Search This Blog

Friday, February 08, 2013

அருள்வாக்கு - யார் யார் வாய்க் கேட்பினும்!


அறமும் அறிவு நூலால் வருவதே; அறிவு நூலின் பயனும் அறத்துக்கு உதவ வேண்டுவதே. ஆகையால் இவற்றைப் பிரித்துக்கூடச் சொல்லக் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறது.

எந்த விஷயமாகட்டும், அதை யார்தான் எடுத்துச் சொல்லட்டும். அதன் ஸரியான தாத்பர்யம் என்னவென்று பார்த்து ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அர்த்தம். இப்படிச் சொன்னதால் முதலிலேயே எந்த ஒரு வித்யையும் தப்பு என்று ஒதுக்கி வைத்துவிடாமல் அதிலும் ஏதாவது உசந்த கருத்து இருக்குமா என்று ஆலோசிக்க வேண்டுமென்று ஏற்படுகிறது. அதேபோல, ‘போயும் போயும் இவர்களிடமா கற்றுக் கொள்வது? இவர்கள் சொல்லியா கேட்டுக் கொள்வது?’ என்றெல்லாம் நினைக்காமல், ‘சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; சொல்வதில் தாத்பர்யம் இருந்தால் எடுத்துக் கொள்வோம்’ என்று நினைக்க வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பண்புகளையும் தர்ம சாஸ்திரங்களில் வெகுவாக ஆதரித்து வற்புறுத்தியிருக்கிறது.

‘விஷயமிருக்கிறதா என்று பார்க்கிறேன்’ என்று பொய் ஸமாதானம் சொல்லிக் கொண்டு, கன்னாபின்னா ஸமாசாரங்களைக் கூட ஒருத்தன் படிக்கலாம். அதாவது ‘எப்பொருளை’யும் படிக்கலாம். ஆனால் உசத்தி தாழ்த்தி பார்க்காமல் ‘யாரார் வாய் கேட்பது’ லேசில் முடியாது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, February 06, 2013

எனது இந்தியா (ரகசிய ரேடியோ !) - எஸ். ராமகிருஷ்ணன...

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு துணையாக நின்ற எத்தனையோ மனிதர்கள், இயக்கங்கள், நிகழ்ச்சிகள் இன்றும் வரலாற்றின் இருண்ட பகுதிக்குள் புதையுண்டு இருக்கின்றன. அதில் ஒன்று​தான், காங்கிரஸ் ரேடியோ எனப்படும் ரகசிய ரேடியோ ஒலிபரப்பு. கடுமையான தணிக்கைகளும் அடக்கு​முறைக​ளும் இருந்த பிரிட்​டிஷ் இந்தியாவில், சுதந்திர எழுச்சியை மக்​களுக்கு ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய ஒலிபரப்பு நிலையமே காங்கிரஸ் ரேடியோ. 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது காந்தி உள்ளிட்ட அத்தனை முக்கியத் தலைவர்​களும் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களுக்கு உண்மைச் செய்திகளை தெரிவிக்க இந்த ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரேடியோ ஒலிபரப்பை உருவாக்கியவர் உஷா மேத்தா. மும்பையைச் சேர்ந்த இவர், பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்று, 'ஹாம் ரேடியோ’ எனப்படும் தனிநபர் ஒலிபரப்புக் கருவிகளை வாங்கி இந்த ரகசிய ஒலிபரப்புச் சேவையை நடத்தினார். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ராம் மனோகர் லோகியா, விட்டல்பாய் ஜவேரி, சந்திரகாந்த் ஜவேரி மற்றும் பாபுபாய் தாகூர். 88 நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த சுதந்திர ரேடியோவின் கதை மிக சுவாரஸ்​யமானது.

ரகசிய ரேடியோ ஒலிபரப்பு உருவாக்கப்பட்டதன் பின்புலத்தை அறிந்துகொள்வதற்கு முன், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவானதை அறிவது மிக அவசியம்.


1942-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழுமை​யான விடுதலை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்​பட்டது. அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். காந்தி​யின் இந்த முடிவை ஏற்க, பலர் மறுத்தனர். கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், காந்தி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் உள்ள குவாலியா டேங்க் மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசிய காந்தி, இந்தியாவுக்கு உடனே சுதந்திரம் வழங்கக் கோரி 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய காந்தி, 'உலகப் போர் தொடங்கியபோது பிரிட்டன் மீது எனக்கு ஏற்பட்ட அனுதாபம் இப்போது முற்றிலும் அகன்றுவிட்டது. இனி, பிரிட்டிஷாரின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஒரு சுதந்திர தேசத்தைப் போல் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்தப் போராட்டக் களத்தில் காங்கிரஸார் ஒவ்வொருவரும் தங்களைப் போர் வீரர்களாக எண்ணிக்கொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, 'செய் அல்லது செத்து மடி’ என்பதே நமது நிலைப்பாடு. இது, காங்கிரஸ்​காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான் இடும் கட்டளை’ என்று காந்தி கூறினார்.

இந்த அறிவிப்பின் விளைவாக மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி காந்தி கைதுசெய்யப்பட்டு புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். காந்தியின் மனைவி கஸ்தூரி பாயும் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பூனா கொண்டுவரப்பட்டார். அவரும் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். அபுல்கலாம் ஆசாத், பண்டித நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும், அதன் சகலவிதமான துணை அமைப்புகளும் தடை செய்யப்பட்டு இருப்பதாக, ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்தத் தொடர் கைது சம்பவங்களைக் கண்டித்து, இந்தியா முழுவதும் கிளர்ச்சி நடந்தது. பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவிடாமல் கலைப்பதற்கு போலீஸும் ராணுவமும் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும், சில இடங்களில் கலவரம் பரவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வளவு நெருக்கடி கொடுத்தும் சுதந்திர எழுச்சியை பிரிட்டிஷ் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிய​வில்லை. தமிழகத்தில் காமராஜர், கக்கன், ம.பொ.சி. உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மிக மோசமாக நடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு கசை​யடியும் கடுமையான தண்டனைகளும் தரப்பட்டன. உணவில் மூத்திரத்தைக் கலந்து கொடுத்து கைதிகள் அவமதிக்கப்பட்டனர்.


இந்தச் சூழலில் காந்தியின் போராட்ட வழிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், இந்தியா முழுவதும் நடந்த மக்கள் எழுச்சி குறித்த தகவல்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளவும் ஒரு ரேடியோ தேவைப்பட்டது. ஆனால், இன்று இருப்பதுபோல அந்தக் காலங்களில் ரேடியோ தொழில்நுட்பம் நவீன வளர்ச்சி அடைந்து இருக்கவில்லை. 1921-ம் ஆண்டு தனியார் பயன்பாட்டுக்கான ரேடியோ சாதனங்களைக்கொண்டு 'ஹாம் ரேடியோ’வை முதன்முதலாக அமைத்தவர் அமரேந்திரநாத் சந்தர். அவரைத் தொடர்ந்து, முகுல்போஸ் தனக்கெனப் பிரத்யேக ஒலிபரப்பு முறையை அமைத்து ஹாம் ரேடியோவை இயக்கிவந்தார். 1923-ம் ஆண்டில் இந்தியா முழுவதுமே இதுபோல 20 ஹாம் ரேடியோக்​கள்தான் இருந்தன. 

1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, பிரிட்டிஷ் அரசு ஹாம் ரேடியோக்களின் லைசென்ஸ்களை நிறுத்தியதோடு உபகரணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போது, 50-க்கும் குறைவாகவே ஹாம் இயக்குனர்​கள் இந்தியாவில் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் நாரிமன் அப்ரபாத் பிரின்டர். இவர், பம்பாயில் ஹாம் ரேடியோ நடத்திவந்த பார்சிக்காரர். லண்டனில் படித்த பிரின்டர், தொழில்நுட்பக் கல்லூரி நடத்திவந்தார். ஆகவே, அவரால் இந்தியாவில் கிடைக்கும் தொழில்நுட்பக் கருவிகளைக்கொண்டு தரமான ஹாம் ரேடியோவை உருவாக்க முடிந்தது.

ஹாம் ரேடியோ எனப்படுவது தனியார்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலிபரப்பு செய்துகொள்ளும் தன்னார்வ சேவை. புயல் மற்றும் இயற்கைச் சீற்றத்தின்​போது இந்த ஹாம் ரேடியோக்கள் தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவும். மேலும், ராணுவத்தின் செயல்பாடுகளுக்கே இதுபோன்ற ரேடியோக்கள் பெரிதும் பயன்படுத்தப்​பட்டன. இந்த ரேடியோவை உருவாக்க அதிகப் பொருட்செலவு கிடையாது. ஆகவே, பிரின்டர் இதுபோன்ற ஒரு ரேடியோவை உருவாக்கி எளிதாக நடத்திவந்தார். இவரைப் போலவே, தானா என்பவர் 'ஆசாத் ரேடியோ’ என்ற பெயரில் ஒரு ரகசிய ரேடியோவை உருவாக்கி, அதில் சுதந்திர கீதங்களையும் தடை செய்யப்பட்ட சொற்பொழிவுகளையும் ஒலிபரப்பிவந்தார். இது, 1940-களில் நடந்தது. தானாவின் இந்தச் செயல்பாடு கண்டறியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து தொழில்நுட்பக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில்தான், வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு தருவதற்கான ரேடியோவை உருவாக்கும் பணி தொடங்கியது. பிரிட்டிஷ் உளவாளிகளின் கண்களுக்குத் தப்பி இதை எப்படி செய்வது என்பதற்கு, ஒரு ரகசிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில், உஷா மேத்தா இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உஷா மேத்தா, குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா பிரபல நீதிபதி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த உஷா, தனது பள்ளி வயதில் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார். காந்திய வழியில் நாட்டம்கொண்டதுடன் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சைமன் கமிஷன் வருகையின்போது, அதை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட உஷா, தனது உரத்த குரலில் சைமனே திரும்பிப் போ என்று முழக்க​மிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கதர்த் துணி நெய்வதிலும், கள்ளுக்கடை மறிய​லிலும் ஆர்வம் காட்டிய உஷா, தன் வாழ்நாள் முழுவதும் கதர்ப் புடவைகளை மட்டுமே அணிந்தார். காந்தியச் சிந்தனைகளால் தூண்டப்பட்ட உஷா, தேச சேவைக்காக பெரிய காரியம் செய்ய வேண்டும் என்ற தீவிர மனப்பாங்குடன் வளர்ந்தார். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற உஷா மேத்தாவின் அப்பா, சூரத்தில் இருந்து பம்பாய்க்கு இடம் மாறினார். இதனால், உஷா பம்பாயில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டது. படிக்கும் காலத்திலேயே சுதந்திரச் சொற்பொழிவுகளைக் கேட்பது, கையேடுகள் மற்றும் வெளியீடுகளை மாணவர்கள் மத்தியில் வினியோகம் செய்வதுபோன்ற பணிகளில் உஷா ஈடுபட்டார்.

படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்த உஷா, தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு, தந்தையைப் போல சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், சுதந்திரப் போராட்ட எழுச்சி காரணமாக தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார். இந்த நிலையில்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றியது. இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய உஷா, அதற்காக ஒரு ரேடியோ நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்காக, அரசியல் ஈடுபாடுகொண்ட ஒலிபரப்புக் கலைஞர்கள் எவராவது இருக்கிறார்களா என தேடினார். அப்போதுதான் தானாவைப் பற்றி அறிந்தார். தானா ஒரு தீவிரமான காந்தியவாதி என்பதால், ஒரு சுதந்திர ரேடியோவை உருவாக்கிவிட முடியும் என்று முயற்சிசெய்தார். இதை அறிந்த பிரிட்டிஷ் உளவாளிகள் அவருக்கு ஒலிபரப்புச் சாதனங்களை சப்ளை செய்வதுபோல ஒரு பிரிட்டிஷ் இன்ஜினீயரை நடிக்கவைத்து, முடிவில் அவரைக் கைதுசெய்து அந்த முயற்சியைத் தோற்கடித்தனர்.

Tuesday, February 05, 2013

பஞ்சபூத சக்தி பீடங்களில் ஆகாயத் தலம் - காஞ்சிபுரம்.

பஞ்சபூத சக்தி பீடங்களில் ஆகாயத் தலம் - காஞ்சிபுரம். சென்னைக்கு அருகில் உள்ள புண்ணிய நகரமான காஞ்சியம்பதி, சக்திபீடங்களில் முக்கியமான தலம். இதை ஒட்டியாணபீடம் என்பார்கள்.  

ஸ்ரீகாமாட்சியுடன் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீவாராஹி, ஸ்ரீபைரவர், ஸ்ரீகணபதி என்று ஸ்ரீவித்யைக்கு உரிய தேவதைகள் எட்டுப்பேரும் அருளும் கோயில் இது. இழந்த ராஜ அதிகாரத்தையும் ஜெயத்தையும் வழங்குகிற அன்னை ஸ்ரீகாமாட்சி அம்பாள். இவளின் கடைக்கண் பார்வை பட்டு, புகழ்பெற்ற தலைவர்கள் ஏராளம்.

அம்பாளின் சந்நிதி காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது என்பார்கள். இங்கே 24 அட்சரங்களும் 24 தூண்களாக இருப்பதாக ஐதீகம். காயத்ரி மண்டபத்தில் இருந்த படி ஒரேயரு முறை காயத்ரீ ஜபத்தைச் சொன்னாலே போதும்... கோடி ஜபம் செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.


காஞ்சியம்பதியில் தங்கி, காமாட்சி அம்மையின் திருவடியில் இருந்து முக்தி அடைந்தார் ஆதிசங்கரர். எனவே, இதை மோட்சபுரி என்று குறிப்பிடுவார்கள். முக்தி தரும் காசி, அயோத்தி, மதுரா, மாயா, அவந்திகா, துவாரகா, காஞ்சி ஆகியவற்றுள் காஞ்சியம்பதி மட்டுமே தென்னகத்தில் உள்ளது எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

வேறு எந்தத் தலத்து அம்பிகைக்கும் கிடைக்காத பெருமை, ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு உண்டு. அதாவது, இங்கேயுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சி அம்பாள் கோயிலை நோக்கியே அமைந்துள்ளதும், அந்த ஆலயங்களின் உத்ஸவ விழாக்களில், திருவீதியுலா வரும் தெய்வங்கள், காமாட்சி அம்பாள் கோயிலை வலம் வரும் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று.


ஸ்ரீகாமாட்சி, தன்னுடைய இடக் கண்ணில் லட்சுமியையும், வலக் கண்ணில் சரஸ்வதியையும் வைத்திருப்பதாக ஐதீகம். அதனால், காமாட்சியை வழிபட்டால் கல்வியும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். மேலும், காமாட்சியம்மனின் கருவறை முன்மண்டபத்தின் தென்புறம் வராஹி அம்மன் எழுந்தருளியிருக்க, அவள் எதிரே சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வந்து வழிபடும் தம்பதிக்கு வம்ச விருத்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாளின் பெருமை களையும் அவளின் பேரருளையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அத்தனை பிரமாண் டமான, புராதனமான இந்தக் கோயிலில் மாசி மாதம் 3-ஆம் தேதி பிரம்மோத்ஸவம் துவங்கு கிறது. அதாவது, பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவில், திருவீதியுலாவில் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வரும் அம்பிகையைத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.


கோயில்களில் உத்ஸவங்கள் நடைபெற்றால், அவை அந்த ஆலயத்தின் நன்மையைக் கருதி நடைபெறும் விழா என்றோ, 'பல விழாக்களில் இதுவும் ஒன்று’ என்பதாகவோ நினைக்கிறோம். தேர்த் திருவிழா முதலான முக்கிய மான விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறோம். மற்ற உத்ஸவ விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உத்ஸவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான வைபவம் என்பதை அறிவது அவசியம்!

உத் ஸவம். இதில், ஸவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதைப் பிரஸவம் என்கிறோம். அதேபோல், எல்லாம் வல்ல பரம்பொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறை யில் மூலமூர்த்தமாக எழுந்தருளியுள்ளது. அப்படி, மூலமூர்த்தமாக இருக்கிற இறைவனை, இறைசக்தியை, உத்ஸவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக கோயிலில் இருந்து ஸ்வாமி வீதியுலா வருகிற வைபவமே உத்ஸவம்!


தீமைகள் அழிந்து, உலகில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்வதற்காகவே உற்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றன, ஆகமங்கள்.  'பரம் சாம்பவி தீக்ஷ£க்யம் உத்ஸவம் பாபநாசனம் ஸர்வ கல்யாண மித்யுக்தம் உத்ஸவம் ஞானஸம்பவம்’ என விவரிக்கிறது காரணாகமம் எனும் சிவாகமம். வீதியுலா வரும் இறைவனை பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் சரணடைந்தால், பாவங்கள் விலகும்; மங்கலங்கள் பெருகும்; 'சாம்பவீ தீ¬க்ஷ’ சிவஞானத்தை எளிதில் பெற்று வாழலாம்!

அதாவது, இறைவனானவன் எந்த ஸ்பரிசமும் இன்றி, நம் மீது பெருங் கருணையுடன் இந்த தீ¬க்ஷயை அளித்தருளத் தயாராக இருக்கிறான். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?!

இறைத்திருமேனி வீதியுலா வரும் போது தெருக்களைச் சுத்தம் செய்து, நீர் தெளித்து, வண்ணக்கோலங்களால் அலங்கரித்து, இறைவனை வரவேற்க வேண்டும். இதில் மகிழும் இறைவன், நம் கர்மவினைகளை போக்கி, நம் வாழ்வையும் வண்ணமயமாக்குவான்.

இந்த பிரம்மோத்ஸவங்களால் இயற்கைச் சீற்றங்கள் குறையும் என்கின்றன ஞான நூல்கள். பசுமை செழித்து, விவசாயம் கொழிக்கும். குடும்பத்திலும் தேசத்திலும் ஒற்றுமை மேலோங்கும். நிம்மதியும் அமைதியுமாக ஆனந்தமாக மக்கள் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பிரம்மோத்ஸவத்தை முதன்முதலில் நடத்தியதே ஸ்ரீபிரம்மதேவன்தான் என்கிறது புராணம். எனவே, பிரம்மோத்ஸவ நாளில் ஸ்ரீகாமாட்சி அன்னையை கண்ணாரத் தரிசித்துப் பலன் பெறுவோம்.

Sunday, February 03, 2013

ஓ பக்கங்கள் - மெஹருன்னிசாவிடமிருந்து ஒரு கடிதம்!, ஞாநி

அன்புள்ள ஞாநிக்கு

அசலாம் அலைக்கும்.

உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு உங்களைத் தெரியும். நான் ஒரு பெண். நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டு காரணங்களுக்காகவே எனக்கு இந்தச் சமூகத்தில் நிறைய துயரங்கள் இருக்கின்றன.

நான் கல்லூரி சென்று படிப்பதை என் வீட்டார் வேண்டா வெறுப்பாகத்தான் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணன்கள் இரண்டு பேரும் படித்துவிட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு மூத்தவர் சில வருடங்களாக ஒரு முஸ்லிம் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஆர்வமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய அண்ணன் தாடி வளர்த்து தலையை மூட குல்லா போடும் பழக்கத்துக்கு மாறிவிட்டார். சின்னவரையும் மாறச் சொல்கிறார். அவர் மறுத்துக் கொண்டிருக்கிறார்.


முதல் வருடம் நான் கல்லூரிக்குச் சென்ற போது பர்தா ஏதும் அணியாமல்தான் போய் வந்தேன். பெரிய அண்ணன் இப்போது என்னை பர்தா போடாமல் வெளியே செல்ல அனுமதிப்பதே இல்லை. கல்லூரி கேட்டுக்குள் நுழையும் வரை பர்தா போடுகிறேன். அதன் பின்னர் அதைக் கழற்றிவிட்டு மற்ற பெண்களைப் போல சாதாரண உடையில் இருக்கிறேன். மாலை வீடு திரும்பும் முன்பு திரும்ப பர்தா அணிந்து கொண்டு கல்லூரியை விட்டு வெளியே வருகிறேன். இது எனக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால் இதற்காக நான் தகராறு செய்ய ஆரம்பித்தால், என் படிப்பையே நிறுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. படிப்புக்காக இதை சகித்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னுடன் படிக்கும் இந்து பெண்களுக்கெல்லாம் முஸ்லிம் என்றால் யார், இஸ்லாம் என்பது என்ன என்று எதுவும் தெரியாது. பல விஷயங்களை சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் எங்கேயாவது ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டு அந்தச் செய்தி ஓயாமல் டிவியிலும் பேப்பர்களிலும் இரண்டு மூன்று நாள் வரும்போது, என்னுடன் என் தோழி ஒருத்தி பேசும் பேச்சின் தொனியே மாறிவிடும். ‘எல்லாம் உங்க ஆளுங்க வேலைதான்’ என்று பகிரங்கமாகவே என்னிடம் சொல்வாள். ‘இப்படி குண்டு வெக்கறவங்க யாரும் எங்க ஆளே இல்லை. இதை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்’ என்று நான் சொன்னால் அவளுக்குப் புரியாது.

அண்ணன்கள் இரண்டு பேருக்கும் நல்ல வேலை கிடைத்ததும், கொஞ்சம் பெரிய வீடாகப் பார்த்துக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்தோம். நிறைய நல்ல வீடு காலியாக இருந்ததைப் போய் பார்த்தோம். ஆனால் ஒருத்தரும் எங்களுக்கு வீடு தரவில்லை. முஸ்லிம்களுக்குத் தருவதில்லை என்று பச்சையாகவே சிலர் சொன்னார்கள். அதனால் ஏற்பட்ட பெரிய இழப்பு எனக்குத்தான். வெவ்வேறு சாதி, மத ஆட்கள் குடியிருக்கும் பகுதியில் போய் குடியிருந்திருந்தால், எனக்கு வீட்டிலும் தெருவிலும் இன்னும் கொஞ்சம் அதிக சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால் திரும்பத் திரும்ப எங்க ஆட்கள் இருக்கும் தெருவிலேயே, வட்டாரத்திலேயே குடியிருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்வாங்க, இயக்கத் தலைவர் என்ன சொல்வாரு என்றெல்லாம் பயமுறுத்தி என் சுதந்திரம்தான் பறிபோய்க் கொண்டிருக்கிறது. என் நிலையில்தான் பெருவாரியான முஸ்லிம் பெண்கள், என் வயது பெண்கள் இருக்கிறார்கள். என்னைப் போல கல்லூரிக்குப் போய் படிக்க வாய்ப்பு கிடைக்காத சின்னச் சின்ன பெண்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்துகொண்டு, அவர்களும் என் அம்மா, பாட்டி மாதிரி சின்ன வயதிலேயே கிழவிகள் மாதிரி யோசிக்கவும் பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நீங்கள் விஸ்வரூபம் படம் பற்றி டி.வி.யில் பேசியதையெல்லாம் பார்த்தேன். இயக்கத்தில் இருக்கும் என் அண்ணனும் நானும் சேர்ந்து உட்கார்ந்து பார்த்தோம். உங்கள் கருத்துடன் அண்ணனுக்கு துளியும் சம்மதம் இல்லை. ஆனால் எனக்கு நீங்கள் சொன்னது எல்லாம் சரியாகவே தோன்றியது. ஆனால் அதை அண்ணனிடம் சொல்ல முடியாது.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர். அவர் படங்களில் எல்லா படமும் பிடிக்காது. சில படங்களில் என்ன சொல்கிறார் என்றே புரியாது. சில படங்கள் ரொம்பப் பிடிக்கும். விஸ்வரூபம் படம் தாலி பான் பயங்கரவாதிகள் பற்றிய கதை என்று சொன்னார்கள். இந்தப் படத்தை எதிர்த்து பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படம் ரிலீசானால் தானே அதில் என்ன இருக்கிறது என்று தெரியும். இந்த தலைவர்களுக்கு மட்டும் போட்டுக் காட்டினாராம். அவர்கள் பார்த்துவிட்டு இதை மற்ற முஸ்லிம்கள் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.
 
அதற்கு அப்புறம் ஏன் கமல் இவர்களுக்குப் போட்டுக் காட்டினார் என்று எனக்குப் புரியவில்லை. மணிரத்னம் பம்பாய் படம் எடுத்த போது பால் தாக்கரேவுக்கு பயந்து படம் போட்டுக் காட்டின மாதிரி கமலும் பயந்துவிட்டார் போலிருக்கிறது.

இந்த விஷயங்களில் இந்த தலைவர்கள் எங்களைப் போன்ற பெண்களின் கருத்தையெல்லாம் கேட்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. இவர்கள் வீட்டை விட்டு போனதும் டி.வி.யில் எல்லா படங்களையும் பார்க்கிறோம். எந்தப் படம் எப்படி என்று எங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். பெண்கள் சினிமாவே பார்க்காமல் இருந்தால் எங்கள் தலைவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமா ஹராம் என்பார்கள். நான் தினசரி கல்லூரி போய்விட்டு வரும் வழியில் நான்கு டாஸ்மாக் கடைகள். வழிநெடுக குடிகாரர்களுக்கு பயந்து பயந்துதான் தாண்டி வரவேண்டியிருக்கிறது. மதுவும் ஹராம்தான். ஆனால் இந்தத் தலைவர்கள் அதற்கெல்லாம் பெரிய போராட்டம் இப்படி முழுமூச்சாக நடத்துவதே இல்லை.

கமல்ஹாசன் படத்தில் பயங்கரவாதிகள் எல்லாரும் முஸ்லிம்களாக தொழுகை செய்வது, குரான் படிப்பது, அல்லாஹூ அக்பர் என்று சொல்வது எல்லாம் காட்டப்படுகிறது என்று என் பெரிய அண்ணன் சொல்கிறார். இதைப் பார்த்துவிட்டு எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று மக்கள் நினைக்க ஆரம்பிப்பார்கள் என்பது அவர் கருத்து. நான் அவரிடம் பதில் பேச முடியாது. ஆனால் டி.வி.யில் நீங்கள் சொன்ன பதில் எனக்கு சரியாகப்பட்டது. மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் மதப் பழக்கத்தை பின்பற்றுபவர்களாகவும்தானே இருப்பார்கள். அதை எப்படி காட்டாமல் இருக்க முடியும்? பாபர் மசூதியை இடித்த இந்து மத வெறியர்கள் பற்றி சொன்னீர்கள். அவர்களெல்லாம் காவி உடுத்திக்கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டுதான் மசூதியை இடித்தார்கள். அதற்காக ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும் எல்லா ஹிந்துவும், ராமரைக் கும்பிடும் எல்லா ஹிந்துவும் பயங்கரவாதியென்றா நினைத்துக் கொள்கிறோம்? இல்லையே. உங்களுடைய இந்த வாதம் ரொம்ப சரி. என் தோழி உமா எப்போதும் ராம்ராம் என்றுதான் யாரையாவது பார்த்தால் சொல்வாள். என்னிடமும் சொல்வாள். நான் சிரித்துக் கொண்டே அசலாம் அலைக்கும் என்பேன்.

பொதுவாக தமிழில் நல்ல கருத்துள்ள படங்கள் வருவதே குறைவு. இப்படி ஒரு படம் எடுத்து அது சென்சார் ஆனபிறகு யாராவது எதிர்த்து அவர்களுக்கும் போட்டுக் காட்டி சம்மதம் கொடுத்தால்தான் ரிலீஸ் ஆகும் என்றால் இனிமேல் படம் எடுப்பவர்கள் எல்லாரும் திரும்பத் திரும்ப லவ், ஃபைட், குத்துப்பாட்டு மட்டும் இருக்கும் படங்களைத்தான் எடுப்பார்கள். எங்கள் ஆட்களும் அதில் இருக்கும் ஆபாசம், வன்முறை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். எதிர்க்கமாட்டார்கள். முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் கடத்தல்காரனாக, அடியாளாகக் காட்டுவது எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களிலேயே இருப்பதை பார்த்திருக்கிறேன். விஜயகாந்த் படத்திலெல்லாம் வில்லன் முஸ்லிம் பயங்கரவாதிதான். அதையெல்லாம் இந்தத் தலைவர்கள் பெரிதாக எதிர்த்ததே கிடையாது. 

பயங்கரவாதிகள் சாதாரண முஸ்லிம்களான எங்களைப் போலவே தொழுகையும் இதர மதப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுகிறார்கள் என்றால், அது தப்பு. அவர்கள் உண்மையான முஸ்லிம்களே அல்ல, அவர்கள்தான் காஃபிர்கள் என்று எடுத்துச் சொல்வதைத்தான் எங்கள் தலைவர்கள் செய்ய வேண்டும். தாலிபானுக்கும் அல்கொதாவுக்கும் சவால் விடமுடியாமல், உள்ளூரில் இருக்கும் கமல்ஹாசனுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது.

முஸ்லிம் பெண் என்ற விதத்தில் எனக்கும் மற்ற முஸ்லிம் பெண்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. தொழுகைக்கு மசூதிக்குச் செல்ல முடியாது என்பதில் இருந்து, என் அத்தையின் ஜீவனாம்சப் பிரச்னை, என் மாமா பெண்ணின் வரதட்சிணைப் பிரச்னை என்று பல இருக்கின்றன. அதிலெல்லாம் தலைவர்களோ முல்லாக்களோ ஒரு உருப்படியான தீர்வையும் தருவதில்லை. படிப்பு இன்னும் பெரிய பிரச்னை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சுட்டு காயப்படுத்திய மலாலா 14 வயது முஸ்லிம் சிறுமிதான். படிக்கும் உரிமைக்காகப் போராடிய அந்தப் பெண் இன்று உலகம் முழுக்க பெண் கல்வி உரிமைக்கான அடையாளமாகக் கொண்டாடப்படுகிறாள். ஆனால் தமிழ்நாட்டில் கமல் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் எங்கள் ‘தலைவர்கள்’ மலாலாவைக் கொண்டாடுவதில்லை. என் அண்ணன் கோபம் வந்தால் என்னிடம் ‘நீ என்ன மலாலான்னு நினைப்பா உனக்கு?’ என்கிறார்.

