது படிப்படியாக அதிகரிக்கும். சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும். பிறகு அவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு கரும்புள்ளிகள் அனைத்தும் அனேகமாக மறைந்து விடும். கரும்புள்ளிகளே இல்லாத கட்டத்தில் தொடங்கி மறுபடி கரும்புள்ளிகளே இல்லாத கட்டம் தோன்றுவதற்கு 11 ஆண்டுகள் ஆகிவிடும். இதைக் கரும்புள்ளிக் காலவட்டம் (Sun Spot cycle) என்று கூறுகிறார்கள்.


சூரியன் மிகப் பிரகாசமாக இருப்பதால் சூரியனின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் விசேஷ கருவிகளைக் கொண்டு பார்த்தால் சூரிய ஒளித்தட்டில் கரும்புள்ளிகளைக் காண முடியும். (வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்படக் கூடாது. கண்பார்வை போய்விடும்). சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள் உண்மையில் கரும்புள்ளிகளே அல்ல. சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் வெப்பம் குறைந்த பகுதிகள் தோன்றும். மற்ற இடங்களுடன் ஒப்பிட்டால் இந்த இடங்களில் வெப்பம் குறைவு என்பதால் இவை கரும்புள்ளிகளாகக் காட்சி அளிக்கின்றன. சூரியனில் ஏற்படும் ஒரு கரும்புள்ளி என்பது சில பூமிகளைப் போட்டு நிரப்பி விடலாம் என்ற அளவுக்குப் பெரியதாக இருக்கும்.  சூரியனில் இப்போது கரும்புள்ளி ளின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இவற்றின் எண்ணிக்கை 58 ஆக இருந்தது. அடுத்த ஆண்டில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டலாம். அப்போது கரும்புள்ளிகளின் எண்ணிக்கை 200 ஆகக் கூட இருக்கலாம்.இப்போதைய காலவட்டத்தில் அதாவது 2008 ஜனவரியில் 4 கரும்புள்ளிகளே இருந்தன. அதன் பிறகுதான் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தன.சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும்போதுதான் சூரியனில் சீற்றம் தோன்றுகிறது. இப்படிச் சீற்றம் ஏற்படும் காலத்தில்தான் சூரியனிலிருந்து ஆபத்தான துகள் முகில் தூக்கி எறியப்படுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் உச்சத்தில் இருக்கும்போது ஒரு நாளில் மூன்று துகள் முகில்கள் அதாவது சூரியப் புயல்கள் தோன்றக்கூடும். ஆனால் இவை எல்லாமே கடும் ஆபத்தை உண்டாக்கக் கூடியவை என்று சொல்ல முடியாது. தவிர, சூரியனிலிருந்து புறப்படும் துகள் முகில் ஒவ்வொரு தடவையும் பூமியை நோக்கித்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது வேறு திசையிலும் செல்வதாக இருக்கலாம்.



