Search This Blog

Tuesday, March 27, 2012

சச்சின் - சதமவதாரம்!


ஒரு வருட தவத்துக்குப் பிறகு, 100வது செஞ்சுரியை அடித்துப் பெரிய பாரத்தைக் கீழிறக்கியிருக்கிறார் சச்சின். பிராட்மேனின் டெஸ்ட் ஆவரேஜ் சாதனையை (99.94) எப்படி ஒரு கிரிக்கெட் வீரரால் கனவில் கூட நினைக்க முடியாதோ, அதே போல சச்சினின் இந்தச் சாதனையை மிஞ்ச உண்மையிலேயே வானத்திலிருந்து யாராவது குதித்து வந்தால்தான் உண்டு.சச்சினுக்கும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் உண்டு. சில உதாரணங்கள். சச்சின் ஆடிய முதல் ஒருநாள் தொடரில் அவரை ஆட வைப்பதாகவே இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ரத்தானதால் கண்காட்சி ஆட்டம் நடத்தப்பட்டு, அதில் சச்சின் சேர்க்கப்பட்டார். அப்துல் காதிர் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்து கவனத்தை ஈர்த்தார் சச்சின். உடனே, அடுத்த ஒருநாள் ஆட்டத்தில் சச்சினுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒரு ரன்னும் அடிக்கவில்லை. இதனால், அந்தத் தொடரில், அடுத்தடுத்த மேட்சுகளில் ஆட அனுமதிக்கப்படவில்லை.நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பூஜ்ஜியம். நூறு செஞ்சுரிகள் அடித்தவரின் தொடக்கம் எப்படி என்று பாருங்கள். இன்று, கோலி மேட்சுக்கு மேட்ச் செஞ்சுரிகள் அடிக்கிறார். ஆனால், ஒருநாள் ஆட்டத்தில், சச்சினுக்கு முதல் செஞ்சுரி அடிக்க 78 ஆட்டங்கள் தேவைப்பட்டன. அப்படியாவது நிம்மதியாக சுவாசிக்க முடிந்ததா? அடுத்த மூன்று மேட்சுகளிலும் பூஜ்ஜியம்தான் அடித்தார். 99 செஞ்சுரிகளை கடகடவென அடித்துவிட்டு நூறாவது செஞ்சுரிக்கு ஒரு வருடமாகத் தவித்தாரே, எவ்வளவு வேதனையான காலமது.

முக்கியமான போட்டிகளில் தலைசிறந்த ஆட்டங்களை முன்வைத்திருக்கிறார். சச்சின் சோடைபோன உலகக்கோப்பை என்று ஒன்று இல்லை. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தனித் தன்மையுடன் ஆடியிருக்கிறார். 22 ஆண்டு காலம் எந்தச் சவால்களுக்கும் பொருந்திய ஓர் உடல் தகுதியைக் கொண்டதால்தான் சச்சினால் தொடர்ந்து ஆடவும் சராசரியாக ஆறு மேட்சுகளுக்கு ஒருமுறை செஞ்சுரி அடிக்கவும் முடிந்திருக்கிறது. ஒருநாள் போட்டி க்ஷயில் சாதித்துவிட்டு டெஸ்ட்டிலும் திறமையை நிரூபிக்கும் நவீன கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில், முதலில் டெஸ்ட்டில் சாதித்துவிட்டு, பிறகு ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு கை பார்த்தவர் சச்சின். சச்சினின் ஆரம்பக் காலத்தில் அவருக்குக் கடும் சவால்களைத் தந்த மஞ்ரேக்கர், காம்பிளி, டபிள்யூவி ராமன் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளினார். அடுத்து அசார், சித்து போன ஜாம்பவான்களையும் முந்திக் கொண்டு கங்குலி, திராவிட், ஷேவாக் என்று புதிதாகப் புறப்பட்ட இளம்புயல்களையும் அடுத்தடுத்து சமாளித்து ஒரு தன்னிகரற்ற வீரராக விளங்குபவர் சச்சின். இரண்டு தலை முறைகள் கடந்து மூன்றாம் தலை முறையுடனும் ஈடுகொடுத்து ஆடுவது லேசுபட்ட விஷயமல்ல. சமீபத்தில், ஓய்வு பற்றிய பேச்சு எழுந்த நேரத்தில்தான் அவர் இரட்டைச் சதம் அடித்தார்.  பலமுறை காயங்களில் மாட்டிக் கொண்டாலும், ஒவ்வொருமுறையும் கவனமாக அதிலிருந்து மீண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் இருந்திருக்கிறார். பள்ளிக் காலங்களிலேயே பெயரையும், புகழையும் பார்த்துவிட்டதாலோ என்னவோ, பிறகு வந்த நட்சத்திர அந்தஸ்து சச்சினைத் துளியும் பாதிக்கவில்லை. கேர்ள் ஃப்ரெண்டுடன் சுற்றினார், பார்ட்டிகளில் ஈடுபடுகிறார் என்பன போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் சச்சினின் வாழ்க்கையில் இடமேயில்லை. சத்தமேயில்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டு, கிரிக்கெட்டில் தீவிர அக்கறை செலுத்தினார்.

சச்சின் நாட்டுக்காக ஆடுவார் என்று முதலில் சொன்னவர் சச்சினின் பயிற்சியாளரான அச்ரேகரோ, சச்சினை ரஞ்சிப் போட்டிக்குத் தேர்வு செய்த வெங்சர் காரோ, இந்திய அணிக்குள் நுழைத்த ராஜ் சிங் துங்கர்புரோ கிடையாது. பள்ளிகளுக் கிடையேயான போட்டி ஒன்றில், கோந்த லேகர் என்கிற ஒரு அம்பயர், ‘இந்தப் பையன் வருங்காலத்தில் இந்தியாவுக்காக ஆடுவான்’ என்று மீசைகூட முளைக்காத சச்சினைக் காண்பித்து அச்ரேகரிடம் ஆரூடம் சொல்லியிருக்கிறார். அன்று, அச்சின்னஞ் சிறுவனுக்கிருந்த துடிப்பும், வேகமும், ரன்கள் அடித்தால் உண்டாகிற குதூகலமும் இத்தனை வருடங்களாகியும் சச்சினிடமிருந்து விலகாமல் இருக்கிறது. அந்த உற்சாகம்தான் இன்னமும் சச்சினை மேலும் மேலும் பல சாதனைகள் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.

Monday, March 26, 2012

உலகம் அறிந்த உடைந்த மணி!


அமெரிக்காவில் பிலடெல்பியா நகரின் நடுவே சுதந்திரப் பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30 அடி உயரமும், 900 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான லிபர்ட்டி பெல் இருக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு, அமெரிக்க தேசியக் கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தபால் தலைகளிலும் நாணயங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு தேசியச் சின்னம் இது. ஆனால் இந்த மணி அடிக்கப்படுவதில்லை. காரணம் அதில் விழுந்த விரிசல். பயன்படுத்த முடியாமல் பல ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மணி, சரித்திரச் சின்னமானது எழுத்தாளர் ஒருவர் எழுதிய சிறுகதையால்தான்.அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடாக அறிவிக்கப்படும் முன்னரே மக்களாட்சி மலர்ந்தது பென்சில்வேனியா மாநிலத்தில்தான். அதன் தலைநகரான பிலடெல்பியாதான் நாட்டின் தலைநகராக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதைச் சிறப்பிக்கப் புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்டட கோபுரத்தில் ஒருமணியை நிறுவ விரும்பினார் மாநில கவர்னர். லண்டனில் உள்ள மணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற லெஸ்ட்டர்-பாக் (Lester and Pack) நிறுவனத்தால் (இன்றும் இந்த நிறுவனம் இருக்கிறது) வடிவமைக்கப்பட்டு 1793-ஆம் ஆண்டு கப்பலில் பிலெடெல்பியா வந்த மணி நகர மக்களால் கோலாகலமாக வரவேற்கப்பட்டது.

மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட மணி முதல் முறை ஒலிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செயப்பட்டிருந்தது. ஆவலுடன் காத்திருந்த மக்கள் மணியின் நாதத்தைக் கேட்டு ஏமாற்றமடைந்தனர். அந்த அளவு அது மோசமாகயிருந்தது. அதில் ஒரு சின்ன மெல்லிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து நிறுவனம் ‘தவறு எங்களுடையதில்லை. உங்கள் ஊர் மணியடிப்பவர் சரியாகக் கையாளாததால் விரிசல் வந்திருக்கலாம். திருப்பியனுப்புங்கள் சரிசெய்து தருகிறோம்’ என்றது. ஆனால் மீண்டும் ஒருமுறை லண்டன் அனுப்பி திரும்பப் பெற ஆகும் கப்பல் கட்டணம் மணியின் விலையை விட அதிகமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.ஆனால் மணியை கைவிட மனமில்லாத கவர்னர், உள்ளூர் ஆட்களை விட்டு சரிசெய்ய உத்தரவிட்டார். முன்வந்தனர் இரண்டு இளைஞர்கள். ஜான் சகோதரர்கள் (John Pass and John Stow) இறக்குமதி செயப்பட்ட மணியை உருக்கி அந்த உலோகத்தில் ஒரு புதிய மணியை உருவாக்கினர். ‘எல்லா நிலப்பரப்பிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம்’ என்று முன்பிருந்த வாசகங்களுடன் அவர்கள் பெயரும் அதில் பொறிக்கப்பட்டது. நம் நாட்டிலேயே தயாரான மணி என்ற பெருமையைப் பெற்ற அந்த மணியைப் பரிசோதித்தபோது, அதன் நாதமும் பலருக்குத் திருப்தி தரவில்லை. ஆனாலும் கவர்னரின் உத்தரவின் பேரில் மணி, மாடத்தில் நிறுவப்பட்டது. முக்கியமான நாட்களில் மட்டும் ஒலிக்கப்பட்டது அந்த மணி. ஒருமுறை ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்தநாளில் ஒலித்தபோது, மாறுபட்டுத் தெரிந்த அதன் ஒலி, மணியில் மீண்டும் ஒரு விரிசல் விழுந்திருப்பதைச் சொல்லியது. மணி, மாடத்திலிருந்து கழற்றப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.


அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்து புதிய நாடும் ஆட்சியும் உருவாகி, மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சியாக இருந்த கால கட்டத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளை நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் எழுதியவர் ஜார்ஜ் லிப்பர்ட். இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர். இன்றும் அமெரிக்க இலக்கியத்தில் மதிக்கப்படுபவர். இவர் 1847ல் எழுதிய ஒரு சிறுகதை ‘ஃபோர்த் ஜூலை 1776’ சார்ட்டே ரெவியூ பத்திரிகையில் வெளியானது. அந்த மணியை அடிக்க நியமிக்கப்பட்டிருந்தவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் மணியை மிகவும் நேசித்ததால் அந்தப் பணியைத் தொடர்ந்தார். ஜூலை 4, 1776 அமெரிக்க மக்கள் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தாகப் போகும் செய்தியை எதிர்பார்த்திருந்தனர். தன் வாழ்நாளில் நாட்டுக்கு சுதந்திரம் வந்து அதை இந்த மணியை அடித்து தாம் அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்திருந்த அந்த வயோதிகரின் பேரன் ஓடிவந்து, தாத்தா பிரகடனம் கையெழுத்தாகி விட்டது" என்று சொன்ன செய்தியில் மகிழ்ந்து வேகமாக அந்த மணியை அடித்து மக்களுக்கு அறிவித்தபின் இறந்து போகிறார் என்பது அந்தக் கதையின் ஒன் லைன்.


சார்ட்டடே ரிவிய்யூவில் வெளியான இந்தக் கதை தொடர்ந்து மற்ற மாநிலச் செய்தித்தாள்களிலும்/பத்திரிகையிலும் வெளியானதினால் மிகப் பிரபலமடைந்தது. கதையில் சொல்லப்பட்ட சுதந்திர மணியைப் பார்க்க ஆவலுடன் மற்ற மாநில மக்களும் அங்கு வர ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இந்தக் கதை இடம்பெற்றிருந்ததினால் மாணவர்களுக்கும் ஆர்வமான ஒரு விஷயமாகிப் போனது. பார்ப்பவர்களின் வசதிக்காக இந்த மணியைத் தேடிப் பிடித்து தூசி தட்டி மாநில மன்ற வளாகத்தின் தோட்டத்தில், அடிக்க முடியாதபடி அலங்காரத் தூண்களில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அடிமை முறையைச் சட்டப்பூர்வமாக ஒழிப்பது என்பது அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா முழுவதும் பேசப்பட்ட விஷயம்.அந்தக் குழுவினர், மணி ஓசை என்பது சுதந்திரத்தின் அடையாளம் எனச் சொல்லி இந்த மணியை அவர்கள் இயக்கத்தின் சின்னமாக அறிவித்து ஆறு குதிரைகள் பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று, பல நகரங்களில் பேரணிகளில் காட்சியாக்கினார்கள். மக்களிடம் பிரபலமாகிவிட்ட இந்த உடைந்த மணியை அரசும் அங்கீகரித்து தபால்தலை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து படிப்படியாக, பல கௌரவங்களைப் பெற்றது, ஓசை எழுப்பாத இந்த உடைந்த மணி. இன்று இதன் மாதிரி வடிவம் அத்தனை அமெரிக்க மாநில மன்றங்கள் முன்பும் நிற்கிறது. நாட்டின் உயரிய விருது பதக்கங்களில், நாணயங்களில் படம் பொறிக்கப்பட்டிருக்கிறது.பிலெடல்பியாவில் காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலி ஒளி காட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை, சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டு வந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7 காவல்; நுழைவாயில் சோதனை; மணியைத் தொடமுடியாதபடியான பாதுகாப்பு எல்லாம்.

விரிசல் பெரிதாகிறதா என மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ரே, விசேஷ ரசாயன பராமரிப்பு, வல்லுனர் சோதனை எனப் பாதுகாக்கிறார்கள். மணி ஓசை எப்படித்தானிருக்கும்? என்ற ஆவல் கொண்டவர்களுக்கு உள்ளூர் பல்கலைக் கழக உலோகவியல் பேராசிரியரும் மாணவர்களும் மணியின் அளவுகளிலேயே அதே கீறலுடன் ஒரு மாதிரியைச் செய்து அதில் எழுப்பிய ஒலியைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்.ஜார்ஜ் லிப்பர்ட் எழுதியது உண்மைக் கதையாக இருக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் பல ஆதாரங்களுடன் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மணி எழுப்பிய ஓசையை விட அந்தச் சிறுகதை எழுப்பிய ஓசைதான் இன்று உலகத்தையே இதைப் பார்க்க வைக்கிறது.

ரமணன்

Sunday, March 25, 2012

திராவிட மாயை ஒரு பார்வை.


திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா என்ற பெயரில், கலைஞர், தனது பழைய பாணி துவேஷ அரசியலை மீண்டும் துவக்கியிருக்கிறார். திராவிடம், திராவிட நாடு என்பதையெல்லாம் மீண்டும் உலவ விட்டிருக்கிறார். இந்த நிலையில், இவை பற்றி ஏற்கெனவே ஆராய்ந்து ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய ‘சுப்பு’ இந்த விஷயம் பற்றி ‘துக்ளக்’கில் கட்டுரை எழுத இசைந்துள்ளார். திரிசக்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சுப்பு’வின் ‘திராவிட மாயை’ புத்தகத்திலிருந்து பல பகுதிகளும், இக்கட்டுரைகளில் இடம் பெறும்.

திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியன்று சென்னையில் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தொண்டர்களை அழைக்கும்  விதத்தில், முரசொலியில் கடிதம் எழுதினர் கலைஞர். அந்தக் கடிதத்தில், திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ‘1917ஆம் வருடம் சென்னை ஸ்பர்டாங்க் சாலையருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டி, நம் பத்திரிக்கைகள் வளர்ந்தால்தான் நம் மக்களுக்கு பலம் வரும்; நம் எதிக் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என்று முழங்கியதை நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்’ என்று எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவிலும், பிராமண எதிப்பைமையப் பொருளாக வைத்து கலைஞர் பேசியிருக்கிறார். அண்ணா எழுதிய தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி, ‘நாமெல்லாம் இனத்தால் திராவிடர்கள்’ என்று கூறியிருக்கிறார்.ஆனால், திராவிட இனம் பற்றிய அண்ணாவின் முக்கியமான கருத்தை உடன்பிறப்புகளுக்கு எடுத்துச்  சொல்ல அவருக்கு சௌகரியப்படவில்லை. இதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.


பிராமணர் இனம் வேறு; பிராமணர் அல்லாதார் இனம் வேறு என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. பிராமணர் அல்லாதார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழகத்தில், பிராமணர் உறுப்பினராக முடியாது. ஈ.வே.ரா. வின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சின்னக் குத்தூசி போன்றவர்களுக்குக் கூட அங்கே அனுமதி இல்லை. ஆனால், ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிராமணர்கள் உறுப்பினராகலாம். இது எப்படி?தளபதி மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வே.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல பிரபல வழக்கறிஞரான வி.பி.ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.

பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல, அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க.ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க.சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி. காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இன்னொரு முக்கியமான பதிவு. “யதா ராஜா ததா பிரஜா” என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்” என்றார் அவர். பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க.கைவிடாத அந்தக் காலத்திலும், தன்னுடைய உரையில் சம்ஸ்க்ருத மேற்கோள் காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு. திராவிட இயக்கத்தின் நன்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் அண்ணா. ‘முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று அண்ணா, சட்ட மன்றத்தில் உரையாற்றினார்.பல கட்சிகளின் கூட்டணியோடும் வெகுஜன ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க முயன்ற அன்னாவிடத்தில், பிராமண எதிர்ப்பு இல்லை. ஹிந்தியை எதிர்க்கும் போது கூட ‘இந்த வேலையை ராஜாஜியிடம் விட்டு விடலாம். காலில் முள் தைத்துவிட்டது. இந்த முல்லை எடுக்க என்னால் முடியாது. பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் கச்சிதமாக முல்லை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் அண்ணா. முதலமைச்சர் அண்ணாவிடம் பிராமணர் எதிர்ப்பு என்கிற மனோபாவம் இல்லை.

திராவிட இயக்க வரலாற்றில் அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை கருணாநிதி புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார். இதயத்தை பதவியிடமும், பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.
மேற்கண்ட கட்டுரை 21 மார்ச் 2012 துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் - அலசல் !


பள்ளிக் கல்வித் துறையில் தடாலடி மாற்றங்களுக்கு வழி வகுக்கும் அரசாணை எண் 143. இந்த ஆணையின்படி வரவிருக்கும் (2012-13) கல்வி ஆண்டிலிருந்து, மாணவர்களின் தரத்தையும், திறனையும் மதிப்பிட ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. அந்தப் புதிய முறைக்குப் பெயர் தான் ‘தொடர் முழுமைத் திறன் மதிப்பீடு’ (Continuous and Comprehensive Evaluation). சுருக்கமாக சி.சி.இ. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து நினைவாற்றல் முறையில் தேர்வுகளைச் சந்திக்கும் முறையை மாற்றி, சிந்தித்து, அறிவாற்றலைத் தெளிவு செய்யும் விதத்தில் ஆசிரியர்களின் பயிற்சி முறை இருக்குமாம். இந்த மதிப்பீட்டில் மார்க்குகள் கிடையாது. ஏ.பி.சி.டி. என்று கிரேட் முறைதான். புதிய மதீப்பீட்டு முறை அறிமுகத்துடன், பள்ளிகளில் முப்பருவக் கல்வி முறையையும் (Tri semester) அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. இந்த இரண்டு முறைகளும் வரும் கல்வியாண்டில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்புவரை அறிமுகப்படுத்தப்படும். 

கல்வித் துறையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவருவது வரவேற்கத்தக்கதே. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, பொது மக்களிடையே விவாதமாக்க வேண்டாமா?"  

