Search This Blog

Thursday, April 19, 2012

கணக்கு - அருள்வாக்கு


இந்தக் காலத்தில் சிலபேரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் - பண விஷயத்தில் ரொம்பவும் ந்யாயமாயிருப்பவர், கணக்குகளில் ரொம்பவும் கறார் என்று. ஆனாலும் இப்படிப்பட்டவர்களுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரை (எல்லா அம்சங்களிலும் அவர்களுடைய நடவடிக்கைகளை)ப் பார்த்தால் அவற்றில் சிலதில் த்ருப்தி இல்லாமலும் பலபேருடையது இருக்கிறது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமலிருக்கிறது. படிப்பு, வயஸு, கார்யத்திறமை எல்லாம் சேர்ந்து, நடத்தையிலும் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்த்தால், எங்கேயாவது இடறுகிறது. நாமும் ‘பரவா யில்லை; அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாட்டா பாதக மில்லை’ என்று இவர்களிடம் நாட்டு நிர்வாஹத்தை ஒப்பு விக்கிறோம். ஆனால், ‘ஹ்யூமன் நேச்சர்’ (மநுஷ்ய இயற்கை) போகிற போக்கில், இப்படிக் கலந்தாங்கட்டிகளாக இருக்கிறவர்களுக்கு ஒரு பதவி, ஸ்தானம் என்பது கிடைத்த பிறகு, ஐந்துக்கு இரண்டு என்பது ஒன்று, அரை, கால், ஸைஃபர் என்று சரிந்துகொண்டே போகிறது. இதனால்தான், அர்த்த சுத்தத்தை மட்டும் சொல்லாமல், ஆனாலும் அதுதான் பொது நிர்வாஹத்தில் மிகவும் முக்யமான விஷயமாதலால், அதைப் பிரித்து முதலிடம் கொடுத்துச் சொல்லி, அதோடுகூட ‘ஆத்மசுத்தம்’ என்பதாக ஒருவனுடைய ஆல்- ரௌண்ட் காரக்டரும் பழுதில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமென்று விதியில் சேர்த்திருக்கிறார்கள்.அந்தக் காலத்தில் ஆஸ்திக்யம், சாஸ்திராபிமானமும், தெய்வத்திடம் பயபக்தி, அடக்கம், கட்டுப்பாடு முதலிய எல்லாமே பொதுவாக ஜன ஸமூஹத்தில் ஆழமாகப் பரவியிருந்ததால் மக்களின் காரக்டர் - லெவல் மிகவும் உயர்வாயிருந்தது. இன்றுபோல் தப்பு வழிகளில் இழுக்கிற அநேகக் கவர்ச்சிகளும் அப்போது கிடையாது. எனவே, சல்லடை போட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றில்லாமல் அங்கேயும் ஒரு சிலர் பூர்ணமாக ஆத்ம சுத்தமுடையவர்கள் என்னும்படியாக இருந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பொது நிர்வாஹத்துக்கு வரலாம், வர முடியும் என்று ஐந்தாவது clause (ஷரத்து) நிர்ணயித்து விடுகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, April 18, 2012

எனது இந்தியா! ( சடலங்களால் நிறைந்த மைதானம்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


தனது உத்தரவை மீறி கூட்டம் நடக்கிறதே என்று, டயருக்குக் கோபம் பொங்கியது. இரண்டு நிமிடம்கூட யோசிக்கவில்லை. கூடி இருக்கும் மக்களைச் சுட்டு வீழ்த்தும்படி படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். மறு நிமிடம், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயத் தொடங்கின. மக்கள் சிதறி ஓடினர். அடிவயிற்றை நோக்கி சுடும்படி கட்டளை இட்டார் டயர். மக்களைக் கதறக்கதற வேட்டையாடினார் டயர்.சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பேதமே இல்லாமல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. சுவரில் ஏறித் தப்ப முயன்று செத்து விழுந்தவர்கள், நெரிசலில் மிதிபட்டுச் செத்தவர்கள், கிணற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள் என, எண்ணிக்கையற்ற உடல்கள் அந்த மைதானத்தில் சரிந்து கிடந்தன. தனது ஆத்திரம் தீரும் வரை சுட்ட ஜெனரல் டயர், இறந்துபோன உடல்களைக்கூட மறுபடியும் சுடும்படி வீரர்களை வற்புறுத்தினார்.இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஜெனரல் டயரின் வீரர்கள் மாலை 5 மணிக்கு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர். மாபெரும் யுத்தக் களம் போல மாறி இருந்த அந்த மைதானத்துக்குள் நுழைந்து என்ன நடந்தது என்று பார்ப்பதற்கே மக்களுக்குப் பயமாக இருந்தது.இரவு எழுந்தது. ஒரு சிலர், தங்களது உறவுகளைத் தேடி மைதானத்துக்குள் நுழைந்தனர். மைதானம் எங்கும் இறந்துபோன உடல்கள், காயமுற்று மயங்கி வீழ்ந்த மனிதர்கள், பிய்ந்துகிடக்கும் கை-கால்கள் இருந்தன. போலீஸ்காரர்கள், மைதானத்துக்குள் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அத்தர் கௌர் என்ற இளம்பெண், இறந்துகிடந்த உடல்களைப் புரட்டி தனது கணவனைத் தேடினாள். ரத்த வெள்ளத்தில் கிடந்தது அவளது கணவன் பாக்மால் உடல். அதைக் கண்டதும் கதறித் துடித்தாள். உடலைத் தூக்கிச் செல்ல ஒரு கயிற்றுக் கட்டில் கொண்டு வந்து தருமாறு, தன்னோடு வந்திருந்த இரண்டு இளைஞர்களிடம் கைகூப்பி வேண்டினாள். இதற்கு இடையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே, கட்டில் எடுக்கச் சென்றவர்களால் மைதானத்துக்குத் திரும்பி வர முடியவில்லை. இருட்டுக்குள் கிடந்த கணவனின் உடலுக்கு அருகில் உட்கார்ந்தபடியே காத்திருந்தாள் அத்தர் கௌர். குண்டடிபட்டு மயங்கிக்கிடந்த ஷெரிஃப் என்ற சிறுவன் சுயநினைவு வந்து புலம்பினான். அத்தர் கௌர், அருகில் சென்றாள். அவளைத் தனது தாய் என்று நினைத்துக்கொண்டு, அம்மா நான் சாகப்போகிறேன், என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று, ஷெரிஃப் கதறினான். அவள் கண் முன்னே ஷெரிஃப் உயிர் பிரிந்தது.  இருட்டில் ஒரு நாய், இறந்த உடல்களை மோப்பம் பிடித்தபடியே அலைந்தது. கல்லெறிந்து அதை விரட்டினாள். கணவனின் உடலுக்கு அருகிலேயே படுத்துக்கொண்டு உடலை அணைத்துக்கொண்டாள் அத்தர் கௌர். அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தோண்றவில்லை. நாய்களின் குரைப்பொலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.