சூரியனிலிருந்து கிளம்பும் துகள் முகில் பூமியை வந்தடைய மூன்று முதல் நான்கு நாள்கள் ஆகலாம். சூரியனில் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதற்காகவே செயற்கைக்கோள்கள் உள்ளன. அவை உடனே தகவல் தெரிவிப்பதுடன் சூரியனைத் தொடர்ந்து படம் பிடித்து அனுப்பிக்கொண்டிருக்கின்றன. செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் வருவதால் நிபுணர்களுக்கு துகள் முகில்கள் பற்றி முன்கூட்டித் தகவல் தெரிந்து விடுகிறது.சூரியனிலிருந்து வெளிப்படும் ‘சூரியக் காற்று’ மற்றும் ஆபத்தான துகள் முகில் ஆகியவற்றை பூமியைச் சுற்றி அரண் போல அமைந்துள்ள காந்தமண்டலம் தடுத்து விடுகிறது. அப்படியும் கூட துணை விளைவுகளால் பாதிப்புகள் உண்டு. அதாவது வான்மண்டலத்தில் மிக உயரத்தில் கூடுதல் கதிர்வீச்சு ஏற்படும். குறிப்பாக துருவப் பகுதியில் இது அதிக அளவில் இருக்கும். ஆகவேதான் துகள் முகில் தாக்குதல் பற்றிய அறிவிப்பு வந்ததும் பல விமானங்கள் பாதையை மாற்றுகின்றன். இவை வழக்கமாக அமெரிக்காவிலிருந்து வட துருவம் வழியே ஹாங்காங் செல்பவை. துகள் முகில் தாக்குதலால் துருவப் பகுதிகளுக்கு மேலே உள்ள பகுதியில் விமானங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் இடையிலான தகவல் போக்குவரத்து பாதிக்கப்படும் ஆபத்து உண்டு. ஆகவே தான் விமானங்களின் பாதைகள் மாற்றப்படுகின்றன.பயங்கர மின்னல் தாக்கினால் என்ன ஏற்படுமோ அந்த மாதிரி விளைவை சூரியப் புயல் உண்டாக்குகிறது. எனவே பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களின் கருவிகள் செயல்படாமல் போகலாம். உதாரணமாக 1997-ம் ஆண்டில் டெல்ஸ் டார் 401 என்ற செயற்கைக்கோள் அடியோடு செயல்படாமல் போனது. தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக செயல்படாமல் போன செயற்கைக்கோள்கள் பல உண்டு. டிவி ஒளிபரப்பு முதல் பங்கு மார்க்கெட் பேரங்கள் வரை பலவற்றுக்கும் நாம் செயற்கைக்கோள்களை நம்பியிருக்கிறோம். ஒருசமயம் சூரியப் புயலினால் ஒரு செயற்கைக்கோள் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவில் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்பட்டது.உலகில் பல்வேறு இடங்களில் மின்சார சப்ளை கேபிள்கள், டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்படலாம். 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவில் மின்சார சப்ளை பாதிக்கப்பட்டு 60 லட்சம் மக்களுக்குப் பல மணி நேரம் மின் சப்ளை கிடைக்காமல் போவிட்டது. ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எரிவாயு, பெட்ரோலிய குரூட் எண்ணெய் ஆகியவற்றை அனுப்புவதற்காகத் தரை வழியே அமைக்கப்பட்ட நீண்ட தூரக் குழாய்களில் மின்சாரம் பாய்ந்து அவை பாதிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜுன் மாதம் ரஷியாவில் எண்ணெய்க் குழாய் வெடித்தது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

பூமிக்கு மேலே சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. பூமியை ஓயாது சுற்றிக்கொண்டிருக்கும் இந்த சர்வதேச நிலையத்தில் எப்போதும் ஆறு விண்வெளி வீரர்கள் உள்ளனர். துகள் முகில் இந்த நிலையத்தைத் தாக்கினால் விண்வெளி வீரர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆகவே துகள் முகில் எச்சரிக்கை விடப்பட்டால் இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பான அறைக்குள் ஒளிந்துகொள்வர்.  அடுத்த ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய பிறகு அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து சூரியனில் சீற்றம் குறையும் போது நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

Thursday, May 10, 2012

தண்ணீரையும் விஷமாக்கிவிட்டோம்....


நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் விஷமாகிவருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 385 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மிகுந்து காணப்படுகிறது; 267 மாவட்டங்களில் ஃபுளோரைடு மிகுந்து காணப்படுகிறது; 158 மாவட்டங்களில் தண்ணீர் உப்பாக மாறிவருகிறது; 63 மாவட்டங்களில் துத்தநாகம், குரோமியம், காட்மியம் போன்ற உலோகங்கள் மிகுந்து காணப்படுகிறது.இது என்ன அவ்வளவு பெரிய செய்தியா? இவை எல்லாம் தண்ணீரில் மிகுந்து இருந்தால் என்னவாகும் என்று ஒருவேளை நீங்கள் கேட்டால், அதற்கான பதில்... ஆம்; முக்கியமான செய்திதான். எந்த அளவுக்கு முக்கியமானது என்றால், நீங்கள் உங்கள் உயிருக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அந்த அளவுக்கு.தண்ணீரை வெற்றுத் திரவமாக நாம் பார்த்தாலும், ஏராளமான காரணிகள் அதில் உண்டு. குறிப்பாக, இரும்பு, அமோனியம், மாங்கனீஸ், மெக்னீசியம், சல்பேட், சல்பைடு, தாமிரம், துத்தநாகம், குளோரைடு, ஃபுளோரைடு, பேரியம், கால்சியம், செலினியம் போன்ற வேதியியல் காரணிகள். இவை அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து இருக்கும். தண்ணீரில் இந்த வேதியியல் காரணிகள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை இருக்கலாம். இதற்கென ஒரு வரையறை உண்டு.உதாரணமாக, ஒரு லிட்டர் தண்ணீரில், பாதரசம் 0.001 மில்லி கிராம் இருக்கலாம்; ஈயம் 0.1 மில்லி கிராம் இருக்கலாம். ஆனால், இந்த வரையரையைத் தாண்டும்போது, அந்தத் தண்ணீர் குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும். அதாவது, அந்தத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொல்லும் விஷமாக மாறிவிடும். அப்படி விஷமாகிவருவதைத்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறது அரசு.

