Search This Blog

Saturday, April 27, 2013

எனது இந்தியா! - அன்றாட வாழ்வுக்கான ஆயுதங்கள்!

கழ்வாய்வு, மொழியியல் ஆய்வு, நிலவியல் கண்டுபிடிப்பு என்று பல்திறன்கொண்ட புரூஸ் புட், தென்னிந்தியா முழுவதும் குதிரையில் சுற்றி தொல்கற்காலம் குறித்து ஆய்வுசெய்து இந்தியாவின் பழைமையை உலகுக்கு அடையாளம் காட்டியவர். அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழகத்​​தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வில் கல்லாயுதங்கள் கிடைத்திருக்கின்றன.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு வெளியிட்டுள்ள அறிக்கை​யில், ''தஞ்சை வட்டத்தில் வல்லம், புதூர், சாணூரப்​பட்டி, செங்கிப்​பட்டி, கூனம்பட்டி ஆகிய இடங்களில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் பாசாலம், நல்லாம்பாளையம், செந்துறை, தாமரைப்பூண்டி, சிறுகளத்தூர், கஞ்சமலைப்பட்டி மற்றும் உடையார்பாளையம் வட்டத்​தில் மருங்கூர், இடையக்குறிச்சி, கூழாட்டுக்குப்பம், மைக்கேல்பட்டி, பிலிச்சிக்குழி, மேலசிந்தாமணி, காக்காபாளையம், அணிக்குறிச்சி, வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர், விளாங்குடி, கா.அம்பாப்பூர், காத்தான்குடிக்காடு, கோரியம்பட்டி, நடுப்பட்டி, புதுக்குடி, செங்குந்தபுரம் ஆகிய இடங்களிலும் நுண் கற்கருவிகளும், பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்திருக்கின்றன. தர்மபுரி மாவட்டம்தான் அதிக அளவில் கற்கால ஆயுதங்கள் கிடைக்கக்கூடிய பகுதி'' என்கிறார்.


சிறிய நுண்கற்கருவிகள் குவார்ட்ஸ் என்ற வெள்ளை நிறக்கல்லை உடைத்துச் செய்யப்பட்டுள்ளன. இரண்டு அங்குலம் உள்ள கற்கருவிகள், மிருகங்களைக் கொல்வதற்கும் அவற்றின் தோலை உரிக்கவும்,  தோல்களை உடைகளாகவும், குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூளியாகவும் கற்கருவிகள் பயன் பட்டிருக்கின்றன. பூமியைத் தோண்டுவதற்கும், தாவரங்களை வெட்டி எடுப்பதற்கும் இந்த ஆயு தங்கள் பயன்பட்டன. ஆகவே, பல்வேறுவிதக் கற்களை செதுக்கி கையடக்க ஆயுதமாக மாற்றிக்கொள்வதன் மூலம் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பழகினர் பழங்கற்கால மக்கள்.

பழங்கற்காலத்தில் மனிதர்கள் இனக் குழுவாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள், விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. மிருகங்களை மேய்ச்சலுக்கு ஓட்டி அதை நம்பி வாழும் வாழ்​முறையும் அவர்களுக்குத் தெரியவில்லை. வேட்டையை நம்பி வாழ்வதே அவர்களின் உலகம். அதற்கு உதவுவதற்கே இத்தகைய கருவிகள். மனிதர்கள் பயன்படுத்திய முதல் ஆயுதமாக கடினமான மரத்​தடியைக் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தடியை கையில் ஏந்திக்கொண்டு வேட்டைக்குப் போவது, மிருகங்​களைத் தாக்குவது என செயல்பட்டனர். பிறகு, தடியின் முனையில் கூர்மையான கல்லைக் கட்டி ஈட்டியாகச் செய்திருக்கின்றனர். அந்த ஈட்டி​களைக் கொண்டு மிருகங்களைக் கொன்றனர். அதன் பிறகு, உருவாக்கப்பட்டதே கையடக்கக் கோடரி.

இன்றுள்ள இரும்புக் கோடரி போல அது மரத்தில் பொருத்தப்பட்டது அல்ல. ஒரு கல்லைக் கூர்மையாகச் செதுக்கி அதைக் கையில் பொருத்திக்கொண்டு அதைக்கொண்டு தாக்கும்படியாக உருவாக்கினர். அது தான் கற்கோடரி. செதில்போல வடிவமைப்புகொண்ட இந்தக் கோடரி, மிருகங்களின் தோலை உரித்து எடுப்பதற்கே முக்கியமாகப் பயன்பட்டது. கல் ஆயுதங்களைச் செய்யும் பட்டறைகள் இந்தியாவில் பல்வேறு குகைகளில் காணப்படுகின்றன. ஆற்றோரங்​களில்தான் பழங்கற்கால மனிதர்கள் அதிகம் வசித்திருக்கிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணா நதியை ஒட்டியும், சென்னையில் உள்ள கொற்றலை ஆற்றை ஒட்டிய அதிரம்பாக்க ஆற்றுப்படுகையிலும் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றன. இங்கே வாழ்ந்தவர்களை வேட்டைச் சமூகம் என்றே வகைப்படுத்துகிறார்கள். ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மானுட முன்னோடி வம்சமாக இது இருந்திருக்க கூடும்.

நியாண்டர்தால் மனித எலும்புகள், ஆப்கானிஸ்​தானிலும் பாகிஸ்தானிலும் இந்தியாவின் மராட்​டியத்திலும் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தால் மனிதனுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனிதர்கள் கல் ஆயுதங்களைக் கொண்டுதான் அன்றாட வாழ்வை வாழ்ந்திருக்க முடியும் என்கிறார்கள். கிங் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோர் அதிரம்பாக்கம் பகுதியில் செய்த அகழ்வாய்வை சமீபத்தில் மீளாய்வு செய்​திருக்கிறார் வரலாற்று அறிஞர் சாந்தி பப்பு. இந்த ஆய்வில் கல்ஈட்டி மற்றும் பல்வேறு கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும். கற்காலக் கருவிகளின் வயதைக் கண்டுபிடிப்பதில் பல்வேறுவிதமான முறைகள் நடைமுறையில் உள்ளன. ஆகவே, துல்லியமாக இதன் பழைமையைக் கணிக்க முடியவில்லை. தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப்பிந்தைய கற்​காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவகளைக்கொண்டு மண்​பாண்டங்கள் செய்யப்பட்டன.

தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலம். கற்காலத்தை இரண்டு வகை​யாகப் பிரிக்க வேண்டும் என 1851-ம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவர். இன்று பயன்​பாட்டில் உள்ள கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865-ம் ஆண்டில், அவர் எழுதிய 'வரலாற்றுக்கு முந்திய காலங்கள்’ என்னும் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய கற்காலம். இடைக் கற்காலம். புதிய கற்காலம் எனும் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடு​கின்றன.

பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவு சேகரிப்​போர் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு இந்தக் காலத்தில்​தான் கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியப்​பிரதேச மாநிலம் பிம்பெடகா என்ற இடத்தில் கற்கால மனிதர்களின் 30ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்டைக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. குகைகளில் இதை எதற்காக வரைந்தனர் என்பதற்கான காரணம் இன்றும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், சடங்குகள் காரணமாக இவை வரையப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இடைக்​கற்காலம் என்பது கி.மு. 10,000-ல் இருந்து கி.மு. 6,000 வரை உள்ள காலம். இந்தக் காலகட்டத்தில், நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கினர். இவர்களும் கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர். ஆனால், இவை நுண்மையான ஆயுதங்களாக இருந்தன. இடைக்கற்காலச் சான்றுகள் குஜராத்தின் லகான்ஜ் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஆதம்கர் மற்றும் பீகார், தமிழகப் பகுதிகளில் கண்டெடுக்​கப்பட்டுள்ளன.

கற்காலத்தின் கடைசிக் காலம் புதிய கற்காலம். இது கி.மு 6,000 முதல் கி.மு 4,000 வரை உள்ள காலம் என்கிறார்கள். மனித நாகரிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நடைபெற்ற காலகட்டம் அது. அந்தக் காலங்களில்தான் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். முறையாக விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியக் கண்டுபிடிப்பான சக்கரம் உருவாக்கப்பட்டது. கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களைக் கண்டெடுத்தான். பிறகு, அவற்றை உருக்கி உலோகக் கருவிகளைச் செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடைகொடுத்து உலோக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். இது, உலோகக் காலம் ஆகும்.

கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள் நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே. இடைப் பழைய கற்காலத்திலும், மேல் பழைய கற்காலத்திலும் மனிதர்கள் தொடக்கக் கால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இடைக் கற்காலத்தில் கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய கற்காலத்தில், வேளாண்மை, மண்பாண்டங்களின் வளர்ச்சி, பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. பயிர்களை அறுவடைசெய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்​டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன்முதலாக பெரும் கட்டு​மானங்கள் கட்டப்பட்டன.

பொதுவாகப் பழைய கற்காலத் தொடக்கத்தில் மக்கள் வேட்டையாடு​பவர்களாகவும் உணவு சேகரிப்போராகவும் மட்டுமே இருந்தனர். ஆண், பெண்களுக்கு இடையே சம நிலை நிலவியது. ஆண்கள் வேட்​டைக்குச் சென்றனர். உணவு சேகரிப்பு மற்றும் குழந்தைகளைக் கவனிப்பதில் பெண் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் சமமாகவே பகிர்ந்துசெய்தனர். ஆண், பெண் இருவருமே தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால், அவர்களுடைய வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது.

விவசாயம் செய்யத் தொடங்கியதும் மேய்ச்சலைப் பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றதும், உருக்கு உலைகளின் அறிமுகமும் கற்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. உலோகத்தின் பயன்பாடு அறிமுகமான பிறகு கத்தி, கோடரி, சுத்தியல், ஊசி, ஈட்டி, தூண்டில், கேடயம், கவசம், வில்அம்பு ஆகியவை செம்பு மற்றும் இரும்பைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்தக் கருவிகளின் வளர்ச்சியே மானுட வளர்ச்சியின் முதல் கட்டம். கற்காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவாகக் குகை மனிதர்கள் என்றே கூறுகிறார்கள். இது சரியல்ல. குகையில் வாழும் மனிதர்கள் என்று பொருள் தரும் ட்ரோக்லோடைட்ஸ் எனும் கிரேக்கச் சொல்லுக்கு பொந்துகளில் வசிப்பவர்கள் என்றே பொருள்.

கற்கால மனிதர்களில் பெரும்பான்மையினர் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர். எப்போதாவது சில இடங்களில் குகைகளைப் பயன் படுத்தினர். மற்றபடி ஆற்றோரங்களிலும் திறந்தவெளி​களிலும்தான் வாழ்ந்​திருக்கிறார்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என, 200-க்கும் மேற்பட்ட இடங்கள் ஐரோப்பாவில் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைவான இடங்களே குகைகள். ஆகவே, கற்கால மனிதர்கள் யாவரும் குகை மனிதர்கள் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் போன்ற​வற்றை விளக்கும் அகழ்வாய்வுக் காப்பகம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டியில் அமைந்துள்ளது. இந்தக் காப்பகத்தில், நெருப்பை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்ட சிக்கிமுக்கிக் கற்கள் மற்றும் பழங்கற்கால ஆயுதங்கள், கற்கால மனிதர்களின் தோற்றம் மற்றும் வாழ்வியல் முறைகள் சிற்ப வடிவம்கொண்ட கண்காட்சியாக இடம் பெற்றுள்ளன

ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த தடயம்கொண்ட தமிழகம் அதன் வரலாற்றுப் பெருமைகளை மறந்து முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், தடயங்கள், அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள் யாவற்றையும்  சிதைத்தும் அகற்றியும், கைவிட்ட நிலையில் வைத்துள்ளது வரலாற்றுக்குச் செய்யும் பெரும் துரோகம்.

Friday, April 26, 2013

தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா - இரண்டு ஃபீனிக்ஸ்கள்!


ஐ.பி.எல்.லில், பல கிரிக்கெட் வீரர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு வருடமும் அணி மாறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் சரியான வாய்ப்புகளும் கிடைக்காது. மரியாதையும் காற்றில் பறந்துவிடும். இப்படிப்பட்ட சூழலிலும் 2013 ஐ.பி.எல்.லில், தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களை வலுவாக நிரூபித்திருக்கிறார்கள். 

தினேஷ் கார்த்திக்:

கார்த்திக்கின் திறமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கூட உணரவில்லை. முதலில் தில்லி அணிக்காக ஆடினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2011ல் நடந்த ஏலத்தில் ரூ. 4.77 கோடிக்கு கார்த்திக்கை விலைக்கு வாங்கியது பஞ்சாப். ஆனால், அடுத்த வருடமே மும்பை அணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டது. (ரூ. 12.4 கோடிக்கு என்று சொல்லப்படுகிறது.) அப்போது, மும்பை அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. கார்த்திக் உள்ளே நுழைந்தவுடன் மும்பை அணி பீமபலம் கொண்டதாகிவிட்டது. சச்சின் அணியில் கார்த்திக் மிக மரியாதையுடன் நடத்தப்பட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்றாவதாகக் களம் இறங்க அனுமதியளிக்கப்பட்டது. அவ்வளவுதான், கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இவருடையது நீண்ட நெடிய பயணம். ராகுல் டிராவிட் இனி விக்கெட் கீப்பராக நீடிக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. முடிவெடுத்தபோது இந்திய அணிக்குத் தேர்வானவர், தினேஷ் கார்த்திக். ஆனால் அந்தச் சந்தோஷம் நீண்டநாள் நீடிக்கவில்லை. புயல் மாதிரி இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து பல விக்கெட் கீப்பர்களின் வாழ்வை மாற்றினார் மகேந்திரசிங் தோனி. இதனால், தோனி ஓய்வு எடுக்கும் நேரத்தில்தான் கார்த்திக், பர்தீவ் படேல் போன்ற மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், கார்த்திக் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. பேட்ஸ் மேனாக இந்திய அணிக்குள் நுழைந்தார். 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் அவர் இடத்தைப் பிடித்தார். கார்த்திக்கின் பெரிய சாதனை, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக சாதித்தது. சமகால இந்திய ஓபனர்களில் யாருக்கும் இல்லாத பெருமை இது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்ல கார்த்திக்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனாலும், சிறிது சறுக்கினாலும் அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டதால் கார்த்திக்கின் அருமையை யாருமே உணர முடியாமல் போய்விட்டது. கூடவே கார்த்திக்கின் கீப்பிங் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதிர்ஷ்டத்துக்காக தன் பெயரில் கூடுதலாக a, c ஆகிய எழுத்துகளைச் சேர்த்துப் பார்த்தார். எதுவுமே கைகூடவில்லை. நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்த ஐ.பி.எல்.லிலும் நிரந்தரமாக ஓர் அணியில் நீடிக்க முடியாமல் போனது. விளைவு, இந்திய கிரிக்கெட்டின் எந்தவொரு திட்டத்திலும் இல்லாமல் போனார்.

