Search This Blog

Wednesday, December 12, 2012

எனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, பௌத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.

கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அங்கு புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக்களை மாற்றி, புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினர். சோழ அரசர்கள் கி.பி. 10-ம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி, இந்த சாசனங்கள் பழைய வட்டெழுத்தில் எழுதப்​பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத்​தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, தனது 'பண்டைய இந்தியா’ என்ற நூலில், கி.பி 150-ல் தான் முதன்​முதலாக சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத்தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.


பிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும் அதன் வழக்கு​களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக்குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப்​பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ்​கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்கு உரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்று​வதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர். இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப்பாடு உருவானது. அதுபோலவே, புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேச்சுவழக்கில் இல்லை. பீகாரில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பாலி மொழி கற்பிக்கும் பட்டப் படிப்புகள் இருந்தபோதும் அது வழக்கொழிந்த மொழியாகவே கருதப்படுகிறது. அசோகர் ஆட்சி புரிந்த மகத நாட்டின் தொன்மை மொழியாக இருந்தது பாலி. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்பேத்கர், பாலி மொழிக்கான இலக்கண அகராதி ஒன்றை உருவாக்கி உள்ளார். பாலி மொழிக்கு மாகதி என வேறு பெயரும் உண்டு. பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாமே பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்களை இயற்றத் தொடங்கினர். ஆனாலும் தென்னிந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்று வரை பாலி மொழியையே போற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலி மொழியை நன்கு அறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்பதை பௌத்த நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாவாய் (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), தாம்பூலம் (வெற்றிலை) முதலிய சொற்களும் பாலி மொழியில் இருந்து பௌத்தர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் பரவியிருக்க வேண்டும் என, மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். எந்த மொழி, கல்வி மொழியாக இருக்கிறதோ எது ஆட்சிமொழியாக இருக்கிறதோ, எந்த மொழி இளம் தலைமுறையினரின் தொடர்பு மொழியாக இருக்கிறதோ, எந்த மொழியில் மக்களின் உலகப் பார்வையும் பயன்பாடும் வெளிப்படுகிறதோ அந்த மொழிக்கு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மொழியியலாளர்கள். இயற்கையின் பன்முகத் தன்மையே மொழியையும், மக்கள் வாழ்வு முறைகளையும் முடிவு செய்கிறது என்கிறார் மொழி யியல் அறிஞர் டேவிட் ஹார்மோன். இவரது ஆய்வில் மரங்களின் அடர்த்திக்கும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார். குறைந்தது ஒரு வருடத்துக்கு 10 மொழிகளாவது இறந்து விடுகின்றன என்கிறார்கள். காலனி ஆதிக்கத்தால் ஐரோப்பாவில் மட்டுமே 12-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இருக்கின்றன. பன்மொழி சார்ந்த கலாசாரம் உலகம் தழுவிய வணிகத்துக்குத் தடைக்கல்லாக இருந்ததால், உலகம் முழுவதற்குமான பொது மொழி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக ஒலிக்கிறது.

இதற்காக, செயற்கையாக ஒரு மொழியை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டு, வாலேபூக் எனும் செயற்கை மொழி முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மொழி உலகம் தழுவிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து, எஸ்பிரேண்டோ என்றமொழி வடிவமைக்கப்​பட்டு, சில காலம் புழக்கத்தில் இருந்தது. அதுவும் தோல்வி அடைந்தது. ஆனால் காலனி ஆதிக்கத்தின் வழியே இன்று ஆங்கிலம், அந்த இடத்தை அடைந்து இருக்கிறது. பன்னாட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் மொழிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. மொழி அழிவது என்பது உலகமயமாவதன் பிரச்னை. இந்தியாவின் பல்வேறு மொழிகள் இந்த உலகமயமாதலின் சிக்கலில் மாட்டிக்கொண்டு தனது உரிமைகளை, அடையாளத்தை இழந்து வருகின்றன. ஒரு மொழி பேசும் இனம் அதற்கான மொழி உரிமையைப் போராடி நிலைநிறுத்துவதன் மூலம், தன் இழந்துவிட்ட சமூக அரசியல் உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பதற்கு சாந்தலி மொழி பேசும் பழங்குடியினர் ஓர் உதாரணம். நீண்ட நெடிய வரலாறு உடைய இந்தியா, இன்று அவிழ்க்க முடியாத சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், சிதைவுகள் நம் நாட்டின் அடையாளத்தை முற்றிலும் மாற்றி இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா உடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஐரோப்பிய அரசியல் கட்டுரையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவை இணைத்துவைத்துள்ள அம்சம், இங்குள்ள ஜனநாயகம் மற்றும் இந்தியர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.

'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ என்ற தனது நூலில் ராமச்சந்திர குஹா, இந்தியத்தன்மை எது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குறிப்பாக, இன்றுள்ள இந்தியா எப்படி உருவானது? அப்படி உருவாவதற்கு அது எதிர்கொண்ட சவால்கள்? கடந்துவந்த பிரச்னைகளைப் பற்றி குஹா காட்டும் சித்திரம் இன்றைய இந்தியாவின் உண்மையான முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், புதிய ஜனநாயகப் பொறுப்புகளை எப்படி அறிமுகப்படுத்தியது, 2,000 ஆண்டுகளாக மன்னர்களும் அவர்களின் விசுவாசிகளும் ஆண்டுவந்த இந்தியா, எப்படி தன்னை மக்கள் ஆட்சியிடம் ஒப்படைத்துக்கொண்டது என்பதைப் படிக்கும்போது இந்தியாவின் மாற்றத்துக்கான எத்தனிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த காலத்தைப் பற்றி, வரலாற்று ஆசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவில் இருந்து விளக்கப்படும்போது உண்மையான வரலாறு உருவாகிறது என்பார் இ.ஹெச்.கார்.

இந்தியாவின் வரலாற்றை வாசிக்கும் எவரும் அதன் கடந்த காலத்தில் வீழ்ந்துகிடக்கவும் முடியாது. அதே நேரம் கடந்த காலத்தை முற்றிலும் புறந்தள்ளவும் முடியாது. இந்தியாவின் எதிர்காலம், அதன் கடந்த காலம் எனும் வேரோடு தொடர்பு உடையதே. வரலாறு என்பது நாம் படித்துக் கடந்து செல்வது மட்டுமல்ல, அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது. வரலாற்றை நேசிப்பவர்கள் கடந்த காலத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியே நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முற்பட வேண்டும். அதுவே, வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக்கொண்டதற்கான அத்தாட்சி!

Tuesday, December 11, 2012

அருள் மழை

 
பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். \அவர் தஞ்சாவூர் பங்காரு
காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம்.
பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை
ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை
பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு
போனார்.
 
ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப
வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த
மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள். "இல்லே, இல்லே,
அம்பாளும்,  பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற
பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு,
அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். 

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ
சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக 
தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம்
பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார். உடனே வீடுகளுக்குள்
இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்,
குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி
இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல்
இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த
வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!
 
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள்
வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று
முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி
லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன்
தலையில் சூடிக் கொண்டார்! சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து
நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத
ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். சற்று நின்று
திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப்
போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும்
என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ
பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா' வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய்
பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவான்
ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்! 

Monday, December 10, 2012

'விஸ்வரூபம்’ - டி.வி-யில் ரிலீஸ்!

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை. திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள்.

 


எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. 

Sunday, December 09, 2012

சி.டி.எஸ். காசோலை!

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி? என பலருக்கும் பலவித கேள்விகள் இருப்பதால் அந்த கேள்விகளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனிவாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
  
 

''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும்.  இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.

இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க  காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.

 

 
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு ( என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும்  விண்ணப்பித்து பெறலாம்.

ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்திருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய காசோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோலையாகவே இருக்கும்.  

சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.

அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது''




உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள்... இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!
'ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர்' (Prevention is better than cure)என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு.The superior doctor prevents sickness; The mediocre doctor attends to impending sickness; The inferior doctor treats actual sickness.அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.

இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்... The Doctor of the future will give no medicine - but will concentrate in diet and preventive aspects.'எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் - நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார்’ என்கிறார்.
ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வரும் முன் காப்பது என்றால்... எப்படி?!


அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது அல்ல. இவற்றையெல்லாம்விட முக்கியமான தடுப்புமுறை ஒன்று உண்டு. அது... உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் உள்ள தவறுகளைச் சரிபடுத்திக்கொள்வது.

அப்படி என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் நாம்..?! சொல்கிறேன்..!

பண்டைய மனிதனின் வாழ்க்கை முறையும், இன்றைய மனிதனின் வாழ்க்கை முறையும் எல்லா விஷயங்களிலும் தலைகீழாக மாறியுள்ளன. இதைத்தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று சொல்கிறோம். தடம்புரண்ட பல வாழ்க்கை முறைகளை மீண்டும் மாற்றியமைத்தால், பெரும்பாலான உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.


ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளைப்போல் வேட்டையாடி வாழ்ந்துவந்தான். கடின உடல் உழைப்பையும், கலப்படமில்லாத காய், கனிகள், இறைச்சி என்ற உணவு முறையையும் அவன் பின்பற்றினான். அப்போதெல்லாம், விபத்துக்களால், கொடிய விலங்குகள் மற்றும் விஷப்பூச்சிகளால், தொற்று நோய்க்கிருமிகளால் மட்டுமே அவனுக்கு மரணம் நேர்ந்தது. அடிக்கடி மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட போர்களும் ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலி வாங்கின. ஆனால், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற வியாதிகளில் மடிந்த மனிதன் எவனும் கிடையாது.

வேட்டையாடுதலை நிறுத்தி, காடுகளைச் சீராக்கி, வயல்வெளிகளை உருவாக்கி, பயிர்த்தொழில் ஆரம்பித்த காலம் முதல் அவனுக்கு உடல் உழைப்பு குறைந்தது; ரத்தக்கொதிப்பு நோய் ஆரம்பித்தது. காலப்போக்கில், காய், கனிகள் என்கிற இயற்கை உணவு முறைக்கு மாறாக, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்தான் (விஞ்ஞான ஆராய்ச்சியில் மனிதன் பெரிய சாதனைகளைப் புரிந்தது முதலில் சமையலில்தான்!). சமைக்கும்போது, உடலுக்கு நலம் தரும் பல நல்ல சத்துப் பொருட்கள் அழிந்தன. இது போதாதென்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல பொருட்களை உணவில் சேர்த்தான். உதாரணமாக, பொட்டாசியம் எனும் உப்பு உடலுக்கு மிகவும் நல்லது. இதய பாதுகாப்புக்கும், ரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும் இந்த உப்பு அவசியம். சமையலில் இந்த பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. ஆனால், உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் சோடியம் (சமையல் உப்பு) சேர்க்கப்படுகிறது. அந்த நாள் முதல்தான் மனிதனுக்கு எண்ணற்ற நோய்கள் தோன்ற ஆரம்பித்தன. ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் என அவன் உடல் இருப்பிடமானது அதற்குப் பின்தான் (உப்பைப் பற்றி இன்னும் விரிவாக பிறகு விவாதிப்போம்).
அடுத்து அவன் சமையலில் சேர்க்க ஆரம் பித்தது... அதுதான் எண்ணெய். இறைச்சி, மீன், காய்கறிகளில் இருக்கும் கொழுப்பு போதாதென்று புதிதாக எண்ணெய் போன்ற கொழுப்புகளையும் சேர்த்துக்கொண்டே போனான். புளி, மிளகாய் போன்ற மசாலாக்களையும் கலந்தான். நல்ல நிறம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல மணம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல பளபளப்பு வேண்டும் என்று சிலவற்றையும், கெட்டுப்போகாமல் நீடித்துப் பாதுகாக்க என்று சிலவற்றையும் - இப்படியாக புதிது புதிதாக சேர்த்துக்கொண்டே போனான். நாளடைவில், வணிகர்கள் சிலரின் பேராசையால், கலப்படம் என்ற புதிய கலாசாரம் உருவாகியது. எண்ணற்ற நச்சுப்பொருட்கள் உணவில் கலந்தன.

இத்தனை வேதிப்பொருட்களும் உணவில் ஒன்று சேரும்போது, மனிதனுக்குப் புதுப்புது வியாதிகள் வருவதில் வியப்பு ஏது..?!

நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைப் போல், எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்பதும் மிகமுக்கியம். அதிக உணவு ஆபத்து என்பதை உலகளவில் எல்லோரும் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர்.

''நாம் உண்ணும் உணவில் நான்கில் ஒரு பங்கில்தான் நாம் உயிர் வாழ்கிறோம் - மீதம் மூன்று பங்கில் டாக்டர்கள்தான் உயிர் வாழ்கிறார்கள் (We only live of a quarter of what we eat - the doctors live of the remaining)என்பது எகிப்திய பழமொழி.

'மூன்று வேளை உண்பவன் ரோகி
இரண்டு வேளை உண்பவன் போகி
ஒரு வேளை உண்பவன் யோகி’ என்பது நம்முடைய பழமொழி.


மனித உடம்பை, வெறும் காற்றடைத்த பை என்று இகழ்ந்து, தவமே சிறந்தது என்று தியான வாழ்க்கை வாழ்ந்த முனிவர்களுள் திருமூலர் முற்றிலும் மாறுபட்டவர். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பவர், அதற்கான முக்கிய வழியையும் கூறுகிறார்...

'அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள



கண்டம் கறுத்த கபாலியும் ஆமே’ என, 'குறைவான உணவே ஆரோக்கியத்தின் சூட்சமம்' என்று தெளிவுபடுத்துகிறார்  திருமூலர்.

அறம் - பொருள் - இன்பம் என மனிதனின் எந்தப் பிரச்னையையும் விட்டுவைக்காத திருவள்ளுவர், 'மருந்து’ என்கிற அதிகாரத்தின் 10 குறள்களில், 6 குறள்கள் சீரற்ற உணவு முறையே நோய்க்குக் காரணம் என்பதை ஆணித்தரமாகச் சொல்வதற்காக பயன்படுத்துகிறார் (மனிதனைக் கொல்லும் 10 முக்கிய வியாதிகளில் 6 வியாதிகள், உணவு சம்பந்தப்பட்டவை என்கிற இன்றைய ஆராய்ச்சியையும், இதையும் நான் வியந்து பொருந்திப் பார்த்துள்ளேன்!). குறிப்பாக,

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  
                               அருந்தியது
அற்றது போற்றி உணின்’ என்ற குறளில், ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின், அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை என்று மிகப்பெரும் ஃபார்முலாவை மிக எளிதாக எடுத்து வைக்கிறார் வள்ளுவர்.

ஒரு வேளை உணவாவது குறைத்தால், உடலுக்கு மிகவும் நல்லது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 'ஒரு வேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது’ என்பது ஸ்பெயின் பழமொழி.

‘Eat your morning breakfast as a prince... Eat your dinner like a pauper’என்பது ஆங்கிலப் பழமொழி. 'காலை உணவை இளவரசன் மாதிரி சாப்பிடு, இரவு உணவை பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடு' என்பது அதன் அர்த்தம். நம் ஊரில் பிராமணர்களின் உணவுமுறை கிட்டத்தட்ட இதுமாதிரிதான். காலை உணவும், மதிய உணவும் கலந்த (breakfast + lunch = brunch) உணவை 9 மணிக்கு எடுத்துக் கொண்டு, ஆபீஸ் வேலைகளை முடித்து விட்டு, மாலையில் எளிய இரவு உணவு என்ற அவர்களின் உணவுமுறை அர்த்தமுடையதுதான்.

பொதுவாக, நம்மில் பெரும்பாலானவர்கள்... பசி எடுத்துச் சாப்பிடுவதில்லை. கடிகாரத்தைப் பார்த்து, 'ஆஹா, மணி 9 ஆகிவிட்டது...’ என்று வயிற்றுக்குப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் அப்படியில்லை. பசித்தபோது மட்டுமே உணவு தேடுகின்றன, வேட்டையாடுகின்றன. டி.வி. சேனல்களில் (Discovery channel, Animal planet) பார்த்திருப்பீர்களே... சிங்கம் ஒன்று படுத்திருக்கும். அதற்கு வெகு அருகில் மான், குதிரை போன்ற மற்ற விலங்குகள் சர்வ சாதாரணமாக புல் மேய்ந்து கொண்டிருக்கும். சிங்கத்துக்கு எப்போது பசிக்கிறதோ, அப்போது மட்டும் பாய்ந்து சென்று ஒரு மானை அடித்துக் கொன்றுவிட்டு, கூட்டமாகச் சேர்ந்து சாப்பிடும். ஆனால், மனிதர்கள் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் மூன்று வேளை முழுச்சாப்பாடும், மற்ற வேளைகளில் நொறுக்குச் சாப்பாடும் சாப்பிடுகிறோம்.

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிச்சப்பன் தலைமையில் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பாதாள அறை ஒன்றில் சகல வசதிகளுடன் ஒருவர், ஒரு வாரம் தங்குவார். அவருக்கு நாள், நேரம் குறித்த காலண்டர், கடிகாரம் போன்ற வசதிகள் கிடையாது. மற்றபடி, புத்தகங்கள், சங்கீதம் போன்ற வசதிகள் உண்டு. பசி எடுக்கும்போது போனை எடுத்து, என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். சற்று நேரத்தில் கேட்ட உணவு பக்கத்து அறையில் வைக்கப்படும். நினைத்தபோது தூங்கலாம், விழிக்கலாம். இப்படி ஒரு வாரம் ஆராய்ந்ததில், பலருக்கு மூன்று வேளை சாப்பாடு தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தொன்மைப் பழமொழிகள் தொடங்கி, இன்றைய ஆராய்ச்சிகள் வரை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு இங்கே பேசுவதற்குக் காரணம், நாமும் இனி கைக்கடிகாரத்தைப் பார்க்காமல், வயிற்றுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரத்தை (biological clock) பார்த்து மட்டுமே சாப்பிட்டால், ஆரோக்கியம் வளர்பிறை என்பதை வலியுறுத்திச் சொல்வதற்காகத்தான்!

அதேபோல, விரதமும் முக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறையே! மனித உடலுக்கு நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை மருத்துவர்களோ மற்றவர்களோ சொல்வதைவிட, மதங்கள் மூலமாக - பக்தி மார்க்கத்தில் சொன்னால் நன்றாக எடுபடும் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதன் விளைவுதான் நாம் உலகெங்கும் பார்க்கும் விரத முறைகள்.

ஈஸ்டர் என்றால் 40 நாட்கள் கடும்விரதம் எடுப்பது கிறிஸ்தவர்கள் வழக்கம். ரம்ஜான் என்றால் 30 நாட்கள் கடும்விரதம் அனுஷ்டிப்பது முகமதியர்களின் வழக்கம். இந்து மதம் இதையெல்லாம் தாண்டி பல்வேறு விரதங்களைப் புகுத்தியது. சபரி மலை செல்வோர், 48 நாட்கள் கடும்விரதம் இருப்பதையும் நாம் அறிவோம். இப்படியாக எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் அனுஷ்டிப்பது ஆச்சர்யமாக இல்லையா?!

இந்த மாதிரி விரத காலங்களில், சர்க்கரை நோயாளிகள் பலருடைய சர்க்கரை அளவு வெகுவாகக் குறைவதையும், ரத்தக் கொதிப்பு நோயாளிகள் பலருடைய ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் மருத்துவர் என்கிற வகையில் நான் கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னிடம் வரும் நோயாளிகள் பலரிடம், 'பேசாம வருஷத்துக்கு மூணு தடவை நீ சபரிமலை போகலாமே!’ என்பேன் அடிக்கடி.

திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள விரத முறைகள்... மனித உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதன் மூலம் உள்ளத்தையும் உயிரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வகுத்த வழிமுறைகளே என்று புரிகிறதுதானே!

திருமூலர் சொல்லும் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதன் பொருளும் இதுதானே!

உண்டி சுருங்குவதும், பல்வேறு விரத முறைகளும் உடலுக்கு நல்லது என்று குறிப்பிட்டேன். இவை வெறும் மதரீதியான சம்பிரதாயங்களா அல்லது இவற்றுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் உண்டா என்பதைச் சற்று ஆராய்வோம்.

மருத்துவ முறைகளில் சிறந்தது உண்ணா நோன்பே என்று முன்னோர்கள் நினைத்தனர். 'லங்கணமே பரம ஒளஷதம்’ என்பது முதுமொழி. விரதத்தை முழு உண்ணா நோன்பு (Dry Fasting), நீர் உண்ணா நோன்பு (Water Fasting), சாறு உண்ணா நோன்பு (Juice Fasting) என்று மூன்று முறைகளில் நம்மை மேற்கொள்ள வைத்தனர் முன்னோர்.

தண்ணீர்கூட அருந்தாமல், காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் விரதம், முழு உண்ணா நோன்பு. இதனை ஒருநாள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதற்குமேல் மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

தேவைப்படும்போது தண்ணீர் மட்டும் அருந்துவது, நீர் உண்ணா நோன்பு. இதை 7 நாட்கள் கடைப்பிடிக்க முடியும். என்றாலும், 3 நாட்கள் மேற்கொண்டாலே போதுமானது.

தேவைப்படும்போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, திராட்சை, அன்னாசி, மாம்பழம், பப்பாளிச் சாறு போன்றவற்றை அருந்தி விரதம் இருப்பது, சாறு உண்ணா நோன்பு. 7 நாட்கள் இப்படி இருக்கலாம். அதற்கு மேலும் அவரவர்களின் சக்திக்கு ஏற்றவாறு இருப்பதுண்டு.

மகாத்மா காந்தி முதல் அன்னா ஹஜாரே வரை பல்வேறு தலைவர்கள் பல்வேறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை நாம் அறிவோம். சமூக, அரசியல்ரீதியான விழிப்பு உணர்வை ஏற்படுத்த அவை மேற்கொள்ளப்பட்டன. நாள் கணக்கான இந்த விரதங்களைத் தவிர, சில மணிக்கணக்கான விரதங்களையும் நாம் பார்த்ததுண்டு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் என்று பலர் இருப்பது, பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், விரதம் இருப்பவர்களின் உடல்நலத்துக்கு சிறிது நன்மை ஏற்படுத்தும். நம் உடல் நலத்துக்கு எந்த விரதம் உகந்தது, எப்படி உகந்தது என்று பார்ப்போம்.

வாரத்தில் ஒருநாள் விரதம் இருப்பது எல்லோருக்கும் மிகவும் சிறந்தது. அப்படி விரதம் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. அப்போது கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைக்கோஜன் (Glycogen) என்ற சர்க்கரையை உடல் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பும் எரிபொருள் சக்தியாக மாற்றப்பட்டு உடல் உறுப்புகளை இயங்க வைக்கும். இவற்றால், உடலின் அடிப்படை இயக்கக் கூறுபாடுகள் (Basal metabolic rate) குறைவாகிறது. இதன் நேரடி விளைவு... ரத்தத்தில் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவு குறைவதோடு, ரத்த அழுத்தமும் சீராகிறது.

இதனால் ஏற்படும் இன்னொரு சுவாரசியமான விளைவு - பல ஹார்மோன்கள் திறம்பட உற்பத்தியாகின்றன. அவற்றில் ஒரு ஹார்மோன், வயது முதிர்வைத் தடுக்க வல்லது. அந்த 'ஆன்டி ஏஜிங் ஹார்மோன்’, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில் வரும் பல்வேறு நோய்களையும் முறியடித்து ஆயுட்காலத்தை கணிசமாக நீட்டிக்க உதவும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விரதம் இருக்கும் நேரத்தில் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களும், கழிவுப் பொருட்களும் நீக்கப்படுகின்றன. விஷத்தை முறியடிக்கும் முறை (Detoxification process) என்று இதை அழைப்போம். இந்த நச்சு, கழிவுப்பொருட்கள் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், சுரப்பிகள் மற்றும் சருமம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

மொத்தத்தில் விரதத்தின் பலனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. அஜீரணக் கோளாறுகள் சரியாகின்றன. மனமும் அமைதியாகி, இயற்கையான, இதமான தூக்கம் வரும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு திடீரென வெகுவாகக் குறைவது நல்லதல்ல என்பதால், அவர்கள் உண்ணா நோன்பு மேற்கொள்வது ஆபத்தாகலாம். மற்றபடி எல்லா தரப்பினருக்குமே இது நல்ல வாழ்க்கை முறை.

நம்மில் பலரும் தற்போது ஒரு விசித்திரமான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, அரிசிச் சோற்றை மட்டும் தவிர்த்து... இட்லி, தோசை, காபி போன்ற பலகாரங்களை உண்பது விரதமாகக் கருதப்படுகிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே தவிர, இதனால் வேறு ஒன்றும் பிரயோஜனமில்லை.

வாரம் ஒருமுறை விரதம் இருக்கலாம் என்று கூறினேன். இதைவிட நல்ல முறை ஒன்று உண்டு. அதுதான் தினமும் பட்டினி இருப்பது! அது எப்படி முடியும்? இதைக் கடைப்பிடிப்பதற்கு சுலபமான வழி, இரவுச் சாப்பாட்டை சீக்கிரமே முடிக்க வேண்டும். அதாவது மாலை 6 - 7 மணிக்கு. அதன் பிறகு 12 மணி நேரம் விரதம். காலைச் சிற்றுண்டியை 7 - 8 மணிக்குச் சாப்பிடலாம். காலை உணவுக்கு மேலை நாட்டவர்கள் என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் கவனியுங்கள்.அதாவது விரதத்தை முடித்தல்! எவ்வளவு பொருத்தமான வார்த்தை!

'ஐந்துக்கு எழுந்திரு - ஒன்பதுக்கு உணவருந்து. ஐந்துக்கு சாப்பிடு - ஒன்பதுக்கு உறங்கு’ என்ற பிரபல ஃபின்லாந்து பழமொழியும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகிறது என்பதை நினைவுகொள்வோம்.

நச்சுப் பொருட்களை வெளியேற்றும் உபாயமாக விரதங்களைச் சுட்டிக் காட்டினேன். ஆனால், இதையெல்லாம் மீறி, நூற்றுக்கணக்கான நச்சுப்பொருட்களை உணவு என்ற ரூபத்தில் நாம் அன்றாடம் உண்டு வருகிறோம். அவற்றைத் தெரிந்துகொண்டால் தவிர, அவற்றிலிருந்து விடுபடுவது குறித்து நாம் நினைக்க மாட்டோம். நாம் உட்கொள்ளும் பல முக்கிய உணவுகள், தற்போது எவ்வாறெல்லாம் சிதைந் திருக்கின்றன?



