Search This Blog

Tuesday, December 21, 2010

ஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்.

ஓரு மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமையும் என்றால், அந்த மாநிலத்தில்  ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வானத்தின் கீழ் உள்ள எல்லா சலுகைகளும் கிடைத்து விடுகின்றன என்பது இன்றைய அரசியல் தலையெழுத்தாக இருக்கும்போது, பிகார் மாநிலத்தில், இந்தியாவே அதிசயப்படும் வகையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்ற போதிலும், அவர் செய்திருக்கும் முதல் பணி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதுதான்.


கடந்த ஆட்சியிலும் தானே முதல்வராக இருந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ஊழல் நடப்பதால் இதை ரத்து செய்கிறேன் என்று சொன்னால், அது தன்னையும், தன் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் கறைப்படுத்துவது போல ஆகுமே என்கிற எண்ணம் இல்லாமல், உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.



இதற்காக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க இயலாத நிலையில், இதே நடைமுறையை நிதீஷ் குமார் சார்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அரசாளும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று வஞ்சப்புகழ்ச்சியை மட்டுமே கொட்ட முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மேம்பாடு அடைந்தார்களே தவிர, தொகுதி மேம்படவில்லை. இது பிகார் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவோர் தங்கள் தொகுதிக்கான தேவைகளை அரசிடம் சொல்லி அல்லது சட்டப்பேரவையில் இதைப் பற்றிப் பேசி, அரசின் கவனத்தைத் திருப்பி, தொகுதிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் வெற்றிபெற்ற தொகுதிகளை ஏதோ மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போல கருதிக்கொண்டு, அங்கு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல் தள்ளிப்போடுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மக்களிடத்தில் அதிருப்தி ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத்  திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் தொகுதி மேம்பாட்டு நிதி.


இந்த நிதி ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்தில் தொடங்கி, இப்போது தமிழ்நாட்டில் 1.80 கோடியாகவும் (தொகுதிக்காக ரூ. 1.75 கோடி மற்றும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வுக்காக)  சில மாநிலங்களில் ரூ. 2 கோடி வரையிலும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மூன்று வகையாகச் செலவிடப்படுகிறது. முதலாவது, அவசியத் தேவை என்றில்லாத திட்டங்கள், இரண்டாவது, மக்கள் எளிதில் மறந்துபோய்விடக்கூடிய திட்டங்கள், மூன்றாவது, மக்களே குறைசொல்ல முடியாத திட்டங்கள்.



தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த நிதி எதற்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கவும், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கவும், ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஓர் ஊருக்குப் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவையே இல்லை என்றாலும்கூட, அங்கே பேருந்து நிலையம் அமைக்க கருத்துரு அனுப்பி, அதைக் கட்டி முடித்துவிடுவதில் குறியாக இருப்பார்கள். பேருந்து நிலையங்களில் கொட்டை எழுத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் நோக்கம்.


அடுத்ததாக, பேருந்து நிறுத்த நிழற்குடை. உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் திடீர்திடீரென பேருந்து நிறுத்தங்களைத் தள்ளிப் போடுவார்கள். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அங்கே கூரை வரும். பழைய பேருந்து நிறுத்தம் மிகவும் ஸ்திரமான நிலையில் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகள்கூட முடிந்திராவிட்டாலும் புதிய பேருந்து நிறுத்தம் அவசியமாக்கப்படும். பழைய நிழற்குடை பிச்சைக்காரர்கள் தங்குமிடமாக மாறிப்போகும். இதுவும் தான் ஏதோ மக்கள் தொண்டாற்றுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை.



மூன்றாவதாக, ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல். இதுபோன்ற மோசடியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அடிபம்புக்கு வெறும் வாஷர் போட்டாலே தண்ணீர் தாராளமாக வரும் என்றாலும், அதைச் செய்யாமல் அதைத் தண்ணீர் வராத குழாயாக கணக்குக் காட்டி, அதை ஆழப்படுத்தியதாகக் கணக்கு எழுதி, ரசீதும் தயார் செய்து, வாஷர் போட்டு, பெயின்ட் அடித்து, திறப்பு விழாவை போட்டோ சகிதம் நடத்துவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.


எத்தனை ஆழ்துளைக் கிணறுகளைத்தான் தண்ணீர் இல்லாதவை என்று சொல்வது? ஆகவே இப்போது இதில் புதிய உத்தியைப் புகுத்தியிருக்கிறார்கள். சிறு மின்விசை நீரேற்றியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி கட்டும் உபாயத்தில் இறங்கிவிட்டார்கள்.



மூன்றாவது வகை - சாலை அமைக்கும் திட்டம். ஒரு மழை வந்தால்போதும், தார்ச்சாலை  மண்சாலையாக மாறிவிடும். மழையைக் குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். சாலையின் தரம் சரியில்லாததால் இந்த நிலை என்பதைச் சொல்வதோ, ஒப்பந்ததாரைப் பொறுப்பேற்கச் செய்வதோ கிடையாது.




ஒரு புதிய மாநகராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கு வரவேற்பு வளைவு அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு வளைவு ரூ. 5 லட்சம் செலவாகக்கூடியதா என்பதை விட்டுத்தள்ளுவோம். இந்த வரவேற்பு வளைவு மக்களுக்கு எந்த வகையில் பயன்தரக்கூடியது? அந்த எம்.எல்.ஏ.வின் பெயரை, பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கற்பலகையில் எழுதி வைத்தால் போதாதா?


ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாங்கள் செய்த நற்காரியங்கள் என்ன என்பதை பணியின் வகை, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரர் பெயர் என விரிவாகப் பட்டியலிட்டால், இதில் எத்தனை பணிகள் உண்மையாகவே மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருந்தன அல்லது இன்றும் பயன்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



இதைச் செய்ய எம்.எல்.ஏ.க்கள் முன்வராவிட்டாலும், தகவல் அறியும் சட்டத்தில் எந்தவொரு குடிமகனும் அரசிடம் இத்தகைய பட்டியலைக் கேட்க முடியும். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்.




பிகார் முதல்வரைப் பாராட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். அவரை ஏனைய முதல்வர்கள் பின்பற்றட்டுமே... செய்வார்களா

Sunday, December 19, 2010

ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் - ஞானி

ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் முறைகேட்டை ஆ.ராசாவால் தனியாக செய்திருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் நினைக்கிறார் என்று இப்போது தெரியவந்திருப்பது எனக்குப் புல்லரிக்கிறது. இப்படி ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு முன்பு யாரும் கொடுத்ததில்லை.
 
‘இளைஞன்’பட விழாவில் பேசிய கருணாநிதி, ஊமைப்பட காலத்தில் பகாசூரன் வதைக் காட்சிகளை தான் பார்த்தபோது எப்படி அசுரனைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் சொல்லப்பட்டன என்று விவரித்துவிட்டு, அதே போல ஒரு தனி நபர் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய்களை தனியாக அபகரித்திருக்க முடியுமா என்று சிந்திக்காமல் படித்தவர்களும் நம்புகிறார்களே என்று கேட்டிருக்கிறார். 

அடுத்தபடி அவர் சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் உளவியலில் ஃப்ராய்டியன் ஸ்லிப் என்பார்கள். தன்னையறியாமலே அடிமனதில் இருக்கும் உண்மையை உளறிவிடுவதுதான் அது. “எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால் அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்யமுடியும்”. எந்திரன் படத்தில் ரஜினி எப்படி ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப் போல செய்ய முடியுமே தவிர, “தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்யமுடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணர்கிறோம்” என்கிறார் கருணாநிதி.

புராண பகாசூரன் வேலைகளை இன்று விஞ்ஞானப்பூர்வமாக செய்ய முடியும் என்று கருணாநிதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்கள் செய்பவர் என்று 35 வருடங்களுக்கு முன்பே நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் அவர்.

ராசாவோடு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாராக இருக்கும் என்று யூகிக்கும் வசதியை நமக்கு நீரா ராடியா டேப்கள் அளிக்கின்றன. அவற்றைப் பற்றி ஒருபோதும் கருணாநிதி ஒரு வார்த்தை கூட சொல்லப்போவதே இல்லை.

தி.மு.க சம்பந்தப்பட்ட முறைகேடு ஸ்பெக்ட்ரம் என்பது மட்டும் அல்ல. பல ஊழல்களில் அது ஒன்று. மிகப் பெரும் தொகைளும், மிகப் பெரிய சூழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும் தொடர்புடைய இன்னொரு மிகப் பெரும் முறைகேடு ஒன்றை தெஹல்கா இதழ் அமபலப்படுத்தியிருக்கிறது. ராசா டெலிகாம் அமைச்சராவதற்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் பாலு இருந்தார். இருவர் கீழுமாக ஏழு வருடங்கள் அந்த அமைச்சகம் இருந்திருக்கிறது.

புதிய தொழில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரும்போது அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மதிப்பிட்டுவிட்டு அனுமதி தருவதும்/மறுப்பதும் அமைச்சகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அதற்கு முன்பு 20 வருடங்களில் 4 ஆயிரம் தொழில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் பாலு, ராசா இருந்த சமயத்தில் மாதம் 100 திட்டங்களுக்கு க்ளியரன்ஸ். இரண்டே வருடங்களில் 2000 திட்டங்களுக்கு ஒப்புதல்.

ராசாவின் தனிச் செயலாளராக இருந்து இப்போது விசாரிக்கப்படும் ஆர்.கே.சந்தோலியா முதலில் அவருடன் சுற்றுச்சூழல் துறையில் இருந்தவர். ராசா- நீரா ராடியா நட்பு அப்போதுதான் ஆரம்பம். நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராசாத்தி அம்மாள், அவர் ஆடிட்டர் ரத்தினம் ஆகியோரின் நட்பு எல்லாம் ராடியாவுக்கு ஏற்படுவதற்கான வித்து சுற்றுச் சூழல் துறையில் தொடங்குகிறது.

பாலு-ராசா ஆட்சியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கைகள் தருவதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் கூறுகின்றன. சூழல் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான குழு உறுப்பினர்களாக தமிழ் நாட்டிலிருந்து தனக்கு வேண்டியவர்களையே ராசா நியமித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

பாலு காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் நடத்தைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. இவற்றை வகுப்பதில் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக பல முறைகேடுகளை பாலு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நடத்தைக் கோட்பாட்டை மீறினால் தண்டனை எதுவும் இல்லை. அது சுயக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விடப் பல மடங்கு அதிகமான பாதிப்பை சுற்றுச்சூழல் துறையில் நாட்டுக்கு தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெஹல்கா குற்றம் சாட்டியிருக்கிறது.
மன்மோகன்சிங் இரண்டாம் முறை பிரதமரானபோது பாலு,ராசா இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இது தயாநிதி மாறனின் விஷமப் பிரசாரம் என்று நீரா ராடியாவிடம் கனிமொழி சொல்கிறார். மாறனையும் பாலுவையும்தான் மன்மோகன் விரும்பவில்லை என்பது அவர் தரப்பு வாதம்.

ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கால் எதுவும் செய்ய முடிவில்லை. அவரால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் பாலுவை அடுத்த முறை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டதுதான். ராசா ஒரு வழியாக விலகியதும் அந்தத் துறையை எந்த தி.மு.க காரரிடமும் ஒப்படைக்காமல் தன் கட்சிக்காரரிடமே கொடுக்க முடிந்ததுதான்.

காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசால் தன் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது போல, தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காரணம் கருணாநிதி சொன்னதாகத்தான் இருக்க முடியும்.“யாரும் தனி மனிதனாக அவ்வளவு பெரிய தொகையை எல்லாம் அபகரித்துவிடமுடியாது“ என்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாக உதிர்ந்த பொன்மொழியாக இருக்க வேண்டும் ! இந்தப் பகுத்தறிவு முடிவிலிருந்துதான் கூட்டணி தர்மம் என்ற கோட்பாடே உருவாகியிருக்க முடியும்.

கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் தன் முதலமைச்சரை ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலுக்காக விலகவைத்தது போல, தமிழகத்தில் கருணாநிதியை வீட்டு வசதி வாரிய ஊழலுக்காக விலகச் சொல்லலாம். ம்ஹூம் முடியாது. கருணாநிதி கூட்டணி தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். அதனால்தான் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு முறைகேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் உரிய பங்கு கொடுத்துவிடுகிறார்.சென்னையில் சொந்த வீடு இருக்கும் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவுக்கு விதிகளை மீறி வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்படுகிறது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் வெளிக் கொணர்ந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன……..என்று சொல்ல மாட்டேன். இந்த ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்ற நிலை எப்போதோ வந்துவிட்டது.

கருணாநிதி ஆட்சியில் சமூக சேவகர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக எகிறிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் சமூக சேவகராம். உடனே வீடு ஒதுக்கீடு. ஓர் அமைச்சரின் மருமகள், பேத்தி எல்லாரும் சமூக சேவகர்கள்! சட்டமன்ற தி.மு.க கொறடாவின் மனைவி சமூக சேவகி ! முதல்வரின் செயலாளர் மகள் சமூக சேவகி ! ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன், ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவி, மகள் எல்லாரும் சமூக சேவகர்கள் !! முதலமைச்சருக்கு செக்யூரிட்டி வேலை செய்தால் அவர்கள் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்”!

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டு மனை, வீடுகளை கருணாநிதியின் அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு சுண்டல் மாதிரி விநியோகித்திருக்கிறது. வீட்டு வசதி வாரியத்தின் வீடு, மனைகளில் 40 சதவிகிதம், இப்படி வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் ஒப்பிட்டால் மும்பையின் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் ஜுஜூபி.

ஆனால் தான் ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து, ஏழைகளோடே பழகி ஏழைகளுக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவன் என்று கூசாமல் பேசுகிறார் கருணாநிதி. சொத்துக் கணக்கு கேட்டால், உடனே தான் ஒன்றும் ஏழையாகப் பிறக்கவில்லை என்றும் அந்த காலத்திலேயே பக்கத்து ஊர் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் வசதியுடன் பிறந்ததாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்.

கருணாநிதியின் சமீப பேச்சுகள் ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஆறு கோடி ரூபாய்தானாம். அப்படியானால் எப்படி அவர் மகன் அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடியாக ஆயிற்று ? ஸ்டாலினின் சொத்து மதிப்பு 13 கோடியாயிற்று ? இருவரும் படித்த காலத்திலிருந்து ஒரு வேலை கூட பார்த்ததில்லை. எங்கேயும் பெரிய சம்பளம் வாங்கியதில்லை. என்ன தொழில் செய்தார்கள் ? முதலீடுகள் எங்கிருந்து வந்தன? கனிமொழிக்கு சொத்து மதிப்பு எப்படி 8 கோடி 45 லட்சம் ஆயிற்று ? அவர் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் என்ன? பாட்சா, அண்ணாமலை, சிவாஜி, எந்திரன் வசனகர்த்தாக்களுக்குத் தருவதை விட பல மடங்கு அதிகமாக வசனகர்த்தா கருணாநிதிக்கு 50 லட்சம் சம்பளம் தரும் அறிவாளிகள் இருக்கிறார்கள். கனிமொழியின் கவிதைக்கு 5 லட்சம் யாராவது தருகிறார்களா என்ன ? கருணாநிதியின் பேரன்கள் எல்லாம் கல்லூரியிலிருந்து வந்த உடனே கோடிக் கணக்கான ரூபாய் முதலீட்டில் வரிசையாக சினிமா எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்… எப்படி ?

கருணாநிதி எழுதவேண்டிய அடுத்த புத்தகம்: நூறே நாட்களில் கோடீஸ்வரனாவது எப்படி ? தனியே தன்னந்தனியே ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தை உருவாக்கிய அந்த சாதனை ரகசியத்தை மட்டும் தமிழக மக்களுக்கு அவர் தெரிவித்துவிட்டால், உலகம் அழியும்வரை அவருக்கு நன்றி விஸ்வாசத்தோடு அத்தனை தமிழர்களும் இருப்பார்கள்.

இந்த வாரப் பூச்செண்டு

சென்னை மாந்கராட்சி மேயர் மா.சுப்ரமணியனுக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இ.வா.பூ.

சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் ப்ளஸ் டூ புகைப்படப் படிப்பை மூடுவதைக் கைவிடக் கோரி நான் எழுதிய கல்கி கட்டுரையைப் படித்ததும் ஸ்டாலின், மேயருக்கு போன் செய்தார். மேயர் எனக்கு போன் செய்தார். படிப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேரில் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்த மேயர், கம்ப்யூட்டர் பிரிண்ட்டர், கேமரா வாங்கித்தர உத்தரவிட்டார். முன்னாள் இந்நாள் மாணவர்களின் நிரந்தரப் புகைப்படக் காட்சியை எல்லா மாநகராட்சிப் பள்ளிகளிலும் நிறுவவும் உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டிலிருந்து நகராட்சி நிகழ்ச்சிகளைப் படம் எடுக்கும் வேலையை சூளைமேடு மாணவர்களுக்குக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். நன்றி…

இந்த வாரத் திட்டு
சாகித்ய அகாதமி சென்னைப் பிரிவை இங்கே இயங்கவிடாமல் துரத்தியடிக்கும் தமிழக அரசுக்கு இ.வா.தி.

Saturday, December 18, 2010

மின்சாரம்

கம்பி வழித் தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தத் தொடங்கினால் முதலில் கேட்பது இதுதான்: மின்சாரம் பொருளாதாரத்தின் உயிர்நாடி. அதைத் திறம்படப்  பயன்படுத்துங்கள், என்பதுதான்.இந்த வாரம் மின் சிக்கன வாரம். இதற்கான விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தைச் சேமிப்பதை வலியுறுத்திக் கருத்தரங்குகள், மனிதச் சங்கிலி, விழிப்புணர்வுப் பேரணி ஆகியவற்றை ஆங்காங்கே நடத்தி வருகிறார்கள்.இந்தியாவில் உற்பத்திக்கும் மின்தேவைக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே போனாலும் மின்தேவையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மின்உற்பத்தித் திறன் (ஜூன் 2010 நிலவரப்படி) 162366 மெகாவாட். இருப்பினும், மின் பற்றாக்குறை என்பது இதில் 15 விழுக்காடு. அதாவது சுமார் 24,000 மெகாவாட். 

2020-ம் ஆண்டுக்குள் தற்போதைய மின்உற்பத்தித் திறனுடன் மேலும் கூடுதலாக 78,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டாலும், இதில் பெரும்பகுதியை எட்டுவதற்கு அணுஉலைக் கூடங்களை அமைத்தால் மட்டுமே முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், புனல்மின் நிலையங்களுக்கான வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்துபோய்விட்டன.இந்தியாவில் 70 விழுக்காடு மின்சாரம் அனல் மின்நிலையங்கள் மூலம்தான் கிடைக்கிறது. அதற்கு பழுப்பு நிலக்கரி தேவை. இந்தியாவில் உள்ள பழுப்பு நிலக்கரியில் சாம்பல் சத்து அதிகமாக இருப்பதால் பெருமளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இறக்குமதி என்றாலே அரசியல்வாதிகளுக்கு இனிப்புக்கு சாப்பிடுவது போலத்தானே. வெளிநாட்டில் வாங்கும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் வர்த்தகக் கமிஷன் உண்டு. அதை வெளிநாட்டு வங்கிக் கணக்கில் நேரடியாக- தன் பெயரிலோ அல்லது கட்சியின் தேர்தல் செலவுக்காகவோ- வரவு வைத்துக்கொள்ளும் வசதிகளும் உண்டு. ஆகவே ஊழல் புகுந்தால், பழுப்பு நிலக்கரியின் விலையும் கூடும், மின் உற்பத்திச் செலவு கூடும். மின்கட்டணம் கூடும். மக்கள் தலையில் தான் இந்தக் கட்டணச் சுமை விழும்.நிலைமை இதுவாக இருக்க, நாம் இருக்கிற மின்சாரத்தைத் திறம்பட, அதாவது சிக்கனமாக, தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துகிறோமா என்கிற கேள்வியை எழுப்பினால், இல்லை என்றே சொல்லிவிட முடியும்.

பிரயாஸ் எனர்ஜி குரூப் என்கிற தன்னார்வ அமைப்பு இந்த ஆண்டு மின்பயன்பாடு குறித்து  ஆய்வு நடத்தியதில், தொடர் மின்இணைப்பில் வைத்திருத்தல் (ஸ்டான்ட்பை மோட்) என்கிற ஒரு வகைப்பாட்டில் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு 270 கோடி யூனிட் மின்சாரம் வீணாகிப் போகிறது என்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய தொடர் மின்இணைப்பில் வைக்கப்படும் கருவிகள் பெரும்பாலும், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செட்-டாப் பாக்ஸ் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்தத் தொடர்மின்இணைப்பு வகைப்பாட்டில் நகர்ப்புற மக்கள்தான் கிராமத்தினரைக் காட்டிலும் அதிகம் வீணடிக்கிறார்கள். நகர்ப்புறத்தில் வாழும் ஒருவர்- டிவி, கணினியை முற்றிலும் ஸ்விட்ச் ஆப் செய்யாமல், இத்தகைய ஸ்டான்ட்பை மோடில் வைத்திருப்பதன் மூலம், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்துவதோடு, தன் வீட்டுக்கு மாதம் தோராயமாக | 400 இழப்பு ஏற்படுத்திக் கொள்கிறார் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  

கணினியும் தொலைக்காட்சியும் இப்போது கிராமப்புறங்களையும் ஆக்கிரமித்து வருவதால், இதன் அளவு கூடுமேதவிர, குறையாது என்கிறது அந்த ஆய்வு. அவர்கள் கணக்கின்படி 2013-ம் ஆண்டு இந்தத் தொடர் மின்இணைப்பு மூலம் 461 கோடி யூனிட் மின்சாரம் வீணாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க மின் திருட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசுப் பிரமுகர்களின் கட்சி அல்லது இல்ல நிகழ்ச்சிகளுக்கு, அந்தத் தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கொக்கிபோட்டு மின்சாரம் திருடுவது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அரசியல் தலைவர், அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் ஊருக்கு வெளியிலிருந்து குழல்விளக்குகள் அமைத்து இரவு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் நிலைமை இன்னமும் தமிழ்நாட்டில்தான் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்காக, சாதாரண கிராம மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் செல்ல வேண்டிய மின்சாரத்தைத்தான் இங்கே திசைதிருப்புகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்வதில்லை. இந்த மின்சாரம் காந்தி கணக்கில் எழுதப்படுகிறது என்பதைக்கூட புரிந்துகொள்ளாதவர்களாகவே இன்னும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளிக்கப்பட்ட பிறகு, எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி பிற்பகல் தொடங்கி இரவு 11 மணி வரை இடைநில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத சாலையோர தேநீர் கடைகளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. முன்பு வானொலிப் பெட்டி இதே தேநீர் கடைகளில் இருந்தபோது அதற்குத் தேவைப்பட்ட மின்தேவை மிகக் குறைவு. போதாதற்கு செல்போன்களையும் நாள்தோறும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.இதுபோதாதென்று முக்கிய நகரங்கள், தெருமுனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்களில் ஆங்காங்கே கேன்டிட் கேமராக்கள் பதிவு இயங்கிக் கொண்டே இருக்கின்றன எந்நேரமும்.

