Search This Blog

Saturday, July 23, 2011

என்னதான் நடக்கிறது மதுரையில் - அழகிரி

'மதுரையை மீட்பேன்!' என்று தேர்த​லுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய​லலிதா அதிரடியாக சபதம் போட்டு இருந்தார். கடந்த வாரம் அந்த சபதத்தை நிறை​வேற்றத் துவங்கிவிட்டார் முதல்வர் என்று புளகாங்கிதப்படுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்! மதுரையில் போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணப்பன், சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வினருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். தேர்தலை முடித்த கையோடு, துறை ரீதியான பயிற்சிக்காக வெளி மாநிலம் கிளம்பிப்போனவர், அதை முடித்துக்கொண்டு கடந்த 12-ம் தேதி மீண்டும் மதுரைக்குள் நுழைந்தார். போலீஸ் கமிஷனர் பதவியில் மீண்டும் அமர்ந்தவர், தென் மண்டல ஐ.ஜி. பதவியையும் கூடுதலாக கவனிக்கிறார்.

தேர்தல் நேரத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் மதுரை ரூரல் எஸ்.பி-யாக இருந்த ஆஸ்ரா கர்க். அவரை திடீரெனச் சென்னைக்கு மாற்றியபோது, கண்ணப்பனுக்குக் கைகொடுக்க யார் வரப்போகிறார்களோ என்ற நியாயமான கவலை போலீஸ்காரர்கள் மனதில் நிழலாடியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, மீண்டும் மதுரை எஸ்.பி-யாகவே வந்தார் ஆஸ்ரா கர்க்.


கண்ணப்பன் அண்ட் ஆஸ்ரா கர்க் டீம் ஜோடி​யாகக் கைகோத்துக் களத்தில் குதித்தது. மதுரையைச் சுத்தப்படுத்தும் காரியம் இவர்களிடம்தான் கொடுக்கப்​பட்டது. ஏற்கெனவே கலெக்டராக சகாயம் இருக்கிறார். அதனால், 'நிர்வாகத் தடங்கல்’ இல்லாத டீம் இது!

கண்ணப்பன், ஆஸ்ரா கர்க் இருவரும் இரண்டு வருடங்கள் முன்பு, திருநெல்வேலி சரகத்தில் ஒன்றாகப் பணி புரிந்தனர். அப்போது, சண்முக பாண்டியன் என்ற அ.தி.மு.க. பிரமுகர் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் ஈடுபடுவதாகச் சொல்லி, வள்ளியூர் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட இருவரும், உடனே அந்த ஊரில் மக்கள் குறை கேட்பு முகாம் நடத்தினர். வீடுகள், கடைகள் ஆக்கிரமிப்பு, கொலை முயற்சி, மிரட்டல் செய்வதாக சண்முக பாண்டியன் மற்றும் அவரது ஆட்கள் மீது மக்கள் ஏராளமான புகார்கள் தந்தனர். அதற்காகவே காத்திருந்தவர்கள்போல் அதிரடியாக ஆக்ஷன் எடுத்து அவரவர் சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்கள். சண்முக பாண்டியன் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வள்ளியூர் பக்கம் அவர் இன்று வரை திரும்பவில்லையாம். இதே பாணியில், மதுரை மாநகரம், புறநகர் மற்றும் மாவட்ட மக்களிடம் நேரிலும், பத்திரிகைகள் மூலமாகவும் கண்ணப்பன் பேசினார். ''நில அபகரிப்பு, நில மோசடி, வீடு காலி செய்ததில் அட்டகாசம், போலி ஆவணம் தயாரித்து சொத்துகள் அபகரிப்பு போன்ற ரீதியில் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், உடனே என்னை அணுகலாம். நியாயம் இருந்தால், உடனே சொத்தை மீட்டு ஒப்படைப்போம்!'' என்று சொன்னார்.


அடுத்ததாக, காவல் நிலையங்​களில் ஏட்டு முதல் எஸ்.ஐ. வரையிலும் அனைவரையும் தனித்​தனியாக சந்தித்து, மதுரையில் கடந்த காலங்களில் போலீஸின் மானம் போன நிகழ்வுகளை எழுதி ரகசியமாகத் தன் பெயருக்கு கடிதமாக அனுப்பும்படி வேண்​டுகோள் வைத்தாராம் கண்ணப்பன். இந்த வகையில், சின்ன லெவலில் ஆரம்பித்து பெரிய லெவல் வரை போலீஸாரை எப்படி எல்லாம் கேவலப்படுத்தினார்கள் என்பது தெரியவந்ததாம். மேலும் போலீஸில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுகொண்டாராம்.

அட்டாக் பாண்டி குறித்துப் பேசிய நில மீட்பு டீம் போலீஸார், ''அவனியாபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. அதிகாரி பிருத்விராஜின் வீட்டை அபகரித்த அட்டாக் பாண்டி, அத்தோடு விடவில்லை. அந்த வீட்டுக்கு அடுத்து இருந்த ரிட்டயர்டு ஆர்.டி.ஓ. ஒருவரின் இடம், சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த இன்னொருவரின் இடத்தையும் அபகரித்து தனது கஸ்டடியில் வைத்துக்கொண்டாராம். அந்த இருவரும் எங்களைத் தேடி வந்தால், உரிய நடவடிக்கை எடுத்து, இடத்தை மீட்டுத்தர தயாராக உள்ளோம்!'' என்கிறார்கள்.

கண்ணப்பனின் அடுத்த மூவ்
'மூன்று கோணங்களில் கண்ணப்பன் போலீஸாரை முடுக்கிவிடுகிறார். முதலாவதாக, விமான நிலையம் அருகே ஒரு தோப்பில் தனது கூலிப் படைக்காகவே ஜிம் நடத்தி வந்தாராம் ஒரு தி.மு.க. பிரமுகர். அதற்குள் நுழைய ஏகப்பட்ட செக்போஸ்ட்கள். ஒரு கொலைக் குற்றவாளியைத் தேடிப் போன எங்கள் போலீஸ் எஸ்.ஐ. ஒருவரையே, விரட்டி அடித்தார்கள். அந்த ஜிம் பார்ட்டியை இப்போது சும்மா விடப்போவது இல்லை.

அடுத்து கீரைப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு தனியார் இடத்தைப் பிடுங்கி அந்த இடத்தில் படிப்பகம் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், அங்கே கேரம் விளையாடுவது, மது குடிப்பதுபோன்ற காரியங்களைத்தான் ரவுடிகள் செய்து வருகிறார்கள். போலீஸாருக்குத் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலைமை. அந்த இடம் யாருடையது என்று விசாரித்து வருகிறோம்.

அரசுத் திட்டங்களுக்காக கான்ட்ராக்ட் விடப்பட்டால், அதில் பங்கேற்க வரும் வெளி நபர்களை மறித்து ஒரிஜினல் ஆவணங்களைப் பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் கண் எதிரிலேயே கிழித்தும் போடுவார்கள். போலீஸார் முன்னிலையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடப்பட்டபோதுகூட இப்படித்தான் நடந்தது. தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் இந்த கொள்ளையர்களுக்கும் விரைவில் ஆபத்து வருகிறது. .

