Search This Blog

Sunday, March 17, 2013

சாவேஸ் - ஒரு சகாப்தத்தின் முடிவு!


தம் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவையும், கடைசி இரு ஆண்டுகளில் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடிய ஹியூகோ சாவேஸ் மார்ச் 5ம் தேதி அதிகாலை மரணமடைந்தார். மிடுக்கான ராணுவ உடையில் உள்ள சாவேஸின் உடலைக் காண அயல் நாட்டுப் பிரதம மந்திரிகளும் அதிபர்களும் இளவரசர்களும் வரிசை வரிசையாகத் திரண்டு வந்திருந்தனர். வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸில், ‘சாவேஸ் உங்களை நேசிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட பதாகையை உயர்த்தியபடி சாமானியர்கள் ஊர்வலம் சென்றனர். கட்டுப்படுத்தமுடியாமல் பலர் வெடித்து அழுது கொண்டு இருந்தனர்.வெனிசூலாவின் வரலாற்றைத் திருத்தி எழுதிய சாவேஸைப் புதைக்க வெனிசூலாவுக்கு மனமில்லை. எனவே, ஹோசிமினையும் லெனினையும் மாவோவையும் போல் அவரையும் கண்ணாடிப் பெட்டிக்குள் பாடம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிவரை சாவேஸ் எங்களுடன் இருக்கவேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு" என்கிறார் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ. சாவேஸின் மரணச் செய்தியை கண்கள் கலங்கியபடி அறிவித்தவர் இவரே. மக்கள், சாவேஸை இனி எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்" என்கிறார் இவர். தற்போது தாற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றிருக்கும் நிகோலஸ் மதுரோவிடம்தான் சாவேஸ் சிகிச்சைக்கு முன்பு பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார்.

தமக்கு புற்றுநோய் உள்ளதை ஜூன் 2011ல் முதல் முறையாக சாவேஸ் அறிவித்தார். அவருடைய அரசியல் ஆசானும் தோழருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சரியாகி விட்டதாகக் கடந்த ஆண்டு சாவேஸ் அறிவித்தார். கூடவே, ஒன்பது மணி நேரம் தொடர்ச்சியாக உரையாற்றி தம் உற்சாகத்தையும் துடிப்பையும் வெளிப்படுத்தினார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் நம்பிக்கையுடன் சாவேஸுக்கு வாக்களித்து அவரை மீண்டும் பதவியில் அமர வைத்தனர். மக்களின் நம்பிக்கையை சாவேஸ் பொய்யாக்கியது இதுவே முதல் மற்றும் கடைசி முறை.மற்றபடி, ஒரு வாழ்நாளில் சாதிக்க முடியாத பலவற்றை சாவேஸ் தமது 14 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார். சில உதாரணங்கள்: கிட்டத்தட்ட பத்து லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. வீடற்ற ஏழைகளுக்கு இருபது லட்சம் வீடுகள் கட்டப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,20,000 பேருக்கு வீடு கிடைத்துள்ளது. குடிசைகளிலும் சேரிகளிலும் வாழ்வோரின் எண்ணிக்கை முன்பிருந்ததைக் காட்டிலும் 70 சதவிகிதம் குறைந்துள்ளது. வேலையில்லாப் பிரச்னை, வறுமை, குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.

மருத்துவத்துக்கு கியூபர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார் சாவேஸ். 14,000 கியூப மருத்துவர்கள் வெனிசூலாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 11,000 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. மருத்துவத்துக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான வெனிசூலா ஏழைகள் முதல் முறையாக நவீன மருத்துவ வசதிகள் பெற்றனர்.  மூன்றாம் உலக வறுமை நாடாக இருந்த வெனிசூலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. எண்ணெய் உள்ளிட்ட வளங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றின் பலன்களை மக்கள் நேரடியாக அனுபவித்தனர். சோஷலிசக் கொள்கைகளை உரக்க அறிவித்து மக்களின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டார் சாவேஸ். இவற்றையெல்லாம் அவர் வோட்டுக்காகத்தான் செய்தார் என்னும் குற்றச்சாட்டை மறுக்கிறார் வரலாற்றாசிரியர் தாரிக் அலி. மேற்கத்திய உலகம் இப்படியொரு தவறான கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வோட்டுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக அவர் நடந்து கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவுடன் நட்புடன் இருந்திருக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களை வரவேற்று இருக்க வேண்டும். சாவேஸ் அப்படி செய்யவில்லை" என்கிறார் தாரிக். நேர்மாறாக, ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று ஐ.நா. சபையில் வைத்து அழைக்கும் அளவுக்கு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சாவேஸ் எதிர்த்திருக்கிறார். சாவேஸின் நோக்கம் ஒன்றுதான். அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தைக் குறைந்த பட்சம் லத்தீன் அமெரிக்காவிலும் முடிந்தவரை உலகம் முழுவதிலும் இருந்து அகற்றவேண்டும். தமது அரசியல் எதிரியை அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் அவர் கையாண்டார். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கியூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத் தான் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டனர். மக்களை வழிநடத்த காஸ்ட்ரோவும் சாவேஸும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றுதான். சோஷலிசம். 2002ல் சாவேஸுக்கு எதிரான ஆட்சிக் கலைப்பு அமெரிக்க ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட போது, பெரும் அளவிலான பெண்கள் வீதிகளில் திரண்டு வந்து சாவேஸை ஆதரித்தார்கள். சாவேஸ், பெண்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு புரட்சியும் வெற்றி பெறமுடியாது.’ எனவேதான், வீட்டில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பெண்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரித்து வயதான காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கான வழிமுறைகளைச் செய்தார் சாவேஸ். 

தமது கடைசி தேர்தலில் ஹியூகோ சாவேஸ் பிரசாரம் செய்யவில்லை. வோட்டுக் கேட்கவில்லை. ஒருமுறைகூட மக்களை அவர் சந்திக்கவும் இல்லை. இருந்தபோதும் இதுவரை இல்லாத பெரும் வெற்றியை மக்கள் அவருக்கு ஈட்டிக் கொடுத்ததற்கு ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஹியூகோ சாவேஸின் வெற்றி என்பது உண்மையில் தமது வெற்றியே என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். சாவேஸின் மரணம் என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதையும் அவர்கள் இப்போது உணர்கிறார்கள்.

மருதன்

அருள்வாக்கு - மனஸ்!


நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுதுகிறாய், தெரிந்து கொள்கிறாய், எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுகிறாய். ஆனால், இதை எல்லாம் செய்யும் உன் மனஸ் என்னவென்று உனக்குப் புலப்படுகிறதோ? அதை நிறுத்தி வைத்து இன்னவென்று தன்னைத்தானே பார்த்து அறிந்து கொள்ளும்படி பண்ண முடிகிறதோ?

இந்த நிமிஷம் நல்லதாய்த் தெரிகிற மனஸ் அடுத்த நிமிஷம் மஹா கெட்டதாய் விடுகிறது. இந்த செகண்ட் சந்தோஷமாயிருக்கும் மனஸ் அடுத்த செகண்ட் துக்கம் கொண்டாடுகிறது. இந்த க்ஷணம் ஏதோ கொஞ்சம் சாந்தமாயிருக்கிற மாதிரி தோன்றுகிற இந்த மனஸு அடுத்த க்ஷணம் அப்படியிருக்குமா என்று தெரியவில்லை. இந்த மனஸ் என்பது என்ன? புரியவே இல்லை. ‘இதனால்தான் ஜீவனுக்கு எல்லா அனுபவமும் ஏற்படுகின்றன. இது வேலை செய்யாமல் தூங்கிப் போனால் அல்லது மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் எந்த அநுபவமுமேயில்லை’ என்பதால் இதுவேதான் நாம் என்று தோன்றுகிறது.

தூக்கத்தின்போது, மூர்ச்சையின்போது உனக்கு எந்த அநுபவமும் இல்லை என்பது சரி. நாமிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியத்தான் இல்லை. ஆனால், நீ அப்போது நிஜமாகவே இல்லாமல் போய்விட்டாயா, என்ன? அப்படியானால், தூக்கத்துக்கு அப்புறம் எப்படி முழித்துக் கொண்டாய்? தூக்கம் கலைந்து எழுந்த அப்புறம் அப்படி ஜடமாகக் கிடந்ததற்கும் சேர்த்து வைத்து எப்படிக் காரியம் செய்ய ஆரம்பித்தாய்?

மூர்ச்சையைப் பற்றியும் இப்படியே யோசித்துப் பார். தூக்கத்துக்கும், மூர்ச்சை போடுவதற்கும் முந்தி நீயாக இருந்த ஆஸாமியேதான் தூக்கம் கலைந்த பிற்பாடும், மூர்ச்சை தெளிந்த பிற்பாடும் நீயாக இருப்பது என்பதும் தெரிகிறதோல்லியோ? அப்போது உனக்கிருந்த அபிப்ராயங்கள், அநுபவங்கள், உறவுமுறைகள் எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றன அல்லவா? அந்த உடம்பேதானே இப்போதும் உன் உடம்பாயிருக்கிறது? இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தூங்குகிறபோதும், மூர்ச்சை போட்டுக் கிடந்தபோதும் உன் உயிர் இருக்கத்தானே செய்தது? ரத்த ஓட்டம், தேகத்தில் உஷ்ணம், சுவாசம் எல்லாம் இருக்கத்தானே செய்தன?

அதனால் மனஸ் இல்லாதபோது நீ இருக்கத்தான் இருந்தாய். அதாவது ‘நான் நான்’ என்று மனஸ் உள்ள போதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகிறதென்றாலும் மனஸ் இல்லாத போதும்கூட நாம் இருந்து கொண்டுதானிருக்கிறோம்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பரதேசியின் ஒய்யாரக் கொண்டைகளுக்குள்ளே! ஞாநி


திரைப்பட இயக்குனர் பாலாவுக்கு முதலில் என் நன்றி. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முரட்டுத்தனமாக தான் அடித்துக் காட்டி, நடித்துக் காட்டி வேலை வாங்குவதைப் பகிரங்கமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். தம் புதிய படத்துக்குக் கவனம் ஈர்ப்பதற்காக இந்த வேலையை அவர் செய்திருந்தாலும், இது தமிழ் சினிமா துறையில் காலம் காலமாக இருந்துவரும் சில கேவலங்களைப் பொது விவாதத்துக்குக் கொண்டு வர எனக்கு உதவி இருக்கிறது.பாலா, நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களைக் குச்சியாலும் கையாலும் காலாலும் அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப்பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தம்மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ் சினிமாவில்தான் இந்த நடித்துக் காட்டுவது என்ற விசித்திர கேவலம் இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய திரைப்பட மேதைகள் யாருக்கும் நடித்துக் காட்டும் வழக்கம் கிடையாது. சிறந்த நடிகர்கள் யாரும் தமக்கு இயக்குனர் நடித்துக் காட்டுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.  நடிகரிடமிருந்து தமக்குத் தேவைப்படுவது என்ன என்பதை ஒரு இயக்குனர் நடிகருக்குச் சொல்லிப் புரிய வைப்பது மட்டுமே தேவை. இயக்குனர் என்ன விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நடிகர், தாம் அதை இயக்குனருக்கு நடித்துக் காட்டியே உணர்த்த வேண்டும். தம் பாத்திரத்தைப் பற்றிச் சிந்தித்துத் தீர்மானித்ததை தம் உடல் மொழியால் வெளிப்படுத்தவும் தெரிந்தவரே நடிகர். இயக்குனர் நடித்துக் காட்டியதை அப்படியே மிமிக்ரி செய்பவர் சிந்திக்க இயலாத ஒரு கருவி மட்டுமே.தங்கள் நடிகர்கள் அப்படி இருப்பதையே பல இயக்குனர்கள் விரும்புகிறார்கள். இயக்குனர் நடித்துக் காட்டுவார், அதை நாம் திரும்பச் செய்தால் போதும் என்ற மனநிலை நடிகர்களிடமும் தமிழ்ச் சூழலிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது. என்னிடம் பரீக்ஷா நாடகங்களில் நடிக்க வரும் இளைஞர்களில் பலர் சினிமா ஆசையில் நடிக்க வந்திருப்பவர்கள். (கூத்துப்பட்டறையில் நடித்த ஒரு சிலர் சினிமாவில் பிரபலம் ஆகிவிட்டதால் நாடகத்துக்கு ஏற்பட்ட அவலங்களில் இது ஒன்று. நாடகம் மீது எந்தக் காதலும் இல்லாமல் சினிமாவுக்குச் செல்ல இது ஓர் உத்தி என்று கருதும் கும்பல், அவர்களுக்குப் பயிற்சி தருகிறோம் என்று வசூல் செய்யும் நாடகக்காரர்கள் எண்ணிக்கை எல்லாம் அதிகமாகிவிட்டது.) இந்த இளைஞர்களில் பலர் தங்களுக்கு நடிக்க வராதபோது, இயக்குனரான என்னை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள். இது சிந்திக்க முடியாத நடிகரின் பலவீனம் மட்டுமல்ல, இயக்குனரையும் பலவீனப்படுத்துவதாகும்.ஆனால் தமிழ் சினிமாவில் இயக்குனர் நடித்துக் காட்டுவது என்பது பதிந்து விட்டதற்குக் காரணம், நடிகனாகவும் ஹீரோவாகவும் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்து அது முடியாமல் போய் இயக்குனரானவர்கள் பலர் இருப்பதுதான். இயக்குனராக பிரபலமானதும் மறுபடியும் தங்கள் ஒரிஜினல் ஆசைக்கு அவர்களில் பலர் திரும்ப முயற்சிக்கிறார்கள்.

இந்த நடித்துக் காட்டுவதாவது அபத்தம். ஆனால் அசலாக தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று வதைப்பது, கொடூரம். பல வருடங்கள் முன்பு ஒரு சினிமா நடிகர் நாடகத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டதைப் பலரும் பாராட்டிய போது எழுத்தாளர் ஜெயகாந்தன் கேட்டார்: இதே நடிகர் இதற்கு முன்னால் முஸ்லிம் தளபதி வேடத்தில் நடித்தாரே, அதற்காக சுன்னத் செய்து கொண்டாரா என்று. நடிப்பு என்பது அசலாக மாறுவதல்ல. அசலை உணர்த்துவது. அடிக்கிற காட்சியில் அடிப்பது போல இருக்க வேண்டுமே தவிர அடிக்க முடியாது. பாலா படங்களில் கொலைக் காட்சிகளும் பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளும் வந்தால் அவற்றையெல்லாம் அவர் தம் நடிகர்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பார் என்று கற்பனை செய்யவே கதிகலங்குகிறது.பாலா போன்ற மனவக்கிரம் உடையவர்கள் இப்படி நடந்து கொள்வதை விட எனக்கு அதிக கவலை தருவது, அவர் படங்களில் நடிக்கும் நடிகர்களும் இதர உதவியாளர்களும் இதையெல்லாம் ஏன் எதிர்க்காமல் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான். அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராம கிருஷ்ணன் போன்றோர் பாலாவின் படங்களில் வேலை செய்திருக்கிறார்கள். நிச்சயம் பாலாவின் வக்கிரமான நடைமுறைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. இப்படிச் செய்வது தவறு என்று அவர்களெல்லாம் பாலாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? என்னிடம் கேட்ட விஷயம் தவிர வேறு எதிலும் நான் தலையிடுவதில்லை என்ற சாக்கு உதவாது. படைப்பாளிகள், அறிவுஜீவிகள் தாம் தொடர்புள்ள இடத்தில் தமக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் அதுபற்றிய தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்வதுதான் நேர்மை. ஆனால் தமிழ் சினிமா சூழல் எல்லாரையும் அடிமை மனநிலையில் மட்டுமே இயங்கும்படி நிர்பந்திக்கிறது. அதற்குள்ளே நுழையும் சுதந்திர மனமும் சிந்தனையும் உடையவர்களைக் கூட அந்த அடிமைச் சூழல் போலிகளாக இருக்கச் சொல்கிறது.பாலாவுக்கு பல காலம் முன்பே பாலசந்தரும் பாரதிராஜாவும் நடிகர்களை அடித்த கதைகள் உண்டு. அப்படி அடிப்பதையெல்லாம் பெருமையாகவும் ‘மோதிரக் கையால் குட்டு’ என்றும் அசட்டுத்தனமாகக் கொண்டாடும் அடிமைப் புத்திதான் அடிபட்டவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இயக்குனர்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள் முதல், நடன இயக்குனர்கள், எடிட்டர்கள் வரை தங்கள் உதவியாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதை வேறு எந்த அறிவுசார்ந்த துறையிலும் பார்க்கவே முடியாது.த்திரிகை அலுவலகத்தில் ஓர் உதவி ஆசிரியர் கட்டுரையில் தவறு செய்துவிட்டால், அவரை எந்த ஆசிரியரும் அடித்ததாக வரலாறே கிடையாது. ஆனால் சினிமாவில் உதவி இயக்குனருக்கு அடி விழும். ஸ்டோரி டிஸ்கஷனில் நல்ல சீன் சொல்லவில்லை என்பதற்காக, அறை வாசலில் மணிக்கணக்கில் உதவி இயக்குனரை கால் கடுக்க நிறுத்தி வைத்து தண்டிப்பது சகஜம். கெட்ட வார்த்தை வசவுகள் மிகச் சாதாரணம். ஒரு தொழிற்சாலையிலோ ஆலையிலோ ஒரு தொழிலாளியை இந்த வசவில் ஒரு வசவைச் சொல்லித் திட்டினால் கூட, நிச்சயம் அத்தனை பேரும் வேலைநிறுத்தம் செய்வார்கள். இங்கே யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற அடிமை மனநிலைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. 
 
மிக வலிமையான தொழிற்சங்கங்கள் இருந்த துறை சினிமா என்ற போதும் இந்தக் கேவலங்களுக்கு எதிராக எந்தத் தொழிற்சங்க நடவடிக்கையும் கிடையாது. கொத்தடிமை மாதிரி வேலை வாங்கிக் கொண்டு சம்பளத்தையும் சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றும் சூழலில், உதவியாளர்களுக்குச் சம்பளத்தை வாங்கிக் கொடுப்பதே மிகப்பெரிய தொழிற்சங்கப் பணியாகக் கருதப்படுகிறது. உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் போன்றோருக்கெல்லாம் தனி சங்கமே இல்லை. யார் இவர்களை வதைக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்தே ஒரே சங்கத்தில் இருக்க வேண்டிய நிலையில், யாரிடம் போய் புகார் செய்ய முடியும்?

சினிமாவில் இந்த அடிமை நிலைமை இருப்பதற்குக் காரணம் பணம், புகழ் ஆசைகள்தான்.

இன்று நசுக்கப்படும் ஒவ்வொரு சின்ன நடிகனும், உதவி இயக்குனரும் நாளை தான் மேலே வந்து புகழையும் பணத்தையும் அடைந்து விட்டால், தம் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்ற கனவிலேயே இன்றைய அடிமைச்சுமையை சகித்துக் கொள்கிறார்கள். மேலே வந்ததும் அதே கஷ்டங்களை அடுத்து வருபவர்களும் அனுபவிக்கக் கூடாது என்ற அக்கறையும் பரிவும் இருக்காது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் ஏராளமான இளைஞர்கள் நுழைந்திருக்கிறார்கள். இந்த வருகையால் சினிமாவின் உருவம் மாறியிருக்கிறது. தொழில்நுட்பம் மெருகேறியிருக்கிறது. ஆனால் பழைய அடிமைமுறை தொழில் நடைமுறைகள் மாறவில்லை. போலித்தனம் எனப்படும் ஹிப்பாக்ரசியே கோலோச்சுகிறது. இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். பர்தா அணியும் பழக்கம் சரியா தப்பா என்ற ‘நீயா நானா’ விவாதம் ஒளிபரப்பப்படக் கூடாது என்று சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வெற்றிகரமாகத் தடுக்கின்றன. அப்படி தடுக்க உதவியவர் இயக்குனர் அமீர் என்று அமைப்பைச் சேர்ந்த மார்க்க ‘அறிஞர்’ பி.ஜே. பகிரங்கமாகச் சொல்லுகிறார். என் வீட்டுப் பெண்கள் சினிமாவும் டி.வி.யும் பார்க்கமாட்டார்கள் என்று எனக்கு அளித்த வெப் டி.வி. பேட்டியில் அமீர் சொன்னார். ஆனால் ‘கன்னித்தீவு பொண்ணா? கட்டெறும்பு கண்ணா’ என்று குத்தாட்டம் போட அவர் தயங்குவதே இல்லை. அமீர் மட்டுமல்ல, விரல் விட்டு எண்ணி விடக்கூடிய ஒரு சிலரைத் தவிர அத்தனை தமிழ் சினிமாக்காரர்களும் அதே போன்றவர்கள்தான். இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமா. அதன் இன்னொரு எவிடென்ஸ்தான் பாலாவின் ப்ரொமோ வீடியோ. கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட வரலாற்றைப் பற்றிய படம் பரதேசி! தமிழ் சினிமா அடிமைகளைப் பற்றி யார் எப்போது படம் எடுப்பார்கள்!?

திருச்செந்தூர்.

வங்கக்கடலின் தாலாட்டில், நாளும் வந்து குவியும் பக்தர்களின் அத்தனைக் குறைகளையும் போக்கும் அற்புதத் திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடு. சூரபத்மனின் சம்ஹாரம் நிகழ்ந்த அற்புத க்ஷேத்திரம். சூரசம்ஹாரம் நிகழ்ந்த பிறகு, சிவபூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். அவரது விருப்பப்படி, தேவசிற்பி விஸ்வகர்மா ஒரு கோயிலை உருவாக்கினார். அதுதான், இன்றைய பிரமாண்ட திருச்செந்தூர் திருத்தலம். செந்தூர் முருகன் கடற்கரை ஆண்டியாக இருப்பதாக ஐதீகம். அதனால் இங்கே அவருக்கு அருகில் வள்ளி, தெய்வானையைப் பார்க்க முடியாது. அவர்கள் இங்கே தனித்தனி சந்நிதிகளில் அருள்கிறார்கள். 
 
செந்தூர் சிறப்புகள்... 
  இலைவிபூதி: திருச்செந்தூர் கோயிலின் புகழ்பெற்ற பிரசாதம் இது. பன்னீர் இலையில் விபூதியை மடித்துத் தருவதால் அப்படியரு பெயர். இந்த இலை விபூதியை உண்டுதான் ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்ட நோயைப் போக்கிக்கொண்டதாகச் சொல்வர்.


நாழிக்கிணறு: இங்குள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. சண்முகவிலாசத்துக்கு எதிரே 24 அடி ஆழத்தில், ஒரு சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்தக் கிணற்றில் சுரக்கும் நீர் மிகவும் சுவையானது. சூரசம்ஹாரத்தின்போது தமது படைவீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமானே உருவாக்கிய கிணறு இது என்கிறார்கள்.

வள்ளிக்குகை: தேவேந்திரன் மகள் தெய்வானையை முருகப்பெருமான் மணந்துகொண்டதால் கோபம் கொண்ட வள்ளி இங்கே ஒளிந்துகொண்டதாகச் சொல்வர். கடற்கரையை ஒட்டியுள்ள சந்தனமலையில் அமைந்துள்ளது இந்தக் குகை.


அதிசய ராஜகோபுரம்!

9 நிலைகளும், 137 அடி உயரமும் கொண்ட திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டவர் தேசிகமூர்த்தி சுவாமிகள். இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் கூலியாக விபூதியைப் பொட்டலமாக மடித்துக் கொடுத்தார் சுவாமிகள். இங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் அருகே விபூதி பொட்டலத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஏற்ற கூலிப் பணமாக மாறியதாக வரலாறு. மேலும், ராஜகோபுரம் கட்டும் பணிக்கு வள்ளல் சீதக்காதி ஒரு மூட்டை உப்பு கொடுக்க, அது தங்கக்காசுகளாக மாறியதாகவும் கூறுவர். கிழக்கில் இருப்பதற்கு மாறாக மேற்கில் இருக்கும் காரணத்தால் எப்போதும் மூடியே கிடக்கும் இந்தக் கோபுரம், கந்தசஷ்டி விழாவில் இடம்பெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்று நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும்.
 

Saturday, March 16, 2013

உங்கள் தட்டில் உணவா... விஷமா?

இன்றைய உணவு முறையில் அரிசியின் தாக்கம் எவ்வாறு சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது என்று இதுவரை பர்த்தோம். அரிசிக்கு அடுத்தபடி பெரிய வில்லன்... சர்க்கரை!

 தற்கால சர்க்கரையின் வில்லன் முகத்தைச் சொல்வதற்கு முன், சர்க்கரையைப் பற்றிய சில இனிப்பான வரலாற்று உண்மைகளை முதலில் தெரிந்துகொள்வோம்.

பல்வேறு தாவர இனங்களில் சர்க்கரை இருக்கிறது என்றாலும், அதன் முக்கிய வாசஸ்தலம் கரும்புதான். ஆதிகாலம்தொட்டே கரும்பு இந்தியாவில் பயிரிடப் பட்டிருக்கிறது. கரும்பின் பூர்விகம் இந்தியாவும், நியூ கினி (New Guinea) நாடும்தான்.

கிறிஸ்து பிறப்பதற்கு 3,031 ஆண்டுகளுக்கு முன், சேர இளவரசன் ஒருவன், இன்றைக்கு 'சாலமன் தீவு' என்றழைக்கப்படும் தீவுகளில் அலைந்து கொண்டிருந்தபோது, காடுகளில் வளர்ந்திருந்த கரும்புகளைப் பார்த்து, அதை தமிழகத்துக்குக் கொண்டு வந்து பயிர் செய்தான் என்று பன்மொழிப் புலவர் தேவநாயப் பாவாணரின் ஆராய்ச்சிக் குறிப்புகளில் பார்க்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே... காமரசத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் மன்மதன் - ரதி வரலாற்றைப் பாருங்கள். மன்மதனின் காதல் ஆயுதம் கரும்பு வில்லும் மலர்க்கணையும்தானே? உலகின் முதல் காதல் மன்னன் மன்மதனின் காதல் அஸ்திரமே கரும்புதான் என்றால் - அதன் ரகசியங்களை நாம் கற்பனை செய்து கொள்ளலாம் அல்லவா?

கி.மு. 500 ஆண்டுகளில் இந்தியர்கள் கரும்பைப் பிழிந்து, அதன் சாற்றைக் கொதிக்க வைத்து, பின் உலரவைத்து, அதில் வரும் கட்டிகளை 'கண்டு’ என்ற பெயரில் எடுத்துச் சென்று கடல் வணிகம் செய்ததாக சீனக் குறிப்புகள் கூறுகின்றன. புத்த பிட்சுகள்தான் முதலில் இவற்றை சீனாவுக்குக் கொண்டு சென்றார்கள்.

அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் படையெடுத்தபோது, அமோகமாக வளர்ந்திருந்த கரும்புச் செடிகளைப் பார்த்தான். 'தேனீக்கள் இல்லாமலேயே தேனைச் சேகரித்து வைத்திருக்கும் அற்புதப் புல்’ என்று கரும்பை வர்ணித்தான். அவனுடைய படை வீரர்கள் இங்கிருந்து தாயகம் திரும்பும்போது, சர்க்கரைக் கண்டுகளை 'இனிக்கும் உப்பு' (Sweet Islands) என்று கூறி அள்ளிச் சென்றதாக வரலாறு.

1492-ல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன், சில நாட்கள் கானரி தீவுகளில் (Canary Islands) தங்கினான். அவனுடன் காதல் வயப்பட்ட அந்த நாட்டு இளவரசி, அவன் விடைபெறும்போது, காதல் பரிசாகக் கரும்பு நாற்றுகளை அவனுக்குக் கொடுத்தாள். அதன் மூலமே கரும்பு அமெரிக்காவுக்குள் நுழைந்தது.

'சர்க்கரை’ என்ற தமிழ்ச்சொல்... சமஸ்கிருதத்தில் 'சர்க்கரா' (Sarkara), கிரேக்க மொழியில் 'சர்க்காரிஸ்' (Sarkaris), ஆங்கிலத்தில் 'ஜாக்ரி' (Jaggery) என்றெல்லாம் ஒலிமாறி வந்திருப்பதைப் பார்த்தால், சர்க்கரைக்கும் நாம்தான் பூர்விகம் என்பது நன்கு விளங்கும்.

ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டு வரை, சர்க்கரை ஓர் ஆடம்பர, பணக்கார உணவாகக் கருதப்பட்டது. 19-ம் நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர்கள் சர்க்கரையை ருசி பார்த்தார்கள். இதுவே உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டு, காலனி ஆதிக்க சகாப்தத்துக்கு வித்திட்டது. பல்வேறு தீவுகளையும் நாடுகளையும் வளைத்துப் போட்ட மேலை நாட்டினர், தங்கள் காலனி நாடுகளில் கரும்பு விவசாயம் செய்வதற்கு, மலிவான கூலிக்கு மக்களைப் பயன்படுத்தி, லாபத்தை அள்ளிக் குவித்தனர்.

'சில்லறை வணிகத்தில் அந்நிய ஆதிக்கம் நல்லதா... கெட்டதா?' என்று அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில், நாம் முக்கியமானதொரு வரலாற்று உண்மையை நினைவுகூர வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் நுழைந்தது படையெடுப்பு மூலம் இல்லை. 'கிழக்கிந்தியக் கம்பெனி' என்கிற வியாபாரி வேஷத்தில்தான். கடைசியில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அபகரித்துக் கொண்டார்கள். சரித்திரம் இப்போது மீண்டும் திரும்புகிறது... அந்நிய முதலீடு என்கிற பெயரில்.

அன்றைக்கு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களைச் சூறையாடியதுடன் நில்லாமல், பீகார், வங்காளம், தென் இந்தியா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களைக் கொத்தடிமைகளாக இலங்கை, மாலத்தீவுகள், ஃபிஜி, மொரீஷியஸ் போன்ற தீவுகளுக்குக் கொண்டு சென்று, கரும்பு பயிர் செய்து, அமோக விளைச்சலை அறுவடை செய்தார்கள்.

நான் அண்மையில் மொரீஷியஸ் நாட்டுக்குச் சென்றிருந்தபோது, பிரமிப்பான பல உண்மைகளைப் பார்த்தேன். அந்நாட்டின் பிரதமர் பீகாரைச் சேர்ந்த ஓர் இந்தியர். சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழர் அப்பதவியில் இருந்தார். பிரதமரின் வீட்டு முன் வாசலில் ஒரு வாட்ச்மேன்கூட கிடையாது என்பதை தயவுசெய்து நம்புங்கள்!