இது போன்ற மாற்றங்கள் ஒரு முன்னேறிய சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டியவை ஆகும். இங்கு இன்னமும், ஏழை, பணக்காரன், சாதி, மத வேறுபாடுகள், ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்ற கண்ணோட்டங்கள் மாறாத நமது கிராமப்புறங்களில், இது போன்ற கல்வி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தினால், பல்வேறு புகார்களுக்கு வழி வகுக்குமோ என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. நமது கிராமப்புறப் பள்ளிகள் இரண்டே ஆசிரியர்களைக் கொண்டவைதான். அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் கல்வி போதிப்பது தவிர, தேர்தல் வேலை, சென்ஸஸ் வேலை என்று வேறு பல பணிகளையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர், ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர் மற்றும் மாணவியை சி.சி.இ.படி மதிப்பிட முடியுமா? மேலும் அறிவியல் படிப்பில் சிந்தனைத் திறனை வளர்க்க ப்ராஜக்ட் செய்யச் சொல்வார்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்தின் துணையோடுதான் ப்ராஜக்ட் செய்கிறார்கள். அப்படிச் செய்யப்படும் மாடலைக் கூட சரியாக பார்க்காமல் வகுப்பில் ஓரத்தில் வைத்துவிட்டுப் போகும்படி சொல்லும் ஆசிரியர்கள்தான் நிறைய. இந்தப் பயிற்சி ஒரு சடங்கு போல்தான் நடக்கிறது.மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றலை வளர்க்க வேண்டுமானால் ஆசிரியர்களுக்கு ஒரு சிந்தனைத் தெளிவு வேண்டும். அதற்கான பயிற்சி அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டாமா? அதேபோல செமஸ்டர் சிஸ்டம் என்றால், அந்த செமஸ்டரோடு படித்தது மறந்து போகும். இப்போதிருக்கும் முறையில் புரியாத பாடங்களைப் புரிந்து கொள்ள வருடம் முழுவதும் வாய்ப்பு உண்டு. 

பின்லாந்தில் இது போன்ற மாற்றங்களை 1970ல் கொண்டு வந்தார்கள்.  40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முழுமை பெற்றிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் கொடுத்து வந்தார்கள். அங்கே பாடத்திட்டங்களைக்கூட வெவ்வேறு பகுதிகளின் தேவைக்கேற்றபடி தீர்மானிக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் செயல்படும் இந்த சி.சி.இ. திட்டத்தை தேசியக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. அதுபோல இரண்டு வருடங்களுக்கு முன் கொண்டு வந்த செமஸ்டர் திட்டத்தையும் தில்லி பல்கலைக் கழகம் மறு ஆய்வு செய்கிறது. எனவே தமிழக அரசு புதிய மாற்றங்களை விவாதிக்க வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரன்.
பொதுப்பள்ளிகளுக்கான மாதிரி மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் 


வரும் கல்வியாண்டு தொடங்க நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில், மாற்றங்களை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி விட்டதா?

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
தேவராஜன் 
மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் .

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.

ரத்தின சபாபதி. 
தமிழக கல்வி, ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் .

- ப்ரியன்

சி. சி. இ. மதிப்பீட்டு முறையினால் என்ன நன்மைகள் ஏற்படும்? உலகப் புகழ்பெற்ற கல்வியாளர் பத்மா ஸ்ரீநாத்துடன் பேசியதில் இருந்து:  

கே: புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?

ப: ஒரு மாணவர் 12 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள் பள்ளியில் படிக்கிறார். இவ்வளவு வருடப் படிப்புக்குப் பின்னர் அவர் எவ்வளவு தூரம் படிப்புக்குத் தகுதி படைத்தவராக, வேலைபார்க்கும் தகுதி உள்ளவராக இருக்கிறார்? 

பள்ளி மாணவர்களிடம் திறன் மேம்பாடு நடக்கவில்லை. ஏனென்றால், பள்ளிகளில் கல்வி கற்றல் நடைபெறவில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் கோளாறு. ஒரு மாணவர் ஒரு பாடத்தை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் கோளாறு.

பள்ளிக் கல்விதானே அஸ்திவாரம்? அதில் உள்ள குறைகள்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். இவற்றை சரிசெய்வது எப்படி? அதற்காகத்தான் சி. சி. இ. இது ஏதோ திடுதிடுப்பென வரவில்லை. உலக அளவில் ஏற்கெனவே அமலில் உள்ள விஷயம்தான்.

கே: பரீட்சை நடத்தும் விதத்தை மாற்றிவிட்டால் எல்லாமே மாறிவிடுமா?

ப: இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, இப்போது உள்ள கல்விமுறை, குருட்டு மனப்பாடத்தை ஊக்குவிக்கிறது. உண்மையில் கல்வி கற்பது என்பதில் விஷயம் போய்ச்சேர வேண்டும். அதுதான் அறிவு வளர்ச்சிக்கு, திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆசிரியர் ஏதோ பாடம் நடத்துகிறார், மாணவர் கையைக் கட்டிக்கொண்டு கவனிக்கிறார் என்பது அல்ல, விஷயம். ஆசிரியர், மாணவர் இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற வேண்டும். மேலும், இரண்டு பேருக்கும் பயன் கிடைக்க வேண்டும். 

இரண்டாவது விஷயம் மதிப்பீட்டு முறை பற்றியது. மாணவனை மதிப்பீடு செய்வது, அவரைப் பாஸாக்குவதற்கோ பெயிலாக்குவதற்கோ அல்ல. அவரது திறன் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக. மாணவரை மதிப்பீடு செய்வதன் மூலம் ஆசிரியர் தன்னைத் தானே சுய மதிப்பீடு செய்து கொள்கிறார். 

மேலும், கற்றல் என்பது படிப்படியாக நடக்கிறது. ஒரே வீச்சில் நடந்து முடிவது அல்ல. எனவே இந்த வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் அளவிட வேண்டியது அவசியம். இதைத்தான் சி. சி. இ. யில் formative assessment என்று குறிப்பிடுகிறார்கள். 

கே: சி. சி. இ. அறிமுகப்படுத்தப்பட்டால் கற்றல் மேம்படுமா?

ப: முழுக்க சரியாகுமா, ஆகாதா? ஐ’ம் ஸாரி. அப்படியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியல. கல்வியைப் பொறுத்தவரையில் சி. சி. இ. உலகம் ஏற்கும் ஒரு பெஸ்ட் ப்ராக்டீஸ். அதை நாமளும் கடைப்பிடிக்க வேண்டியதுதானே!

கே: ஆசிரியர்கள் இதை எப்படி எடுத்துக்குவாங்க? பெற்றோர்களின் வரவேற்பு?

ப: ஆசிரியர்களுக்கு இது ஒரு சவால்தான், சந்தேகமே இல்ல. ஆனா, சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ல இந்த மாற்றம் ஈஸியா நடந்ததே, அதே மாதிரியே ஸ்டேட் பள்ளிகள்லயும் நடக்க வாய்ப்பு இருக்கு.

ஒரு ஆசிரியர் தன்னோட பணியில எவ்வளவு திருப்தி அடைகிறார் என்பது ரொம்ப முக்கியம். இன்னைக்கு நான் ஒரு உருப்படியான வேலை பண்ணினேன் அப்படீங்கற திருப்தி ஆசிரியர்களுக்கு ஏற்படறதுக்கு சி. சி. இ. உதவி பண்ணும். இதை அவங்களுக்கு சரியா புரியவைக்கணும்.

பெற்றோர்கள் மத்தியில வரவேற்பு இருக்கும்னு நான் நம்பறேன். காரணம், இன்னைக்கு சமுதாயத்துல விழிப்புணர்வு இருக்கு, உலகத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி நாமளும் மாறியாகணும், போட்டியை எதிர்கொள்ளணும் அப்படீங்கற சிந்தனை பரவலா வர ஆரம்பிச்சிருக்கு.

அதுமட்டுமல்ல. நீங்கள் எந்த அப்பா-அம்மாவைப் போய்க் கேட்டாலும் அவர்கள் தற்போதைய கல்விமுறையின் குறைகளைப் பற்றி வருந்துகிறார்கள். தற்போதைய முறையில் மாணவர்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் என்பது எல்லா பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இது சிஸ்டத்தில் உள்ள குறைபாடு, இதை நம்மால் மாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் பெற்றோர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த சிஸ்டத்தை சரிசெய்வதுதான் சி. சி. இ.

கே: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள். இத்தனை பேரையும் சி. சி. இ. க்கு ஏற்றவிதத்தில் தயார் செய்வது எப்படி? 

ப: ஆசிரியர்களுக்குப் பயிற்சிதர வேண்டியது ரொம்ப அவசியம். நமது நாட்டில் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்களுக்குப் பஞ்சமில்லை. ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்கள் உதவ முடியும்.

ஒருதடவை பயிற்சி என்பதோடு நின்றுவிடாமல், professional development என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சீனியர் ஆசிரியர்களை வழிகாட்டிகளாக தயார்படுத்தலாம். ஒரு பள்ளிக்கு 5 பேர் இருந்தால்கூட போதும். இவர்கள் சக ஆசிரியர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் ஏற்ற இணக்கமான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். தற்போது, கார்பரேட் நிறுவனங்கள் சமுதாயப் பொறுப்பு ஏற்க முன்வருகின்றன. இவர்களின் உதவியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

Saturday, March 24, 2012

வசந்த நவராத்திரி ஸ்பெஷல்.....

வசந்த நவராத்திரி என்றால் என்ன?


ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவை நான்குமே அம்பிகை வழிபாட்டில் முக்கியமானவை. புரட்டாசி மாதத்து அமாவாசைக்கு மறு நாள் ஆரம்பமாகும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். இது அனைவரும் கொண்டாடும் மிகப் பிரபலமான நவராத்திரி. இது ஆஸ்வீண மாத சுத்தப்ரதமையில் ஆரம்பமாகும். அடுத்து மார்கழி மாத அமாவாசைக்கு மறுநாள் புஷ்யப்ரதமையில் ஆரம்பித்து ஒன்பது நாள் கொண்டாடப்படுவது வாராகி நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் சைத்ரசுத்தப்ரதமையில் தொடங்கி ஒன்பது நாட்களுக்கு வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ஆஷாட சுத்த ப்ரதமை தினத்தில் ஆரம்பமாகி ஒன்பது நாட்களுக்கு ராஜமாதங்கி நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம்.



இடிந்த கரை... இடியாத நம்பிக்கை!, ஓ பக்கங்கள் - ஞாநி

 
இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ : 
 
உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப் போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இருதரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால் அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னிகுவிக்கை நினைவு கூர்வது போல, தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம். ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். மத்திய அரசின் நிர்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்."
 
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத் தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜபட்சே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்ல முடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளிகூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஓர் அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளைச் சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக்கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளனர்.ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப் பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ஆம் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
 
அவர்கள் கேட்டது என்ன?  

உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசிவரை மக்களின் விஞ்ஞானிகளைச் சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசிவரை வெளியிடவே இல்லை.மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.ஆனால், ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனில் நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லப்படவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும் அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ. கடைசியில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர்.சீனிவாசன் அதில் இடம் பெறுவதைப் போராட்டக் குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தம்மைச் சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.நடுவில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ. அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக்கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெ.யின் சோந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசின் ‘நிர்பந்தத்துக்கு’ பணிகிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
 
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் பட்டியலும் இன்னொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அயோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல; ஜெ., மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தித் துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது, எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடக்கவே நடக்காது என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்க வேண்டாமென்று மட்டுமே, நான் நம்பாத கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்!இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்லவேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்க வேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது, என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தம்மை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களிடம் தமக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக் கூடாது? வோட்டு கேட்க மக்களைச் சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் தில்லிக்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாகக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறைகூட போய் பார்க்க முன்வரவில்லை?
 
இதுவே கூடங்குளம் மக்கள் சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல்துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னையில் இருந்தபடியே அல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள்? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தாமும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை? அமைதியாக வாழவும் அமைதியாகப் போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கித் தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம்? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை, கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன், ஜெ. நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் வோட்டு 49ஓதான்.
 
இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளிகூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்தகரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்...

எனது இந்தியா! (விசுவாசத்தின் விலை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

சாமான்யனின் வாழ்க்கையைச் சரித்திரம் புரட்டிப்​போட்டு​விடுகிறது என்பதைக் காலம் பல முறை நிரூபித்து இருக்கிறது. எந்த விதி ஒரு மனிதனை வெற்றியின் உச்சத்தை நோக்கிக் கொண்டுபோகிறது? எது மனிதனைக் குப்புறத் தள்ளிவிடுகிறது? இவை, எவராலும் பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்விகள்!  எத்தனையோ சாமான்ய மனிதர்களை அதிர்ஷ்டம் தனது கைகளால் அள்ளிக் கொண்டுபோய் உச்சத்தில்​வைத்து அழகு பார்த்திருக்கிறது. அதே அதிர்ஷ்டம், பாதியில் கைவிட்டுத் தலை குப்புறத் தள்ளியும் இருக்கிறது.அப்படி, அதிர்ஷ்டத்தின் விரலைப் பிடித்துக்​கொண்டு மேலே ஏறியவர்களில் முக்கியமானவர் விக்டோ​ரியா மகாராணியின் தனிச் சேவகராகப் பணியாற்றிய இந்தியரான முன்ஷி அப்துல் கரீம். இரண்டாவது நபர், 20 வருடங்களுக்குள் 54 முறை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்பயணம் செய்த ஆயா அந்தோனி பெரா.


அப்துல் கரீமின் முழுப் பெயர் ஹாபீஸ் முகமது அப்துல் கரீம். ஜான்சியில் உள்ள லாலட்பூரில் 1863-ம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா ஹாஜி முகமது வாஜிருதீன், மருத்துவமனைப் பணியாளர். கரீமுக்கு நான்கு தங்கைகள், ஓர் அண்ணன். உருது மற்றும் பெர்ஷியன் மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அப்துல் கரீம், வேலை தேடி ஆப்கானிஸ்தானில் சில வருடங்கள் அலைந்தார்.1880-ல் அப்துல் கரீமின் அப்பா ஆக்ரா சிறைச்சாலையில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக்​கொண்டு இருந்தார். அப்பாவோடு சேர்ந்து, சிறைத்துறையின் கணக்கு வழக்கு​களைக் கவனிக்கத் தொடங்கினார் அப்துல் கரீம். சில ஆண்டுகளில் அவருக்கும் சிறைச்​சாலையிலேயே வேலை கிடைத்தது.ஆக்ரா சிறைச்சாலையில் கார்ப்பெட் தயாரிக்கும் வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவார்கள். அழகான கார்ப்பெட்டுகள் நெய்வதில் கைதிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அப்படித் தயாரிக்கப்பட்ட விசேஷ கார்ப்பெட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு.1886-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி ஒன்றில் கார்ப்பெட்டுகளைக் காட்சிக்கு வைப்பதற்கு 34 கைதிகள் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பணியில், ஜெயிலர் ஜான் டெயிலருக்கு அதிக உதவிகள் செய்தார் அப்துல் கரீம். இங்கிலாந்தில் நடந்த இந்தக் கண்காட்சியை விக்டோரியா மகாராணி பார்வை​யிட்டுப் பாராட்டினார். அப்போது, இரண்டு தங்கக் காப்புகளை மகாராணிக்குப் பரிசாகத் தந்தார் ஜான் டெயிலர். வேலைப்பாடு மிகுந்த இந்திய நகைகளைப் பார்த்த மகாராணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதோடு, இந்தியாவில் இருந்து நம்பகமான இரண்டு பணியாளர்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும், அவர்கள் தனது சொந்த வேலைக்காரர்களாகத் தன்கூடவே இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட இருவரை அனுப்பிவைக்கும்படி, ஜெயிலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


மகாராணிக்கு இந்த உதவி செய்வதன் மூலம் தனது பதவியை உயர்த்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட ஜான் டெயிலர், இந்தியா சென்றவுடன் அனுப்பிவைப்பதாக உறுதி அளித்தார். இந்தியா திரும்பிய சில வாரங்களில், இரண்டு பேரைத் தேர்வு செய்தார். ஒருவர் அப்துல் கரீம், மற்றவர் முகமது பக்ஷி.இருவருக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்​பட்டது. அரண்மனையில் எப்படிப் பழக வேண்டும்? அங்குள்ள சம்பிரதாயங்கள் என்ன? உணவுப் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விசேஷப் பயிற்சி அளிக்கப்​பட்டது. மகாராணியிடம் வேலைக்குப் போவது சந்தோஷமாக இருந்தாலும், அப்துல் கரீமுக்கு சற்றுப் பயமும் இருந்தது. காரணம், அவர்கள் குடும்பத்தில் அது வரை யாரும் கடல் தாண்டி வேலைக்குப் போனது இல்லை. அதுபோல, இந்தியாவை ஆட்சி செய்யும் மேன்மை தாங்கிய மகாராணிக்கு வேலையாளாகப் போவது அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள விஷயம். ஆகவே, தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அப்துல் கரீம் முடிவு செய்தார்.இங்கிலாந்து கிளம்புவதற்குள் ஆங்கிலே​யரின் பழக்கவழக்கங்கள் குறித்து நன்றாக அறிந்து​கொண்டார். இருவரும் 1887-ல் ஆக்ராவில் இருந்து மும்பை வரை ரயிலில் பயணம் செய்து, அங்கே இருந்து கப்பலில் லண்டன் புறப்பட்டனர். ஜூன் மாதம் வின்ஸ்டர் கோட்டை அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தனர். மகாராணியிடம் நூற்றுக்​கணக்கான வேலையாட்கள் இருந்தனர். தனது அந்தரங்கப் பணிகளுக்கு விக்டோரியா ராணி இங்கிலாந்துவாசிகளையே பயன்படுத்தி வந்தார். முதன்முறையாக, அவரது தனி அலுவலகப் பணிகளுக்காக இரண்டு இந்தியர்கள் வேலைக்கு வந்திருப்பது அரண்மனையில் இருப்பவர்களுக்கே பெரும் ஆச்சர்யமாக இருந்தது.தங்கமும் வெள்ளியும் கொட்டிக்கிடக்கும் மாபெரும் அரண்மனையைக் கண்ட அப்துல் கரீமுக்கு, இங்குள்ள வசதிகளைக்கொண்டு, தான் ஒருநாள் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்று தோன்றியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகப் பணிவாக, மகாராணிக்காக தான் கொண்டுவந்திருந்த தங்க நாணயத்துடன் அவரது தனி அறைக்கு சென்றார்.அதுவரை, ஓவியங்களிலேயே பார்த்திருந்த விக்​டோரியா மகாராணியை, நேரில் பார்த்தபோது மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தார். கணவனை இழந்த ராணிக்கு 60 வயதுக்கும் மேலாகி இருந்தது. பருத்த, குள்ளமான தோற்றத்தில் இருந்தார். சிடுசிடுப்பும் ஆத்திரமும்​கொண்டவர் என்று அறிந்திருந்த காரணத்தால், அவரை வணங்கி, தான் கொண்டுவந்திருந்த பரிசைக் கொடுத்து மிக மென்மையான குரலில் தன்னை அறிமுகம் செய்து​கொண்டார் அப்துல் கரீம். அவருக்குப் பிறகு, பக்ஷியும் அதேபோல் அறிமுகம் செய்துகொண்டார். இருவரும் தனது எடுபிடியாக எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மகாராணி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் உடைகள், தங்கும் இடம் ஆகியவற்றைப் பற்றி அறிவித்தார்.


அந்த நாளைப்பற்றி விக்டோரியா மகாராணி தனது நாட்குறிப்பில் 'இந்தியாவில் இருந்து இரண்டு பணி​யாட்கள் இன்று வந்து சேர்ந்தனர். இருவரும் எனது காலில் விழுந்து வணங்கி மிகவும் பயபக்தியோடு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதில், அப்துல் கரீம் என்பவர் உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார். அவரது பேச்சில் மிகுந்த பணிவு இருந்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.முதல் பார்வையிலேயே விசுவாசமான வேலையாள் என்பது​போல தன்னைப் பற்றிய மனப் பதிவை உண்டாக்கிய அப்துல் கரீம், அதன் பிறகு விக்டோரியா மகாராணியின் எடுபிடி ஆளாக நாள் முழுவதும் கூடவே இருந்தார். பக்ஷியைவிட அப்துல் கரீமைத்தான் மகாராணிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆகவே, அவருக்கு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்க மகாராணி உத்தரவு இட்டார். அதுபோல, அப்துல் கரீமிடம் இருந்து, தான் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்த மகாராணி, உடனே வகுப்பைத் தொடங்கினார். மகா​ராணியே தன்னிடம் பாடம் கற்றுக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அப்துல் கரீம், தனக்குச் சாதகமாகக் காய் நகர்த்தத் தொடங்கினார்.நாள் முழுவதும் வெறும் மேஜையாளாக எடுபிடி வேலைகள் செய்வது தனது தகுதிக்கு உரியதாக இல்லை. ஆகவே, தனக்கு ஏதாவது பொறுப்பான வேலை தர வேண்டும் என்று அவர் மகாராணியைக் கேட்டுக்கொண்டார். உடனே, மகாராணி அவருக்கு 'முன்ஷி’ என்ற பதவியை அளித்து அவரைத் தனது ஹிந்துஸ்தானி ஆசிரியர் என்று கௌரவித்தார். இது பக்ஷிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வந்த சில மாதங்களிலேயே மகாராணியோடு கரீம் நெருக்கமாகிவிட்டதைக் கண்டு, அவர் மீது பொய்ப் புகார் சுமத்த ஆரம்பித்தார். பக்ஷிக்குத் துணை செய்வது போல அரண்மனை ஊழியர்கள் சிலர் அப்துல் கரீமுக்கு எதிராக வேலை செய்யத் தொடங்கினர்.மகாராணி, அப்துல் கரீமை தனது சொந்த உதவியாளர் போல கூடவே வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதன் காரணமாக, அப்துல் கரீமுக்கு முன் ராணியின் அந்தரங்க வேலையாளாக இருந்த ஜான் பிரௌனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறை, அப்துல் கரீமுக்கு வழங்கப்பட்டது.ஜான் பிரௌன், மகாராணியின் நெருக்கமான வேலையாளாக இருந்தவர். ராணியின் ரகசியக் காதலன் என்றெல்லாம்கூட அரண்மனையில் வதந்தி உலாவியது. திடீரென, ஜான் பிரௌன் இறந்து​போனதை மகாராணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த மனவெறுமையைப் போக்கும் விதமாக அப்துல் கரீம் செயல்படுவதாக அரண்மனை ஊழியர்கள் பேச ஆரம்பித்தனர்.

இரண்டு வருடங்களுக்குள், அரண்மனையின் முக்கிய ஊழியராக ஆகிவிட்டார் அப்துல் கரீம். பல மணி நேரம் மகாராணியோடு தனித்து உரையாடுவது, இசை கேட்பது, மகாராணி கலந்துகொள்ளும் நடன விருந்துகளுக்குப் போவது என்று, அவரும் அரச குடும்பத்து மனிதரைப் போலவே இருந்தார். அவருடைய செல்வாக்கு அதிகரித்தது. ஆக்ராவில் உள்ள ஜான் டெயிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், தனது தந்தைக்கு மானியமும் விருதும் தர வேண்டும் என்று, நேரம் அறிந்து மகாராணியிடம் சொன்னார் அப்துல் கரீம். மகாராணி உடனே உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனாலும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.1888-ல் நான்கு மாத விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கரீம், இங்கே வசித்த தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு லண்டன் கிளம்பினார். இந்தச் சந்தர்ப்பத்தில், ஜான் டெயிலர் பதவி உயர்வுக்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டார். இங்கிலாந்து சென்றவுடன் அவர்களை எல்லாம் களை எடுக்க ஆரம்பித்தார்.  

விகடன்  

கீழ்ப்படிதல் - அருள்வாக்கு

Obey என்ற வார்த்தையிலிருந்தே obedience வந்திருப்பதாக எவரும் புரிந்துகொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த (ஒபீடியன்ஸ் என்ற) வார்த்தைக்கு ‘கவனமாகக் கேட்டுக்கொள்வது’ என்றே மூலத்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள்.சுச்ரூஷை’ என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ரூஷையையே சிஷ்யனுக்குத் தலையான கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்கிறது’தான்.ஆக, கீழ்ப்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ரூஷை ஆகிய இரண்டும் ‘கேட்டுக் கொள்வது’ என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது. கீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேறே பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால்...‘கேட்டுக் கொள்வது’ என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் உள்ளர்த்தம். ‘சொன்னதைக் கேளு!’, ‘சொன்னபடி கேக்கறதில்லே’ என்றெல்லாம் சொல்லும்போது அதுதானே அர்த்தம்? 'Hear'-கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ரூஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் அப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.ரொம்பப் பொருத்தமாக ஒன்று தோன்றுகிறது. ஒபீடியன்ஸைக் கீழ்ப்படிதல் என்று சொல்கிறோம். உடம்பு பூராவையும் வாஸ்தவமாகவே கீழே பூமியிலே படியவிட்டுக் கிடப்பதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கிறது!

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, March 23, 2012

எல்லா வணக்கமும் ஒருவனுக்கே


ல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: 'ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்... எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்... ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. 'கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து 'கேசவ’ என்றாகி யிருக்கிறது. 'க’ என்றால் பிரம்மா; 'அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே 'க’ என்றும், 'அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து 'கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் 'கேச’ என்பது குறிக்கும். 'வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.

ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.

நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.

('தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து...)


Thursday, March 22, 2012

சச்சின் -இரண்டாவது இன்னிங்ஸ்!

நாட்டின் அடுத்த ஒரு வருட நிதி நிலைமையைத் தீர்மானிக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய வரி விதிப்புகள், எதிர்பார்த்த சலுகைகள் இல்லாமை, நடுத்தர வர்க்கத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட் என்றெல்லாம் நிபுணர்கள் அலசி ஆராய்ந்துகொண்டு இருக்க... அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சாமான்ய இந்தியன், சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தான். காரணம், அன்றைய தினம் சச்சின் நிகழ்த்திய 100-வது சதச் சாதனை!சச்சின் ஒவ்வொரு முறை தவறும்போதும், இந்திய அணியை ஜெயிக்கவைக்க முடியாமல் களத்தைவிட்டு வெளியேறும்போதும் அவரை மிக மோசமாக விமர்சிப்பது அதே ரசிகர்கள்தான்.  கடந்த ஓர் ஆண்டாகவே 100-வது சதத்தை அடிக்கத் தவறிய ஒவ்வொரு போட்டியிலும் அவரைத் திட்டிக் குவித்து விட்டார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் சச்சினும் 100-வது சதத்துக்காக மெனக் கெடாமல் இல்லை. பேட்டின் எடை யைக் குறைத்தது முதல், பேட்டிங் ஸ்டைலை மாற்றியது வரை என்ன என்னவோ முயன்றுகொண்டே இருந்தார் சச்சின்.  

''இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு பெரிய பிரஷர் எனக்கு இருந்ததே இல்லை. அதில் இருந்து மீள யாராவது எனக்கு உதவ மாட்டார்களா என்று முதல்முறையாக ஒரு வழிகாட்டியைத் தேடத் துவங்கினேன். இப்போது சதம் அடித்துவிட்டேன். ஏதோ 50 கிலோ சுமையை இறக்கிவைத்ததுபோல இருக்கிறது'' என்ற சச்சினின் வார்த்தைகளே அவர் எவ்வளவு மன அழுத்தத்தில் கடந்த ஒரு வருடத்தைக் கழித்திருக்கிறார் என்பதைச் சொல்லும்.    இந்திய அணிக்காக அல்ல, தனது சொந்த சாதனைகள்தான் சச்சினுக்குச் சொந்தம் என்பது அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஏழு ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், வெற்றிக்கு 14 ரன்களே தேவைப்பட்டது. அப்போது களத்தில் சச்சின் 90 ரன்களுடன் நின்றுஇருக்க, மறு முனையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது 'தனது சதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்’ என்று சச்சின் சொன்னதால், தினேஷ் கார்த்திக் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டு இந்தியாவை வெற்றி பெறவைத்தார். நாட் அவுட்டாக வெளியேறிய சச்சினின் ஸ்கோர் 96.
 
கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதற்காகத்தான் இன்னமும் ஓய்வு எடுக்காமல் விளையாடிக் கொண்டே இருக்கிறார் என்பதும் அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. சமீபத்தில் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பா சிடர் ஆகும் ஒப்பந்தம் 20 கோடி ரூபாய் மதிப்பில் சச்சினிடம் வந்தது. 'மதுபானத் தயாரிப்புகளை நான் விளம்பரப்படுத்துவது இல்லை’ என உடனடியாக மறுத்தார் சச்சின்.2004-ல் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் சச்சினை சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அவுட் ஆக்கிவிட்டார். போட்டி முடிந்ததும் சச்சினின் விக்கெட்டைப் பறித்த அந்தப் பந்தைக் கொண்டுவந்து அவரிடமே ஆட்டோகிராஃப் கேட்டு இருக்கிறார் பிராட் ஹாக். 'வாழ்த்துக்கள்... ஆனால், இது இன்னொரு முறை நடக்காது!’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார் சச்சின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 21 போட்டிகளில் ஹாக்கின் பந்துவீச்சை எதிர்கொண்டு இருக்கிறார் சச்சின். அதில் ஒரு முறைகூட ஹாக்கின் பந்து வீச்சில் அவுட் ஆனது இல்லை.மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் ஒரு டி-ஷர்ட்டில் கையெழுத்திட்டு, அதை சச்சினுக்குப் பரிசாக அளித்தார்கள். அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இப்படி எழுதி இருந்தார்: 'நாங்கள் ஆக விரும்பும் மனிதர் சச்சின்!’.
 
100-வது சதத்துக்குப் பிறகான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் ப்ரிஸ்க்கான, துறுதுறுப்பான சச்சினின் ஆட்டத்தைக் காண முடிந்தது.


சச்சினின் செகண்ட் இன்னிங்ஸ் இனிதான் ஆரம்பம்!

சார்லஸ்

விகடன்
 

அருள் மழை ----------- 50


‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால், எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.

இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!

அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்லா ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.

‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!