வில்லாபுரம், கூடல் நகர் ஏரியாவில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடங்களை அபகரித்தவர்கள் பற்றி புகார் வந்துள்ளது. இது தவிர, வெளி ஊர்களில் உள்ள இட உரிமையாளர்களை மிரட்டியதாக அட்டாக் பாண்டி மற்றும் சிலர் மீதும் புகார்கள் வருகின்றன.

பத்திரப் பதிவுத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளை, தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்து சட்டத்துக்கு விரோதமான முறையில் நிலப் பதிவுகளைச் செய்ய வைத்தாகவும் சிலர் புகார் செய்ய முன்வந்துள்ளனர். அவை எந்தெந்த நிலங்கள் என்று கண்டறியும் முயற்சியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் இறங்கிவிட்டார்கள். நிலங்களை அபகரித்துக்கொண்டு வேண்டும் என்றே நீதி மன்றங்களில் பொய் வழக்குப் போட்டு அப்பாவிகளை இழுத்தடிப்பவர்களின் பட்டியலும் நடவடிக்கைக்குத் தயார்.

திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள ஒரு கடையை அட்டாக் பாண்டியின் மைத்துனர் அடாவடியாகப் பறித்தாரா? மாட்டுத்தாவணி ஏரியாவில் இரண்டு ஏக்கர் நிலத்தை வேலி போட்டு வைத்திருக்கும் தி.மு.க பிரமுகர் யார்? ராஜாம்மாள் நகரில் ஒரு ஏக்கர் தரிசு நிலத்தை உழுது பயிர் செய்து வருவதாக போலி ஆவணம் தயார் செய்து ஆக்கிரமித்த நபர் யார் என்ற விவரங்களையும் சேகரித்துள்ளனர். அட்டாக் பாண்டியின் வீட்டைத் தாண்டிக் குடியிருக்கும் ஒரு பிரமுகரின் மூன்று ஏக்கர் நிலத்தை அபகரித்து தோட்டம் போட்டுவிட்டார்களாம். அந்த நிலத்தின் உரிமையாளரும் போலீஸாரைத் தேடி வரவிருக்கிறார்... 

Friday, July 22, 2011

கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்

தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதால் செல்போன் கட்டணங்கள் உயருகிறது. இந்தியாவில் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதற்காக செல்போன் சேவை தொடங்குவதற்கான லைசென்சும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடும் ஒன்றாக இணைத்து வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டிலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் குற்றம் சாட்டினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பினை மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல் வெளியிட்டார். 
 
 
செல்போன் சேவை வழங்குவதற்கான லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் இனி தனித்தனியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் கூறியதாவது:- 1999-ம் ஆண்டில் புதிய தொலை தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. டெலிபோன் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அக்கொள்கையில் தொலை தொடர்பு லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்து விட்டதால் புதிய கொள்கைக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இனி லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒன்றாக வழங்கப்பட மாட்டாது, உரிமம் பெற்றவர்கள் எந்த விதமான தொலைபேசி சேவையை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதற்கு தேவையான ஸ்பெக்ட்ரத்தை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த புதிய கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. 
 

புதிய தொலை தொடர்பு கொள்கை காரணமாக ஏர்டெல், ஏர்செல், வோடா போன் ஆகிய நிறுவனங்கள் கூடுதலான ஸ்பெக்ட்ரத்தை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும். மேலும் லைசென்ஸ் வழங்கும்போது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏலம் அல்லது எந்த வழிமுறையை பரிந்துரைக்கிறதோ அந்த வழி முறை கடைபிடிக்கப்படும். இந்த புதிய கொள்கையால் செல்போன் கட்டணங்கள் உயர்ந்து உள்ளன. முதல் வரிசையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளது .
 
 
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், பிரீ-பெய்டு கட்டணங்களை 20 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளது. அட்வான்டேஸ் பேக் பயனாளர்களுக்கு நிமிடத்திற்கு 50 பைசாவாக உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு இனி, 60 பைசா என்ற அளவிலும், லேண்ட்லைன் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கான கட்டணம் ரூ. 1 என்றும், தேசிய எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 1.50 என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ப்ரீடம் பேக் எனப்படும் செகண்ட்ஸ் அடிப்படையாகக் கொண்ட சந்தாதாரர்களுக்கு செகண்டிற்கு 1 பைசா என்ற அளவில் இருந்த உள்ளூர் மற்றும் எஸ்டிடி கட்டணம் இனி, செகண்டிற்கு 1.2 பைசா என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு முதற்கட்டமாக, டில்லி, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா மற்றும் மத்தியபிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. ரேட் கட்டர் கார்டு உபயோகிப்பவர்கள், அந்த கார்டின் வேலிடிட்டி முடிந்தவுடன் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசியில் ஒரு நாள் ..


மதியம் மூன்று மணி நாற்பது நிமிடத்திற்கு, வண்டி வாரணாசி நோக்கி கிளம்பியது. சுமார் ஆறு மணியளவில் வாரணாசி வந்து சேர்ந்தேன் . நேராக ஒரு தங்கும் விடுதிக்கு சென்று ரூம் புக்கிங் செய்தேன் . நல்ல வசதியான ரூம். மூன்று பேர் தாராளமாகத் தங்கலாம். சுத்தமாகவும் இருந்தது. (hotel raj mahal). விலை ரொம்ப கம்மி. பின்னர் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு "கங்கை ஆரத்தி" காணச் சென்றேன் . எந்தப் படித்துறை ன்னு கேக்க மறந்துட்டேன்....ஆனா கங்கை ஆரத்தி நன்றாக இருந்தது. ஸ்ராவண மாதப் பிறப்பு என்பதால் வாரணாசியில் கூட்டம் அதிகமாக இருந்தது.  
 
 
அங்கு ஸ்ரீ கேதார கௌரி சமேத ஸ்ரீ கேதாரநாதர்  ஸ்வாமியை பார்த்து விட்டு, கோபுரத்தில் மீனாக்ஷி பிள்ளைத் தமிழ் அருளிச் செய்த ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகளின் திரு உருவச் சிலை பார்த்தேன் ....ரொம்ப இருட்டா இருந்ததால...காலம்பர மறுபடி வரணும் ன்னு நினைத்துக் கொண்டு  உள்ளே சென்று ஸ்வாமியை பார்த்தேன் . நம்ம ஊர் கோயில் ல இருக்கும் அம்பாள் போலவே இருந்தாள்... நம்ம ஊர் ஸ்டைல் ல இருந்தது கேதார் காட் கோயில். சரி அடுத்து இரவு சாப்பாடு எங்கே, ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். அவர் சொன்னார் இங்கே புதிதாக ஒரு ஹோட்டல் இருக்கு. நல்லா இருக்கும் . சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது. அந்த ஹோட்டல் பெயர்  (hotel silver spoon) .
இறந்து போன நபர்களுக்கு காசியில் எதோ செய்வாங்க என்று கேள்வி பட்டேன். அப்போ, வழக்கம் போல் நினைவில் வந்தார் தந்தை. அம்மாவிடம் விருப்பதை சொன்னேன். உன்னக்கு என்ன தோணுதோ அதை செய். பத்திரமாக கான்பூர் போய் சேர்.. ஊர் சுற்றாதே என கடிந்து கொண்டார்.காலை 5 .30 மணிக்கு எழுந்து குளித்து...ஏழரை மணியளவில் ரூமிலிருந்து கிளம்பி கங்கை சென்று நீராடிதந்தைக்கும் பிண்டம் வைக்கச் சொன்னார்கள்.பண்டிதர் சொன்ன இடத்தில் அமர்ந்து அவர் சொன்ன வண்ணம் செய்து முடித்தேன்.  
 