அந்த நாட்டு பிரஜைகள் பெரும்பாலானோர் நம்மவர்கள். பெரும்பாலானோரின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அந்த நாட்டின் கரன்ஸி நோட்டில் 'நூறு ரூபாய்’ என்று தமிழில் அச்சடித்திருக்கிறார்கள். அங்கே இயங்கும் ஒரு மருத்துவக் கல்லூரியின் பெயர், 'அண்ணா மெடிக்கல் காலேஜ்!’ நான் பணிபுரியும் அப்போலோ மருத்துவமனையும் அங்கு ஒன்று உண்டு. போக்குவரத்து மிக்க முக்கிய வீதி ஒன்றின் நடுவே மகாத்மா காந்தியின் சிலை ஒன்றும் உண்டு.

மொரீஷியஸ் தீவில் விளையும் முக்கிய - ஏன் ஒரே பயிர் கரும்புதான். அந்தத் தீவின் எந்தப் பகுதியிலும் - காடு, மலை, மேடு, பள்ளம் எங்கும் - கரும்புதான். சாலைகளின் ஒரங்களில், நம் ஊரில் பார்க்கும் கள்ளிச் செடிகளுக்கும் கருவேலம் புதர்களுக்கும் பதிலாக, கரும்புதான் மானாவாரியாக விளைகிறது. கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டின் முன்பாக, ஷாமியானா பந்தல் ஒன்று இருந்தது. நான்கு பந்தல் கால்களையும் சுற்றி ஏதோ குரோட்டன்ஸ் செடிகளைப்போல பத்து பதினைந்து கரும்பு நாற்றுகள் வளர்ப்பதைப் பார்த்தேன்.

'கேரள மக்கள் எல்லா இடங்களிலும் மரவள்ளிக் கிழங்குச் செடிகளை நட்டு வளர்ப்பார்கள். அவர்கள் விட்டு வைக்கும் ஒரே இடம் - ரயில் பாதையின் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்தான்!’ என்று என் நண்பர் ஒருவர் கூறியதுதான் அப்போது ஞாபகத்துக்கு வந்தது!

மொரீஷியஸில் கரும்பின் எந்தப் பகுதியையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. சர்க்கரை ஆலைகள் அமோகமாக இருக்கும் அதேவேளையில், அதிலிருந்து மதுபானம், எத்தனால், மின்சாரம் முதலியவையும் உற்பத்தியாகின்றன. அங்குள்ள வீடுகள், உணவு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களின் அரங்குகள் எங்கும் கரும்புத் தோகையைத்தான் கூரையாக வேய்கிறார்கள். அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக நின்று உழைக்கும் நம்மவர்களை, நன்றி கெட்ட இலங்கை ஆட்சியாளர்களைப் போலன்றி, அவர்கள் நன்றியோடும் கௌரவத்தோடும் நடத்துகிறார்கள்.

சரி... கரும்புக்குப் பின்னால் இவ்வளவு இனிப்பான செய்திகளும் வரலாறும் இருக்கும்போது, சர்க்கரையை 'இன்னொரு வில்லன்’ என்று ஏன் குறிப்பிட்டேன் என்று நீங்கள் கேட்கலாம்.

கரும்புச்சாறு... வெறும் கரும்புச்சாறாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. பின்னர்... அதுவே வெல்லம், நாட்டுச்சர்க்கரை என்று மாறியது. அப்போதும்கூட பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை. கறுப்புநிற சர்க்கரைக் கட்டிகள் பழுப்பு நிறமாக மாறி, மஞ்சள் நிறமாக மாறியது. பின்னர் வெள்ளை நிறத்துக்கு மாறவேண்டுமே என்கிற வெள்ளைக்காரர்களின் ஆசைக்கு அடி பணிந்து, தீட்டித் தீட்டி பாலிஷ்போட ஆரம்பித்தோம். அப்போதுதான் ஆரம்பித்தது பிரச்னை.

எனது இந்தியா (தாகூரின் கல்விமுறை !) - எஸ். ரா

ரவீந்திர பவனா என்ற பிரிவில் ரவீந்திரரின் நாடகம், இசை போன்றவை ஆராய்ச்சி செய்யப்பட்டன. சங்கீத பவனா பிரிவில் இசை, நாடகம், நடனம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இங்கேதான் புகழ்பெற்ற ரவீந்திர சங்கீதம் என்ற வகைமை உருவாக்கப்பட்டது. அதுபோலவே, சிற்ப பவனா பகுதியில் மரம் மற்றும் கல்லில் சிற்பங்கள் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கிராமப்புற மறுவாழ்வு குறித்துக் கற்பிக்கத் தனியாக ஒரு பிரிவும், வேளாண்மையைக் கற்றுக்கொள்ளத் தனிப் பிரிவும் கணிதம், புள்ளியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள விஞ்ஞானப் பிரிவும் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்க கல்வி கற்பித்தல் துறையும் வரலாறு மற்றும் பொருளாதாரம் கற்பிக்கும் தனித் துறைகளும் இங்கே உருவாக்கப்பட்டன. இவற்றுடன், இந்தியக் கலாசாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்களும் போதிக்கப்பட்டன.

இந்த வளாகத்துக்குள் ஓர் ஆரம்பப் பள்ளியும் இருக்கிறது. இந்தப் பள்ளிதான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. இங்கே ஆண், பெண் இருபாலரும் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் முதல் மாணவர்​களாக தாகூரின் பிள்ளைகள் சேர்க்கப்​பட்டனர். விஸ்வ​பாரதி பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான இடம், அதன் நூலகம். லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகத்தில், தாகூரின் சேமிப்புகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சீன மற்றும் ஜப்பானிய அரசுகள் வழங்கிய புத்தகங்கள், அரிய புத்தகங்கள் மற்றும் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தின் சுவர்கள் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டவை. அத்துடன், திறந்தவெளியில் அற்புதமான சிற்பங்களும் உண்டு.  புகழ்பெற்ற இந்திய இயக்குநரான சத்யஜித்ரே, சாந்திநிகேதனில் படித்தவர். 'சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் படித்தேன். அது, என் வாழ்வின் வசந்த காலம். அங்கேதான் மேற்கத்திய இசை மற்றும் கிழக்காசிய நாடுகளின் ஓவியக் கலைகளை நான் அறிந்துகொண்டேன். அது, எனது ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சாந்திநிகேதன்தான் எனது கலை ஆர்வத்தின் தொடக்கப் புள்ளி. மானுட நேசமே கலையின் ஆதாரம் என்பதை சாந்திநிகேதனில்தான் கற்றுக்கொண்டேன்’ என்கிறார் சத்யஜித்ரே. ஜவஹர்லால் நேரு தனது 'தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில் சாந்திநிகேதனைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார். அத்துடன், தனது மகள் இந்திரா காந்தியை சாந்திநிகேதனில் கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான், இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி என்ற பெயரைச் சூட்டினார். ஒரு மாணவன் முதல் வகுப்பில் சேர்ந்து டாக்டர் பட்டம் பெறும் வரை தேவையான அனைத்துத் துறைகளும் இந்த ஒரே பல்கலைக்கழகத்துக்குள் இருக்கின்றன என்பதே இதன் தனிச் சிறப்பு. 63 வயதானபோது பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று  தாகூர் அங்கு சென்றார். அங்கிருந்து, மெக்சிகோவுக்கும் சென்று கலை இலக்கியம் குறித்த உரைகளை ஆற்றினார். இன்று வரை தாகூரின் கவிதைகள் அங்கே விரும்பி வாசிக்கப்படுகின்றன. இரு நாட்டு அரசுகளும் தாகூரின் வருகையின் நினைவாக சாந்திநிகேதனுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கின.


தாகூரைப் போலவே, காந்தியும் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பி 'வார்தா’ என்ற தொழில்முறைக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். ''இந்தக் கல்வியில், தொழில் கற்பதுதான் ஆதாரம். 'வார்தா’ கல்வித் திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகக் கருதப்படுபவை 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி. அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கல்வி. அனைத்துப் பாடங்களும் தேர்ந்தெடுக்கப்​பட்ட கைத்தொழிலுடன் இணைக்கப்படும். உற்பத்தியுடன் இணைந்த கல்விச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். தாய்மொழியில் பாடம் கற்றுத்தரப்படும். சமயம், நன்னடத்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று காந்தி கூறினார்.

''இது, பழைய குலக் கல்வி முறையை மறுபடி உருவாக்க முயற்சிக்கும் திட்டம்'' என தந்தை பெரியார் கடும் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸின் 'வார்தா திட்டக் கல்வி’ என்பது வர்ணாசிரம தர்மத்தைப் புதுப்பித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் கருத்தைக்கொண்டதால், இந்தக் கல்வி ஒரு நாளும் வெற்றி பெறாது என்பதுடன், இது இயற்கைக்கு முரணானது. ஏனெனில் உலக முற்போக்கு, இந்தியாவை மட்டும் கல்ஆயுதக் காலத்துக்குத் தள்ளிவிட அனுமதிக்காது. ஆதலால், ஒவ்வொரு வகைத் தொழிலாளி வர்க்கமும் ஒன்று சேர்ந்து சாதியையும் வகுப்பையும் மறந்து ஒரே வர்க்கத் தொழிலாளராகி, இயந்திர உலகத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்'' என்பதே பெரியாரின் வாதம்.

'மகாத்மா’ என்ற பட்டத்தை காந்திக்கு அளித்தவர் மகாகவி தாகூர். ஆனாலும், அவருக்கும் காந்திக்கும் இடையில் நிறையக் கருத்துவேறுபாடுகள், முரண்கள் இருந்தன. பரஸ்பரம் நேரடியாகவே விமர்சனம் செய்துகொண்டனர். சுதந்திரப் போராட்டக் களத்தில், தாகூர் நேரடியாகப் பங்குகொள்ள​வில்லை என்ற விமர்சனம் அவர் மீது சுமத்தப்பட்டது. அது, உண்மை அல்ல. தாகூர், சுதந்திர எழுச்சிக்கு முக்கியமான காரணியாக விளங்கினார் என்பதே உண்மை. 1905-ம் ஆண்டில் 'வங்காளத்தைப் பிரிப்போம்’ என்று அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. தாகூர் அதற்கு எதிராகப் பல்வேறு கண்டனக் கூட்டங்களில் பேசினார். ''தாகூர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை' என்று, இ.ஜே. தாம்சன் என்ற ஆங்கிலேயர் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு 'ஸர்’ பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்கள் மீது ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஏராளமானோர் இறந்தனர். அந்தப் படுகொலையைக் கண்டித்த தாகூர், தனக்கு அளிக்கப்பட்ட 'ஸர்’ பட்டத்தைத் துறந்தார். 1930-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி, டாக்டர் மெண்டில் என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவரது இல்லத்தில் சந்தித்து தாகூர் உரையாடினார். அது, மிக முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு. அதுபற்றி, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த நேர்காணலில் ஐன்ஸ்டீன், தாகூரின் தத்துவக் கருத்துகளைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தனது வாழ்நாளில் ஐந்து கண்டங்களில் 30 தேசங்களைச் சுற்றி வந்து அதன் கலை, கலாசாரம், இலக்கியம் பற்றி கற்றறிந்தவராக விளங்கினார் தாகூர்.

தாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள் என்றாலும், தேசியம், நாட்டுப்பற்று, கலாசார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் காந்தியிடமிருந்து மாறுபட்டார் தாகூர். தனது தாம்பத்ய வாழ்க்கையைப் பகிரங்கமாக சத்திய சோதனை நூலில் எழுதினார் காந்தி. ஆனால் தாகூரோ, 'தாம்பத்ய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தைக் கேலிசெய்வதாகும்'' என, அதைக் கண்டித்து எழுதினார். 'மாடர்ன் ரிவ்யூ’  இதழில் 'சர்க்கா வழிபாடு’ என்ற தலைப்பில் தாகூர் எழுதிய கட்டுரையில், 'கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்​சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால், இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கியப் பணிகளில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். செக்குமாடுபோல சர்க்காவை ஒரே மந்தகதியில் சுழற்றிக்கொண்டிருப்பது சாவுபோன்ற வெறுமையே ஆகும். அது, புத்தியை மழுங்கச்செய்யும் காரியம் என்பதே எனது துணிபு'' என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதி​லளித்து 'கவியும் சர்க்காவும்’ என்ற தலைப்பில் காந்திஜி தமது 'யங் இந்தியா’ பத்திரிகையில் பதில் அளித்தார். அதில், 'மகாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப்போனால், சூரியனும் கிரகங்களும் ஒரே மாதிரியான இயந்திர கதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்... தினமும் அரை மணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன். நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமங்களில் சர்க்கா நிலைபெற்றால் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி பதில் வாதம் செய்தார்.

1934-ல் பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்ட காந்தி, ''அது, மக்களின் பாவத்துக்கு கடவுள் அளித்த தண்டனை'' என்று கூறியதைப் பகிரங்கமாகக் கண்டித்த தாகூர், மகாத்மா பட்டத்துக்கு காந்தி தகுதியானவர் அல்ல, அதைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் இருவரும் பரஸ்பரம் அன்பும் அக்கறையும்கொண்டவர்களாகவே விளங்கினர். 'மனிதாபிமானி காந்தி’ என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில், ''காந்திஜி இந்திய மக்களின் பெருந்தலைவர். மானிட வர்க்கத்தின்பால் அவர்கொண்டுள்ள பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது'' என்று மனம் திறந்து பாராட்டினார். 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, தாகூர் மறைந்ததையட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச் சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை, அபரிமிதமான மனிதாபிமானியையும் ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம். அவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதும் இல்லை. சாந்திநிகேதனிலும், ஸ்ரீநிகேதனிலும், நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்''’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறையில், மாணவனது உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க-ஆன்மிக வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றுசேர வளர்ச்சியடையும் என்று தாகூர் நம்பினார். அதன் விளைவாக உருவான சாந்திநிகேதன் நூற்றாண்டைக் கடந்து இன்றும் வங்காளத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், கல்வி வணிகமாகி, சிறைக்கூடங்களைப்போல இறுக்கமான அறைகளில் மாணவர்கள் பாடம் கற்கும் இன்றைய சூழலில் தாகூரின் கல்விக் கனவு இந்தியாவின் பிற பகுதிகளில் பின்தொடரப்படாமல் காற்றோடு கரைந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது.

எனது இந்தியா (சாந்தி நிகேதன்!) - எஸ். ரா

இந்தியக் கல்வி முறை குறித்து அதிகம் ஆதங்கப்பட்டவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர். திண்ணைப் பள்ளிகளும், உருதுப் பள்ளிகளும் ஒன்றிரண்டு ஆங்கில வழிப் பள்ளிகளும் மட்டுமே இருந்த வங்காளத்தில் புதியதொரு கல்விமுறையை அறிமுகம் செய்துவைத்து மக்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்று தாகூர் கனவு கண்டார். அவர் மிகப் பெரிய நிலப்பிரபுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878-ல் இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்குச் சட்டம் படிக்க ஆர்வம் இல்லை. இலக்கியம், இசை, நாடகம் என்று தான் விரும்பியதைக் கற்று 'பார் அட் லா’ பட்டம் பெறாமலேயே இந்தியாவுக்குத் திரும்பினார்.

