''வைகோவைப் போல் எனக்குப் பேசத் தெரியாது. ஆனால், செயல்படத் தெரியும்.
மக்கள் பணிகளில் அக்கறை காட்டுவேன்; செயல்படுவேன்'' - தேர்தல்
பிரசாரத்தின்போது காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்க தாகூர் பேசியது இது.
விருதுநகர் தொகுதியின் எம்.பி-யான பின்னர், சொன்னதுபோல செயல்பட்டாரா?
இவரது தாத்தா மாணிக்க அம்பலம், பாரம்பரிய காங்கிரஸ்காரர். திருகோஷ்டியூர்
சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கவிஞர் கண்ணதாசனை எதிர்த்து
போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தேசியகீதம் பாடிய ரவீந்திரநாத் தாகூர் மீது
கொண்ட பற்று காரணமாக, தாத்தா பெயருடன் தாகூரைச் சேர்ந்து இவருக்கு மாணிக்க
தாகூர் என்று பெயரிட்டனர். இப்போது மாணிக்கம் தாகூர் என்று பெயரை
மாற்றிக்கொண்டார்.
மாணவர் காங்கிரஸ் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்
அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவருக்கு, ராகுல் காந்தியுடனும் நட்பு
ஏற்பட்டது. அந்த நட்புதான் விருதுநகரில் போட்டியிடும் வாய்ப்பைக்
கொடுத்தது. தாத்தாவோ கண்ணதாசனை வீழ்த்த... பேரனோ வைகோவை வென்று
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு நெருக்கமான மாணிக்கம் தாகூர், அதனைப் பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு செய்துகொடுத்தது என்ன?
ஒரு மாவட்ட தலைநகருக்கான எந்தவித அறிகுறியும்
இல்லாமல், விருதுபட்டியாகவே காட்சியளிக்கிறது விருதுநகர். மழை பெய்தால்
சகதி, வெயில் அடித்தால் புழுதி, ரோடெல்லாம் குழிகள், மாதத்துக்கு இரண்டு
முறைதான் குடிநீர், குறுகலான சந்துகள் என எந்த முன்னேற்றமும் இல்லாமல்
இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிய அளவில் முயற்சிகளை
மாணிக்கம் தாகூர் எடுத்ததாகத் தெரியவில்லை.
ராமமூர்த்தி சாலை ரயில்வே கேட், மக்களுக்குத் தீராத தலைவலி. அந்த ரயில்வே
கேட்டை கடந்துதான் அரசு மருத்துவமனை, போஸ்ட் ஆபீஸ் மற்றும் பள்ளி,
கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். பரபரப்பான காலை நேரத்தில் இந்த ரயில்வே
கேட் மூடப்படுவதால், அந்த ஏரியாவில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்.
அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
''அந்தப் பாலம் அமைந்தால் தி.மு.க. முன்னாள் அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தியேட்டர் மற்றும் வீடு பாதிக்கப்படும்.
தனது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்பதாலேயே, மேம்பாலத்தைக் கொண்டுவருவதில்
எம்.பி. ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக சுரங்கப் பாதை அமைக்கலாம்
என்று சொல்கிறார். அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே மக்களின்
அவஸ்தை தொடர்கிறது''.
சிவகாசி டு ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்திலும், சிவகாசி டு
விருதுநகர் சாலையில் திருத்தங்கல்லிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
என்பது மக்களின் கோரிக்கை. ஆய்வுப் பணிகள் நடந்ததே ஒழிய பாலம்
வந்தபாடில்லை. விருதுநகர் - மானாமதுரை இடையே 67 கிலோ தூரத்துக்கு மீட்டர்
கேஜ் பாதையை அகல ரயில்பாதை ஆக்கும் பணிகள் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
நடந்துமுடிந்து, ரயில் விடப்பட்டதை அவரது சாதனையாக சொல்கின்றனர்.
சிவகாசி, முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து
ஏற்பட்டு 40 பேர் இறந்தபோது, அந்த விஷயத்தை மத்திய அரசு வரை கொண்டுசென்று
தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி
பெற்றுதந்தார். இது தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி
தந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் பட்டாசு ஆலை
அதிபர்கள் மாணிக்கம் தாகூர் மீது கடுப்பில்தான் இருக்கின்றனர். ''மத்திய
அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு
நடத்தி விதிமுறைகளை மீறிய ஆலைகளை சீல் வைக்கின்றனர். மாணிக்கம் தாகூர்
தலையிட்டு அதிகாரிகளிடம் பேசினால், இந்தக் கெடுபிடிகள் குறையும் என்று
நினைக்கின்றனர். ரெய்டு விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று எம்.பி. உறுதியாக
இருப்பதால், இந்தக் கடுப்பு'' என்கிறார்கள் சிவகாசி வட்டாரத்தில். கோடிகள்
புழங்கும் சிவகாசியும் உள்கட்டமைப்பு வசதிகளில் மோசமாகவே இருக்கிறது.
தரமான சாலைகள், மேம்பாலங்கள், பாதாளச் சாக்கடைத் திட்டம் எதுவும்
சிவகாசியில் இல்லை.
தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் கணிசமான அளவு
இருக்கின்றனர். அருப்புக்கோட்டைக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை
அழைத்துவந்து கைத்தறி பெருங்குழுமம் ஆரம்பித்துவைத்தார். அதோடு சரி... அது
செயல்படவே இல்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஆய்வுசெய்வதையே தனது முழு
நேரப் பணியாக வைத்திருக்கிறார். கிராமங்கள் தோறும் 100 நாள் வேலைவாய்ப்புத்
திட்டம் பணிகள் நடக்கும் இடத்துக்கு விசிட் அடிக்கிறார். இது மத்திய அரசு
கொண்டுவந்த திட்டம் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார். அந்தத்
திட்டத்தின் பெயரை சரியாக சொல்லும் நபர்களுக்கு 100 ரூபாய் அன்பளிப்பு
தருகிறார். மதிய உணவுக்கு ஏற்பாடுசெய்து அவர்களுடன் சேர்ந்து
சாப்பிடுகிறார். இதனால் கிராம மக்கள் மத்தியில் இவருக்கு 100 ரூபாய்
எம்.பி. என்றே பெயர்.
திருமங்கலம் பகுதியில் அவருக்கு எதிராக நிறையவே
குற்றச்சாட்டு குரல்கள் கேட்கின்றன. ''திருமங்கலம் டு மதுரை விமான நிலையம்
இடையே ரயில்வே கேட் குறுக்கிடுகிறது. இங்கே மேம்பாலம் கட்டித்தருகிறேன்
என்று சொன்னவர், கண்டுகொள்ளவில்லை. திருமங்கலத்தில் இருந்து சொற்ப கிலோ
மீட்டர் தூரத்திலேயே டோல்கேட் இருக்கிறது. அங்கு உள்ளூர் வாகனங்களுக்கும்
பணம் வசூலித்ததால், பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னையை மாணிக்கம் தாகூர்
கண்டுகொள்ளவில்லை. பழைய எம்.பி-யான சித்தன்தான் அதற்காக
வரிந்துகட்டிக்கொண்டு போராடி, உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டண விலக்குப்
பெற்றுத்தந்தார்'' என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் நிற்பது
இல்லை. போஸ்ட் ஆபீஸுக்கு இடம் ஒதுக்கியும், கட்டடம் இல்லை. சாலைகள்
அகலப்படுத்தப்பட்டபோது நிழற்குடைகள் நீக்கப்பட்டன. அவரது தொகுதி மேம்பாட்டு
நிதியில் இருந்து நிழற்குடைகளைக் கட்டித் தந்திருக்கலாம். அதைச்
செய்யவில்லைடெல்லியில் இருக்கும் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனையை தொகுதிக்கு கொண்டு
வருவேன் என்பது அவர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதி. அதற்காக
திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 125 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பின்னர் டெண்டர்
நிலையிலேயே கைவிடப்பட்டது.
மாணிக்கம் தாகூர் செய்த சாதனைகள் என்ன?
''தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காகப் பொது பயன்பாட்டு மையத்தை தொகுதியில்
ஐந்து இடங்களில் திறந்துவைத்திருக்கிறார். சீனப் பட்டாசு இறக்குமதிக்குத்
தடை பெற்றுத் தந்தார். தொகுதியில் சாலைகளை மேம்படுத்த கடந்த நான்கு
ஆண்டுகளில் சுமார் 200 கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளார். ஏழை வியாபாரிகள்
தொழில் நிமித்தம் ரயிலில் பயணம்செய்ய சலுகைக் கட்டண அட்டை 4,000 நபர்களுக்குப்
பெற்றுத்தந்தார். நகரங்களில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மத்திய
அரசின் திட்டம் மூலம் 50 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் வீடுகள்
கட்டித்தந்தார்.
மதுரை டு ராமேஸ்வரம் நான்கு வழி சாலைத் திட்டத்தின் மூலம் விரகனூர்,
புளியகுளம், சிலைமான் பகுதி மக்களின் வீடு பாதிக்கும் நிலை இருந்தது.
எம்.பி-யின் முயற்சியால் சிலைமானுக்குப் புறவழிச் சாலை ஏற்படுத்தி
திட்டத்தை மாற்றியதன் மூலம் 600 குடும்பங்களின் வாழ்வாதாரம்
காப்பாற்றப்பட்டது. விருதுநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் மத்திய
அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கடன் பெற்றுதந்துள்ளார்.
இவர் மீண்டும் விருதுநகரில் போட்டியிட்டால், காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலைதான் அவரது வெற்றிக்குத் தடையாக இருக்கும்!
என்ன செய்தார் எம்.பி.? - விருதுநகர் = அருமையான பதிவு. விருதுநகரில் பயணம் செய்தால் தெரியும், திரு காமராஜர் பிறந்த ஒரு பெருமை தான். மாவட்ட தலைநகராக இருக்க தகுதியில்லாத ஊர், நல்ல சாலை வசதி கிடையாது. நல்ல விடுதிகள் கிடையாது.
ReplyDeleteஅந்த ஊர்க்காரர்களும் கவலைப்படுவதில்லை, ஆள்பவர்களும் கவலைப்படுவதில்லை, M.P., யாக இருந்தாலும் சரி, M.L.A., யாக இருந்தாலும் அப்படித்தான். இராஜபாளையத்தை போய் பார்க்கட்டும்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.