சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அடையாளங்கள், தேசிய கீதம்,
தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி. இந்த மூன்றையும் அதன் வரலாறு
அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம். 'ஜன கண மன’ எனத் தொடங்கும் நமது தேசிய
கீதத்தைப் பாடுகிறவர்களில் எத்தனை பேருக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும்?
தேசிய கீதத்தின் அர்த்தம் தெரியாமலேயே பாடுவது தவறு இல்லையா? மகாகவி
ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள்
ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம்
ஐந்து பத்திகளை தாகூர் எழுதி இருக்கிறார். தேசிய கீதம் முதன்முறையாக
1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில்
பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்தது.
ஆகவே, அன்று பாடப்பட்ட இந்தப் பாடல் இங்கிலாந்து மன்னரை வரவேற்றுப்
பாடப்பட்டது என்ற சர்ச்சைகூட சமீபத்தில் உருவானது.
இது, அன்றைய ஆங்கில நாளேடுகள் வெளியிட்ட தவறான தகவலால் ஏற்பட்டது.
உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ்
சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும்
தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத 'ஸ்டேட்ஸ்மேன்’,
'இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை
வாழ்த்திப் பாடியதாகத் தகவல் வெளியிட்டன. அந்தக் குழப்பமே இன்று
சர்ச்சையாக எழுந்துள்ளது. வங்காளத்தில் எழுதப்பட்ட நமது தேசிய கீதத்தை,
இந்திப் பாடல் என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுபோன்ற
பிழையான தகவல்கள், வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசுவதற்கு
வழிவகுத்துவிடுகின்றன.
இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு.
அவர்தான் பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா’ என்ற பாடலை
எழுதினார். வங்காள மொழியில் அமைந்த 'ஜன கண மன’ பாடலை ஆங்கிலத்தில்
மொழியாக்கம் செய்தவரும் தாகூரே!
1911-ம் ஆண்டு 'ஜன கண மன’ பாடப்பட்டாலும் அதற்கு முறையாக இசை
அமைக்கப்பட்டது 1918-ம் ஆண்டுதான். இந்தப் பாடலுக்கு, ஆந்திர மாநிலத்தின்
மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் எச். கசின் மற்றும் அவரது துணைவியார் ஆகிய
இருவரும் இசை அமைத்தனர். மதனப்பள்ளியில் அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த
தியாசபிக்கல் கல்லூரியில், 1919-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கி இருந்த
நாட்களில்தான் தாகூர் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்போது,
கல்லூரியின் முதல்வராக இருந்த மார்க்ரெட் கசின், தாகூரின் முன்னிலையில்
இந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தார். அதை, தாகூர் மிகவும் ரசித்துப்
பாராட்டி இருக்கிறார். அந்த மெட்டுதான் இன்று நாம் பாடும் பாடலுக்கான
அடிப்படை.
தாகூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடலின் நகல் பிரதி இன்றும் மதனப்பள்ளியில் கண்காட்சிக்கு இருக்கிறது.
'ஜன கண மன ’ பாடலை நேதாஜி தனது ஐ.என்.ஏ-வில் தேசியகீதமாகப் பயன்படுத்தி
வந்தார். ஐ.என்.ஏ-வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர்
வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங். இதற்காக, இவருக்கு நேதாஜி
தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்து இருக்கிறார். 'ஜன கண மன’ பாடல் இறை
வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட ஒன்று. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்
14-ம் தேதி இரவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடாளுமன்றத்தில்
திருமதி. சுவேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர்,
'ஸாரே ஜஹான் சே அச்சாஹ்’ என்ற பாடலைப் பாடினர். அந்தப் பாடல்தான்,
இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. இந்தப் பாடலை எழுதியவர்
மகாகவி இக்பால். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், எந்தப் பாடலை
இந்தியாவின் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்ற கேள்வி எழுந்தது. காரணம்,
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே
மாதரம்’, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன’, முஹம்மது இக்பால் எழுதிய
'ஸாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய மூன்று பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இருந்தன.
இந்த மூன்றில் எதைத் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்பதில் குழப்பம்
ஏற்பட்டது. காரணம், இந்த மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்று
இருந்தன. அத்துடன், பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்தப் பாடல்களை
உணர்ச்சிப்பூர்வமாக பாடி மக்களிடம் எழுச்சியை உருவாக்கி இருந்தனர். ஆகவே,
எந்தப் பாடலை தேசிய கீதம் என அறிவிப்பது என்ற முடிவை அரசியல் நிர்ணய
சபையின் வசம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு பக்கிம்
சந்திர சாட்டர்ஜி எழுதிய 'ஆனந்த
மடம்’ நாவலில் 'வந்தே மாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ளது. 'வந்தே மாதரம்’
பாடல், ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்ற
பாடலாகத் திகழ்ந்தது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது.