ஆனால், இங்கிலாந்தில் இருந்த நாட்களில் அங்குள்ள கல்விமுறை குறித்து தாகூர் நிறைய அறிந்துகொண்டார். குறிப்பாக, அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுத்தரப்படுகிறது? எது போன்ற பாடமுறையைக் கையாளுகின்றனர் என்பதை நேரடியாக அறிந்துகொண்டார். இந்தியா, கல்வித் துறையில் முன்னோடியான நாடு. இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமான கற்பிக்கும் முறைகள் இருக்கின்றன. இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் பௌத்தமும் சமணமும்  மிக முக்கியப் பங்கு வகித்து இருக்கின்றன.  இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்கள் புகழ்பெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. இந்த நிலையில், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியாது என தாகூர் நம்பினார். ஆகவே, ஒன்றிணைந்த கல்விமுறை ஒன்றைப் பற்றி அவர் திட்டமிடத் தொடங்கினார். அதாவது, மேற்கு உலகைப் போல விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலை, தத்துவம், வரலாறு எனத் தனித்தனியாகப் பிரித்துவைக்காமல், ஒரே வளாகத்தில் எல்லா அறிவுத் துறைகளும் இணைந்து இருக்கும்படியான ஓர் கல்வி நிலையத்தை உருவாக்கிவிட்டால் அது இந்தியர்களின் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று தாகூர் உறுதியாக நம்பினார்.


படைப்பாற்றல் மிக்க கவிஞராகவும், ரசனை மிக்க ஆளுமையாகவும், தேசப்பற்றுகொண்ட இளைஞராகவும் இருந்த தாகூர் மனதில், தன் கனவுப்படி ஓர் கல்வி நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கனன்றது.
பள்ளி என்பது இயற்கையான சூழலில் அமைய வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க வருவதை சந்தோஷமான செயலாகக் கருத வேண்டும். தண்டனை இல்லாத, எளிய, தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம்செய்யத் திட்டமிட்டார். அதற்காக அவர் நிறுவியதே சாந்திநிகேதன். பொருளாதார மேதை அமர்த்தியா சென் இதன் மாணவர்களில் ஒருவர். தனது கடந்த காலம் பற்றி நினைவு கூறும் சென், ''நான் சாந்தி நிகேதனில் பிறந்தவன். எனக்கு பெயரிட்டதே தாகூர்தான். அவர்தான் எனது ஆசிரியர். சாந்திநிகேதனில் கல்வி கற்றது மகிழ்ச்சியான அனுபவம். அங்கே வகுப்பறைகள் இயற்கையோடு இணைந்த வெட்டவெளியில் நடக்கும். மாணவர்கள் ஆசிரியருடன் கலந்து பேசி விவாதிக்கலாம். குறிப்பாக அங்கு தேர்வுகள் கிடையாது. ஆளுமையை உருவாக்குவதுதான் கல்வியின் முக்கியம் என்பதை அறிந்திருந்தனர். சீனா மற்றும் ஜப்பானியக் கலைகளைப் போதிக்க ஜப்பானியர் மற்றும் சீன ஆசிரியர்கள் இருந்தனர். பன்னாட்டு ஆசிரியர்கள் பணியாற்றும் இடம் என்பதால், சாந்திநிகேதன் தனித்துவமிக்க கல்வி நிலையமாக விளங்கியது'' என்கிறார்.


சாந்தி நிகேதனில் கட்டணம் இல்லாத கல்விமுறைதான் நடைமுறையில் இருந்தது. தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையை மாணவர்களின் கல்வி நலனுக்காக செலவிட்டார் தாகூர். ஒன்றிரண்டு புரவலர்களும் தாகூரின் நண்பர்கள் சிலரும் இந்தக் கல்வி நிலையத்துக்குத் தேவையான நிதி உதவி செய்தனர். இந்தக் கல்வி நிலையத்தில் இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்களின் சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளித்தல், தீண்டாமையை நீக்குதல், மதச்சார்பின்மை, அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பது, இசை மற்றும் நுண்கலைகளில் தேர்ச்சி பெறச்செய்வது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இன்று, விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கும் சாந்தி நிகேதன் ஒரு காலத்தில் சிறிய ஆசிரமமாக தொடங்கப்பட்டது. தாகூரின் தந்தை தேபேந்திராத் தாகூர் 1863-ம் ஆண்டு ராய்ப்பூர் ஜமீன்தார் சீதாகந்தா சின்ஹாவிடம் இருந்து ஏழு ஏக்கர் இடத்தை வாங்கி இருக்கிறார். கொல்கத்தாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சாந்தி நிகேதன். ஆரம்பத்தில் இது பிரம்மசாரிகளுக்கான உறைவிடமாகத் திகழ்ந்தது. 1901 முதல் இந்த இடத்தை 'இந்துமேளா’ எனப்படும் தேசிய விடுதலைக்கான முகாமாக செயல்படுத்தி வந்தார் தாகூர். அருகில் உள்ள சுருல் ஜமீன்தாரின் குடும்பம் மற்றும் தால்தூர் ஜமீன்தார் ஆகியோர் தங்கள் வசமிருந்த நிலங்களை சாந்தி நிகேதனுக்கு விற்ற காரணத்தால், அது மிகப் பெரிய ஆசிரமமாக வளர்ந்தது. தனக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு 1921-ம் ஆண்டு அதை ஒரு பெரிய கல்வி நிலையமாக மாற்றினார் தாகூர். பிரம்ம சமாஜத்தின் தாக்கம் இந்தக் கல்வி நிலையத்தில் அதிகமாக இருந்தது. சாந்தி நிகேதன் மிகவும் பசுமையானது. வசந்த காலத்தில் இங்குள்ள மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதைச் சிறப்பிக்க சாந்தி நிகேதன்வாசிகள் மிகப் பெரும் திருவிழா கொண்டாடுவார்கள். கோடையில்கூட சாந்தி நிகேதனில் அதிக வெப்பத்தை உணர முடியாது. அந்த அளவுக்கு அடர்ந்த மரங்களும் வயல்வெளிகளும் கொண்டது.

நான்கு சுவர்களுக்குள் மாணவர்​களை அடைத்துப் பாடம் கற்பிப்பதை​விட, திறந்த வெளியில் கற்றுத்தருவது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும் என்று தாகூர் கருதினார். மாணவனுக்கு ஆண்டுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனது திறமையை மதிப்பிடுவதைவிட, அவனது ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, முடிவில் அவனை அறிவில் சிறந்தவனாக வெளியே அனுப்பிவைப்பதே சாந்தி நிகேதனில் இருந்த கல்விமுறை.

தாகூர் காலத்தில் அறிமுகமான பிரிட்டிஷ் கல்வி முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கில வழிக் கல்வியில் இந்தியப் பண்​பாடு மற்றும் நுண்கலைகள் முற்றி​லும் அகற்றப்பட்டுவிட்டன. பண்​பாடும், அறமும், சுய ஒழுக்கமும் கற்றுத்​தரப்படாமல் நடைமுறைப்​படுத்துகிற கல்வி, முழுமையானதாக இருக்காது. ஆகவே, தனது கல்வி நிலையத்தில் இந்தியக் கலைகளை மாணவர்கள் அவசியம் கற்றுத்தேற வேண்டும் என்று தாகூர் விரும்பினார். சாந்தி நிகேதன், கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்தது. எளிமையான பொருட்களைக்கொண்டு தனித்துவமாக இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த வளாகத்துக்கு உள்ளேயே தாகூர் வசித்தார். அவருக்காக இரண்டு மாடிகள் கொண்ட அழகிய வீடு கட்டப்பட்டு இருந்தது.

சாந்தி நிகேதனில் உள்ள பிரார்த்​தனைக் கூடம் மிகவும் அழகானது. பெல்ஜியம் கண்ணாடி பதிக்கப்பட்டது. நான்கு சுவர்களும் அலங்காரமாக வடிவமைக்கப்​பட்டவை. ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கு பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். அப்போது, மெழுகுவத்திகளை ஏற்றிவைப்பார்கள். அதன் வெளிச்சத்தில் இந்த அறை இசை கேட்கும் ஜல்சாகர் போன்ற எழிலுடன் காணப்படும். சீன பவனா என்ற பகுதி சீன மொழி மற்றும் இலக்கியங்கள், ஓவியங்கள், இசை ஆகியவற்றைக் கற்றுத்தரும் பிரிவு. 1937-ல் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. தாகூரின் அழைப்பை ஏற்று பேராசிரியர் டான் யுன்சான் இங்கே வந்து இந்தப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். பௌத்தம் மற்றும் சீனத் தத்துவங்கள், இலக்கியம், மொழி, இசை இங்கே கற்பிக்கப்பட்டன.  இந்தியக் கலைகளுக்கும் சீனக் கலைகளுக்குமான ஒற்றுமை குறித்த ஆய்வுகள் இங்கே நடந்தன. சீனப் பீங்கான் தயாரிப்பு மற்றும் அச்செழுத்து முறை போன்றவை கற்பிக்கப்பட்டன. சீனாவில் இருந்து நிறையப் புத்தகங்களும் கலைப் பொருட்களும் இந்தக் கல்விப் பிரிவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே, தத்துவம் போதிக்கும் இடத்தின் பெயர் 'தர்ஷன் பவனா’. இங்கே இந்தியத் தத்துவங்களும் மேலைநாட்டுத் தத்துவங்களும் கற்றுத்தரப்பட்டன. குறிப்பாக, இந்திய மெய்யியல் குறித்த ஆய்வுகளும் அரிய நூல்களைப் பதிப்பித்தலும் நடந்தது. கலா பவனா என்பது நுண்கலைகள் கற்றுத்தரும் பிரிவு. இது, உலக அளவில் புகழ்பெற்றது. பன்னாட்டு மாணவர்கள் நுண்கலைகளைக் கற்றுக்கொள்ள சாந்திநிகேதனுக்கு வந்து தங்கிப் படித்தனர். புகழ்பெற்ற ஓவியரான அபேந்திரநாத் தாகூர், இதன் தலைவராக இருந்தார். இவருடன், அழியாப் புகழ்பெற்ற ஓவியர்களான நந்தலால் போஸ், கே.ஜி.சுப்பிரமணியன், குலாம் முகமது ஷேக், விநோத் பிகாரி முகர்ஜி, தினகர் கௌசிக், ராம்கின்கர், பியோகர் ராம் மனோகர் சின்ஹா போன்றோர் பணியாற்றினர்.

Saturday, March 09, 2013

எனது இந்தியா (நேதாஜியின் காதல் !) - எஸ். ரா

பயிற்சியின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட 25 பேர் மட்டுமே, வான் படைப் பயிற்சிக்காக இம்பீரியல் அகடமியில் சேர்க்கப்பட்டனர். ஜப்பானிய ராணுவ வீரர்களைவிடத் துடிப்பாகவும் வேகமாகவும், இந்தியத் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த டோக்கியோ கேடட்ஸ் சிறப்பாகப் பணியாற்றினர். கேப்டன் காடோ தலைமையில், பல்வேறு விமானங்களைக் கையாளுவது, ஒளிந்திருந்து தாக்குவது, இலக்குகளை அடையாளம் கண்டு ஒரே வீச்சில் அழிப்பதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்குத் தரப்பட்டன. பயிற்சி முடிவதற்குள், யுத்த முனையில் ஜப்பான் தோற்றுப்போய், சரணடைந்தது. ஜப்பானியப் படைகள் சரணடைந்த காரணத்தால், பயிற்சியில் இருந்த இந்தியத் தேசிய ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர். இவர்கள் மீதான பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், அந்த வீரர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு போர்க் கைதிகளாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். வான் படையில் பயிற்சி பெற்ற டோக்கியோ கேடட்ஸ் வீரர்களில் சிலர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தனர். சிலர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தனர். தனது டோக்கியோ கேடட்ஸ் அனுபவங்களை ரமேஷ் பெனகல் விரிவான நூலாக எழுதி இருக்கிறார். சுதந்திரப் போராட்டக் களத்துக்காகத் தயார் ஆகி தங்களின் முழுத் திறமையைக் காட்டுவதற்குள் கைதுசெய்யப்பட்டுவிட்டனர் என்பது வரலாற்றுச் சோகம்.


இந்திய சுதந்திரப் போரில் தனது பங்கைப்பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்பினார் நேதாஜி. அதற்காக, சுருக்கெழுத்து தெரிந்த ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் எமிலி. உதவியாளராகச் சேர்ந்த எமிலி, மிகுந்த பற்றுதலுடன் நேதாஜியைக் கவனித்துக்கொண்டார். இருவருக்கும்  காதல் உண்டானது. 1937-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி எமிலியை ரகசியமாகத் திருமணம்செய்துகொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். இதற்கான நேரடி சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு அனிதா போஸ் என்ற ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவது உலகப் போர் உருவானதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டன் கோரியது. ஆனால், பிரிட்டனின் காலனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களைத் திரட்டுவதில் நேதாஜி ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேதாஜியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. உலகப் போரின் ஆரம்பத்தில், பிரிட்டன் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரிட்டனின் எதிரி நாடுகள் ஒத்துழைத்து, இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்று நேதாஜி நினைத்தார். அந்த எண்ணத்தை நிறைவேற்ற சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் விடுதலை செய்யப்பட்ட நேதாஜி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால், 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, மாறுவேடத்தில் தப்பினார் நேதாஜி.

கல்கத்தாவில் இருந்து வெளியேறி ரயிலில் பெஷாவர் நகரை அடைந்து, இந்திய எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார். அங்கிருந்து இத்தாலி செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக ஹிட்லரிடமிருந்து சிறப்பு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்ட நேதாஜி, ரயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலை​நகரான பெர்லினுக்குப் போனார். அவர், ஜெர்மனி வந்து சேர்ந்த தகவலை மார்ச் 28-ம் ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் முகப்புச் செய்தியாக வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஷயம் வெள்ளை அரசுக்குத்  தெரிந்தது. ஹிட்லரை, நேதாஜி சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேதாஜி நம்பினார். ஆனால், அவர் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்ற நேதாஜி, ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்தியத் தேசிய ராணுவத்தை மீள்உருவாக்கம் செய்து, அதன் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1943-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் நேதாஜி சுதந்திர அரசுக்கான அறிவிப்பை வெளியிட்டார். டிசம்பர் 29-ம் தேதி தேசிய அரசின் தலைவராக, தேசியக் கொடியை ஏற்றினார். அவரது தேசிய அரசை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தனது இந்தியத் தேசிய ராணுவத்தை இந்தியாவை நோக்கி நகர்த்தினார்.