தண்ணீர் நஞ்சான கதை

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியை உள்ளடக்கிய இந்தியாவில், தண்ணீர் வளம் குறைவுதான். இந்தியா ஆண்டுக்கு 40 கோடி ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவின் மூலம் பெறுகிறது. 18 கோடி ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை நதிகள் மூலமாகவும் 6.7 ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை நிலத்தடியில் இருந்தும் நாம் பெறுகிறோம். நிலத்தடி நீராதாரம் நமக்கு அரிதானது என்பதாலேயே, நம்முடைய பாரம்பரிய நீர்ப் பயன்பாடுகள் நீர்நிலைகளைப் பிரதானமாகக்கொண்டு அமைந்து இருந்தன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின் - குறிப்பாக தொழில் புரட்சி, பசுமைப் புரட்சிக்குப் பின் இந்தக் கதை மாறியது. நீர்நிலைகள் மூலமான நீர்ப் பயன்பாடு குறைந்து, நிலத்தடி நீர்ப் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமான நேரடி உறவுச் சங்கிலி அறுந்துபோகத் தொடங்கியது. தண்ணீர் நஞ்சாக மாற இதுவே அடித்தளம்.இந்தியாவில் நிலத்தடி நீர் விஷமாக மூன்று முக்கியக் காரணங்கள்: வேளாண் துறை, தொழில் துறை, குப்பைகள் - கழிவுகள்!

விஷப் புரட்சி

நிலத்தடி நீர் விஷமாக வேளாண் துறையை முக்கியமான காரணமாகக் குறிப்பிடுவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. பல லட்சம் கோடிகளைச் செலவழித்தும் அரசின் தவறான கொள்கைகளால், இந்தியாவில் வெறும் 15 சதவிகித நிலங்கள் மட்டுமே கால்வாய்ப் பாசன வசதியைப் பெற்று இருக்கின்றன. அதே சமயம், பசுமைப் புரட்சிக்குப் பிறகு, கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனம் என்று விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி, நிலத்தடி நீர்ப் பாசனத்தை ஊக்குவித்து, பாசனத்தில் தன்னுடைய பொறுப்பில் இருந்து தப்பிக்க ஆரம்பித்தது அரசு. விளைவு... இன்றைக்கு 50 சதவிகித நிலங்கள் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுபவை. மொத்த நிலத்தடி நீர்ப் பயன்பாட்டில், 75 சதவிகிதம் விவசாயத் துக்குச் செல்கிறது. கால்வாய்ப் பாசனம் மூலம் நீர் பெறும் நிலங்கள் மேலும் மேலும் குறைந்துகொண்டே இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 35 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய்ப் பாசனத்தில் இருந்து ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனத்துக்கு மாறி இருக்கின்றன. இந்த அதீதப் பயன்பாடு நிலத்தடி நீர்மட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்தது (தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் 1,000 அடி ஆழத்துக்குத் தண்ணீர் சென்றுவிட்டதாகச் சொல்கி றார்கள் விவசாயிகள்). இப்படி, தண்ணீர் ஆழத்துக்குச் செல்லச் செல்ல, அதில் உப்பு நீர் சேர்கிறது. ஆழத்தில் உள்ள வேதியியல் காரணிகளின் இயல்புக்கு ஏற்ப தண்ணீரின் இயல்பும் மாறுகிறது. இது ஒருபுறம். இன்னொருபுறம், அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு. வயல்களில் கொட்டப்படும் பல்லாயிரக்கணக்கான டன் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணில் ஊடுருவி நீரை நஞ்சாக்குக்கின்றன. நீர்வளத் துறை அறிக்கையில், அதிர்ச்சி அளிக்கக்கூடிய இன்னொரு விஷயம், மாநகரங்களுக்கு இணையாக கிராமப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் நஞ்சாகிவருவது!



