இமயமலையில்
உள்ள எவரெஸ்ட் சிகரம்தான் உலகின் மிகப் பெரிய சிகரம் என்பது அனைவருக்கும்
தெரியும். சாகசம் செய்ய நினைப்பவர்கள் இதன் உச்சியை அடைய வேண்டும் என்று
நினைப்பார்கள்.
அப்படிநினைப்பவர்களுக்கு எரிக் வெய்ஹன் மேயர் ஓர் உதாரணம்.
பலர் சாதனை செய்திருந்தாலும் எரிக்கின் சாதனை பாராட்டப்பட வேண்டியது.
ஏனெனில், எரிக் பார்வையற்றவர். இந்தச் சாதனையைச் செய்ய அவர் சந்தித்த
சவால்கள் ஏராளம்.
எரிக் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பகுதியில் 1968-ம்
ஆண்டு பிறந்தார். சிறுவயதில் இருந்தே சுறுசுறுப்பாகவும், துணிச்சலான
காரியங்களையும் செய்யும் எரிக், தனது 13-வது வயதில் ரெட்டினோசிஸிஸ் நோயால்
பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார். இதனால் தன்னம்பிக்கையை இழந்து
எதிலும் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருப்பார் என எல்லோரும் நினைத்தபோது,
நம்ப முடியாதச் செயல்களை திறமையாகச் செய்யத் துவங்கினார்.
குத்துச்சண்டையில் சிறப்பாக பயிற்சி பெற்ற எரிக்,
அமெரிக்காவின் தேசிய அணிக்காக பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
1993-ல் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்த எரிக், பள்ளிக்கூட ஆசிரியராகப்
பணியாற்றத் துவங்கினார். இதற்கிடையில் மலையேறுதல் மற்றும் காடுகளுக்குள்
பயணித்தல் போன்ற செயல்களை துணிச்சலாகச் செய்து வந்தார். அமெரிக்காவின்
மவுன்ட் மெக்கென்லி, தென் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ ஆகிய மலைகளில் ஏறிய
அனுபவம் அவருக்கு இருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதை தன் லட்சியமாக
உணர்ந்தார்.
எரிக்கின் இந்த ஆசை நிறைவேறுமா என பலரும் சந்தேகத்துடன்
பார்த்தனர். ஆனால், மற்றவர்களின் அபிப்ராயங்களைப் பற்றி சற்றும்
கவலைப்படாத எரிக், தனது 14 பேர் கொண்ட குழுவோடு பயணிக்கத் துவங்கினார்.
வழியெங்கும் சரியான குழுக் கூட்டங்கள், நிதானமான திட்டமிடல் என அனைத்தையும்
சரியாகச் செய்து தனது லட்சிய இலக்கான எவரெஸ்ட் சிகரத்தை மே 25, 2001 அன்று
அடைந்தார். இவர்தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்றவர் என்ற
பெருமையையும் பெற்றார்.
இது எனக்கு வராது, என்னால் இதைச் செய்ய முடியாது எனக்
கூறி, ஒரு வேலையை தள்ளிப்போடும் அனைவருக்கும் எரிக் வெய்ஹன்மேயரின் சாதனை
ஒரு பாடம்.
No comments:
Post a Comment