Search This Blog

Thursday, December 20, 2012

எனது இந்தியா (கல்விக்காக நூறு கிராமங்கள் !) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவில் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி,  பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, பௌத்தம் குறித்து  ஆய்வு செய்தார் யுவான் சுவாங். அதன் தொடர்ச்சியாக அவர், நாளந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்தவுடன், அங்கேயே தங்கி ஆய்வு செய்யவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்​தனர்.
 யுவான் சுவாங் நாளந்​தாவில் யோக சாஸ்​திரங்​களைக் கற்றுக்​கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாளந்தா பல்கலைக்​கழகத்தில், 10 ஆயிரம் மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வந்தனர். அங்கே 18 பாடப் பிரிவுகளில் மாண​வர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இதற்​காக 1,541 ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வருமானத்துக்காக, 100 கிராமங்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதோடு, 200 வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பட்சணங்களும் தானமாகத் தரப்பட்டன.

அங்கே தங்கியிருந்து மகாயான பௌத்த சமய சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன்பிறகு, அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சி புரத்துக்கு வந்துசேர்ந்த யுவான் சுவாங், அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


இந்தியாவில், புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரை உள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் பார்வையிட்ட யுவான் சுவாங், அதைப்பற்றி விரிவான குறிப்புகளாகப் பதிவு செய்து இருக்கிறார்.

17 வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்ப அவர் முடிவுசெய்தபோது, அவரோடு 20 குதிரைகளில் 657 தொகுதிகளாக்கப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவற்றில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்த்திரங்கள்.

இந்தியாவுக்குள் வரும்போது சந்தித்த பிரச்னைகளைவிட, சீனாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர், சீனா சென்று சேர்ந்து, தனது சேகரிப்புகள் அத்தனையையும் சேர்த்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார். யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி, யுவான் சுவாங் கொண்டுவந்த நூல்கள் அத்தனையையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவியை மன்னர் அளித்தார்.

இந்த அறிவாலயத்தில் இளம் துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன பாஷையில் மொழிபெயர்த்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தகங்களின் 1,335 அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நான்கு தொகுதிகளாக தனது நினைவுக் குறிப்புக் களையும் எழுதி இருக்கிறார். அந்த நினைவுக் குறிப்புக்களின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல், கணிதம், விவசாயம், கலைகள் பற்றி நிறைய அறிய முடிகிறது.

குப்தர் கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மதச்சடங்குகள், கோட் பாடுகள் பற்றியும் யுவான் சுவான் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

664-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள், தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்துவிட்டு, கடந்துபோன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் தூங்கச் சென்ற யுவான் சுவாங், அப்படியே இறந்து போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்தக் காப்பகமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசப் பயணம், 'நாட்டார் கதை’ போல மக்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு எண்ணிக்கையற்ற கிளைக் கதைகளைக் கொண்டதாகிவிட்டது. சமீபத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கைக் கதையில், மாயம் செய்யும் குரங்குகளும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்பமாக நெய்கிறது.
யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் அவர் கேள்விப்பட்ட கதைகள் மாற்றுருவில் கலந்து இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் பௌத்த ஜாதகக் கதை மரபில் உருவானவை. குறிப்பாக, மகாசத்துவர் என்ற மன்னர் பசியால் துடித்த பெண் புலிக்கு தனது உடலை உணவாகத் தருவதற்காக பாறையில் இருந்து குதித்தார். அப்படியும் பெண் புலியால் நடந்து வந்து அவர் உடலைப் புசிக்க முடியவில்லை. அதனால், அவரே தனது காயங்களுடன் புலியை நெருங்கிச் சென்று தனது உடலைக் கிழித்து குருதியை வடிய விட்டார், அதைக்குடித்து புலி பசி தணிந்தது.

அப்படி, புலிக்காக தனது உயிரைத் தந்த மன்னரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்​பட்டது. அது தக்ஷ சீலத்தின் அருகே இருப்பதாக யுவான் சுவாங் கூறுகிறார். இது புத்த ஜாதகக் கதைகளில் ஒன்று. அதன் மாறுபட்ட வடிவம் வேறுவிதமாக கதாசாகரத்தில் கூறப்படுகிறது, ஆனால், இப்படியான ஸ்தூபி ஒன்று அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டது என்ற உண்மை அதில் புதைந்திருக்கிறது. ஆகவே, யுவான் சுவாங்கின் தகவல்களை முழுமையாக மறுக்கவும் முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடி யாது.

இன்றும், பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான் சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் புத்தகங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடுகிறார்கள். என்றோ சரித்திரத்தில் படித்த யுவான் சுவாங்கும், அல்​பெரூனியும் மட்டுமே யாத்ரீகர்கள் அல்ல. அறிவைத் தேடியும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் பொருட்டும் பயணம் செய்யும் அனைவரும் மதிக்கப்பட வேண்டிய பயணிகளே.

மண் புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்​கிறார்கள்.

இன்று, தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் தமிழிலே வாசிக்கக் கிடைக்கின்றன. யுவான் சுவாங்கின் பயணத்தை, அசோகன் முத்துசாமி ஒரு நீண்ட நாவலாக எழுதியிருக்கிறார். 'போதியின் நிழலில்’ என்ற அந்த நூல் யுவான் சுவாங்கை தமிழில் அறிந்து கொள்ள நினைப்ப​வர்களுக்கு ஓர் எளிய வழிகாட்டியாகும்.

No comments:

Post a Comment