இளவரசன் - திவ்யா காதல் விடலைக் காதல்தான் என்றும் சிறுவர் திருமணம்தான் என்றும் சொல்லப்படுகிறதே?
என்னைப் பொறுத்தமட்டில் 21 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போய் சுயசார்புடன் இருக்கும் வேளையில் மலரும் காதலையே உடல்-மன முதிர்ச்சியுடைய காதலாகக் கருதுவேன்.
அப்படியானால் இளவரசன் திவ்யா காதல்?
இருவரும் 18 வயதைக் கடந்தவர்கள். இளவரசனும் திவ்யாவும் வேறு பல இளம் வயதினரைப் போல இதை டைம் பாஸாகக் கருதாமல், தொடர்ந்து இதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான அம்சம். இளவரசன்-திவ்யா இணைவை சாதி அமைப்புகள் எதிர்த்ததற்குக் காரணம் காதலோ வயதோ அல்ல. சாதி வேறுபாடு மட்டும்தான்.
எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லமுடியும்?
இளவரசனும் திவ்யாவும் பெற்றோர் கருத்தை மீறி திருமணம் செய்து கொண்ட பின்னரும் திவ்யாவின் தந்தை உணர்ச்சிவசப்பட்டு உடனே தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. பல மாதங்களுக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் மீது ஏற்பட்ட சமூக நிர்பந்தத்துக்குப் பின்னர்தான் என்பது கவனிக்கத்தக்கது. தலித் காலனிகள் சூறையாடப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இளவரசன், திவ்யா தம் வீட்டை விட்டு ஓடிப்போன உடனே நடக்கவில்லை. பல மாதங்களுக்குப் பின்னர் திவ்யாவின் தந்தை மீது சமூக அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலையையொட்டியே வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இளவரசன், திவ்யா இருவரின் குடும்பத்தினருக்குள்ளே மட்டுமான இந்த விஷயம், வெளி மனிதர்களின் சாதி சார்ந்த தலையீட்டுக்குப் பின்னரே சமூக வன்முறையாக மாறியிருக்கிறது. திவ்யாவின் தாயார் சார்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதே பல மாதங்களுக்குப் பின் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நீதிமன்றம் என்ன செய்திருக்க முடியும்?
ஆட்கொணர்வு மனு நீதிமன்றம் முன்னர் வந்ததும் நீதிமன்றத்தில் திவ்யா தாமாகவே ஆஜரானார். அவர் இளவரசனால், ஏமாற்றி அழைத்துச் செல்லப் பட்டதாகவோ, கடத்தப்பட்டதாகவோ திவ்யா நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை. தாமே விரும்பிச் சென்றதாகவே தெரிவித்தார். அதாவது நீதிபதி முன்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார் என்றே அர்த்தம். தமக்கு இளவரசனும் வேண்டும், தாயும் வேண்டும் என்பதே திவ்யாவின் நிலையாக இருந்தது. இந்தச் சூழலில் வெளியார் நிர்பந்தம் எதுவும் திவ்யா மீது விழாமல் தொடர்ந்து விசாரிக்க வசதியாக நீதிபதி, திவ்யாவைக் காப்பகத்தில் தங்கவைக்க உத்தர விட்டிருக்க வேண்டும். ஆனால் தாயுடன் செல்ல அனுமதித்தார். அடுத்த முறை தாயுடன் வந்தபோது திவ்யா, இளவரசனுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை எனினும் தொடர்ந்து தாயுடனே இருக்கப் போவதாகச் சொன்னார்.
இதன் பின்னர்தான் இளவரசனின் மர்மமான மரணம் நிகழ்ந்தது. நீதிமன்றம் முதற்கட்டத்திலேயே திவ்யாவைக் காப்பகத்துக்கு அனுப்பிவிட்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கவுன்ஸ்லிங்குக்கு அனுப்பியிருந்தால் இளவரசனின் மர்ம மரணம் நிகழ்ந்திருக்காது.
இளவரசனின் மரண மர்மம்? தற்கொலைக் கடிதம் வெளியாகியிருக்கிறதே?
அந்தக் கடிதம் இளவரசன் எழுதியதா என்று இன்னமும் அறிவியல் ஆய்வு முடிவு வரவில்லை. ரயில் பாதை அருகே இளவரசன் உடல் விழுந்து கிடந்த விதம், ரயிலில் அடிபட்டு விழும் உடல் தோற்றத்தில் இல்லை. உடலைப் பார்த்ததுமே இது ரயிலில் அடிபட்டது போல இல்லையே என்று பல ரயிலடிபட்ட உடல்களைப் பார்த்த எனக்குத் தோன்றும் சந்தேகம், இன்னும் அனுபவமிக்க போலீசுக்கு ஏன் தோன்றவில்லை என்றும், உடல் கிடந்த இடத்துக்கு உடனடியாக ஏன் மோப்ப நாய்களை இட்டுச் செல்லவில்லை என்பதும் புதிர்.
