Search This Blog

Saturday, June 18, 2011

'2ஜி' - அனந்தகிருஷ்ணன் கில்லாடிக்குக் கில்லாடி!


ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் வசம் இருந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதை மையம்கொண்டு 2ஜி விவகாரத்தில் புதிய புயல் வீசுகிறது. அதை வாங்கியது அனந்தகிருஷ்ணன்; விற்றது சிவசங்கரன். விற்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாக, அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு! 'எட்டுத் திக்கும் கத்தி சுத்தும் ஜெகதலப் பிரதாபன் என்று வர்ணிக்கப்படும் சிவசங்கரனிடம் இருந்து, கத்தி இன்றி ரத்தம் இன்றி அவரது நிறுவனத்தைப் பறிக்கும் அளவுக்கு அனந்தகிருஷ்ணன் அத்தனை பெரிய கில்லாடியா!’ என்று ஒரு சிலர் புருவம் உயர்த்தக்கூடும். யார் இந்த அனந்தகிருஷ்ணன்?

மலேசியாவில் இருக்கும் பணக்காரர்களைத் தர வரிசை இட்ட அமெரிக்காவின் ஃபோக்ஸ் நிறுவனம், தனது பட்டியலில் இரண்டாவது இடத்தை அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்து இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பேரில் அனந்தகிருஷ்ணனும் ஒருவர்! ஆங்கிலேயர்களிடம் குமாஸ்தா வேலை செய்ய... இலங்கையில் இருந்து மலேசியா சென்ற தமிழர்களுக்கு, செங்கல் சூளை அமைந்திருக்கும் பகுதியில்தான் தங்க இடம் கிடைத்தது. அங்குதான் அனந்தகிருஷ்ணனின் அப்பா, தன் குடும்பத்தோடு தங்கி இருந்தார். அனந்தகிருஷ்ணன் பிறந்ததும் அங்குதான். விவேகானந்தா பள்ளியிலும், விக்டோரியா கல்லூரியிலும் படித்தார். இலங்கையில் இருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பி.ஏ., (ஹானர்ஸ்) எம்.பி.ஏ. முடித்த அனந்தகிருஷ்ணன்,  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

படித்து முடித்து மலேசியா திரும்பிய அனந்தகிருஷ்ணனின் எண்ணம் எப்போதும் ஊடகத்தைச் சுற்றித்தான் இருந்தது. படிக்கும் காலத்திலேயே ரேடியோ மற்றும் நாளிதழ்களில் பகுதி நேரப் பத்திரிகையாளராகப் பணி ஆற்றியவர். இருந்தாலும், பூமியைப் பிளந்துகொண்டு பணம் கொட்டும் என்பதால், பெட்ரோல் துறையில்தான் முதல் அடி எடுத்துவைத்தார். முதல் இடமே அவரை வான் அளவுக்கு உயர்த்தியது!மலேசியா என்றதும் நினைவுக்கு வருவது கோலாலம்பூரில் இருக்கும் 88 மாடிகளைக்கொண்ட பெட்ரோனாஸ் கோபுரம். இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு மூல விதைகளாக இருந்தவர்களில் அனந்த கிருஷ்ணனும் ஒருவர். குதிரைப் பந்தயத்தில் இருந்து, ஆன்லைன் லாட்டரி வரை பணம் கறக்கும் காமதேனுக்களும், செல்வம் கொழிக்கும் கற்பக விருட்சம் மாதிரியான நிறுவனங்களும், அவரிடம் ஏராளமாக இருக்கின்றன. மலேசியாவில் மட்டும் இவருக்கு 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. அரபு நாடுகள் மற்றும் ஆசியாவில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் இவருக்குச் சொந்தம்.

ஜெர்மனிக்கு அருகில் இருக்கும் ஒரு தீவை சுற்றுலா சொர்க்கமாக மாற்றி நடத்தி வரும் அனந்தகிருஷ்ணனுக்கு சொந்தமாக ஒரு விமானம் இருக்கிறது.  ஆனால், மூன்று செயற்கைக்கோள்களை தனது சொந்தப் பயன்பாட்டுக்காகச் சுற்றவிட்டு இருக்கிறார். எதற்கு செயற்கைக்கோள் என்று கேட்காதீர்கள். அவை இல்லாவிட்டால், பிறகு எப்படி எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு டி.வி. சேனல்களையும் செல்போன் நிறுவனங்களையும் நடத்துவது?பங்கு வர்த்தகத்திலும் கரை கண்ட அனந்தகிருஷ்​ணனுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகின் பல இடங்களில் பங்களாக்கள் இருக்கின்றன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஓவியங்கள் இவருக்கு சொந்தமான கலைக்கூடத்தை அலங்கரிக்கின்றன. இளம் வயதில் அவர் படித்து ரசித்த இங்கிலாந்து பத்திரிகைகளை (பத்திரிகை நிறுவனங்களை) எல்லாம் விலைக்கு வாங்குவதுதான் அனந்தகிருஷ்ணனுக்கு இப்போதைய பொழுதுபோக்கு. நம் ஊர் 'கலைமாமணி’ மாதிரி மலேசியாவில் ஆயிரம் விருதுகள் இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற பட்டங்கள் எதிலும் ஆர்வம் காட்டாதவர் அனந்தகிருஷ்ணன். இவருக்கு மூன்று வாரிசுகள். இதில் ஒருவர் துறவறம் பூண்டுவிட்டாராம்!

73 வயதாகும் அனந்தகிருஷ்ணனுக்கு, சுய விளம்பரம் பிடிக்காத ஒன்று. எத்தனை பெரிய டி.வி-யாக இருந்தாலும் அவரிடம் பேட்டி வாங்கவே முடியாது. இருந்தாலும், டி.வி. என்றால் அனந்தகிருஷ்ணனுக்கு அபார ஈடுபாடு. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரதானமான டி.வி. சேனல்களை நடத்துவது இவர்தான். நம் ஊர் மெகா சீரியல்களில் இருந்து சினிமாக்கள் வரை அத்தனையும் தென் கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் தமிழர்களைச் சென்றடைவது இவரது ஆஸ்ட்ரோ டி.வி. மூலமாகத்தான். இவருடைய மேக்சிஸ் நிறுவனம்தான், மலேசியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனம். இதற்கு, அந்த நாட்டில் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மேக்சிஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை பல கோடிகள் கொடுத்து வாங்குவார். அதில் கொஞ்சத்தை அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பார். இன்னொரு பக்கம், பொதுமக்களிடம் இருந்து தனது நிறுவனத்துக்குப் பணம் திரட்டுவார். இருந்தாலும் மேக்சிஸ் நிறுவனத்தைத் தனது இரும்புப் பிடிக்குள் தொடர்ந்து வைத்து இருப்பார். 

ஆக மொத்தம், சிவசங்கரன் கில்லாடி என்றால், அனந்தகிருஷ்ணன் கில்லாடிக்குக் கில்லாடி!

விகடன் 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அரசே ஏற்கும் - கலெக்டர் சகாயம்

ன்னும் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி... சீர் செய்யாவிட்டால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மோட்டார் வாகன விதி எண் 245(1)-ன் படி அரசே ஏற்கும்!’ - மதுரை மாநகராட்சி ஆணை யருக்கு கலெக்டர் சகாயம் அனுப்பி இருக்கும் இந்த நோட்டீஸைப் பார்த்து, அலறிக் கிடக்கிறார்கள், மாநகராட்சி அதிகாரிகள். 