கண்காணிப்பின்மையின் விலை

ஒரு நாடு தொழில் வளர்ச்சிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால், நாட்டைத் தொழிலதிபர்களுக்கு அப்படியே திறந்துவிட்டால் என்னவாகும்? அதன் கொடூர விளைவுகளைத்தான் நாம் இப்போது எதிர்கொள்கிறோம். தொழிற்சாலைகள் எங்கெல்லாம் மிகுந்து இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நீர் நஞ்சாகி இருக்கிறது. (அம்பத்தூர் நினைவுக்கு வருகிறதா?) தொழிற்சாலைகள் மூலமான பாதிப்பு இரு வகைகளில் நடக்கிறது. ஒன்று, நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதன் மூலம் நதி நீரும் நஞ்சாகி, மண்ணிலும் அது ஊடுருவுவது. இன்னொன்று, ஆலை அமைந்து இருக்கும் பகுதியைச் சுற்றி நிலத்தடி நீர் நஞ்சாவது. தொழிற்துறையினரின் அதீதமான, கட்டுப்பாடற்ற செயல்பாடும் அரசின் கண்காணிப்பின்மையும் நீரில் நஞ்சாக மாறுகின்றன!

கழிவுக் கலாசாரம்

இவை தவிர்த்து குப்பை - கழிவு மேலாண்மையில் நாம் காட்டும்  அலட்சியத்துக்கு நீரை விஷமாக்குவதில் முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இந்தியா லட்சக்கணக்கான டன் குப்பைகளையும் கழிவுகளையும் உற்பத்தி செய்கிறது (டெல்லியில் மட்டும் 8,000 டன் குப்பைகள் உற்பத்தியாவதும் அவற்றைப் பொறுக்க 3.5 லட்சம் பேர் இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?) தவிர, 105 நாடுகள் இந்தியா வைக் குப்பைத் தொட்டியாகப் பயன் படுத்துகின்றன. குஜராத்தின் புமோபோ கோலா, குப்பை இறக்குமதித் துறை முகமாகவே மாறிவிட்டது. தண்ணீரை நஞ்சாக்குவதில் ரசாயனக் குப்பைகளுக்கு - குறிப்பாக மின்னணுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகளுக்கு - முக்கியப் பங்கு உண்டு. எந்தப் பொறுப்பும் இல்லாமல், பழத் தோலில் இருந்து செல்பேசி ரேடியம் பேட்டரிகள் வரை பாலிதீன் பையில் திணித்து குப்பைத் தொட்டியில் வீசும் கலாசாரம் நீரில் நஞ்சாகப் பிரதிபலிக் கிறது!

உள்ளாட்சிகளின் உபயம்

இப்படி நஞ்சாகி வெளியே வரும் நீரை விநியோகிக்கும்போது, 'எங்களால் இயன்ற உபயம்’ என்று உள்ளாட்சி அமைப்புகளும் கிருமிகளைச் சேர்க்கின்றன. சென்னை மாநகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் பல இடங்களில் குடிக்கத் தகுதியற்ற தாக (சாக்கடைக் கழிவுகளும் தொற்றுநோய்க் கிருமிகளும் நிரம்பியதாக) இருப்ப தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஒரு மனு அம்பலமாக்கி இருப்பது ஓர் உதாரணம். 2007 முதல் மேற்கொள்ளப்பட்ட சுமார் 440 குடிநீர்ப் பரிசோதனைகளில், சென்னைக் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் குடிக்கத் தகுதியற்றதாக இருந்ததாகச் சொல்லி இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். சுமார் 2,930 கி.மீ. நீளம்கொண்ட சென்னைக் குடிநீர்க் குழாய்களின் சராசரி வயது 50 என்பதும் 166 கி.மீ. அளவுக்குக் குழாய்கள் உடைந்து சீர் செய்யும் நிலையில் இருக்கின்றன என்பதும் சுகாதாரம் இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது என்பதைச் சொல்லும்.

சுத்திகரிப்பா, ஹி...ஹி...

இந்தப் பிரச்னைகளில் இருந்தெல்லாம் தப்பித்துக்கொள்ள சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒரு நல்ல தீர்வு என்று நீங்கள் நம்பினால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள் கிறீர்கள் என்று அர்த்தம். பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் தண்ணீரிலும் பெருமளவு கிருமிகள் இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறது இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம். தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தித் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சம் 20 லிட்டர் கேன்கள்; 25 லட்சம் 1 லிட்டர் 2 லிட்டர் பாட்டில்கள்; 20 லட்சம் 250 மி.லி. பாக்கெட்டுகள் தண்ணீர் விற்பனையாகிறது. இவ்வளவு பெரிய துறையைக் கண்காணிக்க என்று ஒரு வலுவான அமைப்பு நம்மிடம் இல்லை. ஆகையால், அவர்கள் வைத்ததுதான் 'சுத்தம்’.இதேபோல, நீரைச் சுத்தப்படுத்த ஒரே விதமான சுத்திகரிப்பு அமைப்பு போதுமானது அல்ல; அது நீரின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, அதீத உப்பைச் சுத்திகரிக்க 'ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்’ அமைப்பு தேவைப்படும். அதீத இரும்பைச் சுத்திகரிக்க 'அயர்ன் ரிமூவர்’ அமைப்பு தேவைப்படும். ஆக, ஒரே ஓர் அமைப்பைக்கொண்டு, சுத்திகரித்த தண்ணீரை அருந்தலாம் என்று நினைப்பதும் கண் துடைப்புதான்.இந்தச் சுத்திகரிப்பு அமைப்புகளை எல்லாம் நம்புவதற்கு, தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து பானையில் ஊற்றிவைத்து அருந்தும் பழைய முறை மேலானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால், இவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகள்தான். விஷமாகும் நீரின் இயல்பை மாற்ற நாம் அடிப்படையையே மாற்ற வேண்டும்.சுகாதாரமற்ற நீரால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள்; இந்தியாவின் பெரும்பாலான மரணங்கள் தொற்றாநோய்கள் எனப்படும் புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, இதய நோய் உள்ளிட்டவற்றால் நிகழ்கின்றன என்ற செய்திகளின் பின்னணியில், நிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற வேண்டும் என்ற நம்முடைய பிரதமரின் சமீபத்திய அறைகூவலை நினைத்துப்பாருங்கள்... கூசவில்லை?

சமஸ்
விகடன்     
  

மண்டபம் பார்க்க போறீங்களா?


இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத்து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இருந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கும் அந்த மண்டபம் புக் ஆகி இருந்ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப்பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது திருமண மண்டபம் கட்டுகிறார்கள்" என்றார் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இன்று சாதாரண வசதிகள் கொண்ட, சிறிய திருமண மண்டபங்களுக்குக் கூட நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாடகை கேட்கிறார்கள். இதைத் தவிர மின் கட்டணம், அலங்காரம், தண்ணீர் அது, இது என்று சொல்லி இன்னும் ஆயிரக்கணக்கில் கறந்துவிடுகிறார்கள். எனவே, திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்வதை கவனமுடன் செய்ய வேண்டியது மிக அவசியம்.

சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் திருமணம் நடத்த வேண்டுமென்றால், நகரத்தின் எந்த ஏரியாவில் மண்டபம் வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனை மாப்பிள்ளை வீட்டாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நலம். பொதுவாக எல்லா திருமண மண்டபங்களிலும், டோக்கன் அட்வான்ஸ் என்பதெல்லாம் கிடையாது. புக் பண்ணும்போதே மொத்த தொகையையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதன் பின்னால், கேன்சல் செய்தால் பணம் வாபஸ் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே, மண்டபத்தை புக் பண்ணுவதற்கு முன்னால், தீர ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.திருமணத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மண்டபத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண ஹாலில் எத்தனைப் பேர் அமரலாம், சாப்பாட்டுக் கூடத்தின் கொள்ளவு என்ன, தங்கும் அறைகள், குளியலறைகள், கழிப்பறைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனவா, குளியலறைகளில் வெந்நீர் வசதி உண்டா, குடி தண்ணீருக்கு என்ன ஏற்பாடு போன்றவற்றைத் தெரிந்து கொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.குறிப்பிட்ட மண்டபத்தில் தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், மூன்று, நான்கு முகூர்த்த நாட்களை முடிவு செய்துக் கொண்டு, அதில் மண்டபம் கிடைக்கக் கூடிய நாளில் முகூர்த்தத்தை முடிவு செய்யலாம். இல்லையெனில் முகூர்த்த நாளை முடிவு செய்துகொண்டு, அந்த நாளில் கிடைக்கிற மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.

