பொதுவாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரிக்கி பாண்டிங்கைக் கண்டாலே
பிடிக்காது. 2003 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அவுட்டே ஆகாமல் 140 ரன்களை
நொறுக்கி, இந்தியாவின்
உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்த வில்லன் அவர். டெஸ்டுகளில், இந்தியாவுக்கு
எதிராக 3 இரட்டைச் சதங்கள் அடித்து துவம்சம் செய்தவர். 2008 சிட்னி
டெஸ்டில் இந்திய அணி சர்ச்சைக்குரிய விதத்தில்
தோற்றுப் போனதும் இந்திய ஆஸ்திரேலிய வீரர்களிடையே கசப்புணர்வு
தோன்றியதற்கும் பாண்டிங்கே காரணம் என்று ரசிகர்கள் இன்னும் அதிகமாக
வெறுத்தார்கள். இனி அந்தக் கவலையில்லை. வில்லனின்
காலம் முடிவுக்கு வந்துவிட்டது! டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட்
வீரராக மதிக்கப்படுபவர், பாண்டிங். பொதுவாக ஒரு வீரர் ஓய்வுபெறும்
சமயத்தில், சம்பிரதாயமான வார்த்தைகளையே வெளிப்படுத்துவார். இளைஞர்களுக்கு
வழிவிடுகிறேன். கிரிக்கெட்டை அவ்வளவாக என்ஜாய் பண்ணவில்லை என்று
மரியாதைக்குக் குறைச்சலில்லாமல் பேசுவார். ஆனால், பாண்டிங் இயல்பாக, எந்த
ஒரு போலித்தனமுமில்லாமல் பேசியிருக்கிறார். ‘இந்தத் தொடரில்
நான் சிறப்பாக ஆட வில்லை. ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்டான திறமையை நான்
வெளிப்படுத்தவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாகவே நான் சரியாக ஆடவில்லை. என்
எதிர்பார்ப்புக்குக் குறைந்து ஆடியதால் இந்த
முடிவை எடுத்துள்ளேன்’ என்று எது உண்மையோ அதையே பொட்டில் அடித்தாற்போல
வெளிப்படுத்தியிருக்கிறார், பாண்டிங்.
ஸ்டீவ் வாக்-குக்குப் பிறகும், வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்ட் போன்ற
ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகும் பாண்டிங், ஆஸ்திரேலிய அணியைப்
பத்திரமாக, கௌரவம் கெடாமல் பார்த்துக் கொண்டார். தமக்குப் பிறகு
ஆஸ்திரேலியாவை வழி நடத்த கிளார்க்கைத் தயார்படுத்தினார். ஆஸ்திரேலியாவில்
எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் கடவுளாகக் கொண்டாடுவது கிடையாது. அணிக்காக
தம்முடைய பங் களிப்பை அளிக்காத யாரையும் அணியில்
நீடிக்க விடுவதில்லை. இந்த வருடத் தொடக்கத்தில், சிபி சீரிஸ் ஒருநாள்
தொடரில் பாண்டிங் மிக மோசமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்காக இரண்டு
உலகக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவராச்சே என்று துளியும்
இரக்கம் காட்டவில்லை, ஆஸ்திரேலிய தேர்வுக்குழு. தொடரின் பாதியிலேயே
பாண்டிங்கை அதிரடியாக நீக்கினார்கள். இதை மிகவும் சகஜமாக எடுத்துக் கொண்டு
டெஸ்டுகளில் கவனம் செலுத்தினார், பாண்டிங். எந்தக் கணத்திலும்,
அவர் தம் ஃபீல்டிங் திறமையை விட்டுக் கொடுத்ததே கிடையாது.
தம்முடைய சிறந்த வெற்றிகளாக உலகக்கோப்பை வெற்றிகளை மட்டும் பாண்டிங்
குறிப்பிடுவதில்லை. 2009ல் இளைஞர்களை மட்டுமே கொண்ட ஆஸ்திரேலிய அணி
இந்தியாவில் ஒருநாள் போட்டிக்காக வந்தது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே
அணியின் முக்கியமான நான்கு வீரர்கள், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இந்தியா வந்த பிறகு 5 வீரர்கள் காயத்தினால் தொடரின் பாதியிலேயே
ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல நேரிட்டது. ஒரு கட்டத்தில் 13 வீரர்களிலிருந்து அணியைத் தேர்வு செய்யும் நிலைமைக்குத்
தள்ளப்பட்டார் பாண்டிங். ஆனாலும், பலமான இந்திய அணியை எதிர்கொண்டு 4-2
என்கிற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று
காண்பித்தார், பாண்டிங். இப்படி, எந்த ஒரு சவாலையும் துணிவுடன் எதிர்
கொண்டவர், ஓவையும் மிகத் துணிச்சலாகக் கையாண்டுவிட்டார்.
* உலகக் கோப்பையில், இவர் தலைமையில் தொடர்ந்து 34 மேட்சுகளை வென்றுள்ளது, ஆஸ்திரேலிய அணி.
* இந்தியாவில் பாண்டிங்கின் ரன் வேட்டை பெரிதாக எடுபடவில்லை. 14 டெஸ்டுகளில், ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். புகழ்பெற்ற 2001 டெஸ்ட் தொடரில், 3 டெஸ்டுகளிலும், மொத்தம் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாண்டிங்கின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர், ஹர்பஜன் சிங்.
No comments:
Post a Comment