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தி.மு.க-வினரின் ஆதிக்கம்தான். மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தி.மு.க-வின் கையிலேயே இருப் பதால், இவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போனது. ஆரம்பத்தில் சுமார் 156 கடைகள்தான் இருந்தன. பயணிகள் வசதிக்காக போஸ்ட் ஆபீஸ், ஓய்வெடுக்கும் அறை, சுகாதாரமான டாய்லெட் வசதி இருந்ததைப் பார்த்துவிட்டு (ஏமாந்து!) ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால், இந்தச் சான்றிதழ் வாங்கிய பிறகு, இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிய தி.மு.க-வினர், நடைபாதைகளை மட்டுமில்லாமல் பயணிகள் தங்கும் அறையையும் கடைகளாக்கிக் காசு பார்த்துவிட்டார்கள். இவர்களின் ஆக்கிரமிப்புக்கு போஸ்ட் ஆபீஸும் தப்பவில்லை!



இப்போது கிட்டத்தட்ட 250 கடைகள் இருப்பதாகச் சொல்கிறது மாநகராட்சி. இதில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் முறையான அனுமதி இல்லாதவை. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே நபரே இங்கு 14 கடைகளை வளைத்துப் போட்டிருக்கிறாராம். அனுமதி பெற்ற கடைக்காரர்கள்கூட பயணிகள் நடமாட முடியாதபடிக்கு அக்கம் பக்கத்தில் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.ஒரு கடைக்கு மாத வாடகை யாகக் குறைந்தபட்சம் 10 ஆயிரமும் அதிகபட்சமாக 25 ஆயிரமும் வசூலிக்கிறது மாநகராட்சி. ஆனால், இங்கே கடைகளை வளைத்துப் போட்டி ருப்பவர்கள்   80 லட்சம் வரை பகடி வசூலித்துக்கொண்டு உள்வாடகைக்கு விட்டு இருக் கிறார்கள். இப்படி கடைகளை எடுக்கும் வியாபாரிகள், டூப்ளி கேட் சரக்குகளையும் எடை குறைவான பொருட்களையும் அப்பாவிப் பொதுமக்கள் தலையில் கட்டி, போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கிறார்கள்!


இங்குள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கே 3 அழுதால்தான் உள்ளே விடுவார்கள். கேள்வி கேட்டால், ''இங்க எதுக்கு வர்றே... பிளாஸ்டிக் பையில் பிடிச்சு வீட்டுக்கு கொண்டு போ!'' என்பார்கள் நக்கலாக. 'இதற்கு எப்படி ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என்று வியக்கும் அளவுக்கு குடிநீர், சுகாதாரம் எல்லாமே இங்கு மகாமட்டமாக இருக்கும். இந்த அவலங்களுக்குத்தான் சாவு மணி அடித்து இருக்கிறார் சகாயம்!

இது குறித்து சகாயத்திடம் பேசியபோது, ''மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அவலங்கள் குறித்து எனக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள். என்னதான் நடக்குதுன்னு பாக்குறதுக்காக நான் மக்களோடு மக்களாக யாருக்கும் தெரியாமல் தனியே அங்கே விசிட் போனேன். கழிப்பறையில் என் கண் முன்னாடியே 3 வசூல் பண்ணுனாங்க. அப்போதைக்கு எதையும் வெளிக்காட்டிக்காம வந்துட்டேன். மாகராட்சிக்குன்னு மேயர் இருக்காங்க, கமிஷனர் இருக்காங்க. அவங்களோட அதிகாரத்துல குறுக்கிடக் கூடாதுன்னுட்டு. 'இதையெல்லாம் சரி செய்யுங்க’ன்னு அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தேன். ஆனா, அவங்க சரியான நடவ டிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகுதான் நானே டிரான்ஸ்போர்ட் அதிகாரிகளைக் கூட் டிட்டு முறைப்படி பேருந்து நிலையத்துக்கு விசிட் போய், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு போட்டேன்.

பேருந்து நிலையத்துக்கு ஆர்.டி.ஓ. மூணு வருடங்களுக்கு ஒரு முறை உரிமம் கொடுக்கணும். ஆனா, அதைக்கூட கடந்த ஆறு வருடங்களாக வாங்காமல் இருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தால், ஆர்.டி.ஓ. மூலமாக அதை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்னு விதி இருக்கு. அதன் அடிப்படையில்தான் 'ஒரு வாரத்துக்குள் பேருந்து நிலைய சீர்கேடுகளைச் சரிசெய்யவில்லை என்றால், அரசே ஏற்கும்’னு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தேன். 'சீர்கேடுகளைச் சரிசெய்துகொண்டு இருக்கிறோம்’னு பதில் கொடுத்து இருக்கிறார்கள். அதிகாரிகளை அனுப்பி சரிபார்ப்போம். திருப்தி இருந்தால் சரி... இல்லாவிட்டால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்!'' என்று உறுதியாகச் சொன்னவர்,

''எடை குறைவான பொருட்களை விற்பது சம்பந்தமான புகார்கள் தொடர்பாக நேற்றுக்கூட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சோதனை நடத்தி, தராசுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாட்டுத்தாவணியில் மட்டும் இல்லாமல் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்கள். இதே போல் திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்...'' என்றும் கூறினார்.

கலெக்டர் அனுப்பி இருக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் குறித்து மாநகராட்சி கமிஷனர் செபஸ்டியனிடம் கேட்டதற்கு, ''இத்தனை நாளும் ஆக்கிரமிப்புகள் குறித்து யாரிடம் புகார் செய்யவேண்டுமோ, அவர்களே ஆக்கிரமிப்புகளை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அதனால் ஆக்கிரமிப்புகளை எடுக்க முடியாத சூழல்! இப்போது கலெக்டர் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார காலத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் காட்டுவோம்!'' என்றார் அழுத்தமாக!

விகடன்  

Friday, June 17, 2011

சமச்சீர் கல்வி சில கேள்விகள் - அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை


கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதைப்போல் இருக்கிறது என்ற பழமொழிக்கான பொருளை இப்போது தெளிவாக உணர முடிகிறது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் வருமா? வராதா? எந்தப் பாடத்திட்டத்தைப் படிப்பது? 3 வாரகாலத்துக்குக் காத்திருக்கவேண்டிய நிலையில் தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர். சமச்சீர் கல்வி என்ற விவாதம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தீவிரமாக இருந்தது.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் விவாதத்தை மேலும் நீடிக்கச் செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் பல்வேறு விவாதங்களை, கருத்தறிதல்களை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைத்தவைகளிருந்து ஒரு சிலவற்றைமட்டுமே கடந்த திமுக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் நான்குவாரியங்களைக்  கலைத்து ஒன்றாக இணைக்கும் ஆற்றலை திமுக அரசு கொண்டிருக்கவில்லையென்றும், கல்வியாளர்தரப்பு, திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தது.மேலும் அதை எதிர்த்துப் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தனர். இந்த விமர்சனங்களும், வெறுப்புகளும் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையால், அதிமுக மீது திருப்பிவிடப்பட்டிருக்கிறது என பெற்றோர்கள் பரவலாகப் பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது.

முனைவர் ச. முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று அமலாக்க வேண்டுமென, தமிழகப் பெற்றோர்கள் எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. ஆனால், பாடத்திட்ட அளவில் வந்துவிட்ட அமலாக்கத்தை முழுமையாக நிறுத்திவைத்து, புதிய குழுவை அமைத்து, புதிய வகையில் தரம் உயர்த்தப் போவதாக இப்போதைய மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், சட்டத்திருத்தமும் பெற்றோர்களை 10-ம் வகுப்பு மாணவர்களை, கல்வியாளர்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.இப்போது உச்ச நீதிமன்றம் 3 வாரகாலத்துக்குப் பள்ளிகள் திறந்து இருக்கலாம்; எந்தப் பாடத்திட்டமும் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அமலுக்கு வந்துவிட்ட கல்வியாண்டைக் கணக்கில்கொண்டு, மாநில அரசு தரம் உயர்த்துவதற்கான குழுவை மட்டும் நியமித்திருந்தால், கல்வியாளர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால், கடந்த திமுக ஆட்சியின்போது பாடத்திட்டங்களை மட்டும் ஒருங்கிணைத்து ஒன்றாக்குவதை சமச்சீர் கல்வி என்கிற சாதனைப் பட்டியலுக்குள் அடைக்கப்பார்த்தது.

இந்நிலையில் பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டனர். உளவியல் ரீதியில் இதுதான் பாடப் புத்தகம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள், இப்போதைய அரசின் அறிவிப்பால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.கல்வி குறித்த விவாதத்தில், ஐரோப்பிய நாடுகளை விடவும் நாம் பின்தங்கி இருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெரியார், பாரதியார் என பல இந்திய அறிஞர் பெருமக்கள் கல்வி குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் உள்வாங்கியதாக இந்தியக் கல்விமுறை இன்னும் மாற்றம் பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழிக் கல்வி அவசியம் என்கிற சட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில், அன்றைய நீதிமன்றம் தலையிட்டு அதற்குத் தடை விதித்தது. அன்றைக்குப் பெற்றோர்களும் ஆங்கில அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்வது, புரிதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரசாரம் செய்தனர். அன்றைக்கும், இன்றைக்கும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடியவர்கள் தமிழகத் தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஆவர்.உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அருகாண்மை பொதுப்பள்ளி முறையை அமலாக்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள பலர் தங்களின் வாதத் தேவைக்காக அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டுவது உண்டு. அத்தகைய அமெரிக்காவில் அருகாண்மை பொதுப்பள்ளிகள்தான் அமலில் உள்ளன. நம்முடைய தமிழகத்தில் இத்தகைய பள்ளிமுறை வருவதை எதிர்க்கும் நோக்கம் புரியாததாகவே உள்ளது.

குடிக்கும் தண்ணீரைக்கூடப் பணம் கொடுத்து வாங்கும் பண்பாடு வளர்ந்துவிட்ட நம் நாட்டில், கல்வி பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உயர்ந்த தரமான கல்வியென மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி பெறுவதை உரிமையாக அளிப்பதற்குப் பதிலாக, வணிகப் பொருளாக ஆட்சியாளர்கள் மாற்றியிருப்பது அவலத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.    குறிப்பாக, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டங்களும், காலவரையற்ற உண்ணாவிரதங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் கல்வி வணிகமாவது ஏன் என்கிற கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்குப் பல லட்சங்களைச் செலவிடும் மாணவரும், பெற்றோரும் அந்தச் செலவினத்தை எதிர்காலத்தில் அடைவதற்காகத் தவறு செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஊழல் எதிர்ப்பில் முன்னின்று கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களே. ஊழலுக்கான ஊற்றுக்கண்ணாக கல்வி வணிகம் அமைந்திருப்பதைக் கணக்கில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.

இன்று தமிழகத்திலும் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு கல்லுரிகளையும், பள்ளிகளையும் நடத்தும் தாளாளர்கள் என்பதை மறுக்க இயலாது. இன்றைக்கு அரசியலுக்கு வருகிற பணத்தில் கணிசமான பங்கு சுயநிதிக் கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கல்வியாளர் முனைவர் ச. அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.எனவே, இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற கல்வி வணிகத்தைத் தடுப்பது குறித்து தீவிர கருத்துப் பிரசாரம் அவசியப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிற சமச்சீர் கல்வி அமலாக்கத்தை வலியுறுத்துவதில் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் உருவான பிறகு, கரன்சி, வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொதுக் கல்விமுறை உருவாக்கத்தையும் அமலாக்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.அதற்காக 2010-ம் ஆண்டில் 30 லட்சம் மாணவர்களைக் கொண்டு கல்வித்துறையில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் நோக்கம் ஏற்கெனவே பெற்ற வளர்ச்சியை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்வதைத் தவிர வேறில்லை. அதேநேரத்தில் இந்தியா போன்ற நாட்டில் யுனேஸ்கோ குறிப்பிட்ட கருத்தை உள்வாங்கிக் கொள்வது தேவையாகி இருக்கிறது. தரமான கல்வி என்பது குறித்து பல்வேறு வரையறைகள் உள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் கல்வியின் தரம், குடும்பத்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல், உள்ளூர் வளம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற கல்வி, குறிப்பிட்ட பகுதி மக்களின் பண்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவும், அதைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. குழந்தைகளை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. எனவே, இவைகுறித்து தீவிர விவாதங்களிலிருந்து தரமான கல்வியை அடைவதற்கு முயற்சிக்க வேண்டுமென யுனேஸ்கோ ஆய்வு அறிக்கை (2008) தெரிவிக்கிறது.ஒரு வாதத்துக்காகக் கூறுவது என்றால், அனைத்துவிதமான அரசுகளும் தங்களுக்கு என்று சாதகம் உள்ள அமைப்பு ரீதியாக ஏற்பாடுகளை கொண்டிருக்கத்தான் செய்கின்றன. கல்வித்துறை, பாடத்திட்டம் இதற்கு விதிவிலக்கல்ல என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய சாதக அம்சங்களை கொண்ட தன்மையில் அமைய வேண்டும் என விருப்பம் கொண்டவர்களாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதிய பாடல் இடம்பெற்றிருப்பதை ஆளும்கட்சி விவாதம் ஆக்கவில்லை என்றாலும், கருணாநிதி வலிய முன்வந்து பாடலை அகற்றக்கோரி இருப்பது ஏற்கமுடியாத அரசியல். இப்போது சொல்வதைக் கடந்த ஆண்டே எடுத்திருந்தால் ஒருவேளை பாராட்டுக்குரியவராக இருந்திருப்பார். இன்னொரு வகையில் பார்க்கிறபோது யார் எழுதியது என்பதைவிட என்ன எழுதப்பட்டது என்ற கோணத்தில் புரிந்துகொள்கிற அரசியல் பண்பாடு தேவையாக இருக்கிறது. இதுபோன்ற பெருந்தன்மைக் குறைவால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.3 வார காலம் 1 மற்றும் 6-ம் வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்கள் தேவையற்ற காத்திருப்புக்கு ஆளாகியுள்ளனர். பாடப்புத்தங்களைப் பின்பற்றுவது என்பது இயலாத இந்த 15 நாள்களைக் கண்டு பெற்றோரும், மாணவர்களும் அஞ்சத்தேவையில்லை. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கல்வி முறையும், போதனைமுறையும், அறிவு வளர்ச்சிக்குத் துணைசெய்கிற வகையில் ஏராளமான உதாரணங்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இக்காலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கல்வித் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிப்படைக் கணிதம், அறிவியல் துறைகளில் உயர் கல்வி மாணவர்களுக்கும்கூட சில பயிற்சிகளை அளிப்பது குறித்து ஆசிரியர் சமூகம் திட்டமிட வேண்டும். செய்முறைக் கல்வி, கல்விச் சுற்றுலா, நூலகத்தைப் பயன்படுத்துதல், விளையாட்டு மற்றும் எழுத்துத் துறைகளில் மாணவர்களை மேம்படுத்த இக் கால அவகாசம் பயனளிக்கலாம். ஆட்சியாளர்களுக்கு நமது வேண்டுகோள் 3 வாரத்தோடு இந்த ஆண்டுக்கான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே.



எஸ். கண்ணன்
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்.     

Thursday, June 16, 2011

ஜெயலலிதா - செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம்


ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...

இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட வைகோ, தி.மு.க-வு டன் கூட்டணியில் இருக்கும் திருமாவள வன், 40 ஆண்டுகளாக ஈழப் பிரச்னைக்கா கத் தன்னை அர்ப்பணித்துவிட்ட பழ.நெடு மாறன் என எல்லோருக்கும் ஜெயலலிதா வின் தீர்மானத்தால், மகிழ்ச்சி.