வலி தாங்க முடியாமல் அலறும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இறந்த உடல்களுக்கு நடுவில் தனது கணவனின் உடலைக் கட்டிக்கொண்டு இரவெல்லாம் விழித்துக் கிடந்தாள் அத்தர் கௌர்.மறுநாள் காலை 6 மணிக்கு அவளது உறவினர்கள் வந்தனர். அப்போது, அத்தர் கௌரும் மயங்கிக் கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பியபோது அவளால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. உறவினர்களைப் பார்த்தவுடன் வெடித்துக் கதறி அழுதாள். இறந்த அவளது கணவன் உடலை, வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.அந்த இரவில், தான் அனுபவித்தது ஒரு நரக வேதனை. உலகில் எந்தப் பெண்ணும் அதுபோன்ற துயரத்தை அனுபவிக்கக் கூடாது என்று, பின்னாளில் சாட்சியம் அளித்தபோது அத்தர் கௌர் கூறினார்.இப்படி, ஜாலியன் வாலாபாக்கில் இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு துயரக் கதை இருக்கிறது. 379 பேர் இறந்து போனார்கள், 1,000 பேர் காயம் அடைந்தார்கள் என்று, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகமாகவே இருக்கும். அதுபோலவே, காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,000-க்கும் அதிகம் என்பதை, விசாரணைக் குழு கண்டுபிடித்தது.சம்பவம் நடந்த மறுநாள், 1,526 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவ்வளவு மோசமான காயங்களை நான் கண்டதே இல்லை என்று, மருத்துவர் ஸ்மித் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெனரல் டயரின் திட்டமிட்ட இந்தப் படுகொலையை கண்டித்து, நாடே பொங்கி எழுந்தது, ஆனால், டயர் இதற்காகக் கண்டிக்கப்படவில்லை. மாறாக, கௌரவிக்கப்பட்டார். அவர், தனது ராணுவப் பதவியைத் துறந்து இங்கிலாந்துக்கு கிளம்பினார். ஜாலியன் வாலா பாக் படுகொலையைப் பற்றி விசாரிக்க, வில்லியம் ஹன்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் முன் ஆஜரான ஜெனரல் டயர், 'என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது. மேலும், அவரைக் கௌரவிக்கும் விதமாக 26,000 பவுண்ட் நிதி திரட்டி சன்மானம் வழங்கியது. 13 வெள்ளைக்கார சீமாட்டிகள் சேர்ந்து, ஜெனரல் டயருக்கு 'சேவியர் ஆஃப் பஞ்சாப்’ என்ற பட்டம் அளித்துப் புகழாரம் சூட்டினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான். அதற்குள், ஜெனரல் டயர் மற்றும் கவர்னர் ஓ டயர் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டனர். இவர்களைப் பழிவாங்குவதற்காக இங்கிலாந்துக்குப் புறப்பட்டான் உத்தம்சிங். அதற்காக, வணிகக் கப்பல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து 1921-ல் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கிருந்து 1923-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றான்.அங்கே, ராம் முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் மாற்றிக்கொண்டு, ஓர் உணவகத்தில் எச்சில் தட்டு கழுவினான். கூலி வேலை செய்து சேர்த்த பணத்தில் கைத்துப்பாக்கி வாங்கினான். 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினான் உத்தம் சிங். அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று, வேண்டிக் கேட்டுக்கொண்டான் உத்தம் சிங்.ஆனால், ஜெனரல் டயரின் கதை வேறுவிதமாக முடிந்தது. பட்டம், பெருமை என வசதியாக வாழ்ந்த ஜெனரல் டயருக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டது. கூடவே, பக்கவாதம் தாக்கியது. ஆயிரக்கணக்கானோரின் மரண அலறலுக்கு காரணமாக இருந்த, ஜெனரல் டயரின் குரல்வளை முடங்கியது. பேச முடியாமல் தவித்தார். ஜாலியன் வாலாபாக்கில் கை, கால்கள் முறிக்கப்பட்டு குற்றுயிர் ஆக்கப்பட்ட சிறார்களின் சாபம் போல, அவரது கை, கால்களும் செயலற்றுப் போயின. இயற்கை அவருக்கான தண்டனையை தானே வழங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.தன் இறுதிநாள் வரை, ஜாலியன் வாலா பாக்கில் செய்தது சரியான செயலே என்று விடாப்பிடியாகச் சொல்லி வந்தார் ஜெனரல் டயர். நோய் முற்றி ரத்தநாளம் வெடித்து 1927-ல் இறந்து போனார்.  ஜெனரல் டயரின் மரணத்தை பஞ்சாப் மக்கள் கொண்டாடினர். இன்றும், ஜாலியன் வாலா பாக் மைதானத்தில் உள்ள சுவர்களில்,  துப்பாக்கிக்குண்டு துளைத்த சிதறல்களைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் அதிகாரம் திட்டமிட்டு நிகழ்த்திய அந்தப் படுகொலை, இந்திய வரலாற்றின் பெருந்துயரங்களில் ஒன்று.ஆயிரமாயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் பெற்ற இந்திய சுதந்திரத்தை, அதன் அருமை தெரியாமல் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்களே ஆட்சி செய்திருக்கலாமே என்று நம்மில் ஒரு சாரார் கேலியும் கிண்டலுமாகப் பேசி வருகிறார்கள். அதைத்தான் சகிக்க முடியவில்லை.


விகடன் 

அருள் மழை ----------- 54


எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: 'ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’
ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்... எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்... ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. 'கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.
க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து 'கேசவ’ என்றாகி யிருக்கிறது. 'க’ என்றால் பிரம்மா; 'அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே 'க’ என்றும், 'அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து 'கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் 'கேச’ என்பது குறிக்கும். 'வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.
ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.
நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.
('தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து...)

Tuesday, April 17, 2012

ஜகம் நீ... அகம் நீ..! - 5


சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான மில்டன் சிங்கர் என்பவரும் மகாபெரியவாளை தரிசித்துள்ளார். அந்தச் சந்திப்பு குறித்து சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான, 'ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் நவீனமயமாகும்போது, இந்திய நாகரிகத்தின் அணுகுமுறையில் ஒரு வரலாற்று ஆய்வு’ (When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Indian Civilization, University of Chicago) என்ற தொகுப்பிலும் குறிப்பிட்டுள்ளார் மில்டன். இந்தத் தகவலை சங்கர பக்தஜன சபா செயலர் வைத்தியநாதன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மில்டன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நான் சென்னைக்கு 1954-55 வாக்கில் வந்தபோது, பலரும் சங்கராச்சார்யர் சுவாமிகளைப் பற்றி நிறையத் தகவல்கள் தந்தனர். அதில் அவரை விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால், இரு சாராருமே அவர் அசாதாரண இடத்தை வகிப்பவர் என்றே கூறினர். என்னைப் பொறுத்தவரையிலும் அவரைச் சந்தித்ததும் உரையாடியதும் என் மனத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்டன.ஓர் அமெரிக்கனான எனக்கு, ஓர் ஆசிரமத்தின் மரத்தடியில் அமர்ந்திருக்கும் சந்நியாசி ஒருவருடன் தரையில் அமர்ந்து பேசுவதில் ஓர் ஈர்ப்பு இருப்பதாகப்பட்டது. என்னுடன் வந்தவர்கள் தரையில் விழுந்து அவரை வணங்கினார்கள்.சனாதன ஹிந்து தர்மம் குறித்து இரண்டு வருடங்கள் நான் படித்துத் தெரிந்துகொண்டதைவிட, அவருடனான உரையாடலில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். அவர், அமெரிக்க இந்தியர்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, சரித்திரம் எல்லாவற்றையும் என்னிடம் கேட்டார். அவருடைய மனம் வெகு தெளிவாக இருந்தது. அவரிடம் நடத்திய பேட்டியை விடவும், அவரே சுவாரஸ்யமாகத் தெரிந்தார். ஹிந்து மதக் கோட்பாடுகள் தனித்துத் தெரிவதற்கு அதன் கொள்கைகளோ, அதன் அடிப்படைகளோ அல்லது ஆசாரங்களோ காரணம் அல்ல என்றார்.சமீபகாலமாக இந்தக் கொள்கைகள் எல்லாம் நீர்த்துப் போயிருப்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினாலும், ஆன்மிகப் பற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதவர்கள், பிராமணர்களுடன் கைகோத்துக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கையில், ஹிந்து மதத்துக்கு நல்ல எதிர்காலம் இருப்பது தமக்கு புலப்படுவதாகக் கூறினார்.

ஹிந்து மதத்தின் எதிர்காலம் குறித்து சுவாமிகள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், புத்துணர்ச்சிமிக்க அவரது உரையாடலும், மெலிதான நகைச்சுவையும், அவரது பற்றற்ற துறவு வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்தன. அவரை எல்லோரும் மடத்தில் வந்து பார்க்கவேண்டும் எனும் கட்டாயம் உண்டா எனக் கேட்டேன். சங்கர மடத்தைப் பொறுத்தவரை அப்படி கடுமையான நெறிமுறை எதுவும் இல்லை என்றார். ஒரு கட்டத்தில் திராவிட இயக்கம் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, 'தென்னிந்தியக் கலாசாரம் பற்றி நீங்கள் நடத்த விரும்பும் ஆய்வு, அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரையாவது பார்த்துப் பேசாவிட்டால், முழுமை ஆகாது!’ என்று ஆலோசனை கூறினார்.இந்தியாவுக்கு வருமுன், பண்டைய ஞானிகளின் ஆன்மிகத் தாக்கம் பற்றிப் படித்திருந்தாலும், அது பழங்கதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இங்கே வந்து சங்கராச்சார்யரைப் பார்த்த பின், அது இன்றைக்கும் இந்து மதத்தின் ஆதார சக்தியாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.1954-ல் நான் சென்னைக்கு வந்தபோது, பல துறைகளைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சார்யர் சுவாமிகளைக் குறித்து பாராட்டுதலான செய்திகளையே தெரிவித்தார்கள். அப்போது சென்னைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர். வே.ராகவன் அவர்களிடம், பெரியவாளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர்தான் ஆசிரமத்தில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.  சுவாமிகளின் அறிவாற்றலும், இந்தியாவின் வறுமைப் பிரச்னை பற்றிய சிந்தனைகளும், தொழில் மேம்பாட்டு முயற்சிகளில் இந்து தர்மத்தின் தாக்கம் பற்றிய கருத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரமத்தின் மரத்தடியில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தோம்.அவரது சீடர்களும் எங்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

