Search This Blog

Friday, December 10, 2010

இந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்

தொலைநோக்குத் திட்டங்களுடன் செயல்படுவது மட்டுமல்லாமல், எல்லா தரப்பினரின் நலத்தையும் பேணுவதாக இருப்பதுதான் நல்லரசு, நல்லாட்சி. நம்மிடம் இல்லாததை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற மனப்போக்கு ஆபத்தில் முடியும். ஒரு சில துறைகளில் மட்டும் மிதமிஞ்சிய வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதும், பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொள்வதும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் குறுகிய கண்ணோட்டத்துடனான நிர்வாகமாகத்தான் இருக்கும்.

இந்தியாவை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள் நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம் என்றெல்லாம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்களே தவிர, அடிப்படையாக நம்மை எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அலைபேசி வைத்திருந்தால் இந்தியா ஒளிர்ந்துவிடும் என்று நம்மை நம்ப வைத்து, இப்போது ஒரு சில அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் பல லட்சம் கோடிகளை அள்ளிக் குவித்து விட்டது கூடப் பரவாயில்லை. நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி சரித்திரம் காணாத அளவுக்கு உயர்ந்து, ஏறத்தாழ ஒரு கோடி டன்னாகி இருக்கிறது. சுமார் | 40,000 கோடிக்கு நாம் சமையல் எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களுக்கும், தங்கத்துக்கும் அடுத்தபடியாக இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பை விழுங்குவது சமையல் எண்ணெயின் இறக்குமதிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நமது தேவையில் பாதிக்கு மேல் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிகமாக சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்து விட்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்.ஆண்டுதோறும் நமது சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருகுவது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் பாமாயில்தான். பாமாயில் என்பது மலேசியா, இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளில்தான் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த இரண்டு நாடுகளிலும் ஏதாவது காரணத்தால் உற்பத்தி தடைபட்டு விட்டால் இந்தியாவின் கதிதான் என்ன?

அதைவிட கவலைதரும் பிரச்னை என்னவென்றால் நமது தேவைக்கும், உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான். அதாவது, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறைந்து கொண்டே போக, ஆண்டுதோறும் இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே இருப்பதை உணவு அமைச்சகம் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை.இன்றைய இந்த நிலைமைக்கு மிக முக்கியமான காரணம், மத்திய உணவு அமைச்சகத்தின் தவறான கொள்கைகள்தான் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

உணவு தானியங்கள் என்று வந்தால் இடைத்தரகர்களை அரசு ஆதரிக்கிறது. சர்க்கரை என்று வந்தால் கரும்பு உற்பத்தியாளர்களையும், பொதுமக்களையும் விட்டுவிட்டு சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைப் பேணுகிறது. எண்ணெய் வித்துகள் என்று வந்தால், உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பயனாளிகள் கொதிப்படைந்து விடக்கூடாது என்று இறக்குமதியை அனுமதித்து முடிந்தவரை விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.

இன்றைய நிலைமை என்ன தெரியுமா? அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கும், விலையுயர்ந்த பருப்பு வகைகளுக்கும்கூட குறைந்தபட்ச விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் அரசு, எண்ணெய் வித்துகளுக்குத் தரும் குறைந்தபட்ச விலை விவசாயியின் உற்பத்திச் செலவுக்குக் கூட போதாது.இறக்குமதியால் ஒரு சிலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்தியா பாதிக்கப்படுகிறதே...!    


1 comment:

  1. அடுத்த தலைமுறை அல்லல் படுதலை தவிர்க்க இயலாது என எண்ணுகிறேன்!

    ReplyDelete