Search This Blog

Friday, May 24, 2013

ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்ஸிங் - சூது கவ்வியது!

 
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிருபர் கூட்டத்தில் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ராகுல் டிராவிட். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 
 
டிராவிட், நீங்கள் ஓர் அற்புதமான ஸ்லிப் ஃபீல்டர். ஆனால், சமீபகாலமாக நிறைய கேட்சுகளைக் கோட்டை விட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய ஓய்வை முடிவு செய்ததா?"

உண்மைதான்" என்று ஒப்புக்கொண்டார் டிராவிட். நான் மட்டுமல்ல, எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கேட்ச்சை ட்ராப் செய்வது என்பது கொடுமையான விஷயம். அவுட் ஆவதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், கேட்ச்சை நழுவவிட்டால் அந்தக் காயம் அவ்வளவு சீக்கிரம் காயாது" என்றார். இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் அளவுக்கு அணிக்காகத் தலையைக்கூட கொடுக்கும் மனோபாவம் கொண்ட வீரர் எவருமில்லை. ஆனால் இன்று டிராவிடின் தலைமையில் ஆடிய, அவரிடமிருந்து எந்த ஒழுங்கையும் கற்றுக் கொள்ளாத 3 வீரர்கள் வெகுசுலபமாக ரசிகர்களுக்குத் துரோகம் விளைவித்திருக்கிறார்கள். ஐ.பி.எல்.லில் சீரியஸ் கிரிக்கெட்டே இல்லை, எல்லாமே ஃபிக்ஸிங்தான் என்கிற வாதத்துக்கு வேறு வலு சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களும் சூதாட்டக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த தில்லி காவல் துறையினர், மூவரையும் கைது செய்துள்ளார்கள். இந்த மூன்று வீரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களின் செல்போன்களை இடைமறித்துக் கேட்கப்பட்டபோது மே 5, 9, 15 ஆகிய தேதிகளில், ஜெய்ப்பூர், மொஹாலி, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில் மூவரும் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தில்லி காவல் ஆணையர் நீரஜ் குமார் ஐ.பி.எல். ஊழல்கள் பற்றி விவரிக்கையில்... மூன்று வீரர்களும் சமிக்ஞை முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது வீடியோ ஆதாரம் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த், பேன்ட் பாக்கெட்டில் வெள்ளை நிற டவலை வைத்துக் கொள்வதை அடையாளமாக்கினார். கிரிக்கெட் வீரர்களின் செல்போன் உரையாடலை ஆய்வு செய்தபோது, தங்களுக்கு அழகிகள் சப்ளை செய்ய வேண்டும் என்று சூதாட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டது பதிவாகி இருக்கிறது. சில ஓவர்கள் மட்டுமல்ல, முழு மேட்சிலும் ஃபிக்ஸிங் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது" என்கிறார். நாளுக்குநாள் கிடைக்கிற புதுத் தகவல்கள் ஒவ்வொன்றும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன.

ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. ஸ்ரீசாந்துக்குப் பெண் பார்த்துவிட்டார்கள். செப்டெம்பரில் திருமணம் நடக்க இருந்தது. அங்கீத் சவான், தன் காதலியை ஜூன் 2-ந்தேதி அன்று திருமணம் செய்ய இருந்தார். ஸ்ரீசாந்தின் திருமணத்தைக் கெடுக்க, திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால், தோனி, ஹர்பஜன் மீது சந்தேகம் இருக்கிறது. ஹர்பஜனுக்கு எதிராக ட்விட்டரில் பேசியதால் சதி உண்டாகியிருக்கலாம்" என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் ஸ்ரீசாந்தின் சகோதரரான மது பாலகிருஷ்ணன். என் மகனுடன் ஒரு பெண் இருந்ததாகச் செய்தி வந்தபிறகு இனி அவரை யார் மணந்து கொள்வார்?" என்று பரிதாபமாகக் கேட்கிறார் ஸ்ரீசாந்தின் தாயார். ஸ்ரீசாந்த் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஒட்டுமொத்த கேரள கிரிக்கெட் ரசிகர்களும் குமுறுகிறார்கள். குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதற்கு இத்தனை விளைவுகள் இருக்கும் என்பதை மூன்று பேரும் அறிந்திருக்க வாய்ப்புண்டா?

சட்டப்படி தவறு என்றாலும் கிரிக்கெட் சூதாட்டம் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் மும்முரமாக நடைபெற்றுள்ளது. ஐ.பி.எல். சீஸன் முழுக்க நடந்த சூதாட்டங்களில் 25,000 கோடி ரூபாய் கைமாறப்பட்டுள்ளது. ஒரு ஐ.பி.எல். மேட்ச் நடந்தால் அதில் பெட்டிங் செய்ய 120 வழிகள் உள்ளன. அதாவது 120 பந்துகளிலும் பெட்டிங் பண்ணலாம். ஐ.பி.எல். பார்ப்பவர்களுக்குத்தான் இது விளையாட்டு. வேறு சிலருக்கு இது பண விளையாட்டு! இனிமேலாவது ஐ.பி.எல். நிர்வாகம் விழிப்புடன் இல்லாவிட்டால், அதற்குத் தடைவிதிக்க நீண்ட நாளாகாது.
 

No comments:

Post a Comment