இந்தியாவின் வறுமையை ஒழிக்க, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தானமாகக் கொடுக்கலாம் என்றார். சமூக நலன் சார்ந்த செயல்கள்,
ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் மேலும் உதவும் என்றார். அவை தவிர, இது வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டும் அல்ல, ஆன்மிகம் சார்ந்த பிரச்னை என்றார்.  பிராமணர்களும் தொழிலாளர் வர்க்கமும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அயல்நாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்படுவதை விட்டுவிட்டு, பாரம்பரியமான குடும்ப நடைமுறைக்கேற்ற எளிமையான வாழ்க்கை வாழ முடியுமானால், இடைப்பட்ட இரண்டு வர்க்கத்தினரால் நமது நாகரிகத்தை வளமாக்கி சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என்றார்.
 
சாதி, சடங்குகள் மற்றும் ஏனைய லௌகீக விஷயங்கள் குறித்த விமா¢சனங்கள்... சரித்திர ரீதியாகக் கூறப்படுவதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது என்றார். ஏனெனில் இந்தியர்கள் சுறுசுறுப்பானவர்கள்; எத்தனையோ போர்களைச் சந்தித்தவர்கள்; யதார்த்த மானவர்கள்; பல கலைகளை அறிந்தவர் கள்; உலகம் அநித்தியமானது என்பது தத்துவ ரீதியான ஒரு கருத்து என்பதை அறிந்தே இருக்கிறோம். அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடாமல் இருந்துவிடுவதில்லை.  உணவை உட்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என்பதை நம்புகிறோம். அதனால்தான் உணவு உட்கொள்வதை நாம் நிறுத்திவிடவில்லை. ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் இனி இம்மாதிரி பழம் சிந்தனைகளை நம்பி இல்லை. ஹிந்து தர்மம் அதன் சமூக அஸ்திவாரத் தில்தான் நிலைத்து நிற்கும். எப்படித் தெரியுமா? பிராமணர் அல்லாதவரும்கூட தமது பாரம்பரியக் குடும்பப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் போதும்.  அந்த அஸ்திவாரம் நிலைத்து நிற்கும். அப்படித் தொடர்ந்து செய்யப்படுமானால், ஒரு தொழிலதிபர்கூட சிறந்த ஹிந்துவாக இருக்க முடியும் என்றார்.

மகாசுவாமிகளுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், அவர் எளிமையான உணவே  உட்கொள்கிறார். அதிலேயே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழ்வதைக் கொண்டாடும் சமயத்தில், யார்தான் இதைச் சந்தேகிக்க முடியும்?!

- என்கிறது மில்டன் சிங்கரின் அந்தக் கட்டுரைக் குறிப்பு!



Monday, April 16, 2012

ஆங் சான் சூசி


மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆங் சான் சூசி வெற்றி பெற்றிருப்பது இரண்டாவது ஆச்சரியம்தான். முதல் ஆச்சரியம், ராணுவ மியான்மரில் தேர்தல் நடைபெற்றதும், அதில் சூசி பங்கேற்க அனுமதிக்கப்பட்டதும். இருபதாண்டு வீட்டுச் சிறைக்குப் பிறகு முதல் முறையாக வீட்டுக்கதவைத் திறந்து வெளியில் வந்து, திறந்த ஜீப்பில் ஏறி, புழுதி பறக்க வீதிகளைச் சுற்றி, திரண்ட மக்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி, கையசைத்து, கழுத்தை நீட்டி மல்லிகை மாலை வாங்கி, வோட்டு சேகரித்து, வெற்றியும் பெற்றிருப்பது சமகால பர்மாவின் வரலாற்றில் நிச்சயம் ஒரு திருப்பு முனைதான்.மே 1990ல் ஒரு பொதுத் தேர்தலில் சூசியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி (என்.எல்.டி) கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. கொஞ்சம் கலவரமடைந்த ராணுவத் தலைமை, தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொள்ள மறுத்துவிட்டு,விடாப்பிடியாக ஆட்சியைத் தொடர்ந்தது.மியான்மர் விடுதலை பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஜூலை 1947ல் சூசியின் தந்தையும் சுதந்தரப் போராட்டத் தலைவருமான ஆங் சான், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சூசி இரண்டு வயது குழந்தை. நான்கு ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு பழக்கமான மைக்கேல் ஆரிஸ் என்பவரைப் பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிலும் பூடானிலும் சிறிது காலம் இருந்தபிறகு, தம் இரு குழந்தைகளுடன் பிரிட்டனில் குடியேறினார்.

நோய்வாய்பட்டிருந்த தன் தாயைப் பார்க்க 1988ல் மியான்மருக்கு வந்தபோது, அந்நாடு மூச்சுத் திணறி தவித்துக்கொண்டிருந்தது. தாய், தாய்நாடு இரண்டில் யாரை முதலில் மீட்டெடுப்பது என்னும் கேள்வி எழுந்தபோது, சூசி தம் தந்தையின் வழியைத் தேர்ந்தெடுத்தார்.அப்போதைய ராணுவத் தலைவரான ஜெனரல் நீ வென்னிடம் நேரடியாக மோதினார் சூசி. காந்தி,மார்டின் லூதர்கிங் ஆகியோரால் கவரப்பட்ட சூசியின் அமைதி வழிப் போராட்டம், ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது.  இருபதாண்டு வீட்டுச் சிறையில் இருந்த போது 1999ல் இறந்துபோன கணவரின் உடலைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. 2010ல் பொதுத் தேர்தலில், சூசி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இடைத்தேர்தலில் சூசி பங்கேற்றதும், வென்றதும் அவரையும் அவர் கட்சியினரையும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட 45 இடங்களில் போட்டியிட்டு, 44ல் சூ சியின் என்.எல்.டி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அனைத்து முறை கேடுகளையும் பயன்படுத்திதான் தேர்தலை நடத்தியிருக்கிறது ராணுவம்.எனினும் சூசிக்கும் அவர் கட்சிக்கும் வெற்றி.‘வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பிற கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஒரு புதிய ஜனநாயக அரசைத் தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்கிறார் சூசி. ஆனால்,இது அத்தனை சுலபமல்ல. மியான்மர் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 664 இடங்களில், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர அனைத்துமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 45 இடங்களையும் சூசி வென்றாலும் அவரால் ஒன்றும் செய்துவிடமுடியாது என்று கணக்குப் போட்டு பார்த்துதான் சூசிக்கு அனுமதி வழங்கியது பர்மா. அந்த வகையில், இது அரசியல் மாற்றத்துக்கான வெற்றி அல்ல. 

பிறகு என்ன பயன்? முதல் வெற்றி, பர்மாவில் ஜனநாயகம் திரும்பிவிட்டது என்னும் நம்பிக்கையை பர்மாவிலும் வெளியிலும் படரவிட்டது. தேர்தல் நடைபெற்றபோது, பல அயல்நாட்டு நிருபர்கள் பர்மாவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இங்கு உதித்திருக்கும் புதிய நம்பிக்கை ஒளியைப் பற்றி நிச்சயம் அவர்கள் எழுதுவார்கள், பேசுவார்கள். ஐம்பதாண்டு கால ராணுவ ஆட்சியை முடித்துக்கொண்டு மார்ச் 2011ல் தீன் சீன் என்பவர் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து தொடங்கு கிறது பர்மாவின் அரசியல் மாற்றம். இவரது வருகைக்குப் பிறகு ஊடகக் கெடுபிடிகள் சற்று தளர்த்தப்பட்டு, அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். சூசியும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்.  இன்றைக்கு ராணுவத் தலைமையைவிட ஜனநாயக அரசியல் தலைமைதான் லாபகரமானது என்பதை பர்மா உணர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு நண்பனாக இல்லாத பட்சத்தில் ராணுவம் தலைமை தாங்கும் ஒரு நாட்டோடு யாரும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். போதாக்குறைக்கு, அரபுலகத்தில் ‘ஒவ்வாத அரசை உந்தித் தள்ளு’ என்னும் பெரும் முழக்கத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் பல சர்வாதிகார அரசுகள் வீழ்த்தப்பட்டுவிட்டன. எதற்கு வீண் வம்பு? காசா, பணமா? ஜனநாயகம்தானே? இந்தா போ என்று அள்ளிக் கொடுத்தால் குறைந்துவிடவா போய்கிறது? ஆக, மியான்மர் இடைத்தேர்தலை அனுமதித்ததற்கும் சூசியின் வெற்றியை அனுமதித்ததற்கும் காரணம் ஒன்றுதான். சுயநலம்.

