அன்புள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு,
அன்புடன்,
மக்களை நேசிப்பதால், அணு உலைகளை வெறுக்கும் ஒரு மனிதன்.
வணக்கம். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நாட்டின் வளர்ச்சிக்கு அது
தேவை. எனவே அதை மூடச் சொல்ல முடியாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்துவிட்டு நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்று
தீர்ப்பளித்திருக்கிறீர்கள். இவை எதுவும்
எங்களுக்குப் புதிதல்ல. ஏற்கனவே நாராயணசாமி என்று ஒருத்தர் இரண்டு
வருடங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொண்டிருக்கிறார். ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் காட்டாமல், தேசத்தின்
வளர்ச்சிக்கு அணு மின்சாரம் தேவை
என்று கருத்துச் சொல்ல அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவு உங்களுக்கு
அதிகாரம் கொடுத்திருக்கிறது? இந்தியாவில் அணு மின்சாரத்தின் சுமார் 50 வருட
வரலாற்றில் வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு என்பது தம்மாத்தூண்டு
என்பதற்கும் ஆனால் அதற்கு ஆன செலவு வெள்ளை யானையை உருவாக்கி
பராமரிக்கும் செலவு என்பதற்கும் எண்ணற்ற ஆவணங்களை நாங்கள் மக்கள் முன்பு
வைத்தது போல, உங்கள் மன்றம் வைக்கவில்லையே.
அணு உலை பற்றிய மக்கள் அச்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னையை
நீதிமன்றம் முன்பு வழக்காகக் கொண்டு வந்த ஆர்வலரைப் பாராட்டி
இருக்கிறீர்கள். உலையை மூடவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏன்
நிராகரிக்கிறீர்கள் என்று உங்கள் தீர்ப்பில்
பதில்களே இல்லையே. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி சில அரசு
அமைப்புகளுக்கு உத்தரவிடுகிறீர்கள். யார் அவர்கள்? இதுவரை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யத் தவறியவர்கள், சட்ட
விதிகளை மீறியவர்கள் என்று வழக்குப் போட்டவர் ஆதாரங்களுடன் சுட்டிக்
காட்டிய அதே அமைப்புகள். எப்போது கேட்டாலும், எல்லாம் சரியாக இருக்கிறது
என்ற ஒற்றைப் பதிலைச் சொல்லி வந்தவர்கள் அவர்கள். எதெல்லாம்
தப்பு தப்பாக இருக்கிறது என்று ஆதாரங்களை நாங்கள் சுட்டிக் காட்டினால்,
அப்போது அது மட்டும் சரியில்லை, சரி செய்துவிடுவோம் என்று எங்களிடமும்
நீதிமன்றங்களிடமும் மழுப்பலாகப் பதில் தருபவர்கள். அவர்களிடமே திரும்பப்
பொறுப்பை ஒப்படைக்கும் நீங்கள், அவர்கள் சரியாகச் செய்கிறார்களா இல்லையா
என்று
கண்காணிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யவே இல்லையே? அதைச் செய்யாமலே உலையை
இயக்கலாம் என்கிறீர்களே? இது என்ன தீர்ப்பு? இது என்ன நீதி?சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை வரிசையாக அவர்கள் மீறியதை, ஆர்வலர்கள்
நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியதும் மீறியதை ஒப்புக்கொண்டு திரும்ப அனுமதி
பெறுகிறோம் என்கிறார்கள். வேறு எந்தக் குடிமகனுக்காவது நீதிமன்றம் இந்தச்
சலுகையை வழங்கியதுண்டா? விதியை மீறி
சாதாரண கட்டடம் கட்டினால் இடிக்கச் சொல்லி இருக்கிறதே நீதி மன்றம்?!
இப்போது எங்கள் மக்களின் பாதுகாப்பை, விதியை மீறியவர், விதிமீறலை
அனுமதித்தவர், கண்டுகொள்ளாதவர், அங்கீகரித்தவர் என்று அதே அமைப்புகளிடம்
திரும்பவும் ஒப்படைக்கிறீர்களே, இது என்ன நீதி?
அணு உலையின் பாகங்களை வழங்கிய ரஷ்ய கம்பெனி ஊழல் கம்பெனி என்பதை மறுத்துக்
கொண்டே இருந்தவர்கள் இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். பாகங்களைச்
சரிபார்க்கும் வேலையை இப்போது அவர்களிடமே ஒப்படைக்கிறீர்களே? அவர்கள்தானே
ஊழல் கம்பெனியிடம் வாங்கியவர்கள்? ஊழலை
இதுவரை மறுத்தவர்கள்? வேறு சுயேச்சையான அமைப்பிடம் அல்லவா இந்தப் பொறுப்பை
நீங்கள் தரவேண்டும்? திருடியவனிடமே ஸ்டாக் சரிபார்க்க கஜானா சாவியைக்
கொடுக்கலாமா?நாளை இந்த அணு உலையில் விபத்து நடந்தால், அதற்கு இனி நீங்களும் தானே பொறுப்பு?
அநீதியான ஒரு தீர்ப்பில், ஆறுதல் போல போராடும் மக்கள் மீது போடப்பட்ட
ஆயிரக்கணக்கான கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெறச் சொல்லி உத்தரவிட்டு
இருக்கிறீர்கள். ஒருவேளை வழக்கை ரத்து செய்தால், போராடும் மக்கள் அணு உலை
எதிர்ப்பைத் தொடராமல் கைவிட்டு விடுவார்கள் என்ற நப்பாசையாக இருக்கலாம்.
அறவழியில் போராடும் எதிர்ப்பாளர்கள் மீது இனிமேலும் வழக்குப் போட வேண்டாம்
என்று அரசுக்கு நீங்கள் சொல்லி இருந்தால் அதுதான் சரியாக இருந்திருக்கும்.
ஏனென்றால் தொடர்ந்து அணு உலைகளை எதிர்ப்பவர்கள்
எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம். அவை ஆபத்தானவை, பயனற்றவை, வளர்ச்சிக்கு
எதிரானவை என்பது நீங்கள் கவனிக்கத் தவறிய ஆவணங்களால் வரலாறுகளால் நாங்கள்
உணர்ந்து அறிந்து தெளிந்த உண்மைகள்.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அதை எதிர்த்துப் போராடிய மக்கள் எல்லாரும்
அன்றைய சட்டப்படி, அவற்றின் கீழ் தண்டனை வழங்கிய நீதிபதிகளின்படி,
குற்றவாளிகள்தான். ஆனால் அந்த மக்கள்தான் பின்னால் அதிகாரம் கைமாறியதும்,
புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கச் செய்தார்கள். இப்போது இருக்கும்
சட்டங்கள்
எங்களுக்கான நீதிகளுக்குப் போதுமானவை என்று நம்பியே உங்களிடம் வந்தோம்.
இல்லை, அவை போதாது என்றால், மறுபடியும் மக்கள் திரண்டு சட்டங்களை
மாற்றுவோம்; நீதிபதிகளை மாற்றுவோம். நீதியை மாற்ற முடியாது. அது எப்போதும்
எங்களுக்கானது.
மக்களை நேசிப்பதால், அணு உலைகளை வெறுக்கும் ஒரு மனிதன்.
No comments:
Post a Comment