Search This Blog

Saturday, November 21, 2015

அஷ்வின்

 
இந்தியாவின் தலைசிறந்த ஆப் ஸ்பின்னராக கருதப்படும் எரப்பள்ளி பிரசன்னா 20 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒரு இந்திய சாதனை புரிந்தார். அஷ்வின் தன் முதல் இருபது ஆட்டங்களில் இச்சாதனையை முறியடிக்கும் வண்ணம் நெருங்கி வந்தார். ஆனால் ஒரு சின்ன இடைவெளியில் தவற விட்டார். ஆனால் இப்போது அவர் தனது 29வது ஆட்டத்தில் 153 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரசன்னாவையும் கடந்து சென்று விட்டார். அஷ்வினின் பந்து வீச்சு தரம் கடந்த சில மாதங்களில் பல படிகள் மேலே உயர்ந்து விட்டது. இன்று உலகின் தலைசிறந்த ஆப் சுழலர் அவர்தான். அவரால் எந்த ஆடு தளத்திலும் தனது பிளைட், வேக மாறுபாடு, ஆர்ம் பந்து, கேரம் பந்து உள்ளிட்ட மாறுபட்ட தன்மை, நீளத்தை கட்டுப்படுத்தும் பாங்கு, புத்திசாலித்தனம் ஆகியவை கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியும். இத்தனை திறமைகளையும் அஷ்வின் இயல்பிலேயே பெற்றிருக்கவில்லை. அவர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனையாளர். அவரது ‘நமக்கு நாமே’ பயணம் பற்றி பார்ப்போம்.
 
அஷ்வின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க நிலை மட்டையாளராகவே அறிமுகமாகி ஆடி வந்தார். பந்து வீச்சு அவருக்கு இரண்டாம் பட்சமே. ஒரு முறை விபத்து காரணமாய் அவரால் தமிழக அணிக்காக சற்று காலம் ஆட முடியாமல் போயிற்று. காயத்தில் இருந்து மீண்டு வந்த அஷ்வின் தன் ஆப் ஸ்பின் பந்து வீச்சில் கவனம் செலுத்த தொடங்கினார். 2006இல் அவரைப் பற்றி ஹிந்துவின் விளையாட்டு பக்க அறிக்கையில் படித்தது நினைவுள்ளது. அஷ்வின் உயரமான சுழலர். கட்டுப்பாடாக வீசக் கூடியவர். அதிகமான பவுன்ஸ் காரணமாய் அவருக்கு நிறைய விக்கெட்டுகள் விழுகின்றன என்று அவரைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. சேலஞ்சர் கோப்பையில் தான் முதன்முதலில் அஷ்வின் பந்து வீசுவதை கவனித்தேன். அப்போது அஷ்வின் உள்ளூர் அளவில் கூட முன்னணி வீச்சாளராக இல்லை. ஐ.பி.எல்லிலும் அறிமுகமாகவில்லை. முதல் பார்வையில் அவர் ஒரு வழக்கமான சுழலர் இல்லை எனப் பட்டது. பெரும்பாலான இந்திய சுழலர்கள் குள்ளமானவர்கள். அதனால் அவர்கள் பந்தை காற்றில் மிதக்கும்படி பிளைட் செய்வார்கள். பிளைட் சிறப்பாய் இருக்கையில் பந்து விழும் நீளம் குறித்து மட்டையாளனுக்கு குழப்பம் ஏற்படும். இப்படி ஏமாறும் மட்டையாளர்கள் சுலபத்தில் அவுட் ஆவார்கள். ஆனால் உயரமான சுழலர்கள் மட்டையாளனுக்கு மேலிருந்து கீழாய் பந்து வரும் படி வீச முடிவதால் அவ்வளவாய் பிளைட் செய்யாமலே நீளம் குறித்து குழப்பம் உண்டாக்க முடியும். அனில் கும்பிளேவும் அஷ்வினும் பந்தை பிளைட் செய்வதற்கு அதிகம் மெனக்கெடாதவர்கள். இருவருமே பவுன்ஸை நம்பி விக்கெட் எடுப்பவர்கள். அதனாலே இருவரையும் முதலில் பார்க்க குறைபட்ட சுழலர்கள் எனத் தோன்றும். ஆனால் இருவரும் மாறுபட்ட வீச்சாளர்களே அன்றி தரம் குறைந்தவர்கள் அல்ல.
 