Saturday, December 08, 2012

எனது இந்தியா (மொழியும், நிலமும் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

வரலாறு திரிக்கப்படும், சிதைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆள்பவர்களும் ஆள விரும்புகிறவர்களும் வரலாற்றைத் தங்களின் சுயலாபங்களுக்காகத் திருத்தி எழுதுவதும், தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக்கொள்வதும் தொடர்ச்சியாக நடக்கும் மோசடி. மற்ற அறிவுத் துறைகளைவிட வரலாறுதான் அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது. அதிக சர்ச்சைக்கும் சண்டைக்கும் காரணமாக இருக்கிறது. காலத்தின் மனசாட்சியாக வரலாறு இருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களில் பலருக்கு உறுத்தலாக இருக்கிறது. வரலாற்றை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதால், அதை திரித்துக் கூறுவதில் அக்கறை காட்டுகிறார்கள்.

வரலாற்றைப் பாதுகாக்க முக்கியத் தேவை மொழியைப் பாதுகாப்பதே. மொழி என்பது வெறும் பரிவர்த்தனைக்கான வாகனம் மட்டும் அல்ல. அதுதான் வரலாற்றின் ஆதாரம். கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சுவடிகளிலும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகளே, கடந்த காலத்தை இன்று நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே நாம் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.


இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. அவற்றில், 216 மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 1,576 மொழிகள் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இவற்றில், 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதம் உள்ள மொழி​கள் வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் பெரும்​பாலான மொழிகளுக்குஎழுத்து வடிவமே கிடையாது. இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முக்கிய மொழி​களைவிட பிறமொழி பேசு​பவர்​கள்தான் பெரும்பான்​மையாக வசிக்கின்றனர்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்​பான்மையாகப் பேசப்படும் மொழி நேபாளி. 63 சதவிகித சிக்கிம் மக்கள் நேபாளிதான் பேசுகின்றனர். திரிபுராவில் அந்த மாநில மொழியான திரிபுரியைவிட, பெங்காலிதான் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாகத் திகழ்கிறது. இங்கு, 68.9 சதவிகிதம் பேர் பெங்காலி பேசுகின்றனர். திரிபுரி பேசுபவர்கள் 23.5 சதவிகிதம் மட்டுமே. பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில், பஞ்சாபியைவிட இந்தி மொழிதான் பெரும்பான்மையினர் பேசும் மொழியாக உள்ளது.

61.1 சதவிகிதம் பேர் இந்தி பேசுகின்றனர். பஞ்சாபி பேசுவோர் 34.7 சதவிகிதம்தான். இந்தப் பிரச்னை இந்தியாவெங்கும் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. சமகாலப் பிரச்னைக்கானத் தீர்வை அறியவேண்டுமானால், அதன் வேரை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் கோலோச்சிய பல மொழிகள் இன்று அடையாளம் இல்லாமல் அழிந்துபோய் விட்டன. ஒரு மொழி அழியும்போது அந்த மொழியில் பதிவாகியிருந்த மக்கள் வரலாறும் சேர்ந்தே அழிகிறது. 2010-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவில் பேசப்பட்டுவந்த பழைமைவாய்ந்த 'போ’ என்ற மொழி மரணம் அடைந்தது. அந்த மொழியைப் பேசிவந்த 'போவா’ என்ற 80 வயதுப் பெண் இறந்ததும், அந்த மொழியும் அழிந்துவிட்டது.

அதுபோலவே, கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியா என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், மரணம் அடைந்தார். அவரோடு கேரளாவின் கொச்சிப் பகுதியில் பேசப்பட்டுவந்த 'க்ரியோல்’ என்ற மொழியும் இறந்துவிட்டது. இது, போர்த்துக்கீசிய மலையாளக் கலப்பு மொழி. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொச்சிப் பகுதி கத்தோலிக்கர்களால் பேசப்பட்ட மொழி. அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் விவரத்தை யுனெஸ்கோ நிறுவனம் 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், 2,473 மொழிகள் அழியும் அபாயத்தில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மொழிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் அழிந்துவிடும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை எனச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் கழகம், 'உலக நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில் தாய்மொழி அழியும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறது. மொழிகளைப் பாதுகாக்க அது, பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். கூடுதலாக, பேச்சுவழக்கில் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டும் எழுத்து வடிவில் புத்தகங்களாக வெளிவருவதும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவிலும் ஏற்படும். அதாவது, ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் பழங்குடியினரால் பேசப்பட்டன. இன்று, அவற்றில் இரண்டு மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 90 ஆயிரம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டு உள்ளார். அவற்றில், மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வுசெய்த எ.சுப்பராயலு, தமிழ்க் கல்வெட்டுக்களை காலநிரல்படி பகுப்பாய்வுசெய்து கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 400. கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 900. கி.பி. 851- கி.பி. 1300-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். கி.பி.1300 - கி.பி.1600-க்கு இடையில் உள்ளவை 6,000. கி.பி. 1600 - கி.பி.1900-க்கு இடைப்பட்டவை 2,000. வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 300 என ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இருக்கும் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் போன்றவற்றை இன்று நம்மால் எளிதாக வாசிக்க முடியாது. காரணம், அவை இன்று வழக்கில் இல்லை. இந்த எழுத்து வடிவங்களைப் பற்றி அறிந்துகொள்வது வரலாறு படிக்கிறவர்களுக்கு மிக அவசியம்.

பிராமி என்பது இந்தியாவில் இருந்த ஒரு பழங்கால எழுத்து முறை. அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதப்பட்டுள்ளன. பௌத்த அறிஞரான ரீஸ் டேவிட், பிராமி எழுத்து முறையானது மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். பிராமி, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்து முறை. பிராமி முறையில் மெய் எழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர் எழுத்துக்களுக்கு தனியான வடிவமும், உயிர்மெய் எழுத்துக்களை எழுத, மெய் எழுத்துக்களுக்கு சில உயிர்க்குறிகள் மாற்றப்படுகின்றன. கூட்டெழுத்துக்களை எழுதும்போது, ஓர் எழுத்துக்குக் கீழே இன்னோர் எழுத்து எழுவது இதன் இயல்பு. இந்த வகையில்தான், கல்வெட்டுக்களில் பிராமி எழுத்து வடிவங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

இன்னோர் எழுத்து முறை கரோஷ்டி. இது, வடமேற்கு இந்தியாவிலும் ஆப்கனிலும் பயன்​படுத்தப்​பட்டு வந்திருக்கிறது. பிராமி எழுத்து முறை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் உள்ள பிராமியை 'தமிழ் பிராமி’ என்கிறார்கள். இதை, தமிழி என்றும் சில அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆனால், வரலாற்று அறிஞர் ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி என்றே கூறுகிறார். ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்து கி.மு. 500-க்கு முற்பட்டது என்கிறார் டாக்டர் சத்தியமூர்த்தி.

திருநெல்வேலி மாவட்டத்தில் மருகால்தலை என்ற ஊருக்கு அருகில் உள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழவளவு, முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, வரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, ஆறுநாட்டார்மலை பாண்டவமலை ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் கண்டு​பிடிக்கப்​பட்டன.

ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமிக் கல்​வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார். தமிழ் பிராமி எழுத்து​முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்து ஒற்றுமையும் அதிகமாக இருப்பதால், செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4,000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் காலக் கல்வெட்டுக்களில் பிராமி எழுத்துக்கள் இருந்ததால் பிராமி எழுத்து வடிவம் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்குப் பரவி இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள கொடுமணல் ஆய்வு மூலம் தெற்கில் இருந்தே வடக்குக்குப் பிராமி எழுத்துக்கள் சென்று இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பௌத்தர்களுக்கும் தமிழுக்குமான உறவை ஆராய்ந்த சீனி.வேங்கடசாமி, பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலேயே பௌத்தர்களும் ஜைனர்களும் தங்களது மதநூல்களை எழுதினர். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் மொழியாகக்கொண்டு எழுதி வைத்ததால், தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டியது ஆயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளதுபோல நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் இருப்பதால், அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழ் மொழியிலே எளிதாக எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகவே, புதிதாக ஒருவகை எழுத்துக்கள் உருவாக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி உருவானதே கிரந்த எழுத்து.

Friday, December 07, 2012

ஓ பக்கங்கள்- கை மேல காசு! ஞாநி


மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியது தான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கிக் குளிர் காயலாம்.

அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்றும், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது. 

இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது ஆதார் அடையாள அட்டைதான். 

ஏன் இந்தத் திட்டம்? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதைத் தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். 

யார் தகுதியானவர், யார் தகுதியில்லாதவர் என்பதை இனி ஆதார் அட்டைதான் தீர்மானிக்கும். ஆதார் அட்டை தரும்போது ஒருவரிடம் பெற்ற விவரங்களின் அடிப்படையில் அவர் மான்யத்துக்கு உரியவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ஏன் தனியே ஆதார் அட்டை? இதைத் தரும்போது ஒருவரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கிடுவது போல, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் தகுதியையே விசாரித்து தகுதியற்றவரை நீக்கியிருக்கலாமே? கூடாது என்கிறது அரசு. ஆதார் அட்டை என்பது ஒரு பிரஜையின் அடையாளத்தைக் கொண்டு, ஏழைமைக்கான சாட்சியம், வெவ்வேறு திட்டங்களின் கீழ் பெறும் கூலியின் பதிவுகள், மான்யங்களின் அளவுகள், அரசிடமோ, வங்கியிடமோ கேட்கும் கடன், பெற்ற கடன், கட்டிய கடன் விவரங்கள் என்று எல்லாவற்றையும் கணினி வழியே பதிந்து வைக்க வசதியான ஒற்றைப் பதிவு முறை என்கிறது அரசு.  கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை என்பதற்கு இன்னமும் சட்டப்படியான சம்மதமே வரவில்லை. ஒவ்வொரு பிரஜையும் இந்த அட்டை வைத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. விரும்பினால் இந்த அட்டையைப் பெறலாம் என்றே இப்போதைய நிலை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை வெறும் 22 கோடி பேர் மட்டுமே ஆதார் அட்டைக்காகப் பதிவு செய்துள்ளனர் (தமிழ்நாட்டில் 69 லட்சம் பேர்தான்.) ஆதார் அட்டையை பிரஜா உரிமை அட்டை போல அரசு ஆக்கப்பார்ப்பதில், ஒரு தனி நபரின் அந்தரங்க உரிமைகளில் அரசு கண்காணிப்புக்கு இடம் இருப்பதாக ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியது. எனவே ஆதார் அட்டையை அனைவருக்குமானதாக ஆக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது.ஆனால் இப்போது அவசர அவசரமாக மன்மோகன் அரசு ஆதார் அட்டை அடிப்படையில் இனி மான்யம் எல்லாம் ரொக்கமாக மட்டுமே தரப்படும் என்று அறிவிப்பதன் ரகசியம் என்ன? பல வருடங்களாகவே உலக வங்கியும் அமெரிக்க அரசின் தனியார் சார்பு பிரசாரகர்களும் இந்தியாவில் உணவு உட்பட எதற்கும் அரசு மான்யம் கொடுக்கப்படக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் மார்க்கெட்டே தீர்மானிக்க விடவேண்டும் என்பதே அவர்கள் நிலை. ஆனால் இதைச் செயல்படுத்த விரும்பியும் முடியாமல் மன்மோகன் இதுவரை திணறி வந்தார். இப்போது தம் பதவிக்காலம் முடியும் வேளையில் உலக முதலாளிகள் சார்பான எல்லா முடிவுகளையும் செயல்படுத்திவிட்டே போவது என்ற பிடிவாதத்துக்கு வந்துவிட்டார்.

மான்யங்களை ஒழிப்பதுதான் அவரது இறுதி நோக்கம். முதல் கட்டத்தில் மான்யமாகப் பொருட்களைத் தருவதை நிறுத்தி காசாகக் கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் காசைக் கொண்டு தனியாரிடம்தான் மக்கள் எதையும் வாங்கும் நிலை உருவாகும். அடுத்த கட்டமாக, காசாகத் தரும் மான்ய அளவைப் படிப்படியாகக் குறைத்து நீக்கிவிடலாம் என்பதே தொலைநோக்குத் திட்டம்.  இதன் உடனடி விளைவு என்ன என்று பார்க்கலாம். அரசு நடத்தி வரும் ரேஷன் கடைகளை எல்லாம் மூடவேண்டி வரும். லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், இதர தனியார் கடைகள் போல இயங்கமுடியாமல் மூடப்படும். ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அரசு விற்கப்போவதில்லை என்றால், அடுத்த கட்டமாக அவை எதையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. குறைந்தபட்ச கொள்முதல் விலையின் மூலம் அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் தருவது அடியோடு கைவிடப்படும். எல்லா விவசாயிகளும் தங்கள் பொருட்களை, தனியாருக்கு மட்டுமே விற்கும் நிலை ஏற்படும். தனியார் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு பதுக்கலாம். செயற்கையான பொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி விலையை உயரச் செயலாம். ஆனால் அரசு தன்வசம் இருக்கும் ஸ்டாக்கை பயன்படுத்தி விலையைச் சரி செய்ய வைக்க முடியாது. ஏனென்றால் அதனிடம் ஸ்டாக்கோ ரேஷன் கடையோ இருக்காது. அரசு காசாகக் கொடுத்த மான்யத்தைக் கொண்டு தனியார் கடையில் மட்டும்தான் மக்கள் பொருள் வாங்கும் நிலை என்றால் விலைகளை மார்க்கெட்தான் தீர்மானிக்கும். அரசு பொருளுக்குப் பதில் கொடுக்கும் மான்யக் காசை ஆதார் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் வறுமையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும் இருப்போர் இதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். கிராமப் புற மக்கள் தொகையில் வெறும் 54 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆதார் அட்டை இருப்போருக்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு வங்கிக் கிளை திறக்க வேண்டும். அல்லது ஏ.டி.எம். திறக்க வேண்டும். அது வங்கிக்கே கட்டுப்படியாகாது. இதற்குப் பதிலாக நடமாடும் ஏஜென்ட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நியமித்து அவர் கைமெஷின் மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துச் சொல்லும் வசதியை உருவாக்க ஒரு யோசனை இருக்கிறது. இதுவும் நடைமுறையில் சிக்கல்தான். பொருள் வாங்க மான்யப் பணத்தை எடுக்க வங்கிக்குத்தான் போயாகவேண்டும்.வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கும்? ரேஷன் அட்டையில் அப்பா பெயர் இருக்கலாம். ஆதார் அட்டை வைத்திருக்கும் மகனோ, மகளோ கூலியோ மான்யமோ பெறுவதானால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கும் தேவை. ஆதார் அட்டையும் தேவை என்று ஆகிவிடும். ரேஷன் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் தீர்ப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.

