Search This Blog

Monday, June 24, 2013

ஓ பக்கங்கள் - மோடி! ஞாநி


ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி கோவிந்தாச்சாரியா பல வருடங்கள் முன்னர் வாஜ்பாயியை பி.ஜே.பி.யின் முகமூடி என்று வர்ணித்தார். பின்னர் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவும் செய்தார். அவர் சொல்லியிருந்தாலும் சொல்லியே இராவிட்டாலும், வாஜ்பாயி பி.ஜே.பி.க்கு வாத்த அருமையான முகமூடி என்பதில் சந்தேகமில்லை.

பி.ஜே.பி. அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில், ஆர்.எஸ்.எஸ்.சின் லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் இயங்கும் அரசியல் கட்சி என்பது யார் மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மையாகும். இந்துத்துவா என்பது மதவாதம் அல்ல என்றும் தாங்கள் வலியுறுத்துவது பண்பாட்டைத்தான் என்று பி.ஜே.பி. எவ்வளவு குரலெழுப்பினாலும், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சின் இதர மத எதிர்ப்பு/வெறுப்புக்கான அரசியல் தத்துவ வடிவம் தான் என்பது நடைமுறையில் அயோத்தி முதல் குஜராத் வரை அம்பலமாகிவிட்டது.

இந்தியாவில் பி.ஜே.பி. தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்புவதை ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் பெருவாரியான மக்கள் இந்தப் பிற மத விரோத உணர்ச்சியைத் தங்கள் வாழ்க்கைமுறையாக ஏற்கவே இல்லை. அதனால்தான் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டபோதும், வெவ்வேறு அவதாரங்களில் மக்கள் முன்னால் வந்து நின்ற போதும் ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவத்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளாகியும் தொண்ணூறுகள் வரை இந்திய ஆட்சி அதிகாரத்தை முற்றாக வசப்படுத்த முடியவில்லை.

அதற்குப் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்று தான் முகமூடி உத்தி. நெருக்கடி நிலையின்போது ஜனநாயகக் காவலர்கள் என்ற முகமூடியைப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான ஜனசங்கம் கட்சி, எமர்ஜென்சியை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு, காங்கிரசுக்குள்ளேயிருந்து இந்திராவை எதிர்த்து வெளியே வந்த மொரார்ஜி போன்ற மதவாதம் இல்லாத தலைவர்களின் அணிகளுடனும், மதவாத எதிர்ப்பாளர்களான சோஷலிஸ்ட் அணிகளுடனும் ஒன்று சேர்ந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. எல்லாமாக ஜனதா கட்சி என்ற வடிவத்தில் இயங்கினார்கள். இதில் லாபம் அடைந்தது ஜனசங்கம் எனப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். வாஜ்பாயி, அத்வானி போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முக்கிய அமைச்சரானார்கள். அரசாங்கத்துக்குள்ளேயும் மீடியா உலகிலும் அப்போது ஏராளமான ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்/அனுதாபிகள் ஊடுருவினார்கள். இன்று அரசிலும் பல ஊடகங்களிலும் முன்னணியில் இருந்தபடி பி.ஜே.பி. சார்பு நிலையை ஊக்குவிக்கும் வலிமையான இடத்தை அடைந்த பலர் அப்போது கீழ்மட்டங்களில் ஊடுருவியவர்கள்தாம்.

ஜனதா ஆட்சி சில வருடங்களிலேயே உடைய காரணம் இந்திராவின் அரசியல் சூழ்ச்சிகள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அவை அசல் காரணங்கள் அல்ல. ஜனதா கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு / எதிர்ப்பு சக்திகளின் முரண்பாடுகளினால்தான் ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதில் விசித்திரம் என்னவென்றால் இந்திராவின் சர்வாதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமான ஜனசங்கமும் ஜனதாவும் எதிர்த்தபோதே, ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக இந்திராவை ஆதரித்தே அறிக்கை வெளியிட்டு இரட்டை வேடம் போட்டது. முகம் ஒன்றும் முகமூடி ஒன்றும் பேசுவதுதான் தொடர்ந்து பின்பற்றப்படும் உத்தி.

எமர்ஜென்சியின்போது பல அராஜகங்களுக்குக் காரணமானவரான சஞ்சகாந்திக்கு நெருக்கமாக இருந்து தில்லி கவர்னராக முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைச் செய்த ஜக்மோகன் பின்னாளில் பி.ஜே.பி. அமைச்சரானார். சஞ்ச காந்தியின் குடும்பம் முழுவதும் பி.ஜே.பி.யில்தான் இருக்கிறது.

தொண்ணூறுகளில் ஆர்.எஸ்.எஸ். முகமூடி உத்தியை அபாரமாகப் பின்பற்றியது. அத்வானி பகிரங்கமாக ரத யாத்திரைகள் நடத்தி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற இயக்கத்தை நடத்தி, இந்து மத சார்பாளர் வோட்டுகளையெல்லாம் திரட்டுவது, வாஜ் பாயியோ, அத்வானி போன்று தீவிர மத வெறியர் இல்லை என்று காட்டும் செக்குலர் முகமூடி அணிந்து, மதவாதத்தில் நம்பிக்கையற்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகளைத் திரட்டுவது என்று இருமுனைத் தாக்குதலைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். ஒருத்தர் மூலவர்; இன்னொருத்தர் உற்சவர் என்ற இந்த உத்தி சிறப்பாக வேலை செய்தது.

ஆனால் இப்போது இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் அத்வானி - மோடி ‘மோதல்’ என்பது என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அத்வானியை விட சுமார் 20 வயது இளையவர் நரேந்திர மோடி. காங்கிரசில் அடுத்த தலைமைக்கான முகமாக 40 வயது ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் சூழலில், பி.ஜே.பி.(ஆர்.எஸ்.எஸ்), தன்னிடம் இருக்கும் இளம் முகமான மோடியை முன் நிறுத்த வேண்டிய தேவையில் இருக்கிறது.

மோடி, இந்துத்துவாவைப் பொறுத்தமட்டில் அத்வானி வழியைச் சேர்ந்தவர். ராமர் கோவில் ரத யாத்திரைகள் மூலம் பகிரங்கமாக இந்துத்துவ நிலையை அத்வானி எடுத்ததைப் போலவே, கோத்ராவையடுத்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் கொலைகளுக்குத் தம் அரசாங்க ஆதரவை அளித்த செயல்வீரர்தான் மோடி.

அத்வானி இடத்துக்கு மோடி இருக்கிறார். ஆனால் வாஜ்பாயி இடத்துக்கு? இதுதான் இன்றைய பி.ஜே.பி/ஆர்.எஸ்.எஸ்.சின் சிக்கல். பி.ஜே.பி.யின் உச்சமான தலைமைப் பொறுப்புக்கோ, அல்லது பிரதமர் பொறுப்புக்கோ ஆர்.எஸ்.எஸ். தொண்டரல்லாத வேறு எவரையும் ஒருபோதும் கொண்டு வர மாட்டார்கள். அதனால்தான் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்ற ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத மூத்த தலைவர்கள் யாரும் உச்ச இடங்களுக்கு ஒருபோதும் செல்லவே முடியாது. இப்போது வாஜ்பாயிக்கு நிகராக முன் நிறுத்தி முக மூடி மாட்ட ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ள எந்த முகமும் இல்லை.

எனவே மோடிக்கே வாஜ்பாயி முகமூடியையும் அணிவிப்பது என்று முடிவு செய்தார்கள். கடந்த ஐந்து வருடமாக குஜராத்தின் வளர்ச்சிக்கான சிற்பி என்று ஒரு புது முகமூடியை உருவாக்கினார்கள். ஆனால் மூலவரே உற்சவராக ஊர்வலம் போவது ஒத்துவரவில்லை. ஒருவரையே இரு மாறுபட்ட முகங்களுடன் மக்கள் முன்னால் அனைத்திந்திய அளவில் நிறுத்துவது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே கோவிந்தாச்சாரியா சுட்டிக்காட்டியிருப்பதை இங்கே நினைவு கூரலாம். அத்வானிதான் பிரதமர் பொறுப்புக்கு ஏற்றவர். நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் பதவியை வகித்து முதலில் அனுபவம் பெற வேண்டும் என்று கோவிந்தாச்சாரியா சில வருடம் முன்பே சொன்னார்.

இந்தப் பின்னணியில்தான் இப்போது அத்வானி, தாமே வாஜ்பாயி ஆகமுடியுமா என்று சின்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறார். பிரதமர் பதவிக் கனவை 15 வருடம் முன்பே இயக்க நலனுக்காக தியாகம் செய்தவர் அவர். இப்போதுதான் கடைசி வாய்ப்பு. மோடி தன் ரோலிலும், தான் வாஜ்பாயி ரோலிலும், நடித்தால், பழைய படத்தின் ரீமேக்கும் அதைப் போலவே வெற்றி பெற்று விடும் என்று அத்வானி கணக்கு போட்டிருக்கக்கூடும்.

ஆனால் நாகபுரியில் இருக்கும் இயக்குனர்கள் திரைக்கதையை குணச்சித்திர நடிகர் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் உங்களுக்கு நம்ம படத்துல கெஸ்ட் ரோல்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.

மோடியை தேர்தல் குழுப் பொறுப்பாளராக்கிய அதிருப்தியில், அத்வானி கட்சியின் பல பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக எழுதி இப்போது திரும்பப் பெற்றுவிட்ட கடிதத்தில் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயம் என்ன ஆயிற்று? அறுபது வருடங்களுக்கும் மேலாக தான் இருந்து வரும் கட்சி தன் லட்சியங்களிலிருந்து விலகிப் போவது, அதன் இன்றைய தலைவர்கள் பலர் சுயநலமிகளாகி விட்டது என்றெல்லாம் அத்வானி சொன்ன குறைகள் சும்மா ஒரு சாக்குதான். (இதையே கோவிந்தாச்சாரியா பல வருடம் முன்பே சொல்லிவிட்டுப் போய்விட்டார்) ஏனென்றால் இந்தக் கோளாறுகளின் உச்சமாக கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி நடந்தபோது அத்வானி இப்படியெல்லாம் கொந்தளிக்கவே இல்லை.

இப்போது அவரது தலைமை ‘வாயை மூடிக் கொண்டு சும்மா கிட’ என்று சொன்னதும் விஸ்வாசமான காக்கி நிஜார் தொண்டராக ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார். எந்த அளவு இயக்க விஸ்வாசம் என்றால் அவர் வீட்டிலேயே இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் செய்கிறார். பக்கத்தில் வந்து மௌனமாக உட்காரக் கூட அவர் வரவில்லை. என்ன சோல்லி அத்வானியை சமாதானப்படுத்தியிருக்க முடியும்? ‘இனி பிரதமர் பதவியெல்லாம் உங்கள் தகுதிக்குக் குறைவானது. மோடி பிரதமராகட்டும். அடுத்த ஜனாதிபதியாக உங்களை ஆக்கிவிடுவோம்’ என்று சொல்லியிருப்பார்களோ ? இருக்கலாம்.

இந்தச் சுற்றில் அத்வானி தோற்பார் என்பது தெரிந்த விஷயம்தான். காரணங்கள் பல. ஆர்.எஸ்.எஸ்.க் கும் பி.ஜே.பி.க்கும் அடுத்த 20 வருடங்களுக்குத் தங்கள் காயை நகர்த்த, பொருத்தமான வயதில் அத்வானி இல்லை. அதற்கு மோடிதான் சரி. அத்வானி, கட்சிக்குள் பலவீனமாகிவிட்ட சுதேசிப் பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் இப்போது கட்சி மன்மோகனுக்குப் போட்டியாக பன்னாட்டு முதலீடு, தாராளப் பொருளாதார சார்பை நோக்கிச் செல்லும் மோடியையே விரும்புகிறது.

வாஜ்பாயியின் ‘செக்குலர்’ முகமூடி அப்போது பல அறிவுஜீவிகளைக் கட்சிக்கு ஈர்த்தது போல இப்போது ஈர்க்க முடியாது. ‘வலதுசாரி ஃப்ரீ மார்க்கெட் கொள்கை’தான் ஈர்க்கும். அதற்கு மோடியின் குஜராத் டெவலப்மென்ட் முகமூடிதான் சரி என்றே நாகபுரி கணக்கு போட்டிருக்கக்கூடும்.

இந்த முகமூடி மாற்ற நாடகம்தான் இப்போது நடந்திருக்கிறது. முகமூடிகளை ஒப்பனை அறைக்குள் மாற்றிவிட்டு, பிறகு அரங்கில் வந்து ஆட்டம் ஆடுவது மரபு. ரகசியமாகச் செய்யும் ஒப்பனையைப் பகிரங்கமாகச் செய்ததில் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. அவ்வளவுதான்.நாங்கள் ஆட்சி அமைத்தால் அடுத்த குடியரசுத் தலைவர் அத்வானிதான் என்ற வசனங்களை வரப் போகும் நாட்களில் விரைவில் கேட்போம். மோடியே அதை அறிவித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

Sunday, June 16, 2013

கலாம்

 
அப்துல் கலாமுக்குப் பிறகு பிரதிபா பாட்டிலின் பதவிக்காலம்கூட முடிந்து பிரணாப் முகர்ஜி இந்திய ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால், இன்றும் கலாம் இந்திய மக்களின் மனத்தில் ஹீரோதான். கலாமுக்கு இப்போது 81 வயது ஆகிறது. இன்னமும் தினசரி தபாலிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அவருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிகின்றன. மாதத்துக்கு சுமார் ஐந்நூறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோரிக்கைகள் வருகின்றன. கவனமாகத் தேர்ந்தெடுத்து அத்தியாவசியம் கருதினால் மட்டுமே ஒப்புதல் அளிக்கிறார். இப்படி மாதத்தில் பதினைந்து, இருபது நாட்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம். காலையில் சுமார் ஏழு மணிக்கு எழுந்திருக்கும் அவர், தினசரி தம் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு மறுபடியும் படுக்கைக்குப் போகிறபோது அதிகாலை இரண்டு மணிக்கு மேல்.
 
தில்லியின் ராஜாஜி சாலை எண்பத்து கொண்ட பங்களா கலாம் வசிப்பதற்காக அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. தில்லியில் நாடாளுமன்றம், ராஷ்டிரபதி மாளிகை ஆகியவற்றை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டடக்கலை வல்லுனர் சர் எட்வின் லுட்கின்ஸ் வசித்த பங்களா இது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் பசும் புல்வெளி, தோட்டம், அடர்ந்த மரங்கள் கொண்ட இந்த பங்களா இரண்டு அடுக்குகள் கொண்டது. அரசாங்கம் கலாமுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.  கலாம் இந்த பங்களாவில் குடியேறிய பிறகு மாடியில் பெரிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார். அரசியல், வரலாறு, நிர்வாகவியல் முதல் அறிவியல், தொழில் நுட்பம் வரை பலவிதமான சப்ஜெக்ட்களில் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். நிறைய தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. மாடியிலும் கீழுமாக இரு அலுவலக அறைகள். மாடியில் தம்முடைய சொற்பொழிவுகளைத் தயார் செய்வது, அன்றாட வேலைகளைக் கவனிப்பது போன்ற பணிகள் நடக்கின்றன. கீழ் அலுவலக அறை, விசிட்டர்களைச் சந்திப்பதற்கானது.
 
கலாமின் நாள், தினசரி காலை ஏழு மணிக்கு காஃபியுடன் ஆரம்பமாகிறது. அன்றைய ஆங்கில, தமிழ் தினசரிகளைப் புரட்டி, முக்கிய செய்திகளைப் படித்து விட்டுத்தான் மற்ற வேலைகள். பத்துமணிக்கு, அலுவலகம் வந்துவிடுவார். கடிதங்களைப் படிப்பது, நிகழ்ச்சிகளுக்கான கோரிக்கைகளைப் பரிசீலிப்பது, இதர பணிகளைக் கவனிக்கிறார். அந்நேரத்தில் இணையத்தில் தன் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களுக்குச் சென்று பார்த்து, தாம் விரும்பும் விஷயங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வாடிக்கை. இமெயில்களைப் பார்த்து, தாமே பதில் அனுப்ப வேண்டியவற்றுக்கு பதில் மெயில் அனுப்பிவிடுவார். மேல் நடவடிக்கைகளுக் குரிய மெயில்களின் மீது என்ன செய்ய வேண்டும் என்று அலுவலக அதிகாரிகளுக்குக் குறிப்புகள் கொடுப்பார். அன்றைய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொள்வார். கலாம், இசைப்பிரியர் என்பதால், அலுவலக அறையில் இருக்கும் நேரத்தில் பின்னணியில் லேசாக வீணை, சித்தார் இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில் தியாகராஜ கீர்த்தனைகள்.  

கலாமின் காலை சிற்றுண்டி பகல் பதினொரு மணிக்குத் தான். பங்களாவில் இருக்கும் சமையல் அறையைக் கவனித்துக் கொள்ள நான்கு சமையல் காரர்கள் உண்டு. வழக்கமாக ஒரு தோசை. அடுத்து உப்புமா, பூரி, இட்லி இதில் ஏதாவது ஒன்று இருக்கும். பழங்கள், தயிர் சாப்பிடுவார். பிரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு மறுபடியும் அலுவலக அறைக்கு வந்துவிடுவார். பகல் இரண்டு, இரண்டரை வரை தம் பணிகளில் மூழ்கி இருப்பார். அதன் பிறகு புல்வெளியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு வாக்கிங். அப்போது, பெரும்பாலும் சில நண்பர்கள், தன் அலுவலக அதிகாரிகள் உடன் வர ஆலோசனைகள் நடக்கும். மறுபடியும் டிஸ்கஷன், கடிதங்கள், ஃபைல்கள் பார்த்துவிட்டு மாலை ஐந்து மணிக்குத் தான் லஞ்ச். தென்னிந்திய உணவு வகைகளை விரும்புவார். மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன், சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் இருக்கும் என்றாலும், ஒவ்வொரு சாதமும் நாலைந்து ஸ்பூன் அளவுதான் சாப்பிடுவார். அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு.

தில்லியில் மாலையில் நிகழ்ச்சிகள் ஏதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ஏழு மணியளவில் விசிட்டர்களைச் சந்திப்பது அவரது வழக்கம். தனிப்பட்ட நபர்களைச் சந்திப்பது உண்டு என்றாலும், விசிட்டர்களை குழுக்களாகச் சந்தித்து, உரையாடுவதையே அவர் விரும்புவார். குழந்தைகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் குழுவினர் அவரை சந்திக்க நேரம் கேட்டால் முன்னுரிமை கொடுத்து அவர்களை சந்திப்பார். சுமார் ஒன்பது, ஒன்பதரை மணி வரை விசிட்டர்களைச் சந்தித்த பிறகு, மீண்டும் ஒரு மணி நேரம் வாக்கிங். பத்தரை மணிக்கு மேல் மிக லைட்டான டின்னர். அதன்பிறகு தம் நூல் நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார். நேரம் போவதே தெரியாது. தினமும் படித்து முடித்து விட்டு, படுக்கைக்குச் செல்லும்போது இரவு இரண்டு மணியைத் தாண்டி இருக்கும். சில நாட்களில் மூன்று மணி கூட ஆகிவிடும்.

அருள்வாக்கு - மனசே வியாதிதான்!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக் கொண்டு ஒழுங்குக் கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போக வேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்குவம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.

வியாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிட முடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வியாதியையும் மனோ வியாதியையும் போக்கிக் கொள்ள வேண்டும். (மனோ வியாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரமை போன்ற வியாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வியாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)

மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும், மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வியாதி, மனோ வியாதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரக்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்கியத்துவம். அப்புறம் பக்திக்கு முக்கியத்துவம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்கியமாகிற நிலைக்குப் போவது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......


சாம்பியன் என்றால் இப்படித்தான் ஒரு வெறியுடன் எழவேண்டும். ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவருமே பிரெஞ்ச் ஓபன் வெற்றிகள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள். நடால், மிக இளம் வயதில் 8 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறார்.

செரீனா, ஓவைப் பற்றி யோசிக்கும் முப்பத்தொரு வயதில், மிகப்பெரிய உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, தம்முடைய 16 வது கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, பிரெஞ்ச் ஓபனை மீண்டும் வெல்வதுதான் செரீனாவுக்குக் கடும் சவாலாக இருந்தது. முதன்முறையாக, 20வது வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றார். அப்போது ஜெனிபர் கேப்ரியாட்டி, மோனிகா செலஸ் போன்றோர் ஆடிய காலம். நடால்கூட ஜூனியர்தான். ஃபேஸ்புக்கூட தோன்றவில்லை. இப்போது, டென்னிஸில், அடுத்த தலைமுறை வந்துவிட்டது. எல்லாச் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சு ஓபனை மீண்டும் வென்றிருக்கிறார் செரீனா. இளம் வீராங்கனைகள் யாரும் அருகில் நெருங்க முடியாத ஆக்ரோஷமான ஆட்டம். சென்ற வருடம் யாரும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றிலேயே வெளியேறியதால், முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றதுபோல 16வது கிராண்ட்ஸ்லாமின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.

செரீனா வில்லியம்ஸூக்கு நிகரான, வலுவான மனநிலை கொண்ட ஒரு வீராங்கனையைப் பார்க்க முடியாது. எத்தனை எத்தனை சர்ச்சைகள், ஏற்ற இறக்கங்கள்! 2003இல் தம் சகோதரியைப் பறி கொடுத்தார். 2009 யு.எஸ். ஓபன் போட்டியில், எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து சர்வீஸ் செய்ததால் தண்டனையாக, புள்ளியை இழந்த செரீனா, ஆத்திரமடைந்து எல்லைக்கோடு பெண் நடுவரை ‘கொன்று விடுவேன்’ என மிரட்டினார். அக்காட்சியை நேரிலும் டி.வி.யிலும் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். மோசமான நடத்தைக்காகவும் தமது டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) கீழே வேகமாக அடித்ததற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2010 யு.எஸ். ஓபனில் செரீனா கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த யு.எஸ். ஓபனிலும், எதிராளிடமும் நடுவரிடமும் மோசமாக நடந்து கொண்டு மீண்டும் அபராதத்தைச் சந்தித்தார். செரீனாவை உலகமே கேவலமாகப் பார்த்த தருணம் அது.

2011ம் வருடம் அவரை லேசில் விடவில்லை. முதலில், ஓர் உணவு விடுதியில், அவருடைய கால்களை கண்ணாடி குத்திவிட, பிறகு, இரண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில், அவருடைய நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் மருத்துவமனையில்தான் நேரத்தைச் செலவழித்தார். டென்னிஸ் விளையாடுவதே சந்தேகம் என்றுதான் சொல்லப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து குணமடைந்து, ஒருவருடத்துக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்குள் இறங்கினார் செரீனா. அதன் பிறகு செரீனா தொட்டதெல்லாம் பொன். ‘சாம்பியன் என்றால் எத்தனைமுறை பட்டங்களை வெல்கிறேன் என்பது முக்கியமில்லை. தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் எத்தனைமுறை எழுகிறேன் என்பதுதான் முக்கியம்’ என்று இப்போது உற்சாகப் பேட்டி கொடுத்தார் செரீனா.

இதுவரை பெண்கள் டென்னிஸில் அதிகம் சம்பாதித்தவர், செரீனாதான். இன்றுவரை பெற்ற பரிசுத்தொகை, 235 கோடி ரூபாய்! பிரெஞ்ச் ஓபனை வென்றதற்காக செரீனாவுக்கு பத்தே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் எல்லாம் சேர்த்து 31 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம்களையும் குறைந்தது இரண்டுமுறை வென்றிருக்கிறார். இதுதவிர, ஒலிம்பிக்ஸில் 4 தங்கப்பதக்கங்கள். இந்த வயதில் இவ்வளவு துள்ளலுடனும் வலுவாகவும் ஆடுவது மற்ற வீராங்கனைகளுக்குக் கிலியை ஏற்படுத்துகிறது. அதுதான் செரீனா வில்லியம்ஸ்.

நடாலின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, புலி ஒன்று களமிறங்கி ஆடுகிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த 27 வயதுக்குள், நடால் செய்த சாதனைகளைக் கண்டு அத்தனை டென்னிஸ் பிரபலங்களும் வாயைப் பிளக்கிறார்கள்.

ரோஜர் ஃபெடரரின் சாதனைகள் ஒவ்வொன்றும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இந்த வருடம் பிரெஞ்ச் ஓபனை வென்று, உலக சாதனை படைத்திருக்கிறார். இதுவரை எந்த வீரரும் எட்டு முறை ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்றதில்லை. கடந்த ஏழு மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நடால், இப்போது முழு உடல்தகுதி பெற்றிருக்கிறார்.

பிரெஞ்ச் ஓபன் என்றால் நடாலுக்குப் பாயசம் சாப்பிடுவதுபோல. முதல் போட்டியிலேயே (2005) கோப்பையைக் கைப்பற்றினார். 2007ல் ஹாட்ரிக் அடித்துக் காண்பித்தார். 2009ல் மட்டும்தான் தோல்வியைச் சந்தித்தார். அந்த ஒரு வருடத்தைத் தவிர, 2005லிருந்து 2013 வரை எல்லா பிரெஞ்ச் ஓபன் கோப்பைகளும் நடாலுக்குத்தான். எல்லோரும் பயப்படும் களிமண் தரையில், நடால் மட்டும் அசைக்க முடியாத சக்தி - ‘கிங் ஆஃப் கிளே.’ ‘5 மாதங் களுக்கு முன்னால், காயம் காரணமாகப் படுக்கையில் கிடந்தபோது, என்னால் இந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள்?’ என்று கேட்கிறார் நடால்.

கடும் போட்டி மனப்பான்மை இருந்தபோதும், ஃபெடரர் - நடால் இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் கிடையாது. ‘ஃபெடரரை நான் எதிரி யாக நினைப்பதில்லை. அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை’என்கிறார் நடால். ஃபெடரரும் முடிந்தவரை நடாலைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.
நடிகன்!