எங்களுடைய பிரதான தேவைகள் இன்று எல்லா முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் தரமான கல்வி, வேலைவாப்பு, வியாபாரம் செய்து பிழைப்பதற்கான சமமான வாய்ப்புகள் என்று நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க சரி.

எங்கள் தலைமுறையில் இதெல்லாம் மாறும் என்று நானும் நம்பி வந்தேன். ஆனால் என் தலைமுறை ஆண்களைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கையும் பலவீனமாகிறது. பல பையன்கள் இப்போதே முல்லாக்களைப் போல பேசுகிறார்கள். நடக்கிறார்கள். எங்கள் பெண்கள் படித்து அதிகாரத்துக்கு வந்தால்தான் நிலைமை மாறும். அதனால்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துகிறேன். மலாலாதான் எனக்கு ரோல் மாடல்.

கல்லூரிக்குள் போய்விட்டால், எனக்கு அது இன்னொரு உலகமாக இருக்கிறது. நூலகத்தில் நிறைய புத்தகங்கள். உடன் பேச நல்ல தோழிகள். எல்லாருமே பெருவாரியான நேரம் அவரவர் மதம் சாதியை கழற்றி வைத்துவிட்டு உறவாடுகிறோம். கல்லூரிக்கு வெளியிலும் இப்படி ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும். அதற்குத்தான் நம் கலை, சினிமா, அரசியல் எல்லாம் பயன்பட வேண்டும் என்று நீங்கள் ஸோல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.

இதையெல்லாம் பகிர்ந்து கொள்ள என் வீட்டிலும் தெருவிலும் எனக்கு ஆள் இல்லை என்பதால்தான் என் முகம் தெரியாத உங்களுக்கு இதை எழுதியிருக்கிறேன். நான் நினைக்கும் பல விஷயங்களை நீங்கள் பேசுவதால் இந்த உரிமை எடுத்துக் கொண்டேன். நன்றி.

தேவைப்பட்டால் திரும்ப எழுதுவேன். முடிந்தால் (என் கல்லூரி முகவரிக்கு) பதில் போடுங்கள்.


பின்குறிப்பு: தன் படத்துக்கு ஒரேயடியாக தடை விதித்தால் தமிழ்நாட்டை விட்டோ இந்தியாவையே விட்டோ போய்விடப் போவதாக கமல் சொல்லியிருக்கிறார். மலாலா மாதிரி இருந்து ஃபைட் பண்ணுவதுதான் சரி என்று அவரைப் பார்த்தால் சொல்லுங்கள். 
 
மெஹருன்னிசா என்ற கற்பனைப் பெண் எனக்கு எழுதியதாக இருக்கும் இந்தக் கற்பனைக் கடிதம் பல முஸ்லிம் நண்பர்களுடன் தொடர்ந்து எனக்கு நடக்கும் உரையாடல்களில் தெரியும் நிஜங்களை அடிப்படையாகக் கொண்டது.


அன்புடன்
மெஹருன்னிசா, இளங்கலை வரலாறு.

Saturday, February 02, 2013

எனது இந்தியா (பூணூலைத் துறந்தவர் !) - எஸ். ராமகிருஷ்ணன...

இது, மரபான பிரம்ம சமாஜத்துக்கு எதிராக தேவாலயச் செயல்பாடு​போல அமைப்பை மாற்ற முயற்சிப்பதாக இருக்கிறது என்று தேவேந்திர நாத் தாகூர் கண்டனம் தெரிவித்​தார். இதன் காரண​மாக, இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்​பட்டது. சென், கலப்புத் திருமணம் நடத்திவைப்பதை தேவேந்திர நாத் தாகூர் ஏற்றுக்​கொள்ளவில்லை. 1865-ம் ஆண்டு பிரம்ம சமாஜத்துடன் உள்ள தனது தொடர்பைத் துண்டித்துக்கொண்ட சென் அதுவரை தான் அணிந்திருந்த பூணூலையும் அறுத்து எறிந்து இருக்கிறார்.

இந்த அமைப்பின் சார்பில் இந்தியன் மிர் தருமத்துவா ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டதாக பெ.சு.மணி தனது புத்தகத்தில் கூறி இருக்கிறார். சென் உருவாக்கிய பிரம்ம சமாஜமானது பெரும்பாலும் தேவாலயச் செயல்பாடுகளை ஒட்டியே உருவாக்கப்பட்டு இருந்தது. அதில், திருமணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையில்தான் நடத்தப்பட்டன. பிரம்மோ மிஷனரிகள் உருவாக்கப்பட்டு சமயப் பணிகளுக்காக வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், ஆதிப் பிரம்ம சமாஜமானது இந்தியாவின் மரபை, பண்பாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்தியது. இதற்கு தேவேந்திரநாத தாகூர் தலைமை வகித்தார். பிரம்ம சமாஜத்தின் இந்து மத அடிப்படைத் தொடர்பை விலக்கி, அதை ஓர் தனி அமைப்பாகக் காட்ட முனைந்தவர் கேசவ சந்திர சென். ராஜாராம் மோகன் ராய் முன்வைத்த சமூக அரசியல் கருத்துக்களில் தீவிர ஈடுபாடு காட்டிய பண்டித சிவநாத சாஸ்திரி என்பவர், எளிய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
தொற்றுநோய் பரவிய காலங்களில், பிஜய் கிருஷ்ண கோஸ்சாமி என்பவரது தலைமையில் பிரம்ம சமாஜம் நிதி திரட்டி மருத்துவ உதவிகள் செய்யத் தொடங்கியது. அத்துடன், பெண்களுக்காக கல்வி நிலையங்களை உருவாக்கியதுடன், சிறப்பு இரவுப் பள்ளிகளையும் ஏற்பாடு செய்தது. இதனால், தொழிலாளர்கள் கல்வி கற்பதற்கு வழிவகுக்கப்பட்டது. 1877-ம் ஆண்டு பிரம்ம சமாஜ விதிகளுக்கு முரணாக தனது மகளை கூச் பீகார் இளவரசருக்கு கேசவ சந்திர சென் திருமணம் செய்துவைத்தார். அந்தப் பெண்ணுக்கு அப்போது வயது 14. அத்துடன் திருமணச் சடங்குகள் யாவும் இந்து முறைப்படி நடந்தன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  இதன் காரணமாக, அமைப்பு உடைந்து சாதாரண பிரம்ம சமாஜம் என்ற புதிய அமைப்பு உருவானது.

இந்தியத் தத்துவம் பற்றிக் கூறும்போது, முனைவர் முத்துமோகன் இந்தியத் தத்துவத்தின் வரலாற்றை மிகத் தெளிவாக தனது பௌத்தமும் பெரியாரிசமும் என்ற கட்டுரையில் குறிப்​பிட்டு இருக்கிறார். அவரது வாதத்தின்படி கடந்த சுமார் 3,000 வருடங்களுக்கும் மேலான​தாக அறியப்பட்ட இந்திய வரலாற்றில் 'இந்தியத் தத்துவம்’ என்ற சொல்லாடல் எங்கும் எப்போதும் துலக்கமாகப் பேசப்பட்டதாகத் தெரிய​வில்லை. வெவ்வேறு வட்டாரங்களில், வெவ்வேறு சாதிக் கூட்​டங்களுக்கு இடையில் வெவ்வேறு தத்துவங்கள் இந்தியா என்ற துணைக்கண்டப் பெரும்பரப்பில் பேசப்பட்டு வந்துள்ளன.

காலனிய ஆட்சிக் காலத்தில் மேற்கத்திய ஆட்சியாளர்களும் கிறிஸ்தவ மிஷனரிமார்களும் சில ஐரோப்பிய அறிவுத் துறையினரும் இந்திய மதங்கள், இந்தியப் பண்பாடு, இந்தியச் சமூக அமைப்பு போன்ற விஷயங்களில் அக்கறை காட்டினர். இந்த அக்கறை, அவரவர் ஆட்சி அதிகாரம் அல்லது சமயப் பரப்புத் தேவைகளைச் சார்ந்து தோன்றியது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. இருப்பினும், இவற்றுக்கு ஊடாக ஐரோப்பியரின் லத்தீன், ஜெர்மன் போன்ற பழைய மொழிகளின் சாயல் இந்தியாவின் சமஸ்கிருத மொழியில் உள்ளது என்று ஒரு 'கண்டுபிடிப்பு’ 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அறிஞர்களுக்கு இடையில் அதிகம் பேசப்பட்டது. நவீன நாகரிகம் தீண்டாத பழைய ஆரியர்களின் பூர்வச் சிந்தனையை சமஸ்கிருத மொழி இலக்கியங்களில் கண்டறியலாம் என்று ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் சிலர் நம்பத் தொடங்கினர். 


ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த Theosophy என்னும் இயக்கம், பண்டைய இந்திய 'பிரம்ம ஞானத்தை’ சமயமும் தத்துவமும் இணைந்த ஒன்று என வரையறுத்தது. இறை என்பதைக் குறிக்கும் Theo என்ற சொல்லையும் மெய்யியல் என்பதைக் குறிக்கும் Sophia என்ற சொல்லையும் ஒரே சொல்லாக்கி அந்த இயக்கம் பயன்படுத்தியது. நவீன ஐரோப்பிய விஞ்ஞானத் தொழில்நுட்ப மற்றும் நகரமயமாக்கத்தால் அதிருப்தி அடைந்து இருந்த அறிவாளிகளே இந்த அணியில் அதிகமாக இடம்பெற்று இருந்தனர்.

ஐரோப்பியருக்கும் தமக்கும் பூர்வத் தொடர்புகள் இருந்தன என்ற செய்தி இங்கிருந்தோரைப் பெரிதும் புளகாங்கிதம் அடையச் செய்தது. இருப்பினும், காலனிய ஆட்சியின் போக்கில் இந்திய மேட்டுக்குடிகள் இந்திய விடுதலை என்ற கருத்தை நோக்கி முன்னேற வேண்டியிருந்தது. இந்த நிலையில், காலனி ஆட்சியால் இந்தியருக்கு விளைந்த இழிவுகளை ஈடுகட்ட இந்திய ஆன்மிகத்தின் பெருமையை இங்கிருந்தோர் பாராட்டி எழுதத் தொடங்கினர். பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்த்தனா சமாஜம் போன்ற அமைப்புகள் இங்கு உருவாகின. இவற்றின் ஊடாக இந்தியத் தத்துவம் என்ற சொல்லாடலும் முக்கியப்பட ஆரம்பித்தது. மிக முக்கியமாக, ஐரோப்​பியர் தமது தேவைகளுக்​காகப் பாராட்டிய சமஸ்​கிருத வழித் தத்துவங்​களையே இங்கிருந்த​மேட்டுக்​குடியினரும் பாராட்டிப் பேசினர்.

மேற்கூறிய போக்குகளில் இருந்து விலகிய ஒரு மூன்றாவது அணியும் இதே காலத்தில் தோன்றியது. இந்த அணியினர், இந்தியத் தத்துவங்களின் ஊடாகப் பயணப்பட்டு, அவற்றினுள் புதையுண்டு இருந்த மாற்று மரபுகளை, எதிர் மரபுகளை அடையாளப்படுத்தித் தோண்டி எடுத்தனர். மகாத்மா ஃபூலே, தாமோதர் கோசாம்பி, அயோத்திதாசப் பண்டிதர், ராகுல சாங்கிருத்தியாயன், பெரியார் போன்றோர் இவ்வகை மூன்றாவது அணியைச் சார்ந்தவர்கள்தான். உலகாயதம், சாங்கியம், நியாயம், பௌத்தம், தாந்திரிகம் போன்ற இந்தியத் தத்துவங்களுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். பிராமண மரபு என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாக சிராமண மரபு என்ற சொல்லும், ஆரிய மரபு என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாகத் திராவிட மரபு என்ற சொல்லும், இந்த காலகட்டத்தில்தான் கிளர்ந்து எழுந்தன. இந்து மதம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மாற்றாக சீக்கிய மதம், இஸ்லாமிய மதம் போன்ற சொல்லாடல்களும், சித்தரியம், கபீரியம், சந்தர் மரபு, சைத்தன்யர் மரபு போன்ற மறைஞானச் சமயங்களும் நாட்டுப்புறச் சமயங்களும்கூட இக்காலத்தில் கண்டறியப்பட்டன என்கிறார் முத்துமோகன்.

இப்படிச் சீர்திருத்த இயக்கங்களில் மூன்று கிளைகள் உண்டானதும் அதில் எதிர்ப்பு இயக்கங்கள் மட்டுமே இன்று வலுப்பெற்று இருப்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பிரம்ம சமாஜத்துக்கு தமிழகத்திலும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. 1864-ம் ஆண்டு கேசவ சந்திர சென் கடல் வழியாகப் பயணம் செய்து பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்து உரையாற்றி இருக்கிறார். 1864-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பச்சையப்பன் பள்ளியில் ஆங்கிலச் சொற்பொழிவு ஒன்றையும் சென் நிகழ்த்தி இருக்கிறார். இவரது உரையின் தாக்கத்தில் விதவை மறுமணம் மற்றும் கலப்பு மணம் பற்றிய புதிய பிரக்ஞை தமிழகத்தில் உருவாகத் தொடங்கியது. இதன் விளைவாக, வேத சமாஜம் என்ற ஓர் அமைப்பை 1864-ம் ஆண்டு சென்னையில் தொடங்கி இருக்கின்றனர்.
திருமணங்களில் நடந்த சதிர் கச்சேரிகளைத் தடுத்து நிறுத்தியதும், பால்ய விவாகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததும், பெண் கல்வியை ஆதரித்துப் பேசியதும் இந்த வேத சமாஜத்தின் முக்கியச் செயல்பாடுகள்.

பிரம்ம சமாஜத்தைப் போன்ற ஓர் சீர்திருத்த இயக்கமே ஆரிய சமாஜம். இது, கி.பி. 1875-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை உணர்த்திய மகரிஷி தயானந்த சரஸ்வதி, 1824-ம் ஆண்டு சௌராஷ்டிரா மாநிலத்திலுள்ள டன்காரா என்ற கிராமத்தில் கர்சன்-தார்வாடி என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். விராஜ் நந்த குருவிடம் வேதங்களைக் கற்றுக்கொண்ட தயானந்த சரஸ்வதி, காசிக்குச் சென்று கல்வியில் தேர்ச்சி பெற்றார். அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும் அவை கடவுளுக்குக் கீழ்படிந்து இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துக்கள். வேதம், எல்லா சாதியினருக்கும் கொண்டு செல்லப்படுவது அவசியம் என்று ஆரிய சமாஜிகள் கருதினர். ஆரிய சமாஜத்தில் தொடர்புடைய ஜம்புநாதன் என்ற அறிஞர், வேதத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது இதன் தொடர் நிகழ்வே.

நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன். வேதங்களோடு கடோப நிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது 'சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதங்களில் அர்ப்பணம் செய்திருப்பதாக தனது முன்னுரையில் கூறி இருக்கிறார்.

இரண்டு சமாஜங்களும் இன்று வலுவிழந்து​விட்டன. ஆனாலும், அவை 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி மற்றும் விதவை திருமணம், பால்ய விவாக மறுப்பு, இரவுப் பள்ளி என்று பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததை இன்றும் மறக்க முடியாது.

Friday, February 01, 2013

ஓ பக்கங்கள் - ராகுல் காந்தியால் காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா? - ஞாநி


மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்ற முடியுமா?

காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப்பட வேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதைவிடச் சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடது சாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலில் இதர கட்சிகளில் எது பரவாயில்லை என்று பார்க்கும் சூழலே இருக்கிறது.

எண்பதுகளிலிருந்து வலிமை பெறத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி அடிப்படையிலேயே ஆபத்தான கட்சி என்பது என் தீர்மானமான கருத்து. பாரதிய ஜனதா கட்சி அரசியலில் நிலைபெறுவதற்கு முன்னால் நம் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் இதர வழிபாட்டு முறைகளின் தொகுப்பாகச் சொல்லப்படும் ஹிந்து மதத்தினருக்கும் இடையே கடும் உரசல்கள் இருக்கவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய இணக்கமே எல்லா மதத்தினரிடையிலும் இருந்து வந்தது. பாரதிய ஜனதாவின் வருகைக்குப் பின், அதன் தீவிர ஆயுதங்களான இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவை தீவிரமாக இங்கே இயங்கத் தொடங்கிய பின்னர்தான், முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புகளும் உருவாகத் தொடங்கின. அன்றாட வாழ்க்கையிலேயே குறிப்பிட்ட மதத்தினரை சில பகுதிகளிலேயே குறுக்கி வாழவைக்கும் கெட் டொவைசேஷன் எனப்படும் சேரிப்படுத்தலும், முத்திரை குத்தலும் பலமாகி வருகிறது. எனவே காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய ஜனதா வளர்வதை விரும்பவே மாட்டேன்.

இன்றைய நிலையில் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஊழல்கள், ஈழத்தமிழர் பிரச்னையில் தொடர்ந்து எடுக்கும் தவறான நிலைகள் எதுவும் எனக்கு உடன்பாடானவை அல்லதான்.

ஆனால் பாரதிய ஜனதா இதில் காங்கிரசிலிருந்து வேறுபட்டதே அல்ல. ஆட்சிக்கு வந்தால் அதன் அமைச்சர்களும் பெரும் ஊழல் செய்பவர்கள், சுரங்கத் தொழிலதிபர்களின் தயவில் கட்சி நடக்கும் என்பதெல்லாம் அம்பலமாகிவிட்டது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால் அதன் வெளியுறவுக் கொள்கையும் ராஜபட்சேவை எதற்கும் நிர்ப்பந்தப் படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கும். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொருளாதார தாராளமயக் கொள்கை மோடியின் குஜராத் உட்பட பி.ஜே.பி. ஆட்சிகளில் எங்கேயும் மாற்றியமைக்கப்படவில்லை. அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

காங்கிரசுக்கு மாற்றாக பி.ஜே.பி.க்கு பதில் உண்மையில் உருவாக வேண்டிய மூன்றாவது அணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பான ஓர் அணிதான். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழிவாரி தேசிய இனத்தின் பிரதிநிதியான மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் இந்தியாவை நிஜமான கூட்டாட்சி முறையை நோக்கியோ அமெரிக்க பாணி ஃபெடரலிசம் நோக்கியோ அழைத்துச் செல்லவும் முடியும்.
ஆனால் இன்று இருக்கும் முக்கியமான மாநிலக் கட்சிகள் எதுவும் அதற்கான தகுதியுடன் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் மோசமான மாநிலக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு சரியான மாநிலக் கட்சி உருவாக வேண்டியிருக்கிறது. அப்படி உருவானால்தான் இந்திய அரசியல் சரியான கூட்டாட்சியை நோக்கிச் செல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பி.ஜே.பி. போன்ற மதவாத சக்திகளைத் தடுக்க காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்சியின் பொறுப்பேற்க வரும் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்? என்ன செய்யக் கூடும்?

ராகுலைப் பற்றிய முக்கியமான விமர்சனம் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலின் இன்னொரு பிரதிநிதி அவர் என்பதாகும். இங்கே நாம் ஜவாஹர்லால் நேரு, கருணாநிதியைப் போல வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் அல்ல என்பதைக் கவனித்தாக வேண்டும். அவருக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரிதான் பிரதமரானார். இந்திராவை நேரு கொண்டு வரவில்லை. இந்திரா காலத்தில் நெருக்கடி நிலையின் போது அவரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சஞ்ச காந்தி, இந்திரா, நேருவின் மதச்சார்பற்ற அரசியல் மனநிலையில் வந்தவர் அல்ல. சஞ்சயின் குடும்பமே மேனகா, வருண் இருவரும் - இன்று பி.ஜே.பி.யில்தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் நுழைந்தவர்தான். அவர் கொல்லப்பட்ட பிறகு, சோனியாவும் உடனடியாக தீவிர அரசியலுக்கு வரவில்லை. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரசுக்குப் பெரும் களங்கம் கற்பிக்கக்கூடிய இருபெரும் நிகழ்வுகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யும் நடத்திய பாபர் மசூதி இடிப்பு நரசிம்மராவின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாயிற்று. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சிபு சோரன் உள்ளிட்ட சில எம்.பி.களுக்கு நரசிம்மராவ் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு, சிபு சோரன் தண்டனையையும் அனுபவித்தார்.

நேரு, இந்திரா, ராஜீவ் காலங்களில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லை. ராகுல் காந்தியும் அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் அம்மாவுக்கு உதவுவதற்காக வந்தவர்தான். சோனியாவும் ராகுலும் அரசுப் பதவிகளில் அமர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தபோதும் இதுவரை அவற்றைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். எனவே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முற்றிலுமாகப் பொருந்தாது.

இரண்டாவதாக ராகுல் மீது சொல்லப்படும் விமர்சனம் இதுவரை அவர் காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்து பெரும்பலத்தை எங்கேயும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். இது முற்றிலும் சரியல்ல. உத்தரப்பிரதேசத்தில் 2009 எம்.பி.தேர்தலின் போது 21 எம்பி இடங்களைப் பெற அவர் பிரசாரம் உதவியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் உதவவில்லை. சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் மக்கள் ஆதரவைப் பெற கட்சிகளுக்கு உள்ளூரில் ஒரு செல்வாக்கான கவர்ச்சியான தலைவரும் தேவை. காங்கிரசுக்கு அது உ.பி.யிலும் இல்லை. குஜராத்திலும் இல்லை.

இப்போது ராகுல் செய்ய வேண்டியது என்ன?

மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்பு பொருளாதாரக் கொள்கைகள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. காங்கிரஸ் இந்தக் கொள்கைகளில் சிலவற்றையேனும் கைவிட்டு, மீண்டும் தன் சோஷலிசக் கொள்கைகள் சிலவற்றை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலொழிய சாதாரண மக்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சிக் கிளையை உருவாக்க ஏற்ற மாநிலத் தலைவர்கள் இல்லை. வலுவான மாநிலத் தலைமைகளை இந்திரா ஒழித்தார். அதுதான் இன்று வரை காங்கிரசின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. இதை ராகுல் திருத்த வேண்டும்.

படித்த நகர்ப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் படிப்பும் வேலையுமில்லாத கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் இன்று மிகப்பெரியது. இவர்களுக்கான சமூக, அரசியல் திட்டம் எதுவும் எந்தப் பெரிய கட்சியிடமும் இல்லை. ஆனால் ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள் இதைத்தான் கவனிக்க வேண்டும்.

ராகுலால் இதையெல்லாம் செய்யமுடியுமா?

இதுவரை அவர் செய்து வந்திருப்பதில் எனக்கு முக்கியமாகப்படுவது ஓரிரு அம்சங்கள்தான். என் குடும்பப் பின்னணியால் நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இப்படி பின்னணி ஏதும் இல்லாதவர்கள் வருவதற்கு ஒரு சிஸ்டம் வேண்டும், அதை உருவாக்க விரும்புகிறேன்" என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல். அதன்படி இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களைச் சேர்த்து முறையான வெளிப்படையான உட்கட்சித் தேர்தல் நடத்தி வருவது நல்ல அம்சம். இதை தாய்க் கட்சிக்கும் ராகுல் விரிவுபடுத்த வேண்டும்.

இளைஞர் காங்கிரசுக்கென்று, அரசியலில் இல்லாத படித்த இளைஞர்களின் திங்க் டேங்க் ஒன்றை ராகுல் வைத்திருக்கிறார். இவர்களின் கள ஆய்வுகளின் உதவியில் தான் விவசாய விளை நிலங்களை வாங்குவது பற்றிய சட்ட வரைவை ராகுலால் தயாரிக்க முடிந்தது. இது இன்னொரு முக்கிய அணுகுமுறை.

தங்கள் கருத்துக்கும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானவர்களுடன் உரையாடல் நடத்த முன்வருவது இன்றைய முக்கியமான அரசியல் தேவையாகும். இதை மூத்த அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இளைஞர்கள் பொதுவாக, திறந்த மனத்துடன் பிரச்னைகளை அணுகுகிறார்கள். அவர்கள் அரசியலில் நுழையும் போது இது சாத்தியப்படும். அவர்களிலும் கூட உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சியைத் தூண்டி அரசியல் நடத்துவோருக்கு இது சாத்தியமில்லை. ராகுல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகத் தெரியவில்லை என்பது நல்ல அம்சம்.

எனினும் துணைத் தலைவர் பதவி ஏற்புரையின் போது இந்திராவின் காவலர்களுடன் தனக்கு இருந்த உறவை அவர் சொன்னது நெகிழ்ச்சியானது. தனக்கு பாட்மின்ட்டன் சொல்லிக் கொடுத்து தன்னுடன் விளையாடி வந்தவர்கள் இந்திராவைக் கொலை செய்தது தம்மை மிகக் கடுமையாக பாதித்தது என்றார் ராகுல். பேரனுடன் அன்பாக விளையாடியவர்களை, பாட்டியைக் கொல்பவர்களாக ஆக்கிய அரசியல் என்ன, அந்த அரசியலில் யார் யார் என்னென்ன தப்பு செய்தார்கள் என்றெல்லாம் அடுத்து ராகுல் யோசிக்க முடியுமானால், அவரால் இந்திய அரசியலை ஒரேயடியாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமான சலனங்களையாவது ஏற்படுத்த முடியும்.

அதிகாரம் என்பது விஷம்," என்று அவருக்கு அம்மா சோனியா சொன்னதாகச் சொல்லும் ராகுலுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், அந்த விஷத்துக்கான முறிவு அன்புதான். நம் அரசியலில் அன்புக்கு இடமில்லாமல் இருப்பதால்தான் அதிகாரம் என்பது விஷமாக இருக்கிறது. மக்கள் மீது அன்பு இல்லாத அரசியல் மக்களுக்கே விஷம்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் தண்டனையைக் குறைக்கும்படி ராகுலால் சொல்ல முடிந்தால், அது அன்பு சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கான ஒரு முதல்படியாக இருக்கும்.




Thursday, January 31, 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

உல கின் 60% மக்கள் அன்றா டம் உண்பது (நம்மையும் சேர்த்துதான்) வெள்ளை அரிசியே! வெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள்.
 
அரிசியில் நான்கு பகுதிகள் உண்டு. வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டிய லிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.ஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...
 
நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாக வும் இருக்க வேண்டும். அதுதான் உடலுக்கு நல் லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்!

அரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.

1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அரிசியின் வெளிப்புறத் தவிடு, மருத்துவ ரீதி யாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டு பிடித்த வரலாறு சுவையானது. 1884-ல் கானிரோ என்ற ஜப்பானிய கடற்படை டாக்டர், ஜப்பானில் இருந்து ஹவாய் நோக்கிப் பயணம் செய்தபோது, 9 மாத பயணத்தில் 169 கப்பல் ஊழியர்களில் 76 பேருக்கு 'பெரிபெரி' (Beriberi)என்கிற நோய் தாக்கி, 25 பேர் உயிர் இழந்ததைப் பார்த்தார் ('பெரிபெரி’ நோய் - நரம்பு பாதிப்பால் கை, கால் வலி, அசதி, பசியின்றி உடல் எடை குறைதல், இதய செயல்திறன் பாதிப்பு, மூச்சுத் திணறல், உடல் வீக்கம், மூளை பாதிப்பால் சுயநினைவு இழத்தல் முதலியவை ஏற்பட்டு இறுதியாக மரணம்கூட ஏற்படலாம்).


கப்பல் ஊழியர்களை பாதித்த இந்த நோயை ஆராய்ந்த டாக்டர் கானிரோ, அவர்களுக்கு  பட்டை தீட்டிய பச்சரிசி சாதம் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதை கவனித்தார். உடனே, இன்னொரு கப்பலில் இதே அளவு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, இதே பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை, அரிசி தவிர, பார்லி, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற உணவும் பரிமாறப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே 'பெரிபெரி’ வந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை. ஆகவே, உணவுதான் இந்த வியாதிக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனாலும், அடுத்த 13 வருடங்கள் கழித்து, 1897-ல்தான் டாக்டர் கிறிஸ்டியன் ஜெக்மேன் மற்றும் டாக்டர் ஃபெரடரிக் ஹாப்கின்ஸ் ஆகியோர், அரிசியின் தவிடு கொடுத்தால்... இந்நோய் தடுக்கப்படும்/குணமடையும் என்று பரிசோதனைகள் மூலம் நிரூபித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1929-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

'பெரிபெரி’யின் தாக்கம் இப்போதும் ஆங் காங்கே உண்டு. ஆனாலும், வைட்டமின் பி1 வேறு உணவுகள் மூலம் கொஞ்சமாவது கிடைத்து விடுவதால், பெரும்பாலானோர் இதிலிருந்து தப்பிவிடுகிறார்கள். மதுவுக்கு பி1 சத்தை அழிக்கும் குணம் உள்ளதால், மதுவுக்கு அடிமையானோர் பலரிடம் இந்த வியாதியை அடிக்கடி பார்க்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அரிசியைத் தீட்டுவதற்கு நமக்குக் கற்றுத் தந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் மட்டும் 'பெரிபெரி’, சர்க்கரை நோய் இவற்றில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அரிசியில் இருந்து பி1 மற்றும் சத்துக்களை நீக்கிய பிறகு, செயற்கையாக அவற்றை மீண்டும் அரிசியில் கலந்து விடுகிறார்கள் - சமையல் உப்பில் அயோடின் கலப்பதைப்போல (உப்பு கதை பற்றி பிறகு விரிவாக பேசுவோம்). மேலும், கோதுமை, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்ற வற்றை அவர்கள் வெகுவாக எடுத்துக் கொள் கிறார்கள். நம்மவர்களோ, நோபல் பரிசு பெற்றுத் தந்த தவிட்டை மாடுகளுக்குக் கொடுத்துவிட்டு, தீட்டிய அரிசிச் சோற்றை உண்டு, சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது - பச்சரிசியா... புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது. இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.

ஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும்? கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே? இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது?!

 


Wednesday, January 30, 2013

எனது இந்தியா (பிரம்ம சமாஜம் !) - எஸ். ராமகிருஷ்ணன்.......

இந்திய சமூக வரலாற்றில் பிரம்ம சமாஜத்தின் தாக்கமும் பங்களிப்பும் தனித்துவம் கொண்டது. இந்தச் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ராஜாராம் மோகன் ராய். மூன்று முக்கியக் கவனங்களைக் கொண்டிருந்தது பிரம்மசமாஜம். மூடநம்பிக்கைகளை களைந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போன்ற ஒருமித்த, எளிய, சடங்குகள் அற்ற ஆன்மிகத்தை முன்வைப்பது இதன் முதல் கவனம். அடுத்தது, இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக மறுக்கப்பட்ட பெண் கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகத்தை தடுப்பது, ஜாதி பேதமின்றி சமவேலை, சம ஊதியம் போன்ற சமூக மாற்றங்களை முதன்மைப்படுத்துவது.  மூன்றாவது, தேசிய உணர்வைஊட்டி இந்திய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவது. இந்த மூன்று தளத்திலும் பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கும் வளர்ச்​சியும் குறிப்பிடும்படி இருந்துள்ளது.

இந்திய தேசியக் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் வங்காளிகளே. இவர்களில் பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவர்கள் அதிகம். குறிப்பாக, விபின் சந்திர பால், அரவிந்தர், சி.ஆர். தாஸ் போன்றோர் பிரம்ம சமாஜ உறுப்பினர்களே. இவர்களைப் போலவே, வங்காளத்தில் அறிவுஜீவிகளாக அறியப்பட்ட ஈஸ்வர சந்திரர், தாகூர், மற்றும் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள்தான். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே கூட பிரம்ம சமாஜ உறுப்பினர்தான்.


பிரம்ம சமாஜம் கி.பி.1828-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே, முதல் சீர்திருத்த இயக்கம். ராஜாராம் மோகன் ராய் கி.பி. 1772-ல் வசதி படைத்த வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்​கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைக் கற்றறிந்த இவர், ஆங்கில வழிச் சிந்தனையில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்துக்குச் சென்று இருக்கிறார்.

'ஒற்றைத் தெய்வ’ வழிபாட்டைத்தான் பிரம்ம சமாஜிகள் பின்பற்ற வேண்டும். இதை பிரம்ம சமாஜ ஆவணத்தில் ராஜாராம் மோகன் ராய்  தெளிவுபடுத்தி இருக்கிறார். கடவுளை வணங்கும்போது நமது இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். குறிப்பாக, நம்மில் உள்ள 'தான்’ என்ற அகந்தையை அகற்றிவிட்டு நமது ஆத்மாவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதனால், மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை உணர முடியும் என்பதை ராஜாராம் மோகன் ராய் வலியுறுத்தினார்.


பௌத்தம், சமணம், கிறிஸ்தவம் என எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் பேதம் காட்டாமல் ஒருமித்து அறிந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பரந்த உணர்வுடன் செயல்பட்டது பிரம்ம சமாஜம். இந்து மதத்தின் ஞானவழியை முதன்மையாகக் கருதியது இந்த இயக்கம். ஆகவே, அறிவார்ந்த செயல்பாட்டுக்கான களமாக தன்னை வடிவமைத்துக்  கொண்டது. பிரம்ம சமாஜமே வங்காளத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைகளை அகற்றி, மானுட நேசத்தை வளர்த்து இருக்கிறது. பிரம்ம சமாஜம், 19-ம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமானது. இந்திய வரலாற்றில் 19-ம் நூற்றாண்டு மிகவும் முக்கியமானது. இந்த நூற்றாண்டில்தான் பல பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்று நாம் காணும் நவீன இந்தியா என்பதே, 19-ம் நூற்றாண்டு இந்தியாவின் குழந்தைதான் என்று நேரு கூறி இருக்கிறார்.

பிரம்ம சமாஜம் என்பதற்கு பரம்பொருள் வழிபாட்டுச் சங்கம் என்று அர்த்தம். 'உருவ வழிபாடு கூடாது, ஆனால்  உபநிடதங்கள், வேதங்களை ஆழ்ந்து கற்று அந்த நெறிப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ராஜராம் மோகன் ராய் கருதினார் என்கிறார் தமிழகத்தில் பிரம்ம சமாஜம் நூலை எழுதிய பெ.சு.மணி. ராஜராம் மோகன் ராய், பிரம்ம சமாஜத்தை தொடங்குவதற்கு முன் ஆத்மிய சபா, யூனிடேரியன் சர்ச் எனும் இரண்டு அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். 1815-ல் கல்கத்தாவில் ஆத்மிய சபா அமைக்கப்பட்டது. அதில், முற்போக்கு எண்ணம் கொண்ட வங்காளிகள் பலர் சேர்ந்தனர். இந்தச் சங்கம், உடன்கட்டை ஏறுவதை தடை செய்வது, பலதார மணமுறையை ஒழிப்பது, பெண் கல்வியை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தியது. அதேநேரம், ஆங்கிலக் கல்வியை ஆதரிப்பது, ஆங்கில வழிச் சிந்தனையை கொண்டு இந்திய வேதங்களை, மதநம்பிக்கையை ஆராய்வது என்ற செயல்பாட்டையும் முன்வைத்தது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள், தங்களின் பூர்வ அடையாளங்கள் ஆங்கிலேயருடன் கலப்பதற்கு தடையாக இருப்பதில் இருந்து விடுபட ஆங்கிலக் கல்வி உதவும் என்று நம்பினர். ஒருவகையில் இது ஆங்கிலேயருடன் எளிதாகப் பழகுவதற்கும் அவர்களோடு சேர்ந்து வாழ்வதற்குமான சாளரமாகக் கருதப்பட்டது.

சமஸ்கிருத நூல்கள் மட்டுமின்றி வங்காளத்தின் சமய நூல்களில் இருந்தும் திரட்டப்பட்ட அறிவை முதன்மைப்படுத்தி விவாதங்கள் இந்தச் சபையில் நடந்தன. அதுபோலவே, கிறிஸ்தவ சமயத்தில் உள்ள டிரினிடேரியனிஷம் என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்து உருவானதே யூனிடேரியனிஷம். இது, அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கியது. ராஜாராம் மோகன் ராய் இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டு, 'ஒன்றே தெய்வம்’ என்ற கோட்பாட்டை இந்தியாவிலும் பரப்ப விரும்புவதாகத் தெரிவித்தார். அதன் விளைவாக உருவானதே யூனிடேரியன் சர்ச்.

1823-ம் ஆண்டு ராஜாராம் மோகன் ராய், துவாரக நாத் தாகூர், வில்லியம் ஆதம் ஆகிய மூவரும் இணைந்து 'யூனிடேரியன் சர்ச்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்புக்குச் சென்னையில் ஓர் கிளை இயங்கி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தை அதன் அற்புத நிகழ்ச்சியை விலக்கிவிட்டு தாங்கள் ஏற்றுக் கொள்வதாக ராய் தெரிவித்து இருக்கிறார். ராஜாராம் மோகன் ராய், இளவயதில் பாட்னாவில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து கற்று அறிந்திருக்கிறார். அதேநேரம், காசியில் இந்து சமய சாஸ்திரங்களை ஆழ்ந்து கற்று இருக்கிறார். பிறகு, கல்கத்தாவில் கிறிஸ்தவ மதநெறிகளை உணர்ந்து கற்று இருக்கிறார். அத்துடன், திபெத்துக்குச் சென்று பௌத்த ஞானத்தையும்,  யூத மத அறநெறிகளையும் ஆராய்ந்து கற்றிருக்கிறார். பல சமயத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து இயங்க ஓர் அமைப்பு தேவை என்பதை, தீவிரமாக உணர்ந்த அவர், பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். 'என்னுடைய ஆங்கில நண்பர்கள் இந்து சமயத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனம் செய்கின்றனர். அது எனக்கும் சரி என்றே தோன்றுகிறது. ஆகவே, அவற்றை விலக்கி தூய்மையான ஞானநெறியை முதன்மைப்படுத்தியே எனது அமைப்பை உருவாக்கினேன்’ என்று ராஜாராம் மோகன் ராய் கூறி இருக்கிறார். சாதி வேறுபாடு மற்றும் ஒடுக்கு முறை காரணமாகவே மக்களிடம் தேசப்பற்று ஏற்படாமல் இருக்கிறது. ஆகவே, சீர்திருத்த இயக்கங்கள் மூலமாக மக்களிடம் தேசப்பற்றை உருவாக்க முடியும் என்று ராய் நம்பினார். தனது சமாஜம் சமய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியையும் முதன்மைப்படுத்தி செயல்படும் என்று கூறினார். விவேகானந்தரும் பிரம்ம சமாஜத்தில் இருந்து இருக்கிறார். அவர், ராஜாராம் மோகன் ராயைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவரிடம் வேதாந்தத்தை முதன்மைப்படுத்தும் தன்மையும் தேசபக்தியும் இந்து இஸ்லாமியர்களை சமமாக நடத்தும் மனப்பாங்கும் இருந்தது என்று கூறியிருக்கிறார். பிரம்ம சமாஜம் வங்காளத்தில் புகழ்பெற்று வளரத் தொடங்கியபோது, தங்களின் பிள்ளைகள் எங்கே பிரம்ம சமாஜிகள் ஆகிவிடுவார்களோ என்று, வங்காளத்தில் ஏராளமான பெற்றோர் பயந்து விட்டனர். தாகூர் தனது நாவலில், பிரம்ம சமாஜம் எந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ராஜாராம் மோகன் ராய் தனது அமைப்பை வலுப்படுத்த பத்திரிகைகள் நடத்தியதோடு, சமய விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ராய் மறைவுக்குப் பிறகு, 'வித்யா வாகீசர்’ சமாஜத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர், 'ஆதி பிரம்ம சமாஜம்’ என்று பெயரை மாற்றினார். இதன் விளைவாக, அமைப்பில் முதல் விரிசல் ஏற்பட்டது.

தேவேந்திரநாத் தாகூர் ஆதரவு உறுப்பினர்கள், வங்காளத்தில்தான் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறியதோடு, கிறிஸ்தவ சமயத்தோடு உள்ள நெருக்கமான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்தினர். இது, பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன்விளைவாக,  ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம், சாதாரண பிரம்ம சமாஜம் என மூன்று அமைப்பாக ஆரிய சமாஜம் பிளவுபட்டது.

பொதுவாக, பிரம்ம சமாஜத்தினர் கூடும் அறையில் ஒரு ஆச்சாரிய பீடம் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் முன், ஒரு திரை தொங்க விடப்பட்டு இருக்கும். திரைக்கு பின்னால் உள்ள ஆச்சார்ய பீடத்தில் ஒரு அந்தணர் வேதம் ஓதி பிரார்த்தனையைத் தொடங்கி வைப்பார். பிறகு, வங்க மொழியில் பிரம்ம சமாஜ பாடல்கள் ஒலிக்கும். இதைஅடுத்து இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ ஞானிகளின் சொற்பொழிவு நடக்கும். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தை பின்னுக்கு கொண்டு செல்கிறார் என்று, வெளிப்படையாகவே கூறிய கேசவ் சந்திர சென் அதை கிறிஸ்தவ நெறிமுறைகளுடன் இணைத்து கைக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. ஆச்சாரிய பீடத்தில் அமருபவர் சாதிச் சின்னம் அணியக் கூடாது, படித்த, அறிவாளி மட்டுமே அந்தப் பீடத்தில் அமர வேண்டும், துதிப்பாடல்களுக்குப் பதிலாக விரிவான விளக்கவுரைகள் ஆற்றப்பட வேண்டும் என்று, கேசவ சந்திர சென் கூறினார்.

Sunday, January 27, 2013

எனது இந்தியா (காட்டின் மௌனம்!) - எஸ். ராமகிருஷ்ணன்.......

தனது கனவின் சிறிய பகுதி மட்டுமே நனவானது என்ற அவரது ஆதங்கமே, மீண்டும் அவர் இந்தியா வருவதற்குக் காரணமானது. 1684-ம் ஆண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் நடந்த முறைகேடுகளைக் களைந்து நிர்வாகத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஹென்ரிக் மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவரது மகனை இலங்கையின் வணிக அதிகாரியாக நியமித்தது டச்சு வணிக நிறுவனம். அதன் காரணமாக, இலங்கையில் தங்கியிருந்தபடியே மலபாரில் உள்ள தாவரங்களைத் தொகுத்து வகைப்பட்டியல் செய்து மீதம் உள்ள 10 தொகுதிகளையும் வெளியிட்டார் ஹென்ரிக். இந்தப் புத்தகத்தில் 794 சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மதபோதகரான மத்தியாஸ் தனது குழுவினருடன் இணைந்து இந்தச் சித்திரங்களை மிகத் துல்லியமாக வரைந்து இருக்கிறார்.

இந்தியாவின் அரிய தாவர வகைகளைப் பற்றிய இந்தப் புத்தகம் வெளியாகி, உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றதுடன் ஆம்ஸ்டர்டாமில் ஒரு பெரிய தாவரவியல் பூங்கா அமையவும் வகை செய்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக லத்தீன் அறிந்தவர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த இந்தப் புத்தகத்தை, டாக்டர் மணிபால் மற்றும் கோவிந்தன் குட்டி ஆகிய இருவரும் சேர்ந்து ஆங்கிலத்தில் இப்போது மொழிபெயர்த்து இருக்கின்றனர். 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற இந்தப் புத்தகம், வெறும் தாவரவியல் பற்றியது மட்டும் அல்ல. கேரளாவின் வனப் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன், எத்தனை விதமான அரிய தாவரங்களுடன் இருந்தது? இந்தியாவின் இயற்கைச் சூழல் எப்படி இருந்தது என்பதற்கான அத்தாட்சி அது. இந்த இரண்டையும்விட தீண்டத்தகாத சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்த அச்சுதன் வைத்தியரிடம் எவ்வளவு தீர்க்கமான மருத்துவ அறிவு இருந்திருக்கிறது, அதைத் தீண்டாமையின் பெயரால் எப்படி ஒடுக்கி வந்திருக்கிறார்கள் என்ற சமூக உண்மையும் இந்தப் புத்தகத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலப் பிரதி லெயிட்டன் பல்கலைகழகத்தில் இன்றும் இருக்கிறது. அங்கு, இந்தப் புத்தகத்தில் உள்ளதுபோன்ற ஈழவ வைத்திய முறைப்படியே இன்று தாவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.


இத்தனை அரிய மூலிகைகள், தாவர வகைகள் இந்தியாவில் இருந்தபோதும், இந்திய மரபு வைத்திய முறைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கில மருத்துவ முறைகளையும் பக்கவிளைவு ஏற்படுத்தும் மருந்துப் பொருட்களையும் ஏற்றுக்கொண்டு மருத்துவத்தைப் பணம் கொட்டும் வணிகமாக உருமாற்றிவிட்டோம். இன்று, 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ போன்ற புத்தகத்தைக் கையில் தொடும்போது இந்தியா ஏன் தனது இயற்கை வளத்தை இழந்தது என்ற கேள்வி நம் மனசாட்சியை தொடுகிறது. இந்திய இயற்கையியல் ஆய்வின் சிறு பகுதிதான் 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற தாவரவியல் புத்தகம். அதுபோல, நூற்றுக்கணக்கான அரிய தாவரவியல் புத்தகங்கள் இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டன. அவற்றில், தேக்கு மற்றும் சால மரங்கள் இந்திய வரலாற்றில் என்ன பங்கை வகித்தன என்ற ஆய்வு முக்கியமான பல உண்மைகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

வட இந்தியாவில் பிரதானமாக சால மரங்கள் காணப்​படுகின்றன. அங்கே, தேக்கு கிடையாது. ஆனால், தென்னிந்தியா முழுவதும் தேக்கு மரங்கள் இருக்கின்றன. தேக்கு குறித்து சங்க இலக்கியம் நிறைய செய்திகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தேக்கு பற்றி சமஸ்கிருத இலக்கியங்களில் அதிக செய்திகள் இல்லை. தேக்கு கொண்டுதான் கப்பல்கள் கட்டப்பட்டன. வட இந்தியாவில் தேக்கின் இடத்தைப் பிடித்து இருந்தது சால மரம்.

இந்த இரண்டு மரங்களின் கதையை ஆராய்ந்தால், இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வாறு தகவமைப்பு கொண்டது என்பதை எளிதாக அறியலாம். அஸ்ஸாம், வங்காளம், நேபாளம், ஹரியானா காடுகள், வட கிழக்கு மாநிலங்கள், இமயமலையின் அடிவாரம் மற்றும் மத்திய இந்தியா என அனைத்துப் பகுதிகளிலும் சால மரங்கள் செழித்து வளர்ந்து இருக்கின்றன. தென்னிந்தியாவில் தேக்கு மட்டுமே பிரதானம். சால மரம் என்பதை ஆச்சா மரம் என்றே தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது. இதை, 'யா மரம்’ என்று சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. இந்த மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது. எனவே, பாலை நிலத்திலும் இந்த மரம் செழித்து வளர்ந்து இருக்கிறது. தேக்கின் முக்கியத்துவத்தை அறிந்த பிரிட்டிஷ் அதை இமயமலை அடிவாரத்தில் நட்டு வளர்த்துப் பார்த்து இருக்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவைப் போல தேக்கு அங்கே செழுமையாக வளரவில்லை. தேக்கு கிழக்கிந்தியக் கம்பெனியால் இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடப்பட்டு இருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவிலும் பர்மாவிலும் காணப்படும் தேக்கு போல உறுதியாக வேறு எங்கும் தேக்கு மரங்களை உருவாக்க முடியவில்லை. அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார் என்று காலம் காலமாகப் படிக்கிறோம். எந்த மரங்களை அசோகர் நட்டார், செழுமையான கங்கைச் சமவெளியில் மரங்களை நட வேண்டிய சூழ்நிலை ஏன் உருவானது என்ற கேள்விகள் அந்தச் செய்திக்குள் புதைந்து இருக்கின்றன.

நகரமயம் ஆவதும், வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன. அதன் காரணமாக, பெருமளவு காடுகள் அழிக்கப்​பட்டன. வணிகர்களின் பயணத்துக்கான சாலைகள் அமைப்பதற்காக நிறைய மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. அதைவிட, மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பௌத்தம். பயணிகள் இளைப்பாறவும், இயற்கையைப் பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்கள் நட உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஏன் சால மரங்களை நட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பௌத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தர் பிறப்பதற்கு முன், அவரது தாய் மாயா இமயமலை அடிவாரத்தில் உள்ள தனது தாய்வீடான லும்பினிக்குச் சென்றுகொண்டு இருந்தார். வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.

புத்தரின் தாய் நின்ற நிலையில் பிரசவித்தாள் என்றும் வலியைத் தாங்கிக்கொள்ள சால மரத்தின் கிளைகள் வளைந்து கொடுத்து புத்தர் பிறக்க உதவி செய்தன என்றும் குறிப்பிடுகிறது புத்த பிறப்புக் கதை. அதுபோலவே, புத்தர் மரணம் அடைந்ததும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கு அடியில்தான். ஆகவே, சால மரம் பௌத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று. லும்பினி இன்று நேபாளத்தில் இருக்கிறது. சாக்கிய வம்சத்தினர் ஆண்ட இந்த நிலப்பரப்பு, அடர்ந்த காடுகள்கொண்டது. மல்லர் வம்சத்தைச் சேர்ந்த அரசனால் உருவாக்கப்பட்ட புத்தரின் பிறப்பைக் குறிக்கும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில், புத்தரின் தாய் மாயா தனது வலக்கரத்தால் சால மரத்தைப் பற்றியபடி நின்று கொண்டு இருக்கிறாள். மரத்தின் கிளைகள் வளைந்து அவளுக்கு துணையாக நிற்கின்றன. இந்தச் சிற்பத்தை புத்த மதத்தின் புனிதச் சிற்பங்களில் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர்.

புத்தர் பிறந்த லும்பினி கிராமத்துக்கு முழு வரிவிலக்கு அளித்து இருக்கிறார் அசோகர். அத்துடன், நான்கு ஸ்தூபிகளை அமைத்து ஒரு கல்தூணில் கல்வெட்டும் ஒன்றையும் பதித்து இருக்கிறார். அந்தக் கல்வெட்டில் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அசோகர் லும்பினிக்கு வந்து, அதைப் புனித ஸ்தலமாக அறிவித்தார் என்ற குறிப்பு இருக்கிறது. லும்பினியில் புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. சௌரிய வனப் பகுதியில் சிதிலமடைந்துகிடந்த இந்தக் கோயிலை, ஜெர்மனியின் அகழ்வாய்வாளர் தனது அகழ்வாய்வுப் பணியின்போது கண்டுபிடித்து இருக்கிறார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், புத்தரின் பிறப்பைக் குறிக்கும் சிற்பம் இருக்கிறது. அதிலும், சால மரம் முதன்மையாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வட இந்தியத் திருமணங்களில், பெண் சாலமரத்தின் கிளை ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டுதான் மணமேடையில் உட்கார்ந்து இருப்பாள். அது, திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைக் கடைப்பிடிக்கின்றனர். சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாகப் பயன்படுத்தினர். சால மர இலைகளைத் தைத்து உணவு சாப்பிடப் பயன் படுத்தினர். ஆதிவாசிகள், இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த  சால மர இலைகள் விவசாயத்துக்கான உரமாகவும் பயன் பட்டது. சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாகக் கொண்டாடினர். சால மரம், புத்தரின் மறு வடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பதால், மரங்கள் ஞானத்தை அடைவதற்கான மனஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பௌத்தத் துறவிகள் நம்பினர். இதன் காரணமாகவே, அசோகர் மரங்களை நட்டார். சால மரம் மருத்துவக் குணம் கொண்டது. குறிப்பாக, இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது சால மரம். இதனால், பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால், இந்த மரங்களை வழிநெடுகிலும் வளர்த்து இருக்கின்றனர்.

மர இனங்களின் அரசன் எனப்படும் தேக்கு மரம், கப்பல் கட்டும் தொழிலில் பிரதானமாகப் பயன்பட்டது. தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் 'டெக்டோனா கிரான்டிஸ்’ ஆகும். கிரேக்க மொழியில் 'டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது என்பது பொருள். 'கிராண்டிஸ்’ என்றால், பிரமாதமானது என்று பொருள். அதாவது, தச்சர்களுக்கு ஏற்ற பிரமாதமான மரம் என்று கூறுகிறார்கள். இந்த மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீ உயரம் வரையிலுள்ள நிலப் பகுதியில் நன்றாக வளரக்கூடியது. மண் ஆழம் குறைவாக உள்ள கடுங்களி நிலம் மற்றும் நீர்வடியா நிலங்களும் இந்த மரம் வளர ஏற்றதல்ல. தேக்கு மரம் 'ஒளி விரும்பி’ வகையைச் சேர்ந்தது. ஆகவே, பிரகாசமான சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே தேக்கு நன்றாகச் செழித்து வளரும். 'கடுவளி எடுத்த கால்வழி தேக்கு இலை’ என்றும், 'தேக்கு அமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து’ எனவும் அகநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தேக்கு மரம், இந்தியா மற்றும் ஜாவாவின் வட கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக்கொண்டது. தேக்கு மரங்களைப் பார்த்து பிரமித்த ஆங்கிலேயர், கதவு, கட்டில் செய்தல் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகியவற்றுக்காக தேக்கு மரங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் தேக்கு விளைவதற்காக செயற்கையாக தேக்கு மரங்களை நட்டுவைத்து வளர்க்க முயன்றனர்.

தேர்கள், தேக்கு மரத்தில் செய்யப்படுவது நமது மரபு. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதிகளுக்கு ஏற்ப தேர்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எந்தத் தேரும், ஆறு அடுக்குகளுக்கு மேல் இருக்காது. பூதப்பார், விக்கிரகப்பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என்பதுதான் அந்த ஆறு அடுக்குகள். இந்த ஆறு அடுக்குகளின் உள்கட்டமைப்பாக 15 அடுக்குகள் இடம் பெறுகின்றன. சிம்மாசனத்தில் திருவுருவம் வைக்கப்படும். இந்தச் சிம் மாசனத்தைச் சுற்றி யாளிக்கட்டை, சிங்கக் கட்டை, அஸ்தியாளி ஆகியவைகளைக்கொண்டு மறைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், எந்தத் தேராக இருந்தாலும் அதன் முகப்பில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் மட்டுமே இருக்கும். தேரின் சக்கரங்கள் இலுப்பை மரத் தால் செய்வதுதான் நமது மரபு.

இப்படி, பண்பாட்டின் அடிப்படையான கலை உருவாக்கத்திலும், வாசனைத் திரவியங்கள், கட்டுமானப் பணிக்கான பொருட்களின் உருவாக்கத்திலும் இந்தியாவின் முக்கியத் தாவரச் செல்வமாக தேக்கு அடையாளம் காணப்பட்டது. மலபார் பகுதியில் கிடைத்த தேக்கு மரங்கள், இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வன வளத்தைப் பாதுகாக்க தனியாக ஒரு கமிஷனரை 1800-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதுபோலவே, கேப்டன் வாட்சன் என்ற அதிகாரி சென்னை ராஜதானியில் இருந்த தேக்கு மரங்களைப் பராமரித்து ஏற்றுமதி செய்யும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். தேக்கை, பச்சைத் தங்கம் என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். தேக்கு அதிகம் விளையும் ரங்கூனில், 1786-ம் ஆண்டு முதல் 1824-ம் ஆண்டு வரை 112 பெரிய கப்பல்கள் ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்டன. இதற்காக, 35,000 டன் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டன.

1846-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு 8,712 டன். இதுவே, 1860-ம் ஆண்டு 25,112 டன்கள். 1883-ம் ஆண்டில் 45,539 டன்களாகவும் 1900-ம் ஆண்டில் 63,598 டன்களாகவும் உயர்ந்தது. இந்த ஏற்றுமதியில் பெரும் பகுதி பர்மாவில் விளைந்த தேக்குகள்தான். இந்தியாவில் இருந்து கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துக்கீசிய வணிகக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் தரும் விற்பனைப் பொருளாக நமது இயற்கை வளங்கள் திகழ்ந்தன. இந்த சுயலாப வணிகமே இன்று பல்கிப் பெருகி இயற்கையை அழித்தொழிக்கும் வன்முறையாக உருமாறி இருக்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் மரங்களும் சுதந்திரமாக இருப்பது இல்லை என்பதை உணர்த்துவதுபோலவே காடு மௌனமாக நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

Saturday, January 26, 2013

'விஸ்வரூபம்’


'இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்’ படத்தின் டைட்டில் போடுவ​தற்கு முன் திரையில் திகிலாக வந்து விழுகிறது இந்த வாசகம். அந்த வாசகத்தை நிஜம் ஆக்குவதுபோல படம் முழுவதும் கோரமான குண்டு வெடிப்புகளும் கொடூரமான கொலைகளும் நிரம்பி வழிகின்றன.

படத்தின் கதைக் களம் ஆப்கானிஸ்தான். அங்கே இருக்கும் தாலிபான்களின் செயல்பாடுகள்தான் படத்தை மொத்தமாக நகர்த்துகின்றன. இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா’வின் உளவாளி கமல், முஸ்லிம் கேரக்டரில் நடித்து இருக்கிறார். காஷ்மீரி ஒருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் கமல். காஷ்மீருக்குச் செல்லும் கமலை, அங்கே தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கமல், தாலிபான்கள் கையில் சிக்குகிறார். அவரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை வாங்கலாமா எனக் கணக்கு போடுகிறது தாலிபான். அப்போது தமிழ் பேசும் கமலைப் பார்த்துவிட்டு, தாலிபான் தலைவர் உமர் அவரிடம் தமிழில் பேசுகிறார். ''ஐந்து லட்சத்தைவிட விலை மதிக்க முடியாத தமிழ் ஜிஹாதி. இவரைப் பிடித்துத் தர வேண்டாம். நமது குழுவிலேயே இருக்கட்டும்'' என்கிறார் உமர். நிஜத்தில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் கேரக்டர்போலவே இந்த உமர் கேரக்டர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உமர் தமிழ் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் கமல். ''நான் தமிழ்நாட்டில் கோவை மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.

மாயவரத்தில் பிறந்த நிருபமா என்ற பெண்தான் கமலின் மனைவி. அவர் வேலை பார்க்கும் சீசியம் மற்றும் அணுக்கதிர் கையாளும் நிறுவனத்துக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந் தேகப்படுகிறார் கமல். அதனால், மனைவிக்குத் தெரியாமலேயே அவர் உடையில் கேமராக்கள் வைத்து அந்த நிறுவனத்தை உளவு பார்க்கிறார் கமல். ஸ்கூலில் குண்டு வைக்கும் காட்சி முறியடிப்பு, காட்டிக்கொடுத்த போராளியை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவது என இப்படி அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

தீவிரவாதச் செயல்கள் செய்யப்படும்போது எல்லாம் தொழுகைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. குர்-ஆன் வசனங்கள் அரபியில் ஓதப்படுகின்றன. ஒரு காட்சியில் 'ஜிஹாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்​கள். சொர்க்கம் உங்களுக்குச் சொந்தமாகும்’ என்ற வசனமும் அரபியில் ஒலிக்கிறது. தாலிபான்களின் செயல்பாடுகள் அப்படியே திரையில் திகிலாகக் காட்டப்​படுகின்றன. இடையில் ஒரு வசனம். 'இது ஆயிலுக்காக நடக்கும் யுத்தம்’ என எண்ணெய் வளங்களை சுரண்டும் அரசியல் பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் பின்லேடனும் வருகிறார். அவரை அமெரிக்கா கொன்றபோது அமெரிக்​காவில் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது, தமிழ் கேரக்டர்கள் இருவர், 'அசுரனைக் கொன்றது​போல மக்கள் கொண்டாடு​கிறார்கள்’ என வசனம் பேசு​கிறார்கள்.

