Search This Blog

Tuesday, January 07, 2014

தை பிறந்தால்...வழி பிறக்கும்!

அனைவருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள். முதலில்... தைத்திருநாளில், பொங்கல் பண்டிகையின்போது, மதியம் 12 முதல் 1 மணி வரை அல்லது மாலை 5 முதல் 6 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

மாதப் பிறப்பு என்பதே முக்கியமான நாள். அதிலும் தை, சித்திரை, கார்த்திகை என பல மாதங்களின் முதல் நாள் மிகுந்த விசேஷமானதாகப் போற்றப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க மாதம்... தை! பிறக்கும்போதே கோலாகலமான பண்டிகையுடன் பூமி சார்ந்த விழாவாக, உயிரினங்களைப் போற்றுகிற உன்னதத் திருவிழாவாகத் துவங்குகிறது.

பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலத்தின் துவக்கமும் இன்றைக்குத்தான்! பொங்கல் திருநாள், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடி வணங்கவேண்டிய அற்புதமான நாட்கள். இந்தக் கொண்டாட்டத்தில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. 'நன்றி மறப்பது நன்றன்று’ என்கிற வள்ளுவரின் சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பண்டிகைகள், சூரிய பகவானை வணங்குவதற்கான விழாவாகவும் மாடு- கன்றுகளுக்கு நன்றி பாராட்டும் வைபவமாகவும் கொண்டாடப்படுகிறது.


அருட்பெருஞ்ஜோதி..!

இதையடுத்து, வருகிற 17.1.14, அன்று வடலூரில் கோலாகலமாக நடைபெறும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை நாம் அறிவோம். ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை அடையலாம்,  என்பதையெல்லாம் உணர்த்திய வள்ளலார் சுவாமிகள் ஜோதியுடன் கலந்து ஜோதியாகவே காட்சி தந்த நன்னாள். இந்தநாளில், வள்ளலாரை நினைப்பதும், அவர் அவதரித்து ஜோதியில் ஐக்கியமான வடலூர் சென்று தரிசிப்பதும் மகா புண்ணியம்!

ஜனவரி 30-ஆம் தேதி, தை அமாவாசை, பிப்ரவரி 6-ஆம் தேதி ரத சப்தமி, 7-ஆம் தேதி தை கிருத்திகை (ஆலயத்தில்), 8-ஆம் தேதி கிருத்திகை விரதம் எனத் தை மாதத்தில், எத்தனை எத்தனை விழாக்கள்? எவ்வளவு கொண்டாட்டங்கள்?
முதலில் தை மாதப் பிறப்புக்கு, அதாவது பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகை என்று (13.1.14) கொண்டாடுகிறோம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்கிற சொல்லுக்கு ஏற்ப, நம்மிடம் உள்ள தீய எண்ணங்களைப் போக்கச் செய்து, நல்ல எண்ணங்களைக் கொண்டவராக வலம் வர வேண்டும். இதைக் குறிப்பதற்காக, நம் வீட்டில் உள்ள பழையப் பொருட்களை வெளியே எடுத்து வந்து, கொளுத்திவிட்டு, ஸ்நானம் செய்கிற வழக்கம் உண்டு!


பழையன கழிதல்!

போகி என்றால் இந்திரன் என்று அர்த்தம். எனவே, இந்திர பூஜையை பொங்கலில் இருந்து செய்வதால், முன்னதாக அதற்கு தயார் படுத்திக்கொள்வதற்காகவும் பழையன கழிதல் எனும் விழாவை வைத்திருக்கலாம். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம்... இயற்கையை மாசுபடுத்தக்கூடியவை எது என்று பார்த்து அவற்றை விலக்கிவிடுவதே உத்தமம். இயற்கையுடன் இயைந்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பயன்படுத்துவதே நம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை. 'சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்!

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த்தம். அதாவது, 'மகிழ்ச்சி பொங்குதல்’, 'பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வாக்கியமானது சிறந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது.

மனிதன், பல நேரங்களில் பலவித குழப்பங்களால் சூழப்பட்டு, அவற்றிலிருந்து எப்படி வருவது எனத் தெரியாமல் தத்தளித்து, கலங்கிக் கிடக்கிறான்.  இது போன்று நாம் கஷ்டப்படுவதிலிருந்து காப்பதற்கு பலவிதமான பண்டிகைகளை, நம் இந்து சமயம் அமைத்துத் தந்திருக்கிறது. அவற்றில் மிக எளிமையானதும், மிகுந்த பயனளிப்பதும், அனைவராலும் போற்றக்கூடியதுமான பண்டிகை 'தைப்பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லலாம்!

சிறு வயதில் நானும் என் சகோதரிகளும் எங்கள் தாயார் பொங்கல் வைத்து, ஆதவனை வழிபட்டு பொங்கல் பொங்குகிற சமயத்தில் 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று கூவி, டமாரம் அடித்து மகிழ்ந்ததை மறக்கவே முடியாது.  வயது ஆக ஆக பழையபடி நம்மால் ஆடிப்பாடி கொண்டாட முடியவில்லை என்றாலும், இந்தப் பண்டிகைகளின் பின் இவ்வளவு பயன்கள் உள்ளதா என்பதைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். எவ்வளவு நல்ல காரியங்கள் நாம் செய்திருந்தால், நாம் மனிதப்பிறவி எடுத்து இது போன்ற உயர்ந்த தர்மங்களை போதிக்கும் சமயத்தில் பிறந்து, நாத்திகனாக இல்லாமல் நமது முன்னோர்கள் கொடுத்துள்ள இந்த அரிய பொக்கிஷங்களை அனுபவித்து வருகிறோம் என நெகிழ்கிறேன்.


வருடத்துக்கு 12 மாதங்கள். அதில் 10-வது மாதம் தை. இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் பண்டிகை என்று நாமும், ஆந்திரம், மேற்கு வங்காளம், கேரளா, பீகார், கோவா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்வதால் மகர சங்கராந்தி என்றும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்வதால் உத்தராயன புண்யகாலம் என்றும் ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் லோஹ்ரி என்றும் பலப்பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.

நன்றி சொல்லுவோம்!

சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத்தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரின் அசைவே காலம். அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அதுவே மாதமாகவும், எந்த நேரத்தில் உதிக்கிறாரோ அதுவே நாளாகவும், தன்னுடைய ஒளியினால் மற்ற கிரஹங்களுக்கும் நக்ஷத்திர கூட்டங்களுக்கும் ஒளி பெறச் செய்து, உலகை திறம்பட வழி நடத்துபவரே சூரிய பகவான்!

நன்றி குறித்து நாளெல்லாம் பேசுகிறோம். 'நன்றி கெட்ட உலகம்’ என்று புலம்புகிறோம். உண்மையில், நம் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை ஆற்றலை அளித்துவரும் கதிரவனுக்கு நன்றி சொல்கிறோமா என யோசியுங்கள். நம் முன்னோர்கள், தேவர்களின் காலைப்பொழுதின் முதல் மாதமான இந்த தை மாதத்தில், அதாவது சூரியன் உதிக்கக்கூடிய வேளையில், சூரியனுக்கு நன்றி சொல்வது சிறப்பானது என்று சொல்லிச் சென்றுள்ளார்கள். சூரிய நமஸ்காரம் சூரியனை குறித்த தோத்திரங்கள் சொல்வதால் தேக ஆரோக்கியம் கூடும்; மனத்துள் தெளிவு பிறக்கும்!

அதேபோல், உழவர்களுக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி செலுத்துவோம். அதனால்தான் இந்த விழாவை உழவர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்.