அஷ்வின் முதல் பார்வையில் பந்தை அதிகம் சுழற்றவோ பிளைட் செய்யவோ செய்யாத, வேகமாக நேராய் வீசும் ஒரு சாதாரண வீரராகவே எனக்குத் தோன்றினார். ஹர்பஜன் சிங்கிடம் அவர் அறிமுகமான புதிதிலேயே ஒரு சுழலருக்கான அத்தனை திறன்களும் வெளிப்பட்டன. ஹர்பஜனிடம் இயல்பிலேயே லூப் இருந்தது. லூப் என்பது பந்தை அதிகமாய் சுழற்றி பார்வையாளனின் பார்வை மட்டத்துக்கு மேலாக கொண்டு செல்வது. லூப் உள்ள பந்து தன்னை நோக்கி வருகிறது என மட்டையாளன் எண்ணி இருக்க அது கடைசி நொடியில் அவனை விட்டு விலகி செல்லும். ஹர்பஜனின் பந்து அதிகமாய் சுழன்று திரும்பியது. ஆனால் அஷ்வின் அந்தளவுக்கு வசீகரமாய் தோன்றவில்லை. இதனாலேயே அஷ்வின் அறிமுகமான புதிதில் தோனி அவர் ஒரு “சாமர்த்தியமான சுழலர். பார்க்க ரொம்ப வசீகரமானவர் அல்ல” என்றார்.  

ஆனால் இந்த செலஞ்சர் கோப்பை தொடரில் அஷ்வினின் மாறுபட்ட பந்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக அஜெந்தா மெண்டிஸைக் கண்டு தூண்டுதல் பெற்று அவர் தனக்கென கேரம் பந்து எனும் ஒரு சொடுக்கி வீசும் பந்தை உருவாக்கிக் கொண்டார். அப்பந்தை கணித்து ஆட மட்டையாளர்கள் திணறினர். பின்னர் ஐ.பி.எல் அறிமுகமாக சென்னைக்காக ஆடத் தொடங்கிய அஷ்வின் இது போன்ற மாறுபட்ட பந்துகளாலும் கட்டுப்பட்டாலும் தான் மிகவும் அறியப்பட்டார். எந்த பதற்றமான சூழலி லும் நிதானமாய் வீசும் மன உறுதி அவருக்கு இருந்தது. இக்குணங்கள் தாம் தோனியை கவர்ந்திருக்க வேண்டும். 2011 உலகக்கோப்பைக்கு பின் அவர் ஹர்பஜன் இடத்துக்கு அஷ்வினைக் கொண்டு வந்தார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் மிகவும் ஆபத்தான வீச்சாளராக தோன்றினார். தன் முதல் டெஸ்டிலேயே ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது மாறுபட்ட பந்துகளை கணிக்கவோ பவுன்சை சமாளிக்கவோ முடியாமல் மட்டையாளர்கள் திணறினர். ஆனால் 2012இல் இந்தியா வந்த இங்கிலாந்து மட்டையாளர்கள் அஷ்வினை சிறப்பாக கையாண்டனர். அதன் பின்னர் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்த அஷ்வின் அங்கும் திணறினார். அவரது பந்து நேராய் அதிக சுழல் இன்றி வந்தன. மட்டையாளர்கள் அவரை நேராய் ஆடத் தொடங்க அவர் பொறுமை இழந்து வைடாய் குறைநீளத்தில் வீசினார். அவர்கள் அவரை வெட்டவோ புல் செய்யவோ செய்தனர். இக்கட்டம் அவரது ஆட்டவாழ்வில் ஒரு தளர்ச்சி காலம்.
 
இதனை அடுத்து ஊருக்கு திரும்பின அஷ்வின் தனது இளம் வயது பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்து தன் குறைகளை களைந்தார். இடுப்பு மற்றும் மேலுடலை அதிகமாய் ஒவ்வொரு பந்து வீசும் போதும் பயன்படுத்தி பந்துக்கு அதிக ஆற்றல் அளித்தார். விளைவாக அடுத்து இங்கு ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பு போல் சீறின. அவரை ஆட முடியாது ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். ஆனாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி.20 ஆட்டங்களில் ஆடியதால் அவரது பந்து வீச்சு மீண்டும் கோளாறானது. ஒரே ஓவரில் பலவித பந்துகளை வீச முயன்று கட்டுப்பாட்டை இழந்தார். விரைவில் அணியில் அவருக்கு பதில் ரவீந்திர ஜடேஜா ஆடினார். ஆட முடியாத காலத்தில் அஷ்வின் தன் தொழில்நுட்ப பிசிறுகளை சரி செய்தார். 2015 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராய் நியமனமான ஸ்ரீதர் தனது பல தொழில்நுட்ப ஐயங்களுக்கு விளக்கம் தந்ததே தன் முன்னேற்றத்துக்கு பிரதான காரணம் என அஷ்வின் தெரிவித்தார்.  

பால்யத்தில் இருந்தே முறையாக சுழல் பந்து வீசி பழகாத அஷ்வின் ஆட ஆடத் தான் பந்து வீச்சின் அடிப்படைகளை மெல்ல மெல்ல கற்று வளர்ந்தவராக உள்ளார். தன்னுடைய கலை குறித்து தீவிரமாய் யோசித்து புரிந்து கொண்டு அதை தன் வீச்சில் முயன்று பார்த்து சுயமாய் முன்னேறி இருக்கிறார். முயன்றால் யாரும் ஹர்பஜனோ முரளிதரனோ ஆக முடியாமல் போகலாம். ஆனால் அஷ்வின் ஆகலாம்.
 
ஆர். அபிலாஷ்

No comments:

Post a Comment