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பாலிவுட் நடிகனாகிவிட்டார். Fugly என்கிற ஹிந்தி திரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். பீஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற விஜேந்தர், சமீபத்தில் பெரும் சர்ச்சை ஒன்றில் மாட்டிக் கொண்டார். ஹெராயின் போதைப் பொருளை உட்கொண்டதாகவும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாகவும் விஜேந்தர் மீது குற்றம் சுமத்தியது, பஞ்சாப் போலீஸ். ஆனால், தேசிய ஊக்கமருந்துத் தடுப்பு அமைப்பு நடத்திய சோதனைகளில் வெற்றி கண்டு, தம்மைக் குற்றமற்றவராக நிரூபித்தார்.

நடால்: களமிறங்கும் புலி!

சாம்பியன் என்றால் இப்படித்தான் ஒரு வெறியுடன் எழவேண்டும். ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவருமே பிரெஞ்ச் ஓபன் வெற்றிகள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள். நடால், மிக இளம் வயதில் 8 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறார். 

செரீனா, ஓய்வைப் பற்றி யோசிக்கும் முப்பத்தொரு வயதில், மிகப்பெரிய உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, தம்முடைய 16 வது கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கிறார். 

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, பிரெஞ்ச் ஓபனை மீண்டும் வெல்வதுதான் செரீனாவுக்குக் கடும் சவாலாக இருந்தது. முதன்முறையாக, 20வது வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றார். அப்போது ஜெனிபர் கேப்ரியாட்டி, மோனிகா செலஸ் போன்றோர் ஆடிய காலம். நடால்கூட ஜூனியர்தான். ஃபேஸ்புக்கூட தோன்றவில்லை. இப்போது, டென்னிஸில், அடுத்த தலைமுறை வந்துவிட்டது. எல்லாச் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சு ஓபனை மீண்டும் வென்றிருக்கிறார் செரீனா. இளம் வீராங்கனைகள் யாரும் அருகில் நெருங்க முடியாத ஆக்ரோஷமான ஆட்டம். சென்ற வருடம் யாரும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றிலேயே வெளியேறியதால், முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றதுபோல 16வது கிராண்ட்ஸ்லாமின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.

செரீனா வில்லியம்ஸூக்கு நிகரான, வலுவான மனநிலை கொண்ட ஒரு வீராங்கனையைப் பார்க்க முடியாது. எத்தனை எத்தனை சர்ச்சைகள், ஏற்ற இறக்கங்கள்! 2003இல் தம் சகோதரியைப் பறி கொடுத்தார். 2009 யு.எஸ். ஓபன் போட்டியில், எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து சர்வீஸ் செய்ததால் தண்டனையாக, புள்ளியை இழந்த செரீனா, ஆத்திரமடைந்து எல்லைக்கோடு பெண் நடுவரை ‘கொன்று விடுவேன்’என மிரட்டினார். அக்காட்சியை நேரிலும் டி.வி.யிலும் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். மோசமான நடத்தைக்காகவும் தமது டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) கீழே வேகமாக அடித்ததற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2010 யு.எஸ். ஓபனில் செரீனா கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த யு.எஸ். ஓபனிலும், எதிராளிடமும் நடுவரிடமும் மோசமாக நடந்துகொண்டு மீண்டும் அபராதத்தைச் சந்தித்தார். செரீனாவை உலகமே கேவலமாகப் பார்த்த தருணம் அது.

2011ம் வருடம் அவரை லேசில் விடவில்லை. முதலில், ஓர் உணவு விடுதியில், அவருடைய கால்களை கண்ணாடி குத்திவிட, பிறகு, இரண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில், அவருடைய நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் மருத்துவமனையில் தான் நேரத்தைச் செலவழித்தார். டென்னிஸ் விளையாடுவதே சந்தேகம் என்றுதான் சொல்லப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து குணமடைந்து, ஒருவருடத்துக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்குள் இறங்கினார் செரீனா. அதன் பிறகு செரீனா தொட்டதெல்லாம் பொன். ‘சாம்பியன் என்றால் எத்தனைமுறை பட்டங்களை வெல்கிறேன் என்பது முக்கியமில்லை. தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் எத்தனைமுறை எழுகிறேன் என்பதுதான் முக்கியம்’ என்று இப்போது உற்சாகப் பேட்டி கொடுத்தார் செரீனா. 

இதுவரை பெண்கள் டென்னிஸில் அதிகம் சம்பாதித்தவர், செரீனாதான். இன்றுவரை பெற்ற பரிசுத்தொகை, 235 கோடி ரூபாய்! பிரெஞ்ச் ஓபனை வென்றதற்காக செரீனாவுக்கு பத்தே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் எல்லாம் சேர்த்து 31 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம்களையும் குறைந்தது இரண்டுமுறை வென்றிருக்கிறார். இதுதவிர, ஒலிம்பிக்ஸில் 4 தங்கப்பதக்கங்கள். இந்த வயதில் இவ்வளவு துள்ளலுடனும் வலுவாகவும் ஆடுவது மற்ற வீராங்கனைகளுக்குக் கிலியை ஏற்படுத்துகிறது. அதுதான் செரீனா வில்லியம்ஸ். 

நடாலின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, புலி ஒன்று களமிறங்கி ஆடுகிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த 27 வயதுக்குள், நடால் செய்த சாதனைகளைக் கண்டு அத்தனை டென்னிஸ் பிரபலங்களும் வாயைப் பிளக்கிறார்கள். 

ரோஜர் ஃபெடரரின் சாதனைகள் ஒவ்வொன்றும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இந்த வருடம் பிரெஞ்ச் ஓபனை வென்று, உலக சாதனை படைத்திருக்கிறார். இதுவரை எந்த வீரரும் எட்டு முறை ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்றதில்லை. கடந்த ஏழு மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நடால், இப்போது முழு உடல்தகுதி பெற்றிருக்கிறார். 

பிரெஞ்ச் ஓபன் என்றால் நடாலுக்குப் பாயசம் சாப்பிடுவதுபோல. முதல் போட்டியிலேயே (2005) கோப்பையைக் கைப்பற்றினார். 2007ல் ஹாட்ரிக் அடித்துக் காண்பித்தார். 2009ல் மட்டும்தான் தோல்வியைச் சந்தித்தார். அந்த ஒரு வருடத்தைத் தவிர, 2005லிருந்து 2013 வரை எல்லா பிரெஞ்ச் ஓபன் கோப்பைகளும் நடாலுக்குத்தான். எல்லோரும் பயப்படும் களிமண் தரையில், நடால் மட்டும் அசைக்கமுடியாத சக்தி - ‘கிங் ஆஃப் கிளே.’ ‘5 மாதங்களுக்கு முன்னால், காயம் காரணமாகப் படுக்கையில் கிடந்தபோது, என்னால் இந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள்?’ என்று கேட்கிறார் நடால். 

கடும் போட்டி மனப்பான்மை இருந்தபோதும், ஃபெடரர் - நடால் இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் கிடையாது. ‘ஃபெடரரை நான் எதிரியாக நினைப்பதில்லை. அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை’ என்கிறார் நடால். ஃபெடரரும் முடிந்தவரை நடாலைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

வீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர்த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கிவிட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்!  

எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா?  

தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன்தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல்லாம் ஊதித் தள்ளிவிடலாம்.

வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கியை நீங்கள் அணுகும்போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.   

வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.

சினிமா, அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக் கடன் தர யோசிப்பார்கள். சுயதொழிலில் ஈடுபட்டு, வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர்களா என்றும் பார்ப்பார்கள்.

கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங்களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட்டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப் போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப்பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.

ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல்லை. அதனால் அவர்களுக்கு நஷ்டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவதுமாக அலசி ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத்தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் - அரசு பென்ஷன் வாங்குபவராக இருந்தால் தவிர!

இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிகளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் வங்கிகள் உங்களுக்கு வீட்டுக் கடன்  தராது.  

மாதச் சம்பளத்தில் கழிவுகள் போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக்கொள்வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன்றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16 - 18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20 - 30 வருடங்கள் கடன் காலம் என்று எடுத்துக்கொள்ளும்பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 - 45 மடங்கு கடன் கிடைக்கும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்துவரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம்.ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சதவிகித சம்பளம் உங்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கும். எனவே, கணவன்-மனைவி என இருவரும்  சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண்டு. 

இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரையறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கையில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும்போதுதான், பெரும்பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்குவதில் தவறே இல்லை! ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்கமாக  யோசித்துவிட்டு, கடன் தொகையை நிர்ணயம் செய்வது நல்லது.



இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன் வாங்கிவிட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ. கட்டுவது பாதிப்படையும். இதனால் வாங்கிய வீட்டை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற்றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்போதும் வங்கியில் வைத்திருப்பதே.  

வீட்டுக் கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேமன்ட் தொகையைவிட அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமாக, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%) நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80 சதவிகிதத்தை (ரூ.24 லட்சம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி என்கிறபட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.

உங்கள் கையில் ரூ.6 லட்சம் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை வாங்கிவிட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கிவிடலாம்; அல்லது வீடு வாங்குவதை சற்று ஒத்திப் போடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம் ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.


அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன் எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்டவேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டுவிடுங்கள். மூன்று வருடம் கழித்துப் பார்க்கும்போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள் கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.

அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்தவேண்டிய இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!

ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு உயர்ந்திருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை அவ்வளவு வேகமாக உயராது. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய்வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக குறைவதுடன், உங்களுக்கு நீங்களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல் இருக்கும்.

டன் பெறும் தகுதி உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், நீங்கள்  எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை ஒரு அட்டவணையாகத் தந்திருக்கிறேன் (அட்டவணை எதிர்பக்கத்தில்!). அதில் கணவன், மனைவி ஆகிய இரண்டுபேரின் சம்பாத்தியத்தை ரூ.20,000; 40,000; 60,000; 1 லட்சம் மற்றும் 2 லட்சம் என ஐந்து கேட்டகிரியாகப் பிரித்துள்ளேன்.

அதேபோல், வீட்டுக் கடன் வாங்குபவரின் ரிஸ்க் எடுக்கும் திறனை கன்ஸர்வேட்டிவ், மாடரேட் மற்றும் அக்ரெஸிவ் என பிரித்துள்ளேன். வேறு எந்தக் கடனும் இல்லாதபட்சத்தில் இந்த கேட்டகிரியில் உள்ளவர்கள் எவ்வளவு உச்சபட்சமாக வீட்டுக் கடன் எடுக்கலாம் என்பதைக் கொடுத்துள்ளேன்.

வீட்டுக் கடனின் வட்டி 10% என்றும், திருப்பிச் செலுத்தும் காலம் 20 வருடங்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் வயது, ஒற்றைச்/ இரட்டைச் சம்பாத்தியம், நீங்கள் இருக்கும் துறை போன்றவற்றை வைத்து உங்களுக்கு ஏற்ற கடன் தொகையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

தகுதி அறிந்து கடன் பெற்று, நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!


சரியும் ரூபாய்..எதிர்காலம் என்ன ?

கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இதற்கு முன்பு 57.32 என்பதுதான் மிகக் குறைந்த அளவாக இந்திய ரூபாய் இருந்தது. இந்தமுறை இந்த அளவையும் தாண்டி 58.98 என்கிற அளவுக்கு குறைந்துவிட்டது. என்ன காரணம், ஏன் இந்த அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்தது?

பொதுவாக வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி குறைவாக இருக்கும்போது, அங்கிருக்கும் பணம் வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக, வளர்ந்த நாடுகள் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது எனில் வளரும் நாடுகளில் போட்ட முதலீடு மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இப்படி செய்வதினால் அவர்களுக்கு கரன்சி ரிஸ்க் கிடையாது. மேலும், இப்போது அமெரிக்காவில் நீண்டகால பாண்டுகளுக்கே அதிக வட்டி கிடைப்பதினால் அந்த முதலீட்டை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டிலே முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால், கடந்த வாரத்தில் கடன் சந்தையில் சில ஆயிரம் கோடி முதலீடு வெளியே சென்று டாலருக்கான தேவையை அதிகப்படுத்தியது.
ஸ்பாட் மார்க்கெட்டில் 58.98 ரூபாய் வரைக்கும் கடந்த வாரத்தில் ரூபாய் சரிந்தது. அதன்பிறகு ரூபாய் உயர ஆரம்பித்து. ரூபாயின் சரிவுக்காக காத்திருந்த ஏற்றுமதியாளர்கள், இந்த நிலையில் வந்தவுடன் டாலரை விற்க ஆரம்பித்தார்கள். தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால், வெளிநாட்டில் பதுக்கி இருக்கும் பணம் இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டது என்றும் கரன்சி சந்தையில் பேச்சு பரவியது. 
 

