இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பில், இரட்டை
மகிழ்ச்சி. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், உலகச் சிறுவர்கள் பலருக்கும்
ரோல்மாடலாக இருக்கும் ஒரு பெண்ணும், அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து
பெற்றிருக்கிறார்கள்.
பெண்கள் உரிமைக்காகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் மலாலா,
சிறுவர்களின் உரிமைக்காகப் போராடிவரும் கைலாஷ் சத்யார்த்தி இருவரும்
இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். ஓர் இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்து
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவது, உலக அளவில் முக்கியமானதாகக்
கருதப்படுகிறது.
‘மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்’ என்ற
பெருமையுடன் உலகை நிமிர்ந்துபார்க்கிறார் 17வயது மலாலா. 1915-ல்,
வில்லியம் லாரன்ஸ் பராக் (William Lawrence Bragg) தன்னுடைய 25-வது வயதில்
நோபல் பரிசு பெற்றார். சுமார் 100 ஆண்டுகள் நீடித்த இந்தச் சாதனையை, மலாலா
மாற்றிவிட்டார். பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் என்ற
பெருமையையும் மலாலா பெற்றிருக்கிறார்.
தன்னுடைய 11-வது வயதில், பிபிசி இணையதளத்தில், புனைப்
பெயரில் கட்டுரைகள் எழுதிவந்தார் மலாலா. அவை, ‘தாலிபான்கள்’ என்ற
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், கல்வியின் நிலை, பெண்களின்
வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது என்பனவற்றைப் பற்றிப் பேசின. இது,
தாலிபான்களைக் கொதிப்படையச் செய்தன.
2012-ம் ஆண்டு, சக மாணவிகளுடன் பள்ளிப் பேருந்தில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார் மலாலா. வழிமறித்து ஏறிய தாலிபான் ஒருவன்,
துப்பாக்கியால் சுட்டான். மலாலாவின் தலை, தோள்பட்டைப் பகுதிகளில் குண்டுகள்
பாய்ந்தன.
இந்தச் சம்பவத்தால், மலாலாவின் மன உறுதியைத்
தீவிரவாதிகளால் அழிக்க முடியவில்லை. இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுத் திரும்பியவர், முன்பைவிடத் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார்.
‘‘இனி, புனைப் பெயர்கள் தேவை இல்லை. நான்தான் மலாலா”
என்று சொல்லிக்கொண்டு, பெண் குழந்தைகளின் கல்வி, உரிமைகளுக்காக தீர்க்கமான
கருத்துக்களை முன்வைத்து இயங்கத் தொடங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில், “அவர்கள்
ஆயுதங்களால் என்னை அமைதியாக்க விரும்பினார்கள். ஆனால், நான் மேலும்
உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
ஐக்கிய நாடுகள் சபை, மலாலாவின் பிறந்த நாளான ஜூலை 12-ம்
தேதியை ‘சர்வதேச மலாலா தினம்’ என்று அறிவித்தது. ‘தேசிய இளைஞர்களுக்கான
அமைதி விருது, அன்னை தெரசா நினைவுப் பரிசு, அமைதிக்கான ரோமின் விருது,
சிமோன் டி போவார் விருது’ என்று மலாலா பெற்ற விருதுகளின் பட்டியல்
நீள்கிறது. இப்போது, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார், இந்தத்
துணிச்சல் நாயகி.
‘குழந்தைப் பருவத்தைக் காக்கும் இயக்கம்’ என்ற
அமைப்பைத் தொடங்கி, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி பெற வழிவகுக்கும்
சேவையை 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறார், கைலாஷ் சத்யார்த்தி.
கைலாஷ், நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியர் மற்றும் இந்தியாவிலிருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாம் நபர்.
1954 ஜனவரி 11-ம் தேதி, மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிசா என்ற ஊரில் பிறந்தவர். சிறுவயது முதலே, ஏழ்மையில் இருக்கும் சக சிறுவர்கள், குழந்தைகள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்.
1954 ஜனவரி 11-ம் தேதி, மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிசா என்ற ஊரில் பிறந்தவர். சிறுவயது முதலே, ஏழ்மையில் இருக்கும் சக சிறுவர்கள், குழந்தைகள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்.
தனது 11-வது வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
‘‘வசதியான மாணவர்கள், தங்களது முந்தைய பாடப்
புத்தகங்களை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் கல்விக்கு உதவ
வேண்டும்” என்று சொன்னார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூகப் பனியில் ஈடுபட்டார்.பொறியியல் படித்துவிட்டு, கல்லூரி விரிவுரை யாளராகப் பணியாற்றினார்.
1980-ம் ஆண்டு அந்தப் பணியிலிருந்து விலகி, கொத்தடிமை ஒழிப்பு இயக்கத்தைத் தொடங்கினார். சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் அடிமைகள் போல நடத்தப்பட்ட, குழந்தைத் தொழிலாளர்களை மீட்கச் சென்றார். அப்போது, ரௌடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். உடம்பு முழுவதும் ரத்தம் கொட்டியபோதும் பின்வாங்கவில்லை. அந்தக் குழந்தைகளை மீட்டு, கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
அப்போது ஆரம்பித்த இவரது போராட்ட வாழ்க்கை, தேசிய
அளவிலும் சர்வதேச அளவிலுமாக, பரந்துபட்ட தளத்தில் விரிந்தது. இவருடைய
இயக்கத்தின் போராட்டங்கள் காரணமாக 80ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள்
மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களில் இவரது இரண்டு தோழர்கள்
உயிரிழந்திருக்கிறார்கள்.
‘‘குழந்தைகளின் கல்வியை மறுத்து, அவர்களின் உழைப்பைச்
சுரண்டித் தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்” என்று சொன்ன கைலாஷ், ‘இந்தப் பொருள், குழந்தைத் தொழிலாளர்களால்
தயாரிக்கப்படவில்லை’ என்று அறிவிக்கும்படியாக ஒரு தரச் சான்றிதழ் முறையை
உருவாக்கினார்.
‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இன்னும்
குழந்தைத் தொழிலாளர்கள் முறை இருப்பது வேதனையானது. இதை முற்றிலும்
ஒழிக்கும் எனது பணி் தொடரும்” என்கிறார் கைலாஷ்.
No comments:
Post a Comment