மண்டப நிர்வாகமே மண்டபத்தில் உள்ள அறைகளுக்கான பூட்டு, சாவிகளைக் கொடுப்பார்கள், இல்லை நாமே எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எப்படியென்றாலும், எந்த அறை யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை முன்னதாகவே முடிவு செய்து, சம்மந்தப்பட்டவர்களிடம் பூட்டு, சாவியை ஒப்படைத்துவிட்டு, டூப்ளிகேட் சாவிகளை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொண்டால், எதிர்பாராமல், சாவி தொலைந்து போனாலும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.மண்டபத்தில் இருக்கும் அறைகளுக்கு நிர்வாகத்தினரே பூட்டும், சாவியும் கொடுப்பார்கள் என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கும் அறைகளைப் பூட்டுவதற்கு, நாமே சொந்தமாக பூட்டு, சாவி எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்துவது நல்லதொரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. அடுத்ததாக, கார் பார்க்கிங் வசதி, எமர்ஜென்ஸி வழி, சமையல் கூடத்தில் உள்ள வசதிகள் போன்றவற்றை நேரில் பார்த்து, ஏற்பாடு செய்வது நல்லது.மண்டப அலங்காரம், வாழை மரம், மின் அலங்காரம், குடி தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கான தண்ணீர் போன்றவை மண்டப வாடகையில் அடங்குமா அல்லது உபரியாக நாம் பணம் செலவழித்து செய்ய வேண்டுமா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண் டும். சில மண்டபங்களில், இந்த ஏற்பாடுகளுக்கு வெளியாரை அனுமதிப்பதில்லை. அதற்கேற்ப திருமண காண்டிராக்டரிடம் பேசி முடிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக போக்குவரத்து இடைஞ்சலாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்துவதில்லை. ஆனால், நீங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால், அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திலிருந்து ஊர்வல அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும்.


கௌதம் ராம்

Wednesday, May 09, 2012

எனது இந்தியா! (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் !) - எஸ். ராமகிருஷ்ணன்....


குத்புதீன் ஐபக் ஆரம்பித்து கட்டி முடிக்​காமல் போன மினாரையும் இல்ட்டுமிஷ் கட்டி முடித்தார். வெள்ளி நாணயத்தை அமல்​படுத்தி நாடெங்கும் ஒரேமுறை பணப் பரிமாற்றம் இருக்கும்படி செய்தவர் இல்ட்டுமிஷ். இவரது மகன்கள் அரசாட்சி செய்யத் திறமையற்றவர்கள் என்பதால், அவருக்குப் பின் அவரது மகள் ரஷியா பேகம், டெல்லி சுல்தான் ஆனார்.குத்புதீன் ஐபக்கின் வாழ்க்கை கோரி முகமது​வால் மாற்றம் அடைந்ததைப் போல... மாலிக் கபூரின் வாழ்க்கை, அலாவுதீன் கில்ஜியால் எழுச்சி அடைந்தது. மாலிக் கபூர் என்றால் எஜமானனுக்கு உரி​யவர் என்றுபொருள். அவர் ஓர் அரவாணி. இவர் எங்கே பிறந்தார்? பெற்றோர் யார்? என்பதைப் பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஒரு வேசியின் பிள்ளை என்றும், இந்து வணிகரின் மகன் என்றும் இருவிதமான தகவல்கள் இருக்கின்றன. ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார். 1296 முதல் 1316 வரை டெல்லியை ஆட்சி செய்தார் கில்ஜி. அலாவுதீன் கில்ஜியின் அவையில் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமீர் குஸ்ரு அரச கவியாக இருந்தார். இவர்தான், சிதார் இசைக் கருவியை உருவாக்கியவர். குஸ்ரு...  வரலாற்று ஆசிரியரும்கூட! இவர் எழுதிய 'தாரிக்கி அலாய்’ என்ற நூல் கில்ஜியின் அரசாட்சியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.

