ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
குரு ப்ரஸாதம் முமுக்ஷபூதைக்கு மட்டுமில்லை; ஸாதனா க்ரமத்தில் அகாராதி க்ஷகாராந்தம் (அடி ஆரம்பத்திலிருந்து முற்றிய முடிவுரை) ஒவ்வொன்றும் குருப்ரஸாதத்தாலேயேதான் பூர்ணமாக வேண்டும். சிஷ்யன் அந்தரங்க சுத்தமாக முயற்சி பண்ணுவதன் மேல் குரு கருணைகொண்டு அநுக்ரஹம் பண்ணிப் பண்ணித்தான் ஒவ்வொரு படியிலும் அவன் ஜயித்து மேல் படிக்குப் போவது.
அடுத்தாற்போல் ஸாதனையின் மூன்றாம் ஸ்டேஜில் குருவிடம் சரணாகதியும், குருவின் பரிபூர்ணாநுக்ரஹமும் ரொம்பவும் முக்யம். இதுவரை கொஞ்சம் முன்னே பின்னே இந்த்ரிய வியாபாரம் முதலானதுகளில் ஒருவன் தப்புப் பண்ணியிருந்தால்கூட அது பெரிய தோஷமில்லை. ஆனால் ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக்கொண்டு, அநுபவத்திற்கெல்லாம் எவரெஸ்டான ப்ரம்மாநுபவத்தைக் கொடுக்கக் கூடிய மஹாவாக்ய மந்த்ரோபதேசம் வாங்கிக் கொள்ளும் ஸ்டேஜில் - அதற்கப்புறமுந்தான் - மனஸ் கொஞ்சம் தப்பாகப் போனால்கூட அது மஹாதோஷமாக, பாபமாகவே ஆகிவிடும். அந்த இடத்தில் ‘தானே ஸரிப் பண்ணிக்கலாம்’என்று ஒருத்தன் நம்பிக்கொண்டிருந்தால் முடியாது. தன்னம்பிக்கை அவசியந்தான். ஆனாலும் அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தற்காப்புப் பண்ணிக் கொள்ளப் பார்த்தால் போதாது. துளிக்கூடப் பாபம் ஸம்பவிக்காமல், ஸாதனா மார்க்கத்திலேயே ரயில் சக்கரம் அந்தண்டை இந்தண்டை இஞ்ச்கூடப் போகாமல் தண்டவாளத்தின் மேலேயே போகிறாற்போல இவன் போக வேண்டிய கட்டத்தில் தன்பலத்தோடுகூட அதை விடவும் ஜாஸ்தியாக, அநுக்ரஹ பலம் ரொம்பவும் அவசியம். அதனால் தான் இங்கே குறிப்பாக குரு ப்ரஸாதத்தைச் சொல்லியிருப்பது. முமு க்ஷபூத்வத்தில் நல்ல பற்று வந்தவுடன் ஸந்நியாஸமும் மஹாவாக்ய ஸ்வீகரணமும் ஆனதால், இனிமேல் நடக்க வேண்டியதற்கெல்லாம் சேர்த்து இங்கே குரு ப்ரஸாதத்தை ஞாபகப்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment