ஓரு நோயாளி தமிழகத்திலுள்ள எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் தன் கைரேகையைப் பதித்தால், அவரின் சிகிச்சை வரலாறு தெரிந்துவிடும் விதத்தில், பயோமெட்ரிக் முறையில் வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், மென்பொருள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
வேலூர் மாவட்டத் துணை சுகாதார இயக்குநர் சுரேஷின் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது. இதுநாள் வரை ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மெல்லிய புற நோயாளிகள் சீட்டு வழங்கப்படும். அதில் ஒருமுறை மட்டுமே எழுத முடியும். அடுத்து அதே நோய்க்காக மருத்துவமனைக்கு வரும்போது, கிராமங்களில் பெரும்பாலும் பழைய சீட்டை எடுத்து வருவதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் மீண்டும் குறிப்புகளை எழுதும் நிலையில் இருக்காது. வெளியூருக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும்போது, ஏற்கெனவே மேற்கொண்ட சிகிச்சையின் வரலாறு மருத்துவருக்கும் தெரியாது. நோயாளியாலும் நினைவுபடுத்தி கூற இயலாது. இதைக் கருத்தில்கொண்டு நோயாளிகளின் சிகிச்சை வரலாறை எளிமைப்படுத்தும் விதமாக வேலூர் சுகாதார மாவட்டத் துணை இயக்குநர் சுரேஷ் மென்பொருள் ஒன்றை உருவாக்க நினைத்தார்.
மென்பொருளும் உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் சிகிச்சைக்கு வருபவரின் தன் விவரம் மற்றும் புகைப்படம், கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதியப்படும். அவர் மீண்டும் வரும்போது கைவிரல் ரேகையை வைத்தாலே, அவரின் நோய் மற்றும் வழங்கப்பட்ட மருந்து விவரம் உள்ளிட்ட சிகிச்சை வரலாறு முழுவதும் கணினியில் தெரிந்துவிடும். அம்மருத்துவமனையில் எத்தனை மருத்துவர் மாறினாலும் கவலையில்லை. சிகிச்சை வரலாறைப் பார்த்து, அடுத்து அளிக்க வேண்டிய சிகிச்சையை அளித்து விடலாம்.பயோமெட்ரிக் முறையில் நோயாளிகளின் தகவல்களைப் பதியும் முறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் நிலையில், நோயாளி எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், விரல் ரேகையைப் பதித்து சிகிச்சை பெறலாம்.
இதன் செயல்பாட்டை புதுதில்லியில் இருந்து தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககத்திலிருந்து அலுவலர்களும் பார்வையிட்டு, பாராட்டிச் சென்றுள்ளனர். வேலூர் அணைக்கட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு, ஐஎஸ்ஓ தரச்சான்று பெறும் முயற்சியிலும் துணை இயக்குநர் சுரேஷ் ஈடுபட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பல மருத்துவத் துறையினர், ஏழை எளிய மக்களுக்கு இது வரப்பிரசாதம் என்று பாராட்டுகின்றனர்.ஏழைக்கு பலனளிக்கும் அம்முயற்சி, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஒருசில மருத்துவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனைகள் பெரும்பாலும் கிராமங்களில் இருக்கிறது. இங்கு மருத்துவர்கள் நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை. பணி நேரம் முடிவதற்குள் விரைவாகவே சென்று, தன்னுடைய கிளினிக்கில் அமர்ந்து கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து கணிசமான தொகை ஈட்டி வருகின்றனர்.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது குறித்து மக்களுக்கும் வருத்தம் இல்லை. ஏனென்றால் கண்டிப்பாக அவர் கிளினிக்கில் இருப்பார், அங்கு சென்று பணம் கொடுத்து சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கைதான். மக்களின் நோக்கமே வியாதி குணமாக வேண்டும் என்பதுதான். அதனால் மக்களும் இதுகுறித்து பெரிதுபடுத்துவதில்லை. பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், விரைவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடும் வந்துவிடும் என்ற பயம் மருத்துவர்கள் மனதில் தொற்றியுள்ளது. அதனால் பயோமெட்ரிக் முறையை ஏற்கவும், இன்னபிற வருவாயை இழக்கவும் மருத்துவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் பயோமெட்ரிக் பதிவை மருத்துவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
ஏதாவது ஒருவகையில் மக்களின் வரிப்பணத்தில் (வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவை அரசு மானிய விலையில்தானே வழங்கி வருகிறது) மருத்துவப் பட்டம் பெற்று, அம்மக்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு வலிக்கத்தான் செய்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனிதாபிமானத்தோடு, மனித உயிர்களைக் காக்கும் கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் மருத்துவர்கள் மனதில் சுயநலம் மட்டுமே விஞ்சி நிற்கிறது. இந்த நிலை மாற மருத்துவர்களின் மனம் மாற வேண்டும்.
No comments:
Post a Comment