மின்உற்பத்திக்குக் குறைவான சாத்தியங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மின்தேவைக்கோ அளவே இல்லை. எவ்வளவு உற்பத்தி செய்து கொடுத்தாலும் காலி செய்யக் காத்திருக்கிறது நவீன நாகரிகம்.வசதியான வாழ்க்கை என்பது தேவைதான். ஆனால், தேசநலனைப் புறம் தள்ளி மின்விரயத்துக்குத் துணைபோகும் நமது மக்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும். மின் உற்பத்தியைப் பெருக்குவது எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் மக்களிடம் மின் சிக்கனத்தின் தேவையை உணர்த்துவது.மின்சாரம் தொட்டால் மட்டுமல்ல, நினைத்தாலே ஷாக் அடிக்கும் போலும்.

தினமணி     

Friday, December 17, 2010

தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?

அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 63 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும்கூட, நாம் இன்னும் அடிமைத்தனச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, நமது ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியாவின் பலத்தை உணரவில்லை என்பது  மட்டுமல்ல, இந்த மாபெரும் தேசத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்வுகூட இல்லாமல் இருக்கிறார்களே என்பது வேதனையளிக்கிறது.அது அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, இந்தியாவை அவமானப்படுத்துவதில் துன்பியல் இன்பம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டிருக்கின்றன. சீனா நம்மை அவமானப்படுத்துவது புரிகிறது. ஆனால் அமெரிக்காவும் அப்படி இருக்கிறது என்கிறபோது, நமது வெளியுறவுக் கொள்கை தவறாக இருக்கிறதா இல்லை நமது ஆட்சியாளர்கள் முதுகெலும்போடு செயல்படாமல் இருக்கிறார்களா என்பது புரியவில்லை. அமெரிக்க அதிபர்களை நமது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வருந்தி அழைத்து வருவதால், இந்தியா தனது சுற்று தேவதை நாடுகளில் ஒன்று என அமெரிக்கா கருதிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. 

எந்தவொரு நாட்டிலும் சாதாரணப் பயணிகளைப்போல, அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் நடத்தப்படுவதில்லை. விமானநிலையங்களில் அவர்களுக்குத் தனியான வரிசை ஏற்படுத்தி பாதுகாப்புச் சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் என்ன பொருளை வாங்கினாலும் அதற்கு எந்தவிதமான வரியும் விதிப்பதில்லை என்பது சர்வதேச வழக்கு.ஷாரூக்கான், கமல்ஹாசன் என்று திரைப்பட நடிகர்கள் அமெரிக்காவில் சோதனையிடப்பட்டதை நாம் பெரிதுபடுத்தவில்லை. இவர்களுக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்று நாம் கோரவும் இல்லை. ஆனால் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமை பாதுகாப்புச் சோதனை என்கிற பெயரில் அவமானப்படுத்தினால் அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் அவமானப்படுத்துவது போன்றதல்லவா? அதை எப்படி இந்திய அரசு சகித்தது? ஜிம்மி கார்ட்டரும், பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும்  இந்தியா வந்தால், அவர்களை அதேபோல சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா மௌனம் காக்குமா?போகட்டும், அது நடந்து முடிந்த கதை. அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டாமா? அமெரிக்காவிடம் கறாராகப் பேசி, இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா?

சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவருக்கு பாதுகாப்புச் சோதனையின்போது அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம்தான், நமது அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஹர்தீப்சிங் புரி என்பவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர். சீக்கியரான ஹர்தீப்சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ஹெளஸ்டன் விமான நிலையத்தில். தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக அந்தஸ்துப் பெற்றவர் என்றும் எடுத்துக்கூறியும் அந்தப் பாதுகாப்புச் சோதனையிடும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளாகச் செல்லும் சீக்கியர்களைத் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்வதில்லை. இந்தியத் தூதரக அதிகாரி என்பதால் வேண்டுமென்றே அந்த அதிகாரிகள் ஹர்தீப்சிங் புரியைக் கேவலப்படுத்தினார்கள் என்பது தெளிவு.கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் இதேபோல, மிஸ்ஸிஸிப்பி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியத் தூதர் என்ற முறையில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுடன் செயல்படும் உயர் அதிகாரி மீரா சங்கர். அவரது குற்றம் சேலை கட்டி இருந்தது. உங்கள் சேலையை அவிழ்த்துக் காட்டுங்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேட்பது என்றால், இந்தியாவை எந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு ஷேக்குகளின் மனைவியரையும் அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோகூட நினைவில்லை. அப்படி ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால் அடுத்த நொடியே, பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல் ஹில்சும் அலறித் துடித்திருக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வராமல் போனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பமே ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

பாதுகாப்புச் சோதனைக்குத் தூதரக ஊழியர் உள்படுத்தப்படுவதில்கூடத் தவறில்லை. ஆனால், சேலையைக் கழற்றித்தான் இந்தியத் தூதரைச் சோதனையிடுவேன் என்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லவா? நாம் பிறந்த புண்ணிய பூமிக்கு இழைக்கப்படும் அவமானம் அல்லவா அது?நிமிர்ந்து நிற்கவும், எதிர்த்துக் குரலெழுப்பி அமெரிக்காவை எச்சரிக்கவும் நாம் ஏன் தயங்குகிறோம்? ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக நமது தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?   

Thursday, December 16, 2010

முதலமைச்சர்கள்-அன்றும் இன்றும்

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி). அதற்குப் பிறகு அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் பணியாற்றினார். வங்காளத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத்தின் பகுதிகள் அடங்கிய சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில்தான் அவரது வீடு இருந்தது. மிகவும் குறுகலானது மட்டுமல்ல, சிறியதும்கூட. 

 பெருந்தலைவர் காமராஜ் தமிழக முதல்வராக அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து ஒருமுறைக்கு இரண்டு முறை இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுத்தவர். அவர் வாழ்ந்த வீடு திருமலைப்பிள்ளை சாலையில் இப்போதும் நினைவு இல்லமாக இருக்கிறது. அது அவருக்குச் சொந்தமானதல்ல. வாடகை வீடுதான். இவரது மறைவுக்கு முன்பு அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர் இறந்த பிறகு அந்த வீட்டை எம்.ஜி.ஆர். ஆட்சியில் விலை கொடுத்து வாங்கி, காமராஜின் நினைவாலயமாக்கினார். அவர் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது. அந்த வீட்டில் இருந்துகொண்டுதான், உலகத் தலைவர்களையும், இந்தியத் தலைவர்களையும் சந்தித்தார். அவரைச் சந்தித்த தலைவர்கள் பெருமைப்பட்டார்களே தவிர, அவரது வீடு சிறியது என்று எண்ணிக் கவலைப்படவில்லை.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் வீடும் சிறியதுதான். அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் ஆட்சியும் நடத்தினார், தன்னைப் பார்க்க வந்த அனைத்துத் தலைவர்களையும் (அண்ணா, கருணாநிதி) உள்பட அவர் இருந்த சிறிய வீட்டில்தான் சந்தித்தார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கு சென்னையில் வீடே இருக்கவில்லை.பிரதமர் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்குத் தம் பிள்ளைகள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் வசிப்பதற்கு தில்லியில் சொந்த வீடு கிடையாது. மோதிலால் நேருவால் கட்டப்பட்டு, பரம்பரை உரிமையாகத் தனக்குக் கிடைத்த  அலாகாபாதிலுள்ள ஆனந்தபவனத்தையும் இந்திய அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, அரசு வீட்டில்தான் கடைசிவரை வாடகைக்கு வாழ்ந்தவர் இந்திரா அம்மையார். 

இந்த நிலையில் நம்முடைய முதலமைச்சர் தாம் வசிக்கிற வீடு, (கோபாலபுரம், சி.ஐ.டி. நகர்), குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாதது என்று வேதனைப்படுவது புரிகிறது. அவரைவிட எளிமையாக வாழ்ந்த முதலமைச்சர்கள் அந்தக் குறையை வெளிப்படுத்தியதில்லை. எனவே, தான் வாழ்கிற வீட்டின் வசதி குறைவு எனக் கருதி நமது முதலமைச்சர் வேதனைப்படத் தேவையில்லை.

முதலமைச்சர், தான் ஏதோ சல்லிக்காசுகூட இல்லாமல் சென்னைக்கு வந்ததுபோல் எழுதுவதாகவும், தான் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், அன்றைக்கே திருக்குவளையில் அல்லாமல் திருவாரூரில் தங்கிப் படித்ததாகவும் எழுதுகிறார். தம் வீட்டில் திருடன் புகும் அளவுக்கு வசதி இருந்தது என்கிறார். அவரை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை. சென்னைக்கு வரும்பொழுது அவர் திருட்டு ரயில் ஏறி வந்ததாக அவரும், அவரைச் சார்ந்தவர்களும்தான் மேடையில் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்மூலம் தாங்கள் ஏழை எளியவர்கள், சாமானியர்கள் என்று மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். எனவே, அவரைப் பற்றி யாராவது வசதி இல்லாதவர் என்று சொல்லியிருந்தால் அதற்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் காரணம். 

திரைப்படத் துறையில் எப்படியெல்லாம் முன்னேறினேன் என்று விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஏனோ அவர் ஈரோட்டில் தங்கி, தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழில் பணியாற்றி ஊதியம் பெற்றதைச் சொல்லத் தவறிவிட்டார். அவருடைய ஆழ்ந்த தமிழ் அறிவையோ, சொல்லாற்றலையோ, எழுத்து வன்மையையோ இதுவரை எவரும் கேலி செய்ததும் இல்லை, எள்ளி நகையாடியதும் இல்லை. அவர் படிப்படியாகத் திரைப்படத் துறையில் முன்னுக்கு வந்தவர், மற்றவர்களைவிட அதிகம் ஊதியம் பெற்றவர். கூட்டாகச் சேர்ந்து சினிமாப் படம் தயாரித்து நஷ்டப்பட்டவர். சம்பாதிக்கவும் செய்தவர். 

திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்குள் புகுந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு அறிஞர் அண்ணா, சினிமாத் துறையை விட்டுத் தானாக விலகிவிட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகு மிகப்பெரிய அளவில் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்த நடிப்புத் துறையைவிட்டுத் தாமாக ஒதுங்கிவிட்டார். முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெ. ஜெயலலிதா நடிப்புத் துறையைவிட்டு விலகிவிட்டார். ஆனாலும் கருணாநிதி முதலமைச்சர் பதவியையும், திரைப்படத் துறையையும் இப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மற்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர் உணரவில்லை. முதலமைச்சராக கதைவசனம் எழுத ஆரம்பித்த பிறகு அவருக்குக் கிடைத்த ஊதியம் பல லட்சம் (|25 லட்சம் முதல் 50 லட்சம்) வரை உயர்ந்தது. அவரோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மற்ற எழுத்தாளர்கள் குறைந்த ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தத் திரைப்படங்கள் வலிந்து ஓட்டப்படுகின்றன. ஓடுவதாகத் தெரியவில்லை. ஆனாலும், தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து நஷ்டப்படத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களே, ஏன்? இவருக்குப் பல லட்சங்களை அள்ளிவீச வரிசையில் நிற்கிறார்களே, ஏன்? இவர் முதலமைச்சர் என்பதால்தானே?  

 அவர் பல லட்சம் பெற்றுக்கொண்டு எழுதிய வசனம் எவருடைய மனதிலும் இன்று நிலைத்து நிற்கவில்லை. அவர் சில நூறுகள், சில ஆயிரங்கள் வாங்கிக்கொண்டு எழுதிய கதை வசனம் இன்னும் பார்த்தவர்கள் மனதில் பசுமையாக நிழலாடுகிறது. படம் எடுப்பவர்களுக்கும் இது தெரியும். முதலமைச்சர் தான் திரைப்படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு பணம் வாங்குகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைவிட, ஏன் அவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 கோபாலபுரம் வீட்டைப் பற்றி இந்த ஒரே வீடுதான் என்னுடையது, அதுவும் எனக்குப் பிறகு மருத்துவமனைக்குத் தானம் கொடுத்துவிட்டேன் என்கிறார். இன்று கோபாலபுரம் கருணாநிதிபுரமாக மாறிவிட்டது. அவர் வீட்டின் பின்புறம் பற்றி சட்டமன்றத்தில் பிரச்னை எழுந்ததை அவர் மறந்துவிட்டார். முரசொலி பத்திரிகை, துணைப் பத்திரிகைகளை எவ்வளவு சிரமங்களுக்கிடையே நடத்தி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால், அந்த முரசொலி பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துபோன நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நிதி சேர்த்ததை மறந்திருக்க மாட்டார். இன்றைக்கு அவர் சன் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு நூறு கோடி பிரித்துக் கொடுத்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால், சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியபொழுது அதன் நிலை என்ன? யாருடைய ஆதரவில் வளர்ந்தது? இவரும், இவரது அரசும் ஆதரவு அளித்து அதை வளர்க்கவில்லையா?  ஒரு காலகட்டத்தில் அது தமிழக அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வரவில்லையா?

 சன் தொலைக்காட்சி நிறுவனம் நூறு கோடி ரூபாய் அவருக்குப் பிரித்துக் கொடுத்துள்ளது. ஆனால், அதில் அவருடைய முதலீடு எவ்வளவு என்பதைச் சொல்லவில்லை. அவர் துணைவியாருக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்லவில்லை. அவரே சம்பாதித்த பணத்தை வங்கிகளில் வைத்து ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்ய அறக்கட்டளை அமைத்து இருப்பதாகச் சொல்கிறார். அதில் எவ்வளவு பணத்துக்கு வருமானத் துறை விலக்களித்தது என்று சொல்லவில்லை.  ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், ஆட்சிக்கு வந்த பின்பும் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோதெல்லாம் காங்கிரஸ் கட்சியிலிருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் ஆகிய பெரும் நிலம் படைத்தவர்களின் கட்சிதான் காங்கிரஸ் கட்சி என்றார்கள். இவர்களுக்காகவே காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவராமல் தவிர்க்கிறது என்று சொன்னார்கள். ஏன் முதல்வர் கருணாநிதியே பல மேடைகளில் பேசினார்.

இன்றைக்கு அந்த பெரும் நிலச் சுவான்தார்கள் அத்தனைபேர் நிலப்பரப்பையும் ஒருசேர கூட்டினால் எத்தனை ஏக்கர் நிலம் வருமோ அதைவிட அதிகமாக அவருடைய குடும்பத்தினர் எஸ்டேட்டுகளையும், நிலத்தையும் வாங்கி வைத்திருக்கிறார்களா இல்லையா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு நில உச்சவரம்புச் சட்டம் என்ன ஆயிற்று? மிகப் பெரிதாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக்கொண்டு சட்டமன்றத்தின் முன்வைத்த நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்ட முன்வடிவு என்ன ஆயிற்று? அந்தச் சட்ட முன்வடிவு யாருக்காகக் கைவிடப்பட்டது என்பதை முதலமைச்சர் விளக்குவாரா? குறைந்தபட்சம் அந்தச் சட்ட முன்வடிவில் குறிப்பிட்டிருந்ததைவிட பல மடங்கு அதிக நிலத்தை சென்னை மாநகராட்சி எல்லையிலும் மற்ற மாநகராட்சி எல்லைகளிலும் அவர் குடும்பத்தினர் வைத்திருப்பதை இல்லை என்று சொல்வாரா?  எதையெதையோ தம்முடைய சொந்தக் கணக்கோடு சேர்த்து எழுதியிருக்கும் முதலமைச்சர் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கொலைவழக்கில் சிக்கினார் என்பது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சி ஊழலில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்களை உடனே கட்சியை விட்டு விலக்கினார். இன்றைக்கு கருணாநிதி ஈரோடு மாவட்டத்தில் பல கிரிமினல் வழக்கில் சிக்கிய எஸ்.கே.கே.பி. ராஜாவை என்ன செய்துள்ளார்?  உலகையே வியக்கவைத்த ஊழலுக்குக் காரணமான ராசாவை எப்படி கட்டி அணைக்கிறார் என்பதைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அவர்களுக்கு வந்த பணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் செலுத்திவிட்டு, தங்களுக்குத் தேவையான ஆடை மற்றும் மளிகைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச்  சீட்டு அனுப்பிப் பெற்றுக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.பெருந்தலைவர் காமராஜ் பதவியில் இருந்தபோது, அவர் பெற்ற ஊதியத்தையும் பொது நிகழ்ச்சிக்குச் செல்லும்பொழுது மாலைக்குப் பதிலாகக் கொடுத்த பணத்தையும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பிவைத்தார். புதிய ஆடைகள் வேண்டுமென்றாலும், மளிகைப்  பொருள்கள் வேண்டுமென்றாலும் அவரது பணியாளர் மறைந்த வைரவனிடம் சொல்லி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் பெற்றுக் கொள்வார்.  ஆனால், தனிநபர் கருணாநிதியின் குடும்பச் சொத்து மதிப்பீடு பல ஆயிரம் கோடி என்பதை மறுக்க முடியுமா? 

ஒரு விரலால் மற்றவர்களைக் குற்றம்சாட்டும்போது, மீதி நான்கு விரல்கள் அவரைச் சுட்டிக்காட்டுவதை முதல்வர் கருணாநிதி ஏனோ மறந்துவிடுகிறார். அவரைச் சாமானியன் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. கோடீஸ்வரர் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. பிறகு இவரை எப்படித்தான் வர்ணிப்பது?  ஆனாலும், இவர் தன்னை ராஜாஜியுடனும், காமராஜுடனும், அண்ணாவுடனும் ஒப்பிட்டுப் பேச நினைப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை...  

Wednesday, December 15, 2010

ஹேக்கிங்

கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது பழைய வரலாறு.
இப்போது, 2010-ல் இரு நாடுகளிலும் 'சைபர் வார்’ நடந்துகொண்டு இருக்கிறது மிக, ரகசியமாக... மிகப் பயங்கரமாக!

கத்தியின்றி, ரத்தமின்றி ஏ.ஸி. ரூமில் இருந்தபடியே, 'கம்ப்யூட்டர் கெரில்லா தாக்குதல்’ மேற்கொண்டு, இரு நாட்டு அரசாங்கங்களும் நூற்றுக் கணக்கான வெப்சைட்டுகளை மாறி மாறி வீழ்த்தும் போர்!

அந்தந்த நாட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிபுணர் களில் சிலர், தங்கள் கிரிமினல் மூளைகளை இந்த சைபர் யுத்தத்துக்குப் பயன்படுத்துகின்றனர். 'ஹேக் கர்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், 'இந்தியன் ஹேக்கர்ஸ், பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்’ என்று பிரிந்து நின்று, எதிரிகளாகச் செயல்படுகின்றனர். இந்தியன் சைபர் ஆர்மி (ஐ.சி.ஏ.), பாகிஸ்தான் சைபர் ஆர்மி (பி.சி.ஏ.) என்று இரண்டு பேனர்களில் இணைய தளங்களில் போர் முகங்களுடன் வலம்வரும் இவர்கள் அரங்கேற்றும் அதிரடிகள், திடுக்கிடவைப்பவை!

இன்டர்நெட் மூலமாக வைரஸ்களை அனுப்பு வது, உளவு பார்க்கும் இ-மெயில்களை அனுப்பி எதிரியின் வெப்-சைட்டை ஆக்கிரமித்து, அங்கு இருந்து தகவல்களைத் திருடுவது, தகவல்களை காப்பியடித்துத் தங்களை ஏவிவிடும் எஜமானருக்கு அனுப்புவது, நாட்டின் முக்கிய அரசுத் துறைகளின் வெப்-சைட்டுகளுக்குள் நுழைந்து புரோக்ராம்களைத் திருத்தி அவற்றை உருக்குலைப்பது, தவறான தகவல்களைச் சேர்ப்பது... இவை எல்லாம் இந்த 'ஹேக்கர்ஸ்’களின் வேலை!

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக மாநில பிரபலத் தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான விஜய் மல்லையாவின் வெப்-சைட்டில் இருந்த மூவர்ணக் கொடியை அகற்றிவிட்டு, பாகிஸ்தான் நாட்டுக் கொடியை அந்த இடத்தில் பொருத்தி இருக் கிறார்கள். இது, இவர்களின் திருவிளையாடலுக்கு ஒரு சாம்பிள். உடனே இதைக் கவனித்து அதிர்ந்த மல்லையா, போலீஸில் புகார் கொடுத்தார்.  
நவம்பர் 26-ம் தேதி, மும்பைத் தாக்குதல் நடந்த நினைவு தினம். அன்று, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு உயிர் நீத்த இந்திய போலீஸாருக்கு பாகிஸ்தானியர் சல்யூட் அடிக்கும் வகையில் சில சில்மிஷ வேலைகளை நம்முடைய ஆட்கள் பார்த்தார்கள். பாகிஸ்தானின் 36 அரசாங்க வெப்-சைட்களில் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி, மிகவும் பாதுகாப்பு மிகுந்த சி.பி.ஐ-யின் அதிகாரபூர்வ வெப்-சைட்டின் முதல் பக்கத்தையே பாக்.நாட்டில் பி.சி.ஏ. ஹேக் செய்தது. அதில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்கிற கோஷம் வேறு இருந்தது.

'ஐ.சி.ஏ-வே! எங்களுடன் விளையாடாதே...’ என எச்சரித்து, '270 வெப்-சைட்டுகளை நாங்கள் ஹேக் செய்துள்ளோம்' என்றும் வாசகங்கள் மின்னின. இது டெல்லி உயர் அதிகாரி களை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யின் வெப்-சைட் மூடப்பட்டது. டிசம்பர் 13-ம் தேதி வரை அதை மீண்டும் திறக்கவில்லை. மறுசீரமைக்க சைபர் க்ரைம் நிபுணர்கள் போராடுகின்றனர்.

விகடன் 

Tuesday, December 14, 2010

சீட்டு

மிழர்களுடைய அடையாளமாக  ஐந்து விஷயங்களை வரிசைப்படுத்தினால் இட்லி- சட்னி- சாம்பாருக்கு அடுத்தபடியாக சீட்டு போடுவதுதான் இருக்கும்! அந்த அளவுக்கு சீட்டு என்பது தமிழர்களின் சேமிப்புக் குணங்களில் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டது... நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு என ஏதாவது ஒருவகையில் சீட்டு சேரும் பழக்கம் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் புகுந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சீட்டை வைத்துதான் தங்களது பண நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறார்கள். இருந்தாலும், அது இரண்டுபக்கமும் கூர்மையான வாளைப் போன்ற ஒன்றுதான். சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பதம் பார்த்துவிடும். சீட்டில் சேர்பவர்களை மட்டுமல்ல; சீட்டு நடத்துபவர்களையேகூட சில சமயங்களில் சரித்துவிடும்!
சீட்டுகளில் பலவகை இருந்தாலும் அதிக ரிஸ்க் இல்லாத சீட்டு என்றால் அது நகை சீட்டுதான். இந்த சீட்டு நகைக் கடைகளில் மட்டுமே போடப்படுவதால் பெரும்பாலும் எந்தவித மோசடியிலும் சிக்காமல் நகையாகக் கிடைத்துவிடும்.

ஆனால் மற்றவகை சீட்டு களை நம்மால் அப்படிச் சொல்ல முடிவதில்லை. ஆசையாக சீட்டு போட்ட இடத்தில் வேட்டு வைத்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. காலை பேப்பரைத் திறந்தால், 'சீட்டு நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாயுடன் ஓட்டம், சீட்டு நடத்திய பெண் தலைமறைவு’ என பலவிதமான மோசடிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சீட்டை விட்டால் வேறுவழி இல்லை, அதேசமயம் அது வேட்டு வைப்பதாகவும் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் இனி கவனமாகப்  படியுங்கள்...

தனிநபர் சீட்டை தேடியோடும் மக்கள்!
அங்கீகரிக்கப்பட்டு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் நிறுவனங்களை விட தனிநபர்கள் நடத்தும் சீட்டுகள் தான் பெரும்பாலும் மக்களை ஈர்க்கிறது.  தாங்கள் குடியிருக்கும் பகுதி, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றில் தினம் தினம் பார்த்துப் பழக்கப்பட்ட நபர்களிடமே சீட்டு போட முன்னுரிமை கொடுக்கிறார்கள். சீட்டைப் பொறுத்தவரை பரஸ்பர நம்பிக்கைதான் அதன் மூலதனம். சீட்டு போடுபவர், நடத்துபவர் என்று இரு தரப்பும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பணத்தைப் பரிமாறி கொள்கின்றனர்.
அலையவிடும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள்
சீட்டு நிறுவனங்களை விட தனிநபர்களை மக்கள் நாடுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் சீட்டு சேர்வதற்கும், பணத்தை வாங்குவதற்கும் எந்தவிதமான ஆவணங் களையும் கேட்கமாட்டார்கள் என்பதுதான்!






Monday, December 13, 2010

மனம் இரங்க வேண்டும்!

ஓரு நோயாளி தமிழகத்திலுள்ள எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் தன் கைரேகையைப்  பதித்தால், அவரின் சிகிச்சை வரலாறு தெரிந்துவிடும் விதத்தில், பயோமெட்ரிக் முறையில் வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், மென்பொருள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. 

 வேலூர் மாவட்டத் துணை சுகாதார இயக்குநர் சுரேஷின் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது. இதுநாள் வரை ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மெல்லிய புற நோயாளிகள் சீட்டு வழங்கப்படும். அதில் ஒருமுறை மட்டுமே எழுத முடியும். அடுத்து அதே நோய்க்காக மருத்துவமனைக்கு வரும்போது, கிராமங்களில் பெரும்பாலும் பழைய சீட்டை எடுத்து வருவதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் மீண்டும் குறிப்புகளை எழுதும் நிலையில் இருக்காது. வெளியூருக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும்போது, ஏற்கெனவே மேற்கொண்ட சிகிச்சையின் வரலாறு மருத்துவருக்கும் தெரியாது. நோயாளியாலும் நினைவுபடுத்தி கூற இயலாது. இதைக் கருத்தில்கொண்டு நோயாளிகளின் சிகிச்சை வரலாறை எளிமைப்படுத்தும் விதமாக வேலூர் சுகாதார மாவட்டத் துணை இயக்குநர் சுரேஷ் மென்பொருள் ஒன்றை உருவாக்க நினைத்தார்.

மென்பொருளும் உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் சிகிச்சைக்கு வருபவரின் தன் விவரம் மற்றும் புகைப்படம், கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதியப்படும். அவர் மீண்டும் வரும்போது கைவிரல் ரேகையை வைத்தாலே, அவரின் நோய் மற்றும் வழங்கப்பட்ட மருந்து விவரம் உள்ளிட்ட சிகிச்சை வரலாறு முழுவதும் கணினியில் தெரிந்துவிடும். அம்மருத்துவமனையில் எத்தனை மருத்துவர் மாறினாலும் கவலையில்லை. சிகிச்சை வரலாறைப் பார்த்து, அடுத்து அளிக்க வேண்டிய சிகிச்சையை அளித்து விடலாம்.பயோமெட்ரிக் முறையில் நோயாளிகளின் தகவல்களைப் பதியும் முறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் நிலையில், நோயாளி எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், விரல் ரேகையைப் பதித்து சிகிச்சை பெறலாம்.

 இதன் செயல்பாட்டை புதுதில்லியில் இருந்து தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககத்திலிருந்து அலுவலர்களும் பார்வையிட்டு, பாராட்டிச் சென்றுள்ளனர். வேலூர் அணைக்கட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு, ஐஎஸ்ஓ தரச்சான்று பெறும் முயற்சியிலும் துணை இயக்குநர் சுரேஷ் ஈடுபட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பல மருத்துவத் துறையினர், ஏழை எளிய மக்களுக்கு இது வரப்பிரசாதம் என்று பாராட்டுகின்றனர்.ஏழைக்கு பலனளிக்கும் அம்முயற்சி, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஒருசில மருத்துவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனைகள் பெரும்பாலும் கிராமங்களில் இருக்கிறது. இங்கு மருத்துவர்கள் நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை. பணி நேரம் முடிவதற்குள் விரைவாகவே சென்று, தன்னுடைய கிளினிக்கில் அமர்ந்து கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து கணிசமான தொகை ஈட்டி வருகின்றனர்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது குறித்து மக்களுக்கும் வருத்தம் இல்லை. ஏனென்றால் கண்டிப்பாக அவர் கிளினிக்கில் இருப்பார், அங்கு சென்று பணம் கொடுத்து சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கைதான். மக்களின் நோக்கமே வியாதி குணமாக வேண்டும் என்பதுதான். அதனால் மக்களும் இதுகுறித்து பெரிதுபடுத்துவதில்லை. பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், விரைவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடும் வந்துவிடும் என்ற பயம் மருத்துவர்கள் மனதில் தொற்றியுள்ளது. அதனால் பயோமெட்ரிக் முறையை ஏற்கவும், இன்னபிற வருவாயை இழக்கவும் மருத்துவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் பயோமெட்ரிக் பதிவை மருத்துவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

ஏதாவது ஒருவகையில் மக்களின் வரிப்பணத்தில் (வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவை அரசு மானிய விலையில்தானே வழங்கி வருகிறது) மருத்துவப் பட்டம் பெற்று, அம்மக்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு வலிக்கத்தான் செய்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனிதாபிமானத்தோடு, மனித உயிர்களைக் காக்கும் கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் மருத்துவர்கள் மனதில் சுயநலம் மட்டுமே விஞ்சி நிற்கிறது. இந்த நிலை மாற மருத்துவர்களின் மனம் மாற வேண்டும்.  

Sunday, December 12, 2010

ஏ.டி.எம்.-ல் தான் எவ்வளவு பிரச்னைகள்!

பணம் கையில் வராமல் கணக்கில் வந்தால்... 

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, 'பணத்தை எடுக்கப் போனேன். பணம் வர வில்லை. ஆனால் எனது கணக்கில் அந்தத் தொகை குறைந்திருக்கிறது’ என்பதுதான்.

இதுபோன்ற பிரச்னைக்கு விரைவாக உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்குச் சென்று புகார் தெரிவித்தால் உடனடியாக உங்கள் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும். இதுவே மற்ற வங்கி ஏ.டி.எம்-மாக இருந்தால் உங்கள் பணம் வந்துசேர தற்போது பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகிறது. ஆனால் புகார் தெரிவித்த 12 நாட்களுக்குள் நமது பணத்தை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் வாடிக்கையாளருக்கு தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வங்கி 100 ரூபாய் அபராதமாக வழங்கவேண்டும் என்றும் ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. இது 2009 ஆகஸ்ட் முதல் அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உத்தரவு பற்றி தெரியவில்லை. மேலும் புகார் தெரிவித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உங்கள் பகுதி வங்கி குறைத்தீர்ப்பு ஆணையத்திடம் சென்று முறையிடவும்.

பின் நம்பர் மறந்துவிட்டால்...
ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை சிலர் மறந்துவிடு வார்கள். அப்படி மறந்துவிட்டால் இந்த நம்பராக இருக்குமோ அந்த நம்பராக இருக்குமோ என்று திரும்பத் திரும்ப கார்டை போட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் கார்டு ப்ளாக் ஆகிவிடும்.

பின் நம்பர் மறந்துவிட்டால் வங்கிக்குச் சென்று அந்த கார்டைக் கொடுத்தால் அந்த கார்டின் செயல்பாட்டைத் துண்டிப்பதோடு அந்த கார்டை இரண்டு துண்டாகவும் உடைத்துவிட்டு, புது கார்டு கொடுப்பார்கள். பின் நம்பரைப் பொறுத்தவரை உங்களுடைய அல்லது உங்கள் உறவினர்களின் பிறந்த தேதி, திருமண தேதி போன்றவற்றை ரகசிய எண்ணாக வைக்காதீர்கள். அதேபோல் டைரியிலோ, செல்போனிலோ பின் நம்பரை குறித்து வைக்கும் வழக்கமும் வேண்டாம். மற்றவர்கள் உங்கள் பின் நம்பரை ஊகிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பளிக்காதீர்கள்!

கார்டு மாட்டிக்கொண்டால்...
பழைய சிஸ்டத்தைப் பின்பற்றும் ஏ.டி.எம்-களில் கார்டை உள்ளே இழுக்கும் முறைதான் இருக்கிறது. சில சமயம் உள்ளே போன கார்டு வெளியே வராமல் போய் விடுவதும் உண்டு!
ஏ.டி.எம்-ல் கார்டு மாட்டிக்கொண்டால் உடனே கஸ்டமர் கேர் நம்பருக்கு புகார் தெரிவிக்கவும் என்று ஏ.டி.எம். மையத்திலே அறிவித்திருப்பார்கள். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வும். ஒருவேளை அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் வங்கி கிளைக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்து, உங்கள் அவசரத் தின் நிலையை வங்கியின் மேலாளரிடம் விளக்கினால் 24 மணி நேரத்தில் புதிய கார்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதுவே நீங்கள் வேறு ஊரில், வேறு வங்கி ஏ.டி.எம்-மை பயன்படுத்தி கார்டு உள்ளே போயிருந்தால் உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்கு உடனே தெரிவித்தால் முதற்கட்டமாக கார்டை ப்ளாக் செய்துவிடுவார்கள்.

தேய்ந்து போன மேக்னட்டிக் ஸ்டிரிப் 

ஏ.டி.எம். கார்டின் பின்பக்கம் இருக்கும் மேக்னட்டிக் ஸ்டிரிப் ( கறுப்பு நிறத்தில் இருக்கும் பட்டை) அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமும், உராய்வின் காரணமாகவும் செயலிழக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தேய்ந்துபோன ஸ்டிரிப்பால் கார்டின் பரிவர்த்தனையை ஏ.டி.எம். ஏற்றுக் கொள்ளாது. இரண்டு, மூன்று ஏ.டி.எம்.களுக்குச் சென்றபோதும் அக்கவுண்டில் பணம் இருந்தும் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ, மற்றவர்களின் கார்டு வேலை செய்யும்போது உங்கள் கார்டு மூலம் மட்டும் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ சுதாரித்துக் கொள்ளவும். உங்கள் வங்கிக்குச் சென்று புகார் தெரிவித்தால் புதிய கார்டை வழங்குவார்கள்.

அவரவர் வங்கி ஏ.டி.எம்-மே சிறந்தது
பெருந்தொகை எடுப்பதாக இருந்தால் கூடுமான வரை அவரவர் வங்கி ஏ.டி.எம்.களைப் பயன்படுத்துவதே நல்லது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு பணம் எடுத்து பிரச்னை ஆனாலும் கணக்கிருக்கும் வங்கியின் ஏ.டி.எம். எனில் உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டு பணம் உடனே கணக்கில் வந்துவிடும். மற்ற வங்கி ஏ.டி.எம். எனில் பணம் வந்து சேர வாரக்கணக்காகும்.

வேண்டவே வேண்டாம் செல்போன் 

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது செல்போ னில் பேசுவதைத் தவிர்க்கவும். அப்படி பேசும்போது உங்களது கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் எடுக்க நினைத்த பணத்தை விட அதிகமாகவோ, குறைவாகவோ குறிப்பிட வாய்ப்பு இருக்கிறது. உள்ளே போட்ட கார்டை எடுக்காமல் போகவும், பணத்தை எடுக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.

