Search This Blog

Thursday, April 18, 2013

அருள் மழை



காஞ்சி பெரியவர் ஜெயந்தி. சுமார் 30 வருடம் முன்பு நடந்தது

என் தாயார் என்னை என் கோடை விடுமுறைக்கு அரக்கோணம் அத்தை வீட்டில் சில
நாள் அழைத்து சென்ற பொழுது..

பெரியவா ஜெயந்தி முன்றைய நாள்:

எங்கள் அத்தை, என் தாயை, அரக்கோணம் ராஜகோபால் ஐயர் வீட்டில் பெரியவா
பெரிய படம் இருக்கும், அவர்கள் வீட்டில் பெரியவா ஜெயந்தி அன்று ஆயுட்ஷேம
பூஜை செய்வார்கள், அதனால் இன்றே போய் பாத்து விடு வர அழைத்து சென்று
இருகிறார்கள்.

அம்மாவுக்கு பெரியவா படம் பாத்தவுடன், அவரை நேரில் தரிசனம் செய்ய ஆசை,
மனதார வேண்டி கொண்டு இருகிறார்கள்.. ஆனால் எவ்வாறு செல்வது.. பெரியவா
இருப்பது கலவையில்.. நங்கள் இருப்பது அரக்கோணம்... பணம் பெரிய அளவில்
இல்லாத குடும்பம்.

ராஜகோபால் ஐயர் வீட்டு, பாட்டி/மாமிக்கு என் அம்மாவை, நீங்கள் பெரியவா
ஆயுட்ஷேம பூஜைக்கும் நாளை நிச்சயம் வரணும் என்று அழைப்பு விடுக்க. ..

ஜெயந்தி அன்று:

எப்பொழுதும் 6 கஜம் புடவை கட்டும் அம்மா, தீடிர் என 9 கஜம் பொடவை கட்டி
போகலாம் என ஏதோ தோண, 9 கஜம் புடவையுடன் , பூஜைக்கு சென்று இருகிறார்கள்..
அங்கு ஆயுத்ஷேமம் முடிந்தவுடன், அந்த தீர்த்த குடங்களுடன் அவர்கள்
வீட்டில் இருந்து காரில் கலவை செல்ல அவர்கள் திட்டம்.

அன்றைக்கு பூஜைக்கு வர வேண்டிய அவர்கள் வீட்டு பெண் தீடிர் காரணத்தால் வர
முடியவில்லை, பூஜை முடிந்தவுடன், தீர்த்த குடம் எடுத்து செல்ல ஒருவர்
வேண்டும், அவர்கள் வீட்டு/மாமி, சுற்றி பார்க்க, என் அம்மா, 9 கஜம்
புடவையுடன், சுத்தமாக, எதுவும் சாப்பிடாமல் பெரியவா படம் முன்பு நிற்பதை
பார்த்து--

எங்காத்து பெண் இடத்தில் நீங்கள் அந்த 'தீர்த்தம் குடம் எடுத்து' காரில்
பெரியவாவை தரிசிக்க வாருங்கள் என கூப்பிட்டு இருகிறார்கள்.

இதை என்ன என்று சொல்ல..

எங்க அம்மா மனதார வேண்டினார், காரில் அழைத்து தரிசனம் கொடுத்தார் அந்த மகான்......

--
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 

Saturday, April 13, 2013

எனது இந்தியா (மொகலாய ஓவியங்கள் !) - எஸ். ரா

இசையிலும் கவிதையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மொகலாய மன்னர்கள் தங்களுக்கென தனித்துவமான ஓவிய ரசனையையும் கொண்டிருந்தனர். அரண்மனையின் அன்றாட நிகழ்வுகளை ஓவியமாக வரையச்செய்வது, முக்கியத் திருவிழாக்கள், வேட்டையாடுதல் மற்றும் குடும்ப நிகழ்வுகளை ஓவிய வரிசைகளாக வரைவதற்காக அரண்மனையிலேயே ஓவியர்கள் இருந்திருக்கின்றனர். அக்பர், பாபர் மற்றும் ஒளரங்கசீப் ஆகியோரைப் பற்றிய ஓவியங்கள்தான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சாட்சிகளாக இன்று திகழ்கின்றன. 'மொகல் மினியேச்சர்’ எனப்படும் நுண்ணோவியங்கள் வரலாற்றின் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகை நுண்ணோவியங்கள் பெர்சியாவில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகமானவை. 13-ம் நூற்றாண்டில் துருக்கியில் இந்த வகை ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்று இருந்தன. இந்தியாவில் பாபர் காலம் தொடங்கி அடுத்த 300 ஆண்டுகளுக்கு மொகலாய நுண்ணோவியங்கள் மிகவும் பிரபலமாக விளங்கியிருக்கின்றன. பிரதானமான ஓவிய முறையாகவே இதை மொகலாயர்கள் வளர்த்து எடுத்தனர்.

16-ம் நூற்றாண்டில் தொடங்கி  இன்றுவரை மினியேச்சர் ஓவியங்கள், அதன் வெளிப்பாடு, உள்ளடக்கம் மற்றும் நிறத்தேர்வு ஆகியவற்றில் பல்வேறு வித உருமாற்றங்களை அடைந்து இருக்கிறது. நுண்ணோவியங்கள் வரைவது மிகவும் கடினம். இதை வரைய மிகுந்த கவனமும் அக்கறையும் தீவிர உழைப்பும் தேவை. தேர்ந்த ஓவியரால் மட்டுமே நுண்ணோவியங்கள் வரைய முடியும். பெர்ஷியாவில், புத்தகங்கள் கலைப்பொருளாகக் கருதப்பட்டன. ஆகவே, அதன் ஓரங்களை அலங்காரம் செய்வது முக்கியமானதொரு கலையாகக் கருதப்பட்டது. இந்தப் பணியைச் செய்வதற்காகவே நுண்ணோவியக் கலைஞர்கள் இருந்தனர். இந்தக் கலைஞர்களைப் பற்றி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற நாவலை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக் எழுதியிருக்கிறார். இந்த நாவல் தமிழில் 'என் பெயர் சிவப்பு’ என்று ஜி.குப்புசாமி மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது. அந்த நாவல் பெர்ஷிய நுண்ணோவிய மரபை விரிவாக விவரிக்கிறது.


புத்தகங்களின் பக்கங்களில் குதிரைகள், பூக்கள், அடையாளச் சின்னங்கள் போன்றவற்றை நுண்ணோவியமாகத் தீட்டுபவர்கள் முழுமையாக உருவங்களை வரைவது இல்லை. குதிரையை அவர்கள் அரூபமான கோட்டுரு வடிவிலேயே வரைகின்றனர். அதாவது தாவிச்செல்லும் ஒரு கோடு குதிரையைக் குறிக்கிறது. அந்தக் கோட்டின் பாய்ச்சலில் குதிரையின் வலிமையை நாம் உணரமுடிவதே அதன் சிறப்பு. இதுதான் குதிரையை வரைவதன் உன்னதமான நிலை. அதை அடைய ஒரு கலைஞன் தன் வாழ்வில் பல வருடங்கள் அயராமல் குதிரைகளை மாறிமாறி வரைந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஒற்றைக்கோடு குதிரையாகும் விந்தை சாத்தியமாகிறது. மதப்பிரதிநிதிகள் மற்றும் மன்னர் பயன்படுத்தும் புத்தகங்களை அழகுபடுத்துவதற்காக நிறைய ஓவியர்கள் அரச சபையில் இருந்தனர். அவர்கள் வரைந்த புத்தகங்கள் ஓவியரின் பெயராலேயே தொகுப்பு ஓவிய நூலாக வெளியாகி இருக்கிறது. உலகின் பல முக்கிய மியூசியங்களில் இந்தப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.

இன்றைக்கும் கலைக்கூடங்களில் இதுபோன்ற தொகைஓவிய நூல்​களைப் பார்க்கலாம். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஓவியத்தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் தண்டனை முறைகள்,  தாவரவியல் தொகுதிகள், பறவையினங்கள் ஆகியவை பற்றிய அரிய ஓவியங்களைப் பார்க்கலாம். மினியேச்சர் ஓவியங்கள் பெரும்பாலும், புராணம் மற்றும் தொன்மக் கதைகளின் விளக்கப்படமாகவே இருந்தன. மொகலாய ஓவிய மரபில் கூட இந்திய புராணீகம், தொன்மம் மற்றும் இதிகாசம் சார்ந்த காட்சிகள் நிறைய வரையப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்தவ பாதிப்பும் மினியேச்சர்களில் உண்டு. இன்னொரு பக்கம், மன்னர்களின் வேட்டை மற்றும் முடிசூட்டு விழாக்கள், வனவிருந்து, நீதிபரிபாலனம், படை நடத்திப் போவது, யுத்தம் மற்றும் ஞானிகளை எதிர்கொண்டு ஆசி பெறுவது போன்றவை முக்கியமான கருப்பொருளாக இருந்திருக்கின்றன.

கையளவு உள்ள ஒரு சிறிய ஓவியத்தை வரைய ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. ஒரு மொகலாய நுண்ணோவியத்தில் ஓணாணின் கண் உள்ளே தெரியும் மங்கலான பிம்பம் கூட துல்லியமாக வரையப்பட்டிருக்கிறது என்றால் அதன் நுட்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நுண்ணோவியங்களில் பிரதான​மானது, அதற்குத் தேர்வு செய்யப்படும் நிறம், பொருளின் துல்லியமான சித்திரிப்பு மற்றும் அரூபமான குறியீடுகள் ஆகியவைதான். ஆரம்பகால நுண்ணோவியங்களில் வெள்ளிப்பூச்சு அல்லது தங்கப்பூச்சு சேர்த்தே வரையப்பட்டன. அவற்றில் பாக்தாத் வகை ஓவியங்கள் மற்றவற்றில் இருந்து பெரிதும் மாறுபட்டவை. உடைகளை வரைவதிலும் பாத்திரங்களின் உடல்வாகை சித்திரிப்பதிலும் அதற்குத் தனித்துவம் இருந்தது. அலங்காரமான உடைகளைக் கொண்ட பெர்ஷிய நுண்ணோவியங்களைப் பாருங்கள். அந்த உடைகளில் உள்ள சிறிய பூக்கள் கூட மிகத்துல்லியமாக வரையப்பட்டு இருப்பதை நன்றாக உணர முடியும். பெர்ஷியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஓவியர்கள், தங்களுக்கான பாணியை உருவாக்கியபோது  இந்தி​யாவில் புத்த கலைமரபில் இதுபோன்ற  நுண்ணோவியங்கள் உருவாக்குவது இன்னொரு பாணியாக நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்த இரண்டு பாணிகளும் கலந்து ஒரு புதிய கலை உருவாக்கம் மொகலாயர்கள் காலத்தில் நடந்திருக்கிறது. அதை அக்பரும் அவரது வாரிசுகளும் ஊக்கப்படுத்தி இருக்​கிறார்கள். அதுதான் மொகலாய நுண்ணோவியங்களின் தனிச்சிறப்பு. மன்னரின் சுயஉருவம், சபைக்காட்சிகள், வேட்டை, விழாக்கள் ஆகியவை குறுஓவியங்களில் முதன்மையாக இடம் பெற்றுள்ளன. தாராவின் திருமணம், ஒளரங்கசீப்பின் யுத்த வெற்றி, அக்பரின் சபை, அக்பரின் வேட்டை, மொகலாய இளவரசிகளின் அழகான உருவங்கள், சபைக்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் உருவம், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவை மொகல் மினியேச்சர் ஓவியங்களில் தனக்கென தனியான அகஉலகைக் கொண்​டிருக்கிறது. பனித்துளிக்குள் ஆகாசம் அடங்கியிருப்பதைப் போல ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையைச் சொல்கிறது. மொகலாயர் கால வாழ்க்கையின் அரிய தருணங்களின் சாட்சி போல இவை திகழ்கின்றன. மொகலாய நுண்ணோவியங்களில்  இடம்பெற்றுள்ள யானை, காண்டாமிருகம், கழுகு, அணில், நாய், சிறுத்தை ஆகியவை அற்புதமாக வரையப்பட்டு இருப்பதை உணரலாம். இன்று, நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் அருகில்நெருங்கி படம்பிடிக்கப்பட்ட மிருகங்கள் தரும் வியப்பை, பரவசத்தை இந்த ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு மிருகத்தின் இயல்பும் தனித்துவமும் ஓவியரால் சரியாக உள்வாங்கப்பட்டு இருக்கிறது. அதன் வெளிப்பாடே ஓவியத்தில் மிருகங்களின் உடல்தோற்றம் மற்றும் பாவங்களாக வெளிப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, யானைகளை அவ்வளவு பரவசத்துடன் திமிருடன் வியப்புடன் மதர்ப்புடன் வேறு ஓவியங்களில் நான் பார்த்தது இல்லை. சிங்கத்துடன் வேட்டையாடும் மூவர் என்ற ஓவியத்தில் ஒரு யானை தனது துதிக்கையால் ஒரு சிங்கத்தை வளைத்து வீசுகிறது. அப்போது, அதன் கண்களில் பயமேயில்லை. யானை மீது இருப்பவனின் முகத்தில் பயம் தெறிக்கிறது. அந்த யானையின் உடல்வாகும் திமிறலும் வெகுஅழகாக வரையப்பட்டு இருக்கின்றன. யானைக்கு செய்துள்ள அலங்காரமும் அதன் நகங்கள் ஒளிர்வதும் கழுத்து மணிகள் அசைவும் கிறக்கமூட்டுகின்றன. யானை மீது இருந்து விழும் மனிதனை காப்பாற்றுகிறவர்கள் என்ற ஓவியத்தில் காணப்படும் யானையின் நிறமும் அதன் கோபமும். உடல்வாகும் வால்வீச்சும் காதுகளும் தனி வசீகரம்! இதுபோலவே, காம்போசிட் எனப்படும் ஒரே உருவத்துக்குள் பல உருவங்கள் அடங்கியிருப்பது போன்ற நுண்ணோவிய வகையில் வரையப்பட்ட மொகலாய யானைக்குள்தான் எத்தனை விதமான மிருகங்கள். இந்த மிருகங்கள் ஒன்றுக்குள் ஒன்று புதையுண்டு இருந்தாலும் அதைப் பெரியதாக மாற்றிப் பார்க்கையில் அவை எவ்வளவு கவனமாக, நுட்பமாக வரையப்பட்டு இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

சர்ரியலிஸ பாணி ஓவியங்கள் உருவாக்கிய திகைப்பை, விசித்திரத்தை இந்த ஓவியங்களும் வழங்கவே செய்கின்றன. ஆனால் இவை, சர்ரியலிஸ ஓவியம் போல கொண்டாடப்படுவதில்லை என்பதுதான் இதன் குறை.

இத்தகைய ஓவியத்தின் முக்கியமான சவால், எந்த மிருகத்தை எதற்கு அடுத்து இடம்பெறச்செய்வது என்பதும் அதன் உடலியலை ஒருமித்துச் சித்திரிப்​பதுமே ஆகும். யானையை அடக்கும் அக்பர் ஓவியத்தில் இருப்பது நீலநிற யானை. அதன் தந்தங்கள் அழகுபடுத்தபட்டு இருக்கின்றன. மேலே போர்த்தப்பட்டு இருக்கும் சிவப்புத் துணியும் கழுத்து மணியும் அதன் அந்தஸ்தைக் காட்டுகின்றன. அதேவேளையில், யானைமீது ஏறி அதன் கோபத்தை அடக்க அங்குசம் வைத்துக் குத்தும் அக்பரின் கால்கள் அதன் கழுத்தில் போடப்பட்டுள்ள பிரியினுள் நுழைந்திருக்கிறது. அக்பரின் உடையலங்காரம் குறுவாள் கிரீடம் யாவும் துல்லியமாக வரையப்பட்டு இருக்கின்றன. இந்த ஓவியத்தில் யானையின் ஆவேசத்துக்கு நேர்மாறாக அருகில் உள்ள மரமும் அதில் சாவகாசமாக இருக்கும் பறவைகளும் சித்திரிக்கப்படுகின்றன. மரத்தின் தனித்துவமாக இதயவடிவில் இலைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. யானையின் காலடியில் உள்ள சிறுசெடி, அதன் பொலிவு, பறவைகளின் தன்னியல்பு அதிலும் ஒரு வால் நீண்ட பறவையின் ஒயில், பறவைகளின் கண்களில் காணப்படும் சாந்தம் மன்னரின் வஸ்திர மடிப்புகள் என்று எவ்வளவு நுட்பங்கள்! இத்தனையும் தாண்டி மதமேறிய யானையின் கால்களுக்கு இடையில் ஒரு சிறிய செடியில் சிவப்பு நிற பூ பூத்திருக்கிறது. அதை, ஓவியர் கவனமாக வரைந்திருக்கிறார். அதில்தான் கலையின் வெற்றி அடங்கியிருக்கிறது.

Friday, April 12, 2013

தமிழக அரசின் பட்ஜெட் ஓர் அலசல்

தமிழக அரசின் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் மார்ச் 21-ம் தேதி சமர்ப்பித்த தமிழக அரசின் 2013-2014 பட்ஜெட்டின்படி அரசின் மொத்த வருமானம் (மத்திய அரசிடமிருந்து நிதிக் கமிஷன் சிபாரிசின்படி கிடைக்கும் தொகையையும் சேர்த்து) ரூபாய் 118579 கோடி. வருவாய் இனத்தில் செலவு: ரூபாய் 117916 கோடி. ஆக வருமானத்தில் உபரி 663 கோடி. இதில் முக்கியமான பல வரிகள் மூலம் அரசு திரட்டும் தொகைகள்:

2012- 2013 திருத்தப்பட்ட பட்ஜெட் 2013- 2014 திருத்தப்பட்ட பட்ஜெட்






மேற்சொன்ன புள்ளிவிவரங்களிலிருந்து தெரிவது: தமிழ்நாட்டின் மொத்த வருவாய்த் தொகையில் பெரும் அளவாக இருப்பது விற்பனை வரிதான்: 

அதற்கடுத்தது கலால் வரி.

விற்பனை வரி வந்த கதை சுவாரசியமானது.

ராஜாஜி 1938-ல் சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியாக இருந்தபோது பரீட்சார்த்தமாக நான்கு மாவட்டங்களில் (அப்போதைய பெயர் ஜில்லா) மது விலக்கை அமல்படுத்த தீர்மானித்தார். அவர் பிறந்த சேலம் மாவட்டத்தையும் அந்த 4 மாவட்டங்களில் ஒன்றாகத் தீர்மானித்து அங்கு மதுவிலக்கை அமல் படுத்தினார். மதுவிலக்கை அமல் செய்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்று அப்போது பலர் கூக்குரலிட்டார்கள். மதுவிலக்கினால் அரசு இழக்கும் வருவாயை ஈடுகட்ட ராஜாஜி ஒரு புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தி அதை அன்றைய சென்னை மாகாணம் முழுவதும் அமல்படுத்தினார். அந்த வரிக்கு பெயர்தான் ‘விற்பனை வரி’.

பொது மக்கள் வாங்கும் ஒருசில பொருள்களின் மீது மட்டும் மிகக் குறைந்த அளவில் இந்த விற்பனை வரி விதிக்கப்பட்டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் மதுவிலக்கினால் ஏற்பட்ட வரி இழப்பை நன்றாக ஈடுசெய்தது.

ராஜாஜியால் 1938-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விற்பனை வரி இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு காமதேனுவாக விளங்குகிறது. ஆனால், மதுவிலக்குக்கு எவரும் முயல்வதே இல்லை.

சென்ற ஆண்டை விட (2012-2013) அடுத்த ஆண்டில் (2013-2014) விற்பனை வரி மூலம் அரசுக்கு 9000 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகும் என்று பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் கணக்கிட்டிருக்கிறார். நாட்டின் இன்றைய மொத்த பொருளாதாரச் சூழ்நிலையில், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. (விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தமிழக நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் குற்றம்சாட்டியிருக்கிறார்). இதனால் மக்கள் பிற பொருள்களை (ஆடம்பரப் பொருள்கள் என்று சொல்லலாம்). வாங்குவது குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மொத்த இந்தியாவுக்குமான அடுத்த ஆண்டின் உற்பத்தி 5 சதவிகிதத்துக்கும் குறைவாகத் தான் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் அடுத்த ஆண்டின் உற்பத்தி வளர்ச்சி ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் விற்பனை வரி 19 சதவிகிதம் அதிகரிக்கும்? தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமையைப் பார்த்தால் அதனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வாய்ப்பே இல்லை என்பது புலப்படும். ஏனென்றால் மதுவின் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருமானம் (2013-2014) பட்ஜெட்படி ரூபாய் 14469 கோடி. அரசின் மொத்த வருமானத்தில் இது ஒரு கணிசமான பங்கு.

சரி, இப்போது செலவினங்களைப் பார்ப்போம்:

அரசு தனது ஊழியர்கள் அனைவருக்கும் (ஓய்வு ஊதியர்கள் உள்பட) தனது வருமானத்தில் சுமார் 42 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் செலவழிக்க வேண்டி இருக்கிறது. இதற்கான தொகை 49687 கோடி ரூபாய். மீதி இருக்கும் தொகையில்தான் மற்ற இனங்களுக்கு ஒதுக்க வேண்டும். முக்கியமாக கடன் வாங்கிய தொகையில் வட்டிக்காக அரசு செலுத்த வேண்டிய தொகை 13584 கோடி ரூபாய்.

நிதி அமைச்சர் தமது பட்ஜெட் உரையில் பல முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கியிருந்தாலும் இன்று மிகப் பெரிய பிரச்னையாக தமிழ்நாட்டைப் பாதித்து வரும் மின் பற்றாக்குறையைப் போக்க என்ன செய்யப்போகிறார் என்று பட்ஜெட்டில் தெளிவாக இல்லை.

மொத்தத்தில் தமிழக பட்ஜெட் ஒரு வரவு - செலவு கணக்காகத்தான் இருக்கிறதே தவிர, பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன நடவடிக்கைகள் என்று எந்த அறிகுறியும் இல்லை. புதிய வரிவிதிப்பு இல்லை, மேலும் எந்த வரியும் ஏற்றப்படவில்லை என்பது ஒரு ஆறுதல் சமாசாரம் என்றாலும் இது பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆகாது. இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வரின் தமிழ்நாடு 2023 ஒரு தொலைநோக்குப் பார்வை" (Tamil Nadu Vision 2023) என்ற திட்டத்தை நிறைவேற்ற பெரும் பாடுபட வேண்டியிருக்கும்.

 வி.கோபாலன்

Thursday, April 11, 2013

குருவே சரணம்... திருவே சரணம்! -4

சின்ன காஞ்சிபுரம் ஆனைக் கட்டித் தெருவுல ஒரு வேத பாடசாலை இருக்கு. ஐம்பதுகளில் அங்குதான் மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. அந்த வைபவத்தைப் பக்கத்துல இருந்து தரிசித்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்!
 
 மகாபெரியவாளுக்கு அவரோட பரமகுரு ஸ்வர்ண வஸ்து ஒன்றைக் கொடுத்திருந்தார். பொன்னாலான அந்த அங்கியைப் போட்டுக் கொண்டுதான் கனகாபிஷேகத்தில் அமர்ந்திருந்தார் மகாபெரியவா. இன்னிக்கும், குருவாரம்தோறும் (வியாழக்கிழமைகளில்) காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருக்கும் ஆதிசங்கரர் திருமேனிக்கு அந்த சொர்ணத் தைச் சாத்துகிறோம்...'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், ஓரிக்கையில் நிகழ்ந்த மகாபெரியவாளின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தைப் பற்றி விவரித்தார்...

''ஓரிக்கையில், காங்கிரஸ் பிரமுகர் மட்டப்பாறை வெங்கட்ராமய்யரின் பேரன் வீட்டில் வைத்துதான் மகா பெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அந்தத் தருணங்களில் மடத்துக்கு மிகவும் பணக் கஷ்டம். அங்கே வைத்துதான் நடத்தணும்னு மகாபெரியவா சொல்லிட் டார். மிக அருமையாக நடந்தது அந்த வைபவம்.


ஹோமம் மற்றும் வைதீக காரியங்கள் நடத்துவது குறித்து விளக்கிய மகாபெரியவா, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துச் சத்திரங்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடணும்னும் உத்தரவு தந்தார். போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அன்னம் பரிமாறுவதுடன், இனிப்பு வகையறாவும் நிறையப் பரிமாறணும்னு சொன்னார். அன்பர்கள் சாப்பிட்டு எஞ்சியது நரிக்குறவர்களுக்குப் போகும்; அவர்களுக்கும் இனிப்புப் பலகாரங்கள் கிடைக்கணும் என்பதுதான் காரணம். அதேபோன்று, கிராமத்து ஏழைகளுக்கும் வயிறு நிறையக் கூழ் காய்ச்சி ஊத்தணும் என்பதும் பெரியவாளின் விருப்பம். அவரது ஆசியுடன் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு ஆனது.

அதேபோன்று, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் முழுக்க முழுக்கக் காய்-கனிகளால் அலங்கரிக்கணும்னு சொல்லிட்டார். அம்பாளுக்கு சாகம்பரின்னு ஒரு பெயர் உண்டே! சாகம்பரிதேவிக்கு காய்- கனிகள் உகந்தவை. அதனால்தானோ என்னவோ காய்- கனி அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மகா பெரியவா. காய் - கனி அலங்காரத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அந்தத் தருணத்தில் ஒரு சம்பவம்!

மகாபெரியவா இனிப்பு நிறையப் பரிமாறணும்னு சொல்லியிருந்தார், இல்லையா? அதனால, அவருக்கு இனிப்புன்னா ரொம்பப் பிடிக்கும் போலன்னு முடிவு பண்ணிவிட்டார் ஓர் அம்மணி. ஒருநாள், மலாடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தார். மகாபெரியவா முன், இலையால் மூடி கிண்ணத்தை வைத்து விட்டுத் தரிசித்துச் சென்றார்.
வெறும் நெல் பொரி, வேகவைத்து இறுகிய வாழைக்காயைப் பொடியாக்கி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் குடிப்பது என்று மிக மிகக் குறைவான ஆகாரம்தான் மகாபெரியவாளுக்கு. அவர் எப்படி மலாடு சாப்பிடுவார்? நாக்கு ருசிக்கு அடிமையாவது கூடாது என்பது அந்த மகானுக்கா தெரியாது?


ஆனால், அந்தப் பெண்மணி திரும்பி வந்த போது, காலியான கிண்ணத்தை அவரிடம் கொடுத்துக் கை தூக்கி ஆசீர்வதித்தார். பரம திருப்தியுடன் திரும்பிச் சென்றார் அந்தப் பெண்மணி. தான் கொடுத்த மலாடுவை பெரியவா ருசித்து சாப்பிட்டிருப்பார் என்ற மகிழ்ச்சி அந்த அம்மாவின் முகத்தில். ஆனால், பெரியவா அதைச் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். தமக்கு உரிய நியமங்களுக்கு பங்கம் ஏற்படாமல், அதே நேரம் அந்த பக்தையின் மனதும் புண்படாதபடி மகாபெரியவா செய்த அனுக்கிரகம் அற்புதமானதுதான்.

வைகாசி- பௌர்ணமி அன்று மகாபெரியவா ஜயந்தி. அந்த வருடம் மகாபெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி வேறு. அன்று பௌர்ணமி என்பதால், காமாட்சியம்மன் கோயில்லயும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சஷ்டியப்த பூர்த்தி வைபவங்கள் முடிந்து ஸ்ரீகாமாட்சியம்பாளைத் தரிசிக்க எண்ணியிருந்தார் மகா பெரியவா. ஆனால், 'ஓரிக்கையில் விழா வைப வங்கள் முடியறதுக்கே நெடுநேரம் ஆகிவிடும். அதற்குப் பிறகு மகா பெரியவாளுக்கு ரொம்பச் சிரமமா இருக்கும். அங்கே கோயிலிலும் நடை சாத்தி விடுவார்கள். அதனால், வேறொரு நாள் அம்பாளைத் தரிசிக்கப் போகலாமே?’ என்று விசுவநாதய்யர் சொல்லிப் பார்த்தார். ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

ராத்திரி 12 மணி இருக்கும். அன்பர்கள் புடை சூழ வந்து சேர்ந்தார் மகாபெரியவா. என்னைக் கூப்பிட்டனுப்பி, ''பாராக்காராளை வரச் சொல்லு. தீப்பந்தம்பிடிக்கறவாளையும் வரச் சொல்லிடு!'' என்று கட்டளையிட்டார். எல்லோரும் வந்து சேர, உடனே புறப்பட்டு விட்டார். அந்த நள்ளிரவிலும் கோயிலின் ராஜ வீதியைப் பிரதட்சிணம் பண்ணி, கோயில் கோபுரத்தைத் தரிசித்து வணங்கி வழிபட்ட பிறகே ஓரிக்கைக்குக் கிளம்பிச் சென்றார்.

ஜகத்குரு என்றாலும், அந்த ஜகதாம்பிகைக்கு அவர் குழந்தைதானே?! அதனால்தான், நள்ளிரவாகிவிட்ட பிறகும்கூட காஞ்சிக்கு வந்து, கோயில் கோபுரத்தையே அம்பிகை யாகக் கண்டு வணங்கி மகிழ்ந்தார் மகா பெரியவா!'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

''தஞ்சாவூர்ல பூதான இயக்கம் மும்முரமாக இருந்தபோது, நிறையப் பேர் நிலம் தானம் கொடுத்தார்கள். அப்போது, கால் ஏக்கர் நிலம் மடத்துக்குக் கிடைத்தது. அதில் வரும் வருமானத்தை வைத்துதான் வேதபாஷ்ய சதஸ் நடத்தினார் மகாபெரியவா.

வேதங்களை என்றென்றைக்கும் காப்பாற்ற வேண்டும் என்பார் அவர். அவருக்கு உற்சாகம் தருவது எப்பவும் வேதம்தான். வேதத்தோட அர்த்தம் எல்லாருக்கும் தெரியணும்னு வேத அத்யயனம் பண்ணினவர்களைக் கொண்டு, வேதபாஷ்ய சதஸ் நிகழ்த்தி, அதன் அர்த்தத்தை எல்லோரும் அறிய வழிசெய்தார்!''

வெங்கட்ராமன் என்கிற பிரதோஷம் மாமா, காஞ்சி மகா பெரியவாளின் ஜயந்தியை எப்போதும் விமரிசையாகக் கொண்டாடுவார். அப்படிக் கொண்டாடுவது, தான் அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடன் என்றும், தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் சொல்வார். சேலத்தில் வேலையில் இருந்தபோதும் கூட, பல கஷ்டங்களுக்கு இடையிலும் பல வருடங்களாக பெரியவாளின் ஜயந்தி உத்ஸவங்களை தன் வீட்டில் கொண்டாடி வந்தார். அப்போது கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் என்று காலையில் முறையாக நடத்தி, ஏழை- எளியோர் எல்லோருக்கும் வயிறு நிறைய அன்னதானமும் செய்வார்....' என்று, மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டரான பிரதோஷம் மாமா பற்றி நெகிழ்ச்சியாகச் சொன்ன அகிலா கார்த்திகேயன், மகா பெரியவாளுடனான பிரதோஷம் மாமாவின் அனுபவங்களை மேலும் பகிர்ந்துகொண்டார்.

 'பிரதோஷம் மாமா சென்னை எழும்பூருக்கு மாற்றலாகி வந்த பிறகும் மகா பெரியவாளின் ஜயந்தியை கோலாகலமாகக் கொண்டாடினார். ஒருகட்டத்தில் வருடாந்தர ஜயந்தியாக இல்லாமல், மாதாந்தர ஜயந்தியாகவே கொண்டாடத் துவங்கிவிட்டார். வருடாந்தர ஜயந்தி கொண்டாட்டத்தில் மகாருத்ர பாராயணம், ஜப ஹோமங்கள், திருத்தேர் மற்றும் பூப்பல்லக்கு ஊர்வலம் என அமையும். சென்னையில் வசிக்கிற பெரியவாளின் பக்தர்கள் அந்த வைபவங்களைக் கண்டு மகிழ்வார்கள். பெரியவா பற்றி அறிந்திராத மற்றவர்களுக்கு இவை எல்லாம் புதுமையான அனுபவங்களாக இருக்கும். அதேநேரம், இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் மகா பெரியவா விரும்பினாரா என்றும் பிரதோஷம் மாமாவுக்கு ஒருபுறம் கவலையாக இருந்தது.  

ஒரு தடவை, எழும்பூரில் மாத ஜயந்தி உத்ஸவப் புறப்பாட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. ஒவ்வொரு மாதமும் பெரியவாளுக்கு மலர் அலங்காரம் செய்து தரும் ஒரு பக்தருக்கு அன்றைக்கு வர முடியாத சூழ்நிலை. நேரம் ஆக ஆக பிரதோஷம் மாமாவின் மனசு நிலை கொள்ளாமல் தவித்தது. இத்தனை மாதங்களாக பெரியவாளை மலர்களால் அலங்கரித்து மகிழ்ந்தது போல, இந்த மாதம் முடியாமல் போய்விட்டதே என்ற கவலை சூழ்ந்துகொண்டது. அந்தக் குறிப்பிட்ட பக்தரைத் தவிர அப்படிச் சிறப்பாக மலர் அலங்காரம் செய்பவர் வேறுயாரும் அங்கே இல்லை என்பதும் பிரதோஷம் மாமாவின் தாபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

அப்போது, திடீரென்று ஒரு பக்தர் அங்கே வந்து சேர்ந்தார். தன்னை முருகனடிமை என்று அறிமுகம் செய்துகொண்டார்.

தனக்குப் பூக்களால் அலங்காரம் செய்யும் கலை கைவந்தது என்று மாமாவிடம் அவர் சொன்னார். சாட்சாத் பெரியவாளே அனுப்பி வைத்த மாதிரி வந்து நின்ற அந்த முருகனடிமையைக் கண்டு பிரதோஷம் மாமாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கத்தைவிட இந்த முறை மலர் அலங்காரம் மிக மிக விசேஷமாக அமைந்து விட்டது. ஊர்வலம் தொடங்கும் போது, பிரதோஷம் மாமா அவரைத் தேடினார். ஆனால், அவரைக் காணவில்லை. அவர் எங்கேயிருந்து வந்தார்? எங்கே போனார்? அந்த அலங்கார நிபுணர் வந்துபோன சுவடே தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, பிரதோஷம் மாமாவுக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது. நடந்தது அத்தனையுமே மகா பெரியவாளின் அருள்தான் என்று தெரிந்து, நெகிழ்ந்துபோனார்!' என்று சொன்ன அகிலா கார்த்திகேயன், இன்னொரு அனுபவத்தையும் விவரித்தார்.

'இன்னொரு முறை, இதேபோன்று மகா பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்துக்குப் பெரியவாளின் உத்தரவு கேட்டு, அப்போது பெரியவா தங்கியிருந்த மீரஜ் நகருக்குப் புறப்பட்டுப் போனார் பிரதோஷம் மாமா. ஆனால், உடனே உத்தரவு கிடைக்கவில்லை.
பிரதோஷம் மாமாவுக்கு வருத்தம். 'ஸ்ரீபெரியவா ஜயந்தி பண்றேன். பெரியவா அனுக்கிரகம் பண்ணலையே?’ என்று மறுகினார். தமது ஜயந்தி கொண்டாட்டம் பற்றி உத்தரவு கொடுக்காத பெரியவா, அதற்குப் பதிலாக ஆதிசங்கர பகவத் பாதர் ஜயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடும்படி உத்தரவு போட்டு விட்டார். கொண்டாட்டம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விஸ்தாரமாகப் பேசவும் தொடங்கிவிட்டார்.

ஸ்வாமி புறப்பாட்டின்போது, கபாலி ஓதுவார் தேவாரம் பாட வேண்டும்; வேங்கட வரதனின் திருவாய்மொழி இசைக்கப்பட வேண்டும்; திருப்புகழ் சொல்லப்பட வேண்டும்; மராத்தி பஜனைப் பாட்டெல்லாம் பாட வேண்டும்... என்று ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார் பெரியவா. குருபக்தியின் மேன்மை பெரியவாளிடம் நன்றாகத் தெரிந்தது. தவிர, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளை அழைத்து வந்து பிருகுவல்லி பாராயணம் செய்யச் சொல்லவும் கட்டளை போட்டார். பிருகுவல்லி பாராயணம் செய்து, அதைக் கேட்கிறவர்களுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்க வழி கிடைக்கும். இப்படிப்பட்ட ஆனந்தமான நிலையை அடைய வேண்டித்தான் பிரதோஷம் மாமாவுக்காக பெரியவா இந்த ஆணையை இட்டிருக்க வேண்டும்.

ஆதிசங்கர பகவத் பாதரின் ஜயந்தியைக் கொண்டாடுவதில் பிரதோஷம் மாமாவுக்குப் பரம சந்தோஷம்தான்! ஆனால், பெரியவா தமது ஜயந்தி கொண்டாட்டத்துக்கு உத்தரவு அருளவில்லையே என்று வருந்தினார். கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே மாமா போவதை பெரியவா பார்த்துவிட்டார். அருகில் இருந்தவரை அழைத்து, 'அதோ போறான் பார், அவன் என்னோட பக்தன். அழுதுண்டு போறான். கூப்பிடு அவனை. என்னோட ஜயந்தியையும் பேஷா கொண்டாடட்டும்னு சொல்லிடு அவன்கிட்டே!' என்று உத்தரவு கொடுத்துவிட்டார்.

அந்த வருடம், பெரியவா விருப்பப்பட்டபடியே ஆதிசங்கர பகவத் பாதரின் சங்கர ஜயந்தி கொண்டாட்டங்கள் விமரிசையாக நடை பெற்றன. ஆனால், பெரியவாளின் ஜயந்தி எளிய முறையில் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டங்கள் எல்லாம் நிறைவேறியதும், பெரியவாளுக்குப் பிரசாதம் சமர்ப்பித்து விட்டு வரச் சென்றபோது, பெரியவா பிரதோஷம் மாமாவிடம் விளையாட்டுக் காட்டுகிற மாதிரி பேசினார்.

'இந்த வருஷம் என் ஜயந்தியை சுருக்கிட்டியோ?'  

ஒரு குழந்தை தன் தாயிடம் கேட்பதுபோல், ஜகத்துக்கே குருவான அந்த மகான் இப்படிக் கேட்டபோது, பிரதோஷம் மாமாவுக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கண்களில் ஜலம் வந்துவிட்டது. மாமாவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இனி பெரியவாளின் ஜயந்தியையும் கோலாகலமாகக் கொண்டா டலாம்; அதற்கான உத்தரவுதான் அந்தக் கேள்வியில் பொதிந்திருந்த கருணையின் அர்த்தம். 'சுருக்கிட்டியோ?’ என்பது, உத்ஸவம் எல்லாம் இனி சிறப்பாக நடைபெறலாம் என்பதற்கான அனுமதியாகவே இருந்தது.

அதன்பின்பு, ஒவ்வொரு வருடமும் ஜயந்தி உத்ஸவங்கள் எல்லா அம்சங்களிலும் ஒரு குறையும் இல்லாமல், பெரியவாளின் அனுக்கிரக ஆசியோடு நடந்தன. மகாருத்ர ஜபத்துக்குத் திரவியம் சேகரிப்பதில் தொடங்கி... வைதீக, லௌகீக சம்பிரதாயங்கள், தேர் பல்லக்கு திருவீதி உலா வரை கொண்டாட்டங்கள் சிறப்பாகத் தொடர்ந்தன...' என்று சொல்லிச் சற்று நேரம் மௌனமாக இருந்த அகிலா கார்த்திகேயன், மகா பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்தில் நடைபெற்ற இரு சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

'ஒரு மகா ஜயந்தியின் போது, அட்சதை குறைவாக இருந்தது. பிரதோஷம் மாமா கலங்கிப்போய்விட்டார். மூணு நாள் உத்ஸவத் துக்கு இது போதாதே என்று வருந்தினார்.

அப்படி வருத்தப்பட்டு ஒரு நிமிடம்கூட ஆகியிருக்க வில்லை...  மடத்திலுள்ள ஒரு பையன் ஓடி வந்து, 'வாசல்ல கார் வந்திருக்கு!’ என்றான். காரில் வந்தவர்கள் பரசுராமன் தம்பதி. காஞ்சிப் பெரியவாளின் பரம பக்தர்கள். பிரதோஷம் மாமா சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவர்கள் செய்துவிட்டுப் போனார்கள். ஆமாம், காரில் இருந்து இரண்டு மூட்டை அட்சதையை இறக்கி வைத்துவிட்டுப் போனார்கள். இது மகா பெரியவாளின் கருணை அல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும் என்று உருகிக் குழைந்து போனார் பிரதோஷம் மாமா.

இதே மாதிரி இன்னொரு தடவை, ஸ்வாமி புறப்பாட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு, வருடம்தோறும் அழைத்து வரும் யானையைக் கொண்டு வரத் தடை ஏற்பட்டு விட்டது. அமைச்சர் வரை போயும் எதுவும் நடக்கவில்லை. அப்போது ராதாகிருஷ்ணன் என்பவர் ஐ.ஜி-யாக இருந்தார். அவரிடம் அனுமதி கேட்கலாம் என்று ஒருவர் யோசனை சொன்னார். அதை ஒரு விண்ணப்பமாகத் தயார் பண்ணி வைத்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. எந்த ஐ.ஜி-யைப் பார்த்து விண்ணப்பத்தைக் கொடுக்கத் தயார் பண்ணினார்களோ, அதே ஐ.ஜி. ராதாகிருஷ்ணனே பெரியவாளை தரிசிக்க வந்துவிட்டார். அதுவும், பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டு வந்துவிட்டாராம். அவரிடம் நேரிலேயே விண்ணப்பத்தைக் கொடுத்து, விஷயத்தைச் சொன்னவுடன், ''போலீஸ் பந்தோபஸ்தை நான் உடனே அனுப்பி வைக்கிறேன்; கவலையே படாதீர்கள்!'' என்றார் ஐ.ஜி. அதையடுத்து, யானையுடன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்ததில் பிரதோஷம் மாமாவுக்கு ஏக சந்தோஷம். அவருக்கு மட்டுமா... எல்லா பக்தர்களுக்கும்தான்!' என்று விவரித்து முடித்தார்.

காஞ்சி மகாபெரியவா சாட்சாத் ஈஸ்வர அம்சம். பலப்பல அபூர்வமான சம்பவங்களின் மூலம் நிருபணமான சத்தியம் இது. அப்படியான அந்த சம்பவங்களை, அவரது மகிமைகளை முழுவதுமாக விவரித்து முடிக்க ஓர் ஆயுள் போதாது. அவர் நம்மிடையே வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நமது பூர்வ ஜென்ம புண்ணியம்தான்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Wednesday, April 10, 2013

எனது இந்தியா (திருமண வேட்டை!) - எஸ். ரா

'மாப்பிள்ளைத் தூண்டில் கப்பல்​கள்’ என அழைக்கப்பட்ட இந்தக் கப்பல்களில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் வருவது 18-ம் நூற்றாண்டில் அதிகரித்தது. மணமகனைத் தேடிவரும் பெண்கள் தனியாக வராமல் திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சகோதரன் அல்லது அத்தை என்று யாரோ ஒருவரை உடன் அழைத்து வந்தனர். சில பெண்கள் கப்பலில் கன்னித்தன்மையை இழந்துவிடக்கூடும் என்று பயந்த வளர்ப்புத் தாய்கள், தாங்களும் துணையாக இந்தியாவுக்கு வந்தனர். மாப்பிள்ளை தேடுவதற்கு உகந்த நேரம் என்று கிறிஸ்துமஸ் சமயத்தைக் கருதி, அதையட்டி இந்தியா வருவதற்கு கப்பலில் பலத்த போட்டி நிலவியது. அன்று, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து சேருவதற்கு ஆறு மாதங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில் உணவு மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்க, இளம்பெண்கள் அதிகச் சிரமங்களைச் சந்தித்தனர். தொற்றுநோய் பரவிய காலங்களில் இளம்பெண்களில் சிலர் பயணத்திலேயே இறந்துவிட்டனர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, இப்படி மாப்பிள்ளை தேடிவரும் பெண்களை தனது அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, குறுநில மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்களுக்கு இந்தப் பெண்களைத் திருமணம் செய்துவைத்து தங்களின் நட்புறவை வலுவாக்கிக் கொண்டனர். அழகிய பெண்களைத் திருமணம் செய்துவைப்பதற்கு ஈடாக, வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். பாட்டியாலாவில் ஒரு ஐரீஷ் பெண்ணை மகாராஜாவுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கு ஈடாக, தானியச் சந்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்ற ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


இங்கிலாந்தில் இருந்து திருமண வேட்டைக்குப் புறப்படும் பெண்கள், இந்தியாவில் ஓர் ஆண்டு மட்டுமே  வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்துக்குள் அவர்கள் உரிய மணமகனைத் தேடி திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுவார்கள்.

உரிய மணமகனைத் தேடிப்பிடிப்பது என்பது பெரிய சவால். ஆகவே, இதற்காகப் பெரிய திட்டமே தீட்டப்பட்டது. நடன விருந்து, நாடகம் பார்ப்பது, பிக்னிக் போவது, டென்னிஸ் விளையாடுவது, வேட்டைக்குச் செல்வது, நீச்சல், அரங்க விளையாட்டுகள் என்று பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கே, திருமணம் ஆகாத பிரிட்டிஷ் இளைஞர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவர். விருந்துக்காக விசேஷ உடைகள் தயாரிக்கப்பட்டன.  உயர்ரக மதுவகைகள் பரிமாறப்பட்டன. இளம் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய பெண்ணுடன் நடனமாட அனுமதிக்கப்பட்டனர். மகாராஜாக்களுக்காக ஒரே அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயப் பெண்கள் நடனமாடினர். அதில், ஏதாவது ஒரு பெண்ணை மகாராஜாவுக்குப் பிடித்துவிட்டால், அந்தப் பெண் பெரும் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்பட்டாள். மகாராஜாவின் 32-வது மனைவியாகக்கூட வாழ்வதற்கு ஆங்கிலேயப் பெண்கள் போட்டியிட்டனர். நடன விருந்தில் ஒரு பெண்ணை பிரிட்டிஷ் அதிகாரி விரும்பிவிட்டால், அடுத்த சில நாட்களுக்குள் அவசரஅவசரமாகத் திருமணம் செய்துவிடுவார்கள். காதலிப்பதற்கோ, யோசித்துத் திருமணம் செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.


இந்திய ஆண்களைக் காதலித்தால் தொற்றுநோய் பரவி விடும் என்ற பீதியை ஆங்கிலேயப் பெண்களுக்கு தாதிகள் உருவாக்கி இருந்தனர். சில வேளைகளில், மணமகனைத் தேடி பல நூறு மைல்களுக்குக்கூட பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. 'கிரேஸி டாட்டர்’ என்ற இளம்பெண் ஓர் அனாதை. ஐசிஎஸ் அதிகாரியைக் கவர்ந்துவிடவே, அவள் பணக்கார சீமாட்டி ஆகிவிட்டாள். கணவனுடன் அவள் வங்காளத்தின் கிராமப் பகுதியில் அமைந்திருந்த பெரிய பங்களாவில் குடியேறினாள். தாங்க முடியாத வெப்பம், தனிமை மற்றும் கட்டுப்பெட்டியான வாழ்க்கை அவளுக்கு மனச்சிதைவு நோயை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவள் கர்ப்பிணியானாள். முறையற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக பிரவசத்தில் குழந்தை இறந்து பிறந்ததுடன், அவளும் அடுத்த இரண்டு மாதங்களில் இறந்து விட்டாள். இப்படி, இந்தியாவுக்கு வந்து அற்ப ஆயுளில் இறந்துபோன வெள்ளைக்காரப் பெண்கள் நிறைய இருந்தனர். இங்கிலாந்தில் இருந்து இந்தியத் துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேரும்போது, கவர்ச்சியான உடை அணிந்துகொள்ள ஆங்கி லேயப் பெண்களை கட்டாயப் படுத்தினர். துறைமுகத்தில் இவர் களைப் பார்ப்பதற்கு தள்ளு முள்ளு நடக்கும். பணக்கார வணிகர்களும், ஜமீன்தார்களும் வெள்ளைக்காரப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை தங்களது அந்தஸ்தாகக் கருதினர். அவர்கள் அழகான பெண்களைத் தேடி துறைமுகத்தில் காத்திருந்தனர். திருமண வேட்டைக்கு வரும் ஆதரவற்ற இளம்பெண்களுக்கு, ஆண்டுக்கு 300 டாலர் உதவித் தொகை வழங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்தத் தொகையை, திருமணம் முடிந்தவுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனால், கடன்காரியாக அவர் இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

பெரிய நகரங்களில் பொருத்தமான ஆங்கிலேயரைத் திருமணம் செய்து​கொள்ள வாய்ப்பு கிடைக்காத பெண்கள், இதற்கென ஒரு திட்டம் தீட்டினர். அதாவது, நீண்ட தூரத்துக்கு ரயிலில் பயணம் செய்வது. அந்தப் பயணத்தில் உடன் வரும் ஏதாவது ஓர் ஆங்கிலேய அதிகாரியுடன் பேசிப் பழகித் திருமணம் செய்துகொள்வது. ஆலிவ் கிராப்டன் என்ற இளம்பெண்ணுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. அவள், ரயிலின் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில் ஏற நின்றுகொண்டிருந்த ராணுவ அதிகாரி அவள் அழகில் மயங்கி காதல்வயப்பட்டார். அவள் இருந்த பெட்டியிலேயே அவரும் ஏறினார். அந்தப் பயணம் முடிவதற்குள் இருவரும் காதலித்து திருமண ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

கேதரின் வெல்போர்ட் என்ற பெண்ணுக்கு நடந்த கதை இன்னொரு விதமானது. மணமகனைத் தேடி சென்னைக்கு வந்த இந்தப் பெண், எட்டு நாட்களில் எட்டு பேருடன் பேசிப் பழகியிருக்கிறார். எட்டு பேருமே அவளைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர்களில் யாரைத் திருமணம் செய்துகொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. முடிவில், உயர் அதிகாரியான ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டாள். ஸ்டெல்லா ஹட்டன் என்ற இளம்பெண் கல்கத்தாவுக்குக் கப்பலில் வந்தபோது, அங்கே ஒரு தேயிலைத் தோட்ட அதிபரை திருமணம் செய்துகொண்டார். திரு மணமான இரண்டாவது வாரம் அவர்கள் எஸ்டேட் பங்களாவில் குடியேறினர். பழக்கமில்லாத இடம், மொழி தெரியாத மக்கள்,  தனிமை ஆகியவை அவளை வாட்டி வதைத்தது.  இதற்கிடையில், அவளுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. அவளை ஒரு தனி அறையில் அடைத்து வைத்தார் கணவர். ஒருநாள், வீட்டை விட்டு தப்பியோடி, கல்கத்தா சந்தையில் வேலைசெய்த இந்தியர் ஒருவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். மணமகனைத் தேடி இந்தியாவுக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

திருமணம் ஆன சில ஆண்டுகள்தான் இந்தப் பெண்கள் இந்தியாவில் வசித்தனர். அதன் பிறகு, குழந்தையின் கல்வியைக் காரணம் காட்டி அவர்கள் மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்றனர். அதன்பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத  விடுமுறையாக இந்தியா வந்து சென்றனர். சில நேரங்களில், ஆசை மனைவியை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க விரும்பாத ஆங்கிலேயக் கணவர்கள், தங்களது குழந்தைகளை மட்டும் போர்டிங் ஸ்கூலில் படிக்கவைக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவுக்கு வந்திறங்கி மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் பலர் இங்கிருந்து இலங்கை சென்றனர். அங்கே, காலனிய அதிகாரிகளாக இருந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். கண்டவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்ட ஆங்கிலேய அதிகாரிகளில் பலர், தங்களின் இளம் மனைவி மீது சந்தேகம்கொள்ளத் தொடங்கினர். ஃபுளோரா பிரைன் என்ற இளம்பெண் மீது சந்தேகம் அடைந்த அவளது கணவன், அவளைக் கொன்றுவிட்டான். இது, அவசரத் திருமணத்தால் உண்டான விளைவு. ஆங்கில நாவலாசிரியர் ஈ.எம்.பாஸ்டர் எழுதி இருக்கும் 'பேசேஜ் டு இந்தியா’ நாவல், ஓர் ஆங்கிலேய இளம்பெண்ணின் பார்வையில் இந்தியாவைப் பற்றி விவரிக்கும் கதை. ஆங்கிலேயப் பெண் ஒருத்தி ஒரு இந்தியன் தன்னைக் கெடுத்துவிட்டதாக பொய்க் குற்றச்சாட்டு கூறுகிறாள். அந்தக் குற்றச்சாட்டின் பின்னால் உள்ள காரணம், வெள்ளைக்காரர்கள் எந்த அளவுக்கு இந்தியர்களை வெறுக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே. திருமண ஆசையில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயப் பெண்கள் கம்பெனி அதிகாரிகளின் மனைவி ஆனவுடன், மேம்சாகிப், லேடி, துரைசாணி என்று கௌரவமான பெயர்களுடன் வலம்வந்தனர். இந்தியர்களை மிக மோசமான அடிமைகளாக நடத்தியதுடன் தங்களின் கணவனின் அதிகாரத்திலும் தலையிட்டு அதிகாரத்தை ருசிக்கத் தொடங்கினர்.  ஆங்கிலேய அதிகாரிகளில் பலர் நிர்வாகத்தில் முறைகேடுகள் செய்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இந்தப் பெண்களே என்கிறார் ஆனி டீ கோர்சி. இந்தியர்களை அடிமைப்படுத்தி உறிஞ்சி வாழ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி தனது விற்பனைப் பொருட்களில் ஒன்றாக திருமணத்தையும் வைத்திருந்தது என்ற உண்மையைத்தான் இந்த 'ஃபிஷ்ஷிங் பிளீட்’ சம்பவங்கள் தெரிவிக்கின்றன. இன்று, இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கைவிடப்பட்ட கல்லறைகளாக உள்ள ஆங்கிலேயப் பெண்களின் பெயர்களைக் காணும்போது ஒருவேளை இவளும் கல்யாணக் கனவுடன் இந்தியா வந்தவர்களில் ஒருத்தியாக இருப்பாளோ என்ற எண்ணம் வருகிறது.

Tuesday, April 09, 2013

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..?

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.
 
'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.  
 
அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கு எதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான். மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள். பிறகு, அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள். சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
 
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விவரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை... மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு    கோரலாம். செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும். ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள். இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.னிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே! மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
 
உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்’ எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.''

Sunday, April 07, 2013

உயிர் பயத்தைப் பணமாக்கும் மருந்து கம்பெனிகள்!

நன்றாகப் படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளைக்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர்க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாமல் போய், சேமித்து வைத்த மொத்தப் பணத்தையும் மருத்துவமனைக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் தந்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறோம்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் சில நோய்கள் வந்தால், வாழ்நாள் சேமிப்பே கரைந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய நோய்களில் ஒன்றுதான் கேன்சர். இந்த நோயினால் இதுவரை சொல்லமுடியாத கஷ்டத்துக்குள்ளானவர்கள் சமீபத்தில் வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சந்தோஷப்படலாம். அது என்ன தீர்ப்பு?

மகிழ்ச்சி தந்த தீர்ப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நொவார்டிஸ் (novartis). இந்நிறுவனம் கேன்சர் நோய்களுக்கான க்ளிவெக் (Glivec) என்ற மருந்தை விற்று வந்தது. ஆனால், இது அத்தியாவசியமான மருந்து என்பதால், இந்த மருந்தின் ஃபார்முலாவை வைத்து மற்ற நிறுவனங்களும் அதேபோன்ற மருந்தைத் தயாரிக்க மத்திய அரசு அனுமதி தந்தது.

இந்த மருந்தை தான் மட்டுமே தயாரிக்கும் காப்புரிமையை நொவார்டிஸ் நிறுவனம் கேட்டபோது, தரமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2005-ம் ஆண்டே தீர்ப்பு தந்தது. அதன்பிறகு இந்நிறுவனம் 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சொன்னது இந்திய உச்ச நீதிமன்றம்.

'இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏற்கெனவே இருக்கும் மருந்தின் ஒரு சிறிய மாறுபட்ட வடிவம்தான். அதனால், இந்த மருந்துக்கு காப்புரிமை (பேடன்ட்) தரமுடியாது’ என்று சொல்லி ஏழு வருட போராட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.


இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நொவார்டிஸ் நிறுவனம், இனி இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறது. இதுவரை விற்ற மருந்துகளில் 95 சதவிகித மருந்துகள் இந்நிறுவனத்தின் அறக்கட்டளை மூலமாக ஏழைகளுக்கு இலவசமாகத் தந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 16,000 பேர் இதனால் பயன் அடைந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. ஆனால், இதன் ஜெனரிக் வகை (அதாவது, ஒரு மருந்தின் காப்புரிமை முடிந்தபிறகு அந்த மருந்துக்கான ஃபார்முலாவை வைத்து வேறு நிறுவனங்கள் அதே நோய்க்கு மருந்து தயாரிப்பதுதான் ஜெனரிக்) மருந்துகளை 3 லட்சம்பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம், நொவார்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் விலை மாதத்திற்கு சுமார் 1.4 லட்சம் ரூபாய். ஆனால், மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதே மருந்தின் விலை சுமார் 8,500 ரூபாய் மட்டுமே.

இவ்வளவு விலை உயர்ந்த மருந்தினை 95 சதவிகித மக்களுக்கு இலவசமாகக் கொடுத்ததாகச் சொல்லும் இந்த மருந்து நிறுவனம், ஏன் இந்தத் தீர்ப்புக்காக கவலைப்படவேண்டும்?


 
''அங்குதான் இந்நிறுவனத்தின் பிஸினஸ் இருக்கிறது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனத்துக்குச் சாதகமாக வந்திருந்தால், இந்த மருந்தினை வேறு யாரும் தயாரிக்க முடியாது. அப்போது, இந்நிறுவனம் வைத்ததுதான் விலை என்றாகி இருக்கும். அதன்பிறகு சேவையாவது, மண்ணாவது! ஒரு மாதத்துக்கான மருந்து 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆரம்பித்திருக்கும். பணமிருப்பவர்கள் வாங்கிச் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால், பணமில்லாத ஏழைகள்தானே நம் நாட்டில் அதிகம். மருந்து வாங்க வழி இல்லாமல் பலரும் மடிந்துதான் போயிருப்பார்கள்''.

உணவே மருந்து என்கிற காலம் போய், இப்போது மருந்தே உணவு என்ற நிலைமைக்குப் பலரும் வந்துவிட்டோம். வெளியூர்களுக்குச் செல்லும் போது துணிமணிகளை எடுத்துக்கொள் கிறோமோ இல்லையோ, அனைவரிடமும் ஒரு மருந்துப்பை இருக்கிறது. மருந்துகள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்திருப்பதை நம்மைவிட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. நம் உயிர் பயத்தையே அடிப்படையாக வைத்து மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன.

இப்படி லாபம் சம்பாதிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பெரிய அளவில் செலவு இல்லை. உதாரணமாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பரச் செலவு கிடையாது. அதற்கு பதிலாக, மருத்துவர்களுக்குச் 'செலவு’ செய்வதன் மூலம் தங்கள் மார்க்கெட்டிங்கை கனகச்சிதமாகச் செய்துவிடுகின்றன மருந்து கம்பெனிகள்.  

மருத்துவர்களின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வாங்கித் தருவது, சேர்கள் வாங்கித் தருவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது என மருந்து கம்பெனிகள் செய்யும் செலவு ஏராளம். அதற்கு கைமாறாக டாக்டர்களும் அதிகளவு மருந்துகளை எழுதித் தள்ளி, தங்கள் நன்றிக்கடனை மருந்து கம்பெனிகளிடம் காட்டிவிடுகிறார்கள். மருந்துகளில் மட்டுமல்ல, பரிசோதனை லேப்களிலும் நடக்கிறது.

45 வயதுக்கு மேல் மருந்து மாத்திரை யோடுதான் நம்மில் பலர் வாழ்கிற சூழ்நிலையில், மருந்துகளுக்கு லாப உச்சவரம்பு நிர்ணயம் செய்தால் மட்டுமே இனி பலரும் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. தரமான கல்வியும், சுகாதார வசதியும் ஒவ்வொருவருக்கும் அளிக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு. இந்த இரண்டையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது மத்திய அரசாங்கம். மருந்து கம்பெனிகள் அரசாங்கத்தின் வாயையும் அடைத்துவிடுகிறதோ என்னவோ!


Saturday, April 06, 2013

எனது இந்தியா (மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள்!) - எஸ். ...