இந்த சுயநலத்தை சூ சி தகர்ப்பாரா?

Sunday, April 15, 2012

இரு மாணவர்கள் தற்கொலை - ஓ பக்கங்கள், ஞாநி


காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?

என் காதல் அனுபவங்களைப் பற்றி பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப் போகிறது - சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சி சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ், காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி."படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள். உயர்படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

காதலில் ‘தோல்வி’ என்பது என்ன?

ஒருதலைக் காதலைத் தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை. இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமண முயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனத்தின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.

காதலில் இறுதி வெற்றி என்பது என்ன?

அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. காதலின் இயல்பான முற்றுப்புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்தக் காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாகவே இருக்க முடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல். இந்த இனிமையைத் தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்."ஆனால், நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தமக்கான, தமது இச்சைகளைப் பூர்த்தி செவதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து, தம் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத் தப்படுகிறது. அப்படி முடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவன் எப்படி காதலனாவான்? அதில் எங்கே இருக்கிறது காதல்? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்ட முடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனத்தில் ஏது காதல்? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது பிளாக்மெயில்தானே?

ஆனால், காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெதும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.ஆனால், மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப்பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத்தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனத்தின் தேவைகள் என்ன என்று யோசித்துத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வாழ்க்கையின் குறிக்கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.ஆனால், நம் சினிமாக்காரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள்.அறியாத வயசு, புரியாத மனசு, ரெண்டும் சேர்ந்து காதல் செயும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து, தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங் கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்குப் பதிலாக ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும்,ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்து கொண்டபோது அவன் ஒருதலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். ‘நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ -மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களைச் செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன.சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு, டி.வி. விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை.வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப்பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான்.இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள்?தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித்தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.ஆனால் விடலைப் பருவத்துப் பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனத்தையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சைத் தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.

பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண், பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகி விடுவோம்.கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனத்தையும் புரிந்துகொண்டு தம்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களைச் சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபா லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

இந்த வாரக் கேள்வி: தோழர் நல்லக்கண்ணுவுக்கு...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கடந்த 200 நாட்களாக உறுதியுடன் நடந்தபோது, அதை இழிவு படுத்தியும் கண்டித்தும் உலையைத் திறந்தே தீரவேண்டும் என்றும் உங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழங்கிவந்தது. இப்போது திடீர் ஞானம் வந்து இடிந்தகரைக்குப் போய் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். இப்போதாவது செய்தீர்களே என்று மகிழ்ச்சியடைய முடிய வில்லையே. இதை உங்கள் கட்சி மார்ச் 18க்கு முன்னரே செய்திருந்தால் போராட்டம் வலிமையடைந்திருக்கும். பெரும் படைகளைக் கொண்டு அரசுகள் மக்களை மிரட்டி ஒடுக்கியபோது மௌனமாக இருந்தது துரோகம் இல்லையா? இப்போது ஆதரவு காட்டுவதன் மர்மம் என்ன? நிஜமான மனமாற்றமா? அல்லது அடுத்த தேர்தலுக்காக மக்களுடன் சமரசமா? உண்மையான சுய விமர்சனம் என்றால், போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தோழர் தா.பாண்டியன் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த குடியரசுத் தலைவர்?

வாசகர்கள் ஆலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. நான் பரிந்துரைத்த கோபால கிருஷ்ண காந்தி மம்தா ஆதரவாளர், இடதுசாரி எதிர்ப்பாளர் என்று இடதுசாரி நண்பர் ஒருவர் ஆட்சேபித்திருக்கிறார். இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரியே நல்ல சாய்ஸ் என்பது அவர் கருத்து. இன்னொரு வாசகர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவைப் பரிந்துரைத்துள்ளார். சில வருடங்கள் முன்னர் நான் பரிந்துரைத்த ஆர்.நல்லகண்ணு, இரா. செழியன் ஆகியோரை ஏன் இப்போது விட்டுவிட்டேன் என்று ஒருவர் கேட்கிறார். பிரதமரின் வயது 60க்குக் கீழும் கனவு ஜனாதிபதியின் வயது 70க்குக் கீழுமிருக்க வேண்டும் என்பது என் கனவு. அதனால் 80க்கு மேற்பட்டவர்களை இந்த முறை ஆட்டத்தில் சேர்க்கவில்லை.   

 

Saturday, April 14, 2012

எனது இந்தியா! ( ஜாலியன்வாலா பாக் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அமிர்தசரஸில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மிகுந்த கொண்டாட்டமாகவே தொடங்கியது, அன்று... பைசாகித் திருவிழா. அதாவது, புத்தாண்டுக் கொண்டாட்டம். வீடுகளை அலங்காரம் செய்து, உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர் மக்கள். நறுமணத்தின் ஊடாக துர்நாற்றம் பரவுவது போல இருந்தது ஜெனரல் டயரின் உத்தரவு. ரௌலட் சட்டத்தைத் தொடர்ந்து உருவான இந்திய மக்களின் எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என்று, படை வீரர்களுக்கு ஜெனரல் டயர் உத்தரவு இட்டிருந்தார். இதையடுத்து, அமிர்தசரஸ் நகரின் முக்கிய வீதிகளில் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. மக்களை அச்சுறுத்திப் பணியவைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே, அந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.முரசுகள் முழங்கியபடியே அணிவகுப்பு சென்றது. அமிர்தசரஸின் இன்ஸ்பெக்டர் அஷ்ரப்கான், சப் இன்ஸ்பெக்டர் உபயதுல்லா ஆகிய இருவரும், ஆளுக்கு ஒரு குதிரையில் அணிவகுப்புக்கு முன்னால் சென்றனர். அவர்களுக்குப் பின்னால், இரண்டு கார்கள் வந்தன. ஒன்றில், ஜெனரல் டயர் மற்றும் இர்விங் இருந்தனர். மற்றொரு காரில், ரெகில் மற்றும் போலமர் என்ற ஆங்கிலேய அதிகாரிகள் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, சாரை சாரையாக ஆயுதம் ஏந்திய காவல் படை வீரர்கள் விறைப்பாக நடந்து வந்தனர். ரயில்வே லைனை ஒட்டிய பாலத்தைக் கடந்து, ஹால் பஜாரை வந்து அடைந்தது அணிவகுப்பு. வழி எங்கும் உருதுவிலும் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை செய்தி அடங்கிய நோட்டீஸ், மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.