 
 
// ''இந்தியாவுக்கு இன்னும் நிறைய அந்நிய முதலீடு வரும் என்று அர்விந்த் மாயாராம் சொன்னது, அந்நிய நேரடி முதலீட்டில் வரம்பு தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் சொன்னது போன்ற காரணங்களால், வேகமாக சரிந்த ரூபாய் இப்போது மீண்டுவர ஆரம்பித்திருக்கிறது.//
 
//மேலும், ரேட்டிங் ஏஜென்சி யான ஃபிட்ச் இந்தியாவுக் கான அவுட்லுக்கினை உயர்த்தி யிருக்கிறது. இதனால் நம் நாட்டின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது.//\
 
//
 

மகா பெரியவா சொன்ன கதைகள்!

ண்கூடாக நேரில் பார்க்கும் சில விஷயங்களையே உண்மை என்று எளிதில் நம்பிவிடாமல், ஆயிரம் கேள்விகள் கேட்பதுதான் மனித மனத்தின் இயல்பு. அப்படியிருக்க, புராணங்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்குமா என்ன? அதெப்படி ஒருத்தனுக்கு பத்து தலைகள் இருக்க முடியும்? ஆயிரம் தலை பாம்பு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை! எல்லாம்  கட்டுக்கதை... இப்படி, விமர்சனங்கள் எழுப்புமே தவிர, புராணங்களும் ஞானநூல்களும் சூட்சுமமாக உணர்த்தும் உண்மையை உணர்ந்துகொள்ளாது.

மகாபெரியவாளுக்கும் இப்படி ஓர் அனுபவம் நேர்ந்தது! அதுபற்றி அவரே கூறுகிறார்...

புராணத்தில் காச்யபருக்கு கத்ரு என்ற பத்தினி இருந்தாள்; அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால், உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால், போன வருஷம் (1958) பேப்பரி லேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். 'ஒரு மார்வாடிப் பெண்ணுக்குப் பாம்பு பிறந்தது’ என்று அந்த 'ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்தபோதுதான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது.


நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் சரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் சரி... தாழம்பூ வைத்துக் கொள்ளமாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம், அவர்களிடம் ஏனென்று கேட்டபோது, அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

''பத்துப் பதினைந்து தலைமுறை களுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குப் பாம்பு குழந்தையாகப் பிறந்துவிட்டது. இதை வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கம். ஆனாலும், வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாரையும் ஹிம்சை பண்ணாமல், தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக்கொண்டிருந்ததாம்.

இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக்கொண்டு போக முடியவில்லை, விட்டுவிட்டும் போக முடியவில்லை என்பதால், அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை’தானே? அந்த வாத்ஸல்யம்!

ஆனால், ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது, அவளால் போகாமல் இருக்கமுடியவில்லை. 

அப்போது, வீட்டில் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள் (அவள் அந்தப் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது.
 
இப்போதுதான் தாயார்- தகப்பனாரோடேயே சேர்ந்து இல்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family); அதிலே யாராவது ஒரு அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சின்ன தாத்தா என்று வைத்துக்கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்திலும் ஒரு கிழவி இருந்தாள்). அவளுக்குக் கண் தெரியாது. அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு, அதன் தாயார் வெளியூருக்குப் போனாள்.

பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளாவேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், 'காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து, அதன் குழியிலே விட்டுவைத்துவிடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்துவிடும்’ என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது,
கிழவியும் அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம், ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய்விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்து போய், அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறம்தான், கொதிக்கக் கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை. வழக்கம் போலவே கொதிக்கக் கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டுவிட்டாள். பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டிப் பாம்பு அப்படியே துடிதுடித்துச் செத்துப்போய்விட்டது.

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக் காரிக்கு ஸொப்பனமாச்சு! ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய்விட்டேன். நீ போய் என்னை எடுத்துத் தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு! இனிமேல், உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப்படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிற்று (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்பப் ப்ரீதி!). அதிலிருந்து எங்கள் குடும்பத்துல யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை'' என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று. அப்புறம் போன வருஷம், ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த நியூஸைப் பார்த்த பின், இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்குப் புராண நம்பிக்கை போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புதான். எனக்கே ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல், நியூஸ் பேப்பரில் வந்த நியூசைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை கன்ஃபர்ம் செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி! பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும், பொய் என்று தோன்றவில்லை. ஆனால், புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம்!

எனது இந்தியா! - யவனர்கள் - - எஸ். ரா...

சங்க இலக்கியங்களிலும் தமிழக வரலாற்றிலும் யவனர்கள் என்ற பெயர் இடம்பெற்று இருப்பதை அறிவோம். யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.
 
''ரோமானியர்கள் வருவதற்கு முன்பே கிரேக்கர்களுடன் தமிழகத்துக்குத் தொடர்பு இருந்தது. கிரேக்க அரசன் பிலடெல்பியாஸ் காலத்தில் தமிழகத்துடன் கிரேக்கம் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது'' என்று,  ஜானாஸின் குறிப்பை சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் நடன.காசிநாதன். இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரிக்கமேட்டில் மட்கல ஓடுகள், நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. திரேசில் இருந்து வெளியிடப்பட்ட காசுகள் அமராவதி ஆற்றின் அருகே நடத்திய அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இது, கி.மு. 200-ம் ஆண்டு காலகட்டத்தை சேர்ந்தவை என்கின்றனர். சங்க காலத் தமிழகம் ரோமானியப் பேரரசுடன் வாணிபத் தொடர்புகொண்டிருந்ததை உறுதிசெய்யும் ரோமானியத் தங்க, வெள்ளிக் காசுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியல், மார்கஸ், அரேலியஸ் என்ற ரோமானிய சீசர் மன்னர்களின் காசுகளாகும்.


யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர். இந்த நேரத்தில், பொதுவாகவே வெளிநாட்டினரைக் குறிக்க மிலேச்சர் என்ற சொல் இன்று வரை பயன்படுத்தப்படுவதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ''பட்டினப்பாலை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களைக் குறிக்கவே யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார் முனைவர் தில்லைவனம்.

யவனரை, மிலேச்சர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசரின் மெய்க்காவலர்களாகவும் பணியாளர்​களாகவும் கப்பலில் வேலையாட்களாகவும் இருந்தவர்களை மிலேச்சர் என்று குறிப்பிடுவது வழக்கம். காம்போஜ நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்கள் மிலேச்ச மொழி பேசியதால், அவர்கள் மிலேச்சர் என அழைக்கப்பட்டதாக உ.வே.சாமிநாதய்யரின் முல்லைப்பாட்டு உரை சுட்டிக்காட்டுகிறது. யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்து புராணங்களில் யவனதேசம் தனி நாடாகக் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதத்தில் நடைபெறும் ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் யவன அரசரும் ஒருவர் எனக் குறிப்பிடப்படுவது இதன் தொடர்ச்சியே. பாலி இலக்கியத்திலும் யவனர்களைப் பற்றிய பதிவுகள் உண்டு.


அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில், 'காருண்​யமுள்ள தேவனாம்பிரியராகிய அரச பெரு​மானுடைய ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், யவன அரசனாகிய அண்டியகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இரு வகை மருத்துவ நிலையங்களாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சியில், 'தரும விஜயம் என்னும் அற வெற்றியே மாட்சி மிக்க அசோக மன்னரால் முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய,  தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த அற வெற்றி நாட்டப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு கி.மு. 258-ல் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்திய தேசத்துக்கப்பால் வட மேற்குப் பக்கத்தில் உள்ள தேசமாக அறியப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் உஜ்ஜைனியில் நடந்த அகழ்வாய்வுகளில் யவனப் பெண்கள் அணியும் பல்வேறு அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட மொழி இலக்கணம் வகுத்த பாணினி, யவனன் என்பதன் பெண்பாலாக யவனாணி என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். யவனர்கள் சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. யவனத் தச்சர் என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.

''மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை''
என மணிமேகலை கூறுவது யவனத் தச்சர்களின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.

''கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்’ என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே அதிக அளவில் தமிழகத்துக்கு வந்திருக்கின்றனர்'' என்கிறார் புலவர் செ.இராசு. இவரது ஆய்வுப்படி மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்காக வந்த ரோமானியர்கள் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கிச்சென்றனராம். சோழநாடு மற்றும் பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றவர்கள், கிழக்குக் கரை முத்துக்களையும் வாங்கி​யிருக்கின்றனர். ரோம் நாட்டவரின் ரௌலடெட், அரிட்டைன் ஆகிய உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. யவனர்களுக்கு மிகவும் பிடித்தது மிளகு. அதை 'யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர்கள் கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.

'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியடு பெயரும்
வளம்கெழு முசிறி’ என, அகநானூறு கூறுவதை யவனர்​களைப் பற்றிய சான்றாக சுட்டிக்​காட்டுகிறார் வரலாற்று அறிஞர் இராசு.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன், யவனர்கள் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்​பாடுகள்கொண்டதுமான கிண்ணத்தில் அழகான பெண்கள் தேறல் எனும் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது.  இதிலிருந்து யவனர் விற்பனை செய்த பொருட்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரிய வருகிறது. இதுபோலவே அழகாக வடிவமைக்கப்பட்ட பாவை விளக்குகளை யவனர்கள் தமிழகத்துக்கு அறி​முகம் செய்திருக்கின்றனர். இந்த பாவை விளக்குகள் மன்னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தன என்று நக்கீரர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேற்சட்டை, மத்திகை என்று அழைக்கப்படும் அரைக்கச்சை ஆகியவற்றை யவனர்கள் அணிந்திருந்தனர். வலிமையான உடல்வாகு உடையவர்கள். அவர்களின் தோற்றம் முரட்டுத்தனம் மிக்கது. தென்னிந்தியாவின் பல இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. குறிப்​பாக, மலபார் கடற்கரைப் பகுதிகளிலும் சோழமண்டலக் கரையிலும் வணிகம் செய்யவந்த யவனர்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை உருவாக்கித் தங்கியிருந்த செய்தியை பெரும்பாணாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே, மதுரையின் புறஞ்சேரியில் ரோமானியர் குடியிருப்பு இருந்திருக்கிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. புதுவையின் அரிக்கமேடு, காஞ்சிபுரம், கரூர், கொடுங்கலூர் ஆகிய இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.

பாண்டி நாட்டு மன்​னர்கள் தங்களது படைப் பிரிவில் யவனர்களையும் சேர்த்திருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்​மனையை யவன வீரர்கள் காவல் காத்துவந்ததை
'கடிமதில் வாயில் காவலிற் சிறந்து
அடல்வாள் யவ​னர்க்கு அயிராது புக்கு’ 
 என, சிலப்ப​திகாரம் சுட்டிக்​காட்டு​கிறது.
அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. புலிப் படைநடத்திவர யவனர்கள் உதவி செய்திருக்​கின்றனர். படை​யெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்​திருக்கின்றன. எதிரிகளின் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை வீசவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனர் என்ற குறிப்புகள் வரலாற்றில் இருக்கின்றன.
 

எனது இந்தியா!

அதுவரை ஏகபோகமாக விவசாய உரிமைகளை அனுபவித்து வந்த உயர்குடி நிலப்பிரபுக்கள், புலேயின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தனர். தங்களின் ஆச்சாரங்களைக் கெடுப்பதற்கு முயற்சிக்கிறார் என உயர்குடி பிரா மணர்கள் கூக்குரலிட்டனர். பிறப்பால் உயர்குடியாக பிறந்தவன் மட்டுமே உயர்வானவன், அவனது நிலையை ஒருபோதும் சூத்திரர்கள் அடைய முடியாது என்று பகிரங்க அறைகூவல் விட்டனர். தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தும் உதைத்தும் பொய் வழக்குகளில் சிக்கவைத்தும் புலேயின் போராட்டங்களை ஒடுக்க முயன்றனர். ஆனால், புலே இந்த அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் போராட்டங்களைத் தொடர்ந்தார்.



கேசவராவ் பவால்கர், ஜகத்நாத் சதாவி, அண்ணா சகஸ்ரபுதே, பாபுராவ்ஜி மண்டே, விஷ்ணு மோரேஷ்சவர் பீடே, கிருஷ்ணா சாஸ்திரி சிப்லுங்கர், விஷ்ணு சாஸ்திரி பண்டிட் ஆகியோர் இந்தப் பள்ளியின் செயற்குழு உறுப்பினார்களாக இருந்தனர். இவர்களில் சிலர் பிராமணர்கள். அவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்​தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி தருவதன் முக்கியத்து​வத்தை உணர்ந்தனர். சமூக மாற்றங்களுக்கு குரல் கொடுக்க முன்வந்தனர். அவர்களையும் வைதீக பிராமணர்கள் விட்டுவைக்கவில்லை. பள்ளியின் ஆசிரியராக செயல்பட்டு வந்த விஷ்ணுபந்த் தட்டே என்ற பிராமணரைத் தடுத்து, அவரை சாதிவிலக்கம் செய்துவிடுவதாக மிரட்டினர். உனது பெண் பிள்ளைகளை நாங்கள் ஒருவரும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று அச்சுறுத்தினர். தொடர்ந்த மிரட்டலைக் கண்டு அவர் பயந்து,  ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார்.

