Search This Blog

Friday, May 24, 2013

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன தெரியுமா?


ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது, பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன்கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வது, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு பெரும்பாலும் அவுட் ஆஃப் பார்ம் மற்றும் சாதாரண வீரர்கள்தான் பலியாவார்கள். ஆக, இப்படியான சூதாட்ட முறைகளைத் தடைசெய்ய புதிய சட்டம் அவசியம்! தற்போது, 3 ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்த தில்லி காவல் துறைதான் 2000ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹான்ஸி குரோனியே மீதான மேட்ச் ஃபிக்ஸிங் புகாரையும் விசாரித்தது. அந்த வழக்கில் 13 வருடங்களாகியும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியவில்லை. ஐ.பி.சி. 420, 120 பி பிரிவுகளில் வழக்கு குரோனியே மீது பதிவுசெய்யப்பட்டது. இப்போது இதே பிரிவுகளில்தான் 3 ஐ.பி.எல். வீரர்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுவரை மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக எந்தவொரு வலுவான சட்டத்தையும் கொண்டுவராததால் மூன்று பேரும் பெரிதாகப் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கருத்து நிலவுகிறது. இப்போது, சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு ஏற்ற வகையில் வலுவான ஒரு சட்டத்தை இயற்றி அதைக் கண்டிப்புடன் அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. ‘சூதாட்டம் தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பான வரைவை விரைவில் தயாரிப்போம்" என்கிறார் சட்ட அமைச்சர் கபில் சிபில். சொன்னது போலவும் பத்து ஆண்டு தண்டனை என்று சட்டம் கொண்டு வர உள்ளனர்..

பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்து கருத்து சொல்கையில், இந்தியாவில் சூதாட்டம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. சூதாட்டத் தரகர்களை பி.சி. சி.ஐ.யால் கட்டுப்படுத்த முடியாது. மற்ற நாடுகளில் சூதாட்டம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் சட்டரீதியான அங்கீகாரம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. இனிமேல், ஒவ்வொரு ஐ.பி.எல். அணியையும் கண்காணிப்பதற்கு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்" என்றார். இனி கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விரிவான விவாதமும், சட்டத் திருத்தமும் கிரிக்கெட் பற்றி மக்களிடம் நம்பிக்கையையும் எழுப்ப வேண்டியது அரசின் உடனடி நிலைப்பாடாகும்.

டிராவிட் மாதிரி கிரிக்கெட்டை விருப்பத்துக்காக ஆடிய காலம் இப்போது இல்லை. முன்பு கல்வியறிவுள்ள சூழல்களிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் தோன்றினார்கள். இன்று கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட்டின் அருமை தெரியாதவர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு கிரிக்கெட் ஆட வருவதால்தான் இத்தனை பிரச்னைகள். இந்தச் சர்ச்சைகளால் டி20-யின் மகத்துவம் குறைந்துவிடவில்லை. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட்டைச் சுத்தப்படுத்தலாம். ஐ.பி.எல். மூலமாக நமக்கு கரன் சர்மா மாதிரியான நிறைய புதிய வீரர்கள் கிடைக்கிறார்கள். மூன்று கிரிக்கெட் வீரர்களின் கைதுக்குப் பிறகு நடந்த மேட்சுகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஐ.பி.எல்.க்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஒரு சிலருடைய தவறுகளால் ஐ.பி.எல்.க்கு எந்தக் களங்கமும் ஏற்படாது. தவறு செய்த வீரர்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால்தான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது.

தில்லி போலீஸ், ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்த வேளையில், சென்னையில் சூதாட்டத் தரகர்களைக் கைது செய்யும் பணி சுறுசுறுப்படைந்தது. பிரசாந்த் என்ற முக்கிய தரகர்தான் சென்னை சூதாட்டங்களை வழிநடத்தியவராம். அவரோடு சஞ்சய் பாவ்னா, உத்தம் ஜெயினும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சூதாட்டங்களைத் தடைசெய்யவே முடியாது" என்று தெனாவட்டாகப் பேசியிருக்கிறார் பிரசாந்த்!

No comments:

Post a Comment