இந்தியத் தேசிய ராணுவத்துக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே இந்திய-பர்மா எல்லைப் பகுதியில் எட்டு இடங்களில் கடும் போர் தொடங்​கியது. ஏப்ரல் 14-ம் தேதி, கர்னல் எஸ்.ஏ.மாலிக் தலைமையிலான படை, மணிப்பூரில் உள்ள மொய்ராங் என்ற இடத்தைக் கைப்பற்றி அங்கு இந்தியத் தேசியக் கொடியைப் பறக்கவிட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த மொய்ராங், ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியத் தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் பகுதியாகப் பெருமைகொண்டது. ஏப்ரல் 8-ம் தேதி, நாகாலாந்து மாநிலத்தின் கொஹிமா நகரம் இந்தியத் தேசிய ராணுவம் வசமானது. அடுத்த சில நாட்களில், இம்பால் நகரைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. இந்தியத் தேசிய ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஆனால், தென்மேற்குப் பருவமழை யுத்த நிலையை தலைகீழாக மாற்றியது. இடி, மின்னல், பலத்த மழை, வெள்ளப்பெருக்கு, அதன் காரணமாக உருவான தகவல் துண்டிப்பு ஆகியவை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மழைக்குப் பிறகு, பரவிய காலரா, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காததால், ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

இந்தச் சூழலில், ஜப்பான் சரணடைந்த செய்தி நேதாஜிக்கு தெரிவிக்கப்பட்டது. நேதாஜியைப் பத்திரமாகக் காப்பாற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள மஞ்சூரியாவுக்கு அழைத்துச் செல்ல ஜப்பான் உத்தரவாதம் அளித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி காலை, சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நோக்கி விமானத்தில் சென்றார் நேதாஜி. பாங்காக்கில் இருந்து சைகோன் புறப்பட்டுச் சென்றார். அவருடன் கர்னல் ஹபிபூர் ரஹ்மான், கர்னல் குல்சாரா சிங், கர்னல் பிரீதம் சிங், மேலும் அபித் ஹாசன், தேவ்நாத் தாஸ், எஸ்.ஏ.அய்யர் ஆகியோரும், ஜெனரல் இஸோடா, ஹக்கீயா, நெகிஷி ஆகிய ஜப்பானியர்களும் இரண்டு விமானங்களில் சென்றனர். சைகோனில் இறங்கிய நேதாஜியை ஏற்றிச் செல்ல ஜப்பானியர்களின் குண்டுவீச்சு விமானம் ஒன்று தயாராக இருந்தது. அது சிறிய விமானம் என்பதால், அதில் ஒருவருக்கு மட்டும்தான் இடம் இருந்தது. அதில் ஏறித் தப்பிச் செல்வதா என்ற சந்தேகம் நேதாஜிக்கு ஏற்பட்டது. முடிவில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உடன் செல்வதென முடிவு செய்யப்பட்டது. இருவரையும் ஏற்றிக்கொண்டு ஜப்பானிய விமானம் விண்ணில் பறந்தது.

நேதாஜி பயணம் செய்த போர் விமானம், ஃபார்மோசா தீவுகளுக்கு அருகே விபத்தில் சிக்கியது என்ற தகவலை ஜப்பானிய வானொலி அறிவித்தது. ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி விமான விபத்தில் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. நேதாஜி மரணத்தை மக்கள் நம்பவில்லை. அவர் தப்பிச் சென்றிருப்பார் என்றும் இது பிரிட்டிஷ் படைகளை ஏமாற்றுவதற்கான உத்தி என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிபூர் ரஹ்மான், நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என்னுடைய கண்களால் பார்த்தேன் என்று கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாரதப் பிரதமர் நேரு, நேதாஜியின் மரணம் பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷா நவாஸ் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, டோக்கியோ, சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்குச் சென்று விசாரித்தது. விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர் சொன்னார்கள். டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினரான சுரேஷ் சந்திரபோஸ், அதை ஏற்க மறுத்து தனி அறிக்கை சமர்ப்பித்தார்.

பிறகு, 1970-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட 'ஒரு நபர் விசாரணை ஆணையம்’ அமைக்கப்பட்டது. அவரும், விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று அறிக்கை சமர்ப்பித்தார். அதன் பிறகு, 1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், முகர்ஜி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி, ஏழு ஆண்டுகள் மிக விரிவான ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதிலும், விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்றே கூறப்பட்டு இருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் 1985-ம் ஆண்டு வரை வாழ்ந்த 'பகவான்ஜி’ என்ற துறவிதான் நேதாஜி என்ற சந்தேகத்தை, முகர்ஜி கமிட்டி முழுமையாக ஆராய்ந்தது. அதாவது, நேதாஜிதான் பகவான்ஜியாக ஒளிந்து வாழ்கிறார் என்பதை ஆராய்ச்சி செய்ய பகவான்ஜியின் கடிதங்களை நேதாஜி கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

டி.என்.ஏ. சோதனையும் செய்யப்​பட்டது. அதில், லால் என்ற வல்லுனர் இரண்டு கையெழுத்துக்களும் ஒன்றுபோல இருக்கிறது. பகவான்ஜியாக வாழ்ந்தவர் நேதாஜிதான் என்றார். ஆனால், மற்ற வல்லுனர்கள் டி.என்.ஏ. மற்றும் கையெழுத்து ஆகியவை நேதாஜியோடு பொருந்தவில்லை என்றனர். 1945-ம் ஆண்டில் இருந்து இன்று வரை டோக்கியோவில் உள்ள ரங்கோஜி ஆலயத்தில் நேதாஜியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவந்து இறுதிச் சடங்கு செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இன்று வரை அது சாத்தியமாகவில்லை. நேதாஜி சென்ற விமானம் ஏன் திடீரென விபத்துக்கு உள்ளானது என்ற கேள்விக்கான உண்மை இன்றுவரை அறியப்படவே இல்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல. மக்கள் மனதில் போராளிகள் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

Friday, March 08, 2013

சாம்பலான சச்சினின் உலக சாதனை!


1988-ல், சச்சினும் காம்பிளியும் 664 ரன்கள் அடித்த உலக சாதனையோட ஸ்கோர் ஷீட் இருந்தால் கொடுங்கள். நான் 10 லட்சம் தருகிறேன்," என்று மும்பை ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனிடம் கேட்டிருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர். இன்றுவரை பேசப்படும் உலக சாதனையின் முக்கியமான ஆவணம் அது. அசோசியேஷனைச் சேர்ந்த எச்.எஸ்.போரிடமிருந்து கிடைத்த பதில். அதெல்லாம் கிடையாதுங்க. பழைய ரெக்கார்டுகளை எலி கடிச்சு நாசம் பண்ணதால, மொத்தத்தையும் எரிச்சுட்டோம்!"

மறக்கமுடியுமா அந்தச் சாதனையை? சச்சினுக்கும் அப்போது கிட்டத்தட்ட 15 வயது. காம்பிளிக்கு 16. இருவரும் சாரதாஷ்ரமம் வித்யா மந்திர் பள்ளி.

மாணவர்கள் பள்ளிகளுக்கிடையே நடக்கும் ஹாரிஸ் ஷீல்ட் அரையிறுதிப் போட்டியில், 1988 பிப்ரவரி 23 - 25 ஆகிய தினங்களில் நடந்த மேட்சில், செயின்ட் சேவியர் பள்ளியுடன் மோதியது சாரதாஷ்ரமம். பள்ளி மாணவனாக இருந்தாலும், சச்சின் அப்போதே மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் படு ஃபேமஸ். இன்று டெஸ்டில் களம் இறங்குவதுபோல நான்காவதாக விளையாட வந்தார் சச்சின். முதல் நாள் இறுதியில், இருவருமே இரட்டைச் சதத்தை நெருங்கியிருந்தார்கள்.

அணியின் கோச் ராம்கந்த் அச்ரேகர், கண்டிப்பாக மறுநாள் காலையில் டிக்ளேர் செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அடுத்த நாள், அச்ரேகர் மைதானத்தில் இல்லாததால், தொடர்ந்து ஆடி, சிக்ஸரும் பவுண்டரியுமாக நொறுக்கிக் கொண்டிருந்தார்கள் சச்சினும் காம்பிளியும். டிரிங்ஸ் கொண்டு வந்த நண்பர்கள், கோச்சின் கட்டளையை ஞாபகப்படுத்தியபோது இருவரும் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இவர்களுடைய ஆட்டத்தைக் கேள்விப்பட்டுக் குவிந்த பார்வையாளர்களால் மேலும் உற்சாகமடைந்தார்கள். 2ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின் 326 ரன்களும், காம்பிளி 349 ரன்களும் அடித்திருந்தார்கள். சச்சின், அச்ரேகருக்கு போன் செய்து, காம்பிளியின் ஸ்கோரை மட்டும் சொல்லி, அவன் 350 அடிக்க ஆசைப்படுகிறான் என்று சொன்னபோது, கடும் கோபம் கொண்டார் அச்ரேகர். எல்லாம் போதும். டிக்ளேர் செய் என்றார். இறுதியில், 120 ஓவரில் 748 ரன்கள். அந்தச் சமயத்தில், தாங்கள் உலக சாதனை செய்திருக்கிறோம் என்பதை சச்சினும் காம்பிளியும் அறியவில்லை. அம்பயர் மார்கஸின் உதவியால்தான் இவர்களுடைய சாதனை, கின்னஸ் வரை சென்றது. (பிறகு 2006ல் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.)

25 வருடமாக ஸ்கோர் ஷீட்டைப் பாதுகாப்பது முடியாத ஒரு விஷயம். அந்தக் காலத்தில் ஸ்கேனர் எல்லாம் இருந்திருந்தால் பாதுகாத்திருக்கலாம்," என்கிறார் எச்.எஸ். போர். ‘உங்களால் முடியாவிட்டால் ஸ்கோர் ஷீட்டை என்னிடமோ சச்சினிடமோ கொடுத்திருந்தால்கூட பத்திரப்படுத்தி வைத்திருப்போமே! அதையெல்லாம் விட்டுவிட்டு, இன்றைக்கு வந்து எலி கடித்துவிட்டது, எரித்துவிட்டோம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?’ என்று செய்தியறிந்து மிகவும் வேதனைப்படுகிறார் காம்பிளி. நியாயமாக அந்த ஸ்கோர் ஷீட்டை ஃப்ரேம் பண்ணி சுவரில் மாட்டியிருந்தாலாவது பத்திரமாக இருந்திருக்கும். அல்லது பி.சி.சி.ஐ. யாவது பொறுப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். யாருக்கும் அக்கறையில்லாததால், இறுதியில், சச்சினின் உலக சாதனையைச் சாம்பலாக்கியதுதான் மிச்சம்.

மார்ச் 22 உலக தண்ணீர் நாள்


பூமி 71% தண்ணீரால் சூழப்பட்டது. திட வடிவில் தண்ணீர் பனிப் பாறைகளாக உறைந்திருக்கிறது. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல், நிலத்தடி நீர் என்று நீர்மமாக இருக்கிறது. காற்றில் ஈரப்பதத்துடன் வாயு நிலையில் இருக்கிறது. இந்த 71% நீரில் சுமார் 3% நீர் மட்டுமே மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தில் நல்ல தண்ணீராக இருக்கிறது.

நம் உடல் சுமார் 60-70% வரை நீராலானது. ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் 7 லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இதில் 2 லிட்டர் வரை நாம் நேரடியாக நீரைப் பருகுகிறோம். மீதி தண்ணீரை உணவு, பழங்கள், பானங்கள் மூலம் நம் உடல் பெற்றுக்கொள்கிறது. நாம் உணவுக்காகச் சார்ந்திருக்கும் தாவரங்கள், விலங்குகள், பறவைகளுக்கும் தண்ணீர் தேவை. இப்படித் தண்ணீர் இன்றி நாம் வாழ முடியாது.

பருவ நிலை மாறுபாடு, மழையின்மை, அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. உலக நாடுகளில் சுமார் 40% மக்கள் தண்ணீர் பற்றாக் குறையால் அவதிப்படுகிறார்கள். சுமார் 100 கோடி மக்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான நீர் கிடைக்கவில்லை. நீர் மூலம் பரவும் நோய்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பலியாகிறார்கள்.
இருக்கும் நீர் ஆதாரங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். நீர் வளத்தைப் பெருக்க வேண்டும்.

மார்ச் 22 உலக தண்ணீர் நாள். இந்த நாளில் சிக்கனமாகத் தண்ணீரை உபயோகப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். அதற்கு நாம் என்னென்ன செய்யலாம்?

தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு பல் தேய்க்க வேண்டாம்.

ஷவரில் குளிப்பதைத் தவிர்த்து, வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிக்கலாம்.
வீட்டில் உள்ளவர்களின் துணிகளை ஒரே நேரத்தில் துவைக்கலாம்.

செடிகளுக்கு காலையோ, மாலையோ தண்ணீர் விட்டால், குறைவான தண்ணீர் போதும். குழாயிலிருந்து தண்ணீர் விடாமல், வாளியில் பிடித்து ஊற்றவும்.

ஒழுகும் குழாய்களை உடனே மாற்ற வேண்டும்.

Thursday, March 07, 2013

இயற்கைச் சீற்றம் - எரிமலை


சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் வரிசையில் உலகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற, சந்திக்கப் போகும் ஆபத்து நிறைந்த இயற்கைச் சீற்றம் என்று சொன்னால் அது எரிமலை வெடிப்பாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய நிலப்பகுதிகள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வரை ஏராளமானவற்றை அழித் தொழித்துள்ள எரிமலைகள் உலகின் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்றன. 

உலகம் தழுவிய அளவில் பிரம்மாண்டமான அழிவுகளையும் பெருத்த தட்பவெப்ப மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய, நெருப்பைக் கக்கக்கூடிய எரிமலைகளுக்கு ஆங்கிலத்தில் வல்கனோ என்று பெயர். இத்தாலியர்களின் நெருப்புக் கடவுள் வால்கன். ஆகவே, நெருப்புடன் தொடர்புடைய அந்தப் பெயரே எரிமலைகளுக்குப் பொருந்தி விட்டது. எரிமலைகள் பற்றிய ஆய்வுகளுக்கு வல்கனோலஜி என்று பெயர்.

பூமியின் உட்புறத்தில் ஏற்படும் இயற்கையான நகர்வுகள் காரணமாக பூமியின் மேல்பகுதியில் ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவுக்கு எரிமலை என்று பெயர். அந்தப் பிளவு அல்லது வெடிப்பின் வழியாக பூமியின் உட்புறத்தில் உள்ள சூடான கற்குழம்புகளும் சாம்பலும் அசாதாரண முறையில் வெளியேறுகின்றன. அப்படி வெளியேறும் கற்குழம்புதான் லாவா என்று அழைக்கப்படுகிறது.

எரிமலை குமுறி வெடிக்கும்போது பூமியின் அடிப்பரப்பில் இருந்து மேல்பரப்பை நோக்கிச்சிதறும் பாறைகள் அல்லது கற்களால் ஆன குழம்பே லாவா. எரிமலையின் துளையில் இருந்து கற்குழம்பு வெளிவருகிற சமயத்தில் அதன் வெப்பநிலை 700 டிகிரி செல்சியஸ் முதல் 1200 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

இந்த லாவாவின் பாகுநிலை சாதாரண நீரைக்காட்டிலும் ஒரு லட்சம் மடங்கு அதிகம். ஆனாலும் இந்தக் கொதிக்கும் கற்குழம் பானது வெகுதூரம் வரைக்கும் உறையாமல் ஓடக்கூடிய சக்தி கொண்டது. அதேசமயம், எரிமலை ஆக்ரோஷமாக வெடித்துச் சிதறினால்தான் கற்குழம்புகள் வெளியேற வேண்டும் என்ற அவசியமில்லை. எரிமலையின் முகத்துவாரம் போன்ற துளையின் மூலமாகவும் சிறிய அளவில் வெளியேறுவது உண்டு.