அங்கிருந்து பதினொரு மணியளவில் "ஹனுமான் காட்" டில் உள்ள "ஸ்ரீ சக்ர லிங்கேஸ்வர" ஸ்வாமியை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு அங்கிருந்து காசி விஸ்வநாதரை பார்க்க கிளம்பினேன். ஸ்ராவண மாதப் பிறப்பு என்பதாலும், அடுத்தநாள்...முதல் சோமவாரம் என்பதாலும் கூட்டம் ஏகத்துக்கு இருந்தது. கொண்டு சென்றிருந்த அலைபேசி, மற்றும் பைகளை ஒரு கடையில் வைத்து விட்டு பூ, பிரசாதம் வாங்கிக் உள்ளே அழைத்துச் சென்று சேவிக்கப் பண்ணுவதாக வயதான பண்டிதர் ஒருவர் சொன்னார். முதலில் துண்டி கணபதியை பார்த்து விட்டு அங்கிருந்து ஸ்ரீ அன்னபூரணி அன்னையை பார்த்து விட்டு காசி விஸ்வநாதரை பார்க்க சென்றேன். ரொம்ப நீண்ட வரிசை அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "போல் பம், போல் பம்" ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஞான வாபி என்னும் மசூதியைக் காட்டினார், அந்த பண்டிதர். அது தான் பழைய விஸ்வநாதர் கோயில் என்றும், முகலாயரின் படையெடுப்பின்போது கோயில் இடிக்கப்பட்டு, மசூதி எழுப்பப் பட்டதாகக் கூறினார். (மசூதிக்குள் செல்ல அனுமதி இல்லை...அந்தபக்கம் முழுதுமே அடைத்துள்ளார்கள்). முன்னாள் இருந்த விஸ்வநாதரை, அப்போதிருந்த பண்டிதர்களும், பக்தர்களும் காப்பாற்றும் பொருட்டு அங்கிருந்த கிணற்றில் வைத்துள்ளர்கள். தற்போதிருக்கும் விஸ்வநாத ஸ்வாமி இந்த்ரபூரின் மகாராணியால் ஸ்தாபனம் செய்யப் பட்டதாகக் கூறினார்.
 
 
வெளியே வந்து, அன்னை விசாலாக்ஷி சந்நிதி நோக்கி புறப்பட்டேன். தமிழ் கோயிலில் குடி கொண்டிருக்கிறாள். ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களால் பூஜை செய்யப் பட்ட அம்பிகை ன்னு சொன்னார். கொஞ்ச நேரம் (ஐந்து நிமிடம்) ஓய்வு எடுத்துக் கொண்டு,ஆட்டோவில் நேராக பனாரஸ் ஹிந்து விஸ்வவித்யாலை க்குச் சென்றேன்  (BHU) . ரொம்ப பெரிய பரப்பளவில் இருந்தது BHU.அங்கிருந்த விஸ்வநாதர் கோயிலும் ரொம்ப ப்ரம்மாண்டமாவே இருந்தது. பிர்லா மந்திர் . கோயிலின் முன்பு founder of BHU பண்டித் மாளவியரின் உருவச் சிலையை நிறுவி இருக்கிறார்கள். ஸ்ரீ ஆதி சக்தி துர்கா பரமேஸ்வரி, சங்கட் மோச்சன்" , ஆஞ்சநேய ஸ்வாமி மற்றும் சீதா பிராட்டி, இளையாழ்வார்  பர்ஹு விட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.காசி பயணம் காலபைரவர் பார்காமல் முடியாது என்று எங்கோ படித்தால் நியாபகம்.ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளூர்வாசிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நல்ல பெரிய மீசையுடன், பெரிய திருமுக மண்டலத்துடன் அருள்பாலித்தார் ஸ்ரீ கால பைரவர். காசியில் உள்ள மற்ற சந்நிதிகளில் இருக்கும் பண்டிதர்கள் எமாற்றுவதுபோல் இங்கு இருப்பவர்கள் செய்வதில்லை என்று ஆட்டோ ஓட்டுனர் கூறினார். பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று ஸ்ரீ கால பைரவரின் அருகே சென்று அவரைத் தழுவி வழிபட்டனர்.
 
பின்னர் ஆட்டோவில் ரூமுக்கு விரைந்து . அங்கிருந்து ரயில் நிலையம் வந்து, ஆட்டோ ஓட்டுனருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவுத்துக் கொண்டு விடை பெற்றேன் . இறங்கு பொழுது அவர் பெயர் கேட்டேன் சோட்டு செட் என்றார். அவரின் கை பேசி எண்  +91-9889834524 . இனிமேல் இந்த கட்டுரை படிக்கும் எந்த நபர்கள் காசி சென்றால் அவரை தொடர்பு கொண்டு பேசினால் அவர் தங்களை ரயில் வண்டிக்கே வந்து கூப்பிட்டு சென்று உங்களுக்கு வேண்டிய உதவியை செய்வார்.கான்பூர் ராஜா என்று மறக்காமல் சொல்லுங்கள் இரவு இரண்டரை மணியளவில் கான்பூர் வந்தேன் . நான் இங்கு வந்ததுக்கு அப்புறம் அவர் போன் பண்ணி பத்திரமாக வந்து சேர்ந்தன என்பதை விசாரித்து கொண்டார்.. 



படிக்க மேலே உள்ள சுட்டியை தொடருங்கள்

Thursday, July 21, 2011

இதுதாண்டா ஜெ. போலீஸ்!

ஷாக் 10 - ஆயிரமாயிரம் புகார்கள்... அதிரடிக் கைதுகள்


அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி! இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.

தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!

சன் நோக்கி 'கன்’! '


சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.'போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!

அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு? 

மதுர... குலுங்கக் குலுங்க! 


'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப்  படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ.. 

கொலை கொலையாய்...


இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள்,  தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!


மந்திரி... தந்திரிகள்!


வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.

பினாமிகள் ஜாதகம்...

கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!

பணப் பாதை அடைப்பு! 

எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர். எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.

லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி! 
 
மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம்  கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
 
குடும்ப டார்கெட்! 


 கடந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ. 
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.

வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்... 

 தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.

வதந்திகளை நம்புங்கள்! 

 புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி,  'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!

விகடன் 

அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் ஒரு நாள்...


நான் கான்பூர் வந்து நான்கு வருடம் முடிகிறது . இந்த நான்கு வருடங்களில் நான் மூன்றே மூன்று வட இந்தியா ஆன்மீக மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்து உள்ளேன். அவை, அயோத்யா, நைமிசாரண்யம் மற்றும் ஆக்ரா.. சில இடங்களுக்கு நான் போகும் படி பிளான் பண்ணினால் எதில் என் வாத்தி மண்ணை அள்ளி போட்டு விடுவார். சரி இந்த கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் ( குறைந்த பட்சம் பத்து நாட்கள் ) இங்கே இருந்து ஒழுக்கமா என் ஆராய்ச்சி வேலையே பார்க்கலாம் என்று முடிவு பண்ணி முதலில் என் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டேன்.


இதற்க்கு நடுவில் , சென்ற மூறை எங்கள் லேப்ல மூன்று  ஜூனியர் மாணவர்கள் சேர்ந்தார்கள். எங்கள் அலைவரிசை எல்லா விசயத்திலும் ஒற்று போகும். மொத்தத்தில் விட்டு கொடுத்து வேலையே பார்போம். யாரையும் எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம். சரி நாம் அனைவரும் சேர்ந்து பத்ரி நாத், கேடர் நாத், லதாக், லெஹ் போலாம்னு முடிவு பண்ணினோம். அதற்க்கு ஏற்றார் போல வாத்தி சுமார் 15 நாள் விடுமூறையில் லதாக் செல்வதாக சொன்னார். சரி அவர் போகும் இடத்திற்கு  நாம் ஏன் போக வேண்டும், நாம் பத்ரி நாத், கேடர் நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போலாம்னு பக்கவ பிளான் போட்டு, டிக்கெட் புக் பண்ணி , தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நான் முன் நின்று பண்ணினால்,வழக்கம் போல தல தான் பயணத்தை மாற்றி விட்டார். அது போக பத்ரி நாத், கேடர் நாத், இரண்டும் வேவ் வேற  ரூட் . கேடர் நாத் போக குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும். இது டெல்லி ல இருந்து இல்லை. நம்ம ஹரித்வார்ல இருந்து..அது போல பத்ரி நாத் குறைந்த பட்சம் மூன்று நாட்கள். இந்த ஸ்தலங்களை நான் பார்க்க வேண்டும் என்பதற்கு விஜய் டிவி யில் வந்த ரஜினியின்பாபாவை  தேடி நடந்தது  என்ன தொடரில் இருந்து.. இருக்கிற ஐந்து நாட்களில் இவை அனைத்தையும் பார்க்க முடியாது என முடிவு பண்ணி பத்ரி நாத் , ஹரித்வார், ரிஷிகேஷ் என முடிவு பண்ணினேன்.
 

என் சக நண்பர்கள் இரண்டு பேருக்கு கிளம்புற இரண்டு நாட்களுக்கு முன்பு செம காய்சல்.. அவர்கள் காய்சல் குறைந்தால் வருவதாக சொன்னார்கள். ஆனால், அவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது . எங்கயும் அழைத்து செல்வது பெரிய விஷயம் இல்லை.அங்கு போய் உடம்புக்கு ரொம்ப முடியாட்டி என்ன பண்ணுவது என்ற காரணத்தில் அந்த ட்ரிப் கிளம்புற இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் பண்ணினேன். சரியான பல்பு மற்றும் ஆப்பு பணம் விசயத்தில்.. சரி, யாரையும் தொல்லை படுத்த வேண்டாம். அலஹாபாத்மற்றும் காசி செல்வதாக முடிவு பண்ணினேன். ரயில் வண்டியில் இடம் இல்லை. எனக்கு தெரிந்த அரை குறை ஹிந்தியில் சமாளிக்கலாம் என மிகுந்த தன்னம்பிகை. சரி அங்கு போய் டிக்கெட் எடுத்து சமாளிக்கலாம் என முடிவு பண்ணினேன்.


சென்ற சனி கிழமை  அன்று கிளம்பினேன். என்ன நேரமோ, பேய் மழை விடியலில், சரி போக வேண்டாம் என்று முதலில் தோன்றியது . தீடுர்னு ஒரு ஸ்பார்க், மழையாவது , வெங்காயம் என நினைத்து கிளம்பினேன். வண்டியில் சென்று கொண்டு இருக்கையில் அலஹாபாத்திலும் மழை பெய்தால் எப்படி திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்று? நான் போகலாம் என்று நினைத்த வண்டி வழக்கம் போல்  செல்லவேண்டியிருந்த ரயில் வண்டி இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. வண்டி மெதுவாக கான்பூரைக் கடந்து சென்றதும் மழை லேசாக நிற்கத் துவங்கியது. மூன்று மணி நேரப் பிரயாணத்தின் பிறகு அலகாபாத் சென்று அடைந்தேன் . அங்கு மழை பெய்யவே இல்லை. ஆனால் வானிலை படு ஜோராக இருந்தது. சம் திங்  லைக் குற்றாலம் . ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி திரிவேணி சங்கமத்தாய் சென்று அடைந்தேன். வழக்கம் போல  என்கிட்டே கேமரா இல்லை....அதனால் புகைப்படம் எதுவும் எடுக்கலை...


சங்கமத்திற்கு செல்வதற்காக படகுகள் தயார் நிலையில் இருந்தன. படகில் செல்லும்போது படகோட்டி திரிவேணி சங்கமத்தின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். நெறைய பக்த சிகாமணிகள் இங்கு வந்து செல்வதால் தான் யமுனையும், கங்கையும், சரஸ்வதியும் வற்றாமல் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார். இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர், பிராட்டி சீதை, இளையாழ்வாரும் இங்கு வந்துள்ளார்களாம் பிராட்டி சீதை, திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்துள்ளார் என்றும் சொன்னார். ரொம்பவே ஆழம் ன்னும் சொன்னார். அப்புறம் த்ரிவேணியில் எப்படி நீராடுறது? ரொம்பவும் குஷியா இருந்தது. இதற்கிடையே மற்றொரு படகு எங்களருகில் வந்து நின்றது. அதில்...கங்கை அன்னையின் அழகிய திருவுருவச் சிலை இருந்தது. அதில் ஒரு படகோட்டியும், ஒரு பண்டிதரும் அமர்திருந்தனர். அருகில்  வந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளுக்கு பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மூன்று தேங்காய், பழம் இத்யாதிகள் வைத்து...பண்டிதர் மந்திரங்களை சொல்லச் சொல்ல...பின்மொழிந்து . (அடியேனுக்கு புரிந்தவரை...அந்த மந்திரங்களில்....குடும்ப நலனும், முன்னோர்களின் ஆத்மா சுவர்க்கம் அடைவதற்கும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டுதலும்...போன்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன) இறுதியில் சில பண்டிதர்களுக்கு தானம் செய்வதாகவும் சங்கல்ப்பம் செய்யும் வாசகமும் வந்தது. (பணம் செலுத்தினால் அவர்களே அதை செய்துவிடுவதாகவும் கூறினார்கள்). 
 