'மக்கள் திரண்டு நிற்கவும், போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை மீறுபவர்கள் கடுமையாகத்  தண்டிக்கப்படுவார்கள்’ என்று, அந்த நோட்டீஸில் கூறப்பட்டு இருந்தது. அந்தச் செய்தியை, முரசு அடிப்பவன் உரத்த குரலில் அறிவித்துக்கொண்டே வந்தான். வீதியில் நின்றிருந்த மக்கள், சலனமற்ற முகங்களுடன் அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டு இருந்தனர்.ஒவ்வொரு வீதியாகக் கடந்து அணிவகுப்பு சென்றது. இதைக் கேலி செய்யும் விதமாக, உள்ளுர் மாணவர்கள் ஒன்றிணைந்து போட்டி ஊர்வலத்தை நடத்தினர். தகர டின்களைத் தட்டிக்கொண்டே, 'இன்று இரவு ஜாலியன் வாலாபாக்கில் ஒரு மாபெரும் கூட்டம் நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் அதில் கலந்துகொள்ளுங்கள். நாட்டு நடப்பு பற்றி லாலா கன்யாலால் அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்’ என்று அறிவித்துக்கொண்டே சென்றனர்.மதியம் 12.30 மணிக்கு நகரின் மத்தியப் பகுதியில், அணிவகுப்பில் சென்றுகொண்டு இருந்த ஜெனரல் டயரிடம் இந்தப் போட்டி ஊர்வலம் பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. 'எனது உத்தரவை மக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள், என்னைக் கேலி செய்கிறார்கள். நான் யார் என்பதை இந்த மூடர்களுக்கு காட்ட வேண்டும்’ என்று, ஆவேசத்​துடன் கூறினார் டயர். 400 அதிரடிக் காவல் படை வீரர்களைத் தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.மதியம் 1 மணிக்கு, மிகுந்த கோபத்துடன் அலுவலகத்துக்குத் திரும்பினார் டயர். அன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களைப் பற்றிய தகவல்களை  திரட்டினார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரலாக பஞ்சாப் மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் ஜெனரல் டயர். இவரது முழுப் பெயர் ரெஜினால் எட்வர் ஹேரி டயர். ஐரீஷ் வணிகரின் மகனாக இந்தியாவில் பிறந்த டயர், சிம்லாவில் படித்தவர். பிறகு, அயர்லாந்து சென்று உயர் கல்வி கற்றதோடு, ராணுவப் பயிற்சிப் பள்ளியில் படித்தவர். பர்மா யுத்தத்தில் கலந்துகொண்டு சிறப்பாக சேவை செய்தார் என, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்கு மாற்றப்பட்டார். முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர் என்பதால், 1915-ல் பதவி உயர்வில் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.ஜெனரல் டயர் முன்கோபக்காரர். இந்தியர்களை மிக மோசமாக நடத்துபவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதில் திறமைசாலி என்று, அவரை முக்கியப் பணியில் நியமித்து இருந்தது பிரிட்டிஷ் நிர்வாகம். குறிப்பாக, பஞ்சாபில் தலைதூக்கி வரும் சுதந்திரப் போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதில் அன்றைய பஞ்சாப் கவர்னராக இருந்த மிக்கேல் ஒ டயருடன் இணைந்து, ஜெனரல் டயர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.


அன்று, பஞ்சாபில் பிரிட்டிஷ் அரசுக்குச் சவாலாக விளங்கிய டாக்டர் சத்யபால் மற்றும் வழக்கறிஞர்  சிகாபுதீன் கிச்லா ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களுடைய போராட்டத்தை ஒடுக்குவதில் டயர் முக்கியப் பங்கு வகித்தார். 1919-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெரிய கலவரம் வெடித்தது. பிரிட்டிஷ் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. வங்கி அடித்து நொறுக்கப்பட்டது. அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடக்கத் தடியடி நடத்தி விரட்டியதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும், அவ்வளவு எளிதாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.அமிர்தசரஸ் நகரின் ஒரு வீதியில், 'மிஸ் மார்சிலா ஷெர்வுட்’ என்ற இளம்பெண்ணை, ஆர்ப்பாட்டக்​காரர்கள் சுற்றிவளைத்துத் தாக்க முயற்சித்தனர். உள்ளுர் இளைஞர்கள் சிலர் அவர்களைத் தடுத்து, 'நமது கோபம் பிரிட்டிஷ் அரசின் மீதுதானே தவிர, பிரிட்டிஷ் குடும்பங்களின் மீது இல்லை’ என்று கூறி அந்த இளம்பெண்ணை வீட்டில் கொண்டுபோய்விட்டனர். இந்த சம்பவம், டயருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.பிரிட்டிஷ் குடும்பங்களின் கௌரவத்தை சீர்குலைத்த இந்தியர்களைப் பழிதீர்க்க, 'மார்சிலா வழிமறிக்கப்பட்ட அந்த வீதியை எந்த இந்தியன் கடந்து போக வேண்டும் என்றாலும், கையை ஊன்றித் தவழ்ந்துதான் போக வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார் டயர். அது போதாது என, நகரில் எந்த வீட்டிலும் பின் வாசலுக்கு கதவு இருக்கக் கூடாது. அது, எதிரிகள் தப்பி ஓட உதவக்கூடியது என்றும் ஓர் உத்தரவு இட்டார். இந்தியர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள், மத சபைகள் அத்தனையும் கண்காணிக்கப்படுவதோடு, எவரையும் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யவும் உத்தரவு இட்டிருந்தார்.இந்தச் சூழலில், பாக் மைதானத்தில் ஆட்கள் திரளுகிறார்கள் என்ற தகவல், ஜெனரல் டயரின் மனதில் இருந்த கோபத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. ரகசியப் போலீஸாரை வைத்து, மைதானத்தின் வரைபடம் மற்றும் அதில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்களின் பட்டியலைத் தயாரித்தார்.ஜாலியன் வாலாபாக் மைதானம் 250 அடி நீளமும் 200 அடி அகலமுமான ஒரு திறந்த வெளி இடம். அது, சீரற்றுப் பள்ளமும் மேடுமாக இருந்தது. அந்த மைதானத்துக்குள் நுழைவதற்கு இரண்டரை அடி அகலம்கொண்ட ஐந்து வாசல்கள் இருந்தன. அந்த மைதானத்தின் தெற்குப் பகுதியில் அதிக வீடுகள் கிடையாது. மற்ற பகுதிகளில், மைதானத்தை ஒட்டியே வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அந்த வீட்டின் சுவர்கள் மைதானத்தின் முதுகு போல அமைந்து இருந்தன.தென் பகுதியில் ஒரு சமாதியும், அதைச் சுற்றி நான்கு சிறிய மரங்களும் இருந்தன.  கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய கிணறு இருந்தது. முறையான பயன்பாட்டில் இல்லாத அந்தக் கிணற்றை ஒட்டி மூன்று மரங்கள் இருந்தன. மைதானத்தின் ஓர் இடத்தில் சற்று உயரமான திட்டு போல ஒரு மேடு இருந்தது. அந்த மைதானத்தில் இசைக் கச்சேரி, நடன நிகழ்ச்சி, மதச் சொற்பொழிவு ஆகியவை நடத்துவது வழக்கம். ஆகவே, அங்கே எந்த கூட்டம் நடந்தாலும் அருகில் உள்ள பெண்கள் குழந்தைகள், வயதானவர்கள் எனக் கூட்டம் திரண்டுவிடும்.


ஜெனரல் டயர், ஜாலியன்வாலா பாக் மைதானத்தை அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது. ஆகவே, அதன் வரைபடத்தை கையில் வைத்தபடியே கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று, கேப்டன் பிரிக்கைக் கேட்டார். அவர், இரண்டாயிரம் இருக்கக்கூடும் என்றார். உண்மையில் அப்போது, ஜாலியன் வாலா பாக் மைதானத்தில் 20,000 பேருக்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். மாலை 4.30 மணிக்கு, எட்டு பேச்சாளர்கள் பேசி முடித்து இருந்தனர். மேடையில், டாக்டர் கிச்லாவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. ஜெனரல் டயர், தனது படையோடு ஜாலியன் வாலாபாக் மைதானத்தை நோக்கிக் கிளம்பினார்.ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் உள்ளே நுழைந்த ஜெனரல் டயர், ஐந்தாவது வாசலை மறைத்து தனது காவலர்களை நிறுத்தினார். உயரமான திட்டில் இருந்தபடியே கூட்டத்தைக் கவனித்தார். சலசலப்பு இல்லாமல் பொதுக் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. ஒரு சிறுவன், ஊதுகுழலை ஊதிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். பிரிட்டிஷ் காவலர்கள் மைதானத்துக்குள் வந்து இருப்பதை அறிந்த சிலர், உரத்த குரலில் அதை மற்றவர்களுக்குத் தெரிவித்தனர்.

பேதம் பார்க்காத கருணை!


'மகா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார் என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு. இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மகாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.''ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:


''தான் ஏகாதசி, துவாதசி என்று உபவாசம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக் காகவும் மனம் இரங்கியதுண்டு. இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா?! பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத் தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை பேதம் பார்க்காத கருணை!ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை  மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.அப்போது, மடத்தில் பல்லக்கு தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மகாபெரியவா!''

Friday, April 13, 2012

உபகாரம்! - அருள்வாக்கு


வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். நீங்களே சாப்பிடுவதைவிட ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் உங்களுக்கு இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் என்று தெரியும். இப்படி உங்களால் முடிந்த உதவியைச் செய்து நீங்கள் மற்றவர்களின் மனத்தைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து ஸ்வாமியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார்.

உங்களிடம் மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் வந்தால், அவர்களும் நீங்கள் ஸ்வாமியைத் தொழுவதைப் பார்த்துத் தாங்களும் தொழுவார்கள். பக்தியினால் உங்களுக்கு உண்டாகிற ஆனந்தமும் நல்லறிவும் அவர்களுக்கும் கிடைக்கும். ஆனபடியால் நீங்கள் ஸ்வாமியிடம் பக்தியாக இருப்பதே எல்லாவற்றையும் விடப் பெரிய பரோபகாரமாகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, April 12, 2012

தற்கொலைக் கூடங்கள்! - பதறவைக்கும் பள்ளி, கல்லூரி பயங்கரம்


மார்ச் 29 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பொறியியல் மாணவர் வெங்கடேஷ், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாததாலும் 20-க்கும் மேற்பட்ட அரியர்களாலும் தன் உடலை பிளேடால் கிழித்துக்கொண்டு, தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 28 - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - பொறியியல் மாணவர் மணிவண்ணன் 26 அரியர்களால் தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 24 - நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டி ப்ளஸ் டூ மாணவர் பொன்னுசாமி தேர்வு சரியாக எழுதாத பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 15 - நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜெயப்பிரகாஷ் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், தூக்கிட்டுத் தற்கொலை.

மார்ச் 14 - கும்பகோணம் பத்தாம் வகுப்பு மாணவர் இத்ரீஸ், ஆசிரியர் 'அநாதைப் பயலே’ எனத் திட்டியதால், தூக்கிட்டுத் தற்கொலை.  

மார்ச் 7 - திருவையாறு அருகேயுள்ள கல்விராயன்கோட்டை 9-ம் வகுப்பு மாணவர் ரத்தினசபாபதி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால், விஷம் குடித்துத் தற்கொலை.

பிப்ரவரி 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி 1 மாணவி ரோஹிணி, சக மாணவனுடனான நட்பைப் பள்ளியின் தாளாளர் பலர் முன்னிலையில் கொச்சைப் படுத்தியதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

பிப்ரவரி 15 - உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் ப்ளஸ் ஒன் மாணவர் அனுஜ், தொடர்ந்து ஆசிரியர் திட்டி, அடித்துத் துன்புறுத்தியதால், தூக்கிட்டுத் தற்கொலை.

பிப்ரவரி 9 - சென்னை ஜி.கே.எம். காலனி பத்தாம் வகுப்பு மாணவர் லோகேஷ், தேர்வுப் பயம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை.    

தமிழகப் பள்ளிக்கூட வகுப்பறைகள் தற்கொலைக்கூடங்களாகி வருகின்றன. எல்.கே.ஜி-யில் தொடங்கி கல்லூரி வரை 15 வருட வகுப்பறை வாழ்க்கை, பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லித் தரும் ஒரே தீர்வு... தற்கொலை மட்டும்தானா?தமிழகப் பள்ளிக்கூட வகுப்பறைகள் தற்கொலைக்கூடங்களாகி வருகின்றன. எல்.கே.ஜி-யில் தொடங்கி கல்லூரி வரை 15 வருட வகுப்பறை வாழ்க்கை, பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லித் தரும் ஒரே தீர்வு... தற்கொலை மட்டும்தானா? படிப்பைக் கெடுக்கும் விஷயங்கள். ஏன் இந்தப் பதற்றம்? காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். போட்ட பணத்துக்கு ஒழுங்காக ரிட்டர்ன் வர வேண்டுமே என்ற பதைபதைப்பு அவர்களுக்கு. கல்லூரி முதலாளிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ரிசல்ட் நன்றாக வந்தால்தான் கல்லூரிக்கு நற்பெயர் வரும், நல்ல ரிட்டர்ன் எடுக்கலாம். இடையில் மாணவன் சிக்கிக்கொள்கிறான்!

'இன்னைக்கு கஷ்டப்பட்டுப் படிச்சாதானே நாளைக்கு அவன் ஃப்யூச்சர் நல்லா இருக்கும்’ என்பதே மாணவர்களை நெருக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லும் காரணம். அப்படியானால், கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் படித்த அத்தனை பேரின் ஃபியூச்சரும் இப்போது நன்றாக இருக்கிறதா? இல்லையே! பல்லாயி ரம் பொறியியல் மாணவர்கள் டேட்டா என்ட்ரி, பி.பி.ஓ. என 7,000-த்துக்கும் 8,000-த்துக்கும் அல்லாடுகின்றனர். ஏன் இந்த நிலை?''ஏனென்றால், ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு திறன் இருக்கிறது. 100 சி.சி. பைக்கை, 500 கி.மீ. வேகத்தில் ஓட்ட முடியாது. ஒரு பையனுக்கு ஒரு பாடம் ஒரு மணி நேரத்தில் புரிந்தால், இன்னொருவன் அதற்கு மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்வான். அது அவரவர் திறன் சார்ந்தது. இதைப் புரிந்துகொள்ளாமல், பொத்தாம்பொதுவாகப் 'படி படி’ என்றால் எப்படி முடியும்?'உண்மையில், இன்றைய மாணவனின் முக்கியத் தேவை, பிரச்னை வரும்போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியமும் தவறு செய்தால் துணிவுடன் தட்டிக்கேட்கும் நேர்மையும்தான். ஆனால் யதார்த்தம்? மாணவர்களின் மனம் எல்லாவற்றுக்கும் உடனடி முடிவை எதிர்பார்க்கிறது. ஃபாஸ்ட் ஃபுட்போல, இன்ஸ்டன்ட் காபியைப் போல உடனடித் தீர்வு கிடைக்கும் இடம்... மரணம்!மாணவர் சங்கம், கல்லூரிகளில் நடக்கும் மாணவர் பேரவைத் தேர்தல், இலக்கிய மன்றம் என மாணவர்களைப் படிப்பின் சுமையில் இருந்து விடுவித்து, அவர்களைச் சமூகத்துடன் இணையச்செய்யும் எந்த அம்சமும் இன்றைய கல்வியில் இல்லை.அநீதியான கல்விக் கொள்ளை, பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் கௌரவக் கனவு, அழுத்தும் கல்விச் சுமை என இது ஒரு சங்கிலி வலைப் பின்னல். மாய மந்திரம்போல இதற்கு ஓர் இரவில் தீர்வு காண முடியாது. அதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவை. அதை நம்மில் இருந்தே தொடங்குவோம்!

விகடன் 

 

அருள்வாக்கு - மனஸ்!

மனஸை வைத்துத்தான் ஸகல எண்ணமும், உணர்ச்சியும்; இவை இல்லாதபோது ஜீவன் ஜடத்துக்கு ஸமானம் தான் என்பதால் மனஸைத் தான் ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ, கிடமாகவோ எதுவோ ஒன்றாக உயிரோடு இருக்கப் பண்ணுவதாக இன்னொன்று இருக்கிறது என்னும்போது அதுதான் நம்முடைய நிஜமான ‘நாம்’ என்று ஆகிறது. எப்படியென்றால், மனஸ் இல்லாதபோதும் அது இருக்கிறது. ஆனால், அது இல்லாமல் போனால் மனஸும் இல்லாமல் போய்விடுகிறது. சரீரத்தை விட்டு உயிர்த் தத்வம் போய்விட்ட பிறகு அந்த சரீரத்துக்கு உணர்ச்சியும் போய்த்தானே விடுகிறது? பிணத்துக்கு மனஸ் உண்டா? ஸரி, சரீரத்தை விட்டுப் போன உயிர்த் தத்வம் இந்த சரீரத்தில் இல்லாமல் போனாலும், தானே அடியோடு இல்லாமல் போய்விடுகிறதா என்றால் இல்லை. அதுதான் உயிராயிற்றே, அப்படியிருக்க அதுவே எப்படிச் சாக முடியும்? இதேமாதிரி, சரீரம் சாவதோடு மனஸும் செத்துவிடுவதில்லை. கர்மாக்களை அநுபவிப்பதற்காக ஜீவன் இன்னொரு பிறப்பு எடுக்கும்போது, புதுப் பிறவியில் அது மறுபடியும் வேலையை ஆரம்பித்துவிடுகிறது. புதுப்பிறவி உண்டாகிறது என்னும்போதே உயிர்த் தத்வம் மறுபடி ஒரு உடம்பில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது என்று ஏற்பட்டு விடுகிறது. ஒரு உடம்பை விட்டுப்போன உயிர் இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறது. மனஸும் இப்படிப் பண்ணுகிறது. அந்த மனஸையும் இந்த உயிர் தத்வந்தான் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய் இன்னொரு உடம்பிலிருந்து வேலை செய்ய வைக்கிறது.
மனஸ் வேலை செய்யாத நித்ரை, மூர்ச்சை முதலான ஸமயங்களிலும் உயிர் இருக்கிறது; ஆனால், உயிர் இல்லாத சரீரத்தில் மனஸ் வேலை செய்ய முடியவே இல்லை; அப்போது உடம்பும் அழுகி, கெட்டு, வீணாய் விடுகிறது என்பதிலிருந்து உயிரை ஒட்டிக் கொண்டுதான் மனஸ் வாழ முடியும். உடம்பும் வாழ முடியும், தனியாக அவற்றால் ஜீவிக்க முடியாது என்று தெரிகிறது. உடம்பை நாசம் பண்ணிவிட்டு உயிர் இன்னோர் உடம்பில் பிரவேசித்த பிற்பாடு, ஆனால் பிற்பாடு தான் மனஸ் அந்தப் புதிய உடம்பிலே வேலை தொடங்குகிறது என்பதிலிருந்தும் உயிர்தான் மனஸும் தனக்கு அடிப்படையாகப் பற்றி வாழும் தத்வமென்பது ‘கன்ஃபர்ம்’ ஆகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, April 11, 2012