இந்த ஐ.பி.எல்., கார்த்திக்கின் ஐ.பி.எல். கார்த்திக்கின் ஆட்டம் fearless cricket என்பதையொட்டி இருந்தது. அதாவது, தன்னுடைய அணி எந்தச் சூழலில் இருந்தாலும், எதிரணிக்கு அடுத்த வாய்ப்பை அளிக்காமல், இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய ஆதிக்கத்தைத் தன் ஆட்டத்தால் நொறுக்க வேண்டும். ரிச்சர்ட்ஸின் ஆட்டம் எப்போதும் இப்படித்தான். 1996 செமி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக அர்விந்த் டிசில்வா ஆடியதும் fearless cricket தான். கடந்த ஒரு வருடத்தில், தன்னுடைய ஆட்டத்தையும் அணுகு முறையையும் வெகுவாக மாற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜாம்பவான்கள் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், டாப் ஸ்கோரராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது, தன் கீப்பிங்கிலும் நிறைய மாற்றம் செய்திருக்கிறார். ‘ஆனால், அதை நிரூபிக்க முடியாமல் இருக்கிறேன்,’ என்கிறார் கார்த்திக். ‘விக்கெட் கீப்பிங்கில் தவறு செய்யாமல் இருப்பதற்காக நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பேட்ஸ்மேன் தாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டதை நிரூபிக்க முடியும். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் என்னுடைய முன்னேற்றத்தைக் காண்பிப்பது சிரமம். அதை மற்றவர்கள் உணர்வது சுலபமல்ல’ என்கிறார். சச்சின், பாண்டிங், ரோஹித் சர்மா, பொலார்ட் உள்ள ஓர் அணியில் நிகரற்ற நட்சத்திரமாகத் திகழ்வது மிகக்கடினம். கார்த்திக் அதைச் சாதித்திருக்கிறார்.

அமித் மிஸ்ரா:

அடுத்த கும்ப்ளேவாக வளர்ந்திருக்க வேண்டியவர். முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்தவர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கே அமித் மிஸ்ரா என்று தேட வேண்டிய நிலைமை. இப்போது, மிஸ்ராவுக்கும் இந்த ஐ.பி.எல். பெரிய திருப்புமுனை.

மிஸ்ரா, முதலில் தில்லி அணியில் ஆடினார். பிறகு, டெக்கான் ஹைதராபாத் அணிக்கு மாறினார். இப்போது புதிய ஹைதராபாத் அணியான சன் ரைஸர்ஸின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். 2008, 2011ல் ஐ.பி.எல். ஹாட்ட்ரிக் எடுத்த மிஸ்ரா, இந்த ஆண்டும் இன்னொரு ஹாட்ட்ரிக் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல்.லில், மூன்று முறை இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை. 

மிஸ்ராவுக்கு 30 வயதாகிவிட்டது. மிகக் குறைந்த டெஸ்ட் (13) மற்றும் ஒருநாள் ஆட்டங்களில்தான் (15) ஆடியிருக்கிறார். 2003ல் இந்திய அணி ஒருநாள் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து வாழ்வா சாவா நிலைமைதான். முதல் டெஸ்டிலேயே தன்னை நிரூபித்தாலும், அடிக்கடி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பாதிப்புக்குள்ளானார். ஆனால், ஐ.பி.எல்.லில் தொடர்ந்து தம்மை நிரூபித்துக் கொண்டிருந்தார். இந்த வருட ரஞ்சிப் போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரமாதப் படுத்திவிட்டார். ஒரு டபுள் செஞ்சுரி உள்பட. இதனால், சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். லில், கூக்ளி, டாப் ஸ்பின், ஃப்ளிப்பர் என்று விதவிதமாகப் பந்து வீசி எதிரணியினரைத் திணறடித்து வருகிறார்.

இந்திய அணியில் அஸ்வின், ஓஹா, ஜடேஜா என்கிற வலுவான ஸ்பின் கூட்டணி அமைந்த பிறகும் முட்டிமோதுகிறார் மிஸ்ரா. கும்ப்ளேவுக்குப் பிறகு இந்திய அணியில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லை. இந்தக் குறையை மிஸ்ராதான் தீர்க்கவேண்டும். 

ஐ.பி.எல்.லுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கும் அமித் மிஸ்ராவும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
 

தங்கத்தின் வீழ்ச்சி நிரந்தரமா? வி.கோபாலன்

சென்ற ஒரு வார காலமாக தமிழ்ப் புத்தாண்டையொட்டி தங்கத்தின் விலை கிடுகிடுவென்று இறங்கிக் கொண்டே வருகிறது. சுமார் 4 நாட்களுக்குள் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ரூபாய் 350-க்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. இதனால் ஒரு பவுன் தங்கம் (8 கிராம்) ரூபாய் 2800-க்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. சென்ற ஜனவரி விலை நிலவரத்துடன் ஒப்பிட்டால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று சுமார் 470 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 18.4.2013 அன்று ரூபாய் 19,400. ஒரு கிராம் விலை ரூபாய் 2425.

ஒரு வார காலக்கெடுவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி சமீபகாலத்தில் கண்டிராத அளவுக்கு இருக்கிறது. சென்ற பத்தாண்டுகளாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகத்தான் இருந்து கொண்டிருந்தது. எப்போதாவது விலை குறைந்தாலும் அது சிறிய அளவில்தான் இருந்தது. கிராமுக்கு சுமார் 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைதான் குறைந்தது. தங்கத்தின் விலை ஏறுமுக மாகவே இருந்தது என்பதற்கு இதோ ஒரு புள்ளி விவரம்:

ஆண்டு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் சராசரி விலை

ஆண்டு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் சராசரி விலை


இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ந்ததுதான் காரணம். எப்படி?

சென்ற பத்து நாட்களில் உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 250 அமெரிக்க டாலர் குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1670 டாலரிலிருந்து 1420 டாலராகக் குறைந்திருக்கிறது. (ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 30 கிராம்) சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியினால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை ரூபாய் அளவில் குறைந்திருக்கிறது. இதுதான் முக்கியக் காரணம். சரி, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

1. அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு நல்ல திருப்புமுனையைக் கண்டுவிட்டது. சென்ற சில மாதங்களாக அமெரிக்கப் பொருளாதாரம் ஏறுமுகமாகவே இருக்கிறது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்த பல நாடுகள் மீண்டும் அமெரிக்க டாலரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த நாடுகளில் தங்கத்தின் முதலீடு குறைந்து விட்டது.

2. ஐரோப்பாவிலுள்ள சில நாடுகள் மிகுந்த பொருளாதாரச் சிரமத்திலிருந்து விடுபடுவதற்காக தங்கள் கையிருப்பு தங்கத்தில் ஒரு பகுதியை விற்கத் தொடங்கி விட்டன.

3. ஜப்பானின் பொருளாதாரம் சில ஆண்டுகளாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. அதைத் தலைநிமிரச் செய்ய 1400 பில்லியன் டாலரை தன் பொருளாதார வளர்ச்சிக்குச் செலவிட ஜப்பான் தீர்மானித்திருக்கிறது. அதற்காகத் தன்னிடமுள்ள தங்கத்தில் ஒரு அளவை விற்பனை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது ஜப்பானுக்கு!

4. சென்ற சில மாதங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பரஸ்பர நிதிநிறுவனங்கள் (Mutual Funds) உறுப்பினர்களின் சேமிப்புத் தொகையை தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தீர்மானித்து விட்டன. இதனால் அந்தப் பரஸ்பர நிதிநிறுவனங்கள் தங்களிடம் உள்ள தங்கத்தைப் பெரிய அளவில் விற்கத் தொடங்கியிருக்கின்றன.

சாதாரணமாக ஒரு பொருளின் விலை குறைவதற்கு முக்கியக் காரணம் அந்தப் பொருளின் உற்பத்தி அளவு அதிகரிப்பதால். ஆனால், தங்கத்தைப் பொறுத்த வரை உலக அளவில் மொத்தம் வெட்டி எடுக்கப்படும் தங்கம் ஆண்டொன்றுக்கு சுமார் 3000 டன்தான். இந்த அளவில் பெரும் மாற்றம் கிடையாது. 

தங்கத்தின் விலை இந்த அளவு குறைந்திருக்கிறதே! இன்னும் குறையுமா?" என்பது எல்லோரும் சாதாரணமாக எதிர்பார்ப்பதுதான். ஆனால் இந்த அளவு தங்கத்தின் வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதார அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு அசாதாரணச் சூழ்நிலைதான் காரணம். இந்த அசாதாரணச் சூழ்நிலை நிரந்தரமானதல்ல. அதனால் மேலும் தங்கத்தின் விலை அதிக அளவு குறைய வாய்ப்பில்லை. அநேகமாக இப்போதைய விலை நிலவரம் அதே அளவில் (சற்றே கூடிக் குறைந்து) இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடும்.

இந்த விலைச் சரிவை பயன்படுத்திக் கொண்டு தங்கம் வாங்கலாமா?" - அவசியமான நிகழ்ச்சிகளுக்கு - கல்யாணம் உட்பட வாங்கலாம்.

அடுத்த சுமார் 8 அல்லது 9 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ஏறக்கூடும்.



அருள்வாக்கு - நிறைவு!


ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றைவிட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம் கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது. இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்குக் கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறது. பிராணிகளுக்கு நம்மை விடக் குறைவு. நம்மைவிட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன. நம்மிலேயே மஹான்களானவர்கள் மகாஞானிகளாக, பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை பூரணமாக நிறைந்த இடத்தைத்தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்வது.

எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது; அறிகிறது மட்டுமில்லை. அறியப்படுகிற எல்லாமுமே அதுதான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை. அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்துவிட்டால், இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால்கூடச் சரி, இதற்குக் குறைதான் - இது அந்தத் துளியில் இல்லாததால் இது பூரணமில்லை; நிறைந்த ஒரே நிறைவில்லை என்றுதானே அர்த்தம்? இதனால் என்ன முடிவாகிறது என்றால், பரமாத்மாவைத் தவிர அறியப்படுகிற வஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது என்பதுதான்.

அப்படியானால் இத்தனை ஜீவாத்மாக்கள் வேறு வேறாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே இது என்ன? இது ஒரு பெரிய வேஷம்தான், மாயா நாடகம்தான். வேஷம் கலைந்துவிட்டால், நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்றுதான். அதுவே அறிவாக நிற்கும். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிற அறிவு! அது பூரணமானதால், அதனால் அறியப்பட வேண்டிய வஸ்து என்று வேறு எதுவுமே இல்லை. தன்னையே அறிந்து கொண்டிருக்கிற அறிவு அது.

இப்படி இரண்டாவதாக வேறே இல்லாமல் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்ம சமுத்திரத்தில் கொண்டு போய்க் கரைப்பதுதான் வாஸ்தவமான நிறைவு.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பாதகம் செய்பவரைக் கண்டால்... ஞாநி


அண்மையில் ‘கார்டியன்’ ஆங்கில இதழில் வந்த ஒரு கட்டுரையை ஃபேஸ்புக் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தினசரி செய்திகளைப் படிக்காமல், பார்க்காமல், கேட்காமல் இருந்தால் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று வாதாடுகிற கட்டுரை அது. ஏனென்றால் பெரும்பாலான செய்திகள் எந்த விதத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவக் கூடியவையே அல்ல. மேலும் குழப்பக் கூடியவையே என்பதே அந்தக் கட்டுரையாளர் ரோல்ஃப் டெபெல்லியின் வாதம்.

அறியாமையே ஆனந்தம் (ignorance is bliss) என்பது ரொம்பப் பழமையான ஒரு கருத்து. அறியத் தொடங்கினால் பல சந்தோஷங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. நாம் சந்தோஷம் என்று அதுவரை அறிந்திருந்த பலவும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானவை அல்ல என்று புரியத் தொடங்கிவிடுகிறது. எனவே எதையும் அறியாமலே ஆனந்தமாக இரு என்று அந்தப் பழமொழி சொல்கிறது.

அறியத் தொடங்கத் தொடங்க ஆனந்தம் குறைவது உண்மைதான். ஆனால் மெய்யான மகிழ்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் கூடுகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி செய்தித்தாட்களைப் பார்க்காமல் இருந்திருந்தால் நானும் நிச்சயம் சந்தோஷமாக இருந்திருக்கக்கூடும். பார்த்ததில் நிச்சயம் மகிழ்ச்சி குறைந்துவிட்டது. கவலையும் கோபமும் வேதனையும் கேள்விகளுமாக மனம் நிரம்பியிருக்கிறது.

தில்லியில் காந்தி நகரில் ஐந்து வயது சிறுமியை அண்டை வீட்டுக்காரர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். அவள் பிறப்புறுப்புக்குள் மெழுகுவர்த்தி, எண்ணெய் புட்டியை எல்லாம் நுழைத்து அவளைக் கொடுமைப்படுத்தினார்கள் என்று படிக்கும் போதே அழாமல் இருக்க முடியவில்லை. பிடிபட்டவன், ‘நான் செய்யவில்லை. நானும் என் நண்பனுமாக மது குடித்தோம். அவன் தான் எல்லாம் செய்தான்’ என்று சொன்னதையடுத்து நண்பனை பீகாரில் போய் கைது செய்திருக்கிறார்கள். குழந்தையை இரண்டு நாட்களாக வீட்டில் தேடியிருக்கிறார்கள். அதே கட்டடத்தில் இன்னொரு அறையில் அந்தச் சிறுமி அடைத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறாள்.

இதே வாரம் அலிகாரில் ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு இறந்து போய் அவள் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கிறது.