இஸ்லாமியர் மனம் புண்படுவார்கள் என்பதால், இந்தப் பாடலை தேசிய கீதமாக
அறிவிக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் உருவானது.
1908-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் பேசிய சையத்
அலி இமாம், 'வந்தே மாதரம்’ பாடலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதேபோல், 1923-ம் ஆண்டு காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்,
விஷ்ணு திகம்பர் 'வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்றார். அப்போது,
காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப்
பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க
முடியாது என்று தடுத்து நிறுத்தினார்.
ஆரம்ப காலத்தில், 'வந்தே மாதரம்’ பாடலை தாகூர் ஆதரித்தாலும், 1939-ம்
ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
இருக்கிறார். இவர்களைப் போலவே காந்தி, எம்.என்.ராய் மற்றும் நேதாஜி
ஆகியோரும் இது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்றால், அதைத்
தேசிய கீதமாக அறிவிக்க வேண்டாம் என்று கருதினர்.
'ஸாரே சஹான் சே...’ பாடல் 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 'இத்திஹாத்’
என்ற வார இதழில் வெளியானது. இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்துத் தரப்பு
மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், இந்தப் பாடலை தேசிய
கீதமாகத் தேர்வு செய்யவில்லை. இந்த மூன்று பாடல்களையும் அரசியல் நிர்ணய சபை
பரிசீலனை செய்தது. ஆனாலும், எதைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் நீடித்தது.
முடிவு உடனே அறிவிக்கப்படவில்லை. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான
1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில்
கூடிய கூட்டத்தில், இந்தியாவின் தேசிய கீதம் குறித்து விவாதித்து முடிவு
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் தேசிய கீதம்
பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, தேசியகீதம் எது என்பது
குறித்த ஓர் அறிக்கையை ராஜேந்திர பிரசாத் வெளியிட்டார். அதில், தாகூர்
எழுதிய 'ஜன கண மன’ பாடலின் சொற்களும் இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக
இருக்கும். அதே நேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்த
'வந்தே மாதரம்’ பாடலுக்கும் 'ஜன கண மன’-வுக்குச் சமமான அந்தஸ்து
வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், 'ஸாரே சஹான் சே’ பாடல்
பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தப் பாடல் இன்றும் ராணு வத்தினரிடம்
எழுச்சிமிக்க பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, தேசிய கீதம் பற்றி விவாதம் ஏதும்
நடக்கவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு வரை ஆங்கிலேயர்கள், 'காட் சேவ் தி
க்வீன்’(God save the Queen) என்ற பாடலைத்தான் இந்தியா எங்கும்
பாடிக்கொண்டு இருந்தனர். அந்தப் பாடலுக்கு மாற்றாக 'ஜன கண மன’ ஒலிக்கத்
தொடங்கியது. வங்காள மொழியில் அமைந்த இந்தப் பாடலின் ஒரு பகுதிதான் தேசிய
கீதமாக இன்று பாடப்படுகிறது. இந்தப் பாடலின் எளிமையான மொழியாக்கம் இதுவே.
ஜன கண மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!
பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.
பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா - பஞ்சாப் மாகாணம்,
சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட
பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.
விந்திய ஹிமாசல யமுனா கங்கா - கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய
மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது.
வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை
அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு
இருக்கின்றன.
உத்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும்
மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு
இருக்கின்றன.
தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம்.
தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.
காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம்.
ஜன கண மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
1950-ல் இருந்து இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன’ பாடலும் தேசப்
பாடலாக 'வந்தே மாதரம்’ பாடலும் பாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப்
போரில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள், கிழக்கு ஆசியா
கடற்படை கமாண்டராக இருந்த மவுன்ட் பேட்டனிடம் 1945-ம் வருடம் ஆகஸ்ட் 15-ம்
தேதி சரண் அடைந்தனர். எனவே, அந்த நாள் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.
அதனால், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க மவுன்ட் பேட்டன்
முடிவு செய்தார் என்கிறார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று
சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று
ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை
இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று
சுதந்திரம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
நடந்து இருக்கின்றன.
இந்தியர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதி முக்கியம் வாய்ந்த தகவல்
ReplyDelete