Search This Blog

Wednesday, December 12, 2012

எனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, பௌத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.

கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அங்கு புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக்களை மாற்றி, புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினர். சோழ அரசர்கள் கி.பி. 10-ம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி, இந்த சாசனங்கள் பழைய வட்டெழுத்தில் எழுதப்​பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத்​தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, தனது 'பண்டைய இந்தியா’ என்ற நூலில், கி.பி 150-ல் தான் முதன்​முதலாக சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத்தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.


பிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும் அதன் வழக்கு​களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக்குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப்​பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ்​கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்கு உரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்று​வதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர். இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப்பாடு உருவானது. அதுபோலவே, புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேச்சுவழக்கில் இல்லை. பீகாரில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பாலி மொழி கற்பிக்கும் பட்டப் படிப்புகள் இருந்தபோதும் அது வழக்கொழிந்த மொழியாகவே கருதப்படுகிறது. அசோகர் ஆட்சி புரிந்த மகத நாட்டின் தொன்மை மொழியாக இருந்தது பாலி. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்பேத்கர், பாலி மொழிக்கான இலக்கண அகராதி ஒன்றை உருவாக்கி உள்ளார். பாலி மொழிக்கு மாகதி என வேறு பெயரும் உண்டு. பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாமே பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்களை இயற்றத் தொடங்கினர். ஆனாலும் தென்னிந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்று வரை பாலி மொழியையே போற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலி மொழியை நன்கு அறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்பதை பௌத்த நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாவாய் (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), தாம்பூலம் (வெற்றிலை) முதலிய சொற்களும் பாலி மொழியில் இருந்து பௌத்தர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் பரவியிருக்க வேண்டும் என, மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். எந்த மொழி, கல்வி மொழியாக இருக்கிறதோ எது ஆட்சிமொழியாக இருக்கிறதோ, எந்த மொழி இளம் தலைமுறையினரின் தொடர்பு மொழியாக இருக்கிறதோ, எந்த மொழியில் மக்களின் உலகப் பார்வையும் பயன்பாடும் வெளிப்படுகிறதோ அந்த மொழிக்கு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மொழியியலாளர்கள். இயற்கையின் பன்முகத் தன்மையே மொழியையும், மக்கள் வாழ்வு முறைகளையும் முடிவு செய்கிறது என்கிறார் மொழி யியல் அறிஞர் டேவிட் ஹார்மோன். இவரது ஆய்வில் மரங்களின் அடர்த்திக்கும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார். குறைந்தது ஒரு வருடத்துக்கு 10 மொழிகளாவது இறந்து விடுகின்றன என்கிறார்கள். காலனி ஆதிக்கத்தால் ஐரோப்பாவில் மட்டுமே 12-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இருக்கின்றன. பன்மொழி சார்ந்த கலாசாரம் உலகம் தழுவிய வணிகத்துக்குத் தடைக்கல்லாக இருந்ததால், உலகம் முழுவதற்குமான பொது மொழி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக ஒலிக்கிறது.

இதற்காக, செயற்கையாக ஒரு மொழியை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டு, வாலேபூக் எனும் செயற்கை மொழி முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மொழி உலகம் தழுவிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து, எஸ்பிரேண்டோ என்றமொழி வடிவமைக்கப்​பட்டு, சில காலம் புழக்கத்தில் இருந்தது. அதுவும் தோல்வி அடைந்தது. ஆனால் காலனி ஆதிக்கத்தின் வழியே இன்று ஆங்கிலம், அந்த இடத்தை அடைந்து இருக்கிறது. பன்னாட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் மொழிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. மொழி அழிவது என்பது உலகமயமாவதன் பிரச்னை. இந்தியாவின் பல்வேறு மொழிகள் இந்த உலகமயமாதலின் சிக்கலில் மாட்டிக்கொண்டு தனது உரிமைகளை, அடையாளத்தை இழந்து வருகின்றன. ஒரு மொழி பேசும் இனம் அதற்கான மொழி உரிமையைப் போராடி நிலைநிறுத்துவதன் மூலம், தன் இழந்துவிட்ட சமூக அரசியல் உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பதற்கு சாந்தலி மொழி பேசும் பழங்குடியினர் ஓர் உதாரணம். நீண்ட நெடிய வரலாறு உடைய இந்தியா, இன்று அவிழ்க்க முடியாத சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், சிதைவுகள் நம் நாட்டின் அடையாளத்தை முற்றிலும் மாற்றி இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா உடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஐரோப்பிய அரசியல் கட்டுரையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவை இணைத்துவைத்துள்ள அம்சம், இங்குள்ள ஜனநாயகம் மற்றும் இந்தியர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.

'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ என்ற தனது நூலில் ராமச்சந்திர குஹா, இந்தியத்தன்மை எது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குறிப்பாக, இன்றுள்ள இந்தியா எப்படி உருவானது? அப்படி உருவாவதற்கு அது எதிர்கொண்ட சவால்கள்? கடந்துவந்த பிரச்னைகளைப் பற்றி குஹா காட்டும் சித்திரம் இன்றைய இந்தியாவின் உண்மையான முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், புதிய ஜனநாயகப் பொறுப்புகளை எப்படி அறிமுகப்படுத்தியது, 2,000 ஆண்டுகளாக மன்னர்களும் அவர்களின் விசுவாசிகளும் ஆண்டுவந்த இந்தியா, எப்படி தன்னை மக்கள் ஆட்சியிடம் ஒப்படைத்துக்கொண்டது என்பதைப் படிக்கும்போது இந்தியாவின் மாற்றத்துக்கான எத்தனிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த காலத்தைப் பற்றி, வரலாற்று ஆசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவில் இருந்து விளக்கப்படும்போது உண்மையான வரலாறு உருவாகிறது என்பார் இ.ஹெச்.கார்.

இந்தியாவின் வரலாற்றை வாசிக்கும் எவரும் அதன் கடந்த காலத்தில் வீழ்ந்துகிடக்கவும் முடியாது. அதே நேரம் கடந்த காலத்தை முற்றிலும் புறந்தள்ளவும் முடியாது. இந்தியாவின் எதிர்காலம், அதன் கடந்த காலம் எனும் வேரோடு தொடர்பு உடையதே. வரலாறு என்பது நாம் படித்துக் கடந்து செல்வது மட்டுமல்ல, அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது. வரலாற்றை நேசிப்பவர்கள் கடந்த காலத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியே நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முற்பட வேண்டும். அதுவே, வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக்கொண்டதற்கான அத்தாட்சி!

No comments:

Post a Comment