‘அமைதிப் பூங்கா’வான நம் தமிழ்நாட்டில் திருப்பூரில் எட்டு வயதுச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டு 23 வயது இளைஞர் அவளிடம் வந்து சோறு கேட்டு, அவள் சோறு பரிமாறுகையில் அறையைப் பூட்டி விட்டு அவளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். கோவையில் பிப்ரவரி மாதத்தில் காணாமல் போன 13 வயதுச் சிறுமியை பெங்களூருக்குக் கடத்திச் சென்றவன் திரும்ப அழைத்து வந்தபோது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறாள். இரு மாதங்களாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் இருக்கிறாள்.

இந்த நிகழ்ச்சிகள் எதையும் காவல்துறையால் நடக்காமல் தடுக்க முடியாது என்பது உண்மைதான். தில்லி காவல்துறை தலைவர் நீரஜ் குமார் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். பொது இடங்களில் எந்த நேரத்திலும் பயமின்றி நடமாட முடியக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் காவல் துறையின் பொறுப்பு. (அதை அது சரியாகச் செய்வதில்லை என்பதைத்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் காட்டியுள்ளன.) தனியே அவரவர் வீடுகளில், அறைகளில் நடக்கும் கொடுமைகளை காவல்துறை முன் கூட்டி என்ன செய்தும் தடுக்கமுடியாது. சரி.

ஆனால் புகாருடன் போலீசிடம் பொதுமக்கள் வரும்போது போலீஸ் எப்படி நடந்து கொள்கிறது என்பதுதான் முக்கியம். தில்லிச் சிறுமி விஷயம் தொடர்பாக அவள் குடியிருப்பைச் சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பங்கேற்ற ஒரு பெண்ணை, காவல்துறை துணை ஆணையர் கன்னத்தில் அறைந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி முதலில் புகாரைப் பதிவு செய்யவே போலீஸ் விரும்பவில்லை. சிறுமி வீட்டாரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவளைக் கவனித்துக் கொள்ளும்படியும் விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்றும் காவலர்கள் சொன்னதாக சிறுமியின் அப்பாவான கட்டடத் தொழிலாளி புகார் கூறியிருக்கிறார். இவையெல்லாம் மீடியாவில் வந்ததால் தவறு செய்த அதிகாரி இடைநீக்கமேனும் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் காவல்துறையை அடியோடு சீர்திருத்தி அமைத்தால் ஒழிய அது தடுக்கக்கூடிய குற்றங்களைக் கூட அதனால் தடுக்க முடியப் போவதுமில்லை. மக்களின் நம்பிக்கையை அது அடையப் போவதுமில்லை. என்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ஏராளமான பரிந்துரைகள் பல்லாண்டுகளாக அரசுக் கோப்புகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
பொது இடத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைகளைத் தடுக்கவும் குறைக்கவும்தான் போலீஸ் தேவை. ஆனால் வீட்டுக்குள், குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகளை எப்படித் தடுப்பது? யார் தடுப்பது?

நாம்தான் தடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் சுமார் 90 சதவிகிதம் அவர்களுக்குத் தெரிந்தவர்களால் தான் செய்யப்படுகிறது. அன்னியர்கள் பத்து சதவிகிதம்தான். பாலியல் வன்முறைக்கு உள்ளாவோர் பற்றிப் பொதுபுத்தியில் பல தவறான கருத்துகள் இருக்கின்றன. அதில் ஒன்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்முறை நடக்கிறது என்பதாகும். ஆறு வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசின் குழந்தைகள் நலத்துறை நடத்திய ஆய்வில் மொத்தக் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று தெரியவந்தது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆண் குழந்தைகள். பாதிக்கப்பட்டோரில் பெண் குழந்தைகள் 47 சதவிகிதம்.

உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையே அதிகம். சுமார் 60 சதவிகிதம் கொடூரர்கள் நெருங்கிய உறவினர்கள்தான். அண்மைக் காலமாக ஃபேஸ்புக்கில் ஒரு சினிமா விளம்பர வாசகத்தைப் பலரும் புல்லரித்துப் போய் லைக் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், ‘முத்தம்’ காமத்தில் சேர்ந்தது இல்லையென்று," என்ற இந்த வாசகம் படத்தில் வரும் அப்பா பாத்திரத்துக்கு வேண்டுமானால் பொருந்தக்கூடும். ஆனால் அசல் வாழ்க்கையில் எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தாது. கடந்த சில மாதங்களுக்குள்ளேயே மூன்று சம்பவங்கள் தமிழ்நாட்டில் செய்தியாக வெளியிடப்பட்டன. மூன்றும் அப்பாக்கள் தங்கள் மகள்களான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்தது தொடர்பானவைதான். இதேபோல அம்மா - மகன் தகாத உறவுப் பிரச்னைகள், பாலியல் வன்முறைகள் எல்லாம் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் கண்ணை மூடிக்கொண்டுவிடுவதால் இவை இல்லாமல் போய்விடுவதில்லை. கார்டியன் கட்டுரையாளர் நம்மைக் கண்ணை மூடிக்கொள்ளச் சொல்கிறாரா? இல்லை. திறக்கவேண்டியதற்கு மட்டும் கண்ணைத் திறக்கக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.

ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதும் நம் மீடியா, பத்திரிகைகள் பெரும்பாலும் எழுப்பும் கூக்குரல் எல்லாம் ஆளுங்கட்சி, அரசு, போலீஸ் சார்ந்த எதிர்ப்பாக மட்டுமே முடிந்துவிடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறது.

ஆனால் அசல் பிரச்னை இன்னும் ஆழமானது. அதில் எல்லா கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த அசல் பிரச்னையின் வேர்களைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதைப் பார்க்கச் செய்வதுதான் இதழியலின் நியாயமான பணி.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. குழந்தையிடம் நிஜமான அன்பு உடையவர்களிடம் இதைக் கற்பிப்பதை பிரசவம் முடிந்ததும் மருத்துவமனையிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது. தன்னிடம் பேட்டச் செய்பவர் உறவினரானால் வீட்டுக்கு வேண்டியவர், நெருக்கமானவர், ஆசிரியரானால் அதிகாரம் உடையவர் என்பதெல்லாம் குழந்தையை பயப்படுத்தும் அம்சங்கள். அச்சம் தவிர் என்று குழந்தைக்குச் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. நம்முடைய குடும்ப அமைப்பிலும் கல்வி அமைப்பிலும் இப்போது இதற்கெல்லாம் இடமே இல்லை. அதைப் பற்றித் தான் மீடியா விவாதிக்க வேண்டும். காவலர் பயிற்சித் திட்டத்தில் இதைப் பற்றிச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம், கைதான கொடூரர்களில் பலர் திரும்பத் திரும்பச் சொல்வது - நான் மது குடித்திருந்தேன் என்பதாகும். அப்படியானால் மதுவைப் பற்றி நம் சமூகத்தின் பார்வை என்ன, அரசின் கொள்கை என்ன என்று நாம் தெளிவுக்கு வர வேண்டும். பக்குவமற்ற நம் சமூகத்தில் பூரண மதுவிலக்கே தீர்வு என்று கோரும் என் போன்றோரின் கருத்தை ஏற்காதவர்கள், மதுவின் ஆபத்திலிருந்து நம் குழந்தைகளையும் அவர்களுக்குக் கொடுமை செய்யப் போவோரையும் காப்பாற்ற வழிகள் என்ன என்றாவது கண்டறிந்து விவாதிக்க வேண்டும்.

உயிருக்கே ஆபத்து என்ற அளவுக்கு பாலியல் வன்முறை செய்யப்பட்ட குழந்தைகள் பற்றிய செய்திகள் மட்டுமே நம் கவனத்துக்கு வருகின்றன. ஆனால் சின்னச் சின்னதாகத் தொடர்ந்து பல பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகும் பல குழந்தைகள் அதைப் பற்றிப் பேச பயப்பட்டுச் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் அடிமனத்தில் இருக்கும் பயமும் வேதனையும் அவர்கள் நடத்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த அறிகுறிகளைப் புரிந்து கொண்டு குழந்தைக்கு உதவ குழந்தையிடம் மெய்யான அன்புடைய ஆசிரியர்களுக்கோ பெற்றோருக்கோ கற்பிக்க வேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று மீடியா விவாதிக்க வேண்டும். நடைமுறைக்குத் தோதான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் இந்தக் கல்வி நடக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போது மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதாவது 40 கோடி குழந்தைகள். அத்தனை குழந்தைகளும் உள்ளுக்குள் பயத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தப் போகிறோமா? அல்லது அச்சமின்றி தன்னால் தனக்கு வரும் சவால்களைச் சந்திக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோமா?


ஒரு திருத்தம்: சென்ற வாரக் கட்டுரையில் : கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் (சுமார் 1800 கோடி இந்திய ரூபாய்) கண்ணி வெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்" என்பதை 400 கோடி இந்திய ரூபாய் என்று திருத்திப் படிக்கவும். கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் (சுமார் 2500 இலங்கை ரூபாய்)" என்பதை 25 ஆயிரம் இலங்கை ரூபாய் அல்லது 12500 இந்திய ரூபாய்" என்று திருத்திப் படிக்கவும். இலங்கை ரூபாயைப் போல இரு மடங்கு அதிக மதிப்புள்ளது இந்திய ரூபாய்.



Thursday, April 25, 2013

கணித மேதை சகுந்தலா தேவி.

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிளேயர்களையும் தாண்டி 'ரோல் மாடல்’களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி. ஆனால், அவர் இப்போது நம்மிடையே இல்லை!
 
'ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவியிடம், 13 இலக்க எண்ணை இன்னொரு 13 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால், அதற்கான விடையைச் சொல்ல அவருக்கு ஒரு சில விநாடிகளைத் தவிர பென்சில், தாள், கால்குலேட்டர் என எதுவும் தேவைப்படாது.
 
சுமார் 33 வருடங்களுக்கு முன்பு... அதாவது கணினி என்பது பிரமாண்ட அளவுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கூடங்களில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், சகுந்தலா தேவியை லண்டன் மாநகரின் இம்பீரியல் கல்லூரிக்கு அழைத்தார்கள் பேராசிரியர்கள். அவரிடம் 201 இலக்கங்களைக்கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதன் 23-வது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். 28 விநாடிகளில் சகுந்தலா பதில் சொல்ல, வாயடைத்துப்போனார்கள் அந்தப் பேராசிரியர்கள்.
 
 
அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, சிறுமியாக இருக்கும்போது சீட்டுக்கட்டுகளில் இருக்கும் 52 அட்டைகளை வைத்துப் பல வித்தைகளைக் காட்டினார். அந்த வித்தைகள் அனைத்துக்கும் கணிதம்தான் அடித்தளம் என்பதைத் தாண்டி சகுந்தலாவின் தந்தையால் அவரது பெண்ணின் திறமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சகுந்தலாவை நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கக்கூட இயலவில்லை அவரால்.
 
ஏழ்மைக்கு இடையிலும் தன்னார்வத்தோடு தன் முயற்சிகளைப் பட்டை தீட்டியபடியே இருந்தார் சகுந்தலா. ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார்.அசந்து போன ஐன்ஸ்டீன், சகுந்தலாவின் திறமையைப் பாராட்டிச் சான்றிதழும் அளித்திருக்கிறார்.
 
ஆனால், காமதேனுவே கிடைத்தாலும் அதை காராம்பசுவாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நம் நாடு, சகுந்தலா தேவியை ஒரு ஜோசியக்காரராக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. மனக்கணக்காகவே எப்படி அவ்வளவு பிரமாண்டக் கணக்குகளை சகுந்தலா தீர்க்கிறார் என்பதை சகுந்தலாவிடமிருந்து கடைசி வரை தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கடந்த வாரம் பெங்களூரில் மரணமடைந்த சகுந்தலாவுடனேயே, அவரது மனக்கணக்கிடும் திறமையும் மரித்துவிட்டது!

Wednesday, April 24, 2013

எனது இந்தியா (கல்லாயுதங்கள் !) - எஸ். ரா

வரலாற்றின் பணிகளில் ஒன்று, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவது. முறையான பதிவேடுகள், சான்றுகள் இல்லாத கற்காலத்தை அறிந்துகொள்ள நம்மிடம் இருப்பவை கல்லாயுதங்கள் மற்றும் குகை ஓவியங்கள் மட்டுமே. உலகின் முதல் ஆயுதங்களில் ஒன்று கல். கற்கால மனிதர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டுதான் வேட்டையாடி இருக்கின்றனர். பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் தமிழகத்தில் பல்லாவரம், காஞ்சிபுரம், தர்மபுரி மற்றும் குடியம் குகைப்பகுதியைச் சுற்றி 30க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ள கல்லாயுதங்​களைக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பூமியில் எந்த இடங்களில் வாழ்ந்தனர், எப்படி வேட்டை​யாடினர் என்பதை மீள்ஆய்வு செய்கின்றனர். அப்படி ஆய்வு செய்யப்படும் ஆய்வியல் களங்களில் மிகமுக்கியமானது தமிழகம். அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றிய பகுதிகளும் தர்மபுரி மாவட்டத்து மலைப்பகுதிகளும்தான். இங்கே கிடைத்துள்ள பழங்கற்கால ஆயுதங்களை ஆராயும்போது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பகுதியில் மக்கள் வாழ்ந்தது தெரியவருகிறது. பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடுமுரடான கற்களை, வேட்டையாடப் பயன்படுத்தினர். பெரிய குவார்ட்சைட் பாறைகளை நெருப்பால் சூடாக்கிய பிறகு, அதன் மீது நீரை ஊற்றிப் பிளந்து ஆயுதங்கள் செய்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படியாக, கூழாங்கற்களாலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களை உடைத்து, சிறிய ஆயுதங்களாக மாற்றி இருக்கின்றனர். பின்னாளில் கல்லாயுதங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.


இன்றும் சென்னை மியூசியத்தில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்களைப் பார்க்கலாம். இவை, ராபர்ட் புரூஸ் புட் என்பவர் சேகரித்தவை. இவர், சென்னை நகரில் நிலவியல் ஆய்வாளராகப் பணியாற்றியவர். இந்திய நிலவியல் ஆய்வுகளின் தந்தை எனப்படும் ராபர்ட் புரூஸ், 1863-ல் சென்னையில் பல்லாவரம் அருகே கைக்கோடரி ஒன்றைக் கண்டுபிடித்தார். தனது நிலவியல் ஆய்வின் போது தற்செயலாகப் பார்த்த அந்தக் கல்லாயுதம் தனது வாழ்க்கையைப் புரட்டிப் போடப்போகிறது என்று ராபர்ட் புரூஸ் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தக் கல்லாயுதம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறிய முயன்ற அவரது ஆய்வு, இந்தியாவின் பழங்கற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அவரது ஆய்வுப்படி அந்தக் கோடாரி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது. இந்தக் கண்டுபிடிப்புதான், பழங்கற்கால ஆயுதங்கள் குறித்த புரூஸின் தேடுதல்களுக்கான முதல் புள்ளியாக அமைந்தது.