இதோ...வந்துவிட்டதே..திரிவேணி சங்கமம்....!!!!! படகு போன்ற அமைப்பின் நடுவே.....பள்ளம் அமைத்து அதில் நீராடச் சொல்கிறார்கள்.  அந்த பள்ளமே..மார்பு அளவுக்கு தண்ணீர்  இருந்தது.பள்ளத்தின் இரு பக்கங்களில் கட்டைகள் வைத்துள்ளனர்..அந்த கட்டைகளை பிடித்துக்கொண்டு மூழ்கி எழலாம். யமுனை, கங்கை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடமே திரிவேணி சங்கமம். யமுனை ஆற்றின் நிறம் கறுப்பு ன்னு சொன்னாங்க. (ஆனால்...கருப்பாகத் தெரியலை...பச்சை கலந்த பிரவுன் போலத் தெரிந்தது). கங்கை நதி வெள்ளை நிறம் ன்னு சொன்னாங்க. (தூரத்தில் இருந்து பார்த்தா தான் வெள்ளையா தெரியுது..!!!!) சரஸ்வதி நதி வெளியே தெரியாதாம்..அது அந்தர்வாகினி ன்னு சொன்னாங்க. ஸ்நானம் முடிந்ததும்...பால் சமர்பிக்கிறோம் ன்னு சொல்லச் சொல்லி எங்களது கைகளில் பால் என்ற பேரில் தண்ணியை ஊற்றினார்கள். கரைக்கு அருகே...சாம்ராட் அசோகரின் கோட்டை இருக்கிறது. (பூட்டி இருந்தது...உள்ளே போக முடியலை) அதனருகே...பாதாளபுரி கோயில் இருக்கிறது. பாதாளபுரியில் ஒரு பெரிய ஆலமரம் (வட வ்ருக்ஷம்) இருந்தது. அதனடியில் ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி மற்றும் இளையாழ்வார் மூவரும் மூன்று இரவுகள் தங்கி விஸ்ராந்தி செய்தனர் ன்னு சொன்னாங்க. 


ராமர், கிருஷ்ணர், காளி மாதா,  யமராஜர், யுதிஷ்டிரர், சனீஸ்வரர், ஹனுமான், பிள்ளையார் எல்லாரும் இருந்தாங்க. எல்லாருமே வட இந்தியா ஸ்டைல் ல இருந்தாங்க. பாதாளபுரிக்கு அருகில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் கோயில் இருந்தது.  அங்கு சென்று வரலாம் ன்னு ஆஞ்சநேயர் கோயில் நோக்கி விரைந்தோம்...போகும் வழியில் ஒரு குட்டி யானை, பிள்ளையார் போலவே அந்த யானைக்கும் வலது தந்தம் பாதி தான் இருந்தது. திரிவேணி சங்கமத்தின் பக்கத்தில் இருந்தாலும் யானையை குளிப்பாட்டவே இல்லை, பாவம் யானை.ஆஞ்சநேயர் கோயிலினுள் நுழைந்தோம். ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில்...அனால் தரையோடு தரையாக.....இருந்தார் (horizontal position). அவரது திருமேனி முழுதும் சிந்தூரம் பூசி இருந்தனர். அங்கிருந்து சற்று மேலே சென்றால் ஸ்ரீ ராமர் சந்நிதி. இந்தக் கோயிலின் வாசலில் நின்று பார்த்தால்...நம்ம ஊர் கோயில் மாதிரி ஒரு பெரிய கோயில் தெரிஞ்சுது.எந்த ஊருக்கு போனாலும் அங்கு எந்த ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும் என கேட்பேன். இந்த ஊரில் கிட்ட தட்ட சுமார் ஒரு மணி நேரம் அலைந்து மதிய உணவை "பாபா" உணவகத்தில் முடித்துக்கொண்டு, மறுபடி அலஹாபாத்தில் உள்ள வேறொரு ரயில் நிலையத்திற்கு வந்தேன். 

வரும் வழியில் கொட்டு மழை, ரிக்ஷாவில் நனைந்து கொண்டே ... திரிவேணி சங்கம ஸ்நானம் போதாது ன்னு...சொக்கநாதர் கருணையால் ஆகாச கங்கை ஸ்நானம்.  

நாளை காசி யாத்திரை பற்றி பார்போம்  

Wednesday, July 20, 2011

ஐ யம் கலாம் ( i Am KALAM ) - சினிமா விமர்சனம்


"எதிர்காலம் பற்றிய லட்சியக் கனவுகளை சிறிய வயதிலேயே காணுங்கள்". என  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார். அந்த வார்த்தைகளையே கருவாக வைத்து, உருவாகி இருக்கிறது 'ஐ யம் கலாம்’ என்ற திரைப்படம்.

 கதை..


சோட்டு என்ற  சிறுவன் தன் குடும்ப பாரத்தைச் சுமக்க, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு, ராஜஸ்தானின் சாலையோர  ஓட்டலில் வேலை செய்கி றான். ஒரு முறை டிவியில்  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'சிறு வயதில் தான் கடைகளில் பேப்பர் போட்டு வளர்ந்தேன்’ என்று சொல்வதைக் கேட்கிறான். சோட்டுவும் எதிர்கால கனவில் மூழ்குகிறான். நன்கு படித்து, எதிர்காலத்தில் கோட், சூட், அணிந்து வேலைக்குச் செல்வதைபோல் கனவு காண்கிறான். தன் பெயரையும் கலாம் என்றே மாற்றி வைத்துக் கொள்கிறான். 

சுட்டி சோட்டு சுறுசுறுப்பு, புரிந்துகொள்ளும் திறமை, ஓட்டல் உரிமையாளரான பட்டிக்குப்  பிடித்துப் போய்விடுகிறது. சாப்பிட வருவோரிடம் சோட்டு நன்கு சிரித்துப் பேசி, கவர்வதால், வாடிக்கை யாளர்கள் பெருகுகின்றனர். அந்த ஓட்டல், அங்கே ராஜ குடும்பத்தின் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ளது. ராஜ குடும்பத்தின் சிறுவனான ரண் விஜய். அந்தப் பரம்பரையின் இளவரசன் என்பதால், உடன் பிறந்த  சகோதரிகளுடன்கூட விளையாட அனுமதி இல்லை.


இதனால், தனித்து விடப்பட்ட விஜய், சோட்டுடன் ரகசியமாக நட்பு வைத்துக் கொள்கிறான். ஒருநாள் உரிமையாளரான பட்டி, சோட்டு மீது தவறாக திருட்டுப் பழி சுமத்துகிறார். யாருமே சோட்டுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதனால், ஓட்டலை விட்டு வெளியேறிவிட்டாலும் சோட்டுக்கு, தன் இலட்சியக் கனவு ஒருநாள் நிறைவேறும் என்பதில் உறுதி குலையவில்லை. சோட்டு கனவு நிறைவேறுகிறதா?


ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரப்போகும் இந்தப் படம், அதற்கு முன்பாகவே... ஆறு விருதுகளைப் பெற்றுவிட்டது. குறிப்பாக, படத்தின் நாயகனாக சிறப்பாக நடித்த 'ஹர்ஷ் மயார்’ சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்று இருக்கிறான்.

டெல்லியைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் 'ஸ்மைல் ஃபவுண்டேஷன்’ சமூகத் தொண்டு நிறுவனம்தான் படத்தைத் தயாரித்து இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுக்கான படம்  எடுக்கத் திட்டமிட்டது. லீலா மாத்தப் பாண்டா எனும் ஹாலிவுட்டின் பிரபல டாக்குமெண்ட்ரி இயக்குனர்தான் இந்தப் படத்தின் இயக்குனர். 

ஸ்மைல் ஃபவுண்டேஷன் தயாரித்த 'ஐ யம் கலாம்’, உலகளவில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. அதில், ஜெர்மனியின் 'லூகாஸ் இன்டர்நேஷனல் திரைப்பட’ விருது மற்றும் இன்டர் நேஷனல் சினி கிளப் ஃபெடரேஷனின் 'டான் க்யூக்சோட்’ விருது, கோவாவில் நடந்த அகில உலக திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'யங் ஜூரி’ விருது, பார்பிகான் லண்டனின் குழந்தைகள் திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'ஆடியன்ஸ் ஃபேவரைட்’ விருது ஆகியவை முக்கியமானவை.   



கூகுள், விக்கி பீடியா, விகடன் 

Tuesday, July 19, 2011

இருசக்கர வாகன ஓட்டிகளின் அல்லல் தீர...

 
நாள்தோறும் பெருகும் இருசக்கர வாகனங்களை, மாநிலம் முழுவதும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்களுடைய வாகனங்களுக்குரிய ஆவணங்களை முறைப்படுத்த முடியாமல், அடிக்கடி அபராதம் கட்டி அவதியடைந்து வருகின்றனர்.இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட, சாலைவரி, காப்பீடு, ஓட்டுநர் உரிமம், புகை பரிசோதனை, முன்பக்க விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்ளிட்டவைகள் அவசியம்.
 
இத்தகைய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டுதல்,அதிவேகமாக ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை சிக்கிக்கொண்டு, அபராதம் கட்டுவதோடு அல்லல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள வாகன ஓட்டிகள் ஏராளம்.காவல் துறையினர் சமூக அக்கறையில் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனரா அல்லது தினந்தோறும் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு எண்ணிக்கையில் கணக்கு சொல்வதற்காகவா என்பது ஒருபுறம் இருந்தாலும், அபராதம் விதித்தல் மட்டுமே, வாகன ஆவணங்களைச் சரிப்படுத்த உதவாது.
 
 
நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதே அதற்கு உதவும் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.சோதனையிடும் இடத்தில் முகவரியை மாற்றிக்கொடுத்து விட்டுச் செல்லும் சிலரால், பின்பு அபராதத் தொகையை அந்தக் காவல் துறை அதிகாரிகளே கட்டவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.எனவே, அபராதம் வசூலிப்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள், உடனடியாக அவற்றைப் பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
 
வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் பிரச்னைகள்: இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகனங்களை மாற்றுவதால்,ஆர்.சி. புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்ய விரும்புவதில்லை.காப்பீடு செய்ய முகவரை நாட வேண்டியுள்ளது. அலுவலகத்தில் சென்று காப்பீடு செய்ய வேண்டுமானால் வாகனத்தை நேரில்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒருநாள் வேலை பாதிக்கப்படுகிறது.இதேபோன்று ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், பழகுநர் உரிமம் பெற ஒருநாள், நிரந்தர உரிமம் பெற ஒரு நாள் என இரண்டு நாள்கள் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு எட்டு போட்டால்தான் உரிமம் வழங்குவார்கள் என்கிற அச்சம் கிராம மக்களிடம் அதிகம் உள்ளது.   
 
 
மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் என்றாலே இடைத்தரகர்களைத்தான் நாடவேண்டிய கட்டாயம் நடைமுறையில் நிலவி வருகிறது. இதனால் கூடுதல் செலவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆவணங்களைப் பெறுவதில் பலர் தவறி விடுகின்றனர்.அதிகாரிகளிடம் சோதனையில் சிக்கும் ஒவ்வொரு முறையும், எவ்வளவு தொகையாயினும் அபராதம் கட்டும் வாகன ஓட்டிகள், வேலை இழப்பு ஏற்படுதல் மற்றும் கடினமான நடைமுறைகளாலேயே ஆவணங்களை முறைப்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.
 
போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது சரியான நடவடிக்கைதான் என்றாலும்,மதுக்கடையுடன் மதுக்கூடத்தையும் ஒருங்கே அமைத்துவிட்டு, பின்பு போதையுடன் வாகனத்தை ஓட்டினார் என்று வழக்குப் பதிவது எந்த விதத்தில் நியாயம்?காவல் துறையினர், காப்பீட்டு நிறுவனங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியன இணைந்து செயல்படுவதன் மூலமே இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும்.  
 
இத்துறையினர் இணைந்து, போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய நகரங்களில் மாதந்தோறும் முகாமிட வேண்டும். முகாமில் உடனடி காப்பீடு வழங்குதல், பழகுநர் உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் வழங்குதல், புகை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்தினால், அனைத்து வாகன ஓட்டிகளின் ஆவணங்களும் முறைப்படுத்தப்பட்டுவிடும். மேலும் மதுக்கூடத்தை அறவே அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் போதையுடன் வாகனம் ஓட்டுவதும் குறையும். 
 
வை. ராமச்சந்திரன் 

Monday, July 18, 2011

மாறன்களும் மர்டோக்கும்! ஓ பக்கங்கள் - ஞாநி

பல ஆண்டுகள் முன்பு சன் டி.வி.யின் அதிபர் கலாநிதி மாறன் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்தியாவின் ரூபர்ட் மர்டோக் ஆக வளர்வதே தம் லட்சியம் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அதாவது பத்திரிகை, டி.வி, சினிமா, மீடியா என்று எல்லாத் தகவல் தொடர்புத் துறைகளிலும் மர்டோக் ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ் நாட்டில் இந்தியாவில் முதல் இடத்தைத் தமது குழுமம் கைப்பற்ற வேண்டும் என்பதே தம் ஆசை என்று அவர் சொல்லியிருந்தார். 


இந்த வாரம் கலாநிதி மாறன், ரூபர்ட் மர்டோக் இருவர் பெயர்களும் செய்திகளில் அடிபடுகின்றன. கலாநிதிக்கும் மர்டோக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஏற்கெனவே அப்பா ஆரம்பித்து நடத்திய பத்திரிகைத் தொழிலில் நுழைந்து அடுத்து பெரு முதலாளிகளாக வளர்ந்தவர்கள். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்கள் குழுமத்தை விரிவுபடுத்துவது, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் முடக்குவது, தொழில் வளர்ச்சிக்கு அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்துவது முதலிய அணுகு முறைகள் இருவருக்கும் பொதுவானவை.  

