வித்யை என்பது ‘ஏதோ ஒரு துறையில் அறிவு’ என்றே ஆகிறது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதற்கும் ‘ஸிஸ்டமாடிக்’காக
ஒரு ‘முறை’ ஏற்படுத்திச் சொல்லிக் கொடுத்தால் அது வித்யா போதனையாகி விடுகிறது. அப்படிப் போதிப்பவர் குரு ஆகிவிடுகிறார். ஆனால் இது
ஒரு ஜீவனை மூளை என்பதன் எல்லைக்குள் மட்டும் கொண்டு வந்து பின்னப்படுத்தி, குரு என்ற ஸ்தானத்தையும் ரொம்பக் குறைத்துவிடுகிற
கார்யந்தான்.
அறிவு வளர்ச்சி என்ற ஒன்றை மட்டும் கவனித்து, எந்தத் துறையில் அறிவை வழங்குவதும் வித்யா போதனை என்னும்போது ஜீவனுடைய
ஹ்ருதயத்தை ஒதுக்கிவிட்டதாக ஆகிறது. மூளை - ஹ்ருதயம் இரண்டும் சேர்ந்தே ஜீவன். ஒரு ஜீவன் உண்மையான ஜீவனாக வாழவும், ஜீவனே
தேவனாகக் கூட உசரவும் மூளையைவிட ஹ்ருதய அபிவ்ருத்திதான் முக்யமானது. அதனால்தான் மூளைக்கு மாத்திரம் சரக்கு ஏற்றி அதை வ்ருத்தி
செய்வதை ‘ஜீவனை பின்னப் படுத்துவது’ என்றது. ஜீவனை புத்திசாலியாக மாத்திரமில்லாமல் குண சாலியாகவும் ஆக்க வேண்டியதே
நிஜகுருவின் கடமை. அப்படியில்லாமல் புத்திசாலியாய் மட்டுமே பண்ணும்போது குருவின் ஸ்தானத்தை ரொம்பவும் குறைத்து, குறுக்கி,
இறக்கிவிடுவதாக ஆகிவிடுகிறது.
பகவத் ஸ்ருஷ்டியில் மநுஷ்ய மூளை என்பது ஒரு அற்புதமான கருவியாக
இருப்பதைக் கவனித்து - அதை மாத்திரமே கவனித்து - வெறும் அறிவை
மட்டுமே சார்ந்து ஒரு ஆர்ட்டாக, ஸயன்ஸாக ஸிஸ்டம் செய்யப்பட்ட எதையும்
‘வித்யை’ என்று வைத்து விட்டார்கள். அதன் போதகர் ‘குரு’ என்றும்
சொல்லிவிட்டார்கள். ஆனால் இதுவே நம் பூர்விகர்களின் பூர்ணமான அபிப்ராயம்
என்று நினைத்து விடக்கூடாது.
No comments:
Post a Comment