'இது ஜெயலலிதா நடத்தும் அரசியல் நாடகங்களில் ஒன்று’ என்று தி.மு.க. சார்பு ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எத்தனையோ நாடகங்களை நடத்திய கருணாநிதி, இதையும் செய்திருக்கலாமே? ஏன் மறுத்தார்? கருணாநிதியின் மௌனம்கூட, ஜெயலலிதாவைப் பேசவைத்து இருக்கலாம். எது காரணமாக இருந்தாலும், ஈழப் பிரச்னையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது ஜெயலலிதாவின் தீர்மானம்!

''தமிழர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. பரவலாகக் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங் களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய மறுத்தது. போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது போன்ற கடுமையான, நம்பத் தகுந்த குற்றச் சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது'' என்று குற்றம்சாட்டும் தமிழக அரசின் தீர்மானம், ''இத்தகைய போர்க் குற்றங் களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்ற வாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று பகிரங்கமான கோரிக்கையை வைத்துள்ளது.


2009 மே மாதம் வரை நடந்த கொடுமைகளுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தாத தமிழகம்... 16-ம் நாள் கூடப் பதறாத தமிழகம்... சுமார் 750 நாட்கள் கழித்து மாட்சிமை பொருந்திய தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொடுமைக்குக் கண்ணீர் விடும் தீர்மானத் தைக் கொண்டுவந்து இருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் ஓர் உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் அந்நாட்டு அரசுகள் செய்ததைக்கூட, ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் தமிழகம் இதுவரை செய்ய வில்லை. இப்போது ஜெயலலிதாவின் தீர்மானம், ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளது. 

ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர்விளைவை ராஜபக்ஷே மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியின் காரணமாகத்தான், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் உடனடியாக சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித் தார். இலங்கை அரசுக்கும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இந்தத் தீர்மானம் தீராத தலைவலியைக் கொடுக்கப்போகிறது.'இலங்கையை முன்னால் விட்டு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுதான் பின்னால் நின்று போரை நடத்தியது!’ என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை மன்மோகனும் சோனியாவும் மௌனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளைப் பகிரங்கமாகவே செய்தது. வைகோ வுக்கு பிரதமர் எழுதிய கடிதங்கள் இதற்குச் சான் றாக உள்ளன. 'இந்தியா வுக்கு நன்றி’ என்று கொழும் பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. 'போரில் ஒவ்வொரு நாளும் நடப்பதை இந்தியாவுக்கு நாங்கள் தகவல் தந்துவந்தோம்’ என்றார் இலங்கை ராணுவத் தளபதி. இலங்கை சார்பில் சரத் ஃபொன்சேகா, பஷில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே ஆகிய மூவரும்... இந்தியா சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு போர்க்காலங் களில் பேசி வந்தார்கள்’ என்று பகிரங்கமாக இலங்கை அரசு அறிவித்தது. இதை எல்லாம் சொல்லும்போது, 'மத்திய அரசுதான் எதையும் செய்யவில்லை என்கிறார்களே’ என்று பொத்தாம் பொதுவாக பதிலைச் சொன்னார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி.



''இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்'' என்றால், அதில் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சேர்ந்து மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் சிக்கலாம். ஊழல் வழக்குகளில் சிக்கி மூச்சுத் திணறும் மன்மோகன் தலையில் பெரிய கொட்டுவைத்து உள்ளது தமிழக அரசின் இந்தத் தீர்மானம்.ஜெயலலிதாவின் கடமைகள் இதோடு முடிந்துவிடவில்லை. தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தின் விவாதப் பொருளாக ஆக்கி, அங்கும் இப்படி ஒரு தீர்மானத்தை முன்வைக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இன அழிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இடத் தில்  கூட்டி ஒரு தீர்மானத்தை முன்மொழிவதும்... அதையே டெல்லியில், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங் மற்றும் லாலு கட்சி எம்.பி-க் களையும் ஒருங்கிணைத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் வழிமொழிதலுடன் டெல்லி செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்வதும் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.

ஜெயலலிதா, நினைவாற்றலில் தேர்ந்தவர். 1983 கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனா இதே போல் தமிழர்களைக் கொன்று தீர்த்தபோது, அன்றைய முதலமைச்சர்  எம்.ஜி.ஆர். கறுப்புச் சட்டை அணிந்து போராடினார். 'ஜெயவர்த்தனாவுக்கு அமெரிக்க அரசுதான் ஆயுத உதவி செய்கிறது’ என்பதைக் கேள்விப் பட்டதும், சென்னயில் இருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிராக (12.10.1983) பேரணி நடத்தினார். அன்று, தூதர் விக்டேக்கரிடம் மனுவைக் கொடுத்தவர் அப்போதைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாதான்.

'மனித உரிமைகள் குறித்து நாள் தோறும் பேசி வருகிற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்காதது தவறு. தனது அரசியலுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையை அமெரிக்க அரசு ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று தனது தீர்க்கமான குரலில் ஜெயலலிதா அப்போது சொன்னார்.அமெரிக்காவுக்கு அன்று சொன்னதை, இங்குள்ள காங்கிரஸ் அரசுக்கு இப்போது சொல்வாரா ஜெ?

விகடன் 

Wednesday, June 15, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் - தயாநிதி மாறன் - பத்து சாட்சிகள்

முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர்  தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்! தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது...

''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.

ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர். இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்த பட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தி இருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?


பல ஆபரேட்டர்களை அனுமதிப்ப தன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தி யில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.

''என்.டி.ஏ. ஆட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை அடுத்து, டிராய் அமைப்பு ஒருங் கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமம் சம்பந்தப்பட்ட சிபாரிசுகளை 18 மாதங்களுக்குப் பின்னர் கொடுத்தது. அந்த சமயத்தில் என்.டி.ஏ. ஆட்சி இல்லை. இந்த இறுதி சிபாரிசு வந்த 2005 அக்டோபரில் தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர். ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்களை வழங்குவது குறித்து அந்த சிபாரிசில் சொல்லப்பட்டது. ஆனால், மாறன் இந்த சிபாரிசுகளைக் கிடப்பில் போட்டார். இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்ட மிட்டார்.  


மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார்.

இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளி களின் ஆதரவு கிடைக்கவும், அதையட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவல கத்தின் ஒன்பதாவது மாடி வரை சிவசங்கரன் படி ஏறிவிட் டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்த தாகச் சொல்லப்படுகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்போகிறது. அடுத்த கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக் கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை விற்கவைத்தார் என்று சிவசங்கரன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுமார் 10 சாட்சி களை சி.பி.ஐ. முன் நிறுத்தத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருப்பவர்களாம். வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களும் இதில் அடக்கம் என்று கூறப் படுகிறது.

இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது. இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம் வரை பதவி வகித்தார். ''மேக்சிஸ் நிறுவனம் நான் அமைச்சராவதற்கு முன்பே எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. 15 வருடங்களாகத் தொடர்பு உண்டு!'' என்பது தயாநிதி தரப்பு விளக்கமாக உள்ளது.

''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ண னின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும் பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட் ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார். அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமை யைக் காட்டுகிறது! 

விகடன் 

Tuesday, June 14, 2011

ஆம்னி பஸ் கொள்ளை..


கடந்த வாரம் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஒரு தனியார் சொகுசுப் பேருந்து எரிந்த விபத்தில் 23 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பக் கதைகளும், சோகங்களும் ஓரிரு நாள்கள் பேசப்பட்டன. பத்திரிகைகள் எழுதின. ஊடகங்களில் பேட்டிகள் இடம்பெற்றன. அரசும் இவர்களது குடும்பங்களுக்குக் கருணைத்தொகை அறிவித்தது. அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தனர். எரிந்துபோய் எலும்புக்கூடாக நின்ற பேருந்து அகற்றப்பட்டது. நான்காவது நாளே அனைவராலும் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது.

இது உலக வழக்கு என்றாலும், இந்தச் சம்பவத்திலிருந்து அரசும், அதிகாரிகளும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் பெற்ற படிப்பினை என்ன என்றால், ஒன்றுமே இல்லை என்பதைப் போலத்தான் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த விபத்தில் மூன்று விஷயங்களை நினைவுகூர வேண்டியுள்ளது.


முதலாவதாக, இந்தப் பேருந்து ஓட்டுநர், ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி பேருந்து பக்கமாக நகர்ந்ததால், மோதலைத் தவிர்க்க முயன்றபோதுதான் இந்த விபத்து நேரிட்டது என்று கூறியுள்ளார்.  நாற்கரச் சாலைகளில் கனரக வாகனங்கள் சாலையின் இடது பக்கமாகச் செல்ல வேண்டும் என்று பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் எழுதி வைக்கப்பட்டும்கூட, கனரக வாகன ஓட்டுநர்கள் அதைப் பொருள்படுத்துவதே இல்லை. இதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுப்பதோ அல்லது அத்தகைய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதோ இல்லை. நெடுஞ்சாலைக் காவலர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.  மேலும், சாலையில் லாரி ஓட்டுநருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் ஏற்படும் தகராறின் விளைவாக, லாரிகள் வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பதும், பேருந்து முந்திச் செல்லும்போது வேண்டுமென்றே பிரேக் போட்டு, பேருந்து ஒட்டுநருக்கு அதிர்ச்சிதரும் விளையாட்டை அரங்கேற்றுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு பயணிகள் பேருந்தின் ஓட்டுநரை தடுமாறச் செய்வதன் மூலம் குறைந்தது 50 பயணிகளின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற உணர்வு இந்த லாரி ஓட்டுநர்களிடம் இருப்பதே இல்லை. விபத்து நடந்தால் இந்த லாரிகள், நிற்காமல் பறந்துவிடும்.

பயணிகள் பேருந்து ஓட்டுநர்களின் மீதான கோபத்தை, பயணிகளின் உயிருக்கு உலைவைப்பதாய் மாற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தண்டனைக்குரியவர்களா இல்லையா? பயணிகள் வாகனங்களின் முன்புறம் ஒரு சிறு விடியோ கருவி பொருத்துவதை (விமானங்களில் கருப்புப்பெட்டி போல) கட்டாயமாக்கி, விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்வதும், நடவடிக்கை எடுப்பதும் இயலக்கூடியவைதானே? அதிலும் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இற்றைநாளில், அதற்கான செலவும் மிகக் குறைவுதான்.

இரண்டாவதாக, சொகுசுப் பேருந்து கவிழ்ந்தவுடன், டீசல் கசிவு ஏற்பட்டு பேருந்து எரிந்துள்ளது. பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டுமே தப்பிக்கும்படியாக அத்தனை விரைவில் தீப்பிடித்தற்கான காரணம் டீசல் மட்டும்தானா? இல்லை, பேருந்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டுப் பெட்டியின் கார்பன் மோனோ ஆக்சைடு வாயுவால்தான் இவ்வளவு விரைவில் தீ பரவியதா? 


 மூன்றாவதாக, இப்போதைய தனியார் சொகுசுப் பேருந்துகள் அனைத்துமே "ஸ்லீப்பர் கோச்' என்கிற பெயரில், ரயிலில் எப்படி "பெர்த்'தில் படுத்து வருகிறோமோ, அதே போன்று படுக்கை வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆகவே, உடனே தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சாதாரண வீடு கட்டினாலே வரைபடம் கேட்கும் இந்நாளில், ஒரு பயணிகள் பேருந்து எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதற்கு ஒப்புதல்பெற வேண்டியது அவசியமல்லவா? பயணிகள் பேருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறதா? இருந்தால் இந்தப் பேருந்துக்கு அவை ஏன் அமல்படுத்தப்படவில்லை? இந்த விபத்துக்குப் பிறகும் "ஸ்லீப்பர் கோச்' சொகுசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன?  இவை ஒருபுறம் இருக்க, சொகுசுப் பேருந்துகளை கட்டுப்படுத்தும் திறனற்ற அமைப்பாக நமது போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் மாறிவருகின்றன என்பதுதான் வேதனைக்குரியது. தனியார் சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் குறித்த எந்தக் கட்டுப்பாடும், வரையறையும் இல்லை. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். கேட்பார் இல்லை.

ஒரே பதிவு எண்ணில் இரண்டும், இரண்டுக்கு மேலும் பேருந்துகள் இயங்குவதும், உரிமம் இல்லாமலேயே சொகுசுப் பேருந்துகள் இயங்குவதும் (குறிப்பாகப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இவை களத்தில் இறங்கிவிடுகின்றன) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்பதைத்தான் அண்மையில் மதுரை ஆட்சியர் நடத்திய சோதனைகள் வெளிப்படுத்துகின்றன.  தமிழ்நாட்டில் 1.4.1993-ல் தனியார் ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 245. கடந்த ஏப்ரல் மாதப் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தற்போது 686 ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. இன்னொரு கூடுதல் தகவல்: 2006 ஏப்ரலில் தமிழ்நாட்டில் மாநில உரிமம் பெற்ற ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 310. ஆனால் 2007-ம் ஆண்டு 466 ஆக உயர்ந்து, தற்போது நிகழாண்டில் 515 வாகனங்களாக அதிகரித்துள்ளன.

 ஏன் இவ்வளவு சொகுசுப் பேருந்துகளை அனுமதித்தார்கள் என்பது நமது கேள்வி அல்ல. இவை அனைத்தும் கொள்ளை லாபத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி, அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே அதைத்தான் ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.  ஆம்னி பஸ் கொள்ளையைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா? நமது அரசுப் போக்குவரத்துத் துறையை மீண்டும் திறமையாகவும், தரமாகவும், குறைந்த கட்டணத்திலும் செயல்பட வைத்து சாதாரண பொதுமக்களின் நலனைப் பேணும் எண்ணம் அரசுக்கு ஏற்படவே செய்யாதா?

நன்றி : தினமணி    

   

Monday, June 13, 2011

எகிறும் கட்டுமானச் செலவு: சுருக்கி கட்ட ஐடியா


இன்றைய அவசர யுகத்தில் சொந்த வேலைகளை நாமே எடுத்துச் செய்ய நமக்கு நேரமுமில்லை; அதை சரியாக செய்து முடிக்கத் தேவையான அனுபவமும் இருப்பதில்லை.

 அதனால் கல்யாணத்தில் ஆரம்பித்து அனைத்து முக்கிய வேலைகளையும் கான்ட்ராக்டர் களிடம் விடும் வழக்கம் அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக வீடு கட்டுவதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு கான்ட்ராக்டரிடம் கொடுத்து விடுகிறோம்.

ஆனால், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஓடியாடினால் போதும், நமது வீட்டை நாமே கட்டிக் கொள்ளலாம், அதுவும் குறைந்த செலவில்! குறைந்த செலவில் வீடு கட்டுவது என்றவுடன் இரண்டாம் தரப் பொருட் களைப் பயன்படுத்தி தரம் குறைவாகக் கட்டுவது என எண்ணி விடாதீர்கள். நம்மைச் சுற்றிக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயர்ந்த தரத்துடன் குறைவான கட்டுமானச் செலவில் வீடுகளை எளிதாகக் கட்டலாம்.நமது மேற்பார்வையில் நாமே முன்னின்று கட்ட நினைத்தால் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? என்னென்ன வகையான சிக்கல்கள் நமக்கு வந்து சேரும்? அதற்கு என்ன தீர்வு?

திட்டமிடுதல்!

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், வேலை ஆரம்பிக்கும்  முன்பே திட்டமிட வேண்டும். எந்தமாதிரி வீடு, எந்த இடத்தில் என்ன வசதி வேண்டும், நமது பட்ஜெட் எவ்வளவு? என எல்லாவற்றையும் திட்டமிடுவது முக்கியம். 

தண்ணீர், மின்சாரம்!

முதலில் கட்டுமானத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, தண்ணீர் மற்றும் மின்வசதி மிக அவசியம். தண்ணீர் வசதிக்கு போர்வெல் போட்டுக் கொள்ளலாம். நிரந்தர மின் இணைப்பை பெற்றால் நல்லது; இல்லை என்றால் தற்காலிக இணைப்பாவது வாங்கிக் கொள்ள வேண்டும்.

மூலப்பொருட்கள்!

தரமான மூலப்பொருட் களையே வாங்க வேண்டும். சிமென்ட், மணல், செங்கல் போன்றவற்றை மொத்தமாக ஆர்டர் செய்தால், நாம் சொல்கிற இடத்துக்கே கொண்டுவந்து தருவார்கள். செங்கல் சூளைகளில் ஆர்டர் கொடுக்கும்போது கூடுதலாக கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்தால், பின்வரும் நாட்களில் விலை ஏறினாலும் பழைய விலைக்கே தருகிற வழக்கமும் உண்டு. வேலை தடையில்லாமல் நடக்க வேண்டுமெனில் மூலப் பொருட்கள் கையிருப்பில் இருந்து கொண்டிருக்க வேண்டும். வேலை தடைபட்டால்  வேலையாட்கள் வேறு இடத்திற்கு வேலை தேடி சென்றுவிடும் வாய்ப்புண்டு.

லேபர் கான்ட்ராக்டர்!

பொதுவாக நம்மால் வேலையாட்களைத் தேடி அலைய முடியாது என்பதால் லேபர் கான்ட்ராக்டர் ஒருவரை  (ஏறக்குறைய ஒரு மேஸ்திரி மாதிரி) வைத்துக் கொள்ளலாம். இந்த லேபர் கான்ட்ராக்டரை நியமிக்கும் முன், அவரைபற்றி நன்கு விசாரித்துவிட்டு வேலையை ஒப்படைப்பது நல்லது.

 செக்யூரிட்டி!
 
கட்டுமானப் பொருட்கள் திருடுபோக வாய்ப்புகள் இருப்பதால் இதனை தவிர்க்க நம்பகமான செக்யூரிட்டி ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
பொருட்கள் வாங்கிப் போட்டாச்சு, லேபர் கான்ட்ராக்ட் விட்டாச்சு என்று இருந்து விடாமல் தினசரி என்னென்ன வேலைகள் நடந்துள்ளது, எந்த வேலை முடியும் தருவாயில் உள்ளது, பொருட்கள் ஏதேனும் வீணாகிறதா என்பதைக் கண்காணித்து வர வேண்டும். வீடு கட்டி முடிக்கும் வரை இந்த வேலைகளை ஃபாலோ செய்வது அவசியம்.  

நேரம் காலம்!

மழைக் காலத்தில் வீட்டு வேலைகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் மழைக் காலத்தில் வீடு கட்டுவதைத் தவிர்க்கவும். தவிர, மணல், செங்கல் போன்றவை சரியாகக் கிடைக்காது, அவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கும். பொதுவாக, ஏப்ரல் டூ ஜூலை மாதங்களில் திட்டமிடலாம். 

எவ்வளவு மிச்சமாகும்?

பில்டர் வீடு கட்டித் தருவதை விட நாமே முன்னின்று நம் வீட்டைக் கட்டினால் நிச்சயம் 10-15% லாபம் கிடைக்கும்.

சிக்கல்கள்!

  • நமது அன்றாட வேலைகள்  பாதிப்படையாமல் சமாளிக்க வேண்டும்.
  • எலெக்ட்ரிஷியன், தளம் போடும் வேலைகளுக்கு நம்பகமான ஆட்களை நாமே தேட வேண்டியதிருக்கும்.
  • சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் பில்டருக்குக் கொடுக்கும் பணத்தைவிட அதிகமாக செலவாகிவிடும்.  
கட்டுமானப் பொருட்கள் வாங்கும்போது..!

மணல்:

1. ஈரமில்லாத உலர்மணலாக இருக்க வேண்டும். கற்கள், தூசிகள் இல்லாத குறுமணலாக இருந்தால் மணலை சலிப்பதற்கான நேரமும், ஆட்செலவும் குறையும். 2. லாரிகளிலிருந்து மணலை இறக்கும் முன் மணல் மீது கம்பியால் குத்திப் பார்க்க வேண்டும். மணல் மட்டத்தை விடவும் கம்பி குத்திய இடத்தில் மணல் கீழே இறங்கினால் நாம் கேட்ட அளவை விடவும் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 3. முடிந்தவரை அருகாமையிலிருக்கும் இடங் களிலிருந்து மணல் வாங்கினால்,  லாரி வாடகை மிச்சமாகும்.

செங்கல்:

1. நன்கு வேக வைத்த செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், செங்கல் நன்கு சிவக்க, உப்பு சேர்த்து சுடவைக்கும் ஏமாற்று வேலைகளும் நடக்கிறது. இக்கற்களால் வீடு கட்டும்போது சுவர்களில் உப்புத்தன்மை கூடும்.
இதனால் அதிகம் சிவந்த செங்கற்களை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. 2. சரியாக வேகாத செங்கற்கள் எனில் சுவர்கள் உறுதியாக இருக்காது. செங்கற்களின் உறுதியைச் சோதிக்க ஒரு எளிய வழி: அவற்றை தண்ணீரில் மூழ்கும்படி 24 மணி நேரம் வைத்திருந்து எடுத்தால் உறுதியில்லாத கல் மாவு போல பொடிப் பொடியாகி விடும். உறுதியான கல் அப்படியே இருக்கும். 3. சேம்பர் கல்லைவிட சூளைக்கல் விலை குறைவாகவே இருக்கும்.

ஜல்லி:

முக்கால் இஞ்ச் ஜல்லிகளோடு அரை இஞ்ச் ஜல்லிகளையும் கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, கவனம்.

கம்பி:

ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட பிராண்டட் கம்பிகளை வாங்குவது நல்லது.

சிமென்ட்:

1. சொந்த வீடு கட்டுபவர்களுக்கு அரசே குறைந்த விலையில் சிமென்ட் விற்பனை செய்கிறது. இதில், கறுப்பு சிமென்ட், வெள்ளை சிமென்ட் என இரு வகை உண்டு. உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். 2. பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமெனில் சிமென்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். 3. தரைக்கு மேல் அரையடி உயரத்தில் பலகை வைத்து சிமென்ட் மூட்டைகளை வைக்கவும்.நேரடியாக தரையில் வைக்கக் கூடாது. 4. ஈரப்பதமுள்ள இடங்கள், உப்புக்காற்று வீசும் இடங்களில்  வைக்கும்போது காற்று புகாத தார்பாயைக் கொண்டு மூடவும். 5. மொத்தமாக வாங்கி அடுக்கும்போது ஒன்றன்மேல் ஒன்றாக அதிக உயரத்துக்கு அடுக்க வேண்டாம்.
  
மரம்:

1. கதவு, ஜன்னல் செய்வதற் கான மரங்களை வாங்க நீங்களே நேரடியாக செல்வது நல்லது. 2. உறுதியான, முடிச்சுகள் இல்லாத மரங்கள் அல்லது பலகைகள் வாங்கவும்.
3. புதிதாக வெட்டப்பட்ட மரங்களின் பலகைகளைவிட பழைய மரங்களில் பலகைகள் உறுதியானதாக இருக்கும்.
4. மரவேலைகள் அனைத்தையும் உங்கள் இடத்திலேயே செய்வதுபோல பார்த்துக் கொள்வது நல்லது. அத்தனை டிப்ஸ்களையும் சொல்லியாகி விட்டது! இனி நீங்களே களத்தில்  இறங்கி கலக்குங்கள்!




விகடன் 

Sunday, June 12, 2011

டெபிட் கார்டு! - ஏமாறாமல் இருக்க எளிய வழிகள்!


