Search This Blog

Friday, January 04, 2013

புவனேஷ்வர் குமார்

இருபத்து இரண்டு வயது வேகப்பந்து வீச்சாளர். பிரவீன் குமார் ஊர்க்காரர்(உத்தர பிரதேசம்). ஐ.பி.எல்.லில் புனே வாரியர்ஸ் வீரர். இந்தியக் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு சுலபமாக பௌலர்கள் கிடைக்க மாட்டார்கள். அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களே திரும்பத் திரும்ப அணியில் இடம் பெறுவார்களே தவிர, புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளே நுழைவது சிரமம். ஆரம்ப மேட்சுகளில் முத்திரை கவனம் ஏற்படுத்துவது அதை விடவும் கடினம். கடைசியாக இப்படி நம்பிக்கையூட்டிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் டி20, ஒருநாள் ஆட்டம் என இரண்டிலும் அட்டகாசமாகப் பந்து வீசினார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இவரைத் தாராளமாக நம்பலாம்.

எளிமையான தோற்றம் கொண்ட புவனேஷ்வர் குமார் அதிரடியாக சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் நுழைந்திருக்கிறார்!

பிரவீன் குமாரின் பயிற்சியாளரான விபின் பட்ஸ் தான், புவனேஷ்வர் குமாருக்கும் வித்தைகளைக் கற்றுத் தந்தவர். பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்கிறார், பந்துவீச்சில் பொறுப்பும் கடின ஈடுபாடும் தென்படுகின்றன. ஆரம்ப ஓவர்களில், பேட்ஸ்மேன்களை க்ளீன் போல்டாக்கி, அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தருகிறார். இக்காலத்தில், வேகத்தை மட்டும் நம்பியிருக்காத ஒரு பௌலரைப் பார்ப்பதே எத்தனை அபூர்வமாகி விட்டது! 

2009 ரஞ்சிப் போட்டியில், சச்சினை டக் அவுட் ஆக்கிய பெருமை புவனேஷ்வர் குமாருக்கு உண்டு. சச்சினுடன் டெஸ்ட் போட்டியில் ஆடவேண்டும் என்று விருப்பப்படுகிறார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருடைய கனவு, நனவாகும்.சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் போட்டியில் தொடர்வார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பிப்ரவரி-மார்ச்சில் நடக்க இருக்கிற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சச்சினுக்கு மிக முக்கியமானது! காரணம், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு டெஸ்ட்டில் கூட செஞ்சுரி அடிக்கவில்லை. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 4 டெஸ்டுகளில் 112 ரன்களும், 2012ல், 9 டெஸ்டுகளில் 357 ரன்களே மட்டுமே அடித்திருக்கிறார். இவரை விடவும் அஸ்வின் அதிக ரன்கள் (8 டெஸ்டுகள், 414 ரன்கள்) எடுத்ததுதான் பெரிய விந்தை. மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இறுதிக் கால கட்டத்தில் இப்படித்தான் சரிந்து விழுந்திருக்கிறார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், தம்முடைய கடைசி இரண்டு வருடங்களில் ஒரு டெஸ்ட் செஞ்சுரிகூட அடிக்கவில்லை. கடைசி 30 ஒரு நாள் ஆட்டங்களில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். ரிக்கி பாண்டிங்கின் கடைசிக் காலகட்டம் மிக வேதனையானது. கடைசி 19 டெஸ்டுகளில் இரண்டு செஞ்சுரிகள் மட்டுமே அடித்தார். சச்சினுக்கு நிகராகப் பேசப்பட்ட இன்ஸமாம் உல் ஹக்கும் ஓய்வு பெறும் காலத்தில் ரன் அடிக்காமல் பாகிஸ்தான் அணியை நிறையவே சோதித்தார். கௌரவம் குறையாமல் இறுதிக் காலகட்டங்களில் பிரமாதமாக ஆடியவர்கள், கவாஸ்கரும் பிரையன் லாராவும்தான். தன்னுடைய கடைசி இரண்டு வருடங்களில் 8 செஞ்சுரிகள் அடித்தார், லாரா. சச்சினிடமிருந்தும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், ரசிகர்கள்.



ஓ பக்கங்கள் - ஆர் யூ தேர் மேடம் சி.எம்.? ஞாநி


இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்துச் சொன்னால், வாராவாரம் இந்தச் சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளி விவரங்கள் வெளிவந்து இருக்கலாம்.

டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன். எகிப்திலே செய்தார்கள், தில்லியிலே செய்தார்கள் என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும் படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். cmcell@tn.gov.in” என்று ஓர் வேண்டுகோளை ஃபேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்த மாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.

அதில் கிடைத்த முக்கியமான செய்தி -இந்த சி.எம். செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொது மக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கு அப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள். 

ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்றச் சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சி.எம். செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு.... பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூடப் போறாங்க?" என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி.எம். செல் கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

விபத்தாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்பப்படும் விஷயம் சி.எம்.செல்லுக்குத்தான் முதலில் அனுப்பப்பட்டது. அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை. அந்த கேஸ் மூடப்பட்டது. ஒருவருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, அது முடிந்துபோன விஷயம் என புகாரையே எடுக்கவில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்துச் சென்று புகாரைப் பதிவு செய்தேன். ஒருவருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது," என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர். 

சி.எம்.செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன். சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சி.எம்.செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே!

சென்னை மேயர் சைதை துரைசாமியின் ஃபேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்போது பார்த்தால் அந்தத் தளத்தில் எதுவும் உருப்படியாக நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தம் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களைச் சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.  சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்னை தொடர்பாக முதல்வரைச் சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும் படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ‘ரொம்ப வேலைப் பளு. நேரம் ஒதுக்குவதற்கு இல்லை’ என்று கூட இன்றுவரை அதற்குப் பதில் கிடையாது. சமூகப் பிரச்னையைப் பற்றி தம்மிடம் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தமக்கு தில்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளி நடப்புச் செய்கிறார்! என்ன கொடுமை இது!

சி.எம்.செல் வேஸ்ட். சி.எம். ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்...? இதோ இன்னொருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்றச் சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம், போரூர், மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள், பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது."தெருவில் இறங்கிப் போராடினால் போலீஸை வைத்து அடி உதை மிரட்டல்... சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்த கரை மக்களை, சோந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப்புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஓர் அமைச்சரோ அந்த அமைதியான மக்களைச் சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.ஆட்சிக்கு வந்த புதிதில் வாராவாரம் பத்திரிகையாளரைச் சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும்; யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம் என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தம் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னை குப்பை நகரமாக இருப்பதுவரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்குப் புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்குப் பிரச்னையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தம் குடிமக்களுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்ன நிர்வாகம் செய்ய முடியும்? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்வரை முதல் வரை அணுகிச் சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தம் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்குத் தகவல் சொல்வார்கள்? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பது தான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக, கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.இப்படித் தம்மைத்தாமே ஓர் இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்குச் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்குச் சொல்ல வேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தம்மைத்தாமே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேவை. 

கடந்த ஆண்டில் பலமுறை முதல்வருக்குப் பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்னைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவை முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் தார்மிக பலம் படைத்த எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டிப் பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.

Wednesday, January 02, 2013

எனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஐதீகப்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாளியாக ஆகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கி வந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோயில் கட்டப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது வழக்கம். பழங்குடிகள் அதிகமாக வாழ்வது ஒரிசா மாநிலம். ஆகவே, அங்கே சூரியனை வணங்குவது தொன்றுதொட்டு வந்திருக்கக்கூடும். அந்தப் பழங்குடி கடவுள், செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரமாண்டமான சூரியக் கோயில் உருவாகியிருக்கக்கூடும்.

கொனார்க் கோயிலுக்குள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் சூரியன் வருவது போன்ற சிற்பம் அது. தென் இந்தியக் கோயில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது. வெளியே இருந்து பார்க்கும்போது, அதன் பிரமாண்டம் நமக்குப் புலப்படாது. அருகில் சென்று பார்க்கும்போது, கோயில் விஸ்வரூபம்கொண்டதாகத் தெரிகிறது. தொழு நோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால், இன்றும் இந்தக் கோயில் பகுதியில் ஏராளமான தொழுநோயாளிகளைப் பார்க்க முடிகிறது. சிற்பத் தொகுப்பு ஒன்றில் ஒரு தொழுநோயாளி பெண்ணுடன் கல வியில் ஈடுபடும் சிற்பமும் இருக்கிறது. சூரியன் ஆணா... பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் கூறுகிறார்கள். கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண், பெண் என்ற இரு வடிவிலும் காணப்படுகிறது. போன்டா பழங்குடியினரிடம், சூரி​யனும் சந்திரனும் அண்ணன் தங்கை என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஒரு நாள், தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே, இனிமேல் உன் முகத்தைப் பார்க்கவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தங்கை பிரிந்து போய்விட்டதாகப் பழங்குடி கதை கூறு கிறது. சூரிய வெளிச்சம் தொழுநோயைக் குணப்படுத்தும் என்று போன்டா மக்கள் நம்புகின்றனர். சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம் பூ. அது, மருத்துவ ரீதியாக தொழுநோயைக் குணமாக்கக் கூடியது. ஆகவே, சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்து விட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோயிலில் எருக்கம் பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தனது கட்டுரையில், 'இது பழங்குடி மரபின் நீட்சி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கலவிச் சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்​பெற்றதற்குக் காரணம், சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள். அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே, சூரியனின் முன்பாக பாலுறவு காட்சியாக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.

