Search This Blog

Thursday, May 23, 2013

ஜெயலலிதா அரசின் ப்ளஸ், மைனஸ் என்ன..?

ராண்டில் நூறாண்டு சாதனை’ என்றார் போன வருடம். 'சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு’ என்கிறார் இப்போது.

ஆனால், ஜெயலலிதா சொல்வதை வழிமொழியும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை. விண்ணை எட்டும் விலைவாசி, சிறு மற்றும் பெருந்தொழில்களைக்கூட மோசமாக்கி நாசமாக்கிய மின்வெட்டு. இந்த இரண்டுக்கும் மத்தியில் கொண்டாடும் சூழ்நிலை மக்களுக்கு இல்லை. விலைவாசி, மின் விநியோகம், சட்டம்-ஒழுங்கு இந்த மூன்று துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியைத்தான் பொதுமக்கள் சிறப்பான ஆட்சி என்று ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்த மூன்றிலுமே ஸ்கோர் செய்யவில்லை ஜெ. அரசு. இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஜெயலலிதா அரசின் ப்ளஸ், மைனஸ் என்ன..? 

'மகராசி’ அரசாட்சி! 

ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்குவது அடித்தட்டு மக்கள் வீட்டில் அடுப்பெரிய உதவு கிறது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் உருவாகி நிற்கும் 'அம்மா உணவகங்கள்’ மிகமிக அடித்தட்டு மக்களின் பசித்த வயிறுகளுக்குப் பந்தி பரிமாறுகின்றன. இவை அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இதே தரம் மற்றும் சுகாதாரத் துடன் விரிவுபடுத்தப்பட்டு, தொடர்ந்து சீராகப் பராமரிக்கப்பட்டால், எம்.ஜி.ஆருக்குச் சத்து ணவுத் திட்டம் கொடுத்த அழியாப் புகழைப் போல ஜெயலலிதாவுக்கு 'அம்மா உணவகங்கள்’ கொடுக்கும்.

இதேபோல் கிராமப்புறத்தில் அமலில் இருக்கும் 'அம்மா திட்டம்’ ஒன்றும் பலதரப் பட்டவர்க்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அரசு அலுவலரிடம் இருந்து ஒரு கையெழுத்தோ, கார்டோ வாங்குவதற்குள் அப்பாவிகள் வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. இதைத் தவிர்க்க, வருவாய்த் துறை சார்பில் அனைத்துத் துறை நலத் திட்ட உதவிகளும் நேரில் சென்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு நலத் திட்ட உதவி கள் என அனைத்தையும் ஓர் ஊராட்சிக்குச் சென்று ஒரே நாளில் அளிக்கும் திட்டம் இது. மிகச் சரியாகச் செய்துகொடுக்கும் வருவாய்த் துறை அதிகாரிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தால், வரும் ஓராண்டுக்குள் அரசாங்க எதிர்பார்ப்பு இல்லாமல் அனைத்து மக்களும் செயல்படக்கூடிய சுபிட்ச நிலைமை உருவாகக்கூடும். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி என்பது எப்போதும் இந்த மக்கள்தான். அவர் கள் நலன் சார்ந்தே இத்தகைய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன!  


மத்திய அரசுடன் மல்லுக்கட்டு!

எதிர்க் கட்சியாக இருக்கும்போது மத்திய அரசைக் கடுமையாக எதிர்ப்பது, ஆளும் கட்சி ஆனதும் ஆதாயங்களை அனுபவிப்பது... இது அனைத்துக் கட்சிகளுக்கும் வழக்கமானதுதான். ஆனால், ஜெயலலிதாதான் மத்திய அரசு மீதான தனது கடுமையான விமர்சனங்களைப் பின் வாங்காமல் பிரயோகிக்கிறார். 'ஆட்சியைப் பிடிப்பது எனது விருப்பமல்ல; மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள். தமிழர்களின் உரிமையைப் பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று பகிரங்கமாக ஜெயலலிதா அறிவித்தார்.