அரசியல் சார்ந்த தொழில் சிக்கலில் இருவரும் இப்போது சிக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக உலகத்தின் மூத்த வார இதழான ‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ பத்திரிகையையே மர்டோக் மூடவேண்டியதாகி விட்டது. சன் குழுமத்தில் சுமங்கலி கேபிள் விஷன், சன் பிக்சர்ஸ் எல்லாம் அதே நிலைமையைச் சந்திக்கக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. பங்கு மார்க்கெட்டில் சன் குழும பங்குகள் கடந்த இரு மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.  ரூபர்ட் மர்டோக் உலகத்தின் ஒரு பெரும் பத்திரிகை, டி.வி, கேபிள், சினிமா தொழிலதிபர். ஆனால் நிச்சயம் ஒரு முன்னுதாரணமாக இளைஞர்கள் கொள்வதற்கான தொழிலதிபர் அல்ல. தான் ஆதரிக்கும் கட்சியை ஆளும் கட்சியாக்க முயற்சிப்பது, அல்லது ஆட்சிக்கு வரும் கட்சியை, தனக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் கட்சியாக ஆக்குவது என்ற அரசியல் விளையாட்டில் சுமார் 50 வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பவர் இப்போது 80 வயதாகும் மர்டோக். 


ஆஸ்திரேலியாவில் பிறந்து, தொழில் சட்டங்களை வளைக்கும் வசதிக்காக அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்து கொண்ட ரூபர்ட் மர்டோக்கின் மீடியா சாம்ராஜ்யத்தில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரபலமானவை. ஆஸ்திரேலியாவில் ஹெரால்ட், பிரிட்டனில் சன், சண்டே டைம்ஸ், டைம்ஸ், அமெரிக்காவில் ஸ்டார், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்று பல பத்திரிகைகள். ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் நியூஸ், ஸ்டார் டி.வி. (நம்ம ஊர் ஸ்டார் விஜய் உட்படத்தான்) என்று மீடியா கம்பெனிகள் எல்லாம் மர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனுடையவைதான். 

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் 38வது இடம் மர்டோக்குடையது. உலக அளவில் 117வது இடம். ஆனால் வரி ஏய்ப்பில் மன்னன். இதுவரை அவர் லாபத்தில் ஏழு சதவிகிதத்துக்கு மேல் வரியாகக் கட்டியதில்லை. வரி ஏய்ப்பதற்காகவே பல கம்பெனிகளை உருவாக்கி அவற்றையெல்லாம் வரிச் சலுகைத் தீவுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். கடைசியாக மர்டோக் தொடர்பான சர்ச்சை, பத்திரிகைத் துறைக்கே அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக கலாநிதி மாறன் சிக்கியிருக்கும் சர்ச்சையும் அப்படிப்பட்டது தான். சாமியார் - நடிகை தொடர்பானது என்று சன் டி.வி. ஒளிபரப்பிய ஆபாசமான வீடியோ, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் பார்க்கக்கூடிய விதத்தில் பல முறை வர்த்தக நோக்கில் ஒளிபரப்பப்பட்டது. மீடியா நெறி முறைகளுக்கு விரோதமானது. 


மர்டோக் அண்மையில் இழுத்து மூடிய நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் வார இதழ் கடைசியாக 28 லட்சம் பிரதிகள் விற்று வந்தது. ஐம்பதுகளில் இந்த இதழ் 90 லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது.நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் இதழ் பற்றிப் படிக்கும்போது சில தமிழ் பத்திரிகைகளின் ஞாபகம் வரக் கூடும். ‘நியூஸ்’ எப்போதுமே பரபரப்பான செய்திகளை நம்பியே இயங்கி வந்திருக்கிறது. அரசியல்வாதிகள், சினிமா, டி.வி.நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பற்றிய செக்ஸ் தொடர்பான விஷயங்களைத் தோண்டித் துருவி வெளியிடுவதுதான் ‘நியூஸ்’ இதழின் பிரதான வேலை.நியூஸ்’ இதழால் அவதூறு செய்யப்பட்டவர்கள் பலர் வழக்கு போட்டு ஜெயித்திருக்கிறார்கள். பல வழக்குகளை கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் பணம் கொடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆங்கில நடிகர் டெனாம் எலியட்டின் மகள் ஜெனிஃபர் தெருவில் திரியும் வேசியாக வாழ்க்கை நடத்துகிறார் என்று ‘நியூஸ்’ தொடர்ந்து எழுதியதையடுத்து ஜெனிஃபர் தூக்கு போட்டுக் கொண்டு செத்தார். 

குழந்தைகளிடம் வலுக்காட்டாயமாக செக்ஸ் உறவு கொள்வோரை அம்பலப்படுத்தும் வேலையில் ‘நியூஸ்’ ஈடுபட்டது. இதில் சில உண்மையான குற்றவாளிகள் சிக்கினார்கள். சில அப்பாவிகள் அவதூறுக்குள்ளானார்கள்.  ‘நியூஸ்’ வெளியிட்ட பரபரப்பு செய்திகளில் உண்மையாக இருந்து தாக்கத்தை ஏற்படுத்திய செய்தி கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்வது பற்றியதாகும். மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ‘நியூஸ்’ வெளியிட்டதையடுத்து மூவரும் பத்தாண்டுகளுக்கு விளையாட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்கள்.‘நியூஸ்’ இதழின் பரபரப்பான செய்திகளுக்குப் பின்னால் இருந்த முக்கிய அம்சம், அது அவற்றைத் திரட்டுவதற்காகச் செய்த ஊழல்களும் லஞ்சம் தரும் நடவடிக்கைகளுமாகும். பல போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு வழக்கின் ரகசியத் தகவல்களைப் பெறுவதை ‘நியூஸ்’ வாடிக்கையாக வைத்திருந்தது. (தமிழ்நாட்டிலும் சில தினசரிகள் காவல் நிலையங்களில் இருக்கும் கீழ்மட்ட கான்ஸ்டபிள்களை ‘கவனித்துக்கொள்ளும்’ வழக்கம் இருந்து வருகிறது.)


இந்த நடவடிக்கைதான் இப்போது பத்திரிகையையே மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களுடைய ஃபோன்களையும், கோர்ட் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பவர்களுடைய ஃபோன்களையும் ஒட்டுக் கேட்பதை ‘நியூஸ்’ இதழ் பத்திரிகையாளர்கள் போலீஸ் உதவியுடன் செய்து வந்தனர். டெலிஃபோன்களின் வாய்ஸ் மெயில்களைப் பயன்படுத்தி செய்திகளை எழுதினார்கள்.  நான்கு வருடங்கள் முன்பு, பிரிட்டிஷ் அரசக் குடும்ப ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டது அம்பலமானது. இளவரசர் வில்லியம் தொடர்பான செய்திகளை ‘நியூஸ்’ தொடர்ந்து வெளியிட்டபோது, ஓரிருவருக்கு மட்டுமே தெரிந்தவற்றை எப்படி வெளியிடுகிறார்கள் என்று வில்லியம் சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒட்டுக் கேட்பு அம்பலமானது. ‘நியூஸ்’ நிருபர் க்ளைவ் குட்மேன் (!) இதை ஒப்புக் கொண்டு நான்கு மாத சிறைத் தண்டனை பெற்றார்.