உடல் கண்டெடுக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன் வரை இளவரசன் செய்ததாகச் சொல்லப்படும் செயல்கள் எதுவும் நான்கு பக்கக் கடிதம் எழுதிவைத்து விட்டுத் தற்கொலை செய்யக்கூடிய மனநிலையில் இருப்பவர் செயல்களாகத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர்பவரின் செயல்களாகவே உள்ளன.
இளவரசன் தற்கொலை செய்வதற்கான சூழல் இருந்ததே?
ஆம். திவ்யா இப்போதைக்கு தன்னுடன் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு குறைவு என்ற சூழல் இருந்தது. ஆனால் எத்தனை நாளானாலும் திவ்யாவுக்காகக் காத்திருப்பதற்கான மனநிலையில் இளவரசன் இருந்ததாகவே அவருடன் பேசிய பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே என்றைக்காவது இருவரும் இணைவோம் என்ற நம்பிக்கையே அவருக்கு அதிகம் இருந்திருக்கும் நிலையில் தற்கொலையை விட கொலைக்கான வாய்ப்பே அதிகம். என்றாவது இருவரும் திரும்பச் சேர்ந்துவிடக் கூடும் என்று சாதி வெறியர்கள் கருதிய நிலையில் உண்மையில் இளவரசன் மட்டுமல்ல, திவ்யாவின் உயிருக்கும் ஆபத்து தான்.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
நாம் எல்லாரும்தான். சாதி வெறியைத் தூண்டும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சி பிரமுகர் காடுவெட்டி குரு போன்றோர் தொடர்ந்து பொது மேடைகளில் பேசி வந்திருப்பது, பல்வேறு சாதி அமைப்புகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி கலப்புத் திருமணத்துக்கு எதிராக பகிரங்க மிரட்டலை ஒலித்தது இவற்றையெல்லாம் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசும் தாமதித்தே நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் பலவற்றின் தலைவர்கள் இன்றளவும் இந்தப் பிரச்னை பற்றி வாயைத் திறக்கவில்லை.
சாதி மீறி திருமணம் செய்து கொண்டு துயரத்தை அனுபவிக்கும் முதல் ஜோடியல்ல இளவரசன் - திவ்யா. மனித உரிமை ஆர்வலர் எழுத்தாளர் ச.பாலமுருகன் சொல்லும் இந்தச் செய்திகளைப் படியுங்கள்:
2003 ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் உள்ள புதுகோரைப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதியினை சார்ந்த இளைஞன் முருகேசன். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். கிராமத்தில் சொந்தமான விவசாய நிலங்கள் என பிறரைச் சாராது வாழும் பொருளாதார நிலை கொண்ட குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அவர் அக்கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதி பெண்ணான கண்ணகியினைக் காதலித்தார். இருவரும் 2003 மே மாதம் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். முருகேசனுக்கு திருப்பூரில் வேலை கிடைத்ததும் கண்ணகியினை அழைத்துச் சென்றுவிட்டார். கண்ணகியின் தகப்பனார் கிராம பஞ்சாயத்து தலைவர். தனது சாதிய சக்திகளால் இரவோடு இரவாக முருகேசனின் தகப்பனார், சித்தப்பா, தம்பி என அவரின் சொந்தக்காரர்களைக் கடத்தி முருகேசன், கண்ணகி உள்ள இடம் குறித்துக் கேட்டு சித்திரவதை செய்தனர். இறுதியில் முருகேசனின் சித்தப்பா மூலம் இருவரையும் கிராமத்தில் சமாதானம் பேசுவதற்காக வரவழைக்கப்படுகின்றனர். அதனை நம்பி ஊருக்கு வந்தார்கள் காதலர்கள். ஆனால் ஊரின் நடுவில் ஒட்டுமொத்த கிராமமுமே வேடிக்கை பார்க்க கண்ணகிக்கும், முருகேசனுக்கும் வாயில் பூச்சி மருந்து விஷம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்பட்டது, காதிலும் அந்த விஷம் ஊற்றப்பட்டது. அவர்கள் துடிதுடித்துச் செத்த பின்பு இருவரின் உடலும் கிராமச் சுடுகாட்டில் எரிக்கப்பட்டன.
