ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
பூமி கிழக்குப் பார்க்கத் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அப்படிச்
சொன்னதிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது என்றே
ஆகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யோஜித்துப் பார்த்தால்,
(சிரித்து) அபிநயம் பண்ணிப் பார்த்துக் கொண்டீர்களானால் புரியும்.
”The earth spins on its own axis from West to East” என்று சின்ன க்ளாஸில்
படித்த விஷயம். அதனால்தான் இராப்-பகல்
வித்யாஸம்; அந்த ராப்-பகல்களிலும் தேசத்திற்குத் தேசம் நேர வித்யாஸம்
என்றெல்லாம் படித்திருக்கிறோம். இன்னும், இப்படி பூமி மேற்கு-கிழக்காகச்
சுற்றுகிறதால்தான் அதிலே இருந்துகொண்டு வெளியே பார்க்கிற நமக்கு ஆகாசத்தில்
ஸுர்ய- சந்த்ராதிகள் கிழக்கிலிருந்து மேற்காகப் போவதாகத்
தோன்றுகிறது; வேகமாக ஓடுகிற ஒரு வண்டிக்குள்ளிருந்துகொண்டு பார்த்தால்
வெளியில் உள்ளவை எதிர்த்திசையில் ஓடுகிற மாதிரித்
தோன்றுவதைப் போலத்தான் இது என்றும் அந்தப் பாடத்தில் படித்திருக்கிறோம்.
(சிரித்து) அநேகமாக மறந்தும் போயிருக்கிறோம்!
இப்படி பூமி முதலானவை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிக் கொண்டிருப்பது அப்ரதக்ஷிணமாகத்தான்! அதாவது ப்ரதக்ஷிண க்ரமத்திற்கு
நேர் எதிர்த் திசையில்தான். நாம் அந்த மாதிரிப் பண்ணவே கூடாது என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.
ப்ரதக்ஷிணத்தை clockwise என்றும் அப்ரதக்ஷிணத்தை anti-clockwise என்றும் சொல்கிறார்கள். கடிகார முள் எப்போதும் வலது
பக்கமாகவே நகர்வது - அதாவது, வலம் வருவது - clockwise, இடது பக்கமாக நகர்வது அதற்கு anti. பூமி முதலான கோளங்கள் இப்படி இடது
பக்கமாகத்தான் சுற்றிக்கொள்வது.
‘சுற்றிக்கொள்வது’, ‘சுற்றுவது’ இரண்டுமே இப்படி அப்ரதக்ஷிணமாகத்தான். நின்ற இடத்திலே அப்படியே சுழல்வதுதான் ‘சுற்றிக்
கொள்வது’ - rotation. வெளியிலுள்ள வேறே ஒன்றைச் சுற்றுவதைத் தான் ‘சுற்றுவது’ என்றே சொல்வது - revolution என்று சொன்னது.
ஸுர்யனை க்ரஹங்கள் சுற்றுவதும் அப்ரத க்ஷிணந்தான், ‘ஆன்டி-க்ளாக் வைஸ்!’.
No comments:
Post a Comment