எண்ணிக்கையற்ற விநோதங்களாலும் வியப்புகளாலும் நிரம்பியது வரலாறு. 19-ம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா புறப்படும் கப்பல்களில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. காரணம், திருமண வேட்​டைக்காக இந்தியா புறப்பட்ட வெள்ளைக்கார இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

படித்த, உயர்வகுப்பு பிரிட்டிஷ் ஆண்களில் பலர் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்துவிட்ட காரணத்தால், நல்ல மாப்பிள்ளை வேண்டி பிரிட்டிஷ் இளம்பெண்கள் கப்பல், கப்பலாக இந்தியாவுக்கு வந்து இறங்கினர். இப்படி, மணமகனைத் தேடி வலைவீசி வந்த கப்பல்களுக்கு 'ஃபிஷ்ஷிங் பிளீட்’ என்று பெயர்.

திருமணத்துக்காக பெண்களை இந்தியா அனுப்பிவைக்கும் இந்த முறைக்கு முன்னோடியாக இருந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 15-ம் நூற்றாண்டில் கடலோடிகளாக போர்த்துக்கீசியர்கள் இந்தியா​வுக்கு வந்து கோவாவில் தங்களுடைய குடியேற்றத்தை நிறுவிய காலத்தில், அவர்கள் பெண்களை உடன் அழைத்து வரவில்லை. ஒரு போர்த்துக்கீசியன் தனது மனைவியையோ, மகளையோ கப்பல் பயணத்தில் இந்தியா அழைத்து வருவது எளிதானதாக இல்லை. இதற்காக, மன்னரிடம் தனி அனுமதி பெற வேண்டியிருந்தது. அத்துடன், நிறையப் பணம் செலவிட வேண்டும்.

இந்தியா வந்த போர்த்துக்கீசியர்கள் இங்குள்ள இந்தியப் பெண்களுடன் பழகி சேர்ந்து வாழ்ந்தனர். 'இது, மதக் கட்டுப்பாட்டை மீறிய செயல். இதன் காரணமாக, அவர்களிடம் ஒழுக்கக்குறைவு ஏற்படு​கிறது. அதைப் போக்குவதற்கு போர்த்துக்கீசிய இளம்​பெண்களை உடனே இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை இயேசு சபை பாதிரிகள் முன்வைத்தனர்.


அதைத் தொடர்ந்து, போர்த்துக்கீசிய நாட்டில் போரில் பங்கேற்று இறந்துபோனவர்​களின் பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த இளம்பெண்கள் பலர் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 'ஆர்பஸ் டெல் ராய்’ எனப்படும் ஆதரவற்றோர் காப்பகத்தைச் சேர்ந்த இளம்​பெண்கள் கப்பல் கப்பலாக கோவா வந்து இறங்கினர். 'அரசரின் அநாதைகள்’ என்று அழைக்கப்பட்ட இந்த இளம்பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வரும் போர்த்துக்கீசிய இளைஞர்களுக்கு அரசுப் பணி, நிலம் மற்றும் உதவித் தொகை  வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆர்பஸ் டெல் ராய் இல்லத்தில் வளர்ந்த இளம்பெண்களை ஏற்றிக் கொண்டு, கோவாவுக்கு ஒரு கப்பல் 1545-ம் ஆண்டு வந்து சேர்ந்தது. பதவி மற்றும் உதவித்தொகை கிடைக்கிறதே என, பல போர்த்துக்கீசியர்கள் இந்தப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக, லிஸ்பன் நகரில் இருந்து ஆதரவற்றப் பெண்களை ஏற்றிக்கொண்டு மாப்பிள்ளை தேடும் கப்பல்கள் நிறைய புறப்பட்டன. ஒருகட்டத்தில், கோவாவில் போர்த்துக்கீசிய மாப்பிள்ளை கிடைப்பதே சிரமமாகிப்போனது. ஒருவரே இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது மற்றும் முதல் திருமணத்தை மறைத்து, மறுமணம் செய்து கொள்வது என்ற குளறுபடிகள் ஏற்படத் தொடங்கின.

இதையடுத்து, இனிமேல் இந்தியாவுக்குப் பெண்களை அனுப்ப வேண்டாம் என்று, கோவா நிர்வாகம் போர்த்துக்கீசிய மன்னரிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு அதற்கு செவிமெடுக்கவில்லை. இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு கப்பலிலும் 100 இளம்பெண்களாவது வந்தனர். ஒரு​முறை, இளம்பெண்கள் வந்த ஒரு கப்பல் கடற்புயலில் சிக்கியது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்துவிட்டனர். மற்றவர்களை காப்பாற்றி சரக்குக் கப்பல்களில் அரபு நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, அந்தப் பெண்கள் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர். இன்னொரு முறை, போர்த்துக்கீசியப் பெண்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை டச்சுக்காரர்கள் வழிமறித்துக் கொள்ளையிட்டனர். அதோடு, கப்பலில் இருந்த இளம்பெண்களை சூரத் நகருக்கு கடத்திச் சென்றனர். சூரத் நகரில் உள்ள வணிகர்கள் அழகான போர்த்துக்கீசியப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்குப் போட்டியிட்டனர். இந்தப் பெண்களில் அழகியாக இருந்த 'டோனா லூசியா’ என்ற பெண்ணை சூரத்தில் இருந்த டச்சு வணிகர் ஒருவரே திருமணம் செய்துகொண்டார். இன்னொரு பெண்ணை ஒரு இஸ்லாமியர் மதம்மாற்றித் திருமணம் செய்துகொண்டார். இப்படி, போர்த்துக்​கீசியரைத் திருமணம் செய்துகொள்ள இந்தியா வந்த பெண்களை பல்வேறு இனத்தவர்கள் திருமணம் செய்து​கொண்டதும் நடந்தேறியது. 1595-ம் ஆண்டு போர்த்துக்கீசிய அரசு, இளம்​பெண்களை இந்தியா அனுப்பத் தடை விதித்தது. இதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குத் திருமண வேட்டைக்காக பெண்கள் மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தியா புறப்படும் பெண்களுக்கு தேவையான உடைகள், சமையல் பாத்திரங்கள், மெழுகுவத்திகள் உள்ளிட்ட பொருட்​களை போர்த்துக்கீசிய அரசே பரிசாக அளித்து அனுப்பியது.

கோவாவில் உரிய மணமகன் கிடைக்​காத பெண்கள், பம்பாயின் தெற்கில் உள்ள சௌல், தமாவு போன்ற இடங்களில் குடியேறினர். சிலர், மணமகனைத் தேடி இலங்கைக்கும் சென்றனர். சில போர்த்துக்கீசியப் பெண்கள், உள்ளூர் வணிகர்களின் சுகப்பெண்களாகவும், மன்னரின் ஆசைநாயகியாகவும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி​யில் பணியாற்றியவர்களில் உயர் அதிகாரிகள் மட்டுமே தங்களது குடும்பப் பெண்களை இந்தியாவுக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், தனித்து வாழ வேண்டிய கட்டாயம். இதே நிலை, ஆரம்ப காலத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பணியாளர்களுக்கு இருந்தது. ஆனால் அவர்கள், ஜாவாவில் தங்களுக்​கான தனிக்குடியேற்றம் ஒன்றை உருவாக்கிக்கொண்ட காரணத்தால், குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்​கப்பட்டனர்.

இது, ஜாவாவில் பணியாற்றிய டச்சுக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த சலுகை. சூரத்தில் பணியாற்றிய டச்சுக்காரர்கள் குடும்பம் இல்லாமலே வாழ்ந்தனர். இவர்களில் சிலர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டபோதும் டச்சுப் பெண்கள் கிடைக்காத காரணத்தால் ஆர்மேனிய அல்லது சிரியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். அந்தப் பெண்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நிபந்தனை இருந்தது. இதனால், கப்பலில் வந்து இறங்கும் போர்த்துக்கீசியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு ஜாவாவில் குடியேற, டச்சு அதிகாரிகள் பலர் ஆசைப்பட்டனர்.

இப்படிப் போர்த்துக்கீசியக் கப்பலில், மாப்பிள்ளை தேடி வந்த அழகான இளம்பெண்களான மரியா, ஜுலியன் ஆகிய இருவரையும் அக்பரின் ஆசைநாயகியாகத் தேர்வு செய்து அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றனர்.  அந்தப் பெண்களின் அழகில் மயங்கிய அக்பர், மரியாவை தனது ஆசை​நாயகியாக ஆக்கிக்கொண்டார் என்று 'ராயல் இந்தியா’ என்ற புத்த​கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 'அல்போன்சா அல்பெர்க்யூ’ என்ற கடலோடி நாடு பிடிக்கும் ஆசையில் மன்னர்களுக்கு இளம்​பெண்களைப் பரிசாக அளித்து தனது வணிக ஒப்பந்தங்களை நிறைவேற்றிக்கொண்டார் என்றும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. 19-ம் நூற்றாண்டுக்கு முன்பே ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பெண்கள் இந்தியா வரத் தொடங்கிவிட்டனர். 1617-ம் ஆண்டு ஆர்மீனியப் பெண் ஒருத்தியின் வேலைக்காரியாக வந்த 'பிரான்சிஸ் வேர்தி’ என்பவரே இந்தியாவுக்கு வந்த முதல் ஆங்கிலேயப் பெண் என்று, வரலாற்று ஆய்வாளர் சிவனடி குறிப்பிடுகிறார். இந்த 'பிரான்சிஸ் வேர்தி’ கடற்பயணத்திலேயே காதல் வயப்பட்டு இந்தியாவில் இறங்கியவுடன் ஒருவருடன் ஓடிப்​போய்விட்டார் என்ற குறிப்பு ஒன்றை​யும் சிவனடி எழுதி இருக்கிறார்.

Friday, April 05, 2013

ஓ பக்கங்கள் - போராட்டமும் போதைகளும்! ஞாநி


தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கும் மாணவர் போராட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 

போராட்டம் ஒரு பெரும் எழுச்சியின் அடையாளம்; இல்லையில்லை - சின்ன அளவில் நடந்ததை தமிழ் தேசிய அமைப்புகள், புலிகள் ஆதரவு அமைப்புகளின் தீவிர இளைஞர்கள் பின்னின்று நடத்தி சேனல்களின் உதவியுடன் ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய போராட்டம்தான் இது; சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை பற்றிய படங்கள் கிளறிவிட்ட அடிப்படை மனிதநேய உணர்ச்சிகளுக்கு அப்பால் மாணவர்களுக்கு உலக அரசியல் தெரியவில்லை, உள்ளூர் அரசியலும் தெரியவில்லை, உணர்ச்சி மட்டுமே இருக்கிறது; ஈழத்தமிழர்களின் முதல் தேவை அங்கே ராணுவ நீக்கமும், வாழ்வாதார வாய்ப்புகளும், படிப்படியான அரசியல் உரிமைகளுமே தவிர, ராஜபட்சே கும்பலைத் தண்டிக்கக் கூக்குரலிடுவதால் ஒரு பயனுமில்லை; புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நலன் வேறு, ஈழத்திலேயே வாழும் தமிழர்களின் நலன் வேறு; இன்னொரு ஆயுதப் போராட்டம்தான் ஈழத்தைப் பெற்றுத் தரும்; இல்லையில்லை பொது வாக்கெடுப்பின் மூலமே அறவழியில் ஈழம் பெற முடியும்; இரண்டும் சாத்தியமில்லை - தனி ஈழம் அமைய ஒருபோதும் அமெரிக்கா, சீனம், இந்தியா மூன்று நாடுகளும் அனுமதிக்கப்போவதே இல்லை; ராஜபட்சே அரசின் மூலம் தங்கள் புவி அரசியல் லாபங்களுக்காக மூன்று நாடுகளும் காய் நகர்த்துவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை; இல்லையில்லை - மாணவர்கள் எழுச்சி அடுத்தகட்டத்தில் இந்திய ஒருமைப் பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் வலிமை உடையது - என்று பற்பல பார்வைகள் இந்த விவாதங்களில் வெளிப்படுகின்றன.

இவை எதையும் என்னால் முழுமையாக ஏற்கவும் முடியாது; முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. எல்லாப் பார்வைகளும் கொஞ்சம் கொஞ்சம் உண்மைகளை, யதார்த்தத்தைத் தம்முள் வைத்திருக்கின்றன.

கலைஞர் கருணாநிதியே புலம்பியது போல தி.மு.கவை மத்திய ஆட்சியிலிருந்து விலகச் செய்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. போர் சமயத்தில் இப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுத்து போர்நிறுத்தம் செய்ய வைத்து, கொஞ்சம் உயிர்களையேனும் காப்பாற்றி இருக்கக் கூடிய கடமையைச் செய்யத் தவறியதற்காக இப்போது தி.மு.க.வுக்குத் தரப்பட்ட தண்டனையாக இந்த ஆட்சி விலகல் நிர்ப்பந்தத்தைக் கணித்து ஆறுதலடையலாம். ஆனால், ராஜபட்சே கும்பலுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அவரவர் போர்க் குற்றங்களுக்காக, அரசியல் பிழைகளுக்காக இப்படி தண்டனை அளிப்பது அவ்வளவு எளிதல்ல.தமிழக மாணவர்களின் போராட்டத்தின் சக்தி என்பது தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து பதவி விலக வைக்கும் அளவுக்குத்தான் உள்ளது. அதே சமயம் இந்தப் போராட்டம் எத்தனை குறைபாடுகள் நிரம்பியதாக இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் மெத்தனத்தை, தவறுகளை, இந்திய அரசியல் கட்சிகளின் அரைகுறை புரிதலை, அலட்சியத்தை, கடுமையாக வெளிப்படுத்த உதவியது.மாணவர்கள் ஏன் இதே உந்துதலுடன் அண்மைக் காலத்தில் வேறு பிரச்னைகளில் போராடவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, தர்மபுரி சாதிவெறித் தாக்குதல் போன்றவற்றில் இதே வீரியத்துடன் ஏன் போராட வரவில்லை என்று கேட்கப்படுகிறது. ஒரே காரணம்தான். அவை எதுவும் பாலச்சந்திரன் முகம் எழுப்பும் உணர்ச்சிகளை எளிதில் எழுப்பவல்லவை அல்ல. அவை எதுவும் உணர்ச்சி அடிப்படையில் போராடக்கூடிய பிரச்னைகளும் அல்ல. அறிவார்ந்த தெளிவின் அடிப்படையில் மட்டுமே போராடப்படக் கூடியவை. இப்போது நடந்த மாணவர் போராட்டம் போல 1965 மொழித் திணிப்பு எதிர்ப்புக்குப் பின்னர் இதுவரை நடந்ததில்லை என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. இவையெல்லாம் மிகைக் கருத்துகளே ஆகும். இடதுசாரி இயக்கங்களில், கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட மாணவர்கள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் இரண்டாயிரங்களிலும் பல்வேறு பிரச்னைகளில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசியாகக் கூடச் சமச்சீர் கல்வியில் சுணக்கம் ஏற்பட்டதை எதிர்த்தும், பள்ளிக்கட்டண விஷயத்திலும் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். கட்சிகளைச் சாராமல் மாணவர்கள் போராடுவதாகக் காட்ட விரும்பும் மீடியா, அரசியல் இயக்கங்கள் சார்ந்த மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்களை எப்போதுமே பெரிதாக சித்திரிப்பதில்லை. எல்லா அரசியல் கட்சியும் மோசம் என்ற பார்வையை விரும்பும் மீடியா அதை ஊக்குவிக்க வசதியாக அண்மை மாணவர் போராட்டத்தை வடிவமைத்துக் காட்டியது என்பதும், இதைத் தங்களுக்கு வசதியான தந்திரோபாயமாகக் கருதிய அரசியல் சக்திகள் முகம் காட்டாமல் மாணவர்களுக்குப் பின் நின்றன என்பதும் மீடியா- அரசியல் ஆய்வுக்கான விஷயங்கள்.

மாணவர்கள் இன்னின்ன விஷயங்களுக்காகப் போராடவில்லை என்று பட்டியல் போடுவதில் ஓரளவுக்கு மேல் அர்த்தமில்லை. போராடியதை மீடியா எப்படிக் காட்டுகிறது என்பது முக்கியம். எதற்குப் போராடுகிறார்களோ அதை எப்படி என்ன புரிதலோடு போராடுகிறார்கள் என்பது முக்கியம். அவ்வளவுதான்.முதலில் மாணவர்கள் எதற்கும் ஏன் போராட வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. படிக்கும் வயதில் படித்து அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதிலும் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. அப்போது தான் பின்னாளில் எந்தத் துறையிலும் எந்தப் பிரச்னையையும் எதிர் கொண்டு தீர்க்க அவர்களால் இயலும் என்று கருதுவோர் உண்டு. அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக மீடியா துறைக் கருத்தரங்கில் பேசிய ஒரு பேராசிரியர், தங்கள் ஆசிரியர்களான மு.வ, பாலசுப்ரமணியம் ஆகியோர் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மொழிப் போராட்டத்திலேயே மாணவர்கள் பங்கேற்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்வுக் காலங்களில் செய்தித்தாள்களைக் கூட தினசரி படிக்காமல் சேர்த்து வைத்து ஒரு மாதம் கழித்து மொத்தத்தையும் படித்தால் போதும் என்று அறிவுரைகள் சொல்லப்பட்டதாம். மாணவ பருவத்தில் உலக அரசியலில், சமூகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் ; ஆனால் ஈடுபடக் கூடாது என்பதே அந்தப் பார்வை.அறிந்து வைத்துக் கொள்வது என்பதே இன்று பெரும் சிக்கலாக இருக்கிறது. மாணவர்களை, இளைஞர்களை அறியாமையில் வைத்திருப்பதையே அதிகாரத்தில் இருக்கும் எல்லாரும், குடும்பம் முதல் அரசு வரை விரும்புகிறார்கள். பிழைக்கும் வழி மட்டும் தெரிந்தால் போதுமென்கிறது குடும்பம். உழைக்கும் வழி மட்டும் தெரிந்துகொள் என்கின்றன அரசு, தனியார் நிர்வாகங்கள்.ஈழத் தமிழர்களின் இன்னலை தமிழக மாணவர்களால் துடைக்க முடியுமா என்பதை விடப் பெருங் கவலையாக எனக்கு இருப்பது, தமிழக இளைஞர்களை, மாணவர்களை மதுவிலிருந்து காப்பாற்ற முடியுமா என்பதுதான்.சினிமா, டி.வி. போதைகள் தவிர மது போதையும் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 12,13 ஆகிக் கொண்டிருக்கிறது. பியர், ஒயின் மட்டும்தான் என்று தொடங்கி எது கிடைத்தாலும் சரி என்ற சரிவு நிலையை நோக்கிப் போகிறது மதுப்பழக்கம். சாலை விபத்துகள், குடும்பச் சீரழிவு, உழைக்கும் திறன் நலிவு என்று பல கோணங்களில் மது இன்று தமிழகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் மூன்று பெண்களைச் சந்தித்தேன். மூவருக்கும் வயது சுமார் 30லிருந்து 40க்குள்தான். இரண்டு பேர் இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் வட்டாரத்தில் வீட்டுப் பணியாளர்களாக இருந்தவர்கள். இன்னொருத்தி எங்கள் குடியிருப்பின் நடைபாதையில் குடியிருந்த ஒரு தொழிலாளியின் மகள். மூவரையும் சிறுமிகளாக அறிவேன். மூவருமே உற்சாகமும் துடிப்பும் உழைப்பும் நிரம்பியவர்களாக அப்போது இருந்தவர்கள். இப்போது உழைப்பு மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.இப்போது மூவரும் விதவைகள். மூவரின் கணவர்கள் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது மதுதான். ஒவ்வொரு வாரமும் இப்படி ஏதோ ஓர் ஏழைக் குடும்பத்தை மது வெட்டி சாக்கும் கதை காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. முப்பது வருடங்களில் கடும் ஏழைமையிலிருந்து மேலே எழுந்து வந்த குடும்பங்களையும் எனக்குத் தெரியும். அடுத்த தலைமுறையில் படிப்பை ஆயுதமாகக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தவர்கள் அவர்கள்.அந்த வாய்ப்பை ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் தன் அடுத்த தலைமுறையில் பெற்றுவிட முடியும் என்ற கனவில் இருக்கிறது. அப்படித்தான் இந்த மூவரும் தங்கள் குழந்தைகளை இப்போது படிக்க வைக்கச் சிரமங்களை மீறி முயற்சிக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் மதுவில் சிக்கினாலோ அல்லது கணவர்கள் மதுஅடிமைகளாக அமைந்தாலோ இன்னொரு தலைமுறையும் படுகுழியில். முன் தலைமுறையின் ஏழைமையிலிருந்து அடுத்த தலைமுறை விடுபடும் வாய்ப்பை இன்று மிகப்பெரும் அளவில் குலைத்துக் கொண்டிருக்கும் காரணங்களில் தலையாயது மதுதான்.மதுவைப் பக்குவமாகக் குடிக்கப் பழகவேண்டும் என்று சொல்லும் அறிவு ஜீவிகள் தயவுசெய்து அப்படிப்பட்ட பக்குவமான சமூகங்களுக்குப் புலம் பெயர்ந்து போய்விடும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கே இப்போது அது சாத்தியமே இல்லை. மது விலக்கைக் கொண்டு வந்தால் கள்ளச் சாராயத்தில் பலரும் சாவார்கள் என்று வாதாடும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சொல்வேன்: இப்போது இரண்டு கோடி பேர் தினமும் குடிக்கிறார்கள். இதில் கள்ளச் சாராயத்தைக் குடித்து இருபது லட்சம் பேர் சாகும் வாய்ப்பு உண்டா? இல்லை. அப்படியே இருபது லட்சம் செத்தாலும், மீதி ஒரு கோடி எண்பது லட்சம் பேர் குடியிலிருந்து மீளமாட்டார்களா? மதுவிலக்கு இருந்த முப்பது ஆண்டுகளில் கூட இங்கே முப்பதாயிரம் பேர் செத்த வரலாறு இல்லை. ஆனால் ஆண்டுதோறும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவோரால் குடிக்காதவர்கள் உட்பட பத்தாயிரம் பேர் சாகிறார்கள். மாணவர்கள் படிக்கிற காலத்தில் போராடுவது, படித்து முடித்தபின் போராடுவது எதுவானாலும் சரி, சுய சிந்தனையும் தெளிவும் இருந்தால்தான் இரண்டும் சாத்தியம். இரண்டையும் அழிக்கும் மது, மாணவர்கள் மத்தியில் பெருகிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களில் பங்கு பெறும் மாணவர் எண்ணிக்கையை விட, மது குடிக்கும் மாணவர் எண்ணிக்கைதான் அதிகம் என்பது கசப்பான உண்மை.

அரசியல் கட்சிகளும் அதற்கு அப்பாற் பட்டவர்களும் சேர்ந்து மதுவை ஒழிக்காவிட்டால், தமிழகத்து தமிழன் வருங்காலத்தில் தனக்காகவும் போராட மாட்டான்; மற்றவருக்காகவும் போராட மாட்டான். போரில் அநீதியாக தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவை விட, கத்தியின்றி ரத்தமின்றித் தமிழர்களைக் கொன்ற பெரிய கொலைகாரர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் என்று நாளைய வரலாறு குறிக்கப் போவதைத் தடுக்க விரும்பினால், இருவரையும் கேட்டுக் கொள்வேன். தயவு செய்து நீங்கள் ஏற்படுத்திய இழிவை உங்கள் காலத்திலேயே நீக்குங்கள்.

அருள்வாக்கு - மனஸை அடக்கு!

‘ஆத்மா மனஸுக்கு அப்பாற்பட்டது; மனஸோடு ஸம்பந்தப்படாமல் வெறுமே தானாக இருந்து கொண்டிருப்பது’ என்று சொல்லிவிட்டு, ‘மனஸை இழுத்து அடக்கி ஆத்மாவிடம் வசப்படுத்து’ என்றும் சொன்னால் என்ன அர்த்தம்? மனோதீதமான, நிஷ்க்ரியமான (கார்யம் செய்யாததான) ஆத்மா மனஸை எப்படித் தன்வசத்தில் வைத்துக் கொள்ளும்?

ஸரி, மனஸுக்கு ஆத்மா அப்பாற்பட்டதுதான், அதற்குக் கார்யமும் இல்லைதான். ஆனாலும், நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத மாயையால் இதே ஆத்மாதான் மனஸுக்கும் ஆதாரமாய் நிற்கிறது; அது இல்லாவிட்டால் மனஸால் ஒரு கார்யமும் பண்ண முடியாது என்றும் இப்படி மாயையால் ஆத்மாதான் மனஸ் என்று ஒன்றை அவிழ்த்து விட்டு, அது வெளியிலே ஓடிக் கொண்டிருப்பதற்கும் சக்தி தருகிறது என்றால், அவிழ்த்து விட்டதைத் தனக்குள்ளேயே எப்படியோ இழுத்துக் கரைத்துக் கொண்டு விடும் என்பதையும் ஏற்க வேண்டியது தானே?

‘மனஸை அடக்கி ஆத்மாகிட்டே வசப்படுத்து’ என்றவுடன் ஆத்மாவிலே மனஸ் எப்படி ஸம்பந்தப்படும் என்று கேட்கிறவர்கள், இன்னொன்றும் யோசித்துப் பார்க்கணும். ‘மனஸை அடக்கு,’ ‘மனஸை இழு’ என்றெல்லாம் சொல்வது மட்டும் எப்படி ஸாத்யம் என்று யோசித்துப் பார்க்கணும். அஞ்ஞான தசையிலுள்ள ஜீவனுக்குத்தான் இந்த உபதேசமெல்லாம். ஞானமடைந்து விட்டவனுக்கு உபதேசம் எதற்கு? அஞ்ஞான தசையில் உள்ள ஜீவத் தன்மைக்கே மனஸ் தான் காரணம். மனஸுக்கு மேற்பட்டதாக அஞ்ஞான ஜீவனிடம் எதுவும் கிடையாது. அப்படியிருக்கும் போது, ‘மனஸை இழு, அடக்கு’ என்றால், எதைக் கொண்டு ஜீவன் இதைப் பண்ண முடியும்? அவனிடம் உள்ள ஸர்வமுமே மனஸ்தான் என்றிருக்க, அதை வேறு எதனால் அவன் உள்ளே இழுக்கவோ அடக்கவோ முடியும்? மனஸ்தான் அவனுக்காக எல்லாம் பண்ணுவதும், அவனையே ஆட்டிப்படைத்து எல்லாம் செய்யப் பண்ணுவதும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

நீயுமா முரளிதரன்?


விளையாட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது என்று விளையாட்டு வீரர்களும் (முக்கியமாக இலங்கை வீரர்கள்), கிரிக்கெட் நிபுணர்களும் இப்போது தமிழ்நாட்டுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில், அரசியல் இல்லாமல் விளையாட்டு இல்லை. ஒலிம்பிக்ஸில் இல்லாத அரசியல்களா?

இந்த நிலையில், உலகம் முழுக்க அடக்குமுறைக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிரிக்கெட் நிபுணர் பீட்டர் ரொபோக்கிடம், ‘நான் வாழுகிற கண்டியில் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பார்க்காத பிரச்னைகளைப் பற்றிப் பேச முடியாது’ என்று முரளிதரன் முன்பு பேட்டியளித்தது போல எல்லா விளையாட்டு வீரர்களும் பிரச்னைகளைக் கண்டு ஒதுங்குவதில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்படும்போது குரல் எழுப்புகிற விளையாட்டு வீரர்களை வரலாறு என்றும் நினைவு கூறுகிறது. 2003 உலகக் கோப்பையின் போது ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவரும் ஹென்றி ஒலங்காவும் செய்த கலகம் போல.

2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த அடுத்த நாள் பிரளயம் கிளம்பியது. அன்று, ஜிம்பாப்வேவுக்கும் நமிபியாவுக்கும் இடையே மேட்ச். ஆனால், ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பத்திரிகையாளர்களை அழைத்தார்கள் ஜிம்பாப்வே அணியின் பிரபல வீரரான ஆண்டி ஃபிளவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முதல் கருப்பின வீரருமான ஹென்றி ஒலங்காவும். அவர்களுடைய கைகளில் ஓர் அறிக்கை இருந்தது. அதில், இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

‘ஜிம்பாப்வேக்காக ஆடுவதைப் பெருமையாகக் கருதினாலும், எங்கள் நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், மைதானத்துக்குள் காலடி வைக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதியாக இருந்தால், நடக்கின்ற குற்றங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று அர்த்தமாகிவிடும். பல ஆயிரம் ஜிம்பாப்வே மக்கள் கருத்துச் சுதந்திரத்தை இழந்துள்ளார்கள். மக்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கற்பழிக்கப்படுவதையும் நாங்கள் அறிகிறோம். பலருடைய வீடுகள் நொறுக்கப்பட்டுள்ளன. நாங்கள் விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் எங்களுக்கும் மனசாட்சியும் உணர்வுகளும் இருக்கின்றன. எங்கள் நாட்டில் ஜனநாயகம் செத்துப்போனதற்கு துக்கம் அனுஷ்டிக்கிறோம். இந்த எதிர்ப்பின் மூலம், எங்கள் நாட்டின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.’

ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகால வெள்ளையர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த கறுப்பினத் தலைவர் முகாபே, வெள்ளையர்கள் வசம் உள்ள முக்கால்வாசி நிலங்களைப் பறிக்க சர்ச்சைக்குரிய நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, அதிக நிலங்கள் வைத்திருக்கும் வெள்ளை இன விவசாயிகள், தங்கள் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் வெள்ளையர்கள் தங்கள் உரிமை பறிபோவதாக எண்ணினார்கள். முகாபே அரசால், நிலத்துக்கு ஈடான மதிப்பைத் தரமுடியவில்லை. இதைத் தட்டிக்கேட்ட மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கொடுங்கோல் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆண்டி ஃபிளவர், பூனைக்கு மணி கட்ட முடிவு செய்தார். தம் கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்தக்கூடிய ஒலங்காவை அணுகினார். ஒரு வெள்ளை, ஒரு கருப்பு என இருதரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்படும்போது மிகப்பெரிய கவனம் கிடைக்கும் என்று இருவரும் நம்பினார்கள். சம்பவத்தன்று, கண்டன அறிக்கையை வெளியிட்ட பிறகும், இருவரும் அந்த மேட்சில் ஆடினார்கள். கைகளில், கறுப்புப்பட்டை அணிந்து உலகுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

முரளிதரனுக்கு வருவோம். இத்தனை நாளாக, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி முரளிதரன் வாய் திறந்ததில்லை. இருந்தாலும், அவர் தமிழர் என்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இலங்கை அணியில் வினோதன் ஜான், ரஷல் அர்னால்ட், மேத்யூஸ் ஆகிய தமிழர்கள் விளையாடினாலும் முரளிதரன் மீதுதான் தமிழ் ரசிகர்கள் தனிப்பாசம் வைத்திருக்கிறார்கள். (தமிழ்ப் பெண்ணான மதிமலரைத் திருமணம் செய்ததும் ஒரு காரணம்.) ஆனால், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். மேட்சுகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தடுக்கும் தமிழக அரசின் அரசியல் செயல்பாட்டை எதிர்த்து, ராஜபட்சேவுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார் முரளிதரன். ‘இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். இலங்கையில், ஒரு சமயத்தில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் போர் நடந்தது. ஆனால், இப்போது மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் சரிசமமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தமிழர்கள் எப்படி இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதை நேரில் வந்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க வேண்டும்,’ என்கிற அவருடைய பேட்டி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் அமைதி நிலவுகிறது என்று இலங்கைத் தமிழரான முரளிதரனே சொல்லி விட்டார், வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று ஆங்கில மீடியா தமிழகத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறது.

