Search This Blog

Saturday, December 15, 2012

மோட்சம் தரும் ஏகாதசி!


 

வளர்பிறையில் வரும் ஏகாதசி, தேய்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி ஆகியன 25 ஏகாதசிகள் ஆகும். இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் 'மோட்ச ஏகாதசியையே, வைகுண்ட ஏகாதசி எனப் போற்றுகிறோம்!

திருமால் தமது நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதேநேரம், பகவானின் காதுகளில் இருந்து வெளிப்பட்ட அசுரர்கள் இருவர், பிரம்மனைக் கொல்ல முயன்றனர். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

ஆனால் அசுரர்களோ, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உமக்கே வரம் தருவோம்'' என்றார்கள். ஸ்வாமியும் ஒப்புக்கொண்டார். ''அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்று வரம் கேட்டார். அசுரர்கள் திகைத்தனர். ''ஸ்வாமி! தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டிக்கொண்டனர்.

அதன்படியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதி நேரத்தில், மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார். அங்கே திருமாலின் திவ்விய மங்கல வடிவம் கண்டு மகிழ்ந்தனர் அசுரர்கள். அப்போது அவர்கள், ''பகவானே, தங்களை விக்கிரக வடிவமாக பிரதிஷ்டை செய்து, மார்கழி- வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும்'' என்று பிரார்த்தித்தனராம்.

அவர்களின் வேண்டுதல் பலிக்க திருவருள் புரிந்தார் பெருமாள்.  இன்றைக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்கவாசல் வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு, வரம் தந்து வாழ்வளிக்கிறார் எம்பெருமான் (இதுபோன்று வேறுபல புண்ணியக் கதைகளும் உண்டு).

1 comment: