கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை மத்திய
அரசு வெளியிடத் தொடங்கியிருக்கிறது. பிரதீப் பர்மன், சீமன் லால்லோடியா,
ராதா சதீஷ் டிம்லோ பெயர் வெளிவந்துள்ளன.
பெரிய மீன்கள் பெயர்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்ஸர்லாண்ட் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ள கறுப்புப் பணத்தின்
மதிப்பு சுமார் 84 லட்சம் கோடி ரூபாய். இப்படிச் சொன்னவர்கள் எந்த
அடிப்படையில், எந்த அளவுகோலில் இவ்வளவு பெரிய தொகையைச் சொன்னார்கள் என்பது
தெரியாது. ஆனால் இந்த மாதிரி ஒரு செய்தி இந்தியாவின் ஊடகங்களில்
வெளியானவுடன், சுவிட்ஸர்லாண்ட் வங்கிகளின் சங்கம் இந்தத் தொகையின் அளவை
மறுத்து ஒரு அறிக்கை விட்டது. தங்கள் வங்கிகளில் இந்தியர்கள்
வைத்திருக்கும் பணத்தின் அளவு சுமார் 12000 கோடி ரூபாய்தான் (அமெரிக்க
டாலர் மதிப்பில் 2 பில்லியன் டாலர்).
2012-ல் இந்தத் தொகையின் அளவு 30 லட்சம் கோடி ரூபாய் என்று அப்போதைய சி.பி.ஐ.யின் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மே 2012-ல் அப்போதைய மத்திய அரசு (மன்மோகன் சிங் பிரதமராக இருந்த
காலத்தில்) ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாராம்சம்:
அன்னிய நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின்
பணம் சுமார் 15 ஆயிரம் கோடிதான். இது மொத்தமும் கறுப்புப் பணம் என்று சொல்ல
முடியாது. ரிஸர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு வங்கிகளில் நம்
நாட்டு ஏற்றுமதியாளர்கள்
வைத்திருக்கும் பணமும் இதில் அடங்கும்." இப்போது மத்தியில் பதவியில்
இருக்கும் பாரதிய ஜனதா அரசு அதன் தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் பதவிக்கு
வந்த மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும்
கறுப்புப் பணம் பூராவையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று
சூளூரைத்தார்கள். அப்படி பணம் ஒன்றும் வரவில்லை. இப்போதைக்கு ஒருசில
பெயர்கள் மட்டுமே வந்துள்ளன.
சில பொருளாதார நிபுணர்களின் அபிப்ராயப்படி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள
இந்தக் கறுப்புப் பணம் சுமார் 20,000 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும்
என்பது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம்
வெளிநாட்டு வங்ககளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் பெரும் பகுதி
திரும்ப இந்தியாவுக்கு வந்துவிட்டது. அந்தப் பணம் பங்குச் சந்தையிலும்,
வீட்டு மனைகளிலும் மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களிலும் முதலீடு
செய்யப்பட்டிருக்கிறது" என்பதுதான். இந்த மாதிரி பல அபிப்ராயங்கள்
அவ்வப்போது வெளியாவதால், மக்களின் சந்தேகத்தைப் போக்க எல்லா விவரங்களும்
அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை
அரசு வெளியிட வேண்டும்.
வி.கோபாலன்
No comments:
Post a Comment