13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொனார்க்கில் எப்படி ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி வந்தது? அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் முழங்கால் வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகச்சிவிங்கியை மன்னருக்குப் பரிசாக அளிப்பதற்குக் கொண்டு வருவது போலத்தான் காணப்படுகிறது. சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் சிற்பத் தொகுதிகளில் உள்ள யானை வரிசையில் ஒன்றாக ஆப்பிரிக்க யானையும் இருக்கிறது.


ஒரிசாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் 13-ம் நூற்றாண்டில் நேரடியான கடல் வணிகம் நடந்து இருக்கிறது என்பதன் வரலாற்றுச் சாட்சிபோலவே இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்துக்கு வணிகம் செய்வதற்கு வந்த கடலோடிகள், ஒட்டகச்சிவிங்கியைப் பரிசாக அளித்து இருக்கின்றனர். வங்காளத்தில் இருந்து அது, மைசூர் அரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒட்டகச்சிவிங்கி, இந்தியாவுக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவுக்குப் போனது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 14-ம் நூற்றாண்டில் சீனா மிகப் பெரிய கடல் பயணத்தைத் தொடங்கியது. 317 கப்பல்கள். அவற்றில் 27 ஆயிரம் ஆட்கள் என்று பிரமாண்டமான கடல் பயணத்துக்கு மன்னர் அனுமதி அளித்தார். இந்தக் கடல் பயணத்துக்குத் தலைமை வகித்தவர், 'ஷாங் ஹே’(Zheng He) என்ற அரவாணி. அவர், மன்னர் ஜுடேயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

அப்பா போரில் இறந்துவிடவே சிறு வயதில் அடிமையாக விற்கப்பட்டார் ஷாங் ஹே. அவரது ஆண் உறுப்பு நீக்கப்பட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார். சீன மன்னர்கள், அரவாணி​களின் படை ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்புத் துண்டிக்கப்பட்டு அரவாணி ஆக்கப்பட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரத்தைக் காவல் காப்பது. அரசிக்கு மெய்க்காவல் செய்வது ஆகியவைதான். அரவாணிகளாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் போர்த் திறனில் வலிமை பெற்றிருந்தனர்.

ஷாங் ஹே அப்படித்தான் வளர்க்கப்பட்டார். குறிப்பாக, ஜு டே இளவரசராக இருந்த நாட்களில் அவருக்குச் சேவகம் புரிந்துவந்த ஷாங் ஹே, கொஞ்சம் கொஞ்சமாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போதுதான், மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே, அண்டை நாடுகளுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனால்தான், ஷாங் ஹே தலைமையில் கடல் பயணம் செல்லும்படி உத்தரவிட்டார். பெரிய பொருட்செலவில் இந்தப் பயணம் தொடங்கியது.

இதில், முதல் கடல் பயணத்திலேயே ஷாங் ஹே இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். வங்காளத்துக்கும் வந்து இருக்கிறார். பிறகு, கேரளாவின் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்த மன்னர்களைச் சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து இலங்கை, கம்போடியா, வியட்நாம் என்று கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்தபோது, வங்காளத்தில் முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இருக்கிறார் ஷாங் ஹே. அவரால் நம்பவே முடியவில்லை. சீனப் புராணங்கள் 'க்யூலின்’ என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது. ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தைக் காண்பது புனிதமானது. கன்ஃபூசியஸ்கூட இதைப்பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டு இருக் கிறார். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங் கை நேரில் கண்ட ஷாங் ஹே மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆப்பிரிக்க வணிகக் குழுவினரை அணுகி, தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு மாற்றாக சீனப் பட்டும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் நிறையவே கொடுத்து இருக்கிறார். சொர்க்கத்தில் இருந்து ஒரு விலங்கைக் கொண்டு வருவதாக மன்னருக்குக் கடிதமும் அனுப்பினார். மன்னரால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தனர் என்று ஆச்சர்யம் அடைந்தார். அதை, 'க்யூலின்’ என்றே அழைத்து இருக் கின்றனர்.

ஒட்டகச்சிவிங்கி சீனாவுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் வந்திருப்பது, கடவுளின் ஆசி தனக்கு நேரடியாகக் கிடைத்து இருப்பதாகவே மன்னர் நம்பினார். அதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்து இருக்கின்றனர்.  தேவலோகத்தில் இருந்த மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது.

ஒட்டகச்சிவிங்கி அதிகமாகத் தூங்குவது இல்லை. அது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கக்கூடிய மிருகம். அதிலும் சில நாட்கள் 10 நிமிடங்கள் மட்டுமே தூங்கும். வான் உலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று மன்னர் நம்பினார். ஒட்டகச்சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானைக் காண்பதும் அந்த நம்பிக்கையை உறுதி செய்தது. ஒட்டகச்சிவிங்கியை எப்படிப் பராமரிப்பது என்று மன்னருக்குத் தெரியவில்லை. அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்குப் புதிராகவே இருந்தது. அதற்காகவே, ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.

ஷாங் ஹே உடனே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பான மனிதர்களை சீனர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆகவே, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகி விடுகிறார்கள் என்று நம்பினர். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியைப் பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். இப்படித்தான், சீனாவுக்கு ஒட்டகச்சிவிங்கி வந்தது என்று ஷாங் ஹேவின் கடற்பயணக் குறிப்பு கூறுகிறது.

இதே 1486-ம் ஆண்டு இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்குப் பரிசாக ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி  அனுப்பி வைக்கப்பட்டு, இத்தாலி வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கின்றனர். ஆனால், சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை.

இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு. அந்த வரலாற்றை நாம் நுட்பமாக ஆராய்ந்தால், அதனுள் காலனியத்தின் தாக்குதல் எவ்வளவு வலிமையானது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. திபெத்தியக் கலைமான்கள், பனிச் சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பறக்கும் அணில்கள், சிங்கமுகக் குரங்கு என்று எத்தனையோ அரிய மிருகங்கள் வேட்டையாடப்பட்டு, உணவுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மருந்துக்காகவும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலப் பறவை, விலங்கு, பூ என ஒன்றைத் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தின் மாநில மலர் காந்தள், பறவை பச் சைப் புறா, விலங்கு வரையாடு. இவற்றை எத் தனை பேர் பார்த்து இருப்பார்கள் என்பது தெரிய வில்லை. விலங்குகளையும் பறவைகளையும் வெறும் அடையாளச் சின்னங்களாக வைப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் நமது கடமை. மனிதர்கள் தங்களின் சுயலாபத்துக்காக விலங்குகளைப் பரிசளிப்பது மன்னர் காலம் தொட்டு இன்று வரை நடந்துவருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை.

Tuesday, January 01, 2013

எனது இந்தியா (யானைப் போர்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

மன்னர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அரிய வைரங்கள், முத்து மாலைகள், தங்க நகைகள், பட்டு வஸ்திரங்கள் பற்றிய செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது. ஆனால், பல்வேறு அரசர்களுக்கு பரிசாகப் அளிக்கப்​பட்ட மிருகங்கள், அதன் பின்​புலம் உள்ள சுவாரஸ்​யமான வரலாறு இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை, காண்டாமிருகம், மான் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காண முடிகிறது. அதுபோலவே, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஒட்டகச்சி​விங்கிகள், கிளிகள், பூனைகளும்கூட பரிசாகத் தரப்பட்டு இருக்கின்றன. 1515-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை, போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை. அந்த காண்டாமிருகத்தை, போப்புக்குப் பரிசாக அனுப்பிவைக்க முடிவு செய்து, மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசன்.

