மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆங் சான் சூசி வெற்றி
பெற்றிருப்பது இரண்டாவது ஆச்சரியம்தான். முதல் ஆச்சரியம், ராணுவ
மியான்மரில் தேர்தல்
நடைபெற்றதும், அதில் சூசி பங்கேற்க அனுமதிக்கப்பட்டதும். இருபதாண்டு
வீட்டுச் சிறைக்குப் பிறகு முதல் முறையாக வீட்டுக்கதவைத் திறந்து வெளியில்
வந்து, திறந்த ஜீப்பில் ஏறி,
புழுதி பறக்க வீதிகளைச் சுற்றி, திரண்ட மக்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம்
செலுத்தி, கையசைத்து, கழுத்தை நீட்டி மல்லிகை மாலை வாங்கி, வோட்டு
சேகரித்து, வெற்றியும்
பெற்றிருப்பது சமகால பர்மாவின் வரலாற்றில் நிச்சயம் ஒரு திருப்பு முனைதான்.மே 1990ல் ஒரு பொதுத் தேர்தலில் சூசியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி
(என்.எல்.டி) கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. கொஞ்சம் கலவரமடைந்த ராணுவத்
தலைமை,
தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொள்ள மறுத்துவிட்டு,விடாப்பிடியாக ஆட்சியைத்
தொடர்ந்தது.மியான்மர் விடுதலை பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஜூலை 1947ல்
சூசியின் தந்தையும் சுதந்தரப் போராட்டத் தலைவருமான ஆங் சான், ராணுவத்தால்
சுட்டுக்
கொல்லப்பட்டார். அப்போது சூசி இரண்டு வயது குழந்தை. நான்கு ஆண்டுகள்
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு பழக்கமான மைக்கேல் ஆரிஸ்
என்பவரைப்
பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிலும் பூடானிலும் சிறிது
காலம் இருந்தபிறகு, தம் இரு குழந்தைகளுடன் பிரிட்டனில் குடியேறினார்.
நோய்வாய்பட்டிருந்த தன் தாயைப் பார்க்க 1988ல் மியான்மருக்கு வந்தபோது,
அந்நாடு மூச்சுத் திணறி தவித்துக்கொண்டிருந்தது. தாய், தாய்நாடு இரண்டில்
யாரை முதலில்
மீட்டெடுப்பது என்னும் கேள்வி எழுந்தபோது, சூசி தம் தந்தையின் வழியைத்
தேர்ந்தெடுத்தார்.அப்போதைய ராணுவத் தலைவரான ஜெனரல் நீ வென்னிடம் நேரடியாக
மோதினார் சூசி.
காந்தி,மார்டின் லூதர்கிங் ஆகியோரால் கவரப்பட்ட சூசியின் அமைதி வழிப்
போராட்டம், ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. இருபதாண்டு வீட்டுச் சிறையில் இருந்த போது 1999ல் இறந்துபோன கணவரின் உடலைக்
காண அனுமதி மறுக்கப்பட்டது. 2010ல் பொதுத் தேர்தலில், சூசி போட்டியிட
அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இடைத்தேர்தலில் சூசி பங்கேற்றதும்,
வென்றதும் அவரையும் அவர் கட்சியினரையும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட 45 இடங்களில் போட்டியிட்டு, 44ல் சூ சியின் என்.எல்.டி
கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அனைத்து முறை கேடுகளையும் பயன்படுத்திதான்
தேர்தலை
நடத்தியிருக்கிறது ராணுவம்.எனினும் சூசிக்கும் அவர் கட்சிக்கும் வெற்றி.‘வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத்
தேர்தலில் போட்டியிட்ட பிற கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஒரு புதிய ஜனநாயக
அரசைத்
தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்கிறார் சூசி. ஆனால்,இது அத்தனை சுலபமல்ல. மியான்மர் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 664
இடங்களில், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர அனைத்துமே
ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 45 இடங்களையும் சூசி
வென்றாலும் அவரால் ஒன்றும் செய்துவிடமுடியாது என்று கணக்குப் போட்டு
பார்த்துதான் சூசிக்கு அனுமதி
வழங்கியது பர்மா. அந்த வகையில், இது அரசியல் மாற்றத்துக்கான வெற்றி அல்ல.
பிறகு என்ன பயன்? முதல் வெற்றி, பர்மாவில் ஜனநாயகம் திரும்பிவிட்டது
என்னும் நம்பிக்கையை பர்மாவிலும் வெளியிலும் படரவிட்டது. தேர்தல்
நடைபெற்றபோது, பல
அயல்நாட்டு நிருபர்கள் பர்மாவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இங்கு
உதித்திருக்கும் புதிய நம்பிக்கை ஒளியைப் பற்றி நிச்சயம் அவர்கள்
எழுதுவார்கள், பேசுவார்கள். ஐம்பதாண்டு
கால ராணுவ ஆட்சியை முடித்துக்கொண்டு மார்ச் 2011ல் தீன் சீன் என்பவர்
அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து தொடங்கு கிறது பர்மாவின் அரசியல்
மாற்றம். இவரது வருகைக்குப்
பிறகு ஊடகக் கெடுபிடிகள் சற்று தளர்த்தப்பட்டு, அரசியல் கைதிகள் பலர்
விடுவிக்கப்பட்டனர். சூசியும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு ராணுவத் தலைமையைவிட ஜனநாயக அரசியல் தலைமைதான் லாபகரமானது என்பதை
பர்மா உணர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு நண்பனாக
இல்லாத பட்சத்தில் ராணுவம் தலைமை தாங்கும் ஒரு நாட்டோடு யாரும் ஆதரவாக
இருக்க மாட்டார்கள். போதாக்குறைக்கு, அரபுலகத்தில் ‘ஒவ்வாத அரசை உந்தித்
தள்ளு’ என்னும்
பெரும் முழக்கத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் பல சர்வாதிகார
அரசுகள் வீழ்த்தப்பட்டுவிட்டன. எதற்கு வீண் வம்பு? காசா, பணமா?
ஜனநாயகம்தானே? இந்தா போ
என்று அள்ளிக் கொடுத்தால் குறைந்துவிடவா போய்கிறது? ஆக, மியான்மர்
இடைத்தேர்தலை அனுமதித்ததற்கும் சூசியின் வெற்றியை அனுமதித்ததற்கும் காரணம்
ஒன்றுதான்.
சுயநலம்.
இந்த சுயநலத்தை சூ சி தகர்ப்பாரா?
No comments:
Post a Comment