1834-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள செல்டன்ஹாமில் வசித்த வில்லியம் ஹென்றி புரூஸ் மற்றும் சோபியாவின் மகனாகப் பிறந்தார் ராபர்ட் புரூஸ். இளவயதில் இருந்தே பாறைகளை ஆராய்வதில் ஆர்வம்கொண்டிருந்த ராபர்ட், இதற்காகவே நிலவியல் ஆய்வுகள் குறித்த படிப்பைத் தேர்வுசெய்து படித்தார். 1858-ம் ஆண்டு இந்தியாவில் இயங்கிய கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய நிலவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றத் தேர்வுசெய்யப்பட்டு ராபர்ட் புரூஸ் கல்கத்தா வந்து சேர்ந்தார்.

இந்தியாவை ஆட்சிசெய்துவந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், இந்தியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாகக் கனிமங்களைக் கண்டறிவதில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இதுபோலவே படை நடத்திச் செல்லும் வழி, மற்றும் குடிநீர் நிலவரம் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு நிலவியல் ஆய்வுகளை நடத்தினர். இந்திய ஆய்வுப் பணியின் தலைவராக இருந்தவர் தாமஸ் ஆல்ட்ஹெம். இவருக்குக் கீழே 12 பேர் கொண்ட குழு இருந்தது. அதில் ஒருவராக இணைந்தார் ராபர்ட் புரூஸ். இந்தியா குறித்து வாசித்து மட்டுமே அறிந்திருந்தவருக்கு, இந்திய மண்ணின் வேறுபட்ட நிலவியல் அமைப்புகள் மற்றும் இந்தியாவின் மிகையான வெக்கை, விசித்திரமானதொரு மனநிலையை உருவாக்கியது. நிலவியல் களங்களைத் தேடிச்சென்று நேரடியாக ஆய்வுசெய்த ராபர்ட் புரூஸ் பாறை அடுக்குகளின் இயல்பு குறித்து நிறையத் தகவல்களைத் திரட்டினார்.

மதபோதகர் பீட்டர் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆன் - ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு 1862-ல் திருமணம் நடந்தது. பெர்சிவல், யாழ்ப்பாணம் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். தேர்ந்த தமிழ் அறிஞர். பைபிள் மொழியாக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்தவர். பைபிளை மொழியாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த ஆறுமுக நாவலருடன் நட்பாக இருந்தவர். இலங்கையில் இருந்து மதறாஸ் வந்த பெர்சிவல், பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு ராபர்ட் புரூஸுடன் ஏற்பட்ட நட்பு, இந்தியாவின் தொன்மை குறித்த ஆய்வுகளின் வழியேதான் நடந்தேறியது, எலிசபெத்துடன் வாழ்ந்து நான்கு குழந்தைகளின் தந்தையானார் ராபர்ட் புரூஸ். எட்டு ஆண்டுகள் ராபர்ட்டுடன் வாழ்ந்த எலிசபெத் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தபோது, நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு தடுமாறினார் ராபர்ட் புரூஸ். ஆகவே, தன்னையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள எலிசா வெல்ஸ் என்ற இளம்பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். மெட்ராஸ் சர்வே பார்ட்டி எனப்படும் ராபர்ட் புரூஸின் ஆய்வுக் குழு, வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்களது நிலவியல் ஆய்வுப் பணிகளை நடத்தியது. இதில் பிளைன்போர்ட், ஆல்ட்ஹெம், வி.கிங், ஜியோகான் ஆகியோர் தனித்துவமிக்க நிலவியல் ஆய்வாளர்களாக விளங்கினர்.  
ராபர்ட் புரூஸ் மற்றும் கிங் இருவரும் பாறைகளை ஆய்வுசெய்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக, பல்வேறு பாறைப் படிவுகளைச் சேகரித்து, அவற்றின் காலம் மற்றும் தன்மை குறித்து நுட்பமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்காக சேலம், ஆற்காடு, சென்னை, நெல்லூர், கடப்பா, கர்நூல், கிருஷ்ணா பகுதிகளில் ராபர்ட் புரூஸ் அலைந்து திரிந்து நிலவியல் கூறுகளைத் துல்லியமாக ஆராய்ந்தார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல்லாவரம் பகுதியில் பாறைப் படிவங்​களை ஆராயும்போதுதான் ராபர்ட் புரூஸுக்கு கல்லால் ஆன கோடரி ஒன்று கிடைத்தது. அது, என்ன விதமான பொருள் என்று தெரியாமல் அதைச் சேகரித்துக் கொண்டுவந்தவர், தன்னிடம் இருந்த ஆய்வியல் வரைபடங்களைக்கொண்டு அது கற்கால ஆயுதம் என்பதை அறிந்தார். அந்த ஆயுதம் கிடைத்தவுடன், கற்காலச் சின்னங்கள் வேறு எதுவும் அந்தப் பகுதியில் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்.  அவரும் கிங்கும் இணைந்து அதிராம்பாக்கம் பகுதியில் அகழ்வாய்வு செய்தனர். அங்கு, பல்வேறு கல்லாயுதங்களைக் கண்டெடுத்தனர். அந்த ஆயுதங்களைக்கொண்டு அங்கே பழங்கற்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்த ராபர்ட் புரூஸ் புட், அதன் வயது ஐந்து லட்சம் ஆண்டுக்கு முற்பட்​டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் தொன்மை குறித்த புதிய வெளிச்சம் ஒன்றை உருவாக்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பழங்கற்காலத்தைய வாழ்வைத் தேடும் ஆய்வின் ஒரு பகுதியாக இது மாறியது. ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பியாவில் நடந்த அகழ்வாய்வில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மற்றும் கல்லாயுதங்கள் கிடைத்திருப்பதை அறிந்த ராபர்ட் புரூஸ், இந்தியாவிலும் அதுபோன்ற தொன்மையான மனிதக் குடியிருப்புகள் எந்த இடங்களில் இருந்திருக்கக்கூடும் என்று தேடுவதற்காக தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

இன்று, கற்காலத்தை அறியும் ஆய்வு மிகப் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. ஆனால், ராபர்ட் புரூஸ் காலத்தில் அதற்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக, கிழக்கிந்தியக் கம்பெனி இதுபோன்ற ஆய்வுகளால் தங்களுக்குப் பிரயோஜனமில்லை என்று, அவரது கண்டுபிடிப்புகளைப் புறம்தள்ளியது. ஆனாலும் மனச்சோர்வு அடையாமல் தனது ஆய்வுப் பணியைத் தொடர்ந்த ராபர்ட் புரூஸ், 33 ஆண்டுகள் நிலவியல் அறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பிறகு, மூன்று ஆண்டுகள் பரோடா அரண்மனையில் அரசு நிலவியல் அறிஞராகவும், மூன்று ஆண்டுகள் மைசூர் அரண்மனையில் நிலவியல் அறிஞராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர், தனது முதுமையைக் கழிக்க ஏற்காட்டில் வசித்தார். கல்கத்தாவில் மரணம் அடைந்த ராபர்ட் புரூஸின் உடல் ஏற்காட்டில் அடக்​கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது கல்லறையும் அவரது மா​மனார் மதபோதகர் பெர்சிவலின் கல்ல​றையும் ஏற்காட்டில் சமீபத்தில் கண்டறியப்​பட்டுள்ளது.

Tuesday, April 23, 2013

உங்க லேப்டாப், கேமராவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா..?

நாம் வைத்திருக்கும் இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளுக்கு மட்டுமல்ல, நம்மிடம் இருக்கும் கேமரா, லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற எந்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். இந்த இன்ஷூரன்ஸை எப்படி எடுப்பது? அதற்கான பிரீமியம் எவ்வளவு? எந்தச் சூழ்நிலைகளில் க்ளைம் கிடைக்கும்? க்ளைம் செய்யும்போது சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
 
'நம்மிடம் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது அல்லது திருடு போகும்போது ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ்தான் எலெக்ட்ரானிக் எக்யூப்மென்ட் இன்ஷூரன்ஸ். இந்த இன்ஷூரன்ஸை இரண்டு வழிகளில் பெறமுடியும். ஒன்று, பொருட்களின் அனைத்து ரிஸ்க்குகளுக்கும் சேர்த்துப்பெறலாம்; மற்றொன்று, தேவையைப் பொறுத்து பொருளின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் பெறக்கூடிய ஸ்பெஷல் கன்டின்ஜென்ஸி பாலிசி முறை. (கேமரா மற்றும் லேப்டாப்புக்கு மட்டும்)

எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும்?

''கேமரா மற்றும் கேமரா லென்ஸுகளுக்கு சிராய்ப்பு ஏற்பட்டால் க்ளைம் கிடைக்காது. (இது அனைத்து வகையான எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்.) அதேபோல ஜூம் லென்ஸ் செயல்படாமல் நின்று விடுவது  போன்ற விஷயங்களுக்காக க்ளைம் கிடைக்காது. கேமரா உடைந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விபத்துகளால் பெரிய அளவில் சேதமானாலோ க்ளைம் கிடைக்கும்.


கேமராவின் தரம் மற்றும் விலையைப் பொறுத்து பாலிசிகள் தரப்படுகின்றன. கேமராவின் விலையைப் பொறுத்து அதற்கான இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதே விதிமுறைகள்தான் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற மற்ற எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும்.

கம்ப்யூட்டருக்கு  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, இன்ஷூரன்ஸ் விண்ணப்பத்தில் தரப்பட்ட முகவரியில் வசிக்கும்போது நிகழும் பாதிப்புக்கோ, திருடு போனாலோதான் க்ளைம் கிடைக்கும். மற்றொரு வீட்டில் குடி அமர்ந்த பிறகு திருடு போனாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ க்ளைம் கிடைக்காது. அதனால் இன்ஷூரன்ஸ் எடுத்தபிறகு வீடு அல்லது அலுவலகத்தை மாற்றினால் உடனே அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியபடுத்த வேண்டும்.

இனி பிரிமீயம் எவ்வளவு என்று பார்ப்போம்.

கேமரா: 

கேமராவின் விலையில் குறைந்தபட்சம் 1  முதல் அதிகபட்சம் 2.5 சதவிகிதம் வரை பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தினால் போதுமானது. இதை இப்போதைக்கு நேரில் சென்றுதான் கட்டமுடியும். கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் பணம் கட்டும் வசதி வர வாய்ப்புண்டு.  

உதாரணமாக, ரூ.25,000 மதிப்புள்ள கேமராவிற்கு 1 சதவிகிதம் பிரீமியம் கட்டவேண்டியிருக்கும். அதாவது, வருடத்திற்கு ரூ.250. அதே 5 லட்சம் மதிப்புகொண்ட கேமராவிற்கு 1.5 சதவிகிதம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, வருடத்திற்கு ரூ.7,500. அதே உலகளாவிய பாலிசியாக இருந்தால் 2 சதவிகிதம் பிரீமியம் செலுத்தவேண்டும்.

லேப்டாப்:

லேப்டாப் விலையில் 1.5 - 2.5% வரை இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். லேப்டாப் என்பது எந்த நேரத்திலும் கையில் எடுத்துச்செல்ல வாய்ப்பிருப்பதால் அதற்கான ரிஸ்க் அதிகம். இதனாலேயே அதற்கு அதிக பிரீமியம் கட்டவேண்டும். பொருட்களின் மதிப்பு, தரத்திற்கு ஏற்றாற்போல இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. கேமரா, லேப்டாப் இரண்டையும் உடன் வைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்பவராக இருந்தால் அதற்கென்று இருக்கும் சிறப்புப் பாலிசியை எடுப்பது நல்லது.

கம்ப்யூட்டர்:

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ரிஸ்க் குறைவு. அதுபோல அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் பிரின்டர், யூ.பி.எஸ்., போட்டோ ஸ்கேனர் போன்றவற்றுக்கும் சேர்த்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ரிஸ்க் குறைவு என்பதால் கட்டும் பிரீமியமும் குறைவே. கம்ப்யூட்டர் விலையிலிருந்து 0.75 - 1.5% வரை பிரீமியம் இருக்கும்.

சமர்ப்பிக்க வேண்டியவை!

இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனே இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியபடுத்த வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பொருளுக்காக க்ளைம் செய்யும்போது எஸ்டிமேட் ரிப்போர்ட், பழுது பார்க்கப்பட்டதற்கான ரசீது, விபத்துக்கு உள்ளாகி இருந்ததால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். நகல் மற்றும் பொருள் தொலைந்து போயிருந்தால், அந்தப் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் நிலையம் அளிக்கும் சான்றிதழ் போன்றவற்றுடன் சமர்ப்பிக்கவேண்டும்.

க்ளைம் தொகை!

இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அன்றைக்கு மார்க்கெட்டில் என்ன விலையோ, அது க்ளைம் தொகையாக தரப்படும். பொருளின் பயன்பாடு, தரம் என எல்லாவற்றையும் கணக்கிட்டபின்னர் 80% தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 10 வருடங்களுக்கு முந்தைய காலத்து கேமரா இன்றைய இன்ஷூரன்ஸ் கால அளவில் பழுதடைந்திருந்தாலோ, விபத்துக்கு உள்ளாகி சேதம் உண்டாகியிருந்தாலோ அந்த பழுதை சரிபார்க்கும் வாய்ப்பு அமையாமல் போனால் அந்த கேமரா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு இன்றைய மார்க்கெட் விலையை க்ளைம் தொகையாகத் திருப்பித் தரப்படும். இதுபோலத்தான் மற்ற பொருட்களுக்கும்.

க்ளைம் செய்யும்போது விவரங்கள் சரியாக இருந்தால், சில நாட்களில் இழப்பீடு கிடைத்துவிடும். இல்லாவிட்டால் காலதாமதம் ஏற்படும்''.


 
 

வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு!

'பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் ஆலையை அமைப்பதற்கு, முதலில் சுத்தமான, குறைந்த தாது மற்றும் ரசாயனப் பொருட்கள் உள்ள தண்ணீர் கிடைக்கும் இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதி, விவசாயப் பகுதி சரிப்படாது. நீங்கள் அவர்களின் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக நாளை பிரச்னை வரலாம். எனவே, பிரச்னை இல்லாத, பல வருடங்களுக்கு வற்றாத நீர் ஊற்று உள்ள இடமாகத் தேர்ந்தெடுப்பது முதல் படி. அந்த நீரை பரிசோதனை கூடங்களில் கொடுத்து, சுத்திரிக்கப்பட்ட குடிநீராக மாற்றத் தகுதியுள்ள நீர்தானா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

அடுத்ததாக, இந்தத் தொழிலை நடத்த மூன்று விதங்களில் தொழிற்சாலை அமைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 2,000 - 5,000 லிட்டர் வரை நீர் சுத்திகரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு, 'மேனுவல்' என்றால் 20 லட்சமும், 'செமி ஆட்டோமேட்டிக்' என்றால் 25 லட்சமும், 'ஃபுல் ஆட்டோமேட்டிக்' என்றால் 40 லட்சமும் தேவைப்படும். இத்தொழிலை 'டர்ன்கி சிஸ்டம்’ மூலம் செய்து தர பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்களே எந்திரங்களை நிறுவி அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார்கள்.


தொழிற்சாலையில் எட்டு நிலைகளில் இந்த நீர் சுத்திகரிக்கப்படும். அப்போதுதான் நீரானது, 100% சுத்தமானதாக இருக்கும். இதுதான் இந்தத் தொழிலுக்கு மிகமிக முக்கியமான தேவை. ஆனால், பேராசைப்பட்டு பணத்தை மிச்சப் படுத்துவதற்காக நீரை சரியாக சுத்தம் செய்யாமல் பேக் செய்து விற்றனர். அதன் விளைவு, 'பிஐஎஸ்' (BIS) நிறுவனத்தின் 'தரக் கட்டுப்பாடு முத்திரை'யுடன்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, தரம் என்பது மிக அவசிய மான ஒன்று. தரக்கட்டுப்பாடு முத்திரை பெறுவது என்பது கட்டாயமான ஒன்று. இதன்படி சுத்திகரிக்கப்பட்ட நீர், பலகட்ட பரிசோதனையை கடந்த பின்னேதான், இந்தத் தொழிலை நடத்துவதற்கான உரிமம் கிடைக்கும்.

அடுத்ததாக, தொழில் போட்டி மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்.    மிக முக்கியமாக, உங்கள் பகுதியில் இத்தகைய தொழிற்சாலைகள் எத்தனை உள்ளன என்று முதலில் கணக்கெடுங்கள். அவற்றுடனான போட்டியை சமாளிக்க முடியுமா... என்பதையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுங்கள். பன்னாட்டு நிறுவனங்களும் இந்தக் களத்தில் உள்ளதால், போட்டி அதிகம் என்பதை கவனிக்கத் தவறாதீர்கள். சுத்திகரிக்கப்பட்ட நீரை 20 லிட்டர் கேன்களில் மட்டுமல்ல, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும் விற்பனை செய்யலாம். பெருநகரங்களில் உள்ள பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் என்று ஏறி இறங்கினால் விற்பனை சுலபமாகும். உற்பத்தி செலவைவிட, போக்குவரத்து செலவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தேவையான வாகன வசதி அவசியம்.முன்பு எளிதாக துவங்கப்பட்ட இத்தொழிலுக்கு இப்போது பல கட்டுப்பாடுகள் வந்துள்ளன. பூமிக்கு அடியில் உள்ள அனைத்தும் அரசுக்கு சொந்தம், எனவே, நீரை எடுத்து விற்கும் குளிர்பானம் மற்றும் தண்ணீர் தொழில்களுக்கு ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மையையும் கருத்தில் கொள்ளவும். மாசுக்கட்டுப்பாடு வாரியம், தரக்கட்டுப்பாடு வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம், சுகாதார நிறுவனம், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தகுதி சான்று என பல கட்ட சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

மொத்தத்தில் தொழிலைத் துவங்க நிறைய மெனக்கெட வேண்டும். அதேசமயம், விற்பனை சரியாக அமைந்துவிட்டால் மிகமிக லாபகரமான தொழில். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்க 18 முதல் 22 பைசாதான் செலவு ஆகும். 20 லிட்டர் கேன் என்றால், 5 முதல் 6 ரூபாய் வரை செலவாகும். 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். தற்போது அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் 'நீட்ஸ்’ (NEEDS -New Entrepreneur-cum-Enterprise Development Scheme) திட்டம், இதற்கு ஏற்ற திட்டம். இதைப் பயன்படுத்தி, இந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால், வெற்றியும் தோல்வியும்... உங்களுடைய முயற்சியில்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்!''

சித்ரா பௌர்ணமி - சோழவந்தான்

மதுரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். வீரபாண்டியன் எனும் மன்னன் சோழ மன்னனைக் கொன்ற இடம் என்பதால், சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதாகவும், பிறகு ராஜராஜசோழன் இங்கு படையெடுத்து வந்து வென்றதால் 'சோழவந்தான்’ என அழைக்கப்படுவதாகவும் சொல்வர். 

பாகனூர், சதுர்வேதிமங்கலம், ஜனநாதன் சதுர்வேதிமங்கலம் என ஆதிகாலத்தில் பல பெயர்களுடன் விளங்கிய சோழவந்தானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஜனக மகாராஜா வந்து வழிபட்ட திருத்தலம் இது. 

வைகையாறு பாய்ந்தோடுகிற இந்த அழகிய இடத்தில் தங்கி, பெருமாளையும் சக்தியான பெண் தெய்வத்தையும் வழிபட்டாராம் ஜனகர். பின்னாளில், ஜனகர் வழிபட்ட பெருமாளுக்கும் அம்மனுக்கும் தனித்தனியே கோயில் கட்டி வழிபட்டனர், அடுத்து வந்த மன்னர் பெருமக்கள்.


இந்த ஊரில் ஜனகை மாரியம்மன் திருக்கோயிலும், அங்கே நடைபெறும் திருவிழாவும் வெகு பிரசித்தம்! அதேபோல், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள் கோயில், முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைக்கப்பட்ட, அற்புதமான வேலைப் பாடுகள் கொண்ட ஆலயம்.  

சுக்கிர யோகம் தந்தருளக்கூடிய திருத்தலம் எனப் போற்றப்படும் ஸ்ரீஜனகை நாராயணர் கோயிலில் அழகும் கருணையும் கொண்டு காட்சி தரும் பெருமாளை, கண்ணாரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆடிப் பூரம், பங்குனி உத்ஸவம், மார்கழி திருப் பள்ளியெழுச்சி, ஸ்ரீஅனுமன் ஜயந்தி, திருக் கல்யாணம் ஆகியவை சிறப்புற நடைபெறும் இந்தக் கோயிலில், சித்ரா பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வேண்டிச் செல்கின்றனர்.


அந்த நாளில், காலையிலிருந்து சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். ஊரில் மொத்தம் ஐம்பது மண்டகப்படிகள் உண்டு. எனவே, சர்வ அலங்காரத்தில் வாகனத்தில் வருகிற பெருமாள், ஐம்பது இடங்களுக்கும் சென்று, ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும் வேண்டுதலையும் கேட்டு, அவற்றை நிறைவேற்றி அருள்வார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.  

பிறகு, அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவம் போலவே, இங்கும் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள், ஊரில் உள்ள வைகையாற்றில் இறங்குகிற நிகழ்ச்சி சிறப்புற நடைபெறும். அப்போது கருட வாகனத்தில், சர்வ அலங்காரங்களுடன் வருகிற பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும்.

மறுநாள், தசாவதார திருக்கோலக் காட்சி. ஒவ்வொரு அலங்காரத்திலும் காட்சி தருவார் பெருமாள். பிறகு, பூப்பல்லக்கில் உத்ஸவர் திருவீதியுலா வருவார். மண்டூக மகரிஷிக்கு சாபத்தில் இருந்து விமோசனம் தந்தருளினார் என்பதால் சோழவந்தான் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாளை வந்து வணங்கினால், நம் சாபங்களும் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லா தவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொடர்ந்து 7 அல்லது 11 வாரங்கள் வெள்ளிக் கிழமைகளில் வந்து, வெள்ளை மொச்சை வைத்து வழிபட்டால்  அவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி, சுக்கிர யோகம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

மகா பெரியவா சொன்ன கதைகள்!

னைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே... மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா? 

'ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர் களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

'ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...

ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, 'இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?


வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். 'ராகவா... நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

'அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷ£த் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு 'ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.'
ஆஹா... எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

உயிரை உருக்கும் உடல்பருமன்!

சர்க்கரை எப்படியெல்லாம் மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது என்பதைச் சற்று விரிவாகப் பேசுவோம். நான் இனி சொல்லப் போகும் பல விஷயங்கள் உங்களுக்குச் சற்று ஆச்சர்யமாக இருக்கலாம்...  அல்லது, அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், மருத்துவரீதியான அந்த உண்மைகளைச் சொல்வது என்னுடைய தார்மிகக் கடமை என்கிற முறையில், தொடர்கிறேன்.

முதலில், சர்க்கரையின் தாக்கம் எவ்வாறு சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது என்று பார்ப்போம்.

சர்க்கரையின் 'கிளைசீமிக் இன்டெக்ஸ்' (GI), 100 என்று பார்த்தோம். அதாவது, உட்கொண்ட மாத்திரத்தில் ஏதோ 'டிரிப்’ ஊசி மூலம் ஏற்றியதைப் போல உடனே உறிஞ்சப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. அடுத்த விநாடியே கணையத்துக்கு ஒயர்லஸ் செய்தி பறக்கிறது. உடனே கணையத்தின் பீட்டா (Beta) செல்களில் இருந்து இன்சுலின் வேகமாக உற்பத்தியாகி இந்த சர்க்கரையை ஜீரணிக்க உதவுகிறது. இதையே தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உட்கொண்டால், கணையம் அதிவேகமாக செயல்பட்டு, பீட்டா செல்கள் ஓய்ந்துவிடும் சூழ்நிலை உருவாகும். இதுவே சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை.

இன்னொரு வகையாகவும் இது சாத்தியம். சர்க்கரை ஒரு வெற்றுக் கலோரி (Empty Calories) என்று குறிப்பிட்டேன். கலோரி என்பது எரிபொருள் சக்தி. இது ஒருபோதும் வீணாவதில்லை. ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 16 கலோரி இருக்கிறது. தேவைக்கு அதிகமாக உட்கொள்ளும் இந்தக் கலோரிகள் ஈரலில் 'டிரைகிளிசரைட்' (Triglyceride) என்கிற கொழுப்பாக மாறி, சேமித்து வைக்கப்படுகிறது (நாம் செலவழிக் காத பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் என சேமிப்பதைப் போல!). உற்பத்தி ஸ்தானமான ஈரலில்தான் இக்கொழுப்பு முதலில் சேமிக்கப்படுகிறது. பிறகுதான் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படும்.

தற்போது பெரும்பாலான நோயாளிகளுக்கு 'ஸ்கேன்’ பரிசோதனை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. பலருடைய ஸ்கேன் ரிப்போர்ட்டில் 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) என்று எழுதப் பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக் கலாம். இதன் அர்த்தத்தை நோயாளி களும் புரிந்துகொள்வதில்லை - பல நேரங்களில் டாக்டர்களும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை. 'அது ஒன்றும் இல்லை... சும்மா ஃபேட்டி லிவர்தான். சாப்பாட்டில் கொழுப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று டாக்டர்கள் பலர் சொல்வது எனக்குத் தெரியும். உண்மையை ஆழமாக ஆராய்ந்தால், இக்கொழுப்பின் பூர்விகம்... கொழுப்பு சார்ந்த உணவில்லை, சர்க்கரை மிகுந்த உணவுதான் என்பது விளங்கும்.


இப்படி ஈரலில் சேமிக்கப்படும் கொழுப்பு, ஈரலைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளில் அடைத்து வைக்கப்படுவதுதான் 'உடல் பருமன் நோய்' (Obesity Syndrome). ஆம்... உடல் பருமனை இப்போது ஒரு நோய் என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். ஒருவர் அதிக எடையுடன் இருப்பதற்கும் (Overweight), உடல் பருமன் நோய்க்கும் வேறுபாடு உண்டு. பிஎம்ஐ ( BMI-Body Mass Index)  எனப்படும் உடல் பருமன் அளவீடு  என்ற அளவுகோலை வைத்து இதைக் கணக்கிடுகிறோம்.

பிஎம்ஐ = உடல் எடை (கி.கி)    உயரம் (மீ) X உயரம் (மீ). ஒருவரின் பிஎம்ஐ 18.5 முதல் 25 வரை இருந்தால் சரியான எடை என்றும், 25 - 30 வரை இருந்தால் அதிக எடை என்றும், 30-க்கு மேலே இருந்தால் உடல் பருமன் என்றும் கணக்கு.
உடல் பருமன்தான் பல நோய்களுக்கும் முன்னோடி என்பது இப்போது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ஈரல் பாதிப்பு என்று பல்வேறு நோய்களும் இதன் கிளைகளே.

'மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ அல்லது 'சிண்ட்ரோம் எக்ஸ்’ என்றழைக்கப்படுகிற நோய்க்கூட்டு, இப்போது மருத்துவ உலகில் மிகவும் பிரபலம். அப்படி என்றால் என்ன?