அந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது. தனக்குப் பரிசாக கொண்டுவரப்பட்ட அந்த அதிசய மிருகம் எப்படி இருந்தது என்பதைஅறிந்து​கொள்ள வேண்டும் என்று போப் விரும்பி​யதால், புகழ் பெற்ற ஓவியர் டூரரை அழைத்து, அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயே அவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்துமுடித்த அதிசயமும் நடந்தது. காண்டாமிருகங்கள் இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது போல​ஸ்பெயின், போர்ச்சுகல், கிரேக்கம், சீன அரசர்களுக்குப் பரிசாக யானைகளும் அனுப்பிவைக்கப்பட்டன. மன்னர் ஒரு யானையைப் பரிசாக அனுப்பும்போது, அதனைப் பராமரிப்பதற்காக 12 பேரையும் கூடவே அனுப்பிவைப்பது வழக்கம். இரண்டு பேர் அதற்கு உணவு தருபவர்கள். இருவர் மாவுத்தர்கள். இரண்டு பேர் யானை வீதியில் உலா வரும்போது முன்னே குதிரையில் சென்று அறிவிப்பவர்கள். இரண்டு பேர் யானையை அலங்காரம் செய்​பவர்கள். ஒருவர், யானை மீது உட்காரும் பூச்சிகளை விரட்டுபவர். ஒருவர், யானை லத்தியைசுத்தப்​படுத்துகிறவர். ஒருவர் யானைக்கு மருத்துவம் பார்ப்​பவர். இன்னொருவர் யானைக் கொட்டிலின் காவலாளி. இந்த 12 பேர் சேர்ந்துதான் யானை​யைப் பராமரிக்க வேண்டும்.  


கேரளாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட யானைகள், லிஸ்பனில் இருந்த மிருகக்காட்சி சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்​பட்டன. 1551-ம் ஆண்டு ஒரு யானையை மலபார் பகுதியில் பிடித்து, அதைக் கப்பலில் ஏற்றி ஸ்பெயின் மன்னருக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர். அதன்பெயர் சுலைமான். அந்த யானையுடன் இன்னொரு கப்பலில் சிங்கமுகக் குரங்குகள், மயில்கள், புனுகுப்பூனை ஆகியவையும், யானையைப் பராமரிக்கும் ஊழியர்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். யானை கொண்டுவரப்பட்ட கப்பலை, பிரெஞ்சுக் கடற்கொள்ளையர் தாக்கினர். அவர்கள், அதற்கு முன் யானையைப் பார்த்ததே இல்லை. ஆகவே அதை, நரகத்தில் இருந்து தப்பிவந்த கொடிய விலங்கு என்று நினைத்து பயந்து, தலைதெறிக்க ஓடினர். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட யானை, ஸ்பெயின் தேசம் எங்கும் கால்நடையாக நடத்திச் செல்லபட்டு மன்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வீதம் அந்த யானை ஓர் ஆண்டு காலம் நடந்து, வியன்னா நகரை அடைந்தது. தாங்க முடியாத குளிர், யானைக்கு என்ன உணவு கொடுப்பது என்று தெரியாத குழப்பம், யானை கத்தும்போதெல்லாம் அதற்குக் கொடுக்கப்பட்ட அடி என அத்தனையும் ஒன்றுசேர்ந்து அந்த யானையைக் கொன்று விட்டன. 1553-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த யானை இறந்தது. அந்த யானையின் நினைவாக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய நாவலாசிரியர் ஜோஸ் சரமாகோ, 'யானையின் பயணம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்திய யானையுடன் சென்ற இரண்டு மாவுத்தர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உருவச்சித்திரம் ஸ்பெயினில் இன்றும் ஓவியமாகக் காணப்படுகின்றன.

1398-ம் ஆண்டு சாமர்கண்ட்டில் இருந்து மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்த தைமூர் ஒரு பெரும் படையுடன் கிளம்பினார். செப்டம்பர் 22-ம் தேதி தைமூரின் படை, சிந்து நதிக்கரையை அடைந்தது. ஒரு லட்சம் பேர் கொண்ட படையுடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்டார் தைமூர். ஆனா லும், தைமூர் பயந்தது இந்தியாவில் இருந்த யானைப் படையை பார்த்துத்தான்! டெல்லி சுல்தான் முகமது ஷாவின் யானைப் படையை எதிர்கொள்ள, தைமூர் பயந்துகொண்டு இருந்தான். கரிய உருவங்கள் கம்பீரமாகத் திரண்டு நிற்பதைப் போர் முனையில் கண்டபோது, அவன் மனம் இதுபோன்ற வலிமையான மிருகம் தன்னிடம் இல் லையே என்று ஆதங்கப்பட்டது. தைமூரின் வீரர் கள், ஷா-வின் படை வீரர்களை வெறிகொண்டு தாக் கினர். யானைப் படையைச் சமாளிக்க வைக்கோல் மூட்டை ஏற்றிய எருமைகளைக் களத்தில் ஓடவிட்டு வைக்கோலுக்குத் தீ வைத்தார் தைமூர்.


இதனால், வெற்றி அவர் வசமானது. தனது தேசத்துக்கான வெற்றிப் பரிசாக 120 யானைகளை டெல்லியில் இருந்து கொண்டுசென்றான் தைமூர். அந்த யானைகளை சாமர்கண்ட் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். யானையின் கறுப்பு நிறம் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, யானைகளுக்கு பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணம் தீட்டப்பட்டது. இரவில் கேட்கும் யானையின் அலறல் அவனைப் பயமுறுத்தியது. ஒரு வாரத்திலேயே, அவனுக்கு யானைகளைப் பிடிக்காமல் போய்விட்டது. அவற்றைப் பட்டினி போட்டு வதைத்ததோடு கடுமையான விவசாயப் பணிகளையும் செய்வதற்கு அனுப்பிவைத்தான். இதனால், 16 யானைகள் மெலிந்து நோயுற்று இறந்துபோயின. மெலிந்துபோன யானைகளைப் பார்க்கப் பிடிக்காமல், அவற்றைத் தன் கண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தான். இப்படி, பரிசாகச் சென்ற யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவமே எல்லா காலத்திலும் நடந்து இருக்கின்றன.
ஐரோப்பாவுக்கு ஒட்டகச்சிவிங்கியை அறிமுகம் செய்தவர் ஜுலியட் சீஸர். கிமு 46-ம் ஆண்டு அலெக்​சாண்டிரியாவுக்கு அவரே ஓர் ஒட்டகச் சிவிங்கியை வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்தார்.

அதன் பிறகு, துருக்கி சுல்தான் 1487-ம் ஆண்டு ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியை, இத்தாலிய அரசனுக்குப் பரிசாக அளித்து இருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி இந்தியாவுக்குக் கொண்டு​வரப்பட்டதற்கு ஒரு நேரடிச் சான்று இருக்கிறது. அது, ஒரிசாவின் கொனார்க் கோயிலில் உள்ள சிற்பம். கொனார்க்கில் உள்ள சூரியக் கோயிலை முழுவதும் சுற்றிப்பார்க்க ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும். போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகிறவர்கள், அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்துகொள்ள முடியாது. அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம் மிக முக்கியமான வரலாற்று சாட்சி. கொனார்க்குக்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன. ஒன்று, அது சூரியனின் கோயில். இன்னொன்று, பாலுறவுச் சிற்பங்களின் கூட்டுக் கலைக்கூடம். காலம் குறித்து அதிகம் யோசித்தவர்கள் இந்தியர்கள். காலத்தை அறிவது என்பது கலை, விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியச் செயல்பாடாக இருந்திருக்கிறது. காலம் குறித்த இந்தியர்களின் பார்வை நுட்பமானது. காலத்தைத் துல்லியமாக வரையறுத்து அறிவியல்பூர்வமாக அணுகுவது ஒரு புறம் என்றால், அதுகுறித்த தொன்மங்களும் பழங்கதைகளும், சிற்பங்களும், கோயில்களுமாகக் கற்பனை வளம் மறு பக்கம் இருக்கிறது. நம் காலம் இரண்டுக்குமான ஊசலாட்டத்தில் இருக்கிறது.

சச்சின்

சச்சின் எனும் சகாப்தம் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டது. 23 வருடங்கள், 463 போட்டிகள், 18,426 ரன்கள். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் என எல்லாமே உலக சாதனைகள்.

சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக்காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமையும் சச்சின் வசமே இருக்கிறது. சச்சினின் வெற்றிகள் சுலபமானதாக இருக்கவில்லை. பல ஆட்டங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற தனி ஆளாக அணியைத் தோளில் தாங்கி ஆடி அசத்தியவர்.

உலகக் கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு முறைகூட தோற்றது இல்லை. அந்த வரலாறுக்கு சச்சினே முக்கியக் காரணம். 2003 உலகக் கோப்பையில் 75 பந்துகளில் 98 ரன்கள். 2011 உலகக் கோப்பையில், அணியில் மற்றவர்கள் சொதப்பியபோது, 85 ரன்கள் அடித்தார். ஆனால், இந்தச் சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் இல்லை. அதையும் தாண்டி அவரது குணம் இத்தனை ரசிகர்களைக் கொடுத்து இருக்கிறது.