எனது இந்தியா! ( கஜினி ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படைஎடுத்தார் அல்லவா? அப்போது, கைபரைக் கடந்துதான் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார். ''கஜினியின் நோக்கம் நாடு பிடிப்பது இல்லை, கோயில்களில் கொள்ளை அடிப்பது​தான்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் எம்.ஆர்.ராஜகோபாலன். இவரது ஆய்வுப்படி, ''கஜினி முகமது 16 முறை தோல்வி அடையவில்லை. அத்தனை போரிலும் கஜினி ஜெயித்து இருக்கிறார்'' என்று குறிப்பிடுகிறார். அதோடு, இந்தப் படையெடுப்புகளின் விரிவான பட்டியலையும் முன்வைக்கிறார்.கஜினியின் முதல் படையெடுப்பு கைபர் கணவாயை ஒட்டிய இந்தியாவின் எல்லை நகரங்களின் மீதான தாக்குதல். 2. கி.பி 1001-ல் பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் மீதான தாக்குதல். 3. பீராவின் மீது, 4. மூல்தான் மீதான தாக்குதல். இவை நடந்தது கிபி 1006-ல். அதன் பிறகு, 5. படையெடுப்பு நவாஸாவின் மீது, 6. நாகர்கோட், 7. நாராயண், 8. மறுபடியும் மூல்தான், 9. நிந்துனா, 10. தானேசர், 11. லோக்காட், 12. மதுரா மற்றும் கனோஜீ, 13. ராகிப், 14. லோக்கோட் மற்றும் லாஹோர், 15. குவாலி​யர், 16. சோம்நாத், 17-வது முறை ஜாட் மன்னர்கள் மீது படைஎடுத்துச் சென்று வென்று இருக்கிறான்.

ஆகவே, கைபர் பாதை... இந்தியாவைக் கொள்ளையிடச் சென்ற குதிரைகளின் இடை​விடாத குளம்பொலி ஓசையைக் கேட்டு இருக்கிறது. வாளில் சொட்டும் குருதியில் நனைந்து இருக்கிறது. கைபரை எந்த மன்னராலும் முழுமையாகத் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அது, ரத்தம் குடிக்கும் சாலை என்கிறார் பீட்டர் ஹாப்ரிக் எனும் வரலாற்று ஆசிரியர்.மொகலாய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் உருவாக அடிக்கோலிட்டது இந்தப் பாதையைக் கடந்துவந்த பாபரின் படைகளே. அதற்கு முன்னதாக அடிமை வம்சத்தை டெல்லியின் அரியணையில் அமரச்செய்த முகமது கோரியின் படையெடுப்பும் கைபரைக் கடந்தே வந்து இருக்கிறது. ஆகவே, கைபர் கணவாயை இந்தியாவின் அரியணையை நோக்கிச் செல்லும் ராஜபாட்டை என்று, மொகலாய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.இந்தப் பாதை இந்தியாவின் நிலையான ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட பிரிட்டிஷ்​காரர்கள், தனது முழுமையான கட்டுப்​பாட்டில் கைபரை வைத்துக்கொள்ள போரா​டினர். 1839-ல் ஆப்கானிஸ்தானைப் பிடிப்பதற்காக கைபர் வழியாக பிரிட்டிஷ் படை நடத்திச் சென்றது. இந்தப் படை​யெடுப்பு, பிரிட்டிஷ் ராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது. நிறைய பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. மூன்று ஆப்கான் யுத்தத்திலும் கைபர் கணவாய்தான் முக்கியக் கேந்திரமாக இருந்தது.1836-ம் ஆண்டு, ஹரிசிங் என்ற சீக்கிய ராணுவத் தலைவர் கைபர் கணவாயின் முகப்பில் பெரிய கோட்டை ஒன்றைக் கட்டி அதில் தனது படைவீரர்களை நியமித்தார். காபூல் அரசன் தாஸ்த் முகமது, சீக்கியர்கள் கோட்டை அமைப்பதன் வழியே காபூலைப் பிடிக்கத் திட்டம் இடுகிறார்கள் என்று முடிவு செய்து, பெரும் படையுடன் ஜம்ருத் கோட்டையை தாக்கினார்.  