லாவாக்களின் வகைகள்மிகுந்த பாகுத்தன்மை கொண்டவை,  இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்டவை, குறைந்த பாகுத்தன்மை கொண்டவை
முதல் வகை லாவாவில் சிலிக்கா, அலுமினியம் பொட்டாசியம், சோடியம், கால்சியம், குவாட்சு ஆகிய வேதியியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. பாகுத்தன்மை அதிகமாக இருப்பதால் இந்த வகை லாவாக்கள் குறைவான வேகத்தில் மட்டுமே பாய்கின்றன. அதேசமயம் அதிக தூரத்துக்குப் பாயக்கூடியவை. 

இரண்டாம் வகை லாவாவில் அலுமினியம், சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும். இரும்பு, மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருக்கும். பாகுத்தன்மை சற்றே மிதமாக இருப்பதால் இவற்றின் பாயும் வேகம் முதல் வகையைக் காட்டிலும் அதிகமானது.

மூன்றாவது வகையான லாவா அதிக வெப்பநிலை கொண்டது. பாகுத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அதிவேகமாகப் பாயக் கூடிய தன்மை கொண்டது. 

பலத்த சத்தத்துடன் எரிமலைகள் வெடித்துச் சிதறும்போது பல்லாயிரம் மைல்களுக்கு நெருப்பு மழை பொழிந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய தட்பவெப்ப மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி எரிமலைகள் வெடிக்கும் போது நச்சுத்தன்மை கலந்த வாயுக்கள் வெளியேறுகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃப்ளோரைடு ஆகிய மூன்று வாயுக்கள்தான் எரிமலை வெடிப்பின்போது உமிழப்படும் முதன்மையான வாயுக்கள். 

மேலும், அதீத வெப்பத்துடன் கூடிய நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் பாறைத்துகள்களும் உமிழப்படுகின்றன. இவை தவிர, ஹாலோ கார்பன்கள், கரியமில மற்றும் ஆவியாகும் தன்மை கொண்ட உலோகக் குளோரைடுகள் ஆகியனவும் எரிமலை வெடிப்பின் போது பூமிப் பகுதியில் உமிழப்படுகின்றன. இவற்றில் ஹைட்ரஜன் குளோரைடும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடும் மேகத்தில் உள்ள நீர்த்தி வலைகளில் கரைந்து அமில மழையை உருவாக்கி விடுகின்றன. 

உலகின் மிகப்பெரிய எரிமலை 1815ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சும்பவா தீவில் உள்ள டம்போரா மலையில் வெடித்ததுதான். சுமார் ஒரு லட்சம் உயிர்களைப் பலி கொண்டது இந்த எரிமலை. 

எரிமலையின் சமீபத்திய வெடிப்புகளையும் அதன் தொடர்ச்சியையும் அடிப்படையாக வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

முதல் வகை, உறங்கும் எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில் ஒருமுறையோ அல்லது பலமுறையோ வெடித்துச் சிதறி, ஆனால் சமீப காலமாக எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருக்கும் எரிமலைகளுக்கு உறங்கும் எரிமலைகள் என்று பெயர். இவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறக்கூடியவை.

இரண்டாவது வகை, உயிர்த்துடிப்புள்ள எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில் வெடித்துச் சிதறியதோடு, வெகு சமீபத்திலும் வெடித்துச்சிதறிய எரிமலைகளுக்கு உயிர்த்துடிப்புள்ள எரிமலைகள் என்று பெயர். சமீபகாலம் என்று சொல்வது எரிமலைகளைப் பொறுத்தவரை பத்தாயிரம் ஆண்டுகளைக் குறிகிறது.

மூன்றாவது வகை, இறந்துபோன எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில் வெடித்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல், சமீபத்திலும் எந்தவித சலனத்துக்கும் ஆட்படாமல் இருக்கின்ற எரிமலைகளுக்கு அழிந்துபோன எரிமலைகள் என்று பெயர். வெடிப்பதற்கு எந்த விதமான அறிகுறியும் தட்டுப்படவில்லை என்பதைத் தீவிரமாக சோதனை செய்த பிறகே இப்படியான அறிவிப்புகள் வெளியிடப்படும். 

எது உறங்கும் எரிமலை, எது அழிந்துபோன எரிமலை என்பதை அடையாளம் கண்டு அறிவிக்கும் விஷயத்தில் அறிஞர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால், எரிமலைகளின் முக்கிய குணமே அவற்றின் உறக்கம்தான். பல எரிமலைகள் அழிந்து போனவையாகக் கருதப்பட்டிருந்த நிலையில் திடீரென வெடித்துச் சிதறி ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, அலாஸ்காவில் உள்ள ஃபோர்பிக்ட் எரிமலை 2006 செப்டெம்பர் வரை அழிந்துபோன ஒன்றாகவே கருதப்பட்டு, திடீரென வெடித்து ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது. 

ரஷ்யா, ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, இந்தோனேஷியா, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் எரிமலைகள் அதிக அளவில் இருக்கின்றன. அவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எரிமலைகள் தொடர்ச்சியாக நெருப்புக் குழம்பைக் கக்கியபடியே இருக்கின்றன.

இந்த மாதப் பிரபலங்கள்...

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

1879, மார்ச் 14ம் தேதி ஜெர்மனியின் உல்ம் நகரில் ஹெர்மன் - பாலின் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நீண்ட காலம் கழித்தே பேசத் தொடங்கிய ஐன்ஸ்டைன், படிப்பில் பின்தங்கிய, விளையாட்டுகளிலும் ஆர்வமில்லாத மாணவனாகவே விளங்கினார். இவர்தான் பின்னாளில் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட கோட்பாடு இயற்பியல் விஞ்ஞானி ஆனார். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் களுள் ஒருவராகக் கருதப்படும் ஐன்ஸ்டைன் புகழ் பெற்ற சார்புக் கோட்பாடு, குவாண்டம் எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல், அண்டவியல் ஆகிய துறைகளில் மகத்தான கண்டுபிடிப்புகளை அளித்தார். 

அப்பாவின் வியாபாரம் நொடித்துப் போகவே, ஐன்ஸ்டைன் குடும்பம் ஜெர்மனியிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்குக் குடிபெயர்ந்தது. ஐன்ஸ்டைன் சுவிடசர்லாந்து சென்று பள்ளி படிப்பை முடித்துவிட்டு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிரௌனின் நகர்ச்சி (Brownian Motion), ஒளிமின் விளைவு (Photoelectric Effect), பொருண்மை ஆற்றல் சமன்பாடு (Mass Energy Equation), சிறப்பு சார்பியல் கோட்பாடு (Special theory of relativity) ஆகிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். 1905-ம் ஆண்டு அவர் வெளியிட்ட இந்த மூன்று கோட்பாடுகளை கௌரவிக்கும் விதத்தில், 2005ம் ஆண்டை ஐ.நா. சபை சர்வதேச இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடியது.

ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் கணிசமான சேவைக்காகவும் 1921ல் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டடது. 

இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி அமெரிக்கா லட்சக்கணக்கான மக்களை அழித்த நாளை ‘இருண்ட தினம்’ என்று வருந்தினார் ஐன்ஸ்டைன். அணு குண்டுகள் பூமியில் வாழும் உயிரினங்களின் அழிவுக்கும், விண்வெளியில் கதிரியக்க விஷப் பொழிவுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரித்தார். வாழ்வின் கடைசி வினாடி வரை அணு ஆயுதம் மனித இனத்தையே அழித்துவிடும் என்று முழங்கிய ஐன்ஸ்டைன், 1955 ஏப்ரல் 18 அன்று 76 ஆவது வயதில் மறைந்தார். ‘இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்’ என பிரபல டைம்ஸ் பத்திரிகை இவரைப் போற்றிப் புகழ்ந்துள்ளது.

அகிரா குரொசோவா


1910 மார்ச் 23. ஜப்பானில் டோக்கியோ நகரில் இசாமு குரொசோவா என்ற ராணுவ உடற்பயிற்சி ஆசிரியருக்கும், ஷிமாவுக்கும் மகனாக அகிரா குரொசோவா பிறந்தார். குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இசாமு படங்களுக்குச் செல்லும் பழக்கம் இருந்ததால், பிற்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்னும் குறிக்கோள் சிறு வயது முதற்கொண்டே அகிராவுக்கு இருந்தது. 

1923ல் கைகா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்த உடன் ஓவியராக விரும்பி டோக்கியோ நுண்கலை அகாடமியில் சேர்ந்தார். பின்னர் பத்திரிகை அலுவலகத்தில் ஓவியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் திரைத்துறையில் தடம் பதிக்கத் தொடங்கியபோது ஊமைப் படங்கள் முடிவுக்கு வந்து பேசும் படங்கள் வெளியாகத் தொடங்கின. 1936 டோஹோ ஃபிலிம் ஸ்டூடியோவில் கதை வசனகர்தாவாகவும், உதவி இயக்குனராகவும் சேர்ந்தார். 1943ல் ‘சான்ஷிரோசுகடா’ என்ற முதல் படத்தை இயக்கினார். 1950ல் இவரது இயக்கத்தில் வெளியான ‘ரஷோமோன்’ படம் வெனிஸ் உலகத் திரைப்பட விழவில் முதல் பரிசைப் பெற்றது. ஜப்பானியத் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனி மரியாதை கிடைத்தது.

இகிரு, அகஹிகே, ஷிசினின் ஓ சமுராய், தி செவன் சமுராய், தி பாடிகார்ட், சஞ்சுரோ, தி மெக்னிஃபிசண்ட் செவன், எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் போன்ற இவருடைய திரைப்படங்கள் ஒளிப்பதிவு, மனித நேயத்துடனான ஆழமான கதையம்சம், படமாக்கப்பட்ட விதம், அழகுணர்வு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 

60களின் பிற்பகுதியில் குரொசோவாவின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால்1975ல் டெர்சு உஜேலா படம் அகாடமி விருதுகளைக் குவித்ததைத் தொடர்ந்து மீண்டும் உச்சத்தைத் தொட்டார். 1980ல் வெளியான ககேமுஷா கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசைத் தட்டிச் சென்றது. 1985ல் வெளியான ரான் கேயோஸ் பல்வேறு பிரிவுகளில் அகாடமி பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. 80 வயதைக் கடந்த நிலையிலும் ட்ரீம்ஸ், க்யோஷிக்யோகு படங்களை இயக்கிச் சாதனை படைத்தார். 

1990ல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1998, செப்டம்பர் 7 அன்று சினிமாவுக்கென்றே வாழ்ந்த இந்த மேதை டோக்கியோவில் மரணமடைந்தார். 62 வருட திரைப்பட வாழ்க்கையில் இவர் இயக்கிய படங்கள் 31 மட்டுமே.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்


தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை மெல்வில் பெல்குரல் குரல்வளை, நாக்கு, தொண்டை, உதடுகள் உள்ளிட்ட உறுப்புப் பயிற்சி நிபுணராக விளங்கியதால் கிரஹாம் பெல்லுக்கு இயல்பாகவே ‘குரல் மற்றும் ஒலி’ ஆகியவற்றில் ஆர்வம் தோன்றியது. 

கிரஹாம் பெல் எடின்பர்க்கிலுள்ள ராயல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1865ல் ஹெர்மன் ஹேம் ஹோல்ட்ஸ் எழுதிய ‘வியப்பூட்டும் குரலொலி’ என்னும் புத்தகத்தைப் படித்ததைத் தொடர்ந்து மின்சாரம் வழியே பேசும் ஒலியைச் செலுத்துவது குறித்து சிந்திக்கத் தொடங்கினார். 1871ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியதைத் தொடர்ந்து, 1873ல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் குரல் உறுப்புகள் துறைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 

தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஆகிய இருவரும் தொலைபேசி கண்டுபிடிப்பில் ஒரே காலகட்டத்தில் தனித்தனியே ஈட்டுபட்டனர். இறுதியில் கிராஹாம் பெல் தொலைபேசி கண்டுபிடிப்பில் வெற்றி பெறவே அமெரிக்க அரசு 1876 மார்ச் 7ம் தேதி அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டு காப்புரிமையை வழங்கியது. 

கிரஹாம் பெல் தனது கண்டுபிடிப்புகளின் உரிமையை 1,00,000 டாலருக்கு வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் நிறுவனத்துக்கு விற்க முன்வந்தபோது அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். எனவே 1877ம் ஆண்டு ‘பெல் தொலைபேசி’ என்று சொந்தப் பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து 30வது வயதிலேயே கோடீஸ்வரரானார். 1881ல் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் மூன்றில் இரு பகுதியை விற்ற பிறகும் ஒரு பகுதிப் பங்குகளின் மதிப்பாக 10,00,000 டாலர் கைவசம் இருந்தது. கிராஹம் பெல் 1922 ஆகஸ்ட் 2 மறைந்தபோது அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவிலுள்ள அனைத்துத் தொலைபேசிகளும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டன. 

உலக மக்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ள தொலைபேசி என்னும் மகத்தான சாதனத்தைக் கண்டுபிடித்த பெல், தனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட தனது அன்பு மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொள்ளவே இல்லை. காரணம் அவரது மனைவி கேட்கும் திறனற்றவர்.

எனது இந்தியா (டோக்கியோ கேடட்ஸ்! !) - எஸ். ரா

இந்திய வரலாற்றில் எழுச்சிமிக்க சுதந்திரப் போராளியாக மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவரது மரணம் குறித்த புதிர் இன்றும் முழுமையாக விலகவில்லை. 'நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்’ என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஒரு முன்னோடி அமைப்பு. அது உருவாக்கப்பட்ட விதம், பல்கிப் பெருகிக் கட்டுக்கோப்புடன் செயல்பட்ட விதம், அடைந்த வெற்றிகள் என அதன் வரலாற்றைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. இந்திய தேசிய ராணுவத்தில் மிக முக்கியப் பங்கை வகித்தவர்கள் தமிழர்கள். பெருமைக்குரிய நினைவுகளுடன் வாழும் ஐ.என்.ஏ. வீரர்கள் இன்றைய சமகால அரசியல் மோசடிகளைக் கண்டு கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.  

இந்தியத் தேசிய ராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி​வைக்கப்​பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.  

விமானத்தில் சென்று குண்டு வீசுவது, திடீர்த் தாக்குதல்கள் நடத்துவது ஆகியவற்​றில் இந்த டோக்கியோ கேடட்ஸ் பிரிவு சிறப்புப் பயிற்சி பெற்றது. பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
மேலும், பல்வேறு தாக்குதல் முறை​களில் சிறப்புப் பெற்றிருந்த இந்தியத் தேசிய ராணுவம், வான் படைத் தாக்குதலுக்கு தன்னை உயர்த்திக்​கொள்ள முயன்றது. ஆனால், அதற்கான விமானங்களை வாங்கப் போதுமான நிதி இல்லை. மேலும், இதற்கான விமானப் பயிற்சித்தளங்கள், திறமையான ராணுவப் பயிற்சியாளர்களும் இல்லை. ஆகவே, ஜப்பானிய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் தேர்வுசெய்யப்பட்ட வீரர்களுக்கு வான் படைத் தாக்குதல் பயிற்சி அளிக்க நேதாஜி திட்ட​மிட்டார்.

