Search This Blog

Wednesday, May 27, 2015

மின் விசிறிகள்!

ஆதிகாலத்து மனிதன் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதபடிஇயைந்து வாழ்ந்தான். மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் பதுங்கி இருந்த அவனுக்கு வெக்கையோ, வியர்வையோ ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.
பிற்பாடு நாகரிகமடைந்த மனிதன் கற்களைக் கொண்டு வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தான். ஜன்னல்கள் வைக்கப்பட்டாலும் வீட்டுக்குள் காற்று வருவது குறைந்துபோனது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று மனிதன் யோசித்தபோது உருவானதுதான் மின் விசிறிகள்!


17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காற்று மற்றும் வெற்றிடம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பிக்க துவங்கின. 1727-ம் ஆண்டு கிரிஸ்டோபர் ரென் என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மோட்டார் மூலம் இயங்கும் அமைப்பை நிறுவினார். பின்னர் பல மாறுதல்களுடன் பல இடங்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டது.

1882-ம் ஆண்டு நியூ ஆர்லண்ட்சை சேர்ந்த ஸ்க்யூலயர் ஸ்காட்ஸ் வீலர் என்பவர் மின்சாரம் மூலம் இயங்கும் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இது க்ராக்கர் & குர்டிஸ் நிறுவனத்தால் முதல் முதலில் சந்தைப்படுத்தப்பட்டது. 1920-களில் பெரிய தொழிற் சாலைகளில் உள்ளே உள்ள காற்றை வெளியேற்றி, வெளியே உள்ள இயற்கை காற்றை உள்ளே இழுக்கும் விதத்திலான மின் விசிறிகள் பயன்பாட்டுக்கு வந்தன.


1970-களுக்குப் பிறகு உலகம் முழுக்க வீடுகளில் மின் விசிறிகள் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆறு இறக்கைகள் கொண்ட மின் விசிறி, நான்கு இறக்கைகள் கொண்ட மின் விசிறி ஆகிய வற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. இன்று சூரிய ஒளியில் இயங்கும் மின் விசிறி வரை இந்த கண்டுபிடிப்பு காலத்தின் தேவைக்கேற்ப வளர்ந்து வருகிறது.

கோடை காலத்தில் இன்று வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் செய்யும் செயல் மின் விசிறியை ஓடவிடுவதுதான். அறையின் வெப்பத்தைத் தணிக்க இப்போது ஏசி மெஷின்கள் பயன்படுத்தப்பட்டாலும், அது அதிக  விலையுள்ள சாதனமாகவே உள்ளது. இன்றும் சாதாரண மக்கள் கொசுக்கடியில் இருந்தும் வெக்கையிலிருந்தும் தப்பித்து நிம்மதியாக தூங்குவதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பவை மின் விசிறிகள்!

ச.ஸ்ரீராம்

1 comment:

  1. இந்த நூற்றாண்டில் பயனுள்ள முக்கியமான கண்டு பிடிப்புகளில் ஒன்று மின் விசிறி நன்றி சகோ

    ReplyDelete