கோட்டையின் உள்ளே 1,000 சீக்கியர்கள் காவலுக்கு இருந்தனர். வெளியே இருந்த 25,000 காபூல் படை வீரர்களை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதோடு, தண்ணீரும் உணவும் கோட்டைக்குள் போக முடியாதபடி காபூல் படை தடை செய்துவிட்டது. அப்போது, ஹரிசிங் பெஷாவரில் இருந்தார். எனவே, என்ன செய்வது எனத் தெரியாமல் சீக்கியப் படை குழப்பத்தில் ஆழ்ந்தது.இந்தச் சூழலில் ஹரிசரண் கௌர் என்ற இளம்பெண் முக்காடு அணிந்துகொண்டு ஜம்ருத் கோட்டையில் இருந்து தப்பி, காபூல் வீரர்களை ஏமாற்றி வெளியேறி பெஷாவரை அடைந்தாள். ஹரிசிங்கிடம் நிலைமையை விளக்கினாள். உடனே அவர், ஒளிந்து தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, ஹரிசிங்கின் படைகள், ஒளிந்து காபூல் படைகளைத் தாக்கத் தொடங்கின. எதிர்பாராத தாக்குதலைச் சமாளிக்க முடியாத காபூல் படைகள், கைபர் கணவாயின் உள்ளே ஓடத் தொடங்கின.மலைக் குகைகள் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக மாறின. ஆகவே, கைபர் கணவாயின் உள்ளே ஒளிந்தபடியே அவர்கள் சண்டையிட ஆரம்பித்தனர். பலத்த சண்டையின் முடிவில் ஹரிசிங் கொல்லப்பட்டார். ஆனால், சீக்கியர்களே வென்றனர். அதுமுதல், கைபர் கணவாயின் ஜம்ருத் கோட்டை சீக்கியர்கள் கைவசமே இருந்து வந்தது. கணவாய்க் காவலையும் அவர்களே மேற்கொண்டனர்.இந்தப் பாதை வழியேதான், கோகினூர் வைரம் கொண்டுசெல்லப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இருந்த மயில் ஆசனம், விலை உயர்ந்த வைரங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்த நாதிர்ஷா, 300 யானைகள், 10,000 குதிரைகள், 10,000 ஒட்டகங்கள் மற்றும் ஏராளமான பொருட்களை இதே கைபர் கணவாய் வழியாகத்தான் கொண்டுசென்றார்.1878-ல் நடந்த இரண்டாவது ஆப்கன் சண்டைக்குப் பிறகு, கைபர் கணவாய்ப் பகுதியில் ரயில் பாதை அமைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. அதற்கு முக்கியக் காரணம், ஆப்கான் வழியாக கைபர் பாதையை ரஷ்யா தன்வசமாக்கிக்கொள்ளும் என்ற பயம் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்ததுதான். அதைத் தடுப்பதற்காகவும், பயண வழியை எளிதாக்கவும் மலைப் பகுதியில் ரயில் பாதை அமைப்பது என்று முடிவு செய்தனர். 1905-ல்தான் இந்தப் பணி முறையாகத் தொடங்கியது. பெஷாவர் அருகில் உள்ள கச்சாகார்கி என்ற இடத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது. 1907-க்குள் மேற்கு நோக்கி 32 கிமீ தூரத்துக்கு ரயில் பாதை அமைத்துவிட்டனர். மலைப் பாதையில், தண்டவாளம் அமைப்பது மிகவும் கடுமையான வேலையாக இருந்தது. கடும் மழையும் நோயும் கூலியாட்களை வாட்டி வதைத்தது. பணியிடத்திலேயே ஏராளமானோர் இறந்துபோனார்கள். 1925-ல் இந்தப் பணி முடிவு பெற்று, முறைப்படி பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. 34 குகைகள், 92 பாலங்களைக் கடந்து செல்கிறது இந்த ரயில் பாதை. இரண்டாம் உலகப் போரின்போது, இந்தப் பாதையைப் பயன்படுத்தி ஜெர்மன் ராணுவம் உள்ளே நுழைந்துவிடக்கூடும் என்று பயந்த பிரிட்டிஷ், இதை முழுமையாக மூடித் தனது காவலில் வைத்திருந்தது. பின்னாட்களில், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துக் கடத்தல் என்று, கைபர் கணவாய் சூதாட்ட வழியாக மாறியது. இன்றும், கைபரைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தால் சகலவிதமான ஆயுதங்களும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் காலத்திலேயே ராணுவத்தைத் தாக்கிய பழங்குடிகள் அவர்கள் வசம் இருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கிச்சென்று, அதேபோல கள்ளத் துப்பாக்கி செய்து சந்தையில் விற்றனர். அந்தக் கள்ளத் துப்பாக்கியின் பெயரே கைபர் துப்பாக்கிதான். இந்த வகைத் துப்பாக்கிகளில் இன்றும் பிரிட்டிஷ் ராணுவக் குறியீடுகள் பொறிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஒசாமா பின்லேடனின் பிரச்னைக்குப் பிறகு, கைபர் கணவாய் வழியில் நான்கு சோதனைச் சாவடிகளை பாகிஸ்தான் நிறுவியது. பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்களை அனுமதிக்கிறார்கள். கைபரைப் போலவே, போலன்... பாகிஸ்தானையும் ஆப்கானையும் இணைக்கும் இன்னொரு மலைப் பாதை. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இருந்து காந்தகருக்குச் செல்லும் இந்த வழி, ஆப்கான் எல்லைக்கு 120 கிமீ தூரத்தில் இருக்கிறது. இந்தக் கணவாய் வழியாகவே கிரேக்கர், துருக்கியர், பெர்ஷியர், ஹுன் எனப் பலரும் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார்கள். பலூசி மற்றும் பிராகு இன மக்கள் இந்தக் கணவாய் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள். 1883-ல் ராபர்ட் குரோவ்ஸ் சாண்டிமேன் குறிப்பிட்ட தொகையை ஆண்டு வரியாகச் செலுத்தி போலன் கணவாயைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஓர் ஒப்பந்தம் உருவாக்கினார். 89 கி.மீ. தூரம் உள்ள போலன் கணவாய்ப் பாதை, ஆழமான பள்ளத்தாக்கின் ஊடாகவும், மலைக் குகைகளின் ஊடாகவும் செல்கிறது.போலனிலும் 1880-ல் தொடங்கிய ரயில் பாதை அமைக்கும் பணி 1885-ல் முடிவடைந்தது. 1886-ல் ரயில் பயணம் தொடங்கியது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் போலன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆகவே, புதிய ரயில் பாதை 1890-ல் அமைக்கப்பட்டது. இன்று வரை, அந்த ரயில் பாதையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.கைபரும் போலனும் நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கைப்பற்றத் துடித்த எத்தனையோ மன்னர்களின் ஆசையை, அவர்களின் வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் சந்திர போஸ், 1941 ஜனவரி 17 அன்று தப்பினார். பெஷாவரைக் கடந்து கைபர் கணவாய் வழியாக ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். அங்கிருந்து ரஷ்யா வழியாக 71 நாட்கள் பயணித்து பெர்லின் நகரை அடைந்தார் என்கிறார்கள்.

அலெக்சாண்டரில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை எத்தனையோ ஆளுமைகளைக் கண்ட கைபர் போலன் பாதைகள் கடந்த காலத்தின் நினைவுகள் படர இன்றும் தன் பயன்பாட்டைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.புழுதி படிந்துகிடக்கும் அந்த மலைப் பாறைகள், மனிதர்களின் பேராசைகள் காற்றில் பறக்கும் தூசியைப் போல எழுந்து அடங்கிவிடக்கூடியவை என்பதை அறிந்தவை போல மௌனமாக உறைந்து இருக்கின்றன.மனிதர்கள், பாதைகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வது இல்லை. சாலையின் பாடலைக் கேட்க முடிந்தவன், தன்னை அறிந்துகொள்வதுடன், உலகின் இயல்பையும் அறிந்துகொள்வான், அதுதான் உண்மையான வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கக்கூடும்.

விகடன் 

Tuesday, April 10, 2012

விக்கலை நிறுத்த என்ன செய்வது?


சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது காற்றை உள் இழுக்கிறோமல்லவா? அப்போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தைத் தூண்டினால், அது தன்னிச்சையாகச் சுருங்கி விரியும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்..’ என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

என்ன காரணம்?  

விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு ‘ஹிஸ்டிரிக்கல் விக்கல்’ என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். 

என்ன முதலுதவி?

அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் போதும், விக்கல் நின்றுவிடும். அதற்கு என்ன செய்வது?

விக்கலால் அவதிப்படும் நபரை நாற்காலியில் அமைதியாக அமரச் செய்யுங்கள். அவரை மூச்சை நன்றாக உள் இழுக்கச் சொல்லுங்கள். பிறகு, மூச்சை நன்றாக அடக்கிக்கொள்ளச் சொல்லுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில் விட வேண்டும். இவ்வாறு 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். 

இன்னொரு வழி இது. ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்.

ஒருவருக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, அதிக நேரம் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

புரையேறுதல்:

உணவை உண்ணும்போது, தொண்டையிலிருந்து இறங்கும் உணவு, உணவுக்குழாய்க்குள் செல்வதற்குப் பதிலாக, சுவாசக்குழாய்க்குள் சென்று விடுவதைப் ‘புரையேறுதல்’ என்கிறோம். 

என்ன காரணம்?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே உணவு உண்பது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, உணவுக்குழாய்ப் புற்று நோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும். குழந்தைகளின் உணவுக்குழாயும் சுவாசக்குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப்பொருள்கள்கூட சுவாசக்குழாயை மிக எளிதாக அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புரையேறியவுடன் இருமல் வரும். மூச்சுத்திணறும். பேசமுடியாது. முகத்தில் ரத்தம் தேங்கி, முகம் சிவக்கும். நெடு நேரம் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் உடல் நீலநிறமாக மாறும். அப்போது உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

புரையேறியவுடன் அதை வெளியேற்றுவதற்கு நம் உடலில் இயற்கையாகவே ஒரு வழிமுறை உள்ளது. அதுதான் இருமல். இருமும்போது, சுவாசப் பைகளிலிருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால், சுவாசக்குழாய்க்குள் சென்ற உணவு உந்தி வெளியே தள்ளப்படும்.

ஆகவே, பாதிக்கப்பட்ட நபரை அழுத்தமாக இருமச் சொல்லுங்கள். சிலமுறை இருமினாலே பெரும்பாலான உணவுப்பொருள்கள் உடனே வெளியேறிவிடும்; மூச்சுத்திணறல் குறைந்து விடும். 

இதில் குறையாவிட்டால், அந்த நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கி குனியச் சொல்லுங்கள். இப்போது நீங்கள் அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

இதிலும் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அடுத்த முயற்சியில் இறங்குங்கள். அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்தம் கொடுங்கள். உணவுப் பொருள் வெளியேறும் வரை முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாற்றி மாற்றி செய்யுங்கள். உணவுப்பொருள் வெளியேறிவிடும்.  இதிலும் உணவுப்பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘மூச்சுக்குழல் அக நோக்கி’ மூலம் உணவுப்பொருளை வெளியே எடுத்து விடுவார், மருத்துவர்.

டாக்டர் கு.கணேசன்