இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் 
ஆதரவு தேடிய முக்கியப் போராளிகளாக இருவரைக் குறிப்பிடுவேன். ஒருவர் 
ஜப்பானில் வாழ்ந்த நாயர் ஸான். மற்றவர் மாஸ்கோவுக்குச் சென்று இந்திய 
சுதந்திர எழுச்சிக்கு ஆதரவைப் பெற்ற வீரேந்திரநாத் சட்டோபாத்யாய. 
ஏ.எம்.நாயர் எனப்படும் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர், கேரளாவைச் 
சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 
மிகப்பிரபலமான இந்திய உணவகம் நடத்தினார் நாயர் ஸான். இவரது பூர்வீகம் 
திருவனந்தபுரத்தை அடுத்துள்ள நெய்யாற்றங்கரா.  ஒட்டிசக்கோநாத் 
வலியத்துவீடு இவரது குடும்பம். நாயர் வம்சத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா 
கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் பிராமணர். நாயர் சாதியைச் சேர்ந்த பெண்ணை 
இவர் திருமணம் செய்து கொண்டது அந்த நாட்களில் மிகப் பரபரப்பாகப் 
பேசப்பட்டது. நாயர் ஸானின் அப்பா திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் 
அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்துக்கு வந்து பொறியியல் துறையில் 
பணியாற்றினார். திருவனந்தபுரம் மியூசியம், அருங்காட்சியகம், பொதுநூலகம் 
போன்றவை நாயர் ஸானின் அப்பா உருவாக்கியவை. நாயர் ஸானின் மூத்த சகோதரர் 
ஜப்பானின் ஸப்பாரோ பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதால் மாதவனையும் 
ஜப்பானுக்கு அனுப்பி பொறியியல் படிக்க வைத்தனர். சிறுவயதிலேயே சாதிக் 
கொடுமைகளுக்கு எதிராகப் பேசிவந்தவர் மாதவன் நாயர்.  1922-ம் ஆண்டு 
இந்தியாவில் நடந்த முதல் மாணவர் வேலை நிறுத்தம் இவரால்தான் நடத்தப்பட்டது. 
அன்றைய திவான் ராகவய்யா பள்ளிக் கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்து நடந்த 
மிகப்பெரிய போராட்டம் அது. இந்தப் போராட்டத்தை அடக்க திவான் அடக்குமுறையை 
ஏவி விட்டார். போராட்டத்தை வெள்ளைக்காரர்களுக்கு எதிரான கலகம் என்றும் 
திசைமாற்றி விட்டார்.  இதனால், மாணவர்கள் மீது கடுமையான தடியடி 
நடத்தப்பட்டது.
மாதவன் நாயரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர். அவரது
 அண்ணன் ராணுவ மருத்துவராக இருந்த காரணத்தால் அவரது குடியிருப்பில் நாயர் 
பாதுகாப்பாக ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அதிலிருந்து 
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்ற முத்திரை மாதவன் மீது குத்தப்பட்டது. 
போலீஸ் தீவிரமாகத் தேடத் தொடங்கியது. அதன்பிறகு, வைக்கம் சிவன் கோயிலில் 
தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து, மிகப்பெரிய
 பேராட்டத்தைத் தொடங்கினார் மாதவன் நாயர். ஆனால், போதுமான ஒத்துழைப்பு 
இல்லாததால் அது வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் 
போராட்டம் காந்தி, பெரியார் போன்ற தேசத் தலைவர்களின் முயற்சியால் வெற்றி 
பெற்றது. அதுபோலவே, நாயர் ரெகுலேஷன் சட்டம் இயற்றப்பட்டதும் கூட்டுக் 
குடும்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. அதில் முதல்குடும்பமாக இருந்தது
 நாயர் ஸான் குடும்பம். குடும்பச் சொத்துகளைப் பிரிப்பதில் நிறைய 
பிரச்னைகள் எழுந்தன. மேலும் அவரது அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு 
ஏற்பட்டு அந்தக் குடும்பம் மிகவும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. சொத்தைப் 
பிரிக்கும் போது தங்கள் குடும்பத்துக்காக உழைத்த இரண்டு புலையர் 
குடும்பங்களுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும் என்று ஏ.எம்.நாயர் போராடி 
பங்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறார். அதோடு, புலையர் நல்வாழ்வு சங்கம் 
ஆரம்பித்து அவர்களோடு ஒன்றாகப் பழகி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு 
தீண்டாமை ஒழிப்புக்கு தானே முன்னோடியாக இருந்திருக்கிறார். 1928-ம் ஆண்டு 
பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ஜப்பானில் உள்ள கியாட்டோ பல்கலைக்கழகத்தில் 
படிப்பதற்காக இலங்கையில் இருந்து ஸவாமாஜி என்ற கப்பலில் புறப்பட்டார் 
நாயர்.
ஜப்பானில் மொழி தெரியாமலும் உணவு பிடிக்காமலும் மிகவும்
 சிரமப்பட்டார். அப்போது, தகூச்சி என்ற பேராசிரியரின் நட்பு கிடைத்தது. 
