அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனைக் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம்
செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின்
முக்கியமான அம்சங்களாகும். யமன் என்றால் நாம் எல்லோரும் கதி கலங்குகிறோம்.
அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில்
ஒரு கதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிராம்மணப்
பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இந்தப் பையன்
யமனுடைய க்ருஹத்துக்கு வந்து மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி
கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதி
ஒருவனின் வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதான்
ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத்தையும்
நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக் கொண்டு வந்து, “என்
க்ருஹத்தில் ராத்திரி சாப்பிடாமல் இருந்து விட்டாய். இதனால்
எனக்கு தோஷம் உண்டாகாமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் அப்பா.
ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு
வரம் வீதம் என்னிடம் மூன்று வரம் வாங்கிக் கொள்” என்று ப்ரார்த்தித்ததாக
உபநிஷத் சொல்கிறது.
இங்கெல்லாம் ‘பரோபகாரம்’என்று செய்கிறபோது இருக்கக்கூடிய ‘ஸுபீரியாரிடி’ மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப்
பாத்திரனாகிறவனிடம் பயந்து பயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிற மாதிரி அவனுக்கானதைச் செய்வதையே பார்க்கிறோம்.
பரோபகாரத்தில் ஒரு முக்யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம் தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம்.
எத்தனையோ துர்குணங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.
No comments:
Post a Comment