''சீனாவில் வண்ணப் பருத்தி பயன்பாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  நமது வேளாண்மைப் பல்கலைக்கழகமும் வண்ணப் பருத்தி குறித்த ஆராய்ச்சியில்  இறங்க வேண்டும். இந்தப் பருத்தி கண்டுபிடிக்கப்பட்டால், சாயக்கழிவு  பிரச்னையால் சரிவு கண்டிருக்கும் திருப்பூருக்கு சரியான தீர்வாக  இருக்கும்''
பரிசோதனையில் இருக்கிறது! 
''சரி, வண்ணப்பருத்தி என்பது எந்த அளவுக்கு சாத்தியம்?'' என்ற  கேள்வியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பருத்தி  ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர், முனைவர். எஸ்.ராஜரத்தினத்தைச்  சந்தித்தபோது, ''சீனாவில் வண்ணப்பருத்தி விளைவது குறித்த தகவல் எங்களிடம்  இல்லை. ஆனால், நமது பருத்தி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  வண்ணப்பருத்தி தொடர்பான ஆராய்ச்சிகளை நீண்டகாலமாக செய்துமுடித்து, வெளிர்  பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு நிறங்களில் விளையும் பருத்தி ரகத்தைக்  கண்டுபிடித்துள்ளார்கள்'' என்று சொல்லி ஆச்சரியமூட்டினார்!
தொடர்ந்து பேசிய ராஜரத்தினம், ''பல்கலைக்கழக நிலத்தில் வண்ணப்பருத்தியை  விதைத்து பரிசோதனை முறையில் மகசூல் எடுத்துள்ளோம். ஆனால், ஆராய்ச்சி  இன்னும் நிறைவு பெறாத காரணத்தால் வெளியிடவில்லை. வண்ணப் பருத்தியில்  நூற்புத்திறன் குறைவாகவே உள்ளது. அதேபோல இதைச் சாகுபடி செய்துள்ள நிலத்தின்  அருகில் வேறு பருத்தியை பயிரிடக்கூடாது. இதற்கு அருகில் வெள்ளை நிற  பருத்திச்செடிகள் இருந்தால், அயல்மகரந்த சேர்க்கை மூலம் அதன் வெண்மை  நிறத்தை, வண்ணப்பருத்தி பாதித்து விடும். அதனால் நூற்புத்திறன், மகசூல்,  புதிய நிறங்கள்... என்று எல்லாவற்றிலும் முழுமை அடைவது குறித்து  ஆராய்ச்சிகள் தொடர்கின்றன'' என்று சொன்னார்.
ண் வளம் பாதுகாக்கப்படும்! 
பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். ப. முருகேசபூபதி இதுதொடர்பாக  பேசியபோது, ''வண்ணப்பருத்தி குறித்தான ஆராய்ச்சியை இஸ்ரேல் நாடுதான்  முதலில் துவங்கியது. நமது பல்கலைக்கழகமும் அதைச் செய்து வருகிறது. பல  வண்ணம் கொண்ட பருத்தியை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்  என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வண்ணப்பருத்தி விதைகள் விவசாயிகளுக்கு  வழங்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள் வரும்போது...  திருப்பூரை உலுக்கி வரும் சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்படும் என்று நம்பலாம். மண்வளம், நீர்வளம், மனிதவளம், சுற்றுசூழல்  இதன் மூலம் காப்பாற்றப்படும். இந்த ஆராய்ச்சி திருப்பூருக்கு மட்டுமல்ல...  இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்து, பெருமைத் தேடித் தரக்கூடியதாகவும் இருக்கும்'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.
இதற்கு வரவேற்பு தந்து நம்மிடம் பேசிய தென்னிந்திய பனியன் ஏற்றுமதியாளர்  சங்கத்தலைவர் சக்திவேல், ''பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை அரசுக்கு  ஈட்டித் தருகிற திருப்பூர், சாயப்பட்டறை பிரச்னை காரணமாக இன்று சிக்கலில்  உள்ளது. பல்கலைக்கழகத்தின் வண்ணப்பருத்தி ஆராய்ச்சி முழுமை பெற்று, பல  வண்ணங்களில் பருத்தி விளைந்தால் அது திருப்பூருக்கு விடிவெள்ளியாக  இருக்கும்'' என்று சந்தோஷம் பொங்கக் குறிப்பிட்டார்!
அதேசமயம், திருப்பூரைச் சேர்ந்த சமூகசேவகர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் மிகவும் யோசிக்க வைப்பவையாகவே இருந்தன.''வண்ணப்பருத்தியின் வரவுக்கு நாடே வரவேற்புக் கொடுத்தாலும், சாயப்பட்டறை  சார்ந்த தொழில் செய்பவர்கள் இதை விரும்ப மாட்டார்கள். திருப்பூரில்  ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்குச் சாயப் பவுடர், வேதியியல் பொருட்களின்  வணிகம் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் தயாரித்து விற்பது...  பன்னாட்டு கம்பனிகள்தான். வண்ணப்பருத்தி வரும் பட்சத்தில்... திருப்பூர்  மட்டுமல்ல, ஈரோடு, கரூர் என்று எல்லாச் சாய ஆலைகளும் மெள்ள மூடப்பட  வேண்டியிருக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பறிபோகும் சூழலில்,  பன்னாட்டு ரசாயன கம்பெனிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டா இருக்கும்?
நிச்சயமாக வண்ணப்பருத்தி ஆராய்ச்சியில் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தத்தான்  செய்வார்கள் அந்தக் கம்பெனிக்காரர்கள். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்  அப்போது, அந்தக் கம்பெனிகளுக்கு அடிபணிந்து விடாமல், துணிச்சலாக  வண்ணப்பருத்தியை விவசாயிகள் மத்தியில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்  என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?!'’ என்ற கேள்வியை எழுப்பி  முடித்தார்!
விகடன்  
No comments:
Post a Comment