எப்படிச் செய்யவேண்டும் பொங்கல்?
பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

மாட்டுப்பொங்கல்

'மாதர: ஸர்வ பூதானாம்
காவ: ஸர்வ சுக்ப்ரதா:’ என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

இன்று காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது) மஞ்சள் சாதம்
(மஞ்சள் கலந்தது, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!


காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் மோசமான சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் இன்று! இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!

தைப்பூசம்

தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். சிவாகமங்களில்,  ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நட்சத்திரத்தை 'மாஸபம்’ என்பார்கள். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. இன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. 'புஷ்ய மாஸே து புஷ்யர்க்ஷே குர்யாத் க்ஷேளத்ராபிஷேசனம்’ (காமிகாகமம்) என்று தேன் அபிஷேகம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது.


சூல விரதம்!

சைவர்கள் சிறப்பாகப் போற்றும் எட்டு மகா விரதங்களில் சூல விரதமும் ஒன்று. மார்கழி திருவாதிரையில் தனித்து ஆடுகிற சிவனார், தைப் பூசத்தில், உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமையருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது.

அகத்திய மகரிஷி தந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைக¬ளை காவடி போன்று தூக்கி வந்த இடும்பன் என்ற அசுரனை ஆட்கொண்ட கலியுகக் கடவுள் கந்தப்பெருமான்! கவலைகள் மலையைப் போன்று இருப்பதால், அவற்றை எம்மிடம் அளித்து நீ கவலையற்று இரு என்று உணர்த்தி எந்த அடியை தொழுதால் இவ்வுலகம் காப்பாற்றப்படுகிறதோ அவருக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடச் சிறந்த நாள்!

இரண்யவர்மன் எனும் அரசன் தில்லையில் ஆனந்த நடராஜருக்கு அர்ப்பணித்த திருப்பணிகளால் மகிழ்ந்த கூத்தபிரான், அந்த மன்னனுக்கு ஆனந்தக் காட்சி அளித்த நாளும் இதுவே!  

பொதினி என்று போற்றப்படும் பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!  

தை அமாவாசை
இந்தச் சரீரம், கடவுளின் அருளினால், நம் தாய் தந்தையர் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு!  தாய் தந்தையர் இந்தப் புவியில் இருக்கும்போது, அவர்களை போஷிக்க வேண்டும். அவர்கள் மேலுலகம் சென்றபின், அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே நம் தலையாயக் கடமை!

'அமாயா: பிதரப் ப்ரோக்த: திதீனாம் அதிபா: க்ரமாத்’ என்று சொல்லியபடி, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்! 'நன்றி மறவேல்’ எனும் வாக்கின்படி, நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைச் செவ்வனே காக்க முடியும்! நம் முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள்.  

முன்னோர் வழிபாடு என்பதை, வருடத்தில் அனைத்து மாதங்களிலும் செய்ய முடியாதவர்கள் கூட, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் மறக்காமல் செய்தால், நம் கடமையைச் செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம் என்பது உறுதி!

ரத ஸப்தமி!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமும்கூட!
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி,
மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று பகலவனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!
எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!

பீஷ்மாஷ்டமி!

தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!

எப்படி தொலைபேசியில் ஒருவரின் எண்ணை டயல் செய்தால் அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவருடன் பேச முடிகிறதோ, அதுபோன்று நம் முன்னோர்கள், இந்த நாட்களில் இவரிவர் குறித்து இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி அந்தந்தக் கிரியைகள் தனிச் சிறப்பு கொண்டவை என்பதை  அறிந்து, உணர்ந்து, புரிந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நீங்களும் உறுதிபடச் சொல்வீர்கள்!

ஸ்ரீசண்முக சிவாச்சார்யர்

வைகுண்ட ஏகாதசி...!

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் ஸ்ரீகேசவனை ஆராதிப்பது ரொம்பவே விசேஷம். அதாவது அப்படி வணங்கினால், அஸ்வமேத யாகம் செய்த பலன் முழுவதும் கிடைக்கும். பிரும்மஹத்தி தோஷம்கூட விலகும் என்கிறது பாத்ம புராணம்.

மாதங்களில் நான் மார்கழி என்றான் ஸ்ரீகண்ணபிரான். மகத்தான இந்த மார்கழி மாதம், தேவர்களுக்கெல்லாம் விடியற்காலைப் பொழுதாம். நற்காரியங்கள் செய்வதற்கு நல்ல காலம் இது. இந்த மாதம் முழுவதும் பகவானை ஆராதனை செய்பவர்கள் ஒரு வருடம் பூஜித்த பலனை அடைவார்கள்.

ஸ்ரீபாஞ்சராத்ரம் எனும் ஆகமமானது, மார்கழி வளர்பிறை ஏகாதசி திதியில் இருந்து, பகவானின் ஸந்நிதியில் வேதம் ஓதத் தொடங்கி, தேய்பிறை பஞ்சமி நாளில் பத்து நாட்கள், பூர்த்தி செய்து, இந்த உத்ஸவத்தைக் கொண்டாடச் சொல்கிறது.  இதற்கு ’மோக்ஷ உத்ஸவம்’ என்று பெயர்.

நான்கு வேதங்கள் வடமொழியில் அமைந்துள்ளவை திராவிட வேதம் என்பது ஆழ்வார்களால் அருளப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தங்கள். இதற்குத் 'தமிழ்மறை’ என்று பெயர். வடமொழியில் அமைந்துள்ள வேதசாரத்தை தமிழ்மொழியில் அருளியதால் 'வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.

திருமங்கையாழ்வார், 'திருநெடுந்தாண்டகம்’ இயற்றினார். அதனைத் தன் பிறந்தநாளில், அரங்கனுக்கெதிரில் அனுபவித்துப் பாட, கிறங்கிப்போன அரங்கன், 'ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?'' என்று அன்போடு வினவ, ஆழ்வார் அதற்கு, ''மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வேதங்களுடன் தமிழ்மறையான திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்'' என வேண்டினார். அரங்கன் மகிழ்வுடன் இணங்கினான். அன்று முதல் இந்த உத்ஸவமானது தமிழ்மறை உத்ஸவமாக மாறியது.  


திருமங்கை மன்னன் காலம் முதல் நாதமுனிகள் காலம் வரை, இந்த நடைமுறை தொடர்ந்தது.  நாதமுனிகள் அனைத்து ஆழ்வார்களின் பாடல்களையும் அரங்கன் விரும்பிக் கேட்கும் விதமாக,  இந்த உத்ஸவத்தை பகல்பத்து, இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக்கி, பகல் பத்தில் நம்மாழ்வார் நீங்கலாக இதர ஆழ்வார்களின் பாடல்களையும், இராப்பத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் கேட்டருளுமாறு திருத்தியமைத்தார். இவை திருமொழித் திருநாள் (பகல்பத்து), திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) என்றே அழைக்கப்படுகின்றன.  

ஆழ்வார்களின் பாடல்களை 'அரையர்கள்’ எனும் நாதமுனிகளின் வம்சாவளியினர் ஆடிப்பாடி, அபிநயித்து, இசை, இயல், நாடகம் எனப்பொழிய, முப்பெரும் விழாவாக ஒரு சேர இந்த விழா விமரிசையாக நடைபெற்றது. திருமங்கைமன்னன், ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த விழாவைப் படிப்படியாக சீர்படுத்தி, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்ற பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்து பிரமாண்ட விழாவாகவே மாற்றி அமைத்தனர்.