தாலிபான் படையில் சேரும் கமல், அங்கே நடக்கும் செயல்களை உள்வாங்கி, தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா மீது தாக்குல் நடத்தத் திட்டமிடுகிறது தாலிபான். இதற்காக உமர் அமெரிக்கா செல்கிறார். இதை முறியடிக்க கமலும் நடனக்காரர் வேடத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார். அங்கே அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் சேர்ந்து திட்டத்தை முறியடிக்கிறார். அமெரிக்காவுக்குத் தாலிபானால் வரும் ஆபத்தை இந்தியா முறியடிப்பதாகக் கதை முடிகிறது. இறுதியில் உமர் விமானத்தில் தப்பிச் செல்ல, ''உமர் சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும்'' என கமல் வசனம் பேச... இந்தியாவில் தொடரும் என முடிவடைகிறது  படம்.

Friday, January 25, 2013

நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி


நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ குளிக்கச் சென்று, தண்ணீரின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தத்தளித்துத் தடுமாறி, தண்ணீரில் மூழ்கி விடுவதைச் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். பத்து வயதுக்குள் ஒருவர் நீச்சல் கற்றுக் கொண்டால், அவர் தனக்கு ஒரு சொத்து சேர்த்து வைத்ததற்குச் சமம்.

நீச்சல் பயிற்சியின் நன்மைகள்:

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. முக்கியமாக முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி போன்றவை பாதிக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி செய்வார்கள். ’டௌவுன் சின்ட்ரோம்’ போன்ற மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் நீச்சல் ஒரு நல்ல பயிற்சியே. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

யாருக்கு நீச்சல் பயிற்சி ஆகாது?

வலிப்பு நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், தண்ணீரில் வலிப்பு வந்தால் உயிருக்கு ஆபத்து வந்து சேரும். அவர்களைத் தண்ணீரிலிருந்து சமாளித்துக் கரை சேர்ப்பதும் கடினம். அதுபோல் மாற்றுத் திறனாளிகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இதயநோயாளிகள், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகள், ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

நீச்சல் பயிற்சியில் பெற்றோர் பங்கு என்ன?

குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், பயிற்சிக்குத் தேவையான உடல் தகுதி குழந்தைக்கு உள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் குளம் பயிற்சிக்கு உகந்தது. அதில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு வசதியாக குறைந்த அளவு ஆழம், நல்ல அகலம், தூமையான தண்ணீர், சுழற்சி முறையில் தண்ணீர் வெளியேற்றப்படும் வசதி, மிதவை போன்ற கருவிகள் முதலியவை அவசியம் இருக்க வேண்டும். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளரும், அனுபவமிக்க லைஃப் கார்டும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சியின்போது அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமா என்று உறவினர் யாராவது உடனிருக்க வேண்டும். டிரைவர், வேலையாள் போன்றவர்களை அனுப்பக்கூடாது.

நீரில் ஏற்படும் ஆபத்து:

குளத்தில் அல்லது கடலில் குளிக்கும்போது, படகில் செல்லும்போது, நீச்சல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடலாம். நீந்தத் தெரியாதவர்கள் அப்போது வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து, திக்குமுக்காடுவார்கள். இந்த நிலைமையில் நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். காற்று இருக்க வேண்டிய இடத்தில் இப்போது தண்ணீர் இருப்பதால், மூளைக்கு பிராண வாயு கிடைக்காது. இதன் விளைவால், அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். உயிரிழப்பார்.

எப்படிக் காப்பாற்றுவது?

நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் இதில் ஈடுபடக் கூடாது.

தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி முறைகள் ஐந்து. அவை; அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல். பாதிக்கப்பட்ட நபர் நினைவோடு இருக்கிறார், அதேநேரம் தண்ணீரில் தத்தளிக்கிறார் என்றால், அவருக்குக் கம்பு, கயிறு, களி, குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் ஒன்றை நீட்டி, அதைப் பற்றிக்கொள்ளச் செய்து, அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது, தண்ணீரில் தத்தளிக்கும் நபர், உங்களைத் தண்ணீருக்குள் இழுத்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட நபர் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்றால், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருள்களில் ஒன்றை - எடுத்துக்காட்டாக, கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஒன்றை அவரை நோக்கி வீசுங்கள். அதைப் பற்றிக் கொண்டு அவர் கரைக்கு மீண்டு வந்துவிடுவார். ஒருவேளை அந்த நபர் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு அருகில் சென்று அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யுங்கள்.

என்ன முதலுதவி செய்வது?

* தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா, நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத் தண்ணீர் குடித்து விடுவார்கள். நுரையீரலிலும் இரைப்பையிலும் தண்ணீர் நிரம்பிவிடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ஆகவே, இந்தத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

* தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக்கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.

* அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், செயற்கை சுவாசம் தர வேண்டும்.

* இதயத்துடிப்பு நின்றிருந்தால் இதய மசாஜ் தர வேண்டும்.

* இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச் சிகிச்சை’ (cardiopulmonary resuscitation - சுருக்கமாக - CPR) என்று பெயர்.

* இதைப் பள்ளியில் படிக்கும் போதே தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது.

செயற்கை சுவாசம் தருவது எப்படி?

* அந்த நபரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

* அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியைப் பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

* காற்று செல்லும் பாதை தடையில்லாமல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

* முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும் இருந்தால், அகற்றி விட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பலமாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத வேண்டும்.

* குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும்.

இதய மசாஜ் தருவது எப்படி?

* சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்த நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 15 முறை தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

* நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு, இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு ஏறுபடும்வரை இதைத் தொடர வேண்டும்.

* அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் மூழ்கியவரை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

* இதற்கு, பாதிக்கப்பட்ட நபரை 108 ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


Thursday, January 24, 2013

புலியின்றி அமையாது உலகு!

நிழல் உலகக் கள்ளச் சந்தை உலகில் முதல் இடம்... போதைப் பொருட்கள் விற்பனை. அடுத்த இடம்... ஆயுத விற்பனை. மூன்றாவது இடத்தில் இருப்பது வன உயிரினப் பொருட்கள் விற்பனைச் சந்தை. அதில் முக்கிய அங்கம் வகிப்பது... புலி வேட்டை.
 
 புலி, சிறுத்தை, யானை, காண்டாமிருகம், மான், தேவாங்கு, ஆந்தை, கீரி, நீர்நாய், மண்ணுளிப் பாம்பு, நட்சத்திர ஆமை, கடல் குதிரை, பவளப் பாறைகள்... இவை எல்லாம் இச்சந்தையின் பகீர் பட்டியல். ஆண்டுக்கு 2,000 கோடி டாலர்கள் புழங்கும் சந்தை இது.

3,500 மட்டுமே!

கடந்த நூற்றாண்டில் உலகில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 40 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையே 3,500 தேறாது. கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட கணக்கெடுப்பு அறிவிப்பின் படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.

புலி வேட்டை!

 வேட்டையர்கள், கடத்தல்காரர்கள், வியாபாரிகள் என மூன்று பிரிவுகளைக்கொண்டது புலிகள் மாஃபியா. முதலில் வேட்டையர்கள். வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் பவாரியாஸ் மற்றும் பஹாலிகாஸ் சமூகத்தினரின் ஆதித் தொழில், வேட்டை. அந்தச் சமூகத்தில் 70 சதவிகிதத்தினர் தங்கள் பாரம்பரியத் தொழிலைக் கைவிடாமல் இன்றும் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நாடு முழுவதும் புலிகள் வாழும் வனங்களின் அருகில் உள்ள ஊர்களில் கம்பளிப் போர்வை விற்பனையாளர்கள், நகை பாலீஷ் போடுபவர்கள், வித்தைக்காரர்கள் வேடங்களில் ஊடுருவுகிறார்கள். கோடைக் காலமே இவர்களின் சாய்ஸ். கோடையில் ஓரிரு நீர் நிலைகளில் மட்டுமே நீர் இருக்கும். அங்கு புலிகள் கட்டாயம் வந்தாக வேண்டிய இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். இரும்புக் கண்ணிகளைப் புலிகளின் வழித்தடத்தில் பொருத்தி, சருகுகளால் மறைத்துவிடுவார்கள். இந்தக் கண்ணிகள் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டு இருக்கும். புலியின் கால் கண்ணியில் பட்டதும், அது வெகு உறுதியாகத் தொடை வரை கால்களைப் பற்றிக்கொள்ளும். புலியின் முன்னே இவர்கள் செல்வார்கள். அது கோபத்தில் வாயைத் திறந்து உறுமும். உடனே, நீண்ட குத்தீட்டிகளைப் புலியின் வாய்க்குள் குத்தி புலியைக் கொன்றுவிடுவார்கள். புலியின் உடலைக் குத்தினால் தோல் சேதம் அடையும் என்பதால்தான், இந்தக் குரூர டெக்னிக். கொல்லப்பட்ட புலியின் அடிவயிற்றைக் கீறி, குடல் உள்ளிட்ட கழிவுகளை எடுத்து எரித்தோ புதைத்தோவிடுவார்கள். அரை மணி நேரத்தில் புலியின் இறைச்சி, எலும்புகள், பற்கள், தோல் என மொத்தத்தையும் பேக் செய்து கிளம்பிவிடுவார்கள். ஒரு புலிக்கு இவர்கள் பெறும் தொகை, ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை.

ஒரு புலி... ஒரு கோடி!

அடுத்து கடத்தல்காரர்கள். இவர்கள்தான் விலையை நிர்ணயிக்கும் புரோக்கர்கள். தரை வழி, கடல் வழி, வான் வழி என எல்லா வழிகளையும் பயன்படுத்தி வன உயிரினப் பொருட்களைக் கடத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை மூட்டையாகக் கைப்பற்றப்பட்ட மான் கொம்புகளும் இவர்களின் கைங்கர்யமே. புலிகள் மட்டும் அல்லாமல் சந்தனக் கட்டை, செம்மரக்கட்டை தொடங்கி பவளப் பாறைகளும் இவர்களின் லிஸ்ட்டில் உண்டு. பெரிய மருந்து நிறுவனங்கள், அழகுப் பொருட்கள் நிறுவனங்கள், ஆடம்பரக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வன உயிரினக் கலைப் பொருட்களில் ஆர்வம்கொண்ட கோடீஸ்வரர்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள். 

மத்திய அரசின் 'புராஜெக்ட் டைகர்’ சொல்லும் கணக்கின்படி கடந்த 99-ம் ஆண்டில் சீனா - வியட்நாம் எல்லையில் 10 கிராம் புலி எலும்பின் விலை 2425 டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ஒரு கிலோ எலும்பின் விலை ஒரு லட்சத்துக்கும் மேல். இன்று இதன் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துவிட்டது. இன்று ஒரு கிலோ இந்தியப் புலியின் எலும்புக்கு 10 லட்சம் மதிப்பு. ஒரு புலியின் மொத்த மதிப்பு... சுமார் 1 கோடி.

அடுத்து வியாபாரிகள். 90 சதவிகிதப் புலி வியாபாரம் சீனாவில்தான் நடக்கிறது. ஜப்பானில் இந்தத் தொழில் 2000-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தின் அடிப்படைப் பொருள் விலங்குகளின் எலும்புகள். குறிப்பாக, புலியின் எலும்பு. மருத்துவப் பொருட்கள் மட்டுமின்றி அவர்களின் அழகு சாதனப் பொருட்களையும் புலிகளின் எலும்புகளை வைத்துதான் செய்கிறார்கள். புலி களின் எலும்புகளை மருத்துவத்தில் சேர்த்துக்கொள்வது ஆன்மிகம், வீரம் மற்றும் கௌரவம் சார்ந்த விஷயமாகவும் சீனர்கள் நம்புகிறார் கள்.

இதற்காகவே சீன அரசு புலிப் பண்ணைகளை உருவாக்கி, 6,000 பலி புலிகளை வளர்க்கிறது. ஆனால், காட்டு வாழ் புலிக்குத்தான் வீரியம் அதிகம் என்று நம்பும் மருந்து நிறுவனங்கள், கள்ளச் சந்தையில் வரும் காட்டுப் புலிகளின் மூலம் கிடைக்கும் பொருட்களின் மீது ஆர்வம் காட்டுகின்றன. சீனா வின் வியாபாரரீதியிலான புலி வளர்ப்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் குவிந்துவருகின்றன. கடந்த 73-ம் ஆண்டு வாஷிங்டனில் 80 நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய 'சைட்டிஸ்’ (CITES Convention on international trade in endangered species)  ஒப்பந்தக் குழுவினர் கடந்த 2007-ல் சீனாவில் பண்ணையில் வளர்த்து, புலிகள் கொல்லப்படுவதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனாலும், அசராமல் புலிகளை வளர்த்துப் பலி கொடுக்கிறது சீனா.

இந்தியா மற்றும் தமிழகத்தில் புலிகள்!

இந்தியாவின் வட மாநிலங்களில் புலி வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன அரசுகள். ஏனெனில், இதில் கிடைக்கும் அபரிமிதமான பணம். கடந்த 2000 முதல் 2009-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 882 பேர் புலி வேட்டை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், இவர் களில் தண்டனை பெற்றது 18 பேர் மட்டுமே. சரியான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் புலி மாஃபியாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணம்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் கோவை, சத்தியமங்கலம், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் 10-க்கும்
மேற்பட்ட புலித் தோல்கள் பிடிபட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையை ஒட்டி கர்நாடகாவில் இருக்கும் சாம்ராஜ் நகரில் புலியின் தோல், இறைச்சி, எலும்புகளை வைத்திருந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ஆபத்துகளுக்கு இடையிலும் மற்ற மாநிலங்களைவிட புலிகள் பாதுகாப்பில் தமிழ கம் முதன்மையான மாநிலம் என்பதைச் சமீபத்தியக் கணக்கெடுப்புகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலைப் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி ஆகியவற்றில் தற்போது 150 புலிகள் இருப்பதாக வனத் துறை அறிவித்துள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த கணக்கெடுப்புகளின்படியும் காடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா பதிவுகளின்படியும் புலிகளின் எண்ணிக்கை உத்தேசமாக 300 ஆக உயர்ந்திருக்கும் என்கிறார்கள்.

எனது இந்தியா (தாவர உலகம்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்திய வரலாற்றின் உருவாக்கத்தில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து இருக்கின்றன. குறுமிளகு, கிராம்பு, அகில் மற்றும் சந்தனம் ஆகியவற்றைத் தேடிவந்த வெளிநாட்டு வணிகர்கள், வாசனைத் திரவியங்களை அள்ளிக் கொண்டுசென்றதுடன், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததுதான் கடந்த கால வரலாறு.