- இங்கே குறிப்பிட்டுள்ளது போக அடிப்படை பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.



Friday, December 10, 2010

இந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்

தொலைநோக்குத் திட்டங்களுடன் செயல்படுவது மட்டுமல்லாமல், எல்லா தரப்பினரின் நலத்தையும் பேணுவதாக இருப்பதுதான் நல்லரசு, நல்லாட்சி. நம்மிடம் இல்லாததை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற மனப்போக்கு ஆபத்தில் முடியும். ஒரு சில துறைகளில் மட்டும் மிதமிஞ்சிய வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதும், பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொள்வதும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் குறுகிய கண்ணோட்டத்துடனான நிர்வாகமாகத்தான் இருக்கும்.

இந்தியாவை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள் நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம் என்றெல்லாம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்களே தவிர, அடிப்படையாக நம்மை எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அலைபேசி வைத்திருந்தால் இந்தியா ஒளிர்ந்துவிடும் என்று நம்மை நம்ப வைத்து, இப்போது ஒரு சில அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் பல லட்சம் கோடிகளை அள்ளிக் குவித்து விட்டது கூடப் பரவாயில்லை. நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி சரித்திரம் காணாத அளவுக்கு உயர்ந்து, ஏறத்தாழ ஒரு கோடி டன்னாகி இருக்கிறது. சுமார் | 40,000 கோடிக்கு நாம் சமையல் எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களுக்கும், தங்கத்துக்கும் அடுத்தபடியாக இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பை விழுங்குவது சமையல் எண்ணெயின் இறக்குமதிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நமது தேவையில் பாதிக்கு மேல் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிகமாக சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்து விட்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்.ஆண்டுதோறும் நமது சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருகுவது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் பாமாயில்தான். பாமாயில் என்பது மலேசியா, இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளில்தான் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த இரண்டு நாடுகளிலும் ஏதாவது காரணத்தால் உற்பத்தி தடைபட்டு விட்டால் இந்தியாவின் கதிதான் என்ன?

அதைவிட கவலைதரும் பிரச்னை என்னவென்றால் நமது தேவைக்கும், உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான். அதாவது, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறைந்து கொண்டே போக, ஆண்டுதோறும் இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே இருப்பதை உணவு அமைச்சகம் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை.இன்றைய இந்த நிலைமைக்கு மிக முக்கியமான காரணம், மத்திய உணவு அமைச்சகத்தின் தவறான கொள்கைகள்தான் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

உணவு தானியங்கள் என்று வந்தால் இடைத்தரகர்களை அரசு ஆதரிக்கிறது. சர்க்கரை என்று வந்தால் கரும்பு உற்பத்தியாளர்களையும், பொதுமக்களையும் விட்டுவிட்டு சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைப் பேணுகிறது. எண்ணெய் வித்துகள் என்று வந்தால், உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பயனாளிகள் கொதிப்படைந்து விடக்கூடாது என்று இறக்குமதியை அனுமதித்து முடிந்தவரை விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.

இன்றைய நிலைமை என்ன தெரியுமா? அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கும், விலையுயர்ந்த பருப்பு வகைகளுக்கும்கூட குறைந்தபட்ச விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் அரசு, எண்ணெய் வித்துகளுக்குத் தரும் குறைந்தபட்ச விலை விவசாயியின் உற்பத்திச் செலவுக்குக் கூட போதாது.இறக்குமதியால் ஒரு சிலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்தியா பாதிக்கப்படுகிறதே...!    


Thursday, December 09, 2010

பாலா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

 ராமமூர்த்தி  பாலசுப்ரமணியம் என்ற பாலா

நல்ல ஆசிரியர் என்றால் அதற்கு ஒரு உதாரணம் நீங்கள். இந்நாளில் எங்களை விட்டு நீங்கள் பிரிந்து சென்று ஒரு வருடம் ஆகி விட்டது . எடுத்து செல்ல எதுவும் இல்லாமல்,  நீங்கள் விடுத்து சென்ற இயந்திரத்தை வைத்து நாங்கள் அனைவரும் அவர் தம் வேலைகளை செய்து கொண்டு உள்ளோம்.


ராஜா

'தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ - விஜய்

'இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்!’ என்று விஜய் அறிமுகம் செய்யப்பட்ட காலம் அது. கருணாநிதியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஆளுயர போஸ்டர் அடித்து வாழ்த்துவார் எஸ்.ஏ.சி. 'நீங்க தி.மு.க. அனுதாபியா?’ என்று கேட்டால்,  'நான்  கலைஞரின்  தமிழுக்குத் தலை வணங்குகிறேன்!’ என்று விளக்கம் கொடுப்பார்!

'விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்’ என்று காலம் மாறியது. மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த சமயம், அவரைச் சந்தித்துப் பொது மக்களுக்கென அரிசி மூட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார் விஜய். தொடர்ந்து, 'தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிச்ச ஹீரோ விஜய். நான் சினிமா தயாரிச்சா, அவரைவெச்சுத்தான் என் முதல் படத்தை எடுப்பேன்!’ என்று சொல்லி, 'குருவி’ தயாரித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. தளபதி ஆதரவாளர்களுடன் களை கட்டினார் இளைய தளபதி. ஒரு நிகழ்ச்சியில், 'முதல்வர் குடும்பத்து வாரிசுகளான உதயநிதி, தயாநிதி, அருள்நிதி பெயர்களை உச்சரித்தாலே ஒரு வைப்ரேஷன் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்கள்!’ என்று கருணாநிதி முன்னிலையில் புகழாரம் சூட்டினார் விஜய். 


அதுவரை அனைத்தும் சுகம். டெல்லி சென்று ராகுல் காந்தியை விஜய் எந்த நேரத்தில் சந்தித்தாரோ தெரியவில்லை... அதில் இருந்து அவருக்குச் சிரம தசை. 'தொடர்ந்து விஜய் படங்கள் ஃப்ளாப். அதற்கான நஷ்டஈடு வழங்கினால்தான், அவரது அடுத்த படத்தைத் திரையிட அனுமதிப்போம்’ என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் 'போராடி’ வருகிறார்கள். இதற்கிடையே நிகழ்ந்த ஜெயலலிதா- விஜய் சந்திப்பினை ஆளும் கட்சித் தரப்பு புருவம் உயர்த்திப் பார்த்தது.
ஜெயலலிதாவுடன் திருமண வீட்டில் நிகழ்ந்த நேருக்கு நேர் சந்திப்பில், அதுவரை 'ஜெ’ பற்றி மனதில் இருந்த பிம்பங்கள் அத்தனையும் தகர்ந்தது விஜய்க்கு. தி.மு.க, காங்கிரஸைவிட அ.தி.மு.க-தான் தனக்கு ஏற்ற சாய்ஸ் என்ற முடிவுக்கு வந்தார். 'அ.தி.மு.க-வில் சேர்ந்தால், அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்று குடும்ப ஜோசியரிடம் ஆலோசிக்கப்பட்டது. '108 பசுக்களை கன்றுகளோடு சேர்த்து தானம் கொடுத்தால், அரசியல் பிரவேசம்... அமோகம்!’ என்றாராம் ஜோசியர். (பரிகாரம்கூட, ஜெ பாணிதானா?)

உடனடியாக உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியில் விஜய் ரசிகர் நற்பணி மன்ற விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 108 பசு, கன்றுகளைத் தானமாக வழங்கினார் விஜய். தொடர்ந்து, தனது சென்னை கல்யாண மண்டபத்தில், 300 அரிசி மூட்டைகளை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்தார். தனி ஆளாக போயஸ் கார்டன் சென்று அ.தி.மு.க-வில் சேர்ந்தால், சாயங்காலம் செய்தித்தாள் தலைப்புக்கு மட்டும்தான் பயன்படும் என்பதால், தனது ரசிகர் மன்ற பலத்தை இரு கழகங்களுக்கும் திரட்டிக் காட்டி, பிறகு        அ.தி.மு.க-வில் இணையலாம் என்ற முடிவில் இருந்தார். ஜரூராக ஜனவரி மாதம் திருச்சியில் ரசிகர் மன்ற மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில், திடீரென விஜய் நடித்து சில வாரங்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் 'காவலன்’ படத்துக்குத் தியேட்டர்கள் இல்லை என்று பரபரப்பு கிளப்பினார்கள். அதே நேரம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாகும் 'மன்மதன் அம்பு’ படத்துக்கு தாராளமாக, ஏராளமாக தியேட்டர்கள் கிடைத்தன. அந்தப் படத் தயாரிப்புக் குழுவினரின் காய் நகர்த்தல்கள்தான் விஜய்க்கு சிக்கல் உண்டாக்குகின்றன என்பது ஒரு தகவல். ஆனால், அதை அடியோடு மறுக்கிறார்கள் உதயநிதி தரப்பினர். ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதம் இல்லாமல், இந்த நெருக்கடி சாத்தியம் இல்லை என்று விஜய் காதுகளில் ஓதப்பட, குழப்பத்தின் உச்சத்தில் திளைத்தார். 'உடனடி, தடாலடி அரசியல் என்ட்ரி அவசியமா? அல்லது சினிமா கேரியரை ஸ்டெடி பண்ணலாமா?’ என்ற யோசனையுடனேயே ஷங்கர் இயக்கும் தமிழ் 'த்ரீ இடியட்ஸ்’ பட வேலைகளில் முனைப்பானார்.
அடி மேல் இடியாக, இப்போது 'த்ரீ இடியட்ஸ்’ படத்தில் விஜய் இல்லை. விஜய்க்குப் பதில் சூர்யா நடிப்பார் என்று ஒற்றை வரித் தகவல். 'ஷங்கர் இந்தப் புதிய படத்துக்காக, விஜய்க்கு புது ஹேர் ஸ்டைல் வடிவமைத்தார். ஒரேயடியாக குளோஸ் கட் பண்ணியதில் விஜய் அப்செட். ஷங்கரின் அசோசியேட் ஒருவரை அழைத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் டோஸ்விட்டதாக ஒரு தகவல். இதில் அப்செட் ஆன ஷங்கர், விஜய்யை விலக்கினார்’ என்று கிசுகிசு பாணியில் செய்திகள் உலவின. ஆனால், அவசர அவசரமாக ஷங்கரை அழைத்த 'மேலிடம்’, 'விஜய்யை படத்தில் இருந்து விலக்குமாறு அறிவுறுத்தியதால்தான், இந்தத் தடாலடி மாற்றம் என்றும் வம்பு பரவுகிறது.
'தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ என்று உணர முடியாத அளவுக்குக் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார் விஜய். அடுத்தடுத்த சம்பவங்களின் வீரியம் உறைப்பதற்குள், மேலும் மேலும் அதிரடிகள் அரங்கேறி, அதிர்ச்சி அலைகள்.
'இனி மேலும், தன்னந்தனியாக எதையும் சமாளிக்க முடியாது!’ என்று இறுதியும் உறுதியுமாக முடிவெடுத்த விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மேடைகளில் தலை காட்ட முடிவெடுத்துவிட்டாராம்.

'ஒரு தடவை முடிவு எடுத்துட்டா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசியவர், பல தடவை யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
சொல்லிவைத்துக் கில்லி அடிப்பாரா?
விகடன்

Wednesday, December 08, 2010

அழிவை நோக்கி தமிழகம் !

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இதோ இன்னொரு புள்ளிவிவரம். இந்தியாவின் மொத்த மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்திலும் அறியாமையிலும் இந்தியா உலகத்தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிடச் சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வருமானம் பெறுகின்றன. ஜப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர். ஆனால், இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுயசார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைகளாகும். கல்வி,மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், அரசோ இலவசம் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது.

 இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங்களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.

கல்வி:

காமராஜ் ஆட்சிக்காலத்தில் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது குற்றப்பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்துக்கு உள்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கிராமப்புறப் பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறையும், பெரும்பாலான கல்லூரிகளில் முதல்வர்கள் பற்றாக்குறையும் உள்ளன. பிற மாநிலங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967-ம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்தியக் குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978-ம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன.

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள், லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கிறார்கள். ஆனால்,  இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.
  புற்றீசல் போல தனியார் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் பெருகக் காரணம் என்ன? குறிப்பிட்ட கையூட்டுக் கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியமாகும். இந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும் கல்வியை வணிகமாக்கிக் கொள்ளையடிக்கிறார்கள். இதன் விளைவாக, மத்திய அரசால் அங்கீகாரம் நீக்கப்பட்ட 44 பல்கலைக்கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும். போதுமான ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இல்லாமல், மாணவர்களின் கல்வி சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்னை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்:

1972-ம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டத்தை மிகக்கடுமையான முறையில் கருணாநிதி அரசு ஒடுக்கியது. பின்னர் 1990-ம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் விவசாயிகளே கேட்காத சலுகையான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உள்பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின்திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டுகளுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதுதான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால், ஒருநாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 லட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப்போவதாகவும்  இந்த ஆண்டில் 2 லட்சம் மின் மோட்டார்கள் வழங்கப்படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்புக் கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களைக் கொடுப்பது ஏமாற்றுவேலையாகும். மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிஷனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, இதைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று பம்புசெட், உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.

இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்:

 தமிழ்நாட்டில் அரசு 1 கோடியே 40 லட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகளை இலவசமாக வழங்கியுள்ளது.  இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்பட்டதில் பெறப்பட்ட கமிஷன் எவ்வளவு? தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தால் மட்டும் பெறுபவர்களுக்குப் பயனில்லை. அவர்கள் அதற்குக் கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பியவற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்புக் கொடுக்கலாம். ஆனால், அரசு நிறுவனத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டார்கள். ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம்  100 முதல்  150 வரை கட்டணம் கட்டியாகவேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டுக்குச்   சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, ராயல் கேபிள் நிறுவனங்களுக்குப் போகிறது. மக்கள் வரிப்பணத்தில்  750 கோடிக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டுக்கு  3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைகிறது முதலமைச்சரின் குடும்பம். இதைவிடப் பன்மடங்கு அதிகமான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது என்பது வேறு.


இலவச மருத்துவக் காப்பீடு:

தமிழக அரசின் இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு  501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள்தோறும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த சிறந்த மருத்துவமனைகளாகும். ஆனால், தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த ஆண்டு  415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்குக் கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்துக்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளிலிருந்து அது கிடைக்காது.


தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு  100- ஊதியம் விகிதம் 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதியம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், விவசாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழைகளுக்கு  60 முதல் 80 வரை கொடுக்கப்படுகிறது. மீதம்  40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக, மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவது மட்டுமல்ல, விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.


மேற்கண்டவைகளைத் தவிர வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் விவசாயிகளுக்குப் பயனளிக்காத திட்டமாகும். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவப்படும் என அரசு அறிவித்திருப்பதற்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லை. ஏனெனில், இத்திட்டம் குறுவட்டம் அளவில் மட்டுமே செயற்படுத்தப்படுகிறது. கிராம அளவில் செயல்படுத்தப்பட்டால்தான் விவசாயிக்கு நஷ்ட ஈடு கிடைக்கும். திருமணமாகாத இளம் பெண்களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப்பட்ட சுமங்கலித் திட்டத்தின்படி தொழிற்சாலைகளில் 3 ஆண்டுகள் இளம் பெண்கள் தொடர்ந்து வேலை செய்தால் முடிவில் அவர்களுக்குக் கணிசமான தொகை கிடைக்கும். அதன்மூலம் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படுவதில்லை. இதைப்போல கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற பல திட்டங்கள் குறைபாடுகளுடனும், உரிய நபர்களுக்கு உதவும் வகையில் இல்லாமலும் அமைந்து ஊழலுக்கும் சீர்கேட்டுக்கும் வழிவகுக்கின்றன.

மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக? இலவசத் திட்டங்களின் விளைவாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

தொலைநோக்குத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதன் அடிப்படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின்  நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடும். ஒருவருக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவருக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.


Tuesday, December 07, 2010

ரத்த சரித்திரம் II

நான் இந்த திரைப்படத்தை தமிழில் பார்க்க வில்லை.. முதல் பாகத்தில் ரவி தான் குடும்பத்தை அழித்தவர்களை பழி வங்கி அரசியலில் கால் பதித்து தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் போட்டு தள்ளி, தனி மனிதனாகவே அனந்த பூரில் வாழ்வதாக படம் முடியும்..

முதல் பாகத்தில் இருந்த நேர்த்தியான திரைக்கதையும், வசனம் மற்றும் அனைத்து நடிகர்களின் அற்புதமான நடிப்பால் எனக்கு இந்த இரண்டாம் பாகம் மேல் ஒரு வித எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்ய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாகத்தில் எந்த அளவுக்கு சிறப்பான திரை கதை இருந்ததோ, அந்த அளவிற்கு இதில் சறுக்கல்..

கதை :
பரிதல் ரவி ஒரு மீட்டிங் முடித்து திரும்புகையில் அவன் ஒரு வெடிகுண்டு விபத்தில் உயிர் தப்புகிறான். இவனை கொள்வதற்கு முயற்சி செய்கிறான் சூரி ( சூர்யா ).. ஏன் என்றால்  தான் குடும்பத்தை வெடி  குண்டு வைத்து  அழித்த ரவியை பழி வாங்குவதே இந்த ரத்த சரித்திரம் II..

ராம்கோபால் வ‌ர்மாவின் இய‌க்க‌த்தை ர‌சித்தேன்.. எடிட்டிங் மிக‌ ந‌ன்று. ஸ்லோமோஷ‌ன் காட்சிக‌ளையெல்லாம் நார்ம‌ல் ஸ்பீடில் காட்டியிருந்தால் ப‌ட‌த்தின் நீள‌ம் பாதியாய்க் குறைந்திருக்கும்!  கலர்புல்லாக படங்களைப் பார்த்துவிட்டு, இந்த டோனில் படம் பார்க்க எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் கொலைக் களத்துக்கே நம்மையும் கொண்டுசென்றிருக்கிறார்.

எனக்கு பிடித்தது :

கோர்ட்டுக்கு சூர்யாவை கொண்டு வரும் சீன் நன்றாக இருந்தது. கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும், படம் பார்க்கும் நமக்கே சந்தேகம் வரும்படி அமைத்திருந்தார்கள்.

சூர்யா, பிரதாப்பை கொல்லும் காட்சி.
ரத்த சரித்திரத்தில் ஹீரோ, வில்லன் என்று எவருமே கிடையாது. அவரவர்களின் பார்வையில் அவரவர்கள் செய்வது நியாயமே.

இளைய இந்தியா!

லகப் பொருளாதார வளர்ச்சி என்கிற எக்ஸ்பிரஸ் ஹைவேயில் முதலிரண்டு இடத்தைப் பிடித்து மிக வேகமாக முன்னேறுகின்றன சீனாவும் இந்தியாவும். அடுத்து வரும் ஆண்டுகளில் சீனாவின் ஜி.டி.பி. 10%-லிருந்து படிப்படியாகக் குறைந்து, 8%-தை நோக்கி குறையும் என உலக வங்கி சொல்லி இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் ஜி.டி.பி. 8%-லிருந்து 10-%த்தை நோக்கிச் செல்லும் என்றே சொல்லி இருக்கிறது. 

'அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திச் சென்று முதலிடத்தைப் பிடித்துவிடும்' என்று அடித்துச் சொல்கிறவர்கள் ஒருபக்கமிருக்க, 'இந்தியாவாவது சீனாவை முந்துவதாவது! அப்படி நடக்க வாய்ப்பே இல்லை!' என்று மறுத்துப் பேசுகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரும் முன் வைக்கும் வாதங்களை உன்னிப்பாகக் கவனித்தால், எந்தெந்தத் துறைகளில் சீனா பலமாக இருக்கிறது, எந்தெந்தத் துறைகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது தெளிவாகும். நம் பலவீனங்களை பலமாக மாற்றிக் கொண்டால்தானே நம்மால் போட்டியில் ஜெயிக்க முடியும்!

இளைய இந்தியா!

சீனாவோடு ஒப்பிடும் போது நமக்கு இருக்கும் சாதகமான விஷயம், அதிக அளவில் இளைஞர்கள் இந்தியாவில் குவிந்திருப்பதுதான். 1995-ல் 15 வயதுக்கும் குறைவானவர்கள் அல்லது 64 வயதுக்கும் அதிகமானவர்கள் எண்ணிக்கை மட்டும் 69%-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றோ அது 56%-மாக குறைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை ஒரு சாபமாகப் பார்த்த சீன அரசாங்கம், ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்தது. இதனால், அங்கு மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் குறைந்தது. இந்தியாவும் மக்கள் தொகை பெருக்கத்தை ஒரு சாபமாகவே பார்த்தது. 1976-ல் இந்திரா காந்தி மிசா சட்டத்தை அமல்படுத்திய போது, கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவே, அதை கைவிட்டு விட்டு, வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதும் என்று பிரசாரத்தை மாற்றினார். இந்த பிரசாரத்தினால் இந்திய மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. அதே நேரத்தில் குழந்தைகளே இல்லை என்கிற அளவுக்கு மோசமான நிலைமையும் ஏற்பட்டுவிடவில்லை. விளைவு, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2020-ல் வேலை செய்யும் வயதில் இருப்பவர்கள் (20-40 வயது) இந்தியாவில் 13.60 கோடி பேர் இருப்பார்கள். ஆனால் சீனாவில் அதே வயதில் இருப்ப வர்கள் வெறும் 2.30 கோடி பேர் மட்டுமே இருப்பார்கள் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தவிர, பலருக்கும் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரியும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பிளஸ்.

4.5 கோடி தொழிலதிபர்கள்!

நமக்கு பாசிட்டிவ்வாக இருக்கும் இன்னொரு பெரிய விஷயம், நமது ஜனநாயகம். இந்தியப் பொருளாதாரம் தனிமனித சுதந்திரத்தின் மீது கட்டப்பட்டு இருப்பதால், தனிநபர்களே நமது பொருளாதாரத்தை நடத்திச் செல்கின்றனர். டாடா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் ஆரம்பித்து, சாதாரண பெட்டிக் கடை வரை பிஸினஸ் செய்கிற வர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4.5 கோடி. ஊர் கூடி தேர் இழுக்கும் போது அது எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், தேரின் வடம் மக்கள் கையில் இருப்பதால், அது நிச்சயம் பின்னோக்கிப் போய்விடாது. 

ஆனால், சீனாவில் நடப்பது கம்யூனிஸ அரசாங்கம். பேருக்குத்தான் அது கம்யூனிஸ அரசாங்கமே தவிர, அங்கு நடப்பது அடக்குமுறை ஆட்சிதான். அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதுதான் அங்கே நடக்கும். தொழிற்துறை தொடர்பான எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருப்பதால் நினைத்ததை நினைத்த நேரத்தில் அதனால் செய்துவிட முடியும். அதற்கு நடுவே எந்தத் தடை வந்தாலும் தகர்த்து எறிந்துவிடுகிறார்கள். இதனால் சீனாவில் மக்கள் உரிமை, சுற்றுச்சூழல் அக்கறை போன்ற பிரச்னைகளை யாருமே பேச முடியாத சூழல் நிலவுகிறது. 