இந்தத் திருநாளன்று ஸ்ரீராமானுஜரின் உள்ளக்கிடக்கை ஒன்றும் அர்ச்சை ஸ்வரூபத்தில் பூர்த்தியாகிறது. அதாவது, ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த காலத்தில், அவர் திருக்கச்சிநம்பிகள் சாப்பிட்டு மிகுந்த சேஷத்தை ஸ்வீகரிக்க ஆசைப்பட்டு, அது நிராசையாகவே போனது.  ஆனால் இந்தத் திருநாளில், திருக்கச்சி நம்பிகளுக்கு அமுது செய்த அதே பிரஸாதம், அவருக்குப்பின் ஸ்ரீராமானுஜருக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது.

சரி... இத்தனைப் பெருமைகளும் புராதனமும் கொண்ட வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் உள்ள இன்னும் பல சிறப்புகளைப் பார்ப்போமா?

பகல்பத்து (திருமொழி திருநாள்):

இந்தப் பத்து நாட்களும், அரங்கன் பூரணமான அலங்காரத்துடன், அன்றன்று அரங்கேறும் பாசுரங்களுக்கு ஏற்ப தம்மை அலங்கரித்துக்கொண்டு, தமது துவாரபாலகர்கள் வாசல் வழியே வெளியே எழுந்தருளும்போது, எப்படி குகையிலிருந்து சிங்கம் வெளிவருமோ... அதேபோல் புறப்படுவார்.  இதற்கு 'சிம்மகதி’  என்று பெயர்.  பிறகு 'ஒய்யார நடை’ (வ்யாக்ர கதி)  எனும் புலி போன்று நடையிட்டு படியேற்றம் கண்டு, துலுக்கநாச்சியாரை அனுக்கிரஹித்து அர்ஜூன மண்டபத்தில் அமர்ந்து திருமொழிப் பாடல்களான, நம்மாழ்வார் தவிர்த்த ஏனைய ஆழ்வார்களின் பாடல்களை அரையர்கள் ஆடிப்பாடி அபிநயிக்க, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் குழாம்களோடு, ஆனந்தமாகக் கேட்டு ரசிப்பார்.


மோஹினி அலங்காரம்:

அரங்கனைப் பொறுத்தவரை 'மாறுவேட அலங்காரம்’ என்பது இந்த ஒரு திருநாளில் மாத்திரமே நிகழும்! 'மம மாயா துரத்யா’ (என்னுடைய மாயை அளவில்லாதது. அதை யாரும் கடக்க முடியாது.) எனும் திருமாலின் வசனத்துக்கு ஏற்ப, மாயாவதாரமான மோஹினி அலங்காரத்தில், அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்த அவதாரத்தில், பக்தர்களாகிய நாம் அனைவரும் இதை நினைவிற்கொண்டு திருந்தும்படியாகக் காட்சி தருகிறான் அரங்கன்.

'திருவரங்கத்தாய்’ எனும் ஆழ்வார்களின் வர்ணனைக்கு ஏற்ப, உலகுக்கெல்லாம் தாயாகவும் உள்ளவன் என்பதை உலகுக்கு உணர்த்த, காட்சி தருகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.

இராப்பத்து (திருவாய்மொழி திருநாள்):

இந்த உத்ஸவமானது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) தொடங்கி நடக்கும் பத்து நாள் உத்ஸவத் திருவிழாவாகும்! இராப்பத்துத் திருநாளில் வைணவ பக்தனான ஒரு முக்தன் எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே நடத்திக் காட்டப்படுகிறது.  

விரஜாநதி மண்டபம் எனப்படும் விரஜாநதி ஓடும் வைகுந்தத்திற்கு ஒப்பாக சிறப்பாகக் கூறப்படும் இந்த மண்டபம் வரை, அரங்கன் போர்வை சாற்றிக்கொண்டு புறப்படுவார்.  இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும்.  இது ஒரு முக்தன் விரஜாநதிக் கரையை அடையும்போது, 'விரசைதனில் குளித்து, இங்கு அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று, அமரர் வந்தெதிர் கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த’ (ஆர்த்தி பிரபந்தம் 24) என்று மணவாளமாமுனிகள் அருளியபடி,  வேதகோஷத்துடன் தேவர்கள் எதிர்கொண்டு அழைப்பதற்கு ஈடாகப் போற்றப்படுகிறது, இந்த வைபவம்.

வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார்.  இது விரஜாநதியைக் கடந்ததும் அந்த முக்தன் சரீரவாசனை துறந்து, சுத்த தேஜோமயமான அழிவில்லாத பிரகாசமான சரீரத்துடன் பயணப்படுவதைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!


அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார் அரங்கன். இந்த மண்டபத்தை அரங்கனது 'லீலாவிபூதி’ என்பார்கள். 'நித்யவிபூதி’ என்பது நித்யம் வாஸம் செய்யும் இடமாம். லீலாவிபூதி அரங்கனின் லீலைகள் அரங்கேறும் இடம். இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.  

அடுத்து, நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பும்போது, நாழிகேட்டான் வாசல் கடந்ததும், மேற்கு முகமாக திரும்பியவுடன், அங்கு வீணாகானத்தோடும், சாத்தாத பூவிதழ்களோடு கலந்து தூவும் பச்சைக் கற்பூரத்தோடும் ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்பார்கள். அப்போது, மெதுவாக தளிர்நடையிட்டும் அசைந்து அசைந்து ஆடியும் அரங்கன் ஆஸ்தானம் ஏறும் படியேற்ற ஸேவையைக் காணக் கண்கோடி வேண்டும்.

திருக்கைத்தல ஸேவை:

அரங்கன் அதிக மகிழ்ச்சியில் இருந்தபோதும், அவசர கதியில் இருந்தபோதும், அர்ச்சகர்களின் கைத்தலத்திலேயே எழுந்தருளியதை 'கோவிலொழுகு’ எனும் திருவரங்கத்து வரலாற்றுத் தொகுப்பில் காணலாம். இன்று நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலம் கொண்டு 'பராங்குச நாயகி’யாக, இறைவனிடம்  வேண்ட, அரங்கன் அர்ச்சகர்களின் கைத்தலங்களில் எழுந்தருளி நம்மாழ்வாரைக் கடாக்ஷிக்கிறார்.  திருக்கைத்தல ஸேவையின் போது அரங்கன் அதிக அலங்காரமில்லாமல் அடுக்கடுக்காக சில பீதாம்பரங்களை மட்டும் சாற்றிக்கொண்டு காட்சி தருவார்.

ஒவ்வொரு ஏழாம் திருநாளன்றும், நம்பெருமாள் ரங்கநாச்சியார் ஸந்நிதி அடைந்து, அங்கு தாயார் முன் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, பிறகு ஆஸ்தானம் திரும்புவது வழக்கம்.  ஆனால் இந்த ஒரு திருநாளில் மட்டும், இதற்கு விதிவிலக்கு.   ஆழ்வார் மீது உள்ள அளவற்ற காதலால், பராங்குசநாயகியாகக் காத்திருக்கும் நம்மாழ்வாருக்காக, தன் நாச்சியாரையும் மறந்து இங்கு எழுந்தருளுவது அவனது சௌலப்யத்தின் எல்லை!

வேடுபறி:

திருமங்கைமன்னனை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பட்ட வைபவம் இது. நம்பெருமாள் அப்போது குதிரை வாகனத்தில் காட்சி தருவார். திருமங்கைமன்னனின் வம்சாவளியினர், திருமங்கை மன்னன், பெருமாள் நகைகளைக் கொள்ளையடித்ததையும், பின் பெருமாளின் அருளால் அவர் ஆழ்வாராக மாறியதையும் நடித்துக் காட்டுவார்கள். பிறகு இவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, திருமாமணி மண்டபம் சேர்வார், அரங்கன்.