அவசர பணத் தேவைகளுக்கு வங்கிகளில் கால்கடுக்க நின்ற நிலையை மாற்றியது ஏ.டி.எம்.இயந்திரமும், டெபிட் கார்டும்.குறுகிய காலத்தில் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டன இந்த இரண்டும்.ஆனாலும் டெபிட் கார்டின் பயன்பாடு குறித்தும், பணப் பரிவர்த்தனையின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு வங்கிகள் வழங்கும் நடைமுறைத் தீர்வுகள் குறித்தும் வங்கி வட்டாரத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த டிப்ஸ்கள் இதோ...!

எங்கே வாங்குவது?

சேவிங் பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கும் எல்லோருக்கும்  எல்லா வங்கிகளும் டெபிட் கார்டை கொடுக்கின்றன. முன்பெல்லாம்  டெபிட் கார்டு பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கணக்கு தொடங்கும்போதே டெபிட் கார்டையும் அதற்கான 'ரகசிய எண்’ணையும் கொடுத்து அசத்துகின்றன பல வங்கிகள்.

பணம் வராமல் போனால்..?

சில நேரங்களில் ஏ.டி.எம்-ல் பணம் வெளிவராது.  ஆனால்,  நம் கணக்கில் பணம் எடுக்கப் பட்டதாக ரசீது வந்துவிடும். இப்படி நடந்தால் பதறத் தேவையில்லை. உடனே உங்களது வங்கியின் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த தேதி, நேரம், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடையது என்கிற தகவல்களை சொன்னால் போதும்; வங்கி அதை சரி பார்த்து, தவறு நடந்திருந்தால்  நமக்கான பணத்தை கொடுத்துவிடும். இந்தப் பணம் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ.யின் லேட்டஸ்ட் உத்தரவு.  

கார்டு மாட்டினால்...?
 

ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கார்டுக்குரிய ரகசிய எண்ணை குறித்து ஏதாவது குழப்பம் இருந்தால் உடனே 'கேன்ஸல்’ பட்டனை அழுத்தி, கார்டை வெளியே எடுத்துவிடுவதே நல்லது. அதிலும் வெளியூருக்கு போன சமயத்தில் ஏதோ ஒரு ரகசிய எண்ணை போடும் தவறை செய்யக்கூடாது. காரணம், வெளியூர் ஏ.டி.எம்.மில் நம் கார்டு மாட்டினால் திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். வெளியூர் செல்லும் சமயங்களில் முடிந்த வரை ஸ்வைப் வசதி (கார்டை உள்ளே சொருகிவிட்டு உடனே எடுத்துவிடும் வசதி)  கொண்ட ஏ.டி.எம். மெஷினை  பயன்படுத்தலாம்.  ஒருவேளை, ஏ.டி.எம்.-ல் கார்டு மாட்டினால், உடனே சேவை மையத்துக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்து, நம் கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி  'பிளாக்’ செய்வது அவசியம்.  இதன்பிறகு புகார் கொடுத்து, அந்த கார்டுக்கு சொந்தக்காரர் நாம்தான் என்கிற ஆதாரத்தை கொடுத்தால் அடுத்த சில நாட்களில் கார்டு திரும்ப கிடைத்துவிடும். தொலைந்த கார்டுகளை சரிபார்த்துக் கொடுக்க வங்கிகள் 100-200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. 

ஆன்லைனில்...!

ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும்போது, தனது பிறந்த தேதி, பான் கார்டு நகல், இ-மெயில் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்திருந்தால், அந்த வங்கியின் இணையத்திற்கு சென்று, இ-பேங்கிங் அக்கவுன்டை  தொடங்கிக் கொள்ளலாம்.பொதுவாக ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் கேட்கப்படும். அதை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் சரியாக நடைபெறும். அதில் சில பிழைகள் இருந்தால், பணப் பரிமாற்றம் தடைபடுவதோடு,  பணமும் நம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.
 

Saturday, June 11, 2011

திருந்துங்கள்!, தி.மு.க.வினருக்கு , புதிய ஆட்சிக்கு, & மீடியாவுக்கு, - ஓ பக்கங்கள், ஞாநி

திருந்துங்கள்!

 

1. தி.மு.க.வினருக்கு 


 கலைஞர் கருணாநிதி திருந்துவதாகவோ தம் தவறுகளை உணர்வதாகவோ தெரியவில்லை. தோல்விக்குப் பின் தமக்கு மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னவர், அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், மறுபடியும் அறிக்கைகள், பேச்சுகள் என்று பழையபடியே தம் தவறுகளுக்கு சுண்ணாம்படிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்.தி.மு.க.தான் படுதோல்வியடைந்து விட்டதே, கருணாநிதிதான் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டாரே, ஏன் தொடர்ந்து அவர்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எழுத சில காரணங்கள் இருக்கின்றன. 


முதல் காரணம்

ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா எடுக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து தப்பு செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஜெயலலிதாவின் தவறுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம், தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை, முறை கேடுகளை நியாயப்படுத்திவிட முடியாது. அவற்றுக்கான தண்டனை தேர்தல் தோல்வி மட்டுமல்ல; ஊழலும் முறைகேடும் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது காரணம், தி.மு.க. என்ற கட்சி அடியோடு அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாகவேண்டுமென்பதும், அது திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் சிறந்த கூறுகளின் கலப்பாக அமைய வேண்டுமென்பதும் என் கனவுகளில் ஒன்று. ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதற்கான சமூகக் காரணங்கள் கனிவதற்கும் கனிந்து வரும் வரையிலும், தி.மு.க. என்ற கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும். 


தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம் கருணாநிதி தம் குடும்பங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அதற்கேற்ப கட்சியை வடிவமைத்துக் கொண்டார். தம் குடும்பம் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தம்மை அண்டிப் பிழைக்கும் ஒரு பிரமுகரின் குடும்பம் பாளையக்காரராக ஆட்சி செய்யும் முறையை அவர்தான் வலுப்படுத்திப் பாதுகாத்தார். இதையெல்லாம் மறைப்பதற்கான முகமூடியாக தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைத் தம் முழுத்திறமையுடன் பயன்படுத்தி வந்தார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.


இனி தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அது குறைந்தபட்சம் அண்ணா காலத்து தி.மு.கழகமாகவேனும் ஆகவேண்டுமானால், கருணாநிதி உருவாக்கிய குடும்ப அரசியல் கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. டெலி ஃபோன் நிலையத்தையே டி.வி.க்காக பயன்படுத்தியது போன்ற கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ஒவ்வொருவராக சிறை நோக்கி நெடிய பயணம் தொடங்குகிறார்கள். அவரது பாளையக்காரக் குடும்பங்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அடுத்து அவர்கள் மீதும் நிலப்பறி, மணற்கொள்ளை போன்ற பல குற்றங்களுக்காக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டுமானால் கருணாநிதியைக் கட்சியிலிருந்து விலகியிருக்கச் சொல்லக் கூடிய அளவு உட்கட்சி ஜனநாயகம் மறுபடியும் ஏற்பட்டால்தான் முடியும். ஆனால், அவரோ தொடர்ந்து தம் வார்த்தை விளையாட்டுகள், பேச்சுத்திறமை போன்றவற்றின் மூலம் எஞ்சியிருக்கக்கூடிய தொண்டர்களை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான அடையாளம்தான் திருவாரூர் நன்றியுரை. அதில் அவர் சொல்லிய ஒவ்வொரு கருத்தையும் மயக்கமின்றி கேள்வி கேட்டால் தான் உண்மையான திராவிட இயக்கத் தொண்டனால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியும்.


அந்த உரையில் கருணாநிதி சொல்கிறார்: “என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, சிறையில் உள்ளார்.” 