கடந்த 2007-ல் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மறவநத்தம் கிராமத்தைச் சார்ந்த சின்னசாமியின் மகள் சுதா, கொங்கு வேளாளர் சாதியினைச் சார்ந்தவர். இவர் திருச்செங்கோட்டில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது தம்முடன் படித்த ஈரோடு அரச்சலூரைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரைக் காதலித்தார். தமிழ்ச்செல்வன் முதலியார் சாதி. படிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தமது தந்தையால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சுதா, தமது கணவனை அழைத்துக் கொண்டு வட இந்தியா சென்றுவிடுகின்றார். இருவரும் அங்கு பணியில் இருக்கின்றனர். சில மாதங்கள் கழித்து தமது மகள் வட இந்தியாவில் இருப்பதையும், அவர் அந்தச் சமயம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்த சின்னசாமி தமது மகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவளுக்கு வளைகாப்பு நடத்த விரும்புவதாகவும் தகவல்களைக் கொடுத்து தமது ஊருக்கு வரும்படி அழைக்கின்றார். இந்த வார்த்தைகளை நம்பி மறவநத் தம் வந்தபோது இருவரையும் வரவேற்ற சுதாவின் தந்தையும், சகோதரன் சங்கர் என்பவரும், அடுத்த சில நொடியில் இருவரும் சேர்ந்து இரும்பு பைப்பால் தாக்கி சுதாவைக் கொலை செய்துவிட்டனர்.
பழனியில் ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்த பன்னாரி என்பவரும் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையினைச் சேர்ந்த பிரியாவும் காதலித்து வந்தனர். பன்னாரி, பள்ளர். பிரியா, கள்ளர் . இருவரும் திருமணம் செய்துகொண்டு உடுமலைப்பேட்டை மடத்துகுளத்தில் உள்ள பன்னாரியின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டுக்கு வந்த பிரியாவின் தந்தை மற்றும் இரண்டு உறவுக்காரர்கள் பிரியாவுடன் பேச வந்ததாகக் கூறிவிட்டு, வீட்டில் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு பிரியாவைக் கொலை செய்து விட்டனர்."
இதுதான் தமிழ்நாடு. இதுதான் தமிழ்ச் சமுதாயம்.
இதை மாற்றவே முடியாதா?
இளவரசன் - திவ்யா பிரச்னை ஊடகங்களின் உதவியாலும், சாதிவெறி அமைப்புகளின் பங்களிப்பாலும் பொது கவனத்துக்கு வந்திருப்பதை நாம் நம் சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு. எல்லா வன்னியரும் சாதி வெறியர் அல்ல. இதுதான் எல்லா சாதிகளிலும் உண்மை. எல்லா சாதிகளிலும் சாதி வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஒவ்வொரு சாதியினரும் தம் சாதியில் இருக்கும் சாதி வெறியரைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் அரசியல் கட்சியிலோ, இயக்கங்களிலோ இருந்து கொண்டு அதிகாரம் செய்வதற்குப் பயப்படாமல் எதிர்க்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டப்படி எந்தச் சாதியினரும் எந்த மதத்தினரும் எந்த மொழியினரும் வேற்று சாதி, மத, மொழியினரைத் திருமணம் செய்ய பூரண உரிமை இருக்கிறது. இதைத் தடுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. என் சாதியினர் மட்டுமே என்னுடன் திருமண உறவு கொள்ளலாம் என்று விதிப்பது கூட அரசியல் சட்டத்தின்படி சாதி, மத அடிப்படையில் எந்தப் பாரபட்சமும் காட்டக்கூடாது என்ற விதிக்கு விரோதமானதுதான். பல கட்டங்களில்தான் நாம் சாதியை ஒழிக்கமுடியும். சாதி உணர்வைத் தணிக்க முடியும். முதல் கட்டமாக எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும், இணையதளங்களும் மேட்ரிமோனியலில் சாதி விவரங்களை வெளியிடமாட்டோம் என்ற நிலையை எடுக்க வேண்டும் என்று நான் கோருவேன். இடஒதுக்கீட்டுக்காக சான்றிதழில் சாதியைக் குறிப்பிடுவதைத் தவிர, வேறு எந்த விதத் திலும் என் சாதிப் பழக்க வழக்கங்களை நான் மேன்மையாகக் கருதிப் பின்பற்றமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும். அரசியலில் சாதியைச் சொல்லிக் கொண்டு வருவோரை நிராகரிக்க வேண்டும். இப்படி இன்னும் பல படிகளை நாம் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளாக, இளவரசன், முருகேசன், கண்ணகி, தமிழ்ச்செல்வன், சுதா, பன்னாரி, பிரியா ஆகியோரின் உடல்கள் கிடக்கின்றன என்பது தான் சோகமான நிஜம்.
No comments:
Post a Comment