இந்த ஓட்டையான திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியே தீரப் போவதாக மன்மோகன் அரசு பிடிவாதமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பதற்கு முன்னோடியாக ஓர் இடத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் கோட் காசிம் கிராமத்தில் இது எப்படி செயல்பட்டது என்பதை அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இங்குள்ள ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் மான்ய விலைக்கு பதில் மார்க்கெட் விலையில் விற்கப்பட்டது. மான்ய விலை லிட்டருக்கு 15 ரூ. மார்க்கெட் விலை 50 ரூபாய். மக்களிடம் 35 ரூபாய் உங்கள் கணக்கில் அரசு போடும் என்று சொல்லப்பட்டது. மக்கள் கடையில் போய் 50 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை. வாங்கினார்கள். ஆனால் மூன்று நான்கு மாதங்களாகியும் வங்கிக்கணக்கில் மான்யம் வந்து சேரவில்லை. எப்போது வங்கிக் கணக்கில் வரும்? மாநில அரசுக்கு வந்து விட்டது. சிக்கிரமே அனுப்புவோம் என்கிறார் கலெக்டர். அதுவரை முன்பணம் போட்டு கிரசின் வாங்க, வறுமைக் கோட்டில் இருப்பவர்களால் எப்படி முடியும்? திட்டத்தின் கீழ் பதிவு செய்த 350 பேரில் இப்போது 30 பேர்தான் கடைக்கு வந்து வாங்குகிறார்கள். கிரசின் உபயோகிக்கவே முடியாமல் போய் சுள்ளி, விறகு என்று தேடப் போய்விட்டார்கள். இதுதான் சோதனை முயற்சியின் நிலை.பணத்தை முன்கூட்டியே கொடுக்கும் ஏற்பாடு வந்துவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். தமிழ் நாட்டில் இப்போது விலையில்லாத அரிசி 20 கிலோ தரப்படுகிறது. இது திரும்ப கடைக்குப் போய் மார்க்கெட்டில் இட்லி மாவுக்காக விற்கப்படும்போது கிலோ நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியின் மார்க்கெட் மதிப்பு நான்கு ரூபாய்தான். என்னைப் போன்ற வசதியானவர்கள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலான அரிசியை உபயோகிக்கிறோம். இப்போது 20 கிலோ இலவச, மன்னிக்கவும் விலையில்லாத அரிசி பெறுவோர் இனி மார்க்கெட்டில்தான் அரிசி வாங்கிச் சோறு சமைக்க வேண்டுமென்றால், நிச்சயம் நான்கு ரூபாய் அரிசியை வாங்கமாட்டார்கள். குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் அரிசியாவது தேவை. அரசு மான்யமாக எதைக் கொடுக்கும்? இப்போது தரும் நான்கு ரூபாய் மதிப்புள்ள அரிசியானால் எவ்வளவு மான்யம்? 15 ரூபாய் அரிசியென்றால் எவ்வளவு மான்யம்? இந்தக் குழப்பங்கள் தவிர வேறு ஓர் அடிப்படை பிரச்னை ரொக்க மான்யத்தில் இருக்கிறது.

காசாக ஏழை மக்கள் கையில் தரும் பணம், எந்த நோக்கத்துக்காகத் தரப்படுகிறதோ அதே நோக்கத்துக்காகச் செலவழிக்கப்படும் வாய்ப்பு நம் சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. உணவுப் பொருளாகத் தரும் போது நிச்சயம் அது வீட்டுக் குழந்தைகள் வரையில் உணவாகவே போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது. காசாகக் கொடுத்தால், நமது டாஸ்மாக் கல்ச்சரில், நிச்சயம் வீணாகிப் போகும். வீட்டுப் பெண்கள் பெயருக்கே வங்கிக் கணக்கு வைத்து பணத்தைக் கொடுத்தால் கூட, இன்று ஏராளமான ஏழைமக்கள் வீடுகளில், பெண்ணை மிரட்டி, அடித்து உதைத்து, கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி பணத்தைப் பறிக்கும் கணவன்கள், பிள்ளைகள் எனக்குத் தெரிந்தே பலர் உள்ளனர்.  இன்னொரு பக்கம், ஏழைமை அதிகமாக அதிகமாக, மத, சாதிச் சடங்குகளில் சாங்கியங்களில் பணத்தை வீணடிக்கும் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டுப் பணியாளரான விதவைத் தாய் தம் மகன் திருமணத்துக்காக ஐந்து வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நகரங்களையொட்டிய பகுதிகளில் பல விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்குத் தங்கள் நிலத்தை விற்று விட்டு, சில மாதங்களிலேயே ஓட்டாண்டி களான நிகழ்ச்சிகள் கணிசமாக உள்ளன.ஆனால் மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் தனியார் பெரு முதலாளிகளின் வணிக வாய்ப்பைப் பெருக்குவது, அந்நிய வங்கிகளுக்கு புது வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இந்தியாவில் ஈட்டிய பணத்தை தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அந்நிய கம்பெனிகளுக்கு உதவுவது, அவர்களுக்கெல்லாம் மின்சாரம் முதல் நிலம் வரை மான்யங்களை அள்ளித் தருவது என்ற அவரது கொள்கையை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிக்கத் துடிப்பவராக அவர் இருக்கிறார். இதுவரையில் அவரைத் தடுக்க எந்தச் சக்தியாலும் முடியவில்லை. ஆனால் ஆதார் முதல் முட்டுக்கட்டையாக அமையலாம். ஏனென்றால் அதைச் செய்து முடிக்க இன்னும் ஓரிரு வருடம் தேவை. அதற்குள் வரும் தேர்தலில் அவர் ஆட்சியை முடித்து வைக்கும், ஒட்டகத்தின் முதுகை முறித்த கடைசிப் பொட்டலமாக ஆதார் அமையலாம்.

ரிக்கி பாண்டிங்


பொதுவாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரிக்கி பாண்டிங்கைக் கண்டாலே பிடிக்காது. 2003 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அவுட்டே ஆகாமல் 140 ரன்களை நொறுக்கி, இந்தியாவின் உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்த வில்லன் அவர். டெஸ்டுகளில், இந்தியாவுக்கு எதிராக 3 இரட்டைச் சதங்கள் அடித்து துவம்சம் செய்தவர். 2008 சிட்னி டெஸ்டில் இந்திய அணி சர்ச்சைக்குரிய விதத்தில் தோற்றுப் போனதும் இந்திய ஆஸ்திரேலிய வீரர்களிடையே கசப்புணர்வு தோன்றியதற்கும் பாண்டிங்கே காரணம் என்று ரசிகர்கள் இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். இனி அந்தக் கவலையில்லை. வில்லனின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது! டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக மதிக்கப்படுபவர், பாண்டிங். பொதுவாக ஒரு வீரர் ஓய்வுபெறும் சமயத்தில், சம்பிரதாயமான வார்த்தைகளையே வெளிப்படுத்துவார். இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன். கிரிக்கெட்டை அவ்வளவாக என்ஜாய் பண்ணவில்லை என்று மரியாதைக்குக் குறைச்சலில்லாமல் பேசுவார். ஆனால், பாண்டிங் இயல்பாக, எந்த ஒரு போலித்தனமுமில்லாமல் பேசியிருக்கிறார். ‘இந்தத் தொடரில் நான் சிறப்பாக ஆட வில்லை. ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்டான திறமையை நான் வெளிப்படுத்தவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாகவே நான் சரியாக ஆடவில்லை. என் எதிர்பார்ப்புக்குக் குறைந்து ஆடியதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று எது உண்மையோ அதையே பொட்டில் அடித்தாற்போல வெளிப்படுத்தியிருக்கிறார், பாண்டிங்.

ஸ்டீவ் வாக்-குக்குப் பிறகும், வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகும் பாண்டிங், ஆஸ்திரேலிய அணியைப் பத்திரமாக, கௌரவம் கெடாமல் பார்த்துக் கொண்டார். தமக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வழி நடத்த கிளார்க்கைத் தயார்படுத்தினார். ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் கடவுளாகக் கொண்டாடுவது கிடையாது. அணிக்காக தம்முடைய பங் களிப்பை அளிக்காத யாரையும் அணியில் நீடிக்க விடுவதில்லை. இந்த வருடத் தொடக்கத்தில், சிபி சீரிஸ் ஒருநாள் தொடரில் பாண்டிங் மிக மோசமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்காக இரண்டு உலகக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவராச்சே என்று துளியும் இரக்கம் காட்டவில்லை, ஆஸ்திரேலிய தேர்வுக்குழு. தொடரின் பாதியிலேயே பாண்டிங்கை அதிரடியாக நீக்கினார்கள். இதை மிகவும் சகஜமாக எடுத்துக் கொண்டு டெஸ்டுகளில் கவனம் செலுத்தினார், பாண்டிங். எந்தக் கணத்திலும், அவர் தம் ஃபீல்டிங் திறமையை விட்டுக் கொடுத்ததே கிடையாது.  

தம்முடைய சிறந்த வெற்றிகளாக உலகக்கோப்பை வெற்றிகளை மட்டும் பாண்டிங் குறிப்பிடுவதில்லை. 2009ல் இளைஞர்களை மட்டுமே கொண்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருநாள் போட்டிக்காக வந்தது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே அணியின் முக்கியமான நான்கு வீரர்கள், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இந்தியா வந்த பிறகு 5 வீரர்கள் காயத்தினால் தொடரின் பாதியிலேயே ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல நேரிட்டது. ஒரு கட்டத்தில் 13 வீரர்களிலிருந்து அணியைத் தேர்வு செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் பாண்டிங். ஆனாலும், பலமான இந்திய அணியை எதிர்கொண்டு 4-2 என்கிற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று காண்பித்தார், பாண்டிங். இப்படி, எந்த ஒரு சவாலையும் துணிவுடன் எதிர் கொண்டவர், ஓவையும் மிகத் துணிச்சலாகக் கையாண்டுவிட்டார்.

* கேப்டனாக, இரண்டு உலகக் கோப்பைகளை (2003, 2007) வென்றுள்ளார். நான்கு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

* உலகக் கோப்பையில், இவர் தலைமையில் தொடர்ந்து 34 மேட்சுகளை வென்றுள்ளது, ஆஸ்திரேலிய அணி.

* இந்தியாவில் பாண்டிங்கின் ரன் வேட்டை பெரிதாக எடுபடவில்லை. 14 டெஸ்டுகளில், ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். புகழ்பெற்ற 2001 டெஸ்ட் தொடரில், 3 டெஸ்டுகளிலும், மொத்தம் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாண்டிங்கின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர், ஹர்பஜன் சிங்.

Wednesday, December 05, 2012

எனது இந்தியா (பசி தாங்கும் கிழங்கு! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

கப்பல்களில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு முறையான வரி விதிக்கப்பட்டது. அரசு நேரடியாக மேற்கொண்ட வணிகம் மட்டுமல்லாது பல்வேறு வணிகக் குழுக்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவர்களில் நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர் என பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தவர்கள். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்​கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறுகின்றன. வேள்விக்குடி கோயிலின் ஒரு பகுதியை வளஞ்சி​யரும் திசையாயிரத்து ஐந்நூற்றுவரும் கட்டினர் எனக் கல்வெட்டு கூறுகிறது. 'சோழர் கை​யாண்ட பாய்மரக்கப்பல் ஓட்டுமுறை’ என்ற கட்டு​ரையில் ஆய்வாளர் பா.அருணாசலம், பல நுட்பமான தகவல்களைத் தருகிறார். சோழர்கள் பயன்படுத்திய கப்பல் ஓட்டுமுறையையும் அவர்கள் கண்டறிந்த வழிகளையும் மீண்டும் ஆராய்ந்து அறிவதற்காக மும்பை பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.அருணாசலத்தின் மேற்பார்வையில், மும்பை கடலியல் நிறுவன ஆதரவுடன்  ஜ.என்.எஸ்.தரங்கிணி என்ற பாய்மரக் கப்பல், சோழர்களின் வழித்தடத்தில் பிரதிபலிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டது.