பள்ளிக்கூடம் வளர்ந்து வரும் சூழலில் அதற்கு ஆசிரியர் இல்லாமல் போய்விட்டதால் இனி என்ன செய்வது என்ற நெருக்கடி நிலை. தாழ்த்தப்பட்டவர்கள் படித்து ஆசிரியப் பணிக்கு வர வேண்டும், அதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு என்று திட்டமிட்ட புலே, வேறு ஆசிரியர் கிடைக்கும் வரை தனது மனைவி சாவித்திரி பாயை ஆசிரியராக்கி விட்டார். தாழ்த்தப்பட்ட ஒரு  பெண் ஆசிரியராகப் பணி​யாற்றுகிறாள். இதனால், கல்வியின் புனிதம் கெட்டுவிட்டது. இது, எங்கே போய் முடியப்போகிறது எனத்தெரியவில்லை என்று பள்ளியின் முன்னால் வைதீகவாதிகள் திரண்டு கூச்சலிட்டனர். சாவித்திரியை வழிமறித்து ஆபாசமாகப் பேசி சாபமிட்டனர். அவர்மீது காறித் துப்பினர். சகதியை அள்ளி வீசினர். இதற்காக பல நாட்கள் பள்ளியின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவைத்துவிட்டுத்தான் பாடம் நடத்தப்பட்டது. ஒரு ரௌடிக் கும்பல் கல்லால் தாக்கி, சாவித்திரி பாயால் புனே நகரின் புனிதம் கெட்டுவிட்டது, அவள் ஒரு வேசி என்று அவமானப்படுத்தினர். அதற்குப் பிறகு ரஸ்தா பேட், புத்வார் பேட், வித்தல் பேட் ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஒரு பக்கம் பிராமணர்கள் ஜோதிராவ் புலேயைக் கடுமையாக எதிர்த்தபோது, மறுபக்கம் அவருக்கு ஆதரவு அளித்து துணை நின்றவர்களும் பிராமணர்களே. பெண் கல்வியைப் போலவே விதவைத் திரு மணத்தையும் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நலனையும், முக்கியமான சமூகப் போராட்டமாகக் கருதினார் புலே. விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்காக காப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அங்கே, சாதி வேறுபாடுகள் எதுவுமின்றி குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் எவரும் புலேயின் காப்பகத்தில் வந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். சாதி, மதம் பற்றி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அந்தக் குழந்தைகளை காப்பகமே வளர்க்கும் என்ற சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. அப்படி, காப்பகத்தில் சேர்க்கப்பட்ட காஷி என்ற பிராமணப் பெண்ணின் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார் புலே.

பல இடங்களிலும் தீண்டத்தகாதவர்கள் குடிதண்ணீர் கிணற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, 1868-ல் தனது வீட்டுக் கிணற்றில் இருந்து யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதுபோலவே, சமபந்தி விருந்து உண்ணும் வழக்கத்தையும் தொடங்கி வைத்தார். குழந்தைத் திருமணத்தை எதிர்த்த புலே, புரோகிதர்களால் நடத்தப்படும் திருமணச் சடங்குமுறைகள் பெரிதும் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். கடவுளின் பெயரால் நடந்த மோசடிகளை எதிர்த்து கடவுளுக்கும் வணங்குபவனுக்கும் இடையில் புரோகிதர்கள் இடைநிலை ஏஜென்ட் போல செயல்பட்டு ஏமாற்றுகிறார்கள் என்று கண்டித்தார். பிறப்பால் மனிதர்களிடம் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. சமூகப் பிரிவினைகள் யாவும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவை. ஆகவே, அவற்றை  ஆராய்ந்து தேவையற்ற விஷயங்களைக் கைவிட வேண்டும் என்றார். பிரிட்டிஷ் ஆட்சி, பேஷ்வாக்களைப் போல கடுமையான சாதி விரோதப்போக்குகளை கடைப்பிடிக்கவில்லை. ஆகவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நாம் எதிர்க்க வேண்டியதில்லை என்பது பூலேயின் நிலைப்பாடு. 1876-ம் ஆண்டு புனே முனிசிபாலிட்டி உறுப்பினராக ஜோதிராவ் புலே தேர்வு செய்யப்பட்டார். 1877-ல் ஏற்பட்ட பஞ்சத்தின்போது, கிராமம் கிராமமாகச் சென்று உதவிகள் செய்தார். விக்டோரியா காப்பகம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆதரவற்றோருக்கு உணவு அளித்தார். தீனபந்து என்ற இதழில் ஜோதிராவ் புலே தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகள் சமூக நீதிக்காக அவர் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி.

 ஜோதிராவ் புலேயின் நண்பரான லோகாண்டே, இந்தியத் தொழிற்சங்கப் பணிகளில் முன்னோடியாக இருந்தார். இவர், பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவரது போராட்டங்களுக்குத் துணை நின்ற புலே, தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கம் அமைத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த நாட்களில் பெரிதாக வளர்ந்துவந்த ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகிய இரண்டைப் பற்றி கடுமையான விமர்​சனம் செய்தார் புலே. அவை, மதச் சீர்திருத்த இயக்கம்போல தோற்றம்​கொண்டிருந்தாலும் பிராமணர்​களின் செல்வாக்கில் உருவான அமைப்புகள். படித்த பிராமணர்களின் ஆசைக்காக உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகளால் சமூக அவலங்களைப் போக்க முடியாது என்று கூறினார். 1880-ம் ஆண்டு புனே முனிசிபாலிட்டி, அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த லிட்டன் பிரபுவை ஆடம்பரமாக வரவேற்க 1,000 ரூபாய் செலவிடத் திட்டமிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்த மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வது தவறு. இந்தப் பணத்தைக்கொண்டு மக்களின் அடிப்படைக் கல்விக்கு உதவி செய்யலாம். லிட்டனுக்கு ஆடம்பர வரவேற்பு கொடுப்பதை தான் எதிர்ப்பதாக பூலே கூறினார்.

அதுபோலவே, விக்டோரியா மகாராணியின் பேரனான கன்னாட் பிரபுவுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு விவசாயிபோல உடை அணிந்து சென்ற புலே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், அவர் சரளமாக ஆங்கிலம் பேசியவுடன் அனுமதிக்கப்பட்டார். அந்த நிகழ்ச் சியில் புலே பேசும்போது, விக்டோரியா மகாராணியின் பேரன் உண்மையான இந்தியக் கிராமங்களையும், மக்களையும் காண விரும்பினால், அருகில் உள்ள சேரிக்கு சென்று அங்கு வசிக்கும் தீண்டத்தகாத மக்களைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்கள் பகட்டானவை. இங்கே வருபவர்கள் உயர்தட்டு மக்கள். இவர்களை வைத்து உண்மையான இந்தியாவை எடைபோட முடியாது. ஆகவே, அவர் உண்மையான இந்தியாவைக் காண சேரிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த உரை பலத்த வரவேற்பைப் பெற்றது.

சமூகப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னின்று நடத்தி வந்த புலேயின் வீட்டை ஒரு கும்பல் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. அவர்களிடம் புலே அமைதியான குரலில், ''என்னைக் கொல்வதால் உங்களுக்குப் பணம் கிடைக்கும் என்றால், நான் சாகத் தயார். இப்போதுகூட உங்களைப்போல அடித்தட்டு மக்களைக்கொண்டே உயர்குடியினர் வன்முறையில் ஈடுப டுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். எனது இனத்தைச் சேர்ந்த உங்கள் கையால் சாவது எனக்குப் பெருமையே, நீங்கள் என்னைக் கொல்லுங்கள்'' என்றார். அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். நாம்தேவ் கும்பார், ரோடே என்ற இரண்டு முரடர்கள் அதன் பிறகு புலே நடத்திய இரவுப் பள்ளியில் சேர்ந்தனர். கும்பார் பின்னாளில் புலேயின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியதோடு, வேதச்சார் என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். 1890-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி பூலே மரணமடைந்தார். தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட புலேயின் பணியே அம்பேத்கருக்கு முன்னோடிச் செயல்பாடாக இருந்தது.

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் ஆகியவை தானாகக் கிடைத்தவை அல்ல. சமூக நீதிக்காகப் போராடியவர்களின் அர்ப்பணிப்பே இதற்கான ஆதாரம். அவர்களைப் பற்றி நம்மில் பலர் ஒரு நிமிடம்கூட எண்ணிப் பார்ப்பது இல்லை. இதைவிட, காலங்காலமாக ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமைகளை, நீதியை இன்று சுயலாபங்களுக்காக தூக்கி எறிகிறோம். எவர் செய்தாலும் சாதியின் பெயரால் நடைபெறும் வன்முறை, மன்னிக்க முடியாத குற்றமே.



எனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா !) - எஸ். ரா...

இந்திய சமூகத்தின் தீராத பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது சாதி. அதன் அடிப்படையாக இருக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு மற்றும் அதன் வழியாக உருவான தீண்டாமை ஆகியவற்றை, கல்வியும் பொருளாதார மேம்பாடும் ஒழித்துவிட்டன என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதித் துவேசமும் பகைமையும் மக்கள் மனதில் ஆழமாகப் புரையோடிக்கிடக்கிறது. குறிப்பாக இன்று, கிராமங்களைவிட நகரங்களில் சாதி தீவிரமாக எழுச்சிகொண்டு வருகிறது. சாதியத் துவேசமும் வன்முறையும் தொடர்ந்து அரசியல் லாபங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என்பது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான எதிர்ப்பு இயக்கங்கள். புத்தர் தொடங்கி ஜோதிராவ் புலே, அயோத்தி தாசர், அம்பேத்கர், பெரியார் என சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களின் அரும்பணி நாம் பின்பற்றவும் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டிய முக்கியமான சமூக நீதி.

மகாத்மா என்றாலே நமக்கு காந்திதான் நினைவுக்கு வருவார். ஆனால், காந்திக்கு அந்தப் பட்டம் கிடைப்பதற்கு முன், 1888-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜோதிராவ் புலேயின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மக்கள் அவருக்கு 'மகாத்மா’ என்ற பட்டம் சூட்டினர். அதன் பிறகு, அவரை மகாத்மா புலே என்றே மக்கள் அழைத்தனர்.


தீண்டாமையின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டியம். அங்கே ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள், சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். அம்பேத்கர் தோன்றிய அதே மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த மகாத்மா ஜோதிராவ் , 20-ம் நூற்றாண்டின் சமூகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். ஜோதிராவ் புலே, 1827-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்ற கிராமத்தில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவிந்த ராவ், காய்கறி விற்பனைசெய்தார். புலே என்பதன் பொருள், பூ விற்பவர் என்பதாகும். புலேயின் குடும்பம், மராட்டிய பேஷ்வாக்களுக்கு வாடிக்கையாக பூ விற்பனை செய்யும் குடும்பம். ஆகவே, அந்தப் பெயராலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

புலே பிறந்து ஒன்பதாவது மாதத்தில் அவரது அம்மா இறந்துபோனார். திண்ணைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அதிகம் படித்தால் மூளை கெட்டுப்போய்விடும், பிறகு தோட்ட வேலைகள் செய்யக்கூட பயன்பட மாட்டான் என்று புலேயின் அப்பாவிடம் அவரது நண்பர்கள் சொன்ன காரணத்தால், ஜோதிராவின் பள்ளிப் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது. அப்பாவுக்கு உதவியாக காய்கறிக் கடையில் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், ஜோதிராவ் புலேயின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த மிஸ்டர் லெஜிட் மற்றும் பூலேயின் தோட்டத்துக்குப் பக்கத்தில் குடியிருந்த கஃபார் பய்க் முன்ஷி என்ற இஸ்லாமிய ஆசிரியர் ஆகிய இருவரும் கோவிந்த ராவைச் சந்தித்து, 'உங்கள் மகன் கட்டாயம் மேற்கொண்டு படிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஜோதிராவ் புலேவைச் சேர்க்க உதவி செய்தனர். தொடர்ந்து படித்த புலேவுக்கு சமூக விழிப்புஉணர்வு ஏற்பட்டது.


இதற்கிடையே, தனது நண்பரான பிராமணர் ஒருவரின் திருமண ஊர்வலம் ஒன்றில் புலே கலந்துகொண்டார். சாலையில் தங்களுக்கு சமமாக ஒரு தீண்டத்தகாதவன் நடந்து வருகிறானே என்று கோபம் அடைந்த பிராமணர்கள், 'எங்களுக்குச் சமமாக நடந்து வர உனக்கு என்ன துணிச்சல்? சாதிக்கட்டுப்பாடுகளை மறந்துவிட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ்காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக்கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று அவமானப்படுத்தி, ஊர்வலத்தில் இருந்து துரத்தினர். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜோதிராவ், தனது நண்பர்களிடம் இதைச் சொல்லிக் குமுறினார். அவர்களோ, 'நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள், அவர்களுக்குச் சமமாக நாம் எப்படி நடந்துகொள்ள முடியும்?’ என்று கூறினர். அதில் ஒருவன், 'உனது நல்ல காலம் உன்னை அடித்து உதைக்காமல் விட்டுவிட்டனர்’ என்றான். இன்னொருவன், 'பேஷ்வா ஆட்சிக் காலத்தில் இது நடந்திருந்தால் உன்னை கலகக்காரன் என்று சொல்லி கடும் தண்டனை கொடுத்திருப்பார்கள், நல்லவேளை பிரிட்டிஷ் ஆட்சி நடக்கிறது நீ தப்பித்தாய்’ என்றான். இப்படி நடுரோட்டில் அவமானப்படுவதற்கு சாதிதான் காரணம் என்றால், இந்த கொடுமைகளை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறோம்? இந்த மாதிரியான அநீதியை என்னால் பொறுத்துக்கொண்டு போக முடியாது, இதை எதிர்க்கவில்லை என்றால், நாம் நடைபிணங்கள்தான் என்று மனம் குமுறினார்.