‘நியூஸ்’இதழுக்கும் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த அளவு நட்பும் உறவும் இருந்தன என்பதற்கு மேற்படி வழக்கே ஓர் அடையாளம். ஏனென்றால் அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஹேமேன் பதவியிலிருந்து விலகி நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராகிவிட்டார்.ஒட்டுக் கேட்பு மோசடி அம்பலமானதையடுத்து பத்திரிகையின் ஆசிரியர் ஆண்டி கல்சன் பதவியிலிருந்து விலகவேண்டி வந்தது. அவரோ அடுத்தபடியாக இப்போதைய பிரதமரான கேமரோனின் செய்தி ஆலோசகராகப் பொறுப்பேற்றார்! ரூபர்ட் மர்டோக் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ‘நியூஸ்’ இதழுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திவைக்க முயற்சித்தார். ( ஒற்றுமைகள் தொடர்கின்றன?) மேலும் மேலும் தகவல்கள் கசிய ஆரம்பித்தன. காணாமற்போய் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுமியின் ஃபோன் வாய்ஸ்மெயில்களையெல்லாம் ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டதும் அம்பலமானது. ஆயிரக்கணக்கான ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டிருப்பது தெரியவரவும், மூன்று ‘நியூஸ்’ நிருபர்கள் கைது செய்யப்பட்டனர்.


 நியூஸ்’ இதழின் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளை அம்பலப்படுத்தியது இன்னொரு பத்திரிகையான கார்டியன். பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை இந்த விவகாரம் ஒலித்தது. நாடாளுமன்றத்தின் செலக்ட் கமிட்டி இது பற்றி விசாரித்தது. ‘நியூஸ்’ இதழின் நிருபர்கள் கமிட்டி முன்பு பொய்கள் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது. கடைசியில் பிரதமர் கேமரோன் தம் ஆலோசகர் கல்சனை வீட்டுக்கு அனுப்பி விட்டதோடு நிற்காமல் கைது செய்யவும் உத்தரவிட்டார். ரூபர்ட் மர்டோக், பத்திரிகையை இழுத்து மூடி விட்டார். இன்னும் பல தலைகள் மீது நடவடிக்கை தேவை என்று குரல்கள் எழுந்துள்ளன. மர்டோக்கின் ‘நியூஸ்’ இதழ் மட்டுமல்ல, இதர பத்திரிகைகளான, சன், டைம்ஸ் ஆகியவையும் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனின் மகனுடைய நோய் என்ன என்று அறிவதற்காக ஈ மெயில்கள் மூலம் மருத்துவ ரிகார்டுகளையெல்லாம் திருடியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

 எல்லா விவரங்களும் இன்னும் முற்றாக வெளிவரவில்லை. சில வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து பணம் நஷ்ட ஈடாகக் கொடுத்துவிடும்போது அந்தத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்ற சட்ட வசதியை ‘நியூஸ்’ இதழ் குழுமம் பயன்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் சில பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பரபரப்புக்காக அவதூறுகளை வெளியிடுவதும், பல அதிகாரிகள், பொது வாழ்வில் இருப்போரை பிளாக் மெயில் செய்வதும், அரசியல் செல்வாக்கையோ பண பலத்தையோ பயன்படுத்தி இவற்றையெல்லாம் அமுக்கப் பார்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பிரிட்டன் போன்ற நாடுகளில் இவை நடந்தாலும், அமபலமாகும் வாய்ப்பும், அடுத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பும் நம்மைவிட அதிகமாக இருப்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.  இதழியல் நாம் கண்டுபிடித்ததல்ல. மேற்கிலிருந்து நமக்கு வந்ததுதான். ஆனால் அங்கிருந்து யாரை ரோல்மாடலாக எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பெஞ்சமின் பிராங்க்ளினா, புலிட்சரா, ரூபர்ட் மர்டோக்கா ? மர்டோக் காயிருந்தால், அதே படுகுழியில்தான் விழ வேண்டி வரும்.

 ஒரு பின்குறிப்பு: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்படவும், நான் தொடர்ந்து பங்கேற்ற ‘மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சி நிறுத்தப்படவும் அப்போது தயாநிதி மாறனின் அமைச்சகத்தில் மர்டோக்கின் ஸ்டார் டி.வி. அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்புதான் காரணம். நிகழ்ச்சிகள் நிறுத்தப்படாவிட்டால், சேனலின் உரிமங்கள் ரத்தாகும் என்று சொல்லப்பட்டது.

இந்த வாரப் பூச்செண்டுகள்!

1. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசிடம் ஆண்டுதோறும் தெரிவிக்கும் தங்கள் சொத்துக் கணக்குகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எல்லா பொது மக்களும் தெரிந்துகொள்ள உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோருக்கும், இந்த வழக்கை விடாப்பிடியாக நடத்தி வெற்றி பெற்ற சமூக ஆர்வலர் மாதவுக்கும் இ.வா.பூ. 

2.படுகேவலமான நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தலித் மாணவர் விடுதிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியிருப்பதற்காக ஜெயலலிதா அரசுக்கு இ.வா.பூ.  

இந்த வாரக் கேள்விகள்!


1. ஒவ்வோராண்டும் ஆடிப் பௌர்ண மியையொட்டி தன் கூட்டங்களில் காணிக்கை வசூல் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அதற்கு முறையான கணக்குக் காட்டுகிறதா? ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நன்கொடை என்றால் செக்தான் வாங்குவோம் என்று பி.ஜே.பி. சொல்வதைப் போல ஏன் ஆர்.எஸ்.எஸ். சொல்வதில்லை? 

2. சன் பிக்சர்ஸ் மீது திரைப்பட வியாபாரம் தொடர்பாக புகார்களைப் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கொட்டகை உரிமையாளர்கள் அளித்து வரும் சூழலில், சன் பிக்சர்சின் கடைசி பிரம்மாண்டப் படமான எந்திரன் தொடர்பாக இயக்குனர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஜெயலலிதாவின் போலீஸ் விசாரணை நடத்துமா? ஜெ.வின் வளர்ப்பு மகன் திருமணச் செலவு விசாரணையில் ஏ.ஆர்.ரகுமானிடம் கருணாநிதியின் போலீஸ் விசாரித்ததைப் போல? 

லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!


அடகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. 

இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் படித்துப் பயனடையுங்கள்!



தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம். 


ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.

வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!

வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்! 

தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.

தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!  
  
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.    


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.

வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  

சாதகங்கள்!


 ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.

மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.

அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.  

அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!


சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.   

சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.

கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!

கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.

சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..

தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.