முதன்முதலில் தேசியக் கொடியைத் தன் ஹெல்மெட்டில் இடம்பெறச் செய்து, தேசபக்தியைப் பிள்ளைகள் மத்தியில் விதைத்தவர். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது அவரது தந்தை மரணம் அடைந்தார். தந்தைக்கான கடமையைச் செய்துவிட்டு களத்துக்குத் திரும்பிய சச்சின், கென்யாவுக்கு எதிராக 140 ரன்கள் அடித்தார். பந்து வீச்சாளர்கள் மைதானத்தில் எவ்வளவு சீண்டினாலும் சச்சினின் எதிர்வினை ஒரு சிரிப்புதான். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை நிஜமாக்கியவர் சச்சின்.

ஆஸ்திரேலியாவுடன் மிக அதிக ரன்களை அடித்த வீரர் என்பதே சச்சினின் இணையற்ற ஆட்டத்தின் சிறப்பைச் சொல்லும். கிரிக்கெட்டின் கடவுள் எனப் பலரால் அன்போடு அழைக்கப்பட்டவர். ''எதுவரை கிரிக்கெட் ஆடுவேன் எனப் பலரும் கேட்கிறார்கள். நான் முதல்முறை மட்டையைத் தொட்டபோது என்ன பரவசம் உண்டானதோ, அதே சிலிர்ப்பு இன்னமும் உண்டாகிறது. அந்தக் காதல் குறையாத வரை கிரிக்கெட் ஆடுவேன்'' என்று முன்பு ஒருமுறை சொல்லி இருந்தார். அவருக்குக் கண்ணீருடன் ஒரு நாள் போட்டிகள் விடைகொடுக்கின்றன. காதலுடன் டெஸ்ட் போட்டிகள் காத்திருக்கின்றன.


சச்சினின் சக்ஸஸ் ஃபார்முலா 10 

ஆர்வம்கொள்: இளம் வயது சச்சினின் கிரிக்கெட் குருநாதர் ரமாகாந்த் அச்ரேகர். அவரிடம் பயிற்சி எடுத்தபோது, மைதானத்துக்கு முதல் ஆளாக வரும் சச்சின், வீடு திரும்புவதில் கடைசி ஆளாக இருப்பார்.

பயிற்சி தவறேல்: போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ, அன்றாடம் பேட் பிடித்து பயிற்சி செய்யத் தவறியதே இல்லை. 'நாமதான் கில்லியாச்சே’ என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை.

வியூகம் வகுத்திடு: புதுவிதமானத் தடைகள் வந்தால், அதற்கு ஏற்றபடி வியூகம் வகுத்து ஜெயிப்பார். எந்த பௌலர் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறாரோ, அவரது பந்துகளை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி எடுப்பார்.
ஒழுக்கம் போற்று: இளம் வயதில் உலகப் புகழும், கோடிக் கணக்கான பணம் கிடைத்தபோதும் சுயக் கட்டுப்பாட்டுடன் கடமையில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

உடலுறுதி பேணு: முதுகுத்தண்டு மற்றும் முழங்கைக் விரல்களில் அடிக்கடி ஏற்படும் காயம் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்போதும் சோர்ந்துவிடாமல் உடல் உறுதியைப் பேணுவதே அடிப்படை என்பதை உணர்ந்தார்.

செயலில் பதிலளி: 'அவுட் ஆஃப் ஃபார்ம்’ காரணமாக பல முறை விமர்சிக்கப்படும்போது எல்லாம் வாய் வார்த்தைகளால் பதில் அளிக்கும் பழக்கம் இல்லை. தன் ஆட்டத்தின் மூலமே தொடர்ந்து பதிலடி தந்தார்.

குழுவாகச் செயல்படு: எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் குழு ஒற்றுமை மிக முக்கியம் என்பது சச்சினுக்குத் தெரியும். தனது சக வீரர்களுடன் இணைந்து அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்பட்டார்.

உன்னை நீ நம்பு: ஓர் ஆண்டு காலமாக 100-வது சதத்தை அடிக்க முடியாமல் திணறியபோதும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இடைவிடாமல் முயன்று அந்தச் சாதனையையும் வசப்படுத்தினார்.

சமூகநலன் கருது: சுயநலனுக்காக பொதுநலனைத் தவிர்க்கக் கூடாது. பல கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தபோதும் 'மதுபானத் தயாரிப்புகளை நான் விளம்பரப்படுத்துவது இல்லை’ என மறுத்தார் சச்சின்.

கனவைக் கைவிடேல்: உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் சச்சினின் முதல் கனவு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அது நிறைவேறியது. கனவைக் கைவிடாமல் பயணித்தால், அதை அடைவது உறுதி என்பதை நாமும் உணரலாம்.

Thursday, December 27, 2012

எனது இந்தியா (தையல்காரர் தயாரித்த கொடி! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால், பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம் காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும் கூறுகின்றனர். மேடம்  காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில் அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவரு​டைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா, பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர் விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது.


பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது. இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல் நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம் ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.

அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணி​யாற்றினார். அந்தக் காலத்தில் லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடு​படுவோரை எல்லாம் ஒன்று திரட்டியது. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில்  இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் ​காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று காமா குறிப்பிட்டுள்ளார்.

1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன. உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு இருந்தது. இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, பிங்காலி வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற் கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும் குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில யோசனை வழங்கினார். அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக் கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே, காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில் இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.

1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகா​சபை கூடியபோது, அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்​தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில் அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர். உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24 ஆரங்​கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்​கொண்ட தர்மச் சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்​றன. சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோ​கச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல் தூணை நிறு​வினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு செய்யப்​பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்​களிலும் மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம். அதுவும்கூட, சம்பிரதாய​மாகவே.

இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன் மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்பட​வேண்டிய உண்மை.

Saturday, December 22, 2012

எனது இந்தியா (தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி!) - எஸ். ராமகிருஷ்ணன்....

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அடை​யாளங்கள், தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி. இந்த மூன்​றையும் அதன் வரலாறு அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம். 'ஜன கண மன’ எனத் தொடங்கும் நமது தேசிய கீதத்தைப் பாடுகிறவர்களில் எத்தனை பேருக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும்?

தேசிய கீதத்தின் அர்த்தம் தெரியாமலேயே பாடுவது தவறு இல்லையா? மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள் ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம் ஐந்து பத்திகளை தாகூர் எழுதி இருக்கிறார். தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்தது. ஆகவே, அன்று பாடப்பட்ட இந்தப் பாடல் இங்கிலாந்து மன்னரை வரவேற்றுப் பாடப்பட்டது என்ற சர்ச்சைகூட சமீபத்தில் உருவானது.

இது, அன்றைய ஆங்கில நாளேடுகள் வெளியிட்ட தவறான தகவலால் ஏற்பட்டது. உண்மை​யில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாட​லையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத 'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்​மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாகத் தகவல் வெளி​யிட்டன. அந்தக் குழப்பமே இன்று சர்ச்சையாக எழுந்துள்ளது. வங்காளத்தில் எழுதப்பட்ட நமது தேசிய கீதத்தை, இந்திப் பாடல் என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுபோன்ற பிழையான தகவல்கள், வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன.


இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு. அவர்தான் பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா’ என்ற பாடலை எழுதினார். வங்காள மொழியில் அமைந்த 'ஜன கண மன’ பாடலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவரும் தாகூரே!

1911-ம் ஆண்டு 'ஜன கண மன’ பாடப்பட்டாலும் அதற்கு முறையாக இசை அமைக்கப்பட்டது 1918-ம் ஆண்டுதான். இந்தப் பாடலுக்கு, ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் எச். கசின் மற்றும் அவரது துணைவியார் ஆகிய இருவரும் இசை அமைத்தனர். மதனப்​பள்ளியில் அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த தியாசபிக்கல் கல்லூரியில், 1919-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கி இருந்த நாட்களில்தான் தாகூர் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்போது, கல்லூரியின் முதல்வராக இருந்த மார்க்ரெட் கசின், தாகூரின் முன்னிலையில் இந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தார். அதை, தாகூர் மிகவும் ரசித்துப் பாராட்டி இருக்கிறார். அந்த மெட்டுதான் இன்று நாம் பாடும் பாடலுக்கான அடிப்படை.  

தாகூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடலின் நகல் பிரதி இன்றும் மதனப்பள்ளியில் கண்காட்சிக்கு இருக்கிறது.

'ஜன கண மன ’ பாடலை நேதாஜி தனது ஐ.என்.ஏ-வில் தேசியகீதமாகப் பயன்படுத்தி வந்தார். ஐ.என்.ஏ-வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங். இதற்காக, இவருக்கு நேதாஜி தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்து இருக்கிறார். 'ஜன கண மன’ பாடல் இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட ஒன்று. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடாளுமன்றத்தில் திருமதி. சுவேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர், 'ஸாரே ஜஹான் சே அச்சாஹ்’ என்ற பாடலைப் பாடினர். அந்தப் பாடல்தான், இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. இந்தப் பாடலை எழுதியவர் மகாகவி இக்பால். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், எந்தப் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்ற கேள்வி எழுந்தது. காரணம், சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்’, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன’, முஹம்மது இக்பால் எழுதிய 'ஸாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய மூன்று பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இருந்தன.

இந்த மூன்றில் எதைத் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. காரணம், இந்த மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்று இருந்தன. அத்துடன், பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்தப் பாடல்களை உணர்ச்சிப்பூர்வமாக பாடி மக்களிடம் எழுச்சியை உருவாக்கி இருந்தனர். ஆகவே, எந்தப் பாடலை தேசிய கீதம் என அறிவிப்பது என்ற முடிவை அரசியல் நிர்ணய சபையின் வசம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்’ நாவலில் 'வந்தே மாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ளது. 'வந்தே மாதரம்’ பாடல், ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்ற பாடலாகத் திகழ்ந்தது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது.   இஸ்லாமியர் மனம் புண்படுவார்கள் என்பதால், இந்தப் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் உருவானது.

1908-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் பேசிய சையத் அலி இமாம், 'வந்தே மாதரம்’ பாடலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே​போல், 1923-ம் ஆண்டு காக்கி​நாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்​டத்தில், விஷ்ணு திகம்பர் 'வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்​றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்.

ஆரம்ப காலத்தில், 'வந்தே மாதரம்’ பாடலை தாகூர் ஆதரித்தாலும், 1939-ம் ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். இவர்களைப் போலவே காந்தி, எம்.என்.ராய் மற்றும் நேதாஜி ஆகியோரும் இது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்றால், அதைத் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டாம் என்று கருதினர்.

'ஸாரே சஹான் சே...’ பாடல் 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 'இத்திஹாத்’ என்ற வார இதழில் வெளியானது. இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்யவில்லை. இந்த மூன்று பாடல்களையும் அரசியல் நிர்ணய சபை பரிசீலனை செய்தது. ஆனாலும், எதைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் நீடித்தது. முடிவு உடனே அறிவிக்கப்படவில்லை. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில், இந்தியாவின் தேசிய கீதம் குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் தேசிய கீதம் பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, தேசியகீதம் எது என்பது குறித்த ஓர் அறிக்கையை ராஜேந்திர பிரசாத் வெளியிட்டார். அதில், தாகூர் எழுதிய 'ஜன கண மன’ பாடலின் சொற்களும் இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். அதே நேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்த 'வந்தே மாதரம்’ பாடலுக்கும் 'ஜன கண மன’-வுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், 'ஸாரே சஹான் சே’ பாடல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தப் பாடல் இன்றும் ராணு வத்தினரிடம் எழுச்சிமிக்க பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, தேசிய கீதம் பற்றி விவாதம் ஏதும் நடக்கவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு வரை ஆங்கிலேயர்கள், 'காட் சேவ் தி க்வீன்’(God save the Queen) என்ற பாடலைத்தான் இந்தியா எங்கும் பாடிக்கொண்டு இருந்தனர். அந்தப் பாடலுக்கு மாற்றாக 'ஜன கண மன’ ஒலிக்கத் தொடங்கியது. வங்காள மொழியில் அமைந்த இந்தப் பாடலின் ஒரு பகுதிதான் தேசிய கீதமாக இன்று பாடப்படுகிறது. இந்தப் பாடலின் எளிமையான மொழியாக்கம் இதுவே.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா - பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.
விந்திய ஹிமாசல யமுனா கங்கா - கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது. வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உத்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும் மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம்.

ஜன கண மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

1950-ல் இருந்து இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன’ பாடலும் தேசப் பாடலாக 'வந்தே மாதரம்’ பாடலும் பாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள், கிழக்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுன்ட் பேட்டனிடம் 1945-ம் வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி சரண் அடைந்தனர். எனவே, அந்த நாள் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அதனால், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க மவுன்ட் பேட்டன் முடிவு செய்தார் என்கிறார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

Friday, December 21, 2012

அருள்வாக்கு - ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?


வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.

ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! - ஞாநி


தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல் களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும் தான்.

தலித் இளைஞனும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாலும் அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாலும்தான் இந்தத் தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை. தாக்குதல் நடத்து வதற்கான மனநிலை ஏற்கெனவே கனன்று கொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்தக் காதல் திருமணம் அமைந்தது என்றே தோன்றுகிறது. இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு கிடைத்திருக்கக் கூடும்.

காதல் திருமணம்தான் உண்மையான பிரச்னை என்றால், நடந்த வன்முறையில் காதலர்கள் தாக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும் தாக்கப்படவில்லை. வீடுகளிலிருந்து ஆட்களை விரட்டிவிட்டு, வீடுகளையே தாக்கி அழித்திருக்கிறார்கள் தாக்கிய கும்பல்கள். தங்களைவிட மோசமான நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில் இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக, தங்கள் கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால் இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால் இருப்பது சுய சாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை பாதிக்கப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை அழித்திருப்பதாகவே தெரிகிறது.

நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்னையால் நடக்கவில்லை என்று வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்தத் தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது, எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம் அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.

மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து, பின்னர் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் சொல்கிறார். திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக் கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். பெண்ணை ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதி வெறி. இந்தச் சாதியினரெல்லாம் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்ததுபோல, இந்தச் சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய வரையறையை ராமதாசும் அவருடன் அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.

எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல் கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும் குழப்பிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித் இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே இல்லாத விடலைத்தனம் இருக்கிறது.

காதல் பற்றிய அந்த விடலைத் தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். அது காட்டி வருவது காதலே அல்ல. காமப் பசியைத்தான் காதல் என்று சித்திரித்துக் கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ் டீசிங் கொஞ்சநஞ்ச மல்ல. பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகும் மாணவியின் சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன் என்று மிரட்டும் பொறுக்கியை ஹீரோவாகக் காட்டுகிறது தமிழ் சினிமா. சினிமாவில் அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக் கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால், முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று நிறுத்திவிடுவார்கள். எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும்.

கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை, மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை. பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல் போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும், ஆண் உடலுக்குப் பெண்ணும் ஆசைப்பட்டு ஏங்குவதும்; அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல் என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவு என்ன? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள், தன்னை காதலிக்காததும் தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெற்றியுடன் ஆசிட் ஊற்றும்வரை போகிறது.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி. ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாக்குதலினால் இரு கண் பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட, அவளைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு பல லட்சங்களையும் திரட்ட அவளுடைய ஏழைப் பெற்றோர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள் - பணம் போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை - பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர, ‘உங்க சாதிப் பையன்கதான் மோசம் எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது.

சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில் எது காதல் என்ற குழப்பம் ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுபூர்வமாகத் தெரிந்து கொள்ள வழியில்லாமல், வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்த பின்னர்தான் நாம் சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்க முடியும். ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி நீடிக்காது.

நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள் எளிதானவை அல்ல.

சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள் முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும் அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள் அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ பிரதானமானதல்ல / தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாகச் சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம் அவர்களுக்கு எது தரும்? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல், விடலை வயதில் எப்படி சாத்தியம்? அதுவும் காதல் என்றால் காமம் என்றே நம்பவைக்கும் சினிமா சூழலில்?

ஒரு சிறுவனும் சிறுமியும் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூகச் சூழலில்? தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில்? இந்தச் சூழலை மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த வயதில் பார்த்தாலும் நம் மனத்திலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என் கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும்!

இந்த வாரக் கேள்வி

ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதை எதற்காக அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்? அடுத்து சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள துப்புரவாளர்களை நியமித்தால் அதற்கொரு விழா கொண்டாடுமா? கடும் மின் பற்றாக்குறை இருக்கும் நிலையில் எதற்காக இந்த விழாக்கள்- வீண் செலவுகள்?

இந்த வருட அதிர்ச்சி

கழிப்பறை இல்லாத வீடு

புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை அதிபுத்தி சாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?

இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத் தான் செய்திருக்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துக் கட்டியிருக்கும் அணு உலையில் வரப்போகும் அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப எதிர்ப்பாளர்களும் நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக்கழிவை வைக்கப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும், இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது. அடுத்து தற்போது அணுஉலைக் கழிவுகளில் 3 சதவிகிதம் 7 ஆண்டுகளுக்கு கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அணுக்கழிவுகளை எங்கே எடுத்துச் செல்வீர்கள்? என உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும் அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

Thursday, December 20, 2012

காரணம் - தயிர் கடைவது ஏன்?

 
பாவை நோன்பு மேற்கொண்டு, பகவானுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டியவர் ஆண்டாள் நாச்சியார். அவர் திருப்பாவையில் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று தொடங்கும் இரண்டாம் பாசுரத்தில், ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என்று பாடுகிறார். அடுத்த சில பாசுரங்களிலேயே, ‘ஆச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ’ என்கிறார். விரதம் இருப்போர் தயிர் கடைவது ஏன்? இது முரண்பாடு அல்லவா?
 
இப்படி ஒரு கேள்வி நம் மனத்தில் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு நான்கு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆசார்யார்கள்.

முதற்காரணம்: விரதம் இல்லாத குழந்தைகள், மூத்தோர்... உள்ளிட்ட பிறருக்கு நெய், பால், தயிர், வெண்ணெய் வேண்டாமா? அதனால் தயிர் கடைகிறார்கள்.

இரண்டாம் காரணம்: கண்ணன் வந்து தேடும்போது வெண்ணெய் போன்றவை இல்லையென்றால், பகவத் அபசாரமும், அவனது தோழர்களுக்கு அவை கிடைக்காவிடில், பாகவத அபசாரமும் ஏற்பட்டு விடுமே. தெய்வக் குற்றமும், அடியார் குற்றமும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று கடைகிறார்களாம்.

மூன்றாவது காரணம்: எவரும் எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும், தன் கடமையிலிருந்து தவறக்கூடாதாம். யசோதை தினமும் தயிர் கடைவதில் தவறவேமாட்டாளாம்.

நான்காவது காரணம்: ஓர் உட்பொருள். பகவத் சிந்தனை என்னும் மத்தினால் வேதம், மந்திரம், பாசுரம் (என்னும் தயிர்) என்னும் சாரங்களை கடையக் கடைய, நல்ல ஞானம், மோட்சம் பற்றிய ஞானம், நற்கதி ஆகியவை கிடைக்குமாம்.

வெறும் பாசுரமாக, பொருளறியாமல் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு, இப்படி ஆழ்ந்து பார்க்கும்போது, திருப்பாவை தித்திக்கும் அமுதமாகிறது.

எனது இந்தியா (கல்விக்காக நூறு கிராமங்கள் !) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவில் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி,  பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, பௌத்தம் குறித்து  ஆய்வு செய்தார் யுவான் சுவாங். அதன் தொடர்ச்சியாக அவர், நாளந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்தவுடன், அங்கேயே தங்கி ஆய்வு செய்யவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்​தனர்.
 யுவான் சுவாங் நாளந்​தாவில் யோக சாஸ்​திரங்​களைக் கற்றுக்​கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாளந்தா பல்கலைக்​கழகத்தில், 10 ஆயிரம் மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வந்தனர். அங்கே 18 பாடப் பிரிவுகளில் மாண​வர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இதற்​காக 1,541 ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வருமானத்துக்காக, 100 கிராமங்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதோடு, 200 வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பட்சணங்களும் தானமாகத் தரப்பட்டன.

அங்கே தங்கியிருந்து மகாயான பௌத்த சமய சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன்பிறகு, அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சி புரத்துக்கு வந்துசேர்ந்த யுவான் சுவாங், அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


இந்தியாவில், புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரை உள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் பார்வையிட்ட யுவான் சுவாங், அதைப்பற்றி விரிவான குறிப்புகளாகப் பதிவு செய்து இருக்கிறார்.

17 வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்ப அவர் முடிவுசெய்தபோது, அவரோடு 20 குதிரைகளில் 657 தொகுதிகளாக்கப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவற்றில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்த்திரங்கள்.

இந்தியாவுக்குள் வரும்போது சந்தித்த பிரச்னைகளைவிட, சீனாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர், சீனா சென்று சேர்ந்து, தனது சேகரிப்புகள் அத்தனையையும் சேர்த்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார். யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி, யுவான் சுவாங் கொண்டுவந்த நூல்கள் அத்தனையையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவியை மன்னர் அளித்தார்.

இந்த அறிவாலயத்தில் இளம் துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன பாஷையில் மொழிபெயர்த்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தகங்களின் 1,335 அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நான்கு தொகுதிகளாக தனது நினைவுக் குறிப்புக் களையும் எழுதி இருக்கிறார். அந்த நினைவுக் குறிப்புக்களின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல், கணிதம், விவசாயம், கலைகள் பற்றி நிறைய அறிய முடிகிறது.

குப்தர் கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மதச்சடங்குகள், கோட் பாடுகள் பற்றியும் யுவான் சுவான் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

664-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள், தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்துவிட்டு, கடந்துபோன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் தூங்கச் சென்ற யுவான் சுவாங், அப்படியே இறந்து போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்தக் காப்பகமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசப் பயணம், 'நாட்டார் கதை’ போல மக்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு எண்ணிக்கையற்ற கிளைக் கதைகளைக் கொண்டதாகிவிட்டது. சமீபத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கைக் கதையில், மாயம் செய்யும் குரங்குகளும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்பமாக நெய்கிறது.
யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் அவர் கேள்விப்பட்ட கதைகள் மாற்றுருவில் கலந்து இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் பௌத்த ஜாதகக் கதை மரபில் உருவானவை. குறிப்பாக, மகாசத்துவர் என்ற மன்னர் பசியால் துடித்த பெண் புலிக்கு தனது உடலை உணவாகத் தருவதற்காக பாறையில் இருந்து குதித்தார். அப்படியும் பெண் புலியால் நடந்து வந்து அவர் உடலைப் புசிக்க முடியவில்லை. அதனால், அவரே தனது காயங்களுடன் புலியை நெருங்கிச் சென்று தனது உடலைக் கிழித்து குருதியை வடிய விட்டார், அதைக்குடித்து புலி பசி தணிந்தது.

அப்படி, புலிக்காக தனது உயிரைத் தந்த மன்னரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்​பட்டது. அது தக்ஷ சீலத்தின் அருகே இருப்பதாக யுவான் சுவாங் கூறுகிறார். இது புத்த ஜாதகக் கதைகளில் ஒன்று. அதன் மாறுபட்ட வடிவம் வேறுவிதமாக கதாசாகரத்தில் கூறப்படுகிறது, ஆனால், இப்படியான ஸ்தூபி ஒன்று அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டது என்ற உண்மை அதில் புதைந்திருக்கிறது. ஆகவே, யுவான் சுவாங்கின் தகவல்களை முழுமையாக மறுக்கவும் முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடி யாது.

இன்றும், பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான் சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் புத்தகங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடுகிறார்கள். என்றோ சரித்திரத்தில் படித்த யுவான் சுவாங்கும், அல்​பெரூனியும் மட்டுமே யாத்ரீகர்கள் அல்ல. அறிவைத் தேடியும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் பொருட்டும் பயணம் செய்யும் அனைவரும் மதிக்கப்பட வேண்டிய பயணிகளே.

மண் புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்​கிறார்கள்.

இன்று, தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் தமிழிலே வாசிக்கக் கிடைக்கின்றன. யுவான் சுவாங்கின் பயணத்தை, அசோகன் முத்துசாமி ஒரு நீண்ட நாவலாக எழுதியிருக்கிறார். 'போதியின் நிழலில்’ என்ற அந்த நூல் யுவான் சுவாங்கை தமிழில் அறிந்து கொள்ள நினைப்ப​வர்களுக்கு ஓர் எளிய வழிகாட்டியாகும்.

Tuesday, December 18, 2012

அருள்வாக்கு - ஸ்நேகிதன் யார்?


ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?
ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

தானம் என்பது எது?
கேட்காது கொடுத்தல்.

ஸ்நேகிதன் யார்?
பாவஞ் செய்யாது தடுப்பவன்.

அழகு எது?
சீலம்

வாக்கிற்கு அழகு எது?
ஸத்யம்.

வித்வான்களின் மனதைக் கவர்வது யாது?
நல்ல கவிதையும் புத்தியுள்ள ஸ்த்ரீயும்

முடவன் யார்?
முதிர்ந்த வயதில் தீர்த்த யாத்திரை போகிறவன்.

ஸகல குணங்களையும் அழிப்பது எது?
லோபம் - கருமித்தனம்

பகைவன் எவன்?
காமம்

பொய் சொல்வது எப்பொழுது பாபமல்ல?
தர்மத்தை ரக்ஷிக்கச் சொல்லப்பட்ட பொய் பாபமல்ல.

எது தர்மம்?
நமது வம்சத்தில் பிறந்த பெரியோர்களால் ஸ்நானானுஷ்டான முள்ளவர்கள் அனுஷ்டித்த தர்மமே நமக்கும் தர்மம்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி - பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)
(கேள்வி - பதில் தொடரும்)

உங்கள் தட்டில் உணவா விஷமா - அரிசி

நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆராய நினைக்கும் நாம், முதலாவதாக தொட்டுப் பார்க்க வேண்டிய பெரும்பொருள்... அரிசியே!

ஆம்... உலகில் 60% மக்களின் அன்றாட உணவு அரிசிதான். உலகில் பயிரிடப்படும் தானியங்களில், மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது நெல்தான். மக்காச்சோளத்தின் பெரும்பகுதி விளைச்சல், மனிதர்களைவிட, கால்நடைகளுக்குத்தான் தீவனமாகிறது. ஆகவே, உலகில் மனிதர்களுக்கான தலையாய விளைபொருள்... நெல்தான்!

அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை.

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... இந்தியாதான்- அதுவும் நம் தமிழகம்தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்?!

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும், அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும்     அழைக்கப்படுகிறது. இப்போது பாருங்கள்... அரிசி -     ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்! ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?


இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் இல்லை. சங்க காலங்களுக்கு  முந்தைய காலத்தில், முன்தோன்றிய மூத்த இலக்கியமான தொல்காப்பியத்தில், நெல்லைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தின் காலம் சுமார் கி.மு 500 முதல் 1,400 ஆண்டுகள் வரை என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அப்படியானால், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நெல்லின் ஆதிக்கம் இருந்தது என்பது விளங்கும்.

தொல்காப்பியர் ஒரு பெரிய தமிழ்ப் புலவர் என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால், இன்றைய விஞ்ஞான முறை விவசாயத்துக்கு ஈடாக மரபியல் (genetics) பற்றியெல்லாம் அப்போதே பேசிய பெரும் 'இயற்கை விஞ்ஞானி' அவர் என்பதை, மருதமலை முருகன் என்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரித்து, அவற்றுக்கான இலக்கணத்தையும் பிறவற்றையும் விரிவாகக் கூறும் தமிழ் இலக்கியப் பாங்கு உலகில் வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். தொல்காப்பியம் தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து - இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் அரிசியைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் காணப் படும் கல்வெட்டுகளில், 'துவாபர யுகத்தில்... இந்திரனிடமிருந்து பாண்டிய மன்னன் அரிசியைப் பெற்றான்' என்ற செய்தி உள்ளது. கலியுகத்துக்கு முந்தையது துவாபரயுகம். இது, சுமார் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பார்கள். அப்படியானால், தமிழர்களின் அரிசிக்கு என்னதான் வயது?
இவற்றையெல்லாம்விட, சமீபத்தில் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிலும், பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற கிராமத்திலும் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பேராசிரியர் ராஜன் கண்டுபிடித்த உண்மைகள் பிரமிப்பானவை. அங்கு கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றின் உள்ளே, காற்றுப்புகாத மண்பாண்டம் ஒன்றில் இரண்டு கிலோ வைரவ சம்பா நெல் புத்தம் புதிதாக இருந்தது. அதை அமெரிக்காவில்  உள்ள ஓர் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பிய தில், அந்த நெல் கி.மு.480-ம் வருடத்தைச் சேர்ந்தது என்று முடிவு தெரிவிக்கப்பட்டது. 2,500 வருடங்கள் பூச்சி மருந்துகளின்றி கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் எத்தனை வியப் பானது?!

ஆதிச்சநல்லூர் என்ற பெயரையே சிறிது ஆராய்வோம். அதன் உண்மையான பெயர் ஆதிசெந்நெல்லூர் ஆதி + செந்நெல் + ஊர். செந்நெல் விளையும் பூமி என்றுதானே பொருள்? திருநெல்வேலி மட்டும் என்னவாம்? நெல் பயிரால் சூழப்பட்ட ஊர் என்றுதானே பொருள்? இந்த ஊரின் முக்கியக் கடவுள் நெல்லையப்பர் அல்லவா?!

பண்டைய தமிழர்களின் கலாசாரங்களும் விழாக்களும் அரிசியை மையப்படுத்தியே அமைந்தன. சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவும், தை மாத மகர சங்கராந்தியன்று இல்லந்தோறும் படைக்கப்படும் பொங்கலும் நெல் விளைச்சலைக் கொண்டாடும் பண்டிகைதான். இன்றைய திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு 'அட்சதை’யாகத் தெளிப்பது, அரிசியைத்தானே?!

பல்வேறு வகையான அரிசிகளைப் பற்றிய குறிப்புகள் நம் இலக்கியங்களில் நிறைய உள்ளன. மூங்கில் அரிசி முதல் யானை நின்றால்கூட மறைக்கும் அளவு உயர வளரும் மலை நெல்/யானை நெல் வரை பல பாடல்கள். கடைசியாக, உலகெங்கும் பேசப்படும் மூன்று வகை அரிசிகள் - கறுப்பு, சிவப்பு, வெள்ளை ரகங்கள் தமிழகமெங்கும் விளைந்தன.

1528-ம் வருடத்திய 'பழனி செப்பு பட்டயத்தில்’ சுமார் 12,000 வகை நெல் பயிர்கள் உண்டென்றும், அவற்றில் சுமார் 100 வகை பயிர்கள் முக்கியமானவை என்றும் குறிப்புகள் உள்ளன.

அந்தப் பயிர்கள் எல்லாம் இப்போது எங்கே? நிச்சயமாக அவற்றைக் கடல் எதுவும் கொள்ளவில்லை. 12,000 வகைகள் 100 ஆகி, அந்த நூறில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மூன்று ஆகி, கடைசியில் வெள்ளை - அதிலும் வெள்ளையிலும் வெள்ளை என்ற இன்றைய ஒற்றை இலக்கில் வந்து நிற்பதன் மர்மம் என்ன?!

Sunday, December 16, 2012

எத்தனால் பெட்ரோல்

வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு, உயரும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகரிப்பு, வளர்ச்சி குறைவது என இப்போதைக்குப் பல பிரச்னைகள் இந்தியாவுக்கு. இந்தப் பிரச்னைகள் அத்தனைக்கும் காரணம், இந்தியா செய்துவரும் அதிகளவு இறக்குமதிதான். இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக அதிகம். கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்வதில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 1986-ல் ஒரு நாளைக்கு சுமார் மூன்று லட்சம் பேரல்களை இறக்குமதி செய்தோம். ஆனால், அதுவே இப்போது பத்து மடங்குக்கு மேலாக உயர்ந்திருக்கிறது.

 கடந்த சில வருடங்களாகவே இந்தியா ஏற்றுமதி செய்யும் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அளவு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே போய்விடுகிறது. கடந்த 2011-12-ம் ஆண்டு இறக்குமதி மட்டும் 485 பில்லியன் டாலர். இதில் கச்சா எண்ணெய் மட்டும் 160 பில்லியன் டாலர்கள். ஆனால், இந்தியா செய்யும் ஏற்றுமதி வெறும் 300 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கூட்டிக்கழித்துப் பார்த்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் நாளுக்குநாள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நிச்சயம் நமக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.

இந்தச் சூழ்நிலையில் அதன் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, பெட்ரோலுடன் 5 சதவிகிதம் எத்தனாலைக் கலக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் வருடத்துக்கு சுமார் 100 கோடி லிட்டர் பெட்ரோல் பயன்பாடு குறையும். தவிர, இந்தியாவில் எத்தனால் உற்பத்தி நிறைய இருக்கிறது. (கடந்த நிதி ஆண்டில் 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தியானது!)

2009-ம் ஆண்டே இதற்கான முடிவு எடுக்கப்பட்டாலும் இப்போதுதான் மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதன் காரணமாக 15 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு வெளியிடப்படுவதும் குறையும். ஏற்கெனவே சில மாநிலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி அனைத்து மாநிலங்களிலும் கடந்த டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து 5 சதவிகித எத்தனாலைக் கலக்க வழி பிறந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், இந்தியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் எண்ணம் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுப்பது அவசியம். இல்லை எனில், பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வருமுன் காப்போம்!



Saturday, December 15, 2012

மோட்சம் தரும் ஏகாதசி!


 

வளர்பிறையில் வரும் ஏகாதசி, தேய்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி ஆகியன 25 ஏகாதசிகள் ஆகும். இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் 'மோட்ச ஏகாதசியையே, வைகுண்ட ஏகாதசி எனப் போற்றுகிறோம்!