அந்தக் கட்டுரை, ராஜேந்திரனின் கடல் வழியை அடையாளம் காட்டுகிறது. ராஜேந்திர சோழனின் கடற்படை 1022-ம் ஆண்டு நாகப்பட்டினம் துறை​முகத்தில் இருந்து புறப்பட்டு, கடற்கரையைச் சார்ந்து தெற்கு நோக்கிச் சென்று, தென் நோக்கி ஓடும் நீரோட்டத்தின் உதவியாலும், வன்னி ஒழினி காற்றால் உந்தப்பட்டும் இலங்கையின் வடகரையை அடைந்து, அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்று முல்லைத் தீவு, திரிகோணமலை, கல்முனை, அக்கரைப்பட்டி, திருக்கோயில் துறையை அடைந்து, அதன் பின்னர் நேர் கிழக்காக கப்பலை ஓட்டி, சுமத்ரா தீவின் மேற்குக் கரையை அடைந்தது. பிறகு, கடற்கரை ஓரமாகவே தெற்கே சென்று, சுண்டா நீர் நிலையைக் கடந்து, சுமத்ராவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறீவிஜயா ஆட்சி செய்த பாலம் பாங் என்ற துறையை அடைந்தது.

கடல் படையெடுப்புக்கு ஏற்றது வங்கக் கடலில் வட கிழக்குக் காற்று ஓயும் காலம். இந்தக் காலநிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பம் ஆகும். அப்போது, வங்கக் கடலில் புயல்கள் முடிந்து, கடல் காற்றோட்டம், கடல் அமைதி நிலையை அடைந்து இருக்கும். சோழர் காலத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில், கௌவெள்ளிப் பலகை என்ற ராப்பலகை, டப்புப் பலகை ஆகியவையும் ஓரளவுக்குப் பயன்பட்டன. இவற்றால் அறிந்த அளவுகள் தற்கால நுண் கருவிகளின் அளவுகளுக்கு ஈடாக இருந்தன. மிகப் பெரிய யுத்தங்களை நடத்திய ஜூலியஸ் சீஸர், அலெக்ஸாண்டர், தைமூர், செங்கிஸ்கான் ஆகியோர்கூட, தங்கள் படையுடன் தரை வழியாகவோ அல்லது நதிகளைத் தாண்டியோதான் படையெடுத்தனர். ஆனால், ராஜேந்திர சோழன் தனது பல்லாயிரம் யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை உருவாக்கி, அதைக்கொண்டு கடல் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறான். கடாரம் மட்டுமின்றி பர்மாவில் இருந்து இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை ராஜேந்திரன் வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன், அவற்றைத் தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசாக திரை செலுத்தி ஆட்சி செய்யவே அனுமதித்து இருக்கிறான். அந்தக் காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்குச் சென்றன. அங்கிருந்து நேராகத் தாய்மலாய்த் தீபகற்பம், சுமத்ரா அல்லது ஜாவா தீவில் உள்ள துறைமுகங்களுக்குச் சென்றன. ஒருவேளை, கப்பல் தென் சீனக் கடலில் பயணம் செய்ய விரும்பினால், தென் கிழக்குப் பருவக் காற்று வீசத் தொடங்குவதற்காக, வாரம் அல்லது மாதக் கணக்கில் துறைமுக நகரங்களில் காத்திருக்கவேண்டி இருந்தது.

அதனால், மீண்டும் பயணம் செய்யச் சாதகமான காற்று வீசும் வரை அவர்கள் தங்குவதற்காக, துறைமுக நகரங்களில் வெளிநாட்டினருக்கானக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்தியாவில் இருந்து அந்தப் பகுதிக்கு வந்து, திரும்பிச் செல்லக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகின. 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனக் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கான முன்னணி இடைநிறுத்தத் துறைமுகமாக ஸ்ரீவிஜயா தலையெடுத்தது. பங்கா மற்றும் மலாக்கா நீரிணை வழியாக நடக்கும் வணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்த ஸ்ரீவிஜய அரசர்கள், சோழர்களுடன் நல்லுறவுடன் இருந்தனர். எனினும், 11-ம் நூற்றாண்டில் சோழ வணிகர்களின் சந்தன மரங்களை ஏற்றி வந்த கப்பல்கள் யாவும் அரசின் பிரதிநிதிகளுக்கு அவர்கள் நிர்ணயம் செய்த விலைக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டுபாட்டை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கசப்பு உணர்வு காரணமாகவே சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய மன்னருக்கும் பகை உருவானது. மேலும், பல ஆண்டுகளாக சீனாவோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள விரும்பிய ஸ்ரீவிஜய மன்னர்களின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறாமல், சோழர்கள் சீன அரசின் நல்லுறவைப் பெற்றது அவர்களுக்கு மனவேறுபாட்டை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம், ஸ்ரீவிஜயத்தின் அரசுரிமைப் போட்டி காரணமாக கடல் வணிகர்களின் கப்பல்கள் அடிக்கடி கொள்ளை அடிக்கப்பட்டன. ஏற்றிவந்த பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி கொள்ளைபோவதைத் தாங்க முடியாமல் அவர்கள் சோழப் பேரரசிடம் முறையிட்டனர். இந்த மூன்று காரணங்களும் ஒன்று சேரவே, சோழர் படை ஸ்ரீவிஜயத்துக்குப் படை எடுத்து ஒடுக்கியது.

கடல் வணிகத்தின் இன்னொரு முக்கிய மையமாக விளங்கிய கம்போடியா, சோழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக கம்போடிய அரசன் முதலாம் சூர்ய வர்மன் தனது சொந்தத் தேரை ராஜேந்திர சோழனுக்குப் பரிசாக அளித்துக் கௌரவித்தான். சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்கள். இவை மிகப் பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களை சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. பௌத்த பிக்குகள் இந்தியாவில் இருந்து ஸ்ரீவிஜயா வழியாக சீனாவுக்கு அடிக்கடிப் பயணம் செய்ததாக ஏடுகள் கூறுகின்றன. ஸ்ரீவிஜயாவில் பௌத்த சமயம் பரவி இருந்ததைக் காட்டுவது மட்டுமின்றி, இந்திய - சீனக் கடல் வழியில் முக்கிய மையமாக ஸ்ரீவிஜயா இருந்ததையும் அடையாளப்படுத்துகிறது. கி.பி. 1005-ல் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்று சூடாமணிவர்மன் என்ற ஸ்ரீவிஜய மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு, சூடாமணிவர்ம விகாரை என அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அந்த விகாரை சூடாமணி வர்மனின் புதல்வரும் அவரை அடுத்து முடி சூட்டியவருமான மாறவிஜயதுங்க வர்மனால் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரச் சோழன் கி.பி. 1006-ல் சூடாமணி விகாரையின் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் கிராமத்தைத் தானமாக வழங்கியதை, ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. கடல் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே ஆரம்ப காலங்களில் சோழர்களின் கடற்படை பயன்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அது, எதிர்ப்புகளை முறியடிக்கப் படையெடுக்க வேண்டிய நிலை உருவானது. சோழர்களின் கடல் எழுச்சி காரணமாக கடல் வணிகம் செழுமை அடைந்தது. இதனால், சோழர்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஓங்கி இருந்திருக்கிறது.

பொதுவாக, தமிழக மன்னர்கள் வணிகம் மேற்​கொள்வதற்காக மட்டுமே கடலில் கலம் செலுத்தினர். கடற்படையைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவர் மீது சண்டையிட்டுக்கொள்ளவில்லை. நாடு பிடிப்பதற்காக முயற்சி செய்யவில்லை.

'தமிழக அரசுகளும் மௌரியப் பேரரசும்’ என்ற தனது கட்டுரையில் ஆய்வாளர் கணியன் பாலன், தமிழர்கள் காலம் காலமாக வணிகம் செய்வதற்காக பிற தேசங்களுக்குச் சென்றுவந்த விவரங்களை விளக்கமாகக் கூறுகிறார். தமிழகத்தில் இருந்து வணிகம் செய்வதற்காக இன்றைய கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களைக் கடந்து சென்று பல மாதங்கள் தங்கி வணிகம் செய்தனர் என்ற செய்தி சங்க கால அகப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாகப் பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் இந்தச் செய்தியை மிக விளக்கமாக தனது பாடல்களில் குறிப்பிட்டு இருக்கிறார். கி.மு. 4-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று தங்கி, வணிகம் செய்தனர் என்பதை சங்க காலப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் உறுதி செய்கின்றன.

தமிழகத்தில் இருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர் எனப்படும் இன்றைய வேலூர் வழியாக அல்லது கொங்கு நாட்டில் உள்ள தகடூர் என்னும் இன்றைய தர்மபுரி வழியாகச் சென்று, கர்நாடகத்தைக் கடந்து சாதவ மன்னர்களின் தலைநகராக இருந்த படித்தானம் எனும் இன்றைய ஒளரங்காபாத் அருகே போய்ச் சேர்ந்தனர். சேர நாட்டில் இருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம் போக முடியும். பின்னர், படித்தானத்தில் இருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையிலான வட நாட்டு நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வட நாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகப் பாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னன், வேங்கட மலையைக் கடந்து சென்றது குறித்துப் பாடி உள்ளார். இந்த வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பிறகு, கலிங்கத்தில் இருந்து வட நாடு செல்லப் பாதைகள் இருந்தன. ஆனால், கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வட நாடுகள் செல்லும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.

வணிகத்தைப் பாதுகாப்பதில் தமிழக அரசுகளுக்கு இடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. தமிழ் அரசுகள் முக்கியமாக, மூவேந்தர்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படியான தமிழ் மன்னர்களின் கூட்டணி பற்றி கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு. 165 ஆகும். சமீபமாக நடக்கும் கடலியல் ஆய்வுகள் சோழர்களின் கடற்படை வலிமை குறித்து புதிய வெளிச்சங்களை அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர்களின் கடல் வணிகப் பாதை மற்றும் பயண வழிகள் குறித்து புதிய கருத்துகளைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.

''கடல் வாழ் ஆமைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக பல்லாயிரம் மைல்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலக் கடற்கரைகளுக்கு வருகின்றன. இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்​களின் புராதனக் கடல் வணிக வழி குறித்த அரிய செய்தி உள்ளதாக பாலு கண்டறிந்து இருக்​கிறார். அதாவது, சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85 கி.மீ. தூரமே நீந்திக் கடக்க முடியும். ஆனால், இந்த ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து வருகின்றன. இதற்குக் காரணம், கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ. நீந்தாமல் மிதந்துகொண்டு பயணிக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும் அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடே இருந்திருக்கிறது. ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்பு உள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமை​களை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோலோச்சி இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்'' என்கிறார் ஒரிசா பாலு.

அவர் சுட்டிக்காட்டும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இது, தமிழகத்தில் விளையும் ஒருவகைக் கிழங்கு.  மீனவர்கள் கடலோடும்போது, பல நாட்கள் பசி தாங்குவதற்கு இவற்றையே உணவாகக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்​புடையதாகக் கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் மியான்மர், இந்தோனேஷியா, ஆஸ்தி​ரேலியாவின் சில பகுதிகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்​கின் பெயர் 'குமரா’ என்பதாகும். பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் 'அம்மா’ வலது பாகம் 'அக்கா’ இடது பாகம் 'வக்கா’. அடிப்பாகம் 'கீழ்’. இவ்வாறு, கடலியல் சார்ந்த புதிய ஆய்வுகளின் வருகை சோழர்களின் மிச்சங்கள் தாய்லாந்திலும் கம்போடியாவிலும் கடாரத்திலும் எவ்வாறு இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்துகின்றன. ஆனாலும், வலிமைமிக்க சோழர்களின் கடற்படை எவ்வாறு அழிந்துபோனது? அந்தக் கடற்படையின்  வரைபடங்கள், கப்பல் கட்டும் தொழில்நுட்பம் போன்றவை ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்பவை இன்னமும் கண்டறியப்படாத தமிழகத்தின் அரிய வரலாற்று உண்மைகள். அவை முறையாக ஆராயப்படும்போது தமிழனின் பராம்பரியக் கடலியல் அறிவும், தொழில்நுட்பமும் முழுமையாக வெளிப்படக்கூடும்.


Tuesday, December 04, 2012

டச் ஸ்க்ரீன் - இயங்குவது எப்படி?


‘தொட்டாற்சிணுங்கி’ என்று ஒரு செடி உண்டு. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அந்தச் செடியை நீங்கள் லேசாகத் தொட்டாலே போதும். உடனடியாக அந்தப் பகுதியில் இருக்கிற எல்லா இலைகளும் சுருங்கி உள்ளே போய் விடும்.

கிட்டத்தட்ட அதேமாதிரி தொட்டாச்சிணுங்கி என்ற இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தொட்டால் இயங்குகிற கருவிகளையெல்லாம் நாம் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். நான் எதைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?

‘டச் ஸ்க்ரீன்’ என்று சொல்லப்படுகிற தொடுதிரைத் தொழில்நுட்பம் இப்போது ரொம்பப் பிரபலமாக இருக்கிறது. செல்போன்களில், டேப்லட் கம்ப்யூட்டர்களில், சூப்பர் மார்க்கெட் கடைகளில் உள்ள பில் போடுகிற கருவிகளில், பேங்க் ஏடிஎம் இயந்திரங்களில், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், டிவி என்று இன்னும் எங்கெங்கேயோ இதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம்.

இந்தக் கருவிகளை எல்லாம் இயக்குவதற்கு நாம் பொத்தான்களையோ, ரிமோட்டையோ தேடிச் சிரமப்பட வேண்டியதில்லை. அங்கே இருக்கிற திரையை நம் விரல்களால் லேசாகத் தொட்டாலே போதும், சட்டென்று அது இயங்க ஆரம்பித்துவிடும்.

ஆனால் அதே திரையை, உங்கள் பேனாவிலோ, பென்சிலிலோ தொட்டுப் பாருங்கள். எதுவுமே தெரியாத மாதிரி தேமே என்று முழிக்கும்.

அதாவது, மனிதர்கள் விரல் பட்டால் மட்டுமே இயங்குகிற மாதிரி அந்தத் தொடுதிரைகளைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தத் தொழில்நுட்பத்தைதான் இப்போது விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

நாம் இரண்டு செல்போன்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று சாதாரண ஸ்க்ரீன் மொபைல், இன்னொன்று டச் ஸ்க்ரீன் மொபைல்.

இந்த இரண்டு செல்போன்களிலும் காட்சிகள் தெரிகின்றன, கலர் போட்டோக்களைப் பார்க்கிறோம், வீடியோ இயங்குகிறது, பாட்டுப் பாடுகிறது, ஏதாவதும் டைப் செய்தால் அது அப்படியே திரையில் தோன்றுகிறது... ஒரே ஒரு வித்தியாசம், சாதாரண செல்போன் திரையை நாம் தொட்டால் எந்த ரியாக்ஷனும் இருக்காது, டச் ஸ்க்ரீன் செல்போன் மட்டும் நாம் தொடுவதைப் புரிந்துகொண்டு, அதுக்கு ஏற்ற மாதிரி இயங்குகிறது.

காரணம், சாதாரண செல்போன் திரையுடைய ஒரே வேலை, காட்சிகளை வண்ணத்தில் திரையிட்டுக் காட்டுவதுதான். அதற்கான எலக்ட்ரானிக் நுட்பங்களை மட்டுமே அந்தத் திரையில் பதித்து வைத்திருக்கிறார்கள்.

டச் ஸ்க்ரீன் என்பது, கிட்டத்தட்ட சாதாரண ஸ்க்ரீன் மாதிரியேதான் இருக்கும், இது செய்கிற எல்லா வேலைகளையும் அதுவும் செய்யும், ஆனால் கூடுதலாக அதில் ஒரு விசேஷ அடுக்கு இருக்கும்.

உதாரணமாக, உங்கள் வீட்டில் டிபனுக்குத் தோசை செய்கிறார்கள், ஒரு தோசையை வெறுமனே பரிமாறி விடுகிறார்கள், இன்னொரு தோசைக்குள்ளே உருளைக்கிழங்கை வைத்து‘மசால் தோசை’யாகத் தருகிறார்கள்.

இந்த இரண்டு தோசைகளையும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் புரியும். காரணம், இரண்டாவது தோசைக்குள்ளே ஓர் அடுக்கு உருளைக்கிழங்கு ஒளிந்திருக்கிறது.

அதுபோல, டச் ஸ்க்ரீனுக்குள்ளே இருக்கிற அந்த விசேஷ ‘மசாலா’, கூடுதல் அடுக்கு, ஏராளமான வயர்கள் நிறைந்த ஒரு சின்னத் தகடு!

உங்கள் வீட்டில் டென்னிஸ் அல்லது பேட்மின்டன் மட்டை இருந்தால், அதைக் கையில் எடுத்துப் பாருங்கள். குறுக்கும் நெடுக்குமாகப் பல நரம்புகள் நெருக்கமாகப் பின்னப்பட்டிருக்கும். இந்த நரம்புகளுக்கு நடுவில் இருக்கிற பகுதி சின்னச் சின்னச் சதுரங்களாகத் தெரியும்.

டச் ஸ்க்ரீனுக்குள்ளேயும் இந்த மாதிரி ஒரு கட்டமைப்புதான் இருக்கிறது. நரம்புக்குப் பதிலாக, அங்கே சின்ன மின்சார வயர்கள் மேலேயும் கீழேயும் ஓடுகின்றன. இப்படிப் பல நூறு வயர்கள் சேர்ந்துதான் ஒரு தொடு திரையை உருவாக்குகிறது.

இந்த வயர்கள் சாதாரணமாக நம் கண் பார்வைக்குத் தெரியாது. காரணம், அதெல்லாம் ரொம்ப மெலிதாக இருக்கும், அதன் தடிமன் ஒரு தலைமுடியையும் விடக் குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இப்படி டச் ஸ்க்ரீனில் இருக்கிற எல்லா வயர்களுக்குள்ளும் கொஞ்சம் மின்சாரம் எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும். இந்த மின்சாரம் ஒழுங்காகப் பாய்கிறதா, அல்லது அதில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறதுக்கு ஓர் எலக்ட்ரானிக் சமாசாரம் உண்டு. கிட்டத்தட்ட, வீட்டு வாட்ச்மேன் மாதிரிதான்!

இப்போது, அந்த டச் ஸ்க்ரீனின் நடுவில் நீங்கள் உங்கள் விரலை வைக்கிறீர்கள். என்ன ஆகும்?

ஒரு பெரிய நதி. அதில் ஏராளமாகத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கரையோரமாக நடந்து போய்த் தண்ணீருக்குள்ளே ஒரு குச்சியை விடுகிறீர்கள்.

இப்போது, அந்த நதி முழுவதும் தண்ணீர் இருந்தாலும்கூட, நீங்கள் குச்சியை வைத்த இடத்தில் மட்டும் நீரோட்டம் கொஞ்சம் மாறுபடும். இல்லையா?

அதுமாதிரி, அந்த டச் ஸ்க்ரீனில் உங்கள் விரல் எங்கே பட்டதோ, அந்த இடத்துக்குக் கீழே இருக்கிற வயர்களில் பாய்கிற மின்சாரத்தில் மட்டும் ஒருசின்ன மாற்றம் உண்டாகும். இதை அந்த ‘எலக்ட்ரானிக் வாட்ச்மேன்’ கண்டுபிடித்து விடுவார். சட்டென்று அங்கே ஓடிப் போய் நீங்கள் என்ன வேலை செய்ய நினைத்தீர்களோ அதைச் செய்து முடித்து விடுவார்.

உதாரணமாக, அந்த விரல் பட்ட இடத்தில் ஒரு வீடியோ இருக்கிறது என்றால், உடனே அந்தப் படம் ஓட ஆரம்பிக்கும், அல்லது, ஆடியோ பாடும், கேம்ஸ் விளையாடலாம், கேமெராவில் படம் பிடிக்கலாம், யாரையாவது போனில் அழைத்துப் பேசலாம்... இப்படி நாம் பயன்படுத்துகிற கருவிக்கு ஏற்ப ஏகப்பட்ட பயன்பாடுகள் உண்டு, எல்லாம் விரல் நுனியில்!

வெறுமனே தொடறது மட்டுமில்லை, விரலைப் பயன்படுத்தி நாம் சில சைகைகளையும் செய்யலாம். வலதுபக்கம் தள்ளலாம், இடதுபக்கம் தள்ளலாம், அழுத்தலாம், இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் உண்டு. அதைக் கவனித்து, அதுக்கு ஏற்ப உங்கள் ‘எலக்ட்ரானிக் வாட்ச்மேன்’ செயல்படுவார்.

இதுதவிர, பெரும்பாலான டச் ஸ்க்ரீன்களில் நாம் இரண்டு, மூன்று விரலைக்கூடப் பயன்படுத்தித் தொடலாம், சைகைகளைச் செய்யலாம்.

இப்போது நீங்கள் ஒரு போனில் போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விரலை வலது பக்கம் தள்ளினால், அடுத்த போட்டோ வருகிறது, இடதுபக்கம் தள்ளினால், முந்தின போட்டோ வருகிறது, இரண்டு விரல்களைப் பயன்படுத்தினால் அந்த போட்டோ அளவு பெரிசாகிறது... இப்படி எல்லாமே விரல்களின் மூலம் செய்து கொள்ளலாம்.

இதனால், டச் ஸ்க்ரீன் கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் எல்லாரும், அதிலேயே ஆழ்ந்து போய்விடுகிறார்கள். நேரம் ஓடுவதே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அதுக்குப் பிறகு, மற்ற சாதாரண ஸ்க்ரீன் உள்ள கருவிகளைப் பயன்படுத்தவே அவர்களுக்கு மனம் வருவதில்லை.

இது என்ன பெரிய விஷயம்? சமீபத்தில் வெளியான சில கருவிகளில், முக்கியமாக நவீன தொலைக்காட்சிகளில் இந்த டச் ஸ்க்ரீன்கூட இல்லை, அதுக்குப் பதிலாக, வெறுமனே நம் கைகளுடைய அசைவைப் பார்த்து அதற்கு ஏற்பச் செயல்படுகிற வசதியைச் சேர்த்திருக்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் கைகளைக் காற்றில் இடதுபக்கம் நகர்த்தினால், டிவியில் சேனல் மாறும், கையைக் குவித்து முன்னாடி குத்தினால் ஒலி குறையும். இப்படி ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வோர் அர்த்தம்!

அடுத்து என்ன? நாம் சிந்தித்ததும் வேலை நடக்கவேண்டுமா? யாராவது ஒரு விஞ்ஞானி அதையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்!



கேளுங்கள்!


1. சில டச் ஸ்க்ரீன்களை நாம் தொட்டவுடன் வேலை செய்கிறது, ஆனால் வேறு சில, அழுத்தினால்தான் இயங்குகிறது. இந்த வித்தியாசம் ஏன்?

நவீன டச் ஸ்க்ரீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன், இன்னொன்று, ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன்.

இதில் கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் பிரமாதமாக வேலை செய்யும். அதோடு ஒப்பிடும்போது ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன் மந்தம்தான். கையை வைத்து ஓரளவு அழுத்தினால் மட்டுமே புரிந்து கொண்டு இயங்கும். வேகமும் கொஞ்சம் குறைவு.

ஆனாலும், விலை குறைவு என்ற காரணத்தால், ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன்கள் பல கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பணம் கொஞ்சம் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை, நல்ல வேகமும் சிறப்பான அனுபவமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் உள்ள பொருள்களைத் தேடி வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

2. சில டச் ஸ்க்ரீன் கருவிகளில், நம் விரலுக்குப் பதிலாகச் சின்னப் பேனா மாதிரி ஒரு கருவியைப் பயன்படுதுகிறார்களே, அது ஏன்?

விரல் தொடுதிரையெல்லாம் வருவதற்கு முன் அறிமுகமான தொழில்நுட்பம் அது. எல்லா பேனாக்களையும் பயன்படுத்த முடியாது, அதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் பேனாதான் வேண்டும், அதன் பெயர் ஸ்டைலஸ்!

சில ஸ்டைலஸ்களில் வயர் உண்டு. அது அந்தக் கருவியோடு பிணைக்கப்பட்டிருக்கும். மற்ற பெரும்பாலான ஸ்டைலஸ்கள் வயர்லெஸ்ஸாகச் செயல்படும்.

அடிப்படையில் விரலும் ஸ்டைலஸும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் வேலை பார்க்கிறது. வித்தியாசம் என்னவென்றால், இந்த இரண்டு வகை ஸ்க்ரீனுக்குள்ளேயும் இருக்கிற மின்சார அமைப்புகள் மாறுபடும். விரலால் தொடும்போது இயங்குகிற ஸ்க்ரீன் ரொம்ப நுட்பமானதாக இருக்கும்.

இப்பவும் ஸ்டைலஸ் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். விரலில் தொட்டுப் பயன்படுத்துவதை விட அதுதான் வேகமானது, ஸ்க்ரீனும் விரைவில் அழுக்காகாது என்று சொல்கிறார்கள்.

ஆனால், மக்கள் ஸ்டைலஸ் என்று ஒரு குச்சியைத் தனியாகத் தூக்கிக்கொண்டு அலைய விரும்புவதில்லை. விரலைத் வைத்து தொட்டால் வேலை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுதான் இப்போது சூப்பர் ஹிட்!



Sunday, December 02, 2012

ஓ பக்கங்கள் - அஞ்ச வேண்டிய அஞ்சு மேட்டர்! - ஞாநி

 
மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே தீவிரவாதி கசாபுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. கசாபுக்கு முன்பே மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை, காங்கிரஸ் அரசு இன்னும் தூக்கிலிடவில்லை. அதற்கும் முன்பே தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளையும் தூக்கிலிடவில்லை. கசாபை மட்டும் அவசரமாகத் தூக்கிலிட பல காரணங்கள் உள்ளன. மும்பை தாக்குதலின் நினைவு நாளையொட்டி கசாப் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பலவீன நிலையில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி தன்னைப் போலவே பலவீனமாக இருக்கும் பி.ஜே.பி.யை வரும் தேர்தலுக்கு முன் மேலும் பலவீனப் படுத்தினால்தான் தனக்கு லாபம் என்று கருதுகிறது. கசாபைத் தூக்கில் போடுவதன் மூலம் பி.ஜே.பி.யை ஆதரிக்கக் கூடிய இந்துத்துவ வாக்குகளைக் கொஞ்சம் தன் பக்கம் திருப்பலாம் என்பதும் ஒரு கணக்கு. தவிர கசாபைத் தூக்கிலிடுவதால் முஸ்லிம்களின் அதிருப்தி ஏற்படும் என்ற அச்சத்துக்கும் இடமில்லை. பொதுப்புத்தியில் அனைவர் மத்தியிலுமே கசாபைத் தூக்கிலிடுவதற்கான ஆதரவு மனநிலைதான் இருக்கிறது. ஆனால் அப்சல் குருவைத் தூக்கிலிட்டால், கொஞ்சம் இந்துத்துவ வோட்டு வரும், ஆனால் முஸ்லிம் வோட்டு எதிராகத் திரும்பிவிடும். அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்ற கருத்து முஸ்லிம்கள் உட்பட பலரிடமும் இருக்கிறது. அதேபோல ராஜீவ் கொலைக் கைதிகள் விஷயத்திலும். அவர்களை இப்போது தூக்கிலிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழ்நாட்டில் அதோகதி. அவர்களைத் தூக்கிலிட்டால், காங்கிரசை அதன் பின்னர் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தமிழகத்தில் யாரும் முன்வரமாட்டார்கள். இந்தக் கணக்கெல்லாம் போட்டுத்தான் கசாபின் தண்டனையை காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம். 
 
