'என் வருமானத்துக்கு ஏற்ற சிறந்த கார்’ என்கிற
தேடலில்தான் பலர் ஷோ ரூம் ஷோ ரூமாக ஏறி இறங்குகிறார்கள். விலை குறைவான
ஹேட்ச்பேக் கார்களுக்குத்தான் நம் நாட்டில் டிமாண்ட் அதிகம்!காரின் விலையை மட்டும் பூதக் கண்ணாடி கொண்டு அலசி ஆராய்ந்து வாங்கினால்
போதுமா? காரை வாங்கிய பிறகு பெட்ரோல், சர்வீஸ், இன்ஷூரன்ஸ் என்று எவ்வளவு
செலவு வைக்கும் என்பதையும் அலச வேண்டாமா? இந்தியாவில் தற்போது அதிகமாக
விற்பனையாகும் விலை குறைவான 10 கார்களை பார்போம் .
'காஸ்ட் ஆஃப் ஓனிங் தி கார்’ விவரங்களைக் கணக்கிடுவதற்கு, பொதுவாக மூன்று
ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் உத்தேசமாகக்
கணக்கிட்டு மற்றும், இந்த மூன்று ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்
எதுவும் இல்லை என்றால், முதலாண்டு பிரீமியத் தொகையில் இருந்து 20
சதவிகிதமும், இரண்டாவது ஆண்டு தொகையில் இருந்து 25 சதவிகிதமும் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் குறையும். பொதுவாக, புதிய காருக்கு எக்ஸ் ஷோ ரூம் விலையிலிருந்து
5 சதவிகிதம் கழித்து 'ஐடிவி’ அதாவது Insured Declared Value தொகை
நிர்ணயிக்கப்படும். அதனால், முதல் வருட இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆன்-ரோடு
விலையைக் கொடுத்து இருகிறார்கள் . அதேபோல், காரின் பெட்ரோல் செலவைக் கணக்கிட...
ஆண்டுக்கு 10,000 கி.மீ பயணம் செய்வோம் என்ற யூகத்தின் அடிப்படையில்,
இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67.50 என கணக்கில் கொண்டு காருக்கான பெட்ரோல் செலவைக் கொடுத்துள்ளோம்!
மாருதி ஆல்ட்டோ
நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பயணிக்கும்போது, ஆல்ட்டோ
பொதுவாக லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ
தூரம் பயன்படுத்துவோம் என்ற வகையில், மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக
மட்டும் நாம் செலவிடும் தொகை 1,33,221 ரூபாய். ஆல்ட்டோ காரை வாங்கும்போது
நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை 8,678 ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு
இன்ஷூரன்ஸுக்காக நாம் செலவு செய்யும் தொகை மொத்தம் 22,129 ரூபாய்.
மாருதியைப் பொறுத்தவரை மூன்று இலவச சர்வீஸ் உண்டு. முதல் சர்வீஸை கார்
வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். இது
பொதுவாக சாதாரண செக்-அப்பாக மட்டுமே இருக்குமே தவிர, காரில் எதையும் மாற்ற
மாட்டார்கள். இரண்டாவது சர்வீஸ், 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்குள்
செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற 1,800 ரூபாய்
செலவாகும். மூன்றாவது சர்வீஸ், 10 ஆயிரம் கி.மீ அல்லது ஒரு ஆண்டுக்குள்
சர்வீஸ் செய்ய வேண்டும். மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 1000 கி.மீ
இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கும் சுமார் 1,800 ரூபாய்
செலவாகும். அடுத்தடுத்த 10,000 கி.மீ சர்வீஸ்களில் பெரிய பிரச்னைகள்
எதுவும் இல்லாமல் சர்வீஸ் செய்வதற்கு 3,000 ரூபாய் செலவாகும். அப்படிப்
பார்க்கும்போது, 3 ஆண்டுகளில் மாருதி ஆல்ட்டோ காருக்காக நீங்கள் செலவிடும்
தொகை 1,64,950 ரூபாய்!
மாருதி ஸ்விஃப்ட்
இந்தியாவில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கப்படும் கார், மாருதி
ஸ்விஃப்ட். இது பொதுவாக, லிட்டருக்கு 11.5 கி.மீ மைலேஜ் தருகிறது.
ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஸ்விஃப்ட்
காருக்கு பெட்ரோல் நிரப்ப 1,76,086 ரூபாய் செலவு செய்கிறோம். ஸ்விஃப்ட்டைப்
பொறுத்தவரை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1,000 கி.மீ; இரண்டாவது சர்வீஸ் 6
மாதங்கள் அல்லது 5,000 கிமீ; மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 10,000
கி.மீ என்பதுதான் சர்வீஸ் இடைவெளி. ஆனால், அதன் பிறகு ஸ்விஃப்ட்டில்
இருப்பது 'கே-சீரிஸ்’ இன்ஜின் என்பதால், பத்தாயிரம் கி.மீ அல்லது ஆண்டுக்கு
ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது. ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை
மாற்ற 2,000 ரூபாயும், பத்தாயிரம் கி.மீ-க்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்ய
அதிகபட்சமாக 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி காரின் பராமரிப்புச்
செலவுகளுக்காக மட்டும் நீங்கள் செலவு செய்யும் தொகை சுமார் 12,000 ரூபாய்.
இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் ஸ்விஃப்ட் காருக்காகச் செலவு செய்யும்
தொகை 2,20,446 ரூபாய்!
டொயோட்டா எட்டியோஸ் லிவா
டொயோட்டா அறிமுகப்படுத்தி இருக்கும் சின்ன கார் எட்டியோஸ் லிவா. இது
பொதுவாக, லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று
ஆண்டுகளுக்கு இன்றைய விலையின்படி நீங்கள் 1,44,642 ரூபாய் பெட்ரோலுக்காகச்
செலவிடுவீர்கள்.
எட்டியோஸ் லிவாவை வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள்
முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இது இலவச சர்வீஸ் என்பதோடு, ஆயில் மற்றும்
ஆயில் ஃபில்டர் எதுவும் மாற்றமாட்டார்கள் என்பதால், சர்வீஸ் செலவு எதுவும்
இருக்காது. அடுத்து நேராக 10,000 கிமீ அல்லது 1 ஆண்டில்தான் சர்வீஸ் செய்ய
வேண்டும். 10,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற
வேண்டியிருக்கும். இதற்கு 2,000 ரூபாய் வரை செலவாகும். மூன்றாவது சர்வீஸ் 2
ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். மூன்று இலவச சர்வீஸ்
உண்டு என்பதால், இப்போதும் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்றும் செலவு
மட்டும்தான். மூன்றாவது சர்வீஸ் 30,000 கி.மீ-ல் செய்ய வேண்டியிருக்கும்.
இதற்கு உத்தேசமாக, ஜெனரல் சர்வீஸ் என்றால் 5,000 ரூபாய் செலவாகும். ஆக
மொத்தம், நீங்கள் மூன்று ஆண்டுகளில் எட்டியோஸ் லிவாவுக்காகச் செலவு
செய்யும் மொத்தத் தொகை 1,94,845 ரூபாய்!
ஹூண்டாய் ஐ10
மாருதி கார்களுக்கு மாற்றாக, வேறு பிராண்ட் கார் தேடுபவர்களின் முதல்
சாய்ஸ் ஹூண்டாய் ஐ10. இது லிட்டருக்கு பொதுவாக 14 கி.மீ மைலேஜ் தரும்.
அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காகச் செலவிடப்படும் தொகை 1,44,642
ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் பொறுத்தவரை, முதல் சர்வீஸ் 2 மாதங்கள் அல்லது
2,000 கி.மீ இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது சர்வீஸில் இருந்து பணம்
செலுத்திதான் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி ஆறு மாதங்கள் அல்லது 5,000
கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்தடுத்த சர்வீஸ்கள் 10,000 கி.மீ
இடைவெளிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி பணம் செலுத்தி செய்யப்படும்
ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்!
டாடா நானோ
இந்தியாவின், உலகின் விலை குறைவான கார் டாடா நானோ. இது பொதுவாக லிட்டருக்கு
17.3 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக
நாம் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,17,051 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று
ஆண்டுகளுக்கு க்ளெய்ம் எதுவும் செய்யாமல் இருந்தால், உத்தேசமாக 13,191
ரூபாய் செலவு செய்வோம். டாடா நானோவை 1,000 கி.மீ அல்லது 1 மாத இடைவெளிக்கு
முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் பிறகு 6 மாதங்கள் அல்லது 5000
கி.மீ-க்கு சர்வீஸ் செய்ய வேண்டும். 5000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும்
ஆயில் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு 1,200 ரூபாய் செலவாகும். மூன்று
சர்வீஸ்களுக்குப் பிறகு ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாய் செலவாகும்.
அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு டாடா நானோவுக்காக நீங்கள் செலவு செய்யும்
உத்தேசமான தொகை 1,44,642 ரூபாய்!
மாருதி வேகன்-ஆர்
வேகன்-ஆர் காரிலும் கே-சீரிஸ் இன்ஜின்தான். மாருதியின் இந்த கார்
லிட்டருக்கு, பொதுவாக 14.7 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ
கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,37,754 ரூபாய் பெட்ரோலுக்காகச்
செலவிடுகிறோம். மாருதி ஸ்விஃப்ட்டின் அதே சர்வீஸ் ஷெட்யூல்தான் மாருதி
வேகன்-ஆர் காருக்கும் பொருந்தும். ஆனால், வேகன்-ஆர் காரை பணம் செலுத்தி
சர்வீஸ் செய்ய (பெய்டு சர்வீஸ்) அதிகபட்சமாக 4,000 ரூபாய் செலவாகும்.
இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு காரை சர்வீஸ் செய்ய 10,000 ரூபாய் செலவாகும்.
இதன்படி மாருதி வேகன்-ஆர் காரின் மூன்று ஆண்டுகளுக்கான மொத்தச் செலவு
1,75,878.
ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கும் கார்
ஃபிகோ. இந்த பெட்ரோல் கார் பொதுவாக லிட்டருக்கு 13.15 கி.மீ மைலேஜ் தரும்.
இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோல் செலவு 1,53,992 ரூபாய் செலவாகும்.
இன்ஷூரன்ஸ் செலவுகளைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 36,516
ரூபாய் செலவாகும். ஃபோர்டு ஃபிகோவின் புத்தம் புதிய இன்ஜினை அடிக்கடி
சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல் சர்வீஸ் 2,500 கி.மீ அல்லது 3
மாதங்கள் இடைவெளியில்தான் செய்ய வேண்டும். அதேபோல், ஆயில் மற்றும் ஆயில்
ஃபில்டர்களை 10,000 கி.மீ இடைவெளியில்தான் மாற்ற வேண்டும். ஃபிகோவில்
20,000 கி.மீ அல்லது இரண்டு ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகை உள்ளது. இதன்படி
மூன்றாவது ஆண்டில் இருந்துதான் பெய்டு சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில்
சர்வீஸுக்கு 2,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாயும்
செலவாகும். ஆக மொத்தம், மூன்று ஆண்டுகளுக்கு 2,00,508 ரூபாய் செலவாகும்!
ஹூண்டாய் சான்ட்ரோ
ஹூண்டாயின் விலை குறைவான சின்ன கார் சான்ட்ரோ. இந்த காரைப் பொருத்தவரை
பொதுவாக, லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று
ஆண்டுகளுக்கு சான்ட்ரோவுக்கான பெட்ரோல் செலவு ரூ.1,33,221. மூன்று
ஆண்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் செலவு உத்தேசமாக 32,154 ரூபாய். ஹூண்டாய் ஐ10
காரைப் போலவேதான் ஹூண்டாய் சான்ட்ரோவின் சர்வீஸும். ஆயில் மற்றும் ஆயில்
ஃபில்டர் செலவுகளைப் பொறுத்தவரை சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ்
செய்ய 3,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று
ஆண்டுகளுக்கான சர்வீஸ் செலவு 10,000 ரூபாயைத் தாண்டும். பெட்ரோல்,
இன்ஷூரன்ஸ், சர்வீஸ் செலவுகளைச் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கான செலவு
மொத்தம் 1,75,375 ரூபாய்!
செவர்லே பீட்
மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் என்ற உத்திரவாதத்துடன் விற்பனையாகும் கார்
செவர்லே பீட். இது பொதுவாக லிட்டருக்கு 13.4 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி
மூன்று ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவு சுமார் 1,51,114 ரூபாய். இன்ஷூரன்ஸ்
மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35,797 ரூபாய். சர்வீஸைப் பொறுத்தவரை கார்
வாங்கும்போதே மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகைக்காக 16,000 ரூபாய்
கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ-க்கு
ஆயில், ஆயில் ஃபில்டர் உள்பட அனைத்து செலவுகளையும் இலவசமாகவே செய்து
கொள்ளலாம்!
டாடா இண்டிகா
டிராவல்ஸ் மார்க்கெட்டில் மட்டுமல்ல, பயணிகள் கார் மார்க்கெட்டிலும்
இண்டிகா அதிகமாக விற்பனையாகும் கார். பயணிகள் கார் மார்க்கெட்டைப்
பொறுத்தவரை பெட்ரோல்தான் அதிகமாக விற்பனையாகும் கார். டாடா இண்டிகா ஸெட்டா,
பொதுவாக லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு
1,44,642 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு உத்தேசமாக 26,574
ரூபாய். டாடா இண்டிகாவை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள்
செய்ய வேண்டும். அடுத்த சர்வீஸ் 5000 கி.மீ அல்லது 6 மாதங்களில். அடுத்து 1
ஆண்டு அல்லது 10,000 கி.மீ-ல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் மற்றும்
ஆயில் ஃபில்டர் மாற்ற சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000
ரூபாயும் செலவாகும். இண்டிகாவைப் பொறுத்தவரை 4 இலவச சர்வீஸ்கள் உண்டு.
நான்காவது சர்வீஸுக்கு 3,700 ரூபாயும், ஐந்தாவது ஜெனரல் சர்வீஸுக்கு 5,000
ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 14,000 ரூபாய்
சர்வீஸுக்கென்று செலவாகும். மூன்று ஆண்டுகள் முடிவில், நீங்கள் காருக்காகச்
செலவு செய்த தொகை 1,85,216 ரூபாய்!
விகடன்
விகடன்
No comments:
Post a Comment