திருமால் தமது நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதேநேரம், பகவானின் காதுகளில் இருந்து வெளிப்பட்ட அசுரர்கள் இருவர், பிரம்மனைக் கொல்ல முயன்றனர். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

ஆனால் அசுரர்களோ, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உமக்கே வரம் தருவோம்'' என்றார்கள். ஸ்வாமியும் ஒப்புக்கொண்டார். ''அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்று வரம் கேட்டார். அசுரர்கள் திகைத்தனர். ''ஸ்வாமி! தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டிக்கொண்டனர்.

அதன்படியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதி நேரத்தில், மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார். அங்கே திருமாலின் திவ்விய மங்கல வடிவம் கண்டு மகிழ்ந்தனர் அசுரர்கள். அப்போது அவர்கள், ''பகவானே, தங்களை விக்கிரக வடிவமாக பிரதிஷ்டை செய்து, மார்கழி- வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும்'' என்று பிரார்த்தித்தனராம்.

அவர்களின் வேண்டுதல் பலிக்க திருவருள் புரிந்தார் பெருமாள்.  இன்றைக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்கவாசல் வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு, வரம் தந்து வாழ்வளிக்கிறார் எம்பெருமான் (இதுபோன்று வேறுபல புண்ணியக் கதைகளும் உண்டு).

எனது இந்தியா (புத்தனைத் தேடிய பயணி !) - எஸ். ராமகிருஷ்ணன்....

பள்ளிப் பாடப் புத்தகங்களில் பலரும் படித்து, மறந்துபோன 100 பெயர்களில் ஒன்று யுவான் சுவாங்.
 சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி, பருத்து வீங்கிய கழுத்து, வட் டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடல் அமைப்பு கொண்ட யுவான் சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், அவரது பயணத்தின் பின்னுள்ள தேடுதலையும், அவர் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளவே இல்லை.

சமீபத்தில், ரிச்சர்ட் பெர்ன்ஸ்டெயின் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்பப் பயணம் செய்து, 'அல்டிமேட் ஜர்னி’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில், யுவான் சுவாங் மேற்கொண்ட பயணத்தின் இடர்ப்​பாடுகளையும், அவர் கடந்துவந்த பாதையின் வரைபடங்களையும் மீள்ஆய்வு செய்தபோது, 'எப்படி இந்த மனிதர் அந்த நாட்களில் பயணம் செய்தார்?’ என்று வியப்படைந்து, 'யுவான் சுவாங் ஒரு மகத்தான யாத்ரீகர்’ என்கிறார்.

'எவ்விதமான முறையான வரைபடமும் வாகன வசதிகளும் இன்றி நடந்தும், கோவேறுக் கழுதைகளிலும் யுவான் சுவாங் பயணம் செய்து இருக்கிறார். அதே பாதையில் இன்று எல்லா வசதிகள் இருந்தும் பாதுகாப்பாக ஆப்கானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் தாலிபான்கள், கண்ணி வெடிகுண்டுகள், தீவிரவாத வன்முறைகள்.

அந்தக் காலத்தில் மழை நேரங்களில் ஓர் ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்று உறுதியான இரும்புப் பாலம் இருக்கிறது. ஆனால், அதைக் கடக்க அரசு அனுமதி மறுப்பதால், பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்று தனது நூலை முடிக்கிறார். காலம் காட்டும் உண்மை இப்படித்தான் இருக்கிறது.

நாடு பிடிக்கவோ அல்லது மதப் பிரசாரம் செய்வதற்காகவோ, ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ், கேப்டன் குக், பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் போன்ற பயணிகளைப் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியாவுக்கு வந்துசேர்ந்த புத்தத் துறவி யுவான் சுவாங்.

தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார். கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக்குதிரைகளிலும்,கால்​​நடையாக நடந்தும் இவர் கடந்து வந்ததூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான் சுவாங்கின் சிறு வயதில் வேர்விடத் தொடங்​கியது.

யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்றுகொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர். யுவான் சுவாங்கின் சகோதரர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர். ஆகவே, தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலேயே அவருக்கு அறிமுகம் ஆனது.

தனது 12-வது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கப்பட்ட யுவான் சுவாங், அங்கே பௌத்தத் தத்துவமும் கன்பூசிய சிந்தனைகளும் கற்றார். அதன்பிறகு, அவர் பௌத்த அறிவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், 'தி கிரேட் லேர்னிங் டெம்பிள்’ என்ற மடாலயத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த மடாலயத்தில் 500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருந்தனர். அவர்களது முக்கியப் பணி பௌத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.

அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவில் இருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்தத் துறவிகள், தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காகச் செலவு செய்தனர்.

பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை மூத்த துறவிகள் பரிசீலனை செய்வார்கள். பிறகு, அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலப்பிரதியோடு ஒப்பீடு செய்யப்படும். முழுமையாகத் திருத்தம்செய்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக 40 துறவிகள் வேலை செய்தனர். அவர்கள் ஏடுகளைப் பிரதி எடுத்து, சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப் பார்கள். இப்படி, தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்றத் தொடங்கிய யுவான் சுவாங், இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.

இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழிபெயர்க்க முடிந்தது.

629-ம் ஆண்டு மடாலயத்தில் தங்கி இருந்த ஓர் இரவில், இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அருகில், தான் பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாகப் புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை உணர்ந்தார் யுவான் சுவாங்.

ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பகவான் புத்தர் பிறந்த இடத்தைக் கண்டு வர வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவைச் சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தனர். ஆனால், யுவான் சுவாங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்.

ஆனால், தாங் அரசு அந்த நாட்களில் யுத்தத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த காரணத்தால், எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. யுவான் சுவாங் சூழலைப் பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, குதிரையில் பயணம்செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தி​யாவுக்குச் செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே, அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டார்.

மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடி தொடங்கிய அவரது பயணம், எண்ணிக்கையற்ற பிரச்னைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும், வழிப்பறியும், பசியும், நோயும் அவரைத் தாக்கியது. ஆனாலும், அவர் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணித்தார்
சீனாவின் எல்லையைக் கடக்கும்போது, அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்துவிடும்படியாக ராணுவ அதிகாரி கட்டளை இட்டதும், 'அப்படித் தன்னைச் செய்வதாக இருந்தால், அந்த இடத்திலே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேன்’ என்று யுவான் சுவாங்  தனது கத்தியைக் கையில் எடுத்தார்.

அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி, எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தார். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, வெயிலும் தாகமும் வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்துப்போன யுவான் சுவாங், அந்தப் பாலைவனத்திலேயே இறந்து​விடக்கூடும் என்று நம்பினார். இனி, தனது முயற்​சியால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்று உணர்ந்த​வராக தன்னைக் குதிரையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் போகத் தொடங்​கியது. எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால், குதிரை எதையோ அறிந்தது​போல சீராகப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கண் விழித்தபோது, தன் எதிரில் பெரிய பாலைவனச் சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர்ப் பொய்கை இருப்பதையும் கண்டார்.

அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஓடிப்போய்த் தண்ணீரைக் குடித்தார். அங்கேவிளைந்​திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரைதன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளதுஎன்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான் சுவாங், அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்திய​தோடு, முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நாட்டை அடைந்தார்.

அந்த நாட்டின் அரசர் புத்தத் துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரைத் தேடிச்சென்றார். அரசரும் யுவான் சுவாங்கின் அறிவுச் செல்வத்தைக் கண்டு வியந்து, தனது ஆஸ்​தான குருவாக தன்னோடு வைத்துக்கொண்டார். ஓர் ஆண்டு அங்கே கழித்த யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்துக்குத் தயாரானபோது அரசர் அனுமதி தர மறுத்தார். தன்னை இந்தியப் பயணத்துக்கு அனுமதிக்கா விட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் தொடங்கினார். அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப் பிரதிநிதி என்று முத்திரை ஓலையையும், பாதுகாப்புக்காக ஆட்களும், வழியில் தேவைப்படும் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

ஆனால், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது, அவரை யாரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்தனர் கொள்ளைக்காரர்கள். அதனால், அவரை வழிமறித்துத் தாக்கி, காவலர்களைக் கொன்று அவரது உடைமைப் பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி நபராக விடப்பட்டவர், அங்கே இருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். வழி முழுவதும் பௌத்த மடாலயங்களில் தங்கியும், சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கைமுறை கலாசார செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதிக்கொண்ட யுவான் சுவாங், வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

Friday, December 14, 2012

அருள்வாக்கு - அரியக்குடிக்கு ஆலோசனை!


ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும் படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும் படியாய்ப் பண்ணணும்.

ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ் க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காகப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் - இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்."
அரியக்குடி நாத்தழுதழுத்து, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை" என்று கூறி விடைபெற்றார்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்