அவர், நாயரை தனது மகன் போல மிக அன்பாக நடத்தினார். ஜப்பானிய மொழி கற்றுக் 
கொடுத்தார்.
ஜப்பான் வந்த போதும் பிரிட்டிஷ் அரசு நாயரை துரத்தியது.
 ஜப்பானைச் சேர்ந்த ரகசியப் போலீஸார் நாயரைக் கண்காணித்துக் கொண்டே 
இருந்தனர். ஒரு வருடத்துக்குப் பிறகே போலீஸின் சந்தேகம் தீர்ந்தது. இந்திய 
சுதந்திர போராட்டத்துக்காக ஜப்பானில் இருந்தபடியே குரல் கொடுக்கத் 
தொடங்கினார் நாயர். ஜப்பானிய துறவிகள் பலர் நாயருக்கு ஆதரவு அளித்தனர். 
அப்போது, இந்தியாவில் இருந்து தப்பி ஜப்பானில் ஒளிந்து கொள்ள வந்திருந்த 
ராஷ்பிஹாரி கோஷின் நட்பு நாயருக்கு கிடைத்தது. இருவரும் இணைபிரியாத 
நண்பர்கள் ஆனார்கள். ராஷ்பிகாரி கோஷ், வெள்ளைக்காரர்களை எதிர்ப்பதற்காக 
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்கு 
முழுஒத்துழைப்பு கொடுத்தார் நாயர். அதோடு, ராஷ்பிகாரி கோஷ் ஒரு ஜப்பானியப் 
பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கும் உதவி செய்தார். பொறியியல் முடித்து 
ஜப்பானிலேயே வேலை செய்யத் தொடங்கினார் நாயர். ஆனால், அவர் மனதில் இந்திய 
சுதந்திரப் போராட்டம் பற்றிய சிந்தனை இருந்தது. அதனால், ஐ.என்.ஏ-வுக்கு 
தலைமை ஏற்க, சுபாஷ் சந்திர போஸை வீட்டுகாவலில் இருந்து தப்பிக்க வைத்து 
சிங்கப்பூர் கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார் நாயர்.
1931-ல் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் மஞ்சூரியா 
வந்தபோது, அரசாங்க விருந்தாளியாக மஞ்சூரியாவுக்குச் சென்று அங்கே 
பணியாற்றினார் நாயர். அங்கிருந்தபடியே இந்திய தேச விடுதலைக்காக இந்தியாவில்
 உள்ள புரட்சிக் குழுக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், 
பிரிட்டிஷ் 
அரசு
 நாயரை மிகவும் வெறுக்கத் தொடங்கியதோடு எப்படியாவது கைது செய்துவிட 
வேண்டும் என்று திட்டமிட்டது. பிரிட்டிஷ் அரசு அபாயகரமான இந்தியர்கள் என்ற 
பட்டியல் தயாரித்தபோது அந்தப் பட்டியலில் நாயரின் பெயர் இடம் 
பெற்றிருந்தது. பிரிட்டிஷ் போலீஸ் அவருக்கு மஞ்சுகூ நாயர் என்று 
பெயரிட்டிருந்தது. இதற்கிடையில், பொருளாதார காரணங்களுக்காக கம்பள வர்த்தகம்
 செய்யலாம் என்று முடிவு செய்து அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக 
மங்கோலியாவுக்குள் ரகசியமாகப் புகுந்தார் நாயர். அங்கே, புத்தமதத் துறவியான
 லாமா போல மாறுவேஷம் போட்டுக்கொண்டு கையில் மணிகளும் நாவில் புத்த ஜெபமுமாக
 நாயர் மங்கோலியாவில் அலைந்தார். இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. 
புத்த துறவி போல வேடம் அணிந்து சென்ற போதும் சீனாவில் ஒரு இடத்தில் 
கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொண்டார். உள்ளுர் மக்களின் உதவியால் தப்பிப்
 பிழைத்தார். நீண்ட பாலைவனத்தைக் கடந்த பயணம் உயிர் ஆபத்து நிறைந்ததாக 
இருந்தது. முடிவில், ஜப்பான் திரும்பியபோது மன்னரே அவரை வரவேற்று விருந்து 
அளித்து கௌரவப்படுத்தினார்.
1938-ம் ஆண்டு ஜப்பானியப் பெண்ணை திருமணம் செய்து 
கொண்டார். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது போர்க்களத்தில் இறங்கினார் 
நாயர். அதனால், ராணுவ உயர் அதிகாரிகளுடன் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது. 
டோக்கியோவில் குண்டுவீச்சு நடந்த போது அவரது குடும்பம் பாதிக்கப்பட்டது. 
சிறிய கிராமத்தில் மனைவி மகன்களை ஒளித்து வைத்தார் நாயர். ஹிரோஷிமா நாகசாகி
 ஆகிய இடங்களில் அணுகுண்டு வீசப்பட்ட போது நாயர் டோக்கியோவில் இருந்தார். 
அந்தச்சம்பவம் அவர் மனதை வெகுவாக உலுக்கி விட்டது. இந்திய 
சுதந்திரத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1944-ல் ஐ.என்.ஏ. படை 
இம்பாலை பிடிக்க திட்டமிட்டபோது அதற்குத் தேவையான அத்தனை உதவியும் செய்தவர்
 நாயர். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அதன்பிறகு, சுபாஷ் சந்திர 
போஸ் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதுபற்றிய உண்மைகளை கண்டறிய 
அமைக்கப்பட்ட கமிஷனில் நாயர் பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் 
அடையப்போகிறது என்று தெரிந்தவுடன் தனது மனைவி குழந்தைகளுடன் தாயகம் 
திரும்பி, சுதந்திர இந்தியாவில் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார் நாயர்
 ஸான். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த பிரிவினை 
அவர் மனதை வெகுவாகப் பாதித்தது. தான் விரும்பிய இந்திய சுதந்திரம் இதுவல்ல 
என்று அவர் மீண்டும் ஜப்பானுக்கே  சென்று விட்டார். ஜப்பானிய அரசருடன் 
நெருக்கமாகப் பழகி இந்திய சுதந்திரத்துக்கு உதவிசெய்ய வைத்தது நாயர் ஸானின்
 தனித்திறமை என்கிறார்கள். பின்னாளில் இவர் ஜப்பானின் முக்கிய இந்தியத் 
தலைவராக மரியாதையுடன் நடத்தப்பட்டார். சுதந்திரம் அடைந்தபிறகு, இந்தியத் 
தூதரகம் ஜப்பானில் அமைக்கப்பட்டது. அதோடு, இந்திய ஜப்பானிய நல்லுறவு வளரக் 
காரணமாக இருந்தார் நாயர். ஆனால், தூதர்களாக வந்தவர்களின் அலட்சியப் 
போக்கால் மனவருத்தம் அடைந்து தூதரகப் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக் 
கொண்டு எளிமையான இந்திய உணவகம் ஒன்றை நடத்திக் கொண்டு அரசியலை விட்டு 
ஒதுங்கி வாழ்ந்திருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் 
தேதியன்று நாயர் ஸானின் அப்பா தனது முதிய வயதில், அந்தக் கொண்டாட்டங்களில் 
கலந்துகொள்ள வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்து ஊர்வலத்தில் கலந்து
 கொண்டார். சுதந்திர விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய இரண்டு மணி 
நேரங்களில் இறந்து விட்டார். இப்படி, இந்தியாவின் மீது பற்று கொண்டதாக 
இருந்தது நாயர் ஸான் குடும்பம்.
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். 
ஜப்பானுக்குச் சென்றபோது அவரை வரவேற்று தேவையான உதவிகள் அத்தனையும் 
செய்துகொடுத்து அவருக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய 
நிகழ்விடங்களை காட்டி இருக்கிறார் நாயர் ஸான். சுதந்திரப் போராட்டத்தில் 
நாயரின் பங்களிப்பை அறிந்த எம்.ஜி.ஆர். இந்தியாவுக்கு நாயரை அழைத்து வந்து 
சிறப்பாகக் கௌரவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் 
இறங்கினார். ஆனால், சில தடைகளால் அது நடக்கவில்லை. இந்தியா வரும் 
போதெல்லாம் கேரளாவுக்கு வந்து தனது உறவினர்களுடன் நாட்களை செலவிட்ட நாயர் 
ஸான் மதச்சண்டை, இனச்சண்டை, மொழிச் சண்டைகளில் சுதந்திர இந்தியா பிரிந்து 
கிடப்பதை கண்டு மிகவும் வருந்தி இருக்கிறார். 1990-ல் நாயர் ஸான் இறந்து 
விடவே அவரது வாரிசுகள் இன்றும் டோக்கியோவில் அதே உணவகத்தை நடத்தி 
வருகின்றனர். டோக்கியோவில் உள்ள நாயர் ஸானின் உணவகத்தில் நேதாஜி உள்ளிட்ட 
முக்கிய தலைவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இந்திய சுதந்திர
 எழுச்சியின் முக்கிய ஆவணங்கள் யாவும் இன்றும் காட்சிக்கு 
வைக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் நெருங்கிய நண்பர் என்பதால் நேதாஜியின் மரணம் 
குறித்த விசாரணைக் குழுவில் நாயர் ஸானையும் சேர்த்து இருந்தனர். கடல் 
கடந்து சென்று சுயலாபங்களை மட்டுமே பெருக்கிக் கொண்ட எத்தனையோ 
இந்தியர்களுக்கு மத்தியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்காக தனது 
வாழ்க்கையை சமர்ப்பணம் செய்து கொண்ட நாயர் ஸான் போன்றவர்களின் வாழ்க்கை ஒரு
 முன்னுதாரணம்.
No comments:
Post a Comment