1. உடல் பருமன்.
2. டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பு 150 மி.கி அளவுக்கும் மேல்.
3. HDL எனப்படும் நல்ல கொழுப்பு 40 மி.கி. அளவுக்கும் கீழ்.
4. சர்க்கரை (வெறும் வயிற்றில்) 100 மி.கி. அளவுக்கும் மேல்.
5. ரத்தக் கொதிப்பு 130/85-க்கு மேல்
6. இன்சுலின் எதிர்ப்புத் தன்மை.
இவற்றில் ஏதேனும் 4 இருந்தால், அதுவே சிண்ட்ரோம் எக்ஸ். உலக ஜனத்தொகையில் 35% பேர் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலை நாடுகளில் கி.பி. 1,600-ம் ஆண்டுக்கு முன் மனிதனின் சராசரி உணவில் 2,600 கலோரிகள் இருந்தது. கி.பி. 1,800-ல் இது 3000 கலோரியாக உயர்ந்தது. தற்போது இது 3,500 கலோரியாக உயர்ந்து விட்டது. நம்மவர்களின் அன்றாட கலோரி அளவு 1,800-ல் இருந்து தற்போது 2,500 என உயர்ந்திருக்கிறது. இந்த 'கிடுகிடு’ உயர்வுக்குக் காரணம் சர்க்கரை, சர்க்கரை மிகுந்த கோலா பானங்கள், வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு போன்றவையே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் நோய் தற்போது உலகளவில் பிரளயகால தொற்றுநோய் (Epidemic) போல் பரவி வருகிறது. அதாவது, அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்தால் ஊரையே அழித்துப் புயல் வேகத்தில் பரவுவதுபோல என்று பொருள். குறிப்பாக, தற்போது குழந்தைகளையும் தாக்கி வருகிறது. உலகளவில் சுமார் 25% குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்து 1 முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஒல்லியாகவே வளர்வார்கள். இவர்களுக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால், சர்க்கரையும் கொழுப்பும் நிறைந்த புட்டிப்பாலில் வளரும் குழந்தைகள் 'கொழுகொழு’ என்று வளர்வார்கள். நீங்களும் சந்தோஷப்படுவீர்கள். இக்குழந்தைகள்தான் எதிர்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற வியாதிகளுக்கு எளிதில் ஆளாகிவிடுகிறார்கள். பல நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் இந்த பாதிப்பு இருக்கிறது. நம் நாட்டில் மெட்ரோ நகரங்களில் உடல் பருமன் நோய் பூதாகாரமாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டெல்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் 70% பேர் உடல் பருமனாக இருக்கிறார்களாம்.

அந்தக் காலத்தில் உடல் பருமன் ஒரு கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது. ராஜாக்களும், ஜமீன்தார்களும் இதைப் பெருமையாக நினைத்தார்கள். அமெரிக்காவில் இது இப்போது தலைகீழாகிவிட்டது. அங்கே பணக்காரர்கள் இப்போது ஒல்லியாக இருக்கிறார்கள். பொருளாதார கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் குண்டாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்தான் முக்கியமானவை. பணக்காரர்கள் விஷயம் தெரிந்து மாவுச்சத்து/சர்க்கரைச் சத்து அல்லாத உணவுகளை உட்கொள்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களோ... வெள்ளை ரொட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், பர்கர் போன்ற துரித உணவுகளை (fast food) உண்டு குண்டாகிறார்கள். நாமும் தற்போது அதைத்தானே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்? அதனால்தான் பெரு நகரங்களில் 70% பேர் குண்டாகிவிட்டார்கள். விரைவில் இது கிராமங்களுக்கும் பரவும். அதனால்தான் இதை ஒரு தொற்றுநோய் என்று குறிப்பிட்டேன்.

மொத்தத்தில், இன்று காணப்படும் பல்வேறு நவீன உயிர்க்கொல்லி நோய்களுக்கும் முக்கியக் காரணமாக அமைவது 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்'தான். இதன் முக்கிய அங்கமே உடல் பருமன் நோய்தான். உடல் பருமனுக்கு மூல காரணம் சர்க்கரைதான் என்பதை உணர்த்தவே இத்தனை விளக்கங்களும்.

சர்க்கரை எவ்வளவு ஆபத்தானது என்பது இப்போது புரிகிறதா..?!

எனது இந்தியா (மொகலாய ஓவியங்கள் !) - எஸ். ரா

 

நோவாவின் கப்பலில் மிருகங்கள் ஏற்றப்​பட்டது என்பதை விவரிக்கும் மொகலாய ஓவியம் ஒன்று இருக்கிறது. ஜெசுவிட்டுகளின் வருகையால் கிறிஸ்தவ கருத்தாக்கங்கள் சில நுண்ணோவியமாக வரையப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இந்த ஓவியம் முக்கியமானது. அக்பர் நாமா ஓவியத் தொகுப்பில் உள்ள மிஸ்கின் வரைந்த இந்த ஓவியத்தில் முதலைகள் வாய் திறந்து நிற்கின்றன. யானை, ஒட்டகம், மான் என பல்வேறு கப்பலில் ஏற்றப்பட்ட மிருகங்களின் சாந்த நிலையும் முகபாவங்களும் ஆகச்சிறப்பாக உள்ளது. கப்பலின் வடிவமும் அதன்  அடுக்கு நிலைகளும் அதை ஓட்டுகின்றவன், திரைப்பானை இறக்கி விடுபவர்கள், கீழே விழுந்த ஒருவரை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் என்று எத்தனை நிலைகள். அத்துடன், படகில் முன்னும் பின்னும் வரும் முதலைகள், மீன்கள். தூரத்து பறவைகள், அலைபாயும் கடல் என்று ஓவியம் முழுமையாக இருக்கிறது. இதிலும் உருவங்களின் சமநிலையும் வண்ணங்களும் உள்ளார்ந்த இயக்கமும் சமநிலையில் உள்ளது. பொதுவாக, நுண்ணோவியங்களில் சிவப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் அல்லது துணியில் சித்திரத்தைத் தீட்டி விட்டு அதன்மீது வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் எது பிரதானப்படுத்தப்பட வேண்டும்? எங்கே ஒளிர வேண்டும்? எது மறைக்கப்பட வேண்டும்? என்று, தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதோடு, நிறக்கலவையை உருவாக்குவதும் பயன்படுத்துவதும் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. பிரதான உருவங்களைச் சுற்றிலும் ஒளிர்வு போல அமைக்கப்படுவது அதன் முக்கியத்துவம் கருதியே. நுண்ணோவியத்தில் நிறையக் குறியீடுகள், உருவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நித்யத்துவத்தைக் குறிக்க கையில் ரோஜா மலர் கொடுக்கப்படுகிறது. ஆசைகளைக் குறிக்க மான் பயன்படுத்தப்படுகிறது. தர்மத்தைக் குறிக்க நாயும், ரகசியத்தை, இச்சையைக் குறிக்க பூனையும் அடையாள​மாகின்றன

விலங்குகளையும் தாவரங்களையும் பெர்ஷிய ஓவிய மரபில் கற்பனையான தன்மையுடன் வரை​வார்கள். ஆனால், மொகலாய பாணியில் இவை இரண்டும் மிக யதார்த்தமாக, இயல்பான தோற்றத்தில் பொலிவுற வரையப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை, குதிரை, மான் ஆகியவை மொகலாய ஓவியங்களைப் போல அத்தனை அழகுடன் வேறு எதிலும் சித்திரிக்கப்படவில்லை. 'ஹம்ச நிசாமி’ என்ற கவிதை நூலுக்கு வரையப்பட்ட 36 ஓவியங்கள் மொகலாய ஓவியச் சிறப்பின் உன்னதங்கள் என்றே கூற வேண்டும். ஹூமாயூன் ஆணைப்படி வரையப்பட்ட இந்த ஓவியங்களில் ஒரு பகுதி இன்று பிரிட்டிஷ் மியூசி​யத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

காபூலில் அமைக்கப்பட்டிருந்த ஓவியப் பட்ட​றைக்கு ஹிமாயூன் நேரில் சென்று தானே ஓவியங்​களை வரையக் கற்றுக் கொண்டார் எனவும் தனக்கு விருப்பமான கவிதைகளுக்கு அவரே ஓவியங்கள் வரைவார் என்றும் கூறப்படுகிறது. ஜஹாங்கீர் காலத்தில் ஐரோப்பிய ஓவியங்கள் அறிமுகமானதால் மரபான மொகலாய ஓவிய முறையில் ஐரோப்பிய வண்ணங்களைப் பயன்படுத்தும் புதிய முறையும் சேர்ந்திருக்கிறது.

மொகலாய ஓவியங்களில் ஒரு பகுதி பாலின்பத்​தைப் பற்றியவை. குறிப்பாக, மன்னர் தனது ஆசைநாயகிகளுடன் பாலுறவு கொள்ளும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு அந்தரப்புரத்திலும் படுக்கை அறையிலும் மாட்டப்பட்டு இருந்தன. அத்துடன், காமத் தூண்டுதல்களை உருவாக்குவதற்காக இதுபோன்ற ஓவியத்தொகுதிகளை உருவாக்கி இருக்கின்றனர்.

மெய்த் தேடலில் நாட்டம் கொண்ட மொகலாய மன்னர்கள், முக்கிய சூபி ஞானிகளைப் பற்றிய ஓவியங்களை வரையச்செய்து பாதுகாத்திருக்​கிறார்கள். மன்னர் பிரார்த்தனை செய்வது, சூபி ஞானியிடம் அறிவுரை கேட்பது, சூபி ஞானிகள் சொல்லிய கனவுகள் பலித்த கதை என்று மெய்ஞானம் தொடர்பான ஓவியங்களும் அதிகம் வரையப்பட்டுள்ளன. மொகலாய நுண்ணோவிய மரபில் மன்சூர் மிக முக்கியமானவர். இவர், பெர்ஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆதரிக்கப்பட்ட ஓவியக்கலைஞர். ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் அரச சபை ஓவியராக இருந்தவர். மன்சூர் வரைந்து இருக்கும் விலங்குகளிலும் பறவைகளிலும் உள்ள நுட்பம் வியக்கத்தக்கது. அவற்றை இயற்கையியல் பற்றிய விஞ்ஞான ஆய்வு என்றே சொல்ல வேண்டும். மன்சூர், ஜஹாங்கீருக்கு நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அத்துடன், மன்னரின் வனவேட்டைகளுக்கு அவருடன் சென்று, ஓவியம் வரைந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக, மன்னர் காஷ்மீருக்கு வேட்டைக்குச் சென்றபோது மன்சூரும் உடன் சென்றிருக்கிறார். அந்த ஓவியங்களைத் தனி ஓவியத்தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத்தின் முக்கியக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு சித்திர நூல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி, ராமாயண ஓவியத்தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணிபுரிவார்கள். ஓவியங்களைச் சுற்றிய பார்டர்களுக்கு தங்கமுலாம் பூசப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்தாத் மன்சூர் போலவே அக்பர் மற்றும் ஷாஜகான் ஆட்சியில் முக்கிய ஓவியராக இருந்தவர் கோவர்தன். இவர், பிரபல ஓவியரான பவானிதாஸின் மகன். அக்பரின் அன்றாட அலுவல்களை இவர் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார். அவற்றில் ஓர் ஓவியத்தில் அக்பரின் இயல்பைக் குறிக்கும்படியாக அக்பரின் இரண்டு பக்கங்களில் ஒரு பக்கம் சிங்கமும் மறுபக்கம் பசுவும் இருப்பது போன்று வரைந்திருக்கிறார். கோவர்தன் வரைந்த ஷாஜகான் மற்றும் தாரா இருவரும் குதிரையில் பயணம் செய்வது போன்ற ஓவியமும் தனித்த அழகுடன் காணப்படுகிறது. பாபர்நாமா என்ற புத்தகத்துக்கு ஓவியங்கள் வரைந்தவர்களில் கோவர்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொகலாய மன்னர் ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது மிர் சயித் அலி, அப்து உஸ் சமாத் என்ற இரண்டு பாரசீக ஓவியர்களை தன்னுடன்அழைத்து வந்தார். அவர்களால் மரபான பாணி​யுடன் இணைந்து மொகலாய பாணி ஒன்று புதிதாக உருவானது.

மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் ஓவியங்களுக்கான அரசு ஆதரவு இல்லாததால் இதன்மதிப்பு குறைய ஆரம்பித்தது. மன்னர் இரண்டாம் ஷா ஆலம் (1759-1806) காலத்தில் இந்தப் பாணி சில மாற்றங்களுடன் ராஜபுதன ஓவியப் பாணியாக மாறியது. 18-ம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் இந்த வகை ஓவியங்கள் மிகவும் புகழ்​பெற்று விளங்கின. கண்ணனுடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஓவியங்கள் அதில் பிரதானமானவை. அழகிய நிலத்தோற்றங்கள், கிருஷ்ண லீலைகள் போன்ற ஓவியங்கள் பெரிதும் விரும்பப்​பட்டன. அரண்மனை மற்றும் கோட்டைச் சுவர்களில் இந்தவகை ஓவி​யங்கள் வரையப்பட்டன. பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் நிறங்கள் இயற்கையான வண்ணங்கள். இந்த ஓவியங்களுக்குப் பொன், வெள்ளி போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மரபாகவே ராஜஸ்தானியர்கள் சிவப்பைக் கொண்டாடு​கிறார்கள். அவர்களின் கலை வெளிப்பாட்டில், உடைகளில், வீடுகளில், சிவப்பு நிறமே பிரதானமாக இடம்பிடித்து இருக்கிறது. தமிழர்களுக்கு வெள்ளைதான் அதிகம் பிடித்திருக்கிறது. செருப்பில் இருந்து துண்டுவரை அத்தனையும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்பவர் நிச்சயம் தமிழனாகத்தான் இருப்பார்.

யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மாநிலமும் இப்படித் தனக்கென ஒரு நிறத்தைக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் கலைகளை நுட்பமாகப் பார்த்தால், மரபும் நவீனமும் அதில் கலந்திருப்பதை நாம் உணர முடியும். குறிப்பாக, ராஜஸ்தானிய நுண்ணோவி​யங்களைப் பாருங்கள். அவை, மரபான ஓவியங்களாகத் தோற்றம் அளித்தாலும் அதில் பெர்ஷிய மற்றும் அரபுப் பாணிகளின் கலப்பு காணப்படுகிறது. ராஜஸ்தானிய கிருஷ்ணனும் ராதையும் பிற மாநிலங்களில் காணப்படும் கிருஷ்ணன் ராதையைப்போல இல்லை. உருவ அமைப்பு, உடைகள் மற்றும் முகபாவங்கள் ஆகியவை வேறுபட்டு இருக்கின்றன. உணர்ச்சிகளைப் பிரதானமாக வெளிப்படுத்துவதில் ராஜஸ்​தானிய நுண்ணோவியங்கள் தனித்திறன் கொண்டிருக்கின்றன. காத்துக்கிடக்கும் ராதை என்ற ராஜஸ்தானிய ஓவியத்தை கண்காட்சி ஒன்றில் பார்த்தேன். ஆற்றங்கரையில் ராதை காத்திருக்கிறாள். ஆற்றில் ஒடும் மீன்கள்கூட சோர்ந்து போய் வால் வளைந்து சோம்பியே காணப்படுகின்றன. கரையோர மரம் வளைந்து சரிந்து நிற்கிறது. தண்ணீரின் அலைகள்கூட சீற்றமில்லாமல் இருக்கின்றன. அவளது உடைகளில்கூட தளர்ச்சி காணப்படுகிறது. முகத்தில் ஏக்கம் ததும்ப ராதை காத்திருக்கிறாள். ஓவியத்தின் மூலையில் ஒரு சிறிய நாகம் தலையை லேசாகத் தூக்கிப்பார்த்து தானும் சோகமடைந்தது போலிருக்கிறது. மரத்தில் உறைந்து போன காற்று, வெறுமையான மேகம், அதன் நீல வண்ணம், அவளது உடையின் பிரகாசமான நிறத்தேர்வு, மரத்தின் வெளிறிய பச்சை நிறம், அவள் எவ்வளவு ஏக்கத்துடன் இருக்கிறாள் என சூழலின் வழியே அவளது தனிமையின் வலியை அந்த ஓவியம் பார்வையாளனுக்குத் துல்லியமாகச் சொல்லிவிடுகிறது.