காவிரிப் பிரச்னையில் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாததை, முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளாவுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கத் திட்டமிட்டதை எதிர்த்தது முதல், சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் உரிமையை மாநில அரசின் கையில் இருந்து பறிப் பது, அனைத்து நலத் திட்டங்களுக்குமானமானி யத்தை நேரடியாக வழங்குவதைக் கண்டிப்பது வரை... மத்திய அரசுக்கு இவர் காட்டிய எதிர்ப்பின் பட்டியல் நீளமானது. பி.ஜே.பி. ஆளும் மாநில முதல்வர்கள் கூட இத்தகைய எதிர்ப்பைக் காட்ட்வில்லை.

'மாநில சுயாட்சி’ என்று வெற்று வாதமாகப் பேசிக்கொண்டிருப்பதை விட, நடைமுறையில் அதற்கான பகிரங்க எதிர்ப்பைக் காட்டுவதே தற்போதைய அதிஅவசியத் தேவை. மாநில அரசாங்கங்கள் மத்திய அரசின் குத்தகைப் பிரதேசங்களாக நினைக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் முதலமைச்சராக ஜெயலலிதாதன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

நிம்மதி இழந்த மக்கள்!

'நெல்லுச் சோறு’ சாப்பிடுவது ஒரு காலத்தில் மிக அபூர்வமாக இருந்தது. தற்போது அப்படி ஒரு சூழ்நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். தரமான அரிசிக்கான விலை, தர முடியாத விலையாக இருக்கிறது. பருப்புக்கும் இதே நிலைதான். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை 2,500-க்கு வாங்கியது என்றால், இன்று அதன் சந்தை மதிப்பு விலை 6,000-க்கும் மேல். இந்த வர்த்த கத்தை அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த அரசாங்கமும் கண்ணை மூடிக் கொள்ள முடியாது.

விலைவாசி உயர்வதால் மானிய விலையில் அரிசி, பருப்பு கொடுப்பது நிரந்தரத் தீர்வு ஆகாது. விளைச்சலை அதிகப்படுத்தி, உற்பத்திப் பெருக்கத்தை முடுக்கிவிடுவதே தொலைநோக்கில் நலன் பயப்பதாகும். ஆனால், உணவுப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகுறித்து இந்த அரசாங்கம் எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை!
 
ஷாக்... ஷாக்... ஷாக்!
ஜெயலலிதாவின் இமேஜை ஏகத்துக்கும் டேமேஜ் செய்த விஷயங்களில் முக்கியமானது மின்சாரம். எந்த ஆட்சியாக இருந்தாலும், மின் உற்பத்தியை 10 ஆண்டுகளுக்குப் பிறகான தேவையைக் கருத்தில்கொண்டே திட்டமிட வேண்டும். ஆனால், தமிழகத்தை மாறிமாறி ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு ஆட்சிகளுக்கும் அந்த அக்கறை எள்ளளவும் இருந்தது இல்லை. அதன் விளைவாகத்தான் தமிழகம் இருண்ட கண்டமாகிவிட்டது.

இந்த அவஸ்தை ஜெயலலிதா மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 7,000 கோடியில் அவர் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் புதிய புனல் மின் நிலையம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை 10 ஆண்டுகள் கழித்து வழங்கும்.
இப்படியான திட்டங்களை முன்னரே தீட்டா ததன் விளைவுதான் சமீபத்தியக் கெட்ட பெயர். ஆண்டுதோறும் மக்கள்தொகை உயரும் சதவிகித அடிப்படையில் மின் உற்பத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய திட்டங்களில் காட்டும் அக்கறையை ஏற்கெ னவே இருக்கும் மின் திட்டப் பராமரிப்புகளிலும் காட்ட வேண்டும். மேட்டூர், வட சென்னை, தூத்துக்குடி திட்டங்கள் திடீர் திடீரெனப் பழுதடைவதைத் தடுத்தாக வேண்டும்!

நல்ல, திறமையான மந்திரி யார்?

தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் நல்லவர்கள் யார், வல்லவர்கள் யார் என்று ஜெயலலிதா ஒரு பட்டியல்எடுத்துப் பார்க்க வேண்டும். 30 அமைச்சர் களும் யோக்கியசிகாமணிகளாக அமைவது குதிரைக் கொம்புதான். ஆனால், சரிபாதியாவது சரியானவர்களாக இருக்க வேண்டாமா? 'அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவையை நான் செய்துவருகிறேன்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ஒரு சுயநல வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட மதிக்காமல், 'பசை’ காட்டினால்தான் காரியம் நடக்கும் என்று செயல்படும் மந்திரிகளை அறிந்துகொள்ள வேண்டாமா?  

'நமக்கு எதுக்குங்க வம்பு? சும்மா மந்திரியா இருந்தாப் போதும்’ என்று எந்த முடிவுமே எடுக்காத மந்திரிகளும் உண்டு. சென்னை வீடு, தலைமைச் செயலகம், தொகுதி, சொந்த ஊர்... என நான்கு எல்லைக்குள் கார் கபடி மட்டுமே ஆடிக்கொண்டிருக்கும் மந்திரிகளும் உண்டு. அ.தி.மு.க-வில் தகுதியானவர்.

இல்லையா? அவர்களை அடையாளம் காண முடியவில்லையா? தகுதியானவர்களுக்கும் செயல்படத் தயக்கம் இருக்கிறதா? அல்லது அவர்கள் அப்படி இருப்பதுதான் மேலிடத்தின் விருப்பமா?

ஈழத் தாய்!
கருணாநிதியின் காலை வாரிய ஈழத் தமிழர் பிரச்னையை ஜெயலலிதா சிக்கெனப் பிடித்துக்கொண்டார். 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி, குற்றம் நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழ் ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்’ என்பது ஜெயலலிதாவின் திடீர் நிலைப்பாடு. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கள் வீரர்கள் கலந்துகொள்ளத் தடை விதித்தது முதல், மூன்று தமிழர் தூக்குக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது வரை அவரது முடிவுகளில் அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், தமிழ் ஈழ ஆதரவாளர் கள் மத்தியில் அதற்கோர் ஆதரவு அலை உருவாகியிருப்பதையும் மறுக்க முடியாது!

யாமிருக்கப் பயமேன்!
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’ என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால், அங்கிருந்த திருடர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகள் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தன.

இங்கே பிரச்னை கருணாநிதியா, ஜெயலலி தாவா என்பது அல்ல. பொதுவாகவே போலீஸ் மீது பயம் போய்விட்டது. எந்தத் தப்பும் செய்யா தவன்தான், நியாயமான புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் செல்லப் பயப்படுகிறான். தொடர்ச்சியாகத் தவறு செய்பவர்களுக்குக் காவல் நிலையம்தான் தப்பிக்கும் வாசலைத் திறந்துவைக்கிறது. இந்த கள்ள போலீஸ் விளையாட்டு நடக்கும் வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி குறையாது.

அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸுக்குப் பொதுவாகவே 'எதுவும் செய்யலாம்’ என்ற லைசென்ஸ் வழங்கப்படும். அதுவும் இதற்குக் காரணம். மோட்டிவ் கொலைகள், ஆதாயக் கொலைகள் என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் குற்றங்கள் பெருகிவருகின்றன. கூலிப் படைகள், பெயர்ப் பலகை மாட்டி தனி வெப்சைட் திறக்காத குறையாகப் பட்டவர்த்தனமாகச் செயல்படுகின்றன. 20 வயது இளைஞர்கள் சர்வசாதாரணமாக ஃபீஸ் ஃபிக்ஸ் பண்ணி, போட்டுத்தள்ளிவிட்டுப்போகிறார்கள்.

இதைத் தடுக்கக் காவல் துறையின் உயர் அதிகாரிகளால் முடியவில்லை. அவர்களுக்கு வேறு பிசினஸ் உள்ளது. இப்போதே இதைக் கவனிக்காவிட்டால், ஐந்து ஆண்டுகள் முடியும் போது இந்த ஆட்சியால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளின் தொகை, நீக்கப்பட்ட மந்திரி களைவிடக் கூடுதலாக இருக்கும்!