ஓலமிடும் உள்கட்டமைப்பு!

சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியாவுக்கு இப்படி சில பாசிட்டிவான அம் சங்கள் இருந்தாலும் நமக்கு நெகட்டிவ்வாக இருக்கும் விஷயங்கள் அதிகம். உதாரணமாக, உள்கட்டமைப்புத் துறை. புதிய சாலைகளை அமைத்தல், மின் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டுதல் போன்ற அனைத்துமே உள்கட்டமைப்புத் துறையில் அடக்கம். சீன அரசாங்கம் அதன் உள்கட்டமைப்புத் துறைக்கு அதன் மொத்த ஜி.டி.பி.யில் 11% செலவழிக்கும் போது நாமோ நம்முடைய மொத்த ஜி.டி.பி.யில் 6% மட்டுமே செலவு செய்கிறோம். இதனால் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமலே இருக்கிறது. மின் நிலையங்கள் உருவாகாததால் நமக்குத் தேவையான மின்சாரமும் கிடைப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி என்பது பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்தியா 10% ஜி.டி.பி. வளர்ச்சி அடைய வேண்டு மெனில் ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும். ஆனால் இன்றையத் தேதியில் நமது மின் உற்பத்தி வெறும் 1.62 லட்சம் மெகா வாட் மட்டுமே உள்ளது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் மின் விளக்குகளைப் பார்த்தாலும் பாதிக்கும் மேற்பட்ட இந்திய வீடுகள் இன்னும் மின் இணைப்புப் பெறாமலேயே இருக்கிறது. நமது சராசரி மின் பயன்பாடு 720 கிலோ வாட்டாக இருக்க, நம்மைவிட 20% மின்சாரத்தை அதிகமாகவே பயன்படுத்துகிறது சீனா.

இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. ஆனால் சீனாவில் 14 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை வசதி இருக்கிறது. இந்தியச் சாலைகளில் ஒரு லாரி சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகப் போக முடியாது. கொல்கத்தாவிலிருந்து புறப்படும் ஒரு லாரி நான்கு மாநிலங்களைத் தாண்டி மும்பைக்கு வர 12 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆகவேண்டும். இதனாலேயே ஒரு பொருளின் விலை 20%-த்துக்கு மேல் அதிகரித்துவிடுகிறது. இந்த லட்சணத்தில் இந்திய உள்கட்டமைப்புத் துறை வளர்ந்தால் சீனாவை எப்படி முந்த முடியும்? இனிவரும் நாட்களில் இந்தத் துறையில் நாம் முழுமூச்சாக இறங்குவது கட்டாயம்.

பரிதவிக்கும் பள்ளி, கல்லூரிகள்!

உலக அளவில் மிக இளைய வயதினர் நம் நாட்டில் இருந்தாலும் அவர்களைச் சரியான முறையில் வளர்த்தெடுக்க பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பாடத் திட்டங்கள் இல்லை. இன்றையத் தேதியில் நம் பள்ளிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, எக்கச்சக்கமான பணத்தை பெற்றோர்களிடமிருந்து வசூல் செய்து, உயர் தரமான கல்வி வழங்கும் பள்ளிகள்; இரண்டாவது, மனப்பாடம் மட்டுமே செய்ய கற்றுத் தரும் பள்ளிகள். இந்த இரு வகை பள்ளிகளில் இரண்டாவது வகை பள்ளிகளே அதிகம். பள்ளிகள் இப்படி என்றால், கல்லூரிகள் அதைவிட மோசம். இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான இடம்தான் கலைக் கல்லூரிகள் என்கிற அளவுக்கு அதன் தரம் மோசமாகிவிட்டது. இன்றைக்கு பட்டப் படிப்பு படித்துவிட்டு வரும் இளைஞனிடம் பெரிதாக எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க முடியாது என்கிற அளவுக்கு பல கல்லூரிகளின் தரம் இருக்கிறது. 

கல்லூரிகளாவது பரவாயில்லை, பல்கலைக் கழகங்கள் இன்னும் மோசம். அஞ்சல் வழி மூலம் பெறும் பல்கலைக்கழகப் பட்டங்கள் இன்டர்வியூவில் காட்ட வேண்டுமானாலும் பயன்படுமே ஒழிய, அதனால் ஒரு இளைஞனின் உற்பத்தித்திறன் நிச்சயம் உயராது என்கிற அவல நிலையே இருக்கிறது. தவிர, என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலம் வெறும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை மட்டுமே உருவாக்கினால் போதாது; உடல் உழைப்பைக் காட்டும் இளைஞர்கள் இருந்தால் மட்டுமே எல்லா வகையிலும் வேலை செய்பவர்கள் கிடைப்பார்கள். 

ஆனால் சீனா கல்வித் துறை, நாட்டுக்குத் தேவையான வேலையாட்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறது. அதற்கேற்ற வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. படித்து முடித்தவுடன் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ற தகுதி ஒவ்வொரு இளைஞனிடம் இருப்பதால், குறைவான அளவில் ஆட்கள் இருந்தாலும் அதிக உற்பத்தி செய்யும் தெம்பு சீனாவிடம் இருக்கிறது.

தாண்டவமாடும் லஞ்ச லாவண்யம்! 

லஞ்ச லாவண்யம் என்கிற புற்றுநோய் நம் ஆட்சியாளர்களின் அனைத்துப் பிரிவினரிடமும் ஊடுருவி வருவது மிகப் பெரிய சாபம் என்றே சொல்ல வேண்டும். கட்சி வித்தியாசங்களைத் தாண்டி லஞ்சம் என்பது ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. இதில் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் எதில் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் என்கிற நிலை வந்துவிட்டது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. உலக அளவில் கவனம் பெறும் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான மைதானங்களை அமைப்பதில் ஆரம்பித்து வீடு கட்டுவது வரை பல விஷயங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் அம்பலமானதால் இந்தியாவின் பெயர் உலக அளவில் பெரிதாக டேமேஜ் ஆனது. ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்யும் பட்சத்தில் அந்த விஷயம் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. 

ஆனால் சீனாவில் ஊழல், லஞ்ச லாவண்யம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தனிமனிதர்கள் இஷ்டப்படி அரசு வேலைக்கான கான்ட்ராக்ட்களை கொடுக்க முடியாது என்பதால் ஊழலுக்கோ, லஞ்ச லாவண்யத்துக்கோ வாய்ப்பில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த எந்த ஒரு நிறுவனமும் சீனாவில் தொழில் தொடங்க நினைக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கான அனைத்து அனுமதிகளும் அடுத்த சில நாட்களுக்குள் ஒரே இடத்தில் கிடைத்துவிடுகிறது. 

ஆனால் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கத் தேவையான பல்வேறு அனுமதிகளை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து வாங்குவதற்கே பல மாதம் ஓடிவிடுகிறது. தவிர, ஒவ்வொரு துறையிலும் கொழுத்த சன்மானம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்கிற சூழ்நிலை. 'அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அதே நேரத்தில் அமைச்சர்கள் தொழிலில் பங்கு கேட்கிற வழக்கமும் வந்துவிட்டது' என்று அங்கலாய்க்கிறார்கள் வெளிநாட்டுத் தொழிலதிபர்கள்.

ஆக மொத்தத்தில் சீனாவை முந்த வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் நம்மிடம் இருந்தால் போதாது. நமது பலவீனங்களை மாற்றி பலமாக ஆக்கிக் கொள்ளும் அக்கறையும் நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் ரேஸில் நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

Monday, December 06, 2010

சிக்கு புக்கு

இந்த வருடத்தில் ஆர்யா நடித்து வரும் மூன்றாவது படம். இந்த வருடத்தில் இரண்டு  ஹிட் அடித்த ஒரே நடிகர் .ஒளிப்பதிவாளர் கே.மணிகண்டன் ( மறைந்த ஜீவாவின் சிஷ்யர் ) இயக்கத்தில் வரும் படம் சிக்கு புக்கு...

ஷ்ரேயா,ஆர்யா இருவரும் லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு  வருகிறார்கள். (ஆர்யாவின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப்போவதை தடுக்க இந்தியா கிளம்புகிறார். ஸ்ரேயா.. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்புகிறார்). இருவரும் பெங்களூர் வந்து சேர்கிறார்கள். ஸ்ட்ரைக் காரணமாய் ப்ளைட்டுகள் இல்லாமல் போக.. யிலில் அடுத்தவர் பெயரில் பயணம் செய்யும் போது டிடிஆரிடம் மாட்டிக்கொண்டு பாதிவழியில் இறக்கி விடப்பட..அடுத்து அடுத்து அவர்கள் ரூட் மாறி சென்று காதல் வேற பண்ணி நம்மளை வெறுப்பு ஏற்றுகிறார்கள்.. அப் பயணத்தின் இடையே பயணம் செல்லும் வழியில் ஆர்யா தனது தந்தையின் டைரியை படித்துக்கொண்டே வருகிறார்.

அதில் ஆரியாவின் அப்பா ஆர்யா (இரண்டு வேடம் ) அந்த ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் பெண்ணை காதலிக்க,அவளுடன் ஊரை விட்டு போக முடிவு செய்து காத்திருக்கும் போது அவள் வராமல் போக..ஆர்யா போலீஸ் ட்ரைனிங்கில் போய் சேர்ந்து விடுகிறார். அங்கே அறிமுகமாகும் நண்பன் அவனின் அத்தை பெண் மேல் காதலாகியிருக்க, தான் காதலிக்கும் பெண்ணும், அவன் அத்தை பெண்ணும் ஒருத்தியே  என்று தெரிந்து அவனுக்காக காதலியை விட்டுக்கொடுத்து லண்டனில் போய் செட்டில் ஆகிறார் ஆர்யா . இது படத்தின் நடுவில் வரும் கிளை கதை. இந்த இரண்டு கதையும் படத்தின் கூடவே வருவது தான் சிறப்பு. மத்தப்படி சொல்லி கொள்வது போல் ஒன்றும் இல்லை இந்த படத்தில்..

ஆர்யா
 ஆர்யாவின் கெட்டப்பும் நடிப்பும் நன்றாக  இருக்கிறது .

ஸ்ரேயா
ஆர்யாவுடன் பழகும் காட்சிகளில்,காதல் காட்சிகளில்  எல்லாம் செயற்கையான நடிப்பு .

ப்ரீத்திகா 
படத்துல பாக்குற மாதரி இருக்கிற ஒரே ஆள் இந்த பொண்ணு தான். பிளாஷ் பாசக் ல வரும் காட்சியில் அலட்டி கொள்ளாத  நடிப்பு .

பிடித்த வசனங்கள்  :

காதலிக்கறவங்க யோசிக்கறது கிடையாது,யோசிக்கறவங்க காதலிக்கறது கிடையாது.

டீச்சர்,ஷாஜகான் மும்தாஜ் இறந்ததும் தாஜ்மகால் கட்டுனாரு,பக்கத்து வீட்டு முத்து அவரோட மனைவி இறந்ததும் அவளோட தங்கையை கட்டுனாரு.2 பேருல யார் புத்திசாலி?

அப்பா  சேர்த்து வாய்த்த  பணத்தை  கரைக்கறவன்தான் உண்மையான பையன் . 

எல்லாருக்கும் ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு விஷயங்கள் மிகவும் பிடிக்கும் . எனக்கு எப்பவும்  அவளை மட்டும் தான் பிடிக்கும்.

ஒரு ஆம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா பிரச்சனை அவனுக்கு மட்டும்தான்,ஒரு பொம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா அவ குடும்பத்துக்கே பிரச்சனை.

இந்த உலகத்துலயே கஷ்டமான விஷயம் பிடிச்சவங்களை  பிரிவது தான்  சந்தோஷமான விஷயம் பிரிஞ்சவங்க சேர்றதுதான்.