Wednesday, March 21, 2012

எனது இந்தியா! (போலீஸுக்குத் துப்பாக்கி தந்த போராட்டம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
காராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த வினோபாவே, பதின் வயதி​லேயே காந்திய மார்க்கத்​தால் ஈர்க்கப்பட்டு காந்தியின் சத்யாக்கிரகத் தொண்டர்களில் ஒருவராக துணை நின்று காந்தியின் மறைவுக்குப் பிறகு சர்வோதய நெறிகளை முதன்​மைப்படுத்தி இந்தியாவை முன்னேற்றப் பாடுபட்டவர். வினோ​பாவின் வாழ்க்கை, தனி நபர் ஒருவர் காந்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கு​கிறது.இன்று, இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் 26 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்​கிறது ஒரு புள்ளிவிவரம். வறுமையை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் நிறைய நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வறுமை ஒழிப்பின் ஆதாரப் புள்ளி நிலச் சீர்திருத்தம். அதை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் உரிய முறையில் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டால் மட்டுமே வறுமையை விரட்ட முடியும் என்ற குரல், சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், நாட்டை ஆளும் அரசுகள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.அயராது உழைத்துக் கொடுத்​தும், பசியும் பட்டினியுமாக அடிமைபோல வாழ்ந்த ஆந்திர விவசாயிகள், தங்களின் உரிமைக்காக எழுச்சிகொண்டது தெலுங்கானாவில் நடந்தேறியது. இந்திய விவசாயிகள் என்றால் மிகவும் சாத்வீகமானவர்கள், ஒடுங்கித்தான்போவார்கள் என்ற பொதுப் பிம்பத்தை இந்த எழுச்சி உடைத்து எறிந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சி, இந்திய வரலாற்றில் மறக்க முடியாத போராட்டம். இதில், 4,000-க்கும் அதிகமான விவசாயிகள் பலி ஆகினர். ஆனால், இந்த வீரத் தியாகத்தால் 3,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் எழுச்சி உருவானது. பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த மக்கள் எழுச்சிக்கு அங்கு களப் பணி ஆற்றிய கம்யூ​னிஸ்ட் கட்சிகளே காரணமாக இருந்தன.
 
 
தெலுங்கானா எழுச்சியை 'அரசு எதிர்ப்பு இயக்கம்’ என்று அடையாளப்படுத்திய மத்திய அரசும் நிஜாம் நிர்வாக​மும், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மிக மோசமான முறையில் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு​வந்தன.இதுபோல, இந்தியா முழுவதும் உள்ள நில​மற்ற ஏழை விவசாயிகள் போராடிவிடக் கூடாது, அதைத் தடுப்பதற்கு இந்தியா முழுவதும் போலீஸ்காரர்​களுக்கு துப்பாக்கிகள் வழங்குவது என்று ஒரு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதற்கு முன், போலீஸ்காரர்களுக்கு லத்தி மட்டுமே அனுமதி. போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், தெலுங்​கானா போராட்டத்துக்குப் பிறகு போலீஸ்​காரர்​களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி அடையும்போது அதைத் தடுப்பது எளிதானது இல்லை என்பதை அந்தப் போராட்டம் உணர்த்தியது.1951-ம் ஆண்டு சிவ்ராம் பள்ளியில் நடந்த சர்வோதய இயக்க விழாவில் கலந்துகொண்ட வினோபாவே, விவசாயிகளின் போராட்டம் நடந்த தெலுங்கானா மாவட்டத்தின் ஊடே பாத யாத்திரையாகச் சென்று, பவநகரில் உள்ள தனது ஆசிரமத்தை அடைவதாக அறிவித்தார். 300 மைல் தூரத்துக்கு இந்தப் பாத யாத்திரை திட்டமிடப்பட்டு இருந்தது.அந்த யாத்திரையின் உண்மையான நோக்கம், இது விவசாயிகள் எழுச்சியா? அல்லது கம்யூனிஸ்ட்​டுகள் தூண்டிவிட்ட கலகமா? என்பதை அறிந்து​கொள்வதே. பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, நிலச்சுவான்தார்களால் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.ஏப்ரல் 18 அன்று, போச்சம்பள்ளி என்ற ஊரில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட ராமச்சந்திர ரெட்டி என்ற வழக்கறிஞர், தனது நிலத்தில் இருந்து 100 ஏக்கரை தலித் மக்களின் பயன்பாட்டுக்காக பூமி தானமாக தருவதாக அறிவித்தார்.அந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு நிலத்தை தலித் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார் வினோபாவே. அப்படித்தான் 'பூதான் இயக்கம்’ தொடங்கப்பட்டது. ஆகவே, இன்றும் ஏப்ரல் 18-ம் தேதியை பூமி தான நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த ஊரின் பெயரே பூதான் போச்சம்பள்ளி என்று பின்னாளில் மாறியது.அந்த உத்வேகத்தால் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலத்தைத் தானமாகப் பெற்றுத் தருவதை தனது பயணத்தின் லட்சியமாக மாற்றிக்கொண்டார் வினோபாவே. இது, காந்திய வழியில் நிலத்தைப் பகிர்ந்து அளிக்கும் திட்டம் என்று உறுதியாக நம்பினார். 58 நாட்கள் பாத யாத்திரையின் முடிவில் 200 கிராமங்களில் இருந்து 12,201 ஏக்கர் நிலம் தானமாகப் பெறப்பட்டது. இது, தனது அறப் போருக்குக் கிடைத்த வெற்றி என்று அறிவித்த வினோபாவே, தனது பவநகர் ஆசிரமத்துக்குத் திரும்பி, இயந்திரங்களின் உதவி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்வது தொடர்பான தனது செயல் திட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். பூதான் பெரிய இயக்கமாக உடனே மாறிவிடவில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அமைதி வழியில் வினோபாவே, விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருக்கிறார் என்றுதான் மற்ற காந்தியவாதிகள் நினைத்தார்கள்.
 
1951-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடந்த திட்டக் கமிஷன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி நேருவால் அழைக்கப்பட்டார் வினோபாவே. அதை ஏற்று டெல்லிக்கும் பாத யாத்திரை​யாகவே வருவதாக அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார். நவம்பர் 13-ம் தேதி டெல்லியை அடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர், 19,436 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றார். அதன்பிறகு, 13 ஆண்டுகள், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பூமி தான இயக்கத்துக்காக நடந்துகொண்டே இருந்தார் வினோபாவே. 1952-ம் ஆண்டு மே 9-ம் தேதி புத்த ஜெயந்தி அன்று, அதுவரை தானமாகப் பெற்ற 2,95,054 ஏக்கர் நிலத்தை முறைப்படி விநியோகம் செய்ய வழிவகைகளும், தானம் பெற்றோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இது பின்னாட்களில், பல்வேறு மாநிலங்களில் அரசின் சட்டமாகவே இயற்றப்பட்டது. பூதான் இயக்கத்தில், சோஷலிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ் நாராயண் இணைந்து செயல்பட்டது கூடுதல் பலத்தைக் கொடுத்தது. 22.32 லட்சம் ஏக்கர் நிலம் பூதான் இயக்கத்துக்காக தானமாகப் பெறப்பட்டது. இந்தியாவில் பூதான் இயக்கம் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டது பீகார் மாநிலத்தில்தான்! இந்த நிலையில், நிலத்தைத் தானமாகப் பெறுவதன் அடுத்த கட்டம் போல கிராம தானத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் வினோபாவே. இதன்படி, முழுக் கிராமமும் தனது நிலத்தைப் பொதுவில் பகிர்ந்து தந்துவிடும். அந்தக் கிராமத்தில் யாருக்கும் தனி உரிமை இருக்காது. உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தின் கீழ், 1,60,000 கிராமங்கள் முழுமையாகத் தானமாகப் பெறப்பட்டு, நிலப் பகிர்வு நடந்து இருக்கிறது. பூதான் அல்லது கிராமதான் திட்டத்துக்காக நிலத்தைப் பெறுவதற்காக தனது 57-வது வயதிலும் ஓயாது நடந்துகொண்டு இருந்த வினோபாவுக்கு கடுமையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டன. அதைப்பற்றி அவர் கவலைப்படாமல் 'இயற்கை மருத்துவம்’ செய்துகொண்டு தினமும் 15 முதல் 20 மைல் நடந்துகொண்டே இருந்தார். அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடும் வினோபாவே, பகல் முழுவதும் நடப்பதும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசுவதுமாக இருந்தார். மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிசாவில் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகத்துக்கு வந்தார் வினோபாவே. வளமான தமிழக விவசாயிகளிடம் பூமியைத் தானம் பெறுவது எளிது அல்ல என்று பத்திரிகைகள் கேலி செய்தன. ஆனால், பூமி தானம் மற்றும் கிராம தானம் ஆகிய இரு திட்டங்களுக்கும் தமிழகத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காஷ்மீருக்குச் சென்ற வினோபாவே, 13,500 அடி உயரத்தில் உள்ள பிர்பஞ்சால் கிராமத்துக்கு மலை ஏறிச் சென்று அங்கும் பூமி தானம் பெற்று இருக்கிறார். அதுபோலவே, கொள்ளையர் வசிக்கும் சம்பல் பள்ளத்தாக்கில் பயணம் செய்தும் அவரால் பூமி தானம் பெற முடிந்தது.1960-களில் அஸ்ஸாமில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்டது. சமாதானப் பணி செய்வதற்காக, வினோபாவை அங்கு அனுப்பிவைத்தார் நேரு. அஸ்ஸாம் சென்ற வினோபாவே, அங்கு  ஓர் ஆண்டு தங்கி இருந்தார். மக்கள் சச்சரவு இல்லாமல் வாழ்வதற்குக் கிராம தான முறை சிறந்தது என்பதை அந்த மக்களிடம் விளக்கினார். இன்றும் அந்தக் கிராமங்களில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போதும் அங்கு நிலம் பொதுவில்தான் இருக்கிறது.
 
நிலத்தைப் பகிர்ந்து தருவதிலும், ஒன்றுக்கும் உதவாத நிலத்தைத் தானமாக தந்து ஏமாற்றியதிலும், பூமி தான இயக்கத்தை வழிநடத்தியவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், அந்த இயக்கம் மெள்ள முடங்கத் தொடங்கியது. வினோபாவின் அறிவுரை பல ஊர்களிலும் கைவிடப்பட்டது.பூதான் இயக்கத்துக்காக பெற்ற பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தியா முழுவதும் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால், அதை அரசியல்வாதிகளும் அதிகாரத்தைத் துணைகொள்வோரும், முறைகேடான வகையில் விற்பனை செய்வதும் ஆக்கிரமிப்பு செய்வதுமாக பூதான் இயக்கத்தின் நோக்கத்தை முற்றிலும் அழித்து வருகிறார்கள். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ அரசால் நிலம் பொதுவுடமை ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தனி நபரின் முயற்சியால் காந்திய வழியில் உருவான மக்கள் இயக்கம், 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெறப்பட்டது ஓர் வரலாற்று நிகழ்வு. ஆனால், அந்த வெற்றி முழுமை அடையவில்லை.பூதான் இயக்கத்தை நடத்தியதற்காக 'ராமன் மகசேசே விருது’ வினோபாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. தமிழகத்தில் 1961-ல் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், நிலம் முழுமையாகப் பகிர்ந்து தரப்படவில்லை. மாறாக, பினாமி பெயர்களில் நிலம் கைவசமாவதும் அப்போதுதான் தொடங்கியது. நில உச்ச வரம்புச் சட்டம் இயற்றி 44 ஆண்டுகளைக் கடந்த பிறகு, 2005-ம் ஆண்டு கணக்கெடுத்தபோது, 1.88.234 ஏக்கர் நிலம் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் 3.50 லட்சம் ஏக்கர். அதுவும் இப்போது அவர்கள் கையில் இல்லை.ஆகவே, வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்கு மாற்றாக, பூதான் இயக்கத்தின் தேவை இப்போது மீண்டும் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அதை வழிநடத்த வினோபாவே போன்ற அர்ப்பணிப்பும் செயல்திட்டமும் கொண்ட தலைவர்கள்தான் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.


விகடன் 

Tuesday, March 20, 2012

ஜகம் நீ... அகம் நீ..! - 3

ங்கே தேனம்பாக்கத்துக்கு சுப்ரமணியன் சுவாமி எப்பவும் வருவார். அவரை பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் குழந்தை மாதிரி பேசுவார். பெரியவாளின் குழந்தை என்றே அவரைச் சொல்லலாம். 'பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் எல்லா நாடுகளிலே இருந்தும் இந்தியாவுக்குத் தொந்தரவு இருந்துண்டே இருக்கு. இஸ்ரேலுக்கும் நம்ம நாட்டுக்கும் எந்த விரோதமும் கிடையாது. சீனாவைக் கொஞ்சம் நமக்கு அனுசரணையா நடந்துக்கச் சொல்லு. கயிலாஷ்- மானசரோவர் யாத்திரைக்குப் போறவாளுக்கு எல்லா வகையிலயும் உதவி பண்ணச் சொல்லு!’ என்று அவரிடம் சொல்லி, அவரும் அதற்கு ரொம்பவே ஒத்தாசை செய்திருக்கிறார்.'கண்ணதாசன் அடிக்கடி தேனம்பாக்கத்துக்கு வந்து மகா பெரியவாளோட பேசிண்டே இருப்பார். அவர் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ கட்டுரைகள் தொடர்ந்து எழுதறதுக்குப் பெரியவா நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கார்.ராஜீவ்காந்தி, சோனியாவுடன் இங்கே வந்திருக்கார். 'நீ மட்டும்தான் மோதிலால் நேரு குடும்பத்திலே இப்போ உயிரோட இருக்கே. தயவுசெஞ்சு பாலிடிக்ஸுக்கு வராதே! உன் உயிருக்கு ஆபத்து இருக்கு!’ என்று பெரியவா சொன்னார். சோனியா காந்தி கூட பக்கத்திலே இருந்து, அதைக் கேட்டுண்டு இருந்தார். 'நான் பாலிடிக்ஸுக்கு வந்தாச்சு! இனிமே இதிலே இருந்து கழண்டுக்கறதுக்கு வழியே இல்லே. அதுனால, என்னோட உயிருக்கு ஆபத்துன்னா, நான் போயிட்டுப் போறேன். தேசம்தான் முக்கியம்!’ அப்படீன்னார் ராஜீவ்காந்தி' என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்த வைத்திய நாதன், தேனம்பாக்கத்தின் மகத்துவத்தையும், அங்கே பெரியவா எப்படி வாழ்ந்து வந்தார் என்பதையும் விவரித்தார்.
அலஹாபாத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கம், பெரியவா ஏற்பாட்டில் இங்கேதான் வேதம் சொல்லச் சொல்லிப் பண்ணினது. அப்புறம்தான் அதை லாரியிலே ஏத்தி எடுத்துண்டு போக ஏற்பாடு ஆச்சு. இங்கே ஒரு மாமரம்கூட இருந்தது. அங்கேதான் அத்வைத சபா வெள்ளி விழா கொண்டாட்டம் எல்லாம் நடத்தி வச்சார். அந்த மாமரத்துக்குக் கீழே பெரியவா உட்கார்ந்திருந்த போட்டோ கூட இருக்கு.ஒரு நாள் பெரியவா, திண்ணையிலே படுத்திண்டிருந்தார். நாங்கள் பக்கத்துத் திண்ணையிலே படுத்திண்டிருந்தோம்.   பெரியவா திடீர்னு திண்ணையிலே இருந்து கீழே விழுந்த மாதிரி இருந்தது. கையிலே தண்டம் மட்டும் அப்படியே பிடிச்சபடியே நேரா இருந்தது! பெரியவா அப்படியே பிராகாரத்துக்கு வந்து அங்கப்பிரதட்சிணம் செய்ய ஆரம்பிச்சுட்டார். நாலு பிராகாரத்தை யும் முழுசா சுத்தி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார். எதுக்காக அவர் அப்படி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார்னு எங்களால புரிஞ்சுக்கவே முடியலே.தொண்ணூறு வயதில், காமாட்சி அம்பாளுக்குக் கும்பாபிஷேகம் பண்ற போது, அங்கே நாலு வீதியிலயும் பெரியவா அங்கப் பிரதட்சிணம் செய்தபோதுதான் தெரிந்தது, தன்னால முடியுமான்னு அன்னிக்கு தேனம்பாக்கத்தில் அதுக்கு முன்னோட்டம் பார்த்திருக்கார் பெரியவா!அதேமாதிரிதான், தேவி காமாட்சி கிளம்பி கொட்டகைக்குப் போனப்புறம், ஜபம் பண்ணிண்டே வரதராஜப் பெருமாள் கோயிலின் நாலு மாட வீதியிலேயும் பிரதட்சிணம் பண்ணினார். அதுவும் ஒரு பரீட்சை மாதிரிதான். சதாராவுக்கு நடந்து போகத் தன்னால் முடியுமான்னு சோதனை பண்ணிப் பார்த்திருக்கார்.சதாராவுக்குப் போறதுக்கு முன்னால, ரிஜிஸ்திரார் ஆபீசுக்குப் போய், தேனம்பாக்கம் நிலத்தை எங்க சங்கர பக்த ஜன சபா பெயரில் ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துட்டுத் தான் போனார். நீலகண்ட குருக்கள் இங்கே இருந்தார். கடனை எல்லாம் முழுக்க அடைச்சு, அனுபவ பாத்யதையை எங்களோட சங்கர பக்த ஜன சபாவுக்கு எழுதி வைச்சுட்டார். 'இந்த சிவா ஸ்தானத்தை நீங்கதான் நிர்வாகம் பண்ணணும்’னு சொல்லிட்டார். மடத்துக்குக்கூட எழுதி வைக்கலே! பெரியவா சொன்னதன்பேரில் திருக்குளத்திலே நீலோத்பல மலர் போட்டோம். இந்தத் திருக்குளத்தை ஹிந்துஜா குரூப் செப்பனிட்டுத் தர்றதா சொல்லியிருக்காங்க.  
பெரியவா ஆசியோட வேத பாடசாலை இப்பவும் நடக்கிறது.   இருபது மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்குப் பாடங்கள் ஆரம்பித்தால், ராத்திரி 9:30 மணி வரை படிப்பார்கள். ஸ்போர்ட்ஸும் உண்டு. இங்கிலீஷ், கணிதம் சரித்திரம் எல்லாம் சொல்லித்தர ஏற்பாடு பண்ணிட்டு வரோம்.மகா பெரியவா ஆராதனை நடத்த, சி.சி.எல் கம்பெனி இங்கே ஒரு பெரிய மண்டபம் கட்டித் தந்திருக்கு. உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி வைதீகக் காரியங்கள் எல்லாம் இங்கே நடத்தலாம். இங்கே இருக்கிற பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்துக்குப் பின்னாலே, ஸ்ரீசோம கணபதியுடன் ஆதிசங்கரரும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படியே சுவரில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஆதிசங்கரர் இங்கேதான் கடைசியில் வந்து தங்கியிருந்தார் என்பார்கள். 'பிரம்ம காஞ்சி’ என்று தேனம்பாக்கத்தைச் சொல்லுவார்கள். இங்கே ஏகாந்தமாக இருக்க விரும்பினா பெரியவா. சிவாஸ்தானம் புனிதமானது என்பது தவிர, சங்கரர் சம்பந்தப்பட்ட ஸ்தலம் என்பதாலேயே அதை உணர்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் பெரியவா. தாம் தங்கியிருக்க ஒரு சிறு குடிசை போதும் என்று இருந்துவிட்டார். தன் கை நிறைய தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு, தம் இடத்தைத் தாமே சுத்தம் செய்து விடுவார். தினமும் அதிகாலைல விஷ்ணுவைத் தரிசிக்க, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே விஷ்ணுகாஞ்சிக்கு நடந்து போவார்.இந்தத் தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்பார்கள். பல்லவர் காலத்துக் கோயில். இங்கே இருக்கிற துர்கையின் மேல் துர்கா பஞ்ச ரத்னம் எழுதியிருக்கார் பெரியவா. சதாரா போற வழியில் இருக்கிற அக்ரி கிராமத்தில் தங்கியிருந்தபோது. 'தே தியான யோகானுதா’ என்று தொடங்கும் பஞ்ச ரத்னம் அது. 'தன்னுடைய குணங்களாலேயே மறைத்திருக்கக்கூடிய பராசக்தியான உன்னை, யார் தியான யோகத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களே காண்கின்றனர். ஏ தேவி, நீதான் பரமேஸ்வரனுடைய சக்தியாகின்றாய். ஏ தேவி, மோட்சத்தைக் கொடுப்பவளே, சர்வேஸ்வரி, என்னைக் காப்பாயாக!’ என்ற அர்த்தம் உள்ளது அந்த ஸ்லோகம்.அன்னிக்கு அதி ருத்ரம் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெரு மழை வந்து, கொட்டகையே சாமி மேல் சாய்ந்துவிடும் போல் இருந்தது. பெரியவா அப்படியே படுத்துண்டிருந்தா. அவருக்கு ஒண்ணுமே ஆகலே! தண்ணி எல்லாம் உள்ளே வந்துட்டுது. அப்புறம் மண் கொண்டு வந்து போட்டு சமன் பண்ணினோம்.  
பக்கத்திலே இருக்கிற இறவாஸ்தானேஸ் வரரைத் தரிசனம் பண்ணி பூஜை பண்ணினால் இறப்பு கிடையாது என்றும், பிறவாஸ்தானேஸ்வரைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் பிறப்பு கிடையாது என்றும் சொல்வார்கள். 'தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’ என்று இந்த தேனம்பாக்கத்தை மிக உயர்வாகச் சொல்லுவார்கள்.பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம். ஆனால் யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக வேகமாக வந்தாள். ஊரையே அழிச்சுடற வேகம். அதனால், நதிக்கு வேகவதின்னு பேர்.மகாவிஷ்ணு வஸ்திரத்தை அவிழ்த்துக் கீழே போட்டுப் படுத்துண்டுட்டார். யாகம் பூரணமாச்சு. அதனால்தான் யதோத்காரி அல்லது சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அவருக்குப் பெயர். ஆனால், தானம் பண்ண ஒரு எஜமானர் வேணுமே! பரமேஸ்வரன் நின்றார். அவர்தான் பிரம்மபுரீஸ்வரர். இங்கே இருக்கிற சோம கணபதி, யாகத்தை ரட்சித்தார். நதியாக வந்து இருட்டாகப் போனதால், உலகமே இருண்டு போச்சு. யாகம் நடக்க பெருமாளே வந்தார். அவர்தான் விளக்கொளி பெருமாள் அல்லது தீபப் பிரகாசர். பக்கத்திலேயே அவர் கோயில் இருக்கிறது. பிரம்மா யாகம் பண்ணினதிலிருந்து வந்த பெருமாள் விக்கிரகம்தான் வரதராஜர் உற்ஸவ மூர்த்தி. அவர் முகத்தில் யாகத்தோட அக்னி பட்ட வடு கூடத் தெரியும்!  இதை மோட்சபுரின்னும் சொல்லுவா. இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார். அதனால, இந்த இடத்தோட விசேஷம் பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு. இங்கே சுவாமிக்கு இரண்டு வேளை பூஜையும் ராஜப்பா குருக்கள்தான் செய்து வருகிறார்.பெரியவா ஏப்ரல் 15, 1978 அன்னிக்கு சிவாஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு கால்நடைப் பயணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் யாத்திரை எல்லாம் முடித்துக்கொண்டு, ஏப்ரல் 13, 1984-ல் திரும்பி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 4000 கி. மீ. தூரம் நடந்திருக்கார். இந்த மாதிரி எந்த மகானாவது மக்களைப் பார்க்கணும்னு அவர்கள் இருக்கிற இடத்துக்குப் போய் தரிசனம் கொடுத்து வந்திருக்கிறாரான்னு தெரியலை. இது ஓர் ஆச்சரியமான, பிரமிப்பான விஷயம்!அதனால்தான் தேனம்பாக்கத்துக்கு அத்தனை விசேஷம். பெரியவாளின் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் அதிஷ்டானத்தை தரிசனம் பண்ணின கையோடு இங்கேயும் வந்து தரிசனம் பண்ணுகிறார்கள். இது அத்தனை புனிதமான ஸ்தலம்!