எதுக்கு எவ்வளவு ரேட்?
'ஒரு நேர்மையான நிர்வாகத்தைக் கொடுப்பேன்’ என்று ஜெயலலிதா முதலில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் சுற்றிக்கொண்டிருந்த புரோக்கர் கூட்டம் இப்போதும் சுற்றிச் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், கல்வி ஆகிய பசையான துறைகளை மையமாக வைத்து இவர் கள் அலைகிறார்கள். கான்ட்ராக்ட், கமிஷன் பேசப்படும் இடங்களில் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பதவிக்கும், பணி உயர்வுக்கும், இடமாறுதலுக்கும், நியமனத்துக்கும் தனித்தனிக் கட்டணங்களை இந்தப் புரோக்கர்கள் அறிவிக்கிறார்கள். கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது இது இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.


குறிப்பிட்ட 20 பேர், மொத்தத் தமிழக நிர்வாகத்தையும் தங்களது சொந்த அபிலாஷைகளுக் குப் பயன்படுத்திவருவது ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது!

ஆபீஸர்ஸ் ராஜ்யம்!
இது அதிகாரிகளின் அரசாங்கமாக இருக்கிறது. தகுதியற்ற அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல முக்கியமான துறைகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களே நடுங்குகிறார்கள். 'சி.எம். ஆபீஸ்ல இவங்க ஏதாவது போட்டுக்கொடுத்திருவாங்க’ என்று பயப்படும் அமைச்சர்கள் அதிகம். முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளின் 'குட் புக்’கில் இடம்பெற்றிருக்கும்  ஐ.ஏ.எஸ்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். இதனால், சிலரது வசதி வாய்ப்புகள் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாத உச்சத்தைத் தாண்டி எகிறுகிறது. குறிப்பிட்ட 10 பேரின் கொட்டத்தை அடக்குவதன் மூலமாக, ஜெய லலிதா தனது தனித்தன்மையை நிரூபிக்கலாம்.

தைரியலட்சுமி!
காஞ்சி சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜெயலலிதா கைதுசெய்தபோது டி.ராஜேந்தர் சொன்னார், 'கருணாநிதி இருந்திருந்தால், சங்கர மடத்தின் வாட்ச்மேனைக்கூடக் கைதுசெய்திருக்க மாட்டார்’ என்று. டாக்டர் ராமதாஸ் கைதும் அத்தகைய செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு ஊட்டியிருக்கிறது. முடிவு செய்துவிட்டால் யாரையும் தட்டிக்கேட்கும் தைரியம் அவருக்கு உண்டு.


கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் 'கெய்ல்’ திட்டத்தை முடக்கியது முதல், தென் மண்டலத்தில் கிலி பரப்பிய 'ஸ்டெர்லைட்’ வரை தடைபோட்டார். தீவிரவாதி என்றாலே தாடிவைத்த முஸ்லிமாகக் காட்டும் சினிமா விஸ்வரூபங்களுக்குத் தடை போட்டார். நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான வழக்கு அந்த மாஃபியாக்களை அடங்கவைத்தது. மதுரை பி.ஆர்.பி-க்கு எதிரான நடவடிக்கை அ.தி.மு.க -வின் மூத்த பிரமுகர்கள் பலருக்கே குடைச்ச லைக் கொடுத்தது. குட்கா, பான்பராக் ஆகிய போதை வஸ்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் பல விஷயங்கள் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

ஆக, ஒரு தலைமைக்குத் தேவையான தெளிவும், தீர்க்கமும், உறுதியும் ஜெயலலிதாவிடம் உண்டு. தற்போது தமிழகத்தின் வேறெந்த அரசியல் ஆளுமையிடமும் காணக் கிடைக்காத தகுதிகள் இவை.

சித்திரை மாதம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம், வள்ளுவர் சிலை பராமரிப்பு, சமச்சீர் கல்வி என எல்லாவற்றையும் 'கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடி’ போட்டுப் பார்ப்பதை முதலில் விட வேண்டும்.

தமிழன்னைக்குச் சிலை வைப்பதை விட்டு விட்டு, தமிழக அரசு நிர்வாகத்தில் இருக்கும் களங்கங்களைக் களையெடுங்கள்.

No comments:

Post a Comment