மினியேச்சர்ஸ் எனப்படும் நுண்​ணோ​வியம் ஹைக்கூ கவிதையைப் போன்றது. அதற்குள், வெளிப்படையான எளிமையைத் தாண்டி உள்ளார்ந்த தத்துவப் பொருள் இருக்கிறது. ஆகவே, அதை ரசிப்பதற்கு தொடர்ந்த ஈடுபாடும் நுட்பமான அக்கறையும் அதிகம் தேவை. வனவேட்டையை ஓவியம் வரைவது பெரும் சவால்.  வேட்டையாடும் மன்னர் அல்லது பிரபுக்களுடன் காட்டுக்குள் ஓவியர்களும் சென்று கோட்டோவியமாக வரைந்து கொண்டுவந்து பிறகு அதை வண்ணம் தீட்டுவதுண்டு. மன்னர்களின் வேட்டையைப் பிரதானமாக கொண்ட மொகலாய மினியேச்சர்கள் நிறைய இருக்கின்றன. அக்பர் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடும் ஒரு ஓவியம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதில், அக்பர் கையில் உள்ள துப்பாக்கி அன்றைய காலகட்டத்தில் அறிமுகமான ஆயுதங்களைப் பற்றிய சாட்சியாகக் கருதப்படுகிறது.

ராஜபுதன ஓவியங்களைப் பற்றி ஆராய்ந்துள்ள கலை விமர்சகர் ஆனந்த குமாரசாமி, ''இந்த ஓவியங்கள் அன்றைய இந்திய இலக்கியங்களின் மாற்று​வடிவம் போன்றவை. எந்தக் கவித்துவ அனுபவத்தை இலக்கியங்கள் உருவாக்கியதோ அதற்கு நிகராக அதே கருவில் வரையப்பட்ட ஓவிய வகைமை'' என்கிறார். மொகலாய ஓவியங்களில் பெரும்பான்மையானவை இன்று இந்தியாவில் இல்லை. வெளிநாட்டு மியூசியங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நமது மரபின் பொக்கிஷங்​களை நாம் பராமரிக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. வரலாற்றை ஆராயும் அறிஞர்கள், கல்வெட்டுக்களைப் போலவே பழங்கால ஓவியங்களையும் நுணுக்கமாக ஆராயும்போது அறியப்படாத பல சரித்திர உண்மைகள் வெளிப்படக்கூடும். அந்தவகையில் ஓவியமும் ஒரு வரலாற்றுச் சாட்சியே!


Monday, April 22, 2013

கிட்னி வளர்ப்பு!

 
மனித உடலில் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றும் மிக முக்கியமான வேலையைச் செய்வது சிறுநீரகம். அமெரிக்காவில் ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகத்தைச் செயற்கை முறையில் வளர்த்து, எலிக்குப் பொருத்த உள்ளனர். இச்சிறுநீரகங்களில் ஒருசில குறைபாடுகள் இருந்த போதிலும், இம்முறை மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
 
வீணாப் போன சிறுநீரகத்தை வெளியே எடுத்து, அதில் உள்ள கெட்ட திசுக்களை வெட்டி எடுத்து, அம்மனிதனின் உடலிலிருந்தே நல்ல திசுக்களை எடுத்து, அச்சிறுநீரகத்தில் பொருத்தி ஆய்வுக்கூடத்தில் அதை வளர வைத்து மீண்டும் உடலில் பொருத்தி விடுவார்கள். இதனால் இரண்டு முக்கிய நன்மைகள் இருக்கின்றன. அந்த மனிதனின் திசுக்களையே வைத்து வளர்ப்பதால் உடலில் கச்சிதமாகப் பொருந்திவிடும். மற்றொன்று, சுமாரான சிறுநீரகங்களைத் தூக்கி எறியத் தேவையில்லை.  

அமெரிக்காவில் மட்டும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக லட்சோபலட்சம் பேர் க்யூ வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். நல்ல முறையில் ஆய்வு முடிந்துவிட்டால் இது மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

அருள்வாக்கு - ஆத்மாதான் நிஜ நாம்!


‘நிஜம்’ என்பதை ‘உண்மையானது’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ‘நிஜம்’ என்பதற்கு நிஜமான அர்த்தம், ‘தனக்கே உரிய ஸ்வபாவம்,’ ‘தன் உண்மை இயல்பு’ என்பதாகும். இரண்டு அர்த்தத்திலும் ஆத்மாதான் நிஜ நாம். அதை அறியாத நாம் மனஸின் பொய் வேஷத்தில் நம் ஸ்வபாவத்தைத் தெரிந்து கொள்ளாமலிருப்பவர்கள்தான். மனஸை நாமாகவே நினைத்து விடுகிற அளவுக்கு அது பெரிய வேஷம் போட்டு ஏமாற்றி விடுகிறது.

ஒரு வேஷமில்லை; மாறிக் கொண்டே இருக்கிற பல வேஷங்கள்! பழநியில் (தண்டாயுதபாணிக்கு) கிடுகிடுவென்று ஒரு அபிஷேகத்துக்கு மேல் இன்னொரு அபிஷேகமாகப் பண்ணித் திரைபோட்டு அலங்காரம் பண்ணித் திறந்து காட்டுவார்கள். ஒரு அலங்காரத்திலே ஆண்டிப் பண்டாரமாக நிற்பார்; கொஞ்ச நேரத்தில் இன்னொரு அபிஷேக, அலங்காரமாகித் திரையை விலக்கும் போது பார்த்தால் ராஜாவாகக் காட்சி கொடுப்பார்; அதற்கப்புறம் இன்னொரு அலங்காரத்தில் வேடரூபத்தில் தர்சனம் தருவார். அதேமாதிரிதான் நம் வேஷமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பிறந்ததிலிருந்து (கருவாய் உருவானதிலிருந்து, இன்னும் பின்னே போனால் எத்தனையோ ஜன்மத்துக்கு முன்னாலிருந்து) நம் உடம்பும் மனஸும் மாறிக் கொண்டே இருக்கிறதென்றால், ஒவ்வொரு மாற்றமும் ஒரு வேஷந்தானே? இருந்தாலும், ஒரு துணியும் போட்டுக் கொள்ளாமல், மல மூத்ரங்களை அடித்துக் கொண்டு, செருப்பு, துடைப்பக்கட்டை எதுவானாலும, ‘ஹாவு ஹாவு’ என்று கடித்துக் கொண்டு ‘ஹா ஹூ’ என்று விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையேதான் இன்றைக்கு எத்தனையோ நாசூக்கு நாகரிகம் பார்க்கிற நாம் என்பதாக ஒரு ‘நான் - எண்ணம்’ அன்றிலிருந்து இன்று வரை அறாத, மாறாத தொடரிழையாக இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த எண்ணத்துக்கு அடியில் நமக்கு உயிராதாரமாக இருப்பதுதான் ஆத்மா. அன்றைக்குக் குழந்தை வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமி என்று நமக்கும் தெரிந்து, மற்றவர்களுக்கும் தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - திருப்பிக் கட்ட முடியுமா? ஞாநி

 
உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோயில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன். கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்கள் சிவன், விஷ்ணு கோயில்களாகத் தொடங்கி பௌத்த கோயில்களாக மாறி சில நூறு வருடங்களிலேயே சிதிலமடைந்து, சிற்பங்கள் மேலைநாட்டினரால் கொள்ளையடிக்கப்பட்டு, பின் தொடர்ந்து நடந்த பல்வேறு யுத்தங்களால் கவனிப்பாரற்று மேலும் பாழாயின. சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் இந்தக் கோயில்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் நிதி உதவியுடன் யுனெஸ்கோ வழிகாட்டுதலில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.அடர்ந்த மரச் சோலைகளின் நடுவே இருக்கும் அகழிகளும் கோட்டைச் சுவர்களுமாக இருக்கும் இந்தக் கோயில் இடிபாடுகளில் கம்போடிய சமூகத்தின் ஒரு காலத்தைய வளமும் செழிப்பும் கலைத் திறனும் பளிச்சிடுவதைப் போலவே, கோயில் வளாகத்திலும், வெளியே சியாம் ரீப் நகரின் ஒவ்வொரு சந்திலும் மூலையிலும் கடைத்தெருவிலும் கம்போடியாவின் இன்றைய கொடூரமான ஏழைமை முகத்தில் அறைகிறது. ஆஸ்திரேலியா முதல் கனடா வரையிலான சுற்றுலாப் பயணிகள் இடிந்த இந்து/பௌத்த கோயில்களைக் காண வரவில்லையென்றால் இந்த நகரம் முழுக்க செத்துப் போய்விடும். உள்ளூரில் எதற்கும் கம்போடிய ரியாலை யாரும் விரும்புவதில்லை. அமெரிக்க டாலர் மட்டுமே பெரிதும் புழங்குகிறது. ஒரு டாலருக்கு நான்காயிரம் ரியால்! கம்போடியாவில் எந்தப் பெரும் தொழில் உற்பத்தியும் இல்லை. ஓடும் எல்லா கார்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நகரத்தில் பஸ் வசதியே கிடையாது. மொய்ப்பெடுக்குப் பின்னால் டிராக்டர் டிரெலர் போல சீட் வைத்த இணைப்பைக் கட்டிக் கொண்டு டுக்டுக் எனப்படும் ஆட்டோக்கள் மட்டுமே ஓடுகின்றன. 90 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். எல்லாரும் டூரிஸ்டுகளை நம்பி இருக்கிறார்கள். 
 
கடும் வெயிலில் கோயில் இடிபாடுகளைப் பல கிலோமீட்டர் நடந்து நடந்து சுற்றிப் பார்த்தபோது அவை என்னைக் கவர்ந்ததை விட, அதிகமாக என் கவனத்தை ஈர்த்தது வேறொன்றுதான். கோயில் வளாகத்துக்குள் பல்வேறு கம்போடிய இசைக் கருவிகளை உட்கார்ந்து இசைத்தபடி, டூரிஸ்டுகளிடம் மௌனமாகப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குழு ஒன்றைப் பார்த்தேன். அன்றிரவு நகரத்துக்குள் டூரிஸ்டுகள் அதிகம் புழங்கும் பப் ஸ்ட்ரீட், நைட் மார்க்கெட் பகுதியில் நடுத்தெருவில் இதே போன்ற இன்னொரு குழுவைப் பார்த்தேன்.  இந்த இசைக் குழுக்களில் இருப்போர் பலரும் கம்போடியாவில் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க, ரஷ்ய, சீன ஆயுத உதவியுடன் வெவ்வேறு இயக்கங்கள் நடத்திய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் எல்லோரையும் பாதித்தது யுத்தத்தின் ஒரே அம்சம் தான். பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள். சண்டையிடும் எதிரெதிர் அணிகள் இன்னொரு அணி தம்மை நெருங்கவிடாமல் தடுக்க மாறிமாறி நிலமெங்கும் கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கின்றன. சண்டை முடிந்தாலும், கண்ணிவெடிகளை அகற்றும் வேலை முடியவில்லை. எங்கெல்லாம் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபமல்ல. அரசாங்கத்தின் ராணுவங்கள் கண்ணி வெடியைப் புதைக்கும்போதே அதைப் பற்றிய வரைபடம் தயாரித்துக் கொள்ள வேண்டும். கெரில்லா அமைப்புகளும் வரைபடம் வைத்திருப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் இரு தரப்பினரின் பாசறைகளும் தளவாடங்களும் அழிக்கப்படும்போது இந்த வரைபடங்களும் அழிந்துவிடும். ராணுவத்தின் வரைபடத்தின் பிரதி வேறு நகரில் தலைமையகத்தில் இருக்கும் வாய்ப்பு உண்டு. போராளி அமைப்புகள் அழியும் போது எல்லாத் தகவல்களும் சேர்ந்தே அழியும் வாய்ப்பே அதிகம்.இந்தக் கண்ணிவெடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தெரியாமல் காலை வைத்து உறுப்புகளை இழந்து நடைப்பிணங்களாக வாழ்வோர் நிலை மிக பரிதாபகரமானது. கம்போடியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்படி கை கால் இழந்தவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர்தான் பாட்டு பாடி டூரிஸ்டுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 
 