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “தலைவா, அப்படின்னா, மத்திய அரசுல ஏன் இன்னமும் தி.மு.க. ஆட்சியில இருக்குது? அரசு அலட்சியம்னா ஏன் எதிர்த்துப் பதவி விலகாம இருக்காங்க? வேற காரணம்ன்னா என்ன? நீராராடியாவோட கனி பேசின பேச்சுல அவுட் ஆன சமாச்சாரமா? ராசா, கனி,டெலிகாம் அதிகாரிங்க, கம்பெனி நிர்வாகிங்க அல்லாரும் உள்ள இருக்கறதுக்கு சுப்ரீம் கோர்ட்டோட கண்டிப்புதானே காரணம், தலைவா?” 

அடுத்து, கருணாநிதி, கட்சியினரின் அனுதாப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காகச் சொல்கிறார்: “திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”  

தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே? 

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.

‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”  

கனிமொழி செய்த குற்றமென்ன என்று கருணாநிதி பேசியிருக்கிறார்: “கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் தான் சொன்னேன். அவர் வேண்டாமென்றார். நான் வற்புறுத்திய காரணத்தால் சேர்ந்தார். வேதனையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதற்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.” 

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி: “தலைவா, நாங்கள்லாம் சொந்தக்காரங்கன்னு இப்ப ஷோக்கா சொல்றீங்க இல்ல? இதே நினைப்பு ஏன் கலைஞர் டி.வி.ல பங்கு குடுக்கறப்ப உங்களுக்குத் தோணலே? கனியை வற்புறுத்தினா மாதிரி எங்களையும் கேட்டிருக்கலாமில்ல? பங்கு குடுக்கறப்ப அவங்க ஞாபகம் மட்டும்தான் வருது. மாட்டிக்கிட்டு கஷ்டப்படறப்ப சப்போர்ட் சேர்க்க மட்டும்தான் எங்க ஞாபகம் வருமா உங்களுக்கு?” 

இனி கலைஞர் கருணாநிதி என்ன முயற்சி செய்தாலும் வரலாற்றில் அவர் பங்களிப்பு ஏற்கெனவே குறிக்கப்பட்டு விட்டது. 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் 94 ஆண்டு வரலாற்றில் கருணாநிதி ஓர் அடிக் குறிப்பாகவே எஞ்சுவார். சமூக இயக்கமான திராவிட இயக்கத்துக்கு வலுவான அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு அண்ணா காரணமாக இருந்தார். தமது குடும்ப சுயநலத்துக்காக அந்த அரசியல் அதிகாரத்தைப் பணயம் வைத்தவர் கருணாநிதி.

அவரிடமிருந்து இயக்கத்தை மீட்கும் பணிதான் இனி நிகழ வேண்டிய தி.மு.க, திராவிட இயக்க வரலாறு. அந்த மீட்பை முன்னெடுத்துச் செல்ல தி.மு. க.வுக்கு இப்போதைக்கு இருக்கும் தலைவர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின்தான் என்பது வரலாற்றின் விசித்திரம். தலைவர்கள் திருந்தாவிட்டால் அவர்களைத் தூக்கி எறிபவர்களாகத் தொண்டர்கள் திருந்தினால்தான் வரலாறு மாறும். 

2. புதிய ஆட்சிக்கு: 


ஒவ்வொரு ஆட்சியும் தனக்கு முந்தைய இன்னொரு கட்சி ஆட்சியின் திட்டங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றுவது என்பது தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் மாறாத அம்சம். மாற்றுவது புதிய ஆட்சியின் உரிமையாக இருக்கலாம். ஆனால் கூடவே அதற்கு ஒரு கடமையும் இருக்கிறது. ஏன் மாற்றுகிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, மக்களை ஏற்கச் செய்யவேண்டியதுதான் அந்தக் கடமை. ஸ்விட்சர்லாந்தில் இருப்பது போல முக்கிய திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வரும்போது ரெஃபரண்டம் நடத்தும் முறையை ஜெயலலிதா பரிசீலிக்க வேண்டும்.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்றதும் தி.மு.க.வின் இலவச வீட்டு வசதித் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வித் திட்டம், புதிய சட்டமன்ற, செயலகக் கட்டடம், மெட்ரோ ரயில் எல்லாம் கைவிடப்படும் என்பதும் சில வேறு பெயரில் செயலாக்கப்படும் என்பதும் எதிர்பார்த்ததுதான்.சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழுவில் அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிஞர்கள் இருக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, கால வரையறை தேவை. எப்படிப் பார்த்தாலும் அடுத்த கல்வியாண்டில் பொதுப் பாடத் திட்டம் நடைமுறையில் வரவேண்டும். சமச்சீர் கல்வியில் அது ஒரு சிறிய அம்சம்தான். கூடவே பொதுத் தேர்வு முறையும் சேர்த்துச் செயல்படுத்தப் படவேண்டும். ஒரே பாடத் திட்டத்துக்கு வெவ்வேறு விதங்களில் தேர்வு நடத்தக் கூடாது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லா பொதுமக்களுக்குமாக விரிவுபடுத்தப்படும் என்றும் தனியார் முதலீடு மருத்துவத்தில் அதிகரிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறது. அப்படியானால் அரசு மருத்துவமனைகளின் வேலை என்ன? தனியார் மருத்துவ சேவைக் கட்டணம், தனியார் கல்விக் கட்டணம் போலவே எல்லாராலும் செலவிட முடியாதது. மெட்ரோ ரயில் திட்டமும் புதிய தலைமைச் செயலகமும் இன்னமும் முடிக்கப்படாதவை. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் ஆய்வு அளவிலேயே இருப்பதால் அதைக் கைவிடுவதில் சிக்கல் இல்லை. தலைமைச் செயலகம் கட்டி முடிக்காமலே தி.மு.க அரசு திறப்பு விழா நடத்தியது. கட்டியதில் ஊழல் பற்றி விசாரிப்பதற்காக மீதி கட்டட வேலையைக் கைவிடுவது அபத்தமானது. விசாரணை முடியும்வரை கட்டடம் பயன்படாமலே வீணாகும். 

ஜெயலலிதா அரசு அறிவித்து வரும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு திட்டத்திலும் விளக்கமான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டோம். அதனால் நாம் விரும்பியதைச் செய்தால் கேட்பார் இல்லை என்ற பழைய மனோநிலை இனி உதவாது. அந்த மனநிலையிலிருந்து திருந்தாவிட்டால், மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பாடத்தை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து ஜெயலலிதா கற்கவேண்டும்.  

3. மீடியாவுக்கு  

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாள் நடந்தது. நாடே கொந்தளிப்பது போன்ற ஒரு மாயையை அப்போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கின. அந்த மாயையில் அடுத்து பத்திரிகைகளும் சிக்கின.அடுத்தபடியாக யோகா வணிகர் பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் அதேபோன்ற ஒரு மாயையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை.  இரண்டுக்கும் நடுவில் மேதா பட்கர் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதை இதே ஆங்கில டி.வி. சேனல்களும் பத்திரிகைகளும் கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஒரு வரி செய்தி சொல்லி விட்டுவிட்டன. காரணம் மேதா பட்கரின் உண்ணாவிரதம் மும்பையில் கோல்பார் பகுதியில் 24 ஆயிரம் குடிசைவாசிகளை அகற்றி நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்குத் தருவதைக் கண்டிப்பதாகும். அதில் மேட்டுக்குடி மீடியாவுக்கு அக்கறையில்லை. ஆனால் மேதாவின் உண்ணா விரதம்தான் ஜெயித்தது. காரணம் மக்கள் அவரோடு திரளாக இருந்ததுதான். மகாராஷ்டிர அரசு மேதாவின் கோரிக்கைகளை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டது.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல மீடியாவும் பத்திரிகைகளும் கூட திருந்த வேண்டியிருக்கிறது. அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு போலியானவற்றுக்கு முக்கியத்துவம் தருவது மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது. 

இந்த வார அதிர்ச்சி! 

இந்தியாவில்  இருக்கும் சுமார் 1450 பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒரு சதவிகிதம் கல்லூரிகளில் மட்டுமே முறையான உள்கட்டமைப்பும் ஆய்வக வசதிகளும் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.