குஜராத்தில் உள்ள காம்பத் நகரை அலாவுதீன் கில்ஜியின் படை வெற்றிகொண்டபோது, மன்னருக்குப் பரிசளிக்க ராணி கமலாதேவியைத் தூக்கிச் சென்றனர். அப்படி ராணியோடு அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவர்தான் மாலிக் கபூர். காம்பத் நகரில் உள்ள ஒரு வணிகரின் வீட்டில் அவர் அடிமையாக இருந்தார். ஆயிரம் நாணயம் தந்து வாங்கப்பட்டதால் அவரை ஹசார் தினார் என்று அழைத்தனர் எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் டெல்லியில் மது தடை செய்யப்பட்டு இருந்தது. காபூலில் இருந்து மது கடத்திக் கொண்டுவந்தவர்களைப் பிடித்து, உயிரோடு மண்ணில் புதைத்த சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. பெண்கள் மீது கில்ஜி அதீத மோகம்கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அதனால், கமலா தேவியை மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டதோடு அவளோடு கொண்டுவரப்பட்ட அடிமை மாலிக் கபூரை தனது படுக்கைத் தோழனாக வைத்துக்கொண்டார்.கில்ஜியின் ஆட்சியில் பொது மக்களின் அன்றாடத் தேவைக்கான தானியங்கள், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஏழு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதுபற்றி, பேராசிரியர் அருணன் தனது கட்டுரை ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.கில்ஜியின் முதல் உத்தரவானது​ கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான அடிப்படை விலையை அரசே தீர்மானிக்கும் என்பதுதான். மழை பெய்தாலும் பொய்த்துப்​போனாலும் விலை மாறவே மாறாது. அதுபோலவே, கள்ளச் சந்தையை தடுக்க சந்தைகளின் கட்டுப்பாட்​டாளர் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது கண்காணிப்பில் விற்பனை நடக்கும். தானியங்களைப் பதுக்கியவருக்கு மட்டும் இல்லாமல், அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை அளிக்கப்படும். அதுபோலவே, வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தத் தானியம், சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் விநியோகிக்க உத்தரவு இடப்பட்டது.விவசாயிகள், தங்கள் பொருட்களை நேரடியாகத் தாங்களே விற்பனை செய்துகொள்ளும் சந்தை உருவாக்கப்பட்டது. எல்லாவற்றையும்விட, அன்றாடப் பொருட்களின் சந்தை நிலவரம் பற்றி அரசுக்கு நேரடியாகத் தகவல்கள் ஒவ்வொரு நாளும் தரப்பட வேண்டும் என்றும் கில்ஜி உத்தரவிட்டார். இதன் காரணமாக, தானிய விலை கட்டுக்குள் இருந்தன.


அதுபோலவே, தனது படையில் உள்ள ஒட்டுமொத்தப் படை வீரர்களின் பெயர் விவரங்களை முறையாகப் பட்டியலிட்டு, அவர்களுக்கு மாதச் சம்பளம் தரும் முறையும் கில்ஜி அறிமுகம் செய்தார். ஒரு பக்கம் இதுபோன்ற சீர்திருத்தங்களைச் செய்த கில்ஜி, மறு பக்கம் கோயில்களை இடித்துக் கொள்ளையிட்டு பொருட்களைக் குவிப்பதிலும் ஆர்வம் காட்டினார். இவரது ஆட்சிக் காலம் முழுவதும் படையெடுப்புகளால் நிரம்பி இருக்கிறது.அடிமையாக வந்து சேர்ந்த மாலிக் கபூர், கில்ஜி​யின் காதலியைப் போல நெருக்கமாக இருந்தார். அதை, வெளிப்படையாகவே கில்ஜி​யின் மனைவி கண்டித்தார். ஆனால், கில்ஜி கண்டு​கொள்ளவில்லை. தனக்கு விருப்பமான அவரைப் படைப் பிரிவின் உதவி அதிகாரியாக நியமித்தார். சில ஆண்டுகளுக்குள் மாலிக் கபூர், கில்ஜியின் தளபதிகளில் ஒருவரானது அவரது நெருக்கமான உறவால்தான் என்கிறார்கள்.டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தன்வசப்​படுத்திச் சூறையாடிய கில்ஜி, தென்னிந்திய அரசுகளை ஒடுக்கி செல்வத்தைக் கொள்ளையடிக்க மாலிக் கபூர் தலைமையில் தனது படையை அனுப்பிவைத்தார். தேவகிரி ராஜ்ஜியம், மைசூர், வாரங்கல், துவாரசமுத்திரம் எனச்  சூறையாடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தான் மாலிக் கபூர்.அப்போது, பாண்டிய நாட்டு மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு, சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என இரண்டு வாரிசுகள் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன், பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன், ஆசை​நாயகியின் மகன். வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதை எதிர்த்த சுந்தர பாண்டியன், தனது தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையில் முடி சூட்டிக்கொண்டான். இதனால், சகோதரர்களுக்கு இடையே போர் மூண்டது.