பல்லில் அடிபட்டால் என்ன செய்வது?


நம் உடலின் நுழைவுவாயிலான வாய்ப் பகுதியில் பற்கள் காவலர்களாக இருந்து செயல்படுகின்றன. உண்ணும் பொருள்களை உடலுக்கு ஏற்றவகையில் சரிபடுத்தி அனுப்பும் முக்கியமான பணியைப் பற்கள் மேற்கொள்கின்றன. பற்கள் இருந்தால்தான் முகத்துக்கு அழகு கிடைக்கும்; பேச்சிலும் தெளிவு பிறக்கும். அத்தகைய பற்களுக்கு நேரும் சில பிரச்னைகளை இப்போது பார்ப்போம்.

பல்வலி:


பல்வலிக்கு முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும் ’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது. பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக மாறுகிறது.
பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான் பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும் ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல் சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம் பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து, கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும். 

அறிகுறிகள்:

சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின் மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.

என்ன முதலுதவி செய்யலாம்?


* வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின் வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம்.

* வலிநிவாரணி மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.

* மருத்துவரின் ஆலோசனைப் படி, ’டிசென்சடைசிங்’ மருந்து கலந்த களிம்பைச் சொத்தைப் பல்லின்மீது தடவலாம்.

என்ன சிகிச்சை?

* பற்சொத்தை ஆரம்பநிலையில் இருந்தால், சில வேதிப்பொருள்களால் சொத்தையை அடைத்துவிட முடியும்.

* சொத்தை வேர்ப்பகுதி வரை சென்றிருந்தால், ’வேர்ச்சீரமைப்பு’ சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.

* பற்சொத்தை மிக மோசமாக இருந்தால், அந்தப் பல்லை அகற்றியே ஆக வேண்டும்.

பல் ஈறுகளில் ரத்தம் வருதல்:

பற்காரை, பற்சொத்தை, சரியாக அமையாத பற்கிளிப்புகள், செயற்கைப் பற்செட்டுகள், வைட்டமின் - சி குறை பாட்டினால் ஏற்படுகிற ’ஸ்கர்வி நோய்’, ரத்த உறைவுக் குறைபாடு நோய், வின்சென்ட் நோய் போன்றவை பல் ஈறுகளைப் பாதித்து, ரத்தம் கசிய வழி செய்யும். வாயிலுள்ள கிருமிகள் காரணமாக, ஈறுகள் அழற்சியுற்று வீங்கும் போதும் ஈறுகளில் ரத்தம் கசியும். பல்லில் அடிபட்டாலும், பல் ஆட்டம் கண்டு விழுந்துவிட்டாலும் பல் ஈறிலிருந்து ரத்தம் வரலாம்.

என்ன செய்யக் கூடாது?

நகம் கடிக்கக் கூடாது. பென்சில் கடிக்கக் கூடாது. விரல் சூப்புதல் கூடாது. ஊக்கு அல்லது குண்டூசியால் பல் குத்தக் கூடாது.

முதலுதவி என்ன?

* சிறிதளவு பஞ்சைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துகொண்டு, ரத்தம் கசிகிற ஈறின்மீது வைத்து, விரல்களால் பத்து நிமிடங்களுக்கு அழுத்திப் பிடிக்கவும்.

* பஞ்சு கிடைக்காவிட்டால், சுத்தமான துணியைச் சிறிய அளவில் மடித்துத் தண்ணீரில் நனைத்து, மேற் சொன்ன மாதிரி பயன்படுத்தலாம். 

* பல் விழுந்து ரத்தம் கசிகிறதென்றால், தண்ணீரில் நனைத்த பஞ்சை பற்குழியில் வைத்து, பற்களை அழுத்தமாகக் கடித்துக்கொள்ள வேண்டும்.

* ரத்தம் கசியும் முகத்தின் வெளிப் பக்கத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் தரலாம்.

* பத்து நிமிடங்களில் ரத்தம் நிற்க வில்லையென்றால், பஞ்சை மாற்றுங்கள்.

* வாயைக் கொப்பளிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரத்தம் உறைவது தடைபடும்.

பல் உடைந்து போனால்?

பல்லில் அடிபடும்போது பல் உடைந்து போகுமல்லவா? அப்போது என்ன செய்வது? பல் பாதியாக உடைந்து போனாலும் சரி, முழுப் பல்லும் வெளியே வந்திருந்தாலும் சரி, இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், பல்லை அதே இடத்தில் பொருத்தி சரி செய்துவிடலாம். 

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: ஒரு தம்ளரில் சிறிதளவு பால் எடுத்துக்கொள்ளுங்கள். அடிபட்ட பல்லை அதில் போட்டு மூடுங்கள். அப்படியே அதை அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் பல் மருத்துவரிடம் கொண்டு சென்று விடுங்கள். பாதியாக உடைந்த பல்லையும் ஒட்டிவிடலாம். முழுப்பல்லையும் பொருத்திவிடலாம். கவலை வேண்டாம்.

பல் பாதுகாப்புக்குப் பத்து வழிகள்!  

* காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும். மேல்தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த்தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். 

* ஃபுளூரைடு கலந்த அனைத்து வகை பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ’டிசென்சடைசிங்’ பற்பசையைப் பயன்படுத்தலாம். 

* பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

* பல் துலக்கியைப் பொருத்த வரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது. 

* ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக் கொள்ளும் மிருதுவான ’விரல் பல் துலக்கி’யைப் பயன்படுத்தி, பெற்றோரே குழந்தைகளுக்கு ஐந்து வயது வரையிலும் பல் துலக்கிவிடுவது நல்லது. 

* வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ் பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச் சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும், பற்சிப்பியும் நல்ல வளர்ச்சி பெறும். 

* பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்புமாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். 

* காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவுகளையும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவுகளையும் குளிர்பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. 

* சூயிங்கம் மெல்லுவது, வெற்றிலைப் பாக்கு போடுவது, புகை பிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால் பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பல்சொத்தை உள்ளிட்ட பல் பிரச்னைகளை ஆரம்பநிலையிலேயே தவிர்த்துவிடலாம்.