முரளிதரன், யாழ்ப்பாணத் தமிழர் இல்லை. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர். ஆனாலும், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காகப் பெரிய போராட்டங்களெல்லாம் நடக்கும்போது அவருக்கு மட்டும் அந்த அக்கறை இல்லாமல் போனது ஆச்சர்யமாக இருக்கிறது. வெள்ளை இன மக்களைக் கொடுமைப்படுத்திய அரசை எதிர்த்து, கருப்பின வீரரான ஒலங்கா குரல் எழுப்பியது மாதிரியான ஓர் அதிரடி நடவடிக்கையை முரளிதரனிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இலங்கையில் இனப்படுகொலை நடந்த நிலையில், ‘இலங்கை மக்கள் அமைதியான முறையில் வாழ்கிறார்கள், பழசை மறக்க வேண்டும்’ என்கிற வார்த்தைகள் முரளிதரன் மீது வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடித்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்குச் சமூக அக்கறை தேவையில்லையா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

ராஜபட்சே அரசுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்ததால், தம்முடைய பல ரசிகர்களை இழந்து விட்டார் முரளிதரன்.

உங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

உணவுக்கும் உடல்நலனுக்கும் நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

 நம்மை நாமே தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டு உள்ள கேள்விகளுக்கான விடையை 'டிக்’ செய்யுங்கள். கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடைகளைப் பாருங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப்பாருங்கள்.  எந்த அளவுக்கு உணவு விஷயத்தில் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரியும்.

1. காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்? 
 
அ. இல்லை. நிச்சயம் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வேன்.
ஆ. ஓரிரு நாட்கள் மட்டும் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறேன்.
இ. காலை உணவைச் சாப்பிடுவது இல்லை. காபி அல்லது டீ மட்டும் பருகுவேன்.

(காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை 8 மணி வாக்கில் அளவாகச் சாப்பிடுவது நல்லது. இது உங்கள் உடலின் வளர்ச்சிதைமாற்றப் பணியை மேம்படுத்தும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.)

2. உணவில் எவ்வளவு பச்சைக் காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வீர்கள்?
அ. உணவில் பெரும்பாலான பகுதி காய்கறி - பழங்கள்தான்.
ஆ. எப்போதாவது சாப்பிடுவேன்.
இ. சமைத்த காய்கறிகள் மட்டும்தான்.
(குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று கப் பச்சைக் காய்கறிகளை உணவாகக்கொள்வது அவசியம். இதில் அதிக அளவில் வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட், நார்ச்சத்து உள்ளன.  உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இவை அவசியம்.)

3. எந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவீர்கள்? 

அ. உணவில் முடிந்த வரை எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்ப்பேன்.
ஆ. ஆலிவ், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்.
இ. பாமாயில், கார்ன் ஆயில்.
(ஆலிவ், நல்லெண்ணெய், கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பான ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகம். இருப்பினும் எண்ணெயில் பொறித்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பாமாயிலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், உடலில் கொழுப்புத்தன்மை கூடும். கார்ன் எண்ணெயில் 85 சதவிகிதம் உடலுக்கு கெடுதலான செறிவூட்டப்படாத கொழுப்பு உள்ளது என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது.

4. ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் அருந்துவீர்கள்?

அ. ஆறு டம்ளருக்கு மேல்.
ஆ. மூன்று முதல் ஐந்து டம்ளர்.
இ. இரண்டு டம்ளருக்கும் கீழ்.
(குறைந்தது ஆறு டம்ளருக்கும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், சராசரியாக இரண்டு முதல் இரண்டரை லிட்டர்.)

5. பால் பொருட்களை எந்த அளவுக்குப் பயன்படுத்துவீர்கள்? 

அ. காலை மாலை இரண்டு டம்ளர் பால் குடிப்பேன்.
ஆ. ஒரு டம்ளர் பால். பிறகு தயிர், மோர் போன்ற பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்வேன்.
இ. காபி அல்லது டீயில் பால் கலந்து குடிப்பதோடு சரி.
(தினமும் பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தேவையான கால்சியம் கிடைக்கும். காபி அல்லது டீயாகக் குடிக்கும்போது பாலின் தன்மை மாறி, பலனின்றிப் போய்விடும்)

6. வீட்டுக்கு வெளியில் இருக்கும்போது தாகம் எடுத்தால் என்ன செய்வீர்கள்? 

அ. வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பேன்.
ஆ. இளநீர், ப்ரெஷ் ஜூஸ் குடிப்பேன்.
இ. ஏதாவது ஒரு குளிர்பானம் குடிப்பேன்.
(கையில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. அப்படி இல்லை எனில் இளநீர், பழரசம் என்பது நல்லது. சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் ரசாயனப் பொருட்கள் உடல்பருமன், சர்க்கரை நோய், பற்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.)

7. ஹோட்டல் உணவை எவ்வளவு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வீர்கள்? 

அ. மாதத்துக்கு ஒன்று இரண்டு முறை.
ஆ. வாரத்துக்கு ஒரு முறை.
இ. வாரத்துக்கு மூன்று அல்லது அதற்குக் கீழ்.
(மாதத்துக்கு ஒன்று இரண்டு முறை என்றால் ஓ.கே. முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. உணவகங்களில் சுவைக்காக பல பொருட்களைச் சேர்க்கின்றனர். ஆனால் வீட்டில் செய்யும்போது நல்லதா கெட்டதா என ஆராய்ந்தே பொருட்களைச் சேர்க்கிறோம்.)
(அ-வுக்கு 3, ஆ-வுக்கு 2, இ-க்கு 1 மதிப்பெண்கள்)

 15-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள்: 

வாழ்த்துகள். உங்களின் உணவுப் பழக்கம் மிகவும் ஆரோக்கியமானது. சரியான அளவில் சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள்.

8 முதல் 14 மதிப்பெண்கள் பெற்றவர்கள்: 

உங்கள் உணவு முறை ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், இது போதாது, உங்கள் உணவு முறையில் சிறிது மாற்றங்கள் தேவை. உங்கள் உணவில் தினமும் அதிக அளவு காய்கறி, பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஹோட்டல் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

7-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்: 

உங்கள் உணவு முறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ளன. இது உடல் பருமனுக்கு வழிவகுத்து இதயம், சிறுநீரகம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். உடனடிக் கவனம் தேவை.


Thursday, April 04, 2013

எனது இந்தியா (மீனின் மீது இருக்கும் பசு !) - எஸ். ரா

இந்திய மக்கள் காளை மாட்டைத் தந்தையாகவும், பசு மாட்டைத் தாயாகவும் கருதுகின்றனர். விலங்குகளை இப்படி நேசிப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. மாட்டுச் சாணத்தை எருவாகப் பயன்படுத்துகின்றனர். சாண வறட்டியை எரித்து அந்தச் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்ளும் விசித்திரப் பழக்கம் இந்தியர்களிடம் இருக்கிறது. பாதயாத்திரையாக சென்று கடவுளை வணங்கும் இந்திய மக்கள், கணிதம் மற்றும் நுண்கலைகளில் ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள். இந்தியாவின் துறைமுக நகரங்களில் அடிமை வணிகம் நடைபெற்று வந்ததை, தான் கண்கூடாகப் பார்த்ததாகவும் கூறுகிறார் நிகிதின். மூன்று ஆண்டுகளை இந்தியாவில் கழித்த நிகிதின், இங்கே மக்கள் சமய வேற்றுமையை மறந்து நட்புடன் அன்புடன் பழகுகின்றனர் என்று குறிப்பிடுவது மிக முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு முன், வியாபார நோக்கத்துக்காக இந்தியாவுக்கு வந்து சென்ற நிகிதினுக்கு சௌல் துறைமுகத்தில் நினைவுச்சின்னம் அமைக்க ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக இடம் கொடுத்துள்ளது கொங்கன் கல்விக் கழகம்.

நிகிதின் வாழ்க்கை வரலாற்றை 'பர்தேசி’ என்ற பெயரில் இந்தி மொழியில் திரைப்படமாக தயாரித்து இருக்கின்றனர். இந்தப் படம் ரஷ்ய மொழியிலும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர்கள் குவாஜா அகமது அப்பாஸ் மற்றும் வசிலி புரோனின். இந்தப் படத்தில் நர்கீஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது, நிகிதின் ஓர் இந்தியப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றிய கதை. 15-ம் நூற்றாண்டு இந்தியாவை நிகிதின் எழுத்தில் பதிவுசெய்திருக்கிறார். அதைவிட ஒரு படி மேலே போய் தனது ஓவியங்களின் மூலம் 18-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பதிவுசெய்தவர் இளவரசர் அலெக்ஸி  சோல்டிகோப். இவர், இந்தியாவுக்கு இரண்டு முறை வந்துசென்று இருக்கிறார். முதல் பயணம் 1841 முதல் 43 வரை. இரண்டாவது, 1844 முதல் 1846 வரை. ரஷ்யத் தூதர், யாத்ரீகர், ஓவியர் என்று பல்வேறு முகங்கள்கொண்ட அலெக்சி, இந்தியா குறித்து வரைந்த ஓவியங்கள் இப்போது தொகுப்பாக உள்ளது.


இந்திய இலக்கியங்கள் மற்றும் வேத நூல்கள் அறிமுகமான அளவுக்கு இந்தியாவின் சமூக வாழ்க்கை பற்றி ரஷ்ய மக்களுக்கு அறிமுகம் கிடைத்தது இல்லை. 1800-ம் ஆண்டு வரையிலான வரலாற்றுப் புத்தகங்களில் இந்தியாவைப் பற்றி குறைவான தகவல்களே இருந்தன. ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவின் மரபு இலக்கியங்கள் குறித்த தேடுதல் ரஷ்ய ஆய்வாளர்​களிடம் அதிகம் இருந்தது. அலெக்ஸியின் தந்தை, மன்னரிடம் இருந்து ஆண்டுக்கு 25,000 ரூபிள் உதவித் தொகையும், அரச சேவைக்காக மூன்று லட்சம் ரூபிள் வெகுமதியும் பெறக்கூடிய உயர்பதவி வகித்துவந்தார். பீட்டர்ஸ் பெர்க்கின் பெரிய மாளிகை ஒன்றில் வசித்த அலெக்சிக்கு பாரசீகக் கலாசாரத்தின் மீது தனி ஈடுபாடு இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு ஒன்பது வயதானபோது, மிர்ஷா அப்துல் ஹசன் கான் என்ற பாரசீக வணிகர் தனது அலங்காரமான யானைகள், பல்லக்குகளுடன் பெரிய ஊர்வலமாக அந்த நகருக்கு வந்ததை நேரில் பார்த்ததே. அதற்காகவே, பாரசீகத் தூதராகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவுசெய்து தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் இளவரசர் அலெக்சி. படிக்கும் காலத்திலேயே, ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றுத்தேர்ந்தார். அதோடு, ஓவியம் வரைவதிலும் ஆர்வம்கொண்டு அரச சபை ஓவியரான அலெக்சாண்டர் ஒர்லாவ்ஸ்கியிடம் கற்றுக்கொண்டார். தென்னிந்தியாவுக்கு வந்த அலெக்​ஸிக்கும், திருவிதாங்கூர் மன்னர் சுவாதித் திருநாளுக்கும் இருந்த நட்புறவு தனித்துவமானது. சுவாதி திருநாள் இசையில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். அவரே நூற்றுக்கும் மேற்பட்ட சாகித்யங்களை இயற்றி இருக்கிறார். ஆகவே, ஓவியரான அலெக்ஸியுடன் அவருக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. சுவாதி திருநாள் ஆட்சியின்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வானவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுக்கூடம் அமைக்கப்​பட்டது. புதிய அச்சகங்கள், மிருகக் காட்சி சாலை, இலவசப் பாடசாலை, பொது நூலகம், சுவடிகள் பாதுகாப்பு நூலகம் என்று பல்வேறு விதமான செயல்பாடுகள் நடந்த காரணத்தால் சுவாதி திருநாள் மீது மக்கள் மிகுந்த அபிமானத்துடன் இருந்தனர். அந்த நாட்களில் இதுபோன்ற சமஸ்தானங்களைக் கண்காணிப்பதற்காக ரெசிடென்ட் எனப்படும் வெள்ளை அதிகாரி ஒருவர் பணியாற்றுவார். அப்படி ரெசிடென்டாகப் பணியாற்றிய கல்லன் என்பவர் பெண் பித்தராகவும், பேராசை பிடித்த மனிதராகவும் இருப்பதை உணர்ந்து அவருடன் சுவாதித் திருநாள் மோதலைக் கடைப்பிடித்தார். இதனால், அவருக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் திருவிதாங்கூருக்கு வந்தார் அலெக்ஸி. பிரான்ஸில் இருந்து கப்பலில் பம்பாய் வந்து சேர்ந்த அலெக்ஸிக்கு, பிரிட்டிஷ் கம்பெனி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பம்பாய் நகரில் சில வாரங்கள் தங்கியிருந்த அவர், கோடையின் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இலங்கையை நோக்கிப் புறப்பட்டார். தனிக் கப்பலில் 12 நாட்கள் பயணம் செய்து கண்டி நகரை அடைந்தார். அங்கே, அரச விருந்தினராக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதன்முறையாக நாட்டுப்புறக் கூத்து நடனம் ஒன்றை அங்கே பார்த்ததாகவும், அது பிரமிப்பூட்டுவதாக இருந்ததாகவும் அலெக்சி எழுதியிருக்கிறார். இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அலெக்ஸிக்கு, மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைப்பெருமை​யுடன் குறிப்பிடும் அலெக்ஸி, ஆண்கள் பொதுவாக மலர்களை அணிந்துகொள்​வதில்லை. விருந்தினர்களுக்கு மட்டுமே மலர் மாலைகள் அணிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். பாம்பன் பகுதியில் உள்ள கடற்கரைக் காட்சிகளை வரைவதற்காக இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தவர், அங்கிருந்து பல்லக்கில் பயணம்செய்து நாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்குச் சென்றார். அங்கும் அவருக்கு சிறப்பான ராஜமரியாதை அளிக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து வேலூர் புறப்பட்ட அவர் அங்கே கோட்டையில் சிறைவைக்கப்பட்டு இருந்த திப்புவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்களையும் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக மதறாஸ் வந்து சேர்ந்த அவர் எல்பின்ஸ்டோன் பிரபு வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்து மதறாஸின் கலாசார நடவடிக்கைகளை ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.

