தமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சோல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் - முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்துபோன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக்கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால் தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத் தானே இருப்பார்?
அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம் தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த் தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார்.
No comments:
Post a Comment