Search This Blog

Sunday, December 02, 2012

இந்தியாவைத் தோற்கடித்த இந்தியர் - பனேசர்.


எந்தவிதமான ஸ்பின் பௌலிங்கையும் சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர்கள், மாண்டி பனேசரின் பந்துவீச்சில் ஒரேயடியாகக் கவிழ்ந்து போனார்கள். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து இந்திய வம்சாவளியான மாண்டி பனேசரால்தான் முடிந்திருக்கிறது. முதல் டெஸ்டில் பனேசர் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்; கதிகலங்க வைத்துவிட்டார், பனேசர்.பனேசர், டர்பனும் தாடியுமாக அசல் இந்திய சீக்கியர் போல இருப்பார். இங்கிலாந்தில், இந்திய பஞ்சாபி தம்பதியருக்குப் பிறந்தவர் பனேசர். முத்சுதன் சிங் பனேசர் என்பதுதான் இவருடைய முழுப் பெயர். ஆனால் வீட்டிலேயே மாண்டி. இங்கிலாந்தில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பனேசரின் பெற்றோருக்கு, 1982ல்லுடன் என்கிற இங்கிலாந்துப் பகுதியில் பிறந்தவர், பனேசர். சீக்கிய மத வழிபாடுகளைப் பின்பற்றும் பனேசர், மது, இறைச்சி போன்றவற்றைத் தொடுவதில்லை. ‘சீக்கியம் என்பது நம்பிக்கை. கிரிக்கெட்தான் என் கனவு’ என்கிறார் பனேசர். இங்கிலாந்து அணியில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தாராளமாக இடமளிக்கப்பட்டு வருவதால், யாரும் பனேசரை அன்னியராகப் பார்ப்பதில்லை.

1992 உலகக் கோப்பையில் சிறப்பாகப் பந்துவீசிய வாசிம் அக்ரமைப் பார்த்து தாமும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், தகுந்த ஆலோசனையினால் பிறகு, ஸ்பின்னர் ஆனார். 2006ல், நாக்பூர் டெஸ்டில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. டிரா ஆன அந்த மேட்சில், பனேசரின் முதல் விக்கெட் - சச்சின் டெண்டுல்கர். மேட்ச் முடிந்தபிறகு, சச்சினிடம் சென்று சச்சினை வீழ்த்திய பந்தில் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார், பனேசர். ஆஸ்திரேலிய வீரர் பிரட் ஹாக், ஒருநாள் ஆட்ட மொன்றில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தியபிறகு, அது தொடர்பான புகைப்படத்தில் சச்சினின் கையெழுத்து வாங்கச் சென்றார். அந்தப் புகைப்படத்தில், இனிமேல் இப்படி நடக்காது என்று சவாலாக எழுதிக் கொடுத்தார் சச்சின். அதன்பிறகு, ஹாக்கால் சச்சினின் விக்கெட்டை வீழ்த்த முடியாமலே போய்விட்டது. இதேபோல, பனேசருக்கும் ‘எப்போதாவதுதான் இதுபோல நடக்கும். இனிமேல் நடக்க வாய்ப்பில்லை’ என்று கையெழுத்து இட்டிருக்கிறார் சச்சின். ஆனால், இம்முறை சச்சினின் சவால் பனேசரிடம் தோற்றுப்போனது. நடந்துமுடிந்த மும்பை டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸிலும் சச்சினின் விக்கெட்டுகளை வீழ்த்தியது, பனேசர்.  

மோசமான ஃபீல்டிங்கினாலும் பேட்டிங்கினாலும் பனேசர், ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார். ஆனால், பிறகு இரண்டிலும் முன்னேற்றம் காண்பித்ததால் ரசிகர்களின் செல்லப் பிள்ளையானார். 2008லிருந்து ஸ்வானின் விஸ்வரூபத்தால் அவருக்குப் பின்னால் நிற்க வேண்டிய நிலைமை பனேசருக்கு ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்தின் முதன்மை ஸ்பின்னர் ஆனார், ஸ்வான். பிறகு, கவுண்டி மேட்சுகளில் தம் திறமையை நிரூபித்து, மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் மாண்டி. இப்போது இங்கிலாந்து அணிக்குள் பனேசருக்கும் ஸ்வானுக்கும் இடையே பலமான போட்டி எழுந்துள்ளது.இந்திய அணி, இங்கிலாந்தில் சில டெஸ்ட் மேட்சுகளை ஜெயித்துள்ளது. அதுபோலத்தான் இப்போது இங்கிலாந்து, நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடர், ஒரு பக்கமாகச் சாயாமல் அடுத்து என்ன நடக்குமோ என்கிற மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பிவிட்டது. தவிர, சச்சின் ரிடையர் ஆவாரா, அஸ்வின் மீண்டும் சிறப்பாகப் பந்துவீசுவாரா, தோனி கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா, ஹர்பஜன், யுவ்ராஜ் ஆகியோர் இனியும் டெஸ்ட் அணிக்குத் தேவைதானா என்பன போன்ற பல சிக்கலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது, இந்த டெஸ்ட் தொடர்.

No comments:

Post a Comment