குடியரசுத் தலைவர் கசாபின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யும் உரிமை கசாபுக்கு உள்ளது. ஆனால் அதை கசாபுக்குத் தெரிவிக்காமல், தூக்கிலிட்டது சட்ட விரோதமானது; மனித உரிமை மீறல். உலக அரங்கில் இது பிரச்னையாக்கப்பட்டால், இந்தியாவுக்கு தர்மசங்கடம்தான்.கசாப் போன்ற கொடூரமான கொலை காரனைத் தூக்கில் போட்டால் என்ன தப்பு என்று பலரும் கேட்கிறார்கள். மரண தண்டனை கூடாது என்று சொல்லும் என்னைப் போன்றோர் முதலில் சுட்டிக் காட்ட விரும்புவது, குற்றத்தின் அடிப்படையில் மரண தண்டனையை முடிவு செய்வதானால், கடுமையான கருத்து வித்தியாசங்கள் இருக்கும் என்பதாகும். எந்தக் குற்றமானாலும் அதிகபட்ச தண்டனை ஆயுள் சிறையாக மட்டுமே இருக்கலாம். ஒருவர் உயிரைப் பறிக்க இன்னொருவருக்கு உரிமை இல்லை என்பதனால்தான் கொலை, குற்றமாகக் கருதப்படுகிறது. அந்த உரிமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களின் பிரதிநிதியான அரசுக்கும் கிடையாது.தவிர உலகம் முழுவதும் இருக்கும் புலன் விசாரணை, சட்ட முறைமைகளில் ஊழலும் விருப்புவெறுப்புகளும் நிரம்பியுள்ள நிலையில் நிரபராதிகள் தூக்கிலிடப்படும் வாய்ப்பு இருக்கிறது. இத்தனை காலமாக மிக அதிகமாக மரண தண்டனையை நிறைவேற்றும் அமெரிக்காவில் இப்போது 17 மாநிலங்கள் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டன. அதிக மரண தண்டனை இருப்பதால் குற்றம் குறையவும் இல்லை. மரண தண்டனையை நீக்கிவிட்டதால் குற்றம் அதிகரிக்கவும் இல்லை என்பதே ஆய்வுகளின் முடிவு. கொலைக் குற்றங்கள், தீவிரவாதங்கள் முதலியவற்றைக் குறைக்க வேறு பல காரணங்களை அலசித் தீர்வுகள் காணவேண்டும். நிச்சயம் மரண தண்டனை எதற்கும் தீர்வல்ல.ஆனால் தூக்கிலிடுவதைக் கொண்டாடும் மனநிலை நம் சமூகத்தில் இருப்பது அச்சம் தருகிறது. இதுதான் பாசிசத்தின் ஊற்றுக்கண்.
 
திருந்தாத சிவசேனை
 
 
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மறைவையொட்டி மும்பை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதை விமர்சித்து ஃபேஸ்புக்கில் சாதுவான ஒரு கமென்ட்டை எழுதிய ஷஹீதாவையும் அந்த கமென்ட்டுக்கு லைக் போட்ட ரினி சீனிவாசனையும் அராஜகமாகக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் இருவரை மகாராஷ்டிர அரசு இடைநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் கூட காரணம், பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு முதல் பல அறிவுஜீவிகள் அந்த அரசைக் கடுமையாக விமர்சித்ததுதான். ஆனால் சிவசேனை மட்டும் திருந்துவதாகக் காணோம். போலீஸ் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ததைக் கண்டித்து உள்ளூரில் கடை அடைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.  சிவசேனை தலைவர் பால் தாக்கரேவுக்குப் புகழஞ்சலிகள் சூட்டிய மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி எல்லாரும் வழக்கம் போல செலக்டிவ் அம்னீஷியாவில் தான் இருக்கிறார்கள். இந்தியாவில் மத விரோதத்தைத் தூண்டி தேர்தல் பிரசாரம் செய்ததற்காக ஆறு வருடங்கள் வோட்டளிக்கவோ தேர்தலில் போட்டியிடவோ நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி பால் தாக்கரேதான் என்பதை வசதியாக எல்லாரும் மறந்துவிட்டார்கள். மீடியாவும்தான்.பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்கியதற்குக் காரணம் அவர் அரசியல்வாதி என்பதால் அல்ல, அவரை ஓர் ஆர்ட்டிஸ்டாக, கார்ட்டூனிஸ்டாக கௌரவித்திருக்கிறோம் என்று மராட்டிய முதலமைச்சர் புது விளக்கம் கொடுத்திருக்கிறார். உலக அரங்கில் புகழ் பெற்ற மராட்டிய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கருக்கு இந்த மரியாதையை மராட்டிய அரசு கொடுக்கவில்லை. டெண்டுல்கரும் பால் தாக்கரேவும் ஆரம்ப நாட்களில் ஒன்றாக ஒரே பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறார்கள். பின்னாளில் டெண்டுல்கரின் நாடகங்களை சிவசேனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து நாடகமே நடக்கவிடாமல் எல்லாம் தடுத்திருக்கிறது. கடைசி வரை டெண்டுல்கர், பால்தாக்கரேவை விமர்சிப்பதைக் கைவிடவே இல்லை.
 
பால் தாக்கரேவின் மிரட்டல்களுக்குப் பயப்படாத இன்னொரு கலைஞரும் மும்பையில் இருந்தார். அவருடைய திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நாங்கள் அதைப் பார்த்து ஓகே சோல்லியாக வேண்டும் என்று சிவசேனை நிபந்தனை விதித்தது. அவர் மறுத்துவிட்டார். ஆனால் படம் காட்டப்படவிருந்த அரங்க உரிமையாளருக்கு, கொட்டகையைத் தாக்கிவிடுவார்களோ என்று அச்சம். எனவே அவர் பால் தாக்கரேவைப் படம் பார்க்க அழைத்தார். படம் பார்த்து முடிந்ததும் பால் தாக்கரே கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயக்குனரும் அரங்கில் இருக்க வேண்டும் என்று கெஞ்சினார் கொட்டகைக்காரர். இயக்குனர் மறுத்துவிட்டார். படம் காட்டி முடிந்ததும் பால்தாக்கரே எங்கே இயக்குனர் என்று கேட்டார். வரவில்லை என்று சொன்னதும் தாக்கரே எதுவும் சொல்லவில்லை.  அப்படி பால்தாக்கரேவைச் சந்திக்க மறுத்த இயக்குனர் எம்.எஸ். சத்யூ. அந்தப் படம் இன்றும் உலக அளவில் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘கரம் ஹவா’. பிரிவினையை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பால்ராஜ் சஹானி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி 38 வருடங்கள் கழித்து புதுப்பிக்கப்பட்ட பிரின்ட்டாக இப்போது கோவாவில் நடக்கும் உலகப் பட விழாவில் இந்த வாரம் சிறப்புப் படமாகத் திரையிடப்பட்டது.இன்னொரு பக்கம் சிவசேனை மனநிலை மாறாமல் இருப்பதும் வோட்டுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் அதை ஆதரிப்பதும் ஆபத்தானது. 
 
உச்சமான கட்டப் பஞ்சாயத்து?
 
காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்னையை கர்நாடக, தமிழ்நாடு முதலமைச்சர்கள் பேசித் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். கோர்ட் உத்தரவுகளால் பிரச்னை தீராது என்றும் சொல்லியிருக்கிறார்கள். தன் முன் வரும் வழக்கை விசாரித்து நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.  அவற்றை ஒருமுறை இருமுறையல்ல, பலமுறை ஒருவர் பின்பற்றாமல் அலட்சியப்படுத்தினால், அவர் மீது அதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவரோடு பேசுங்கள் என்று பாதிக்கப்பட்ட மறுதரப்புக்கு அறிவுரை சொல்ல முடியாது. காவிரி பிரச்னையில் 1970களிலிருந்து 40 வருடங்களாகப் பலமுறை இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காததால்தான் ஆணையத்திடமும் நீதிமன்றத்திடமும் செல்ல வேண்டியே வந்தது என்பது வரலாறு. இப்போது முதலமைச்சர்கள் சந்தித்துப் பேசினாலும் தற்காலிக தீர்வாக உடனடியாக சில டி.எம்.சி. தண்ணீர் விடுவதைத் தான் அதிகபட்சம் முடிவு செய்வார்களே தவிர, நிரந்தரத் தீர்வை அவர்களால் கொண்டு வர முடியாது. அதற்கு டிரிப்யூனலின் உத்தரவுகளைக் கறாராகச் செயல்படுத்துவதே ஒரே வழி. இந்தச் சரியான வழியை நீதிமன்றங்கள் பரிந்துரைக்க வேண்டும்.
 
ராமதாஸ் பதில்:
 
தலித்கள் மீதான தர்மபுரி தாக்குதல் பற்றி சென்ற இதழில் நான் மருத்துவர் ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அவர் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். ஏற்கெனவே அவர் அறிக்கையில் சொல்லியிருந்த அதே வாதங்களை என்னிடமும் சொன்னார். இது காதல் திருமணத்தை எதிர்க்கும் பிரச்னையல்ல. தலித்-வன்னியர் மோதலும் அல்ல. தொடர்ந்து தலித் இளைஞர்கள் தங்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகளின் எதிர்வினை என்று கூறினார். ஆயிரக்கணக்கான இதர சாதிப் பெண்களை காதலில் சிக்கவைத்து பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் பல தலித் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னதும், அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டேன். ஒவ்வொரு ஊரிலும் விவரங்களைத் திரட்டி வருவதாகவும் தொகுத்து வெளியிடப் போவதாகவும் சொன்னார். சென்னைக்கு வந்ததும் நேரில் தொடர்ந்து விரிவாகப் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் திருமாவளவனுடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து சாதிகளிடையே பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தவர் இப்போதும் ஏன் அதைச் செய்ய முன்வரக்கூடாது என்று கேட்டேன். தாம் அதற்கு இப்போதும் தயார்தான் என்று பதில் சொன்னார். அடுத்த சில தினங்களில் நெய்வேலி அருகே ஒரு கிராமத்தில் சாதி மோதல் நடைபெற்றிருக்கிறது. காரணம் ஒரு போஸ்டர் என்று ஒரு செய்தியும், ஒரு பெண்ணை சீண்டியது என்று இன்னொரு செய்தியும் சொல்கின்றன. உண்மையறியும் குழுக்கள் ஒவ்வொரு கட்சி சார்பில் போய் ஒவ்வொரு உண்மையைச் சொல்கின்றன. சர்வ கட்சி சேர்ந்து உண்மையைத் தேடுவதே இல்லை. ராமதாஸும் திருமாவும் உடனடியாகத் தேர்தல்களை மறந்துவிட்டு சேர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இத்தகைய சாதி மோதல்கள் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. 
 
 
 

இந்தியாவைத் தோற்கடித்த இந்தியர் - பனேசர்.


எந்தவிதமான ஸ்பின் பௌலிங்கையும் சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர்கள், மாண்டி பனேசரின் பந்துவீச்சில் ஒரேயடியாகக் கவிழ்ந்து போனார்கள். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து இந்திய வம்சாவளியான மாண்டி பனேசரால்தான் முடிந்திருக்கிறது. முதல் டெஸ்டில் பனேசர் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்; கதிகலங்க வைத்துவிட்டார், பனேசர்.பனேசர், டர்பனும் தாடியுமாக அசல் இந்திய சீக்கியர் போல இருப்பார். இங்கிலாந்தில், இந்திய பஞ்சாபி தம்பதியருக்குப் பிறந்தவர் பனேசர். முத்சுதன் சிங் பனேசர் என்பதுதான் இவருடைய முழுப் பெயர். ஆனால் வீட்டிலேயே மாண்டி. இங்கிலாந்தில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பனேசரின் பெற்றோருக்கு, 1982ல்லுடன் என்கிற இங்கிலாந்துப் பகுதியில் பிறந்தவர், பனேசர். சீக்கிய மத வழிபாடுகளைப் பின்பற்றும் பனேசர், மது, இறைச்சி போன்றவற்றைத் தொடுவதில்லை. ‘சீக்கியம் என்பது நம்பிக்கை. கிரிக்கெட்தான் என் கனவு’ என்கிறார் பனேசர். இங்கிலாந்து அணியில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தாராளமாக இடமளிக்கப்பட்டு வருவதால், யாரும் பனேசரை அன்னியராகப் பார்ப்பதில்லை.

1992 உலகக் கோப்பையில் சிறப்பாகப் பந்துவீசிய வாசிம் அக்ரமைப் பார்த்து தாமும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், தகுந்த ஆலோசனையினால் பிறகு, ஸ்பின்னர் ஆனார். 2006ல், நாக்பூர் டெஸ்டில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. டிரா ஆன அந்த மேட்சில், பனேசரின் முதல் விக்கெட் - சச்சின் டெண்டுல்கர். மேட்ச் முடிந்தபிறகு, சச்சினிடம் சென்று சச்சினை வீழ்த்திய பந்தில் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார், பனேசர். ஆஸ்திரேலிய வீரர் பிரட் ஹாக், ஒருநாள் ஆட்ட மொன்றில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தியபிறகு, அது தொடர்பான புகைப்படத்தில் சச்சினின் கையெழுத்து வாங்கச் சென்றார். அந்தப் புகைப்படத்தில், இனிமேல் இப்படி நடக்காது என்று சவாலாக எழுதிக் கொடுத்தார் சச்சின். அதன்பிறகு, ஹாக்கால் சச்சினின் விக்கெட்டை வீழ்த்த முடியாமலே போய்விட்டது. இதேபோல, பனேசருக்கும் ‘எப்போதாவதுதான் இதுபோல நடக்கும். இனிமேல் நடக்க வாய்ப்பில்லை’ என்று கையெழுத்து இட்டிருக்கிறார் சச்சின். ஆனால், இம்முறை சச்சினின் சவால் பனேசரிடம் தோற்றுப்போனது. நடந்துமுடிந்த மும்பை டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸிலும் சச்சினின் விக்கெட்டுகளை வீழ்த்தியது, பனேசர்.  