நம்மாழ்வார் மோட்சம்:

இந்தத் திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை 'ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், 'ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.

11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் 'சூழ்விசும்பணிமுகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக்கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, 'முனியே..!  நான்முகனே..' என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா (விக்ரஹ) ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!

அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப்பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!

'அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்* முடிந்த
அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!’


என்று உணர்வெல்லாம் ஒன்று திரட்டி அரையர்கள் தாளத்தோடு பாட, நம் அங்கமெல்லாம் விதிர்த்து நிற்கும். அரங்கன் தான் சாற்றிக்கொண்டிருந்த மாலையைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி,  தன் நெற்றியில் இருந்து கஸ்தூரியை, ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தன் பெருவீட்டுக்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புகையில் பக்தர்களின் 'ஹோ’வென்ற சப்தம் வேதனை கலந்த கூக்குரலாக எதிரொலிக்கும்!

நம்பெருமாளும் கோவிலார்களுக்கு, தக்க மரியாதைகள் ஆனதும் ஆஸ்தானம் சேருவார்.  இத்துடன் இந்தத் திருவிழா, இனிதே நிறைவுறுகிறது.
அரங்கனின் லீலைகள் அளவில்லாதவை. வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.  அவனை உள்வாங்கி அனுபவிப்பவர்கள் இதை உணர்வார்கள். நீங்களும் இந்தத் திருநாட்களில், அரங்கனை அனுபவித்து உணர வாருங்கள். அவனுக்கு உற்றம் ஆவோம்..! உணர்வோம்!


ஏகாதசி..! - குழப்பங்கள்... விளக்கங்கள்!
காதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல இப்போது ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..

 கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே! பஞ்சகவ்யம் பவித்ரமானாலும் நாய் முகர்ந்தால் அசுத்தமே. அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும். தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது என்கிறது  பாத்ம புராணம்.

தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் என்று தெரிவிக்கிறது ப்ரம்ம வைவர்த்தம்.

உதயத்துக்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியை விட்டுவிட வேண்டும் என்கிறது கருட புராணம்.

ஆக, எந்தக் காரணம் கொண்டும் ஏகாதசி நாளில், தசமி திதி கலக்கக்கூடாது. சூர்யோதயத்துக்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.

ஏகாதசி  - துவாதசி..! சில விவரங்கள்!

எங்கும் நிறைந்த விஷ்ணுவே சகல ஜனங்களையும், ரக்ஷிக்க வேண்டி, துவாதசி எனும் திதியாக மாறி கருணை செய்கிறான்  என்கிறது வராஹ புராணம்

 விஷ்ணுவுக்குச் சமமான தெய்வமில்லை, துவாதசிக்கு சமமான திதியும் இல்லை என்பார்கள். எனவே துவாதசி அன்று தானம் செய்தாலும், போஜனம் செய்வித்தாலும், பூஜை செய்தாலும் பத்து மடங்கு பலன் தரும்  எனப் பரிந்துரைக்கிறது பாத்ம புராணம்

 தெரிந்தோ தெரியாமலோ செய்த நம்முடைய ஏழு ஜன்மத்து பாபங்கள், துவாதசியில் ஹரியைப் பூஜித்த அடுத்த க்ஷணம் போய்விடும் என தெளிவுபடச் சொல்கிறது பாத்மபுராணம்.

ஏகாதசி விரதமிருந்து துவாதசியில் துளஸியுடன் கூடிய விஷ்ணு பிரசாதத்தைச் சாப்பிட்டவருக்கு கோடி ஜன்ம பாபம் போய்விடும் என்கிறது ஸ்காந்தம்.

 ஏகாதசி விரதமே மோக்ஷ ஸாதனம்! துவாதசியில் விஷ்ணுவைப் பூஜிப்பவர் கள் சுகமாய் வாழ்வார்கள், முக்தியும் பெறுவார்கள் என்கிறார் சௌனகர்.

 தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய இந்த மூன்று தினங்களிலும் சந்தன, தாம்பூல, புஷ்ப, ஸ்த்ரீ சங்கமம் ஆகிய நான்கையும் விலக்க வேண்டும் என்கிறது நாரதீய புராணம். (நன்றி: ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் 'ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்).

ஸ்ரீரங்கம் முரளி பட்டர்

பவானி கூடுதுறை!

கூடுதுறை!

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

முன்னோர் ஆசி! 

கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் பிரதான கோபுரம், வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.


இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி  நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இந்தத் தலத்துக்கு வந்து நீராடி, இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே, இத்தலத்துக்கு 'திருநணா’ என்ற புராணப் பெயரும் உண்டு.

 

சோமாஸ்கந்த அமைப்பு! 

இந்தக் கோயிலில் ஸ்ரீசங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று.

ஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்க லாம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள். இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்று.

ஸ்ரீயோக நரசிம்மர்! 

ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதிக்குப் பின்புறத்தில் பசுவின் சிற்பம் உள்ளது. இந்தப் பசுவின் முன்பகுதியிலும், பின்பகுதியிலுமாக இரண்டு தலைகள் அமைந்திருக்கின்றன.இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே ஸ்ரீயோக நரசிம்மர் ஸ்ரீலட்சுமியுடன் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சகல யோகங்களும் கைகூடும்!


புராணச் சிறப்பு! 

பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.

அதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர். ''குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்'' என இறைவன் கேட்க, ''அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்'' என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் 'தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம்.

 தந்தக் கட்டில்! 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். ஒருமுறை அவரையே பேராபத்தில் இருந்து காப்பாற்றிய அனுபவம் கிடைக்கவும், சிலிர்த்துப் போன காரோ, உமையவளுக்குத் தந்தக் கட்டில் வழங்கினாராம்.


குழந்தை வரம்!

இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரம். வேதமே மர வடிவில் வந்திருப்பதாக ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர், இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீசங்கம விநாயகரையும், ஸ்ரீசங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இலந்தைப் பழங்களைச் சாப்பிட் டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல், இங்கே உள்ள அமிர்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஅமிர்த லிங்கத்தை வழிபடுவோருக்குக் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

உங்கள் பணி என்ன? - சுவாமி விவேகானந்தர்

''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!

உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும்.

என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?

உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!

'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''

 

'என்னை நீ விலக்கலாமா?’ 

'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.

சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார். இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து...

'பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா? இரும்புத்துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கை வாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும் இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’

சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே! நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.

 'வேதங்களால் என்ன பயன்?’ 

சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.

''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.

சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.

மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்'' என்றார்.

இதுவே அவரது இறுதியான போதனை.

எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!

தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.

வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.

தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!

தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''
தொகுப்பு: கே.புவனேஸ்வரி

Sunday, January 05, 2014

லெனோவாவின் வைப் X ஸ்மார்ட்போன்!

இதில் Wi-Fi, ப்ளூடூத்,  AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. 

லெனோவாவின் மடிக்கணினிகள் ஒரு காலத்தில் மக்களிடம் மிக பிரபலமாக பேசப்பட்டு வந்தது.  சமீபத்தில் லெனோவா தனது முதல் வைப்X ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் பாலிகார்பனேட் துணைப்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்டு, லேசர் என்கிரேவ்டு (engraved)  3G டேக்டில் ஃபினிஷ் (tactile finish) கொண்டுள்ளது.

சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இதன் எடை 121 கிராம். வைப்X முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி3, 1080X1920 பிக்ஸல்கள்  கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்ஸல் அடர்த்தியைக் கொண்டுள்ளது.

போனில் 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் (MTK 6589T) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 2GB ரேம் உள்ளது.  16GB உள்ளடக்கிய சேமிப்பு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. லெனோவா வைப்X-ல் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேட்டேடு (back illuminated) சென்சார் கொண்ட 13 மெகாபிக்ஸல் ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கேமரா உள்ளது.
 

வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸுடன் 5 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா உள்ளது. இதில் Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப்X பேட்டரி திறன் 2,000 mAh. ஸ்மார்ட்போனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.

ஸ்மார்ட்போன் ரசிகர்கள் லெனோவாவின் இந்தப் புதிய அறிமுகத்தைக் கவனிக்கலாம்!

லுமியா:நோக்கியாவின் புதிய அவதாரம்!

செல்போன் உலகில் நோக்கியாவுக்கு என்று நல்ல மவுசு உண்டு. இன்றும்கூட செல்போன் பேட்டரிகள் என்றால் நோக்கியாதான்.

ஆனால், நோக்கியா நிறுவனம் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.  ஸ்மார்ட்போன் சந்தையை கோட்டைவிட்ட நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது. வாங்கியவுடன் Nokia lumia 2025 tablet pc என்ற டேப்லெட் ஒன்றை வெளியிட்டது. இதுவே நோக்கியாவின் முதல் டேப்லெட் ஆகும்.
இந்த டேப்லெட், விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதோடு,  வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருந்தது.

நோக்கியா லுமியா 1320 என்ற பெயர் கொண்ட பேப்லெட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பேப்லெட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது.

மேலும், திரையில் கீறல்கள் (scratch) அதிகம் விழாமல் இருக்க, கொரில்லா கிளாஸ் (Gorilla Glass Technology) பொருத்தப்பட்டு உள்ளது. அற்புதமாக, விரைவாக செயல்படுத்தக்கூடிய திறன்மிக்க 1.7 GHz dual-core Qualcomm Snapdragon 400 processor,, 1ஜிபி ரேம், படங்கள் மற்றும் வீடியோக்கள் துல்லியமான தரத்துடன் எடுக்க 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதில் 8ஜிபிக்கு இன்டர்நெட் மெமரியும், 32ஜிபிக்கு மெமரி கார்டு ஆப்ஷனும் உள்ளது.
இந்த பேப்லெட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் 7ஜிபி-க்கு ஆன்லைனில் தங்களது தகவல்களை சேமித்துகொள்ளலாம். இதன் மொத்த எடை 220 கிராம். எப்போதும்போல இதன் பேட்டரி சிறப்பானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூபாய் 20,900. 2014 புத்தாண்டில் இந்த பேப்லெட் பிசி விற்பனைக்கு கிடைக்குமாம்!

Saturday, January 04, 2014

பறிபோகும் தமிழன் வேலை!


எங்கு திரும்பினாலும் இந்தி பேசியபடி தம்மைக் கடந்து செல்லும் சிவந்தநிற மனிதர்கள். நாம் இருப்பது தமிழ்நாடுதானா என எண்ணத் தோன்றும் படியான நிலையில்... பணியிடங்களில் தமிழர்களைத் தேட வேண்டியுள்ளது. இச்சூழலில் தமிழர்களின் வேலைகள் பறிபோவதாகக் கூக்குரல் எழத் தொடங்கிவிட்டன.

சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் போன்ற நகரங்களிலும் கட்டப்படும் மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... பல்வேறு தொழிற்பேட்டைகளிலும் வட இந்தியர்களே பெருமளவில் தென்படுகின்றனர். 

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பீகார், ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மனைவி, குழந்தைகளோடு இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் அதிகமான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவர்கள் இந்தத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடினமான வேலை என்றாலும் இவர்கள் அதனை எளிதாக மேற்கொள்வதோடு, அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். வேகமாக பணிகள் நடப்பதோடு, குறைந்த கூலி என்பதால், உள்ளூர்த் தொழிலாளர்களைவிட, வடமாநிலத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது லாபகரமாக உள்ளது என்று பெரிய கட்டுமான நிறுவனங்கள் வடமாநிலத்தவர்களை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றன. இதனால் கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட குறைந்தே போய்விட்டது. 

தமிழர்கள் வேலை பறிபோக என்ன காரணம் என்று அலசியதில்...

தமிழர்கள் நாள் ஒன்றுக்கு 650 ரூபாய் கூலி பெற்றார்கள். ஆனால், வடஇந்தியர்க்கு 450 ரூபாய் கொடுத்தாலே கூட்டம் கூட்டமாக வந்து விடுகிறார்கள். 
 
தொடக்கத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழர்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்தப் பார்வை மெள்ள மெள்ள மாறுவதை உணர முடிகிறது. எதிர்காலத்தில் இவர்களின் வரவு நிச்சயம் ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும். இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கி விட்டால் தமிழ்நாட்டில் தமிழர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிமாகிவிடும். தற்போது சென்னையின் பொருளாதாரம் ராஜஸ்தானியர் மற்றும் குஜராத்தியர்களிடம்தான் இருக்கிறது. காரணம், எந்தத் தொழில் என்றாலும் மொத்தமாக விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள் தான்ஒருவேளை, நேரடியாகத் தொழில் செய்ய முடியவில்லை என்றால் மறைமுகமாக வட்டித் தொழில் மூலம் அவர்களது கரங்கள் அதில் இணைந்திருக்கும் என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்து. சென்னையின் பல பகுதிகளும் வடஇந்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வருங்காலத்தில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பெரும் சவாலாக இருப்பார்கள்"முன்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடை தொடங்கினால் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களையே பணிக்கு அமர்த்துவர். காரணம், சொந்த மண் பாசம், விசுவாசம். இப்போது அவை எல்லாம் மலையேறிப் போய்விட்டன. சரியாக வேலைக்கு வருவதில்லை. வந்தாலும் அதிகச் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திக்காரார்களைப் பொறுத்தவரை வேலை நேரம் தொடங்கும் முன்பே வந்து விடுகிறார்கள். விடுமுறை எடுப்பதில்லை. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊருக்குப் போவார்கள். சொன்னதைச் சரியாகச் செய்கிறார்கள். வந்த ஆறு மாதத்திலே தெளிவாகத் தமிழ்ப் பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.
 
வேலை இல்லாமை, கடன் தொல்லை - குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலை செய்ய வரு கிறோம் என்று வெளிமாநிலத்தவர் சொன்னால் அது உண்மையில்லை. அவர்களுக்கு அங்கேயும் வேலை கிடைக்கிறது. ஆனால், இங்கேதான் சாப்பாடு, டி.வி. வசதியோடு வேலை கிடைப்பதால் வசதியாக வாழ ஆசைப்பட்டே சென்னை வருகிறார்கள்.

என்னாச்சு இந்திய அணிக்கு?


இன்னுமொரு தோல்வி. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய எந்த நாட்டிலும் தோனியால் ஒரு டெஸ்டைக் கூட ஜெயிக்க முடியவில்லை. 10 டெஸ்டுகளில் 9 தோல்வி. டிரா ஆன ஒரு டெஸ்டிலும் தோல்வியி லிருந்து தப்பிப் பிழைத்த கதைதான். கடந்த 10 வருடங்களில் வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டதில்லை. 

தென் ஆப்பிரிக்காவலுவான அணிதான். டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நெ.1 அணி. கடந்த ஏழு வருடங்களில் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டும் தோற்றிருக்கிறது (2009ல் ஆஸி). கடந்த 11 வருடங்களில் தெ.ஆ-வில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ஒரேயொரு முறைதான் தோல்வி! இப்படிப் பட்ட அணியை வெல்வது சாதாரணமான காரியமல்ல தான். ஆனால், முதல் டெஸ்டில் அதற்கு வாய்ப்பு வந்தும் கோட்டை விட்டது இந்திய அணி. ஒரு பௌலர் ஒரு மேட்சில் சரியாக பௌலிங் செய்யவில்லையென்றால் அவரை அடுத்த மேட்சில் உட்கார வைக்கிறார் தோனி. எனில், இந்த 9 தோல்விகளுக்கும் யார் பொறுப்பேற்பது? 2014ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து 11 டெஸ்டுகள் ஆடப்போகிறது இந்திய அணி. மீண்டும் இதே மாதிரி லட்டு லட்டாகத் தோற்றுப்போய் வரப்போகிறோமா?

கங்குலியால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானில் ஒரு டெஸ்டையாவது வெல்ல முடிந்தது. (கங்குலி 49 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் 11 டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறார். தோனிக்கு இதுவரை 5 வெற்றிகள்தான்) கடந்த 10 வருடங்களில் வெளிநாடுகளில் சாதித்த ஒரே இந்திய கேப்டன், ராகுல் டிராவிட். முக்கியமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தவர். வழக்கமாக எல்லோரும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுப்போனால் பதவியிலிருந்து விலகுவார்கள். ஆனால், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற பிறகு விலகினார் டிராவிட். தோனியும் ஒரு கேப்டனாக நிறையச் சாதித்திருக்கிறார். அவருடைய பேட்டை, - ஒருநாள்/டி20 போட்டிகள். ஒருநாள் போட்டியில் 2013 இந்திய அணிக்குச் சிறந்த ஆண்டு. 6 ஒருநாள் தொடர்/போட்டிகளை வென்று முதல் இடத்தில் உள்ளது. ஆனால் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் என்று வரும்போது தோனியின் எல்லாப் பெருமைகளும் செயலிழந்து விடுகின்றன.  

தோனி இடத்தில் வேறொருவர் இருந்தால் ஜெயித்திருக்க முடியுமா என்று கேட்கமுடியாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 டெஸ்டுகளில் தோற்றபோதும் கடைசிவரை அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றவேயில்லை தோனி. ஆனால், தெ.ஆ.வில் நடந்த முதல் டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் டுப்ளெஸ்ஸியை முன்னால் இறக்கினார் ஸ்மித். கடைசியில் அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ( அதனால்தான் ஸ்மித்தால் 100 டெஸ்டுகளுக்கு மேல் கேப்டனாக இருக்கமுடிகிறது!) இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளில் தோனி ஈடுபடவேயில்லை. கடைசி டெஸ்டில் தாராளமாக இரண்டு ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கலாம். ஆனால், அந்தத் தைரியம் தோனிக்கு வரவில்லை. இப்படி, முக்கியமான முடிவுகளில் தோனி தொடர்ந்து சொதப்பியதால்தான் இத்தனை தோல்விகள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் ஒரு டெஸ்ட்டில்கூட ஜெயிக்காதவரை சிறந்த கேப்டன் என்று எப்படிச் சொல்வது? 

இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா, கோலி, விஜய், ரெஹானே ஆகிய நால்வரும் மிக நன்றாக ஆடினார்கள். வெளிநாட்டு டெஸ்டுகளில் நான்கு பேட்ஸ் மேன்களை இப்படிப் பாராட்டும் வாய்ப்பு கிடைப்பதே அரிதுதான். பௌலர்களில் ஷமி, ஜடேஜா மிகுந்த நம்பிக்கை அளித்தார்கள். அப்படியும் போதவில்லை. முக்கியமான கட்டங்களைக் கோட்டை விட்டுவிட்டார்கள். முதல் டெஸ்டின் முதல்நாளில் தென் ஆப்பிரிக்க அணியினர் சரியாக பௌலிங் போடவில்லை. உடனே அடுத்தநாள் அந்தத் தவறைத் திருத்திக் கொண்டார்கள். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கும் சரியில்லை. ஆனால், கடைசியாக பிரமாதமாக ஆடி அணியைப் பெரிய சரிவிலிருந்து மீட்டார்கள். இதுபோல, முதலில் தவறுகள் செய்தாலும் அதிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியால் உடனே எழ முடிந்தது. இந்திய அணி அப்படியே தலைகீழ்! இரண்டு டெஸ்டுகளிலும் வலுவான நிலையிலிருந்து கீழிறங்கி தொடரில் தோற்றிருக்கிறது. ‘எங்களுக்கும் ஒரு காலிஸ் இருந்திருந்தால் 2 ஸ்பின்னர்களுடன் டர்பனில் ஆடியிருப்போம்’ என்கிறார் தோனி. ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அஸ்வின். அவரைப் பயன்படுத்தியிருக்கலாமே! ஸ்பின் பிட்சில் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்காமல் எப்படி ஜெயிக்கமுடியும்? அதுவும் இந்திய அணியில் ஸ்டீயின், பிளாண்டர் போன்ற உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில்! (இந்த வருடம் வெளிநாடுகளில் நடக்கவிருக்கும் 11 டெஸ்ட் மேட்சுகளிலும் ஜடேஜாவுக்குத்தான் முன்னுரிமை என்றால் அஸ்வினின் கதி என்ன? ஜடேஜா வழிவிடுவாரா?)  

இந்திய பேட்டிங்கில் பெரிய கவலைகள் இல்லை. அதிலும் பேட்ஸ்மேனாக தோனிதான் பெரிய சுமையாக இருக்கிறார். வெளிநாடுகளில் தோனியின் பங்களிப்புக் குறைவாகவே இருக்கிறது. உண்மையில், இந்திய அணி 20 விக்கெட்டுகளை எடுக்கத் திணறுகிறது. ஜாகீர்கான், இஷாந்த் சர்மா வால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடியாது என்பது 9 டெஸ்ட் தோல்விகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 2013 முழுக்க புவனேஷ்வர் குமாரை ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இந்தியாவில் நடந்த டெஸ்ட் மேட்சுகளில் பயன்படுத்திவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்றதும் கழற்றி விட்டது எந்த விதத்தில் நியாயம் தோனி? 

இந்த ஒரு வருடம் முழுக்க இந்திய அணிக்கு வெளிநாட்டில் தான் ஜாகை. மீண்டும் இதே தோனி, இதே தோல்விகளா? என்ன செய்யப் போகிறது இந்தியத் தேர்வுக்குழு?

அருள்வாக்கு - தியாகமே வாழ்க்கைத் தருமம்


தன்னலம் பாராது பிறர்க்கென உடைமைகளை ஆக்கும் தியாகமே சநாதன வேத தர்மம் வகுத்தளிக்கும் நமது வாழ்க்கைத் தருமம். அத்தியாகமே யாகம் எனப்படுகிறது. ‘யாகம்’ என்பது எல்லா சிறந்த வஸ்துக்களையும் தனக்கென்றில்லாமல் தியாகமாக அக்னியில் அர்ப்பணித்து, அத்தீக்கடவுளின் மூலம் அவை உலகப் பேரரசனான ஈசனின் அதிகாரிகளாக அவ்வுலகைப் பரிபாலிக்கும் தேவர்களைச் சென்றடைந்து, அதற்குப் பிரதியாக அவர்கள் ஜீவகுலம் முழுதற்கும் மேன்மை பொருந்திய இன்ப வாழ்வுக்கான சகலத்தையும் அருளுமாறு செய்ய உதவும் வைதிகச் சடங்கே. மேநாட்டினரும் யாகம், அதன் அடிப்படையான தியாகம் ஆகிய இவ்விரண்டையும் sacrifice என்றே கூறுவது கவனத்துக்குரியது. 

இத்தியாக தர்மத்தைப் புரியவும் நாம் உயிரைக் காத்துக்கொண்டு வாழ்ந்தால்தான் முடியுமாதலின், பிறர்க்களிப்பதை முக்கியமாகக் கொண்டு அதற்கு எஞ்சியதை அத்தியாவசிய சுயநுகர்ச்சிக்கு நாமும் ஏற்பதாக வெகு சிக்கன வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு எஞ்சியதை, தேவர் உண்டு மிகுதி வைத்த பிரசாதம் என்ற புனித எண்ணத்துடன் ஏற்றுப் புனித வாழ்வு வாழ வேண்டும். இதுவே வேத தர்ம விதி. உ-ம்: உபநிஷத வரிசையில் முதலிடம் பெறும் ‘ஈச’த்தின் முதல் மந்திரமே. ‘சொந்த நுகர்ச்சியால் ஒரு பொருளிலிருந்து மனிதன் நிறைபயனைப் பெற வியலாது; பிறர்க்குத் தியாகம் செய்தே, தியாகம் செய்த பொருளிலிருந்து பெறக்கூடிய நிறைபயனை அடைவாயாக!’ என்ற கருத்தினைக் கூறி, அதில் மாந்தரைச் செயற்படத் தூண்டும் ஒப்பற்ற மந்திரம். இவ்வாறு ஈத்துவப்பதில் (ஈந்து உவப்பதில்) அன்னம் வழங்குதலே முதலிடம் பெறுகிறது. ஏனெனில் அன்னத்தினால்தானே உயிர்கள் உண்டாகி வளர்கின்றன?  

இதுவே (கீதையில்) பகவான் கூறும் காரணவிளைவுத் தொடர்ச்சியில் ‘அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன’ என்ற வாசகம் முதலிடம் பெறுகிறது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

பாதயாத்திரை..

சபரிமலைக்கு மாலை போட்டுப் பாதயாத்திரை போவதும், பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும் என ஆன்மிக அன்பர்களுக்கே உரிய அற்புதமான காலம் இது. பக்திப் பரவசத்தில், எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றித் திடீரென்று நடைபயணம் தொடங்கும்போது, பலருக்கு உடல்ரீதியான பிரச்னைகள் வரும்.  


'நீண்ட நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு தசைப்பிடிப்பும் மூட்டுவலியும்தான் பெரிய பிரச்னை. வயதானவர்களுக்கு ஏற்கெனவே மூட்டுவலி இருப்பின் மூட்டுத்தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது. நுரையீரல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு 'வீசிங்’ வரலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மதிய நேரங்களில் நடந்துசெல்லும்போது, 'சன்ஸ்ட்ரோக்’ ஏற்படலாம். சிலர் குழந்தைகளை, தங்கள் தோள்பட்டையில் தூக்கிவைத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்
.
 

நடைபயணம் மேற்கொள்வதற்கு முன் செய்யவேண்டியவை:  

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பேரில்தான் நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக ஓரிரு கி.மீ. வரை நடைப்பயிற்சி செய்தால், தசைகள் மற்றும் தசை நார்கள் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 35 வயதைத் தாண்டியவர்கள் தங்களின் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு நடைபயணத்தைத் தொடங்குவது நல்லது. உரிய பயிற்சிக்குப் பிறகு நடைபயணத்தை ஆரம்பித்தால், உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

நடைபயணத்தின்போது ஏற்படும் பிரச்னைகளும் தீர்வும்... 

தசைப்பிடிப்பு, தசைவலிப் பிரச்னை உள்ளவர்கள் உடனடித் தீர்வுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் அல்லது குளிர்ந்த நீரை தசைப்பிடிப்பு உள்ள இடத்தில் ஊற்றலாம். சிறிய ரத்தக் காயங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கூடாது. ஒரு மணி நேரம் நடந்தால், குறைந்தது 10 நிமிடங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் நடப்பவர்கள் அரை மணி நேரமாவது படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

காலையில் நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், நடந்து முடிந்த பின்பும், மெதுவாகக் குதித்தல், தோள்பட்டையைச் சுழற்றுதல், முழங்கை, முழங்காலை மடக்கி நீட்டுதல் போன்ற சின்னச் சின்ன 'வார்ம் அப்’ பயிற்சிகள் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் காலில் காயம் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நடக்க வேண்டும். நாள்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதய நோயாளிகள் அவ்வப்போது மூச்சுப்பயிற்சிகள் செய்யலாம். மெதுவாக அதே சமயம் சீரான வேகத்தில் நடப்பது நல்லது.

தொடர்ச்சியாக வெயிலில் நடக்கும்போது காலில் கொப்புளம் வராமல் இருக்க, துணி அல்லது சாக்ஸ் அணிந்துகொண்டு நடக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பாதயாத்திரையும் பரவச யாத்திரையாக அமைந்துவிடும். 

பதமான பாதத்துக்கு...

உச்சி வெயிலில் நடக்கக் கூடாது. இதன் மூலம் சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்கலாம். 

இரவில் நடப்பது வீசிங் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, காலை நேரத்தில் நடப்பது நல்லது. 

காலையில் நான்கு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் நடந்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 

வலி உள்ள இடங்களில் வலி நிவாரணிகளை, சூடு பறக்கத் தேய்க்கும்போது வலிகள் அதிகமாகுமே தவிர, குறையாது. மிதமாகத் தடவிவிடலாம்.   

எக்காரணத்தைக் கொண்டும் சுளுக்கு எடுக்கக் கூடாது. 

அதிக தூரம் நடைபயணம் மேற்கொள்வதால் தண்ணீர், இளநீர், மற்றும் பழங்களை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

  

Tuesday, December 31, 2013

வரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றப்படும் நகரம் காஞ்சி புரம். அப்படிப்பட்ட காஞ்சியம்பதியை நினைக்கும்போதும் சொல்லும்போதும் நமக்குள் சட்டென்று மூன்று விஷயங்கள் சடசடவென விரிந்து நிற்கும். காஞ்சி என்றதும், சிவ காஞ்சியைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரும், சக்தியின் முக்கிய பீடமாகத் திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும், விஷ்ணு காஞ்சியைப் பறைசாற்றும் வகையிலான ஸ்ரீவரதராஜரும் நினைவுக்கு வருவார்கள்.
அதிலும் வைஷ்ணவர்கள், 'காஞ்சி வரதா... காஞ்சி வரதா’ என்று கண்ணீர் வடிய பக்தி செலுத்துவார்கள். காஞ்சியில் பிரமாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜரை, தன்னையும் தன் சந்ததியினரையும் வாழ வைக்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்று கின்றனர் பக்தர்கள். நம் தாயார் எப்படி நமக்குத் தேவையானதை நாம் கேட்காமலே தந்து காப்பாற்றி வருவாளோ அதேபோல, நாம் கேட்காமலேயே நமக்குத் தேவையானதையெல்லாம் தந்து அருளும் கருணையுள்ளம் கொண்டவர் ஸ்ரீவரதர் எனச் சொல்லிச் சிலாகிக்கின்றனர்.
அதுமட்டுமா? தங்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகளையும், கவலை களையும் அவமானங்களையும் தயக்கமோ குழப்பமோ இல்லாமல் ஸ்ரீவரதரிடம் முறையிட்டு, 'இது உனக்கே நல்லாருக்கா? என்னைக் காப்பாத்திக் கரை சேக்கறது உன் கடமை இல்லியா?'' என்று நண்பனி டம் புலம்புவதுபோல், உரிமையுடன் கேட்பார்கள் பக்தர்கள்.
கடவுளை நண்பனாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகப்பெரிய ஈடுபாடும் அறிவும் வேண்டும். மனம் முழுவதும் இறை பக்தியும், புத்தி முழுவதிலும் நம்பிக்கையும் குடிகொண்டிருக்க வேண்டும். காஞ்சி யில் அருளும் பெருமாளை, ஸ்ரீவரதராஜரை வரதா வரதா என்று அழைத்துப் பரவசமாகிற பக்தர்கள் பலரும், அவரைத் தோழனாகப் பாவித்துதான் வணங்கிச் செல்கிறார்கள் என்பது தெரிகிறது.
அதேபோல், வைணவர்கள் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் வரதர் எப்போது திருவீதியுலா வருவார் என ஆவலாகக் காத்துக் கிடப்பார்கள். தவிர, வரதராஜ பெருமாளுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதத்தில், எந்த நட்சத்திர நாளில் விழா எடுப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். அந்தந்த நாட்களில் ஸ்ரீவரதரைத் தரிசனம் செய்து பூரித்துப் போவார்கள்.
வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் என்றொரு கிராமம் உள்ளது. இந்த ஊரில், மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  
காஞ்சி வரதருக்கு எப்போதெல்லாம் சிறப்பு பூஜைகளும் வழிபாடு களும் கோலாகலமாக நடை பெறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜருக்கும் பூஜைகள் சிறப்புற நடைபெறும்.
ஐந்து நிலை ராஜகோபுரமும், பிரமாண்டமான நீளமான மதிலும் கொண்டு, ஒருகாலத்தில் கம்பீரத்துடன் நின்ற கோயில்தான் இது. ஆனால் இன்றைக்கு, எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்பதுபோல் நிற்கிற கோபுரம் நம்மைப் பதைபதைக்கச் செய்கிறது. அழகிய கோபுரத்தின் வழியே நுழைய முடியவில்லை. சுற்றுச் சுவருக்கு நடுவே சிறியதொரு பாதையில் சென்றுதான் ஸ்ரீவரதராஜரை தரிசிக்கவேண்டியுள்ளது.
காஞ்சி வரதரைப் போலவே, வாழைப்பந்தல் வரதரும் விழாவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவாராம். இதைப் பார்க்க ஒருங்கிணைந்த தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வருவார்களாம். ஆனால், வரதரின் வாகனங்கள் எல்லாமே இப்போது சிதைந்தும் பெயர்ந்தும், வண்ணங்களை இழந்து பரிதாப மாகக் காட்சி அளிக்கிறது.
கல் தீப ஸ்தம்பம், பிராகாரம், அதைச் சுற்றிலும் நந்தவனம் என அழகும் சக்தியும் நிறைந்த திருத்தலமாக இருந்திருக்கிறது இந்தக் கோயில். காலப்போக்கில் முள்ளும் புதருமாக மாறிப் போய், சந்நிதிகள் எல்லாம் களையிழந்துவிட்டதுதான் கண்ணீரை வரவழைக்கிறது.
கருவறையில், மூலவரும் உத்ஸவரும் திவ்விய தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். இவரை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.
ஒருகாலத்தில், திருகூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வாழைப்பந்தல் என்று இப்போது அழைக்கப்படும் தலத்தில் உள்ள ஸ்ரீவரதரின் ஆலயம், வழிபாட்டுக்கு உரிய அழகிய இடமாகத் திகழ வேண்டாமா? கஜேந்திரன் எனும் யானைக்கு மோட்சம் கிடைத்தது போல், இந்தக் கோயிலின் திருப்பணியில் நாமும் பங்கு பெற்று, மோட்ச கதியை அடையவேண்டாமா?
ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீஅனுமனும் அருளும் ஒப்பற்ற இந்தக் கோயிலில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட்டு, வரதருக்கு நைவேத்தியம் செய்யப் புளியோத ரையும், சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதமும் அங்கே மணக்க மணக்கத் தயாராவதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வதுதானே நம் கடமை? வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜரின் வாகனங்கள் சரிசெய்யப்படுவதற்கும், மண்டபங்களும் கோபுரமும் மதிலும் பழையபடி பொலிவுறுவதற்கும் திருப்பணியில் கலந்து கொண்டால், நம் சந்ததியும் வாழையடி வாழையாய் வாழாதா?

காஞ்சியம்பதி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், வருடம் முழுவதும் திருவாபரணத்துக்கும், ஸ்வாமியின் திருஅலங்காரத்துக்கும் ஒரு குறைவுமில்லை. ஆனால், அதே திருநாமத்துடன் காஞ்சிக்கு அருகில் உள்ள இந்தப் புராதனத் திருக்கோயிலும் காஞ்சிக் கோயிலைப்  போலவே கம்பீரம் காட்டி நிற்பதுதானே முறை!
பித்ருக்கள் சாபத்தில் இருந்து விமோசனத்தைத் தந்து, நல்ல நிம்மதி யான வாழ்க்கையையும் அருளச் செய்பவர் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள். ஆயிரம் வருடப் பழைமையான ஆலயம் என்றும், ஆதி கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் என்றும் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், நாம் தருகிற சிறு திருப்பணிக்கான காரியம் நமக்குப் பன்மடங்காக, வீர்யம் கொண்டதாக, நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட வாழ்க்கையைத் தந்து, நம்மையும் நம் வம்சத்தையும் வாழச் செய்யும் என்பது உறுதி!  
ஸ்ரீவரதா... ஸ்ரீவரதா... உன் கோயிலில், கும்பாபிஷேகம் எனும் வைபவம் நடைபெறும் நாள் வந்துவிட்டது ஸ்ரீவரதா!
படங்கள்: ச.வெங்கடேசன்
எங்கே இருக்கிறது?
வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது வாழைப்பந்தல் கிராமம். இங்கே, மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அற்புதமாக அமைந் துள்ளது ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில். ஆரணியில் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உண்டு.

மகா பெரியவா!

கல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில்  சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!


ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

'தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து....

அருள்வாக்கு - முதல் ஸ்தானம்!


‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக்கவிராயர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக அவருடைய ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்.
பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இரண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் கம்பராமாயணம் எல்லாப் பொதுமக்களுக்கும் புரியாததாகக் கால வித்தியாஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொழிக் காவியம் என்பதாக ஆகிவிட்டது.
அருணாசலக்கவிராயர் இரண்டே நூற்றாண்டு முன்னாடிதான் இருந்தவர் என்பதாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிறந்து எழுபது, எண்பது வயசு ஜீவித்தவர் (1711-1788) அவர். அதனாலும் அவர் பேச்சு மொழி, முக்கியமாக ராக, தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்களாக, மொத்தத்தில் ஸர்வ ஜனரஞ்ஜகமாக ஜனங்களின் வாய்ப் புழக்கத்துக்கு ஜாஸ்தியாக வந்துவிட்டது.
‘ராம நாடகம்’ என்பதாக அது இருப்பதும் ஸர்வ ஜன வசீகரத்துக்கு இன்னொரு காரணம். அதிலே ராமாயணக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டு போகும்போது கவி தன் வாய்மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமாகவும் பாட்டாகவும் பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது, அதைவிட ஜாஸ்தியாக அதிலே வருகிற பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக்கிறதால் அது நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதிலும் Opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாமல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்களே அப்படி! அந்தப் பாட்டுக்களை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவங்களையும் கலந்து பண்ணியிருக்கிறார்.
இப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்களிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பல பேரும் பாடியும், கதாகாலகே்ஷபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ்திரீகள் ஆடியும், நாட்டிய- நாடகமாக அப்படிப் பல பெண்டுகள் சேர்ந்து நடித்துக் காட்டியும் பல தினுஸிலே அது பரவிவிட்டது. கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் ‘ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்