காமன்வெல்த் போட்டி தனிநபர் தடகளப் பிரிவில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற
ஒரே வீரர் மில்கா சிங். இன்று அவருடைய வாழ்க்கை, ‘பாஹ் மில்கா பாஹ்’,
என்கிற பெயரில் இந்தியில் படமாகி இருக்கிறது.
இன்றைய பாகிஸ்தானின் கோவிந்த்புராவில் 1935இல் பிறந்தார் மில்கா சிங். இளம்
வயதில் கால் கடுக்க தினமும் 20 கி.மீ. நடந்து சென்று கல்வி பயின்றதுதான்
அவர்
தடகள வீரராக மாறியதற்கு ஆரம்பப் புள்ளி. இவரது 15 வயதில், இந்தியப்
பிரிவினைக் கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய
பெற்றோர்கள், சகோதரர்கள் மூன்று பேரையும்
இழந்தபோது செய்வதறியாமல் தவித்துப் போனார். உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு ரயில் நிலையம் வழியாக தில்லியில்
உள்ள தம் சகோதரியிடம் அடைக்கலம் ஆனார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால்
இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிகக்குறைந்த
நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்த கட்டப்
பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம்
ஒன்றில் ஜெயித்தபோதுதான் தம் திறமையை அறிந்தார் மில்கா. 1956 ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட மில்கா சிங், 400 மீ. ஓட்டத்தில் தங்கப்
பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள்
எடுக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில்
அவரது டைமிங்கை ஜெயித்தார். பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள
வீரர்களில் ஒருவரானார். ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் அவர் மயிரிழையில்
வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம்.
1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப் பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய
நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், அப்போதைய பிரதமர்
நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக்கைத்
தோற்கடித்தார். பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து
சென்றீர்கள்’ என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான்
அவருக்கு ‘ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)’ என்கிற பட்டம்
அளிக்கப்பட்டது. மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்கிற பெயரில்
புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல இந்தி தயாரிப்பாளர்கள் மில்கா
சிங்கிடம், படத்துக்கான அனுமதி
கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால்,‘ரங் தே
பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாப்பை
அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு
ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். இப்போது, படத்தின் லாபத்தில்
கிடைக்கும் 15 சதவிகிதத்தை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தர
ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. படத்தில் மில்கா சிங்காவாக
நடித்துள்ளார் ஃபர்ஹான் அக்தர். இதுவரை ஒலிம்பிக்ஸின் இறுதிப் போட்டிக்கு, குறைந்த இந்தியர்களே தகுதி
பெற்றிருக்கிறார்கள். காரணம், கடின உழைப்பு இல்லை. கடுமையான பயிற்சிகளால்
நான் பலமுறை சுயநினைவை இழந்துள்ளேன். தொடர்ந்து ஐந்து, ஆறு மணி நேரம்
ஓடும்போது என் சிறுநீரிலிருந்து ரத்தம் வந்திருக்கிறது. பயிற்சியாளர்களை
ஒப்பந்த அடிப்படையில்தான் பணியில் அமர்த்த வேண்டும். ஒரு வீரரின்
டைமிங்கில் முன்னேற்றம் தெரியாவிட்டால் உடனே அவரின்
பயிற்சியாளரை நீக்கவேண்டும். கடின உழைப்புதான் அத்லெடிக்ஸில் நல்ல
முடிவுகளைக் கொடுக்கும்.
ஒரு உசைன் போல்ட்டினால் ஜமைக்கா புகழ் பெறும் போது அந்த நிலை ஏன்
இந்தியாவுக்கு இல்லை? இன்னொரு மில்கா சிங், பி.டி. உஷா ஏன் உருவாகவில்லை?"
என்று கேள்வி கேட்கும்
மில்கா சிங்குக்கு வயது எழுபத்து எட்டு!
No comments:
Post a Comment