இந்தச் சம்பவம் அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. சாதியப் பிரிவினை குறித்தும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நிறையப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். கபீர், துக்காராம், தியானேஷ்வர் போன்ற ஞானிகளின் கவிதைகளை வாசித்தார். மார்ட்டின் லூதரைப் படித்தார். புத்தர், பசவண்ணா பற்றி ஆழ்ந்து வாசித்தார். சாதிப் பிரிவுகளை யார் உருவாக்கியது? அது எப்படி வளர்ந்தது? என்று ஆய்வுசெய்தார். சாதியப் பிரிவினையை உருவாக்கியது மனிதனின் சுயநலம். அது சாதாரண மக்களின் வாழ்க்கையை நூற்றாண்டு காலமாகப் பாழாக்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறை மராட்டிய பேஷ்வாக்களின் காலத்தில் அதிகரித்தது. கல்வியால் மட்டுமே இந்தக் கொடுமையில் இருந்து விடுபட முடியும் என்று ஜோதிராவ்  உறுதியாக நம்பினார்.

இந்தச் சூழ்நிலையில் அவருக்கு தாமஸ் பெய்ன் எழுதிய 'ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்ற புத்தகம் கிடைத்தது. மனிதனின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசும் மிக முக்கியமான புத்தகம் இது.

தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவர் பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து பேசியும் எழுதியும் வந்தவர். அமெரிக்க விடுதலைக்கு இவரே முன்னோடி என்கிறார்கள். பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்றார் பெய்ன். பிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 1791-ல் அவர் எழுதியதே 'மனிதனின் உரிமைகள்’ என்ற புத்தகம். இதில் மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பகுத்தறிவின் வலிமையைப் பற்றியும் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் ஜோதிராவ் புலேயின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சமூகம் சாதியின் பெயரால் தொடர்ந்து மனிதனைப் பல்வேறு விதங்களில் அவமானப்படுத்துகிறது. இந்த அநியாயங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது முக்கிய வேலை என்று முடிவுசெய்தா£ர். இதுவே அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும். அவர்கள் புரோகிதர்களைக்கொண்டு சடங்குகள் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். பிறப்பைக் காரணமாகக் காட்டி ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையான சமூக மாறுதலை அடைய முடியும் எனப் பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்து போராடத் தொடங்கினார்.

புனே, பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நகரம். அது பழமையான கருத்துக்களாலும் சடங்கு சம்பிரதாயங்களாலும் நிரம்பியது. அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடிநீர் தரக் கூடாது, கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது, பொது விருந்துகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது, கல்வி நிலையங்களில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், காலில் செருப்பு அணியக் கூடாது என பல்வேறு அவமதிப்புகள் நடைமுறையில் இருந்தன.

1873-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதியன்று 'சத்ய சோதக் சமாஜ்’ என்ற சங்கத்தை, புலே தொடங்கினார். இதன் பொருள் 'உண்மை தேடுவோர் சங்கம்’ என்பது. அனைவருக்கும் கல்வி, விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகிதர் இல்லாமல் திருமணங்களை நடத்துதல், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமநிலையை ஏற்படுத்துவது, உழவுத் தொழிலில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்பது ஆகியவையே இந்த சங்கத்தின் நோக்கம். இவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது.


Saturday, June 08, 2013

நாராயணமூர்த்தி ரிட்டர்ன்ஸ்!

 
இந்திய சாஃப்ட்வேர் துறையில் ஒரு சின்ன பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி (வயது 67). 2011 ஆகஸ்டில் தம் தளபதிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற நாராயணமூர்த்தி மீண்டும் இன்ஃபோசிஸுக்குத் திரும்பி இருக்கிறார். ‘மீண்டும் வருவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 5 சதவிகித ஷேர்கள்தான் என்னிடம் இருக்கின்றன. ஆனால், மனோரீதியாக நான் 100 சதவிகிதம் இன்ஃபோசிஸ் உடன் இணைந்திருக்கிறேன்’ என்று கூறும் நாராயணமூர்த்தி இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எக்சிகியூடிவ் சேர்மன். கூடவே, நாராயணமூர்த்திக்கு உறுதுணையாக இருக்க அவரது 30 வயது மகன் ரோஹன் மூர்த்தியும் வந்திருக்கிறார். இருவருமே வருடத்துக்கு ஒரே ஒரு ரூபாய் சம்பளம் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்
 
திடீரென்று நாராயணமூர்த்தியை இன்ஃபோசிஸ் நிறுவனம் வற்புறுத்தி வரவழைத்து இருப்பதன் பின் னணி என்ன? இதுதான் தற்போது இந்திய ஐ.டி. துறையின் வாய்க்குக் கிடைத்திருக்கும் அவல். கொஞ்ச நாட்களாகவே இதுபோல ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்தப்பட்டு, சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் போட்டி ஐ.டி. நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி, காக்னிசன்ட் போன்றவை அபார வளர்ச்சி கண்டன. இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நாராயணமூர்த்தி போன்ற அகில உலக அளவில் பிரம்மாண்டமான இமேஜ் கொண்ட ஒருவர் வந்தால், கம்பெனியின் பிசினஸ் வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  2008-09ல், இன்ஃபோசிஸைவிட இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் குறைவாக இருந்த காக்னிசன்ட் இப்போது இன்ஃபோசிஸை முந்திவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இன்ஃபோசிஸைவிட ஒன்றரை பில்லியன் டாலர் வருமானம் அதிகமாக இருந்த டி.சி.எஸ். இப்போது நாலு பில்லியன் அளவுக்கு அதிகரித்து விட்டது. இன்ஃபோசிஸின் பிசினஸ் வளர்ச்சிக்கு தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான சிபுலால் உருவாக்கிய செயல்திட்டம் போதிய பலனளிக்கவில்லையாம். நாராயணமூர்த்தியின் மறுவரவு மகிழ்ச்சியையும் விமர்சனங்களையும் ஒருங்கே கொண்டு வந்திருக்கிறது. பங்குச் சந்தையின் இன்ஃபோசிஸ் ஷேர்கள் ஒன்பது சதவிகிதம் உயர்ந்து, நாராயணமூர்த்திக்கு வரவேற்பு கூறின. அவர் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் மட்டுமல்ல, இன்ஃபோசிஸ் பணியாளர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.1.5 லட்சம் பணியாளர்களைக் கொண்ட இன்ஃபோசிஸில் சென்ற ஆண்டு சம்பள உயர்வே வழங்கப்படவில்லையாம். இன்றைய சூழலில் யாரும் ஐ.டி. வேலைகளை விட்டு வெளிவரவே மாட்டார்கள். காரணம் பொருளாதாரத் தேக்கம். ஆனால் இன்ஃபோசிஸில் மட்டும் 16.3 சதவிகிதம் பணியாளர் விலகல். காரணம், வளர்ச்சியின்மை. இதையெல்லாம் நாராயணமூர்த்தி நிச்சயம் சரி செய்துவிடுவார் என்று இன்ஃபோசிஸ் பணியாளர்கள் நம்புகிறார்கள்.
 
நமக்கு இப்போது வேண்டியது ரிசல்ட்! அதற்கு ஆக வேண்டியதைச் செய்வோம்’ என்று சொல்லி இருக்கிறார் நாராயணமூர்த்தி.

ஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்! ஞாநி

கவலை 1: மாத்தூருக்கு மாற்றூர்?


விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது; கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று எல்லாருக்கும் பொதுவாகத் தெரிந்திருக்கிறது. எவ்வளவு அழிவு என்பதை அரசாங்கப் புள்ளிவிவரங்கள் அரசே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களின் படி தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் எட்டு லட்சம் சிறு விவசாயிகள் விவசாயத்தை விட்டுப் போய்விட்டார்கள். அதே சமயம் சுமார் எட்டு லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

விவசாயம் செய்ய கூலியாட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது என்றுதானே பெரும்பாலான நில உரிமையாளர்கள் அங்கலாக்கிறார்கள்? அப்படியானால் எப்படி விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியது உண்மை. ஆனால் அவர்கள் எல்லாரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக மாறிவிட்டதாகச் சொல்வதற்கு இல்லை. கணக்கெடுப்பின் போது தங்கள் தொழில் விவசாயக் கூலி வேலை என்று சொல்லக்கூடிய பலர் நடைமுறையில் விவசாயம் அல்லாத வேலைகளைத் தேடி சிறு நகரங்களுக் கும் பெருநகரங்களுக்கும் புலம்பெயர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களில் இளம் வயதினர் ஊரில் இல்லை. முதியோரே உள்ளனர்.  புள்ளிவிவரங்களின்படி சுமார் 300 கிராமங்கள் காணாமல் போய்விட்டன. அதாவது அவை கிராமமாக இல்லாமல், அருகே உள்ள நகரத்துடன் கலந்து கரைந்து விட்டன. ஒரு கிராமம் எப்படி செத்துப் போகிறது என்பதை நேரில் போய்ப் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் அருளாளன் இங்கே வந்தபோது அவருடன் அவருடைய கிராமத்துக்குச் சென்றேன். சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமம் அது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆந்திர தெனாலி அருகில் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்திய கிராமம் இது என்று சொல்லப்படுகிறது. பெயர் மாத்தூர். மாற்று ஊர் இப்படித் திரிந்திருக்கலாம்.மாத்தூர் தமிழக அரசியலோடும் இலக்கிய வரலாற்றோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய கிராமம். அருளாளனின் தந்தையார் மாத்தூர் கி.தசரதன், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பர்களில் ஒருவர். பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர். டாக்டர் மு.வரதராசனின் மாணவர். ஆரம்ப காலங்களில் தசரதனின் காரில் அவர் ஓட்ட, அண்ணா பயணம் செய்வது வழக்கம். அண்ணா நடத்திய இதழ்களில் எல்லாம் தசரதன் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கோடை விடுமுறை சமயங்களில் டாக்டர் மு.வ., தசரதனின் மாத்தூர் வீட்டுக்கு வந்து மாடியறையில் தங்கி நூல்கள் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.அந்த வீட்டையும் ஊரையும் போய்ப் பார்த்தேன். ஊருக்குப் போகிற வழிநெடுக இரு பக்கமும் வயல்களோ பச்சைப் பசேலென்ற தோற்றமோ இல்லை. விவசாயம் இங்கே கைவிடப்பட்டுவிட்டது என்பது முதல் பார்வையிலேயே தெரிந்து விடும்.வல்லக்கோட்டை- ஒரகடத்துக்கு அருகில் இருக்கும் மாத்தூரில் நான் கண்ட ஒரே வளர்ச்சிப் பணி ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் தண்ணீர்க் குழாய் போடப்பட்டிருப்பது மட்டும்தான். ரியல் எஸ்டேட் முதலாளிகள் தயவில் உள்ளூர் கோவில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி ஊரில் பல பகுதிகள் பிளாஸ்டிக் குப்பை மேடுகளாகவே இருந்தன. மாத்தூருக்குப் பொருத்தமே இல்லாத விதத்தில் அதன் மயானத்தை ஒட்டி (என்ன பொருத்தம்!)ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் எழும்பி இருந்தது.மாத்தூரில் விவசாயம் அடிபட்டதற்கு முக்கியமான காரணம் ஏரிகள் பறிபோனதுதான். ஏரிகளும் ஏரிகளுக்கு நீர்வரத்து வரும் நீர் பிடிப்புப் பகுதிகளும் அரசாங்கத்தால் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன.அருகில் இருக்கும் ஒரகடம் தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான வடஇந்தியத் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இப்போது மாத்தூர் போன்ற கிராமங்களில் விவசாயம் இல்லாமல் பழைய சொந்த வீடு மட்டும் வைத்துக்கொண்டு குடியிருப்போருக்கு வருவாய்க்கான ஒரு வழி, இந்தத் தொழிலாளர்களுக்கு வாடகை அறை தருவதுதான். நான் பார்த்த ஒரே ஒரு தெருவில் மட்டும் 200 வடஇந்தியத் தொழிலாளர்கள் குடியிருப்பதாகச் சொன்னார்கள். மாத்தூரில் தரிசாகக் கிடக்கும் விளைநிலங்கள் மேலும் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஆவதற்காகக் காத்திருக்கின்றன. ஏக்கர் விலை இப்போது சுமார் ஒரு கோடி ரூபாய். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்கள் மாத்தூரைப் போல படுவேகமாக அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அடுத்த நிலை நகரங்களையொட்டி உள்ள கிராமங்களின் அழிவு வேகம் மட்டும் குறைவே தவிர, அதே திசையில்தான் எல்லாம் நடக்கின்றன.பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதே பவணந்தியின் நன்னூல் வாக்கு. ஆனால் பழையதில் எதைக் கழிப்பது, புதியதில் எதைக் கொள்வது என்ற தெளிவு மக்களுக்கும் அரசுக்கும் தேவைப்படுகிறது. மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி கிராமங்கள் அழிந்து நகர்மயமாதல் பற்றியும் விவசாயம் குறைந்து தொழில்மயம் அதிகரிப்பது பற்றியும் என்ன கொள்கைகள், நடைமுறைகள், மாற்றுத் தீர்வுகள் வகுத்து வைத் திருக்கின்றன என்பதே தெரியவில்லை. திட்டமிடுதலும் ஒழுங்குபடுத்தலும் இல்லாமல், எல்லாம் வல்லான் வகுத்ததே வாக்கால் என்பதாக நடந்து கொண்டிருக்கின்றன. பஞ்சாயத்து முதல் ஐ.பி.எல். வரை பணம் மட்டுமே எதையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.மாத்தூர் தெரு வழியே சென்ற தசரதனின் காரில் உட்கார்ந்திருந்த அண்ணாவும், மாடியறையில் எழுதிக் கொண்டிருந்த மு.வ.வும் எதிர்காலம் பற்றிக் கண்ட கனவுகள் என்னவாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்போது அருளும் நானும் கண்ட காட்சிகளாக இருந்திருக்க முடியாது. கனவுகளை எங்கே தொலைத்தோம்? எப்படித் தொலைத்தோம்? நம் காலக் கனவுகள் என்ன? எங்கே?

