பொதுவாக குழந்தைகளுக்குப் பால் பற்கள் 6 மாதங்களில் முளைக்கும், ஆனால் சில குழந்தைகளுக்கு இதில் தாமதமும் ஏற்படலாம். பெரும்பாலான பெற்றோர்கள், பல் முளைப்பதில் தாமதம் ஏற்படின் அதே வயதுடைய மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு கவலை கொள்வார்கள், ஆனால் பல் முளைப்பதில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் உள்ளன.
பற்கள் முளைக்கும்போது ஏற்படும் உறுத்தலினால் குழந்தைகள் எதையாவது வாயில் போட்டுக் கடிக்கும். எனவே சத்துக் குறைபாடு காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஜுரம், வலி போன்றவைகூட ஏற்பட வாய்ப்புண்டு. இது பொதுவாக உள்ள பிரச்னை என்பதால், பெற்றோர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. முடியாத பட்சத்தில் பல் மருத்துவரிடம் காண்பித்துக் கொள்வது நல்லது.
பால் பற்கள் நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மையாகவும் மிக அழகாகவும் காணப்படும்.
பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க, கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. இதனால் பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு ‘நர்ஸிங் பாட்டில் கேரிஸ்’ என்று பெயர், இது அவர்களின் பற்களில் அதிக பாதிப்பை உண்டாக்கும்.
எனவே இரவில் பால் குடித்த பின்பு, அவர்களின் வாயைச் சுத்தம் செய்வது அவசியம். பாலுக்குப் பின் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தோ, அல்லது ஈரப் பஞ்சினால் அவர்களின் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால் பற்சிதைவு தடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளை, கூடுமான வரை குறைந்த அளவே கொடுப்பது நல்லது. அவர்களுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்து பழக்கப்படுத்துவது. அவர்களின் உடல்நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.
பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தர பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth bud) உள்ளது. அது வளர வளர பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பல் அடி, விழுந்துவிடும், அந்த இடத்தில் நிரந்தரப் பல் வளரும்.
டாக்டர் கோபாலகிருஷ்ணன்
No comments:
Post a Comment