அதன் பிறகு, அங்கிருந்து கிளம்பி புதுக்கோட்டைக்குச் சென்ற அலெக்ஸியை புதுக்கோட்டை மன்னர் வரவேற்று விருந்தளித்தார். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்குச் சென்றார். தஞ்சை மன்னரிடம் 40 யானைகள், 7 புலிகள், 5 சிறுத்தைகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளவர், மன்னருக்கு 300 மனைவிகள் இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. தஞ்சையில் இருந்து மதுரைக்குச் சென்றார் இளவரசர் அலெக்ஸி. அங்கே உள்ள கோயிலைக் கண்டு வியந்து மிகப் பழைமையான மதுரைக் கோயில் வியப்பூட்டுவதாக இருக்கிறது. இத்தாலி நகரில் கோபுரங்களில் பூனைகள் அலைவதைப் போல மதுரை நகரில் குரங்குகள் திரிகின்றன என்று தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார். மதுரையில் இருந்து குற்றாலம் வழியாக கொல்லம் செல்ல பல்லக்கில் கிளம்பினார். காட்டில் ஒரு மதம்பிடித்த யானை வெறிகொண்டு சுற்றி அலைவதாக அவரைப் பயமுறுத்தினர். அதற்காகப் பழங்குடி மக்கள் 20 பேரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர் காட்டுக்குள் பயணம் செய்தார். ஆறு நாட்கள் பயணத்துக்குப் பிறகு, காட்​டைக் கடந்து சென்றனர். கொல்லத்தில் இருந்து மீண்டும் பயணம் செய்து திருவனந்தபுரம் சென்று மன்னர் சுவாதித் திருநாளை சந்தித்தார். அங்கே, வானவியல் ஆய்வுக்காக வந்திருந்த  ஜான் கால்டிகட் என்​பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர், சுவாதித் திருநாள் மன்னர் அழைத்ததின் பேரில் பிரிட்டனில் இருந்து வானவியல் கருவிகளை வாங்கி வந்து இங்கே வானவியல் கூடம் அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தார். கணித மேதையான சுவாதித் திருநாள் விஞ்ஞானம், இசை, ஓவியம், நடனம், இலக்கணம் என்று பரந்த தளங்களில் ஆர்வமும் தனித்திறனும் கொண்டிருந்ததில் அலெக்சிக்கு ஆச்சர்யம். மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்து தென்னிந்தியாவின் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறையவே அறிந்துகொண்டார்.

சுவாதித் திருநாள் மகாராஜா, அலெக்ஸியை சந்தோஷப்​படுத்து​வதற்காக நடன நாடகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில், ஆதாம் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டது வேடிக்கையாக இருந்தது என அலெக்ஸி தனது குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார். திருவிதாங்கூரில் இருந்து மைசூர் சென்று, அங்கிருந்து வட இந்தியா முழுவதும் பயணம் செய்தவர், வழியில் கண்ட காட்சிகள் அத்தனையையும் ஓவியங்களாக வரைந்தார். இந்த ஓவியங்களே 18-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதற்கான நேரடி அத்தாட்சி.

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் யாவும் நிஜமானது அல்ல. மிகைப்படுத்துதலும், கேட்டறிந்த தகவல்களும் நிறைய கலந்திருக்கின்றன. ஆனாலும், கடந்த காலத்தின் குரலை இந்தக் குறிப்புகள் மூலம் கேட்க முடிகிறது என்பதே இதன் வரலாற்று முக்கியத்துவத்துக்கான காரணம்.

'இந்தியர்கள் பூமியின் சுற்றளவை 100 சதவிகிதம் துல்லியமாகக் கணிக்கும்  திறன்கொண்டவர்கள், அதே மக்கள்தான், இந்த பூமி ஒரு மீனின் மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். இந்த இரட்டை மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்று கேட்கும் வெளிநாட்டுப் பயணியின் குரலில் உள்ள உண்மைதான் இன்றும் அதை வாசிப்பதற்கும் ஆய்வுசெய்வதற்கும் முக்கியத் தூண்டுகோலாக இருக்கிறது.

Monday, April 01, 2013

குருவே சரணம்... திருவே சரணம்! - 3

காஞ்சி மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட தெய்வமாகவே போற்றித் துதித்த பக்தர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களது வாழ்வில் பல இக்கட்டான நேரங்களிலும், அவர்களுடைய அடுத்தகட்ட நகர்வுக்கான தருணங்களின்போதும் தம்முடைய தீர்க்க தரிசனத்தால்- தீட்சண்யத்தால் அந்த அன்பர்களின் பிரச்னைகளைக் களைந்ததோடு, அவர்களது வாழ்க்கையையும் செம்மைப்படுத்தியவர் என்பதால், மகாபெரியவாமீது அவர்களுக்கெல்லாம் அதீத அன்பு; மிதமிஞ்சிய பக்தி!'' - பரவசத்துடன் விவரித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாகச் சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.   
''அது, 1950-ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன். மடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்பர் சுவாமிநாதனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கண்ணில் குறைபாடு; பார்வை இல்லாம போச்சு! சென்னையில் இருக்கும் பிரபல கண் ஆஸ்பத்திரிகளுக்கெல்லாம் குழந்தையைக் கொண்டுபோய்க் காண்பிச்சார் சுவாமிநாதன். ஆனால், டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. சுவாமி நாதன் மனசு ஒடிஞ்சு போயிட்டார். 

திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை! ஒருநாள்,குழந்தையை எடுத்துக்கொண்டு நேரே மடத்துக்கு வந்துட்டார் சுவாமிநாதன். மகாபெரியவா முன்னால் குழந்தையைக் கிடத்தி, விஷயத்தைச் சொல்லி, ''பெரியவாதான் கருணை பண்ணணும்''னு கண்ணீர் விட்டுக் கதறினார்.

மகாபெரியவா மெள்ள அருகில் வந்து, குழந்தை யின் கண்களை உற்றுப் பார்த்தார். கொஞ்சம் கற்கண்டு கொண்டுவரச் சொல்லி, குழந்தையில் மார்பில் வைத்தார். குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுவதுபோல் மீண்டும் ஒரு ஆழமான பார்வை. பிறகு, ''குழந்தையைத் தூக்கிட்டுப் போ. எல்லாம் சரியாயிடும்'' என்று கருணை பொங்க உத்தரவு தந்தார்.

சுவாமிநாதன் முகத்தில் அப்படியரு மகிழ்ச்சி! 'இனி கவலை இல்லை. மகா பெரியவா சொல்லிட்டதால, குழந்தைக்கு நிச்சயம் பார்வை கிடைச்சிடும். ஏதோ கர்ம வினை... அதுவும் பெரியவாளோட அனுக்கிரகப் பார்வையால் சரியாயிடும்’ என்று மனப்பூர்வமாக நம்பினார் அவர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. சில நாட்களிலேயே, குழந்தைக்கு மெள்ள மெள்ள பார்வை வந்துவிட்டது.


அதன்பிறகு, சுவாமிநாதன் சென்னை- பெருங்களத்தூரில் வந்து குடியேறினார். அவரோட குழந்தை வளர்ந்து பெரியவ ளாகி, அந்தப் பெண்ணுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் ஆகி, இப்ப சுவாமி நாதனுக்கு 'அனுராதா’ன்னு ஒரு பேத்தி இருக்கா. எல்லாம் மகா பெரியவாளோட அனுக்கிரகம்'' என்று விவரித்து முடித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அருகிலிருந்தவரைச் சுட்டிக்காட்டி, ''அதுசரி... இவரை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கலையே, இவர் யாரு தெரியுமா?'' எனப் பூடகமாகக் கேட்டார். அந்த அன்பரை அப்போதுதான் கவனித்தோம். கண்களில் நீர்மல்க அமர்ந்திருந்தவர், சிறு புன்னகையுடன் சொன்னார்: ''நான்தான் அந்தச் சுவாமிநாதன்!''

நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தொடர்ந்தார்... ''இன்னொரு சம்பவமும் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்து அன்பர் ஒருத்தர், மகாபெரியவா மீது பக்தி மிகுந்தவர். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருவார். அவரோட குழந்தைக்கும் பார்வை இல்லைன்னு குழந்தையைத் தூக்கிட்டு வந்தார். அன்னிக்கு லட்சார்ச்சனை நடந்தது. கற்பூர ஆரத்தி முடிஞ்சு, தோடகாஷ்டகம் எல்லாம் சொல்லி முடிச்சதும், மகாபெரியவாகிட்ட விஷயம் சொல்லப்பட்டது. பெரியவா எழுந்து வந்து குழந்தையை அப்படியே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். ''குழந்தையை எடுத்துண்டு போங்கோ..! எல்லாம் நல்லபடியா ஆயிடும்''னு கை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணுவது போல் சொன்னார். வெகு சீக்கிரமே அந்தக் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுது. குழந்தை வளர்ந்து பெரியவளாகி, அவளுக்குக் கல்யாணமும் ஜாம்ஜாம்னு நடந்தது.

ரெட்டியார் மகாபெரியவாளின் அனுக்கிரகத்தால் தன் மகளுக்குப் பார்வை கிடைச்சதை அவரே வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கும் தெரிய வந்தது. மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு பக்தர்கள் வெறுமே ஒரு போற்றுதலா மட்டும் சொல்லிடலை. அவர் அனுக்கிரகத்தை, அருட் கடாட்சத்தை அனுபவித்து உணர்ந்துதான் அப்படிச் சொல்லியிருக்காங்க. அவரோடு இருந்ததும், அவருக்குச் சேவை செய்ததும் எங்கள் பாக்கியம்!''  

- பரவசத்துடன் சொல்லி நிறுத்தியவர், ஒரு கணம் கண்மூடி யோசித்தவராகப் பேச்சைத் தொடர்ந்தார்... ''தேனம்பாக்கத்தில் மகாபெரியவாகூட இருந்திருக்கேன். நிறையச் சொல்வார். அப்போதெல்லாம் ஒரு சிநேகிதராகத்தான் தெரிவார். ஒரு பெரிய மடத்துக்கு அதிபதின்னு தோணாது எனக்கு. 'எனக்குப் பாடத் தெரியும். பாடட்டுமா?’ன்னு ஒருநாள் படுத்திருக்கும்போது கேட்டார். அவர் சங்கீதத்துல சிறந்த வேங்கடமஹி பரம்பரையில் வந்தவர் என்கிற விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது. அதனாலதான் சங்கீதத்தின் மேல் அவருக்கு அத்தனை ஆர்வம் இருந்திருக்கு.

ஒருமுறை, மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிச்சுக் கேட் கணும்னு விரும்பினார் மகாபெரியவா. இந்த விஷயம் மணி ஐயருக்குத் தெரிய வந்ததும், உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டார். அவருக்கு மகாபெரியவா மீது அபார பக்தி! அவரை 'அபிநவ நந்தி’ன்னு சொல்வார் மகா பெரியவா.

மடத்துக்கு வந்த மணி ஐயரிடம், 'தனி வாசி! கேட்கணும்போல இருக்கு’ என்றார் பெரியவா. மணி ஐயர் 'தனி’ வாசிச்சார் (தனி என்பது ஒருவகை தாள லயம்). மகாபெரியவாளும் ரசித்துக் கேட்டார். பிறகு, மணி ஐயருக்கு ஆசீர்வாதம் பண்ணி, அவர் மனைவியை அழைத்து, உலகளந்த பெருமாள் கோயிலில் அருளும் ஆரணவல்லித் தாயாருக்குப் பொன்தாலி செய்து சாத்தச் சொன்னார் மகாபெரியவா. அதை உடனடியாக நிறைவேற்றினார் மணி ஐயர்.
புகழ்பெற்ற டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, மணி ஐயருக்குச் சிநேகிதர். ஐயர் மீது பக்தின்னு கூடச் சொல்லலாம். மகாபெரியவா மணி ஐயரைக் கூப்பிட்டு மிருதங்கம் வாசிக்கச் சொல்லிக் கேட்டதை அறிந்து, ரொம்பவும் வியந்து போனாராம் சி.வி.கிருஷ்ணசாமி.

பாலக்காடு மணி ஐயர் தனது 60-வது பிறந்தநாளுக்கு மகா பெரியவாகிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்தார். 'நான் எந்தக் கோயிலுக்கும் போறதில்லே. கச்சேரிக்காகப் போனாலும், தரிசனம்னு பண்ணினது இல்லை!’ என்று உண்மையைச் சொன்னார். அப்போது மகாபெரியவா என்ன சொன்னார் தெரியுமா? 'நீ ஆத்மார்த்தமா மிருதங்கம் வாசிக்கறதே அந்த பகவானுக்குப் பண்ற சேவைதான். அந்தப் புண்ணியமே உனக்கு நிறையக் கிடைச்சிருக்கு. அது போதுமே!’ என்றார்.

தன் மீது பக்தி கொண்ட அன்பர்கள்தான் என்றில்லை; வேற்று மதத்தவர்களிடமும் ரொம்பக் கருணையும், அன்பும், அருளையும் கடாட்சித்தவர் மகாபெரியவா'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''காஞ்சிபுரத்தில் ஓர் அதிகாரி இருந்தார். அவர் வேற்று மதத்தவர் என்றாலும், மகாபெரியவாமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.

ஒருமுறை, அவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. வயிற்றில் ஒரு கட்டி; அதை ஆபரேஷன் செய்து அகற்றினால்தான் உயிர்பிழைப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். துக்கம் தாளாமல், மகாபெரியவாளைத் தரிசிக்க வந்தார் அவர். அன்று மகா பெரியவா காமாட்சியம்மன் கோயிலில் இருந்தார். அதிகாரியும் கோயிலுக்குச் சென்றார். அங்கே சரியான கூட்டம். பெரியவா வாயே திறக்கலை. அவர் கையில் ஏலக்காய் மாலை ஒன்று இருந் தது. அதிகாரியை அருகில் அழைத்து, கையை நீட்டச் சொல்லி அந்த ஏலக்காய் மாலையைக் கொடுத்துவிட்டு, கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
அதிகாரியும் நம்பிக்கையுடன் திரும்பினார். அதன்பிறகு, மறுபடியும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அந்த அதிகாரி. பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், 'கட்டி இருந்ததாகவே தெரியலையே?! ஆபரேஷன் எதுவும் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். அதிகாரிக்குத் தெரியும்... இந்த அற்புதம் மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் நிகழ்ந்தது என்று. இன்றைக்கும் அந்த ஏலக்காய் மாலையைப் பத்திரமாக வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.

ஒருமுறை, அவரின் மகனுக்கு பரீட்சை ரிசல்ட் வந்தது. பேப்பர்ல தன்னோட நம்பரை சரியா பார்க்காம, ஃபெயிலாயிட்டோம்னு நினைச்சு, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதும் மகாபெரியவாளிடமே வந்து சரணடைந்தார் அந்த அதிகாரி. 'பையன் கிடைச்சுடுவான். கவலைப்படாதே!’ என்று அருளினார் மகா பெரியவா. பையன் எங்கேயெல்லாமோ சுத்திவிட்டு, மூணு மாசம் கழிச்சு வீடு வந்து சேர்ந்தான். அதிகாரிக்குச் சந்தோஷம் தாளலை. ஓடி வந்து மகா பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, கண்கள் கசிய வணங்கிச் சென்றார். பரீட்சையில் அவன் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தது கூடுதல் சந்தோஷம்!

மகா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரகம் இருந்தா போதும்.. எல்லாம் நல்லதாகவே முடியும்.''