கண்ணி வெடி விபத்தில் பாதிக்கப்படுவோருக்கான நியாயத்தை யாரிடமும் போய் கேட்கமுடியாது. போரில் பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளை சுட்டுக் கொன்றதற்காக இலங்கை ராணுவத்தைப் போர் குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் கண்ணிவெடி விபத்தில் கை கால் இழந்த சிறுவர்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று எந்தத் தரப்பையும் தனியே அடையாளம் காட்ட முடியாது. (இந்த வாசகத்தைத்தான் கண்ணி வெடி பாதிப்புக்குள்ளானோருக்கான இணையதளம் ஒரு சிறுவன் படத்துடன் சொல்கிறது: இந்தச் சிறுவன் வேறுவிதமாக இந்த நிலைக்கு ஆளாகியிருந்தால் அதற்கு யாரையாவது பொறுப்பாக்க முடியும். ஆனால் கண்ணிவெடியில் பாதிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பு என்று யாரையும் நீதிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி நியாயம் கேட்க இயலாது.)கம்போடியாவில் கண்ணிவெடியில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள்தான். சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கே காட்டில் சுள்ளி பொறுக்கச் செல்பவர்களும், வியட்நாம் யுத்தத்தின் போதும் உள்ளூர் யுத்தத்தின் போதும் போடப்பட்ட குண்டுகளின் உலோகக் கவசங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து விற்றுப் பிழைக்கச் செல்வோரும் கண்ணிவெடியாலும் இன்னும் வெடிக்காமல் இருக்கும் சில க்ளஸ்ட்டர் குண்டுகளாலும் உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.பெருமளவில் கம்போடியாவில் கண்ணி வெடிகளும் குண்டுகளும் வயல்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் கடந்த பத்தாண்டுகளில் அகற்றப்பட்டாலும் இன்னும் சுமார் 60 லட்சம் கண்ணிவெடிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். கண்ணிவெடியை அகற்றுவது எளிதானதும் மலிவானதும் அல்ல. ஒரு கண்ணிவெடியைப் புதைக்க ஆகும் செலவு வெறும் மூன்று டாலர்தான். அகற்றுவதற்கு ஒரு வெடிக்கு சுமார் 1200 டாலர் செலவு ஆகிறது. வருடந்தோறும் சுமார் மூன்று கோடி டாலர் கண்ணிவெடி அகற்ற மட்டும் உலக நாடுகளின் நன்கொடை மூலம் செலவிடப்படுகிறது. இதே நிதி உதவி நீடித்தால், மொத்த கண்ணிவெடிகளையும் அகற்றி முடிக்க 15 முதல் 20 வருடம் ஆகும் என்கிறார்கள். அதுவரை அந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. கம்போடியாவில் கண்ணிவெடி வைத்தவரே கண்ணிவெடிக்கு எதிராக இயக்கம் நடத்தி செயல்பட்டு வருகிறார். அவர் பெயர் அக்கிரே. ஆறு வயதில் அவர் பெற்றோர் கெமர் ரௌஜ் எனப்படும் இடதுசாரி தீவிரவாதப் போராளி அமைப்பால் கொல்லப்பட்டனர். அவரை அமைப்பே எடுத்து வளர்த்தது. பத்து வயதிலேயே அந்த அமைப்பின் போர் வீரராக்கப்பட்டார் ரே. பின்னர் 16 வயதில் எதிரிகளான வியட்நாம் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதும், அந்த ராணுவத்தின் படை வீரராக்கப்பட்டார். இப்படி குழந்தைச் சிப்பாயாக இருந்தது முதல் யுத்தம் முடியும்வரை ரே தானே ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்திருக்கிறார். தொண்ணூறுகளின் இறுதியில் யுத்தம் ஓய்ந்ததும், ரே கண்ணிவெடிகளுக்கு எதிரானவராகவும் யுத்த எதிர்ப்பாளராகவும் மாறி இதுவரை 50 ஆயிரம் கண்ணிவெடிகளை தாமே அகற்றியிருக்கிறார். 
 
தானே எந்த நவீன உபகரணமும் இல்லாமல், வெறும் குச்சிகளை வைத்துக் கொண்டு வெடி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அகற்றும் திறமையுடையவர் ரே.உலகம் முழுவதும் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் அமைப்புகள் அவருக்கு இதற்கான நவீனப் பயிற்சி கொடுத்து தொடர்ந்து அவரைப் பயன்படுத்துகின்றன. ரேவை சி.என்.என். டி.வி. 2010ன் தலைசிறந்த மனிதராக அறிவித்தது. அவர் வாழ்க்கை இப்போது ஒரு படமாக்கப்பட்டு வருகிறது.அக்கி ரே கண்ணிவெடி ஆபத்து பற்றி விளக்குவதற்கென்றே ஒரு தனி மியூசியத்தை சியாம் ரீப் நகரில் வைத்துள்ளார். அங்கே சென்று சுற்றிப் பார்த்தேன். அதில் சொல்லும் தகவல்கள் எல்லாம் பெரும் கவலை அளிக்கின்றன. உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை இனி வைக்கக்கூடாது, முழுக்க நீக்கிவிட வேண்டும் என்று ஐ.நா. மூலம் கனடா ஒட்டாவா நகரில் ஒப்பந்தம் 1997ல் போடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு 167 நாடுகள் கையெழுத்திட்டன. இவை தம்மிடம் உள்ள கண்ணிவெடிகளை எல்லாம் அழித்துவிட ஒப்புக் கொண்டன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, இன்னும் பல சிறு நாடுகள் இவை.கையெழுத்துப் போட மறுக்கும் நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, இஸ்ரேல், ஐக்கிய அரபு நாடு, பாகிஸ்தான்........ இந்தியா! இன்னும் கண்ணிவெடிகள் தயாரித்து விற்கும் மிகச் சில நாடுகளில் ஒன்று இந்தியா! இந்தியன் என்பதற்காக நான் வெட்கப்படும் விஷயங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.கம்போடியாவிலிருந்து திரும்பும் வழியெல்லாம் என் மனம் இலங்கையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. அக்கி ரே போல அங்கிருந்து யாரேனும் வெளிப்பட்டு வருவார்களா? யாழ்ப் பாணமும் கிழக்கும் வன்னியும் இன்னமும் கண்ணி வெடிகளால் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக வன்னியின் செழுமையான வயல்களில் வேளாண்மை செய்யவே முடியாதபடி அவற்றில் நாற்றுக்கு பதிலாக கண்ணிவெடிகளை விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவமும் விதைத்து வைத்திருக்கிறார்கள். 
 
மண்ணில் விழுந்தால் மறுபடி விதையாக முளைப்போம் என்பது கண்ணிவெடிக்குப் பொருந்தாது. மண்ணில் நடப்போரை சவமாக ஆக்கும் விதை அது. மொத்தம் 640 கிராமங்கள் கண்ணி வெடி களால் வீணாக்கப்பட்டுக் கிடக்கின்றன. முப்பது வருடங்களில் கண்ணிவெடிகளால் மட்டும் சுமார் 20 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரும் 12 ஆயிரம் விடுதலைப்புலிகளும் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு சொல்கிறது. கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் (சுமார் 180 கோடி இந்திய ரூபாய்) கண்ணிவெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பகுதிதான் பாக்கி என்றும் 90 சதவிகித கண்ணி வெடிகளை அகற்றியாகிவிட்டது என்றும் அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றன. சரியான கணக்குகள் எதற்கும் கிடையாது. தமிழர் பகுதிகளில் இன்னும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலே இருக்கிறது என்கிறார்கள்.  கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் (சுமார் 2500 இலங்கை ரூபாய்). இந்த வேலையும் இல்லாவிட்டால், இந்தப் பெண்கள் இன்னும் கோரமான வறுமையில் துயரப்படுவார்கள். முதலில் இயந்திரம் மேல் மண்ணை அகற்றும். பின்னர் மூன்றடிக்கு மூன்றடி சதுரத்தில் பெண் கூலிகள் ஆறு அங்குல ஆழம் வரை தோண்ட வேண்டும். கண்ணிவெடியின் தலை தெரிந்ததும், தோண்டுவதை நிறுத்தி ராணுவ வீரரிடம் சொன்னால் அவர்கள் அடுத்து வந்து அதை அகற்றுவார்கள். கம்போடியா பற்றி அறியும் எவரும் இலங்கைத் தமிழர்களை மறுபடியும் ஆயுதம் எடுத்து யுத்தம் நடத்தும்படி ஒருபோதும் தூண்டமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனித நேயத்தையும் இன உணர்வையும் நான் நிச்சயம் நம்பமாட்டேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. அது தீர்த்துக் கட்டுவது மனிதர்களின் வாழ்க்கையை மட்டும்தான். 
 
இடிந்த அங்கோர் வாட் கோயில்களை திரும்பக் கட்டி விடமுடியும். ஆனால் சிதைந்த வாழ்க்கைகளை - அது தமிழரானாலும் சிங்களவரானாலும், கம்போடியரானாலும், வியட்நாமியரானாலும் ஒருபோதும் நம்மால் திருப்பிக் கட்டவே முடியாது.

தொடரும் ஐ.பி.எல். சர்ச்சைகள்!


ஐ.பி.எல். என்றால் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் மட்டுமல்ல, தவறாமல் இடம்பெறும் சர்ச்சைகளும்தான்.

இந்த வருடம், ஐ.பி.எல். ஆரம்பிப்பதற்கு முன்பே, இலங்கை வீரர்களுக்கு சென்னையில் தடை என்கிற முதல் சர்ச்சை ஏற்பட்டது. அடுத்த பிரச்னை, கம்பீரும் கோலியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள முயற்சி செய்தது.

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், முதலிரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு, கம்பீரும் கோலியும் பொறுப்பாக ஆடி, அணியைச் சரிவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள். பிறகு, பல மேட்சுகளில் இருவரும் சேர்ந்து அபாரமான பார்ட்னர்ஷிப்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பெங்களூருவில் இருவரும் கடுமையாக மோதிக் கொள்ளப் பார்த்தார்கள். கோலி அவுட்டானவுடன் கம்பீர் ஏதோ சொல்லிவிட, உடனே கோலி பெவிலியனுக்குத் திரும்பாமல் கம்பீரை நோக்கி ஆக்ரோஷமாக வர, பதிலுக்கு கம்பீரும் கோலியை நோக்கி வர, டி.வி.யில் லைவாகப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பதறிப் போனார்கள்.

நல்லவேளையாக, மற்ற வீரர்கள் இருவரையும் தடுத்ததால், மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்காமல் போனது. இல்லாவிட்டால் ஆளுக்கு ஒரு குத்து விட்டிருக்கவும் வாய்ப்பிருந்தது. இருவருக்கும் ஏதோ பழைய பகை இருக்கலாம் என்கிறார்கள் கவாஸ்கரும் டீன் ஜோன்ஸும். இருவரும் தில்லி வீரர்கள் என்பதால் தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பி.சி.சி.ஐ. இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அடுத்தது இன்னமும் தொடரும் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் பிணக்கு. 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. பிறகு, இரு அணி வீரர்களும் கைகுலுக்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுத காட்சியை இந்தியாவே பார்த்துத் திகைத்தது. தோல்வியினால் கடுப்பில் இருந்த ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்பட்டது. (கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை). பி.சி.சி.ஐ., ஹர்பஜன் சிங்குக்கு ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள மேட்சுகளில் விளையாட தடை விதித்தது. பிறகு, இந்திய அணியில் ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும் ஆட வேண்டிய நிலை வந்தபோது, ‘ஹர்பஜன்சிங் எனது மூத்த சகோதரர் மாதிரி. அந்தக் கசப்பான சம்பவத்தை மறந்து விட்டேன்’ என்று ஸ்ரீசாந்த் கூறினார். 2009ல், ஸ்ரீசாந்த் உதவியுடன் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் செஞ்சுரி அடித்தார் ஹர்பஜன். எல்லாமே சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் இப்பிரச்னை கிளம்பியுள்ளது. எல்லாம் இந்த கம்பீர் - கோலி மோதலால்தான். இதைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டபோது, ‘ஸ்லாப் கேட்’ என்று 2008ல் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டது. உடனே ட்விட்டரில் வெகுண்டெழுந்தார் ஸ்ரீசாந்த்.

‘அவர் என் கன்னத்தில் அறையவில்லை. விசாரணை நடத்திய சுதிர் நானாவதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக மௌனமாக இருந்தேன். இப்போது உண்மைகளை அனைவரும் அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த வீடியோ காட்சியைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்,’ என்று எழுதிவிட்டார்.அவ்வளவுதான். கம்பீர் - கோலி சண்டையை எல்லோரும் மறந்துவிட்டனர். ஹர்பஜன் - ஸ்ரீசாந்தின் ‘ஸ்லாப் கேட்’ விவாதிக்கப்பட்டது. நியூஸ் சேனல்களில் அனல் பறந்தது. நல்ல வேளையாக, ஹர்பஜன் இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காததால் கிளம்பிய தீப்பொறி அணைக்கப்பட்டது. மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பினால் ஸ்ரீசாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பி.சி.சி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்னை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.ஐ.பி.எல். ஆரம்பித்துவிட்டால் லலித் மோடி உற்சாகமாகிவிடுவார். ட்விட்டரில் தினமும் சர்ச்சைக்குரிய செய்திகளை அள்ளிவிடுவார். அதுவும், சி.எஸ்.கே. - ஸ்ரீனிவாசனுக்கு எதிராகப் பேசுவதென்றால் அப்படியொரு ஆர்வம்! ‘சென்ற வருடங்களில் சி.எஸ்.கே.வில் இருந்த ஸ்ரீசாந்த், இந்தமுறை சன் ரைசர்ஸ் அணிக்கு ஏன் சென்றார்? பொதுவாக ஸ்ரீனிவாசன், தன் கூடாரத்தில் உள்ளவர்களை எதிரணிக்கு அனுப்பமாட்டாரே, இதிலுள்ள ரகசியங்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் பிரச்னை மீண்டும் கிளம்பியவுடன், ‘இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது. சம்பவம் நடந்த போது, அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதால்தான் வீடியோவை வெளியிடவில்லை. வீடியோவை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன்’ என்று ட்விட் செய்து பரபரப்பைக் கிளப்பினார். பிறகு சில மணி நேரங்களில், ‘வீடியோவை வெளியிடமாட்டேன். பிரச்னை முடிவடைந்து விட்டது’ என்று சொல்லிவிட்டார்.

இன்னும் ஒரு மாதத்துக்குமேல் ஐ.பி.எல். தொடரப்போகிறது. அதுவரை, சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு இல்லை.ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பட்டையைக் கிளப்பிய ரவீந்திர ஜடேஜாதான் இந்திய கிரிக்கெட்டின் புதிய ராக் ஸ்டார். ஐ.பி.எல்.-லில் இவர்தான் தினம் தினம் பேசப்படுகிறார். சர் ஜடேஜா என்று ஜடேஜாவை ட்விட்டரில் தோனி கேலி செய்ய, உடனே பற்றிக் கொண்டுவிட்டது. அடுத்த சில நாள்களில், கடைசி பந்தில் (நோ பால்) கேட்ச் கொடுத்து அவுட்டாகியும் சி.எஸ்.கே.வை வெற்றி பெறச் செய்தார் ஜடேஜா. அவ்வளவுதான், சர் ஜடேஜாவின் புகழ் எங்கேயோ போய்விட்டது. சென்ற வருடம் ராஜ்கோட்டில் Jaddu's Food Field என்கிற ஹோட்டலை ஏழு கோடி செலவில் தொடங்கி இருக்கிறார், ஜடேஜா. ஆனால், ஐ.பி.எல்.-லில் நட்சத்திரம் ஆகி, இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பு சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார். ஜடேஜாவின் அப்பா, வாட்ச்மேனாக வேலை பார்த்திருக்கிறார். அம்மா நர்ஸாக. இந்திய அணியில் ஆடவேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் ஜடேஜா.

ச.ந.கண்ணன்