இன்று, பலரும் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மிளகை அலட்சியமாகத் தூக்கி எறிகின்றனர். அவர்களுக்குத் தெரியாது இந்த மிளகுக்காகத்​தான் இந்தியா அடிமைப்படுத்தப்​பட்டது என்பது. வரலாற்றைக் கற்றுக்கொள்ள கல்வெட்டுக்கள் மட்டும் அல்ல, பொங்கலில் போடப்பட்ட மிளகும் உதவக்கூடும்.

இந்திய மக்கள் எந்தத் தாவரங்களைப் புனிதமாகக் கருதினர்? மன்னர்கள் எந்தப் பூக்களை தங்களது அடையாளமாகக்கொண்டனர்? எந்த மரங்கள் மருத்துவ குணம்கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டன? எவை ஸ்தல விருட்சங்களாகக் கொண்டாடப்பட்டன? என்பதை எல்லாம் ஆராய்ந்தால், தாவர உலகம் கடந்த காலத்தின் முக்கிய வரலாற்றுச் சாட்சியாக இருப்பதை உணர முடிகிறது.


இந்தியா எங்கும் தாவரங்களின் மருத்துவக் குணங்கள் பற்றிய அறிவு, குடும்ப ரகசியம்போலவே பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் தங்களது ரத்த உறவுகளுக்கு மட்டுமே மூலிகைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். எளிய மனிதர்கள் நோயுறும்போது முறையான மருத்துவம் பெற சாதி ஒரு தடையாக இருந்து இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியத் தாவரங்களை வகைப்படுத்தி, அதை ஒரு தனித்த அறிவுத் துறையாக மாற்றியவர்கள் டச்சுக்காரர்கள். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.


டச்சுக்காரர்கள் ஆசிய நாடுகளின் தாவரங்​களை ஆராய்ந்து அதன் வழியே இந்திய மரபு மருத்துவ முறையை தங்கள் வசமாக்கிக்கொள்ள முயன்றனர். அத்துடன், புதிய வாசனைப் பொருளோ அல்லது விற்பனைப் பொருளோ கிடைக்கக்கூடும் என்றும் தேடத் தொடங்கினர். இது, சுயலாப நோக்கம்கொண்ட தேடுதல் என்றாலும், அதன் விளைவாக உருவான அரிய தொகுப்பு முயற்சிகள் இந்தியத் தாவரவியல் உலகுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது என்பதே உண்மை. 'ஹோர்டஸ் மலபாரிகஸ்’ எனப்படும் 12 தொகுதிகள்கொண்ட இந்தியத் தாவரவியல் புத்தகம், டச்சுக்காரர்களால் தயாரிக்கப்பட்டது. 1678-ம் ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகள் இந்தப் புத்தகத் தொகுப்புப் பணி நடந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஹென்ரிக் வான் ரேடே என்பவர் மலபார் கவர்னராகப் பணியாற்றிய டச்சுக்காரர். ஒவ்வொரு தொகுதியும் 500 பக்கங்கள் கொண்டது. கேரளாவில் காணப்படும் தாவர இனங்களை வகைப்படுத்தி அழகான சித்திரங்களுடன் லத்தீன் மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தாவரவியல் தொகுப்புப் பணியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தப் பணியை ஒருங்கிணைத்ததில் ரானா பகத், விநாயக் பண்டிட், அப்பு பகத் மற்றும் இட்டி அச்சுதன் வைத்தியர் ஆகிய நான்கு பேர் முக்கியமானவர்கள். இதில், அச்சுதன் வைத்தியர், ஈழவ வம்சத்தைச் சேர்ந்தவர். இந்தப் புத்தகத்துக்கான ஓவியங்களை வரைந்தவர், கார்மேலிட் மத்தியாஸ் என்ற பாதிரியார். வனப் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்​பட்டுக் கொண்டுவரப்பட்ட தாவரங்களைப் புகைப்படம் எடுப்பதுபோல அத்தனை துல்லியமாக ஓவியமாக வரைந்து இருக்கிறார் மத்தியாஸ். வரையப்பட்ட தாவர ஓவியங்களின் அடியில் மலையாளத்திலும் கொங்கணியிலும் அதுபற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்தப் பட்டியலை இம்மானுவேல் கமிரோ என்பவர் லத்தீனில் மொழியாக்கம் செய்து இருக்கிறார்.

டச்சு அதிகாரி ஹென்ரிக் வான் ரேடேவுக்கு ஏன் இந்தியத் தாவரங்களின் மீது இத்தனை ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், அவருடைய தந்தை நெதர்லாந்தில் வனத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். எனவே, சிறுவயது முதலே காட்டில் சுற்றி அலைந்து அரிய தாவரங்கள், விலங்குகளைக் காண்பது ஹென்ரிக்குக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. வணிக முயற்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஹென்ரிக், இலங்கை மற்றும் தூத்துக்குடியில் சேவை செய்த பிறகு, கேரளாவின் மலபார் பகுதிக்கு 1658-ம் ஆண்டு வந்து சேர்ந்தார். அவரது முக்கியப் பணி வாசனைப் பொருட்களை வாங்கி விற்பது என்றாலும், உள்நாட்டு அரசியலில் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அதன் காரணமாக, கொச்சி மன்னருடன் நெருக்கமான நட்புடன் இருந்தார் ஹென்ரிக்.

அந்த நாட்களில் மலபார் பகுதியின் வனம் அடர்ந்து செழித்து இருந்தது. பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த மலபார் காட்டுப் பகுதியை ஹென்ரிக் மிகவும் நேசித்தார். குறிப்பாக, மலபார் பகுதியில் விளையும் மஞ்சள் ரோஜாக்கள் அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதுபோன்ற ரோஜா மலர்களை அதற்கு முன் அவர் பார்த்ததே இல்லை. மலபார் ரோஜாக்களில் இருந்து எடுக்கப்படும் அத்தர் வாசனை அவரை மிகவும் மயக்கியது. எத்தனை விதமான ரோஜா மலர்கள் மலபார் பகுதியில் இருக்கின்றன என்று தேடி அலைந்து, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் எனப் பல்வேறு விதமான ரோஜா மலர்கள் இருப்பதைக் கண்டபோது, இவற்றைப் பயன்படுத்தி அத்தர் தயாரித்து ஐரோப்பாவில் விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் ஹென்ரிக்குக்கு ஏற்பட்டது. அதுவரை துருக்கியில் இருந்தே ஐரோப்பாவுக்கு வாசனைத் திரவியங்கள் வரும். இந்த எண்ணம்தான், காட்டுத் தாவரங்களை முறையாகப் பட்டியலிட வேண்டும் என்ற நோக்கமாக உருமாறியது.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய மருத்துவ முறைகளைவிட வியப்பளிக்கும் இந்திய மருத்துவ முறைகளையும் அதற்குப் பயன்படும் தாவரங்களையும் பற்றி அறிந்துகொண்ட ஹென்ரிக், எதிர்கால மருத்துவ உலகம் பயன்படுத்திக்கொள்ள ஏற்றபடி தாவர வகைப்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார். மலபார் பகுதியின் கவர்னராகப் பணியாற்றியபோதும், ஹென்ரிக்குக்கு மலையாளம் பேசத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்ட துபாஷிகளைக்கொண்டே உள்ளூரை நிர்வாகம் செய்தார். மலபார் பிரதேசம் என்பது கடவுளின் பூந்தோட்டம். அதைக் கவனமாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து, முறையாகத் தாவரங்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார் ஹென்ரிக். அப்போது அவர் முன் இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, இந்தியாவில் அதுவரை இருந்த தாவரவியல் வகைப்பாடு பெரும்பாலும் அராபிய முறையில் அமைந்து இருந்தது. இன்னொன்று, அந்த வகைப்பாட்டை செய்தவர்கள் உயர் வகுப்புப் பிராமணர்கள்.

ஆனால், மருத்துவத்தைத் தொழிலாகக்கொண்ட வைத்தியர்களை கீழ்சாதியாகக் கருதி அவர்களின் மருத்துவ அறிவை ஒதுக்கியே வைத்திருந்தது மேல்தட்டு வர்க்கம். 

பாரம்பரியமாக வைத்தியம் செய்துவரும் குடும்பங்கள், படிப்பு அறிவு இல்லாமல் சரியாக மூலிகைகளை அடையாளம் காட்டிவிடுகின்றன. ஆனால், படித்த உயர்தட்டு மக்கள் ஏட்டில் உள்ளதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, நடைமுறையில் அவர்களால் அதை மருத்துவ முறையாக மாற்ற முடியவில்லை என்பதை ஹென்ரிக் தெளிவாக உணர்ந்தார். ஆகவே, முற்றிலும் வைத்திய மரபில் வந்த ஈழவ சமுதாயத்தினரின் வைத்திய மரபுப்படியே தனது தாவர வகைப்பட்டியல் உருவாக வேண்டும் என்று விரும்பினார். இதனால், அச்சுதன் வைத்தியரை தனது பணிக்கு முக்கிய ஆய்வாளராக நியமித்தார்.

அச்சுதன் வைத்தியரை நியமித்தது தவறு. அவர் கீழ்சாதிக்காரர் என்று எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ஹென்ரிக், அச்சுதன் வைத்தியரின் விசாலமான அறிவையும் மருத்துவத் தேர்ச்சியையும் மனதில் கொண்டு தனது உத்தரவில் உறுதியாக இருந்தார்.

அச்சுதன் வைத்தியர் தன்னிடம் இருந்த பழைய ஏடுகளைக்கொண்டு காட்டில் பறித்து வரப்பட்ட தாவரங்கள் பற்றி தெளிவான தகவல்களைத் தெரிவித்தார். ஆகவே, இந்தத் தாவரவியல் தொகுப்பு, முறையான மருத்துவரின் சான்று பெற்ற புத்தகம் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றது. அச்சுதன் வைத்தியரை டச்சுக்காரர்கள் நெதர்லாந்துக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். செல்வதற்கு முன் தனது அரிய ஏடுகளை அவர் ஒரு மரப்பெட்டியில் வைத்து உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பின்னாளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அந்த ஏடுகள் எரிந்துவிட்டன என்ற ஒரு தகவல் இன்றும் கூறப்படுகிறது. அச்சுதன் வைத்தியரின் இந்தப் பணியைப் பாராட்டி மலபாரின் ஒரு குறிப்பிட்ட தாவர வகைக்கு அவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தி இருக்கிறார் ஹென்ரிக்.

தாவரவியல் வகைப்பாட்டுக்காக பால் ஹெர்மன் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவை காட்டுக்குள் அனுப்பித் தாவரங்களை கொண்டுவரச்செய்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வுப் பணியின் முடிவில் 1676-ம் ஆண்டு முதல் இரண்டு தொகுப்புகள் லத்தீனில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 1678-ம் ஆண்டு மலபாரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஹென்ரிக், ஹாலந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Sunday, January 20, 2013

வருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..!

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப்படுத்த முதலீடு செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள்தான் இருக்கிறது. இந்நிலையில் வரிச் சேமிப்பிற்கான முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் கண்ட திட்டத்தில் பணத்தைப் போட்டு பரிதவிக்கவேண்டியிருக்கும். என்னென்ன வழிகளில் வருமான வரியைச் சேமித்து, லாபம் அடையலாம் என்பதை இனி பார்ப்போம்.

80சி முதலீடுகள்..! 

வருமான வரியை மிச்சப்படுத்துவதில் 80சி பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. இப்பிரிவின் கீழ் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.


ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்களுக்கு நல்வாய்ப்பாக இ.எல்.எஸ்.எஸ். என்கிற பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் இருக்கிறது. இதில் செய்யப்படும் முழுத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தில் டிவிடெண்டுக்கு வரி இல்லை. மேலும், முதிர்வுக்குப் பின் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை.

பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் முதலீட்டுத் திட்டமான யூலிப் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் யூலிப் பாலிசிகளில் முதலீட்டைத் தொடங்கலாம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு என ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (சுமார் 8-9% வட்டி), ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (வட்டி 8.5%), புதிய பென்ஷன் திட்டம் (வயதுக்கு ஏற்ப பங்கு முதலீடு அளவு இருக்கும்).


செலவுகள்..! 

குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குச் செய்யப்படும் செலவுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது.

* வீட்டுக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தும் அசல் (80சி பிரிவு) மற்றும் வட்டிக்கு (24 பிரிவு - நிதி ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. இது வீட்டில் குடியிருப்பவர்களுக்கான கணக்கு. வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டினால், அசலுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

* வீடு வாங்க கட்டும் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. (80சி பிரிவு)

* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு ரூ.15,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000) வரை வரிச் சலுகை இருக்கிறது. பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் மகன் அல்லது மகள் வரிச் சலுகை பெற முடியும். இந்த வகையில் அதிகபட்சம் ரூ.40,000-க்கு வரிச் சலுகை பெற முடியும். (80டி பிரிவு)

*  80 சி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இந்தச் சலுகை இரண்டு பிள்ளைகளுக்குத்தான் உண்டு. கணவன் - மனைவி, இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில் ஒருவர் ஒரு பிள்ளைக்கும், இன்னொருவர் இன்னொரு பிள்ளைக்கும் வரிச் சலுகை கோரும்பட்சத்தில் கூடுதல் வரிச் சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதர வரிச் சலுகைகள்..! 

* குடியிருக்கும் வீட்டுக்குக் கொடுக்கும் வாடகைக்கு வரி விலக்கு கிடைக்கும். மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் வாடகையாகக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், நகரம், கம்பெனி அளிக்கும் வீட்டு வாடகைபடி போன்றவற்றை பொறுத்து வரிச் சலுகை அளவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெற்று கொடுக்கவேண்டும். (பிரிவு 10 (13ஏ))

* வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ.1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. (பிரிவு 80யூ)

*  வருமான வரிச் செலுத்துபவரை சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு மேற்கொள்ளும் மருத்துவமனை செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1,00,000) வரை வருமான வரிச் சலுகை பெறலாம். மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் கட்டாயம் தேவை. (பிரிவு 80டிடி)

*  புற்றுநோய், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரி விலக்கு உள்ளது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை. (பிரிவு 80டிடிபி)

* தன்னுடைய அல்லது பிள்ளைகளின்      உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை. அசலுக்கு வரிச் சலுகை இல்லை. (பிரிவு 80இ)


பங்குகளில் முதலீடு செய்து, ரிஸ்க் எடுத்து வருமானம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு என  புதிதாக ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்பு திட்டத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 80சிசிஜி-ன் கீழ் வருகிறது. இதில் செய்யப்படும் 50,000 ரூபாயில் 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை தரப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்தான் முதலீடு செய்யமுடியும். மேலும், ஆண்டு மொத்த வருமானம் 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். மொத்த லாக்கின் பீரியட்

3 ஆண்டுகள்..! 

80சி பிரிவின் கீழ் மேலே கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.