கவலை 2: செக்சும் டீச்சர்களும்


ஜெயலலிதா அரசு ஓர் அர்த்தமற்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள், குற்றங்களைத் தடுப்பதற்காக, இனி பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளும், ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட் டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருக்கிறது.  ஒருபால் உறவு ஏற்பட்டு விட்டால், ஜெயலலிதா அரசு அடுத்து என்ன செய்யும்? எல்லா ஆசிரியர் பதவிகளையும் திருநங்கைகளுக்கு மட்டும் என்று ஒதுக்கிவிடுமா? ஜெயலலிதா அரசின் உத்தரவு அபத்தமானது; ஆபத்தானது; ஆசிரியர்களை ஒட்டுமொத்தமாக அவமதிப்பது. லட்சக்கணக்கான ஆசிரியர்களில் மொத்தமாக ஒரு நூறு ஆசிரியர்கள் தவறான நடத்தை உடையவர்கள் என்றால், அவர்களைக் களை எடுக்க வேண்டுமே தவிர, எல்லா ஆசிரியர்களையும் சந்தேகத்தோடு அணுகும் உத்தரவு கேவலமானது.இந்த உத்தரவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கோ-எஜுகேஷன் பள்ளிகளை எல்லாம் அரசு மூடிவிட முடிவு செய்யும் ஆபத்தும் இருக்கிறது. பெண்கள் கல்வி கற்க வெளியிலேயே செல்லக் கூடாதென்று பிரசாரம் செய்யும் சில அசட்டு மடாதிபதிகள், மௌல்விகளின் தரத்தில் அரசும் இருக்கக்கூடாது. அலுவலகங் களில் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பணிபுரிவதால் சிக்கல் என்று அடுத்தகட்டமாக எல்லா அலுவலகங்களிலும் பிரிவினைக் கொள்கையை அரசு பின்பற்றுமா?சிறு வயது முதல் ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மதித்து வாழக் கற்றுக் கொடுப்பதே தேவை. அதைப் பள்ளியில்தான் தொடங்க முடியும். அதற்குத் தடையாக இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை நீக்க வேண்டுமே தவிர, குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் தூக்கி எறியும் அபத்தத்தைச் செய்யலாகாது. பெண்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தால், டாஸ்மாக்கை மூடுவது நல்லது.

அருள்வாக்கு பிரம்மம்!


பிரம்மம் என்கிற ஒரு பரம்பொருள்தான் ஜீவன், ஜகத் இரண்டுக்கும் காரணம். அந்தக் காரணமும் அதன் விளைவான ஜீவ-ஜகத்துக்களும் வேறு வேறு இல்லை. ஏனென்றால் பிரம்மத்துக்கு வேறாக எதுவுமே இருக்க முடியாது. இப்போது ஜகத்தையே நிஜம் என்று நினைக்கிற ஜீவாத்மா, அதை ஒதுக்கிவிட்டு, தன்னையே யார் என்று விசாரம் பண்ணிப் பார்த்துக் கொண்டால், ‘உடம்பு நானில்லை, இந்திரியங்கள் நானில்லை, மனஸ் நானில்லை, புத்தி நானில்லை, பிராணன் நானில்லை’ என்று ஒவ்வொன்றும் கழன்று போய் கடைசியில் ‘தான் பிரம்மமே’ என்று அறிந்து கொள்வான். ‘பரமாத்மா என்று ஒன்று ஜீவாத்மாவைப் படைத்தது என்று சொல்வதுகூட ஒரு மாயைதான். ஜகத்தெல்லாம் அந்த மாயையின் விளையாட்டுதான். வாஸ்தவத்தில் பரமாத்மா ஜீவாத்மா என்ற பேதமில்லாமல் ஆத்மா என்ற ஒன்றுதான் இருக்கிறது. அந்த ஒன்றே ஸத்தியம்’ என்று தெரிந்து கொள்வான். அப்படி ஸத்தியத்தோடு இரண்டற (அ-த்வைதமாக) இருக்கிற போதுதான் சுக -துக்க ஊச லாட்டம் போய் ஒரே சாச்வத இன்பமாக, சாந்தியாக ஆகிறது. அதுதான் மோக்ஷம்.

இருப்பது ஒன்றுதான். பார்ப்பது பலவாக இருந்தாலும் உள்ளது ஒன்றே என்று அநுபவத்தில் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால் சாச்வத சாந்தியை, சதானந்தத்தைப் பெற வேண்டும். இதுதான் உபநிஷத்துக்களின் லக்ஷ்யம்.

இப்படி நான், அத்வைதந்தான் வேதாந்தத்தின் முடிவான சித்தாந்தம் என்று சொன்னால், மற்ற த்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்திகள் ஆகே்ஷபம் பண்ணக் கூடும். அந்த சித்தாந்தங்களின் பெரியவர்களும் இதே உபநிஷத்துக்களுக்குத்தான் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். தங்கள் தங்கள் கொள்கையே ஔபநிஷதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால் அத்வைதந்தான் உபநிஷத்துக்களின் உபதேசம் என்றால் எப்படி ஏற்பது?

அத்வைதம் என்பது த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் தழுவி முதல் படிகளில் ஒப்புக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த ஆகே்ஷபணை வராது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

எங்கே செல்கிறது இந்திய கிரிக்கெட்?


இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபுணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித்துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப்பிடியாக இருந்த சீனிவாசன், இப்போது சிலகாலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற்குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார்ஙண் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப்பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்?ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த குருநாத் மெயப்பன் கைது செய்யப்பட்ட பிறகு எல்லா பாரங்களும் சீனிவாசன்மீது விழுந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்ச க்தாலேவும், பொருளாளர் அஜஷிர்கேவும், ஐ.பி.எல். சேர்மனாக இருந்த ராஜிவ் சுக்லாவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து சீனிவாசன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கோடிட்டுக் காண்பித்தார்கள். 

ஆனாலும் சீனிவாசன் தன் நாற்காலியை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருப்பது, பி.சி.சி.ஐ.யில் நிலவும் போட்டி அரசியல்களை அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. உறுப்பினர்கள் உயர் பதவிகளில் இருப்பதால் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நடப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.  வசதி படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் பி.சி.சி.ஐ.-யின் முக்கியமான பதவிகளில் அமர்ந்துகொண்டு பதவி சுகத்தை அனுபவிக்கும் சூழலில் நியாயத்துக்கும் மனசாட்சிக்கும் இடமில்லாமல் போய்விட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்காமல் இருந்திருந்தால், குருநாத் மெய்யப்பனை அணியின் உரிமையாளராக்காமல் இருந்திருந்தால் இன்று அவர் தம் பதவியை ஜாம்ஜாம் என்று அனுபவித்துக் கொண்டு இருக்கலாம். பி.சி.சி.ஐ., சி.எஸ்.கே. என்கிற இரட்டைக் குதிரைச் சவாரி, தனக்குப் பின்னால் மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்று அவர் எப்படி அறியாமல் இருந்தார்? இறுதியில், சீனிவாசனின் நிர்வாக நேர்மையின்மீது எல்லோருக்கும் நம்பிக்கை போய்விட்டது.சூதாட்டப் புகார் குறித்து தோனி நிறைய பேச வேண்டும் என்று மீடியா எதிர்பார்க்கிறது. காரணம், சீனிவாசன் பாணியிலான புகார்கள் இப்போது தோனிமீதும். தோனியின் விளம்பரங்களைக் கவனிக்கும் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தோனிக்கும் சில பங்குகள் உள்ளனவாம். தோனியின் நண்பர் அருண் பாண்டே, ரித்தி ஸ்போர்ட்ஸை நிர்வகிக்கிறார். ரித்தி ஸ்போர்ட்ஸ், சி.எஸ்.கே.வுடனும் கைகோத்திருக்கிறது. இதனால், ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணியில் நுழைய தோனி ஏதாவது உதவி செய்திருக்கிறாரா அல்லது மற்ற விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்திலுள்ள வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன், சி.எஸ்.கே.வின் கேப்டன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸின் வைஸ் பிரசிடெண்ட் ஆகிய முக்கியமான பதவிகளை தோனி சுமப்பதால், இப்போது சீனிவாசனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை இனி தோனியும் சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இன்று பலருடைய கோரிக்கையாக இருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால் கிரிக்கெட்டை அரசே ஏற்று நடத்தினால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் போல கிரிக்கெட்டும் வளர்ச்சியடையாமல் போகலாம். பதிலாக, பி.சி.சி.ஐ. தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் பணபலம், அதிகாரம் படைத் தவர்களை அமரவைக்காமல் இருந்தாலே போதும். நூறு கோடி பேருள்ள தேசத்தில் சிறந்த நிர்வாகிகளுக்கா பஞ்சம்! ரசிகர்கள் டி.வி.யில் செலுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் பி.சி.சி.ஐ.க்குக் கோடிகளாக மாறுவதால், பி.சி.சி.ஐ.யின் எல்லாக் கணக்கு வழக்குகளும் மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கப்படவேண்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போல நேரடியான நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் கிரிகெட் ரசிகனின் எதிர்பார்ப்பு!

மீண்டும் டால்மியா!

ஜக்மோகன் டால்மியா- 1979ல், பி.சி.சி.ஐ.க்குள் நுழைந்தவர். இவரும் ஐ.எஸ். பிந்த்ராவும் 1987 உலகக்கோப்பைப் போட்டி, இந்தியாவுக்குக் கிடைக்க முக்கியக் காரணகர்த்தா. 90களில் டால்மியாவின் முயற்சியால் தான் பணத்தில் புரள ஆரம்பித்தது பி.சி.சி.ஐ. 1997ல் ஐ.சி.சி. தலைவராகி கிரிக்கெட்டில் நீடித்து வந்த மேற்குலக ஆதிக்கத்தைத் தடுத்தார். ஒளிபரப்பு உரிமம், விளம்பரக் கட்டணம் மூலமாக எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை பி.சி.சி.ஐ.க்கு மட்டுமல்ல, ஐ.சி.சி.க்கும் கற்றுத் தந்தவர் டால்மியா. 2001ல் பி.சி.சி.ஐ. தலைவர். 15 வருட ஆளுமை 2005ல் முடிவுக்கு வந்தது. சரத்பவார், பி.சி.சி.ஐ. தலைவரான பிறகு, வாரியத்திலிருந்து தடை செய்யப்பட்டார் டால்மியா. 1996 உலகக் கோப்பையின்போது பணமோசடி செய்த குற்றச்சாட்டால் அவர்மீது வழக்கு. ஆனால் பின்னாளில், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆனார். மோசடி வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ‘நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு முயற்சி செய்வேன். என் எதிரிகளுக்குப் பதில் சொல்ல அதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியளித்தார் டால்மியா. அது இந்த ரூபத்தில் வந்து பதிலளிக்கும் என்று டால்மியாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.  


Thursday, June 06, 2013

ஓ பக்கங்கள் - சினிமா 100: எதைக் கொண்டாட? - ஞாநி


இந்திய சினிமா தோன்றி 100 வருடங்களானதை இந்திய அரசு தில்லியில் இந்த மாத ஆரம்பத்தில் ஒரு விழா நடத்திக்கொண்டாடியது. தாதா சாகிப் பால்கே 1913ல் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற பேசாத படத்தை உருவாக்கியதே முதல்படமாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல் பேசாத படத்தை உருவாக்கிய நிகழ்வு 1917-18ல் நடராஜ முதலியாரால் நடத்தப்பட்டது. அவர் தன் உறவினரான நாடகாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் யோசனையைக் கேட்டு ‘கீசக வதம்’ கதையைப் படமாக்கினார்.