இதற்காக, இந்தியத் தேசிய ராணுவத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அதில், ஆர். எம்.அண்ணாமலை, முகமது அத்தர், அனுப் குமார் சிங், ஆர்.எஸ்.பெனி​சார்னிடோ, பிஷன்சிங், பீமாரூ, வி.கே.சட்டர்ஜி, ஜி.என்.சௌத்ரி, டி.தாசன், கே.துரைசாமி, என்.கருப்பையா, கே.டி.மேனன், பி.கே.மித்ரா, என்.சி.முகர்ஜி, வி.தாராநாத், சி.பி.நாராயண், ஆர்.பி.நயாதேவ், ஏ.ஆர்.தத்தா, வி.கணபதி, மோதிநாத், காந்திநாக், ஏ.கே.கோஷ், காந்திதாஸ், ஏ.கே.குப்தா, ரமேஷ்பெனகல், ஹிரான்சு குமார்சிங், எஸ்.காமா, கிருஷ்ணன், கே.ரபீந்திரநாத், எம்.கே.ராம்குமார், ரஞ்சித், ஆர்.கே.சேகர், எஸ்.பி.சர்மா, எஸ்.வி.சர்மா, அக்தர் அகமது, கரம்கர், பிமல்தேவ் ஆகியோரைத் தேர்வுசெய்து 1944-ம் ஆண்டு டோக்கியோ நகரத்துக்கு அனுப்பிவைத்தார்.

யுத்தச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது. பர்மாவில் இருந்து காட்டு வழியாகதீ பயணம்செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் கியூசு தீவை அடைந்தனர். அந்தத் தீவு, கடற்படையின் வசம் இருந்தது. அங்கே, கடற்படைக்கான பயிற்சிகள் நடைபெற்றன.

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 45 வீரர்களையும் ஜப்பானியக் கடற்படைத் தலைவர் வரவேற்று, உள்ளூரில் ஒரு ஹோட்டலில் தங்கவைத்தார். அது, கடுமையான பனிக் காலம். தொடர் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. சிங்கப்பூரிலும் பர்மா​விலும் பார்த்த ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கும், கியூசு தீவில் இருந்த ஜப்பானிய வீரர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. கெம்பித்​தாய் என்னும் ஜப்பானிய போலீஸ் படை முரட்டுத்தனமானது. அதுபோலவே, பர்மாவில் இருந்த சிங்கப்பூர் ராணுவ வீரர்களும் இருந்தனர். ஆனால், கியூசு தீவில் இருந்தவர்கள் பெரும்பாலும் கடற்படையை சேர்ந்தவர்கள். ஜப்பானில் படித்தவர்கள். ராணுவத்தில் பணியாற்றுவதைவிட கடற்படையில் பணியாற்றுவதை கௌரவமாகக் கருதினர். ஆகவே, கடற்படை வீரர்கள் மற்ற ராணுவ வீரர்களை​விட கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் காரணமாக, இந்தியத் தேசிய ராணுவத்தினரை இன்முகத்​துடன் வரவேற்றனர். கியூசு தீவு பழமையான வீடுகளைக்​கொண்டது. சிறிய அழகான வீதிகளைக்கொண்ட ஊர் மிகவும் சுத்தமாக இருந்தது. அந்த ஊரில் உணவகங்​களைப் பார்க்க முடியவில்லை. ஒன்றி​ரண்டு கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனால், அங்கேயும் உணவுப் பொருட்​கள் எதுவும் கிடைக்கவில்லை. உணவுப் பொருட்களுக்கு ரேஷன் முறை அமலில் இருந்தது. பசியும் தாகமும் குளிருமாக இந்திய வீரர்கள் கியூசு தீவில் சுற்றி அலைந்தனர். இரவில் பனி அதிகமாக இருந்தது. கடும் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்திய வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி மரத்தால் ஆனது. சிறு இடைவெளி வழியாக குளிர் காற்று உள்ளே புகுந்தது. தேச சேவைக்​காக வந்திருக்கிறோம் என்ற எண்ணம், அந்தக் குளிரைப் போக்கி அவர்களுக்குத் தைரியத்தை ஏற்படுத்தியது.


கியூசு தீவில் இருந்து மறுநாள் அவர்கள் டோக்கியோ நகரத்துக்கு ரயிலில் சென்றனர். டோக்கியோ நகரம் பனிப்பொழிவின் ஊடே மயக்கும் அழகுடன் அவர்களை வரவேற்றது. இம்பீரியல் ராணுவத்தின் பயிற்சிக்கூடம் என்பது ஒரு தனி உலகம். அங்கே, வான் படைப் பயிற்சியில் சேருவதற்கு முன், ஆரம்ப நிலை பயிற்சிகளில் தேர்ச்சிபெற வேண்டும். அதில் தேறியவர்களுக்கு மட்டுமே வான் படையில் இடம் அளிக்கப்படும். இந்த ஆரம்ப நிலைப் பயிற்சிக்காக, குவா தூ குஹேன் என்னும் டோக்கியோ ராணுவப் பயிற்சி மையத்தில் 45 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கட்டடம் ப வடிவத்தில் இருந்தது. இரண்டு தளங்கள்கொண்ட அந்தக் கட்டடத்தின் ஒரு தளத்தில் 50 அறைகள் இருந்தன. இந்தப் பயிற்சிக்கு தலைவராக இருந்தவர் மாரூ. அவருடன் இரண்டு அதிகாரிகள் பயிற்சி உதவியாளர்களாக இருந்தனர். ஒவ்வொரு பயிற்சி வீரனுக்கும் ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அறையில் ஒரு படுக்கையும் கம்பளிப் போர்வையும், அணிந்துகொள்ள வேண்டிய சீருடை மற்றும் உடற்பயிற்சிக் காலணிகள், சிறப்பு உடைகள் தரப்பட்டன. அத்துடன், ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வதற்கான புத்தகங்கள் இரண்டும் வழங்கப்பட்டன. ராணுவப் பயிற்சிகள் முழுமையாக ஜப்பானிய மொழியில் மட்டுமே அளிக்கப்படுகிற காரணத்தால், மொழியைக் கற்றுக்கொள்ளாமல் வான் படைப் பயிற்சிக்கு அனுமதிக்க முடியாது என்பதில் கறாராக இருந்தனர். மொழியை அறிந்துகொள்வதற்காக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்​​பட்டது.

காலை 5 மணிக்கு எழுந்து மூன்று மைல் தூரம் ஓட வேண்டும். அப்போது, குளிர் பூஜ்யத்துக்கு கீழே இருக்கும். உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது. பனிப் புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள். மூன்று மைல் தூரம் ஓடியதும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு. அதன் பிறகு, அதே மூன்று மைல் தூரம் திரும்பி ஓடி வர வேண்டும். அது முடிந்தவுடன் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. அதன் பிறகு, 10 நிமிடங்கள் ஓய்வு. பிறகு​தான் சிறப்புப் பயிற்சிகள். அதை முடித்துக்கொண்டு அவசரமாக குளித்துத் தயாராகி வர வேண்டும். காலை உணவாக வேகவைத்த சோறு ஒரு கோப்பையும் சோயாக் குழம்பும் தருவார்கள். அதை முடித்துக்கொண்டு வகுப்புக்குச் செல்ல வேண்டும்

காலை 9 மணிக்கு தொடங்கும் வகுப்பு மதியம் 1 மணிக்கு முடியும். மதிய உணவில் மீன் கிடைக்கும். ஆனால், அதில் காரம், சுவை எதுவும் இருக்காது. பிறகு, மதிய வகுப்பு இரண்டு மணி நேரம் நடக்கும். அதை முடித்துக்கொண்டு மாலை விளையாட்டு ஒன்றரை மணி நேரம். அது முடிந்தவுடன் தேநீர் வழங்கப்படும். அதில் சர்க்கரை இருக்காது. அந்த நாட்களில் சீனி கிடைப்பது அரிது என்பதால், ஜப்பானிய மன்னரின் பிறந்த நாள் மற்றும் விஷேச நாட்களில் மட்டுமே ராணுவ வீரர்களுக்கு சிறப்புச் சலுகை​யாக ஒரு தேக்கரண்டி சர்க்கரை வழங்கப்படும்.

மாலை 6.30 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். அதன் பிறகு, இரவு 8 மணி வரை எழுத்துப் பயிற்சி. அது முடிந்த பிறகு, இரண்டு மணி நேரம் ஓய்வு. அந்த நேரத்தில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் ஊருக்குக் கடிதம் எழுதவும் தங்களைப் போல பயிற்சி பெற வந்துள்ள தாய்லாந்து இளை​ஞர்களுடன் கலந்து பேசுவது போன்றவை நடக்கும். இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். ஞாயிறு ஒரு நாள் விடுமுறை. அன்று, துணி துவைப்பது, அறையைச் சுத்தம்செய்வது போன்றவற்றைச் செய்வார்கள். பொதுவிடுமுறை என்பதே கிடையாது.

இதுபோன்ற கடும் பயிற்சி காரண​மாகவும், குளிர் தாங்க முடியாமலும் வீரர்கள் சோர்வடைந்தனர். அதில், பிஷன்சிங் என்ற இளைஞர் உடல்​நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். அந்த சோகம் மற்ற இந்தியத் தேசிய ராணுவத்​தினரை உலுக்கியது. அவருக்குப் பதிலாக பயிற்சி மேற்கொள்ள அக்தர் அகமது என்பவரை பர்மாவில் இருந்து அனுப்பிவைத்தனர்.

இந்தப் பயிற்சி முகாமைப் பார்வையிடுவதற்காக, நேதாஜி ஒருநாள் வரப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், தங்களது அறைகளை சிறப்பாக அலங்கரித்தனர். குறிப்பிட்ட நாளில், நேதாஜி வந்தார். தங்களுடைய தலைவரை நேரில் பார்த்த வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஒவ்வொரு வீரருடனும் தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நேதாஜி, அவர்களது குடும்ப உறுப்​பினர்கள் பற்றியும் விசாரித்தார். அது, ராணுவ வீரர்களுக்கு மிகுந்த உத்​வேத்தை ஏற்படுத்தியது. மேலும், ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்பானதோர் எழுச்சி உரையை நிகழ்த்தினார் நேதாஜி.

நேதாஜி வருகையை ஒட்டி சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விருந்தில் வழக்கமான ஜப்பானிய உணவுகளுடன் ஆட்டி​றைச்சி, பூரி, வடை, அப்பளம், ஊறு​காய் ஆகியவையும் வழங்கப்பட்டன. பயிற்சியில் இருந்த தமிழர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் திருப்தியாக சாப்பிட்டனர். நேதாஜி​யின் உத்தரவுப்படிதான் அந்தச் சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்த வீரர்கள், ஒரு தலை​வன் தனது தொண்டர்களின் பசியறிந்து ருசியான உணவுகளை தந்த அக்கறையை வெகுவாகப் போற்​றினர். அந்தப் பயிற்சி முகாமைப் பார்வையிட்டுச் சென்ற நேதாஜி, ஒவ்​வொரு வீரனையும் வாழ்த்தி, தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அதில், பின்னாளில் இந்திய வான் படை அதிகாரியாக பணியாற்றிய ரமேஷ் பெனகலுக்கு ஒரு தனிப் பெருமிதம். அவருக்கு அதுவரை வீட்டில் இருந்து ஒரு கடிதம்கூட யாரும் அனுப்பியது இல்லை. அவர் பெற்ற முதல் கடிதம் நேதாஜியின் வாழ்த்துக் கடிதம் மட்டுமே. அதை தன் வாழ்நாளின் அரிய பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வருகிறார் ரமேஷ் பெனகல்.

Monday, March 04, 2013

புதிய வங்கிகள்... எப்போது வரும்?

புதிய வங்கிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை கடந்த 22-ம் தேதி அன்று வெளியிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த அறிவிப்பின்படி வரும் ஜூலை 1-ம் தேதிக்குள் புதிய வங்கி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். பத்தாண்டு வரலாறு, 500 கோடி மூலதனம் கொண்ட நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என பல விதிமுறைகளைச் சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

புதிய வங்கி தொடங்க டாடா, பிர்லா, ரிலையன்ஸ் என பல பெரிய நிறுவனங்கள்கூட பலமாகப் போட்டி போடுகின்றன.  இந்நிறுவனங்களுக்குப் பல தொழில்கள் இருந்தாலும், வங்கித் தொழில் இல்லையே என்கிற மனக்குறை. தவிர, வங்கி நடத்துவதன் மூலம் 3 சதவிகித லாபம் எளிதாகக் கிடைக்கும். 

பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் வங்கிகளின் பிஸினஸ் மாடல் அவ்வளவு சுலபமல்ல. இப்போதைக்கு 27 பொதுத் துறை வங்கிகள், 31 தனியார் வங்கிகள், 38 வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 53,000 கிளைகள் இருந்தாலும், புதிய வங்கிகளைக் கொண்டு வரக் காரணம், இந்தியாவில் சுமார் 65% மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை என்பதே.

 
வங்கி தொடங்க பல நிறுவனங் களுக்கு விருப்பம் இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருப்பதா கவே தெரிகிறது.புதிய வங்கிகள் வரும்பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதும் முக்கியமான பிரச்னை. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வங்கிகளின் சேவை இன்னும் தேவையாகவே இருக்கிறது. புதிய வங்கிகள் போட்டிக்கு வந்தால்கூட, அது ஆரோக்கியமானதாகவே இருக்கும். உதாரணமாக, இதற்கு முன்பு வந்த வங்கிகள் டெக்னாலஜியில் நிறைய புதுமையைக் கொண்டுவந்தன. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எங்களைப் போன்று ஏற்கெனவே இருக்கும் வங்கிகளும் நிறைய மாற்றங்களைச் செய்தன.  அதனால் புதிய வங்கிகள் வருவது யாருக்கும் பாதிப்பு ஏற்படாது''.
 
முக்கியமான விதிமுறைகள்:
   * 10 வருடங்களுக்கு மேல் செயல்படும் நிறுவனமாகவும், 500 கோடி மூலதனமும் தேவைப்படும்.

* முதல் 5 வருடங்களுக்கு அந்நிய முதலீடு 49 சதவிகிதத்துக்கு மேல் தாண்டக் கூடாது.

* வங்கிகள் ஆரம்பித்த நாள் முதல் மற்ற வங்கிகள் போல 40 சதவிகிதம் முன்னுரிமை கடன் தர வேண்டும்.

* 25 சதவிகித கிளைகள் கிராமப்புற பகுதியில் ஆரம்பிக்கவேண்டும் (9,999 மக்கள் அல்லது இதற்கும் கீழே இருக்கும் மக்கள் தொகை உள்ள ஊர்கள்).

* வங்கியின் போர்டில் தனி இயக்குநர்கள் (independent Directors) அதிகம் இருக்கவேண்டும்.

* வங்கி ஆரம்பித்த மூன்று வருடத்துக்குள் பட்டியலிடப்பட வேண்டும்.
 
 
 

தனிநபர் வருமான வரிச் சலுகை இல்லை..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் இது. அதனால் சாதாரண மக்களுக்கு அதிக வருமான வரிச் சலுகையை வாரி வழங்குவார் நிதி அமைச்சர் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வரியைக் குறைப்பதற்கு பதில், வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

 வரிச் சலுகை இல்லை..! 