இதில், சுந்தரபாண்டியன் தோல்வி அடைந்து ஓடிவிட்டான். பிறகு, அரசாட்சியை மீட்க மாலிக் கபூரின் உதவியை நாடினான். மாலிக் கபூர் தனது படையுடன் வந்து வீரபாண்டியனை வெற்றிகொண்டதோடு, சுந்தரபாண்டியனையும் அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்​பிடத்​தக்கது.மாலிக் கபூர், மதுரையைத் தாக்கியபோது மதுரை கோயிலில் யானை மட்டுமே மிஞ்சி இருந்தது. அதைக் கைப்பற்றியதோடு, கோயிலுக்குத் தீ வைத்துவிட்டு அதுவரை கைப்பற்றிய பெரும் செல்வத்துடன் டெல்லி புறப்பட்டான். 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், கோகினூர் வைரம், தங்க நாணயங்கள், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் டெல்லி வந்த மாலிக் கபூருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனை​வரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தினார் சுல்தான் அலாவுதீன். இதற்குப் பிறகு, 'மாலிக் நைப்’ என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக, அவரது நினைவாற்றல் குறையத் தொடங்கியது. அவர், அரசாட்சியில் இருந்து ஒதுங்கத் தொடங்கவே, நாட்டில் நிர்வாகக் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினார்.


அடிமையாக, ஒரு வேளை உணவுக்குக்கூட அடுத்தவரை நம்பி இருந்த மாலிக் கபூருக்கு, அதிகார போதை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது. எதிர்ப்பவர்களை எல்லாம் கொடூரமாகக் கொன்று குவித்த மாலிக் கபூர், டெல்லியைத் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக்கொண்டே அவனை மடக்கினர்.டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டது சரித்​திரம் எனும் பேராறு. இவை, காலத்தின் வெறும் சுழிப்புகள்தான் என்பதுபோல அந்த ஆறு நிசப்தமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அதிகாரத்துக்கான பேராசை தற்காலிகமாக ஒருவனை உயர்த்திவிடக்கூடும். ஆனால், அவனது வீழ்ச்சி எப்போதுமே படுமோசமானதாக இருக்கும் என்பதுதான் வரலாறு கற்றுத்தரும் பாடம்! 

விகடன் 

Tuesday, May 08, 2012

சந்தோஷம் எங்கே?


* காலையில் எழுந்ததும் கடவுளுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லி விட்டு ‘ஹேப்பி இன்று முழுவதும் ஹேப்பி’ என்று இன்றைய நாளைத் துவக்குங்கள்.

* உண்மையான சந்தோஷம் எது என கண்டுக் கொண்டால், எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம்.

* நம்முடன் இருப்பவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டால், நாம் சந்தோஷத்துடன் இருக்க முடியும்.

* நம்முடன் இருப்பவர்களிடம் கூடுமானவரை உண்மையாக இருப்போம்.
* மனதில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது; செய்யக்கூடாது. மனசாட்சிப்படியே பேச, செய்ய வேண்டும்.

* சிந்தனையில் முதுமையும், செயலில் இளமையும் வேண்டும்.

* பணம் சம்பாதிப்பதற்கு முன் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். (கடன் வாங்காமல் இருப்பது சாலச் சிறந்தது.)

* நம் நேரத்தை விரயமாக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.

* முக்கிய தருணங்களில் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. பேசாமலேயும் இருக்கக் கூடாது.

* மற்றவர் உணர்வை நாம் மதித்தால் நம் உணர்வு மதிக்கப்படும்.

* நல்ல யோசனையும், முடிவும் உரிய தருணத்தில் எடுக்காவிட்டால் பயனற்றதே.

* எதிர்மறையான பேச்சு, சிந்தனை உடையவர்களின் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

* ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழப் பழகினால், எப்போதும் சந்தோஷம் நம்மிடமே!




பார்வதி கோவிந்தராஜ்