நூறாண்டுகளுக்கு முன்னால் முதல் சினிமா இந்தியாவில் உருவானபோது இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. உலக அளவில் சிறந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு கவி ரவீந்திரநாத் தாகூருக்கு அறிவிக்கப்பட்டதும் அந்த ஆண்டுதான். தாகூருக்கு அப்போது அளிக்கப்பட்ட பரிசுத்தொகையின் அளவு அன்றைய சுமார் இரண்டு லட்சம் ரூபாய். பால்கே தம் முதல் படத்தை அன்றைய மதிப்பில் தயாரிக்க ஆன செலவு 15 ஆயிரம் ரூபாய்!

இந்திய இலக்கியம் உலக உச்ச அங்கீகாரத்தை எட்டிய நேரத்தில்தான் சினிமா குழந்தை தவழ ஆரம்பித்தது. நூறு வருடங்கள் கழித்து இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1500 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மிகச் சிறிய படத்தின் சராசரி தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய். இந்தியாவின் உச்சமான இலக்கிய விருதான ஞானபீட விருதில் பரிசுத் தொகையாக அளிக்கப்படுவது ஏழு லட்சம் ரூபாய். பத்து கோடி செலவில் தயாரிக்கப்படும் படத்தில்கூட கதாசிரியர், எழுத்தாளருக்கு ஏழு லட்ச ரூபாய் கிடைப்பது அரிது. இன்று நோபல் பரிசின் அளவு சராசரி தமிழ் சினிமா பட்ஜெட் அளவுதான்: ஆறு கோடி ரூபாய் !

இந்தியாவில் இலக்கியத்தின் தரம் பல மொழிகளில் உலகத்தரத்தை எட்டியும் கடந்தும் எல்லாம் போயிருந்தாலும், அதற்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரமும், சன்மானமும் குறைவாகவும் குறைந்துகொண்டே போவதாகவும் உள்ளன. ஆனால், நேர்மாறாக சினிமாவின் தரம் உலக சினிமாவின் தரத்தை எட்டவே இல்லையென்றாலும், அதற்குக் கிட்டும் சமூக வழிபாடும், பொருள் குவிப்பும் பிரம்மாண்டமாக இருக்கின்றன.

இந்தச் சூழலில் இந்திய சினிமா நூற்றாண்டில் நாம் எதைக் கொண்டாடுவது? சினிமாவின் வணிக வெற்றியையா? அரசுக்குப் பெரும் தொகையை வரி கட்டுவதையா? இன்னும் பெரும் தொகையைக் கணக்கில் காட்டாத கறுப்புப் பணமாக புழங்கவிடுவதையா? ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளிப்பதையா? அரசியல் முதல் அதிகாரவர்க்கம்வரை, வள்ளல்கள் முதல் தாதாக்கள்வரை ஊடுருவியிருக்கும் சமூக விரோத மாஃபியாக்களின் பணச்சலவைக்கு உடந்தையாக இருப்பதையா? எதைக் கொண்டாடுவது ?

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் படைப்பைக் கொண்டாடலாம்தான். ஏனென்றால் மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா வடிவம்தான்.  

சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு பல காலம் முன்பிருந்தே இசை, ஓவியம், சிற்பம், கவிதை, இலக்கியம், நடனம் எனப் பல வடிவங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு மனித மனத்தை மகிழ்விக்கவும் வளப்படுத்தவும் பலப்படுத்தவும் பயன்பட்டு வந்திருக்கின்றன. அறிவியலின் பல பிரிவுகளான இயற்பியல், வேதியியல், கணிதம் என்று ஒவ்வொன்றிலும் புதுப்புது கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு அவை மனித வாழ்க்கையில் அன்றாடம் பயன்படும் பொருட்களை உதவிகரமான அமைப்புகளை ஏற்படுத்த பயன்பட்டிருக்கின்றன.சினிமா ஒன்றுதான் தனக்கு முன்பு வரை இருந்த அத்தனை கலைகளையும் அத்தனை அறிவியல் கோட்பாடுகளையும் இணைத்துப் பயன்படுத்தி உருவான வடிவம். காமெரா முதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன்வரை அதில் அறிவியலின் எல்லா பழைய, புதிய கோட்பாடுகளும் செயல்படுகின்றன. இசை முதல் இலக்கியம் வரை, கதக் முதல் களரி வரை அத்தனை கலையம்சங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான் வேறு எந்த ஒற்றை கலை வடிவத்தையும்விட எளிதாக எல்லாரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் வலிமையும் செல்வாக்கும் சினிமா வடிவத்துக்கு இருக்கிறது. அதில் செயல்படும் ஏதோ ஒரு கலையம்சமோ அறிவியல் அம்சமோ தூக்கலாக இருந்தால் விமர்சிக்கிறோமே தவிர, அது முற்றாக இருக்கக்கூடாது என்று சொல்லவே முடியாத அளவுக்கு எல்லா அம்சங்களுக்கும் தன்னுள் தேவை இருக்கும் வடிவமாக சினிமா இருக்கிறது.

ஆரம்ப நாட்களில் சினிமா பார்க்க மக்கள் எளிதில் முன் வரவில்லை. பயந்தார்கள். அருவெறுத்தார்கள். அவர்களை ஈர்க்க பத்துப் பதினைந்து நிமிடத் துண்டுப் படங்களுக்கு முன்னும் பின்னுமாக நடன நிகழ்ச்சிகள், சர்க்கஸ் காட்சிகள், சொற்பொழிவுகள் எனப் பலவற்றைக் கதம்பமாகக் கொடுத்து வரவழைத்தார்கள். விடிய விடிய கூத்து பார்த்த மக்களுக்கு பத்து நிமிடக் குறும்படம் போதாது என்று மூன்று மணி நேரப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். இதை வைத்து பணம் திரட்ட முடியுமா என்று ஆரம்பத்தில் கவலைக்குரியதாக இருந்த வடிவம், இன்று பிரம்மாண்டமாக பணம் திரட்டும் வர்த்தகமாகிவிட்டது.உலகம் முழுவதும் சினிமா ஒரு பிரம்மாண்டமான வணிகம்தான். ஆனால் 25 வருட வரலாறு, பொன்விழா வரலாறு, நூற்றாண்டு வரலாறு என்று கொண்டாடும்போது அதன் வணிக வெற்றியை யாரும் கொண்டாடுவதில்லை, படைப்புரீதியான வடிவ வெற்றியில் அடைந்த மைல் கற்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் இரு வருடங்கள் தொடர்ந்து கொட்டகையில் காட்டப்பட்டதை வரலாற்றுக் குறிப்பாக எழுதலாம். ஆனால், தமிழின் சிறந்த 100 படங்களில்கூட ஒன்றாக ஒரு போதும் அது இடம் பெறவே பெறாது.உலகம் முழுவதும் வணிக சினிமா ஆதிக்கம் செலுத்தினாலும், சிறந்த படங்கள் என்று தரப்படுத்தும்போது, பட்டியலிடும்போது படங்களின் வணிக வெற்றிக்கோ தோல்விக்கோ இடமில்லை. ஒரு படைப்பாக அதன் வடிவ மொழியில், அதன் கலையம்சங்களில், அதன் அறிவியல் உத்திகளில், அது முன்வைக்கும் மதிப்பீடுகளில் எந்தத் தரத்தை எட்டுகிறது, இவற்றின் வழியே ஒட்டுமொத்தமாக பார்வையாளருக்கு எத்தகைய மேன்மையான அனுபவத்தைத் தருகிறது என்ற அடிப்படையிலேயே படங்கள் சிறந்த படமாகக் கருதப்படுகின்றன.இன்று உலக அரங்கில் இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்புகளைக் கொடுத்த சினிமா மேதைகளாகப் பார்க்கப் படுவோர் யாரும் வணிக சினிமாவின் அங்கங்களாக இருப்பவர் அல்ல. வணிக சினிமாவிலிருந்தும் பலர் கொண்டாடப்படுவதற்கு உரியவர்கள்தான். கொண்டாடப்படுவார்கள். அது அவர்கள் அந்த எல்லைக்குள்ளே நின்று அதன் அதிகபட்ச உச்சங்களை அடைந்ததற்காக மட்டும்தான்.இப்படிப் பார்க்கும்போது இந்திய சினிமாவில் ஒட்டுமொத்த சினிமா மொழியில் சிறந்த தரத்தை எட்டியவராக சத்யஜித்ரே எப்போதும் கொண்டாடப்படுகிறார். அவரையடுத்து அதே வழிமுறையில் வந்தவர்களாகவும் தத்தம் பங்களிப்புகளை வித்யாசமாக அளித்தவர்களாகவும் மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஷ்யாம் பெனகல், மணி கவுல், கௌதம் கோஷ், கிரீஷ் காசர வள்ளி, புத்ததேவ் தாஸ்குப்தா, அபர்ணா சென் என்று நீண்ட பட்டியலாகப் பல படைப்பாளிகள் உள்ளனர். வணிக இந்தி சினிமாவின் சாதனையாளர்களாக, ராஜ்கபூர், சாந்தாராம், குரு தத் தொடங்கிப் பலர் இருக்கின்றனர்.

இதேபோல தமிழில் பார்க்கும்போது நம்மிடம் வணிக சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று சாதனை செய்தவர்கள் பட்டியலை மட்டுமே போட முடிகிறது. ‘ஏழை படும் பாடு’ படத்தை எடுத்த ராம்நாத் முதல், ஸ்ரீதர், பீம்சிங், பாலசந்தர், பாரதி ராஜா, ருத்ரயா, மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா, வசந்தபாலன், ராதாமோகன், பாலாஜி சக்திவேல் என்று நாம் நமது ரசனைத் தேர்வுப்படி என்ன பட்டியல் போட்டாலும், அவர்களெல்லாம் வணிக சினிமாவின் வடிவ மொழிச் சட்டகத்துக்குள்ளேயே இயங்கி அந்த வடிவம் சார்ந்த வெற்றியை மட்டுமே கண்டவர்கள்தான் என்பதே அப்பட்டமான உண்மை.  சத்யஜித் ரேவும், சென்னும், பெனகலும் செய்து பார்த்த சினிமாவுக்கு நிகரானதாகச் சொல்ல தமிழில் நமக்கு எதுவும் இல்லை. அந்தத் திசையிலான முயற்சிகளாக நடந்த ஒரு சில உண்டு. ஜெயகாந் தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, பாபு நந்தன்கோடின் ‘தாகம்’, சிங்கீதத்தின் ‘திக்கற்ற பார்வதி’, ஜெயபாரதியின் ‘குடிசை’, அம்ஷன் குமாரின் ‘ஒருத்தி’ எல்லாமே அந்தத் திசையில் மிக பலவீனமாகத் தோற்றுப் போன முயற்சிகள்தான். வணிகத்திலும் வடிவத்திலும் தோற்றவை. மலையாளத்திலும் மராத்தியிலும் கன்னடத்திலும் அசாமியிலும் ஒடிசாவிலும் வங்காளத்திலும் ரே-சென் -பெனகல் வகையிலான முயற்சிகளை வெற்றிகரமாக செய்துகாட்டியிருக்கும் மூத்த, இளம் இயக்குனர்கள் படைப்பாளிகள் பலர் வந்திருக்கும் சூழலில், தமிழில் மட்டும் அப்படி இன்றுவரை நிகழமுடியாமற்போனதன் காரணங்கள் என்ன?மறைந்த நண்பரும் சினிமா விமர்சகர் ஆவாளரு மான அறந்தை நாராயணன் ஒரு நூலில் தமிழில் திறமையான நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், எடிட்டர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தில் இத்தனை திறமையாளர்களும் ஒன்று சேர்ந்து எப்படி மோசமான படைப்பை உருவாக்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை என்று அங்கலாத்திருப்பார். உண்மைதான். இங்கே திரைப்படத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் திறமையானவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் கூட்டாக ஒரு தரமான படைப்பை உருவாக்கத் தடையாக இருப்பவை என்னென்ன என்றே நாம் யோசிக்கவேண்டும்.

இன்னும் ஐந்து வருடங்களில் தமிழின் முதல் சினிமாவின் நூற்றாண்டை நாம் கொண்டாடும் வேளையில் அந்தத் தடைகளைக் கண்டறிந்து நீக்கியிருப்போமா? இதற்கு பதில் கிடைத்திருக்குமா? ஐந்து வருடங்களில் இப்படி ஓர் ஐந்து படங்களையேனும் உருவாக்கித் தரக்கூடிய ஐந்து படைப்பாளிகளைத் தமிழகத்தால் கண்டறிய முடியாதா? கண்டறிவோம். படைப்புக்கான சூழலை உருவாக்குவோம். அதன்பின் கொண்டாடுவோம்.