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அடிப்படை வருமான வரி வரம்பான ரூ.2 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை. பிறகு என்னதான் சலுகை என்கிறீர்களா?

ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு ரூ. 2,060 வரி தள்ளுபடிதான் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, அடிப்படை வரம்பு ரூ. 2 லட்சம் என்பதைரூ. 2.2 லட்சம் ரூபாயாக அதிகரித்தால், அனைத்து வரிதாரர்களுக்கும் 2,060 ரூபாய் வரி மிச்சமாகும். இதைத் தவிர்க்கும்பொருட்டு 5 லட்சம் ரூபாய் என்கிற உச்சவரம்பை புத்திசாலித்தனமாக நிதி அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.

.

வீட்டுக் கடனுக்கு சலுகை..! 

வங்கி அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குவோருக்குக் கூடுதலாக ரூ. 1 லட்சம் வரிக் கழிவு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.

ஏப்ரல் 1- 2013லிருந்து 2014, மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ. 25 லட்சத் துக்குள் கடன் பெற்று ஒருவர் வீடு வாங்கும் முதல் வீட்டுக்கு, அவர் செலுத்தும் வட்டிக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் வரை வரிக் கழிவைப் பெறலாம். ஒருவேளை மேற்கண்ட காலகட்டத்தில், இந்த வரிக் கழிவை முழுமையாகப் பெற முடியாவிட்டால், மீதி வரிக் கழிவை 2015-2016-ல் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகையுடன், கூடுதலாக இந்த ரூ. 1 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும் என்பது அடுத்த நிபந்தனை. இந்தக் கூடுதல் வரிச் சலுகை 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். 40 லட்சம் ரூபாய்க்குள் பெருநகரங்களில் வீடு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில், இச்சலுகை சிறு நகரங்கள் மற்றும் புறநகர்களில் வீடு வாங்குபவருக்கு மட்டுமே பயன்படும்.

ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்..! 

ராஜீவ்காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான,
10 லட்சம் ரூபாய் வருமான வரம்பு 
ரூ12 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையிலான தொகைக்கு 50% சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப 2,500 முதல் 7,500 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 50,000 முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டிலும் வருமானத்திலிருந்து ரூ.25,000த்தை கழித்துக்கொள்ளலாம்.

Saturday, March 02, 2013

எனது இந்தியா ( கவிஞர்... கணித அறிஞர்! ) - எஸ். ரா.....

வித்யாதர் பட்டாச்​சாரியா என்ற அமைச்சரின் திட்டப்படி ஜெய்ப்பூர் கட்டப்பட்டது. வித்யாதர் பட்டாச்சாரியா, வாஸ்து சாஸ்திர நிபுணர் என்பதால், நகரம் ஒன்பது கோள்களைப்போல ஒன்பது பிரிவுகளாக அமைக்கப்பட்டது. இவற்றில் ஏழு பிரிவுகளில் மக்கள் வசிப்பிடமும் இரண்டு பிரிவுகளில் மன்னர்களின் அலுவலகங்களும் அமைக்கப்​பட்டன. 1853-ல் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையை முன்னிட்டு, ஜெய்ப்பூர் நகரம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டது. அன்று முதல் இந்த நகரை 'பிங்க் சிட்டி’ என்றே மக்கள் அழைக்கின்றனர். மொகலாய மன்னரான முகமது ஷாவின் ஆணைப்படி வானவியல் குறிப்புகளை ஆராய்ந்து அதில் திருத்தம் செய்யத் தொடங்கினார் மகாராஜா ஜெய்சிங். இதற்காக, ஏழு ஆண்டுகள் பல்வேறு மொழிகளில் உள்ள வானவியல் குறிப்புகளை, ஆய்வுகளைப் படித்து ஆராய்ந்து பரிசோதனையை துல்லியமாகச் செயல்படுத்துவதற்காக, வானவியல் அளவுக் கூடங்களை உருவாக்க விரும்பினார். அந்தக் கனவின் நிஜ வடிவமாக உருவானதே ஜந்தர் மந்தர்.

ஜெய்சிங், தான் படித்த வானவியல் புத்தகங்களின் துணையால், உள்ளூர் பளிங்குக் கற்களால் இந்தக் கட்டடங்களைக் கட்டினார். நேரத்தைக் கணக்கிடுவதற்காக இவர் உருவாக்கிய சூரியக் கடிகாரத்தின் வடிவம் கட்டடக்கலையில் அரிய சாதனை. வானவியல் கருவிகளைப் போலவே, நீர் பாய்ச்சும் இயந்திரங்களையும் விவசாயப் பணிகளுக்கான கருவிகளையும் ஜெய்சிங் வடிவமைத்து இருக்கிறார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் குறித்து எந்த உபகரகணங்களையும் பயன்படுத்தாமல் தாலமி என்ற அறிஞர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். முடிவில் அவர், 1,022 நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு வகைப்படுத்தி இருக்கிறார். அந்தப் பட்டியலை மேம்படுத்த பாக்தாத் நகரில் ஒரு சிறப்பு வானவியல் கூடம் அமைக்கப்பட்டு அதன் மூலம் நட்சத்திரங்களின் நகர்வுகள் கணக்கிடப்பட்டு 'தாலமி’யின் அட்டவணை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.


இதைத் தொடர்ந்து, 1,000-வது ஆண்டில் கெய்ரோ நகரில் கலிபா அல்ஹக்கிம் ஆட்சியின்போது ஒரு வானவியற்கூடம் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதுபோலவே, இன்றுள்ள ஈரானில் அமைந்துள்ள நிஷாப்பூரில் 1074-ம் ஆண்டு சிறப்பு வானவியற்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. இப்படி, அரபு மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் தொடர் முயற்சியால் வானவியல் குறித்த புதுமைகள் உலகுக்கு அடையாளம் தெரியவந்தன. 15-ம் நூற்றாண்டில் துருக்கிஸ்தானை ஆட்சி செய்த உலாபெக், வானவியலில் தீவிர ஆர்வலர். அவர் சாமர்கண்டில் பெரிய வானவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்து நட்சத்திரங்களின் நகர்வுகளைத் துல்லியமாகப் பதிவுசெய்தார். இந்தப் பட்டியலில் 1,018 நட்சத்திரங்கள் குறிப்பிடப்​பட்டு இருந்தன. அவற்றின் இயல்பு, வேகம், நகரும் திசை, அதன் விளைவுகள் யாவும் துல்லியமாக விவரிக்கப்பட்டு இருந்தன. இந்த உலா​பெக்கின் அட்டவணையைத் திருத்தம்செய்து புதிய தகவல்களை இணைக்க விரும்பிய மன்னர் ஜெய்சிங், வானவியல் கருவிகளின் தொகுப்புக் கூடம் ஒன்றை நிர்மாணம் செய்தார். அதற்காக, சாமர்கண்டில் இருப்பதுபோலவே வானவியல் கருவிகளை தானே உருவாக்கி இருக்கிறார் ஜெய்சிங். மரபாக வானவியல் கருவிகள் பித்தளையில் செய்யப்பட்டன. ஆனால், அவற்றைக்கொண்டு துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்று உணர்ந்த ஜெய்சிங், இதற்காக விஷேசமான வடிவமைப்புகொண்ட கட்டடங்களை நிர்மாணம் செய்வது என்று முடிவுசெய்து, தானே வடிவமைத்து இருக்கிறார். சூரியனின் நகர்வைக்கொண்டு துல்லியமாகக் காலத்தைக் கணிக்கும் இவரது இயந்திர வடிவங்கள் உலகுக்கு இன்று பிரமிப்பான முன்னோடி முயற்சிகளாக உள்ளன.


பெர்ஷிய மற்றும் அரபு வானவியல் ஆய்வு​களுடன் அன்று ஐரோப்பாவில் நிலவிய வானவியல் ஆய்வுகளைப் பற்றியும் ஜெய்சிங் அறிந்து வைத்து இருந்தார். அதற்காக அவர், பிரெஞ்சு வானவியல் அறிஞர் டிலா ஹேரே எழுதி 1702-ல் வெளியான 'ஆஸ்ட்ரோ நாமிகே’ என்ற நூலை ஜெசுவிட் மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார் மூலம் வரவழைத்து படித்து இருக்கிறார். அதுபோலவே, பிரிட்டிஷ் வானவியல் அறிஞர் பிளாமிஸ்ட் எழுதிய வானவியல் நூல்களையும் லண்டனில் இருந்து வாங்கி அதில் உள்ள நட்சத்திரங்களின் அட்டவணையைப் பரிசீலனை செய்து இருக்கிறார். தனது ஆய்வுப் பணிகளுக்கு உதவிசெய்வதற்காக ஒரு வானவியல் அறிஞரை அனுப்பிவைக்கும்படி போர்த்துக்கீசிய மன்னருக்கு வேண்டுகோள் விடுத்தார் ஜெய்சிங். அவர், டிசில்வா என்ற அறிஞரை அனுப்பிவைத்தார்.

மொகலாய மன்னர்கள் ஜெய்​சிங்கின் இந்தத் திறமையை மெச்சி அவரைப் பாராட்டியதுடன், விஞ்ஞானப் பூர்வமான அணுகு​முறையுடன் காலக்கணித முறையை நாடெங்கும் அறிமுகப்படுத்தினர். டெல்லியின் இம்பீரியல் ஹோட்டலின் பின்பகுதியில் அமைந்துள்ளது ஜந்தர் மந்தர்.


உலக வரலாற்றில் கிரேக்கர்களுக்குப் பின் அறிவியல் வளர்ச்சியில் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். அவர்களின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிடும் கல்வியாளர் ரியாஸ் முகமது, ''கிரேக்கர் விட்டுச்சென்ற அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, தூசுபடிந்து கிடந்த அவர்களது அறிவுக் கருவூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை மொழிபெயர்த்தும், ஆராய்ந்தும், விமர்சித்தும், விளக்கம் எழுதியும், மேலே சென்று புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்து உலக வரலாற்றில் அழிக்க முடியாத பல தடங்களைப் பதித்தது இஸ்லாமியர்களே'' எனக் கூறுகிறார். அதாவது, அரேபிய வானவியல் துறை ஒரு கோப்பர்னிகஸையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை. ஆனாலும், அரேபியர்களது பங்களிப்பு இல்லாமல் ஒரு கோப்பர்னிகஸோ அல்லது நியூட்டனோ பிறந்து இருக்கவே முடியாது என்று, ஆர்.பிரிபோல்ட் என்பவர் 'த மேக்கிங் ஆஃப் ஹியுமானிட்டி’ என்ற நூலில் கூறி இருப்பதை குறிப்பிடுகிறார்.

பாக்தாத்தை ஆட்சி செய்த கலீபா ஹாரூன் அர்ரஷீத், மஃமூன் ஆகியோரது ஆட்சிக் காலத்திலும், அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றும், வானோக்கு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டன. இவர்களது காலத்திலேயே அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப்புப் பணி முழுவீச்சில் நடந்து இருக்கிறது.

கலீபா அல் மஃமூன், பக்தாத் நகரில் 'பைத்துல் ஹிக்மா’ என்னும் அறிவு நிலையம் ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனமே முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சிக்கு நிலைக்​களமாக விளங்கியது. இந்த நிறுவனம் மொழிபெயர்ப்புப் பணியில் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சிக் கூடமாக​வும் பொது நூல்நிலையமாகவும் விளங்கியது.
கலீபா அல்மன்ஸ¨ரின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 754-775) இந்திய வானியல் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. யார் அந்தச் சிந்தனையை முன்வைத்த அறிஞர் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கலிபா மன்சூர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த யாத்ரீகர், கோள்களின் நகர்வைக்கொண்டு கிரகணத்தைத் துல்லியமாகக் கணித்தார். அவரிடம் இருந்த வானவியல் குறிப்புகள் 'ஸின்ந் ஹிந்து’ எனும் தலைப்பில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இது, அரபுலகில் வானியல் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்​படையாக அமைந்தது.

கலீபா மன்சூருக்காக அபூ யஹ்யா பின் அல் பத்ரீத் என்பவர் இயூக்கிலீட்டின் 'மூலகங்கள்’ (The  Eliments) , தொலமியின் 'அல்மஜெஸ்ட்’ ஆகியவற்றை மொழிபெயர்த்து இருக்கிறார். அதுபோலவே, கலீபா ஹாரூன் காலத்தில் ஈரானிய வானியல் விஞ்ஞானிகளின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்களாக முஸ்லிம்​கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், அரேபியர்கள், சிரிய மதங்களைச் சேர்ந்தவர்​களும் பணியாற்றினர். பூமி உருண்டையானது என நிறுவி, அதன் சுற்றளவைக் கணிக்கும் ஆராய்ச்சி இந்தக் காலத்தில்தான் தொடங்கியது. ஆனால், இதே காலத்தில் அறிவியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் ஐரோப்பாவில் பூமி தட்டையானது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.    

'இஸ்லாம் மற்றும் அரபு வரலாறு’ எனும் நூலில் கஸ்டர் லீ பொன், 'நூல்கள் மற்றும் நூலகங்களின் முக்கியத்துவம் பற்றி ஐரோப்பியர் அறிந்திராத காலத்திலேயே பல இஸ்லாமிய நாடுகளில் நூல்களும் நூலகங்களும் நிறைய இருந்தன. பக்தாத்தில் இருந்த 'பைத்துல் ஹிக்மா’வில் 40 லட்சம் நூல்கள் இருந்தன. கெய்ரோவில் இருந்த சுல்தானியா நூல் நிலையத்தில் 30 லட்சம் நுல்கள் இருந்தன. இஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஆண்டுதோறும் 80,000 நூல்கள் வெளியிடப்பட்டன’ என்கிறார்.

ருபயாத் என்ற புகழ்பெற்ற கவிதை நூலை எழுதிய கவிஞர் உமர் கய்யாம் ஒரு கணித அறிஞர். வானவியல் விற்பன்னர். இவர், தனது தொடர் ஆராய்ச்சியின் மூலம் ஜலாலி நாட்காட்டி ஒன்றை உருவாக்கி, ஈரானுக்கு அளித்து இருக்கிறார். அந்தக் காலக்கணிதம் இன்று வரை பின்பற்றப்படுகிறது. ஒரு மாபெரும் கவிஞர் சிறந்த வானவியல் அறிஞராக இருப்பது பலரும் அறியாத நிஜம்.

இன்று, அறிவியல் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆங்கிலம் பயன்​பட்டது​​போல, ஒரு காலத்தில் அரபு மொழி பயன்படுத்தப்பட்டது. ஜெய்சிங் தனது வானவியல் ஆய்வு​களுக்​காக அரபு கற்றிருக்கிறார். அரபு மொழியில் இருந்த வானவியல் நூல்களை முன்மாதிரியாகக்கொண்டு தனது ஆய்வைத் தொடர்ந்து இருக்கிறார். இவர் உருவாக்கிய வானவியல் கூடங்கள்  இன்று யுனெஸ்​கோவின்நினைவுச்​சின்னமாகப் பாதுகாக்கப்​படுகின்றன.

அறிவியலையும் வரலாற்றையும் இணைக்கும் ஜந்தர் மந்தர், இந்திய வானவியலின் அரிய சாதனை. அதைப் பராமரிக்கவும், பெருமைப்படுத்தவும், பின்பற்றி வளர்த்து எடுக்கவும் வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.