மோசமான ஃபீல்டிங்கினாலும் பேட்டிங்கினாலும் பனேசர், ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார். ஆனால், பிறகு இரண்டிலும் முன்னேற்றம் காண்பித்ததால் ரசிகர்களின் செல்லப் பிள்ளையானார். 2008லிருந்து ஸ்வானின் விஸ்வரூபத்தால் அவருக்குப் பின்னால் நிற்க வேண்டிய நிலைமை பனேசருக்கு ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்தின் முதன்மை ஸ்பின்னர் ஆனார், ஸ்வான். பிறகு, கவுண்டி மேட்சுகளில் தம் திறமையை நிரூபித்து, மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் மாண்டி. இப்போது இங்கிலாந்து அணிக்குள் பனேசருக்கும் ஸ்வானுக்கும் இடையே பலமான போட்டி எழுந்துள்ளது.இந்திய அணி, இங்கிலாந்தில் சில டெஸ்ட் மேட்சுகளை ஜெயித்துள்ளது. அதுபோலத்தான் இப்போது இங்கிலாந்து, நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடர், ஒரு பக்கமாகச் சாயாமல் அடுத்து என்ன நடக்குமோ என்கிற மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பிவிட்டது. தவிர, சச்சின் ரிடையர் ஆவாரா, அஸ்வின் மீண்டும் சிறப்பாகப் பந்துவீசுவாரா, தோனி கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா, ஹர்பஜன், யுவ்ராஜ் ஆகியோர் இனியும் டெஸ்ட் அணிக்குத் தேவைதானா என்பன போன்ற பல சிக்கலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது, இந்த டெஸ்ட் தொடர்.

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்....

சோழர்களின் வலிமையான கடற்படை குறித்த மீள்ஆய்வுகள் இன்று நிறைய நடக்கின்றன. தெற்காசிய நாடுகளில் சோழர்களின் தடயங்கள் எங்கெங்கே இருக்கின்றன? சோழர்களுக்கும் சீனர்களுக்​குமான உறவு எப்படி இருந்தது? சோழர்கள் போரிட்டு ஜெயித்த கம்போடியா, ஸ்ரீவிஜயம் போன்ற நாடு​களில் கிடைக்கும் புதைப் பொருட்கள், கல்வெட்டுக்களின் மூலம் சோழர்களுடைய கடற் படையின் வலிமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் நடந்த வணிகம் குறித்துத் தீவிரமான ஆய்வுகள் நடந்து வரும்போது, சீனா​வுக்கும் சோழர்களுக்கும் இடையில் நடந்த கடல் வணிகத் தொடர்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

சோழர்களின் கடற்படைத் தொழில்​நுட்பம் எப்படி இருந்தது? அவர்கள் பயன்​படுத்திய கடல் வரைபடங்கள், கப்பல் கட்டும் முறை, மாலுமிகளைத் தயார்செய்யும் விதம், ஏற்றுமதி - இறக்குமதி முறைகள், கடலில் போர் செய்வதற்கு மேற்கொண்ட உத்திகள் யாவும் இன்னும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. சோழர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயங்களைக் கல்வெட்டுக்களிலும் தாமிரப் பட்டயங்களிலும் முறையாகப் பதிவுசெய்யக் கூடியவர்கள். அப்படி இருந்தும் அவர்களின் கடல் பயணங்கள் குறித்த ஆதாரங்கள் நமக்குக் குறைவாகத்தான் கிடைத்து இருக்கின்றன. ஒருவேளை, அவை உலகின் கவனம் பெறக்கூடாது என்பதற்காக அழிக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகமும் ஏற்படு​கிறது.


சோழர்களின் கடல் வணிகமானது, மூன்று நிலைகளைக்​கொண்டது. தமிழகத்தில் இருந்து முத்துக்கள், நவமணிகள், தந்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை ஏற்றிக்​கொண்டு சீனாவுக்குப் போவது. அவற்றை சீனாவில் விற்றுவிட்டு, அங்கிருந்து பட்டுத் துணி, இரும்பு, பீங்கான் பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை கொண்டுவருவது. அவற்றை இந்தியாவில் விற்றுவிட்டு மீதி இருப்பதை அரபு நாடுகளுக்கு, குறிப்பாக பாக்தாத் நகர வணிகச் சந்தையில் விற்பதற்காக அரேபிய வணிகர்களிடம் ஒப்படைப்பது. அரேபி​யாவில் இருந்து குதிரைகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சோழ மன்னர்களிடம் விற்பது. ஆகவே, சோழர்களின் கடல் பயணத்துக்கு சீனர்களும் அரேபியர்களும் உதவி செய்யவேண்டிய அவசியம் இருந்தது.

1020-ம் ஆண்டு சோழ மன்னர் ராஜேந்திரன் சீனாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி,  சாங் மன்னருடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டான். அதற்காக, சீன அரசனுக்கு ஏராளமான பரிசுகளை அளித்து தூதுக் குழுவை அனுப்பிவைத்தான். அந்தப் பரிசுகளை ஏற்றுக்கொண்ட சீன அரசன், தூதுக் குழுவினருக்குப் பட்டுத் துணிகளைப் பரிசாக அளித்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அதனால், சீனாவுடன் தொடர்ந்த நல்லுறவு சோழர்களின் கடல் வணிகத்துக்குச் சாதகமாக அமைந்தது. கப்பல் கட்டும் முறையில் சோழர்கள் தனித்துவம் பெற்று இருந்தனர். அதுகுறித்து, சீனக் குறிப்புகள் கூறுகிறபோதும், தமிழகத்தில் நேரடியான கல்வெட்டுச் சான்றுகள் எதையும் காணவில்லை. ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டணத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில், மரக்கலம், தோணி, படகு, கலவம், வேதி என்ற ஐந்து விதமான கடல் கலங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதில் மரக்கலம், தோணி போன்றவை படகைப்போன்று நான்கு மடங்கு பெரியவை என கூறப்பட்டு இருக்கிறது.


சோழர்கள் கடற்படையானது முறையாக நிர்வகிக்கப்​பட்டது. அதில் அரசரே முதன்மையானவர். போர்புரியும் வீரர்களைக்கொண்ட குழுவை, கனம் என்று அழைத்தனர். அதற்குத் தலைமை ஏற்பவர் கனாபதி. அதுபோலவே, மண்டலாதிபதி எனப்படுபவர் தலைமையில் 40 கப்பல்கள் இருக்கும். அந்தக் கப்பல்கள் குழுவாகச் சென்று போர்புரியக் கூடியவை. 100 முதல் 150 கப்பல்களைக்கொண்டது ஒரு பிரிவு. ஓர் அணியில் 300 முதல் 500 கப்பல்கள் இருந்தன. சோழர்களின் கடல் வணிகம் பற்றிய தனது கட்டுரையில் ஆய்வாளர் சி.வி.கார்த்திக் நாராயணன் நிறைய தகவல்களைத் தருகிறார். குறிப்பாக பூம்புகார் அழிந்த பிறகு, சோழர்களின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது நாகப்பட்டினம். வங்கக் கடலில் அரேபிய, பாரசீக மற்றும் சீன வணிகர்களின் வியாபாரப் போட்டியால், தமிழக வணிகர்கள் எதிர்பாராத தாக்குதலையும் கொள்ளையையும் சமாளிக்க வேண்டி இருந்தது. அதை ஒடுக்குவதற்காகவே சோழர்கள் கடல் ஆதிக்கம் செய்ய முயன்றனர். வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, ரோந்துக் கப்பல்கள் அனுப்பியது, சோழர்களின் கடற்படை.

ராஜேந்திர சோழன் தனது கடற்படையைக்​கொண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளை வென்றது குறித்து, கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்​களும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அந்தக் கல்வெட்டுக்களில் கடல் வணிகர்கள் எவ்வாறு கலம் செலுத்திச் சென்றனர் என்ற விவரங்கள் இல்லை.

பல்லவர்கள் காலத்திலேயே கடல் வணிகம் முக்கியமாகக் கவனம் பெறத் தொடங்கியபோதிலும், சோழர்களே கடல் கடந்து சென்று தங்களது ஆதிக்​கத்தை நிலை நாட்டினர். குறிப்பாக, இலங்கையும் மாலத் தீவுகளும் சோழர்களின் கடல் வணிகத்துக்கான முக்கிய மையமாகத் தேவைப்பட்டன. ஆகவே, அதைக் கைப்பற்றியதோடு சிறீவிஜயம் எனப்படும் இப்போதைய இந்தோனேஷியா, மலாய், சுமத்ரா, ஜாவா மற்றும் நிக்கோபார் ஆகிய தீவுகளையும் சோழர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டு, கடல் வணிகத்தை வலிமைப்படுத்தினர். அத்துடன், ஒரிசா மற்றும் வங்க வணிகர்களையும் ஒடுக்கி கடல் வணிகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது சோழர்களின் பெரிய வெற்றி.

ராஜராஜ சோழனின் கடற் படை இலங்கையை வென்றதை 'திருமகள்...’ என்று தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டின் மெய்க்கீர்த்தியால் அறியலாம். இந்தப் படையெடுப்பின்போது, ஈழத்தில் ஆட்சி புரிந்தவன் ஐந்தாம் மகிந்தன். இலங்கையில் ராஜராஜனின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஈழத்தைச் சோழர்கள் கைப்பற்றியதைக் கொண்டாடும்விதமாக தலைநகரை மாற்றியதோடு பொலனருவையில் ஒரு சிவன் கோயில் கட்டினான் ராஜராஜன். ராஜேந்திரன் ஆட்சியின் 14-வது ஆண்டுக் கல்வெட்டுக்களில், முதன்முறையாக கடல் கடந்து கடாரம் வென்ற செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் ராஜேந்திரன் கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் எனச் சுருக்கமாக முடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் எடுத்துச் சொல்கின்றன. கி.பி. 1025-ம் ஆண்டு, சோழர்களின் கடற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் போரைத் தொடங்கியது. இந்தப் படையெடுப்பின் மூலமும் எவ்விதமான நிலப்பரப்பும் சோழ தேசத்துடன் இணைக்கப்படவில்லை. 


அதற்கு மாறாக, சோழ ஆட்சிக்கு அடங்கி இருப்பதாக ஸ்ரீவிஜயம் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டு திரை செலுத்தி, மீண்டும் ஆட்சி செய்யத் தொடங்கியது. சோழர்களின் கடற்படை தனித்துவம் மிக்கது. குறிப்பாக, அவர்களது பாய்மரக் கப்பல்களில் உள்ள பாய்கள் சதுரம் மற்றும் நீள்சதுர வடிவங்களில் அமைந்து இருந்தன.

கடல் பயணத்துக்கு மிகவும் இன்றியமையாதது காற்றின் வலிமையை அறிந்துகொள்வது. அத்துடன் புயல், மழையை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இதற்காக, நட்சத்திரங்களைக்கொண்டு காற்றின் போக்கை​யும் புயல், மழை பற்றியும் சோழர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதற்காக, மீகான் எனப்படும் கப்பலின் மாலுமி நட்சத்திரங்களின் வரைபடம் ஒன்றை வைத்திருப்பார். அந்த வரைபடத்தின் துணைகொண்டு விண் நோக்கி அவதானித்து நட்சத்திரங்களை அடையாளம் காண வேண்டும். அதை வழிகாட்டியாகக்கொண்டு கடலில் கலம் செலுத்திப் போவதே வழக்கம். கடலோடியான நரசய்யா தமிழர்களின் கடல் வணிகம் பற்றி எழுதிய குறிப்பில், ''மாலுமிகள் நட்சத்திரங்களை அளவிடுவதற்கு விரல் கணக்கைத்தான் பயன்படுத்துவார்கள். ஒற்றை வெள்ளி, எழு வெள்ளி, செம்மீன், உலக்கை வெள்ளி, ஒடக்கல் வெள்ளி, வடமீன் என 56 விதமான வெள்ளிகளின் துணைகொண்டு கடல் பயணம் செய்துள்ளனர். இலுப்பை, புன்னை சிறுதேக்கு கரைமருது போன்ற மரங்களில் இருந்து கப்பல்கள் செய்யப்பட்டன. கப்பல் கட்டுபவர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். அதிராமபட்டினம், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் கப்பல் கட்டும் இடங்கள் இருந்துள்ளன. கடல் அலையின் சீற்றத்தை அறிந்துகொள்வதற்காக மிதப்புப் பலகை ஒன்றை சோழ மாலுமிகள் பயன்படுத்தினர். அந்தப் பலகையின் வேகம் மற்றும் மிதக்கும் நிலையை வைத்து அலைகளின் இயல்பை அறிந்துகொண்டனர்'' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?

 
'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’  - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு?
 
மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?  
 
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’  
 
'மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது''.''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.''''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது''.
 
மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 

 சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள்  மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

 மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

 மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

 'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை: 

 மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

 குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது

 முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.

 வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.

 பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

 தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.