அஞ்சலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்சலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற Shake & hand என்றிப்படி மேல் நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்சலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது.
கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’ வந்ததோ என்னவோ? கை கூப்புவது என்றே சொல்வதையும் கவனிக்கணும்.
ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ரு தய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்சலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.
புஷ்பாஞ்சலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்சலி முத்ரையோடு ஸ்வாமி மேல் போடுகிறோம். அஞ்சலி முத்ரையே கூம்பின புஷ்பந்தான்!
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment